Apr 11, 2022

எலும்புத்துண்டு

பிடித்தமான வேலை; நேசிக்கும் வேலை; பிடிக்கவே பிடிக்காத வேலை என்று வேலையில் மூன்று வகையறா உண்டு.

அலுவலகத்தில் ஒருவர் இருக்கிறார். மேய்கிற மாட்டை நக்குகிற மாடு கெடுக்கும் என்ற சொலவடையை நியாபகப்படுத்துகிறவர் அவர். ’தம்பி...வாங்குற சம்பளத்துக்கு மட்டும் வேலையைப் பாரு’ என்று அவ்வப்பொழுது உடன் பணியாற்றுகிறவர்களிடம் பற்ற வைத்துவிடுகிறார் என்று புகார் பட்டியல் வாசிப்பார்கள். அவர் பாட்டுக்குச் சொல்லிவிட்டு போய்விடுகிறார். மேலே இருக்கிறவர்கள் மண்டை காய்கிறார்கள். இது மூன்றாவது வகையறா வேலை. 

பிடித்தமான வேலை என்றால் ஒன்பது மணிக்குத் தொடங்கி ஐந்து மணிக்கு முடித்துவிடுவது. அவ்வப்பொழுது இரவு எட்டு அல்லது ஒன்பது மணி வரைக்கும் பணியாற்றலாம். தேவைப்பட்டால் சனி அல்லது ஞாயிறு கூட பரவாயில்லை. அதற்கு மேல் மண்டை காய்வதில்லை. 

நேசிக்கிற வேலை என்றால் தூங்கும் போதும் அதே நினைப்புதான். தூங்கி எழுந்தவுடனும் அதே நினைப்புதான். டெல் நிறுவனத்தில் பணியாற்றிய போது அன்ஷூ என்றொரு மேலாளர் இருந்தார். ப்ரஷ், பேஸ்ட், துண்டு என ஒரு செட் எப்பொழுதும் இருக்கும். இரவுகளில் அலுவலகத்திலேயே உறங்குவார். அபரிமிதமான வளர்ச்சி. என்னைவிட ஒரு வயதுதான் மூத்தவர். நான் டீம் லீடர் பதவிக்கு முயற்சித்துக் கொண்டிருந்த போது அவர் நிறுவனத்தில் டைரக்டர் ஆகி இருந்தார். நான் ஏரோ நிறுவனத்திற்கு பணி மாறிச் சென்று விட்டேன். 

பிடித்தமான வேலையைச் செய்யலாம்; பிடிக்காத வேலையைக் கூட செய்யலாம். ஆனால் நேசிக்கும் வேலையை எந்தக் காலத்திலும் சம்பளத்துக்கு என செய்யக் கூடாது. ஊண், உறக்கம் என சகலத்தையும் வேலைக்கு அர்பணித்துவிட்டால் நமக்கு என்று நேரமே இருக்காது. அப்படி நேசிக்கிற வேலை என ஒன்றை நாம் கண்டறிந்துவிட்டால் அதனை தொழிலாகச் செய்ய வேண்டும். அதில் சுயமாக சம்பாதித்து வருமானம் பார்க்கும்படி சூட்சமங்களைத் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். மற்றபடி ’அள்ளிக் கொடுக்கிறேன்’ என்று அழைத்தாலும் கூட சம்பளத்துக்குச் செல்லக் கூடாது என்பார்கள். அது 100% உண்மை.

கொரொனா காலம் வேலைச்சூழலை பலவிதத்திலும் புரட்டிப் போட்டுவிட்டது.

இன்று காப்ரேட் உலகில் பலருக்கும் உள்ள பிரச்சனையே ‘இந்த வேலை போய்டுச்சுன்னா என்ன செய்யறது’ என்கிற பயம்தான். அந்த பயத்திலேயே எந்த வகையறாவாக இருந்தாலும் வெறித்தனமாக பணியாற்றுகிறவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாகிவிட்டது. பெங்களூரு நண்பர் ஒருவர் அழைத்திருந்தார். ’வொர்க் ப்ரம் ஹோம்’ என்றான பிறகு எந்நேரமும் கணினியே கட்டிக் கொண்டு அழுவதாகச் சொன்னார். முன்பெல்லாம் அலுவலகத்தில் சக நண்பர்களுடன் பேசுவதற்கு வாய்ப்பு கிடைக்கும். அலுவலக உள்ளரசியல் பற்றி தெரிந்து வைத்துக் கொள்ள முடிந்தது. அதற்கேற்றபடி கணக்கிட்டுக் கொள்ளலாம். இப்பொழுது அப்படியில்லை. ஆளாளுக்கு ஒரு குட்டி உலகத்தில் மாட்டிக் கொண்ட சூழல். இருப்பதிலேயே நாம்தான் சுமாராக வேலை செய்வதாக நினைத்து நம்மை வீட்டுக்கு அனுப்பிவிட்டால் என்ன செய்வது என்ற பயம். செக்கு மாடு  போல சுழல்கிறார்கள். 

வேலை பிடித்திருந்தாலும் சரி; பிடிக்கவில்லையென்றாலும் உழன்று கொண்டிருப்பது எந்தவிதத்திலும் சரியில்லை.

ஒருவேளை கொரோனா நம் மனநிலையை மாற்றியிருந்தால் - அழுத்தத்தை உருவாக்கியிருந்தால் இரண்டு வருடங்களுக்கு முன்பாக எதையெல்லாம் செய்து கொண்டிருந்தோமோ அதையெல்லாம் செய்ய முடியுமா என்று திட்டமிட்டுக் கொள்வதுதான் உசிதம். அதற்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொண்டு அதனைப் பின்பற்ற வியூகங்களை வகுக்க வேண்டும். மலை ஏறுகிறவர்கள், சைக்கிள் ஓட்டுகிறவர்கள், காடுகளில் திரிகிறவர்கள், கதை கேட்கிறவர்களின் எண்ணிக்கை கணிசமாகச் சுருங்கிவிட்டது. அறக்கட்டளை, குளம் தூர் வாருகிறேன் என்று திரிந்த ஆட்களையும் காணவில்லை. ‘விருப்பமிருந்தால் அலுவலகம் வாருங்கள்’ என்று அலுவலகங்களில் சொன்னால் குறைந்தபட்சம் வாரத்திற்கு 2 நாட்களாவது அலுவலகம் செல்ல வேண்டும். வீட்டிலேயே இருந்தால் செலவு மிச்சம், ஜட்டி போட வேண்டியதில்லை என்ற அற்ப காரணங்களுக்காக குண்டுசட்டிக்குள் குதிரை ஓட்டினால் உளவியல் சிக்கல்களை எதிர்கொண்டுதான் தீர வேண்டும்.பெங்களூரு நண்பரிடமும் அதைத்தான் சொன்னேன்.

வேலை, சம்பளம் என்பதெல்லாம் அவசியம்தான். ஆனால் அதனை மட்டுமே மனதில் நிறுத்திக் கொண்டு கடிவாளம் போட்ட குதிரையாக ஓடுவதால் நமக்கு மட்டுமில்லை- நம் குடும்பத்திற்கும் கடுமையான அவஸ்தையை உருவாக்குகிறோம் என்று அர்த்தம். யாருக்குமே நேரம் ஒதுக்காமல் உழைத்து எதைச் சாதிக்கப் போகிறோம்? பொதுவாகவே நமக்கு இப்பொழுது இருக்கும் சம்பளம், வேலை என்பதெல்லாம் safe zone. இதை விட்டுவிட்டால் என்ன ஆகும் என உள்ளூர எழும் பயமே நமக்கு முன்னால் கட்டித் தொங்கவிடப்பட்டிருக்கும் எலும்புத் துண்டு. அந்தத் துண்டு அறுந்து விழுவதால் பிரியாணியே கூட கிடைக்கலாம். பிரியாணி கிடைக்கவில்லையென்றாலும் கூட உயிர் போய்விடாது. இன்னொரு எலும்புத் துண்டைக் கட்டித் தொங்கவிட இந்த உலகில் ஆயிரம் பேர் உண்டு.  அதனை மட்டும் மனதில் நிறுத்திக் கொள்வோம். வெளியே வந்து வானம் பார்க்கலாம்! 

4 எதிர் சப்தங்கள்:

GANESAN said...

வணக்கம் திரு.மணிகண்டன். வருகைக்கு வாழ்த்துக்கள். ........கணேசன்.

Unknown said...

Almost in that stage. Nice. Welcome back.

NAGARATHAN said...

ரொம்ப நாள் கழிச்சு வந்துருக்கீங்க. வாழ்த்துகள். தொடர்ந்து எழுதுங்க. அறக்கட்டளை பணிகள் தொடர்கிறதா? எங்களை சிரிக்க வைத்து, அழ வைத்து, சிந்திக்க வைத்து பல வழிகளிலும், கடந்த சில வருடங்களாக எழுதி வந்த எழுத்து திடீரென காணாமல் போன காரணம் தெரியவில்லை. இனியும் இப்படி ஒரு இடைவெளி வாராதிருக்கும் என நம்புகிறேன்.

Jaypon , Canada said...

எதேச்சையாக வந்தேன். ஆச்சர்யம் பதிவுகளை பார்த்து.

WFH ல் சாப்பாட்டு நேரத்தில் கூட யாரோ நம்மை chat ல் தேடுவது போன்ற உணர்வு. 30 நிமிட உணவு இடைவேளையில் நண்பர்களுடன் அளவளாவுவதால் கிடைக்கும் சக்திக்கு ஈடு இணை ஏதும் இல்லை.