May 3, 2021

அதிமுக 66

தேர்தலில் திமுக வெல்ல வேண்டும் என விரும்பினேன்; வென்றுவிடும் என்பது தெளிவாகத் தெரிந்தது. 

2019 தேர்தலில் திமுக கூட்டணி பெற்றிருந்த வாக்கு சதவீதம் 50% ஐ தாண்டியிருந்தது. தமிழகத்தைப் பொறுத்த வரையிலும் ஒரு கூட்டணி 50% வாக்குகளைப் பெறும் போது அந்தத் தேர்தல் ஸ்வீப் ஆக இருக்கும். பழைய கணக்குகளை எடுத்துப் பார்த்தால் இதனைப் புரிந்து கொள்ள முடியும்.  நாடாளுமன்றத் தேர்தலில் அமைக்கப்பட்ட திமுக கூட்டணியில் இருந்து எந்தக் கட்சியும் விலகிக் கொள்ளவில்லை. எனவே அக்கூட்டணி பெற்ற 50%க்கும் அதிகமான வாக்கு வங்கி அப்படியேதானே இருக்கும் என்று நினைப்பது தவறு. தேர்தலில் கட்சிகளுக்கான வாக்கு சதவீதக் கணக்குகளை மட்டும் எடுத்துக் கூட்ட முடியாது. அதனைத் தாண்டி நிறைய காரணிகள் இருக்கின்றன. போட்டியிடும் தலைமை, உருவாகியிருக்கும் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கிடையிலான உறவு, பணம், ஒவ்வொரு தலைமையின் மீதும் பொதுவெளியில் உள்ள/உருவாக்கப்பட்டிருக்கும் வெறுப்பு அல்லது ஆதரவு என எல்லாமும் சேர்ந்து முடிவை தீர்மானிப்பதுதானே தேர்தல் வியூகம்? 

அப்படிப் பார்த்தாலும் கூட நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற வாக்குகளில் இருந்து 7-8% குறைந்தாலும் திமுக வெற்றி பெற்றுவிடும் என்று மிக எளிதாகவே கணிக்க முடிந்தது. அதற்கும் மேலாக வாக்கு சதவீதம் குறையும் அளவுக்கு திமுக தரப்பில் தவறுகள் எதுவும் நடக்கவில்லை. இந்தக் கணக்கை வைத்துக் கொண்டு எவ்வளவு தொகுதிகளை வெல்லும் என்பதைக் கணக்கிடுவதில்தான் பெரிய சவால் இருந்தது. 

கொங்கு மண்டலத்தில் உள்ள ஐம்பது தொகுதிகளில் இம்முறை 25 தொகுதிகளைப் பெற்று, திமுக கூட்டணி 170 ஐத் தாண்டும் என நினைத்துக் கொண்டிருந்தேன். கோவையில் வால்பாறை, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, கவுண்டம்பாளையம்,  ஈரோட்டில் பவானிசாகர் மாதிரியான தொகுதிகளில் எதிர்பார்த்தபடி நடக்கவில்லை. திமுக கூட்டணி 17 தொகுதிகளில்தான் வென்றிருக்கிறது. மொத்த தொகுதிகளின் எண்ணிக்கை 159 என எதிர்பார்த்ததைவிடவும் சற்று குறைந்துவிட்டது.

இது திமுக வெல்லும் தேர்தல் என்றான பிறகு தேர்தலுக்குப் பிறகு என்ன நடக்கும் என்பதில்தான் சுவாரசியம் இருக்கிறது. தேர்தலுக்குப் பிறகு பாஜகவின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பதை வெகுநாட்களுக்கு முன்பிருந்தே பலரும் கணிக்கத் தொடங்கிவிட்டார்கள். பாஜக ஒவ்வொரு மாநிலமாகத்தான் காய் நகர்த்துகிறது. ஒரே சமயத்தில் அனைத்து இடங்களிலும் கொடி கட்ட வேண்டும் என்று அரிபரியாக வேலையைச் செய்வதில்லை.

2021 தேர்தலில் மேற்கு வங்கமும், புதுச்சேரியும்தான் அவர்களின் குறியாக இருந்தது. புதுச்சேரியில் அவர்கள் நோக்கம் நிறைவேறிவிடும் போலிருக்கிறது. வங்கத்தில்தான் மம்தா தடைக்கல் போட்டுவிட்டார். 

ஒருவேளை இரண்டு மாநிலங்களிலுமே பாஜக வென்றிருந்தால் அடுத்த இலக்கு தமிழ்நாடாகத்தான் இருந்திருக்கும். இப்போதும் கூட தமிழ்நாட்டை முழுமையாக விட்டுவிடமாட்டார்கள். அதிமுக வென்றிருந்தால் வேறு கணக்காக இருந்திருக்கும். இப்பொழுது வேறு கணக்காக இருக்கும். 

நடந்த முடிந்த தேர்தலில் அதிமுக பெரும் வீழ்ச்சியைச் சந்தித்துக் கரையத் தொடங்கியிருந்தால் அதன் மொத்தப் பலனையும் திமுகவைவிட பாஜகவே அறுவடை செய்யும். அதிமுக வாக்காளர்கள் திமுகவுக்குச் செல்வதைவிடவும் பாஜகவுக்கு செல்வதைத்தான் விரும்புவார்கள். எனவே அதிமுக சற்றே வீழ்ந்தாலும் பாஜக அபரிமிதமாக பலம் பெறும். தனது கட்டமைப்பை வலுவாக்கும். 

இதன் பின்னால் இருக்கும் தர்க்கம் மிக எளிமையானது. 

திரைக்கதையில் நாயகன் - வில்லன் என்ற இருதுருவங்கள் அவசியம் என்பது போலவே கள அரசியலில் இரு துருவம் அவசியம். ஒவ்வொரு கட்சிக்கும் ஆதரவு வாக்கு வங்கி இருப்பது போலவே எதிர்ப்பு வாக்கு வங்கியும் நிச்சயமாக இருக்கும். மிருகபலம் கொண்டிருக்கும் ஆளுங்கட்சி தன் எதிரியைக் காலி செய்தாலும் கூட தனக்கான எதிர்ப்பு வாக்குகளைக் காலி செய்யவே முடியாது என்பது நிதர்சனம். தனக்கு அடுத்து இருக்கும் ஒரு கட்சியை முழுமையாகக் காலி செய்யும் போது மூன்றாவதாக இருக்கும் ஒரு கட்சி காலியாகும் இடத்துக்கு வந்து ஆளுங்கட்சியின் எதிர்ப்பு வாக்குகளைப் பெற்றுக் கொள்ளும் இடத்துக்கு வந்து சேரும். 

மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜி செய்த தவறு என்றால் அது கம்யூனிஸ்ட் கட்சியின் கட்டமைப்பைப் பெருமளவில் சிதைத்ததுதான். அரசியலோடு பிணைந்திருந்த தொண்டர்களுக்கு ஏதேனும் பற்றுக்கோல் அவசியம். கம்யூனிஸ்ட் கட்சி கரையும் போது அவர்கள் முன் இருக்கும் வாய்ப்பு என்று பார்த்தால் ஒன்று திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்குச் செல்ல வேண்டும் அல்லது புதிய ஒரு கட்சிக்கு மாற வேண்டும். அந்தப் புதிய கட்சியாக பாஜக வளர முயற்சித்து அதில் ஓரளவு வெற்றியும் பெற்றது. அதுதான் இந்தத் தேர்தலில் மம்தா எதிர்கொண்ட மிகப்பெரிய சவாலாக இருந்தது. தங்களுக்கு கட்டமைப்பு உருவாகிவிட்டது என பாஜக நம்பியதன் விளைவே அவர்கள் கொடுத்த இவ்வளவு பெரிய அழுத்தம். 

தமிழகக் கணக்கும் கிட்டத்தட்ட இப்படித்தான். இத்தனை ஆண்டுகளாக திமுக - அதிமுக இரண்டும் வலுவாக இருப்பதால்தான் மதிமுக,  தாமக, தேமுதிக உட்பட எந்த மூன்றாவது கட்சியும் சோபிக்க முடியவில்லை. பாஜக கால் பதிக்கலாம் ஆனால் வளர வேண்டுமெனில் இந்த இருகட்சிகளில் ஒன்று வீழ்ந்தே தீர வேண்டும். 2014 தேர்தல் பரப்புரையில்  ‘அதிமுக இல்லையென்றால் திமுக இவர்கள் இருவர்தானா? இதுதான் தமிழ்நாடா?’ என்று மோடி பேசியதன் பின்னணி இதுவாகத்தான் இருக்க வேண்டும்.

தேர்தலில் ஒருவேளை திமுக 200 இடங்களைத் தொட்டிருந்தால் அதிமுகவில் செல்வாக்கான பெருந்தலைகள் தோல்வியில் உருண்டிருக்கும். அவர்கள் தங்களின் சொத்துக்களைக் காத்துக் கொள்வதற்காகவாவது பாஜக பக்கம் நகர்ந்திருப்பார்கள். உதாரணமாக வேலுமணி பாஜகவுக்கு சென்றால் கிட்டத்தட்ட கோவை மாவட்ட அதிமுக பாஜக செல்வது போலத்தானே? இப்படியொரு சூழல் உருவானால் 2021 தேர்தலில் திமுகவுக்கும் பாஜகவுக்கும்தான் போட்டி என்ற நிலைமை வந்துவிடும்.

முதலிடத்தில் இருக்கும் கட்சியுடன் ‘நீயா நானா’ என்ற நிலைக்கு ஒரு கட்சி வந்துவிட்டால் அடுத்தடுத்த ஒன்று அல்லது இரண்டாவது தேர்தலில் அக்கட்சி ஆட்சியைப் பிடித்துவிடும். 

ஆனால் பாஜகவுக்கான கதவுகளை இப்போதைக்கு தமிழக மக்கள் அடைத்திருக்கிறார்கள்.

மரியாதையான இடங்களை அதிமுக வென்றிருப்பது எடப்பாடி பழனிசாமி அவர்களின் இடத்தை உறுதிப்படுத்தியிருக்கிறது. எடப்பாடி பழனிசாமி கட்சியின் முழுமையான கட்டுப்பாட்டையும் எடுத்துக் கொள்வார் என நம்பலாம். பன்னீர்செல்வத்தைவிடவும், சசிகலா வகையறாவைவிடவும் பழனிசாமி சற்று தைரியமாக நிற்பார் என்பதுதான் அவரது நடவடிக்கைகளில் இருந்து நான் புரிந்து கொள்கிறேன்.  ஆட்சியின் போது பணிந்து நடந்திருந்தாலும் கூட அரசியல் ரீதியாக- பாஜகவுடன் கூட்டணி அமைத்து இடங்களை ஒதுக்கிய போதெல்லாம் அவர் பணிந்து போனதாகத் தெரியவில்லை. வெறும் 20 இடங்களைத்தான் கொடுத்தார். 

இனி வரும்காலம் அவருக்கு சவாலானதாகத்தான் இருக்கும்.

கையில் அதிகாரமில்லாமல் கட்சியைக் கட்டுக்கோப்பாகக் கொண்டு போய் அதன் முழுத் தலைமையையும் கட்டுப்பாட்டில் எடுப்பது எளிதான செயல் இல்லை. இனி பாஜகவின் உதவியும் அவருக்குக் கிடைக்காது. இன்னமும் சொல்லப்போனால் பாஜகவே குடைச்சல்தான் கொடுக்கும். இதையெல்லாம் தாண்டி அதிமுகவின் முழுக்கட்டுப்பாட்டை அவர் எடுத்துவிட்டார் என்றால் அடுத்த பத்து ஆண்டுகளுக்காவது தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக எடப்பாடி பழனிசாமி இருப்பார். 

கடந்த பத்தாண்டுகளில் ஆட்சியில் இல்லாத போதும் திமுக தன் வலுவை விட்டுவிடவில்லை. தம் கட்டிக் கொண்டேயிருந்தது. திமுக தனது இடத்தை உறுதிப்படுத்திக் கொண்டது. அடுத்த குறி அதிமுகதான். இனி அதிமுக வலுவான எதிர்கட்சியாகச் செயல்பட்டு தமிழகத்தில் திமுக- அதிமுக என்ற இரண்டு திராவிட இயக்கங்களுமே வலுவான சக்திகள் என்பதை எடப்பாடி பழனிசாமி அவர்கள் செயலில் காட்ட வேண்டும்.

3 எதிர் சப்தங்கள்:

Krishnan Thiruppathi said...

Welcome back sir.

சேக்காளி said...

//இனி அதிமுக வலுவான எதிர்கட்சியாகச் செயல்பட்டு தமிழகத்தில் திமுக- அதிமுக என்ற இரண்டு திராவிட இயக்கங்களுமே வலுவான சக்திகள் என்பதை எடப்பாடி பழனிசாமி அவர்கள் செயலில் காட்ட வேண்டும்.//

சேக்காளி said...

//இப்படியொரு சூழல் உருவானால் 2021 தேர்தலில் திமுகவுக்கும் பாஜகவுக்கும்தான் போட்டி என்ற நிலைமை வந்துவிடும்.//
2021 ?