Jul 28, 2020

இட ஒதுக்கீடு- ஒரு நாள் போராட்டமில்லை!

மாநில அரசுகள் தங்களிடம் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் இருக்கும் படிப்புகளுக்கான இடங்களில் ஒரு பகுதியை மத்திய அரசிடம் வழங்குகின்றன. அப்படி வழங்கப்பட்ட  இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான (OBC) இடஒதுக்கீடு கடந்த நான்காண்டுகளாக வழங்கப்படாதது, பிறகு தமிழக அரசியல் கட்சிகள் தொடுத்த வழக்கில் இடஒதுக்கீடு வழங்கப்பட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தீர்ப்பு- இடையில் வேறு சில செய்திகளால் கவனச் சிதறல்கள் என எல்லாமும் கலந்து காலம்  நகர்ந்து கொண்டிருக்கிறது.

இட ஒதுக்கீடு என்பது ஒரே நாளில் தீர்ப்பு வாங்கிக் கொண்டு அதோடு முடிந்துவிடக் கூடிய விவகாரமே இல்லை. இது ஒருவனுக்கும் இன்னொருவனுக்குமான சண்டை, ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கான சண்டை என்றெல்லாம் இல்லை. இந்த உரிமையைத் தக்க வைப்பதற்காக கிட்டத்தட்ட நூறாண்டுகளாக யார் யாரோ போராடிக் கொண்டிருந்தார்கள். இனியும் நூறாண்டுகள் ஆனாலும் இந்தப் போராட்டம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.

இட ஒதுக்கீடு என்பது எல்லோருக்குமே ஒரே சமயத்தில் விருந்து வைக்கும் வைபவம் என்பதான புரிதலில் சிலர் இருக்கிறார்கள். அப்படியன்று. காலங்காலமாக சில நூறு பேர் அமர்ந்து உண்டு கொண்டிருக்கும் பந்தியில் வெளியில் பசியோடு நிற்கும் ஆயிரக்கணக்கானவர்களில் சிலரை அழைத்து ‘நீயும் உட்கார்ந்து சாப்பிடு’ என்று உரிமை கொடுப்பதுதான் இட ஒதுக்கீடு. ஏன் இந்தப் பந்தியிலேயே எல்லோருக்கும் உணவு கொடுக்கவில்லை என்பது எப்படி அபத்தமோ அப்படித்தான் இட ஒதுக்கீடு மூலமாக எல்லோருக்கும் ஒரே கட்டத்தில் வாய்ப்பு கொடுத்துவிட வேண்டும் பிறகு இட ஒதுக்கீடு என்பதையே நீக்கிவிட வேண்டும் என்பதும். 

இன்னமும் பல நூறு பந்திகள் நடக்கும். நடந்து கொண்டேயிருக்கும். ஏற்கனவே இடம் பிடித்த சில மனிதர்களே மீண்டும் தன் பெண்டு பிள்ளைகளுக்கு அதே இடத்தைக் கொடுக்கக் கூடும். இவையெல்லாம் நடக்கத்தான் செய்யும். ஆனாலும் பசியோடு வெளியே நிற்கும் ஆயிரக்கணக்கானவர்களில் கணிசமானவர்கள் உள்ளே வந்து உண்பார்கள். அதுதான் இடஒதுக்கீட்டு உரிமையின் அடிப்படை. எத்தனை காலம் ஆனாலும் வெளியில் நிற்கும் அத்தனை பேரும் வந்து உண்ணும் வரை அரசாங்கம் இட ஒதுக்கீடு உரிமை பறி போய்விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியிருக்கும். ஒருவேளை அரசாங்கமே கதவை இழுத்துப் பூட்டும் போது உள்ளே உண்டு கொண்டிருக்கும் சூத்திரர்களோ, அவர்களுக்கு ஆதரவான பிராமணர்களோ எதிர்த்துக் குரல் எழுப்ப வேண்டும். போராட வேண்டும். இன்னும் உண்ணாமல் வெளியில் காத்திருக்கும் சில மனிதர்களிடம் ‘நீ ஏன் பந்தியில் அமர வேண்டும்’ என்று புரிய வைக்க வேண்டும். அப்படியான இந்தப் போராட்டம் நீர்த்துப் போகாமல் இருக்கும் வரைக்கும்தான் சமூகநீதிக்கு பங்கம் வராமல் இருக்கும்.

கோடிக்கணக்கான மக்களை மேலே கொண்டு வரும் திட்டங்களில் சில பிரச்சினைகள் இருக்கும். உள்ளே அமர்ந்து உண்ட சூத்திரர்களே ‘நாம சாப்பிட்டாச்சு..இனி அடுத்தவன் தின்னா என்ன திங்கலைன்னா என்ன’ என்று நினைக்கலாம், ‘பாரு, அப்பன் மகன்னு வரிசையா அவனுகளே திங்கறானுக...இனி கதவைப் பூட்டுங்க’ என்று சொல்லலாம். வெளியில் நிற்பவர்களிடம் சில சதிகாரர்கள், விலை போனவர்கள், புரியாதவர்கள் ‘நமக்கு இடமே கிடைக்காது..அதனால பந்தியில் இடமே வேண்டாம்ன்னு சொல்லுவோம்’ என்று தூண்டிவிடலாம். அப்படியான சமயங்களில் இதில் இருக்கும் சதிகள், ஏன் எல்லோருக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்ற பிரச்சினைகளை விளக்கி, எல்லோருக்கும் கிடைக்கும் வரைக்கும் போராடுவோம் வா என்று அழைத்து, நீ வந்தாலும் சரி, வராவிட்டாலும் சரி உனக்காக நான் குரல் எழுப்புகிறேன்; போராடுகிறேன் என்று சமூகத்தின் ஒரு பகுதியில் யாராவது சமூக நீதிக்கான போராட்டத்தை நடத்திக் கொண்டேதான் இருப்பார்கள். 

கையில் செல்போனும், மடியில் லேப்டாப்பும் வைத்துக் கொண்டிருப்பவர்களை கணக்கில் எடுத்துக் கொண்டு இட ஒதுக்கீடு விவகாரத்தை யாரோ சிலர் கிளப்பிவிடும் புரளிகளின் அடிப்படையில் கொச்சைப்படுத்துவது மாபெரும் அநீதி. மாவட்ட, தாலுக்கா தலைநகரங்களில் இருந்து கிராமங்களுக்குள் சென்று பார்க்க வேண்டும். இன்றைக்கும் நன்கு படிக்க வாய்ப்பில்லாமல், சரியான வேலை இல்லாமல், திருமணம் செய்து கொள்ள இயலாமல் வாழ்க்கையில் ஆயிரம் கேள்விகளுடன் நிற்கக் கூடிய கவுண்டர்களைக் காட்ட முடியும். வன்னியர்களும் விதிவிலக்கு இல்லை. அப்படியான தேவர்களைப் பார்க்க முடியும். நாடார்கள், யாதவர்கள், முதலியார்கள் என ஒவ்வொரு இனத்திலும் வாழ்க்கையின் அடுத்தகட்டத்தை அடைய முடியாத பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் உண்டு.

‘எங்க அப்பா படிக்கல...அதனால நானும் படிக்கல’ என்பதற்கும் ‘எங்கப்பா பத்தாவது வரைக்கும் படிச்சாரு..நீயாவது காலேஜ் போய்யான்னு என்னை படிக்க வெச்சாரு’ என்பதற்கும் ‘பக்கத்து வீட்டுப் பையன் படிக்கிறான்..நீயும் படி சாமீ’ என்று அப்பாக்கள் சொல்வதற்குமான வித்தியாசங்களை உணர வேண்டும். இட ஒதுக்கீடு எங்கேயோ ஒரு கிராமத்தில் ஒருவனுக்கான கதவுகளைத் திறக்கும் போது அதைப் பார்த்து சுற்றத்தில் இருக்கும் பல மாணவர்கள் மேலே வருகிறார்கள். ‘அக்னிக்குஞ்சொன்று காட்டை எரித்தது’ என்கிற பாரதியின் வரி இதற்குப் பொருந்தும். சமூகத்தில் எத்தனையோ தூண்டுகோல்களை இட ஒதுக்கீடுதான் உருவாக்கிக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

மேலே வந்துவிட்ட சிலரைப் பார்த்துவிட்டு ‘இனி இட ஒதுக்கீடு போதுமே’ என்று பேசுகிற மனிதர்களை அரைவேக்காடுகள் என்பதைத் தவிர என்ன சொல்ல முடியும்?  சென்னையிலும், கோவையிலும், திருச்சியிலும் வேலை கிடைத்து, அங்கு யாரோ ஒருவன் பேசுவதை வாங்கிக் கொண்டு தனக்கும் நான்கு விவகாரங்கள் தெரிந்துவிட்டதாக தன் சமூகத்துக்கு துரோகம் விளைவிக்கும் இப்படியான முத்துக்களை உதிர்ப்பவர்களை நாம் அன்பு கூர்ந்து புறக்கணித்துவிடலாம். இப்படி பேசுகிறவர்கள் எல்லாக் காலத்திலும் இருப்பார்கள். 

இவர்கள் பேசிக் கொண்டேயிருக்கும் காலத்தில்தான் இன்னமும் வெளிச்சம் தெரியாத, இருளுக்குள் இருக்கும் பல்லாயிரம் குடும்பங்கள் கிராமங்களில் திணறிக் கொண்டிருக்கின்றன. நாற்பதாண்டுகளுக்கு முன்பு கிராமங்களிலிருந்து ஐந்து சதவீதம் பேர்கள் படித்து மேலே வந்தார்கள் என்றால் இன்று அது முப்பது அல்லது நாற்பது சதவீதம் என்ற கணக்கில் இருக்கக் கூடும். அது நூறு சதவீதம் ஆகும் வரைக்கும் இட ஒதுக்கீடு அவசியம். கிராமங்கள் என்றில்லை, ஒவ்வொரு சாதியிலும் இந்த வேறுபாடு உண்டு. இன்றைக்கும் கவுண்டர்களுக்கும் வன்னியர்களுக்கும் கல்வியறிவு சதவீதத்தில் வேறுபாடு உண்டு. வன்னியர்களுக்கும், போயர்களுக்கும் வேறுபாடு உண்டு. போயர்களுக்கும் நாவிதர்களுக்கும் வித்தியாசம் உண்டு. இந்த வேறுபாடுகளுக்கான காரணங்கள், சமூக மற்றும் பொருளாதாரக் காரணிகளின் அடிப்படையை, சிக்கல்களைப் புரிந்து கொள்ளாமல் இட ஒதுக்கீடு பற்றி எந்தவிதமான தர்க்கமும் செய்துவிட முடியாது. அந்தப் புரிதலை பெரும்பான்மைச் சமூகத்துக்கு நாம் உருவாக்கியே தீர வேண்டும்.

ஒவ்வொரு பிற்படுத்தப்பட்டவனும், பட்டியலினத்தைச் சார்ந்தவனும் மேலே வரும் வரைக்கும் இட ஒதுக்கீட்டு உரிமைக்கான போராட்டம் தொட்ர்ந்து கொண்டேதான் இருக்கும். போராடுகிறவர்களின் பக்கம் நிற்பவர்களின் எண்ணிக்கையைக் குறைத்து வலுவிழக்கச் செய்யும் சதிகள் நடந்து கொண்டேதான் இருக்கும். போராட்டத்தில் நாம் கலந்து கொள்கிறோமோ இல்லையோ- எதற்காக இந்தப் போராட்டம், இதன் நுட்பங்கள், சூட்சமங்கள் என்ன என்பனவற்றையாவது அடுத்தடுத்த தலைமுறையினருக்கு புரிய வைத்துவிட வேண்டும். நம் இனத்துக்கு நாம் செய்யக் கூடிய ஒரே நல்ல காரியம் அதுதான்.

இட ஒதுக்கீடு போராட்டங்களின் வரலாறைத் தேடிக் கொண்டிருக்கும் போது சில செய்திகள் கண்ணில்பட்டன.