சில நாட்களுக்கு முன்பாக ஒரு நண்பர் ‘லாக் டவுன் முடியட்டும்...எத்தனை கதை வரப் போகுதுன்னு மட்டும் பாருங்க’ என்றார். அசூசையான தொனியில் சொன்னார்- சாவடிச்சுடுவாங்க என்பது மாதிரி. இப்படியான சில வாக்கியங்கள், உணர்வுகள் நம் மண்டைக்குள் ஏறிவிட்டால் ஏதோ பெரிய பாறாங்கல் அடைத்தது போல அடைத்துக் கொள்ளும். அதைத் தாண்டி ‘என்னதான் இருக்குன்னு பார்க்கலாமே’ என்று கூட யோசிக்கத் தோன்றாது. அதனாலேயே என்னவோ ஊரடங்கு காலத்தில் வெளியான எந்தக் கதைகளையும் வாசிக்கவேயில்லை.
யாவரும்.காம் தளத்தில் ‘ஊரடங்கு காலக் கதைகள்’ என்று தொடர்ச்சியாகவே வெளியிடுகிறார்கள். அதன் இணைப்பு வாட்ஸப் குழுமத்தில் வந்துவிடுகிறது. நான் தான் வாசிக்காமல் வைத்திருந்தேன். சில நாட்களுக்கு முன்பாக கரிகாலன் ‘ஒரு கதை எழுதித்தர இயலுமா?’ என்றார். வாசிக்கவே தயங்குகிறவனை எழுதச் சொல்கிறாரே என்று நினைத்தேன். அதன் பிறகு சில கதைகளை வாசிக்கலாம் என்று யாவரும் தளத்திலேயே தேடிய போது ‘ஜில் ப்ராட்லி’ சிக்கியது.
பிரமிளா பிரதீபன் என்ற ஈழ எழுத்தாளரின் கதை. இணைப்பில் கதையை வாசித்துவிட்டு இதற்கு மேல் எழுதி இருப்பதை வாசிக்கவும்.
சிங்களப்பெண் தமிழன் ஒருவனுடன் ‘சாட்டிங்’செய்கிறாள். ஏற்கனவே அறிமுகமானவன் அவன். உரையாடல் வழியாக அவளுடைய பழைய காதல், தமிழர்கள் மீதான அவளது எண்ணம் என்பதையெல்லாம் பேசிக் கொள்கிறார்கள். அவளுடைய பழைய காதலனைப் போலவே இவன் இருக்கிறான். திருமணம் ஆகாதவன். கவிதையும் எழுதுகிறான். அதனால் அவளுக்கு இவன் மீது ஈர்ப்பு உண்டாகியிருக்கிறது.
ஓவியங்கள் பற்றி பேசுகிறாள். நவீன ஓவியர்கள் குறித்து தன்னுடைய எண்ணங்களைப் பகிர்ந்து கொள்கிறாள். திடீரென்று ‘என்னை நிர்வாணமாக பார்க்க விரும்புகிறாயா?’ என்று கேட்கிறாள். அவள் குடித்திருக்கிறாள். நிதானம் இழந்திருப்பதாகச் சொல்லி அவன் பேச்சை மாற்றுகிறான். இருவருக்குமிடையிலான உரையாடல் என்றாலும் சுவாரசியாமாக நகர்கிறது. சிறுகதையில் சுவாரசியம்தானே முக்கியம்?
கதைகளில் நிகழும் உரையாடலில் ஒரே விவகாரத்தையே இரு பாத்திரங்கள் பேசிக் கொண்டிருப்பது பெரும்பாலும் கதையைத் தட்டையாக்கிடும். அதனால் விதவிதமான செய்திகளை உள்ளே கொண்டு வந்து அவற்றைப் பின்னிப் பிணைத்து நகர்த்துவது ஒரு கலை. அதனை வாசிக்கிறவனுக்கு சலிப்பில்லாமல் செய்துவிட முடிந்தால் சிறுகதை எழுதுவதில் பாதிக் கிணறு தாண்டிவிடுவது போல. அப்படிப் பேசுகிற செய்திகள் பெரும்பாலும் கதாபாத்திரங்களோடு ஒட்டியிருப்பது சிறப்பு. இந்தக் கதையில் நவீன ஓவியங்களைப் பற்றிய உரையாடல் சுவாரசியம் என்றாலும், கதையை நகர்த்துவதற்கான காரணியாகப் பயன்படுகிறது அல்லது எழுதுகிறவர் தன்னுடைய அறிவுக் கூர்மையைக் காட்டுவதற்காகப் பயன்படுத்தியிருக்கிறார் என்று நினைக்கத் தோன்றும்.
ஒவ்வொரு கதையையும் போஸ்ட்மார்ட்டம் செய்ய வேண்டியதில்லை என நினைப்பேன். ‘நல்லா இருக்கா...அவ்வளவுதான்’. ஆனால் பிடித்த கதையாக இருந்தால் கொஞ்சம் ஆராய்ச்சி செய்துவிட வேண்டும். அந்தக் கதையில் இருக்கும் குறைகளைக் கண்டறிந்துவிட்டால் அதே தவறுகளை நாம் செய்யாமல் தவிர்க்கலாம் என்கிற சிறு நம்பிக்கையின் காரணமாகச் செய்கிற ஆராய்ச்சி. அப்படித்தான் இந்தக் கதையைப் பற்றி சில நண்பர்களிடம் பேசிக் கொண்டிருந்தேன்.
பிரமிளா ஆங்கில ஆசிரியர் என்று கதையின் பின்குறிப்பில் இருக்கிறது. அவரது வேறு கதைகள் எதுவும் எனக்கு அறிமுகமில்லை. இந்தக் கதை எனக்குப் பிடித்திருக்கிறது.
பொதுவாகவே கதைகளை எழுதும் போது கதாப்பாத்திரம் இறந்துவிடுவது அல்லது அப்படியான ஒரு கட்டத்தில் கொண்டு போய் நிறுத்துவது எழுதுகிறவர்களுக்கு மிகச் சுலபமான காரியம். வாசிக்கிறவர்கள் அதிர்ச்சியடைவார்கள் என்று எழுதும் போது நம்பத் தோன்றும். ஆனால் தேர்ந்த வாசிப்புடையவர்களுக்கு அது பொருட்டாகவே இருக்காது. காரணம், அப்படியான சுலபமான முடிவுகளைக் கொண்ட நிறையக் கதைகள் எழுதப்பட்டுவிட்டன. கதையின் முடிவை யாருமே யோசிக்காத ஒரு இடத்தில் நிறுத்த வேண்டும் என்பார்கள். அப்படி நிறுத்துவதற்கு எழுதுகிறவன் நிறைய மெனக்கெட வேண்டியிருக்கும். பல சமயங்களில் கதையின் கரு, அதன் ஓட்டம் என அத்தனையும் வாய்த்துவிடும் ஆனால் முடிவு மட்டும் சிக்கவே சிக்காது. அப்பொழுது கதாபாத்திரத்தை கொன்றுவிடுவது எழுதுகிறவர்களுக்கு எளியதாக இருக்கிறது. அதைத் தவிர்த்துவிட்டு கதையை முடிக்கும் போது அது மிக முக்கியமான சிறு கதையாக மாறிவிடக் கூடும்.
2 எதிர் சப்தங்கள்:
Cablesankar லாக்டவுன் கதைகள் தொடர்ந்து எழுதுகிறார்.
கதை படித்தோம்.. நன்றாக இருந்தது.. ஆனாலும், உங்க குசும்பிற்கு அளவே இல்லையா, அந்தக்கால வார இதழ் போல, செக்ஸ் டச் செய்து வாசகர்களை தன்னை நோக்கி ஈர்க்கும் கலை தங்களுக்கு இயல்பாகவே வருகிறது. இருப்பினும், தாங்கள் கதையில் எடுத்துக்கொண்ட ஊரடங்கு தற்போது குரோனாவிற்கான ஊரடங்கு இல்லை என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். வாழ்த்துக்களுடன். துரை. தியாகராஜ், திருச்சி
Post a Comment