Jun 29, 2020

மழைக்கால மாலை

இன்று தமிழகத்தில் புதியதாக நான்காயிரம் பேர்களுக்கு கொரோனா தொற்று என்று செய்தி வாசிக்கிறார்கள். இன்று நண்பரொருவரின் வீட்டிலும் கொரோனா பாஸிடிவ். எனக்குத் தெரிந்து சுமார் பத்து நண்பர்களின் வட்டாரத்தில் நோய்த்தொற்று இருக்கிறது. நோய் வந்த எல்லோருமே இறந்துவிடுவதில்லை என்று எழுதியிருந்த முந்தைய கட்டுரைக்கு எதிர்வினையாக ‘இறந்தவர்கள் யாருமே நாம் இறக்கமாட்டோம் என்று நம்பியவர்கள்தானே’ என்று ஒருவர் கேட்டிருந்தார். எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். அவரவர் மனம்தானே?

கொரோனாவின் காரணமாக தற்கொலைகள், தற்கொலை முயற்சிகள் குறித்தான செய்திகள் தினசரி எவ்வளவு வருகின்றன என்று மட்டும் பாருங்கள். என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்? 

கடந்த நூற்றைம்பது நாட்களாக ஊடகங்கள், அரசு எந்திரம்  என அனைத்தும் திகட்டத் திகட்ட பயமூட்டி வைத்திருக்கின்றன. அதே சமயம் இன்னொன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்- இன்னமும் நூறு நாட்களுக்கு இதே வேகத்தில், இதே செறிவில் பயமூட்டினாலும் கூட மொத்த ஜனத்தொகையில் ஒரு பிரிவினர் சாதாரணமாகச் சுற்றிக் கொண்டேதான் இருப்பார்கள். உலகில் எந்த நாடாக இருந்தாலும் அதுதான் இயல்பு. அதே சமயம் இன்னொரு பிரிவினர் நோய் குறித்தே நினைத்து நினைத்து மன உளைச்சலில் புழுங்கிக் கிடப்பார்கள். அவர்களுக்கு இனம்புரியாத பதற்றம் மனதில் ஏறிக் கொண்டேயிருக்கும். விழிப்புணர்வு என்ற பெயரில் மேலும் மேலும் பயமூட்டுவது இப்படி புழுங்கிக் கிடக்கிறவர்களுக்குத்தான் பெரும் பாதிப்பை உண்டாக்கும். அவர்களுக்கு அல்லது அவர்களது உறவினர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படும் போது திணறிப் போய்விடுகிறார்கள். அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் நடுங்கத் தொடங்கிவிடுகிறார்கள். தற்கொலைகள், தற்கொலை முயற்சிகளை இவற்றோடுதான் பிணைத்துப் பார்க்க வேண்டும். 

கடந்த மூன்று-நான்கு மாதங்களாக நோய் குறித்தான விழிப்புணர்வை வேண்டுமளவுக்கு ஊட்டியாகிவிட்டது. எல்லோருக்குமே நோய் குறித்துத் தெரியும். எப்படிப் பரவும் என்று தெரியும். பரவினால் தப்பிவிடுகிறவர்களும் உண்டு; இறப்பவர்களும் உண்டு என்பதும் தெரியும். யாராவது ஒருவருக்காவது இது குறித்துத்தெல்லாம் தெரியாது என்று நினைக்கிறீர்களா? தெரிந்தும் ஏன் வெளியில் வருகிறார்கள்? வெளியில் வரக் கூடிய தொண்ணூற்றொன்பது சதவீதம் பேருக்கு வேறு வாய்ப்புகள் இல்லை. பிழைப்பு தேட வேண்டும். வருமானத்திற்கு வழி பார்க்க வேண்டும். கடனைக் கட்ட வேண்டும் என்று ஏகப்பட்ட சுமைகளோடு வெளியில் வருகிறார்கள். அப்படி வருகிறவர்களிடம் ‘நோய் வந்தால் நீ செத்த’ என்று மீண்டும் மீண்டும் உருவேற்றுவது எந்த வகையில் நியாயம்? அது அவர்களை இன்னமும் மனவருத்தம் அடையச் செய்துவிடாதா?

சம்பளம் வருகிறது- வீட்டிலிருந்தே வேலை செய்ய முடியும் என்று முடிகிறவர்கள் வீட்டில் இருக்கலாம். சாலையில் இறங்கினால்தான் வருமானம் என்று இருக்கக் கூடிய கோடிக்கணக்கானவர்கள் என்ன செய்வார்கள்? அவர்கள் இறங்கித்தானே தீர வேண்டும்? அப்படி இறங்குகிறவர்களுக்கு நெரிசலை ஏற்படுத்தாமல் வாய்ப்பிருப்பவர்கள் வீட்டில் இருக்கலாம். அதுதான் நாம் ஒவ்வொருவருக்குமான புரிதலுடன் செய்து கொள்ளக் கூடிய மிகப்பெரிய உபாயம். 

ஊரடங்குகள் தளர்வடையக் கூடும். இனி அலுவலகங்கள் செயல்படத் தொடங்கும். பேருந்துகள் இயங்கும். மக்கள் மெல்ல மெல்ல வெளியே வருவார்கள். ‘கொரோனாவோடு வாழப்பழகுங்கள்’ என்று அரசு எப்பொழுதோ அறிவித்துவிட்டது. அப்படி வாழப்பழகுவதற்கான தயாரிப்புகளைச் செய்ய அரசுதான் உதவ வேண்டும். ஊடகங்கள்தான் துணையாக இருக்க வேண்டும். நோய் கடுமையானது; வேகமாகப் பரவும் என்பதைச் சொல்வதோடு மீறி வந்துவிட்டால் எப்படி மீண்டு வருவது என்பதற்கான வழிமுறைகளைச் சொல்லித் தர வேண்டியது அவசியம். அதற்கான எந்த முன்னெடுப்புகளும் இதுவரையிலும் இல்லை. நேர்மறையாகப் பேசுகிறவர்களையும் இந்த ஊடகச் சூழல் சுருட்டி மூலையில் அமரச் செய்திருக்கிறது. 

மாலை தெரியாத்தனமாக தொலைக்காட்சியை பார்த்துவிட்டால் அதோ கதிதான். சாவடித்துவிடுகிறார்கள். எப்பொழுதாவது பார்க்கும் போதே பதற்றத்தை விரல் நுனிக்குக் கொண்டு வந்துவிடுகிறார்கள் என்றால் எந்நேரமும் பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு என்ன நிலை என்று நினைத்துப் பார்க்கிறேன்.

நோய் பரவாமல் தடுத்துவிடுவோம் என்பதில் பெரிய நம்பிக்கையில்லை. பரவும். கண் முன்னால் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அப்படிப் பரவினால்- தொற்றினால் எப்படிச் சமாளிப்பது, உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் எப்படி தயாராக வேண்டும் என்பதுதான் நாம் அறிந்து கொள்ள வேண்டியது. நண்பர் ஒருவரின் தந்தை தனியார் மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார். மருத்துவமனை விடுதி ஒன்றைப் பிடித்து வைத்திருக்கிறார்கள். அங்கே அவருக்கு ஓர் அறை ஒதுக்கித் தந்துவிட்டார்கள். பெரிய பிரச்சினை எதுவுமில்லை. நன்றாக இருக்கிறார். 

இன்னொரு நண்பர் அரசு மருத்துவமனை. நுகர்திறன் குறைந்து, தலைவலி வந்து பரிசோதனை செய்தார். அறையில் பத்து பேர்கள் இருக்கிறார்கள். கபசுரக் குடிநீர், துத்தநாக மாத்திரைகளைத் தருகிறார்கள். இப்பொழுது தலைவலி இல்லை. செல்போன் இருக்கிறது. நோண்டிக் கொண்டிருக்கிறார். மீதமிருக்கும் ஒன்பது பேர்களிடம் பேசுகிறார். இப்படி இன்னமும் எட்டுப் பேர்கள் பற்றி எழுத முடியும். எல்லோருக்குமே பாஸிடிவ்தான். எல்லோருமே பாஸிட்டிவாக இருக்கிறார்கள்.

ஹைதராபாத்தில் ஒரு இளைஞர் மூச்சுத் திணறி இறந்த வீடியோதான் நம் கண்களில்படுகிறது. அதுதான் பதறச் செய்கிறது. ஆனால் என்ன செய்ய முடியும்? சாலை விபத்துகளில் யாராவது அடிபட்டுச் சாவோம் என்று நினைத்து இறக்கிறார்களா? பெரும் நோய்கள் வரும் என்று எதிர்பார்த்துதான் நோய் வருகிறதா? எல்லோருமே ஏதாவதொரு நம்பிக்கையில்தானே இருக்கிறோம். அந்த நம்பிக்கை பெரும்பாலானவர்களைக் காப்பாற்றிவிடுகிறது. சிலரை ஏமாற்றிவிடுகிறது. அப்படித்தான் இதிலும். நம்பிக்கை மட்டும்தான் ஒரே ஆயுதம்! வராது. வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்கிற மனநிலையை வளர்த்துக் கொள்வதற்கான முயற்சிகளைத் தொடங்கிட வேண்டும். கொரானா, ஊரடங்கு என்பதெல்லாம் தனிமனித வாழ்க்கையிலும் சரி; சமூக அமைப்பிலும் சரி மிகப்பெரிய மாறுதல்களைக் கொண்டு வந்து சேர்த்திருக்கின்றன. இனி அவற்றோடு சேர்ந்து மனதளவிலும் உடலளவிலும் நெகிழ்த்தி வாழ வேண்டுமே தவிர எப்பொழுதும் முடங்கியே கிடக்க வேண்டியதில்லை.

நம் அனைவருக்குமே நேர்மறையான சிந்தனையை ஊட்டக் கூடிய சூழல் அவசியம். இந்தக் காலகட்டத்தை கடப்பது குறித்து பாஸிட்டிவிட்டியுடன் பேச வேண்டியிருக்கிறது. நோய் குறித்து, அது பரவுகிற வேகம் குறித்து நம் எல்லோருக்குமே பயம் உண்டுதான். ஆனால் அவரவர் பயங்களை ஒதுக்கி வைக்க சக மனிதர்களுக்கிடையிலான ஆறுதல்களும் ஆசுவாசங்களும் தேவையாக இருக்கின்றன. மழை பெய்து முடித்த மாலையொன்றில் நடப்பதைப் போன்ற ஈரமான மன அமைதியை உண்டாக்கும் நேர்மறைச் சிந்தனைகள் பரவ வேண்டும். அது மட்டுமே சமூகமாக நாம் மீண்டெழ அவசியமாக இருக்கும். புறக்காரணிகள் ஆயிரம் அழுத்தங்களை உருவாக்கினாலும், நசுக்கினாலும் ஏதோவொரு ஆறுதலைத் தரக் கூடிய சூழலை நமக்கும் நம் குடும்பத்துக்கும் சமூகத்துக்கும் ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. 

Jun 27, 2020

அசைந்து கொடுத்துவிடக் கூடாது!

கொரோனா, ஊரடங்கு, பிழைப்பு நாறிக் கொண்டிருப்பதெல்லாம் இந்தியாவில் மட்டும்தானா என்று புரியவில்லை. சில வெளிநாட்டு நண்பர்களிடம் விசாரித்தால் ‘நாங்க வீட்டிற்குள்தான் இருக்கிறோம்...ஆனா மத்தபடி இயல்பாகத்தான் இருக்கிறார்கள்’ என்கிறார்கள். அமெரிக்காவில் பரவலாகவே மக்கள் வெகு இயல்பாக இருப்பதாகச் சொல்கிறார்கள். கடற்கரை, சுற்றுலாத்தளங்களில் வழக்கமான கூட்டம்தான் என்கிறார்கள். ஐரோப்பிய நாடுகளிலும் கூட அப்படித்தான் சொல்கிறார்கள். ஒருவேளை சூழல் அப்படியில்லை எனில் நண்பர்கள் உறுதிப்படுத்தலாம். 

தமிழகத்தில் ஊரடங்கு நூறாவது நாளை நெருங்கிக் கொண்டிருக்கிறது ஆரம்பத்தில் இருந்ததைவிடவும் பலரும் மிகக் கடுமையான விரக்தியைக் காட்டுகிறார்கள். எல்லாவிதங்களிலும் முடங்கிப் போயிருப்பது பலரையும் சலிப்படைய வைத்திருக்கிறது. மீண்டும் ஊரடங்கு வர வாய்ப்பிருக்கிறது என்று சிலர் பேசிக் கொண்டிருக்கிறார்கள். மறுபடியும் இன்னுமொரு கட்ட ஊரடங்கு என்பது பெரிய வம்பாகத்தான் இருக்கும். 

அரசு ஆப்பசைத்த குரங்காகச் சிக்கிக் கொண்டது என்றுதான் தோன்றுகிறது. கடந்த நூறு நாட்களாகவே நோய்பரவலின் எண்ணிக்கையும் வேகமும் அதிகரித்தபடியேதான் இருக்கிறது. இப்பொழுது ஊரடங்கைத் தளர்த்தினால் ‘நூறு நாளா முடக்கி தொழிலும் போச்சு, வருமானமும் போச்சு, நோயும் கட்டுக்குள் வரவில்லை...இவ்வளவு நாள் அடக்கி வெச்சு என்ன பலன்?’ என்று மக்கள் எதிர்ப்புணர்வைக் காட்டுவார்கள்.  திறந்துவிட்டால் தொற்றாளர்களின் எண்ணிக்கை பன்மடங்காக அதிகரிக்கும். மருத்துவமனைகள் நிரம்பக் கூடும். மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் பளு அதிகரிக்கும். இரண்டு முடிவுகளுமே சிக்கலானதுதான். 

ஒருவேளை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். அப்பொழுதும் கூட நோய்த்தொற்றின் வேகமும் எண்ணிக்கையும் இப்படியேதான் தொடரும். ஒவ்வொரு ஊரடங்கு கட்டத்தின் முடிவிலும் தினசரி அதிகரிக்கும் எண்ணிக்கையைப் பார்த்தால் அது புரியும். முன்பு ஒரு நாளைக்கு ஐம்பது என்று  அதிகரித்த எண்ணிக்கை இன்று ஒரு நாளைக்கு நான்காயிரம் என்று போய்க் கொண்டிருக்கிறது. இன்னமும் ஒரு மாதம் கழித்தால் என்னவாகும்? ஜூலை இறுதியில் ஒரு நாளைக்கு இருபதாயிரம் அல்லது இருபத்தைந்தாயிரம் என்று எண்ணிக்கை இருக்கும். அதன் பிறகு மீண்டும் நீட்டிப்பார்களா?

பீலா ராஜேஷ் போய் ராதாகிருஷ்ணன் வந்த போது ஓரளவு வேகம் குறையும் என்ற நம்பிக்கையிருந்தது. பொய்த்துப் போனது. சென்னையில் ஒவ்வொரு மண்டலமாக சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டார்கள். அமைச்சர் குழுக்கள் அமைக்கப்பட்டன எதுவும் இம்மியளவு கூட பலனளித்ததாக சாமானியக் கண்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்ட பிறகுதான் தினசரி ஒரு மாவட்டம் மிச்சமில்லாமல் அத்தனை மாவட்டங்களிலும் எண்ணிக்கை அதிகரித்தபடியே இருக்கிறது. எங்கேயோ கோட்டைவிட்டுவிட்டார்கள் என்றுதானே அர்த்தம்?

ஐம்பது, நூறு என்றிருந்த போதே முழுமையாக அடைத்து, கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் (Containment zone)அனைவருக்குமே பரிசோதனைகளைச் செய்திருந்தால், பாஸிடிவ் வந்த அத்தனை பேர்களையும் கண்டறிந்திருக்கலாமோ? ஆரம்பத்தில் பரிசோதனைக் கருவிகள் வந்து சேர்வதில் இருந்து- விலை அதிகம், தரமில்லை என்று திருப்பியனுப்புவது வரையிலும் பல சொதப்பல்களைச் செய்தார்களே! அதையெல்லாம் தவிர்த்திருக்கலாமோ? சென்னையில் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டிருந்த போது பிற ஊர்களுக்கு தடையில்லாமல் செல்வதற்கான அத்தனை வாய்ப்புகளும் உருவாகியிருந்தன. சென்னையை முழுமையான கட்டுப்பாட்டில் எடுத்து, நோய் அதிகமான எண்ணிக்கையிலிருந்த மண்டலங்களிலாவது அத்தனை பேருக்கும் சோதனைகளைச் செய்திருக்கலாமோ? - இப்படியெல்லாம் யோசிக்கத் தோன்றுகிறது. 

எனக்கும் உங்களுக்கும் கைவசம் எந்தத் தரவுமில்லை. நாம் நிபுணர்களுமில்லை. எங்கே ஏமாந்தோம் என்று தெரியாது. நாம் என்ன தீர்வைச் சொன்னாலும் இன்னொருவருக்கு அபத்தமாகத் தெரியக் கூடும். ஆனால் தீர்வைச் சொல்ல வேண்டியவர்களும் எதுவும் சொல்வதில்லை. இன்னமும் ‘சமூகப்பரவல் இல்லை’ என்றுதான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். கொரோனா மாநிலம் முழுவதும் பரவியிருக்கிறது. எந்த மாவட்டத்திலும் பூஜ்ஜியம் என்ற எண்ணிக்கை இல்லை. இனி என்ன செய்யப் போகிறார்கள் என்பதுதான் பெருங்குழப்பமாக இருக்கிறது. 

அதே சமயம், பலருக்கும் பயமும் மன உளைச்சலும் ஏற்பட்டிருக்கிறது. பயப்படுகிறார்கள். பொருளாதார நெருக்கடிகள் பீதியூட்டுகின்றன. வாங்கி வைத்திருக்கும் கடன் நினைவுக்கு வந்து வாதிக்கிறது. நோய் பற்றியும் வருந்துகிறார்கள். இத்தகைய நண்பர்களிடம் பேசும் போது ஒன்றை மட்டும் சுட்டிக்காட்டுகிறேன். நமக்கு கண்களில் தெரியும் செய்தியெல்லாம் இறப்புச் செய்திதான். மருத்துவர் இறந்து போனார், இளவயது ஓட்டுநர் இறந்துவிட்டார், போலீஸ், எம்.எல்.ஏ, செவிலியர் உயிரிழந்துவிட்டனர் என்றுதான் செய்திகளில் காட்டுகிறார்கள். ஆனால் ஆயிரக்கணக்கானவர்கள் தப்பித்துவிடுவது நடந்து கொண்டிருக்கிறது. ‘பாராசிட்டமால் எடுத்துக் கொண்டேன். வேறு எந்தப் பிரச்சினையுமில்லை’ என்று இலண்டனில் வசிக்கும் அனுபமா என்ற மருத்துவ நண்பர் சொன்னார். இரண்டு மாதங்களுக்கு முன்பு கடுமையாக பயமூட்டியவர் அவர். இப்பொழுது சர்வசாதாரணமாகப் பேசுகிறார். வரும் வரைக்கும்தான் பயம். வந்தால் மீண்டுவிடுவோம். தொண்ணூறு வயது ஆட்களும் தப்பி வருகிறார்கள். இரண்டு வயதுக் குழந்தை எந்தப் பிரச்சினையுமில்லாமல் மீண்டிருக்கிறது. இப்படியாக இடது கையில் நோயைக் கையாண்டவர்கள் பற்றி எந்தச் செய்தியும் நமக்குத் தெரிவதில்லை என்பதுதான் இவ்வளவு உளைச்சலுக்கும் காரணம்.

வெளிப்படையாகச் சொன்னால் எல்லாவற்றையும் சொதப்பி வைத்துவிட்டார்கள். இவர்களால் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கை துளியுமில்லை. நோய் பரவத்தான் செய்யும். அதை எதிர்கொள்ளும் வழிவகைகளைப் பார்ப்போம். பொருளாதார நெருக்கடி, நிதிப்பிரச்சினைகளை மனதில் போட்டுக் குழப்பிக் கொள்ள வேண்டியதில்லை. ஆறேழு மாதங்களில் ஓரளவு தேறி விடுவோம். அவையெல்லாம் லெளகீக பிரச்சினைகள். இத்தகைய புறக்காரணிகள் நம் மனதை அரித்துவிட எந்தவிதத்திலும் அனுமதிக்க வேண்டியதில்லை. ஆனது ஆகட்டும், பார்த்துக் கொள்ளலாம் என்கிற ஒற்றை வரியை மட்டும் இறுகப் பற்றிக் கொண்டிருப்போம். 

ஒருவேளை நமக்கு தொற்று ஏற்பட்டாலும் தேறி வரும் ஆயிரம் பேர்களில் ஒருவராக இருப்போம் என்கிற நினைப்புதான் மிக முக்கியம். கண்டதையும் நினைத்துப் பயந்து புலம்பினால் உறக்கம் குறையும், உண்ணும் உணவின் அளவு குறையும், மனதுக்குள் என்னவோ உறுத்திக் கொண்டேயிருக்கும் இவையெல்லாம் நம்மை உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் இன்னமும் வலுவிழக்கச் செய்துவிடும். அதற்கெல்லாம் துளியும் அசைந்து கொடுத்துவிடக் கூடாது.

Jun 25, 2020

விசா பிரச்சினையை தீர்த்து வைக்கணுமாம்

புதிய தலைமுறையின் நியூஸ் 360 இல் கலந்து கொள்ள இன்று அழைப்பு வந்தது. திரு. கார்த்திகேயன் அழைத்திருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பாகவே மின்கட்டண உயர்வு பற்றிய விவாதத்திற்கு அழைத்தார்கள். கரட்டடிபாளையத்தில் எனக்கு இணைய இணைப்புதான் பிரச்சினை. சில சமயங்களில் சொதப்பிவிடுகிறது. அதனாலேயே அப்பொழுது தவிர்க்க வேண்டியதாகிவிட்டது. இன்றைக்கும் தவிர்ப்பது முறையாகாது என்பதால் இரண்டு மூன்று அலைபேசிகள், லேப்டாப், கையில் ஒரு கோகுல் சாண்டல் பவுடர் டப்பா சகிதமாக தனியறைக்கு வந்துவிட்டேன்.

மதியம் இரண்டரை மணிக்கு விவாதம் தொடங்கும் என்றும் ஆனால் இரண்டு மணிக்குத் தயாராக இருக்கச் சொல்லியிருந்தார்கள். ‘ஸ்கைப்பில்’ வீடியோ வேலை செய்யவில்லை. ஆனால் சேனலில் இருந்து அழைக்கத் தொடங்கிவிட்டார்கள். அலைபேசியில் ஸ்கைப்பில் இணைந்து, அவர்கள் அழைக்கும் போது இணைப்பு துண்டிக்கப்பட்டு, மீண்டும் இணைத்து என்று ஒரு வழியாகிவிட்டேன். ஸ்டுடியோவில் இருந்தவரே ‘ஸ்ஸ்ப்பா’ என்று சொல்லிவிட்டார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். பவுடர் டப்பாவை எட்டி உதைத்தேன். அது பாவம் தனியாகக் கிடக்கிறது.

இந்தச் சிரமம் கூட இல்லாமல் ட்ரம்புக்கு தீர்ப்பு சொல்ல முடியுமா?

ஒரு வழியாக அனைத்தும் சரியாகி கிழக்குப் பதிப்பகம் திரு. பத்ரியும் நானும் பேசினோம். திரு. தம்பி தமிழரசன் நெறியாளர். ஓரளவுக்குத் தேவையான குறிப்புகளை எடுத்து வைத்திருந்தேன். விசா பிரச்சினை குறித்து முதலில் ஒரு செய்தித் தொகுப்பு, அதன் பிறகு எங்களின் கருத்துகள், செய்தியாளர் தரும் தகவல்கள் மற்றும் நிறைவுக் கருத்து என்று ஓரளவுக்கு முழுமையான புரிதலை இந்த செய்தித் தொகுப்பு தரும் என நினைக்கிறேன்.

                                                                           ***

தற்காலிக விசா நிறுத்தம் என்பதே  ஒரு தேர்தல் ஸ்டண்ட். நமக்கு எப்படி பாகிஸ்தானோ அப்படி டொனால்ட் ட்ரம்ப்க்கு இந்த இமிகிரேஷன் பிரச்சினை. வரும் நவம்பர் மாதம் அமெரிக்காவில் தேர்தல் நடைபெறுகிறது. அதனால் அதிரடியாக நாட்டுக்கு நலம் விளைவிக்கும் காரியங்களைச் செய்வதாகக் காட்டிக் கொள்ள  சில விசாக்களுக்கான நடைமுறைகளை டிசம்பர் மாதம் வரைக்கும் நிறுத்தி வைத்திருக்கிறார். 

ஹெச்1 பி என்பது அமெரிக்காவிலேயே தங்கி பணிபுரிபவர்களுக்கான விசா. வருடத்திற்கு 85,000 விசாக்களை அமெரிக்கா அனுமதிக்கிறது. இதில் 20000 விசாக்கள் அமெரிக்காவில் உயர்படிப்பு படித்த வெளிநாட்டினருக்கான கோட்டா. மீதமிருக்கும் விசாக்களில்தான் டிசிஎஸ், இன்ஃபோஸிஸ் மாதிரியான நிறுவனங்கள் ஆட்களை அனுப்பி வைக்கின்றன. மொத்த ஹெச்1பி விசாவில் இந்தியர்கள்தான் 70% ஆட்கள் செல்கிறார்கள். சீனர்கள் 13-14 சதவீதம். இந்த ஹெச்1 பி விசாவை வருட இறுதி வரைக்கும் நிறுத்தி வைக்கிறார்கள். 

எல் 1 என்பதும் பணியாளர்களுக்கான விசாதான். ஒரு வருடம் வரைக்கும் பணி அல்லது பணியாளர்களை பரிமாற்றம் செய்து கொள்வது மாதிரியான சந்தர்ப்பங்களில் இந்த விசா வழங்கப்படுகிறது. அமெரிக்க நிறுவனங்களின் இந்தியக் கிளைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் தற்காலிகமாக சில மாதங்கள் சென்று வருவதற்கும் இந்த விசாதான்.  ‘நான் போகலைன்னா அவங்களால இதைச் செய்யவே முடியாது...அநேகமா உங்க நாட்டோட குடி முழுகிடும்’ என்று விசா நேர்காணலில் உதார்விடும்படி சொல்லி அனுப்புவார்கள். 

ஹெச்4 விசா என்பது சார்ந்தவர்களுக்கான விசா (dependent) இந்த விசாக்களில் செல்கிறவர்கள் அனைத்துப் பணிகளையும் அமெரிக்காவில் செய்து சம்பாதிக்க முடியாது. சில பணிகளுக்கு மட்டுமே அனுமதி உண்டு. இந்த விசாக்களையும் நிறுத்தி வைக்கிறார்கள்.

ஹெச்2 பி என்பது விவசாயம் இல்லாத ஆனால் உழைப்பு, சேவை சார்ந்த பணியாளர்களுக்கானது.  இவை தவிர ஆராய்ச்சிகளுக்காகச் செல்கிறவர்களுக்கு வழங்கப்படும் ஜெ-1 விசாவும் நிறுத்தி வைக்கப்படுகிறது.
                                                                                ***

இந்த விசாக்களை நிறுத்தி வைப்பதால் இந்தியர்களுக்கு பாதிப்பு இருக்குமா என்பதுதான் கேள்வி.

அமெரிக்காவிலேயே இருப்பவர்களுக்கு பெரிய பாதிப்பில்லை. புதுப்பித்துக் கொள்ள வேண்டியதாக இருந்தாலும் அவர்கள் புதுப்பித்துக் கொள்ளத் தடையில்லை. ஒருவேளை அமெரிக்காவை விட்டு வெளியில் வந்திருந்தாலும் கூட விசாவின் காலக்கெடு இருக்குமானால் அவர்களுக்குப் பிரச்சினையில்லை. ஆனால் அமெரிக்காவைவிட்டு வெளியில் விசாவின் காலக்கெடு முடிந்திருந்தால், கணவன் அமெரிக்காவில் இருக்க மனைவி இந்தியா திரும்பிய சூழலில் கொரோனா பிரச்சினைகளினால் விசாவை புதுப்பித்துக் கொள்ள முடியவில்லை என்றால் சிக்கல்தான். 

நிறுவனங்கள் ஹெச்1பியில் ஆட்களை அனுப்பி தமது க்ளையண்ட்களிடம் ஒன்றுக்கு நான்கு மடங்கமாக பில் போட்டு வசதியாகச் சம்பாதிப்பார்கள். அத்தகைய நிறுவனங்களின் வருமானத்திற்கு அடி. இந்த வருடம் அமெரிக்கா சென்றுவிடலாம் என்று கனவில் இருந்தவர்களுக்குச் சிரமம்தான். இப்படியான பாதிப்புகள் நிச்சயமாக இருக்கும்.

‘இந்தியர்கள்தான் அமெரிக்கர்களின் வேலைகளைப் பறிக்கிறார்கள்’ என்று ஏற்கனவே இருக்கும் எண்ணத்தை இன்னமும் செறிவூட்டுவதாக இந்த முடிவு இருக்கும். தமது நண்பர் ட்ரம்ப்பிடம் சொல்லி மோடி தடுத்திருக்கலாம். ‘நீ தேர்தலில் ஜெயிக்க எங்களை ஏன்யா எதிரியா காட்டுற’ என்று கேட்டிருக்கலாம். ‘இந்தியர்கள் அதிகமாக பெறும் ஹெச்1 பி விசாவில் ஏன் கை வைக்கிறீர்கள்’ என்று முரண்டு பிடித்திருக்க வேண்டும். அதையெல்லாம் செய்யவில்லை. அகமதாபாத்தில் தின்றது செரித்து முடிவதற்குள் ‘மை ப்ரண்ட்ட்ட்’  டோலன் இப்படிச் செய்திருக்கவும் வேண்டியதில்லை. 

***

விசாவை நிறுத்தி வைப்பதால் இந்தியாவுக்கு பலன்கள் இருக்குமா என்று கேட்டால் இருக்கும். ஆனால் உறுதியாகச் சொல்ல முடியாது.

திருப்பூர், கோவை ஆட்களுக்கு எப்படி வட இந்தியப் பணியாளர்களோ அப்படித்தான் அமெரிக்கர்களுக்கு நாம். சம்பளமும் குறைவு, வேலையும் காட்டுத்தனமாக இருக்கும். வட இந்தியர்கள் வெளியேறிய பிறகு வேறு வழியே இல்லாமல் கோவை முதலாளிகள் நம்மவர்களுக்கு பணி வழங்குவதைப் போல, இந்தியர்கள் வந்து சேராதபட்சத்தில் அமெரிக்கர்களுக்கு அமெரிக்க நிறுவனங்கள் தற்காலிகமாக வேலையைத் தரக் கூடும். ஆனால் இந்தியர்கள்தான் தமக்கு இலாபம் என்பதால் ‘அவுட்சோர்ஸிங்’ செய்வார்கள். தமது பணிகளை மூட்டை கட்டி வெளிநாடுகளுக்கு அனுப்பிவைக்க வாய்ப்புகளை அலசுவார்கள். ஏற்கனவே பொருளாதாரம், கொரோனா என்று திணறிக் கொண்டிருக்கும் இந்திய நிறுவனங்களுக்கு ஒரு வகையில் இது இலாபமாகவே இருக்கும்.

ஏன் உறுதியாகச் சொல்ல முடியவில்லை என்றால்- நமக்கு வரும் வேலைகளைத் தட்டிப்பறிக்க சில தென்கிழக்கு ஆசிய நாடுகள் தயாராக இருக்கின்றன. இந்தியர்களைவிடவும் அவர்களுக்கு சம்பளம் குறைவு. நம்மைவிடவும் முரட்டுத்தனமாக வேலை செய்யக் கூடியவர்கள். ஆங்கிலம் மட்டும்தான் அவர்களின் முக்கியப் பிரச்சினை. அதனால் நமக்கு வர வேண்டிய பணிகள் கணிசமாக அங்கே செல்லக் கூடும். இந்திய நிறுவனங்களே கூட பல தென்கிழக்காசிய நாடுகளில் கிளைகளைத் தொடங்கியிருக்கின்றன. எனவே அவர்களே கூட பணிகளை அங்கு மடை மாற்றினால் அதனால் இந்தியர்களுக்கு பெரிய இலாபம் என்று சொல்ல முடியாது. இதற்கும் கூட மத்திய அரசுதான் ‘செக்’ வைக்க வேண்டும்.

எப்படியிருந்தாலும் நவம்பரில் ட்ரம்ப் வென்றாலும் கூட டிசம்பரில் இந்தத் தற்காலிக நிறுத்தம் காலாவதியாக அனுமதித்துவிடுவார். புதிய அதிபர் வந்தாலும் காலாவதியாக அனுமதித்துவிடுவார். எந்த நாட்டிலும் ஆட்சியாளர்களைப் பொறுத்தவரையில் கார்போரேட் நிறுவனங்களின் இலாபம் மிக முக்கியம். அவர்கள் வெற்றி பெறுவதற்காக மக்களிடம் ‘எங்களுக்கு கார்ப்போராட்களைப் பற்றிக் கவலையில்லை’ என்பார்கள். ஆனால் அது 100% பொய்.  ‘தற்காலிக’ விசா நிறுத்தம் என்பதும் ‘தற்காலிகம்’தான்.
                   ***


இந்தத் தலைப்பில் ஆர்வமிருப்பவர்கள் நியூஸ்360 செய்திச் சுருக்கத்தைப் பார்க்கலாம். 

அமெரிக்காவில் விசா பிரச்சினை என்றாலும் நம்மை மாதிரி பெரிய மனுஷன்தான் தீர்த்து வைக்க வேண்டியிருக்கிறது. அடுத்த பஞ்சாயத்துக்காவது அந்த பவுடர் டப்பாவை ஒழுங்காகப் பயன்படுத்த வேண்டும். பத்திரப்படுத்தி வைக்கிறேன்.

புதிய தலைமுறைக்கும், கார்த்திகேயனுக்கும், தம்பி தமிழரசனுக்கும் நன்றி. அடுத்த முறை டெனால்ட் ட்ரம்ப்பைவிட பெரிய ரவுடியிடம் பஞ்சாயத்து செய்ய அழைக்கவும்.

Jun 23, 2020

படிப்பு காத்திருக்குமா?

பெரும்பாலான வீடுகளில் குழந்தைகள் ஆன்லைன் வகுப்புகளில் அமர்ந்திருக்கிறார்கள். ஆன்லைன் வழியாகப் பாடங்களை ஆசிரியர்கள் நடத்துவதைக் கவனித்தவர்களுக்குப் புரிந்திருக்கும். வழக்கமாக வகுப்பறைகளில் பாடம் நடத்துவதைப் போன்ற காரியமில்லை அது. ஆன்லைன் பயிற்சியளிக்கும் நிறுவனங்கள் அல்லது அவற்றில் அனுபவம் பெற்றவர்களின் யூடியூப் வீடியோக்களைப் பார்த்தால் நமக்கே ஒரு விஷயம் பிடிபடும். எதைச் சொல்ல வேண்டுமோ அதைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் சொல்வதற்கான திட்டமிடலையும் பயிற்சியையும் பெற்றவர்களாக இருப்பார்கள்.  ஒரு மணி நேர வகுப்பு என்றால் அதில் குறைந்தபட்சம் 55 நிமிடங்கள் நமக்கு ஏதாவதொரு வகையில் உருப்படியானதாக இருக்க வேண்டும். இல்லையென்றால் அந்நிறுவனம் படுத்துவிட வேண்டியதுதான். காசையும் செலவழித்து ஜல்லி அடிப்பதையும் யார் பொறுத்துக் கொள்வார்கள். அதனால்தான் அந்நிறுவனங்கள் ஆன்லைன் பயிற்சியாளர்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கின்றன. 

கடந்த வாரத்தில் ‘ஜூம்’ வழியாக சுமார் 30 பேர்களிடம் பேசப் போவதாக எழுதியிருந்தேன் அல்லவா? மாலை ஆறரை மணிக்கு ஆரம்பித்து கிட்டத்தட்ட ஒன்றே முக்கால் மணி நேரத்திற்கு அந்த உரையாடல் நிகழ்ந்தது. தொடக்கத்தில் பத்து நிமிடங்கள் மட்டும் நிகழ்வை ஒருங்கிணைத்தவர் பேசினார். அதன் பிறகு முழுமையாக நான்தான் பேச வேண்டியிருந்தது. யாருமே இல்லாத ஒரு அறையில் அடைத்து வைத்து பேசவிட்டால் ‘யாராவது இருக்கீங்களா?’ என்று அவ்வப்பொழுது கேட்கத் தோன்றுமல்லவா? அப்படியானதொரு மனநிலை இருந்தது. வினாக்களைக் கூட தட்டச்சு செய்து ‘சாட்டிங்’ வழியாக அனுப்பினார்கள். இடையில் யாருமே பேசாமல் நான் மட்டுமே பேசி உரையாடல் முடிந்த பிறகு தொண்டை காய்ந்து அடித்துப் போட்டது போன்ற அயற்சி ஏற்பட்டிருந்தது. இதை ஏதோ மிகைப்படுத்திச் சொல்வதாக எடுத்துக் கொள்ளவேண்டாம். 

எதற்காகச் சொல்கிறேன் என்றால் இதுவரை வகுப்பறைகளில் பாடம் நடத்திக் கொண்டிருந்த 99% ஆசிரியர்களால் ஆன்லைனில் சுலபமாக பாடம் நடத்திவிட முடியாது. அதற்கென தனித்துவமான அனுபவமும் பயிற்சியும் அவசியம்.  நேரம் மேலாண்மையில் தொடங்கி, சலிப்பில்லாமல் பேசுவது, திரையில் காட்ட வேண்டிய பாடத் தயாரிப்புகள், குழந்தைகள் என்ன புரிந்து கொண்டிருந்தார்கள் என்பதைக் கேட்டுப் பெறும் திறன் (feedback), பாடம் நடத்திவிட்டு களைத்துப் போகாமல் இருப்பது வரையிலும் சிறு, பெரு விஷயங்கள் என நிறைய இருக்கின்றன. எடுத்தேன் கவிழ்த்தேன் என்று ‘எல்லோரும் ஆன்லைன் வாங்க’ என்று கூட்டி வைத்து பாடம் நடத்துவது குழந்தைகளுக்கு பாடம் மீதான ஒவ்வாமையை உருவாக்கி விடக் கூடும்.

ஆன்லைன் பாடமே வேண்டாம் என்றோ, எதிர்மறையாகவோ சொல்லவில்லை- நாம் நம் குழந்தைகளை அப்படியானதொரு உலகத்திற்குள் இழுத்துச் செல்லும் முன்பாக பல்வேறு காரணிகளை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

குழந்தைகளுக்கு ‘screen addiction'ஏற்படாமல் தடுக்க வேண்டியது மிக அவசியம். நமக்கே இந்தப் பிரச்சினை உண்டு. படுக்கப் போகும் வரைக்கும் மொபைல் அல்லது லேப்டாப் திரையைப் பார்ப்பது, எழுந்தவுடன் செல்போனைத் தேடுவது- இதற்கு நமக்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம், ஆனால் ஆயிரத்தொரு காரணங்கள் குழந்தைகளுக்கும் உண்டாகிவிடும். விளையாடச் செல்வதில்லை, செல்போன், தொலைக்காட்சியை நோண்டிக் கொண்டேயிருக்கிறார்கள் என்ற குறைபாடுகள் உருவாக வாய்ப்பு அதிகம். குழந்தைகளின் பார்வைக் குறைபாடு, தலைவலி, முதுகுவலி போன்ற சிறு சிறு பிரச்சினைகள்- ஆரம்பத்தில் நாம் கவனிக்காமல் விட்டு பிற்பாடு சிக்கல்களை உருவாக்கலாம்.

‘நெகட்டிவாக எழுதியிருக்கிறான்’ என்று நினைத்துக் கொள்ள வேண்டாம் என மீண்டும் குறிப்பிட விரும்புகிறேன். எல்லாவற்றுக்கும் சாத்தியங்கள் இருக்கின்றன. பத்தில் ஒரு குழந்தை பாதிக்கப்பட்டாலும் அது பாதிப்புதானே?

குழந்தைகளுக்கு சில பிரச்சினைகள் என்றால் ஆசிரியர்களுக்கு வேறு விதமான சிக்கல்கள் உண்டு. முதல் பத்தியில் குறிப்பிட்டதைப் போல கால மேலாண்மை என்பது முக்கியமான அம்சம்- வருகைப்பதிவை எடுக்கவே கால் மணி நேரத்தை வீணடிப்பது என்பதிலேயே முதல் சொதப்பல் தொடங்கிவிடும். அப்பொழுதே மாணவர்களின் கவனம் வேறு எங்கோ நகர்ந்துவிடும். 

அதே போல,  பாடம் நடத்துவதற்கு முன்பாக தேவையான தயாரிப்புகளை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்- திரையில் எதனைக் காட்டி மாணவர்களை ஈர்த்துக் கொள்கிறோம் என்பதும் முக்கியமான அம்சம். ஆசிரியர்கள் எப்படித் தயாரிப்புகளைச் செய்கிறார்கள், ‘விஷூவல் ப்ரசெண்டேஷன்’ என்ன செய்யப் போகிறோம், கேள்வி கேட்பதற்கான வாய்ப்புகளை எப்படி உருவாக்கித் தருகிறோம் என நிறைய விஷயங்களில் தேர்ச்சி அவசியம். அதற்கான வழிமுறைகளை பள்ளிக்கல்வித்துறையும், பள்ளிகளும் உருவாக்கித் தர வேண்டும்.  இன்றைய நவீன தொழில்நுட்பம்-பவர்பாய்ண்ட், ஃபோட்டோஷாப் தொடங்கி செல்போனையும், ஜூம் உள்ளிட்ட இணையவழி தொடர்புகளையும் கையாள்வது குறித்து ஓரளவுக்கேனும் புரிதல்களை ஆசிரியர்கள் கொண்டிருக்க வேண்டும். பெரும்பாலான ஆசிரியர்கள் ‘டெக்னாலஜி’யில் சிரமப்படுகிறவர்கள் என்பதுதான் முதல் தடைக்கல்லே. இதுவரையிலான காலத்தில் அரசாங்கமோ, கல்வித்துறையோ அல்லது தனியார் பள்ளிகளோ கூட எந்தவிதமான பயிற்சிகளையும் அளிக்கவில்லை என்பது நிதர்சனம். யாரையும் குறை சொல்லவில்லை. இப்படியொரு சூழல் உருவாகும் என்று யாருக்குத்தான் தெரியும்?

வகுப்பறையாக இருந்தால் ஆசிரியருக்கும் மாணவனுக்கும் கண் வழியாகத் தொடர்பு இருக்கும்.  மாணவர்கள் இங்கே கவனிக்கிறார்களா, கவனம் சிதறுகிறதா, தூங்குகிறார்களா என்பதையெல்லாம் புரிந்து அதற்கேற்ப பாடத்தை சில நிமிடங்கள் நிறுத்திவிட்டு ஆசிரியர் வேறு ஏதாவது பேசுவது, மாணவன் அருகில் சென்று அவனது கவனத்தை திசை மாற்றுவது என்பதெல்லாம் சாதாரணமாக நடக்கும். ஆன்லைனில் இதற்கெல்லாம் எதுவுமே சாத்தியமில்லாத போது ஆசிரியர்கள் தம் ஆற்றலையும் வீணடித்து, மாணவர்களுக்கும் அர்த்தமில்லாமல் ஆன்லைன் வகுப்புகள் அர்த்தமற்றுப் போவதற்கு எல்லாவிதமான சாத்தியங்களும் இருக்கின்றன.

இன்னொன்று ஆன்லைனில் பாடம் நடந்து கொண்டிருக்கும் போதே மாணவர்களுக்கு ஏற்படக் கூடிய கவனச் சிதறல். கவனச் சிதறல் என்றால் ‘போர்னோகிராபி’ என்கிற அர்த்தத்தில் மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை.  ‘முதுகு வலிக்கிறது’ என்று சொல்வது கூட கவனச் சிதறல்தான். ஜன்னலுக்கு வெளியில் காகத்தைப் பார்ப்பதும் கவனச் சிதறல்தான். யாராலும் கட்டுப்படுத்த இயலாத கவனச்சிதறல்கள் இவை. அவற்றை எப்படி கையாளப் போகிறோம்?

இப்படி நீண்டதொரு பட்டியலை வாசிக்க முடியும். ஆனால் அரசாங்கம்தான் இது குறித்து கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். நீண்டகால நோக்கிலும், உடனடியாகச் செய்ய வேண்டிய செயல்களையும் மனதில் கொண்டு ‘உருப்படியான’ ஒரு குழுவை அமைத்து, மிக விரிவாக- மனநலம், குழந்தைகள் உடல்நலம், தொழில்நுட்பம், சமூகம், ஆன்லைன் பயிற்சி முறை, பாடத் தயாரிப்புகள் சார்ந்த நிபுணர்கள் அடங்கிய அந்தக் குழுவிடம் அறிக்கை பெற்று அவர்களின் பரிந்துரையை குறைந்தபட்சம் 90% அமல்படுத்தினால் மட்டுமே ஆன்லைனில் பாடம் கொண்டு வருவதைப் பற்றி யோசிக்க வேண்டும். அதற்கு ஆறு மாதங்கள் ஆனாலும் காத்திருப்பதில் தவறில்லை. ‘அய்யோ, ஆறு மாசம் என் குழந்தைக்கு படிப்பு என்ன ஆகும்’ என்று யோசிக்கும் பெற்றோர்கள் அவரவர் திறமைக்கும் வசதிக்கும் ஏற்ப வீட்டில் எதையாவது செய்து கொண்டிருக்கட்டும். அரசாங்கம், கல்வித்துறை, பள்ளி என பெருமொத்தமாக ஒரு செயலை அமல்படுத்தும் போது அனைத்து மாணவர்களையும், அனைத்து தரப்பு மக்களையும் கவனத்தில் எடுத்துக் கொண்டே செய்ய வேண்டும். குறுகிய கால, நீண்டகால சாதகபாதகங்களை தீர ஆராய்ந்தே செய்ய வேண்டும். மாணவர் நலனில் ஏற்படும் ஒவ்வொரு பாதிப்பும் நாம் ஒரு தலைமுறைக்கே உண்டாக்கும் பாதிப்பு என்பதை கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த ஊரடங்கு கால ஸ்தம்பிப்பு என்பது குழந்தைகளுக்கான ஸ்தம்பிப்பு மட்டுமில்லை. தொழில் முடங்கியிருக்கிறது. வருமானம் தடைபட்டிருக்கிறது. இதுவரையிலான அனைத்து சங்கிலித் தொடர்களும் அறுபட்டிருக்கின்றன. இயங்கிக் கொண்டிருந்த சக்கரம் நின்றிருக்கிறது. இயல்பு நிலைக்கு வர ஆறு மாதம் முதல் ஒரு வருடம் வரை கூட ஆகலாம் என்கிறார்கள். எல்லோருக்குமே ஏதாவதொரு வகையில் பாதிப்பு இருக்கும் போது ‘குழந்தையின் படிப்பு தடைபடுதே’ என்று கண்ணீர் வடிக்க வேண்டியதில்லை. எல்லாவற்றையும் சரி செய்வோம். ஓரளவு இயல்புநிலை திரும்பட்டும். அதுவரை குழந்தைகள் காத்திருக்கட்டும். படிப்பும் காத்திருக்கும். அவசர அவசரமாக அவர்களை நசுக்க வேண்டிய எந்த அவசியமும் இப்பொழுது இல்லை.

Jun 20, 2020

ஜில் ப்ராட்லி

சில நாட்களுக்கு முன்பாக ஒரு நண்பர் ‘லாக் டவுன் முடியட்டும்...எத்தனை கதை வரப் போகுதுன்னு மட்டும் பாருங்க’ என்றார். அசூசையான தொனியில் சொன்னார்- சாவடிச்சுடுவாங்க என்பது மாதிரி. இப்படியான சில வாக்கியங்கள், உணர்வுகள் நம் மண்டைக்குள் ஏறிவிட்டால் ஏதோ பெரிய பாறாங்கல் அடைத்தது போல அடைத்துக் கொள்ளும்.  அதைத் தாண்டி ‘என்னதான் இருக்குன்னு பார்க்கலாமே’ என்று கூட யோசிக்கத் தோன்றாது. அதனாலேயே என்னவோ ஊரடங்கு காலத்தில் வெளியான எந்தக் கதைகளையும் வாசிக்கவேயில்லை. 

யாவரும்.காம் தளத்தில் ‘ஊரடங்கு காலக் கதைகள்’ என்று தொடர்ச்சியாகவே வெளியிடுகிறார்கள். அதன் இணைப்பு வாட்ஸப் குழுமத்தில் வந்துவிடுகிறது. நான் தான் வாசிக்காமல் வைத்திருந்தேன். சில நாட்களுக்கு முன்பாக கரிகாலன் ‘ஒரு கதை எழுதித்தர இயலுமா?’ என்றார். வாசிக்கவே தயங்குகிறவனை எழுதச் சொல்கிறாரே என்று நினைத்தேன். அதன் பிறகு சில கதைகளை வாசிக்கலாம் என்று யாவரும் தளத்திலேயே தேடிய போது ‘ஜில் ப்ராட்லி’ சிக்கியது.

பிரமிளா பிரதீபன் என்ற ஈழ எழுத்தாளரின் கதை. இணைப்பில் கதையை வாசித்துவிட்டு இதற்கு மேல் எழுதி இருப்பதை வாசிக்கவும்.

சிங்களப்பெண் தமிழன் ஒருவனுடன் ‘சாட்டிங்’செய்கிறாள். ஏற்கனவே அறிமுகமானவன் அவன். உரையாடல் வழியாக அவளுடைய பழைய காதல், தமிழர்கள் மீதான அவளது எண்ணம் என்பதையெல்லாம் பேசிக் கொள்கிறார்கள். அவளுடைய பழைய காதலனைப் போலவே இவன் இருக்கிறான். திருமணம் ஆகாதவன். கவிதையும் எழுதுகிறான். அதனால் அவளுக்கு இவன் மீது ஈர்ப்பு உண்டாகியிருக்கிறது. 

ஓவியங்கள் பற்றி பேசுகிறாள். நவீன ஓவியர்கள் குறித்து தன்னுடைய எண்ணங்களைப் பகிர்ந்து கொள்கிறாள். திடீரென்று ‘என்னை நிர்வாணமாக பார்க்க விரும்புகிறாயா?’ என்று கேட்கிறாள். அவள் குடித்திருக்கிறாள். நிதானம் இழந்திருப்பதாகச் சொல்லி அவன் பேச்சை மாற்றுகிறான். இருவருக்குமிடையிலான உரையாடல் என்றாலும் சுவாரசியாமாக நகர்கிறது. சிறுகதையில் சுவாரசியம்தானே முக்கியம்?

கதைகளில் நிகழும் உரையாடலில் ஒரே விவகாரத்தையே இரு பாத்திரங்கள் பேசிக் கொண்டிருப்பது பெரும்பாலும் கதையைத் தட்டையாக்கிடும். அதனால் விதவிதமான செய்திகளை உள்ளே கொண்டு வந்து அவற்றைப் பின்னிப் பிணைத்து நகர்த்துவது ஒரு கலை. அதனை வாசிக்கிறவனுக்கு சலிப்பில்லாமல் செய்துவிட முடிந்தால் சிறுகதை எழுதுவதில் பாதிக் கிணறு தாண்டிவிடுவது போல. அப்படிப் பேசுகிற செய்திகள் பெரும்பாலும் கதாபாத்திரங்களோடு ஒட்டியிருப்பது சிறப்பு. இந்தக் கதையில் நவீன ஓவியங்களைப் பற்றிய உரையாடல் சுவாரசியம் என்றாலும், கதையை நகர்த்துவதற்கான காரணியாகப் பயன்படுகிறது அல்லது எழுதுகிறவர் தன்னுடைய அறிவுக் கூர்மையைக் காட்டுவதற்காகப் பயன்படுத்தியிருக்கிறார் என்று நினைக்கத் தோன்றும். 

ஒவ்வொரு கதையையும் போஸ்ட்மார்ட்டம் செய்ய வேண்டியதில்லை என நினைப்பேன். ‘நல்லா இருக்கா...அவ்வளவுதான்’. ஆனால் பிடித்த கதையாக இருந்தால் கொஞ்சம் ஆராய்ச்சி செய்துவிட வேண்டும். அந்தக் கதையில் இருக்கும் குறைகளைக் கண்டறிந்துவிட்டால் அதே தவறுகளை நாம் செய்யாமல் தவிர்க்கலாம் என்கிற சிறு நம்பிக்கையின் காரணமாகச் செய்கிற ஆராய்ச்சி. அப்படித்தான் இந்தக் கதையைப் பற்றி சில நண்பர்களிடம் பேசிக் கொண்டிருந்தேன். 

பிரமிளா ஆங்கில ஆசிரியர் என்று கதையின் பின்குறிப்பில் இருக்கிறது. அவரது வேறு கதைகள் எதுவும் எனக்கு அறிமுகமில்லை. இந்தக் கதை எனக்குப் பிடித்திருக்கிறது.

பொதுவாகவே கதைகளை எழுதும் போது கதாப்பாத்திரம் இறந்துவிடுவது அல்லது அப்படியான ஒரு கட்டத்தில் கொண்டு போய் நிறுத்துவது எழுதுகிறவர்களுக்கு மிகச் சுலபமான காரியம். வாசிக்கிறவர்கள் அதிர்ச்சியடைவார்கள் என்று எழுதும் போது நம்பத் தோன்றும். ஆனால் தேர்ந்த வாசிப்புடையவர்களுக்கு அது பொருட்டாகவே இருக்காது. காரணம், அப்படியான சுலபமான முடிவுகளைக் கொண்ட நிறையக் கதைகள் எழுதப்பட்டுவிட்டன.  கதையின் முடிவை யாருமே யோசிக்காத ஒரு இடத்தில் நிறுத்த வேண்டும் என்பார்கள். அப்படி நிறுத்துவதற்கு எழுதுகிறவன் நிறைய மெனக்கெட வேண்டியிருக்கும். பல சமயங்களில் கதையின் கரு, அதன் ஓட்டம் என அத்தனையும் வாய்த்துவிடும் ஆனால் முடிவு மட்டும் சிக்கவே சிக்காது. அப்பொழுது கதாபாத்திரத்தை கொன்றுவிடுவது எழுதுகிறவர்களுக்கு எளியதாக இருக்கிறது. அதைத் தவிர்த்துவிட்டு கதையை முடிக்கும் போது அது மிக முக்கியமான சிறு கதையாக மாறிவிடக் கூடும். 

Jun 18, 2020

படிப்பு கெட்டுப் போகாதா?

பள்ளிக் குழந்தைகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட வேண்டுமா? நடத்தப்படக் கூடாதா என்றொரு கேள்வியை ஃபேஸ்புக்கில் கேட்டிருந்தேன். 404 பேரில் 335 பேர் நடத்தக் கூடாது எனவும் 67 பேர் நடத்த வேண்டும் என சொல்லியிருந்தார்கள். அதே சமயத்தில் திருமதி.கோகிலா ஒரு நீண்ட மின்னஞ்சலை அனுப்பியிருக்கிறார். பத்தாம் வகுப்பு மாணவியின் தாயார். உரையாடலுக்காக முழுமையான மின்னஞ்சல்...


                                                                          ***

கொரானா மாதிரியான பெருந்தொற்றுக் காலம் மட்டுமல்ல, வளர் இளம் பருவக் குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்களுக்கும், அந்த குழந்தைகளுக்குமே கூட அந்த பருவம் முழுவதும் ஒரு நெருக்கடியான அழுத்தம் மிகுந்த காலகட்டம்தான். இந்த நோய்தொற்று இருமடங்கு கூடுதல் அழுத்தத்தை கொடுக்கிறது என்றால் அரசாங்கமோ அளவிட முடியாத அழுத்தத்தை எங்கள் மீது செலுத்துகிறது. பத்தாம் வகுப்பு ரத்து என்ற முடிவை எடுப்பதற்குள் மாற்றி மாற்றி குழப்பம் ஏற்படுத்தும் அறிவிப்புகளை வெளியிட்டு பதற்றத்திலேயே வைத்திருந்தார்கள். இப்போதும் மதிப்பெண் கணக்கிடுதல், ஆன்லைன் வகுப்புகள் என்று தொடர்ந்து ஏதாவது அறிவிப்புகள் வந்து கொண்டே இருக்கிறது.  


தேர்வு எழுதாமலே ‘ஆல் பாஸ்’ ஆகி விட்ட அதிர்ஷ்டக்கார மாணவர்கள் என்பது மாதிரி வேடிக்கையான பதிவுகள் சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆனாலும் கூட இந்த வருடம் பத்தாம் வகுப்பை எதிர்கொண்ட மாணவர்கள் அப்படி ஒன்றும் அதிர்ஷ்டக்காரர்கள் இல்லை. ‘நீட்’ தேர்வுக்கு தயாராகும் வகையில் இருக்கவேண்டும் என புதிய, கடினமான பாடத்திட்டம் இந்த வருடம்தான் அறிமுகப்படுத்தப் பட்டது. போதுமான பயிற்சி இல்லாமல்தான் ஆசிரியர்கள் பாடம் நடத்தத் தொடங்கினார்கள். மொழிப்பாடம் 2 தாள்கள் என்றார்கள். பிறகு அதையும் மாற்றினார்கள். 2 தாள்களாக எழுதுவதற்கு தயார் படுத்தப்பட்ட மாணவர்கள் பாதிக் கல்வி ஆண்டில் இருந்து அதே அளவு பாடத்தை ஒரே தாளாக எழுதத் தயார் செய்தார்கள்.


‘கடினமானதுதான் தரமானது’ என்பது, என்ன மாதிரியான சிந்தனை என தெரியவில்லை. பல தீவிர இலக்கிய வாசகர்களே படித்து முடிக்காத ப.சிங்காரம் ஐயாவின் நாவல்கள் எல்லாம் பத்தாம் வகுப்பு பாடத்தில் இருந்தது. வழமையான ப்ளூப்ரிண்ட் முறையின்றி புதிய முறையில் புத்தகத்தில் இல்லாத கேள்விகள் வரும் என்றார்கள். கொரானா தாக்கத்தால் எல்லா மாணவர்களும் தேர்வு ரத்தாகி விடுமுறையை கொண்டாடிக் கொண்டிருக்க பத்தாம் வகுப்பு மாணவர்கள் மட்டும் தேர்வு கட்டாயம் நடக்கும் என்ற அரசின் அறிவிப்பால் தொடர்ந்து படித்துக் கொண்டிருந்தார்கள். 


குறைந்தபட்சம் நோய்த்தொற்று பயம் நீங்கிய பிறகு சில நாட்கள் பாடங்களை திரும்பப் படிக்க நேரம் கொடுத்து தேர்வு நடத்துவோம் என அறிவித்திருந்தால் கூட நிம்மதியாக இருந்திருக்கும். பலமுறை தேர்வு தேதிகளை அறிவித்து பின் மாற்றிக் கொண்டே இருந்தார்கள்.  திடீரென தேர்வு வைத்தால் என்ன செய்வது என தொடர்ந்து படித்துக் கொண்டே இருக்க வேண்டிய நிலையில் மாணவர்கள் இருந்தார்கள். பல பள்ளிகளும் தொடர்ந்து மாதிரித் தேர்வுகளை நடத்திக்கொண்டே இருந்தது. என் மகள் இந்த கொரானா விடுமுறையில் 4 முறை மாதிரித் தேர்வுகளை எழுதினாள். 4x5 பாடங்கள் என மொத்தம் 20 தேர்வுகள். தேர்வு எழுதிய மாணவர்களுக்கு படிக்க வேண்டிய டென்ஷன் என்றால், ஸ்மார்ட் போன் இல்லை இன்டர்நெட் இல்லை என தேர்வு எழுத முடியாத மாணவர்களும், அவர்தம் பெற்றோரும் பட்ட கவலை அதைவிட அதிகம். தேர்வு நடத்தியே தீர்வோம் என அரசு நீதிமன்றத்தில் அடம் பிடித்துக்கொண்டிருந்தேபாது என் மகள் தேர்வு எழுத வேண்டிய பள்ளி இருந்த தெருவை தடுப்பு வைத்து குவாரண்டைன் செய்துகொண்டிருந்தார்கள். நல்லவேளையாக தேர்வை ரத்து செய்தார்கள். பத்து லட்சம் மாணவர்களில் சயின்ஸ், மேத்ஸ் குரூப் எடுக்க விரும்பும், அதுவும் 10வது படித்த அதே பள்ளியில் இல்லாமல் வேறு பள்ளியில் சேர விரும்பும் மிகச்சிறு எண்ணிக்கையிலான மாணவர்களின் பெற்றோர்கள் வேண்டுமானால் வருந்தலாம். நானும், நான் பேசிய பெற்றோர்கள் யாரும் அப்படி கொதிக்கவில்லை.


என் மகள் நன்கு படிக்கக் கூடிய, 90-க்கு மேல் மதிப்பெண் எடுக்க கூடிய மாணவி. தமிழகச் சூழுலில் அதுவே ஒரு பிரச்சனைதான். ஏனெனில் பள்ளி நிர்வாகம் இத்தகைய மாணவர்களை தேர்ந்தெடுத்து 10-15 பேர்களை மட்டும் தனிக் குழுவாக செச்ஷன்பிரித்துதான் பாடமே நடத்துவார்கள். எல்லா விதமான மாணவர்களுடனும் நட்பாக இருக்கும் வாய்ப்பு பறிக்கப்பட்டு அவளைப் போலவே அதிகம் படிக்கும் நபர்களுடன் மட்டும் தான் அவள் பழகும் நிலை வாய்க்கிறது. நாங்கள் அப்படி ஒன்றும் படி படி என்று சொல்லும் பெற்றோர்கள் அல்ல. மருத்துவம் பொறியியல் என்று எந்த கனவையும் நாங்கள் திணிக்கவில்லை. ஏதோ ஒரு டிகிரி படிப்பேன் என்பதைத் தவிர அவளுக்கும் இப்போது வரை எந்த பெரிய கனவும் இல்லை. அவள் படிப்பதும் வீட்டிற்கு அருகில் இருக்கும் ஒரு சுமாரான பள்ளியில்தான். இந்தி படிக்கத் தேவையில்லை சிபிஎஸ்சி தேவையில்லை என்று தெளிவாக முடிவெடுத்தே சமச்சீர் கல்வி முறையில் சேர்த்தேன். சாதாரண டிவி மட்டுமின்றி அமேசான் பிரைம், ஹாட்ஸ்டார், நெட்பிளிக்ஸ் என எல்லாம் இருக்கிறது. 16+ ரேட்டிங் உள்ள எல்லா நிகழ்ச்சிகளையும் பார்க்கிறாள். அது போதாது என்று பொன்னியின் செல்வன், வேள்பாரி, தாய், ஹாரிபாட்டர், ஹங்கர் கேம்ஸ் என்று படித்துத் தள்ளுகிறாள். இவ்வளவுக்குப் பிறகும், பொதுவான மாணவர்களுடன் படிக்கும் போது அவள் எடுத்த முதலிரண்டு இடங்களிலேயே தொடர்ந்து இருப்பதற்காக அவள் அதிகம் உழைக்கிறாள்.  


அதிகாலை 3 மணிக்கு அலாரம் வைத்து தானாகவே எழுந்து படிக்கும் மகளுக்கு பிளாஸ்கில் காபி போட்டு வைப்பது என்ற அளவிலாவது ஒத்துழைப்பை வழங்கித்தானே ஆகவேண்டும்? இரண்டிலிருந்து மூன்றாவது இடத்திற்கு மதிப்பெண் குறைந்து விட்டால் பரவால்ல அடுத்த முறை அதிகம் முயற்சி செய்து நிறைய மதிப்பெண் வாங்கு என்று நான் உற்சாகப்படுத்த வேண்டுமா அல்லது போதும் போதும் இதுவே அதிகம் என்று அவளது ஆர்வத்தை குறைக்கும் படி பேசவேண்டுமா? அவள் இப்போது 95க்கு கீழ் மதிப்பெண் எடுத்தால் ஏதேனும் பிரச்சனையாக இருக்குமோ என சித்திக்கும் அளவுக்கு நானே பழகிவிட்டேன்.  


இந்த பத்தாம் வகுப்புத் தேர்வு என்பது ஏன் அதிமுக்கியமான தேர்வாக கட்டமைக்கப்பட்டது என்று புரியவில்லை.  இந்த வயதில் ஆண் பெண் இரு பாலரும் பருவ மாற்றத்திற்கு ஆளாகிறார்கள். பெண் குழந்தைகள், மாவிடாய் காலம் தொடங்கும் அல்லது தொடங்கிய மாதவிடாய் சரியான கால இடைவெளியில் வரும் ஒழுங்கு முறையை அடையாத வயது இது. ஹார்மோன் மாற்றங்களால் வரும் மன உளைச்சல், தொடர்ந்து தன்னுடைய செல்ப் எஸ்டீமை சந்தேகப்படும் இந்த வயதில் மொத்தமாகவே பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு என்பதை ரத்து செய்யலாம்.  அடிப்படை நிலையிலான அரசுப் பணிக்கு, 11ம் வகுப்பில் என்ன குரூப் எடுப்பது என்பதை முடிவு செய்ய என்ற  இரண்டு காரணங்களுக்காக இந்த தேர்வு முக்கியம் என்கிறார்கள். பத்தாம் வகுப்பு பாஸ் செய்தால் போதும் மேற்கொண்டு படிக்க குடும்பச் சூழ்நிலை அனுமதிக்காது என்கிற நிலையில் இருப்பவர்களே அடிப்படை நிலை அரசுப்பணிக்கு விண்ணப்பிக்கப் போகிறார்கள். இப்பணியில் சேர்வதற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியடைந்தவர் என்பதே போதும். யாரும் எவ்வளவு மதிப்பெண் என பார்ப்பதில்லை. தேர்வு எழுதுகிறவர்களில் 95 சதவிகிதம் பேர் தேர்ச்சியடையும் நிலையில் குரூப் செலக்ஷன் எனும் ஒற்றை விஷயத்திற்காகவே இந்த தேர்வுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பது அவசியமா? 


படிப்பு தடைபடுவதால் கொதிக்கும் பெற்றோர் என்று ஒரு கட்டுரை பார்த்தேன். இப்பொழுது ஆன்லைன் வகுப்பு பற்றிய விவாதமும் ஆரம்பமாகியிருக்கிறது.  நிஜமாகவே பெற்றோர்கள் இந்த நோய்த்தொற்று உள்ள நிச்சயமற்ற நிலையிலும் சில மாதங்கள் கூட என் குழந்தையின் படிப்பு வீணாகக்கூடாது என்று கருதி ஆன்லைனிலாவது படித்து அமெரிக்கா போக வேண்டும் என்ற ஆசையுடன் செய்தியாளர்களுக்கும், கல்வித்துறைக்கும் மெயில் அனுப்பிக்கொண்டு இருக்கிறார்களா? அல்லது மீடியா சும்மாவே ஏதாவது பிரச்சனைகளை கிளப்பிவிடுகிறதா? 


ஒருவேளை தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்பு நடத்தினால் ஃபீஸ் கேட்கலாம் என இத்தகைய செய்திகளை பரப்புகிறார்களா? இன்டர்நெட் வசதியில்லாத குழந்தைகள் என்ன செய்வார்கள்? இந்த சூழ்நிலையில் ஆன்லைன் வகுப்புகள் எல்லாம் மாணவர்களின் மீது செலுத்தப்படும் அப்பட்டமான வன்முறை. நிலைமை பல காலம் இப்படியே நீடிக்கும், வருங்காலத்தில் அனைவரும் ஆன்லைனில்தான் படிக்கவேண்டும் என்றால் கூட எல்லா மாணவர்களும் ஆன்லைன் கல்வி சென்று சேரும்படியான நிர்வாக கட்டமைப்பை அரசு உறுதிசெய்யும் வரை சமத்துவமில்லாத இத்தகைய விஷயங்களை அரசு தடுத்து நிறுத்தத்தான் வேண்டும்.  


மலைவாழ் மாணவர்களுக்காக பணியாற்றும் ஆசிரியர் மகாலட்சுமி, அரசு ஹாஸ்டல்கள் மூடப்பட்டதால் அவருடைய மாணவர்கள் போதிய உணவும், கழிவறை, மாதவிடாய் கால நாப்கின்கள் இன்றி அவதிப்படுவதாக தன்னுடைய முகநூலில் குறிப்பிட்டிருந்தார். நோய்த்தொற்று அச்சம் முடியும் வரை கல்வி தொடர்பான எந்த செயல்பாடுகளும் தேவையில்லை என அறிவித்துவிட்டு பள்ளிக்கல்வி அமைச்சரும் அதிகாரிகளும் இத்தகைய குழந்தைகளின் ஆரோக்கியம் தொடர்பான செயல்களில் கவனம் செலுத்தலாம்.  


பள்ளிக்கல்வித்துறை, மத்திய மாநில அரசுகள், ஊடகம், தனியார் பள்ளிகள், சமூகம், பெற்றோர்கள், மாணவர்கள். இவர்களில் யார் யாரை  ‘இன்ஃபுளுயன்ஸ்’ செய்கிறார்கள் என்பது எனக்கு எப்போதுமே விளங்கிக் கொள்ள முடியாத புதிராகவே இருக்கிறது. 


டிவி கனெக்சனை கட் செய்து குழந்தையை படிக்க கட்டாயப்படுத்தும் பெற்றோர்கள் என்ன செய்வார்கள்? என் மகள் வகுப்பில் படிக்கும் தோழி ஒருத்தி 95 மார்க் எடுத்தாலும் அப்பா திட்டுவார் என கண்ணில் தண்ணீர் வர அழுது அடம் பிடித்து, ஆசிரியரிடம் கெஞ்சி கையெழுத்துகாகவோ, அல்லது சிறு எழுத்துப்பிழைக்காகவோ விடுபட்டுப் போன 2-3 மதிப்பெண்களை எப்படியாவது வாங்கிக்கொண்டுதான் வீடு செல்வாள். எந்த வகைப் பெற்றோர் பெரும்பாண்மை என எப்படி கண்டறிவது? சமூகம், பள்ளிகள், அரசு, பெற்றோர், மாணவர்கள் அனைவரும் ஒரு சங்கிலித் தொடர்போல. இதில் நீங்கள் என்ன முயன்றாலும் உங்களால் அந்த சங்கிலியை தகர்க்க முடியாது. காலப்போக்கில் நீங்களும் அச்சங்கிலியின் ஒரு கண்ணியாகவே மாறிப்போவீர்கள் என்பதுதான் நிதர்சனம். 


அச்சமூட்டும் அழிவை எதிர்நோக்கியிருக்கும் இந்நேரத்திலாவது மாணவர்கள் சற்றே இளைப்பாற அவகாசம் கொடுங்கள். அவர்கள் படிக்காமல் விட்ட கதைகளை படிக்கட்டும். பார்க்காமல் விட்ட படங்களை பார்க்கட்டும். ஆண் பெண் பேதமின்றி வீட்டில் இருக்கும் சிறு சிறு வேலைகளைச் செய்யப் பழகட்டும். அவர்கள் விரும்பும் வகையில் நேரத்தை செலவு செய்யட்டும். அட எதுவும் வேண்டாம், தின்றுவிட்டு படுத்து நன்றாக தூங்கட்டும். எல்லா கோட்டையையும் அழித்துவிட்டு புதிதாக ஆரம்பித்துக் கொள்ளலாம். தேவையில்லாத ஆணிகளை பிடுங்குவதை விடுத்து ‘அன்டர் பிரிவிலிஜ்ட்’ மாணவர்களின் உயிர் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான செயல்களில் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது.


rkokilababu@gmail.com

Jun 17, 2020

பேசலாம்

கோவையில் Bibliotheca என்றொரு அமைப்பு செயல்பட்டு வருகிறது. தன்னார்வலர்களால் நடத்தப்படும் இந்த அமைப்பின் நோக்கம் மனிதர்களிடம் உரையாடி அவர்களின் கதைகளை கேட்பது. பெரும்பாலும் கல்லூரி மாணவர்களே இதை நடத்தி வருகிறார்கள். ‘மனிதர்கள் ஒவ்வொருவருமே வாசிக்க வேண்டிய புத்தகம்தான்’ என்கிற எண்ணத்தோடு சமூகத்தின் பல்வேறு நிலைகளில் இருக்கும் மனிதர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களோடு உரையாடி அவர்களது அனுபவங்களை கேட்டு வருகின்றனர். என்னிடம் முதன்முதலாகப் பேசிய போது ‘Human Library' என்று சொன்னார்கள். 

ஆளுமைகள் என்றில்லை- வெவ்வேறு தளத்தில் இருக்கும் மனிதர்கள்- விளிம்பு நிலை எளிய மனிதர்களிடமும் கூட கதைகளும், கற்றுக் கொள்ள அனுபவங்களும் இருக்கின்றன என்று நம்பிச் செயல்படும் இளைஞர் கூட்டம். அப்படித்தான் என்னிடமும் ஏதோ இருக்கும் என நம்புயிருக்கிறார்கள். 

‘குறள் பாட்’ சிவா பற்றி முன்பு எழுதியிருக்கிறேன். அவர்தான் இந்தக் குழுவினருக்கு என்னை அறிமுகப்படுத்தியிருக்கிறார். இணையவழியில் ‘பேச முடியுமா?’ என்று அவரேதான் கேட்டார். அதற்கு என்ன? வருகிறேன் என்று சொல்லியிருக்கிறேன். தலைப்பும் அவர்களேதான் கொடுத்தார்கள். முதலில் முப்பது முதல் நாற்பது நிமிடங்கள் நான் பேச வேண்டும் பிறகு முக்கால் மணி நேரம் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டுமாம். எந்தவிதமான தயாரிப்புகளுமின்றி மனதில் தோன்றுவதைப் பேசலாம் என்றிருக்கிறேன். 

ஃபோட்டோ கேட்டார்கள். ‘ஃபேஸ்புக்கில்’ இருக்குமே என்றேன். பழங்காலத்து நிழற்படம் ஒன்றை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

கொரொனாவுக்கு முன்பு வரை கோவையில் ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் சந்தித்து உரையாடியவர்கள் இப்பொழுது இணைய வழியாக இந்த உரையாடலை நடத்துகிறார்கள். 


இந்த போஸ்டரை சமூக ஊடகங்களில் பகிரலாமா என்று அனுமதி வாங்கிக் கொண்டு பகிர்கிறேன். 

நண்பர்கள் யாரேனும் கலந்து கொள்ள விரும்பினால் போஸ்டரில் இருக்கும் எண்ணுக்கு தகவல் அனுப்பி பதிவு செய்து கொள்ளவும். ‘இவனுக்கு எல்லாம் ரிஜிஸ்டர் செய்யணுமா’ என்று சத்தமாகக் கேட்டது என் காதில் விழுந்துவிட்டது. அது அவர்களின் வழமையாம். பதிவு செய்து கொண்ட குறைந்த பார்வையாளர்கள் எண்ணிக்கையை மட்டுமே அனுமதிக்கிறார்கள். அப்பொழுதுதான் நெருக்கமாக உரையாட முடியும் என்பதுதான் காரணம். 

நன்றி!

Jun 16, 2020

புத்தம் புது இறகு

எதைச் செய்தாலும் கூட்டமாகச் செய்கிறார்கள். அது அஞ்சலி பதிவு எழுதுவதாக இருந்தாலும் சரி; தற்கொலைக்கு அறிவுரை சொல்வதாக இருந்தாலும் சரி; மன நலன் சார்ந்த பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைச் சொல்வதாக இருந்தாலும் சரி; செய்துவிட்டுப் போகட்டும். ஆனால்  இதுவே மனிதர்களை உளவியல் ரீதியாக வதைக்கிறது. கூட்டமாக ஒன்றை எல்லோரும் பேசுகிற போது உண்மையிலேயே அதனால் பாதிக்கப்பட்டவர்களை குற்றவுணர்ச்சி கொள்ளச் செய்கிறது.

கொரோனா, ஊரடங்கு, தனிமை, வேலை, பொருளாதார இழப்பு என எல்லாமும் கலந்து மனிதர்களை ஏதாவதொரு வகையில் பாதிக்கிறது. சில நாட்களுக்கு முன்பாக ஒரு நண்பர் அழைத்திருந்தார். ஒரு நாள் இரவு பத்து மணிக்கு அழைத்த அவருடைய தம்பி தற்கொலை செய்து கொள்ளப் போவதாகச் சொல்லியிருக்கிறார். அவருக்கு ஏகப்பட்ட பிரச்சினைகள். தொழில் நசிந்துவிட்டது. கந்து வட்டிக்கு கடன் வாங்கியிருக்கிறார்- சகலமும் கலந்து ஒரு வழியாக்கியிருக்கிறது. நண்பர் வெளியூரில் இருக்கிறார். தம்பியை இணைப்பிலேயே இருக்கச் சொல்லிவிட்டு இன்னொரு அலைபேசியில் பக்கத்து வீட்டுக்காரரை அழைத்துச் சொல்லிய பிறகு அவர் ஓடிச் செல்லும் வரை தம்பியிடம் இவர் பேசியபடியே இருந்திருக்கிறார். ‘என்ன செய்வது’ என்ற குழப்பம் நண்பருக்கு. சில நாட்களாக தம்பியை யாராவது கவனித்துக் கொண்டேயிருக்கிறார்களாம். அந்த ஊரில் எனக்கு ஒரு மனநல மருத்துவரைத் தெரியும். தம்பியை ஆலோசனைக்குச் செல்லச் சொல்லுங்கள் என்றேன். 

மன நலம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் போகிற போக்கில் யாரும் தீர்வுகளைச் சொல்லிவிட முடியாது. அப்படி முயற்சிப்பதும் ஆபத்தில் கொண்டு போய் நிறுத்தும். 

இன்றைக்கு யாருக்குத்தான் பிரச்சினைகள் இல்லை? மூன்று மாதங்களுக்கு முன்பிருந்த சூழல் முழுமையாக மாறியிருக்கிறது. யாருமே கற்பனை செய்திடாத புத்தம் புது சூழல் இது. பணத்தை விடுங்கள். மனம் விட்டு பேசுவதற்கான வாய்ப்புகளும் அருகிவிட்டனவே! வீட்டிற்குள்- நான்கு சுவர்களுக்குள்ளேயே இருக்கிறோம். கலகலவென்று சுற்றிக் கொண்டிருந்தவர்களையும் முடக்கிப் போட்டிருக்கிறது. பொருளாதாரப் பிரச்சினைகள் இல்லாதவருக்கும் கூட நோய் பற்றிய செய்திகள் பயமூட்டக் கூடும். அங்கே இறப்பு, இங்கே இறப்பு என்பது என்னவோ தொண்டையில் கரகரவென்றிருந்தாலே பதறச் செய்துவிடுகிறது. மனதளவில் ‘செம ஸ்ட்ராங்’ என்று நினைத்துக் கொண்டிருந்தவர்கள் கூட சற்றே படபடப்பாகிறார்கள். விதிவிலக்குகள் ஆங்காங்கே இருக்கலாமே தவிர பெரும்பாலானவர்களுக்கும் மன ரீதியில் ஏதோவொரு நெருடல் இல்லாமல் இருக்க வாய்ப்புகள் மிகக் குறைவு. 

சில நாட்களுக்கு முன்பாக ஏதோ வித்தியாசமாக உணர்ந்தேன். அதற்கு முன்பே பதினைந்து நாட்களாக இரவில் ஒழுங்காக உறக்கம் வரவில்லை. அது இயல்பானது என்றுதான் தொடக்கத்தில் நினைத்துக் கொண்டிருந்தேன் ஆனால் ‘ஏன் முகம் வாடியிருக்கு’ என்று அவ்வப்பொழுது யாராவது கேட்டார்கள். தேவையில்லாமல் கோபம் அதிகரித்தது. என்னவோ சரியில்லை என்று உணரத் தொடங்கிய பிறகு சில நண்பர்களிடம் பேசிவிட்டு கொரோனா குறித்தான பெரும்பாலான செய்திகளைத் தவிர்த்தேன். நோய் பற்றி வேண்டுமளவுக்கு நமக்குத் தெரிந்துவிட்டது. மண்டை நிறைய தகவல்கள் இருக்கும் போது ஏன் திரும்பத் திரும்ப நிறைக்க வேண்டும்?  இப்பொழுது கொரோனா குறித்து தினசரி வருவதெல்லாம் எண்ணிக்கையும், செய்தி நிறுவனங்கள் நமக்கு வீசுகின்ற வலையும்தான். இனி செய்திகளைப் பார்த்துதான் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதில்லை என்பதைப் புரிந்து கொண்ட பிறகு முழுமையாகத் தவிர்த்துவிட்டேன். 

‘இன்னைக்கு எவ்வளவு பேருக்குத் தொற்று?’ என்று கேட்டால் ‘தோராயமாக இரண்டாயிரம் பேர்’ என்று சொல்வேனே தவிர துல்லியமாகத் தெரியாது. யார் எங்கே இறந்து போனார்கள் என்பது தெரியாது. இறந்தவர்களில் இளையவர்கள் யார், முதியவர்கள் யார் என்றெல்லாம் பின் தொடர்வதில்லை. கொரோனா செய்தியைத் தவிர்த்துவிட்டு வயிறு நிரம்ப உண்ணத் துவங்கினேன். இரவில் உறக்கம் வருகிறதோ இல்லையோ- அதிகபட்சம் பதினோரு மணிக்கு உறங்கச் சென்றுவிடுகிறேன். மாலை நேரத்தில் அவ்வப்பொழுது வெளியில் சென்று வருகிறேன். நான்கைந்து நாட்கள் பிடித்தது. இப்பொழுது ஓரளவுக்கு பழைய பழையபடிக்கு இருக்கின்றன! மன ரீதியாக ஆரோக்கியமாக இருப்பதே நமக்கு நாம் செய்து கொள்ளும் பேருதவி. 

நிறையப் பேர் ஏதோ ஒன்றைப் பற்றி கூட்டமாக பேசியும் எழுதியும் கொண்டிருக்கும் போது விமர்சிக்காமல் அல்லது கலந்து கொள்ளாமல் சற்று விலகி இருந்து கொள்வதும் நமக்கு நாமே செய்துகிற பெரிய உதவிதான் என்று நம்புகிறேன். 

பொதுவாகவே, கார்போரேட் நிறுவனங்களில், தொழில்நுட்பம் சார்ந்த பணிகளில் இருப்பவர்கள் தொடர்ந்து தம்மை ‘அப்டேட்’ செய்து கொள்ள வேண்டும் என்பார்கள். அப்டேட் என்பதைவிடவும் தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கும், நிறுவனம் மேற்கொள்ளும் மாற்றங்களுக்கும் ஏற்ப நாமும் வளைந்து நெளிய வேண்டும். அப்படி வளைந்தால் தப்பிவிடலாம். நெட்டுக்குத்தலாக நின்றால் அடுத்த ஆட்குறைப்பு பட்டியலில் பெயரைச் சேர்த்துவிடுவார்கள். இன்றைக்கு உலகமே மிகப்பெரிய மாற்றத்திற்கு உள்ளாகிக் கொண்டிருக்கிறது.

ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது- இப்பொழுது நிகழ்ந்து கொண்டிருக்கும் மாற்றத்தோடு நாம் அத்தனை பேரும் மாற வேண்டியிருக்கும். எல்லோருக்குமே ஏதாவதொரு சுமையை, இழப்பை, குழப்பத்தை, தெளிவின்மையை இந்த கொரோனா காலம் கொண்டு வந்து கொடுத்திருக்கிறது. அது நேரடியாக கண்ணுக்குத் தெரியலாம் அல்லது தெரியாததாகவும் இருக்கலாம். 

ஆனால் பாஸிட்டிவிட்டி மிக அவசியம். 

இது தனிமனிதர்களுக்கான பிரச்சினை மட்டுமில்லை. எல்லோருக்கும் பொதுவான பிரச்சினை. நமக்கு இருக்கும் பிரச்சினையைவிட பன்மடங்கு பிரச்சினைகளோடு எதிர்வீட்டுக்காரர் இருக்கக் கூடும். பிரச்சினைகளின் அளவுகள் மாறலாமே தவிர பிரச்சினையே இல்லாத மனிதர் என்று யாருமில்லை.  எப்பொழுதும் சொல்வதைப் போல இந்தச் சூழல் நிரந்தரமில்லை. நிலைமை மாறும் வரைக்கும் எதையாவது பற்றுக் கோலை பிடித்துக் கொண்டிருக்க வேண்டும். பற்றுக் கோல் ஒன்றினை பற்றிக் கொள்ளுதல் தவிர நம்மிடம் வேறு எந்த வாய்ப்புமில்லை.  நிலைமை மாறும். சூழல் மாறும். அத்தனையும் மாறும் போது நமக்கான இறகு ஒன்று கிடக்கும். யாரும் எடுக்காத அந்த இறகை குனிந்து பொறுக்கி எடுத்து கைகளில் வைத்துக் கொள்வோம். 

கல்யாண்ஜியின் கவிதை ஒன்று-

அதிகாலைத் தேநீர் கடையில்
இடக்கை நீட்டி 
யாசித்து நிற்கிற தாடிக்காரர்
சற்று மனநிலை பிறழ்ந்தவர்
தெரியும்.

வலக்கை விரல்களில் அவர்
ஏந்தியிருப்பது
வக்கீல் ஐயா வீட்டு
வளர்ப்புப் புறா ஒன்று உதிர்த்த
புத்தம் புது இறகு
தெரியும் அதுவும்.

தெரியாதது-
நீங்களோ நானோ 
குனிந்து பொறுக்காத ஒன்றை
அவருக்கு எடுத்துக் கொள்ளத் தோன்றிய
அற்புதம் குறித்து.

Jun 5, 2020

ஒரு நேர்காணல்...

சில மாதங்களுக்கு முன்பாக  நேர்காணல் செய்யும் நோக்கத்தில் நண்பர் ஜீவகரிகாலன் கேள்விகளை அனுப்பியிருந்தார். அந்தக் கேள்விகளுக்கான பதில்களை மின்னஞ்சலில் அனுப்பினால் போதும் என்றார். பதில்களைத் தட்டச்சு செய்யலாம் என ஆரம்பித்தால் ஏதோ செயற்கையாக இருப்பது போல இருந்தது. இத்தனைக்கும் வெளியில் மழை பெய்து கொண்டிருந்தது. உரையாடுவதற்கான மனநிலைதான் அது. ஆனால் நகரவேயில்லை. 

பொதுவாக கட்டுரைகள், சிறுகதைகள் எழுதும் போது ‘இதுதான் உள்ளடக்கம்’ என்று மனதுக்குள் ஓடிக் கொண்டிருக்கும். ஏதேனும் சில வரிகளும் மனதுக்குள் இருக்கும். அந்த உள்ளடக்கத்தின், வரிகளின் வால் பிடித்தபடியே மடமடவென்று தட்டச்சு செய்துவிடுவேன். 

அதுவே கேட்கப்பட்ட கேள்விகள்- அவற்றுக்கான பதில்களைத் தயார் செய்ய வேண்டும் என்பது நமக்கு முன்பாக யாரோ ஒருவர் அமர்ந்து ‘இதுக்கு பதில் எழுது’ என்று இயக்குவது போல இருந்தது. கேள்விகளை அப்பொழுதே மூடி வைத்துவிட்டு கரிகாலனை அழைத்து “கேள்விகளை நான் முழுமையாகக் கூட படிக்கவில்லை; நாம் நேரில் சந்திக்கும் போது உங்களுக்கு மனதில் தோன்றும் கேள்விகளைக் கேளுங்கள்; அந்தக் கணத்தில் மனதில் என்ன தோன்றுகிறதோ அதுதான் வெளிப்படையான பதிலாக இருக்கும் பிறகு எடிட் கூட செய்ய வேண்டாம்” என்று சொல்லியிருந்தேன். 

நேர்காணல் என்பதே மனதில் தோன்றுவதுதானே? கவித்துவமாக, படிப்பவர்களை கட்டிப் போடும் விதமாக, ஏதாவது வலுக்கட்டாயமாகத் திணிப்பதாகவெல்லாம் இருக்க வேண்டிய அவசியமில்லை. என்ன தோன்றுகிறதோ அது அப்பட்டமாக இருக்க வேண்டும்.

அப்படியான ஒரு சந்திப்பில் கரிகாலன் வினாக்களைக் கேட்க, பதில்களைச் சொன்னேன். எனக்கு முன்பாக ஒரு வீடியோ கேமிராவை வைத்து பதிவும் செய்து கொண்டார். ஒரு மணி நேரம் பதிவாகியிருக்கும் என நினைக்கிறேன். இதையெல்லாம் இவர் திரும்பப் பார்த்து, தட்டச்சு செய்து அனுப்பமாட்டார் என்ற நம்பிக்கையில் இருந்தேன். 

ஆனால் சில வாரங்களில் அவற்றை மெனக்கெட்டு தட்டச்சு செய்து அனுப்பி வைத்தார்.  இந்த நேர்காணலை இன்னமும் மெருகேற்றலாம் என்று சொல்லிக் கொண்டேயிருந்தார். ஒரு பதிப்பாளராக அது நியாயமான கோரிக்கைதான். ஆனால் கட்டுரை, கவிதை என்றால் மெருகேற்றலாம். பேசியவற்றை என்ன மெருகேற்றுவது என்கிற ஒரு நினைப்பு அதற்கான மனநிலையை உருவாக்கவே இல்லை.

இன்று அழைத்து ‘யாவரும்.காம்’ தளத்தில் பிரசுரம் செய்துவிடுகிறேன் என்றார். 

‘என்னங்க..எடிட் செய்யலாம்ன்னு சொன்னீங்க’ என்றேன். 

‘ம்க்கும்..நீங்க செஞ்சுட்டாலும்....இருக்கிறதை பப்ளிஷ் செய்வோம்’ என்று சொல்லிவிட்டு செய்திருக்கிறார். அவருக்கு நன்றி. நேர்காணலில் பெரும்பாலான பகுதி நிசப்தம் சார்ந்துதான் பேசியிருக்கிறோம். அதனால் நிசப்தம் தளத்தை வாசிக்கும் நண்பர்களுக்கு இணைப்பைத் தருவதுதான் முறை. நேரமும் ஆர்வமும் இருப்பின் வாசிக்கவும். 

மேலே குறிப்பிட்டுள்ளபடி, மனதில் தோன்றியதை அந்தக் கணத்தில் அப்படியே பேசியிருக்கிறேன். தவறுகள் இருக்கலாம். அப்படி ஏதேனும் தென்பட்டால் மன்னித்து அதை எனக்குச் சுட்டியும் காட்டவும். ஏனென்றால் அங்கேயிருப்பதுதான் மனதில் இருக்கிறது. மனதில் இருப்பதுதான் பதிலாக எட்டிப் பார்த்திருக்கிறது என்று அர்த்தம். தவறு என்றால் காலப்போக்கில் திருத்திக் கொள்வதும் அவசியம்! திருத்திக் கொள்கிறேனோ இல்லையோ- குறைந்தபட்சம் இது தவறு என்றாவது உணர்ந்து கொள்ள வேண்டுமல்லவா?

நிசப்தம் செயல்பாடுகளை மதித்து நேர்காணல் நடத்திய யாவரும்.காம் தளத்துக்கும், கரிகாலனுக்கும் நன்றியும் அன்பும்! எப்பொழுதும் போல- நிசப்தம் வாசகர்களுக்கும் நன்றிகள்!

Jun 4, 2020

வேலை வாய்ப்பு- மிச்சிகன், அமெரிக்கா

அமெரிக்காவில் பணி தேடுகிறவர்கள்- அங்கேயே வசிப்பவர்களுக்கான வேலை வாய்ப்புகள் இவை. மிச்சிகன் மாகாணத்தில், டியர்பார்ன் என்னும் ஊரில் உள்ள இப்பணியிடங்களின் விவரங்களை திரு.சதீஷ் அனுப்பி வைத்திருந்தார். அங்கே வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு உதவக் கூடும். 

சுயவிவரக் குறிப்புகளை sathiszee@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும். 

அமெரிக்காவிலேயே வசிக்கிறவர்கள்/பணிபுரிகிறவர்களுக்கு ‘மட்டும்’ விசா ஏற்பாடுகளை நிறுவனமே செய்து தருகிறது.

Cloud:
Java Developer with AWS Experience

Java:
Java Developer with Spring, CI/CD, TDD PCF Experience
Java Full Stack Developer with SpringBoot, AngularJS, HTML, TDD exp.,
Java Developer with SQL, Unix Experience

Mobility:
iOS Application Developer

Content Management:
Adobe Experience Manager (AEM) Architect
Adobe Experience Manager (AEM) Developer

Big Data/Data Analytics/Data warehouse:
ETL Developer with Informatica PowerCenter Experience
Informatica MDM Developer with IDQ experience
Data Scientist with SAS, R, Python experience
Python/Spark Developer

Project Management:
IT Product Manager with SAP experience

Business Analyst:
IT Business Analyst with EDI experience
IT Business Analyst

SAP/ERP:
SAP FICO Consultant with Master Governance Data (MDG) and SAP Landscape Transformation experience

Engineering:
Lean Manufacturing Engineer

Front End/UI-UX
Java Front-End Developer with CSS3, ReactJS, VueJS Experience
UI/UX Designer - with Sketch and Adobe Creative Suite

குறிப்பு:
Forward செய்யப்படும் மின்னஞ்சல்களை எனக்கு அனுப்ப வேண்டாம். தங்கள் நிறுவனங்களில் அல்லது தங்களுக்குத் தெரிந்த நண்பர்களின் நிறுவனங்களில் வாய்ப்புகள் இருப்பின் மட்டும் அனுப்பி வைத்து உதவவும்.

vaamanikandan@gmail.com

செந்தூரன்

 'நீங்க சோனா காதா’

இந்தக் கேள்வியை தமிழ்நாட்டில் யாராவது கேட்டிருந்தால் ஆச்சரியமாக இருந்திருக்காது. விசாகப்பட்டினத்தில் யாரோ கேட்ட போது பிரதீப்புக்கு ஆச்சரியம்தான் . கேட்டவரைப் பார்த்தான். மண்டைக்குள் கசகசவென ரசாயன மாற்றங்கள் நிகழ்ந்து வெகு சில முகங்கள் வேகமாக வந்து  போயின. முக்கால் வினாடிக்குள் கண்டறிந்துவிட்டான். மறக்கக் கூடிய முகமா அது?

‘செந்தூரா...எப்படி இருக்க?’- சிற்சில மாற்றங்களுடன் செந்தூரன் அப்படியேதான் இருந்தான். கல்லூரிக் காலத்தில் அவனுக்கு மீசை சற்று அடர்த்தி குறைவாக இருக்கும். மாறியிருந்தது. தவிர, இப்பொழுது தலையில் சில நரைமுடிகள் தெரிந்தன. முகத்தில்தான் பழைய களை இல்லை. படிப்பை முடித்து பதினாறு வருடங்கள் ஓடிவிட்டன. கிட்டத்தட்ட ஆயுளின் மத்திமத்தை நெருங்கியாகிவிட்டது. எல்லோருக்கும் இருக்கக் கூடிய நெருக்கடிகள், சுமைகள்தானே அவனுக்கும் இருக்கும்?

செந்தூரன் குளித்தலையிலிருந்து படிக்க வந்திருந்தவன். அப்பா இல்லை. பக்கத்திலேயே கரூரிலோ திருச்சியிலோ அம்மா படிக்கச் சொன்ன போது பி.ஈ ஐ.டி எங்கே கிடைத்தாலும் சென்றுவிடுகிறேன் என்று சேலம் வந்து சோனாவில் சேர்ந்ததாகச் சொல்லியிருக்கிறான். பிரதீப் எலெக்ட்ரிக்கல் டிபார்ட்மெண்ட். இருவரும் விடுதியில் பக்கத்து அறைகள். மிகவும் நெருங்கவில்லை என்றாலும் நண்பர்கள்.  

‘வைசாக்ல எங்க இருக்கீங்க’- செந்தூரன் கேட்டான் - கால இடைவெளி போடா வாடாவை அழித்து மரியாதையைக் கொண்டு வந்து நிரப்பியிருந்தது.

‘ரிஷிகொண்டா பீச் ஏரியால ஒரு ரிசார்ட் கட்டிட வேலை நடந்துட்டு இருக்கு...ரெண்டு நாள் மீட்டிங்..ஹோட்டல்லதான் தங்கியிருக்கேன்’ பிரதீப் சொல்லிக் கொண்டிருந்தபடியே ஸ்ரீவித்யாவின் முகத்தை நினைவுபடுத்திக் கொண்டான். 

‘நீ?’ -  ங்க விகுதியில்லாமலே கேட்டான். செந்தூரனை இயல்பு நிலைக்குக் கொண்டு வந்துவிடுவதற்கான முயற்சி அது. 

‘பக்கத்துலதான் வேலை’ என்றான். நிறுவனம் பற்றியெல்லாம் பெரிதாக விசாரித்துக் கொள்ளவில்லை. வித்யா பற்றிக் கேட்கச் சொல்லி மனம் குதித்தது. பிரதீப்புக்கு வித்யாவிடம் இனம்புரியாத ஈர்ப்பு இருந்தது. யாருக்குத்தான் இல்லாமல் இருந்திருக்கும்? அவள் யட்சி. 

செந்தூரனும், வித்யாவும் ஒரே வகுப்பு. ஐ.டி. டிபார்ட்மெண்ட்.  ஆனால் பிரதீப்புக்கு அவளிடம் நேரடியாகப் பேசுகிற வாய்ப்பே அமைந்ததில்லை. அமைந்ததில்லை என்பதைவிடவும் அவள் நறுக்குத் தெறித்தாற் போல பேசிவிடுவாள். அதுவே பல பையன்களுக்கும் பயத்தைத் தந்திருந்தது. பேச யோசிப்பார்கள். சற்றே பிசகினாலும் ஜென்மத்துக்கும் அவளோடு பேச முடியாது. உடைத்து வீசிவிடுவாள். அப்படித்தான் பிரதீப்பும் பேசாமலே காலம் தள்ளியிருந்தான்.

இப்பொழுதும் கூட அவ்வப்பொழுது  ஸ்ரீவித்யா சோனா, ஸ்ரீவித்யா ராமச்சந்திரன் என்று பல்வேறு விதங்களில் அவளது முகத்தை ஃபேஸ்புக்கிலும் கூகிளிலும் தேடிப் பார்ப்பதுண்டு. ஆனால் அவளைப் பற்றி எந்தத் தகவலையும் எடுக்க முடிந்ததில்லை. எதுவும் செய்யப் போவதில்லை- முகத்தைப் பார்க்கலாம் என்று அவ்வப்பொழுது தோன்றுவதைத் தவிர்க்கவே முடியாமல் இருந்தது. இப்பொழுதும் கூட ‘உங்க க்ரஷ் யார்?’ என்று கேட்டாள் அவள் பெயர்தான் வந்து போகிறது. பிரதீப்புக்கு திருமணமாகி மூன்று வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது. வித்ய ப்ரீத்தா என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

‘நீ வைசாக் வந்து எவ்ளோ வருஷம் ஆச்சு?’ பிரதீப்தான் கேள்வியைக் கேட்டான். 

‘ஆறேழு வருஷம்’ 

‘ஐடி- யா?’

‘இல்ல’- இந்த பதில் செந்தூரனை நெருடியது. என்னவோ சரியில்லையோ என்று நினைத்தான். அடுத்த கேள்வியாக வித்யா குறித்துக் கேட்டுவிடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தவன் அமைதியாக இருக்க வேண்டியதாகிவிட்டது. பலரும் அணுகத் தயங்கிய வித்யா செந்தூரனிடம்தான் அதிகம் பழகினாள். மெக்கானிக்கல் சீனியர் பாலகுமாரன் ஒரு முறை தனது விடுதி அறைக்கு செந்தூரனை அழைத்து வித்யா குறித்து விசாரித்தார். 

செந்தூரனிடம் ஒரு தெனாவெட்டு இருக்கும். பார்ப்பதற்கு நளினமானவனாகவும், நாசூக்கானவனாகவும் தெரிந்தாலும் கட்-த்ரோட் என்பதன் சரியான உதாரணம். அதெல்லாம் இயல்பிலேயே வர வேண்டும். என்னதான் பயிற்சி செய்தாலும் வந்து சேராது. அது கூட வித்யாவை ஈர்த்திருக்கக் கூடும். 

தாம் இங்கு ஏதேனும் மென்பொருள் துறையில் பணிபுரியக் கூடும் என பிரதீப் நினைத்திருப்பான் என்பதை செந்தூரனும் உணர்ந்தவனாக பேச்சை மாற்ற விரும்பினான். 

‘வேலை என்ன வேலை... நம்மைச் சுத்தி வெளியில் இருக்கிறதுதான் நமக்கு சந்தோஷம்ன்னு நினைக்கிறோம்..இல்லையா?’ என்றான். 

பிரதீப் மெலிதாக புன்னகைத்தான்.

‘கார், வீடு, வசதி...இப்படி’

‘ம்ம்ம்’

‘வெளியில் இருக்கிறது என்னதான் நம்மை டிஸ்டர்ப் செஞ்சாலும் உள்ளுக்குள்ள நாம அலட்டிக்காம இருக்கணும்..ஆனா பாருங்க...வெளியில் செளகரியமா இருக்கணும்ன்னு உள்ளுக்குள்ள பயங்கரமா அலட்டிக்கிறோம்’- உள்ளுக்குள் என்று சொல்லும் போது நெற்றிப்பொட்டில் கட்டை விரலை வைத்துக் காட்டினான். செந்தூரன் எதையோ அப்பட்டமாக பேசுவதாக பிரதீப் நினைத்தான். மனிதர்கள் தங்களுக்குள் எவ்வளவுதான் சுமைகள் சேர்ந்தாலும், அழுத்தங்கள் வந்து குவிந்தாலும் பணம், சம்பாத்தியம், சுகபோகம் எனபதற்காக எல்லாவற்றையும் பொறுத்துக் கொள்கிறார்கள். இல்லையா? 

‘வித்யா எப்படி இருக்கா?’ - இப்பொழுதும் பிரதீப் உள்ளுக்குள்தான் அலட்டிக் கொண்டிருந்தான். பொறுக்க முடியாமல் கேட்டே விட்டான்.

‘தெரியலை’- செந்தூரன் சாவகாசமாகச் சொன்னான். விரக்தியில் சொல்கிறானா, இயல்பாகச் சொல்கிறானா என்று புரிபடாத தொனி அது. 

அலுவல் பணி முடிந்து அறையில் லேப்டாப்பை வைத்துவிட்டு காலாற நடந்து வரலாம் என்று வரும் போதுதான் செந்தூரனை எதிர்கொண்டான். இந்தச் சூழலில் செந்தூரனை- தாம் விரும்பிய பெண்ணின் காதலனாக இருந்தவனை எதிர்கொள்வோம் என்று பிரதீப் நினைக்கவில்லை. அவன் இப்படியெல்லாம் பேசுவான் என்று எதிர்பார்க்கவில்லை.

பாலகுமாரனிடம் எதிர்த்துப் பேசிவிட்டு வந்த போதே விடுதி முழுக்கவும் அதுதான் பேச்சாக இருந்தது. கல்லூரியிலும் பேசினார்கள். பாலாவைப் பார்த்தால் எல்லோருக்குமே சற்று பயமாக இருக்கும். திடீரென்று அடித்துவிடுவார். அதற்காகவே அவரை கல்லூரியிலிருந்து பல முறை சஸ்பெண்ட் செய்திருக்கிறார்கள். செந்தூரனை எதுவும் செய்யாமல் அனுப்பியிருந்தார். அந்தத் தகவல் வித்யாவுக்கும் சேர்ந்திருந்தது. அடுத்த சில மாதங்களிலேயே செந்தூரனும் வித்யாவும் நெருங்கியிருந்தார்கள். அது காதல்தான். 

அதன் பிறகு மற்றவர்கள் யாரும் வித்யாவிடம் பேச முயற்சித்ததாக நினைவில் இல்லை. பிரதீப்பும் அவளை ஓரக்கண்ணால் பார்ப்பதோடு ஒதுங்கியிருந்தான். கல்லூரியின் இறுதிக் காலம் வரையிலும் அவர்களது காதல் தொடர்ந்தது. பிரதீப்புக்கு எலெக்ட்ரிக்கல் துறையைச் சார்ந்தவர்களுடனேயே கூட அத்தனை பேருடனும் தொடர்பில் இல்லாத சூழலில் ஐ.டி. டிபார்ட்மெண்ட்டைச் சார்ந்தவர்கள் யாருடனுமே தொடர்பில் இல்லை. கோபால் அமெரிக்காவில் இருப்பதாகச் சொன்னார்கள். முரளியும் வெளிநாடு சென்றுவிட்டான். எல்லாமே செவி வழிச் செய்திதான். 

வித்யாவைத் தேடும் போதெல்லாம் செந்தூரனையும் தேடியிருக்கிறான். பிரதீப்புக்கு இருவருமே பிடிபடவில்லை.

‘நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் செஞ்சுக்கலயா?’ தான் மட்டுமில்லை யாராக இருந்தாலும் செந்தூரனிடம் அவனைவிடவும் அவளைப் பற்றித்தான் கேள்வி கேட்டிருப்பார்கள் என பிரதீப் உள்ளுக்குள் சமாதானம் சொல்லிக் கொண்டான்.

‘இல்ல’

வித்யா பற்றியக் கேள்விகளுக்கு ஒற்றைச் சொற்களுடன் முடிக்கிறான். ‘ஏன் செஞ்சுக்கல’ என்று கேட்டுவிடலாமா என்று குழப்பமாக இருந்தது. 

‘அம்மா என்ன பண்ணுறாங்க?’ என்றான் பிரதீப். கல்லூரியின் நான்காண்டு காலத்தில் ஒரேயொரு முறை வந்திருந்தார். இவன் கல்லூரிக்கட்டணத்தை வாங்கி வர ஊருக்குச் சென்றிருந்த சமயத்தில் பணத்தைப் புரட்ட முடியாமல் இவன் கல்லூரிக்கு வந்து சேர்ந்த இரண்டு நாட்களில் எடுத்து வந்து கட்டினார். கைத்தறிப் புடவை, கழுத்தில் ஒரு மெல்லிய செயின் அணிந்திருந்தார். 

‘அம்மாவும் போய்ட்டாங்க...சூசைட்’- இவன் முகத்தில் ஏன் களை குறைந்திருக்கிறது என்பதைப் புரிந்தவனாக பிரதீப் அமைதியானான். செந்தூரன் சொல்கிற எந்த பதிலுமே மறு கேள்விக்கு வாய்ப்பைத் தராமல் தாழிடும் பதில்களாகவே இருக்கின்றன.

உள்ளே-வெளியே என அப்பட்டமாக பேசியது கூட தன்னை ஆறுதல்படுத்திக் கொள்வதற்காக அவனே பேசுகிற வார்த்தைகள் என்று தோன்றியது.

‘நீ உள்ளுக்குள்ள அலட்டிக்காம இருக்கிறயா?’- பிரதீப் கேட்டான். செந்தூரன் எதிர்பார்க்கவில்லை. ‘அப்படித்தான் இருக்க ட்ரை பண்ணுறேன்’ சொல்லிவிட்டு மெதுவாகச் சிரித்தான்.

‘வேற ஏதாச்சும் பேசுவோமா? ஃபேமிலி பத்தி...’ என்று பிரதீப் கடந்த காலத்தைவிட்டு நிகழ் உலகத்துக்கு அவனை அழைத்து வர விரும்பினான்.

‘என் எல்லா பதிலுமே உனக்கு அதிர்ச்சியாத்தான் இருக்கும்...கல்யாணம் நடக்கவே இல்ல.....அம்மா இறந்த பின்னாடி தனியாகிட்டேன்..அதுக்கு முன்னாடியே அவ விலகிட்டா...எல்லாம் சேர்ந்து டிப்ரெஷன்....தேடல் அது இதுன்னு பல வருஷம் ஓடிடுச்சு... ஒழுங்கான வேலை இல்லை...’

‘இப்போ என்ன செய்யற?’

‘அங்க பெட்ரோல் பங்க் தெரியுதா...ஹெச்.பி...அங்க மேனேஜர்...இது டீ டைம் இது..ஒரு தம் அடிக்கலாம்ன்னு வந்தேன்...தெரிஞ்ச முகமா இருக்கேன்னு பார்த்தா நீ...முடிதான் கழண்டுடுச்சு உனக்கு’ சொல்லிவிட்டுச் சிரித்தான்.

ஐடி படிப்புக்காக அம்மாவை தனியே விட்டு வெளியில் வந்தவன், எல்லோரும் பயந்த பாலகுமாரனை  சாதாரணமாக டீல் செய்தவன், கல்லூரியே விரும்பிய யட்சி ஒருத்தியை மிகச் சாதாரணமாக காதலிக்கத் தொடங்கியவன். இப்பொழுது எல்லாமே புதிராக இருந்தது பிரதீப்புக்கு. 

எல்லோருக்கும் வாழ்க்கை சீராக ஓடிக் கொண்டிருப்பதில்லை. அது நிறையப் பேர்களை புரட்டி ஓரத்தில் வீசிவிடுகிறது. முனகலோடு கிடக்கும் அவர்களைக் கண்டறிவதில் நமக்கு நேரமும் சூழலும் வாய்ப்பதில்லை. 

‘நீ கேட்ட இல்ல...எதுக்குமே நான் அலட்டிக்கிறதில்லையான்னு? அலட்டிக்க என்ன இருக்கு சொல்லு? ஒரு ரூம் இருக்கு..சின்னதா டிவி இருக்கு....முடிஞ்ச வரைக்கும் பங்க்ல கிடப்பேன்...ரூமுக்கு போனா தூங்கறது மட்டும்தான்...தனிமையைத் தவிர நான் கவலைப்பட ஒண்ணுமே இல்ல’

‘பழசெல்லாம்?’

‘உன்னை மாதிரி யாராச்சும் கிளறினாத்தான்...இன்னைக்கு தூக்கம் வராது...தண்ணியடிப்பேன்’ 

பிரதீப் எதுவும் சொல்லவில்லை. அவனது வலது கரத்தைப் பற்றினான். அப்படியொரு பற்றுதல் செந்தூரனுக்கு சமீபகாலத்தில் நிகழவேயில்லை என்பதை அவனது பதில் பற்றுதல் உணர்த்தியது. 

‘ஒரேயொரு வார்த்தை...இல்லன்னா ஒரேயொரு வாக்கியம் போதும்...ரெண்டு பேருக்கான ரிலேஷன்ஷிப்பை உடைச்சுட’ என்றான். அவனை மீறி கண்ணீர் கசிவது போலத் தெரிந்தது. அவன் வித்யாவை நினைத்துச் சொல்லியிருக்க வேண்டும் அல்லது அம்மாவை நினைத்துமாகவும் இருக்கலாம்.

‘எனக்குள்ள இருந்த ஸ்டெபிலிட்டியை அசைச்சு பார்க்குற நீ’ என்று சிரித்தான். அப்பொழுது கண்ணீர் உருண்டுவிட்டது.

‘ரெண்டு பேருக்கும் இடையில் நட்போ, உறவோ உருவாகும் போது அப்பட்டமா பேசிடக் கூடாது....மறைச்சு வெச்ச ஓவியம் மாதிரி....ஒவ்வொரு வார்த்தையும் வாக்கியமும் மறைப்ப மெல்ல விலக்கலாமே தவிர ஒரேயடியா விலக்கிட கூடாது...அது எல்லாத்தையும் குலைச்சு போட்டுடும்’ என்று சொல்லிவிட்டு  ‘சிகரெட் வெச்சிருக்கியா’ என்றான். இது நிச்சயமாக வித்யாவை நினைத்துப் பேசுகிறான்.

‘இல்ல’

‘நீ உன் ஃபேமிலி பத்தி சொல்லவே இல்லை’ செந்தூரனின் கேள்வி காதுக்குள் நுழையவே இல்லை. பிரதீப்புக்கு ஏனோ மனசுக்குள் அலையடித்தபடியே இருந்தது.

‘நாளைக்கும் இங்கதான் இருப்பேன்...பங்குக்கு வரட்டுமா’ என்றான்.

‘கிளம்புறியா?’ செந்தூரன் அவனை இருக்கும்படியான தொனியில் கேட்டான்.

‘நாளைக்கு வர்றேன்’ என்றான்.

‘நூறு ரூபா தந்துட்டு போறியா’ என்றான். பிரதீப்புக்கு என்னவோ போலாகிவிட்டது. ஐநூறு ரூபாயை எடுத்துக் கொடுத்தான்.

‘இல்ல...நிறைய தண்ணி அடிச்சுடுவேன்..நூறு மட்டும் கொடு’ என்றவன் ‘மாசக் கடைசி’ என்று அவனாகவே சொல்லிக் கொண்டான்.

பிரதீப் கொடுத்தான். வாங்கும் போது பழைய கட்-த்ரோட் செந்தூரனாக அவனில்லை. உடைந்து போனான்.

பிரதீப் நடக்கத் தொடங்கினான். செந்தூரன் எதிர்திசையில் நடந்தான். கடற்காற்று பிரதீப்பின் வியர்வை முழுக்கவும் கரிப்பை படியச் செய்திருந்தது.

Jun 3, 2020

எதிர்மறைச் சிந்தனைகள்

சமீபகாலமாக அதிகமான நண்பர்கள் - குறிப்பாக பணியில் இருப்பவர்கள் தங்கள் வேலை, எதிர்காலம் குறித்தான குழப்பங்களை முன் வைத்து- தொடர்ந்து வேலை இருக்குமா இருக்காதா, ஆறு மாதங்களுக்குத்தான் ப்ராஜக்ட் இருக்கிறது என்கிறார்கள் அதன் பிறகு என்ன நடக்கும் என்று தெரியவில்லை போன்ற காரணங்களைச் சொல்லி மன அழுத்தம் அதிகரிப்பதாகச் சொல்கிறார்கள்.  பலரும் அதை மன அழுத்தம் என்று நினைப்பதில்லை- குழப்பமாக இருப்பதாகச் சொல்கிறார்கள். 

பல நண்பர்களிடமும் வலுக்கட்டாயமாகப் பேசுகிறேன். பொதுவாகவே பலரும் அடுத்தவர்களிடம் பேசுவதில்லை அல்லது முன்பு பேசியதைவிட வெகுவாக பேச்சு குறைந்திருக்கிறது. மீறிப் பேசினாலும் எதிர்மறைச் சிந்தனைகள் மூளை முழுவதும் நிரம்புகிறது என்று வருந்துகிறார்கள். வீடுகளிலும் கூட கணவன் அல்லது மனைவி, குழந்தையிடம் பேசி தம் சுமையை அவர்கள் மீது இறக்கி வைக்கவும் பலரும் தயங்குகிறார்கள். யோசித்துப் பாருங்கள்- பல்வேறு குழப்பங்களும், கேள்விகளும் தொடர்ச்சியாக மனதில் சேகரமாகிக் கொண்டேயிருக்கின்றன. இவற்றை வெளிப்படையாகப் பேசுவதுமில்லை, வடிகால் உருவாக்குவதுமில்லை. இப்படி தமக்குள்ளாகவே நாட்கணக்கில், வாரக் கணக்கில் கசடுகளைச் சேர்க்க விடும் போது அது கடைசியில் என்னவாகும்? எந்தவிதமான வடிகாலைத் தேடுவது எனத் தெரியாமல் அது கோபமாகவும், எரிச்சலாகவும், புலம்பலாகவும் வெவ்வேறு வடிவங்களைக் கைக்கொள்கிறது. 

ஒருவேளை இத்தகைய மனச்சிக்கல்களை உணர்ந்தால் இவற்றை தொடர்ந்து அப்படியே அனுமதிப்பது சரியானதில்லை.  மாற்று வழிகளைக் கண்டறிந்தே தீர வேண்டும். 

ஒன்றை மட்டும் உறுதியாக மனதில் நிறுத்திக் கொள்ளலாம்- இன்றைய சூழலில் யாருக்குமே பொருளாதார உத்தரவாதமில்லை. கோடிக்கணக்கில் பணத்தை வைத்துக் கொண்டு வட்டிக்கு விட்டு அதை வாங்கி காலத்தை ஓட்டிக் கொண்டிருந்தவர்கள் கூட திணறுகிறார்கள். வட்டியை விடுங்கள்- அசல் வந்து சேருமா என்று தெரியவில்லை. ‘வாழ்க்கையில் இவருக்கு எந்தக் கவலையுமில்லை’ என்று மூன்று மாதங்களுக்கு முன்பாக நீங்கள் யாரை நினைத்துக் கொண்டிருந்தீர்களோ அவர்களிடம் பேசிப் பாருங்கள். அவர்களுடைய பிரச்சினைகள் நமக்குத் தெரிய வரும்.  தனியார் ஆம்னி பேருந்துகள், லாட்ஜ், பெரும் உணவுவிடுதிகள் நடத்தியவர்கள்- யாருக்குமே எந்த உத்தரவாதமுமில்லை. சிறு, குறு தொழில் நிறுவனங்கள் தொடங்கி பெருமுதலாளிகள் வரை அத்தனை பேரும் பதற்றத்தில்தான் இருக்கிறார்கள். இப்போதைக்கு பெரும்பாலானோர்  நம்பிக் கொண்டிருப்பது நிலைமை சீராகிவிடும் என்கிற ஒற்றை நம்பிக்கையில்தான். இந்த ஒற்றை நம்பிக்கைதான் நம் எல்லோருக்குமே தேவை.

பொதுவாக வெவ்வேறு தொழில்களை நடத்துகிறவர்கள், நிறுவனங்களை நடத்துகிறவர்கள், முதலீடுகளைச் செய்தவர்கள் என பெரும்பாலானவர்கள் தங்கள் தொழிலில் மேடு பள்ளங்களைப் பார்த்தவர்கள். அவர்களுக்கு இது பெரிய பள்ளம். அவ்வளவுதான். ஆனால் கார்போரேட் நிறுவன ஊழியர்கள், ஐடி ஊழியர்கள் ஒருவிதமான comfort zone இல் இருந்து பழகியவர்கள்தான் அதிகம். இப்படியொரு நீண்டகால நிலையின்மையை, அதுவும் தனியாக அமர்ந்து ‘என்ன ஆகுமோ’ என்று புலம்புகிற அவஸ்தையை இப்பொழுதுதான் முதலில் உணர்கிறார்கள். முன்பும் கூட பொருளாதார தேக்க நிலையின் போது, நிறுவனங்கள் ஆட்குறைப்பைச் செய்த போதெல்லாம் குறைந்தபட்சம் கேண்டீனிலாவது நான்கு பேர் பேசக் கிடைப்பார்கள். பேசிப் பேசிச் சுமையை இறக்கிவிடலாம். பயம் அதிகமாகும் போது அலுவலகத்துக்கு வெளியில் காலாற நடந்து வரலாம்.  இப்பொழுது அதற்கும் வாய்ப்பில்லை. தனித்துச் சிக்கியிருக்கிறார்கள். கொரோனாவும், ஊரடங்கும், அலுவலக வதந்திகளும் சிதைத்து வதைக்கின்றன.

என்னதான் செய்வது என்று கேட்டால் நம்பிக்கைதான் ஒரே வழி. நிலைமை சீரடைந்துவிடும் என்கிற நம்பிக்கைதான் அவசியம். 

எனக்கும் அதுதான் தேவை. உங்களுக்கும் அதுவேதான். ஆறு மாதங்களுக்கு ப்ராஜக்ட் இருக்கிறது; வேலை இருக்கிறது என்றால் அடுத்த ஆறு மாதங்களில் நிலைமை தேறிவிட எல்லாவிதமான வாய்ப்புகளும் இருக்கின்றன. வேலையில் இருக்கும் நமக்கே ஆயிரத்தெட்டு கவலைகள் இருக்கும் போது நம்மை நம்பி கோடிக்கணக்கில் முதலீடு செய்திருக்கும் நிறுவன அதிபர்கள், நிறுவன இயக்குநர்கள் எல்லாம் கவலைப்படாமல் இருப்பார்களா? ப்ராஜக்ட்களைத் தேடுவார்கள், பணம் சம்பாதிக்கும் வழிகளை ஆய்வார்கள். அப்பொழுது நம்முடைய பங்களிப்பும் நிச்சயமாகத் தேவையானதாக இருக்கும்.

நிலைமை மெல்லச் சீரடையும் போது நாம் பணிபுரியும் நிறுவனங்கள் சற்றே தடுமாறினால் நம் நிறுவனம்  இழக்கும் வாய்ப்புகளை இன்னொரு நிறுவனம் பெறுகிறது என்றுதான் அர்த்தமே தவிர உலகமே மூழ்கிக் கொண்டிருக்கிறது என்று கருத வேண்டியதில்லை. அப்படி ஒரு போதும் நடக்காது. சக்கரம் சுழன்று கொண்டேதான் இருக்கும். அப்படியான வாய்ப்புகளைப் பெறும் நிறுவனங்களுக்கு பணிகளைச் செய்து தர ஆட்கள் தேவைப்படுவார்கள். அவர்களுக்கு நாம் பொறுத்தமானவர்களாக இருப்போம் என்ற நம்பிக்கையை உருவாக்க வேண்டியதுதான் நாம் செய்ய வேண்டிய ஒரே வேலை. அதற்குத் தேவையான கற்றல், கற்றவற்றை வெளிக்காட்டும் மனநிலை, உற்சாகமான எண்ணங்கள் என்று நம்மை மெருகேற்றிக் கொண்டேயிருப்பதுதான் காலத்தின் கட்டாயமே தவிர முடங்கி நம்மை நாமே நசுக்கிக் கொள்வதில்லை.

ஊரடங்கு காலத்தின் தொடக்க மனநிலைக்கும் இப்போதைய மனநிலைக்குமான வித்தியாசங்களை சில கணங்கள் யோசித்துப் பார்க்கலாம். எண்ண மாற்றங்கள் (mood swing) வந்து போவது இயல்புதான். ஆனால் அப்பொழுது இருந்ததைவிட இப்பொழுது தொடர்ச்சியான மன அழுத்தம், கோபம், வேலை அல்லது பொருளாதாரம் சார்ந்த பயம், குழப்பம் என சஞ்சலமுற்று, தூக்கம் வரவில்லை, பசியில்லை என்பது மாதிரியான பிரச்சினைகள் கடந்த சில நாட்களாகவே இருப்பதாக உணர்ந்தால் நமக்காகவும் நம் குடும்பத்துக்காகவும் இத்தகைய மனச்சிக்கல்களைவிட்டு வெளியில் வர வேண்டியது மிக அவசியம். அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியது கட்டாயம்.

நண்பர்களோடு பேச முயற்சிக்கலாம். ஒருவர் எதிர்மறையாகப் பேசுகிறார் என்றால் அவரிடம் கொஞ்சம் பாஸிட்டிவிட்டியை நம்மால் உருவாக்க முடியுமென்றால் முயற்சிக்கலாம் அல்லது அப்போதைக்கு பேசுவதையே தவிர்த்துவிடலாம். செய்திச் சேனல்களை முழுமையாகத் தவிர்த்துவிடுவதில் தவறேதுமில்லை. அவை மிக அதிகமான குழப்பத்தை உண்டாக்குகின்றன. சமூக ஊடகங்கள் ஓரளவுக்கு பரவாயில்லை. அவற்றிலும் யாரேனும் நம்மை பயமூட்டும்படியாகத் திரும்பத் திரும்ப எழுதியும் பேசிக் கொண்டுமிருந்தால் அவர்களைத் தவிர்த்துவிடலாம். நம் எண்ணங்களுக்கு எதிரானவற்றை, நமக்கு விருப்பமில்லாதவற்றை, எதைப் பேசினால் நமக்கு எரிச்சல் உண்டாகுமோ அதைப் பேசிக் கொண்டிருப்பவர்களை தாட்சண்யமின்றி un-follow செய்துவிடலாம். 

மனதுக்கு ஆறுதலான சில காரியங்களைச் செய்து பார்க்கலாம். வெளியில் சற்று நடந்து வரலாம். நடக்கும் போது யாரிடமாவது பேசலாம். புத்தகம் படிப்பதும், படம் பார்ப்பதும் மனதினை இலகுவாக்குகிறது என்றால் அதைச் செய்து பார்க்கலாம். இதையெல்லாம் செய்வது மட்டுமில்லாமல் மெல்ல மெல்ல மனைவியிடமும் கணவரிடமும் பேசித் திட்டமிடல்களை ஆரம்பிக்கலாம். ஒருவேளை சூழல் மோசமாகி வேலையே போய்விட்டாலும் ‘இதைச் செய்து கொள்ளலாம்’ என்று ஏதேனும் மாற்று வழிகள்- இப்படியொரு வழி இருக்கிறது என்று தெரிந்து வைத்திருந்தாலும் கூட ஆசுவாசமாக இருக்கும். 

நோய், அரசாங்கம், குளறுபடிகள், வேலை, பொருளாதாரம், சம்பளம் என எல்லாவற்றையும் தாண்டி நம் ஆரோக்கியமும், நம் குழந்தைகளின் மனநலமும் மிக முக்கியம். எவ்வளவு பெரும் கவலை வந்தாலும் உடல் ஆரோக்கியமாகவும், மனம் தைரியமாகவும் இருந்தால் நீந்திக் கடந்துவிடலாம். மனிதனுக்கு அளவுகடந்த பேராற்றல் இருக்கிறது! 

ஒன்றை மட்டும் உறுதியாக நம்பலாம். சக்கரம் மேலே வந்தே தீரும். அது வரைக்கும் மனதை இலகுவாக்குகிற காரியங்களை மட்டும் செய்யுங்கள். மனதைக் குழப்புகிறது, பயமூட்டுகிறது, சஞ்சலப்படுத்துகிறது என்றால் எதுவாக இருந்தாலும்- அது எதுவாக இருந்தாலும் அதை முழுமையாகத் தவிர்த்துவிடுங்கள். அதுதான் நாம் செய்ய வேண்டிய மிக முக்கியமான காரியம். 

vaamanikandan@gmail.com

க்ளவுட்

உள்ளூர் இளைஞர் ஒருவரை சில நாட்களுக்கு முன்பாக கடையில் சந்திக்க நேர்ந்தது. கஷ்டப்பட்ட குடும்பம். பொறியியல் முடித்திருக்கிறான்.  நான்கு வருட அனுபவம் இருக்கிறது. நெட்வொர்க்கிங் துறையில் பணிபுரிவதாகவும் சம்பளம் சொற்பமாக இருப்பதாகவும் சொல்லிக் கொண்டிருந்தான். ‘இப்போதைக்கு இருக்கிற வேலையைக் காப்பாத்திக்க...இடைப்பட்ட காலத்தில் ஏதேனும் உருப்படியா படிச்சு வை’ என்றேன். எனக்கு ஏ.டபிள்யூ.எஸ் தெரியும் என்றான். சுயமாகவே படித்திருக்கிறான். 

ஒன்றிரண்டு வருடங்களுக்கு முன்பாக சிங்கப்பூரில் பணிபுரியும் கவி சொல்லித்தான் ஏ.டபிள்யூ.எஸ் பற்றி தேடத் தொடங்கியிருந்தேன். க்ளவுட் என்று கேள்விப்பட்டிருப்போம். கணினித்துறையில் இன்றைய காலகட்டத்தில் மிக அதிகளவு உச்சரிக்கப்படும் சில சொற்களில் இதுவும் ஒன்று. 

அது என்ன க்ளவுட்? 

முன்பெல்லாம் ஒரு நிறுவனம் இயங்குவதற்கு அடிப்படையான கட்டமைப்பு தேவை. அதனால் சர்வர் உட்பட எல்லாவற்றையும் சொந்தமாகவே வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். வாங்கி வைத்துக் கொண்டால் மட்டும் போதாது. மின்கட்டணம், தடையில்லா மின்சாரம், குளிரூட்டும் வசதிகள் என்று வசதிகள் மட்டுமில்லாமல் பாதுகாக்க, பராமரிக்க, தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்படின் சரி செய்ய  என்று நிறையப் பணியாளர்களும் தேவை. செலவும் அதிகம். தொழில்நுட்பம் வளர வளர இப்பொழுது இவற்றை வாடகைக்கு விடும் நிறுவனங்கள் அதிகமாகிவிட்டன. அமேசான், கூகிள் மாதிரியான நிறுவனங்கள் கட்டமைப்பை உருவாக்கி வைத்திருப்பார்கள். மேற்சொன்ன அத்தனை குடைச்சல்களும் அவர்கள் பொறுப்பு. தேவைப்படும் நிறுவனங்கள் தேவைக்கு ஏற்ப பணம் கொடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம். 

இன்றைய தேதியில் க்ளவுட் சர்வீஸ் சந்தையில் முப்பத்தைந்து சதவீதம் அமேசானிடம்தான் இருக்கிறது. இரண்டாமிடத்தில் அஸ்யூர் இருக்கிறது. கூகிள் மூன்றாமிடம். அப்படியென்றால் அமேசான் உருவாக்கி வைத்திருக்கும் கட்டமைப்பை காசு கொடுத்து பயன்படுத்திக் கொள்கிற நிறுவனங்கள் அதிகம் என்றுதானே அர்த்தம். அமேசானின் கட்டமைப்பை பயன்படுத்தும் நிறுவனங்களில், அந்தக் கட்டமைப்பைப் பயன்படுத்தத் தெரிந்த பணியாளர்கள் தேவை. ‘அமேசான் வாடகைக்குக் கொடுப்பதை எனக்கு சரியாகப் பயன்படுத்தத் தெரியும்’ என்று நிறுவனங்களிடம் எப்படிச் சொல்வீர்கள்? அதற்குத்தான் ஏ.டபிள்யூ.எஸ்.

இதே போல அஷ்யூர், கூகிள் என அந்தந்த நிறுவனங்கள் தம் க்ளவுட் பற்றித் தெரிந்து கொள்ள விரும்பும் ஆட்களுக்கு சான்றிதழ்க படிப்புகளைக் கொடுக்கின்றன. 

உள்ளூர் இளைஞனைப் பற்றிச் சொல்லியிருந்தேன் அல்லவா? அவனுக்கு ஏதாவது வகையில் உதவலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த போது ஜீரோ இனிஷியேட்டிவ் பற்றி ஒரு நண்பர் தெரிவித்தார். அக்‌ஷய் என்ற தமிழர் ஒருவர் நடத்தும் தளம். ஏ.டபிள்யூ.எஸ் பற்றி விரிவாக, வீடியோ பதிவுகளாகத் தயாரித்து வைத்திருக்கிறார். யார் வேண்டுமானாலும் படித்துக் கொள்ளலாம். இலவசம்தான். இளைஞனுக்கு நள்ளிரவில் ‘உனக்குத் தெரியாதது ஏதாவது ஒன்றைப் புதியதாகக் கற்றுக் கொள்ளப் பயன்படுத்திக் கொள்ளவும்’ மின்னஞ்சல் அனுப்பினேன். அவன் சுறுசுறுப்பானவன். கற்றுக் கொள்வான்.

சமீபமாக லாக்டவுன்- இந்தக் காலகட்டத்தில் ஏற்பட்டிருக்கும் மன அழுத்தம் பற்றியெல்லாம் நிறைய நண்பர்கள் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். அது பற்றி தனியாக-விரிவாக எழுத வேண்டும்.

மென்பொருள் துறையில் இருப்பவர்கள் கவனத்தைத் திசை மாற்ற விரும்பினால், உருப்படியாக எதையாவது செய்யலாம் என்று ஆசுவாசப்படுத்திக் கொள்ள விரும்பினால் ஏ.டபிள்யூ.எஸ் மாதிரியான தொழில்நுட்பம் குறித்துக் கொஞ்சம் கவனம் செலுத்தலாம். வேலைக்கும், சம்பள உயர்வுக்கும் பயன்படுகிறதோ இல்லையோ- அதில் என்ன இருக்கிறது என்றாவது தெரிந்து கொள்ளலாம். தகவல் தொழில்நுட்பத்துறை ஓடுகிற வேகத்துக்கு நாம் ஒவ்வொன்றைப் பற்றியும் குறைந்தபட்ச புரிதல்களையாவது கொண்டிருக்க வேண்டியிருக்கிறது. ஆர்ட்டிபிஷியல் இண்டலிஜென்ஸ் தொடங்கி க்ளவுட், மெஷின் லேர்னிங் வரைக்கும் எதைப் பற்றியும் - குறிப்பிட்ட தொழில்நுட்பம் எதற்குப் பயன்படுகிறது, அந்தத் தொழில்நுட்பத்தை மேம்படுத்த அல்லது பயன்படுத்த சந்தையில் கிடைக்கும் மென்பொருட்கள் யாவை, அவற்றைக் கொண்டு என்ன செய்கிறார்கள், எந்த நிறுவனங்கள் அதிகம் பயன்படுத்துகின்றன என்பதைப் பற்றியெல்லாம் ஐந்து நிமிடங்களாவது பேசத் தெரியுமளவுக்கு தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள் என்றுதான் நண்பர்களுக்குச் சொல்கிறேன்.

சற்றே பின்தங்கினாலும் நம்மைவிட்டு தொழில்நுட்பம் வெகுதூரம் ஓடிவிடும் என்பது நம் எல்லோருக்குமே தெரிந்த க்ளிஷேவான வாக்கியம்தான். அதன் பிறகு ஓடிப் பிடிப்பது சாத்தியமேயில்லை. நமக்கு எதில் விருப்பம் அதிகமோ அதில் கொஞ்சம் ஆழமாகவே காலை விடலாம். பெரிய ஆர்வமில்லாதவற்றை அலசி மட்டும் பார்த்துவிட்டு விட்டுவிடலாம். ஆனால் முக்கியமான சமாச்சாரங்கள் எதையுமே தெரியாது என்று சொல்லி விட்டு விடக் கூடாது. 

மேற்சொன்ன இளைஞர்களைச் சந்திக்கும் போது இன்னொரு காரியத்தையும் தொடர வேண்டும் எனத் தோன்றுகிறது- சில வருடங்களுக்கு முன்புவரை யாரேனும் ‘எங்கள் அலுவலகத்தில் பணி காலி இருக்கிறது’ என்று மின்னஞ்சல்கள் அனுப்பினால் அதை நிசப்தத்தில் பதிவிடுவதுண்டு. நிறையப் பேருக்கு பாலமாக இருக்கவும் முடிந்தது. அறக்கட்டளைப் பணிகள் காரணமாக நிறைய மின்னஞ்சல்கள் வரத் தொடங்கியதும் வேலை வாய்ப்பு சம்பந்தபப்ட்ட மின்னஞ்சல்களை பெரிதாக கவனிக்க முடியவில்லை. அதை மீண்டும் தொடரலாம் என நினைக்கிறேன். 

உங்களுக்கு யாரோ அனுப்பி வைக்கும் (forwards) மின்னஞ்சல்களை அனுப்ப வேண்டாம். அது வேலையைக் கடினமாக்கிவிடும். உங்கள் நிறுவனங்கள், உங்கள் நண்பர்களின் நிறுவனங்களில் ஏதேனும் காலியிடங்கள் இருப்பதாகத் தெரியவந்தால் தயவு கூர்ந்து ஒரு மின்னஞ்சல் அனுப்பி வைக்கவும். வாரத்தில் ஒரு முறையாவது தொகுத்து பதிவாக பிரசுரம் செய்துவிடலாம். நிச்சயம் பலருக்கும் பயன்படும்.

vaamanikandan@gmail.com

Jun 1, 2020

நிசப்தம் அறக்கட்டளை- மே 2020

கடைசியாக ஏப்ரல் 19 ஆம் தேதி நிசப்தம் அறக்கட்டளையின் வரவு செலவுக் கணக்கு பதிவிடப்பட்டிருந்தது. இணைப்பில் அந்த விவரங்களை அறிந்து கொள்ளலாம். அன்றைய தினம் தொடங்கி ஜூன் 1 வரையிலான வங்கி ஸ்டேட்மெண்ட் இது.

பணம் அனுப்பிய நன்கொடையாளர்கள் சில கணங்கள் ஒதுக்கி தாங்கள் அனுப்பிய நிதி விவரங்களைச் சரி பார்த்துக் கொள்ளவும். 

இன்றைய தேதியில் நிசப்தம் அறக்கட்டளையில் ரூ. 28,25,813.18 (இருபத்தெட்டு லட்சத்து இருபத்தைந்தாயிரத்து எந்நூற்று பதின்மூன்று ரூபாய்) பரிமாற்றக் கணக்கில் இருக்கிறது. தவிர, நிரந்தர வைப்புநிதியில் முப்பது லட்ச ரூபாய் இருக்கிறது. 

ஏதேனும் சந்தேகங்கள், வினாக்கள் இருப்பின் தொடர்பு கொள்ளவும்.

vaamanikandan@gmail.com