கொரோனா என்ற பெயர் உங்களுக்கெல்லாம் சமீபத்தில்தான் அறிமுகமாகியிருக்கும். எப்பொழுதுமே டாப் கியருக்கு மேலாக ஏதாவது கியர் இருந்தால் அதையும் போட்டு பறக்கும் கோபிச்செட்டிபாளையம் மாதிரியான அல்ட்ரா மாடர்ன் ஊர்களுக்கு பல வருடங்களுக்கு முன்பாகவே அறிமுகம். சில பல வருடங்களுக்கு முன்பாக ஏதோவொரு நிகழ்வில் அரசு தாமஸ்தான் ‘இவர்தான் கொரோனா கார்த்திகேயன்’ என்று அறிமுகப்படுத்தி வைத்தார். ஆள் ‘செவச் செவ’ என இருந்தார். சிரித்து அறிமுகமாகிக் கொண்டோம். இப்பொழுதுதான் நம் ஆட்சியாளர்கள் ‘கொரோனாவோடு வாழ்ந்து பழக வேண்டும்’ என்கிறார்கள். ஆனால் நானெல்லாம் அப்பொழுதிருந்தே கொரோனாவோடுதான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். வாரத்திற்கு இரண்டு முறையாவது அலைபேசியில் பேசிக் கொள்வோம். எப்படியும் ஊருக்கு வரும் போதெல்லாம் சந்தித்துக் கொள்வோம். நிசப்தத்தின் அத்தனை பணிகளிலும் உடனிருப்பார்.
இதுவரையிலும் ஐந்தாயிரம் மரங்களுக்கு குறைவில்லாமல் நட்டு வைத்திருப்பார் என நினைக்கிறேன். மரம் நடுவதில் அவ்வளவு ஆர்வம் அவருக்கு. தனக்கு பிறந்தநாள் என்றாலும் சரி; அடுத்தவர்களுக்கு பிறந்தநாள் என்றாலும் கடலை மிட்டாய் வாங்கித் தருவார். வித்தியாசமான மனிதர்.
கொரோனா என்ற பெயரில் எங்கள் ஊரில் ஒரு மில் உண்டு. கரோனாவோ கொரோனாவோ- டிப்ளமோ முடித்துவிட்டு அரைக்கால் ட்ரவுசருடன் கோவில்பட்டியிலிருந்து வந்தவர் கொரோனாவில் ட்ரெயினியாகச் சேர்ந்து படிப்படியாக மேலே வந்து பொது மேலாளர் ஆனார். அந்த நிறுவனம் கைமாறி அவர் நிறுவனத்தை விட்டு வெளியில் வந்தாலும் பெயர் ஒட்டிக் கொண்டது.
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று செய்தி வெளியான நாள் முதலே வீட்டில் தங்காத ஆள் அவர். யார் சமூகப்பணியைச் செய்தாலும் அவர்களோடு சேர்ந்து கொள்வார். உணவுப் பொருட்கள் வழங்குவதாக இருந்தாலும் சரி, அனுமதி வாங்கித் தருவதாக இருந்தாலும், ரத்ததானம் செய்வதாக இருந்தாலும்- அட மருத்துவமனையிலிருந்து யாரையாவது வீட்டுக்கு அழைத்துச் செல்ல வேண்டுமானாலும் கூட கொரோனாவைத்தான் அழைப்பார்கள். அவரும் கொரோனாவைவிட மோசமாக அங்குமிங்குமாக பரவிக் கொண்டேயிருப்பார்; பறந்து கொண்டேயிருப்பார்.
இரண்டொரு நாட்களுக்கு முன்பாக அழைத்த போது பெங்களூரு சென்று கொண்டிருப்பதாகச் சொன்னார். ‘அங்க எதுக்குங்க போறீங்க’ என்று அதிர்ச்சியானேன். பெங்களூரில் தெரிந்த குடும்பத்தைச் சார்ந்த மூன்று மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள். அதில் ஒரு மாணவனுக்கு அப்பா இல்லை. அவனை அழைத்து வருவதற்காக காரை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டார்.போகிற வழியில் பிரச்சினையில்லை. திரும்பும் போதும் பவானி வரைக்கும் பிரச்சினையில்லை. பவானியிலிருந்து மூன்றுகிலோமீட்டர் தொலைவில் வலதுபக்கமாகத் திரும்பினால் கோபிதான். பவானியில் போலீஸ்காரர்கள் நிறுத்தியிருக்கிறார்கள். இனி கொரோனாவே சொல்வதுதான் சரியாக இருக்கும்.
‘எங்க இருந்து வர்றீங்க?’
‘பெங்களூரு சார்’
‘எங்க போறீங்க’
‘கோபி’ - உண்மையைச் சொல்கிறாராம். இனி தொடர்வதை கவனியுங்கள்.
‘உங்க பையனா?’
‘இல்ல சார்...தெரிஞ்சவங்க பையன்..கூட்டிட்டு வர்றேன்’
‘பையன் எந்த ஊரு?’
‘திருப்பூருங்க’
அடுத்த மாவட்டம் செல்கிறவர்களாக இருந்தால் பிரச்சினையில்லை. பின்னால் வந்த திருப்பூர் வண்டியில் ஏற்றி பையனை அனுப்பி வைத்துவிட்டார்கள். ஈரோடு மாவட்டத்திற்குள் செல்கிறோம் என்று சொன்னால்தான் பிரச்சினை. கொரோனா கார்த்திகேயனை மட்டும் அங்கேயே அமரச் சொல்லிவிட்டார்கள்.
‘சார் நானு?’
‘உங்களை குவாரண்டைனுக்கு அனுப்பறோம்’
‘என்னது..குவாரண்டைனுக்கா?’- தலைமேல் இடி விழுந்த அதிர்ச்சி.
‘ஆமா சார்..14 நாள்தான்..செங்குந்தர் காலேஜ்ல இருக்கணும்’
‘சார்..நான் நல்லாத்தான் இருக்கேன்’ - இது கொரோனா.
‘இதையேதாங்க எல்லோரும் சொல்லுறாங்க’ - இது எஸ்.ஐ.
ஏதோ வகையாகச் சிக்கிக் கொண்டோம் என்று புரியத் தொடங்குகிறது.
‘உட்காருங்க சார்...ஆம்புலன்ஸ் வரும்...பத்து பத்து பேரா அனுப்பிட்டு இருக்கோம்’
‘என்ன சார்...அங்க கொரோனா வந்தவங்க இருப்பான்..அவங்க கூட என்னை அடைச்சீங்கன்னா?’
‘சார்..ரூல்ஸ் பேசாதீங்க....வண்டி வர வரைக்கும் உங்களுக்கு டைம் இருக்கு..வெயிட் பண்ணுங்க’
மணி இரவு பதினொன்று. யாரை அழைத்தாலும் உறங்கிக் கொண்டிருப்பார்கள். கார்த்தி அடுத்தவர்களைத் தொந்தரவு செய்யக் கூடாது என டீசன்ஸி பார்ப்பார்.
இடைப்பட்ட நேரத்தில் வண்டி வராத சமயங்களில் எஸ்.ஐ இவரிடம் பேச்சுக் கொடுத்திருக்கிறார்.
‘கோபியில் கரோனா கார்த்தின்னு என்னைப் பத்தி விசாரிச்சீங்கன்னா சொல்லுவாங்க சார்..’
இப்பொழுது எஸ்.ஐ அதிர்ச்சியாகிவிட்டார். ‘என்னது கொரோனா கார்த்தியா? தள்ளி நின்னு பேசுங்க சார்’ என்று மாஸ்க்கை சரி செய்து கொண்டார்.
‘சார்...அது வேற கொரோனா... தனிக்கதை...இந்நேரத்துக்கு அப்புறம் எப்படி சார் போன் செய்யறது...எல்லோரும் தூங்குவாங்க’
எஸ்.ஐ ‘சரி சார்...உங்களை நான் குவாரண்டைனுக்கு அனுப்பல...எனக்கு காலையில் ஏழு மணி வரைக்கும் ட்யூட்டி. நீங்க சுத்தமானவர்ன்னு நிரூபிச்சுட்டீங்கன்னா வீட்டுக்கு அனுப்பிடுறேன்’ என்று சொல்ல ‘என்ன குசும்பு புடிச்ச மனுஷனா இருப்பாரு போல’ என நினைத்த கார்த்தி ஒவ்வொரு ஐடியாவாக யோசிக்கிறார். பேசாமல் தீயை மூட்டி உள்ளே இறங்கி ஆம்பளை சீதை என்று நிரூபித்துவிடலாமா என்று கூட யோசனை ஓடுகிறது. ஆனால் அது பெரிய ரிஸ்க். போலீஸ்காரர்களே விடமாட்டார்கள்.
இரவு உணவு இல்லை. குடிக்க பாட்டில் தண்ணீர் கூட இல்லை. விடிய விடிய எஸ்.ஐ கதை பேசுகிறாரே தவிர விடுவதாகத் தெரியவில்லை. ஐந்து மணி வரைக்கும் தூக்கம் போனது. இரவுப்பணியில் இருக்கும் காவலர்கள் இப்படியொரு பீஸ் கிடைத்தால் நேரவிரயத்துக்கு பயன்படுத்திக் கொள்வார்கள்.
‘என்னவெல்லாம் செஞ்சிருக்கீங்க சார்?’ என்று ஆரம்பிப்பார்கள்.
‘ஆஹா...விட்டுடுவாங்க போலிருக்கு’ என்ற நம்பிக்கையில் நாம் வீரபிரதாபங்களை அடுக்குவோம். எல்லாவற்றையும் கேட்டுவிட்டு அடுத்து வரும் கேஸை மடக்கச் சென்றுவிடுவார்கள். பிறகு வந்து ‘அப்புறம் சார்..மேல சொல்லுங்க’ என்று ஆரம்பிப்பார்கள். விடிய விடிய மகாபாரதம்தான்.
இந்த இடத்தில் இன்னொரு கதையைச் சொல்ல வேண்டும். நிசப்தம் மாணவன் ஒருவன் - ஆந்திராவில் ஒரு பயிற்சிக்குச் சென்றவன் லாக்-டவுனில் அங்கேயே சிக்கிக் கொண்டான். ‘சார் பர்மிஷன் வாங்கித் தர முடியுமா?’ என்று கேட்டான். ஆந்திராவில் யாரைப் பிடிப்பது? நண்பரின் வழியாக அங்கே ஒரு மாவட்ட ஆட்சியரிடம் தொடர்பு கொண்டால் பெரிய பலனில்லை. இந்த சீசஸினில் பர்மிஷன் வாங்கித் தருவதுதான் அரசாங்க உத்தியோகம் வாங்கித் தருவது போன்ற பெரிய சிபாரிசு. அந்த ஆட்சியர் மதிக்கவேயில்லை. ஆனால் அதற்குள் அவனே எப்படியோ அடித்துப் பிடித்து வாங்கிவிட்டான். ஆந்திராவிலிருந்து கல்லூரி இருக்கும் சிதம்பரம் வரைக்கும் அனுமதி கிடைத்திருந்தது. கார் ஒன்றைப் பிடித்து வந்து சேர்ந்துவிட்டான். வந்தவன் சும்மா இருக்கிறானா? நம்மை சோதிப்பதற்கென்றே பேசுவான் போல.
‘சார் சிதம்பரம் வந்துட்டேன்..சிதம்பரத்திலிருந்து ஊருக்கு வரணும் சார்..பர்மிஷன் வாங்கித் தர்றீங்களா?’ என்றான். ‘ஆந்திராதான் கஷ்டம்...தமிழ்நாட்டில் அசால்ட் காட்டிடலாம்’ என்று கெத்தாகச் சொல்லிவிட்டு முக்கி மோதிப் பார்த்தேன் ம்ஹூம்.
கடைசியில் கொரோனா கார்த்தியிடம்தான் கேட்டேன். ‘ஈரோட்டில் தாசில்தார் நமக்குத் தெரிஞ்சவருதான் சொல்லிடலாம்’ என்று சொல்லியிருந்தார். சொல்லிவிட்டு பெங்களூரு சென்றவர் இப்படிச் சிக்கிக் கொண்டார். அதற்குள் அந்த மாணவன் ஊருக்கே வந்துவிட்டான். இவன் எப்படி வந்தான் எனத் தெரிந்து கொள்ளத் தோன்றுமல்லவா? ‘ஏதோ சூட்சமம் இருக்கும் போல’ என நினைத்து ‘எப்படி தம்பி வந்த?’ என்று கேட்டால்-
‘ரொம்ப சிம்பிள் சார்...3000 ரூபா கொடுத்தேன்...வண்டி, வண்டிக்கான பாஸ் எல்லாம் ஏற்பாடு செஞ்சு கொடுத்துட்டாங்க..அதுக்குன்னு ப்ரோக்கர் இருக்காங்க...ஒரு வண்டிக்கு நாலு பேரை ஏத்திட்டு வந்து சேலத்துல இறக்கிவிட்டுட்டு போய்ட்டாங்க...அங்க இருந்து மளிகை ஏத்திட்டு வர்ற லாரியில் வந்துட்டேன்’ என்றான். ஊர் முழுக்கவும் தொடர்பு இருப்பவருக்கு சிக்கலாக இருக்கக் கூடிய ஒரு காரியம் யாரையுமே தெரியாத ஒரு மாணவனுக்கு மிக எளிய விஷயமாக இருக்கிறது.
இன்று காலையில் அழைத்து 'பாஸ் சொல்லியிருக்கேன் சார்...இன்னைக்கு கிடைச்சுடும் சார்’ என்றார் கொரோனா. அவன் ஊர் வந்து சேர்ந்த கதையைச் சொன்ன போதுதான் அவர் பவானியில் சிக்கிக் கொண்ட கதையைச் சொன்னார்.
இரவு முழுக்கவும் எஸ்.ஐயிடம் பேசிக் கொண்டிருந்தவர் காலையில் ஐந்து மணிக்கு விடிந்தும் விடியாமலும் யார் யாரையோ அழைத்துப் பேசியிருக்கிறார். கொரோனாவுக்கே குவாரண்டைனா என்று கார்த்தியைத் தெரிந்தவர்கள் எல்லாம் எரிமலை எப்படி பொறுக்கும் என வெடித்துச் சிதறி பல பக்கமும் ஃபோன் பறக்க, எஸ்.ஐ ‘ஓ நீங்க பெரிய ரவுடியா சார்’ என்று கேட்டு அனுப்பி வைத்திருக்கிறார். ‘இதைத்தானே சார் நான் விடியற வரைக்கும் சொல்லிட்டு இருந்தேன்...தொண்டைத் தண்ணி காய்ஞ்சு போய்டுச்சு...அடுத்தவங்க சொன்னா நம்புவீங்க...நானே சொன்னா நம்ப மாட்டீங்களா’ என்று அப்பாவியாகக் கேட்டிருக்கிறார் கொரோனா.
ஈரோடு மாவட்டத்தில் அவ்வளவு ஸ்ட்ரிக்ட் ஆபிசர்ஸ் போலிருக்கிறது. இது புரியாமல்தான் வேணி ‘அப்பா வீட்டுக்கு போலாம்’ என்று ஒரே அக்கப்போர். குடும்பத்தோடு கார் ஏறிப் போனால் போகும் போது ‘திருப்பூர் போறோம்’ என்று சொல்லித் தப்பிவிடலாம். திரும்ப ஈரோடு மாவட்டத்துக்குள் வரும் போது நான் மட்டும் தனியாகச் சிக்கிக் கொள்வேன். அலேக்காகத் தூக்கி செங்குந்தர் கல்லூரியில் அடைத்துவிட்டால் ப்லாக் எழுத கூட வாய்ப்பிருக்காது. கொரோனா கார்த்திக்கு உள்ளூரில் எதிரிகள் இல்லை. நான் சிக்கியதாகத் தெரிந்தால் ‘அவனை கொரில்லா செல்லில் அடையுங்கள்’ என்று சொல்லக் கூட வாய்ப்பிருக்கிறது. இந்த லட்சணத்தில் மச்சினன் ‘மச்சா...எங்க அக்காவைக் கூட்டிட்டு வந்து விட முடியுமா? முடியாதா’ என்று ஃபோனில் மிரட்டுகிறான். மச்சினன் கொஞ்சம் பல்க்கான ஆள். உரலுக்கு ஒரு பக்கத்தாம்ல இடி; என்னை மாதிரி மத்தளத்துக்கு ரெண்டு பக்கம் பத்தாதுன்னு மண்டை மேல கூட இடிதாம்ல!
3 எதிர் சப்தங்கள்:
கார்த்தி சார் பெயரை நானும் போனில் அப்படித்தான் பதிவு செய்து வைத்துள்ளேன்.... நல்ல அனுபவம்... படிக்கும் போது இடையில் சிரிக்காமல் படிக்க முடியவில்லை.... - ரமாராணி.
// டாப் கியருக்கு மேலாக ஏதாவது கியர் இருந்தால் அதையும் போட்டு பறக்கும் கோபிச்செட்டிபாளையம் மாதிரியான அல்ட்ரா மாடர்ன் ஊர்களுக்கு//
குறுக்க இருந்த கம்பியை வடிவேலு மறந்த மாதிரி கியர் போட்டு பறக்கேன்னு நினைச்சு டாப் ல இருந்ததையெல்லாம் புடுங்கி எறிஞ்சிட்டீங்களே தல.
இந்த செங்குந்தர் கல்லூரி கதையை கொஞ்சம் கேள்விப்பட்டேன் ...
நல்லவேளை... நீங்க விலாவாரியா சொல்லிடீங்க...
சென்னையிலிருந்து சென்னிமலை (ஈரோடு) வர e-pass அப்ளை பண்ணியிருக்கேன்.
wife + 2 பசங்களோட வரணும்.
கொரோனா கார்த்தி அனுபவத்தை படிச்சபிறகு, சென்னையே பரவாயில்லன்னு தோணுது...
ஏதோ வீட்ல மூணு வேளையும் சாப்பிட்டிட்டு, நிம்மதியா இருக்கலாம்.
Post a Comment