May 31, 2020

போகும் பாதை

‘நிசப்தம் சார்பில் அடுத்து என்ன உதவிகளைச் செய்யப் போகிறீர்கள்’ என்று சில நண்பர்கள் விசாரிக்கிறார்கள். பெரும்பாலானவர்கள் நன்கொடை தர விரும்புகிறவர்கள். தனிப்பட்ட முறையில் நன்கொடை அனுப்புகிறவர்கள் கேட்பதில்லை. அவர்கள் எதைப் பற்றியும் யோசிக்காமல் பணத்தை அனுப்பி வைத்துவிடுவார்கள். சிலர் குழுக்களாக, சங்கங்களாகச் செயல்படுகிறவர்கள் பணத்தை அனுப்பும் முன் விவரங்களைக் கேட்பார்கள்.  அந்தக்குழுவில் ஓரிருவருக்குத்தான் நிசப்தம் பற்றித் தெரியும். அவர் ‘நிசப்தம் கணக்குக்கு அனுப்பி வைத்துவிடலாம்’ என்று சொல்லியிருப்பார். ஆனால் மற்றவர்கள் விடுவார்களா? அவர்கள் கேட்கும் வினாக்களுக்கு எழுத்துப் பூர்வமாக பதில் கேட்பார்கள். சில நிறுவனங்களில் பணி புரிகிறவர்கள் பணத்தை வசூல் செய்துவிட்டு யாருக்கு அனுப்புவது என்கிற குழப்பம் நேரும் போது ‘உங்கள் பணிகளைப் பற்றி விவரமாகச் சொல்ல முடியுமா’ என்று கேட்பார்கள். தமிழில் கூட தட்டச்சு செய்துவிடலாம். ஆங்கிலத்தில் என்றால் வெகு நேரம் பிடிக்கும். முன்பு சில முறை இதைச் செய்திருக்கிறேன். 

பொதுக்காரியங்களைச் செய்யும் போது இத்தகைய செயல்களைச் செய்தே தீர வேண்டும். இவற்றை அவசியமில்லாத செயல்கள் என்று சொல்ல மாட்டேன். ஆனால் நம்முடைய செயலைப் பார்த்து, அவர்களாக முடிவுக்கு வந்து நிதியை அனுப்பினால் போதும் என்றுதான் இந்த மாதிரியான சமயங்களில் தோன்றும். நிசப்தம் தளத்தில் எழுதுவது வேறு. தனிப்பட்ட மின்னஞ்சல்களில் ‘இதையெல்லாம் செய்திருக்கிறோம்...இதெல்லாம் செய்யப் போகிறோம்’ என்று எழுத பல சமயங்களிலும் சங்கடமாகவே இருக்கிறது. 

கொரோனா மாதிரியான பேரிடர் காலங்களில் இத்தைகைய இத்தகைய விசாரணைகள் மிக இயல்பானவை. புதியதாக நிறையப் பேருக்கு அறக்கட்டளை குறித்து தெரிய வரும். அப்படி தினசரி குறைந்தபட்சம் ஒருவராவது தொடர்பு கொண்டு கேட்கிறார்கள். அதனால் சற்று விரிவாகவே எழுதிவிடலாம் என நினைக்கிறேன். 

விளிம்புநிலை மக்களோடு ஏதாவதொரு வகையில் தொடர்பில் இருக்கிறேன். ஊரடங்கு காலகட்டத்தின் முதல் பதினைந்து இருபது நாட்களுக்கு எந்தப் பெரிய பிரச்சினையையும் காண முடியவில்லை. மக்களிடம் கையிருப்பு இருந்தது. பொருட்களும் வீட்டில் இருந்தன. சமாளித்துக் கொண்டார்கள். கொடுமையான காலகட்டம் என்றால் இரண்டாம் மற்றும் மூன்றாம்கட்ட ஊரடங்கு காலம்தான். வீட்டில் பொருட்கள் தீர்ந்து, வேலையும் இல்லாமல், பணமும் இல்லாமல் பசிப்பிணியை நேரடியாக அனுபவித்தார்கள். அந்தச் சமயத்தில் முக்கியமான தேவையாக உணவு இருந்தது. அப்பொழுதுதான் மளிகைப் பொருட்கள் வழங்குவது, சமூக சமையற்கூடம் அமைத்து உணவு தயாரிப்பு போன்றவற்றிற்கு தேவைகள் மிக அதிகமாக இருந்தன. அப்பொழுது சுமார் எந்நூறு குடும்பங்களுக்கு மளிகைப் பொருட்களைக் கொடுத்தோம். 


உண்மையிலேயே அது நல்ல தொடக்கமாக அமைந்தது.  மூன்றாம் கட்ட ஊரடங்கின் போது அரசியல் கட்சிகள், தன்னார்வலர்கள் என உதவி செய்தவர்களின் எண்ணிக்கையும் பரவலாக அதிகரித்தது. நாம் உதவிய சில இடங்களில் திரும்பத் திரும்ப மற்றவர்களும் பொருட்களைத் தருகிறார்கள் என்று உணர்ந்த போது இனி சற்று வேகத்தைக் குறைத்துக் கொள்ளலாம் என்று முடிவுக்கு வர வேண்டியதானது. 

நான்காம்கட்ட ஊரடங்கின் போது பெயருக்குத்தான் ஊரடங்கு என்பது அமலில் இருந்தது. ஓரளவுக்கு நிறுவனங்கள் செயல்படத் தொடங்கின. அப்பொழுது மக்களும் வேலைக்குச் செல்லத் தொடங்கினார்கள். கொரோனாவுக்கு முந்தைய காலகட்டத்தைப் போல செழிப்பான வருமானம் இல்லையென்றாலும் பசியைத் தீர்த்துக் கொள்ளுமளவுக்கு வருமானம் கிடைக்கிறது என்ற சூழல் உருவானது.  நாம் எதையும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றுதான் நினைத்தேன். ஆனால் கொரோனா ஊரடங்கு, தொழில் முடக்கம் போன்றவற்றின் விளைவான பொருளாதார ரீதியிலான பாதிப்புகளினால் ‘வயசானவங்களை வேண்டாம்ன்னு சொல்லிட்டாங்க’ என்பது மாதிரியான தகவல்கள் கிடைத்தன. அதாவது முப்பது சதவீதம், ஐம்பது சதவீதம் ஊழியர்களைக் கொண்டும் இயங்கும் நிறுவனங்கள் எல்லோரையும் பணிக்கு அழைக்கத் தயாரில்லை. இருப்பதில் வலு, திறன் கொண்டவர்களை மட்டுமே அழைக்கின்றன. மற்றவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இந்தச் சூழல் எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்று தெரியவில்லை. நிறுவனங்களில் தொடர்புள்ளவர்களைக் கேட்டால் ‘இனி பழையபடி டிமாண்ட், பணப்புழக்கம் வரும் வரைக்கும் ஆட்களுக்கான தேவை குறைவாகவே இருக்கும்’ என்கிறார்கள். இப்படியான இக்கட்டில் பாதிக்கப்படும் குடும்பங்களைக் கண்டறிவதுதான் முக்கியமான- சவாலான பணியாக இருக்கிறது. அத்தகைய குடும்பங்களில் சிலவற்றுக்கு உதவுவதே அடுத்த கட்டப் பணியாக இருக்க முடியும் எனத் தோன்றியது.


இன்று ஒரு கூட்டத்தை நடத்தினோம். நிசப்தம் நண்பர்களும்,  நாம் உதவிய குடியிருப்புகளிலிருந்து 2-3 பேர்களை வரச் செய்து நடத்தப்பட்ட கூட்டம் இது. வழக்கமான நலவிசாரிப்புகளுக்குப் பிறகு அடுத்த செயல்திட்டம் பற்றி விரிவாகப் பேசினோம். இந்தக் குழுவினர் தங்களது குடியிருப்பில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட குடும்பங்களை அடையாளம் காண்பார்கள். அவர்களுக்கான தேவை என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம். விதவைத் தாயார், ஒரே மகள்- அம்மாவுக்கு வேலை இல்லை இனி கல்லூரிக்கட்டணம் கட்ட வேண்டும் என்றால் அதைப் பட்டியலிடச் சொல்லியிருக்கிறோம். ‘எனக்கு ஒரு அயர்ன் பாக்ஸ் கொடுத்தால் தேய்த்து பிழைத்துக் கொள்வேன்’ என்று ஏதேனும் பெண்மணியோ அல்லது முதியவரோ சொன்னால் அதையும் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம். இப்படி பாதிக்கப்பட்ட குடும்பங்கள்- அவர்களின் உடனடித் தேவை என முழுமையான பட்டியலை ஒரு வாரம் அல்லது பத்து நாட்களில் தயாரிக்கத் திட்டமிட்டிருக்கிறோம். இனி வரும் வாரம் முழுக்கவும் தினசரி குடியிருப்புகளுக்குச் சென்று அந்தக் குடும்பங்களைச் சந்தித்து, குழுவினரோடு ஆலோசிக்க வேண்டியிருக்கிறது. 

உணவுப்பொருட்களை வழங்குவதைப் போன்ற எளிதான காரியமில்லை இது. ஒரு குடியிருப்பில் ஐந்து குடும்பங்களைத் தேர்ந்தெடுக்கும் போது ‘ஆமாம்..அவங்க தகுதியானவங்கதான்..அவங்களுக்கு உதவலாம்’ என்று மீதமிருக்கும் அத்தனை குடும்பங்களும் மனப்பூர்வமாகக் கருத வேண்டும். அத்தகைய குடும்பங்களைக் கண்டறியும் போது தேர்ந்தெடுக்கும் குழுவினர் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளைத் தவிர்த்து தேர்ந்தெடுக்க வேண்டும். அதைத்தான் அழுத்தம் திருத்தமாகச் சொல்லியிருக்கிறோம். எனக்கு முழுமையாக நம்பிக்கையிருக்கிறது. அத்தகையவர்களைத்தான் அழைத்திருந்தோம். 

தயாரிக்கப்பட்ட பட்டியலிலிருந்து முன்னுரிமைப்படி வகைப்படுத்தி அதற்கேற்ற நிதியை ஒதுக்கீடு செய்து அந்தக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மீட்பதுதான் அடுத்தகட்ட நடவடிக்கையாக இருக்கும். வெவ்வேறு பொருட்களுக்கு சரியான கிடைக்குமிடங்களைத் தேட வேண்டும். நிறையப் பணிகள் இருக்கின்றன. இப்போதைக்கு ‘என்ன செய்யப் போகிறோம்’ என்பது மட்டுமே தெரிகிறது. யாருக்குச் செய்யப் போகிறோம், எந்தவிதமான உதவி என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. யாருக்குமே தெரியாது. முழுமையான கள ஆய்வுக்குப் பிறகே தெளிவாகத் தெரியும். அதற்கு இன்னமும் சில நாட்கள் தேவைப்படக் கூடும். இதைத்தான் ‘அடுத்து என்ன’ என்று கேட்கிற யாருக்குமே தெரிவிக்க விரும்புகிறேன்.

நிசப்தம் வழக்கம் போலவே சப்தமின்றியே இயங்கும். அறக்கட்டளையின் விவரங்கள், வரவு செலவுக் கணக்கு என அனைத்துமே பொதுவில் இருக்கிறது. ஒளிவு மறைவான திட்டங்கள், வரவு செலவு என்று எதுவுமில்லை. எப்பொழுது வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் சரி பார்த்துக் கொள்ளலாம். சந்தேகங்கள் இருப்பின் கேட்கலாம். எப்பொழுதும் போலவே நிசப்தம் அறக்கட்டளை ‘க்ரவுட் ஃபண்டிங்’முறைதான். இந்த நிதியை இதற்குத்தான் பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை அமல்படுத்துவது சிரமமான காரியம். ஏற்கனவே இருக்கும் தொகையில் நன்கொடையாளர்கள் அளிக்கும் தொகை சேர்ந்து கொள்கிறது. அடுத்தடுத்த பணிகளின் போது பயனாளிகளுக்குத் தேவைக்கு ஏற்ப ஒதுக்கப்படுகிறது. அந்த விவரங்களும் தளத்தில் முழுமையாக இருக்கிறது. எப்பொழுதும் சொல்வது போலவே- எந்தவிதத்திலும் பத்து பைசா கூட வீணாகப் போய்விடாது என்பதை நீங்கள் உறுதியாக நம்பலாம், விரிவாக ஆராய்ந்து பார்த்துக் கொள்ளலாம். 

தொடர்ந்து செயல்படுவோம். நன்றி!

May 28, 2020

இட ஒதுக்கீடு- இடைநிலைச் சாதிகள்

மருத்துவப்படிப்புகளில் இதர-பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கு கிடைக்க வேண்டிய இடங்கள் சுமார் பதினோராயிரம் இடங்கள் அவர்களுக்குக் கிடைக்கவில்லை என்று கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் ஆங்காங்கே விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இன்றைக்கு இது அவசியமான விவாதம். உரிமைகள் கைவிட்டுப் போகும் போதுதான் சிலரேனும் விழிக்கத் தொடங்குகிறார்கள். அப்படி விழிப்பதற்கான வாய்ப்பாகவே இதைக் கருதிக் கொள்ளலாம்.

இது வெறுமனே இதரப் பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கான பாதிப்பு என்று சொல்லாமல் கவுண்டர், வன்னியர், முக்குலத்தோர், யாதவர், நாடார் உள்ளிட்ட இடைநிலைச் சாதிகள் அனைத்துக்குமான பாதிப்பு என்று உடைத்துப் பேசலாம். அப்படி பேச வேண்டிய கட்டாயமும் உருவாகியிருக்கிறது. 

காலங்காலமாக ஒவ்வொரு சாதியையும் சார்ந்த முன்னோர்களும், முன்னோடிகளும் போராடி, பல சமயங்களில் உயிர்த்தியாகமும் செய்து தமக்குப் பின்னால் வரும் சந்ததிகளுக்காகப் பெற்றுத் தந்த உரிமைதான் இட ஒதுக்கீடு என்பது. நீங்கள் எந்தச் சாதிக்காரராக இருந்தாலும் உங்களுடைய சாதியைச் சார்ந்தவர்களுக்காக போராடியவர்களின் பட்டியலை எடுத்துப் பார்த்தால் அந்தப் போராளிகள் முன்வைத்த முக்கியமான கோரிக்கை இடஒதுக்கீடு சார்ந்துதான் இருக்கும். 

இட ஒதுக்கீடு என்று பேச ஆரம்பித்தால் சில கேள்விகளை எதிர்கொள்ள நேரிடும். ‘சாதி வேண்டாம் என்று சொல்லிவிட்டு ஏன் இடஒதுக்கீடு கேட்கிறீர்கள்’ என்பதுதான் மூளைச்சலவை செய்யப்பட்டவர்கள் கேட்கும் முதல் கேள்வி- ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சாதியின் பெயரால் தாறுமாறான ஏற்றத்தாழ்வுகள் உருவாக்கப்பட்டிருக்கும் சமூகத்தில் ஓரளவுக்கேனும் சமநிலையைக் கொண்டு வர வேண்டுமானால் அது இட ஒதுக்கீட்டின் வழியே சாத்தியம் என்பது மிக எளிமையான பதில். அதை அறுபதாண்டுகளில் செயல்படுத்த முடியுமா? எழுபத்தைந்தாண்டுகள் தேவைப்படுமா அல்லது நூறாண்டுகள் கடக்குமா என்பது பதில் தெரியாத கேள்வி. 

அதே போல, இட ஒதுக்கீட்டால் ஆதிதிராவிடரும், அருந்ததியரும் தங்களுடைய உரிமையைப் பறித்துக் கொள்கிறார்கள் என்று இன்னொரு விஷமும் மண்டையில் ஏற்றப்பட்டவர்கள் இருக்கிறார்கள். உண்மையில் இட ஒதுக்கீடு என்பது ஆதிதிராவிடர்களுக்கும் அருந்ததியருக்கும் மட்டும் பலனளிப்பதில்லை. அவர்களைவிடவும் அதிகமாக இடைநிலைச் சாதிகளுக்கும் அவர்தம் சந்ததியினருக்கும் பலனளிப்பது. உங்களுக்கான இடம் உங்களுக்கானவை. அவற்றை ஆதிதிராவிடர்கள் பறிக்கிறார்கள்; அருந்ததியர்கள் பறிக்கிறார்கள் என்று இடைநிலைச் சாதியினரை உசுப்பேற்றிவிட்டு அந்த இடங்களை முன்னேறிய பிரிவினர் பறித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. 

இன்னொரு கருத்தாக்கம்- இட ஒதுக்கீடு என்பது சலுகை; இட ஒதுக்கீடு என்பது பிச்சை என்று சொல்லிச் சொல்லி மூளையைக் கழுவி வைத்திருக்கிறார்கள். சமூக, அரசியல், பொருளாதாரம் ஓரளவுக்கேனும் புரிந்து கொண்டவர்கள் கூட இட ஒதுக்கீட்டை சலுகை என்பதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இன்னமும் எளிதாகச் சொல்ல வேண்டுமானால் இட ஒதுக்கீடு என்பது சலுகை இல்லை. நசுக்கி வைக்கப்பட்டிருந்தவர்களுக்கு சுதந்திர இந்தியா வழங்கும் உரிமை. 


இந்தியாவில் இட ஒதுக்கீட்டை மத்திய அரசு ஒரு வகையிலும் மாநில அரசுகள் வெவ்வேறு வகையிலும் ஒதுக்கியிருக்கின்றன. மத்திய அரசைப் பொறுத்தவரையில் தம்மிடம் உள்ள பணியிடங்களை அல்லது கல்வியிடங்களை நிரப்பும் போது 27% இடங்களை இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓ.பி.சி) ஒதுக்க வேண்டும். 22.5% இடங்களை எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு ஒதுக்க வேண்டும். சமீபத்தில் கொண்டு வரப்பட்டிருக்கும் முன்னேறிய வகுப்பினரில் ஏழைகள் என்று சொல்லி ஒதுக்கப்படும் 10% இட ஒதுக்கீடும் இருக்கிறது. 

அதுவே, தமிழகத்தைப் பொறுத்தவரையில் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு- முக்குலத்தோர், கொங்குவேளாளர், நாயக்கர் உள்ளிட்ட பிரிவினர்- 30% (அதில் 3.5% இசுலாமியர்களுக்கு), மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு (MBC)- வன்னியர், போயர் உள்ளிட்ட பிரிவினர்- 20%, எஸ்.சி பிரிவினருக்கு -18% (அதில் 3% அருந்ததியருக்கு), எஸ்.டி பிரிவினருக்கு-1%  என்பது அமல்படுத்தப்பட்டிருக்கும் சட்டம். 

இட ஒதுக்கீடு சதவீதங்களைப் பார்க்கும் போது இன்னொன்றையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். இட ஒதுக்கீடு என்பது ஒரே நாளில், யாரோ சிலர் அள்ளியெடுத்து ஒரு பிரிவினருக்குக் கொடுத்துவிடவில்லை. அதற்கான கருத்துருவாக்கங்கள், விவாதங்கள் உருவாகி, பல ஆண்டுகளாக, பல்வேறு அறிஞர்கள் ஆலோசித்து அவற்றைச் சட்டமாக்கி- கடந்த அறுபதாண்டுகாலமாக பல்வேறு மாறுதல்களுக்குட்பட்டு இன்றைய வடிவத்தை அடைந்திருக்கிறது. 

ஒவ்வோர் இடைநிலைச் சாதியைச் சார்ந்த முன்னோர்களும் போராடிப் பெற்ற உரிமையை, சுதந்திர இந்தியா அளித்திருக்கும் உரிமையை போகிற போக்கில் இழந்து கொண்டிருக்கிறோம் என்பதை இன்றைய தலைமுறை புரிந்து கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம். மனித மனத்தின் மேல் அடுக்கில் இருக்கும் உணர்ச்சிகள் தூண்டப்பட்டு, கவனம் திசை மாற்றப்பட்டு உரிமைகளை பறி கொடுத்துக் கொண்டிருக்கிறோம். அதை மனதில் நிறுத்திக் கொள்ளுங்கள்.

இடைநிலைச் சாதிகள் இழந்திருக்கும் பதினோராயிரம் சீட் விவகாரத்திலேயே இதைப் புரிந்து கொள்ள முடியும்- நீட் தேர்வு அமலுக்கு வந்த பிறகு ஒவ்வொரு மாநிலமும் தம் மாநிலத்தில் உள்ள மருத்துவப்படிப்புகளுக்கான இடங்களில் 15% இடங்களை மத்திய அரசிடம் கொடுத்துவிட வேண்டும். அதாவது தமிழகத்தில் மொத்தம் 100 இடங்கள் இருக்கின்றன என்றால் அதில் 85 இடங்களை தமிழகமே நிரப்பிக் கொள்ளும் மீதமிருக்கும் 15 இடங்களை மத்திய அரசிடம் ஒப்படைத்துவிட வேண்டும். இந்த பதினைந்து இடங்களுக்கு ‘All India Quota' என்று பெயர். 

All India Quota அடிப்படையில் கடந்த நான்காண்டுகளில் மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் சார்ந்த கல்லூரிகளிலிருந்து மத்திய அரசு எடுத்துக் கொண்ட இடங்களின் எண்ணிக்கை மட்டும் 40842.  இந்த இடங்களை மத்திய அரசே நிரப்பும். அது தவறில்லை. ஆனால் அப்படி நிரப்பும் போது  இட ஒதுக்கீட்டின்படி 27% இடங்களை இதரப் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு ஒதுக்கியிருக்க வேண்டும். அந்தக் கணக்கின்படி- 40842 இடங்களில் 11027 இடங்கள் OBC பிரிவினருக்கு உரியவை- அதாவது இடைநிலைச் சாதிகளுக்கு. ஆனால் இந்த 11,000 இடங்களையும் பொதுப்பிரிவுக்கு ஒதுக்கிவிட்டார்கள். இங்கு நாம் நுணுக்கமாக கவனிக்க வேண்டியது - பொதுப்பிரிவினரில் (OC) ஏழைகள் என்று சொல்லி வழங்கப்பட்டிருக்கும் 10% இட ஒதுக்கீடு அப்படியே வழங்கப்பட்டிருக்கிறது.  

கடந்த நான்காண்டுகளில் இதரப் பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கு வழங்கப்பட வேண்டிய இட ஒதுக்கீட்டை வழங்கவே இல்லை என்பது அவர்களுக்கான உரிமையை மறுப்பதுதானே? அல்லது உங்களுக்கு உரிய தட்டில் இருப்பதை வலுவுள்ள இன்னொருவன் தட்டில் போட்டுவிட்டு ‘அதிலிருந்து நீயும் எடுத்துக்கலாம்’ என்று சொல்வது எந்தவிதத்தில் நியாயம் ஆகும்? அவனுக்கு வசதி இருக்கிறது. நகர்ப்புறத்தில் வசிக்கிறான். தனியார் பயிற்சி மையங்களில் லட்சக்கணக்கில் கட்டி அவனால் படிக்க முடியும். பாப்பிரெட்டிப்பட்டியில் உள்ள ரங்கசாமி படையாட்சியின் மகனுக்கும், கிணத்துக்கடவில் உள்ள கருப்பண கவுண்டரின் மகளுக்கும், நாங்குநேரியில் உள்ள சுடலை நாடார் மகனுக்கும், கம்பத்தில் உள்ள மூக்கையத் தேவரின் மகளுக்கும் இதெல்லாம் சாத்தியமா? நகர்ப்புறத்தில், தனியார் பயிற்சி மையங்களில் படித்தவனோடு போட்டியிடுவது என்பது எப்படி இயலும்? பொதுவான தட்டுகளில் இடப்பட்ட இடங்களை முன்னேறிய வகுப்பினர் மட்டுமே எடுத்துக் கொள்வார்கள். அதுதான் நடக்கும். அதுதான் சாத்தியமும். 

டிக்டாக்கில் நாம் மீசை முறுக்கி முஷ்டியை மடக்கினால் லைக் வரலாம், கைதட்டு கேட்கலாம் ஆனால் நமக்குப் பின்னால் வரும் சந்ததிக்கு நாம் மிகப்பெரிய குழியைப் பறிக்கிறோம் என்று நினைத்துக் கொள்ளுங்கள். உசுப்பேற்றுவது கூட ஒருவகையிலான குழிபறிப்புதான். இன்றைக்கு மறுப்புக் குரலையும், கண்டனக்குரலையும் எழுப்பவில்லையென்றால் - இடைநிலைச்சாதிகள் எல்லாவற்றிலும் உரிமையை இழக்க நேரிடும். மதத்தின் பெயரால் ஒன்று திரள அழைப்பு விடுக்கிறவர்கள் சாதியின் பெயரால் முதுகில் கத்தியைச் செருகுவார்கள். அதைத்தான் இந்த மருத்துவப்படிப்புகளுக்கான விவகாரத்தில் பார்க்கிறோம். 

May 26, 2020

தலை போகிற காரியமா?

தமிழகத்தில் மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்று நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் பத்தாம் வகுப்புத் தேர்வினை நடத்துவது குறித்தும் விவாதிக்கப் போகிறார்கள் என்று செய்தி பார்த்த போது அதிர்ச்சியாக இருக்கிறது. பத்தாம் வகுப்புத் தேர்வு அவ்வளவு முக்கியமான தேர்வா என்ன? ஆட்சியாளர்கள் பேசுவதற்கு முக்கியமான பல விவகாரங்கள் இருக்கின்றன. 

மக்கள் பஞ்சத்தில் அடிப்பட்டுக் கிடக்கிறார்கள்; தொழிற்துறை பெருமளவு முடங்கிவிட்டது; பலருக்கும் வேலை இழப்புகள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது; இன்று வரை நோய்ப்பரவல் குறைந்தபாடில்லை; மரண எண்ணிக்கையும் அதிகமாவதாகத் தெரிகிறது. இத்தனை பிரச்சினைகளை வைத்துக் கொண்டு பத்தாம் வகுப்புத் தேர்வுகளை நடத்துவதற்கான அழுத்தம் எங்கேயிருந்து வருகிறது? அப்படி என்ன தலை போகிற காரியம் அது? சிவில் சர்வீஸ் தேர்வுகளைக் கூட தள்ளி வைத்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் மட்டும் ஏன் பத்தாம் வகுப்புத் தேர்வுக்கு இந்தக் குதி குதிக்கிறார்கள்? இன்றைக்கு அமைச்சர்களாக இருப்பவர்களில் பத்தாம் வகுப்பு தேர்ச்சியடைந்தவர்கள் எத்தனை பேர்? கல்வியமைச்சர் என்ன படித்திருக்கிறார்?

ஜூலையில் தேர்வு என்று சொல்லிவிட்டு, ஜுனிலேயே தேர்வு நடத்தப்படும் என்று மாற்றி அறிவித்து, அதையும் தள்ளி வைப்பதாகச் சொல்லி, மீண்டும் தேர்வு நடத்த ஆலோசனை என்று எத்தனை அறிவிப்புகள்? எத்தனை குளறுபடிகள்? இன்னமும் பத்து அல்லது பதினைந்து நாட்களில் பொதுத்தேர்வு என்று அறிவிக்கும் ஒவ்வொரு முறையும் ஒரு மாணவன் என்னவிதமான மன அழுத்தத்திற்கு ஆளாவான் என்று அமைச்சருக்குத் தெரியுமா? தம் வாழ்க்கையில் ஏதேனும் பொதுத் தேர்வு எழுதியிருந்தால் தெரியும். குறைந்தபட்சம் அதிகாரிகளிடமாவது கேட்கலாம். அப்படியும் கேட்பதில்லை போலிருக்கிறது.

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பதினைந்து வயது கூட பூர்த்தி ஆகியிருக்காது. பதினான்கு வயதுக் குழந்தைகளை ஏன் இவ்வளவு சித்ரவதை செய்கிறார்கள்? ஊரடங்கு காலத்தில் இவ்வளவு மன உளைச்சல்களை அந்தப் பிஞ்சுகளுக்குத் தர வேண்டிய அவசியம் என்ன? இதன் பின்னால் இருக்கும் அரசியல் என்ன? தனியார் பள்ளிகள் ஏதேனும் அழுத்தம் கொடுக்கின்றனவா? விரைவிலேயே சேர்க்கையை நடத்தி பணத்தை வசூல் செய்து கஜானாவை நிரப்ப வேண்டும் என்கிற பதற்றமா? வேறு ஏதேனும் விவகாரமா?  மாணவர்களை நசுக்க நசுக்க- அவர்களைப் பார்த்து இப்படியெல்லாம் கேட்க வேண்டியிருக்கிறது. 

பத்தாம் வகுப்புத் தேர்வு நடைபெறாவிட்டால் தமிழகத்தின் மொத்தக் கல்வித்தரமும் குழியில் விழுந்துவிடுமா என்ன? தனியார் பயிற்சி மையங்களுக்குத் தீனி போடுவதில் தொடங்கி தனியார் பள்ளிகளுக்கு ரத்தினக் கம்பளம் விரிப்பது, அரசுப்பள்ளிகளைக் குறைப்பது, நூலகங்களாக மாற்றுகிறோம் என்று விதவிதமான ஜிகினா அறிவிப்புகளாலும், வஞ்சகமான திட்டங்களினாலும் தமிழகத்தின் கல்வித்தரத்தை தூக்கி நிறுத்துவதைப் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்.

ஆயிரத்தெட்டு பிரச்சினைகளை வைத்துக் கொண்டு- தமிழகம் இப்போதைக்கு இயல்பு நிலைக்குத் திரும்ப சாத்தியம் மிகக் குறைவு என்கிற சூழலில் திரும்பத் திரும்ப ‘பத்தாம் வகுப்புத் தேர்வுகள்’ என்று துள்ளுவதன் பின்னால் ஏதோ உள் அரசியல் இருக்கிறது என உறுதியாக நம்ப வேண்டியிருக்கிறது.  அரசியல் இருந்துவிட்டுப் போகட்டும். அதைப் பற்றி பேசாமல் விட்டுத் தொலையலாம். தேர்வுகளை நடத்துவதிலேயே எவ்வளவு நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்றன?

எங்கள் ஊரில் இருக்கும் பள்ளியில் கொல்லிமலையைச் சார்ந்த மாணவன் ஒருவன் பத்தாம் வகுப்பு படிக்கிறான். அவனுக்கு கடுமையான உடல்நலக் குறைபாடு உண்டு. நாமக்கல் கொல்லிமலையிலிருந்து கோபிச்செட்டிபாளையம் வந்து விடுதியில் தங்கி பத்தாம் வகுப்புத் தேர்வு எழுத வேண்டும். அவன் அங்கேயிருந்து வருவதே மிகப்பெரிய அச்சம். வந்து இங்கே பிற மாணவர்களுடன் தங்கி- அவனுக்கு ஏதேனும் பாதிப்பு என்றால் யார் பொறுப்பு? இந்த மாணவனையும் விட்டுவிடலாம். அவன் விதி. 

இன்றைக்கு தமிழகம் முழுவதும் எத்தனை பத்தாம் வகுப்பு மாணவர்கள் விடுதியில் தங்கிப் படிக்கிறார்கள் என்கிற தகவல் அரசாங்கத்திடம் இருக்குமல்லவா? அந்தத் தகவலை புரட்டியாவது பார்த்தார்களா? குறைந்தது ஒரு லட்சம் பேர்களாவது இருக்கமாட்டார்களா? அவர்கள் விடுதிக்கு வந்துதானே தேர்வு எழுத வேண்டும்? அந்த மாணவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படாது என்பதில் என்ன உத்தரவாதம் இருக்கிறது? அப்படி தொற்று ஏற்பட்டால் அந்தக் குழந்தைகளுக்கும் அவர்தம் பெற்றோருக்கும் யார் ஆறுதல் சொல்வார்கள்?

சரி, விடுதியில் இருக்கும் மாணவர்களையும் விட்டுவிடலாம்.  ‘பக்கத்தில் பள்ளிக்கூடமே இல்லையா? உன்னை யார் விடுதியில் தங்கச் சொன்னது’ என்று கேட்டாலும் கேட்பார்கள். தேர்வுக்கு வரும் மாணவர்களை எடுத்துக் கொள்ளலாம். தேர்வு அறைகளில் எல்லாவிதமான தனிமனித விலகலையும் நூறு சதவீதம் பின்பற்றிவிடுவார்களா? தேர்வு எழுதுகிற அழுத்தத்தில் வருகிற மாணவனிடம் ‘இதைத் தொடாதே, அதைத் தொடாதே’ என்று மேலும் மேலும் ஏன் அழுத்தத்தை உருவாக்க வேண்டும்?

இந்த அறுபது நாட்கள் சிறைவாழ்க்கையில் பெரியவர்களே மன அழுத்தத்தில் வெந்து தணிகிறார்கள். மன உளைச்சலில் கடும் கோபத்தை அடுத்தவர்களிடம் காட்டுகிறார்கள். இதில் குழந்தைகள் கடந்த அறுபது நாட்களாக என்னவிதமான அழுத்தங்களை எதிர்கொண்டிருப்பார்கள் என்று அரசு யோசிக்க வேண்டியதில்லையா?

அறுபது நாட்களாக பாடங்களை மறந்துவிட்ட மாணவர்களை அழைத்து வந்து, மேலோட்டமாகக் கூட திருப்புதல் செய்யாமல் தேர்வினை நடத்தினால் கடுமையாகத் திணறுவார்கள். குறிப்பாக கிராமப்புற மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

கல்கி இதழில் என்னுடைய கவிதை ஒன்று பிரசுரமாகியிருக்கிறது. அதற்காக அந்த இதழை அனுப்பி வைத்திருந்தார்கள். பக்கத்திலேயே கே.ஏ.பத்மஜா என்னும் அம்மையார் ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அந்தக் கடிதத்தை வாசியுங்கள். அவர் முன்வைக்கும் வாதம் மிகச் சரியானது. 


தேர்வு எழுதாமலேயே அனைவருக்கும் தேர்ச்சி என்று சான்றிதழ் கொடுத்தால் என்ன குறைந்துவிடும்?  ‘அய்யோ பதினோராம் வகுப்புக்கு எப்படி சேர்க்கை நடத்துவது’ என்று கேட்பார்கள். அந்தந்த பள்ளிகளே நுழைவுத் தேர்வையோ அல்லது வாய்மொழித் தேர்வையோ நடத்தட்டும். தேர்வு கூட அவசியமில்லை- நேர்காணல் நடத்தலாம். ‘கல்லூரிக்குச் செல்லும் என்ன படிக்க விரும்புகிறாய்?’ ‘ஏன் அதைப் படிக்க விரும்புகிறாய்’ என்று ஆசிரியர் குழு கேள்விகளைக் கேட்டு அந்த மாணவனின் ஆர்வத்துக்கு ஏற்ப ‘நீ இந்த க்ரூப் படிக்கலாம்’ என்று ஆலோசனையைச் சொல்வதற்கான வாய்ப்பாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம். இன்றைக்கு 99% மாணவர்கள் - நம் மதிப்பெண்ணுக்கு இந்த க்ரூப்தான் கிடைக்கும் என்றுதான் சேர்கிறார்களே தவிர, பிற்காலத்தில் என்ன படிக்க விரும்புகிறோம் அதற்கான குரூப் எது என்றெல்லாம் சேர்வதில்லை.

அம்மையாரின் வாதத்தை முழுமையாக ஆதரிக்கலாம். 

சூழல் இயல்பாக இருக்கும் போது தேர்வு நடத்தினால் யாரும் எதுவும் சொல்லப் போவதில்லை. சூழலின் காரணமாக பல்வேறு மன அழுத்தங்கள் உருவாகியிருக்கும் தருணத்தில் மேலும் அழுத்தம் தரும்படியாக பத்தாம் வகுப்புத் தேர்வை ஏன் நடத்துகிறீர்கள் என்பதுதான் கேள்வியே. தேர்வையே ரத்து செய்துவிடலாம். தேர்வு நடத்த ஆகும் மொத்தச் செலவையும் முதலமைச்சர் நிவாரண நிதிக்குத் திருப்பி கொரோனா ஒழிப்புக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். 

அதெல்லாம் முடியாது; தேர்வு நடத்தியே தீருவோம் என்று ஒற்றைக் காலில் நின்றால் பொறுத்திருங்கள் என்றுதான் சொல்ல வேண்டும். ஊரடங்கு முழுமையாக விலக்கப்பட்டு, ஒன்றிரண்டு மாதங்களில் இயல்பு வாழ்க்கை திரும்பும் வரைக்கும் காத்திருக்க வேண்டும். நெரிசல் மிகும் காலங்களில் நோய்ப்பரவல் எப்படி இருக்கிறது என்பதைக் கணித்துவிட்டு பிறகு அதற்கு ஏற்றபடி அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பதைத் திட்டமிட்டுவிட்டு பிறகு தேர்வை நடத்துங்கள். ஆகஸ்ட்-செப்டெம்பர் வரைக்கும் அப்படியொரு சூழல் உருவாகும் வாய்ப்பில்லை. அதற்கு முன்பாக அவசரமெனில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்துவிட்டு அனைவருக்கும் தேர்ச்சிச் சான்றிதழை வழங்குங்கள்.

May 25, 2020

மரங்கள்- எப்படி இருக்கின்றன?

அடர்வனம் எப்படி இருக்கிறது? என்று சில நண்பர்கள் கேட்டார்கள். சில மின்னஞ்சல்கள் வந்திருக்கின்றன. ஊரடங்கு காலத்தில் நிறைய நேரம் கிடைக்கிறது போலிருக்கிறது- புத்தகங்கள் குறித்து, பழைய பதிவுகள் குறித்தெல்லாம் மின்னஞ்சல்களை அனுப்புகிறார்கள். எதைச் சொல்கிறார்கள் என்று குழப்பத்தில் பழைய பதிவுகளைத் தேடிப் பார்க்க வேண்டியிருக்கிறது. அதுவும் ஒரு வகையில் சந்தோஷம்தான். அப்படித்தான் அடர்வனம் குறித்தான நினைவுகள் பலருக்கும் வந்திருக்கக் கூடும்.

செடிகளை நட்ட போது சென்னையில் இருந்தெல்லாம் வந்திருந்தார்களே! ஊரடங்கு காலத்திற்கு முன்பு வரையிலும் பலர் தாங்களாகவே வந்து பார்த்துவிட்டுச் சென்று நிழற்படம் அனுப்புவதுண்டு. இரண்டாயிரத்துக்கும் அதிகமான மரங்கள்- அனைத்துமே நாட்டுவகை மரங்களை நட்டு வைத்திருக்கிறோம். ஆழ்குழாய் வசதி, மோட்டார், நீர் பாய்ச்ச குழாய்கள் என அனைத்து வசதிகளும் உண்டு. முதல் மூன்று மாதங்களுக்குப் பிறகு எதற்கும் பெரிய அவசியமிருக்கவில்லை. தொடக்கத்தில்தான் சில இடர்பாடுகள் இருந்தன. உள்ளூர் நண்பர்களே எல்லாவற்றையும் சமாளித்துவிட்டார்கள். 

மூன்று மாதங்கள் வரைக்கும் வெக்கையென்றால் அதன் பிறகு அதிகப்படியான நீர் பிரச்சினை ஆனது. உதாரணத்துக்குச் சொல்ல வேண்டுமானால், நாம் வெம்மையைத் தாங்கி வளரக் கூடிய மரங்களாகத் தேர்ந்தெடுத்திருந்தோம். இரண்டு வருடங்களாக நிலவிய கடுமையான கோடையை மனதிற்கொண்டு அப்படியொரு முடிவுக்கு வந்திருந்தது வினையாகிப் போனது. செடிகளை நட்டு வைத்த மூன்றாம் மாதத்தில் மழை பெய்து அருகாமைக் குளம் நீர் நிரம்பி அளவுக்கதிகமான நீர் வனத்துக்குள்ளும் புகுந்துவிட்டது. தண்ணீரே தேவையில்லாத செடிகளுக்கு எந்நேரமும் நீர் நிறைந்திருந்தால் என்ன ஆகும்? அப்படித்தான் சில செடிகள் அழுகிப் போய்விட்டன. அழுகிய செடிகளின் எண்ணிக்கை நூற்றைம்பது இருக்கக் கூடும். 

எல்லாமே அனுபவம்தான். எல்லாமே படிப்பினைதான். அதன் பிறகு பெரிய சிரமங்கள் எதுவுமில்லை. இப்பொழுது பெரும்பாலான மரங்கள் தப்பிவிட்டன. இனி மனிதர்கள் வனத்துக்குள் நுழைய வாய்ப்பில்லை. சிரமப்பட்டுச் செல்லலாம். ஆனால் பாம்பு, மயில் உட்பட விலங்குகளும் பறவைகளும் அதிகமாகியிருக்கின்றன. அதனால் யாரும் நுழைவதில்லை. இன்னமும் ஒன்றிரண்டு வருடங்களில் முழுமையான வனமாகிவிடக் கூடும். அடர்வனத்தின் நோக்கமே அதுதானே- மனிதர்கள் உள்நுழையாமல், பறவைகள், பூச்சிகளுக்கான வாழிடங்களை உருவாக்குவதும்தான். இனி மரங்கள் பூத்து காய்த்து விதைகள் பரவினால் அழிந்து போன நாட்டு மரங்களை இந்தப் பகுதியில் ஓரளவு மீட்டெடுக்க இந்தச் சிறுமுயற்சி உதவியாக இருக்கக் கூடும். 

மியவாக்கி முறையில் நடப்படும் இத்தகைய அடர்வனங்கள் தமிழகம் முழுவதும் பரவலாக அமைக்கப்படக் கூடும் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் சற்றே செலவு பிடிக்கக் கூடிய செயல் இது. வனம் அமைக்கப்படும் இடத்தில் நீர் வசதி இல்லாவிட்டால் இன்னமும் கூடுதலான செலவு பிடிக்கும். அதனாலேயே என்னவோ மிகக் குறைவாக- ஆங்காங்கே சிலர் செய்திருக்கிறார்களே தவிர பெரிய அளவில் எதுவும் நடைபெறவில்லை. எப்பொழுது வெயிலில் இருக்கிறோமோ அப்பொழுதுதான் நிழல் பற்றி நினைப்போம் என்பது போல எப்பொழுது வறட்சி தாண்டவமாடுகிறதோ அப்பொழுதுதான் மரம் நடுதல் பற்றி நினைப்போம். தமிழகத்தில் மூன்றாண்டுகளுக்கு முன்பு நிலவிய வறட்சி இல்லாததும் ஒரு காரணமாக இருக்கக் கூடும். ஆங்காங்கே மரம் வைக்கிறார்கள். அவர்களும் கூட ‘மரம் வெச்சு பசுமையைக் கொண்டு வந்தே தீருவோம்’ என்று வேகத்தில் செய்வதாகத் தெரிவதில்லை.

ஆனால் அடர்வனம் ஓர் அடையாளமாகியிருக்கிறது. எவ்வளவு பேரின் உழைப்பு? அர்ப்பணிப்புடன் கூடிய உள்ளூர்வாசிகள், ஆனந்த், தொரவலூர் சம்பத் தொடங்கி செடிகளை வாங்கித் தர வாகனம் எடுத்துக் கொண்டு மரக்காணம் வரை கூடவே வந்த ஜெயராஜ் மிகப்பெரிய பட்டியல் அது- நினைத்துப் பார்க்கவே மலைப்பாக இருக்கிறது. பயணத்தில் விதைகளை விதைப்பது போல விதைத்தது இன்று வனமாகியிருக்கிறது. அனைவரின் பார்வைக்கும்...மிக்க மகிழ்வுடன்!

நிழற்படங்கள்: விக்னேஸ்வரன், கார்த்திக்

May 21, 2020

இப்பொழுது வரை....

கோவை-திருப்பூரிலிருந்து புலம்பெயர் தொழிலாளர்கள் யாரும் நடந்தோ அல்லது மிதிவண்டியிலோ சொந்த ஊர்களுக்குச் செல்வதில்லை என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். முன்பு போல பல இடங்களுக்கும் சுற்றினால் எப்படியும் கண்ணில்பட்டுவிடுவார்கள். வீட்டிலேயே அடங்கிக் கிடப்பதால் உள்ளூரில் நடப்பதே கூட யாராவது அலைபேசியில் அழைத்துச் சொன்னால்தான் தெரிகிறது.

கோவை-திருப்பூர் நண்பர்களிடம் விசாரிப்பதுண்டு. ஆரம்பத்தில் பெரிய பிரச்சினை இல்லை என்றார்கள். ஊரடங்குக்குப் பிறகு தமக்கு வேலை செய்ய ஆட்கள் தேவை என்கிற காரணத்திற்காகவாவது பெரும்பாலான முதலாளிகள் தம் தொழிலாளர்களுக்கு உணவு உள்ளிட்ட வசதிகளைச் செய்து கொடுத்து தங்க வைத்திருந்தார்கள். இரண்டாம் கட்டம், மூன்றாம் கட்டம் என்று நீடிக்கத் தொடங்கிய போது சில முதலாளிகளால் உதவ இயலவில்லை- உதாரணமாக சிறு அளவில் கட்டிடங்கள் கட்டித் தரும் பொறியாளர்கள். தம்மிடம் பணியாற்றும் தொழிலாளர்களுக்காக தினசரி ஆயிரம் அல்லது இரண்டாயிரம் ரூபாய் என்பது வருமானமில்லாத காலத்தில் அவர்களைத் திணறச் செய்தது. சிறு பட்டறை நடத்துகிறவர்கள்,சிறு உணவு விடுதிகள் நடத்துகிறவர்களுக்கும் அதே நிலைமைதான். அவர்கள் திணறுவதும், இவர்கள் உணவுக்கு வேறு வாய்ப்புகளைத் தேடுவதுமாக முதலாளிகளுக்கும்-தொழிலாளர்களுக்குமான பிணைப்பு மெல்ல அறுபடத் தொடங்கியது. 

மேலும் மேலும்  லாக்-டவுன் தொடர்ச்சியாக நீட்டிக்கப்பட்டுக் கொண்டேயிருக்க தொழிலாளர்களும் பயப்படத் தொடங்கினார்கள். தொழிலாளர்களையும் விட சொந்த ஊர்களில் இருக்கும் அவர்தம் குடும்பங்கள்தான் அதிகமாக பயந்திருப்பார்கள். நீங்களோ நானோ வெளிநாட்டில் இருக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். தினசரி இந்தியாவில் அதிகரிக்கும் நோயாளிகளின் எண்ணிக்கையைப் பார்த்து எப்படி நினைப்போம்? ஒரு லட்சம் நோயாளிகள் என்னும் போது நாடு முடிந்தது என்றுதான் வெளியில் இருக்கும் பலருக்கும் தோன்றும். நாம் இங்கே எப்படி இதை எதிர்கொள்கிறோம், தொற்றாளர்களின் எண்ணிக்கையை எப்படி பார்க்கிறோம் என்பது வேறு- வெளியிலிருந்து இதைப் பார்க்கும் போது தோன்றுவது வேறு. கிட்டத்தட்ட அதே மனநிலைதான் இங்கே பணிபுரியும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கும். அவர்கள் பீகாரிலும், உத்தரப்பிரதேசத்திலும் இருந்து தமிழகத்தைப் பார்க்கும் போது இந்தியாவிலேயே தமிழகம் இரண்டாமிடம் அல்லது மூன்றாமிடம் என்று செய்தி ஒளிபரப்பானால் பீதி கிளம்பியிருக்கும். போதாக்குறைக்கு வாட்ஸாப்பில் மிரட்டித் தள்ளிவிடுகிறார்கள். இதெல்லாம் சேர்ந்து பிற மாநிலங்களில் வாழு தொழிலாளர்களை சொந்த ஊருக்கு வரச் சொல்லி அழுத்தம் கொடுக்கவும் கிளம்புவதற்கான முஸ்தீபுகளை மேற்கொண்டார்கள். 

நான்கு பேர் இருக்கும் இடத்தில் இரண்டு பேர்கள் கிளம்பினால் மற்ற இருவரும் கிளம்பிவிடவே நினைப்பார்கள். வருமானம் இல்லை, உணவுக்கும் பிரச்சினை வரக் கூடும் என்று தெரிகிறது, நோய் பற்றிய தகவல்கள், வாட்ஸப் வதந்திகள், குடும்பத்தினர் கொடுக்கும் அழுத்தம், Idle மனம் உருவாக்கிக் கொள்ளும் பயம் என எல்லாமுமாகக் கலந்து  சாரிசாரியாக கிளம்புவதற்கான மனநிலை உருவாகிவிட்டது. எப்பொழுது  போக்குவரத்து தொடங்கும், ரயில்களில் இடம் கிடைக்கும் என்றெல்லாம் புரிபடாத சூழலில் பயந்திருந்தவர்கள் எப்படியாவது இங்கேயிருந்து தப்பித்துவிடலாம் என்கிற மனநிலைக்கு வந்துவிட்டார்கள். மிக இயல்பான மனித மனநிலை அப்படியானதுதான். செத்தாலும் பரவாயில்லை- நம் ஊரில், நம் சொந்தங்களோடு இருந்து செத்துவிட வேண்டும் என்றுதான் எந்த மனிதனும் நினைப்பான். அப்படித்தான் இந்த ஒவ்வொரு மனிதனும் நினைக்கக் கூடும். 

மூன்றாம் ஊரடங்கின் மத்தியில் அல்லது நான்காம் ஊரடங்கின் போது ஊருக்குச் செல்ல விரும்புவதாக தங்களுடைய முதலாளிகளை நச்சரிக்கத் தொடங்கிவிட்டார்கள். சில இடங்களில் பிரச்சினையும் செய்திருக்கிறார்கள். இனி இவர்களை கட்டுப்படுத்தி வைத்திருக்க முடியாது என்கிற மனநிலைக்கு பெரும்பாலானவர்கள் வந்துவிட்டார்கள். எங்கள் உறவுக்காரர் ஒருவரிடம் பணியாற்றும் இருபது பேர்கள் ஆளுக்கு எட்டாயிரத்து ஐநூறு ரூபாய்- தங்களுடைய சேமிப்பிலிருந்து கொடுத்து வாகனம் ஒன்றை ஏற்பாடு பீகார் கிளம்பிவிட்டார்கள். தறி குடோன்கள், ஸ்பின்னிங் மில் மாதிரியான நிறுவனங்களில் பணியாற்றுகிறவர்கள் ஓரளவுக்கு சேமிப்பு வைத்திருக்கிறார்கள். அவர்களால் வாகனம் ஏற்பாடு செய்துவிட முடிகிறது. 

தெருக்களில் பொம்மை விற்பவர்கள், ஹோட்டலில் சொற்ப ஊதியத்தில் பணியாற்றுகிறவர்கள் என பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களிடம்- நாம் இவர்களை பெரும்பாலான சமயங்களில் ஏறெடுத்தும் பார்த்திருக்க மாட்டோம்- ஐந்தாயிரம் ரூபாய் கூட முழுமையாக இருக்காது. ஒருவேளை ஐந்தாயிரம் ரூபாய் கைவசம் இருந்தால் பழைய சைக்கிள் ஒன்றை வாங்கி மீதமிருப்பதை வழிச்செலவுக்கு என்று வைத்துக் கொண்டு கிளம்பிவிட்டார்கள். இரண்டாயிரம், மூன்றாயிரம் அல்லது எதுவுமே இல்லாதவர்கள் நடப்பதைத் தவிர வேறு வழியில்லாமல் நடக்கத் தொடங்கியிருக்கிறார்கள். சிலர் முசாபர்பூர் போன்ற ஊர்களில்- கிட்டத்தட்ட நேபாள எல்லையிலிருந்து கூட வந்திருக்கிறார்கள். திருப்பூரிலிருந்து கணக்குப் போட்டால் இரண்டாயிரத்து ஐநூறு கிலோமீட்டர் தொலைவு. தினசரி ஐம்பது கிலோமீட்டர் நடந்தாலும் ஐம்பது நாட்கள் நடக்க வேண்டும். ஐம்பது நாட்களுக்கான உணவு? கோடை உருவாக்கும் நோய்களை சமாளிக்கும் வழி? மாநில எல்லைகளில் தடுத்து நிறுத்தப்பட்டால் அடுத்து? செல்போன் சார்ஜ் போடக் கூட இடம் இருக்காது.  நினைத்துப் பார்க்கவே பகீரென்றிருக்கிறது. கால்கள் பொத்து, உயிர்கள் பிரியாமல் என்ன செய்யும்?

பெருந்துறை அருகே பல புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மிதிவண்டியில் பயணித்துக் கொண்டிருப்பதை நேரில் பார்த்தேன். நடந்து செல்வதற்கு மிதிவண்டியில் செல்வது பரவாயில்லை என்று ஒரு கணம் நினைத்துவிட்டு ‘மனம் எப்படி இறுகிக் கிடக்கிறது’ என்று யோசித்துக் கொண்டேன். இந்தக் காலம் எல்லாவற்றையும் மாற்றிவிடும் போலிருக்கிறது. தன்னார்வலர்களாகச் செயல்பட்டுக் கொண்டிருப்பவர்கள் வாய்ப்பிருந்தால் தேசிய நெடுஞ்சாலையில் தினசரி ஐம்பது அல்லது நூறு பொட்டலங்கள் உணவை வைத்து போகிறவர்களுக்குக் கொடுக்கலாம். தைப்பூசத் திருவிழாவின் போது பழனி மலை வரைக்கும் வரிசையாக மோரும், தயிரும், உணவும் கொடுக்கிறவர்கள்தானே நாம்? இவர்களுக்கும் கொடுத்துவிடுவார்கள்தான். ஆனால் நாம் வெளியில் வந்து பார்க்காததால் ‘எங்கேயோ நடக்கிறார்கள்’ என்று நினைத்துக் கொண்டிருக்கக் கூடும். நம் ஊரிலும் நடக்கிறார்கள்!

உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு இந்த கோடைகாலத்தில், கருந்தார் சாலையில் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் இவ்வளவு சிரமப்பட்டுச் செல்கிறவர்கள், இனி என்னதான் வறுமை என்றாலும், என்னதான் பசி என்றாலும் உடனே திரும்ப வருவதற்கான வாய்ப்பெல்லாம் இப்போதைக்கு இல்லை. அப்படியே வருவதாக இருந்தாலும் வேலைக்காக இன்னொரு மாநிலம் செல்லலாம் என்கிற மனநிலை மாறவும், அவர்களின் குடும்பங்கள் அனுமதிக்கவும் பல மாதங்கள் தேவைப்படலாம். 

ஒரு பூ ஏற மிதித்துவிட்ட சொலவடைதான் நினைவுக்கு வருகிறது. நாமெல்லாம் ஒரு பூ ஏற மிதித்துவிட்டோம் என்று ஒரு நண்பரிடம் சொன்னேன். ‘ஆறு மாசம் முன்னாடி இந்தியாவை இரண்டு மாதங்களுக்கு முழுமையாக முடக்கி வைப்பார்கள்’ என்று யாராவது சொல்லியிருந்தால் ‘பைத்தியகாரன் என்று திட்டியிருக்கமாட்டோமா’ என்றார்.

ஆமாம் என்றேன்.

‘அப்படியான நிலையாமைதான் எல்லோருக்கும். இவர்களில் யாராவது ஒருத்தராவது நடந்தும் சைக்கிளிலும் சொந்த ஊர் திரும்புவோம் என்று எப்பொழுதாவது நினைத்திருப்பார்களா?’ என்றார்.

வாய்ப்பேயில்லை.

அதனால், ‘இப்பொழுது வரைக்கும் ஒரு பூ ஏற மிதித்திருக்கிறோம்’ என்று சொல்வதுதான் சரி’ என்றார்.

ஏனோ ‘இப்பொழுது வரை’ என்கிற அந்த இரண்டு சொற்களும் அவ்வளவு கனமாக இருக்கின்றன.

அயோக்கிய ராஸ்கல் கொரோனா!

நான்காம் ஊரடங்கு அறிவிக்கும் போது ஒரு வகையில் சலித்துப் போய்விட்டது. எத்தனை நாட்களுக்குத்தான் வீட்டிலேயே அடைந்து கிடப்பது? இயங்கிக் கொண்டே இருக்கும் வரைதான் மனம் நன்றாக இருக்கிறது. 

இரண்டொரு நாட்களுக்கு முன்பாக அலுவலகத்துக்குச் சென்று வரலாம் என்று தோன்றியது. ‘இ-பாஸ் விண்ணப்பித்து கிடைத்தால் கிளம்ப்விடலாம்’ என விண்ணப்பித்திருந்தேன்.

வீட்டிலும் சொல்லியிருந்தேன். பெரிய எதிர்ப்பு எதுவுமில்லை. பயப்படுவார்கள் என்று சந்தேகம் இருந்தது. கையைக் கழுவுங்க, மாஸ்க் போடுங்க என்று நான் அறுபது நாட்களாகச் செய்த அலம்பலைப் பார்த்தவர்கள் ‘இவனைப் பார்த்து கொரோனாவே டென்ஷன் ஆகிடும்’ என்று நினைத்து சரியென்றிருர்ப்பார்கள். கொரோனாவும் கடைசியில் சொங்கியாகிவிட்டது. யாருமே அதைப் பார்த்து பயப்படுவதில்லை. காய்ச்சல் இல்லையென்றால் மூன்று நாட்களில் வீட்டுக்கு அனுப்பிவிடலாம் என அரசு அறிவித்திருப்பதாகச் செய்தி வெளியாகியிருந்தது.

மரண விகிதம் குறைவு என்பதாலேயே என்னவோ அல்லது வந்தாலும் உடல் ரீதியாக பெரிய பாதிப்பில்லை என்பதாலேயே ‘வந்தால் பார்த்துக்கலாம்’ என்கிற மனநிலைக்கு பலரும் வந்துவிட்டார்கள். செய்திச் சேனல்களைப் பார்க்காத யாருக்கும் பெரிய அலட்டல் இல்லை. மனிதர்கள் வெளியுலகில் மிக இயல்பாக இயங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து ‘அவ்வளவுதான் கொரோனா பவுசு’ என்கிறார்கள். எந்நேரமும் சேனல்களையே பார்த்துக் கொண்டு வீட்டிலேயே இருப்பவர்கள்தான் கதறுகிறார்கள். 

நேற்று விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டுவிட்டது.  நூடுல்ஸ் பாக்கெட், வெங்காயம், தக்காளி உட்பட அனைத்தையும் கட்டி எடுத்துக் கொண்டு கோபியிலிருந்து கிளம்பி மாமனார் வீட்டில் மற்றவர்களை இறக்கிவிட்டுவிட்டு காரிலேயே தனியாகக் கிளம்பினேன். வழியில் பெரிய கெடுபிடிகள் இல்லை. ஆங்காங்கே நிறுத்தி ‘மாஸ்க் போட்டுக்குங்க’ என்றார்கள். தனியாகச் செல்கிறேன்; காரில் என்னைத் தவிர யாருமில்லை- எதற்கு மாஸ்க் என்று குழப்பமாகவே இருந்தது.

காவலர்களுக்கு வந்த அறிவுறுத்தல்- ‘எல்லோரும் மாஸ்க் போட்டிருக்க வேண்டும்’ என்பதாக இருக்கும். அவர்கள் இம்மி பிசகாமல் பின்பற்றுகிறார்கள். இடையில் ஒரே இடத்தில் நிறுத்தினேன். மன்னா மெஸ் ஜெயராஜை  சந்திப்பதற்காக. தொழில் முடங்கியிருக்கிறதே என்கிற வருத்தம் அவருக்கு. முப்பது நாட்களில் லாக்-டவுனை தளர்த்தியிருந்தால் பிரச்சினை எதுவும் இருந்திருக்காது; தொடர்ந்து ஓடிக் கொண்டிருந்த ஓர் எந்திரத்தின் சங்கிலியை கத்தரித்துவிட்டார்கள் என்றார். திருப்பூர், கோவை என தொழில் நடத்துகிறவர்களின் பெரும்பாலான வருத்தமும் இதுதான். அறுபது நாட்களுக்குப் பிறகும்-டாஸ்மாக் திறக்கப்படும் போது- பிறவற்றின் மீது மட்டும் ஏன் பாராமுகம் காட்டுகிறார்கள் என்பதுதான். 

தொடர்ச்சியான இயக்கத்தின் போதும் பணம் புழங்கிக் கொண்டேயிருக்கும். நான் யாரோ சிலருக்கு ஒரு லட்ச ரூபாய் கொடுக்க வேண்டியிருக்கும். ஆனால் எனக்கு வர வேண்டிய தொகையும் கிட்டத்தட்ட அதே அளவுக்கு இருக்கும். முப்பதாயிரம் ரூபாய் எனக்கு வரும் போது கட்டாயம் கொடுக்க வேண்டிய ஒருவர் அல்லது இருவருக்கு இருபத்தைந்தாயிரத்தைக் கொடுத்துவிட்டு ஐந்தாயிரத்தை நான் வைத்துக் கொள்வேன். இப்படியான சுழற்சியில்தான் கிட்டத்தட்ட தொண்ணூற்றைந்து சதவீத சிறு-குறு-நடுத்தர தொழில்கள் நடந்து கொண்டிருந்தன. அத்தொழில்களின் வழியாக இலட்சக்கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்பும் கிடைத்துக் கொண்டிருந்தது. இப்பொழுது அந்தச் சங்கிலி துண்டிக்கப்பட்டிருக்கிறது. இனி மீண்டும் தொழில்கள் இயங்கத் தொடங்கினாலும் பழையபடிக்கு வர எத்தனை மாதங்கள் தேவைப்படும் என்பதுதான் பெரிய கேள்விக்குறி.

ஜெயராஜ் ‘ஏதாச்சும் சாப்பாடு கொண்டு வரட்டுமா’ என்றார்.

‘அதெல்லாம் வேண்டாங்க....குடும்பம் நடத்துற அளவுக்கு காரிலேயே எல்லாம் இருக்கு....35 லிட்டர் தண்ணீர் கேன் கூட வெச்சிருக்கேன்..’ என்றேன்.

உறங்கி எழுந்துவிட்டு அதிகாலையில் கிளம்பச் சொன்னார். ‘எதையும் தொடுவதில்லை..மன்னிச்சுக்குங்க’ என்றேன்.

சலித்துப் போனவராக ‘அட யூரினாச்சும் போயிட்டு போங்க...’ என்றார்.

‘ஸாரிங்க...நான் திறந்தவெளியில் கழிப்பேனே தவிர அடுத்தவர்கள் பயன்படுத்திய இடத்தை பயன்படுத்த மாட்டேன்’ என்று சொல்லிவிட்டு வந்து சேர்ந்தேன்.

வேளச்சேரியில் குட்டி அறை வைத்திருக்கிறேன். எப்பொழுதாவது வந்தால் தங்குவதற்கான அறை. அதிகபட்சம் ஒரு நாள் கூட இருப்பதில்லை இருந்தாலும் குளிக்க, உறங்க ஓர் அறை வேண்டுமல்லவா? அதற்காக. கடந்த இரண்டு மாத வாடகையை வீட்டு ஓனரின் மனைவியிடம் கொடுத்துவிட்டு வந்து பார்த்தால் ஒரு விளக்கும் எரியவில்லை. ஏதோ கோளாறு. இந்த வெம்மையில் எப்படி உறங்குவது என்பதைவிட மறுநாள் காலையில் இண்டக்ஸன் அடுப்பில் எப்படி நூடுல்ஸ் தயாரிப்பது என்கிற பயம்தான்.  மறுபடி கதவைத்தட்டி ‘ஓனர் இல்லைங்களா’ என்றேன். ‘அவர் ரஷ்யா போயிருக்காரு...அங்கேயே மாட்டிக்கிட்டாரு’ என்றார். ‘நேரங்காலம் தெரியாமல்  அந்த ஆளு எதுக்குப் போனாரு? இப்ப பாருங்க எனக்கு கரண்ட் இல்லை’ என நினைத்துக் கொண்டு அதையும் இதையும் திறந்து பார்த்தால் வியர்த்துவிட்டது. கட்டையில் ப்யூஸ் போயிருந்தது. அப்பாடா! அந்தப் பெருங்கடலைத் தாண்டி வந்து லுங்கிக்கு மாறலாம் என்றால் இன்னொரு பேரிடி. துணிப்பையை மறந்து வந்திருந்தேன்.

நான் மறக்கவில்லை. மாமனார் வீட்டில் இறக்கிவிட்டவுடன் உற்சாகத்தில் என்னுடையதையும் அள்ளி எடுத்துக் கொண்டு போய்விட்டார்கள். கிராதகர்கள்! ராத்திரிக்குக் கூட ஜட்டியோடு உறங்கிவிடலாம். அடுத்த நாள் அலுவலகத்திற்கு என்ன செய்வது? நாளை மறுநாள் என்ன செய்வது? கைகால் நடுங்கத் தொடங்கிவிட்டது. 

ஜெயராஜை அழைத்து ‘இப்படி ஆகிடுச்சுங்க’ என்றேன். 

‘என்னமோ குடும்பமே நடத்துவேன்னு சொன்னீங்க’ என்று நக்கலடிக்கிறார்.

புலி படுத்துவிட்டால் பூனை மேலே ஏறி ஜங்கு ஜங்குன்னு குதிக்கும் கதையாகிவிட்டது. ‘ஒண்ணும் பிரச்சினை இல்லைங்க...போட்டிருக்கிற சட்டையையே அயர்ன் பண்ணக் கொடுங்க’ என்றார். தேய்க்கக் கொண்டு போனால் ஒன்று ஜட்டியோடு செல்ல வேண்டும் அல்லது பேண்ட் சர்ட் அணிந்து சென்று கடைக்காரர் முன்பாக கழற்றிக் கொடுக்க வேண்டும். ‘இரண்டுமே முடியாதே?’ என்றேன்.

ஜீவகரிகாலன் இன்னொரு ஆபத்பாந்தவர். அழைத்துப் பேசினேன். பேசி மட்டும் என்ன செய்ய முடியும்? அவரது சட்டையில் என்னை மாதிரி இரண்டரை ஆள் புகுந்து கொள்ளலாம். ஆனால் அவர் ‘கடை எல்லாம் திறந்திருக்குங்க’ என்றார்.  ‘புதுசு எடுத்துக்கலாம்’ என்றார். அப்பொழுதுதான் உயிர் வந்தது.

வேறு வழியே இல்லை. ஊரிலிருந்து அணிந்து வந்திருந்த சட்டையையே நாளை ஒரு நாள் போட்டுக் கொள்ளலாம் என்று கழற்றி வைத்துவிட்டு ‘நினைத்தமாதிரியே’ கவர்ச்சிகரமாக படுத்து உறங்கிவிட்டேன். அணிந்திருந்த சட்டையையே அலுவலகத்துக்கு அணிந்து சென்றால் வியர்வை வாடை அடிக்குமோ என்று சந்தேகமாக இருந்தது. ஆனால் எப்படியும் எல்லோரும் மாஸ்க் அணிந்திருப்பார்கள். அவர்களது மூச்சுக்காற்று நாற்றம்தான் அவர்களுக்குத் தெரியுமே தவிர நம் சட்டை நாற்றமா தெரியப் போகிறது? எப்படியும் தப்பித்துக் கொள்ளலாம் என்கிற நம்பிக்கைதான்.

காலையில் எழுந்து நூடுல்ஸ் செய்து மூன்று முறை சோப் தேய்த்துக் குளித்துவிட்டு அந்தச் சட்டையும் பேண்ட்டையுமே அணிந்து வந்து பார்த்தால் வேளச்சேரி முழுக்க ஒரு துணிக்கடை இல்லை. ஊராய்யா இது?

ஜெயராஜ்  ‘வண்டி எடுத்துட்டு இங்க வாங்க கடை இருக்கு’ என்றார். அங்கே சென்றால் நக்கலடிப்பார். வேண்டாம். கரிகாலன் வேறு கடை இருக்கிறதா என்று தேடிச் சொல்வதாகச் சொல்லியிருக்கிறார். நான் இன்னொரு ஏரியாவில் சுற்றலாம் என்றிருக்கிறேன். பன்னாடை கொரோனாவுக்கு பயந்து நூடுல்ஸ் உட்பட எல்லாம் எடுத்து வந்திருந்தால் அது நம்மை ஷாப்பிங் செய்ய வைக்கிறது! அயோக்கிய ராஸ்கல் கொரோனா!

May 10, 2020

கொரோனா கார்த்திகேயன்

கொரோனா என்ற பெயர் உங்களுக்கெல்லாம் சமீபத்தில்தான் அறிமுகமாகியிருக்கும். எப்பொழுதுமே டாப் கியருக்கு மேலாக ஏதாவது கியர் இருந்தால் அதையும் போட்டு பறக்கும் கோபிச்செட்டிபாளையம் மாதிரியான அல்ட்ரா மாடர்ன் ஊர்களுக்கு பல வருடங்களுக்கு முன்பாகவே அறிமுகம்.  சில பல வருடங்களுக்கு முன்பாக ஏதோவொரு நிகழ்வில் அரசு தாமஸ்தான் ‘இவர்தான் கொரோனா கார்த்திகேயன்’ என்று அறிமுகப்படுத்தி வைத்தார். ஆள் ‘செவச் செவ’ என இருந்தார். சிரித்து அறிமுகமாகிக் கொண்டோம். இப்பொழுதுதான் நம் ஆட்சியாளர்கள் ‘கொரோனாவோடு வாழ்ந்து பழக வேண்டும்’ என்கிறார்கள். ஆனால் நானெல்லாம் அப்பொழுதிருந்தே கொரோனாவோடுதான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். வாரத்திற்கு இரண்டு முறையாவது அலைபேசியில் பேசிக் கொள்வோம். எப்படியும் ஊருக்கு வரும் போதெல்லாம் சந்தித்துக் கொள்வோம். நிசப்தத்தின் அத்தனை பணிகளிலும் உடனிருப்பார்.

இதுவரையிலும் ஐந்தாயிரம் மரங்களுக்கு குறைவில்லாமல் நட்டு வைத்திருப்பார் என நினைக்கிறேன். மரம் நடுவதில் அவ்வளவு ஆர்வம் அவருக்கு. தனக்கு பிறந்தநாள் என்றாலும் சரி; அடுத்தவர்களுக்கு பிறந்தநாள் என்றாலும் கடலை மிட்டாய் வாங்கித் தருவார். வித்தியாசமான மனிதர்.

கொரோனா என்ற பெயரில் எங்கள் ஊரில் ஒரு மில் உண்டு. கரோனாவோ கொரோனாவோ- டிப்ளமோ முடித்துவிட்டு அரைக்கால் ட்ரவுசருடன் கோவில்பட்டியிலிருந்து வந்தவர் கொரோனாவில் ட்ரெயினியாகச் சேர்ந்து படிப்படியாக மேலே வந்து பொது மேலாளர் ஆனார். அந்த நிறுவனம் கைமாறி அவர் நிறுவனத்தை விட்டு வெளியில் வந்தாலும் பெயர் ஒட்டிக் கொண்டது. 


தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று செய்தி வெளியான நாள் முதலே வீட்டில் தங்காத ஆள் அவர். யார் சமூகப்பணியைச் செய்தாலும் அவர்களோடு சேர்ந்து கொள்வார். உணவுப் பொருட்கள் வழங்குவதாக இருந்தாலும் சரி, அனுமதி வாங்கித் தருவதாக இருந்தாலும், ரத்ததானம் செய்வதாக இருந்தாலும்- அட மருத்துவமனையிலிருந்து யாரையாவது வீட்டுக்கு அழைத்துச் செல்ல வேண்டுமானாலும் கூட கொரோனாவைத்தான் அழைப்பார்கள். அவரும் கொரோனாவைவிட மோசமாக அங்குமிங்குமாக பரவிக் கொண்டேயிருப்பார்; பறந்து கொண்டேயிருப்பார். 

இரண்டொரு நாட்களுக்கு முன்பாக அழைத்த போது பெங்களூரு சென்று கொண்டிருப்பதாகச் சொன்னார். ‘அங்க எதுக்குங்க போறீங்க’ என்று அதிர்ச்சியானேன். பெங்களூரில் தெரிந்த குடும்பத்தைச் சார்ந்த மூன்று மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள். அதில் ஒரு மாணவனுக்கு அப்பா இல்லை. அவனை அழைத்து வருவதற்காக காரை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டார்.போகிற வழியில் பிரச்சினையில்லை. திரும்பும் போதும் பவானி வரைக்கும் பிரச்சினையில்லை. பவானியிலிருந்து மூன்றுகிலோமீட்டர் தொலைவில் வலதுபக்கமாகத் திரும்பினால் கோபிதான். பவானியில் போலீஸ்காரர்கள் நிறுத்தியிருக்கிறார்கள். இனி கொரோனாவே சொல்வதுதான் சரியாக இருக்கும்.

‘எங்க இருந்து வர்றீங்க?’

‘பெங்களூரு சார்’

‘எங்க போறீங்க’

‘கோபி’ - உண்மையைச் சொல்கிறாராம். இனி தொடர்வதை கவனியுங்கள்.

‘உங்க பையனா?’

‘இல்ல சார்...தெரிஞ்சவங்க பையன்..கூட்டிட்டு வர்றேன்’

‘பையன் எந்த ஊரு?’

‘திருப்பூருங்க’

அடுத்த மாவட்டம் செல்கிறவர்களாக இருந்தால் பிரச்சினையில்லை. பின்னால் வந்த திருப்பூர் வண்டியில் ஏற்றி பையனை அனுப்பி வைத்துவிட்டார்கள். ஈரோடு மாவட்டத்திற்குள் செல்கிறோம் என்று சொன்னால்தான் பிரச்சினை. கொரோனா கார்த்திகேயனை மட்டும் அங்கேயே அமரச் சொல்லிவிட்டார்கள்.

‘சார் நானு?’

‘உங்களை குவாரண்டைனுக்கு அனுப்பறோம்’

‘என்னது..குவாரண்டைனுக்கா?’- தலைமேல் இடி விழுந்த அதிர்ச்சி.

‘ஆமா சார்..14 நாள்தான்..செங்குந்தர் காலேஜ்ல இருக்கணும்’

‘சார்..நான் நல்லாத்தான் இருக்கேன்’ - இது கொரோனா.

‘இதையேதாங்க எல்லோரும் சொல்லுறாங்க’ - இது எஸ்.ஐ.

ஏதோ வகையாகச் சிக்கிக் கொண்டோம் என்று புரியத் தொடங்குகிறது.

‘உட்காருங்க சார்...ஆம்புலன்ஸ் வரும்...பத்து பத்து பேரா அனுப்பிட்டு இருக்கோம்’

‘என்ன சார்...அங்க கொரோனா வந்தவங்க இருப்பான்..அவங்க கூட என்னை அடைச்சீங்கன்னா?’

‘சார்..ரூல்ஸ் பேசாதீங்க....வண்டி வர வரைக்கும் உங்களுக்கு டைம் இருக்கு..வெயிட் பண்ணுங்க’

மணி இரவு பதினொன்று. யாரை அழைத்தாலும் உறங்கிக் கொண்டிருப்பார்கள். கார்த்தி அடுத்தவர்களைத் தொந்தரவு செய்யக் கூடாது என டீசன்ஸி பார்ப்பார். 

இடைப்பட்ட நேரத்தில் வண்டி வராத சமயங்களில் எஸ்.ஐ இவரிடம் பேச்சுக் கொடுத்திருக்கிறார். 

‘கோபியில் கரோனா கார்த்தின்னு என்னைப் பத்தி விசாரிச்சீங்கன்னா சொல்லுவாங்க சார்..’

இப்பொழுது எஸ்.ஐ அதிர்ச்சியாகிவிட்டார். ‘என்னது கொரோனா கார்த்தியா? தள்ளி நின்னு பேசுங்க சார்’ என்று மாஸ்க்கை சரி செய்து கொண்டார்.

‘சார்...அது வேற கொரோனா... தனிக்கதை...இந்நேரத்துக்கு அப்புறம் எப்படி சார் போன் செய்யறது...எல்லோரும் தூங்குவாங்க’

எஸ்.ஐ ‘சரி சார்...உங்களை நான் குவாரண்டைனுக்கு அனுப்பல...எனக்கு காலையில் ஏழு மணி வரைக்கும் ட்யூட்டி. நீங்க சுத்தமானவர்ன்னு நிரூபிச்சுட்டீங்கன்னா வீட்டுக்கு அனுப்பிடுறேன்’ என்று சொல்ல ‘என்ன குசும்பு புடிச்ச மனுஷனா இருப்பாரு போல’ என நினைத்த கார்த்தி ஒவ்வொரு ஐடியாவாக யோசிக்கிறார். பேசாமல் தீயை மூட்டி உள்ளே இறங்கி ஆம்பளை சீதை என்று நிரூபித்துவிடலாமா என்று கூட யோசனை ஓடுகிறது. ஆனால் அது பெரிய ரிஸ்க். போலீஸ்காரர்களே விடமாட்டார்கள்.

இரவு உணவு இல்லை. குடிக்க பாட்டில் தண்ணீர் கூட இல்லை. விடிய விடிய எஸ்.ஐ கதை பேசுகிறாரே தவிர விடுவதாகத் தெரியவில்லை. ஐந்து மணி வரைக்கும் தூக்கம் போனது. இரவுப்பணியில் இருக்கும் காவலர்கள் இப்படியொரு பீஸ் கிடைத்தால் நேரவிரயத்துக்கு பயன்படுத்திக் கொள்வார்கள்.

‘என்னவெல்லாம் செஞ்சிருக்கீங்க சார்?’ என்று ஆரம்பிப்பார்கள். 

‘ஆஹா...விட்டுடுவாங்க போலிருக்கு’ என்ற நம்பிக்கையில் நாம் வீரபிரதாபங்களை அடுக்குவோம். எல்லாவற்றையும் கேட்டுவிட்டு அடுத்து வரும் கேஸை மடக்கச் சென்றுவிடுவார்கள். பிறகு வந்து ‘அப்புறம் சார்..மேல சொல்லுங்க’ என்று ஆரம்பிப்பார்கள். விடிய விடிய மகாபாரதம்தான்.

இந்த இடத்தில் இன்னொரு கதையைச் சொல்ல வேண்டும். நிசப்தம் மாணவன் ஒருவன் - ஆந்திராவில் ஒரு பயிற்சிக்குச் சென்றவன் லாக்-டவுனில் அங்கேயே சிக்கிக் கொண்டான். ‘சார் பர்மிஷன் வாங்கித் தர முடியுமா?’ என்று கேட்டான். ஆந்திராவில் யாரைப் பிடிப்பது? நண்பரின் வழியாக அங்கே ஒரு மாவட்ட ஆட்சியரிடம் தொடர்பு கொண்டால் பெரிய பலனில்லை. இந்த சீசஸினில் பர்மிஷன் வாங்கித் தருவதுதான் அரசாங்க உத்தியோகம் வாங்கித் தருவது போன்ற பெரிய சிபாரிசு. அந்த ஆட்சியர் மதிக்கவேயில்லை. ஆனால் அதற்குள் அவனே எப்படியோ அடித்துப் பிடித்து வாங்கிவிட்டான். ஆந்திராவிலிருந்து கல்லூரி இருக்கும் சிதம்பரம் வரைக்கும் அனுமதி கிடைத்திருந்தது. கார் ஒன்றைப் பிடித்து வந்து சேர்ந்துவிட்டான். வந்தவன் சும்மா இருக்கிறானா? நம்மை சோதிப்பதற்கென்றே பேசுவான் போல. 

‘சார் சிதம்பரம் வந்துட்டேன்..சிதம்பரத்திலிருந்து ஊருக்கு வரணும் சார்..பர்மிஷன் வாங்கித் தர்றீங்களா?’ என்றான். ‘ஆந்திராதான் கஷ்டம்...தமிழ்நாட்டில் அசால்ட் காட்டிடலாம்’ என்று கெத்தாகச் சொல்லிவிட்டு முக்கி மோதிப் பார்த்தேன் ம்ஹூம். 

கடைசியில் கொரோனா கார்த்தியிடம்தான் கேட்டேன். ‘ஈரோட்டில் தாசில்தார் நமக்குத் தெரிஞ்சவருதான் சொல்லிடலாம்’ என்று சொல்லியிருந்தார். சொல்லிவிட்டு பெங்களூரு சென்றவர் இப்படிச் சிக்கிக் கொண்டார். அதற்குள் அந்த மாணவன் ஊருக்கே வந்துவிட்டான். இவன் எப்படி வந்தான் எனத் தெரிந்து கொள்ளத் தோன்றுமல்லவா? ‘ஏதோ சூட்சமம் இருக்கும் போல’ என நினைத்து ‘எப்படி தம்பி வந்த?’ என்று கேட்டால்-

‘ரொம்ப சிம்பிள் சார்...3000 ரூபா கொடுத்தேன்...வண்டி, வண்டிக்கான பாஸ் எல்லாம் ஏற்பாடு செஞ்சு கொடுத்துட்டாங்க..அதுக்குன்னு ப்ரோக்கர் இருக்காங்க...ஒரு வண்டிக்கு நாலு பேரை ஏத்திட்டு வந்து சேலத்துல இறக்கிவிட்டுட்டு போய்ட்டாங்க...அங்க இருந்து மளிகை ஏத்திட்டு வர்ற லாரியில் வந்துட்டேன்’ என்றான். ஊர் முழுக்கவும் தொடர்பு இருப்பவருக்கு சிக்கலாக இருக்கக் கூடிய ஒரு காரியம் யாரையுமே தெரியாத ஒரு மாணவனுக்கு மிக எளிய விஷயமாக இருக்கிறது. 

இன்று காலையில் அழைத்து 'பாஸ் சொல்லியிருக்கேன் சார்...இன்னைக்கு கிடைச்சுடும் சார்’ என்றார் கொரோனா.  அவன் ஊர் வந்து சேர்ந்த கதையைச் சொன்ன போதுதான் அவர் பவானியில் சிக்கிக் கொண்ட கதையைச் சொன்னார்.

இரவு முழுக்கவும் எஸ்.ஐயிடம் பேசிக் கொண்டிருந்தவர் காலையில் ஐந்து மணிக்கு விடிந்தும் விடியாமலும் யார் யாரையோ அழைத்துப் பேசியிருக்கிறார். கொரோனாவுக்கே குவாரண்டைனா என்று கார்த்தியைத் தெரிந்தவர்கள் எல்லாம் எரிமலை எப்படி பொறுக்கும் என வெடித்துச் சிதறி பல பக்கமும் ஃபோன் பறக்க,  எஸ்.ஐ ‘ஓ நீங்க பெரிய ரவுடியா சார்’ என்று கேட்டு அனுப்பி வைத்திருக்கிறார். ‘இதைத்தானே சார் நான் விடியற வரைக்கும் சொல்லிட்டு இருந்தேன்...தொண்டைத் தண்ணி காய்ஞ்சு போய்டுச்சு...அடுத்தவங்க சொன்னா நம்புவீங்க...நானே சொன்னா நம்ப மாட்டீங்களா’ என்று அப்பாவியாகக் கேட்டிருக்கிறார் கொரோனா.

ஈரோடு மாவட்டத்தில் அவ்வளவு ஸ்ட்ரிக்ட் ஆபிசர்ஸ் போலிருக்கிறது. இது புரியாமல்தான் வேணி ‘அப்பா வீட்டுக்கு போலாம்’ என்று ஒரே அக்கப்போர். குடும்பத்தோடு கார் ஏறிப் போனால் போகும் போது ‘திருப்பூர் போறோம்’ என்று சொல்லித் தப்பிவிடலாம். திரும்ப ஈரோடு மாவட்டத்துக்குள் வரும் போது நான் மட்டும் தனியாகச் சிக்கிக் கொள்வேன். அலேக்காகத் தூக்கி செங்குந்தர் கல்லூரியில் அடைத்துவிட்டால் ப்லாக் எழுத கூட வாய்ப்பிருக்காது. கொரோனா கார்த்திக்கு உள்ளூரில் எதிரிகள் இல்லை. நான் சிக்கியதாகத் தெரிந்தால் ‘அவனை கொரில்லா செல்லில் அடையுங்கள்’ என்று சொல்லக் கூட வாய்ப்பிருக்கிறது. இந்த லட்சணத்தில் மச்சினன் ‘மச்சா...எங்க அக்காவைக் கூட்டிட்டு வந்து விட முடியுமா? முடியாதா’ என்று ஃபோனில் மிரட்டுகிறான். மச்சினன் கொஞ்சம் பல்க்கான ஆள். உரலுக்கு ஒரு பக்கத்தாம்ல இடி; என்னை மாதிரி மத்தளத்துக்கு ரெண்டு பக்கம் பத்தாதுன்னு மண்டை மேல கூட இடிதாம்ல!

May 5, 2020

ஏன் சம்பாதிக்க முடியாது?

இயக்குநர் அழகம்பெருமாள் அவர்களுடன் இரண்டொரு நாட்களுக்கு முன்பாக பேசினேன். நிறையப் பேசினோம். நிசப்தம் கட்டுரைகளை வாசித்துக் கொண்டிருப்பதாகவும் இயலுமெனில் அழைக்கச் சொல்லி முந்தின நாள் இரவு செய்தி அனுப்பியிருந்தார். மகி பிரச்சினையில்லை. ஆனால் சிறு அசைவு இருந்தாலும் திரு எழுந்துவிடுவான். ஃபோனில் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தால் ‘நீங்களே தொட்டிலை ஆட்டுங்க’ என்று சொல்லிவிட்டு வேணி தூங்கிவிடுவாள் என்பதால் ‘நாளைக்கு கூப்பிடுறேன் சார்’ என்று பதில் அனுப்பிவிட்டு மறுநாள் அழைத்தேன். 

கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பேசினோம். ‘பாவம் அவர் காதுல ரத்தம் வந்துடுமே’ என்று நான் நினைக்குமளவுக்கு பேசினோம். ஆனாலும் நிவாரண உதவிகள் தொடங்கி சினிமா வரைக்கும் எவ்வளவோ பேச இருக்கிறது. அவரைப் போன்ற க்ரியேட்டிவான, மனிதநேயமிக்கவர்களுடன் பேசுவது உற்சாக டானிக். ‘டும் டும் டும்’ படம் வந்த போது நான் கல்லூரி மாணவன். இன்னும் இரண்டு படங்களை இயக்கச் சொன்னால் அவர் தொடர்ந்து நடித்து மீம் கண்டெண்ட் வழங்கிக் கொண்டிருக்கிறார்.

Download Plain Meme of Azhagam Perumal In Pudhupettai Movie With ...

அவரைப் பற்றி தமிழ் இந்துவில் ஒரு செய்தி வெளிவந்திருந்தது. அவரது உதவும் குணம் தெரியும். பேசினால் அதை வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளமாட்டார். தன்னால் முடிந்தளவுக்கு உதவுவதாகவும் ஆனால் யாருக்குமே எதிர்காலத்தைப் பற்றி எந்த உறுதியுமில்லை என்றார். நூறு கோடி ரூபாய் சொத்துள்ள பணக்காரனும் கூட என்ன ஆவான் என்றே கணிக்க முடியவில்லை என்று அவர் சொன்னது வாஸ்தவமான பேச்சு.

தினக்கூலிகள் அடிபட்டுவிட்டார்கள். அடுத்து சிறு கடைக்காரர்கள், அதன் பிறகு சிறு தொழில் நடத்துகிறவர்கள் என வரிசையாக சிக்கினார்கள். அடுத்தடுத்து குறு, நடுத்தரத் தொழில், பெருந்தொழில் என வரிசையாக அடிவாங்கத் தொடங்கியிருக்கிறார்கள். முன்பெல்லாம் நிவாரண உதவிகள் செய்யுமிடத்தில் பணம் குவியும். ஆனால் இப்பொழுது எல்லோருக்குமே பயம் பரவியிருக்கிறது. ‘மூன்று மாதம் கழித்து நமக்கு என்ன ஆகுமெனத் தெரியவில்லை’ என்பதுதான் பலரின் மனநிலையும். எனக்கும் அதே பயம்தான். கடந்த ஐம்பதாண்டு காலத்தில் இவ்வளவு பெரிய ஸ்திரமின்மையை இப்பொழுதுதான் நாம் சந்திக்கிறோம் என நினைக்கிறேன். இவ்வளவு மோசமான சூழலிலும் கைக்காசை போட்டு அடுத்தவர்களுக்கு உதவுகிற ஒவ்வொரு மனிதனுமே தெய்வத்தையும் விட உயர்ந்தவன்தான். 

இதையெல்லாம்தான் பேசிக் கொண்டிருந்தோம். ‘இங்க கொஞ்ச நாள் கழிச்சு வேலையை ஆரம்பிக்கலாம்ன்னு இருக்கோம் சார்’ என்றேன். இப்பொழுது மெல்ல பணிகளைத் தொடங்கியிருக்கிறார்கள். ஆங்காங்கே வேலைக்குச் செல்கிறார்கள். அப்படி வேலைக்குச் செல்கிறவர்களுக்கு பிரச்சினை இருக்காது. ஆனால் எந்தவிதத்திலும் வேலைக்குச் செல்ல முடியாத மனிதர்களுக்குத்தான் அடுத்தகட்டமாக உதவ வேண்டியிருக்கும் என நினைக்கிறேன்.

நம்மவர்களுக்கு ‘அது எப்படி வேலைக்கே போக முடியாது’ என்று குழப்பம் வரும். இப்படியான மேம்போக்கான கேள்விகளைக் கேட்கிறவர்கள் அதிகம். ‘நாற்பது நாளா வேலை இல்லை; பணமே இல்லைன்னு சொல்லுறாங்க ஆனா மதுபாட்டில் வாங்கும் கூட்டம் வரிசையாக நிற்கிறது. அது எப்படி?’ என்றொரு கேள்வியை ஃபேஸ்புக்கில் பார்த்தேன். பாட்டில் வாங்க காசு வைத்திருக்கும் கூட்டம் வேறு; ‘ரேஷன் அரிசி கூட கள்ளமார்கெட்டில் 10 ரூபா சார்...வாங்க காசு இல்லை’ என்று தவிக்கும் கூட்டம் வேறு. இரண்டுமே எண்ணிக்கையில் அதிகம். நாம் இரண்டையும் ஒன்றாக நினைத்துக் குழப்பிக் கொள்கிறோம். 

‘கூலிக்காரங்கதான் தினமும் சம்பாதிச்சாங்க இல்ல? சேர்த்து வெச்சிருக்கலாம்ல’ என்று கேட்டார் வயது முதிர்ந்த அனுபவஸ்தர். அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. நாம் இந்தக் கேள்வியை யாரைப் பார்த்துக் கேட்கிறோமோ அந்தக் கூலிக்காரர்கள் பலரும் கடந்த தலைமுறை வரைக்கும் ஒழுகும் கூரையின் அடியில் வசித்தவர்கள். வாய்ப்பு கிடைத்து சம்பாதித்த பணத்தை ஒழுகாத கூரையுடன் கூடிய சிறு வீட்டுக்குச் செலவு செய்திருக்க வேண்டுமா அல்லது சேமித்து வைத்திருக்க வேண்டுமா? கடந்த இருபதாண்டுகளுக்கு முன்பு வரைக்கும் காலில் செருப்பில்லாமல் நடந்தவர்கள்- சம்பாதிக்கத் தொடங்கிய பிறகு வண்டி ஒன்றை வாங்கி அதில் குடும்பத்தோடு பயணித்திருக்க வேண்டுமா அல்லது சேமித்து வைத்திருக்க வேண்டுமா? கடந்த காலம் வரைக்கும் பணக்காரர்கள் வீடுகளில் சட்டி எடுத்துச் சென்று பழையது வாங்கி வந்து குடித்தவர்கள். இப்பொழுது கையில் வரும் பணத்தில் நல்ல சோறு உண்டு பார்த்திருக்க வேண்டுமா? அல்லது சேமித்து வைத்திருக்க வேண்டுமா? இதுகாலம் வரைக்கும் பழைய சட்டையை யாரிடமாவது இருந்து வாங்கி அணிந்து கொண்டவர்கள். பணம் கிடைக்கும் போது நல்ல சட்டை அணிய வேண்டுமா? சேமித்து வைத்திருக்க வேண்டுமா?

இதில் சாதி வேறுபாடுகள் பார்க்க வேண்டியதில்லை. இப்படியான குடும்பங்கள் எல்லா சாதியிலும் உண்டு.

வாழ்வின் வண்ணங்களை ஒரு தரப்பு மட்டுமே பார்க்க வேண்டும் என நாம் நினைப்பது எந்தவிதத்தில் நியாயம்? அப்படித்தான் உழைத்து கையில் கொஞ்சம் காசு சேரும் போது சிறு வீடு கட்டி, வண்டி வாகனம் வாங்கி, நல்ல உடை அணிந்து, ருசியறிந்து வாழ்வின் வண்ணங்களை தம் குடும்பத்துக்குக் காட்டத் துவங்கிய போது கொரோனா வந்து முடக்கிப் போட்டிருக்கிறது. உணவுக்கும் பஞ்சம் வந்துவிட்டது. குழந்தைகள் தவிக்கிறார்கள். விளிம்புநிலை மக்களின் வாழ்வை புரிந்து கொள்ளாமல் நம்மைப் போலவே அவர்களையும் கருதி கேள்வி கேட்பது அபத்தம்.

இப்பொழுது முதல் கேள்விக்கு வரலாம் -‘அது எப்படி வேலைக்கு போகாம இருக்க முடியும்?’. இயல்பு நிலையின் போது திருப்பூரிலிருந்து வாகனங்கள் வந்து பனியன் கம்பெனிகளுக்கு வேலைக்குச் செல்கிறவர்களை அழைத்துச் செல்லும். திருப்பூர் சிவப்பு மண்டலம். வாகனப் போக்குவரத்து இல்லை. அங்கே நிறுவனங்கள் இயங்குவதில்லை. அப்படியே இயங்கினாலும் அங்கே சென்று வர வழியுமில்லை. அதனால் வேலை இல்லை. இது ஒரு வகை. குறைவான எண்ணிக்கையிலான ஆட்களை வைத்துத்தான் நிறுவனங்கள் இயங்க வேண்டும் என்பது உத்தரவு. முப்பது சதவீதம், நாற்பது சதவீதம் என்றிருக்கும் போது ‘அவசியமான ஆட்களை’ மட்டுமே பணிக்கு எடுப்பார்களே தவிர சற்று வயது முதிர்ந்தவர்கள், அவசியமில்லாத வேலைகளைச் செய்யக் கூடியவர்களைத் தவிர்த்துவிடுவார்கள். அவர்களுக்கு வேலை இருக்காது. உணவு விடுதிகள், டீக்கடை பணியாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு வேலை இல்லை. இப்படி வரிசையாக அடுக்க முடியும்.

கேள்வி கேட்கும் இன்னொரு எலைட் வகையறா உண்டு. ‘விவசாயப் பணி நடக்கிறதே....அதற்கு போலாமே’ என்று கேட்கிறவர்கள். பழக்கமில்லாதவர்கள் கடப்பாரை, மண்வெட்டி எடுத்து ஒரு மணி நேரம் வேலை செய்துவிட்டு இதைப் பேசலாம். ஒவ்வொருவரின் உடலும் ஒவ்வொரு விதமான பணிக்கு பழகியிருக்கிறது. திடீரென்று புதிய வேலையைச் செய்வது சாத்தியமேயில்லை. அப்படியே பழக வேண்டுமானால் வெகு காலம் பிடிக்கும். ஐநூறு கூலி கொடுக்க வேண்டிய இடத்தில் முந்நூறும் இருநூறும் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். வேலை தெரிந்தவர்களுக்கே இதுதான் கதி. வேலை தெரியாத புது ஆள் வந்தால் நிலத்திலேயே கால் வைக்க விடமாட்டார்கள்.

களம் வேறு; உண்மை நிலவரம் வேறு; நம் அறிவின் மட்டம் வேறு. நாம் எல்லாவற்றையும் குழப்பிக் கொள்கிறோமோ என்று தோன்றுகிறது.