Apr 30, 2020

அரசு ஊழியர்களுக்கு எதற்கு சம்பளம்?

அரசு ஊழியர்களின் சம்பளத்தை குறைப்பது மிகச் சிறந்த யோசனை என்று வாட்ஸப் குழுமம் ஒன்றில் ஒரு நபர் எழுதியிருந்தார். அதற்கு பெரிய ஆதரவில்லை. பேரிடர் காலத்தில் அரசு ஊழியர்களின் பணிகளை பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்? ஆனால் பலருக்கும் குழப்பம் நிலவுகிறது. ‘குறைக்கணுமா கூடாதா’ என்று குழம்புகிறார்கள். ‘அரசு ஊழியர்களுக்கு சம்பளம் அதிகம்’ என்று உருவேற்றி வைத்திருக்கிறோம் அல்லவா? அப்படித்தான் குழம்பத் தோன்றும். 

எந்த தனியார் மருத்துவமனையும் செயல்படாத போது அரசு மருத்துவர்கள்தான் தம் குடும்பம், குழந்தகளை எங்கோ விட்டுவிட்டு மருத்துவமனைகளில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். தூய்மைப்பணியாளர்கள் விடிவதற்கு முன்பாகவே கிருமிநாசினிகளை தூக்கி வந்துவிடுகிறார்கள். இரவு வரைக்கும் தெருக்களிலேயே அலை மோதுகிறார்கள். காவல்துறையினர் பற்றி கேட்கவே வேண்டியதில்லை. ‘சார், வொர்க் ப்ரம் ஹோம்..கரண்ட் இல்லை சார்’ என்றால் மின்வாரிய ஊழியர்கள் வந்துவிடுகிறார்கள். ரேஷன் கடை ஊழியர்கள் தொடங்கி களத்தில் நிற்கும் ஒவ்வொரு அரசு ஊழியரையும் கையெடுத்துக் கும்பிட வேண்டும். 

இவர்கள் யாராவது முகச்சுளிப்பை காட்டுகிறார்களா? சிலர் திரும்பத் திரும்பச் சொல்வார்களே- அரசு ஊழியர்கள் அசமஞ்சம், காசு கொடுக்காமல் வேலை நடக்காது என்றெல்லாம்  அப்படி யாராவது இந்த முப்பத்தைந்து நாட்களில் இருந்தார்களா? 

அப்படியென்றால் அரசு ஊழியர்கள் அத்தனை பேரும் யோக்கிய சிகாமணிகளா என்றால் இல்லை. இங்கே எல்லோருக்கும் சுயநலம் இருப்பது போலவே அவர்களுக்கும் இருக்கிறது. எல்லோரும் வாய்ப்பு கிடைத்தால் செய்யக் கூடிய பிழைகளை அவர்களிலும் பலரும் செய்வார்கள். எல்லோரும் நினைப்பதைப் போலவே தம் குடும்பத்துக்கும் வருமானம் பார்த்து சொத்து சேர்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அரசு ஊழியர்களிலும் உண்டு. ஆனால் இந்தத் தவறுகளையெல்லாம் அரசு ஊழியர்கள் மட்டுமே செய்வதாகவும் பிறர் அத்தனை பேரும் தம்மை உத்தமபுத்திரன்களாகவும் கருதிக் கொள்வதுதான் வேடிக்கை. அந்த உத்தமபுத்திரன்கள்தான் அரசு ஊழியர்கள் என்றாலே மோசம் என்பார்கள். மேற்சொன்ன பிரச்சினைகள் யாவும் அரசு ஊழியர்களுக்கு மட்டும் பொதுவானதில்லை. அது இந்த மனித சமூகத்தில் அத்தனை பேருக்கும் உண்டு. ஆனால் அரசு ஊழியர்கள் மீதுதான் நம் கண் முழுவதும் இருக்கிறது.

சமீபகாலமாக கவனித்துப் பார்த்தால் ஒன்றை உணர முடியும். சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மீது விஷத்தையும் வன்மத்தையும் தூவும் மிக மோசமான அரசியல் முன்னெடுக்கப்படுகிறது.  அந்த வன்மம் குறிப்பிட்ட மதத்தினர் மீது மட்டுமில்லை; குறிப்பிட்ட சாதியினர் மீது மட்டுமில்லை; குறிப்பிட்ட பணியினர் மீதும் கூட நிகழ்த்தப்படுகிறது. ஒரு பிரிவின் மீது வன்மத்தை விதைக்கும் போது அந்த வன்மத்தை ஆதரிக்கிறவர்கள் தம் பக்கம் நிற்பார்கள் என்கிற மோசமான polarization அரசியல்தான் இது. இந்த அரசியலில் அரசு ஊழியர்களும் சிக்கிக் கொண்டார்கள் என்பதுதான் வேதனை. துரதிர்ஷ்டவசமாக ஆளும் வர்க்கமே இதை பகடைக்காயாக பயன்படுத்தியது. ‘அரசு ஊழியர்களுக்கு சம்பளமாகவே பல்லாயிரம் கோடி ரூபாய் போகிறது’ என்று பேசி முதலமைச்சரே எண்ணெய் ஊற்றியது நினைவில் இருக்கிறதா?

ஒரு நிறுவனம் இயங்கும் போது அதனை இயக்க ஊழியர்கள் அவசியம். ‘நீ இவ்வளவு படிச்சிருக்க; உனக்கு இவ்வளவு சம்பளம் தர்றேன்; இவையெல்லாம் உனக்கு அளிக்கப்படும் சலுகைகள்..எனக்காக வந்து வேலை பார்’ என்று பணியில் அமர்த்தும் போது உறுதி வார்த்தைகளை வழங்கி நியமன ஆணை வழங்குவதுதானே உலக நடைமுறை? அப்படி தம்மை நம்பி வந்தவனிடம், தாம் வழங்குவதாக உறுதியளித்த நிதியை வைத்து பல்வேறு வாழ்நாள் திட்டங்களை வகுத்துக் கொண்டவனிடம் ‘உனக்கு நான் நிறையப் பணம் கொடுக்க வேண்டியிருக்கிறது’ என்று சலித்துப் பேசுவது எவ்வளவு மோசமான முன்னுதாரணம்? ஆனால் அதைச் செய்தார்கள். 

இன்று பேரிடர் வரும் போது யாருக்கு அதிக சம்பளம் வழங்கப்படுகிறது என்று குற்றம் சாட்டினார்களோ அவர்கள்தான் முன்கள வீரர்களாக நிற்கிறார்கள். சுகாதாரம், நகராட்சி, உள்ளாட்சி, காவல்துறை என்று பெரும்பாலான பணியாளர்கள் தமக்கு நோய் வந்துவிடும் என்ற பயத்தை மறைத்து உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒருவேளை நம் குடும்பத்துக்கு தொற்று ஏற்பட்டுவிட்டால் என்ன செய்வது என்ற பதற்றமிருந்தாலும் ஒவ்வொரு நாளும் அர்ப்பணிப்புடன் பணியாற்றுகிறவர்கள் அவர்கள்தான். அன்று அவதூறு வீசியவர்களில் யாராவது ஒருவர் இன்று இதை மறுத்துப் பேச இயலுமா?

நீங்களும் நானும் வீட்டில் பாதுகாப்பாகத்தானே இருக்கிறோம்? பால் வாங்கச் சென்றாலும் கூட பதறுகிறோம். ஆனால் அரசு ஊழியர்கள்தான் ஒரு நாளைக்கு பத்து மணி நேரத்துக்கும் மேலாக தெருவில் நிற்கிறார்கள். ‘எங்களுக்கு சம்பளம் சேர்த்துக் கொடுங்கள்’ எங்கேயாவது ஒரு முணுமுணுப்பு கேட்கிறதா? ஆனால் இந்தப் புரிதல் இல்லாமல் நம்மில் எத்தனை பேர் அன்றைய தினம் ‘ஆமா...அவர்களுக்கு சம்பளம் கொடுப்பது அவசியமில்லை’ என்று முதல்வரின் பேச்சுக்கு ஒத்து ஊதினோம்? எவ்வளவு ஊடகங்களில் அரசு ஊழியர்களின் சம்பளம் குறித்து வன்மத்தோடு விவாதித்தார்கள்? 

மிகச் சமீபத்தில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்திய மருத்துவர்களை பொதுவெளியில் கொச்சைப்படுத்தி, துறை ரீதியிலான நடவடிக்கை எடுத்தது நினைவில் இருக்கிறதா? அப்பொழுதெல்லாம் அரசு மருத்துவர்களுக்கு எதிராக சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. ‘இவர்களுக்கு எதுக்கு இவ்வளவு சம்பளம்’ என்று வாய்க்கு வந்ததையெல்லாம் பேசினார்கள். இன்றைக்கு நாற்பது நாட்களாக தம் குழந்தைகளை பெற்றோரிடம் விட்டுவிட்டு அவர்களை பார்க்கக் கூடச் செல்லாத அரசு மருத்துவர்கள் எத்தனை பேர்கள் இருக்கிறார்கள் என்றாவது யோசிக்கிறோமா? எத்தனை மருத்துவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டிருக்கிறது? எத்தனை சுகாதாரப் பணியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள்? ஏன் அவர்களுக்கு நோய்த் தொற்று ஏற்பட்டது? சம்பளம் கேட்ட போது வக்கனையாக பேசிய ஆட்சியாளர்கள் இப்பொழுது மருத்துவர்களின் பாதுகாப்புக்கு என்ன உதவிகளைச் செய்தார்கள்? இப்படி எதையாவது நாம் யோசிக்கிறோமா? 

யாரோ கிளப்பிவிடும் ஜோதிகா பேசியதுதான் முக்கியம். அதுதான் பேசுபொருள். மற்றபடி, கொரானா தொற்று எண்ணிக்கை நமக்கு தொலைக்காட்சியில் வெறும் எண்ணாக மட்டுமே ஓடிக் கொண்டிருக்கிறது. இல்லையா? அரசு ஊழியர்கள் தமக்கான சலுகைகளையும் ஊதிய உயர்வினையும் பெற காலங்காலமாக நடத்திய போராட்டங்கள் எத்தனை? கைதுகள் எத்தனை? சிறை சென்றவர்கள், தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள், துறை ரீதியிலான நடவடிக்கைகளுக்கு ஆளானவர்கள்- இதைப் பற்றியெல்லாம் எதுவுமே யோசிக்காமல் என்னவோ நேற்று ஆட்சிக்கு வந்தவர்கள்தான் பணி நியமன ஆணை வழங்கி மொத்த அரசு எந்திரத்தையும் சுழலச் செய்தார்கள் என நினைப்பது எவ்வளவு அபத்தம்? ஒவ்வொரு ஆரமாகச் சேர்க்கப்பட்டு, மாற்றப்பட்டு அந்தச் சக்கரம் காலங்காலமாக சுற்றிக் கொண்டிருக்கிறது. திடீரென்று ‘அவர்களுக்கு சம்பளம் அதிகம்’ என்று பேசுவது அற்பமான எண்ணமில்லாமல் வேறு என்ன?

கடவுள், மதம், அரசு ஊழியர்கள், வல்லரசுகள், வளர்ச்சி இன்னபிற இத்யாதிகள் என்று சமீபமாக ஊதிப்பெருக்கப்பட்ட கட்டுக்கதைகள், பிம்பங்கள், அவநம்பிக்கைகளை உடைத்து நொறுக்கவே கொரோனா உருவெடுத்து வந்ததோ எனத் தோன்றுகிறது. ‘யாரோ சொல்வதை, சுயபுத்தி துளியுமில்லாமல் பைத்தியகாரன் மாதிரி உளறிட்டு இருந்தீங்களே...பாருங்கடா’ என்று காட்டிக் கொண்டிருக்கிறது என்றே நினைக்க வேண்டியிருக்கிறது. 

அன்றைக்கு அரசு ஊழியர்கள் குறித்தும், அவர்களது ஊதியம் குறித்தும் அவதூறுகளைப் பரப்பிய ஆட்சியாளர்கள்தான் இன்றைக்கு அரசு ஊழியர்களை முழுமையாக நம்பியிருக்கிறார்கள். அவர்கள் இல்லையெனில் மொத்த அரசு இயந்திரமும் முடங்கிப் போய்விடும் என்றுணர்ந்த அவர்களது ஆதரவாளர்களில் சிலரும், இன்னும் வேறு சிலரும் நேர்மையாகப் பேசுவதாக நினைத்து ‘களத்தில் நிற்பவர்களுக்கு மட்டும் ஊதியப்பிடித்தம் செய்ய வேண்டாம்; பிற துறை பிடிக்கலாமே’ என்று பேசத் தொடங்கியிருக்கிறார்கள். ஆசிரியர் உட்பட வேறு சில துறை ஊழியர்கள் வீட்டில்தான் இருக்கிறார்கள். அதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் ஒருவேளை நிலைமை கைமீறி போனால், இப்பொழுது இருக்கும் அரசு ஊழியர்களின் எண்ணிக்கை போதாமல் போனால் முதலில் யார் களமிறக்கப்படுவார்கள்? அரசு தனது ஊழியர்களுக்குத்தான் முதல் உத்தரவை போடும். நீங்களும் நானும் வீட்டிலேயே இருந்து கொள்ளலாம். ஆனால் அரசு ஊழியர்கள் எந்த மறுப்பையும் சொல்லாமல் களமிறங்க வேண்டும். ஆசிரியர்கள்தான் நோட்டுப் புத்தகத்தை எடுத்துக் கொண்டு வீதி வீதியாகக் கணக்கெடுக்கச் செல்வார்கள். 

ஒரு பணியாளரை வேலைக்கு அமர்த்துவதன் அடிப்படை தாரக மந்திரமே - ‘உனக்கு நான் ஒவ்வொரு மாதமும் சம்பளம் தருகிறேன்; ஒருவேளை நிலைமை மோசமானால் நீ என்னோடு துணை நிற்க வேண்டும்’ என்பதுதான். அரசுக்கு மட்டுமில்லை; தனியார் நிறுவனங்களுக்கும் இது பொருந்தும். நூறு தற்காலிகப் பணியாளர்கள் இருந்தாலும் ஏன் நாற்பது பேர்களாவது நிரந்தரப் பணியாளர்களாக இருக்கிறார்கள்? அவர்களுக்கு ஏன் வருடாவருடம் சம்பள உயர்வு அளிக்கிறார்கள்? ஏன் ஊக்கத் தொகை வழங்குகிறார்கள்? ஏன் தம்மைவிட்டுப் போகாமல் இழுத்துப் பிடித்துக் கொள்கிறார்கள்? மேலே சொன்ன மந்திரம்தான் காரணம்.

நீங்கள் நினைத்தால் வேலைக்கு வைத்துக் கொள்வதும், நினைத்தால் சம்பளத்தை பறிப்பதற்கும் என்ன பெயர் வைப்பது? இவ்வளவு பேரிடரின் போதும், களத்தில் நிற்கும் அரசு ஊழியர்களின் ஊதியத்தில் கை வைப்பதை வழிப்பறியாகத்தான் கருத வேண்டும். எவ்வளவு பேரிடர் வரினும் பணியாற்ற வேண்டியது எப்படி அவர்களின் கடமையோ அதே போலத்தான் ஊதியம் என்பது அவர்களது உரிமை. இரவு பகல் பாராது உழைத்துக் கொண்டிருக்கும் அவர்களின் ஊதியத்தில் கை வைப்பது எந்தவிதத்தில் நியாயம்? அரசு தமக்கான மாற்று வழிகளை யோசிக்க வேண்டும். பினரயி விஜயன் பிடித்தம் செய்கிறார்; ஜெகன் மோகன் ரெட்டி பிடித்தம் செய்கிறார் என்றால்- ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம் இருக்கும். பினரயி விஜயனுக்கும் மத்திய அரசுக்கும் ஏழாம் பொருத்தம். ஜெகன் மோகனின் மாநிலம் புதியது. வருமான வாய்ப்புகள் இல்லை என்று ஒவ்வொன்றையும் சொல்வார்கள். அப்படியொரு காரணத்தை சொல்ல வேண்டியதில்லையா? மத்திய அரசோடு இணக்கம் காட்டுகிறோம் என்று சாதித்தது என்ன மக்களுக்கு விளக்க வேண்டியதில்லையா?

பேரிடரின் போது அரசு வருமானம் திரட்டும் காரியங்களைப் பார்க்க வேண்டும். என்ன வாய்ப்புகள் இருக்கின்றன என ஆலோசிக்க வேண்டும். ஒவ்வொரு வருடமும் எவ்வளவு வரி வசூலிக்கிறார்கள்? அதில் நம் பங்கு வந்து சேர்ந்ததா? மத்திய அரசின் நிதி உதவி கிடைத்ததா? திருடிக் கொண்டு ஓடு தொழிலதிபர்களை ஏன் விட்டுவைக்கிறார்கள் என்பதையெல்லாம் பார்த்துவிட்டு எந்த வழியுமே இல்லாத சூழலில், நிலைமையை விளக்கிவிட்டு அரசு ஊழியர்களிடம் கேட்கலாம்- பறிக்கக் கூடாது- கேட்க வேண்டும்.

அரசு ஊழியர்களின் சம்பளத்தில் கை வைப்பது என்பது தம்மை நம்பியிருப்பவருக்கு அரசு செய்யும் மாபெரும் துரோகம்- அது நிறுத்தி வைப்பாக இருந்தாலும் சரி; ரத்தாக இருந்தாலும் சரி; பிடித்தமாக இருந்தாலும் சரி. ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களின் மகனாக, பெற்றோருக்கு அரசு கொடுத்த ஊதியத்தில் உண்டு உடல் வளர்த்து, படித்து அறிவை வளர்த்து மேலே வந்த ஒருவனாக அப்படித்தான் இதைச் சொல்வேன்.

Apr 27, 2020

தீப்பிணி தீண்டல்

மூன்று நான்கு நாட்கள் ஓய்வுக்குப் பிறகு அடுத்த சில ஊர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டது. இன்றோ அல்லது நாளையோ சுமார் எண்பது வீடுகள் உள்ள ஒரு குக்கிராமத்தில் பொருட்கள் விநியோகத்தை செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தோம். நேற்று வரை எல்லாம் சரியாகத்தான் இருந்தது. வாட்ஸப்பில் ஒரு வீடியோ வந்திருந்தது. மணிப்பூரில் நிவாரணப் பொருட்களை ஒரு மேசை மீது வைத்துவிடுகிறார்கள். மக்களாக வரிசையில் நின்று எடுத்துக் கொள்கிறார்கள். நாம் கூட அப்படியே செய்துவிடலாம் என்று பேசி வைத்திருந்தோம். 

பொதுவாக உள்ளூர் இளைஞர்கள் பத்து பேர்களைத் திரட்டிக் கொள்வதுதான் விநியோகத்தில் வசதியாக இருக்கிறது. அவர்களால்தான் கூட்டம் வராமல் கட்டுப்படுத்த முடியும், கூட்டம் வந்தாலும் ஒழுங்குபடுத்த முடியும். அதனால் யாராவது உதவி கோரி பேசும் போது- இதுவரை ‘எனக்கு உதவுங்க’ என்று ஒருவர் கூட அழைக்கவில்லை; ‘எங்க ஊருக்கு உதவுங்க’ என்றுதான் கேட்டார்கள். இப்பொழுது யோசித்தால் அது நெகிழ்ச்சியாக இருக்கிறது- அப்படி யாராவது அழைக்கும் போது  ‘யாராவது படிச்ச பையன் இருந்தா பேசச் சொல்லுங்க...என்னென்ன ஏற்பாடுகளைச் செய்யணும்ன்னு நாங்க பேசறோம்’ என்று சொல்லிவிடுவது வழக்கம். 

அந்த கிராமத்திலிருந்தும் அப்படியொரு இளைஞர் பேசினார். ‘நீங்க எந்தக் கட்சியும் இல்லையே’ என்றேன். இல்லை என்றார். தெளிவாகவே பேசினார். மக்களைக் கணக்கெடுப்பது எப்படி, பட்டியல் எப்படி இருக்க வேண்டும், பொருள் விநியோகத்திற்கென என்னவிதமான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்றெல்லாம் சொல்லிவிட்டோம். கிட்டத்தட்ட அனைத்தும் முடிவு செய்யப்பட்டுவிட்டது.  கடைக்காரரிடமும் சொல்லியாகிவிட்டது. அநேகமாக இன்று மதியமோ அல்லது நாளை மதியமோ கொடுத்து முடித்திருக்கலாம்.

இன்று காலையில் அழைத்து ‘பொருள் கொடுக்கும் போது உள்ளூர் பிரெசிடெண்ட் பக்கத்தில் இருக்கணும்ன்னு சொல்லுறாருங்க’ என்றார்.  

இதுவரைக்கும் எந்த ஊரிலும் கட்சிக்காரர்களை வைத்துச் செய்யவில்லை. அப்படித்தான் செய்ய வேண்டும் என்றால் நாங்கள் வரவேயில்லை என்று சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டித்துவிட்டேன். அரசு தாமஸ் அவர்களை அழைத்து நிலைமையை விளக்கிய போது ‘எதுக்கும் நீங்களே பிரெசிடெண்ட்கிட்ட பேசிப்பாருங்க’ என்றார். அதுவும் நல்ல ஐடியாவாகத் தெரிந்தது. அந்தப் பையனை அழைத்து  ‘பிரெசிடெண்ட் நெம்பர் தாங்க’ என்றால் ‘அதெல்லாம் தரக்கூடாதுன்னு சொல்லுறாங்க’ என்றான். கோபம் வந்துவிட்டது.

உள்ளூரில் ஒரு காரியம் செய்யலாம் என்று முன் வந்தால் நீங்கள்தான் எங்களுக்கு உதவ வேண்டும். எண்ணைக் கூட நீங்கள் தரவில்லையென்றால் நாங்கள் என்ன செய்ய முடியும் என்று கேட்டால் ‘என்ன கோபப்படுறீங்க’ என்று கேட்டான். அதன் பிறகு அந்த ஊரிலிருந்து ஆரம்பத்தில அழைத்த பெண்மணி இணைப்பில் வந்தார். அவர்தான் இந்த இளைஞரிடம் தொடர்பு ஏற்படுத்தித் தந்தவர். அவரும் ‘என்ன இருந்தாலும் உள்ளூர்காரங்க கூட இருக்கணும்ல’ என்றார்.

‘உங்களுக்கு உதவி வேணும்ன்னா கேளுங்கம்மா...அதை எப்படி செய்யணும், யாரை வெச்சு செய்யணும்ன்னு எல்லாம் பாடம் நடத்தாதீங்க’ என்றேன். இவர்கள் சொல்கிறார்கள் என்று ஒரு கட்சிக்காரனை அழைத்து வைத்து பொருட்களை வழங்கினால் இன்னொரு ஊருக்குச் சென்றால் அங்கேயும் இதே மாதிரி அழுத்தம் வரும். ஒரு முறை சமரசம் செய்து கொண்டால் மறுக்கவே முடியாது. ‘அவங்களை மட்டும் கூப்பிட்டீங்க?’ என்பார்கள். முடியாது என்று முழுமையாக மறுத்துவிட்டேன். இடைப்பட்ட நேரத்தில் அரசு தாமஸ் எப்படியோ அவர்கள் ஊர் தலைவரை அழைத்து பேசிவிட்டார். அந்த மனிதருக்கு இதெல்லாம் ஒன்றுமே தெரியவில்லை போலிருக்கிறது. பிறகு ஏன் இவர் பெயரை வைத்து ஒன்றிய கவுன்சிலர், பஞ்சாயத்து கவுன்சிலரையெல்லாம் உள்ளே அழைத்தார்கள் என்று புரியவில்லை. 

மொத்தம் எண்பத்தைந்து வீடுகள் இருக்கின்றன. அத்தனை பேர்களிடமும் நம்மால் பேச முடியாது. இப்படி யாராவது முன் வருகிறவர்கள் உள்ளரசியல் செய்தால் விலகிக் கொள்வதுதான் நல்லது. வேறு யார் மூலமாக செல்லலாம்தான். ஆனால் இத்தகைய ஆட்கள் குடைச்சல் தரத் தொடங்குவார்கள். இருக்கும் பிரச்சினைகளில் இதையெல்லாம் சமாளித்துக் கொண்டிருக்க வேண்டும். விலகிக் கொள்வதுதான் நல்லது.

எல்லாமே நமக்கு அனுபவம்தானே?

காலையில் அமெரிக்க வாழ் நண்பரொருவர் அழைத்திருந்தார். அவருடைய கல்லூரி நண்பர்கள் பணம் திரட்டியிருக்கிறார்கள். தமிழகத்தில் இருக்கும் அவர்களின் நண்பரிடம் ஒப்படைத்து உதவி செய்யச் சொல்லியிருக்கிறார்கள். அவரால் பெரிய அளவில் செலவு செய்ய இயலவில்லை என்றார்கள். கடினமான காரியம்தான். ஊரடங்கு காலத்தில் பொருட்களை வாங்கி, மூட்டை கட்டி, வாகனம் ஏற்பாடு செய்து, இடத்தை அடையாளம் கண்டறிந்து, அங்கிருக்கும் மக்களின் பட்டியல் தயாரித்து, டோக்கன் வழங்கி, நெரிசல் இல்லாமல் வழங்கிவிட்டு வர வேண்டுமென்றால் நிறைய திட்டமிடலும் கொஞ்சம் அனுபவமும் அவசியம். 

‘பணத்தை நிசப்தத்துக்கு அனுப்பி வைக்கட்டுமா?’ என்றார். 

‘ஒவ்வொரு ஊரிலும் மனிதர்கள் பஞ்சத்தில் இருக்கிறார்கள். ஆங்காங்கே உதவுவதுதான் சரியாக இருக்கும். ஒருவேளை உங்களால் செலவே செய்ய முடியவில்லை என்கிற நிலை வந்தால் மட்டும் அடுத்தவர்களுக்கு அனுப்பி உதவச் சொல்வது குறித்து யோசியுங்கள்’ என்றேன். இது எல்லோருக்குமே பொருந்தும். நம்மில் யாருமே ஓர் சிறு எல்லையைத் தாண்டிச் சென்று உதவ முடியாத சூழலில் இருக்கிறோம். அதனால் அக்கம்பக்கத்தில் இருக்கும் இயலாதவர்களுக்கு நம்மால் இயன்ற உதவிகளைச் செய்வதுதான் இப்பொழுது காலத்தின் அவசியம்.

பெரும்பாலானவர்கள் வீடுகளை விட்டு வெளியில் வராததால் எளிய மனிதர்களின் பிரச்சினைகள் குறித்து அநேகமாக யோசிப்பதில்லை. தெரிவதுமில்லை. சில நாட்களுக்குப் பிறகோ அல்லது மாதங்களுக்குப் பிறகோ மக்கள் வெளியில் வருவதற்கான சூழல் அமையும் போது தங்களின் கண்ணீர் கதைகளை நம்மிடம் பகிர்ந்து கொள்ளக் கூடும். எல்லோரும் நம்மிடம் அழப்போவதில்லை. நம்மை அறிந்தவர்கள்தான் அப்படி அழுது சொல்வார்கள். அப்படியானவர்களை யோசித்து அவர்கள் அழுவதற்கான வாய்ப்பில்லாமல் இப்பொழுதே உதவிட முடியுமென்றால் அது நம் காலத்தில் நாம் செய்யும் மிகப்பெரும் உதவியாக இருக்கும். 

Apr 24, 2020

குணம்

குடியிருப்புகளில் வழங்கிய பொருட்கள் தவிர பத்து குடும்பங்களுக்குத் தேவைப்படும் அரிசி, மளிகையை தனியாக எடுத்து வைத்திருந்தோம். ‘சிரமப்படுகிறவர்கள்’ என நன்கறிந்த சிலருக்குக் கொடுப்பதற்கான பொருட்கள் அவை. வயதான பெண்மணிகள் இருவரைத் தெரியும். இருவருமே அறுபத்தைந்து வயதைத் தாண்டியவர்கள். ஒரு மூதாட்டி தனியாக வசிக்கிறார். துணை யாருமில்லை. இன்னொரு மூதாட்டியும் அவரது கணவரும் வசிக்கிறார்கள். கணவரால் நடக்க முடியாது. படுத்த படுக்கை. இந்த பாட்டிதான் அந்த மனிதரை கவனித்துக் கொள்கிறார். இரு மூதாட்டிகளுக்கும் அருகருகே வீடு.  கட்டிடப் பணியாளர்கள். உழைத்துச் சம்பாதிக்கிறார்கள். சமீபமாக வருமானத்துக்கு வழியில்லை. அந்தப் பெண்மணிகளின் வீடு எங்கே இருக்கிறது எனத் தெரியாது. அவர்களுடன் பணிபுரியும் இன்னொரு கட்டிடத் தொழிலாளியை அழைத்தேன். அவருக்கும் மிகுந்த சிரமம்தான். பல நாட்களாக வேலை இல்லை. 

‘நீங்க ஒரு பையை எடுத்துக்குங்க; இன்னும் ரெண்டு பையைக் கொண்டு போய் அந்த பாட்டியிடம் கொடுத்துடுறீங்களா?’ என்றேன். 

அவர் ‘ரெண்டு பேருக்கும் ஒரு பை போதுங்க..மூணு பேர்தானே..பிரிச்சுக்குவாங்க’ என்றார். ஒருவேளை அவர் சொல்வது சரியாக இருந்தால் மிச்சமிருக்கும் பையை இன்னொருவருக்குக் கொடுக்கலாம். 

‘சரி, நீங்க ஒண்ணு எடுத்துட்டு அந்த பாட்டிகளுக்கு ஒண்ணு கொடுத்துடுங்க’ என்று சொல்லியிருந்தேன். 

மாலையில் அவரும், அவரோடு பணிபுரியும் இரண்டு ஆண்களையும் அழைத்து வந்தார். அவர்களுக்கும் சிரமம்தான் என்றாலும் அந்த பாட்டிகள் அளவுக்கு மோசமில்லை. ஆனாலும் அவர்களுக்கும் உதவுவதில் தவறில்லை. அவர்கள் மூவருக்கும் ஒரு பையை வாங்கிக் கொண்டார்கள். இதைக் கொண்டு வைத்துவிட்டு வந்து பாட்டிகளுக்கு கொண்டு போய்த் தருகிறோம் என்றார்கள். இரண்டு நாட்கள் கடந்துவிட்டன. ஆனால் சத்தமே இல்லை. இத்தனைக்கும் அவர்களை நன்கறிவேன். கேட்கலாமா என்று தோன்றுகிறது. ஏன் சங்கடப்படுத்த வேண்டும் என்று ஒரு தயக்கம். தங்களால் முடியாது என்றாவது சொல்லியிருக்கலாம்! மனிதர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள் என்று புரிபடுவதேயில்லை? எவ்வளவுதான் பஞ்சம் வந்தாலும், சூழல் சிக்கலானாலும் ‘தான் பிழைத்தால் போதும்’ என்றுதான் இருப்பார்களா? தம்மை விட தாழ்ந்திருக்கும் இரண்டு மூதாட்டிகளுக்கு பொருட்களைக் கொண்டு போய் தருவதில் என்ன ஆகிவிடும்?

சரி போகட்டும்.

மனிதர்கள் எல்லோரையும் நாம் ஒரே வகைமைக்குள் அடக்கிவிட முடிவதில்லை. அப்படி நாம் அடக்கிவிடுவதற்கான வாய்ப்பை காலமும் சூழலும் உருவாக்கித் தருவதேயில்லை. 

ரமேஷ் நல்ல நண்பர். அரசு மருத்துவமனையில் மனநல ஆலோசகராக இருக்கிறார். தற்காலிகப் பணியாளர்தான். பெரிய சம்பளமில்லை. ஆனால் மாஸ்க் வாங்கிக் கொடுக்கிறார், கையுறைகளை வாங்கிக் கொடுக்கிறார். எப்பொழுது பார்த்தாலும் வண்டிக்குள்ளிருந்து இவற்றை எடுத்து நீட்டுகிறார். தம் சக்திக்கு உதவிக் கொண்டிருக்கிறார். முதியவர்களைத் தேடித் தேடி பொருட்களை வாங்கித் தருகிறார். இரண்டு நாட்களுக்கு முன்பாக நடக்க முடியாத ஒரு முதிய பெண்மணியொருவர், ரமேஷை தடுத்து நிறுத்தி ‘ஏதாவது இருந்தா கொடுத்துட்டு போ கண்ணு’ என்று கேட்டிருக்கிறார். அப்பொழுது இவரிடம் கைவசம் எதுவுமில்லை.

அந்தப் பக்கமாகச் சென்றிருந்தோம். ‘வாங்கண்ணா...அந்த பாட்டியை பார்த்துட்டு வரலாம்’ என்று அழைத்தார். பாட்டி தனியாக அமர்ந்திருந்தார். ஆள் துணை யாருமில்லை. ‘சிரமமா இருக்குதுங்களா?’ என்றதற்கு எந்த வழியுமில்லை என்று சொன்னார். இரண்டு நிமிடங்கள்தான் பேசியிருப்போம். ஆனால் அந்த இடைவெளியில் பொருட்களை ஏற்றிச் செல்லும் வண்டி கிளம்பிவிட்டது. அந்த வண்டிக்காரர் கன வேகம். ஓட்டுநரின் எண்ணும் கைவசமில்லை. இனி என்ன செய்வது? ‘ஒரு பை எடுத்து வைக்கிறேன் ரமேஷ்...நாளைக்கு கொடுத்துடலாம்’ என்றேன். ‘அதை ஏங்கண்ணா தள்ளிப் போடணும்?’ என்று வண்டியை முறுக்கிக் கிளம்பிவிட்டார். சில மாதங்களுக்கு முன்பாகத்தான் பைக்கிலிருந்து விழுந்து மருத்துவமனையில் அனுமதித்திருந்தார்கள். அவர் திரும்பி வரும் வரை திக் திக்கென்றிருந்தது. எவ்வளவு வேகத்தில் சென்றாரோ தெரியவில்லை- ஒரு பையை வாங்கி வந்து அந்த பாட்டிக்கு கொடுத்துவிட்டார்.

வீட்டிற்கு வந்தும் கூட இதை நினைத்துக் கொண்டிருந்தேன்.

உண்மையில் பேரிடர்களும், களப் பணிகளும் விதவிதமான மனிதர்களை அடையாளம் காட்டுகின்றன. சமூகத்தின் அடிமட்டத்தில், விளிம்புநிலை மனிதர்களையும் காண முடிகிறது, என்னால் செய்ய இயலவில்லை, என் சார்பில் நீங்கள் உதவ முடியுமா என்று கேட்டு வரும் மேல்தட்ட மனிதர்களையும் காண முடிகிறது. எந்தச் சமயத்தில் எந்த மனிதர் உடன் நிற்பார், யார் காலை வாருவார்கள், சுயநலமிகள் யார், அடுத்தவர்களுக்கு உதவ வேண்டுமானால் எதைப் பற்றியும் அலட்டிக் கொள்ளாதவர்கள் யாரென்றெல்லாம் புரிந்து கொள்ள முடிகிறது. 

மனிதர்களை வாசிப்பதைவிட, அவர்களைப் புரிந்து கொள்ளுதலைவிட எந்த புத்தகம் சிறந்த புத்தகமாக இருந்துவிடப் போகிறது? நேற்று புத்தக தினத்தில் ‘உங்களை மாற்றிய புத்தகம்’ எது என்பது மாதிரியான கேள்விகளை பலரும் கேட்டுக் கொண்டிருந்தார்கள். மனிதன் மகத்தான சல்லிப்பயல் என்று ஜி.நாகராஜன் எழுதியதை அனுபவத்தில்தான் புரிந்து கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். புத்தகங்கள், சினிமாக்களைவிட மனிதர்களே மனிதர்களை மாற்றுகிறார்கள். மனிதர்களைச் சந்திக்க முடிந்தால், அவர்களோடு பழக முடிந்தால் அதுவே சிறந்த வாசிப்பு. மனிதர்களின் பல்வேறு குணங்களும், வஞ்சகமும், சூழ்ச்சியும், பரோபகாரமும்தான் என்னையும் உங்களையும் தட்டி நெகிழ்த்துகிறது. கால ஓட்டத்தில் சக மனிதனை புரிந்து கொள்கிறவன் அந்த மனிதனிடமிருந்து தப்பிவிடுகிறான். புரிந்து கொள்ள முடியாதவனும், தன்னைப் பிறர் புரிந்து கொள்ள அனுமதிக்காதவனும் சுரண்டலும் நசுங்குதலுமாகவே வாழ்க்கையை வாழ்ந்து முடிக்கிறார்கள்.

அரசு தாமஸூம், அருணும், சில நண்பர்களும் சேர்ந்து கொரோனாவில் நிசப்தம் செய்த பணிகளை, ஒரு சிறு தொகுப்பாக உருவாக்கி வாட்ஸப்பில் சுழல விட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி. ஒரு கை தட்டி ஓசை எழுவதில்லை. இந்த எந்நூறு குடும்பங்களின் சிறு புன்னகைக்குப் பின்னால் எத்தனை மனிதர்களின் பங்களிப்பு இருக்கிறது என்பது நிசப்தம் வாசிக்கும் அனைவருக்குமே தெரிந்திருக்கும். துணை நிற்கும் அனைவருக்கும் நன்றி. 


அடுத்த இருநூறு அல்லது முந்நூறு வீடுகளுக்கு உதவுவதற்கான பணிகளைத் தொடங்க வேண்டும் என நினைக்கிறேன். தினசரி அழைப்புகள் வருகின்றன. பசி வருத்துவதாகச் சொல்கிறார்கள். இன்னமும் சில நூறு வீடுகளின் பசியாற்றிவிடலாம் என்றுதான் நினைக்கிறேன்.

Apr 23, 2020

மறுபடியுமா?

மீண்டும் ஒருமுறை ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்று விவாதிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். அப்படியொரு அறிவிப்பு வருமானால் நிலைமை மிக மோசமாகிவிடும். கிராமங்களில், விளிம்பு நிலை மனிதர்களை மட்டும் கணக்கில் வைத்துக் கொண்டு சொல்லவில்லை. இருபது பணியாளர்களை வைத்துக் கொண்டு தினசரி இரண்டாயிரம் ரூபாயை பணியாளர்களின் உணவுக்கு செலவு செய்து கொண்டிருக்கும் தறி குடோன்காரர்களையும் கூட கவனத்தில் எடுத்துக் கொண்டுதான் சொல்கிறேன். சிறு பட்டறை, சைக்கிள் கடை, கடிகார ரிப்பேர் செய்கிறவர்கள் என சகலரையும் கணக்கில் எடுத்துக் கொள்ளலாம். தம்மிடம் பணியாற்றும் பணியாளர்களில் யாராவது ‘நாங்க கிளம்பறோம்’ என்று சொன்னால் சரி என்று சொல்லிவிடும் உரிமையாளர்கள் அதிகமாகிக் கொண்டிருக்கிறார்கள். நேற்றுக் கூட இங்கேயிருந்து ஒடிசாவுக்கு மிதிவண்டியிலேயே கிளம்பிச் செல்லும் சில பணியாளர்களின் வீடியோவை நண்பர் ரமேஷ் அனுப்பியிருந்தார். அவரே எடுத்த வீடியோ அது. 

இதற்கான மனநிலை, சூழல் என்ன என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும். இவ்வளவு நாட்களாக திடீரென்று அரசாங்கம் ஊரடங்கை விலக்கிக் கொண்டால் பணியாளர்கள் கிடைக்கமாட்டார்கள் என்றுதான் உரிமையாளர்கள் கருதிக் கொண்டிருந்தார்கள். அதனால்தான் பணியாளர்களுக்கான உணவுப் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருந்தார்கள். ஊரடங்கு நீட்டிப்பு, நீட்டிப்பு என்று தொடர்வது பெரும்பாலான சிறு குறு முதலாளிகளிடையே குழப்பத்தையும் அச்சத்தையும் உண்டாக்கியிருக்கிறது. எந்த வருமானமும் இல்லாமல் இருபது, முப்பது பேர்களுக்கு தினசரி இரண்டு மூன்றாயிரம் ரூபாய் செலவு செய்வது எந்தவிதத்திலும் அவசியமானதில்லை என்று நினைக்கிறார்கள். அதுவுமில்லாமல் இருபது பேர்களை ஓரிடத்தில் தங்க வைத்து வேலை எதுவுமில்லாத போது அவர்களுக்குள்ளாக சண்டை வருகிறது. இருக்கிற பிரச்சினைகளில் இதுவொரு புதிய பிரச்சினை. அப்படியே ஒருவேளை மே 3 ஆம் தேதியன்று ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் கூட தேவைகள் உருவாகாமல் பொருட்களை உற்பத்தி செய்து வைத்தால் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துவிடும் என அஞ்சுகிறார்கள். எனவே சூழல் ஓரளவுக்கு சரியாகும் வரைக்கும், தேவைகள் அதிகரிக்கும் வரைக்கும் முழுவேகத்தில் உற்பத்தியைச் செய்வதற்கான மனநிலை முதலாளிகளிடமில்லை. அதனால் பணியாளர்கள் கிளம்புவதாகச் சொன்னால் கையில் ஐநூறு அல்லது ஆயிரம் ரூபாயைக் கொடுத்து அனுப்பி வைத்துவிடுகிறார்கள்.

முதலாளிகள் அப்படி நினைத்தால் வேலை இல்லாமல் வெறுமனே சோற்றைத் தின்றுவிட்டு தொழிற்சாலைக்குள்ளேயே அடங்கிக் கிடப்பதை சிறைச்சாலை போலக் கருதுகிறார்கள் பணியாளர்கள். தமது குடும்பத்தை நோக்கி, தம் ஊரை நோக்கிக் கிளம்பிச் சென்றுவிடுவதையே பலரும் விரும்புகிறார்கள் என்கிறார்கள்.

தினக்கூலிகள் பிரச்சினை, சிறு குறு தொழிலதிபர்கள் பிரச்சினை, வாங்கும் திறன் அதிகரிப்பு, அதற்கான பணப்புழக்கம்- இவற்றையெல்லாம் கணக்கிட்டால் இப்பொழுதே கூட ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் கூட நிலைமை சீரடைய பல மாதங்கள் வரைக்கும் தேவைப்படும் என்றுதான் தெரிகிறது. வாகன உற்பத்தி, மென்பொருள், கால்-சென்ட்டர் மாதிரியான கார்போரேட் துறைகளைப் பற்றி எதுவும் சொல்லவில்லை. அது தனிக்கணக்கு. உள்ளூரை நம்பி, சிறு வணிகத்தை  நம்பி வாழும் ஐம்பது சதவீதத்துக்கும் அதிகமான மக்களின் நிலைமைதான் இது.

ஒருவேளை மே 3 ஆம் தேதிக்குப் பிறகும் ஊரடங்கை நீட்டிப்பார்களேயானால் அதன் விபரீதம் மிக மோசமாக இருக்கும். 

சரி, ஊரடங்கை விலக்கி, பழையபடிக்கு எல்லாவற்றையும் திறந்துவிட்டுவிடலாம்தான். ‘நோய்’ பற்றிய குழப்பமும் அச்சமும் என்னவாகும்? நோய் அடங்கிவிடுமா என்று கேட்கக் கூடும். சோறு முக்கியமா? உயிர் முக்கியமா என்பார்கள். அவர்களிடம் திருப்பிக் கேட்பதெல்லாம் இன்னும் நாற்பது நாட்களுக்கு அடைத்து வைத்திருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். நாற்பது நாட்களில் எண்ணிக்கை பூஜ்யம் ஆகிவிடுமா? நாற்பது நாட்களுக்குப் பிறகு தைரியமாக வெளியேறுவோமா? 

அரசு மருத்துவமனைகளிலிருந்து நோயாளிகள் குணமடைந்து வெளியேறுகிறார்கள் என்ற அரசு தரப்பின் எண்ணிக்கையை மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது. புதிய நோய்த்தொற்றார்கள் யார், அவர்களுக்கு எப்படி தொற்று ஏற்பட்டது என்றெல்லாம் கவனித்தால் இன்னமும் பல மாதங்களுக்கு கொரோனா நமக்குள்ளேயேதான் சுற்றிக் கொண்டிருக்கும் என்று புரிந்து கொள்ளலாம். சூழல் இப்படி இருக்கும் போது எத்தனை நாட்கள் கழித்துத் திறந்துவிட்டாலும் திறந்துவிட்டவுடன் எண்ணிக்கை பெருகியே தீரும்.

மருந்தும், தடுப்பூசியும் தயாராகி வரும் வரைக்கும் இந்த எண்ணிக்கை பூஜ்யத்தை அடைய வாய்ப்பே இருக்கப் போவதில்லை. பிறகு அடைத்து அடைத்து எத்தனை நாட்களுக்கு காலத்தை ஓட்டப் போகிறோம்? பிற நாடுகளை ஒப்பிடும் போது இங்கு பரவலின் வேகம் குறைவு, இறப்பின் எண்ணிக்கை குறைவு என்றெல்லாம் உலாத்திக் கொண்டிருக்கும் செய்திகளின் உண்மைத்தன்மையை அரசு ஆய்வுப்பூர்வமாக உறுதி செய்ய வேண்டும் அல்லது மறுக்க வேண்டும். நோய்ப்பரவலே இல்லை என்று முரட்டுவாக்கிலான நம்பிக்கையூட்டலாக இல்லாமல், நோய்ப்பரவலின் வேகம் குறைவு, இந்தியர்கள் எளிதில் மீண்டுவிடலாம் என்பது மாதிரியான ‘பாஸிட்டிவான’ நம்பிக்கைச் செய்திகள் இருப்பின் அதைப் பரவச் செய்ய வேண்டும். ஆபத்துகள் இருப்பின் அதைப் பற்றி மெல்ல மெல்ல மனதில் பதிய வைக்க வேண்டும். அப்படித்தான் நோயின் வீரியத்தைவிடவும் மக்களின் பயத்தையும் நடுக்கத்தையும் குறைக்க முடியும். அதுதான் தொழிற்துறையும், பொருளாதாரமும், மக்களின் மனநிலையும் சீரடைவதற்கு ஏதுவாக இருக்கும்.

நோயாளிகள், மரணங்கள் ஆகியவை குறித்து துல்லியமான எண்ணிக்கையை அரசு வெளியிட வேண்டும். இந்தியாவில் இதுவரையிலும் கொரோனா பாதிப்பினால் 682 பேர்கள் இறந்திருக்கிறார்கள். 130 கோடி மக்கட்தொகையில் இது மிகச் சொற்பம். அப்படியே இறந்தவர்களில் வயது, பிற நோய்க்காரணிகள் குறித்தெல்லாம் அறிவியல் பூர்வமான ஆய்வு அவசியம். ஒருவேளை கொரானா தாக்காமல் இருந்திருந்தால் இவர்களின் வாழ்நாள் எதிர்பார்ப்பு என்பது உள்ளிட்ட விவரங்களும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். நோய் தாக்கப்பட்டு மீண்டவர்களின் எண்ணிக்கை, அவர்கள் எப்படி மீண்டார்கள், அவர்களுக்கான உடல் பாதிப்பு என்ன போன்ற தரவுகளை வைத்து பல ஆய்வுகளைச் செய்து முடிவுக்கு வர முடியும். இத்தகைய ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் மெல்ல மெல்ல ஊரடங்கினைத் தளர்த்தி என்னவிதமான பாதிப்புகள் உண்டாகின்றன என ஆய்ந்து அதற்கேற்றவாறு இயல்பு நிலையைத் திருப்ப வேண்டும்.

முதற்கட்ட ஊரடங்கின் முடிவிலேயே இதைச் செய்திருக்க வேண்டும். ஆனால் மீண்டும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிப்பைத்தான் செய்தார்கள். இரண்டாம் கட்ட ஊரடங்கிலாவது இது போன்ற தளர்வுகள் நடக்கும் என எதிர்பார்த்தால் பத்து நாட்களாகியும் அப்படியான நடவடிக்கைகள் எதுவுமில்லை என்பது அலறச் செய்கிறது. இன்னமும் பத்து நாட்களில் இரண்டாம் கட்ட  ஊரடங்கும் முடிவுக்கு வரப் போகிறது. ஒருவேளை மீண்டும் நீட்டிப்பை செய்தாலும் மூன்றாம் கட்ட ஊரடங்கின் முடிவிலும் இப்படியேதான் இருப்போம். சில மாநிலங்களில் வேண்டுமானால் எண்ணிக்கை குறைந்திருக்கலாம். ஆனால் இந்தியாவின் பிற மாநிலங்களில் நோயாளிகள் இருக்கக் கூடும். அங்கேயிருந்து மனிதர்கள் இங்கே வர மாட்டார்களா அல்லது இங்கேயிருந்து அங்கே செல்ல மாட்டார்களா? அதற்கான தீர்வுகள் என்னவாக இருக்கும் என்பதையெல்லாம் யோசிக்க வேண்டியிருக்கிறது.

‘நீயே இவ்வளவு யோசிக்கிறியே, அரசாங்கம் யோசிக்காதா?’ என்று கேட்பார்கள். அரசாங்கம் அப்படி யோசித்திருந்தால் கடந்த ஒரு மாத காலத்தில் சிறு சிறு மாறுதல்களையாவது கொண்டு வந்திருக்குமே என்று யோசிக்க வேண்டியதில்லையா?

இன்னமும் எத்தனை நாட்களுக்குத்தான் பூட்டியே வைத்திருக்கப் போகிறோம்? ஓரளவு பொருளாதார ரீதியில் வலுவான ஆட்கள், சம்பளம் வந்துவிடும் என்கிற தைரியமுள்ளவர்கள் வேண்டுமானால் பேசிக் கொண்டிருக்கலாம். ஆனால் தினக் கூலிகள், அன்றாடங்காய்ச்சிகள், சிறுதொழில் முனைவோரின் நிலைமை எல்லாம் பரிதாபமாக இருக்கிறது. ஆனால் மீண்டும் ஊரடங்கை நீட்டித்தால் பட்டினிச்சாவு தவிர்க்க இயலாததாகிவிடும். அதைச் சொல்லியே தீர வேண்டும். இதைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் எதைச் செய்தாலும் அது அர்த்தமற்றதுதான்.

Apr 21, 2020

அடுத்த இரண்டு...

அலிங்கியம், முத்துக்கவுண்டம்பாளையம் ஆகிய இரண்டு ஊர்களில் இருநூறு குடும்பங்களுக்கு பொருட்கள் வழங்கியதையும் சேர்த்தால் எழுநூற்றியெழுபது குடும்பங்களுக்கு உதவிகளை வழங்கியிருக்கிறோம்.

ஏற்கனவே உதவிய இடங்களைத் தொடர்பு கொண்டு அலைபேசி எண்ணை பெற்றுக் கொண்ட கவினும், அவரது நண்பர்களும் முத்துக்கவுண்டம்பாளையத்தில் டோக்கன் வழங்குதல், ஒருங்கிணைத்தல் ஆகிய பணிகளைச் செய்து வைத்திருந்தனர். பொருட்களை எடுத்துக் கொண்டு இரண்டு வாகனங்களில் கிளம்பினோம். இந்த முறை அரசு தாமஸ், கார்த்திகேயன், நிவாஸூடன், தரணி மில் சரவணன், ரமேஷ் ஆகியோரும் வந்திருந்தனர். ரமேஷ் தனிப்பட்ட முறையில் நிறையப் பேருக்கு உதவிகளைச் செய்து கொண்டிருக்கிறார்.

முதலில் முத்துக்கவுண்டம்பாளையத்திற்கு சென்றிருந்தோம்.
இரண்டு குடியிருப்புகள் அருகருகே இருக்கின்றன. பெரிய ஆலமரத்தினடியில் மக்கள் தள்ளித் தள்ளி நின்றார்கள். இரண்டு வண்டிகளில்- ஒன்றில் அரிசியும் இன்னொன்றில் மளிகையும் இருந்தன. இரண்டிலிருந்தும் பொருட்களை எடுத்து வழங்குவதில் எந்தச் சிரமமும் இல்லை. சில நிமிடங்கள் அவர்களிடம் ஆசுவாசமாக பேசுவதற்கும் வாய்ப்பு கிடைத்தது. அரிசியும் பருப்பும் எண்ணெயும் இந்தத் தருணத்தில் முக்கியமானதாக இருக்கலாம். ஆனால் அது மட்டுமே முக்கியமில்லை. அடுத்த தலைமுறை கல்வி கற்பதாகவும், கற்ற கல்விக்கு சரியான வேலை தேடுவதாகவும், சம்பாதித்த பணத்தை சேமித்து வாழ்வின் அடுத்த கட்டத்தை அடைவதாகவும் அமைய நாம் நிறைய பேச வேண்டியிருக்கிறது; பத்து நாட்கள் கழித்து வருகிறோம் என்றெல்லாம் பேசினோம்.  

அடுத்ததாக அலிங்கியம் என்ற கிராமத்துக்குச் சென்றோம். 


இதுவரை பொருட்கள் வழங்கிய பகுதிகளிலேயே மிகச் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருந்தார் அந்த ஊரில் ஒருங்கிணைத்த ரவிக்குமார். ஒவ்வொரு குடும்பத்துக்கும் டோக்கன் வழங்கி, அந்த எண்ணையும் குடும்பத்தினரின் பெயரை ஒரு நோட்டிலும் எழுதி, ஏழெட்டு இளைஞர்களை வைத்து மக்கள் வரிசையாக நிற்க தள்ளித் தள்ளி வட்டம் போட்டு அதில் மக்களை இடைவெளி விட்டு நிறுத்தி வைத்திருந்தார்கள். முக்கால் மணி நேரத்தில் கொடுத்து முடித்துவிட்டோம்.

நேற்று எழுதியிருந்தது போல கிராமப்புறங்களில் பொருட்களை விநியோகிப்பது மிக எளிதாக இருக்கிறது. மக்கள் சொன்னபடி கேட்கிறார்கள். கூட்டம் சேர்வதில்லை. ‘எல்லோருக்கும் கிடைக்கும்’ என்று சொன்னால் நம்புகிறார்கள். சிரமமே இல்லாமல் வழங்கிவிட்டோம். இந்த ஊர்களைப் போல ஏற்பாடுகளைச் செய்தால் எந்த பயமும் இல்லாமல் காரியங்களைச் செய்ய முடியும். நேற்றிரவு அவ்வளவு நிம்மதியாக இருந்தது. 

தகவல் பரவலாகச் சென்று சேர்ந்துவிட்டது என நினைக்கிறேன். தொடர்ச்சியாக அழைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஊரடங்கு தளர்வாகிவிடும் என்றுதான் பலரும் நம்பிக் கொண்டிருந்தார்கள். இன்று ஆட்டோவில் மைக் செட் கட்டி அறிவித்துவிட்டார்கள். ‘ஊரடங்கில் எந்தத் தளர்வுமில்லை எனவும், மறு அறிவிப்பு வரும் வரைக்கும் எந்தப் பணியும் நடக்கக் கூடாது’ என்று அறிவித்தபடியே செல்கிறார்கள். கட்டிடப்பணியாளர்களில் சிலரிடம் நேற்று பேசிய போது ‘ரொம்ப கஷ்டம் சார்...இன்னையிலிருந்து வேலைக்கு வரலாம்ன்னு சொல்லியிருக்காங்க...இனி சமாளிச்சுக்கலாம்’ என்றார்கள். ஆனால் மறுபடியும் அவர்களின் வருமானத்திற்கு தடை விழுந்திருக்கிறது. 

வெவ்வேறு கிராமங்களிலிருந்து அழைப்புகள் வருகின்றன. எல்லோரிடமும் ஒரே பதிலைத்தான் சொல்கிறேன். ‘இப்போதைக்கு இரண்டு நாட்கள் இடைவெளி எடுத்துக் கொள்கிறோம்’ என்று சொல்லியிருக்கிறேன். இன்றும் நாளையும் எங்கும் செல்வதாக இல்லை. இரண்டு நாட்கள் கழித்து நிலைமை எப்படி இருக்கிறது என்று இப்பொழுது பொருட்கள் வழங்கிய ஊர்களில் உள்ள மக்கள் வழியாக விசாரிக்க வேண்டும். 

முத்துக்கவுண்டம்பாளையம் கவின் ஒரு விஷயம் சொன்னார். வெகு சிலருக்கு மட்டுமே தோட்ட வேலைகள் கிடைக்கின்றன என்றும், ஆறு பேர்கள் உள்ள தங்கள் வீட்டில் அப்பா மட்டும் வேலைக்குச் செல்வதாகவும் அவருக்கும் ஒரு நாள் கூலி வெறும் இருநூறு ரூபாய்தான் என்றார். முன்பு ஐநூறு அல்லது அறுநூறு ரூபாய் கூலியாகக் கிடைத்த வேலை அது. ஒருவேளை அவரது அப்பா மறுத்தால் அந்தப் பணி வேறொருவருக்குச் சென்றுவிடக் கூடும். அதைச் செய்து தர ஆட்கள் தயாராக இருப்பார்கள். பசி மனிதர்களை கீழே பிடித்து இழுக்கத் தொடங்கியிருக்கிறது. நோயைத் தடுக்கும் அதே வேகத்தை வேலையிழப்பினைத் தடுத்தல், தனிநபர் வருமானத்தை உறுதி செய்தல் போன்றவற்றிலும் கவனம் செலுத்த வேண்டும் என நினைக்கிறேன். 

தோட்ட வேலைக்கு இதுதான் நிலைமை என்றால் பிற தொழில்களைப் பற்றியெல்லாம் கேட்கவே வேண்டியதில்லை. தமிழக கிராமங்கள் திணறத் தொடங்கியிருக்கின்றன. ஆங்காங்கே அடுத்தவர்கள் உதவ வேண்டும் என்பது காலத்தின் கட்டாயமாகியிருக்கிறது.   ‘சமூகத் தொற்று இல்லை’ என்பது மட்டும் உறுதியான தகவல் என்றால் துணிந்து இறங்கிவிடலாம். அந்த நம்பிக்கை வரவேயில்லை. உள்ளூர் அரசு மருத்துவரிடம் விசாரிக்கும் போது ‘ஆறேழு சந்தேகக் கேஸ் அனுப்பியிருந்தோம். எல்லாமே நெகடிவ்தான்’ என்றார். அந்த தைரியத்தில்தான் சுற்றிக் கொண்டிருக்கிறோம். ஆனால் சென்னையில் பத்திரிக்கையாளர்கள், மருத்துவர்களுக்கு பாஸிடிவ் என்கிற செய்தி வரும் போது திக்கென்றிருக்கிறது. ஓரடி பின்னால் வைக்கத் தோன்றுகிறது. இரண்டு நாட்கள் போகட்டும். மீண்டும் களமிறங்குவோம். 

Apr 20, 2020

கிராமப்புறம் Vs நகர்ப்புறம்

நேற்று 164 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கிவிட்டோம். மொத்தமாக இதுவரை 570 குடும்பங்களுக்கு வழங்கியாகிவிட்டது. நேற்று நாங்கள் மொடச்சூர் பகுதியில் இருக்கும் குடியிருப்புக்குச் சென்றிருந்தோம். இதற்கு முன்பு வழங்கிய நானூறு குடும்பங்களும் கிராமப் பகுதிகளில் வசிக்கிறவர்கள். கிராமப்புற குடியிருப்புகளில் இத்தகைய உதவிப் பணிகளைச் செய்வது எளிதாகத் தெரிகிறது. சாதியப் பிரிவினையின் காரணமாகவோ என்னவோ மற்றவர்களும் உள்ளே வருவதில்லை. நேற்று நகர்ப்புறத்திற்குள் சென்ற போது அப்படியில்லை. சற்று சிரமமாகிவிட்டது. நிறையப் பேர் வந்துவிட்டார்கள். 

அந்தக் குடியிருப்பில் இருக்கும் தமிழ்செல்வன் என்னும் இளைஞர்தான் முதலில் தொடர்பு கொண்டார். அவர் எம்.எஸ்.சி அக்ரி படித்துவிட்டு பணியில் இருக்கிறார்.  ‘ரொம்ப சிரமப்படுறாங்க சார்’ என்றார். விசாரித்த போது பிற நண்பர்களும் அதையேதான் சொன்னார்கள். தமிழ்செல்வனை அழைத்து ‘நீங்க பத்து பசங்களை வெச்சு அவங்க மூலமா டோக்கன் கொடுத்துடுங்க..டோக்கன் இருக்கிறவங்களுக்கு மட்டும்தான் பொருட்களைக் கொடுக்க வேண்டும்’ என்று முதலே அறிவுறுத்தியிருந்தோம். அவர்களும் வீடு வீடாகச் சென்று டோக்கன் வழங்கி, நாம் சொன்னதைச் சரியாகச் செய்திருந்தார்கள்.


ஆனால் பொருட்கள் நிரப்பிய வாகனத்தோடு நாங்கள் சென்று நின்ற பிறகு அக்கம்பக்கத்து ஆட்கள் ‘எனக்கு கொடு; உனக்கு கொடு’ என்று வந்துவிட்டார்கள். எல்லோருமே மூத்தவர்கள், வலு குறைந்தவர்கள்தான்- ஆனால் டோக்கன் இல்லாத ஒருவருக்குக் கொடுத்தாலும் கூட அதன் பிறகு வரும் கூட்டத்தை சமாளிக்க முடியாது. 

பேசிப் பேசியே சமாளிக்க வேண்டியிருந்தது. 

நேற்று மதியம் கடுமையான வெயில். வியர்வை பெருக்கெடுத்தது. சற்று நேரத்திற்குள்ளாக களைப்பு தட்டிவிட்டது. நகர்ப்புற மக்களும் பாவம்தான். ஆனால் நகர்ப்புறங்களில் அரசாங்கம் மாதிரியான வலுவான அமைப்புகள் செய்ய வேண்டும். அவர்கள்தான் செய்ய முடியும். தனிமனிதர்கள் செய்வது பெரிய சிரமம்.  நான் கூட சற்று விலகி நின்றுவிட்டேன். சிலர் நெருங்கி வந்து பேச முயற்சித்தார்கள். பயமாக இருந்தது. ஆனால் நிழற்படங்களைப் பார்க்கும் போது நன்கு விலகி நின்றிருக்கிறேன் என்றுதான் தெரிகிறது. ஆனால் உடன் வரும் நண்பர்களில் அரசு தாமஸ் தொண்டை வறண்டு போகுமளவுக்கு கத்தி கூட்டத்தை ஒழுங்கு படுத்துகிறார், கார்த்திகேயனும் மோகனும் வரிசையில் நிற்பவர்களிடம் டோக்கன் வாங்குகிறார்கள், நிவாஸ் எதைப் பற்றியும் அலட்டிக் கொள்ளாமல் கையுறை கூட இல்லாமல் பொருட்களை விநியோகம் செய்கிறார். நேற்று பல் மருத்துவர் சந்தோஷ் உடன் வந்திருந்தார். இவர்களை பார்க்க சற்று பயமாகத்தான் இருக்கிறது. சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். பாதிப்பு யாருக்கு என்றாலும் பாதிப்புதானே?

பெருமளவு விலகியே இருக்கிறோம். ஆனாலும் சற்று நெருடல் இல்லாமல் இல்லை.
மாலை வீடு திரும்பிய போது களைப்பாக இருந்தது. இரவு ஒன்பது மணிக்கெல்லாம் உறங்கிவிட்டேன். காலையில் கார்த்திகேயன் அழைத்து ‘டயர்டா சார்?’ என்றார். எதுக்குக் கேட்கிறார் என்று புரியாமல் ‘ஆமாம் சார்’ என்றேன். ‘எனக்கும் களைப்பாக இருந்தது’ என்றார். நம் உடல் வலு குறைந்துவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று சொன்னேன். சில நண்பர்கள் ‘பத்திரமா இருங்க’ என்று சொல்லும் போது பயம் வந்துவிடுகிறது. எல்.ஐ.சி சீனு என்றொரு நண்பர் இருக்கிறார். அன்பின் காரணமாக இரண்டு என்.95 முகக்கவசங்களை வாங்கி கொடுத்தனுப்பியிருந்தார். பிற சமயங்களில் எப்படி களைத்தாலும் பிரச்சினையில்லை. சூழல் சரியில்லாத போது நம் உடல் வலு குன்றாமல் இருக்க வேண்டும்.

நம் மக்கள் செய்கிற செயலையெல்லாம் பார்த்தால் அதிர்ச்சியாக இருக்கிறது. இறந்தவர்களைக் கூட அடக்கம் செய்யவிடாமல் கல்லெறிகிற காட்டுமிராண்டித்தனத்தை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? இவற்றைப் பார்க்கும் போது நம்மையும் நம்மைச் சார்ந்தவர்களையும் முதலில் தற்காத்துக் கொள்ள வேண்டும் என்றுதான் தோன்றுகிறது.

நேற்று மாலை வீட்டிற்கு வந்த பிறகு மோகனை அழைத்துப் பேசினேன். ‘என்ன மோகன், கூட்டம் வந்துடுச்சு?’ என்று கேட்டதற்கு ‘ஆமா மணி எனக்கும் பயமாத்தான் இருந்துச்சு...ஆனா பசியோட இருக்காங்களேன்னு அசால்ட்டா இருந்துட்டேன்’ என்றார். பயப்படுகிறாரோ என நினைத்தேன். ‘எங்க போறதுன்னாலும் சொல்லு...வர்றேன்’ என்றார். இவ்வளவு அர்ப்பணிப்புடன் இருக்கும் நண்பர்களின் ஆரோக்கியமும் முக்கியமல்லவா?இன்று மதியம் இரண்டு கிராமங்களுக்கு செல்லவிருக்கிறோம். சுசில் ட்ரேடர்ஸ் நிறுவனம்தான் பொருட்களை எடுத்துச் செல்ல வாகனம் வழங்குகிறார்கள். வாடகை எதுவுமில்லை. டீசல் செலவு கூட அவர்களுடையது. அவர்களை நன்றியோடு நினைத்துக் கொள்கிறோம். முத்துக்கவுண்டன்பாளையம்- புதிய காலனி, பழைய காலனி- 80 குடும்பங்கள், அலிங்கியம் - 120 வீடுகள்; இவை இரண்டுமே நகரத்திலிருந்து தள்ளியிருக்கும் கிராமங்கள். இந்த இருநூறு குடும்பங்களுக்கும் கொடுத்து முடிக்கும் போது இரண்டாம் கட்டமாக முந்நூற்று அறுபத்தைந்து வீடுகளுக்கு கொடுத்து சேர்த்திருப்போம். மொத்தமாகக் கணக்கிட்டால் 770 குடும்பங்கள். முதலில் திட்டமிட்டபடி, இன்னமும் இருநூற்று ஐம்பது குடும்பங்களுக்கு கூட உதவ முடியும். நிலைமையை அனுசரித்துச் செய்யலாம்.

விசாரித்தவரையிலும் இன்றிலிருந்து மெல்ல பணிகளைத் தொடங்குகிறார்கள் போலிருக்கிறது. எங்கள் தெருவிலேயே கட்டிடப் பணியாளர்கள் பணிக்கு வந்திருக்கிறார்கள். ‘குழந்தைகளை வைத்துக் கொண்டு சாப்பாட்டுக்குக் கூட வழியில்லாமல் திண்டாடிவிட்டோம்’ என்றார்கள். இனி சமாளித்துக் கொள்வீர்களா என்று கேட்டேன். ‘இனி வேலை இருந்தால் சமாளிச்சுக்கலாம்’ என்றார்கள். மில் தொழிலாளர்கள் மாதிரியானவர்களுக்கும் இன்னமும் வாய்ப்பில்லைதான். ஆனால் ஒரு நாள் இடைவெளி விட்டு நிலைமையைத் தெரிந்து கொண்டு மேற்கொண்டு உதவிகளை வழங்குவதை திட்டமிட்டுக் கொள்ளலாம் என நினைக்கிறேன்.

தொடர்ந்து அழைப்புகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. இன்று காலையிலிருந்து கூட மூன்று புதிய ஊர்களிலிருந்து கேட்டுவிட்டார்கள். முதலில் ஒத்துக் கொண்ட இடங்களுக்கு வழங்கிவிட்டு பரிசீலிக்கிறோம் என்று சொல்லியிருக்கிறேன். முந்தாநாள் வந்த அழைப்புகள் அனைத்தும் நன்றி தெரிவித்த அழைப்புகள் என்று சொல்லியிருந்தேன் அல்லவா? நேற்று  முதல் வரும் அழைப்புகள் அனைத்தும் ‘எங்களுக்கு எப்போ தருவீங்க?’ ‘உங்க வீடு எங்க இருக்கு?’ ‘வந்தா கிடைக்குமா’ என்கிற அழைப்புகள். 

கடந்த சில நாட்களாக தினசரி சென்று வருகிறோம். உடன் வரும் நண்பர்களால்தான் தொடர்ந்து பணி நடந்து வருகிறது. அவர்களது ஆரோக்கியத்தைக் கருத்திற் கொண்டு அடுத்த ஒன்றிரண்டு நாட்கள் இடைவெளிக்குப் பிறகு உண்மையிலேயே உதவிக்கான தேவைகள் இருப்பின் மீண்டும் பணிகளைத் தொடரலாம் எனத் தோன்றுகிறது.

தொடர்ந்து உடன் பயணிக்கும் அனைவருக்கும் நன்றி!

Apr 19, 2020

நிசப்தம்- வரவு செலவு

நிசப்தம் அறக்கட்டளைக்கு நன்கொடையளித்த சில நண்பர்கள் ‘பணம் வந்துவிட்டதா?’ என்று கேட்டார்கள். பணம் வந்து கொண்டிருக்கிறது. யாருடைய பணம் என்று தெரியவில்லை. வழக்கம்போல வங்கி ஸ்டேட்மெண்ட்டை எடுத்து தளத்தில் பதிவு செய்துவிட்டால் அனைவருமே சரி பார்த்துக் கொள்ள ஏதுவாக இருக்கும். 
கடந்த 10 ஆம் தேதியிலிருந்து இன்று வரையிலும் 22 பரிமாற்றங்கள் நடந்துள்ளன. அவற்றில் மூன்று பரிவர்த்தனைகள் அறக்கட்டளையிலிருந்து பணம் வழங்கப்பட்ட விவரம். (பரோடா வங்கி பல சமயங்களில் விதவிதமான சொதப்பல்களைச் செய்யும். இன்று தேதி 19.04.2020. ஆனால் இன்று நடந்த பரிவர்த்தனைகளை 20.04.2020 என்று காட்டுகிறது)

முதற்கட்டமாக 415 குடும்பங்களுக்குத் தேவையானவற்றை வாங்கி வழங்கியிருக்கிறோம். ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆயிரம் ரூபாய்க்கான பொருட்கள். 406 குடும்பங்களுக்கு பொருட்களை வழங்கியாகிவிட்டது. கைவசம் 9 குடும்பங்களுக்குத் தேவையான பொருட்கள் இருக்கின்றன. பொருட்களுக்குரிய தொகையான ₹ 4,15,000.00 ஐ கடைக்காரர்களுக்கு கொடுத்திருக்கிறோம்.

இரண்டாம் கட்டமாக உதவிகளை வழங்கும் குடும்பங்களுக்கு சில பொருட்களைக் குறைத்து ஒவ்வொரு குடும்பத்துக்கும் ₹ 510.00 என்கிற அளவில் பொருட்களை வாங்கி அறுநூறு குடும்பங்களுக்கு வழங்க திட்டமிட்டிருக்கிறோம். இரண்டாம் கட்டமாக வழங்கப்படும் பொருட்களின் விவரம்.

1
வைகை அரிசி 5 கி
₹ 200.00
2
து. பருப்பு 1/2 கி
₹ 51.50
3
கொள்ளு 1/2 கி
₹ 21.00
4
கல் உப்பு 1கி
₹ 8.00
5
தோசை புளி 1/4 கி
₹ 42.50
6
வரமிளகாய் 1/4 கி
₹ 45.00
7
சீரகம் 50 கி
₹ 12.00
8
பெரிய கடுகு 100 கி
₹ 6.20
9
. எண்ணெய் ½ லிட்டர்
₹ 52.00
10
மிளகாய் தூள் 1 பாக்.
₹ 12.50
11
மஞ்சள் தூள் 1 பாக்கெட்
₹ 8.00
12
பெருங்காயம் 1 பா.
₹ 6.25
13
சேமியா 2 பாக்கெட்
₹ 19.50
14
வெ.ரவை 1 பாக்கெட்
₹ 26.00

சோப்பு உள்ளிட்ட பொருட்களைத் தவிர்த்துவிட்டு கடலை எண்ணெய் சேர்த்திருக்கிறோம். இன்று மதியம் 164 குடும்பங்களுக்கு வழங்குவதற்காகச் செல்ல வேண்டும். நாளை அநேகமாக இருநூறு குடும்பங்களுக்கு வழங்கிவிடுவோம். 

அறக்கட்டளையில் ₹ 25,14,851.18 இன்றைய தேதியில் இருக்கிறது. இரண்டாம் கட்டமாக பொருட்களை வழங்கிவிட்டு, கடைக்காரர்களுக்கு பணத்தை வழங்கிவிட்டு மீண்டுமொருமுறை வங்கி ஸ்டேட்மெண்ட்டை புதன்கிழமையன்று (22.04.2020) அன்று பதிவு செய்கிறேன்.

ஏதேனும் கேள்விகள், சந்தேகங்கள் அல்லது கருத்து இருப்பின் தெரியப்படுத்தவும்.

நன்றி.

Apr 18, 2020

அற்றார் அழிபசி

நேற்று மதியம் மேலும் இருநூறு குடும்பங்களுக்கான உணவுப்பொருட்களை வழங்கிவிட்டோம். 

நேற்றைய முன் தினம் எம்.ஜி.ஆர் காலனி மக்களுக்கு உதவிகளைச் செய்துவிட்டு வந்த பிறகு இரவில் அழைத்து ‘எங்களுக்கு நிசப்தம் எவ்வளவோ செய்யுது..நிசப்தம் செய்யும் உதவிகளில் எங்களுடைய பங்களிப்பும் ஏதாவது வகையில் இருக்க வேண்டும்’ என்றார்கள். பொதுவாகவே யாராவது ‘நாங்களும் உதவ விரும்புகிறோம்’ என்று கேட்டால் மறுக்கக் கூடாது. மறுப்பதில்லை. உதவுகிற பலருக்கும் ‘தம்மால் எப்படி உதவ முடியும்’ என்றுதான் தெரிவதில்லையே தவிர தொண்ணூறு சதவீதம் பேருக்கும் ‘நாமும் உதவ வேண்டும்’ என்கிற எண்ணம் உள்ளே ஓடிக் கொண்டேதான் இருக்கும். அனுபவம் இருப்பவர்களால் ‘இவர்களால் அடுத்தவர்களுக்கு எப்படி உதவ முடியும்’ என்று பெரும்பாலும் கணித்துவிட முடியும். 

எம்.ஜி.ஆர் காலனி மக்கள் பெரும்பாலும் கட்டிடங்களுக்கு கான்க்ரீட் வேலைக்குச் செல்கிறவர்கள். அவர்களிடம் சிறு சரக்கு வாகனம் ஒன்றிருக்கிறது. அடுத்து உதவி செய்யப் போகும் இடங்களுக்கு ‘ஆட்டோவையும் பொருட்களை விநியோகிக்க நான்கைந்து இளைஞர்களையும் அனுப்பி வையுங்கள்’ என்று கேட்டுக் கொண்டேன். டீசலுக்கான பணத்தை கொடுத்துவிட்டேன். இளைஞர்கள் உற்சாகமாக வந்திருந்தார்கள். நேற்றைய முன் தினம் போலவே இரண்டு ஆட்டோக்கள் நிறைய உதவிப் பொருட்களை ஏற்றிக் கொண்டு கிளம்பினோம். முதலில் அளுக்குளி காலனி. விவசாயக் கூலிகளுக்கு வேலை இருக்கிறது என்று சில நாட்களுக்கு முன்பாக எழுதியிருந்தேன் அல்லவா? அது தவறான தகவல். தோட்டம் வைத்திருக்கும் விவசாயிகளும் கூட பல இடங்களில் ஆட்களை வேலைக்கு அழைப்பதில்லை என்றார்கள். ‘கைவசம் பணமில்லை. கூலி கொடுக்க வழியில்லை’ என்பதைத்தான் அம்மக்களில் பெரும்பாலானவர்கள் சொன்னார்கள். வரிசையாக நான்கைந்து தெருக்கள் இருந்தன. அவர்களிடம் முன்பே டோக்கன் கொடுத்து வைத்திருந்ததால் பெரிய சிரமமில்லை. வரிசையாக வந்து வாங்கிக் கொண்டார்கள்.

ஒரு குடியிருப்பை எடுத்துக் கொண்டால் அங்கேயிருக்கும் ஒரு வீடு பாக்கியில்லாமல் கொடுத்துவிட வேண்டும். பலருக்குக் கொடுத்து சிலருக்குக் கொடுக்கவில்லையென்றால்தான் சலசலப்புகள் உருவாகும். கடலூர் பகுதிகளில் இத்தகைய காரியங்களில் அதைப் பார்த்திருக்கிறேன். அரசு தாமஸ் மிகச் சரியான ஆட்களைப் பிடித்து அவர்களிடம் டோக்கன்களைக் கொடுத்து சரியான விநியோகம் செய்யச் சொல்லியிருந்தார். 

அங்கே ஐம்பது குடும்பங்களுக்கு பொருட்களைக் கொடுத்துவிட்டு அடுத்து குருமந்தூர் மேடு சென்றோம். அதுவும் அருந்ததியர் இன மக்கள் வாழும் குடியிருப்பு. அங்கே தொண்ணூறு குடும்பங்கள் இருந்தன. மூன்று தெருக்கள். மூன்று தெருக்களிலும் எந்தப் பிரச்சினையுமில்லாமல் கொடுத்துவிட முடிந்தது. நம்பியூரில் குடியிருப்பாக இல்லாமல் மிகச் சிரமப்படும் மாணவர்கள் குடும்பங்களைத் தனித்தனியாக தலைமை ஆசிரியர் இளங்கோ அழைத்து பள்ளியில் இருக்கச் சொல்லியிருந்தார். அவர்களது குடும்பங்களுக்கு வழங்கிவிட்டு ஒழலக்கோவில் பஞ்சாயத்தில் வசிக்கும் வெளியூரைச் சார்ந்த ரேஷன் அட்டை உட்பட எந்த வழியுமில்லாத பத்து குடும்பங்களுக்கும் வழங்கிவிட்டு அம்பேத்கர் நகருக்கு வந்தோம்.

இந்தக் காலனி மக்கள் குறித்துச் சொல்லியாக வேண்டும். 

இருபது வருடங்களுக்கு முன்பாக பாம்பே டைப் கக்கூஸ்கள் எங்கள் ஊர் தெருக்களில் இருந்தன. செப்டிக் டேங்க் இல்லாமல் நேரடியாக தரையில் விழும் படியான அமைப்பு. தெருவிலிருந்தபடியே ஒரு தகரத்தை தூக்கி வழித்துக் கொள்ளும்படியாக இருக்கும். யாரோ ஒரு பாவப்பட்ட மனிதன் வாளி ஒன்றை எடுத்து வந்து அந்தத் தகரத்தைத் தூக்கி வழித்துச் செல்வான். அவர்களை எங்கள் ஊரில் பன்னியாண்டிகள் என்பார்கள். ஒரு சாக்கடைப் பள்ளத்தில் மூன்றடி உயரத்தில் சிறு குடிசையில் வாழ்ந்து வந்தார்கள். பன்றிகள் நிறையச் சுற்றிக் கொண்டிருக்கும். இப்பொழுதெல்லாம் அவர்கள் அங்கு இல்லை. முன்னேறியிருக்கக் கூடும் என நம்பியிருந்தேன். உள்ளூர் நண்பன் மோகன் அழைத்து ‘மணி, உனக்கு விசு தெரியும்ன்னு நினைக்கிறேன்..நம்மூர்ல இருந்தாங்க...இப்போ அம்பேத்கர் நகரில் இருக்காங்க’ என்று சொன்ன போதுதான் பழைய நினைவுகள் மெல்ல மெல்ல மேலேறி வந்தன.

இன்னமும் அவர்கள் இருக்கிறார்கள். மலம் அள்ளுவதில்லையே தவிர பெரிய மேம்பாடு இல்லை. தெருக்களில் குப்பைகளில் உதிர்ந்த ரோமங்களை பொறுக்கி அவற்றிலிருந்து சவுரி செய்து விற்கிறார்கள். நேற்று பார்த்த போது இவர்களை எப்படி இவ்வளவு நாட்கள் தெரியாமல் விட்டு வைத்திருந்தோம் என்று அங்கலாய்ப்பாக இருந்தது. எழுதப் படிக்கக் கூடத் தெரியவில்லை. சமூகத்தின் விளிம்பு என்னவென்றால் இவர்களைக் காட்டலாம். அரிசி மூட்டையை வாங்கிக் கொண்ட ஒரு மூதாட்டி ‘உம்பேரைச் சொல்லி சாப்பிட்டுக்கிறேன் சாமீ’ என்று சொன்னார். 

நிசப்தம் நண்பர்கள் அத்தனை பேருக்கும் இந்த வாழ்த்தும் அன்பும் அர்ப்பணம். நம் ஒவ்வொரு பேரின் பெயரையும் சொல்லி அந்தப் பாட்டி பசியாறுவார்.

நேற்றைய விநியோகத்தில் உதவ நிவாஸ், மோகன் உள்ளிட்ட பல நண்பர்கள் கலந்து கொண்டார்கள். அவர்களுக்கும் நன்றி.

மனப்பூர்வமாகச் சொல்கிறேன் - இதுவரையிலும் இத்தனை அலைபேசி அழைப்புகளை என் வாழ்நாளில் எதிர்கொண்டதில்லை. நேற்று மட்டும் குறைந்தது இருநூறு பேர்களாவது பேசியிருப்பார்கள். அத்தனையும் நன்றி சொல்லும் அழைப்புகள். மிகைப்படுத்திச் சொல்லவில்லை. ஒருவர் அழைப்பார். அவர் நன்றி சொல்லி வாழ்த்திவிட்டு அலைபேசியை அருகில் நிற்பவருக்குக் கொடுப்பார். இப்படியே வரிசையாக ஒவ்வொரு அழைப்பிலும் குறைந்தது பத்து பேர்களாவது பேசினார்கள். எந்த அழைப்பையும் தவிர்க்கவில்லை. எவ்வளவு வருத்தமும் துன்பமும் இருந்திருந்தால் இப்படியெல்லாம் அழைத்துப் பேசுவார்கள் என்று நினைத்துக் கொள்கிறேன். பெரும்பாலானவர்கள் பெண்கள். மகிழ்ந்தும் நெகிழ்ந்தும் வாழ்த்துகிற அந்த நன்றி என்னையும் உடையச் செய்துவிட்டது. எந்த உதவியையும் விட பசி தீர்ப்பதே பெரும்பணி என்று அனுபவப்பூர்வமாக உணர்ந்தேன். பொருட்களை வழங்கிய ஒவ்வொரு பகுதியிலிருந்தும் அழைத்துப் பேசினார்கள். பேசிக் கொண்டிருக்கிறார்கள். வாட்ஸப்பில் செய்திகளை அனுப்புகிறார்கள். இதைவிட ஒரு ஆத்மதிருப்தியை அடைய முடியுமா என்று தெரியவில்லை. கனவு முழுவதும் மக்களை தள்ளித் தள்ளி நிற்கச் சொல்வது போலவும் பொருட்களை வழங்குவது போலவுமே இருந்தது. 

எம்.ஜி.ஆர் காலனி மக்களைப் போலவே இந்த மக்களும் நிசப்தம் பணியில் தொடர்ந்து பங்கெடுப்பார்கள். அதற்கான திட்டங்கள் மனதில் ஓடத் தொடங்கியிருக்கின்றன. 

‘மீன் கொடுப்பதைவிட மீன் பிடிக்கக் கற்றுக் கொடுக்கலாமே’ என்று ஒருவர் கடந்த பதிவின் பின்னூட்டத்தில் கேட்டிருந்தார். நீருமில்லாத மீனுமில்லாத குட்டையில் எப்படி மீன் பிடித்துக் கற்றுக் கொடுப்பது என்று தெரியவில்லை. 

பல குடியிருப்புகள் இப்படியான பசித்துன்பத்தில் இருப்பதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இன்னமும் நானூறு முதல் ஐநூறு குடும்பங்களுக்கு உதவலாம் என்று தோன்றுகிறது. கருத்துகள் இருப்பின் தெரியப்படுத்துங்கள். நிச்சயமாக பரிசீலிக்கலாம்.

சில நிழற்படங்கள்...

உங்கள் ஒவ்வொருவருக்கும் என் உணர்வுப்பூர்வமான நன்றி.

Apr 16, 2020

துளி

இன்று இருநூறு குடும்பங்களுக்கு பொருட்களை வழங்கிவிட்டோம். 165 குடும்பங்கள் எம்.ஜி.ஆர் காலனியில் வசிப்பவர்கள். அவர்கள் தரப்பிலிருந்தே இளைஞர்கள் கடைக்கு வந்திருந்தார்கள். அனைவருக்கும் நிசப்தம் அறிமுகம் உண்டு. நிசப்தம் வழியாக படிக்கிறவர்களும் இருந்தார்கள். ‘நம்ம சார்’ என்பார்கள். ஒவ்வொரு குடும்பத்துக்கும் இரண்டு மூட்டைகள்- ஒன்றில் அரிசி 10 கிலோ; இன்னொன்றில் மளிகைப் பொருட்கள் என வண்டியில் ஏற்றிக் கொண்டு முன்னே சென்றார்கள். நான் பைக்கில் பின்னால் சென்றேன். அரசு தாமஸூம், கார்த்திகேயனும் காரில் வந்தார்கள். மூவருக்கு மேல் அனுமதியுமில்லை; நாங்கள் அழைக்கவுமில்லை. 

பொருட்கள் வந்து சேர்வதற்கு முன்பாகவே காலனிக்குச் சென்றுவிட்டோம். சரியாக அதே நேரத்தில் அலுவலகத்திலிருந்து அழைத்துவிட்டார்கள். கவனம் முழுக்கவும் அலுவலகம் பக்கம் திரும்பிவிட்டது. சில நிமிடங்களில் வண்டி வந்து சேர்ந்தது. அவர்கள் ஒரு கோவில் கட்டி வைத்திருக்கிறார்கள். அவர்களின் காவல் தெய்வம். அந்தக் கோவிலுக்கு முன்பாக மக்கள் சேர்ந்திருந்தார்கள். இளைஞர்கள் படு சுட்டி. தனிமனித இடைவெளி விட்டு நிற்க வைத்திருந்தார்கள். அதற்கு முன்பு ஓர் ஆச்சரியத்தைச் சொல்ல வேண்டும். தமது குடியிருப்புக்கு முன்பாக தடுப்பு கட்டி, ‘வெளியாட்களுக்கு அனுமதி இல்லை’ என்று எழுதி வைத்திருக்கிறார்கள். அது செக்போஸ்ட் மாதிரி. இளைஞர்கள் அவர்களுக்குள்ளாகவே காவல் காக்கிறார்கள். வெளியே யாரையும் விடுவதில்லை. ஏதாவது கடைக்குச் செல்ல வேண்டுமென்றால் நோட்டில் நேரம் குறித்து வைத்துக் கொள்கிறார்கள். உள்ளே நுழையும் போது வந்தாலும் கை கழுவிக் கொண்டுதான் வர வேண்டும். வெளியாட்கள் யாரையும் அனுமதிப்பதில்லை. எப்பொழுதுமே கட்டுப்பாடான மக்கள் அவர்கள். கொரோனாவிலும் அதே கட்டுப்பாடு.

மக்களிடம் பேச ஒன்றுமில்லை. ‘உங்களுக்கு கஷ்டம் என்றார்கள். எல்லோருக்குமே இது கஷ்டமான காலம்தான். எங்களால் இயன்ற சிறு உதவி இது. இதை வைத்து அடுத்த பதினைந்து நாட்களைச் சமாளியுங்கள். வேலைக்குச் செல்லும் வாய்ப்பு உருவாகும் என நம்புவோம். ஒருவேளை தேவைப்பட்டால் மீண்டும் செய்கிறோம்’ என்று சொன்னேன். அடையாளமாக சிலருக்காவது கொடுங்கள் என்றார்கள். அவர்கள் ஒருவகையில் உடைந்து போயிருப்பதாகவே உணர முடிந்தது.

மேலும் முப்பத்தைந்து பேருக்கான உணவுப் பொருட்களை பஞ்சாயத்து தூய்மைப் பணியாளர்களுக்குக் கொடுத்திருக்கிறோம். மொத்தம் முப்பத்து நான்கு பணியாளர்கள். ராத்திரியும் பகலுமாக வேலை செய்கிறார்கள். உண்மையிலேயே இவர்கள் இல்லையென்றால் நாறிப் போய்விடுவோம். எதைப் பற்றியும் கவலைப்படாமல் பணியாற்றுகிறார்கள். உடல் களைத்து நோவெடுக்கும் அந்தி வேளையில் கொடுத்தனுப்பினோம். அவர்களுக்கு நாம் செலுத்து சிறு நன்றி அது.

இன்னமும் இரு நூறு குடும்பங்கள் பாக்கியிருக்கின்றன. முந்நூறு குடும்பங்கள்தான் முதலில் திட்டமிட்டோம். ஆனால் இன்னும் நூறு குடும்பங்கள் குறித்து தகவல் வந்தது. தெருக்களில் முடி பொறுக்கி சவுரி செய்து விற்பவர்கள், கூடை முடைந்து ஊருக்குள் விற்பவர்கள் என விளிம்பு நிலை மக்கள் வாழும் குடியிருப்பு அது. அவர்களையும் பட்டியலில் சேர்த்திருக்கிறோம். நாளைக்கு அவர்களுக்கான பொருட்களை வழங்கிவிட்டு விவரங்களை எழுதுகிறேன்.

எம்.ஜி.ஆர் காலனிக்கு இதற்கு முன்பு பல முறை சென்றிருக்கிறேன். அங்கு பெண்கள் பேசுவது அரிது. இன்று பொருட்களைக் கொடுத்துவிட்டு ஒரு கணம் அமைதியான போது பெண்கள் பேசத் தொடங்கினார்கள். ‘எங்களை நீங்கள் தத்து எடுத்த மாதிரி’ என்றெல்லாம் சொல்லத் தொடங்கினார்கள். என்னுடைய அனுபவத்திலிருந்து சொல்கிறேன்- நம்மால் உதவி பெறும் ஒருவர் நெகிழும் போது பேசவிடாமல் தடுத்துவிடுவதுதான் நல்லது. சிரித்துவிட்டு பேச்சை மடை மாற்றிவிட வேண்டும்.

எனக்கு அலுவலக வேலை இருக்கிறது என்று சொல்லிவிட்டு கிளம்ப எத்தனித்தேன். அவர்களில் சில பெரியவர்கள் பின்னாலேயே வந்தார்கள். ‘மன்னிச்சுக்குங்க...வேலை இருக்கிறது. அவசரமாகச் செல்ல வேண்டும். தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பி வந்தேன். 

வீடு வந்து சேர்ந்த பிறகு தாமஸ் சாரிடம் பேசினேன். ‘இன்னும் சில நிமிடங்கள் இருந்திருந்தால் பெண்கள் பேசியிருப்பார்கள்’ என்றார். கார்த்திகேயனை அழைத்த போது ‘அங்க பேசறதுக்கு எதுவுமில்லை’ என்றார். அவர் சொன்னது சரி.

இன்னும் சில கணங்கள் அவர்கள் முகங்களைப் பார்த்திருந்தாலும் கூட அந்தப் பெண்கள் பேசியிருப்பார்கள். வீட்டில் வறுமை சூழும் போது, உணவுக்கு தட்டுப்பாடு ஏற்படும் போது, அடுத்த இரண்டொரு நாளில் என்ன செய்யப் போகிறோம் என்று நினைத்து வருந்தும் போது, வீட்டில் பசி வந்துவிடுமோ என்று பதறும் தருணத்தில் யாரோ ஒருவர் ‘இந்தா’ என்று உதவிக்கரம் நீட்டும் போது பேசுவார்கள். யாராக இருந்தாலும் பேச்சு வந்துவிடும். ஆனால் பேசவே வேண்டியதில்லை. அனைத்தும் உள்ளுக்குள்ளேயே வைத்திருக்கட்டும். அந்த அன்பும் நெகிழ்வும் காலத்திற்கும் அவர்களுக்குள்ளேயே இருக்கட்டும். பேச விட்டு புளகாங்கிதம் அடைந்து என்ன செய்யப் போகிறோம்? 

இன்னும் சில நாட்கள் கழித்து நலம் விசாரிப்புக்காகச் சென்று பார்க்கும் போது அவர்கள் ஏதேனும் சொல்ல நினைத்தால் கேட்டுக் கொள்ளலாம். இந்தத் தருணத்தில் பேச்சும் வேண்டாம்; உடைந்து வழியும் கண்ணீரும் வேண்டாம்.

எம்.ஜி.ஆர் காலனி மக்களின் அடுத்த பதினைந்து நாட்களுக்கான பசியை நீக்கியிருக்கிறோம். நம் அனைவருக்கும் இதில் பங்கிருக்கிறது.  இப்படியான லட்சக்கணக்கான மக்கள் இருக்கிறார்கள்தான். இந்த உதவியானது பெருங்கடலில் கரைக்கப்பட்ட சிறு சந்தனவில்லை. ஏற்கனவே குறிப்பிட்டது போல மீச்சிறு உதவி. 

பயனாளிகளின் முகங்கள் தெரியும்படியான நிழற்படங்கள் அவசியமில்லை என நினைக்கிறேன். அடையாளத்திற்காக மட்டும் சில படங்கள்.


எப்பொழுதும் உடனிருக்கும் அனைத்து நிசப்தம் நண்பர்களுக்கும், நன்கொடையாளர்களுக்கும் மனப்பூர்வமான நன்றி. 

புதிய வெளிச்சம்

கடந்த இருபது நாட்களாகப் பேசிய வரையில் வேலைக்குச் செல்லும் பல நண்பர்களும் வேலை குறித்தே கவலைப்படுகிறார்கள்.  தொழில் செய்கிறவர்கள் இனிமேல் பொருளாதாரச் சூழல் எப்படி இருக்கும் என்றே யோசிக்கிறார்கள். நோய் குறித்தான பயமிருந்தாலும் பொருளியல் சார்ந்த யோசனைகள்தான் பலருக்கும்.  தொடர்ந்து இருபது நாட்கள் வீடு அடைவு என்பது பலரையும் குழப்பியிருக்கிறது. ஒருவிதமான பய உணர்வுதான். பேசுகிற நண்பர்களிடமெல்லாம் ‘பழைய நண்பர்கள் யாரிடமாவது பல நாட்களாக பேசாம இருந்தீங்கன்னா அவங்க கூட பேசுங்க’ என்று சொல்கிறேன். 

நம்மைச் சுற்றி எல்லாமே நெருக்கடியாக இருக்கும் போது பேச்சு மட்டுமே மனதை இலகுவாக்கும். ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரங்களைக் கூட ஃபோனில் பேசலாம். பேச்சுதான் குழப்பங்களை வடியச் செய்யும். அவசியமற்ற மன உளைச்சல்களையெல்லாம் அண்ட விடாமல் செய்கிற ஆற்றல் பேச்சுக்கு உண்டு என முழுமையாக நம்புகிறேன். சமீபமாக பெரும்பாலானவர்கள் ஆத்மார்த்தமாக பேசத் தொடங்கியிருக்கிறார்கள்.  ‘யார்கிட்டவாவது கொட்டணும்ன்னு இருந்தேன்’ என்று பேச்சுவாக்கில் வந்து விழுந்துவிடுகிறது.

பேச்சு ஒரு பக்கம் இருக்கட்டும். ஏன் பயப்படுகிறார்கள்? எந்தத் துறையாக இருந்தாலும் ஸ்திரத்தன்மையை அடைய ஒன்றரை முதல் இரண்டு வருடங்கள் தேவை என்று எதிர்பார்க்கிறார்கள். அதுவரைக்கும் எப்படித் தாக்குப் பிடிப்பது என்று பலரும் பயப்படுவதே காரணம். பல நிறுவனங்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களை அனுப்பிவிட்டார்கள். இன்னும் பல நிறுவனங்கள் சம்பளத்தில் பிடித்தம் செய்திருக்கின்றன. பல்வேறு நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பது உண்மை. அவர்களுக்கு வேறு வழியே இல்லை.  அதே சமயத்தில் சிலர் ‘இதுதான் வாய்ப்பு’ என்று கை வைக்கிறவர்களும் இருக்கிறார்கள். 

உதாரணமாக தனியார் கல்வி நிறுவனங்கள். அவர்கள் 2019-20 ஆண்டுக்கான கட்டணத்தை ஏற்கனவே மாணவர்களிடமிருந்து வசூலித்துவிட்டார்கள். அடுத்த ஆண்டுக்கான கட்டணத்தை ஜூன் மாதம்தான் வசூலிப்பார்கள். இப்பொழுது விடுமுறை விடுவதால் பேருந்துகளை இயக்க வேண்டியதில்லை, மின்சாரச் செலவு இல்லை, தண்ணீர் செலவு இல்லை. அவர்களுக்கு இலாபம்தான். ஆனால் பலரும் பாதிச் சம்பளத்தை பிடித்துக் கொண்டு கொடுத்திருக்கிறார்கள். எரிகிற வீட்டில் பிடுங்கிய மட்டும் இலாபம்!

சூழல் இப்படி இருக்கும் போது பொருளியல் பிரச்சினைகள் பற்றிய கவலை இருக்கும்தான். ஆனால் அது நம்மை ஆக்கிரமிக்கவிடக் கூடாது. 

தொழிற்துறை, வேலை வாய்ப்புகளில் பாதிப்பே இருக்காதா என்று கேட்டால் நிச்சயமாக இருக்கும். தொடர்ச்சியாக இயங்கி வந்த மிகப்பெரிய உலகச்சக்கரம் வலுக்கட்டாயமாக நிறுத்தப்பட்டிருக்கிறது. மீண்டும் பழையபடிக்குச் சுற்றுவதற்கு காலம் பிடிக்கும். சாதாரண மின்விசிறி கூட ஓட்டமெடுக்க சில வினாடிகள் தேவைப்படுகிறது. பெரும் சக்கரம் எட்ப்படி பழைய வேகத்திலேயே ஓடும்? ஒவ்வொரு துறை ஆட்களாக கேட்டுக் கொண்டிருக்கிறேன். பின்னலாடை துறைச் சார்ந்தவர்களிடம் பேசினால் ‘இப்பொழுது ஒரு சீசனுக்கான துணிகளை உற்பத்தி செய்து கொண்டிருந்தோம், உற்பத்தி செய்து ஏற்றுமதிக்காக தயாராகிக் கொண்டிருந்தோம் இனி அவற்றை என்ன செய்வோம் எனத் தெளிவில்லை’ என்கிறார்கள். நிலைமை சீரடையும் போது சீசன் மாறியிருக்கும். வேறொரு பருவத்திற்கான துணிகளைத் தயார் செய்ய வேண்டும். அப்படியானால் உற்பத்தி செய்யப்பட்ட ஆடைக்கான நஷ்டத்தை யாரோ ஒருவர் சுமந்துதானே தீர வேண்டும்? அப்படி சுமை இறங்குகிறவர் முடங்கிப் போவார். இப்படி கணிசமானவர்கள் பாதிப்படையும் போது தொழில் முடக்கம் தவிர்க்க முடியாதது என்றார்கள்.

பின்னலாடை தொழிலில் மட்டுமில்லை- வெவ்வேறு துறைகளில் வேறு மாதிரியான பிரச்சினைகள் இருக்கும். ஆக, அந்தச் சக்கரம் மெல்லத்தான் வேகம் எடுக்கும். அப்படி அசமஞ்சமாக ஓடிக் கொண்டிருக்கும் போது பணப்புழக்கம் குறைவாக இருக்கும், நிறுவனங்கள் மெல்ல நடை வைப்பார்கள், அவசியமற்ற செலவுகளைக் குறைக்கிறோம் என்கிற பெயரில் ஆட்களைக் குறைக்கப்படுவார்கள், புதிதாக ஆட்களை எடுப்பதில் தயக்கம் இருக்கும். எனவே வேலைச் சந்தையும் அசமஞ்சமாகத்தான் இருக்கும். 

சில கட்டுரைகளை வாசித்துக் கொண்டிருந்தேன். ஒரு சிறிய நம்பிக்கைக் கீற்று இருக்கிறது. 

பொதுவாக பொருளாதார நெருக்கடிகள் உலகின் ஒரு பகுதியைத் தாக்கும் போது இன்னொரு பகுதி பெரிய பாதிப்பில்லாமல் இயங்கிக் கொண்டிருக்கும். உதாரணமாக அமெரிக்காவில் வீடுகளின் மதிப்பு குறைந்து பொருளாதார மந்த நிலை ஏற்பட்ட போது அமெரிக்காவை நம்பி தொழில் நடத்திக் கொண்டிருந்த இந்திய நிறுவனங்கள் திணறின. அதே சமயம், ஐரோப்பிய நாடுகல், ஜப்பான் போன்ற பிற பகுதிகளில் நம் நாட்டு நிறுவனங்கள் ப்ராஜக்ட்களைத் தேடத் தொடங்கின. திணறிக் கொண்டிருக்கும் நாடுகளின் அரசாங்கங்கள் பணத்தை உள்ளே தள்ளிக் கொண்டிருப்பார்கள் பிற நாடுகள் அதை தமக்கான வாய்ப்பாக மாற்றிக் கொள்ள முயற்சித்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் கொரோனாவின் பாதிப்பு அப்படியானதில்லை. உலகத்தையே ஒரே சமயத்தில் முடக்கியிருக்கிறது. கிட்டத்தட்ட எல்லாமே standstill மாதிரியான நிலைதான். நிலைமை ஓரளவுக்கு ஒழுங்காகும் போதும்- சில மாதங்கள் கழித்து- எல்லோருமே பழைய வேகத்தை அடைய விரும்புவார்கள். அத்தனை பேரும் ஒன்று சேர்ந்து உழைப்பது மாதிரிதான். பெரும்பாலான நாடுகள் பெருமளவு நிதியை அள்ளிக் கொட்டக் கூடும். எனவே ஆரம்பகட்ட மந்தநிலைக்குப் பிறகு வேகம் மிக அதிகமானதாகவே இருக்கும்.

அபரிமிதமான வேகம் ஏற்படுமானால் அதற்கேற்பவே வேலை வாய்ப்புகளிலும் புத்தம் புதிய திறமைகளுக்கு அவசியமிருக்கும். ஒவ்வொரு மந்த நிலைக்குப் பிறகும் புதியதான தொழில்நுட்பங்களுக்கான தேவை மிக அதிகளவில் உருவாவதை பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்த முறையும் அதுதான் நடக்கும். மருத்துவத்துறை தொடங்கி தொழில்நுட்பம் வரைக்கும் சகல இடங்களிலும் புதிய நுட்பங்கள் நுழையும். நிறைய மாற்றங்கள் ஏற்படும். புதிய மாற்றங்கள்தான் சவால்களை உருவாக்கும். அந்தச் சவால்களை சரிக்கட்ட நிறைய மூளைகள் தேவை. ஆட்களுக்கான தேவை இருக்கும். பணம் புழங்கத் தொடங்கும். அதற்கு சற்று காலம் தேவைப்படக் கூடும். ஆனால் நிலைமை இப்படியே இருந்துவிடப் போவதில்லை. இடைப்பட்ட காலத்தில் சறுக்கினாலும் கூட எழுந்துவிடுவதற்கான வாய்ப்புகளும் தருணங்களும் நிறைய உருவாகும். அந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதற்கான மனதைரியத்தையும், உந்துதலையும் பெற்றிருப்பதுதான் அவசியம். பயமும், கவலையும் நம் ஆற்றலையெல்லாம் தின்றுவிட அனுமதிக்காமல் இருப்பதே நாம் இப்பொழுது செய்ய வேண்டிய மிகப்பெரிய காரியம். 

கொரோனாவினால் எல்லாமே சரிந்துவிடப் போவதில்லை. இது தற்காலிகமான மன உளைச்சல். தற்காலிக பின்னடைவு. அதைத்தாண்டி பெரிய அளவில் அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை. ஆரம்பத்திலிருந்தே சொல்லிக் கொண்டிருப்பது போல கால இடைவெளியில் கிடைப்பதைப் பற்றிக் கொண்டு, புதியதாக கற்றுக் கொண்டு, நண்பர்களிடம் பேசிக் கொண்டும் இருப்போம். மனம் இலகுவாகவே இருக்கட்டும். வெளிச்சம் நிச்சயம் வரும்!