Mar 30, 2020

பார்த்துக்கலாம் விடுங்க

தினசரி ஏழெட்டு நண்பர்களை அழைத்துப் பேசிக் கொண்டிருக்கிறேன். மாதச் சம்பளக்காரர்களைவிட தொழில் செய்பவர்களுடன்தான் பேச்சு அதிகம். இப்படியே மூன்று மாதம் நீடித்தாலும் பிரச்சினையில்லை என்றிருப்பவர்களைவிடவும் தினசரி சக்கரத்தைச் சுழற்றியே தீர வேண்டிய உழைப்பாளிகள், தொழில் முனைவோர் ஆகிய நண்பர்களுக்குத்தான் ஆறுதலும் தெம்பும் தேவையானதாக இருக்கிறது.  திக்குத் தெரியாத காட்டில் யாரோ தம் சிறகை ஒடித்துவிட்டதாகக் கூட பலரும் கருதுகிறார்கள்.  

சொந்தமாகத் தொழில் செய்து கொண்டிருக்கும் நண்பர் ஒருவரிடம் பேசிய போது ‘இந்த இருபத்தியொரு நாளை கூட ஓட்டிடலாம். ஆனால் அதற்கப்புறம் எப்படி எந்திரிச்சு நிக்கிறதுன்னு நினைச்சா மலைப்பா இருக்கு’ என்றார்.  அவர் சக்திமான். உற்சாகம் குறையாத மனிதர். அவரே சுணங்கிப் போயிருக்கிறார்.  எல்லோரிடமும் சொல்லும் வார்த்தைகளைத்தான். அவருக்கும் சொன்னேன் - ‘பார்த்துக்கலாம் விடுங்க’. 

பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி என ஒவ்வொரு அடியாக வாங்கி மெல்ல எழும் போது இப்படியொரு அடி. அதை நினைத்துத்தான் பயப்படுகிறார்கள். ஏதாவதொரு டானிக் எங்கோ ஒரு மூலையிலிருந்து கிடைக்க வேண்டியிருக்கிறது. அவர்களுக்கு மட்டுமில்லை. கிட்டத்தட்ட எல்லோருக்குமேதான். எனக்கும் உங்களுக்கும் கூட.

பாதிப்பு இருக்கும்தான். ஆனால் உலகமே எழுந்து நின்றுதானே தீர வேண்டும்? ஒருவேளை ஆறு மாதம் என்பது ஒரு வருடம் என்றாகலாம். ஆனால் இப்படியே நம் காலம் முழுவதும் நசிந்து கிடக்கவே போவதில்லை.

ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது. தமிழகத்திலும் இந்தியாவிலும் நோயின் தீவிரம் குறையப் போவதில்லை. நேற்று மட்டும் ஈரோடு மாவட்டத்தில் நான்கு பேருக்கு உறுதி செய்திருக்கிறார்கள். அதில் ஒன்று எங்கள் கிராமத்தில் - கரட்டடிபாளையத்தில். கடந்த வாரத்தில் எங்கேயோ யாருக்கோ நோய் என்ற போது பயமாக இருந்தது. இரண்டு நாட்களுக்கு முன்பாக ஈரோட்டில் என்று சொன்ன போது நடுக்கம்தான். நேற்று கரட்டடிபாளையத்திலேயே யாரோ ஒருவருக்கு என்று அறிவித்துவிட்டார்கள். நோய் என்பதெல்லாம் ஆரம்பத்தில்தான் பயமூட்டும். தூரத்தில் இருக்கும் வரைதான் அதைப் பார்த்து நடுங்குவோம். அது நெருங்கி வர வர மனமும் மெல்ல மெல்ல பழகிவிடும். பிற நோய்களைப் போலவே இதுவும் ஒன்றுதான் என்கிற மனநிலை வந்துவிடும். இருபத்தியொரு நாள் ஊரடங்கு நமக்கு அப்படியொரு மனநிலையை உருவாக்கிவிடும் என்று உறுதியாக நம்பலாம்.

ஊரடங்கு இனிமேல் நீட்டிக்கப்படாது என்று மத்திய அரசாங்கம் அறிவித்திருப்பதாகச் சில செய்திகளில் சொன்னார்கள். எப்படியும் ஏப்ரல் பத்தாம் தேதிக்குள் ஓரளவு தெளிவு கிடைத்துவிடும். அதன் பிறகு அரசு என்ன முடிவெடுக்கப் போகிறது என்பது மோடிக்குத்தான் வெளிச்சம். இனி நீட்டிக்க வாய்ப்பில்லை என்றுதான் அரசியல்- பொருளாதாரம் இரண்டையும் பேசக் கூடிய நண்பர்கள் சொல்கிறார்கள். ஏதாவதொரு வகையில் பொருளாதாரச் சக்கரம் சுழலத் தொடங்கினால்தான் தாக்குப்பிடிக்க முடியும். அதனால் ஏப்ரலிலிருந்து மெல்ல மெல்லக் கட்டுப்பாடுகளைத் தளர்த்திவிடுவார்கள் என்று முழுமையாக நம்பலாம். 

ஏப்ரலிலிருந்து இயல்பு நிலையைத் தொடர்ந்தாலும் கூட பல நிறுவனங்கள் வேலையில்லாமல் திணறக் கூடும். அதுவும் பன்னாட்டு நிறுவனங்களில் பலவும் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளைச் சார்ந்த வாடிக்கையாளர் தரும் பணிகளை நம்பியிருக்கின்றன. பிற நாடுகளில் நோய் பரவும் வேகம்- குறிப்பாக அமெரிக்காவில் பரவும் வேகத்தையெல்லாம் பார்த்தால் அலை போல இந்த உலகின் பெரும்பாலானோரை நனைத்துவிட்டுத்தான் ஓயும் போலிருக்கிறது. நம்மவர்களைப் போல ‘வரட்டும் பார்த்துக்கலாம்’ என்கிற மனநிலை அவர்களுக்கு கிடையாது.  அவர்கள் பழைய வேகத்தில் ஓடத் தொடங்க இன்னமும் ஒன்றிரண்டு வருடங்கள் கூட பிடிக்கலாம். அதுவரை இந்திய நிறுவனங்கள் வடிவேலுவும் ‘என்னெத்த; கன்னையாவும் கார் ஓட்டுவதைப் போல ஓட்டிக் கொண்டிருப்பார்கள். கவிழ்ந்துவிடாமல் இருந்தால் சரிதான். 

அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில்  பரிசோதனையின் விகிதம் மிக அதிகம். இங்கே அதையெல்லாம் எதிர்பார்க்க முடியாது. நமக்கே தெரியாமல் நோய் நமக்கு வந்துவிட்டு போகக் கூடும். மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டால் மட்டும் கொரோனா போலிருக்கிறது என்று யோசிப்பார்கள். அதனால் எண்ணிக்கையும் பெரிய அளவில் இருக்காது. இன்னொன்றை சில மருத்துவ நண்பர்கள் குறிப்பிட்டார்கள்-  இந்தியாவில் ஒவ்வொரு குழந்தையும் பல வைரஸ் தொற்றுகளால் பாதிக்கப்பட்டுத்தான் வளர்கிறது. அதனால் இயல்பிலேயே நோய் எதிர்ப்பு சக்தி மேம்பட்டிருக்கிறது. இதை மேற்கத்திய நாடுகளில் எதிர்பார்க்க முடியாது. இங்கேயிருக்கும் அசுத்தமும், குப்பையும், நோய்மையும் இயல்பாகவே இந்தியர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை சற்று மேம்படுத்தி வைத்திருக்கிறது என்கிறார்கள். அவர்கள் சொன்னது மட்டும் சரியாக இருக்குமானால் நாம் தப்பிவிடுவோம். அப்படித்தான் தப்பிப்போம்.

எப்படிப் பார்த்தாலும் ஏப்ரல் 15க்குப் பிறகு நிலைமை மேம்பட்டுவிடக் கூடும் அல்லது மேம்பட்டுவிட்டதாக நாம் நம்பத் தொடங்குவோம். கொரோனா முழுமையாக இல்லாமல் போகாது. ‘அட பார்த்துக்கலாம்’ என்கிற எண்ணத்தில் நாம் வீட்டை விட்டு வெளியில் செல்லத் தொடங்குவோம். நோய் வரும் போது மருத்துவரைச் சந்திப்போம். பிற அனைத்து நோய்களையும் போலவே நாம் இதனை இடது கையால் டீல் செய்யத் தொடங்குவோம். 

இப்போதைய ஊரடங்கு, பீதி, மரண பயம் என எல்லாமே தற்காலிகமானதுதான். ஆற்று வெள்ளம் போல நம்மை இழுத்துக் கொண்டு போகிறது. வெள்ளம் அடித்துக் கொண்டு போகும் போது நாம் செய்ய வேண்டியதெல்லாம் கிடைக்கும் பற்றுக்கோலை இறுகப்பற்றிக் கொண்டிருப்பதுதான். நண்பர்களிடம் இதைத்தான் சொல்கிறேன். எனக்கும் இதைத்தான் சொல்லிக் கொள்கிறேன். மற்றபடி நோய் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை. எந்த நோயும் வராது என்றா இதுவரை வாழ்ந்து கொண்டிருந்தோம்? நமக்கு வராது என்ற நம்பிக்கைதான். வந்தாலும் சரியாகிவிடும் என்றொரு நினைப்புதான். அதே நம்பிக்கை, அதே நினைப்பிலேயே இப்பொழுதும் இருப்போம். 

மற்றபடி வேலை என்ன ஆகும், தொழில் என்னவாகும், பொருளாதாரம் என்ன ஆகும் என்றெல்லாம் பயக்கிறவர்களுக்கு- நம்மில் பெரும்பாலானவர்கள் பூஜ்ஜியத்திலிருந்து தொடங்கியவர்கள். உலகமே வளப்பமாக இருந்த போது நாம் பூஜ்ஜியத்தில் தொடங்கி மேலே வந்திருக்கிறோம். அவனவன் நமக்கு முன்னால் வெகுதூரம் ஓடிக் கொண்டிருந்த போதே நாம் ஓட்டத்தைத் தொடங்கி ஓடித் துரத்தி பிடித்திருக்கிறோம்; முந்தியிருக்கிறோம். இந்த கொரோனா அலை ஓயும் போது உலகமே கிட்டத்தட்ட பூஜ்ஜியத்திலிருந்துதான் தொடங்கும். அத்தனை பேரும் ஒரே கோட்டிலிருந்துதான் ஓடத் தொடங்குவார்கள். அதில் முந்த மாட்டோமா?  எல்லோரிடமும் சொல்வதுதான்- ‘பார்த்துக்கலாம் விடுங்க’.

Mar 29, 2020

கொரோனாவுக்கு

நிசப்தம் அறக்கட்டளையின் வழியாக கொரொனா தடுப்பு பணிகளுக்கு ஏதாவது செய்யும் திட்டமிருக்கிறதா என்று சிலர் கேட்டிருக்கின்றனர்.

யோசித்துப் பார்த்தால் எதுவுமே தோன்றவில்லை. இந்த தருணத்தில் களப்பணி என்றெல்லாம் இறங்குவது சரியானதாக இருக்காது. வெள்ளம், புயல் மாதிரியான இயற்கைப் பேரிடர்களின் போது நாம் ஓரளவுக்கு பாதுகாப்பாக இருக்கிறோம் என்கிற எண்ணம் இருக்கும். தைரியமாகச் செய்ய இயலும். இப்பொழுது எந்த புள்ளிவிவரத்தை நம்புவது என்றே தெரியவில்லை. கட்டம்- ஒன்று என்கிறார்கள் சிலர்; சிலர் இரண்டாம் கட்டத்தில் இருப்பதாகச் சொல்கிறார்கள்; மூன்றுக்கு வந்துவிட்டோம் என்று சிலர் கட்டுரைகள் எழுதுகிறார்கள். அதனால் அவசரப்பட்டு எந்த விபரீதத்திலும் ஈடுபட வேண்டியதில்லை. 

இன்னமும் சில நாட்களுக்குப் பிறகு நிலைமைக்கு ஏற்ப முடிவெடுக்கலாம்.

இன்றைய தேதியில் அறக்கட்டளையில் அறுபது லட்ச ரூபாய் இருக்கிறது. ( ₹5995182.18). இதில்  ₹31,97,431.00(முப்பத்தியொரு லட்சத்து தொண்ணூற்றேழாயிரத்து நானூற்று முப்பத்தியொரு ரூபாய்- மூன்று தனித்தனி பத்து லட்சங்களாக) நிரந்தர வைப்பு நிதியில் இருக்கிறது. மீதமிருக்கும் ₹2797751.18 (இருபத்தியேழு லட்சத்து தொண்ணூற்றேழாயிரத்து எழுநூற்றி ஐம்பத்து ஒரு ரூபாய்) வரவு செலவுக் கணக்கில் இருக்கிறது. 


அடுத்து வரும் நாட்களில் கொரோனாவினால் சூழல் இன்னமும் மோசமானால், அடுத்த கல்வியாண்டிற்கு நிசப்தம் மாணவர்களுக்கான கல்வித் தொகையாக பத்து லட்ச ரூபாயை மட்டும் வைத்துக் கொண்டு மீதம் ஐம்பது லட்ச ரூபாயையும் கொரானா தடுப்பு பணிகளுக்காக பயன்படுத்திக் கொள்ளலாம். தேவையெனில் அறுபது லட்சத்தையும் கூட பயன்படுத்திக் கொள்ளலாம். கல்லூரிக் கட்டணத்தை பிறகு பார்த்துக் கொள்ளலாம் எனத் தோன்றுகிறது.

எப்படி பயன்படுத்துவது என்பதை அந்தத் தருணத்தில் முடிவு செய்து கொள்ளலாம். முழுத் தொகையையும் பயன்படுத்துகிற அளவுக்கு மோசமான சூழல் வந்துவிடக் கூடாது என்றுதான் மனதார விரும்புகிறேன். நம்முடைய எந்த ஆறுதலுக்கும் பணிக்கும் அவசியமேயில்லாமல் வைரஸ் விலகிவிடுமானால் வெகு சந்தோஷம். ஆனால் கடந்த இரண்டு நாட்களாக அதிகரிக்கும் நோய்த் தொற்றாளர்களின் எண்ணிக்கை, அரசுகளின் குளறுபடிகள், ஒரு பகுதி மக்களின் பதற்றம், இன்னொரு பகுதி மக்களின் அசமஞ்சம் என எல்லாவற்றையும் ஒரு சேரப் பார்க்கும் போது சற்று குழப்பமாகவும், பயமாகவும்தான் இருக்கிறது. 

நிலைமை கை மீறி ஏதேனும் தேவைகள் எழுமாயின் பயன்படுத்திக் கொள்வதில் எந்தத் தயக்கமும் இல்லாமல் செயலாற்றிவிட வேண்டும்.

தொகை விவரம் வெளிப்படையாக அனைவருக்கும் தெரிய வேண்டும் என்பதற்காக பதிவு செய்து வைக்கிறேன். ஏதேனும் கருத்துகள், ஆட்சேபனைகள், பரிந்துரைகள் இருப்பின் தெரியப்படுத்தவும்.

Mar 28, 2020

வேகம் வேகம்!

கொரோனா குறித்து, ஊரடங்கு குறித்து, நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்துதல் குறித்து எந்தக் கருத்தையும் சொல்லிவிட முடியாது என்றுதான் தோன்றுகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதிரி சூழலும் நிலைமையும் மாறிக் கொண்டேயிருக்கிறது. ஊரடங்கு அமலுக்கு வந்த முதல் இரண்டு நாட்கள் ஓரளவுக்கு திருப்தியாக இருந்தது. கட்டுக்குள் வந்துவிடும் என்றுதான் பெரும்பாலானவர்கள் நினைத்திருக்கக் கூடும். ஆனால் அதன் பிறகு பல பகுதிகளிலும் மக்கள் மிக இயல்பாக புழங்கத் தொடங்கிவிட்டார்கள். வழக்கம் போலவே அலைகிறார்கள். நான்கு சக்கர வாகனங்களின் எண்ணிக்கையை மட்டும்தான் குறைத்திருக்கிறார்களே தவிர மக்கள் நடமாட்டத்தை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வருவதில் கோட்டைவிட்டிருக்கிறார்கள். 

‘நாங்கள் சொல்லிவிட்டோம்; மக்கள் பொறுப்பற்றவர்கள்’ என்று தட்டிக்கழிக்க முடியாது. இந்தியா போன்ற நாட்டில் அனைவருமே கவனத்துடன் இருப்பார்கள் என்றெல்லாம் எதிர்பார்க்கவும் முடியாது. ஐ.ஏ.எஸ் அதிகாரியைப் பிடித்து ‘வீட்டிலேயே இருய்யா’ என்று அமர வைத்தாலும் கூட அவர் திருட்டுத்தனமாகத் தப்பித்து உத்தரப்பிரதேசத்தில் இருக்கும் தனது ஊருக்கு ஓடுகிற தேசம் இது. தமக்கு நோய்த் தொற்று இருக்கிறது என்று தெரிந்தே டெல்லி, ஆக்ரா என்று அலைந்த சாப்ட்வேர் பெண்மணி பிறந்து வளர்ந்த நாடு இது. இங்கு படித்தவன் படிக்காதவன் என்றெல்லாம் பாகுபாடு கிடையாது. பெரும்பாலும் அப்படித்தான். 

காவல்துறையின் கண்காணிப்புகளும் நகரின் மையப்பகுதியில்தான் அதிகமாக இருக்கிறது. அங்கு சிலரை அடித்து அல்லது பாடம் நடத்தி வீடியோ எடுத்து சுற்றலில் விடுகிறார்கள். ஆனால் ஊர்ப்புறங்கள், நகரின் வெளிப்பகுதிகளில் ஆட்கள் தாறுமாறாகச் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை. சாலைகளில் அமர்ந்து அரட்டையடித்துக் கொண்டிருக்கிறார்கள். யாரும் கேட்பாரில்லை. இப்படியே போனால் அடுத்த ஒன்றிரண்டு நாட்களில் எப்பொழுதும் போல போல சுற்றத் தொடங்கிவிடுவார்கள். 

நீண்டநாள் ஊரடங்கை அமல்படுத்துவதில் தமிழக அரசு அனுபவமின்றிச் செயல்படுகிறது என்றே தோன்றுகிறது. மூன்று நாட்கள் கடந்த பிறகும் கூட அத்தியாவசியப் பொருட்களுக்கான கடைகள் எவை, திறந்திருக்கும் நேரம் எது என்பதில் வெவ்வேறு அறிவிப்புகள் வெளிவருகின்றன். குழப்பங்கள் நிலவுகின்றன. கடை திறந்திருக்கும் போதே வாங்கிக் கொள்ளலாம் என்று ஆட்கள் கடைகளில் குவிகிறார்கள். எந்தக் கடைக்குச் சென்றாலும் நான்கைந்து பேர்கள் நிற்கிறார்கள். பால் வாங்கச் சென்றால் அங்கேயும் ஏழெட்டுப் பேர்கள் நிற்கிறார்கள். பயமாக இருக்கிறது. நமக்குத்தான் பயம் மற்றவர்கள் வழக்கம் போலவே கடைசியில் வந்தாலும் முதலில் செல்ல வேண்டும் என்று முண்டியடித்து கைகளை நீட்டுகிறவர்களாகத்தான் இருக்கிறார்கள். மூச்சுக்காற்றை நம் மீது விடுகிறவர்களாகத்தான் இருக்கிறார்கள். முகத்தில் கர்ச்சீப்பைக் கட்டிக் கொண்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று நம்புகிறவர்கள்தான் வெளியே திரிகிறார்கள்.

கடைகள் திறப்புக்கு சரியான கால நிர்ணயம் செய்து, தமது வீட்டை விட்டு அரைகிலோமீட்டருக்கு மேல் யாரும் நகரக் கூடாது என்று கண்காணித்து, ஃபோன் வழியாக பொருட்களை எடுத்து வைக்கச் சொல்லிவிட்டு சென்றவுடன் வாங்கிக் கொண்டுவது மாதிரியான திட்டமிடல்களைச் செய்யும்படி உள்ளூர் அதிகாரிகளை பணித்தால் அவர்கள் ஒரே நாளில் செய்து ஆங்காங்கே அறிவித்தும் விடுவார்கள். பிரச்சினை என்னவென்றால் அனைத்து விளம்பரமாகவே செய்யப்படுகிறது. நோய்த்தொற்று விவரங்களை மருத்துவ அதிகாரி வெளியிடுவதில்லை மாறாக அமைச்சர்தான் வெளியிடுகிறார். அறிவிப்புகளை முதலமைச்சர்தான் வெளியிடுகிறார். முதலில் சில நாட்களுக்கு ‘சூப்பரா செயல்படுறாங்க’ என்று பிம்பத்தை உருவாக்கலாம். இப்படியான சொதப்பல்களின் காரணமாக எல்லாம் கை மீறிப் போகும் போது மிக மோசமான கெட்ட பெயரைச் சம்பாதிக்க நேரிடும்.

பொதுவாக முதலமைச்சர் சாலை வழியில் பயணித்தால் வழி நெடுக- அது எத்தனை கிலோமீட்டர்களாக இருந்தாலும் சரி- கோவையிலிருந்து சேலம் என்றாலும் சரி; சென்னையிலிருந்து விழுப்புரம் என்றாலும் சரி- காவலர்கள் நாள் முழுவதும், வழி நெடுகவும் காத்திருப்பதைப் பார்த்திருக்கிறேன். அதே போன்று இப்பொழுதும் பகல் நேரத்தில் ஊருக்கு இரண்டு அல்லது நான்கு காவலர்களை நிறுத்தி வைக்கலாம். வெளியில் சுற்றுகிறவர்களை எச்சரிக்க வேண்டும். யாராவது எதிர்த்துப் பேசினால் ரோந்துப்படை, துணை ராணுவப்படை என்று யாராவது உதவிக்கு வர வேண்டும்.

ஒரு பக்கம் மருத்துவமனைகளை அதிகரித்து, மருத்துவ வழிமுறைகளை ஆய்வு செய்து நோய்த் தொற்றாளர்களை மீட்டெடுக்க வேண்டும், இன்னொரு பக்கம் சோதனைகளை அதிகரித்து புது நோயாளிகள் எங்கேனும் இருக்கிறார்களா என்று பார்க்க வேண்டும், பொருள் விநியோகம் உள்ளிட்ட இன்னொரு பிரச்சினை, அதே சமயம், வெளியே சுற்றும் மக்களையும் எப்படியாவது கட்டுப்படுத்தியே தீர வேண்டிய சூழலில்தான் இருக்கிறோம்.

இன்று ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. சென்னை பீனிக்ஸ் மாலில் பணியாற்றுகிறவர் அரியலூர் சென்றிருக்கிறார். ஊருக்குச் சென்றவருக்கு கொரோனா. அவர் வெளிநாட்டுப் பயணம் எதுவும் மேற்கொண்டவரில்லை. வெளிநாடு சென்று வந்தவர் யாரோ ஒருவர் இவருக்கு ஒட்ட வைத்திருக்கிறார். இதைத்தான் சமூகப்பரவல் என்கிறார்கள். அரியலூர் இளைஞர் பேருந்தில் பயணித்திருப்பார். தமது உள்ளூரில் சிலருடன் நெருங்கி பேசியிருப்பார். இப்படி தான் சென்ற பாதையில் அவரால் எத்தனை பேருக்கு தொற்று உண்டாகியிருக்கும் என்று யாருக்கும் தெரியாது. இவரைப் போலவே எத்தனையோ பேர்கள் கோயம்பேட்டிலும் சென்ட்ரலிலும் இருந்து கிளம்பி நெல்லைக்கு, விழுப்புரத்துக்கும், சேலத்துக்கும் சென்றிருப்பார்கள். இப்படி ஒவ்வொன்றாக இனிமேல்தான் பாதிப்புகள் தெரியக் கூடும். 

இனியும் விளம்பர நோக்கில் முகத்தில் மாஸ்க் அணிந்து நிழற்படங்களுக்கு பாவனை காட்டிக் கொண்டிருந்தால் நிலைமை விபரீதமாகிவிடக் கூடும். அரசாங்கத்தையும் ஆட்சியாளர்களையும் குறை சொல்வதாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. விளம்பரங்கள் தேவைதான். ஆனால் நாம் அதற்கான காலகட்டத்தை தாண்டிக் கொண்டிருக்கிறோம் என்றுதான் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. 

மாநிலம் முழுமைக்கும் அதிகாரப் பரவல், ஆங்காங்கே முடிவெடுக்கும் அதிகாரம், தவறான முடிவெடுக்கும் போதே அதைக் கண்டறிந்து சரி செய்தல், தேவையான இடமாற்றங்களைச் சத்தமில்லாமல் செய்தல் போன்ற மேல்மட்ட முடிவுகளை சென்னையில் எடுத்து பிற அனைத்து முடிவுகளையும் ஆங்காங்கேயிருக்கும் மாவட்ட ஆட்சியர்கள், கோட்டாட்சியர்கள், வட்டாட்சியர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் எடுக்க வேண்டும். எல்லாவற்றையும் அமைச்சரும், முதல்வருமே அறிவிக்க வேண்டியதில்லை. மாநிலம் சிறப்பாகச் செயல்பட்டால் இறுதியில் எப்படியும் அரசுக்குத்தான் நல்ல பெயர் கிடைக்கப் போகிறது. எல்லாவற்றிலும் கிரெடிட் எடுக்க வேண்டும் என்று பதற வேண்டியதில்லை.

எந்த ஊரில் எந்தக் கடைகள் திறந்திருக்கலாம், எவ்வளவு நேரம் திறந்திருக்கலாம், எப்படி வியாபாரம் செய்ய வேண்டும், எப்படி பொருட்களை விநியோகிக்க வேண்டும், விலைக் கட்டுப்பாடு போன்ற அனைத்தையும் அந்தந்த ஊர் அதிகாரிகள் கண்காணிக்கும் சூழலை உருவாக்க வேண்டும். அவர்களுக்கு நன்றாகவே தெரியும். இந்த அதிகாரிகளின் உத்தரவுகளை மீறுகிறவர்களை காவல்துறை தமது கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். வெறுமனே வீடியோ எடுத்து அதை வைரல் ஆக்குவது என்பதை நிறுத்திவிட்டு உண்மையிலேயே கிராமப்பகுதிகள் உட்பட ஒவ்வொரு மூலையிலும் நிலைமை அடுத்த பதினெட்டு நாட்களுக்கும் நூறு சதவீதக் கட்டுக்குள் இருப்பதற்கான செயல்களை முடுக்காவிட்டால் இந்த ஊரடங்கு அர்த்தமற்றதாகிவிடும்.

அர்த்தமற்றது என்பது மட்டுமில்லை- இருபத்தியொரு நாள் பொருளாதார இழப்பைச் செய்து, இலட்சக்கணக்கானவர்களுக்கு வேலையிழப்பு, லட்சக்கணக்கான கோடிகள் வியாபார இழப்பு என்று ஒரு தேசத்தையே குழிக்குள் தள்ளிய செயலாக மட்டுமே இந்த அர்த்தமற்ற ஊரடங்கு அமைந்துவிடும். இன்னமும் பதினெட்டு நாட்கள் இருக்கின்றன. இன்னமும் கூட நமக்கு அவகாசம் இருக்கிறது. மக்களை வீட்டிலேயே அடங்கச் செய்து நோய்க் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தி, பரிசோதனைகளை அதிகரித்து, நோய்த் தொற்று இருப்பவர்களுக்கு சிகிச்சையைச் செய்தால் தப்பிவிடலாம் என்கிற நம்பிக்கை இருக்கிறது. இந்திய அளவில் பிப்ரவரி 19 - 3 பேர்; மார்ச் 5 - 29 பேர் (15 வது நாள்); மார்ச் 13 - 82 பேர் (23 வது நாள்); மார்ச் 25 - 563 பேர் (35 வது நாள்); மார்ச் 26 - 735 பேர் (36 வது நாள்); மார்ச் 27 - 877 பேர் (37 வது நாள்)  என்ற எண்ணிக்கையில் எகிறிக் கொண்டிருக்கிறது. கடைசி மூன்று நாட்களின் எண்ணிக்கையை மட்டும் கவனியுங்கள். அடுத்த நான்கைந்து நாட்கள் இதைவிட வேகம் கூடும். 

கட்டுப்படுத்தியே தீர வேண்டும். 

Mar 26, 2020

லத்தி

கடந்த இரண்டு நாட்களாக வெளியில் சுற்றுகிறவர்களை காவல்துறை அடிப்பது பற்றி விவாதங்கள் கிளம்பியிருக்கின்றன. நேற்று அம்மாவுக்கு மருந்து வாங்குவதற்காக பைக்கில் சென்றேன். காவல்துறை பெண்மணி தடுத்து விசாரித்தார். ‘யாருக்கு மருந்து?’ ‘என்ன பிரச்சினை?’ ‘மருந்துச் சீட்டைக் காட்டுங்க’ என்று ஏகப்பட்ட கேள்விகள். ஈகோவை சொறிவது போலவே இருந்தது. என்னிடம் அனைத்தும் சரியாக இருந்தன. ‘வாங்கிட்டு வீட்டுக்கு போங்க...சுத்திட்டு இருக்க கூடாது’ என்றார். இதுதான் எரிச்சலைக் கிளப்பியது. ‘சுத்திட்டு இருக்கக் கூடாதுன்னு எங்களுக்கு தெரியாதுங்களா?’ என்றேன். ‘பேசறதெல்லாம் நல்லாத்தான் பேசறீங்க’ என்றார். அதற்கு மேல் அவரிடம் பேசுவது வம்பை வளர்க்கும் எனத் தோன்றியது. கிளம்பிச் சென்றுவிட்டேன்.

இது காவல்துறை பெண்மணியின் கடமை. கண்டபடி எரிச்சலை உருவாக்கினால் அவரை மீண்டும் சந்திப்பதைத் தவிர்ப்பதற்காகவாவது வெளியில் செல்லாமல் இருப்பேன். ஆட்களின் நடமாட்டத்தைக் குறைத்தே தீர வேண்டிய சூழலில் இருக்கிறோம்.

அரசு மருத்துவ நண்பர் ஒருவர் இருக்கிறார். கணவன் மனைவி இருவருமே அரசு மருத்துவர்கள். இரண்டு குழந்தைகள். அதில் ஒன்று கைக்குழந்தை. குழந்தைகளை பாட்டி வீட்டில் விட்டுவிட்டு இவர் அரசு மருத்துவமனையில் பணியில் இருக்கிறார். மனைவி கிராமங்களில் மருத்துவப் பணிகளை மேற்கொண்டிருக்கிறார். இருவரும் குழந்தைகளைப் பார்த்தே ஒரு வாரம் ஆகிவிட்டதாம். இதுவரை அவர் தனது புலம்பலை அவர் காட்டியதே இல்லை. நான்தான் பெரும்பாலும் புலம்புவேன். நேற்று அழைத்தவர் ‘குழந்தைகளைப் பார்க்காதுதாங்க கஷ்டமா இருக்கு’ என்றார். அரசாங்கம் கையுறை, முகக்கவசம் எதுவுமே வழங்கவில்லை. இவராக ஒரு முகக்கவசம் வாங்கியிருக்கிறார். அதுவும் கூட N95 இல்லை. அறுவை சிகிச்சையின் போது அணியும் சாதாரண கவசம். 

‘N95 ஒண்ணு வாங்கிடலாம்ல டாக்டர்’ என்று கேட்டால் ‘கிடைக்கிறதில்லைங்க’ என்கிறார். 

இத்தகைய மருத்துவப் பணியாளர்களின் நிலைமையைத்தான் யோசிக்க வேண்டும். இவர்கள்தான் நோயைக் கட்டுக்குள் வைப்பார்கள். அப்படி இவர்கள் கட்டுப்படுத்தினால் ‘எல்லாம் எங்களால்தான்’ என்று விளம்பரம் தேடிக் கொண்டும், கட்டுப்படுத்த இயலாமல் போனால் ‘நாங்க நடவடிக்கை எடுத்தோம் மக்கள்தான் ஒத்துழைக்கவில்லை’ என்று துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டும் ஆளும் வர்க்கம் நகர்ந்துவிடும். சிக்குகிறவர்கள் எல்லாம் இத்தகைய மருத்துவப் பணியாளர்கள்தான். முதல் பாதிப்பைச் சந்திக்கப் போகிறவர்களும் இவர்கள்தான். 

ஊரடங்கு, வெளியில் சுற்றாதீர்கள் போன்ற கட்டளைகளையாவது அரசாங்கம் முழுமையாகச் செயல்படுத்தினால்தான் நாம் தப்பிப்போம். 

இப்பொழுது இருக்கும் நிலைமை இன்னமும் மோசமாகிவிடக் கூடாது என்பதற்காகத்தான் நம்மை தடுத்து நிறுத்தச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இருப்பத்தியொரு நாட்களுக்கு நமக்கு வேலை எதுவுமில்லை. பொழுது தீரத் தீர தொலைக்காட்சி, இணையம், வேளா வேளைக்கு சோறு, தூக்கம் என்றிருந்துவிட்டு அப்பொழுதும் பொழுது தீரவில்லை என்று பைக்கை எடுத்து வெளியில் கிளம்புகிறவர்களைப் பார்த்தால் கோபம் வரத்தானே செய்யும்? இவர்களை எப்படிக் கட்டுப்படுத்துவது? பேருந்துகள் ஓடுவதில்லை, சரக்கு வாகனங்கள் இல்லை ஆனாலும் இரு சக்கர வாகனங்களில் குடும்பத்தோடு சென்று வருகிறவர்கள் இருக்கிறார்கள். அவசியமான பயணம்தான் என்று எல்லோராலும் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. சாலைகளில் அவ்வப்போது கார்கள் வந்து போகின்றன. கடைகள் திறந்து வைக்கப்படுகின்றன. இன்னும் இருபது நாட்கள் இருக்கின்றன. இவற்றையெல்லாம் ஆரம்பத்திலேயே இலகுவாக விட்டுவிட்டால் நாட்கள் நகரும் போது இந்த நடமாட்டம் அதிகமாகும். 

நாம் இந்த ஊரடங்குக்கு கொடுக்கும் விலை மிகப் பெரியது. ஒரேயொரு நாள் நாடு தழுவிய பந்த் நடைபெற்றால் கூட அடுத்த நாள்  ‘பல்லாயிரம் கோடிகள் முடங்கின’ ‘லட்சம் கோடி நஷ்டம்’ என்று தலைப்புச் செய்தி வரும். இப்பொழுது எத்தனை லட்சம் கோடிகளை முடக்கப் போகிறோம்? எத்தனை தொழில்கள் முழுமையாக சரியப் போகின்றன? எத்தனை கோடி பேர்கள் மீளவே முடியாத பொருளாதார நெருக்கடியில் சிக்கப் போகிறார்கள்? இவை அத்தனையுமே இந்த கிருமிப் பரவலைத் தடுக்கத்தான். இந்த அடிப்படையைப் புரிந்து கொள்ளாமல் வெளியில் சுற்றிக் கடைசியில் கிருமிப் பரவலையும் தடுக்காமல் ஏமாந்து போனால் நம் மீது  இரண்டு பெரிய அடிகள் விழுவதாக அர்த்தம். இரண்டுமே நம் தலைமுறையில் மீளவே முடியாத மரண அடியாக இருக்கும். நமக்கும் சரி; நாட்டுக்கும் சரி.

இருபத்தியோரு நாட்களுக்கு ஒரு நாட்டை அடக்கி வைப்பது சாதாரணக் காரியமில்லை. வெளிநாட்டில், வெளியூரில் சத்தமில்லாமல் கமுக்கமாக இருப்பவர்கள் கூட சொந்த ஊரில் கால் வைத்தவுடன் ‘இது என் மண்’ என்று தெனாவெட்டாகத் திரிவதைக் காலங்காலமாக பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்? அப்படித்தான் திரிகிறார்கள். வெளியில் செல்ல ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம் இருக்கும். தம்முடைய பயணத்தை ஒவ்வொருவரும் அத்தியாவசியம் என்று கருதக் கூடும். கண்ணுக்குத் தெரியாத கிருமியின் மிரட்டலைவிடவும் கண்ணுக்குத் தெரியும் காவலர்களின் மிரட்டல், பயம் என்றெல்லாம் தொடரும் போதுதான் ‘தவிர்க்கவே முடியாத காரியங்களுக்கும் மட்டுமே வெளியில் செல்லலாம்’ என நினைக்கத் தோன்றும். அந்த பயத்தை உருவாக்க வேண்டிய கட்டாயம் காவல்துறைக்கு இருக்கிறது. 

நேற்றைய முன் தினம் வரைக்கும் கூட அந்த மருத்துவ நண்பர் சற்று பயந்தபடியேதான் இருந்தார். பரவல் அதிகரிக்க நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன என்றுதான் சொல்லிக் கொண்டிருந்தார். நேற்று மதியம்தான் சூழலைப் பார்த்துவிட்டு ‘பரவலின் வேகம் குறைய வாய்ப்பு இருக்குங்க’ என்றார். நாம் நன்றாக இருப்பதைவிடவும் மருத்துவர்கள், செவிலியர்கள், இன்னபிற சுகாதாரப் பணியாளர்கள் நலமுடன் இருக்க வேண்டியது அவசியம். அவர்கள் நோயின் காரணமாகவோ வேறு காரணங்களுக்காகவோ உடல்நலம் பாதிக்கப்பட்டு, மனச்சோர்வுடன் அமர்ந்துவிட்டால் மீதமிருக்கும் நூற்று முப்பது கோடி பேரின் நிலைமை கந்தலாகிவிடும். அதற்காகவாவது ஊர் சுற்றிகளை, உள்ளூர் தெனாவெட்டாளர்களையெல்லாம் கட்டுப்படுத்துவது காலத்தின் சூழல் என்பதை உறுதியாக நம்புகிறேன்.

காவலர்கள் அடிப்பது மனித உரிமை மீறல் என்பதெல்லாம் சரிதான். முழுமையாக ஏற்றுக் கொள்ள வேண்டும். இயல்பான காலகட்டத்தில் காவலர்கள் அதிகாரத் தொனியுடன் மிரட்டுவது கூடத் தவறுதான். காவல் நிலையத்தில் ஒவ்வொருவரையும் அமர வைத்து மரியாதையாகப் பேச வேண்டும் என்றெல்லாம்  எதிர்பார்க்கலாம். அதுவே இத்தகைய நெருக்கடி மிகுந்த காலகட்டத்தில் சற்று ஏமாந்தாலும் நிலைமை கந்தரகோலம் ஆகிவிடும் என்கிற சூழலில் எல்லாவற்றையும் எதிர்பார்த்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை. பயம் அவசியம். 

அதே சமயம் இன்னமும் சில நாட்கள் கடந்த பிறகு காவலர்கள் கை நீட்டுவதில் இன்னொரு சிக்கலும் நேரக் கூடும். இன்றைக்கு நம் சமூகத்திற்கு இருக்கும் அதே மனநிலை அடுத்து வரும் நாட்களுக்கும் தொடரும் என்று சொல்ல முடியாது.  வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடப்பது என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் பல்வேறு விதமான மனச்சிக்கல்களை உருவாக்கக் கூடும். வெளியுலகத்துடனான தொடர்பின்மை, பொருளாதார நெருக்கடிகள், குடும்பச் சூழல், இன்னும் பல காரணிகள் உருவாக்கக் கூடிய மன உளைச்சல், தினசரி வழமையின் திடீர் இயக்க நிறுத்தம், குடியை நிறுத்துவதால் உண்டாகக் கூடிய withdrawal syndrome மாதிரியான சிக்கல்கள் உள்ளவர்கள் மீது காவலர்கள் கை வைத்தால் அவர்கள் திருப்பி அடித்தல், தற்கொலை மிரட்டல் போன்ற எதிர்விளைவுகளைக் காட்டினால் அதிகமான சலசலப்புகள் ஏற்படலாம். சமூக அமைதி குலையலாம். பெரும்பான்மையானோரின் கோபம் காவல் துறை மீது திரும்பவும் வாய்ப்பிருக்கிறது. அது இன்னமும் தீவிரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நெருக்கடியை காவல் துறைக்கும், துணை ராணுவம் மற்றும் ராணுவத்தின் உதவியைக் கோரும் அழுத்தத்தை மாநில அரசுக்கும் உருவாக்கலாம். எனவே ஆரம்ப நாட்களிலேயே கடுமையான பயத்தை உருவாக்கிவிட்டு அடுத்து வரும் நாட்களுக்கு அடி எதுவுமில்லாமல் வெறும் மிரட்டடிலேயே அதே ஒழுங்கினை தொடர்ந்து வரும் இருபது நாட்களுக்கும் காவல்துறை நீட்டிக்கும் என நம்பலாம். ஒருவேளை அப்படியான திட்டமிடல் எதுவுமில்லை என்றாலும் இனி திட்டமிடுவார்கள் என்றுதான் நினைக்கிறேன். இப்பொழுதே சில வீடியோக்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தென்படுகின்றன. இத்தகைய நெருக்கடியான, நீண்ட காலப் பிரச்சினைகளில் சமூக ஒழுங்கமைவு, சமூக மனோவியல் போன்றவற்றையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். 

Mar 25, 2020

வெளிச்சம்

மனைவி பணிபுரியும் நிறுவனத்தில் ஒப்பந்த பணியாளர்களை வேலையைவிட்டு அனுப்பிவிட்டார்கள். நிரந்தரப் பணியாளர்களுக்கு மட்டும் சில வேலைகளைக் கொடுத்து செய்யச் சொல்லியிருக்கிறார்கள். அடுத்த பதினைந்து நாட்களுக்கு அவர்களுக்கு வேலை இருக்கிறது.  சில நண்பர்களிடம் பேசினேன். புலம்பத் தொடங்கியிருக்கிறார்கள். கடந்த வாரம் வரை ‘என்ன ஜாலியா...வொர்க் ஃப்ரம் ஹோம்மா?’ என்று விபரீதம் புரியாமல் கேலி பேசிக் கொண்டிருந்தவர்கள்தான். ஆங்காங்கே நிறுவனங்கள் மெல்ல கதவடைப்பைச் செய்யத் தொடங்கியவுடன் பதறுகிறார்கள். சில நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை கட்டாய விடுப்பு எடுத்துக் கொள்ளச் சொல்லி அறிவுறுத்தியிருக்கிறார்கள். வேறு சில நிறுவனங்கள் ‘சம்பளமில்லாத விடுமுறை’ என அறிவித்திருக்கின்றன. இன்னமும் நிலைமை மோசமானால் இதன் வீரியம் அதிகமாகும். 

எதிர்பார்த்ததுதான். 

கொரோனா நோய் உண்டாக்கும் பாதிப்புகளைவிடவும் பொருளாதார ரீதியாக உருவாகும் அழுத்தங்களும் சீரழிவுகளும்தான் மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கக் கூடும். அதுவே  வர்த்தகம், தொழிற்துறை சார்ந்த சில நண்பர்கள் ‘bottom out' என்பதும் நல்லதுதான் என்கிறார்கள். அடுத்த ஒன்றிரண்டு மாதங்களுக்கு எல்லாமே அடியாழத்தில் கிடக்கும். இதுவரை உழைத்தவர்கள், சம்பாதித்தவர்கள் என சகலரும் கைகளைக் கட்டிவிட்டது போலக் கிடந்து மீண்டும் எழும் போது முன்பைக் காட்டிலும் வேகமாக உழைப்பார்கள். சம்பாதிக்க விரும்புவார்கள். இது பெரும் கார்போரேட் நிறுவனங்களுக்கும் பொருந்தும். தமது இழப்பையெல்லாம் சரிகட்டும் விதமாகவும் புதியதாக உருவாகவிருக்கும் வாய்ப்புகளை கபளீகரம் விதமாகவும் புதுப்புது யுக்திகளை மேற்கொள்வார்கள். அப்படியானதொரு மலர்ச்சியில் சாமானியர்களுக்கும் புதிய வாய்ப்புகள் நிறைய உருவாகும் என்பதுதான் பெரும்பாலானோரின் கருத்து. ஆனால் அப்படியான மலர்ச்சிக்கு எவ்வளவு காலம் பிடிக்கும் என்பதுதான் பெரும்பாலானோரால் கணிக்க முடியவில்லை. 

சுமார் மூன்று மாத கால தர்ம அடிக்குப் பிறகு சீனா மெல்ல இயல்பு நிலைக்கு வந்துவிட்டது.  ‘சீனா அடி வாங்கும் போது இந்தியாவுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும்’ என்று சிலர் இரண்டு மாதங்களுக்கு முன்பாகச் சொல்லிக் கொண்டிருந்தார்கள் அல்லவா? அது ஒரு அரைவேக்காட்டுத்தனமான கருத்து. உலக இயங்குகிற அடிப்படை புரியாமல் பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் எதைச் சொன்னார்களோ அதை இப்பொழுது சீனா செய்யப் போகிறது. இந்தியா உட்பட அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் அடி வாங்கும் இந்த நேரத்தில் சீனா எழுந்துவிட்டது. இனி அந்நாடு எதை வேண்டுமானாலும் செய்யும். பிற நாடுகள் நோயின் மீது கவனம் செலுத்திக் கொண்டிருக்க சீனா இன்னபிற உலகளாவிய விவகாரங்களில் கவனத்தைச் செலுத்தும். அடுத்த சில ஆண்டுகளில் உலக வல்லரசாக சீனா மாறுவதற்கான அத்தனை சாத்தியக்கூறுகளும் இருக்கின்றன என்று சில கட்டுரைகளில் வாசிக்க நேர்ந்தது. அதை மறுப்பதற்கில்லை.

இந்தியாவும் சீனாவைப் போலவே அதிகபட்சமாக மூன்று மாத காலத்தில் மீண்டு விடலாம் என்கிறார்கள். அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கும் இதுதான் கணக்கு என்று வைத்துக் கொண்டாலும் கூட அநேகமாக மே, ஜூன் மாதங்களில் நாம் பழைய ஓட்டத்தைவிடவும் வேகமாக ஓடத் தொடங்கியிருப்போம். அப்பொழுது ஓடுவதற்கு நம் கால்களில் தெம்பும், மனதில் வலுவும், மூளையில் தெளிவும் அவசியம். இதைத்தான் நாம் மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

யூடியூப் சேனல்களில், ஆன்லைன் பத்திரிக்கைகளில் அடுத்த இருபத்தியொரு நாட்களுக்கு வீட்டில் இனிமையாக பொழுதைக் கழிப்பது எப்படி என்றெல்லாம் பாடம் நடத்தத் தொடங்கிவிட்டார்கள். அதிர்ச்சியாக இருந்தது. நாம் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு விடுமுறையில் இல்லை. அதே போல மூப்பின் காரணமாக ஓய்வு பெற்றும் அமரவில்லை. வலுக்கட்டாயமாக வழங்கப்பட்டிருக்கும் இந்த இடைவெளியை வாழ்க்கைக்கான படிக்கல்லாக பயன்படுத்திக் கொள்வதில்தான் மொத்த கவனமும் இருக்க வேண்டும். இந்த உலகம் இதோடு அணைந்து விடப் போகிறதா என்ன? மீண்டும் வேகம் எடுக்கும். அப்படி அது வேகமெடுத்து ஓடத் தொடங்கும் போது அதே வேகத்தில் கிடைக்கும் வாய்ப்புகளையெல்லாம் அள்ளியெடுக்க நாம் தயாராக இருக்க வேண்டியதில்லையா?

இதுவரைக்கும் ஒரு துறையில் பணியாற்றிருப்போம். நிற்க நேரமில்லாமல் மேலாளர்கள் நமக்கான வேலையைக் கொடுத்திருப்பார்கள். அதைச் செய்து கொடுத்து அண்ணாந்து பார்க்கும் போது இன்னொரு வேலை வந்து சேர்ந்திருக்கும். வார விடுமுறை, தீபாவளி, பொங்கல் என்றெல்லாம் இரண்டொரு நாட்கள் சேர்ந்தாற்போல அமைந்து கொஞ்சம் இடைவெளி கிடைத்தாலும் எப்படி ஓய்வெடுக்கலாம், எப்படி வாழ்க்கைய சந்தோஷமாக வைத்துக் கொள்ளலாம் என்றுதான் நினைத்திருப்போமே தவிர தனிப்பட்ட ஆளுமை மேம்பாடு, திறன் மேம்பாடு என்பதற்கெல்லாம் பெரிய அளவில் மெனக்கெட்டிருக்க மாட்டோம். இந்த இருபத்தியொரு நாட்களை அப்படியான சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொள்வது மிக அவசியம்.

அவரவர் துறையில் என்னென்ன புதிய தொழில்நுட்பங்கள் வந்திருக்கின்றன, எவை எங்கே பயன்படுகிறது, எப்படிக் கற்றுக் கொள்ளலாம் என்பதில் கொஞ்சம் கவனம் செலுத்தலாம். நிறைய இணையதளங்கள் பாடங்களை வைத்திருக்கின்றன. தேர்வெழுதி, சான்றிதழ்கள் வாங்குவது என்றால்தான் பணம் கட்ட வேண்டும். படிக்க பணம் அவசியமில்லை. படிக்கலாம். குறிப்பு எடுத்துக் கொள்ளலாம். தினசரி ஒன்றிரண்டு மணி நேர உழைப்பு நம்மை புதிய தொழில்நுட்பம் ஒன்றைக் கற்றுக் கொள்ளச் செய்துவிடும். தொழில்நுட்பம் மட்டுமின்றி ஆங்கிலம் பேசுவது, நேர்காணல்களை எதிர்கொள்வது, உடல் மொழி, பேச்சுத் திறமை போன்ற பிற திறன் மேம்பாடுகளிலும் கவனம் செலுத்தலாம். ஏகப்பட்ட யூடியூப் வீடியோக்கள் இருக்கின்றன. சாய் பல்லவி, காஜல் அகர்வால்களுக்கு ஒதுக்கும் நேரங்களில் பாதியை இத்தகைய வீடியோக்களும் ஒதுக்குவது மிக அவசியம்.

இந்த நோயின் அடியினால் உலகத்தின் இயங்கியலே மொத்தமாக மாறுவதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன. நாடுகளில், நிறுவனங்களில், அரசியல், பொருளாதாரம் என சகலத்திலும் மாற்றங்கள் உண்டாகக் கூடும். தனிமனிதர்கள் மாற வேண்டியதில்லையா?

பேசுகிறவர்களெல்லாம் ‘பயமா இருக்கு’ என்கிறார்கள். எதற்கு பயம்? வேலைக்கா? உயிருக்கா என்று அவர்களிடம் பிரித்து பிரித்துக் கேட்பதில்லை. யாருக்குத்தான் பயமில்லை? எனக்கும் பயம்தான். உயிரைக் காப்பாற்ற விரும்பினால் வெளியில் போக வேண்டாம் என்கிறார்கள். நம்மால் அதைச் செய்ய முடியும். செய்துவிடலாம். வேலைக்குத்தான் மேற்சொன்னதெல்லாம்.  நம்மை தகுதியானவனாக வைத்துக் கொண்டிருந்தால் போதும். ஏப்ரல், மே மாதங்களில் இப்பொழுது இருக்கும் வேலை இருக்குமோ அல்லது புது வேலை தேட வேண்டுமோ- எப்படி இருந்தாலும் ‘நமக்கு தகுதியிருக்கிறது’ என்கிற எண்ணமே மனதில் ஒரு ஓரத்தில் தைரியத்தைக் கொடுத்துக் கொண்டேயிருக்கும். 

உலகமும் மனித இனமும் இந்த இடத்தை மிகச் சாதாரணமாக அடைந்துவிடவில்லை. பல லட்சக்கணக்கான ஆண்டுகள் போராடித்தான் இந்த இடத்தை அடைந்திருக்கிறது. அப்பேர்ப்பட்ட மனித இனமும் புவியும் இந்த வைரஸூக்கெல்லாம் நிரந்தரமாக இருண்டுவிடப் போவதில்லை. அப்படியான பீதிகளையும் நம்ப வேண்டியதில்லை. மனித இனம் தன் நீண்ட பயணத்தில் ஓர் இருள் நிறைந்த குகைப்பாதைக்குள் வேகமாகச் சென்று கொண்டிருக்கிறது. உடலை வெளியில் நீட்டி பாறையில் அடிபட்டுச் சாகாமல் தாக்குப் பிடித்தால் இன்னமும் சில நாட்களில் தொலைவில் ஒரு வெளிச்சப்புள்ளி தெரியும். அதைத் தவிர வேறு எதுவுமில்லை.

Mar 23, 2020

அடங்கி இரு!

மதியம் உறங்கிக் கொண்டிருந்த போது ‘கரட்டடிபாளையத்துலேயே வந்துடுச்சு’ என்று தம்பி எழுப்பினான். தூக்கம் போய்விட்டது. அது என்ன டைனோசரா? ஒரு ஊருக்குள் வந்தால் ஒவ்வொருவரையும் துவம்சம் செய்துவிட்டு அடுத்த ஊருக்கு போகும் என்பதற்கு. ஆனால் அப்படித்தான் கிளப்பிவிடுகிறார்கள். ஒரு வகையில் நல்லதுதான். அம்மாதான் சொல் பேச்சைக் கேட்பதில்லை. சாலையில் எந்தக் காய்கறிக்காரன் போனாலும் அழைத்து விலை கேட்கிறார். வாழைப்பூ, வெள்ளரி என்று தெருவில் போவதையெல்லாம் வாங்கி நெஞ்சோடு அணைத்து எடுத்து வருகிறார். பார்க்கவே பகீரென்று இருக்கிறது. சொன்னால் கோபமடைகிறார். குழந்தைகளைக் கூட மிரட்டிவிடலாம் போலிருக்கிறது. அம்மாவையெல்லாம் எப்படி மிரட்டுவது என்றே தெரியவில்லை. இத்தனைக்கும் அந்தக் காலத்து பி.எஸ்சி விலங்கியல் பட்டதாரி. பேரு பெத்த பேரு தாக நீலு லேது கணக்காக இருக்கிறது. ‘நம்மூருக்கே வந்துடுச்சாம்’ என்றுதான் மிரட்ட வேண்டும்.

சில நாட்களுக்கு முன்பாக ஸ்பெயினில் இருந்து வந்த கோவையைச் சார்ந்த பெண் ஒருவர் தாம் வெளிநாட்டிலிருந்து வந்திருப்பதாகச் சொல்லியிருக்கிறார். அவருக்கு எந்த அறிகுறியுமில்லை. மருத்துவமனையிலும் அவரை கவனமாக இருக்கச் என்று சொல்லி அனுப்பி வைத்து விட்டார்கள். ஸ்பெயினில் அவருடன் தங்கியிருந்த பிரேசில்காரருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது. பிரேசில்காரர் தம் நிலையை இந்தப் பெண்ணுக்கு தெரிவிக்க கோவைப் பெண் திரும்பவும் மருத்துவமனையை அணுகியிருக்கிறார். ‘எதுக்கும் உங்களுக்கும் டெஸ்ட் செஞ்சுடலாம்’ என்று செய்திருக்கிறார்கள். பாஸிடிவ் என்று முடிவு வந்திருக்கிறது. ஆனால் இன்னமும் நலமாக இருக்கிறார். எந்தப் பிரச்சினையுமில்லை. இப்படி ‘அடுத்தவங்களுக்கு பரவிடுமோ’ என்று பயப்படுகிற, அறிவார்ந்த ஒரு சிலர் இருக்கும் இதே நாட்டில்தான் வெளிநாட்டிலிருந்து வரும் போது விமானநிலையத்தில் ஏமாற்றுவது, விமானத்தை விட்டு இறங்குவதற்கு முன்பாக பாராசிட்டமால் ஒன்றை விழுங்கிவிட்டு ‘எனக்கு காய்ச்சலே இல்லை’ டபாய்க்கும் மடையர்களும் வாழ்கிறார்கள். விமான நிலையங்களில் வெறும் வெப்பநிலை பரிசோதனையைத்தான் செய்கிறார்கள். அரை மணி நேரம் முன்பாக பாராசிட்டமாலை விழுங்கிக் கொண்டால் வெப்பநிலை கட்டுக்குள் இருக்கும். நழுவிவிடலாம். ஆனால் எத்தனை பேருக்கு ஒட்ட வைக்கப் போகிறோம், இந்தியா மாதிரியான நாடுகளில் பரவத் தொடங்கினால் எப்படி கட்டுக்குள் கொண்டு வருவார்கள் என்று எந்த சிந்தனையும் இருப்பதில்லை.

படிக்காதவர்களைவிடவும் படித்த முட்டாள்கள்தான் வெகு ஆபத்து நிறைந்தவர்கள். 

எனக்கு என்னவோ வடநாட்டில் பொங்கிவிடும் என்றுதான் தோன்றுகிறது. நேற்று ஊரடங்கு நிகழ்வுக்குப் பிறகு அவர்கள் மேற்கொண்ட கொண்டாட்ட மனநிலையைப் பார்த்தால் அப்படித்தான் தெரிகிறது. ஒவ்வொரு கூட்டத்திலும் ஒரு நோய்த் தொற்றாளன் இருந்தால் போதுமல்லவா? கூட்டம் கூட்டமாக கும்மியடித்திருக்கிறார்கள். தமிழகம் ஒப்பீட்டளவில் பரவாயில்லை என்றாலும் யோக்கியமில்லை. இன்று கோயம்பேட்டில் பேருந்துகளில் தொற்றும் கூட்டத்தைக் காட்டினார்கள். சென்னையிலிருந்து பெருமொத்தமாக கொரோனாவை பிற ஊர்களுக்கு அனுப்பி வைக்கிறார்கள் போலிருக்கிறது. நாளை ஊரடங்கு என்று சொல்லி இன்று பேருந்தை அனுமதித்தால் இதுதான் நிகழும். ஊரில் தனியாக மனைவி பிள்ளைகளை விட்டு வந்தவன் அங்கே போகவே விரும்புவான். கிராமத்துக்காரன் ‘எதுக்கும் நம்மூருக்கு போய்விடலாம்’ என்றுதான் கருதுவான். அதனால்தான் கூட்டம். அரசுதான் இதை முன்பே கணித்து பேருந்துகளையும் சேர்த்து நிறுத்தி வைத்திருக்க வேண்டும்.

சாமானியர்களுக்கு பயம் ஏற்படாதவரைக்கும் ஒன்றும் செய்வதற்கில்லை. ஆனால் எப்பொழுது பயம் வரும்? அதற்குள் எல்லாம் கடந்துவிடுமே.

வீட்டிலேயே இருப்பது கஷ்டம்தான். கடந்த சில நாட்களாக வீட்டிலேயே இருப்பது ஒருவகையில் மனச்சோர்வை உண்டாக்குகிறது. வாழ்க்கையில் இப்படியொரு நிலைமை வந்ததேயில்லை. குறைந்தபட்சம் மாலை வேளைகளில் நண்பர்களைச் சந்திக்கவாவது பைக்கை எடுத்துக் கொண்டு வெளியில் சென்று வருவேன். யாருமேயில்லையென்றாலும் காரப்பொரி ஒன்றை அமுக்கிவிட்டு வருவேன். இப்பொழுது எதுவுமில்லை. உணவு, வேலை, சலிப்பு தட்டும் போது தூக்கம் என்பதைத் தாண்டி ஒன்றுமில்லை. நண்பர்களை அலைபேசியில் அழைத்துப் பேசினால் இதைப்பற்றித்தான் பேசுகிறார்கள். நானும் அதையேதான் பேசுகிறேன். மருத்துவ நண்பர்கள்தான் கனவில் கூட வருகிறார்கள். 

கொரோனாவினால் நாளையே உலகம் அழிந்துவிடப் போவதில்லை. நாட்கள் நீள நீள இந்நோய்க்கான மருந்து சந்தைக்கு வந்துவிடும்; தடுப்பூசி வந்துவிடும். மெல்ல இயல்பு நிலை திரும்பும். நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தாலும் கூட மருந்துகளின் உபகாரத்தினால் நலம் பெற்று வீடு திரும்புகிறவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். சாவுகள் குறையும். அதனால் பேரச்சம் எதுவும் தேவையில்லை. நாம் செய்ய வேண்டியதெல்லாம் நமக்கும் நம்மைச் சார்ந்தவர்களுக்கும் உடனடியாக நோய் தொற்றிவிடாமல் தடுப்பதில்தான் எல்லாமும் இருக்கிறது. அதைத்தான் அத்தனை மருத்துவர்களும் சொல்கிறார்கள். திடீரென நோயாளிகளுக்கென பத்தாயிரம் படுக்கைகள் தேவைப்படுமானால் வெண்டிலேட்டர்களுடன் கூடிய அவ்வளவு படுக்கைகள் இல்லை. திடீரென ஐம்பதாயிரம் பேர்களுக்கு பரிசோதனை செய்ய வேண்டும், தனிமைப்படுத்த வேண்டும் என்றால் திணறிப் போவோம். அதனால்தான் அவகாசத்தைக் கூட்ட வேண்டும். இன்னும் மூன்று அல்லது நான்கு வாரங்களுக்கு தற்காத்துக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான். அதற்குள் ஓரளவு நாடும், சுகாதாரத்துறையும் தயார் படுத்திக் கொள்ளும். உலக நாடுகள் மருந்துகளைக் கண்டறிந்துவிடுவார்கள்.

எப்படி தள்ளிப் போடுவது என்பதில்தான் முழுக்கவனமும் இருத்தல் வேண்டும்.  ‘நம்மை எல்லாம் ஒண்ணும் பண்ணாது’ என்கிற மனநிலையை முதலில் தூரக் கடாச வேண்டும். அதுதான் இங்கு பலருக்கும் இருக்கிறது. சமூகத் தொற்று (Community Transmission) இன்னமும் ஆரம்பிக்கவில்லை என்று நினைக்கிறீர்களா? ஜார்க்கண்ட்டில் இருந்து வருகிறவன் வெளிநாடு சென்றுவிட்டு வரவில்லை. ஆனால் அவனுக்கு தொற்று இருக்கிறது. யாரிடமிருந்தோ வாங்கி வந்திருக்கிறான். அவன் பயணம் செய்யும் அதே ரயிலில் பயணித்தவர்கள் நம்மோடு பேருந்தில் பயணிக்கக் கூடும். நமக்கு நோய்க்கான வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்துவிடுகிறோம். இல்லையா? வியாபாரி யாரிடமிருந்தோ காசு வாங்கி நம்மிடம் தருகிறார். காசை வாங்கிக் கொண்ட பிறகு கைகளைக் கழுவாமல் விட்டால் கிருமி நம் கைகளில் குடியிருக்க வாய்ப்பை உருவாக்குகிறோம். அல்லவா? 

எனக்கும் உங்களுக்கும் உடல்நிலை திடகாத்திரமாக இருந்தால் கொரோனா இருமலைக் கொடுத்துவிட்டு விலகிவிடும். ஆனால் நம் வீட்டில் இருக்கும் மற்றவர்களுக்கு வம்பைக் கொண்டு வந்து சேர்த்துவிடுவோம் என்கிற நடுக்கம் மட்டும் இருந்து கொண்டேயிருக்க வேண்டும். சமூகத்திடமிருந்து விலகியிருத்தல்; கைகளைச் சுத்தமாகப் பராமரித்தல்; பயணங்களை முழுமையாகத் தவிர்த்தல் மாதிரியான அடிப்படை அம்சங்களைப் பின்பற்றி கொஞ்சம் இழுத்துப் பிடிப்போம். ‘நானெல்லாம் ப்ளைட்டிலேயே ஃபுட்போர்டு அடிப்பேன்’ என்கிற எண்ணத்திலிருந்து வெளியே வந்து ‘நம்மால் நம்மைச் சார்ந்தவர்களைச் சிக்கலில் தள்ளிவிட்டுவிடக் கூடாது’ என்று பயப்பட்டாலே ஓரளவு தப்பிவிடுவோம். ஆனால் அப்படி பயப்படுவோமா என்றுதான் தெரியவில்லை. 

Mar 22, 2020

கொரோனா- இங்கேயும்...

கொரோனாவின் தாக்குதல் குறித்தான புள்ளிவிவரங்கள் இணையத்தில் கிடைக்கின்றன. கிடைக்கக் கூடிய தகவல்களை வைத்து டேட்டா சயிண்ட்டிஸ்ட்கள் நிறைய வேலைகளைச் செய்ய முடியும். செய்து கொண்டிருக்கிறார்கள். இன்னமும் சில நாட்களில் நிறைய கட்டுரைகள் வெளிவரும். புள்ளி விவரங்கள், நோய் குறித்தான ஆய்வு, ஓரளவுக்கு கணிப்புகள் எனச் செய்து மக்களை எச்சரித்து, அச்சத்திலிருந்து நீக்குதல் போன்ற செயல்களைச் செய்வார்கள். பீதியைக் கிளப்புகிறவர்களும் இருப்பார்கள்.

சீனாவின் முதல் நாற்பத்தைந்தாயிரத்து சொச்சம் நோயாளிகள் குறித்தான விவரம் ஒன்றைப் பார்க்க நேர்ந்தது. அதில் 81% நோயாளிகளுக்கு நோயின் வீரியத்தன்மை மிகக் குறைவானதாக (Mild) இருந்திருக்கிறது. அதிலும் குழந்தைகளில் 90% பேருக்கு எந்தவிதமான பெரிய அறிகுறியுமில்லாமல் நோய் வந்து விலகியிருக்கிறது. அப்படியென்றால் கிருமித் தொற்று உடலில் இருக்கும். ஆனால் எந்தவிதமான பாதிப்பும் இருக்காது. சுமார் பதினான்கு சதவீதம் பேருக்குத்தான் நோய் தீவிரமானதாக இருக்கிறது. மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியதாகிறது. மிகவும் மோசமடைந்து ஐ.சி.யூவில் அனுமதி என்ற நிலைக்குச் செல்கிறவர்களின் எண்ணிக்கை ஐந்து சதவீதத்திற்குள்தான்.

அதே சீனாவில் முதல் எண்பதாயிரம் நோயாளிகளில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 87% பேர். அதாவது சுமார் எழுபதாயிரம் பேர் தேறிவிட்டார்கள். இறந்தவர்களின் எண்ணிக்கை 4% பேர்.  இது சீனாவின் கணக்கு. சீனாவின் எண்ணிக்கையை முழுமையாக நம்ப முடியாது என்கிறார்கள். ஒருவேளை எண்ணிக்கையில் ஏதேனும் தகிடுதத்தம் செய்திருக்கலாம். அதுவே இத்தாலி நாட்டை எடுத்துக் கொண்டால் இன்றைய நிலவரப்படி மொத்த நோயாளிகள் 53578 பேர்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை 4825. சற்றேறக்குறைய ஒன்பது சதவீதம் பேர். இத்தாலியின் இறப்பு எண்ணிக்கைக்கு நிறையக் காரணங்களைச் சுட்டிக்காட்டுகிறார்கள். 

இத்தாலியின் மக்கட்தொகையில் சுமார் இருபத்து மூன்று சதவீதம் பேர்கள் 65 வயதைக் கடந்தவர்கள். வயது அதிகமானவர்களைத்தான் நோய் மிக மோசமாகத் தாக்குகிறது என்பது எல்லோருக்குமே தெரிந்ததுதான். சீனாவில் 65 வயதைக் கடந்தவர்கள் சுமார் பதினோரு சதவீதம் பேர்கள். அதுவே இந்தியாவில் எடுத்துக் கொண்டால் மொத்த மக்கட்தொகையில் ஆறு சதவீதம்தான் 65 வயதைக் கடந்தவர்கள். நம் நாட்டின் சராசரி வயது மிகக் குறைவு.

வயதின் அடிப்படையில் இறந்தவர்களின் சதவீதங்களைப் பார்த்தால் (இதுவும் சீனாவின் கணக்குதான்)- பத்து வயது வரைக்கும் மரணம் எதுவுமில்லை. இளங்குழந்தைகளுக்கு பெரிய பாதிப்பில்லை. பத்து வயது முதல் முப்பத்தொன்பது வயது வரைக்கும் 0.2% பேர் இறக்கிறார்கள். அதன் பிறகு வயது கூடக் கூட இறப்பின் விகிதம் சற்று அதிகரிக்கிறது. 60-69 வயதுள்ளவர்களில் 3.6%, 70-79 வயதுள்ளவர்களில் 8.0% அதற்கு மேலானவர்கள் 14.8% பேர்கள் இறந்திருக்கிறார்கள். 

இவையெல்லாம் கைவசமிருக்கும் மேலோட்டமான புள்ளிவிவரங்கள். இவற்றை வைத்துக் கொண்டு இந்தியா பற்றி நாம் சில முடிவுகளுக்கு வர முடியும்.

இந்தியாவில் மூத்தவர்களின் எண்ணிக்கை குறைவு என்பதை மட்டும் நாம் கணக்கில் எடுத்துக் கொண்டு மரணங்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருக்கும் என்ற முடிவுக்கு நேரடியாக வந்துவிட முடியாது. ஒவ்வொரு நாட்டிலும் பல்வேறு காரணிகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டே சில கணிப்புகளைச் செய்ய இயலும். நாட்டில் மக்களின் சராசரி வயது, அவர்களது வாழ்க்கை முறை, நாட்டில் உள்ள பிற நோய்கள், மருத்துவக் கட்டமைப்பு, அரசின் கொள்கை முடிவுகள் என பல விஷயங்கள் அடங்கியிருக்கின்றன. சீனா செய்யக் கூடிய ஒன்றை இத்தாலி செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பதும், இத்தாலியில் ஏற்பட்டது இந்தியாவிலும் நடக்கும் என நினைப்பதும் சரியாக இருக்காது. இந்தியர்களின் சராசரி வயது மிகக் குறைவு என்றாலும் இங்கிருக்கும் டயாப்பட்டிக் நோயாளிகளின் எண்ணிக்கை, இருதய சம்பந்தப்பட்ட நோயாளர்களின் எண்ணிக்கை, மக்கள் நெரிசல், தம்மை பிரஸ்தாபித்துக் கொள்வதற்காக ஆளும் வர்க்கம் செய்யக் கூடிய தில்லாலங்கடி செயல்கள் போன்ற பிற காரணிகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும். எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டாலும் கூட சுமார் எண்பது சதவீத கொரோனா தொற்றாளர்கள் பெரிய சிரமம் இல்லாமல் மீண்டுவிடுவார்கள் என்பதைத்தான் இப்போது இருக்கக் கூடிய புள்ளிவிவரங்கள் நமக்கு உணர்த்துகின்றன. அதனால் பெரும்பாலான மனிதர்கள் அச்சப்படத் தேவையில்லை. 

அச்சப்பட வேண்டியதெல்லாம் எதிர்காலத்தில் மருத்துவ உதவி தேவைப்படக் கூடியவர்களின் எண்ணிக்கை, இறந்து போகிறவர்களின் எண்ணிக்கை குறித்துதான். ஒருவேளை வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்த இயலாமல் இந்திய மக்கட்தொகையில் சுமார் முப்பது சதவீதம் பேருக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்படுகிறது என்றாலும் கூட (தோராயமான எண்ணிக்கை நாற்பது கோடி பேர்கள்) அதில் எண்பது சதவீதம் பேர் எந்தவிதமான பெரிய தொந்தரவுமில்லாமல் மீண்டுவிடக் கூடும். அதைத்தான் மேற்சொன்ன விவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. மீதமிருக்கும் இருபது சதவீதம் பேருக்கு (சுமார் எட்டு கோடி பேருக்கு) மருத்துவ உதவி தேவைப்படும். இதில் ஐ.சி.யு தேவைப்படுகிறவர்கள் மட்டும் இரண்டு கோடி பேர்களாக இருக்கக் கூடும். அத்தனை ஐசியூக்கள் நம்மிடம் இருக்கின்றனவா? ஒருவேளை தொற்றாளர்களின் எண்ணிக்கை நாற்பது கோடியை விடவும் அதிகமாகும்பட்சத்தில் சிக்கல் இன்னமும் மோசமானதாக இருக்கும். அப்படியான சூழலை எதிர்கொள்ள அரசும், சுகாதாரத்துறையும் தயாராக இருக்கிறதா என்பதெல்லாம் பெரிய புதிர்கள்தான். 

ஒருவேளை நோய் தொற்றாளர்களில் பலரும் பரிசோதனை செய்யப்படாமலேயே இருமலோடு கடந்துவிடக் கூடும். ‘சாதாரண இருமல்’தான் என்று அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கக் கூடும். ஆனால் அவர்கள் வேறு யாருக்கேனும் தொற்றை ஒட்ட வைத்திருப்பார்கள். நோயின் பரவலின் வேகமே நம்மை அச்சப்படுத்துகிறது. 

நோயின் தீவிரம் குறித்துப் பேசுகையில் சில விவரங்களையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். நாற்பது கோடி பேருக்கும் ஒரே சமயத்தில் நோய்த் தொற்று ஏற்படப் போவதில்லை. இரண்டு கோடி பேருக்கும் ஒரே சமயத்தில் ஐ.சி.யூவும் தேவைப்படப் போவதில்லை. ஆனால் அடுத்த சில மாதங்கள்/வருடங்கள் அல்லது மருந்து கண்டுபிடிக்கும் வரைக்கும் இதனோடுதான் போராடிக் கொண்டிருப்போம். இன்னமும் எவ்வளவு நாட்கள் ஆகும் என்று தெரியாவிட்டாலும் இப்பொழுது இருக்கும் பதற்றம் மெல்ல மெல்ல வடியும். ஆனால் மொத்தமாக நம்நாட்டில் ஒரு கோடி பேர் இறந்தாலும் கூட அந்த எண்ணிக்கை மிக அதிகம். நம்மைச் சார்ந்தவர்கள் யாரேனும் எங்கேயேனும் இறந்திருப்பார்கள். ஒவ்வொருவரும் அந்த வலியைத் தாங்க வேண்டியிருக்கும். அது உண்டாக்கும் பொருளாதார பாதிப்புகளும் நம் தலையில்தான் விடியும். அதுமட்டுமில்லாமல் நோயின் காலகட்டத்தில் நாம் எதிர்கொள்ள வேண்டிய சூழல்கள்- பதினைந்து நாட்களுக்கான தனிமைப்படுத்துதல், பெரியவர்கள், குழந்தைகள், அம்மா தனிமைப்படுத்தப்பட்டால் குழந்தையின் நிலை போன்ற மன உளைச்சல்கள், பொருளாதார நெருக்கடிகள், நோய்மை உண்டாக்கும் பயம்,  மன அழுத்தங்கள்- இத்தகைய பிரச்சினைகளால் உண்டாகக் கூடிய தனிமனித, சமூக மனோவியல் சிக்கல்கள் என சகலத்தையும் யோசிக்கும் போதுதான் இதன் பரவல் குறித்தும் அதனை கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் புரிகிறது.

அநேகமாக ஆறு மாதங்களில் நாம் மீண்டுவிடக் கூடும். அந்த நம்பிக்கை இருக்கிறது.  ஆனால் முழுமையான விடுபடலுக்கு கூடுதலான காலம் தேவைப்படும். ஆனால் அதுவரையிலும் நோய்த் தொற்று ஏற்படுகிறவர்களில் நாமும் நம் குடும்பத்தினரும் இல்லாதவாறு பார்த்துக் கொள்வதில்தான் நம் சாமர்த்தியம் இருக்கிறது. அப்படியொரு சூழல் வரும் எனினும் தைரியமாக இருப்போம். எந்தச் சிரமுமின்றி தப்பிக்கும் எண்பது சதவீதம் பேர்களில் நாமோ அல்லது நம்மைச் சார்ந்தவர்களோ இருப்போம் என்கிற வெளிச்சம் மட்டும் உள்ளுக்குள் எரிந்து கொண்டால் போதும். அந்த தைரியம்தான் நாம் நம் குடும்பத்தினருக்கு அளிக்கக் கூடிய மிகப்பெரிய ஆறுதலும் ஆசுவாசமும். எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ளலாம்!

Mar 20, 2020

இனி என்ன ஆகும்?

ஒரு நண்பர் அழைத்திருந்தார். ‘இனி என்ன ஆகும்ண்ணா?’ என்றார். எனக்கு மட்டும் எப்படித் தெரியும்? ‘உலகமே வெள்ளத்துல போய்ட்டு இருக்கு...எதையாவது கெட்டியா புடிச்சுக்குங்க...பார்த்துக்கலாம்’ என்றேன். அதைத்தான் செய்ய முடியும். செய்ய வேண்டும். நாளை என்ன நடக்கும்? நாளை மறுநாள் என்ன ஆகும் என்று மண்டை காய்ந்து எதுவும் ஆகப் போவதில்லை. நடக்கும் போது சூழலுக்கேற்ப முடிவெடுத்துக் கொள்ளலாம். ட்ரம்ப் மட்டுமில்லை யாருமே இதில் எதையும் கணிக்க முடியாது. நீங்களும் நானும் மட்டும் யோசித்து என்ன ஆகப் போகிறது?

உலகின் பெரும் பஞ்சம், கொள்ளை நோய், உலகப் போர்கள் குறித்தெல்லாம் வரலாறுகளில் படிக்கும் போது அதன் வீரியம் நமக்கு முழுமையாக புரிபட்டிருக்காது. அவற்றையெல்லாம் ஒரு செய்தியாக மட்டுமே கடந்திருப்போம். அந்தக் காலகட்டத்திலேயே வாழ்ந்த மனிதர்கள் கூட அத்தனை பேரும் அந்தக் கொடூரங்களின் வீரியத்தை உணர்ந்திருப்பார்களா என்று தெரியவில்லை. இத்தனை தகவல் தொடர்புகள் இல்லை; உடனுக்குடனான செய்திப் பரிமாற்றமும் இருந்திருக்காது. ‘எங்கேயோ நடக்கிறதாம்’ என்றளவுக்கு தெரிந்திருந்தாலே அதிசயம்தான். ஆனால் இன்றைக்கு கொரோனா அப்படியில்லை. இத்தாலியிலும், பிரான்ஸிலும் ‘ஒரே நாளில் இத்தனை உயிரிழப்புகள்’ என நமக்கு விடியும் போதே அறிவித்துவிடுகிறார்கள். ஈரானில் வரிசையாக மரணிப்பதாகச் சொல்கிறார்கள், கிட்டத்தட்ட 165 நாடுகளில் பரவிவிட்டது என்கிறார்கள். இந்தியாவில் எகிறும் நோயாளிகளின் கணக்கினை கிரிக்கெட் ஸ்கோர் போல செய்தி வாசிக்கிறார்கள். ஏதோவொரு இருள் வேகமாக நம்மைக் கவ்வ வருவது போன்ற பீதியும் பிரமையுமாக இருக்கிறது.

எவ்வளவுதான் மோசமடைந்தாலும் உலகமே அழிந்துவிடப் போவதில்லை. நோய் தாக்கிய அனைவரும் இறந்துவிடுவதில்லைதான். ஆனால் நோய்த் தொற்றுக்குள்ளானவர்களில் 3% பேர் இறந்துவிட வாய்ப்புகள் இருக்கின்றன என்கிறார்கள். என்.டி.டி.வி செய்தித்தளத்தில் வெளியான கட்டுரையில் இந்தியாவில் 60% பேருக்கு நோய்த்தாக்குதலுக்கு வாய்ப்பிருப்பதாகச் சொல்லியிருந்தார்கள். இது அதீதமான கணிப்பு என்றே தோன்றுகிறது. அப்படி ஏதாவது நடக்குமானால் அவர்களின் கணக்குப்படி சுமார் அறுபது கோடிக்கும் அதிகமானவர்கள். அதில் மூன்று சதவீதம் என்றாலும் கூட கணக்கு கோடியைத் தாண்டிவிடும். அது மிகப் பெரிய எண்ணிக்கை. 

இப்படியான பயமூட்டும் கணிப்புகள், செய்திகள், அரசு தோல்வியுறுகிறது எனச் சுட்டிக்காட்டும் தகவல்கள் போன்றவை நிலைமையை பதறச் செய்கின்றன. நம்மைச் சுற்றி பரவும் வதந்திகள், நெருக்கடியான காலகட்டத்திலும் தமக்கான விளம்பரத்தைத் தேடுகிறவர்கள், போலியான விளக்கங்களைத் தருபவர்கள், பரபரப்பு பிரியர்கள் என சகலரும் சேர்ந்து ஒரு வழியாக்கிக் கொண்டிருக்கிறார்கள். கடைகளில் இருப்பதையெல்லாம் வழித்துக் கொண்டு சென்றுவிட்டார்கள்.  ‘எந்நேரம் பார்த்தாலும் வேலை வேலைன்னு இருந்தா ஊட்டுக்கு வேணுங்குற சாமானமெல்லாம் யார் வாங்கித் தருவாங்க’ என்று அம்மா மண்டையை உருட்டுகிறார். சென்னையில் மட்டுமில்லை- கிட்டத்தட்ட அத்தனை ஊர்களிலும் அப்படித்தான். பெரிய கடைகளை மூடச் சொல்லி உள்ளூர் உத்தரவாம். இதெல்லாம் எப்போது முடிவுக்கு வரும் என்று புரியவில்லை.

நோயைவிடவும் இனி அதனால் உலகம் எதிர்கொள்ளவிருக்கும் பின்விளைவுகள்- தனிமனித, குடும்ப, சமூக மனநிலை மாற்றங்கள், உலகளாவிய பொருளாதார விளைவுகள் போன்றவை குறித்து இன்னமும் அதிகமாக கவலைப்பட வேண்டியிருக்கிறது. ‘ஷட்-டவுன்’ என்று மிக எளிதாகச் சொல்லிவிடலாம். அதனால் முடங்கும் தொழில்கள், வலுவிழக்கும் பொருளாதாரம், வேலையிழப்பு என வரவிருக்கும் விளைவுகளுக்கான என்ன பதில்களை நாம் வைத்திருக்கிறோம்? ஒரு தொழிற்சாலை முடக்கம் என்பது அத்தொழிற்சாலைக்கு தேவையான பொருட்களை வழங்கும் சிறு நிறுவனங்கள் தொடங்கி, தொழிற்சாலை பணியாளர்கள், அந்நிறுவனத்தை நம்பியிருக்கும் விநியோகஸ்தர்கள், நிறுவனத்தின் பிற உதவி நிறுவனங்கள் என அத்தனையுமே தங்களது வாய்ப்புகளை இழக்கின்றன. வருமானத்தை இழக்கின்றன. பணியாளர்களை வீட்டுக்கு அனுப்புவார்கள். 

அரசாங்கம் இதுவரையிலும் எந்தச் சலுகையும் அறிவிக்கவில்லை. வெறுமனே கதையளந்து கொண்டிருக்கிறார்கள். பெட்ரோல் விலை கூட காதும் காதும் வைத்தாற்போல ஏற்றப்பட்டிருக்கிறது. அரசு மருத்துவர்களுக்கு இன்னமும் முகமூடிகள் வழங்கப்படவில்லை. தமிழகத்தில் இதுவரை செய்யப்பட்ட பரிசோதனைகளின் எண்ணிக்கை 320 மட்டும்தானாம். அரசுகளின் கஜானாக்கள் காலியாகிக் கிடக்கின்றன. அதைப் பற்றி பேசி ஒன்றும் ஆகப் போவதில்லை. 

ஒருவேளை பதினைந்து நாட்களில் எல்லாமும் வழமைக்கு வந்துவிடும் என்று அரசாங்கம் கணித்திருக்கக் கூடும். அப்படியென்றால் நாமும் தப்பித்துவிடலாம் அல்லது அதிகபட்சம் ஒரு மாதம் ஆகுமெனில் கூட பிரச்சினையில்லை. சமாளித்துவிடலாம். நாட்கள் நீளுமானால், இப்படியே வீட்டில் இருந்தபடியே சம்பளம் வாங்குவது எப்படி சாத்தியமாகும்? வருமானமே இல்லாமல் சம்பளத்தை மட்டும் நிறுவனங்கள் எப்படி வழங்குவார்கள்? வாங்கிய கடனுக்கான மாதாந்திர தவணைகளை எப்படி கட்டுவது? குடும்பச் செலவுகளை எப்படிச் செய்வது? இப்படியாக தனிமனிதர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் என்று ஏதேதோ வரக் கூடும். 

அப்படியெதுவும் நிகழ்ந்துவிடக் கூடாது என்று மனம் விரும்புகிறது. கைகள் பிரார்த்தனைக்காக குவிகின்றன. ஒருவேளை இதையெல்லாம் தாண்டி இச்சூழல் இரண்டு மாதங்களுக்கு நீடிக்குமானால் நாம் வேறொரு உலகை பார்க்கத் தொடங்குவோம். அப்படியொரு நிலை உருவாகுமெனில் தனிமனித மனநிலை மாற்றங்கள், சமூகத்தின் போக்கில் நிகழவிருக்கும் மாற்றங்கள் குறித்தான புரிதல்களை உள்வாங்கி, விவாதித்து, நம்மை அதற்கேற்ப தகவமைத்துக் கொள்ளத் தயாராக வேண்டும். 

தனிமனிதர்களுக்கு பொருளாதாரம், வாழ்வியல் தேவைகள் சார்ந்து உருவாகும் மன அழுத்தங்கள், அதே காரணங்களுக்காக குடும்பத்திற்குள் நிகழக் கூடிய மாறுதல்கள், விளைவுகள், இதன் இரண்டின் நீட்சியாக சமூகத்தில் நிகழக் கூடிய பாதகங்கள், மாற்றங்கள் என எல்லாவற்றையும் நாம் எதிர்கொள்ள நேரிடும். 

இதெல்லாம் நடக்குமா? என்று வினவினால் பதில் இல்லை. மனிதகுல வரலாற்றில் இப்படியொரு நிகழ்வை சந்தித்திருக்க மாட்டோம். மிகப்பெரிய பிரச்சினைகள் கூட Localized ஆகத்தான் இருந்திருக்கும். எந்தவொரு விவகாரத்திலும் பாதிப்பு என்பது ஒரு வட்டத்திற்குள்தான் நடந்திருக்கும். எந்த நோயும் இவ்வளவு வேகமாக  கண்டம் விட்டு கண்டம் பாய்ந்திருக்காது. இன்றைக்கு அப்படியில்லை. கனவேகமாக பரவிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாடும் இன்னொரு நாட்டை ஏதொவொருவகையில் சார்ந்திருக்கிறது.  ஒவ்வொரு தொழிலும் இன்னொரு தொழிலினால் முடங்கக் கூடும். எல்லாமே சங்கிலித்தொடர்தான். அடுக்கி வைத்த சீட்டுக்கட்டுதான். எந்த ஒன்றை உருவினாலும் மொத்தமும் சரியக் கூடும். அப்படியொரு காலகட்டத்தில், சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதில் என்ன நடக்கும் என்று எப்படி கணிக்க முடியும்? எந்தவொரு கணிப்பும் பொய்யாகிவிடக் கூடும்.

இந்தத் தருணத்தில் நம்பிக்கை மட்டுமே மிகப்பெரிய ஆயுதமாக இருக்கும். தனிமனிதனும், குடும்பமும், சமூகமும் நம்பிக்கையை மட்டும் இழந்துவிடக் கூடாது. சரிந்து விழும் போதும் ஏதோவொரு பிடிமானத்தை இறுகப்பிடித்துக் கொள்வோம். எந்தவொரு சூழலிலும் அந்த பிடிமானத்தை மட்டும் விட்டுவிடக் கூடாது. இது எனக்கும் உங்களுக்குமான பிரச்சினை மட்டுமில்லை. உலகமே எதிர்த்துப் போராடுகிறது. எப்படியும் மீண்டெழுந்துவிடுவோம் என்கிற நம்பிக்கை அவசியம். அப்படி எழும் போது புத்தம் புது வாய்ப்புகள் நிறைய உருவாகியிருக்கும். அவை நமக்கான வசந்தத்தை உருவாக்கும். அதுவரை எவ்வளவு பெரும் அழுத்தம் வந்தாலும் அது நம்மை உதிர்த்துவிடாது என்று மட்டும் உறுதியாக நம்பிக் கொண்டிருப்போம்.

Mar 10, 2020

மரண பீதி

நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஊர் சுற்றிக் கொண்டிருந்தவனுக்கு கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பீதி பெரும்பீதியாக இருக்கிறது. யாருக்கும் ஃபோன் கூட செய்ய முடிவதில்லை. காதுக்குள்ளேயே இருமுகிறார்கள். திரைப்படம் பார்க்கும் போது ‘புற்றுநோய் விளம்பரம்’ வந்தால் காதுகளைப் பொத்திக் கொள்வேன். ஏதேனும் மருத்துவமனை அந்நோய்க்கு விளம்பர பதாகை வைத்திருந்தால் முடிந்தவரை கவனத்தை திசை மாற்றிக் கொள்வேன். அந்தச் சொல்லே ஒருவிதமான அச்ச உணர்வை உருவாக்கிவிடுகிறது. பொதுவாகவே எந்த நோய் குறித்தும் விழிப்புணர்வு இருந்தால் போதும்; பயம் அவசியமில்லை என்ற எண்ணம்  உண்டு. ஆனால் நாம் வாழ்கிற கால, இடச் சூழல்கள் பயத்தையே மூலதனமாகக் கொண்டிருக்கின்றன. கொரானோவும் அதை இம்மிபிசகாமல் செய்து கொண்டிருக்கிறது.

கூட்டத்தைத் தவிருங்கள் என்கிறார்கள். சரியான அறிவுரை. ஆனால் பேருந்து நடத்துநர் போன்ற பணிகளைச் செய்கிறவர்கள் என்ன செய்வார்கள்? அடுத்தவர்களுடன் நெருங்கிப் பழகும் பணியைச் செய்யக் கூடிய வேலை மட்டுமே இங்கு தோராயமாக முப்பது சதவீதத்தைத் தாண்டும். வெளியூரில் உண்டு, வெளியூரில் தங்கி, வெளியூரில் சுற்றிக் கொண்டிருக்கும் தொழிலைச் செய்கிறவர்கள் கணிசமாக இருப்பார்கள். அலுவலகக் கேண்டீன்களில் உண்ணுகிறவர்கள் கூட பல்லாயிரக்கணக்கானோர் உண்டு. பள்ளிக் கூடங்கள் மாதிரியான தவிர்க்கவே இயலாத தொற்றுக்கூடங்களை வரிசையாகச் சுட்டிக்காட்டலாம். என்ன செய்ய முடியும்?

பொதுவாகவே தனிமனித சுத்தம், சமூக சுத்தம் என்பதெல்லாம் தொடர்ச்சியான செயல்பாடு. திடீரென ஒரு பீதி கிளம்பும் போது மட்டும் எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்திவிட முடியும் என்று நம்புவதே அபத்தம்தான். நல்வாய்ப்பாக, நோயின் வீரியம் அதுவாகவே குறையத் தொடங்கி, பரவல் வேகம் கட்டுக்குள் இருந்தால் தப்பிவிடலாம். கட்டுக்கடங்காமல் பரவினால் இத்தகைய அவசரகதி ஒழுங்குகள் எல்லாவற்றையும் சரி செய்து நம்புவதெல்லாம் சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது. 

சமீபமாக மட்டும் எத்தனை புதுப்புது வைரஸ்கள் குறித்து கேள்விப்பட்டிருக்கிறோம்? சார்ஸ் வைரஸ், பன்றிக்காய்ச்சல், பறவைக்காய்ச்சல், எபோலா என்று ஒவ்வொன்றாக, புதுப் புது நோய்களாக வந்து கொண்டேயிருக்கின்றன. திடீரென்று பயமூட்டுகின்றன. பதறச் செய்கின்றன. பிறகு அப்படியே அமுங்கிவிடுகின்றன.  ‘பயோ வார்’ ‘மருத்துவ உலகின் சதி’ ‘மருந்துக் கம்பெனிகளின் கதை’ என்று விதவிதமான தியரிகள் நம்மை ஆக்கிரமிக்கின்றன. இந்நோயும் அப்படியே போய்விட்டால் சந்தோஷம். இப்பொழுதெல்லாம் ஊர் சுற்ற விரும்பினால் கூட இத்தாலிக்கும் பிரான்ஸூக்கும் செல்வதற்கான வாய்ப்புகள் பலருக்கும் உருவாகியிருக்கிறது. படிக்க வெவ்வேறு நாடுகளுக்குச் செல்வது, வேலைக்கு என பல தேசங்களுக்கும் செல்வது என உலகம் மிகச் சுருங்கிவிட்டது. ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்துக்கு எந்த நோயும் மிகச் சாதாரணமாக பரவிவிடவே வாய்ப்புகளும் அதிகம். 

நோய் பரவுகிறதோ இல்லையோ பயம் பரவுகிறது. ஊடகங்கள் ‘லைவ் அப்டேட்’ செய்கின்றன. அங்கே அப்படியாம்; இங்கே அப்படியாம் என ரத்த நாளங்களைச் சூடேற்றுகின்றன. உலகை அழிக்க ஒரு பெரும் கல் நெருங்கி வருவது போன்றதான திக் திக் மனநிலை நமக்கு மிகச் சாதாரணமாக உருவாகிவிடுகிறது. கேள்விப்பட்டவுடன் பதறுவது மனித இயல்பு. ‘தடுப்பூசி கூட இல்லையாமா’ என்பதில் தொடங்கி தாம் பயப்படுவதற்கான எவ்வளவோ காரணங்களை அடுக்குகிறார்கள். 

விழிப்புணர்வு அவசியம்தான். அரசாங்கம் செய்வதும் சரியான செயல்தான். ஆனால் சட்டென இப்படியொரு சூழல் உருவாகும் போது நம் மக்கள் பதறத் தொடங்குகிறார்கள். பொதுவாக சமூக ஊடகங்கள் மற்றும் ஊடகத் தொடர்பற்றவர்கள் இவ்வளவு பதறுவதில்லை. மிக இயல்பான மனநிலையில்தான் இருக்கிறார்கள். ஆனால் இவற்றோடெல்லாம் ஏதோவொருவகையில் தொடர்பிருந்தால் அவ்வளவுதான். சோலி சுத்தம். பம்ம வேண்டியதாகிவிடுகிறது. 

முன்பொரு சமயத்தில் ஒரு மூத்த மருத்துவரைச் சந்தித்து பேசிக் கொண்டிருக்கும் போது அவர் சொன்ன வாக்கியம் நினைவுக்கு வருகிறது. ‘பொதுவாகவே இந்தியர்கள்- குறிப்பாக தென்னிந்தியர்களின் நோய் குறித்தான மனநிலை மேம்போக்கானது. பெரிதாக அலட்டிக் கொள்ளமாட்டார்கள். ‘வந்தா பார்த்துக்கலாம்’ என்பதுதான்’. அது நிதர்சனமான கவனிப்பு. அப்படித்தான் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். ஒருவேளை உலகம் முழுக்கவே அப்படியான மனநிலை இருந்திருக்க கூடும். மருத்துவ வசதிகளும், வாய்ப்புகளும், தகவல் தொடர்புகளும் பெருகப் பெருக பல்வேறு நோய்களைப் பற்றி நமக்கு அரையும்குறையுமாகத் தெரியத் தொடங்குகிறது. சுற்றியிருக்கும் ‘கால் மருத்துவர்கள்’ ‘அரை மருத்துவர்கள்’ இல்லாததும் பொல்லாததுமாகச் சொல்கிறார்கள். இப்படித்தான்  ‘வந்தா பார்த்துக்கலாம்’ என்ற அந்தப் பொது மனநிலை கடந்த கால் நூற்றாண்டாக மெல்ல மெல்ல மாறி வருகிறது. 

முன்பெல்லாம் வயதான ஒருவர் இறந்து போனால் ‘வயசாகிடுச்சு...இறந்துட்டாரு’ என்பதைத் தாண்டி எதுவும் இருக்காது. ஆனால் இப்பொழுதெல்லாம் துல்லியமாகக் காரணத்தைச் சொல்லிவிடுவோம். துக்க வீடுகளில் ‘வால்வ் டேமேஜ் ஆகிடுச்சு’ ‘ப்ரஷர் பத்தாம கிட்னி வேலை செய்யறதில்லை’ என்பது மாதிரி ஏதோவொரு டெக்னிக்கல் காரணத்தைச் சொல்கிறார்கள். அதைக் கேட்டவர் ‘ஆமா எனக்குத் தெரிஞ்சவரும் அப்படித்தான்’ என்று சொல்லிவிட்டு இவர் சொன்ன காரணத்தை இன்னொரு இழவு வீட்டில் சொல்லிக் கொண்டிருக்கிறார். யோசித்துப் பார்த்தால் மருத்துவ விவகாரங்களில் அறியாமை ஒரு வரம். கூகிளை எல்லாம் விட்டுவிட்டு மருத்துவர் சொல்வதை பின்பற்றினால் பெரிதாக அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. நமக்குள் இருக்கும் கால், அரை வைத்தியர்கள் விழித்துக் கொள்ளும் போது நம் பாடு திண்டாட்டமாகிவிடுகிறது. பிரச்சினை என்னவென்றால் தனிமனிதர்களில் மட்டுமில்லாமல் சமூகத்திலும் கால், அரை வைத்தியர்கள் பெருகிவிட்டார்கள். சமூகம் என்பது ஊடகம், அரசாங்கத்தை நடத்துகிறவர்கள் என சகலரும் அடக்கம். 

பெருநகரங்களை விட்டுவிடலாம்- தமிழகத்தின் எந்த ஊரிலும், எந்த மருந்துக் கடையிலும் கைகளைச் சுத்தமாக்கிக் கொள்ளும் ‘சானிட்டைஸர்களை’ இன்று வாங்க முடியாது. தீர்ந்துவிட்டது என்கிறார்கள். முகமூடிகள் கிடைப்பதில்லை. பெரும் கொள்ளை நோய் ஒன்று நம்மைத் தாக்கப் போவதான பாவனையில் அவசர அவசரமாக வாங்கி வீட்டில் நிரப்பிக் கொள்கிறார்கள். கொரோனா பரவினாலும் கூட அப்படியெல்லாம் கொத்து கொத்தாக மனிதர்கள் இறந்து போய்விட மாட்டார்கள். விழிப்புணர்வு அவசியம்தான். தயாராக இருந்து கொள்வோம். ஆனால் அதற்காக இவ்வளவு பதற வேண்டியதில்லை. இப்படி ஒவ்வொரு நோய்க்காக பதறி அடங்கினால் இன்னமும் சில பத்தாண்டுகளில் எல்லாவற்றுக்கும் பதறிக் கொண்டேயிருக்கும் பெரும் சமூகமாக மாறிவிடுவோம்.