Feb 23, 2020

மாஃபியா

தருமபுரியில் ஒரு திரையரங்குக்குச் சென்றிருந்தேன். மிகச் சுமாரான அரங்கு. மதிய உணவுக்குப் பிறகு வெயில் மண்டையைப் பிளந்ததால் தியேட்டருக்குள் நுழைந்துவிட்டேன்.

இயக்குநர் நரேன் கார்த்திக் கோயமுத்தூர்காரர். துருவங்கள் பதினாறு என்ற தரமான படத்தை இயக்கியவர். அவர் மட்டுமில்லை- அருண் விஜய், பிரசன்னா இருவருமே மிகச் சிறந்த நடிகர்கள் அல்லவா? போதாக்குறைக்கு நாயகி பிரியா பவானிசங்கர் பக்கத்து வீட்டுப் பெண் மாதிரி இருக்கிறார். புதிய தலைமுறையில் செய்தி வாசிப்பாளராக இருந்தவராம். தமிழ்ப்பெண். அதனால் படத்தை பார்த்துவிட வேண்டும் என முடிவு செய்து வைத்திருந்தேன்.

போதைப் பொருள் கடத்தலின் மிகப்பெரிய நெட்வொர்க்கில் பிரசன்னா ஒரு கண்ணி. போதைத் தடுப்பு பிரிவில் அருண் விஜய்யும், பிரியாவும் பணியாற்றுகிறார்கள். பிரசன்னாதான் நெட்வொர்க்கின் ‘தலைமை’ என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். தம்மைப் பற்றித் தகவல் தெரிந்தவர்களை ஒவ்வொருவராக பிரசன்னா கொன்றுவிடுகிறார். அப்பொழுதே கதையை யூகித்துவிட முடிகிறது. மிகச் சாதாரணமாக அருண்விஜய், பிரியா என மூன்று பேர் ஒரு குடோனில் நுழைந்து பிரசன்னாவின் சரக்கு நிறைந்த லாரியைத் தூக்கி வந்துவிட, அதற்கு பதிலாக அருண் விஜய்யின் குடும்பத்தை பிரசன்னா தூக்கிச் சென்று மிரட்டுகிறார். 

இப்படியொரு கதையை நாம் பல இடங்களில் எதிர் கொண்டிருப்போம். எந்த சுவாரசியமும் இல்லாமல் பார்த்துக் கொண்டிருந்தேன். 

அருண் விஜய்யும், பிரசன்னாவும் அட்டகாசம். அதுவும் பிரசன்னாவின் நடை, உடை, பாவனை பிரமாதம். படத்தின் உருவாக்கத்தில் செலுத்திய கவனத்தில் பாதி கூட கதை, திரைக்கதையில் செலுத்தவில்லை போலிருக்கிறது. எந்தவொரு படைப்பும்- அது எழுத்தாக இருந்தாலும் சரி; சினிமாவாக இருந்தாலும் சரி-  ‘இது கூடத் தெரியாதா’ என வாசகனை/பார்வையாளனை நினைக்கச் செய்துவிடக் கூடாது. அப்படி அவன் நினைத்தால் படைப்பு விழுந்துவிட்டது என்று அர்த்தம். நாம் சொல்லுகிற கதையை விட்டுவிட்டு அவனாக ஒரு கதையை உருவாக்கிக் கொண்டிருப்பான். 

அருண் விஜய்யின் அண்ணன் சிறுவயதில் போதைப் பொருளை வாங்குவதற்காக ஒரு குடோனுக்குச் செல்கிறார். அங்கு போலீஸார் நிகழ்த்தும் துப்பாக்கிச் சூட்டில் இறந்துவிடுகிறார். உடல் கூட கிடைக்கவில்லையாம். சுனாமி மாதிரியான இயற்கை பேரிடர்களில் உடல் காணாமல் போனால் ஏற்றுக் கொள்ளலாம். ஏதாவது கலவரம் என்றாலும் கூட இருபது பேர்கள் இறந்த இடத்தில் ஐந்து பேர்கள்தான் இறந்தார்கள் என்று போலீஸார் சொல்லக் கூடும். அப்பொழுதும் கூட இருபது குடும்பத்தாரும் இறந்தவர்களின் உடலை பெற்றுக் கொள்வார்கள். கணக்குக்குத்தான் இருபது என்பது ஐந்தாக மாறியிருக்குமே தவிர உடல் காணாமல் போவதற்கான சாத்தியங்கள் இல்லை. ஆனால் ஒரு குடோனில் நடைபெறும் துப்பாக்கிச் சூட்டில் இறந்தவனின் உடல் கிடைக்கவில்லை என்பதெல்லாம் எப்படி நியாயம்? இப்படி படம் முழுக்கவும் நிறைய ஓட்டைகள். 

பொதுவாகவே நாவல், கதை எழுதும் போதும் அதில் இருக்கும் ஓட்டைகள் எழுதுகிறவன் கண்களுக்குத் தெரியாது. நாம் செப்பனிடுகிறோம் என்று திரும்பத் திரும்ப வாசித்துப் பார்த்தாலும் வாக்கிய அமைப்பில், சொற்களின் தேர்வில்தான் கவனம் செலுத்திக் கொண்டிருப்போம். வேறு யாராவது படிக்கும் போதுதான் ‘இது சரியா வரல’ எனச் சொல்லும் போதுதான் எழுதுகிறவனுக்கு உரைக்கும். கார்த்திக் நரேன் மாதிரியான இளம் இயக்குநர்களுக்கும் அத்தகைய பிரச்சினை இருக்கிறது.  ‘மேக்கிங்கில்’ கவனம் செலுத்திவிட்டு பார்வையாளனை ‘இது கூட இவங்களுக்குத் தெரியாதா’ என யோசிக்க இடம் கொடுத்துவிடுகிறார்கள். 

படம் எப்படியும் தப்பித்துவிடும் என்றுதான் தோன்றுகிறது. முதல் பத்தியில் சொன்னது போல பிரசன்னா, அருண் விஜய், பிரியா, நரேன் கார்த்திக் எல்லோருமே ஜெயிக்க வேண்டிய ஆட்கள். ஜெயிக்கட்டும்.

மாஃபியா படம் பார்ப்பதற்காக தருமபுரி போக வேண்டுமா? அங்கே வேறொரு காரணத்திற்காகச் சென்றிருந்தேன். சிவராத்தியன்று அங்கேதான் இருந்தேன். இப்படி அவ்வப்பொழுது ஏதாவது ஊருக்குச் சென்று ஒன்றிரண்டு நாட்கள் இருந்துவிட்டு வருகிறேன். சூரியன் மேற்கில் இறங்கும் போது சிறு குன்றுகளை கவனித்தால் சிவலிங்கம் போலவேதான் தோன்றும். தருமபுரியில் இப்பொழுது வரைக்கும் அத்தகைய குன்றுகள் இருக்கின்றன. ஆனால் குவாரிகள் அதிகம். எத்தனை ஆண்டுகளுக்கு இந்த சிவபெருமான்கள் தப்பி பிழைப்பார்கள் என்று தெரியாது. அதுவுமில்லாமல் இன்னும் சில ஆண்டுகள்தான் என்னாலும் சுற்ற முடியும். வயது கூடி உடல் சற்று தளர்வுற்றாலும் இப்படி சுற்றுவதெல்லாம் சாத்தியமில்லாமல் போய்விடும். தருமபுரி நண்பரிடம் பைக்கை வாங்கிக் கொண்டு அம்மாவட்டத்தை வடக்கும் தெற்குமாக- கிழக்கும் மேற்குமாக இப்பொழுது போலவே எப்பொழுதும் சுற்ற முடியுமா? 

தமிழகத்தில் ஒவ்வொரு மண்ணுக்கும் தனித்துவம் இருக்கிறது. வெறுமனே நெடுஞ்சாலையில் காற்றைக் கிழித்துக் கொண்டு சென்று வருவதால் அதனை உணரவே முடியாது. பென்னாகரத்திலிருந்து ஏரியூர் செல்லும் வழியில் அஜ்ஜனஹள்ளி என்றொரு கிராமம். வண்டியை நிறுத்திவிட்டு அங்கேயிருந்த சிவபெருமான் ஒருவரைப் பார்த்தபடி அமர்ந்திருந்தேன். ஒருவர் வந்தார். அவருக்கு சந்தேகமாக இருந்திருக்க கூடும். சிரித்தபடியே ‘இங்க ஏன் நிக்குறீங்க?’ என்றார்.  ‘சும்மா ஊரைப் பார்க்கலாம்’ என வந்தேன் என்றேன். அவருக்கு சந்தேகம் வலுத்துவிட்டது. கேள்வி மேல் கேள்வியாகக் கேட்டார். அவரை நம்ப வைப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது. அப்புறம் நண்பர்களாகிவிட்டோம். மங்களூரு உடுப்பியில் ஒரு சிப்ஸ் கடை வைத்திருக்கிறார். அங்கே சம்பாதித்து கிராமத்தில் வீடு கட்டிக் கொண்டிருக்கிறார். அந்த கிராமத்தில் அழகழகான நான்கைந்து வீடுகள் இருந்தன. அத்தனை பேரும் வெளியூரில் இருக்கிறார்கள். சொந்த கிராமத்தில் வீடு என்பது அவர்களின் கனவு. இந்தத் தலைமுறை ஆட்கள் எங்கேயோ சம்பாதித்து இங்கே மிக அழகாகக் கட்டி வைத்திருக்கிறார்கள்.

நண்பரிடம் ‘உங்க ஊரில் நடுகற்கள் இருக்கு தெரியுமா?’ என்றேன். தருமபுரி சுற்றுவட்டாரத்தில் நடுகற்கள் அதிகம். நடுகற்கள் என்பவை அந்தக் காலத்தில் வீர தீரச் செயல்களில் இறந்து போனவர்கள் நினைவாக நடப்படும் கற்கள். அதில் ஏகப்பட்ட வகைகள் இருக்கின்றன. உதாரணமாக, புலிகுத்திப்பட்டான் கல் என்றால் புலியுடன் சண்டையிட்டு இறந்தவனுக்காக நட்டப்பட்ட கல். பல இடங்களில் மக்கள் அதனை கடவுளாக நினைத்து வழிபடுகிறார்கள். சில இடங்களில் சாலை விரிவாக்கப்பணியில் ஏதோவொரு கல் என்று ஜே.சி.பி வண்டிக்காரர் ஓட்டித் தள்ளிவிடுகிறார். நடுகற்களை அவை வணங்கப்படும் இடத்திலிருந்து ஒன்றிரண்டையாவது பார்க்கலாம் எனத் திட்டமிட்டிருந்தேன். பென்னாகரத்திலிருந்து ஏரியூர் செல்லும் வழியில் ஒன்றிருந்தது. சுண்ணாம்பு பூசி வைத்திருந்தார்கள். எந்த வீரனுக்கான கல்லோ! அழைத்துச் சென்று வேறு சில கற்களையும் காட்டினார். நடுகல் பற்றி எழுதுவது நோக்கமில்லை. மாஃபியாதான் நோக்கம். இரண்டையும் எழுதிவிட்டேன்.

Feb 15, 2020

அரசுப்பணி என்னும் பெருங்கனவு

இலஞ்சம் வாங்கிய மின் வாரியப் பொறியாளர்களைக் கையும் களவுமாகக் கைது செய்த மின் வாரியத்துறை என்றொரு செய்தி. இப்படியான செய்திகளை நாம் தினசரி கடந்து செல்கிறோம். கிராம நிர்வாக அலுவலர்கள் கைது, தாசில்தார் கைது வரைக்கும் கேள்விப்படுவோம். ஆனால் அதற்கு மேல் எந்த அதிகாரியும் சிக்க மாட்டார்கள். கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் ஊழலில் கைது செய்யப்பட்டார்கள் என்று செய்தி வெளியில் வருவதுண்டா? சட்டமும் நியாயமும் எப்பொழுதுமே வலு குறைந்தவர்கள் மீதுதான் தம் கைகளைப் போடுகிறது. ஒவ்வொரு பிரச்சினையிலும் இப்படித்தான். 

அரசுத்துறைகளில் ஏதேனும் ஒரு வேலையை காசு கொடுக்காமல் வாங்க முடியும் என்று நினைக்கிறீர்களா? நடத்துநர், ஓட்டுநர் தொடங்கி கல்லூரி பேராசிரியர் வரைக்கும் எல்லாவற்றுக்கும் ஒரு விலை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ஜூனியர் அஸிஸ்டெண்ட் வேலைக்கு ஐந்து லட்ச ரூபாய் என்றால் உதவிப்பேராசிரியர் வேலைக்கு நாற்பத்தைந்து லட்ச ரூபாய். யார் வாங்குகிறார்கள் எங்கே போகிறது என்றே தெரியாது. துறை சார்ந்தவர்கள் ‘உள்ளூர் அமைச்சருக்கு கொடுத்துவிடுவோம்’ என்பார்கள். உள்ளூர் அமைச்சர்கள் தரப்பில் ‘அந்தத் துறையில் நாங்கள் தலையிடுவதே இல்லை’ என்று மழுப்பிவிடுவார்கள். சத்துணவு ஊழியர் வேலையை வாங்கக் கூட நான்கு லட்ச ரூபாய் கொடுத்த கதை தெரியும். உள்ளூர் அரசியல்வாதி வாங்கி ‘மேலே கொடுத்துவிட்டேன்’ என்பார்.  ஆனால் ‘இதெல்லாம் கட்சிக்காரர்களுக்கான வளர்ச்சி நிதி; நாங்கள் வாங்கிக் கொள்வதில்லை’ என்று மேலேயிருப்பவர்கள் சொல்வார்கள். எங்கேயாவது யாராவது சிக்கியிருக்கிறார்களா? 

பணி நியமனங்களை விடுங்கள்; இடமாற்றங்களுக்கும் கூட இங்கே பணம் புழங்குகிறது. ஓரிடத்திலிருந்து நமக்கு வாகான இடத்துக்கு பணி மாற்றம் கோரினால் அதற்கென ஒரு தொகையைக் கொடுக்க வேண்டும். அங்கேயும் இதே கதைதான். யாருக்கான பணம் என்றே தெரியாது. அங்கே நிர்ணயிக்கப்பட்டிருக்கும் தொகையைக் வெட்டினால் அவர்கள் பணி மாற்ற உத்தரவை வாங்கித் தருவார்கள். கடந்த பல ஆண்டுகளாக ‘அரசு வேலை வாங்கிவிடலாம்’ என்ற நம்பிக்கையிலேயே காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கும் இளைஞர்களையும் தெரியும்; இதெல்லாம் நமக்கு சாத்தியமில்லைங்கண்ணா என்று சொல்லிவிட்டு தனியார் நிறுவனங்களில் சொற்ப சம்பளத்தில் பணியாற்றும் எம்.பிஃல் பட்டதாரிகளையும் தெரியும்.

சில வருடங்களுக்கு- ஏழெட்டு வருடங்கள் இருக்கும்- முன்பாக நடத்துநர் பணி வாங்குவதற்காக ஒருவர் முயற்சித்துக் கொண்டிருந்தார். அவரிடம் கிட்டத்தட்ட ஒரு ஏக்கர் நிலம் இருந்தது. எங்கள் அப்பாவிடம் வந்து ‘வைத்துக் கொள்கிறீர்களா? ஐந்து லட்சம் கொடுங்க’ என்றார். அப்பொழுது அப்பாவிடம் பணமில்லை. வேறொருவரிடம் விற்று நடத்துநர் வேலையை வாங்கிவிட்டார். இன்றைக்கு அந்த இடத்தின் மதிப்பு பல லட்சங்களைத் தொடும். ஆனாலும் அந்த நபருக்கு பல லட்சங்களைவிடவும் தம்முடைய வேலை நிரந்தரமானது; வாழ்க்கை முழுமைக்குமான ஓர் உத்தரவாதம் கொண்டது என்ற நம்பிக்கை இருக்கிறது. இல்லையா? அரசுப்பணியை எதிர்பார்க்கும் பெரும்பாலானவர்களின் மனநிலைதான் அது.

நாற்பத்தைந்து லட்ச ரூபாயைக் கொடுத்து வாங்கினாலும் கூட அரசுக் கல்லூரி பேராசிரியர் பதவி என்பது வாழ்க்கைக்கு உத்தரவாதம் தருகிறது என்று நம்புகிறார்கள். அதனால்தான் அவ்வளவு பெரும் தொகையை புரட்டிக் கொடுக்கிறார்கள். அந்த நம்பிக்கையைத்தான் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் முதலீடாக்கிக் கொள்கிறார்கள். டி.என்.பி.எஸ்.சிதான் கொஞ்சம் பரவாயில்லை என்று நினைத்துக் கொண்டிருந்தால் அங்கே அதைவிட அயோக்கியத்தனங்களை நடத்தியிருக்கிறார்கள். அரசுப்பணி என்பது எத்தனை லட்சம் இளையவர்களின் கனவு? காசு படைத்தவர்கள், தொடர்புகளைக் கொண்டவர்களால் மட்டுமே வேலையை வாங்க முடியும் என்ற சூழல் உருவாவது மிகப்பெரிய பின் விளைவுகளை உருவாக்கும்.

டி.என்.பி.எஸ்.சி  வழக்கை அப்படியும் இப்படியும்  அசைத்து இரண்டு அல்லது மூன்று மாதங்களில் மறக்கடித்துவிடுவார்கள். அதுவரைக்கும் டிரைவர், க்ளர்க், அலுவலகப் பணியாளர் போன்ற துருத்திகளை மட்டும் கைது செய்வார்கள்.  அவர்களால்தான் பெரும் நெட்வொர்க் இயங்கியதாகக் காட்டுவார்கள். மொத்தப் பணத்தையும் அவர்கள் மட்டுமே சுருட்டியது போலவும் அரசும், அமைச்சர்களும், உயர்நிலை அதிகாரிகளும் இதைப்பற்றியெல்லாம் எதுவுமே தெரியாமல் வெகு நேர்த்தியாக தம் பணிகளைச் செய்து கொண்டிருப்பது போலவும் ஒரு பிம்பத்தை உருவாக்குவார்கள்.

கட்சி அரசியல் தாண்டி இத்தகைய விவகாரங்களில் நியாயமான விசாரணை நடத்தப்படவில்லையென்றால் இதெல்லாம் தொடர்கதையாகத்தான் தொடரும். 

ஒரு சாதாரணக் கூலித் தொழிலாளியின் மகனோ மகளோ படித்து பி.ஹெச்டி கூட முடித்துவிடுகிறார்கள். நிசப்தம் சார்பில் படிக்கும் ராஜேந்திரனை உதாரணமாகச் சொல்வேன். மீன் வளம் குறித்தான படிப்பை படிக்கும் அரவிந்த் கூட. அவர்களுக்கெல்லாம் அரசுப்பணிகள் என்பதும் பெருங்கனவு. ‘சார் பவானிசாகர்கல ஏ.டி. சொல்லியிருக்காரு சார்’என்பான். அவனுக்கு அவர்கள் அடுத்து கேட்கவிருக்கும் தொகை குறித்து எதுவும் தெரியவில்லை. அதைச் சொன்ன பிறகு அப்படியே வாடிவிட்டான். இப்படி எத்தனை லட்சம் மாணவர்கள்? இவர்களுக்கெல்லாம் எந்தக் காலத்திலும் அரசுப்பணி என்பது சாத்தியமே இல்லை. அப்படித்தானே?

அரசுப்பணி நியமனங்கள், டி.என்.பி.எஸ்.சி, டெட், டி.ஆர்.பி போன்ற பணி நியமனங்களில் நடைபெறும் ஊழல்களைப் பற்றி பொதுவெளியில் எந்த விவாதங்களும் நடைபெறாமல் பார்த்துக் கொள்கிறார்கள். அதற்கு முக்கியமான காரணமும் இருக்கிறது. நம் ஒவ்வொரு வீட்டிலும் யாராவது அரசுப்பணியை அடைந்துவிட முடியுமா என்கிற கனவில் இருக்கிறார்கள். ‘என்ன வழின்னு பாருங்க...சொத்து ஒண்ணு இருக்கு..விற்று வாங்கிவிடலாம்’ என்கிற மனநிலை இங்கே பலருக்கும் இருக்கிறது. அதனால் பேசத் துணிவதில்லை. விரும்புவதுமில்லை. இப்படி வேலை வாங்குகிற ஒவ்வொருவரும் ராஜேந்திரனை போன்றவர்களையும், அரவிந்த் போன்றவர்களையும் ஏதோவொருவகையில் வஞ்சிக்கிறோம் என்பதுதான் உண்மை.

எந்த வழியுமே இல்லாமல் படிப்பையும் உழைப்பையும் மட்டுமே நம்பிக் கொண்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான ஏழை மாணவர்களின் கனவைக் கருக்கிவிட்டுத்தான் அரசுப் பணி நியமனங்கள் நடைபெறும் என்பது வேதனைக்குரியது. ஏழைகளின் வயிற்றில் அடித்துவிட்டு பணக்காரர்கள் உணவு உண்பதற்கும் இதற்கும் பெரிய வித்தியாசமில்லை. ஆனால் அதைப் பற்றியெல்லாம் பெரிய அளவில் இச்சமூகம் வருத்தப்படாது. ‘சர்வைவல் ஆஃப் த ஃபிட்டஸ்ட்’ என்கிற மனநிலைக்கு வந்துவிட்ட சமூகம் இது. ‘எவன் எப்படி போனால் என்ன, நான் நல்லா இருந்தா போதும்’ என்கிற பெரும் கூட்டம் இங்கே உருவாகியிருக்கிறது.  எப்படியாவது நாமும் நம் குடும்பமும் நன்றாக இருக்க வேண்டும் என்கிற எண்ணம் நீக்கமற நிறைந்திருக்கிறது. அறம் சார்ந்து யோசித்தால் இது தவறு என்று தெரியும். லெளகீக வாழ்வு சார்ந்து யோசித்தால் இதில் என்ன தவறு என்று தோன்றும். அறமும் லெளகீக வாழ்க்கையும் பெரும்பாலும் முரண்பட்டுத்தான் நிற்கும்.

தினசரி வாழ்க்கையில் அறம் பெரும்பாலும் தோற்றுப் போகும். 

Feb 12, 2020

இந்த கோட்டைத் தாண்டி...

கோயமுத்தூருக்கு அருகில் மதுக்கரை என்று ஊர் உண்டு. அங்கிருக்கும் நண்பரொருவரைச் சந்திக்கச் சென்றிருந்த போது ‘இதுதான் மதிற்கரையா’ என்றேன். மதில்+கரை என்பது மருவி மதுக்கரை ஆனது என்று எங்கேயோ படித்த ஞாபகம் இருக்கிறது. பொன்னர் சங்கர் கதையிலும் மதுக்கரை என்ற குறிப்பு வரும். 

பொன்னர் சங்கர் கதை பலருக்கும் தெரிந்திருக்கும். கொங்கு வேளாளர்களின் புனிதப்படுத்தப்பட்ட கதை. முன்பெல்லாம் கொங்குப்பகுதியில் பல இடங்களில் இந்தக் கதை கூத்தாக நடக்கும். கதையாகவும் சொல்வார்கள். விடிய விடிய கேட்டுவிட்டு ‘வெட்ட வெட்டத் தழையுமாம் வேட்டுவன் கூட்டம்’ என்று அடுத்த நாள் பழமொழி சொல்லிக் கொண்டிருப்பார்கள்.

இந்தக் கதையானது கி.பி.1500களின் வாக்கில் நடந்திருக்கக் கூடிய கதை என்று பல தரப்பினரும் ஒத்துக் கொள்கிறார்கள்.

குன்றுடையாக்கவுண்டன் ஒரு மசையன். வெள்ளைச் சோளம். அப்படியென்றால் அப்பிராணி என்று அர்த்தம். விவரமில்லாத மனிதர். அவரை பங்காளிகள் (அவர்களும் கொங்கு வேளாளர்கள்தான்) வெகுவாகக் கொடுமைப்படுத்துகிறார்கள். மரத்தில் கட்டி வைத்து அடிக்கிறார்கள். அவருடைய முறைப்பெண்ணான தாமரை தன் அப்பன் சொல் பேச்சைக் கேட்காமல் குன்றுடையானையே திருமணம் செய்து கொள்கிறாள். அவள் கருவுறவும் செய்கிறாள். ஆனாலும் கொடுமைகள் தொடர்கின்றன. தாமரைக்கு ஆண் குழந்தை பிறந்தால் கொன்றுவிடும்படி பங்காளிகள் உள்ளூர் மருத்துவச்சியிடம் சொல்லி அனுப்புகிறார்கள். பொன்னரும் சங்கரும் பிறந்து- அதில் யாரோ ஒருத்தர் மருத்துவச்சியை எட்டி உதைக்க, மருத்துவச்சி மயங்கி விழுந்த போது இருவரும் காணாமல் போய்விடுகிறார்கள். பிறகு இருவரும் நிலத்துக்கு அடியில் இருக்கும் நிலவறையில் வாழ்ந்து, வளர்ந்து வருகிறார்கள். தாமரை இன்னொரு கருவுற்று மகளை பெற்றெடுக்கிறாள். அந்தக் குழந்தைதான் அருக்காணி. 

தாமரைக்கு திருமணத்திலிருந்தே துன்பம்தான். திருமணத்துக்குப் பிறகும் துன்பம்தான். மகன்களைக் காணவில்லை என்று மகள் தங்கத்திடம் சொல்லிச் சொல்லி அழுகிறாள். சில வருடங்கள் கழித்து மகன்கள் வந்து பெற்றோரிடம் சேர்கிறார்கள். அம்மா தமக்கு நேர்ந்த துன்பத்தையெல்லாம் சொல்லி அழுகிறாள். அம்மாவின் துன்பத்துக்குக் காரணமானவர்களைப் பழி வாங்கப் போவதாக அண்ணனும் தம்பியும் அம்மாவிடம் சத்தியம் செய்தும் கொடுக்கிறார்கள். பழி வாங்கவும் தயாராகிறார்கள். இடைப்பட்ட காலத்தில் குன்றுடையானும், தாமரையும் மறைந்துவிட தங்கையை தாங்கித் தாங்கி வளர்க்கிறார்கள். பங்காளி வம்பு பெரிதாக, பங்காளிகள் வேட்டுவக்கவுண்டர்களின் தலைவரான காளியை அணுக கடைசியில் இது போராக மாறுகிறது. அப்படித்தான் பொன்னரும் சங்கரும் வேட்டுவர்களை வெட்ட, அவர்கள் திரும்பத் திரும்ப வந்து கொண்டேயிருக்கிறார்கள்- ‘வெட்ட வெட்டத் தழையுமாம் வேட்டுவன் கூட்டம்’ என்ற பழமொழி. இன்றைக்கும் கொங்கு வெள்ளாளருக்கும், வேட்டுவக் கவுண்டர்களுக்கும் பல கிராமங்களில் உள்ளூர வன்மம் உண்டு.

சண்டையில் சங்கர் உயிர் துறக்கிறார். அதைப் பொறுத்துக் கொள்ள முடியாத பொன்னரும் படுகளத்திலேயே உயிரை விடுகிறார். நல்லதங்காள் நீர் நிலைக்குள் விழுந்து உயிரை விடுகிறாள்.

இரண்டே கால் பத்தியில் சுருக்கிவிட்டேன். இதில் அழகியல் அம்சங்களைச் சேர்த்து, கிளைக்கதைகளோடு விடிய விடியச் சொல்வார்கள். பொன்னரும் சங்கரும் தங்களது மாமன் மகள்களையே திருமணம் செய்து கொள்கிறார்கள். ஆனால் தமது அம்மாவுக்கு மாமன் வீடு செய்த நினைத்த கொடுமைகளுக்காக மனைவிமார்களை தனியறையில் அடைத்து காலம் முழுக்கவும் பிரம்மச்சரிகளாகவே இருந்தார்கள் மாதிரியான லாஜிக்கே இல்லாத பகுதிகளும் உண்டு. பங்காளிச் சண்டையாக மட்டுமே இருந்திருக்க வேண்டிய கதையில் வேட்டுவர்களை பெரிய வில்லனாக்கி கொங்கு வேளாளருக்கும் வேட்டுவக்கவுண்டர்களுக்கும் ஏன் தீராப்பகைமையை விதைத்தார்கள் என்றும் புரியவில்லை. சுவாரசியமான கதைதான். இந்தக் காலத்தில் விடிய விடியக் கதை கேட்கத்தான் யாருக்கும் பொறுமையில்லை. 

பொன்னிவளநாட்டுக்கு வருடம்தோறும் செல்லும் குழுக்களின் எண்ணிக்கை கூட குறைந்துவிட்டது. எங்கள் ஊரிலிருந்து யாராவது அரிதாகவே இந்தப் பெயரை உச்சரிக்கிறார்கள். இன்னமும் திருமணச் சடங்குகளின் போதும், இறப்பு வீடுகளிலும் பொன்னர்-சங்கர்-அருக்காணி உறவை மையப்படுத்தி பாடல்கள் உண்டு. இழவு வீடுகளில் பாடல்களில் குறிப்புகள் உண்டு. சீர்கள் குறைந்து, பாடல் சொல்லி அழுவதற்கான ஆட்களும் குறைந்து போனதால் இந்தத் தலைமுறை ஆட்களுக்கு பெரிய அளவில் பரிச்சயமில்லை. அதே போலத்தான் பெரியண்ணன், பெரியசாமி, பொன்னுசாமி, பொன்னான், தங்கம்மாள், தங்காயி, அருக்காணி போன்ற பெயர்கள் கடந்த தலைமுறை வரைக்கும் மிகச் சாதாரணமாக புழங்கி வந்தன. இப்பொழுது அருகிவிட்டன.

பெரியண்ணன் சின்னண்ணன் கதையில் மதுக்கரை செல்லாண்டியம்மனைக் கேள்விப்பட்டு, பிறகு புத்தகமொன்றில் மதுக்கரை என்ற பெயர்க்காரணத்தைப் படித்து வைத்திருந்ததால் நண்பரிடம் கேட்டேன். ‘இது அந்த மதுக்கரை இல்லைங்க..அது கரூர் பக்கம் இருக்கிறது’ என்றார். ஒரு நாள் அந்தப் பக்கமாகச் சுற்றிப் பார்த்துவிட்டு வந்துவிட வேண்டும் என முடிவு செய்து வைத்திருந்தேன். இந்த வாரம் வாய்த்தது.  கரூர் நண்பர் ஒருவரிடம் பைக் வாங்கிக் கொண்டு வாங்கல் தொடங்கி- கரூர் பக்கத்தில் இருக்கும் ஊர் இது- உப்பிடமங்கலம், காணியாளம்பட்டி, வீரப்பூர், தோகைமலை, அய்யர் மலை, திருக்காம்புலியூர் பாதை வழியாக செல்லாண்டியம்மன் கோயில் வந்து சேர்ந்தேன். இடுப்புதான் கழன்றுவிட்டது. 


இப்பொழுதெல்லாம் எந்த ஊரிலும் வரலாறு என்று எதுவுமில்லை அல்லது என்னால் கண்டுபிடிக்க முடிவதில்லை. கரட்டடிபாளையம் போலவே, வள்ளியாம்பாளையம் இருக்கிறது வள்ளியாம்பாளையம் போலவே உப்பிடமங்கலமும் இருக்கிறது. ஒரு புரோட்டா கடை இருக்கிறது, அய்யங்கார் பேக்கரி இருக்கிறது, மலையாளி டீ போட்டுத் தருகிறான். ‘இங்க எதாச்சும் கோயில் இருக்காங்க?’ என்று கேட்டால் ‘செல்லாண்டியம்மன் கோயில்தான் பக்கத்துல பெரிய கோயில்’ என்கிறார்கள். யாருமே சிறு கோவில்களைக் கண்டு கொள்வதில்லை அல்லது அதன் பின்புலம் தெரிந்தவர்கள் உயிரோடிருப்பதில்லை.

நம் பழங்காலத்து வரலாறுகள், நம் மண்ணின் கதைகள் போன்றவற்றை களத்தில் கண்டு மறு ஆவணப்படுத்துதல் வேண்டும். நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பான வரலாற்றாசிரியர்களின் சமூக புரிதலும் நம் காலத்தில் நமக்கிருக்கும் புரிதல்களுக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. இன்றைய நம் புரிதலோடு அணுகினால் வேறொரு கோணம் கிடைக்கும். ஆனால் தரவுகள் என்று பெரிதாக எதுவும் கிடைக்க வாய்ப்பில்லை. 

ஒன்று மட்டும் உறுதியாகத் தெரிகிறது. கடந்த தலைமுறை ஆட்கள் ஆவணப்படுத்தியிருக்கும் வரலாறுகளைவிட்டால் நமக்கென்று எதுவும் இருக்காது. பழங்காலத்து வீடுகள், கோவில்கள் என எல்லாவற்றையும் மிகச் சாதாரணமாக புனரமைத்துவிடுகிறோம். கொஞ்சம் காசு சேர்ந்தால் ஓட்டு வீடுகளை இடித்து புதிய வீடுகள் கட்டிவிடுகிறோம். ஊரில் வருமானம் மிக்கவர்கள் பழைய கோவில்களை இடித்து புதுக்கோவில் அமைத்து தம் பெயரில் கல்வெட்டும் வைத்துவிடுகிறார்கள். கல்வெட்டு, சுவடிகள் தொடங்கி பழைய பண்டங்கள் யாவும் காணாமல் போய்விடுகின்றன.  போய்விட்டன. அத்தோடு சேர்த்து வரலாறுகளும்தான். வெகு சில ஊர்களில் மட்டுமே வாய்மொழிக் கதையாக வரலாறுகளை கொஞ்சம் நஞ்சம் சொல்கிறவர்கள் இருக்கிறார்கள். அவர்களும் வயது மூத்து இறப்பின் வரவை பார்த்துக் கொண்டிருப்பவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் வீட்டிலேயே அடுத்த தலைமுறை ஆட்கள் ‘அதெல்லாம் அவருக்குத்தாங்க தெரியும்’ என்பதோடு முடித்துக் கொள்கிறார்கள்.

செல்லாண்டியம்மன் கோவிலில் ஒரு ப்ளக்ஸில் ப்ரிண்ட் அடித்து ‘ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக சேர, சோழ, பாண்டிய மன்னர்களுக்கான எல்லைப் பிரச்சினை வந்த போது செல்லாண்டியம்மன் தீர்த்து வைத்து அருள் பாலிக்கிறார்’ என்று சுவரில் மாட்டியிருக்கிறார்கள். மதுக்கரை- மதில்+கரை, மதுரை, திண்டுக்கல் வரை நீண்ட பாண்டிய நாடு, திருச்சியைக் கொண்ட சோழ நாடு, கரூரைக் கொண்ட சேர நாடு ஆகிய மூன்று தேசங்களும் சங்கமிக்கும் புள்ளி, காவிரி தம் திசையிலிருந்து சற்று வளையும் இடம் என இந்த வாதத்தை ஏற்றுக் கொள்ள வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால் யாராவது வரலாற்றுப் பூர்வமாக ஆய்வு செய்து, பதிவு செய்து வைத்திருக்கிறார்களா என்று தெரியவில்லை. வேறு யாராவது சில குறுநில மன்னர்களுக்கான மதில் கரையாக கூட இருந்திருக்கலாம். காலப்போக்கில் அதை சேர, சோழ, பாண்டியனுக்கான எல்லை என்று வரலாற்றில் மாற்றியிருக்கவும் வாய்ப்பிருக்கிறது.

அம்மன் பெயர்தான் மதுக்கரை செல்லாண்டியம்மன். கோவில் இருக்கும் இடம் மாயனூர். மதுக்கரை என்ற ஊர் கோவிலிலிருந்து ஏழெட்டு கிலோமீட்டர் தள்ளியிருக்கிறது. ‘அங்கதான மதுக்கரை இருக்கு...இந்தக் கோவிலுக்கு ஏன் மதுக்கரை செல்லாண்டியம்மன் என்று பெயர்’ என்று கேட்டேன். அங்கேயிருந்த பூசாரிகளுக்குத் தெரியவில்லை. அதற்கும் ஒரு காரணம் இருக்க வேண்டும். ஆனால் இதையெல்லாம் எங்கே பிடிப்பது என்றுதான் தெரியவில்லை. 

பொழுது போகாத நேரத்தில் இப்படித் தேடிச் செல்வதும் அர்த்தமானதாகத்தான் இருக்கிறது. மேலே இருக்கும் வினாக்களுக்கு பதில் தெரிந்தால் சுவராசியமான புலி வால் ஒன்றைப் பிடித்துவிடலாம்.

Feb 7, 2020

16 வயதினிலே

நிசப்தம்- ‘பேசலாம்’ என்கிற பெயரில் வலைப்பதிவு எழுதத் தொடங்கி இன்றோடு பதினைந்து ஆண்டுகள் முடிந்து பதினாறாம் ஆண்டு தொடங்குகிறது. வழக்கம் போலவே திருப்பதி மகேஷின் வாழ்த்துகளோடு நாள் ஆரம்பித்திருக்கிறது. 

கடந்த சில மாதங்களாக போதும் என்கிற அளவுக்கு ஓய்வு எடுத்தாகிவிட்டது. யாராவது ‘ஏன் ரொம்ப நாள் இடைவெளி’ என்று கேட்டால் ‘எழுதுவது என்பது தினசரி ப்ரஷர் என ஆகிடக் கூடாது’ என்று சொல்லிக் கொண்டிருந்தேன். சில நாட்களுக்கு முன் ‘இப்படியே சால்ஜாப்பு சொல்லிட்டு இருந்தா அதுவே சோம்பேறித்தனம் ஆகிடும்’எனத் தோன்றியது. சரி, ஒரு நல்ல நாளில் நாளில் ‘திரும்ப வந்துட்டேன்னு சொல்லு’ என்று பஞ்ச் வசனம் பேசலாம் என்று காத்துக் கொண்டிருந்தேன். 

மூன்றாம் வகுப்பு வரைக்கும் மெட்ரிகுலேஷன் பள்ளியில் சேர்த்து விட்டிருந்தார்கள். மூன்றாம் வகுப்பில் வைரவிழா பள்ளியில் சேர்த்தார்கள். அதுவரையிலும் ஆசிரியர்களுக்கு பணிவிடை செய்ய வேண்டும் என்பதெல்லாம் தெரிந்ததில்லை. மதிய உணவு இடைவேளையில் விளையாடிக் கொண்டிருப்போம். ஒரு நாள் மதியவேளையில் ஆசிரியைகள் சில பேர் குழுவாக அமர்ந்து உண்டுவிட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த நான் உட்பட நான்கைந்து மாணவர்களை அழைத்து உணவு உண்ட இடத்தைச் சுத்தம் செய்து எச்சில் தட்டுகளைக் கழுவி வந்து வைக்கச் சொன்னார்கள். அப்பொழுது எனக்கு அது பெரிய உறுத்தலாகத் தெரிந்தது. மாலையில் அப்பாவிடம் சொன்ன போது அவருக்கும் பயங்கர கோபம் வந்துவிட்டது. மறுநாள் தலைமையாசிரியரிடம் வந்துவிட்டார். தலைமையாசிரியர் என்ன சொல்லி சமாதானம் செய்தார் என்று தெரியவில்லை. ‘இனிமேல் உன்னைக் கூப்பிட மாட்டாங்க’ என்று வீட்டில் என்னிடம் அப்பா சொன்னார். 

நேற்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் செருப்பு விவகாரத்தைப் பார்த்துவிட்டு அம்மா, ‘அந்த ஆளு பாவம்...வயசானவரு...இதுல என்ன தப்பு’என்றார். ‘மூணாவது படிக்கும் போது எச்சில் தட்டு கழுவச் சொன்னதுக்கு ஏன் சண்டைக்கு போனீங்க’ என்றேன். அது அம்மாவுக்கு மறந்து போய்விட்டது போலிருக்கிறது.  ‘சரி...அதே சீனிவாசன் உங்க பேரன் மகியை அழைத்து செருப்பைக் கழற்றச் சொன்னால் இப்படித்தான் கேட்பீங்களா' என்றேன். பதில் இல்லை. 

நமக்கு என்று பிரச்சினை வராதவரைக்கும் நம்மை மிஞ்சிய நீதிபதிகள் யாருமில்லை. அடுத்தவர்களின் பிரச்சினைகள், நமக்கு பாதிப்பில்லாத இடங்களில்தான் சகட்டுமேனிக்கு தீர்ப்பு எழுதிவிடுகிறோம். 

எங்கள் ஊரில் ஒரு மாரியம்மன் கோவில் இருக்கிறது. முப்பது வருடங்களுக்கு முன்பாக பழைய கோவிலில் ஒரு பெரிய மரம் இருந்தது.  அந்த மரத்தில் நிறையக் கிளிகள் இருக்கும். மாலை நேரத்தில் மரம் முழுக்கவும் கிளிகள்தான். மழைக்காலமொன்றில் மரம் அடியோடு வீழ கோவிலும் இடிந்து போனது. கிளிக்குஞ்சுகள் சில சாலையில் நசுங்கிக் கிடந்தன. இடிபாடுகளை அப்புறப்படுத்திவிட்டு கோவில் வரி கட்டுகிறவர்களிடம் வசூல் செய்து புதிதாகக் கோவிலைக் கட்டினார்கள். கோவில் கட்டிய பெரியவர்கள் ஓய்ந்துவிட்டார்கள். இப்பொழுது இளரத்தங்கள். இரு குழுக்கள் பிரிந்து தனித்தனியாகக் கோவில் கட்டுவதாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஈகோ தவிர வேறெதுவுமில்லை. கடைசிக் கட்டம் வரைக்கும் ‘நமக்கு எதுக்கு ஊர் வம்பு’ என்று இருந்து கொண்டேன். கடைசியாக முயற்சித்துப் பார்க்கலாம் என்று ‘ஒண்ணாவே இருந்துக்கலாம்ல’ என்று பேசத் தொடங்கிய போது சரி என்றார்கள். தனித்தனியாகப் பேசினால் சரி என்கிறார்கள். கோயமுத்தூருக்கு திரும்ப வந்து அலைபேசியில் பேசினால் ‘அவங்க ஒத்துக்க மாட்டேங்குறாங்க’ என்று இவர்களும் ‘இவங்க ஒத்துக்க மாட்டேங்குறாங்க’ என்று அவர்களும் சொல்கிறார்கள். பேச்சுவார்த்தை என்று இறங்கினால் ஊரிலேயே குடியிருந்து முழு வேலையாகச் செய்ய வேண்டும். நேரம் கிடைக்கும் போது பேசிப்பார்க்கலாம் என்றால் துரும்பைக் கூட அசைக்க முடியாது. பேர் கெட்டுப் போகாமல் பொதுக்காரியங்களில் முடிவு கொண்டு வருவது லேசுப்பட்ட காரியமில்லை. 

மாரியம்மன் கோவிலில் கடந்த பல வருடங்களாகவே தொடர்ச்சியாக சித்திரை மாத திருவிழாவில் அக்னிக்கும்பம் எடுப்பது வழக்கம். தார்ச்சாலையில் கால் பற்றிக் கொள்ளும். மத்தியான நேரத்தில் மண்சட்டியில் நெல் உமியை நிரப்பி அதில் நெருப்பை பற்ற வைத்து கைகளில் ஏந்திக் கொண்டு ஊரைச் சுற்றி வர வேண்டும். ஷூ மட்டுமே அணிந்து மென்மையாகிவிட்ட பாதங்கள்- எனது கைகளும் அப்படித்தான் இருக்கும். ஏதோ தைரியத்தில் கும்பத்தை ஏந்திக் கொண்ட பிறகு இறக்கி வைக்க எப்படியும் சுமார் மூன்று மணி நேரம் ஆகிவிடும். மனம் முழுக்கவும் ஒருமுகமாகக் குவிந்து ‘கொண்டு போய்ச் சேர்த்துவிட வேண்டும்’ என்ற நினைப்பிலேயே இருக்கும். எல்லோரும் ஆடிக் கொண்டிருப்பார்கள். எனக்கு ஆட்டம் வராது. ஒருவித தியானம் அது. இனி அதெல்லாம் நடக்குமா என்று தெரியவில்லை.

உள்ளூர் கோவில்கள் ஏதோவொரு வகையில் பல குடும்பங்களை பிணைத்து வைத்திருக்கும். மாவிளக்கு, தீர்த்தக் குடம், அக்னிக்கும்பம், கம்பத்தாட்டம் என்று ஒவ்வொரு கொண்டாட்டத்துக்கும் ஒரு காரணமும் இருக்கும். இப்பொழுதெல்லாம் உள்ளூர் கோவில்களைவிடவும் பெரும் கோவில்களைத்தான் மக்கள் நம்புகிறார்கள். உள்ளூர் கோவில்கள் என்பவை வெறுமனே தம் ஈகோவை முன்னிறுத்தவும், உள்ளூரில் தம் சக்தியை பிரஸ்தாபிக்கவும் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்றே தோன்றுகிறது. உள்ளூர் கோவில்கள் வலுவிழப்பது நம் பாரம்பரியத்தை இழப்பைதப் போலத்தான்.

செருப்பு விவகாரத்தில் ஆரம்பித்து செருப்பு விவகாரத்திலேயே முடித்துக் கொள்ளலாம். 

கோபிச்செட்டிபாளையத்தில் ஜி.எஸ்.லட்சுமண அய்யரைத் தெரியாத ஆட்கள் இருக்க முடியாது. அவரது அப்பா பெரும் செல்வந்தர். டி.எஸ் என்ற பெயரில் சொந்த வங்கி நடத்தி வந்தவர். பல நூறு ஏக்கர் நிலபுலன்களைக் கொண்டவர். அவரது மகன் லட்சுமண அய்யர் காந்தியவாதி. சுதந்திரப் போராட்ட வீரர். தலித் மேம்பாட்டுக்காக தம் சொத்துக்களை முழுவதுமாக இழந்தவர். எங்கள் அப்பா எஸ்.எஸ்.எல்.சி முடித்துவிட்டு- அப்பொழுது வேலை இல்லாமல் இருந்திருக்கிறார்- வெறுங்காலில் நடந்து போய்க் கொண்டிருந்தாராம். அப்பொழுது அய்யர் பார்த்துவிட்டு இயல்பாகப் பேசத் தொடங்கி ‘என்ன படிச்சிருக்க?’ ‘காலில் ஏன் செருப்பில்லை’ என்பதையெல்லாம் கேட்டுவிட்டு ‘அஞ்சு செண்ட் இடம் என் பேர்ல இருக்கு..வேணும்னா உன் பேர்ல எழுதி பொழச்சுக்கிறியா?’ என்று கேட்டாராம். அப்பா கடைசி வரைக்கும் சொல்லிக் கொண்டிருப்பார்.

லட்சுமண அய்யர் மாதிரியான ஆட்கள் புழங்கிய மண்தானே இது?

இடைவெளி ஏன்? ஏன் எழுதவில்லை என்று விசாரணைகளை நடத்திய அத்தனை நல்லவர்களுக்கும் நன்றி. பல மின்னஞ்சல்களுக்கும் பதில் சொல்லவில்லை.மன்னித்துக் கொள்ளவும்.

பதினாறாம் வருடம் செருப்பும் கோவிலுமாக ஆரம்பித்திருக்கிறது. அடித்து நொறுக்கிவிட வேண்டியதுதான்.