Jan 21, 2020

அழுத்தம்

சபரிமலைக்கு இரண்டு முறை சென்றிருக்கிறேன். முதன்முறையாகச் சென்ற போது வயது ஐந்துக்குள்தான் இருந்திருக்க வேண்டும். திரும்ப வரும் போது கடுமையான காய்ச்சல் என்பது தவிர வேறெதுவும் நினைவில் இல்லை. திருமணத்திற்கு பிறகு இரண்டாம் முறை சென்ற போது மாலை, விரதம் என்றெல்லாம் எதுவுமில்லை. இரண்டு நாட்களுக்கு முன்பாகத் தொடங்கி மூன்றாம் நாள் பயணம் ஆரம்பமாகிவிட்டது. மலை ஏறும் போதுதான் அதன் சிரமம் தெரிந்தது. இருதயம் பலவீனமாக இருந்தால் சோலி முடிந்துவிடும் என்று பயந்தபடியே ஏறினேன்.

கடந்த வாரம் உறவுக்காரர் ஒருவருக்கு அப்படித்தான் ஆகிவிட்டது. முப்பத்தியிரண்டு வயதுதான். திருப்பூர்காரர். ஒரு முறை சந்தித்துப் பேசியிருக்கிறேன். ரத்ததானம் உள்ளிட்ட சமூகப்பணிகளை கர்மசிரத்தையாக செய்து வருகிறவர் என்று சொல்லியிருக்கிறார்கள். சிறகுகள் என்றொரு அமைப்பைத் தொடங்கி நடத்தி வருகிறார்கள். திருமணமாகி மூன்று வருடங்கள் ஆகிவிட்டது. மனைவி மூன்று மாதம் கர்ப்பமாக இருக்கிறார். சபரிமலை ஏறிக் கொண்டிருந்தவருக்கு மாரடைப்பு. அங்கேயே உயிர் போய்விட்டது.

இரவில் தகவல் தெரிந்தது. சபரிமலையில்தான் ஐ.ஏ.எஸ் அதிகாரி உமேஷ் பணியில் இருக்கிறார். ‘ஃபார்மாலிட்டிஸ் இருந்தால் கொஞ்சம் சீக்கிரம் முடித்துக் கொடுத்து உதவ முடியுமா?’ என்று குறுஞ்செய்தி அனுப்பியிருந்தேன். உடனிருந்து செய்து உடலை அனுப்பி வைத்திருந்தார். இப்படியான இறப்புகள் மிரட்டிவிடுகின்றன. மற்ற நோய் என்றாலும் கூட சண்டை போட்டு பார்க்கலாம். மாரடைப்புக்கு என்ன செய்ய முடியும்? 

உமேஷ், ‘முப்பத்தஞ்சு வயசுக்கும் குறைவானவங்கதான் அதிகமா இறக்கிறாங்க’ என்றார். 

‘கெட்டபழக்கம் எதுவுமில்லைன்னுதான் சொல்லுறாங்க’ என்று இந்தச் சம்பவம் குறித்து மருத்துவ நண்பரிடம் பேசினேன். 

‘உங்களுக்கு பயமா இருக்கா?’ என்றார்.  இறந்தவரின் வயது, அவரது மனைவியின் வயிற்றில் இருக்கும் குழந்தை என்பதெல்லாம் பயமுறுத்திவிட்டன. இறந்தவருக்கு எந்தப் பிரச்சினையுமில்லை. போய் சேர்ந்துவிட்டார். ஆனால் குடும்பம்? அந்தக் குழந்தை?

‘ஸ்ட்ரெஸ் முக்கியமான காரணி’ என்றார் மருத்துவர். இன்றைய காலகட்டத்தில் அதுதான் மிகப்பெரிய அபாயமும் கூட. யாருக்குத்தான் மன அழுத்தம் இல்லை? ஏதோவொரு வகையில் ஒவ்வொரு மனிதனுக்கும் மன அழுத்தம் வந்து சேர்ந்துவிடுகிறது. தொழில் சிரமங்கள், பணியிடத்தில் உண்டாகக் கூடிய சிரமங்கள், பொருளாதார நெருக்கடிகள், உடல்நலப் பிரச்சினைகள், குடும்பச் சிக்கல்கள் என சகல மனிதனுக்கும் ஏதோவொன்று அழுத்திக் கொண்டிருக்கிறது.

‘உங்களுக்கு ஏதாவது அழுத்தம் இருக்கிறதா?’ என்று அடுத்தவர்களைக் கேட்டுப்பார்க்கலாம். நம்மை நாமே கூட கேட்டுக் கொள்ளலாம். 

‘நல்லாத்தான் இருக்கேன்’ என்றுதான் பதில் வரும். ஆனால் அது நூறு சதவீதம் உண்மையான பதிலா? கடைசியாக மனம் எப்பொழுது இலகுவாக இருந்தது? மனதுக்குப் பிடித்த ஒரு பாடலை பாடலாம் என்று ஒரு நாளில் எவ்வளவு நேரம் நினைக்கிறோம்? பெரும்பாலான நேரங்களில் மனம் எதையோ குதப்பிக் கொண்டிருக்கிறது. ‘அதைச் செய்யணுமே; இதைச் செய்யணுமே; அந்தப் பணம் பாக்கி இருக்கு; இந்த செயல் மிச்சமிருக்கு’ என்பதான ஏதோவொரு எண்ணம் நம்மை ஆக்கிரமித்துக் கொண்டேயிருக்கிறது. நம்மையும் அறியாமல் ஒரு சுமை நம்மை அழுத்திக் கொண்டிருக்கிறது.

‘டென்ஷனே ஆகுறதில்லை’ என்றுதான் நானும் நம்பிக் கொண்டிருக்கிறேன். ஆனால் எனக்கு அடிக்கடி வாயில் ஒரு சிறு புண் வரும். அதுதான் அழுத்தத்திற்கான அறிகுறி. ஸ்ட்ரெஸ் அல்சர். எப்பொழுதாவது முதுகுவலி வரும். பசி குறையும். தலையை வலிப்பது போல இருக்கும். இவை அனைத்துமே ஒரே சமயத்தில் இருக்காது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு சமயம். நல்ல மருத்துவ நண்பர்கள் இருந்தால் ‘மனம் சார்ந்த பிரச்சினைகளுக்கான அறிகுறிகள் என்ன?’ என்று கேட்டுத் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். பலவற்றை அடுக்குவார்கள்.

நம் உடலில் தோன்றும் பல பிரச்சினைகள் வெறுமனே உடலியல் பிரச்சினை என்று தோன்றினாலும் நம் காலத்தில் உடல் சார்ந்த பல பிரச்சினைகளில் மனம்தான் முக்கியக் காரணி. எதையாவது மனம் போட்டு அழுத்திக் கொள்கிறது. அது உடலையும் பாதிக்கிறது. அவ்வப்பொழுது நேரம் ஒதுக்கி எது நம்மை அழுத்துகிறது, எவற்றையெல்லாம் தவிர்க்க முடியும் என்று கணக்கிட்டு மெல்ல மெல்ல தவிர்த்துவிட வேண்டும். 

தொடர்ந்து பல வருடங்களாக தொடர்ந்து எழுதிக் கொண்டேயிருக்கிறேன். ஆரம்பத்தில் அதுவொரு சந்தோஷமாக இருந்து பிறிதொரு கட்டத்தில் ‘இன்னைக்கு எழுதலையே’ என்பது கூட ஒருவிதமான அழுத்தமாக மாறிவிடுகிறது. அதனால்தான் கடந்த பல நாட்களாக எதையும் கண்டு கொள்ளவில்லை. எழுத்தும் வாசிப்பும் சந்தோஷத்துக்கானதாக இருக்க வேண்டுமே தவிர, அழுத்தத்திற்கான காரணமாகிவிடக் கூடாது. ‘இந்த வருஷம் உங்களோடது என்ன புக் வருது?’ ‘எத்தனை புத்தகம் வாசிச்சீங்க’ ‘எவ்வளவு புத்தகம் வாங்குனீங்க?’ என எழுத்தும் கூட அழுத்தமாகிற வணிகச் சூழல்தான் இங்கே நிலவுகிறது. புத்தகக் கண்காட்சி பக்கமே இந்த வருடம் போக வேண்டியதில்லை என இருந்து கொண்டேன். 

வாழ்க்கையில் எல்லாமே  ‘ஃபெர்பெக்ட்’ என்பது அவசியமே இல்லை. அதுவே கூட பெரும் அழுத்தம்தான். எதையோ ஒன்றை இலக்காக வைத்துக் கொண்டு நேரங்காலம் தெரியாமல் ஓடிக் கொண்டேயிருக்கிறோம். நமக்கே தெரியாமல் ஏதேதோ பிரச்சினைகள் உடலுக்குள் புகுந்து கொண்டிருக்கின்றன.

பயமூட்டுவதற்காகச் சொல்லவில்லை. ஆனால் யோசிக்க வேண்டியிருக்கிறது.

ஆசுவாசமாக, சாவதனமாக நினைத்தபடிக்கு இயல்பாகச் செய்து கொண்டிருக்க வேண்டும். இருபத்து நான்கு மணி நேரமும் நம் இஷ்டத்துக்கு இருக்க நம்மைச் சுற்றிலும் இருக்கக் கூடிய புற அழுத்தங்கள் அனுமதிக்காதுதான். உழைக்க வேண்டும்; சம்பாதிக்க வேண்டும்; இலட்சியங்களைத் துரத்த வேண்டும். எல்லாம் சரிதான். ஆனால் வாய்ப்பு கிடைக்கும் போது மனதை இலகுவாக்கி அப்படியே இருந்துவிட வேண்டும்.  ஒவ்வொரு நாளும் கொஞ்ச நேரமாவது காற்றில் பறக்கும் மெல்லிய இறகு போல இருந்து கொள்ள வேண்டும்.

சுவர் இருந்தால்தானே சித்திரம் வரைவதற்கு? 

இன்னொரு முக்கியமான விஷயம்- எந்தக் கடவுளும் உடலை வருத்தச் சொல்லிக் கேட்பதில்லை. ஆன்மிகம் என்ற பெயரில் ஒரு காரியத்தைச் செய்யும் போது அதன் உள்ளர்த்தம் தெரிய வேண்டும். சபரிமலைக்குச் செல்வதென்றால் அதுவொரு மலையேற்றம். உடலைத் தயார் செய்து கொள்ள வேண்டியிருக்கிறது. அதிகாலையில் எழுந்து, குளிர்நீரில் குளித்து, பஜனை செய்து, வெறுங்காலில் நடந்து உடலும் மனமும் மலையேற்றத்துக்கு ஏதுவாக நாமாகச் செய்து கொள்ளும் பயிற்சிகள் அவை.  ‘அதெல்லாம் ஒண்ணும் ஆகாது’ என்று முரட்டுத்தனமாக மலையேறி வம்பை வாங்கிக் கொள்ள வேண்டியதில்லை. பிரச்சினை எதுவுமில்லையென்றால் நல்லதுதான். சந்தோஷம். ஆனால் ஏதேனும் பிரச்சினை என்றால் பாதிப்பு என்னவோ குடும்பத்துக்குத்தான்.

Jan 17, 2020

வயசாகிடுச்சா?

ரங்குல ராட்டினம் என்றொரு தெலுங்கு படம். படத்தை இயக்கியவர் ஸ்ரீரஞ்சனி. செல்வராகவனின் அசிஸ்டெண்ட்டாம். காதல் கதைதான். காதல் முளைத்த பிறகு காதலி மிகுந்த அக்கறை காட்டுவார். அக்கறையென்றால் அக்கறை அப்படியொரு அக்கறை.  ‘பிஸ்கட்டில் எக்ஸ்பையரி தேதி பார்த்துட்டு சாப்பிடு’ என்பது மாதிரியான அக்கறை. எந்தப் பையன்தான் பொறுத்துக் கொள்வான்? செமயாகக் கடுப்பாகி விலகிவிடுவான். ஆனால் அப்படியே விட்டுவிட முடியுமா? மீண்டும் காதல் எப்படி துளிர்க்கிறது என்பதுதான் படம். காதலிக்கு பெற்றவர்கள் இல்லை; காதலனுக்கு அம்மா பாதியிலேயே இறந்துவிடுவார். வெறும் காதலர்கள் மட்டும்தான். சலிப்பில்லாமல் இருக்கும். படம் ஓடியதா என்று தெரியவில்லை. சித்ரா சுக்லாதான் நாயகி. நாயகன் பெயர் மறந்துவிட்டது. நாயகன் பெயர் நமக்கு எதற்கு?

சித்ரா சுக்லாவுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன். படம் நன்றாக இருக்கிறது; தொடர்ந்து நடிக்க வாழ்த்துகள் என்பதுதான் சாராம்சம். நன்றி என்றொரு பதில் அனுப்புகிறார். தெலுங்கு சூழ் மக்கள் இன்னமும் இந்த நடிகையை கவனிக்கவில்லை போலிருக்கிறது. இல்லையென்றால் அவர்கள் நம்மைவிட கன வேகம். நடிகர் நடிகையரை திக்குமுக்காட வைத்துவிடுவார்கள். இந்த அம்மிணிக்கும் நம் மின்னஞ்சலுக்கு பதில் அனுப்ப நேரம் இருந்திருக்காது. 

தமிழில் சசிகுமாரும், சரத்குமாரும் நடிக்க நானா என்றொரு படம் தயாராகிக் கொண்டிருக்கிறது. அந்தப் படத்தின் முழுக்கதையும் தெரியும். வேறொரு நடிகரை மனதில் வைத்து அந்தக் கதையைச் சொல்லியிருந்தார். அவர் சொன்ன கதையை எழுத்து வடிவத்துக்கு மாற்றித்தர இயக்குநர் நிர்மல்குமார் அழைத்திருந்தார். அன்றைய இரவில் அறையில் தங்கி எழுத வேண்டியதுதான் பாக்கி. வசனம் என்ற இடத்தில் என் பெயர் வராது போலத் தெரிந்தது.  அதனால் ஓடி வந்துவிட்டேன். அந்தப் படத்தில் சித்ராதான் நடிக்கிறார் என்றொரு செய்தியை பார்த்தேன். விதி எப்படி வலியது பாருங்கள். அவருடன் பேசுவதற்கான எல்லா வாய்ப்புகளையும் தடுத்திருக்கிறது. 


பல நாள் கழித்து எழுத வந்திருக்கிறான். சினிமாக்காரியிடமிருந்தா ஆரம்பிக்க வேண்டும் என்று தோன்றுமே!

நேற்றொரு மனநல ஆலோசனை செய்யும் நண்பரைச் சந்தித்தேன். பெங்களூரில் இருக்கும் போது அறிமுகம். அவர் அடிப்படையில் மருத்துவர் இல்லை. ஆர்வத்தின் காரணமாக சில பட்டங்களைப் பெற்று வெறும் ஆலோசனை மட்டும் சொல்கிறவராக இருக்கிறார். சற்றே பிசகினாலும் மனம் ஒரு சிக்கல் விழுந்த நூல்கண்டாகிவிடுகிறது. அவசரப்பட்டு எதையாவது செய்யப் போக சிக்கல் இன்னமும் கடினமானதாக மாறுகிறதே தவிர எளிதாவதில்லை. இன்றைக்கு பலருக்கும் ஆலோசனை தேவைப்படுகிறது. நம்முடைய சூழல் உருவாக்கித் தரும் வாய்ப்புகளின் காரணமாக ஏதோவொரு வகையில் முடிச்சுகளை போட்டுக் கொள்கிறோம். நம் குடும்பம், பிள்ளைகள் எல்லாவற்றையும் தாண்டி அந்த முடிச்சுதான் மிகப்பெரிய தலைவலியாக இருக்கிறது. 

மனநல ஆலோசனை என்று தினசரிகளின் வாரப்பத்திரிக்கைள் சொல்லிக் கொண்டிருப்பதெல்லாம் வெறுமனே கட்டுக்கதைகள் என்றுதான் தோன்றும். அவையெல்லாம் உண்மையில் சிக்கலே இல்லை. அவிழ்க்கவே முடியாத சிக்கல்களை பெரும்பாலானவர்கள் பொதுவெளியில் சொல்வதில்லை. ஒன்றிரண்டு வருடங்கள் இருக்கும். ஒரு ஐடி நிறுவனத்து நண்பர் வந்திருந்தார். முப்பதுகளைத் தொடாத வயது. ‘எனக்கு திருமணம் செய்து கொள்ள விருப்பமே இல்லை. ஆனால் வீட்டில் செய்து வைக்க முயற்சிக்கிறார்கள்’ என்றார். பிரச்சினை என்னவென்றால் அவருக்கு வேறு சில அழகான பெண்களுடன் தொடர்புண்டு. பேரழகிகளாகத் தேடித் தேடி நட்பு பாராட்டி வைத்திருக்கிறார். அவர்களோடு ஒப்பிடும் போது எந்தப் பெண்ணும் அழகாகவே இல்லை. சுமாரான பெண்ணை எப்படித் திருமணம் செய்து கொள்வது என்பதுதான் அவருடைய பிரச்சினை.

நம்மால் தீர்வே சொல்ல முடியாத சில பிரச்சினைகள் என்று உண்டு. அப்படியான பிரச்சினையாக இருந்தது. ‘கண்ணா...கல்யாணம்கிறது வாழ்க்கையில் முக்கியமான அங்கம். அழகை விட அறிவைப் பாரு. உனக்கு ஏத்த பொண்ணான்னு பாரு’ என்றெல்லாம் உருகி நீட்டி முழக்கிக் கொண்டிருந்த போது ‘இதெல்லாம் ஏற்கனவே யோசிச்சுட்டேன் அண்ணா...வேற சொல்லுங்க’ என்றான். என்னடா நம் அறிவுக்கு வந்த சோதனை என்று யோசித்துவிட்டு, நண்பர்கள் வழியாக விசாரித்து மேற்சொன்ன மனநல ஆலோசனை நண்பரைப் பற்றி விசாரித்து அந்தப் பையனும் நானும் சென்றோம். அப்படித்தான் அறிமுகம். பிறகு நண்பர்களாகிவிட்டோம். 

கோவையில் ஒரு கருத்தரங்குக்காக வந்திருந்தார். அவரைப் பற்றி முன்பு சில கட்டுரைகளில் குறிப்பிட்டிருக்கிறேன். வெகு இயல்பாக பேசுவார். கோவை சரவணம்பட்டியில் நற்றிணை என்று ஒரு கடை இருக்கிறது. இயற்கை பொருட்களை விற்கும் அந்தக் கடையில் கொள்ளு சூப் கிடைக்கும். எனக்கு கொஞ்சம் கொழுப்பு அதிகம் என்பதால் அவ்வப்பொழுது அங்கே போய் ஒரு சூப் குடித்து கொழுப்பை கரைக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். கொமுப்பைக் கொல்லும் கொள்ளாம். 

கொள்ளு சூப்பை முதல் மிடறு உறிஞ்சும் போது ‘உங்களுக்கு வயசாகிடுச்சா?’என்றார். புரையேறிவிட்டது. இளைஞன் என்று நினைத்துக் கொண்டுதான் சுற்றிக் கொண்டிருக்கிறேன்.

‘எதுக்கு கேட்டீங்க’ என்றேன். 

‘கேட்டதுக்கு பதில் சொல்லுங்க’ என்றார். அப்படியெல்லாம் எனக்கு நினைப்பே வரவில்லை என்றேன். நீங்களும் நான் சொன்னதை நம்பமாட்டீர்கள் என்பதால்தான் சித்ரா சுக்லாவின் கதையில் ஆரம்பித்தேன். 

‘சாலையில் போகும் போது, பேருந்துப் பயணத்தில் எத்தனை பெண்கள் உங்கள் கண்களை கவனிக்கிறார்கள்?’ என்றார். கடுப்பாகிவிட்டது.

‘சார், தலையில் எல்லாம் கொட்டிடுச்சு...அதனால பார்க்க மாட்டாங்க’ என்றேன்.

‘அரவிந்த்சாமியோட இப்பத்த படத்தை பார்த்திருக்கீங்களா? அவர் சொட்டையா ரோட்டில் போனால் கண்டுக்கமாட்டாங்கன்னு நினைக்குறீங்களா?’ என்றார்.

ஒரு வழி செய்வதற்காகவே வந்திருக்கிறார். நானாகத்தான் நற்றிணைக்கு அழைத்து வந்து வம்பை விலைக்கு வாங்கிவிட்டேன். அரவிந்தசாமியும் அடுப்புல வெந்தசாமியும் ஒண்ணா?

எவ்வளவு நேரம்தான் பொறுத்துக் கொள்வது என்று ‘எதுக்கு கேட்குறீங்க’ என்றேன்.

பெங்களூரில் இருந்ததற்கும் இப்பொழுது இருப்பதற்கும் என்ன வித்தியாசம் அடைந்திருக்கிறேன் என்று பரிசோதனை செய்வதற்காக என்றார். இப்படியே விதவிதமான கேள்விகள். 

ஒரு கட்டத்தில் ‘ஆமாங்க வயசாகிடுச்சுன்னு தோணுது’ என்றேன்.  

‘இதை முதலில் ஒத்துக்குங்க. எல்லாமே ஃப்ரெஷ்ஷா தெரியும்’ என்றார். ஓங்கி மண்டையில் அடிப்பது மாதிரி இது. அதன் பிறகு இது பற்றி எதுவுமே பேசவில்லை. எனக்கு பொசுக்கென்று ஆகிவிட்டது. மறுபடியும் நானாக வயது பற்றியெல்லாம் எதையோ சொல்ல முயற்சித்தேன். பேச்சை மாற்றிவிட்டார். இடையில் ஒரேயொரு முறை மட்டும் ‘நாற்பதுக்கு முன்னாடி வாழ்க்கை வேற மாதிரி; நாற்பதுக்கு அப்புறம் வேற மாதிரி. நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் அதுதான் உண்மை. வாழ்க்கையை அனுபவிக்க தயாராகிக்குங்க’ என்று சொல்லிவிட்டு மீண்டும் பேச்சை மாற்றிவிட்டார்.

‘நான் பாட்டுக்கு சிவனேன்னுதானே கிடக்கிறேன். வயசாகிடுச்சுன்னு சொல்ல இவ்வளவு வளைச்சு வளைச்சு பேசியிருக்க வேண்டுமா’ என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.  நாற்பதுக்கு கூட இன்னமும் இரண்டு வருடங்கள் இருக்கின்றன. நமக்கென்று வந்து வாய்க்கிறார்கள் பாருங்கள். அந்த சித்ரா சுக்லா இருக்காங்க இல்ல...அந்த சித்ரா சுக்லா...

Jan 1, 2020

2020

எங்கள் அபார்ட்மெண்ட்டில் நூற்றுக்கணக்கான வீடுகள் உள்ளன. முந்தாநாளிலிருந்தே விளக்குகள் கட்டிவிட்டார்கள். இரவு விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விருந்துண்ண வேண்டுமானால் பெரியவர்களுக்கு முந்நூற்றைம்பது; சிறுவர்களுக்கு இருநூற்றைம்பது.  ‘பள்ளிபாளையம் சிக்கன் மட்டும்தான் நான்வெஜ் ஐட்டம்’ என்று மகி சொன்னான். நான் போகவில்லை. பதினோரு மணிக்கு தூங்கிவிட வேண்டும் என்ற முடிவிலிருந்தேன். இரவு எட்டு மணிக்கு ட்ரம்ஸ் குழு வந்து அடிக்க ஆரம்பித்தார்கள். வீட்டு ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்த போது சில இளைஞர்கள் கூட்டமாக ஆடிக் கொண்டிருந்தார்கள். இளைஞர்கள் மட்டுமில்லை; சகலரும். அதன் பிறகு ட்ரம்ஸ்ஸை நிறுத்திவிட்டு ஆளாளுக்கு பாடத் தொடங்கினார்கள். 7ஜி ரெயின்போகாலனியின் ‘ராஜா..ராஜாதி ராஜனிங்கு ராஜா’ காமெடி நினைவில் இருக்கிறதல்லவா? அப்படி. 

நேற்று முழுவதும் அலைச்சல். இரண்டு மூன்று வேலைகள் பாக்கியிருந்தன. கார்த்திக் என்றொரு நிசப்தம் நண்பர் சந்திக்க வந்திருந்தார். பத்து வருடங்களுக்கு மேலாக லக்ஸம்பர்க்கில் இருக்கிறாராம். அவர்கள் நிறுவனத்தில் பணிபுரியும் நண்பர்கள் சேர்ந்து- அனைவரும் வெளிநாட்டினர்- இருபதாயிரம் ரூபாய் கொடுத்து அனுப்பியிருக்கிறார்கள். ‘எங்கே பயன்படுத்தலாம்’ என்று கேட்டார். புஞ்சை புளியம்பட்டியில் வட்டார வள மையம் இருக்கிறது. உடல்/மன மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகள் 27 பேர்கள் இருக்கிறார்கள். தமிழகம் முழுவதும் ஒவ்வொரு ஒன்றியத்திலும் இப்படியான மையங்கள் உண்டு. சராசரியாக இருபத்தைந்து குழந்தைகள் தினசரி வந்துவிடுகிறார்கள். அவர்களைக் கற்கும் திறன் கொண்டவர்களாக மாற்றுவதற்கான முயற்சிகளை ஆசிரியர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். அங்கே சென்று புத்தாடை எடுத்துக் கொடுத்து, உணவு வழங்கிக் கொண்டாடிவிடலாம் என்று சொல்லியிருந்தேன். சொல்வது எளிது. செயலைச் செய்ய திட்டமிட வேண்டும். புளியம்பட்டியில் சில ஆட்களைச் சந்தித்துப் பேசிவிட்டு வந்து சேர்ந்தேன்.

சூரியனை பூமி ஒரு முறை முழுமையாகச் சுற்றி வரும் போது எல்லோரும் ஒரே மனநிலையில் இருப்பதில்லை.  விதவிதமான மனிதர்களுக்கு விதவிதமான மனநிலை.

எங்கள் வீட்டில் ஒரு பெண்மணி பணிபுரிகிறார். தனலட்சுமி என்று பெயர். பாத்திரம் கழுவித் தருவது, வீடு பெருக்குவது மாதிரியான பணிகளைச் செய்து தருவார். சிறு வயதிலேயே பெற்றவர்கள் இல்லை. தம்பிக்கும் அவருக்கும் நிறைய வயது வித்தியாசம். தம்பியை அவர்தான் வளர்க்கிறார். அவனுக்கு இருபது வயது கூட ஆகியிருக்கவில்லை. இரண்டு நாட்களுக்கு முன்பாக தம்பியை கைது செய்துவிட்டார்கள். இரண்டு நாட்களாக அவர் பணிக்கு வருவதில்லை. விசாரித்தால் வழக்கறிஞர், சிறைச்சாலை என்று அலைந்து கொண்டிருக்கிறார். ‘அவன் தப்பெல்லாம் செய்யமாட்டாங்க....ரிமாண்ட் பண்ணிட்டாங்க...வக்கீலைப் பார்க்கப் போறேன்’ என்றாராம். என்ன பிரச்சினையில் சிக்கியிருக்கிறான் என்று தெரியவில்லை. 

ஒவ்வொரு மனிதனுக்கும் ஓராயிரம் பிரச்சினைகள். அவரவருக்கு தம்மைக் காத்துக் கொள்ளவே பெரும் போராட்டமாக இருக்கிறது. அறம் என்றெல்லாம் எதுவுமில்லை. ஆளாளுக்கு இருபக்கமும் கூரிய வாள் ஒன்றினைச் சுழற்றிக் கொண்டேயிருக்கிறார்கள். யார் மீது வெட்டு விழுகிறது, யார் கீழே விழுகிறார்கள் என்றெல்லாம் பொருட்படுத்துவதில்லை. அவரவர் சந்தோஷம் அவரவருக்கு. அவரவர் துக்கம் அவரவருக்கு.

பனிரெண்டு மணிக்கு மீண்டும் ட்ரம்ஸ் அடிக்க ஆரம்பித்தார்கள். 9..8...7...என்று வரிசையாகக் கீழிறங்கி பூஜ்யத்தை அடைந்த பிறகு ஹேப்பி நியூ இயர் என்று கத்தினார்கள். பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. பாதி உறக்கத்தில் புரண்டு படுத்தேன். அதிர்வுகளில் திரு விழித்துக் கொண்டான்.

இன்று காலையில் அபார்ட்மெண்ட் ஊழியர்கள் நீல நிறச் சட்டையை அணிந்து குப்பைகளைப் பெருக்கிக் கொண்டிருந்தார்கள். ஒரு பெய்ண்ட்டர் ஏதோ சில கம்பிகளை எடுத்துப் போட்டு வர்ணம் பூசிக் கொண்டிருந்தார். வழக்கமாக நடைப்பயிற்சி மேற்கொள்கிறவர்கள் யாரையும் காணவில்லை. பக்கத்தில் இருக்கும் அம்மன் கோவிலில் கூட்டம் நெருக்கிக் கொண்டிருந்தது. வழமை போலவே விடிந்திருக்கிறது. எப்பொழுதும் போலவே ஆம்புலன்ஸ் ஒன்று பதறியபடி சென்று கொண்டிருக்கிறது. வீட்டிலிருந்து பார்த்தால் தெரியக் கூடிய மின்மயானத்தின் புகை போக்கியில் கரும்புகை வெளியேறிக் கொண்டிருக்கிறது.

எதையுமே புரட்டிப் போட முடியாது. நிறுத்தி வைக்கவும் முடியாது. வல்லவர்கள், வாய்ப்புள்ளவர்கள் தமக்குத் தகுந்தாற்போல தமது பயணத்தை அமைத்துக் கொள்வார்கள். யாரோ நடுங்குகிறார்கள், யாரோ பயப்படுகிறார்கள், யாரோ பதறுகிறார்கள் என்பதெல்லாம் யாரையும் மாற்றிவிடாது. நம்முடைய கவனமெல்லாம் நம்மைத் தற்காத்துக் கொள்வதிலேயே இருக்க வேண்டும். நம்மைத் தற்காத்துக் கொண்ட பிறகு வலு குறைந்தவர்களுக்காக குரல் எழுப்பலாம். கொஞ்சம் கரம் நீட்டலாம். அதைத் தாண்டி எதுவும் செய்துவிட முடியாது. செய்யவும் மாட்டோம். 

ஓராண்டு முடிகிறது. புத்தாண்டில் ஒவ்வொருவரும் தம்மைக் காத்துக் கொள்வதற்கான பலம் பெற்றவர்களாக, இயலாதவர்களுக்கு கரம் நீட்டும் திறன் பெற்றவர்களாக அமைய வாழ்த்துகள்.