Jul 12, 2020

தெளிந்த நதி

‘என்னைத் தொட்டு அள்ளிக் கொண்ட’ பாடலை பிரனிதி பாடும் வீடியோவை திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருந்தாள் பாப்பாத்தி. ‘மடத்துப்பாளையம் லேடி டைகர்ஸ்’ வாட்ஸப் குழுமத்தில் வந்திருந்தது. பாப்பாத்தி  நிறைய வாட்ஸப்  க்ரூப்களில் இருக்கிறாள். ஊருக்குள் மாடு மேய்க்கிறவளுக்கு வாட்ஸப் தெரியுமா என்றுதானே நினைக்கிறீர்கள்? ஊரே அப்படித்தான் எகத்தாளம் பேசியது. இவளுக்கு கையில் செல்போன் என்ன, பாட்டு என்ன என்று சாடை பேசினார்கள். அதுவும் கூட ஆரம்பத்தில்தான். 

இப்பொழுது யாரிடம்தான் செல்போன் இல்லை? தோட்டத்தில் தண்ணீர் கட்டும் போது கூட பாட்டை சத்தமாக வைத்து ட்ரவுசருக்குள் போட்டுக் கொள்கிறார்கள். பாப்பாத்தியும் அதே வகையறாதான். முன்பு சிறிய ஃபோனாக வைத்திருந்தாள். ஜாக்கெட்டுக்குள் வைத்துக் கொள்ள செளகரியமாக இருந்தது. அப்பொழுது பாட்டு கேட்பாள், மாட்டு வியாபாரிகள் அழைப்பார்கள். அவ்வளவுதான். இப்பொழுது ஸ்மார்ட் ஃபோன் அப்படியில்லை. என்ன நெஞ்சுக்குள் வைத்துக் கொள்ள முடிவதில்லை. நனைந்து போகிறது. மஞ்சப்பைக்குள் போட்டு எடுத்துக் கொள்வாள். வெள்ளாட்டுக்குட்டி ஒன்றை ஐந்தாயிரத்துக்கு விற்று இதை வாங்கினாள். பத்து நாட்களில் அத்துப்படி ஆகிவிட்டது. மகரந்தம் சுய உதவிக்குழுவின் வாட்ஸப் குழுமத்திற்கு கூட பாப்பாத்திதான் அட்மின்.

மாடுகள் மேய்ந்து கொண்டிருக்கும் போது பாட்டு பாடிக் கொண்டிருக்கும். பெரும்பாலும் இளையராஜா பாடல்கள். எட்டு ஜி.பிக்கு ஏத்தி வைத்திருக்கிறாள். டவுனில் இவளுக்குத் தெரிந்த கடை ஒன்று இருக்கிறது. ‘அக்கா, மேட்டர் படம் ஏத்தி தரட்டுமா’ என்று அந்தக் கடைக்காரன் கேட்ட போது ‘கருக்கு அருவா வெச்சு அறுத்து வீசிடுவேன்..எனக்குப் பார்க்கத் தெரியாதா?’ என்று கேட்டுவிட்டு சிரித்தாள். இதை எதற்காகச் சொல்கிறேன் என்றால் அவளது பாண்டித்யத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். கூகிள் எல்லாம் பழகிக் கொண்டாள். டிக்டாக்கில் கூட கணக்குத் தொடங்கியிருந்தாள். ஒன்றிரண்டு வீடியோ கூட போட்டிருக்கிறாள். சப்பை மூக்கர்கள் படையெடுக்காமல் இருந்து டிக்டாக் இன்னமும் இந்த புண்ணிய தேசத்தில் இருந்திருந்தால் அவளுடைய கணக்கைத் திறந்து பாப்பாத்தியின் அபிநயங்களை நீங்களும் ரசித்திருக்கலாம். 

மதிய உணவு வரைக்கும் பாடல்களைக் கேட்டுவிட்டு மதியத்திற்கு மேலாக வாட்ஸப் வீடியோக்களை பார்ப்பாள். நாவல் மரத்தின் அடியில், பக்கத்தில் சலசலக்கும் வாய்க்கால், பாடல் கேட்டபடி - இப்படிப்பட்ட வாழ்க்கை எல்லோருக்கும் அமைந்துவிடுவதில்லை என்று போகிற வருகிறவர்களெல்லாம் பொறாமைப்படும்படியான சுகவாசி. பாப்பாத்தி பெரும்பாலும் ‘நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை’ வகையான வீடியோக்களைத்தான் பார்க்கிறாள். உண்மைத் தமிழச்சி என்பதால் அவற்றை பிறருக்கும் அனுப்பி வைத்துவிடுகிறாள். இப்படி பார்த்துப் பார்த்தே முக்கால்வாசி வைத்தியச்சி ஆகிவிட்டாள் என்று நாம் கணக்குப் போட்டுக் கொள்ளலாம். கேன்சரிலிருந்து எய்ட்ஸ் வரைக்கும் அவளிடம் மருந்து உண்டு. சில நோய்களை எல்லாம் மூச்சுப் பயிற்சியிலேயே சரி செய்துவிடுவதாகச் சொல்கிறாள். அரசியல் வீடியோக்களும் பார்ப்பாள். அவற்றை விலாவாரியாகச் சொன்னால் எனக்கும் உங்களுக்கும் கச்சடா ஆகிவிடும் என்பதால் மருத்துவம், சினிமா கிசுகிசு பற்றியெல்லாம் அவள் பார்ப்பதை மட்டும் நாம் பேசிக் கொள்வோம்.

‘பிரனிதிக்கு பனிரெண்டு வயசு இருக்குமா?’ என்று மனம் கணக்குப் போட்டது. இந்த வயதிலேயே இந்தப் பெண்ணுக்கு எப்படி குரல் வளம் வாய்த்திருக்கிறது என்று நினைத்தபடியே கூடவே பாடிப் பார்த்தாள். ம்ஹூம், சரியில்லை. தனக்கு கே.பி.சுந்தராம்பாள் பாட்டுதான் சரியாக வரும் என்று வாட்ஸப்பை நிறுத்திவிட்டு பாடல்களைத் தேடி அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிதுவை ஒலிக்கவிட்டாள். தன்னால் இதைப் பாட முடியும் என்று நம்பினாள். பாப்பாத்திக்கு நாற்பது வயதுக்குள்தான் இருக்கும். கணவனை இழந்து வாழ்க்கையின் பெரும்பாரத்தை தாண்டியவள். ஆனால் நினைத்ததை நினைத்த மாத்திரத்தில் சாதித்துவிட வேண்டும் என்பதில் பாப்பாத்தியை மிஞ்ச இனி யாராவது பிறந்துதான் வர வேண்டும்.

ஊர் என்ன பேசும், உலகம் என்ன நினைக்கும் என்கிற எந்த நினைப்பும் அவளுக்கு வருவதேயில்லை. விரும்பியதை வாழ்கிற வாழ்க்கை வரம். அவளுக்கு வாய்த்திருக்கிறது. மடத்துப்பாளையத்திலிருந்து பதினாறு கிலோமீட்டருக்கு அந்தப்பக்கம் போனால்தான் டவுன். போக வேண்டும் என நினைத்தால் காலையிலேயே வயலுக்கு சைக்கிள் எடுத்துச் சென்று இரண்டு மூன்று கட்டுக்கள் புல் அறுத்து வந்து மாடுகளுக்குப் போட்டுவிட்டு அதே சைக்கிளை மிதித்து டவுனுக்குச் சென்றுவிடுவாள். இப்படி ஒரு பெண் தன்னந்தனியாக டவுனுக்கும் சினிமா தியேட்டருக்கும் போனால் ஊர் வாய் சும்மா இருக்குமா? அதுவும் எண்பத்தேழு வீடுகள் மட்டுமே இருக்கும் குக்கிராமம். ஒவ்வொரு வீட்டுக்கும் ஓராயிரம் கண்கள்.  ‘மாடுகளைக் கூட மேய்க்காம இவ மேய போய்ட்டா’ என்று சாதாரணமாகச் சொல்லிவிடுவார்கள். ஆனால் அவையெல்லாம் பாப்பாத்திக்கு குதிங்கால் மயிருக்குச் சமானம்.

பாப்பாத்தியின் கையில் இரண்டு மூன்று லட்ச ரூபாய் பணம் இருந்தது. மாடும் ஆடும் விற்றுச் சேர்த்த பணம். இப்பொழுது இருக்கும் மாடுகளை விற்றால் மட்டும் ஏழெட்டு லட்சம் கிடைக்கும். ஒத்தைக்கட்டைக்கு இத்தனை காசு எதற்கு என்று அவளுக்கு எந்நேரமும் தோன்றும். ‘நமக்கு எதுக்கு இவ்வளவு பணம்’ என்ற எண்ணம் ஒருவனுக்கு வந்துவிட்டால் அவன் மிகப்பெரிய விடுதலையை அடைந்துவிட்டான் என்று அர்த்தம்தானே! அந்த விடுதலை பாப்பாத்திக்கு இருந்தது. புரோட்டா தின்னவும் தயங்கியதில்லை, ஐஸ்க்ரீம் தின்னவும் யோசித்ததில்லை.

தானும் யாரையுமே சார்ந்திராமல், தன்னையும் யாருமே சார்ந்திராமல் இருந்து கொண்டிருப்பது சரியா என்று கூட அவள் நினைத்துப் பார்த்ததில்லை. முருகன்தான் இந்தக் கேள்வியைக் கேட்டான். இந்திரா தியேட்டருக்கு எதிரில் மெஸ் நடத்துகிறான். புதுக்கோட்டைக்காரன். டவுனுக்கு வந்தால் அங்குதான் டிபன் சாப்பிடுவாள். ஆண்களிடம் பேசக் கூடாது என்கிற கூச்சமெல்லாம் அவளுக்கு இருந்ததில்லை. மாட்டுக்கார வியாபாரிகளிடம் இவளேதானே பேசுகிறாள்? 

பாப்பாத்தியின் வனப்பும், அவளின் தனிமையும் ஆண்களின் ஹார்மோன்களைக் கிளப்பிவிடுவதில் தவறேதுமில்லை. பாப்பாத்தியின் செல்போனிலும் எல்லாமே வந்துவிடுகிறது.  ஆண்கள் வந்து போகிறார்கள். மனதைக் கிளறுகிற எல்லை மீற எத்தனிக்க வைக்கிற எல்லாவற்றையும் தாண்டியபடியே இருக்கிறாள். கனவுகளில் ஏதோவொரு ஆண் வந்து போகிறான். அவர்களது ஸ்பரிசமும் கொஞ்சு மொழியும் நெகிழச் செய்கின்றன. அடையாளம் தெரியாத அந்த ஆண்கள் அவளின் அந்தரங்கத்தை நிரப்பியபடி இருக்கிறார்கள். 

‘இப்படியே காலம் பூரா இருந்துடுவியா’ என்றுதான் முருகன் கேட்டான். 

‘இருக்க முடியாதா?’ என்றாள். 

‘இல்ல...கேட்கலாம்ன்னு தோணுச்சு’ என அவன் சொன்ன போது துளி கூட யோசிக்காமல் ‘என்னை கட்டிக்கிறயா வெச்சுக்கிறயா?’ என்றாள்.

அவன் சிரித்தபடியே ‘வெச்சுக்கிறேன்’ என்று முடித்தான்.

‘பொண்டாட்டி புள்ள பத்திரமா வேணும்...கூட இன்னொருத்தி கீப்பாவும் வேணும்’ என்று சிரித்தாள். அவனுக்கு பதில் சொல்லத் தெரியவில்லை.

‘உருப்படுற வழியைப் பாரு’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பிச் சென்றாள். அதன் பிறகு அவளை அவன் ஏதாவதொரு வகையில் தொடர்பு கொள்ளத் தொடங்கினான். ஆடு, மாடு சம்பந்தமாகவோ, எப்போ டவுனுக்கு வருவ என்பதாகவோ அவனது உரையாடல் தொடர்ந்தது. அவளுக்கு அது ஆறுதலாகவும் இருந்தது. அடையாளம் தெரியாத ஆண்களைவிடவும் ஏதோ நெருக்கமாக இருப்பது போல உணர்ந்தாள். ஆனால் நீட்டித்துக் கொள்ள விரும்பவில்லை.

மீண்டும் பார்த்த போது ‘நீதான் நினைச்சதை அடைஞ்சுட நினைக்குற ஆள்தானே’ என்று முருகன் ஒரு முறை கேட்டான்.

‘உன்னை அடையணும்ன்னு நினைக்கவே இல்ல’ என்றாள். 

‘வேற யாராச்சும் மேல ஆசை இருக்கா?’ என்று மெலிதாகக் கேட்டான்.

‘இது உனக்கு அவசியமான கேள்வியா?’ என்றாள். அவனுக்கு அது முகத்தில் அறைந்தாற் போல இருந்தது.

மனித மனதின் குரூரங்களில் பெண்கள்தான் எளிதில் சிக்கிக் கொள்கிறார்கள். ஆண்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்கிறார்கள் அல்லது இந்தச் சமூகம் அவர்களைக் காத்துவிடுகிறது. காதல், உறவு என்றெல்லாம் யாருடனும் உணர்வுப்பூர்வமாக நெருங்குகிற மனநிலையே அவளுக்கு இல்லை. எதையும் சிக்கலாக்கிக் கொண்டு அதற்காக அழுதும் கவலைப்படுவதும் தன் வாழ்க்கையின் மிச்ச காலத்தையும் கசக்கி எறிந்துவிடக் கூடும் என்று பயந்தாள். ஆணின் காதல் பார்வையும், அன்பு கலந்த மொழியும் பெண்ணின் உடலை அடைவதற்கான ஆயுதம் என்று உறுதியாக நம்பினாள். ஆனால் அதை யாரிடமும் சொல்லி உதாசீனப்படுத்தும் எண்ணம் அவளுக்கு இருந்ததில்லை. 

உரையாடலை வெட்டி விட்டு எதுவுமே நடக்காதது போல கடந்துவிடுவதை அவள் பழகியிருந்தாள்.

சில வருடங்களுக்கு முன்பாக வாய்க்கால் ஏரியில் ரத்த சகதியோடு கிடந்தவள் மருத்துவமனையில் பிழைத்ததிலிருந்து போக்கு இப்படித்தான்.  ‘ஏரியில் மாடு இழுத்ததில் கல் மீது விழுந்தது வரைக்கும்தான் நினைவில் இருக்கிறது’ என்று மருத்துவர்களிடம் தகவல் சொன்னாள்.  தன்னைத் தாக்கியவர்களைப் பழிவாங்கிவிட அவளுக்கு விருப்பமில்லை. பயம் என்று அர்த்தமில்லை. வாழ்க்கையின் வசந்தங்களை பார்க்கவே இனி மிச்சமிருக்கும் நாட்கள் என நம்பத் தொடங்கியிருந்தாள்.

தன்னுடைய வாழ்க்கையை தான் மட்டுமே வாழ வேண்டும் என்பதிலும், எந்தச் சிக்கலும் தன்னுடைய சந்தோஷத்தை பறித்துவிடக் கூடாது என்பது அவளுக்கு நன்றாகவே புரிந்திருந்தது.

‘எனக்கு என்ன பதில் வெச்சிருக்க?’ என்றான் முருகன்.

‘விலாவாரியா சொல்லிட்டு இருக்கிற விஷயமில்ல இது...’ என்பதோடு முடித்து சைக்கிளை மிதிக்கத் தொடங்கினாள். 

ஆண்களின் மனம் தேடலை நிறுத்துவதேயில்லை. ஒவ்வொரு ஆணையும் திருத்திக் கொண்டிருப்பது தன்னுடைய வேலை இல்லை என்று அவளுக்குத் தெரியும். தன்னுடைய வாழ்க்கையில் ஆண்களைத் தாண்டிய வசந்தங்கள் உண்டு என்பதில் தெளிவாக இருந்தாள். 

டவுன் தாண்டியதும் எதிர்காற்று சுகமாகவே இருந்தது. சைக்கிளின் முன்பக்கத்தில் கிடந்த மஞ்சள்பைக்குள்ளிலிருந்து சித்ராவின் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. அது காற்றில் கரைவதைப் போலவே பாப்பாத்தியின் எண்ணங்களும் கரைந்து கொண்டிருந்தன.

Jul 11, 2020

பாப்பாத்தி

பாப்பா, பாப்பு, பாப்பாத்தி என்ற பெயர்கள் கடந்த தலைமுறை வரைக்கும் கொங்கு வட்டாரத்தில் பரவலாக உண்டு.  இப்படியான பாப்பாத்திகளில் ஒரு பாப்பாத்தியைப் பற்றிய கதை இது. பக்கத்து ஊரில் தெரியும். மாடு மேய்த்துக் கொண்டிருந்தார். மாடு என்றால் ஒன்றிரண்டில்லை- தெருவை நிறைத்துக் கொண்டு ஊர்வலம் செல்லுமளவுக்கு நிறைய மாடுகள். எருமைகளும், ஆடுகளும் கூடச் சேர்ந்து நடக்கும்.

காலையில் ஒன்பது மணியளவில் ஆக்கி வைத்திருக்கும் சோற்றை தூக்குப் போசியில்  எடுத்துக் கொண்டு கையில் ஒரு குச்சியும் வாயில் மாடு விரட்டும் சத்தமுமாக வாய்க்கால், வயல் ஓரம் ஓட்டிச் சென்றால் பொழுது சாயும்  வரைக்கும் அதுதான் பணி. யாருமற்ற தனிமைப் பொழுதுகளில் வாய் ஏதோ முணுமுணுக்கும். பாடலா, பேச்சா என்று புரியாத முணுமுணுப்பு. மேய்ந்து கொண்டிருக்கும் மாடுகளில் ஒவ்வொன்றகாக இழுத்து வந்து வாய்க்காலின் ஓரமாக இறக்கி குளித்துவிடுவதிலேயே பகல் முழுக்க தீர்ந்துவிடும். கொப்பு பிரியும் இடத்தில் ஒரு கல்கட்டுக்குள் சவக்காரமும், தேங்காய் மஞ்சியும் எப்பொழுதும் வைத்திருப்பார். அவை இருக்கும் இடம் பாப்பாத்திக்கு மட்டுமே தெரிந்திருக்கும். சுத்தமாக இருக்கும் மாடுகள் உற்சாகமாக இருப்பதான நம்பிக்கை அவருக்கு உண்டு. மாடுகளுக்கு குளித்து முடித்துவிட்டு, மஞ்சள்பையில் கொண்டு வந்திருக்கும் துணியை எடுத்து நெஞ்சு வரைக்கும் ஏற்றிக் கட்டி வாய்க்காலில் இறங்கி தானும் குளித்து எழும் போது உச்சி கீழே இறங்கத் தொடங்கியிருக்கும்.

தூக்குப் போசியைத் திறந்து வைத்து பிசைந்து எடுத்து வந்ததை ஒவ்வொரு கவளமாக யோசித்தபடியே தின்று முடிக்கவே முக்கால் மணி நேரம் ஆகும். மனிதர்களுக்கு யோசிக்கவா ஒன்றுமில்லை- ஒவ்வொருவருக்கும் கிடைத்திருக்கும் வாழ்க்கை அவருக்கு மட்டுமே பிரத்தியேகமானது இல்லையா? என்னதான் எழுதினாலும் பேசினாலும் தீர்க்கவா முடிகிறது? யோசித்து யோசித்தே மனிதர்கள் தங்கள் கடந்த காலத்தை கொஞ்சம் கொஞ்சமாகச் செரிக்கிறார்கள். கரைக்கிறார்கள்.

உணவை முடித்துவிட்டு கொஞ்ச நேரம் அதே நாவல் மரத்தடியில் அமர்ந்திருப்பார். மதியத்திற்கு மேல் மாடுகளைக் கழுவுகிற வேலையை பாப்பாத்தி ஒரு போதும் செய்வதில்லை. அந்தச் சமயத்தில் வேலை முடித்து வரும் பெண்களிடம் எதையாவது பேசுவார். அவர்கள் அதிகாலையில் வயலில் இறங்கிய பெண்களாக இருப்பார்கள். அவசர அவசரமாக வீட்டுக்குச் சென்று கொண்டிருக்கும் அவர்களுக்கு ஒவ்வொரு கணங்களும் ஒரு யுகங்கள் என்று எண்ணம்.  ஒற்றை வினாடியையும் வீணடித்துவிடக் கூடாது என்ற வேகத்தில் நடப்பார்கள். நடந்தபடியே கேள்வியை வீசிவிட்டு காற்றில் மிதந்து வரும் பதிலுக்கு நிற்காமலேயே ஓடிக் கொண்டிருப்பார்கள். பாப்பாத்திக்குத்தான் எந்த அவசரமுமில்லை. மேற்கில் சூரியன் மலைகளுக்குள் இறங்கத் தொடங்கும் வரைக்கும் அவருடைய பொழுது அந்த நாவல் மரத்தடியிலேயே கரையும். சொசைட்டியிலிருந்து பால் வண்டி போவதற்குள் பால் கறந்து ஊற்றினால் போதும். 

முன்பெல்லாம் நிறைய கறவைகள் இருக்கும். சொசைட்டிக்கு ஊற்றுவதைவிட வெண்ணெய், நெய் என்று வியாபாரம் செய்தால் வரும்படி அதிகம். ஆனால் குடைச்சல் பிடித்த வேலை. இதுவே போதும் என்று வேலைகளைக் குறைத்து ஆகிவிட்டது சில பல வருடங்கள். கறவைகளையும் வைத்துக் கொள்வதில்லை. சினை சேர்ந்தவுடன் வியாபாரிக்குச் சொல்லி அனுப்பினால் வந்து வாங்கிச் சென்றுவிடுவார்கள். மாடு விற்ற பணமே பேங்கில் இரண்டு மூன்று லட்சங்கள் இருக்கும். 

பாப்பாத்திக்கு அண்ணன் தம்பிகள் உண்டு ஆனால் எங்கேயோ இருக்கிறார்களாம். பேச்சுவார்த்தை இல்லாத குடும்பங்கள். பெற்றவர் மறைந்துவிட, உடன் பிறந்தவர்கள் கைவிட வெள்ளாட்டுக்குட்டிகள் வாங்கி மேய்த்துக் கொண்டிருந்தவர் பிறகு மாடுகள் மேய்க்கத் தொடங்கியதாகச் சொல்வார்கள். திருமணம் ஆகியிருக்க வேண்டும். அதுவும் ஒரு அனுமானம்தான். வெள்ளைப்புடவை தவிர பாப்பாத்தி வேறு எதையும் அணிந்து பார்த்ததில்லை. மேலே வண்ணத் துண்டு ஒன்றை போட்டிருப்பார். வெயிலில் நடக்கும் போது மாராப்பு மீது கிடக்கும் துண்டு தலை ஏறிக் கொள்ளும். வெள்ளைப்புடவை என்றாலும் அதைப் பற்றிய விவரம் யாருக்குமே தெரியவில்லை. 

கட்டிக் கொடுத்த இடம், கட்டிக் கொண்டு போனவன் பற்றிய எந்தப் புகாரும் பாப்பாத்திக்கு இல்லை கூட பல பெண்களும் அவளைப் பற்றி குசலம் பேச போதுமானதாக இருந்தது. தன்னை அயலூர்க்காரி என்று யார் சொல்வதையும் ஏற்றுக் கொள்வதுமில்லை. விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் ஊர் பேச்சை நம்மால் தடுக்கவா முடிகிறது?  வயல் வெளியில் முந்தி விரிப்பதாகவும், அவளது வீட்டுக்கு ஆண்கள் வந்து போவதாகவும் பேசுகிறவர்களும் உண்டு- அதை தம் கண்ணால் பார்த்ததாகச் சொல்கிறவர்களும் உண்டு. வயலோரம் சிரித்து விட்டு ஓட்டமும் நடையுமாகச் செல்கிற பெண்கள் கூட அந்தப்பக்கமாக ‘கிராக்கி இல்லையாட்ட இருக்குது’ என்று பேசுவது பாப்பாத்தியின் காதுகளுக்கு வந்ததில்லை.

நம்மைப்பற்றிய அடுத்தவர்களின் ஒவ்வொரு சொல்லும் நம்மைத் தவிர பிற அத்தனை பேர்களின் காதுகளுக்கும் சென்றுவிடும். அப்படித்தான் சரவணனுக்கும் சென்றிருந்தது. மீசை அரும்பிக் கொண்டிருந்த காலம் அது. பள்ளிக்கூடத்துக்கு ஒழுங்காகச் செல்லாமல் ஊர் சுற்றிக் கொண்டிருந்தான். அவனுக்கும் பாப்பாத்திக்கும் 20 வயதுகளாவது வித்தியாசம் இருக்க வேண்டும். ஆனால் பாப்பாத்தி ‘அப்படி இப்படி’ என்ற சொற்கள் அவனைக் கிளர்ந்தெழச் செய்தன. வாய்க்கால் கரைக்குத் தனியாகச் செல்லத் தொடங்கினான். அதே நாவல் மரத்தடியில் சைக்கிளை நிறுத்திவிட்டு பாப்பாத்தி மாடு மேய்த்துக் கொண்டிருக்கும் போது இவன் குளிப்பதும் பேச்சு வளர்ப்பதுமாக இருந்தான். இவனது இருப்பு பாப்பாத்தியை எந்தவிதத்திலும் சலனமடையச் செய்ததில்லை. ஆனால் இவனது கற்பனைகள் எல்லை தாண்டிக் கொண்டிருந்தன. மனித மனம் எப்பொழுதும் குரூரமான கற்பனைகளுக்கு சிறகு பொருத்துகின்றன. அவற்றையெல்லாம் நண்பர்களிடம் நடந்ததாகச் சொல்ல நண்பர்கள் வட்டாரம் அதை வெவ்வேறு விதமாகப் பரப்ப ‘அது தெரிஞ்ச சமாச்சாரம்தானே’ என்று ஆர்வமில்லாதது போல சொல்லிவிட்டு ‘மேல சொல்லு’ என்று கேட்கத் தொடங்கின ஊர் வாய்கள்.

சரவணின் அம்மா ‘எம் பையனை ஏன் வளைச்சு போட்ட..அவனை விட்டுடு’ என்று கையெடுத்துக் கும்பிடும் வரைக்கும் பாப்பாத்திக்குத் தெரியவில்லை. தானுண்டு தன் வேலையுண்டு எனக் கிடக்கிறவளுக்கு அது தெரிய வருவதற்கான வாய்ப்புகளும் குறைவு. பாப்பாத்தி விக்கித்து நின்றாள். அவசரமாக சரவணனின் அம்மா வீட்டுக்குள் நுழைந்த போது டி.வி பார்த்துக் கொண்டிருந்த பாப்பாத்தி எழுந்து தனது சேரை அவருக்கு நகர்த்தினாள். பால் கறந்து சொசைட்டியில் ஊற்றிவிட்டு ஒன்பது மணிக்கு மேல்தான் அவளுக்கு நேரம் கிடைக்கும். ஆனால் தூக்கம் கண்களைச் செருகும். அமரச் சொன்ன போதும் சரவணனின் அம்மா அமரத் தயாராக இல்லை. ஒருக்களித்திருந்த கதவை இன்னமும் நன்றாகச் சாத்திவிட்டு நெடுஞ்சாண்கிடையாக காலில் விழுந்து அழுதபடியே இதைச் சொன்னாள். ‘வேற விவகாரமா இருந்திருந்தா சண்டைக்கு வந்திருப்பேன்..ஆனா இதுல எனக்கு கால்ல விழறதை தவிர ஒண்ணும் தெரியல’ என்ற போதுதான் பாப்பாத்திக்கு மெல்ல மெல்ல புரியத் தொடங்கியது.

‘எந்திரிங்க’ என்றாள். ‘சத்தியம் செஞ்சு கொடு’ என்று மறுத்துக் கிடந்த பெண்மணியிடம்  எதுவுமே மறுக்காமல் ‘இனி அவன் என்ரகிட்ட வர மாட்டான்..சத்தியம்’ என்றாள். அவர் எழுந்து முந்தானையால் கண்களைத் துடைத்துக் கொண்டு எந்த உரையாடலுக்கும் இடம் கொடுக்காமல் எழுந்து சென்றுவிட்டார். 

பாப்பாத்தி சுவரோடு சேர்ந்தபடி அமர்ந்து கண்களை மூடிக் கொண்டாள். சாப்பிடத் தோன்றவில்லை. உணர்ச்சிகளற்று வெற்று உடலாகத் திரிந்தாலும் பெண்ணின் உடல் மீதுதான் ஊருக்குக் கண். ஏதேதோ நினைவுகள் வந்தன. ஆனால் அழக் கூடாது என்பதில் வைராக்கியமாக இருந்தாள். குளித்தால் நன்றாக இருக்கும் எனத் தோன்றியது. ஓலைத் தடுக்கு வைத்து மறைத்த குளியலறை. எப்பொழுதாவது சாவு வீட்டுக்குச் சென்று வந்தாள் மட்டும்தான் அதில் குளிப்பாள். வெந்நீர் வைத்துத் தயாரானாள். இரவு கவிந்திருந்தது. ஊர் அடங்கிவிட்டது. மணி பத்து இருக்கக் கூடும். மாடுகளின் கால் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது.

வெந்நீரை தலையிலிருந்து ஊற்றினாள். ஏதோ ஆசுவாசமாக இருப்பதாகத் தோன்றியது. குளித்து முடிக்கும் போது குழப்பங்களை வெந்நீர் அடித்துச் சென்றுவிட ஏதோ ஒன்று முடிவுக்கு வந்ததைப் போல இருந்தது. தடுக்கை நகர்த்திவிட்டு நிர்வாணமாகவே வீட்டுக்குள் நுழைந்தாள். யாராவது பார்த்துவிடுவார்களோ என்ற எந்த அலட்டலும் அவளுக்கு இல்லை. ஒரு பாயை விரித்து அப்படியே படுத்துக் கொண்டாள். எப்பொழுது உறங்கினாள் என்று அவளுக்கே தெரியவில்லை. விடிந்த போது அவளது நிர்வாணம் அவளுக்கே ஏதோ சங்கடமாகத் தெரிந்தது. புடவையைக் கட்டிக் கொண்டு வெளியே வந்தாள். கோழி கூவிக் கொண்டிருந்தது.

வழக்கம் போல பால் கறந்து, கால் லிட்டர் பாலை சுண்டக் காய்ச்சி குடித்துவிட்டு சோறாக்கி தூக்குப் போசியில் போட்டுக் கிளம்பினாள். சரவணனை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என ஒரு முடிவுக்கு வந்தவளாக இருந்தாள். அவன் தன்னை முகத்துக்கு நேராகச் சந்திக்கும் போது பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்தவள் மாடுகளை ஓட்டிக் கொண்டு கிளம்பினாள். சின்ன வாய்க்கால் ஏரியில் மாடுகள் போய்க் கொண்டிருந்தன. 

சரவணனின் அப்பா பைக்கில் வந்து நின்றார்.  

‘நேத்தே சொல்லி அனுப்பிட்டனுங்க’ என்றாள். அவர் எதுவும் பேசுவதற்கு முன் பேசி அனுப்பிவிடலாம் என்கிற எச்சரிக்கை அது. ஆணிடம் இதைப் பற்றி என்ன பேசுவது எனத் தோன்றியது.

‘நீ கண்டாரோலித்தனம் பண்ண என் பையன்தான் சிக்குனானா’ என்று ஓங்கி ஒரு அறை விட்டார். அடி விழும் என்று எதிர்பார்க்கவில்லை. அவரும் அவனை விட்டுவிடச் சொல்லி வந்திருப்பார் என்றுதான் பாப்பாத்தி நினைத்துக் கொண்டிருந்தாள்.

‘ஊர்க்காரனுகதான் ஏதோ பேசறானுக...நீ அப்படி இருக்கமாட்டேன்னு நினைச்சுட்டு இருந்தா...நீ என்னமோ உட்டுக் கொடுக்குற மாதிரி பேசுனியாமா’ என்று இன்னொரு அறைவிட்ட போது கையை வைத்துத் தடுத்துக் கொண்டாள்.

‘அதை உங்க பையன்கிட்ட கேட்கலாம்ல’ என்று பாப்பாத்தி அவசரப்பட்டுவிட்டாள். அத்தகைய ஒரு அனாதரவான இடத்தில் தன்னை மீறிய உடல்பலமும் கோபமும் கொண்ட ஒருவனிடம் அப்படி பேசியிருக்கக் கூடாது. அதுதான் புத்திசாலித்தனம். ஆனால் மனம் புத்தியை மீறி பேசிவிட்டது.  பேசிக் கொண்டிருக்கும் போதே அந்த ஆள் தனது பைக்கின் பின்னாடி கட்டியிருந்த விறகு ஒன்றை எடுத்து ஓங்கி வீசவும் அது பாப்பாத்தியின் பின்னந்தலையை பதம் பார்த்தது. ரத்தம் வழிய அப்படியே சரிந்தாள். உயிர் இருக்கிறதா என்றெல்லாம் எந்த அக்கறையும் காட்டிக் கொள்ளாமல் பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டார். 

வெகு நேரம் ஆகியும் யாரும் வரவேயில்லை. அவள் அப்பொழுதும் ஈனஸ்வரத்தில் தண்ணீர் கேட்டுக் கொண்டிருந்தாள். பக்கத்தில் வாய்க்கால் நிறைய நீர் ஓடிக் கொண்டிருந்தது. மாடுகள் அலட்டல் இல்லாமல் மேய்ந்து கொண்டிருந்தன. 

Jul 9, 2020

ஷாக்

எங்கள் வீட்டில் ரூபாய் மூன்றாயிரத்துக்கும் மேலாக மின்கட்டணம் வந்துவிட்டது. அம்மா பதறிவிட்டார். அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் ‘உங்களுக்கு எவ்வளவு கரண்ட் பில்’ என்று கேட்டுக் கொண்டிருந்தார். மின் கட்டணம் தாறுமாறாக வந்திருக்கிறது என்று புலம்பினால் நான் என்ன செய்ய முடியும்? வீட்டில் எட்டுப் பேர்கள் இருக்கிறோம். மூன்று மின்விசிறிகள் ஓடிக் கொண்டிருக்கின்றன. அவ்வப்பொழுது நிலத்தொட்டி நீரை மேலேற்ற மோட்டார் ஓடுகிறது. சரியாகத்தான் இருக்கும் என்று சமாதானம் சொன்னேன். என்னை எரித்துவிடுவார் போலிருந்தது. ‘அப்படி இருந்தாலும் இது அதிகம்..மீட்டர்ல பிரச்சினையா இருக்கும்’ என்றார். 

இனி தப்பிக்க முடியாது. வேறு ஏதாவது ஒரு விவகாரத்தில் திட்டுவதாக இருந்தாலும் இதைக் கோர்த்து திட்டுவார். நமக்கு ஏன் வம்பு என்று கிளம்பிச் சென்று மின்வாரிய அலுவலகத்திதில் ஒரு புகார் கடிதம் கொடுத்தேன். மின்வாரிய ஊழியப் பெண்மணி ஒருவர் ‘எல்லோருக்குமே அதிகமாத்தாங்க வந்திருக்கு....ஏஸி போட்டீங்களா?’ என்றார். வீட்டில் ஏ.ஸியே இல்லை என்று சொன்னேன். புகாரை வாங்கி வைத்துக் கொண்டார். அடுத்த நாள் மின் வாரிய ஊழியர்கள் கர்ம சிரத்தையாக வந்து பார்த்துவிட்டு ‘மீட்டர் சரியா இருக்கு’ என்று சொன்னார்கள். எழுதிக் கொடுத்திருந்த புகார் கடிதத்திலேயே ஓரமாக ‘மின் வாரிய ஊழியர்கள் வந்து சரி பார்த்தார்கள்’ என்று எழுதி கையொப்பம் வாங்கிக் கொண்டார்கள்.

அதன் பிறகு நான் தப்பித்துக் கொண்டேன். அம்மாதான் யாரிடம் பேசினாலும் மின் கட்டணம் பற்றி விசாரித்தார். பலரும் தமக்கும் அதிகம்தான் என்கிறார்கள். புதிய தலைமுறையில் கூட ஒரு நிகழ்ச்சியின் நேரலையில் கலந்து கொள்ள அழைத்தார்கள். இதே விவகாரம்தான். வீடுகள், நிறுவனங்கள் என பலரும் வழக்கத்திற்கு மாறான மின்கட்டண அதிகம் குறித்துப் புலம்புகிறார்கள். அதன் பிறகுதான் இதில் ஏதோ குளறுபடி இல்லாமல் இத்தனை பேர் இது குறித்துப் பேச வாய்ப்பில்லை எனத் தோன்றியது. 

நிறைய மின்வாரிய நண்பர்களிடம் பேசியதில் அவர்களில் பெரும்பாலானவர்கள் மின் கட்டணக் கணக்கீட்டில் குழப்பமிருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்கிறார்கள்.

No photo description available.

எனக்குப் புரிந்த அளவில் எளிமையாகச் சொல்கிறேன்.

சராசரியாக 200 யூனிட்களைப் பயன்படுத்துகிற குடும்பம் என்று வைத்துக் கொள்வோம். அந்தக் குடும்பம் ஜனவரி-பிப்ரவரி மாதங்களுக்கு 200 யூனிட்களைப் பயன்படுத்தியிருந்தால் மின்கட்டணம் ரூ.170 வந்திருக்கும்.  (மேலே இருக்கும் பட்டியலில் தொகையைக் கணக்கிட்டுக் கொள்ளலாம்)

அதன் பிறகு கொரோனா ஊரடங்கினால் மார்ச்-ஏப்ரல் மாதங்களில் மின் வாரிய ஊழியர்கள் கணக்கு எடுக்கவில்லை. அதனால், மின் வாரியம் அறிவுறுத்திருந்தபடி முந்தைய மாதக் கட்டணமான 170 ரூபாயைக் கட்டியிருப்போம். 

மே-ஜூன் மாதங்களுக்கான மின்கட்டணத்தைக் கணக்கிட மின் வாரிய ஊழியர்கள் தொடங்கினார்கள். அப்பொழுது அவர்களது கணக்கீட்டின்படி 430 யூனிட்களைப் பயன்படுத்தியிருக்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். இது மார்ச்-ஏப்ரல் மற்றும் மே-ஜூன் ஆகிய இரண்டு காலகட்டத்திற்கானது இல்லையா? அதனால் 430 யூனிட்களை இரண்டால் வகுத்துக் கொள்கிறார்கள். 430/2=215 யூனிட்கள்.

215 யூனிட்களுக்கு மின் கட்டணம்= ரூ. 275.

இரண்டு கட்டண காலத்திற்கு ரூ. 275x2= ரூ.550 செலுத்த வேண்டிய தொகை. ஆனால் ஆனால் ஏற்கனவே கணக்கீடு இல்லாமல் 170 ரூபாய் கட்டியிருப்பதால் அந்தத் தொகையை கழித்துவிட்டு மீதியைக் கட்டச் சொல்கிறார்கள். 

ரூ. 550- ரூ. 170= ரூ. 380 


முந்நூற்று எண்பது ரூபாய் நாம் கட்ட வேண்டிய தொகை. எல்லாமும் சரியாக இருப்பது போலத்தானே இருக்கிறது? ஆனால் சரியாக இல்லை. இதில் ஒரு குழப்பம் இருக்கிறது. ஏற்கனவே நாம் கட்டிய கட்டணத்தைக் கழிக்காமல், அந்தத் தொகைக்கான யூனிட்களை கழித்திருக்க வேண்டும். 

அந்தக் கணக்கையும் பார்ப்போம். 

மின்வாரிய ஊழியர்கள் எடுத்து வைத்திருக்கும் கணக்கீடு 430 யூனிட்கள். இதில் 200 யூனிட்களுக்கான தொகையான 170 ரூபாயைத்தான் ஏற்கனவே கட்டியிருக்கிறோம் அல்லவா? அதைக் கழித்துவிடுவோம். 

430- 200= 230 யூனிட்கள். இந்த 230 யூனிட்களுக்கு கட்டணம் செலுத்தினால் போதும். 230 யூனிட்களுக்கு பில் கட்டணம் 320 ரூபாய்தான் வரும்.  மின்வாரியம் கணக்கிடுவதற்கும், யூனிட்களைக் கழித்துக் கணக்கிடுவதற்கும் வித்தியாசம் 60 ரூபாய். இதனை இரண்டாக வகுத்துக் கணக்கிட்டால் இன்னமும் குறைவாக வரும். ஆனால் எப்படிக் கணக்கிட்டாலும் நாம் கட்டியிருப்பது அதிகமான தொகைதான். சராசரியாக 200 யூனிட்களைப் பயன்படுத்தும் குடும்பத்துக்கு இந்த வித்தியாசம். அதிகமான மின் பயனீட்டை பயன்படுத்தும் குடும்பங்களுக்கு ஆயிரக்கணக்கான ரூபாய் வித்தியாசம் வருகிறது. 

வெவ்வேறு தொகைக்கு வெவ்வேறு விதமான கணக்கீடுகள் வருகின்றன. நீங்கள் முயற்சித்துப் பார்க்கலாம். சிலருக்கு இலாபம் கிடைத்திருக்கலாம் ஆனால் பலரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இத்தகைய கணக்கீடுகளின் போது யாருக்குமே பாதிப்பில்லாமல்தான் அமல்படுத்த வேண்டும்?

மூன்று மாதங்களுக்கு மேலாக முடங்கியிருக்கும் சிறு உணவு விடுதிகள், பட்டறைகள், தொழில் நிறுவனங்கள் போன்றவை வணிகக் கட்டணங்களை செலுத்துகிறவர்கள். அவர்களுக்கு இது பேரிடி.  ஏற்கனவே ஊரடங்கினால் தொழில் முடங்கி, வருமான இழப்பு ஏற்பட்டு அவர்களுக்கு இப்பொழுது மின் கட்டணமும் பெரிய சிரமம்தான். எனக்குத் தெரிந்த சில நெருங்கிய நண்பர்கள் கடன் வாங்கி மின் கட்டணம் செலுத்தியிருக்கிறார்கள். ஜூலை 31 வரைக்கும் அவகாசம் கேட்டுத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ‘நிறையப் பேரு கட்டிட்டாங்க...கட்டாதவங்களை கட்டச் சொல்லுங்கள்’ என்கிற ரீதியில் அரசு வழக்கறிஞர் வாதத்தை முன் வைத்திருக்கிறார். நாம் கவலைப்படுவதும், கனிவு காட்ட வேண்டியதும் மின் கட்டணத்தை கட்ட முடியாதவர்களிடம்தான் என்பதை ஏன் புரிந்து கொள்ளாமல் பேசுகிறார்கள்? கட்டியவர்களிலும் எவ்வளவு சதவீதம் பேர் கடன்பட்டும், சிரமத்திலும் கட்டியிருப்பார்கள் என்பதை ஏன் அதிகாரவர்க்கம் யோசிப்பதில்லை?

கனிவு காட்டாவிட்டாலும் இத்தகைய அதிகமான மின் கட்டண பயனீட்டு முறையையாவது மாற்றி, அதிகமாக வசூலிக்கப்பட்ட தொகையை திருப்பித் தருவதுதான் நியாயம். அப்பொழுதுதான் என்னைப் போன்றவர்கள் அம்மாவிடமிருந்து தப்பிக்க முடியும். அதைவிடுத்து மக்கள் அதிகமாகப் பயன்படுத்துவதால் மின் கட்டணம் அதிகம் என்பதெல்லாம் புரியாமல் வைக்கிற வாதம்; ஆட்சியாளர்களின் போதாமையும் புரிதலின்மையும் வெளிப்படுகிற வாதம்!