Dec 12, 2019

மதமே பிரதானமா?

குடியுரிமை மாற்றுச் சட்டம் மக்களவையில் நிறைவேறினாலும் கூட மாநிலங்களவையில் தோற்கடிப்பட்டுவிடும் என்று நிறையப் பேர் நம்பிக்கையாகச் சொல்லியிருந்ததை அடுத்து நேற்று ராஜ்யசபா விவாதங்களையும் வாக்கெடுப்பையும் கவனித்துக் கொண்டிருந்த போது கடைசியில் பாஜக வெற்றிகரமாக நிறைவேற்றிவிட்டது. 

குடியுரிமை மாற்றுச் சட்டம் (Constitutional Amendment Bill) தேசிய குடிமக்கள் பதிவேடு (National Register of Citizens) ஆகிய இரண்டையும் இணைத்துப் புரிந்து கொள்ள வேண்டும். இரண்டுமே நெருங்கிய தொடர்பு கொண்டவை. இப்பொழுது நிறைவேற்றப்பட்டிருக்கும் குடியுரிமை மாற்றுச் சட்டத்தில் - ‘பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசத்திலிருந்து குடியேறக் கூடிய- இசுலாமியர்கள் தவிர்த்த பிற மதத்தினர் இந்துக்கள், கிறித்துவர்கள், பாரசீகர்கள், புத்தம் உள்ளிட்ட மதத்தினர் இந்தியாவுக்குள் வந்து ஐந்து வருடங்கள் ஆகியிருந்தால் அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட்டுவிடும்’. முன்பு இவர்கள் சட்டத்துக்கு புறம்பானவர்களாக கருதப்பட்டவர்கள். அப்படியே குடியுரிமை வழங்குவதாக இருந்தாலும் பதினோரு வருடங்கள் காத்திருக்க வேண்டும்.  இனி அவர்களுக்கு ஐந்து வருடங்களில் இந்தியக் குடியுரிமை வழங்கப்பட்டுவிடும். இது உள்ளே வருகிறவர்களை இந்தியக் குடிமகன்/மகள்களாக மாற்றுவதற்கான சட்டம்.

மதங்களின் பட்டியலில் இசுலாமியர்களை விட்டுவிட்டார்கள். ‘ஏன் இசுலாமியர்களை மட்டும் விட்டு வைத்திருக்கிறீர்கள்?’ என்று கேள்வி கேட்டால்  ‘பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்றுமே இசுலாமிய நாடுகள் அதனால் இசுலாமியர்களுக்கு குடியுரிமை கொடுக்க வேண்டியதில்லை’ என்று பதில் சொல்கிறார்கள். சரி இசுலாமியர்களை விட்டுவிடலாம்- ஈழத்தமிழர்கள் இலங்கையில் மைனாரிட்டிகள், அங்கு புத்தமதத்தினர்தான் பெரும்பான்மை; இந்துக்கள் சிறுபான்மையினர்தான். அடித்து துவம்சம் செய்கிறார்கள். இசுலாமிய நாட்டு இந்துக்களுக்கு வழங்கும் இதே சலுகையை ஈழத்தமிழர்களுக்கு ஏன் தரவில்லை என்று எழுப்பப்படும் கேள்விக்கான பதில் எங்கும் தென்படவில்லை. மலையகத் தமிழர்களில் கணிசமானவர்கள் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு குடியேறிய பூர்வகுடிகள் என்பதுதான் வரலாறு. வடக்கில் அண்டை நாட்டினர் அனுமதிக்கப்படுவது போலவே தெற்கிலும் அனுமதிக்க வேண்டியதில்லையா? ஆனால் அனுமதிக்கவில்லை. இதில் மனிதாபிமானம் என்பதெல்லாம் மேம்போக்காகச் சொல்லுகிற வாதம். மதம்தான் பிரதானம்.

இந்தச் சட்டத்துக்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் கடுமையான போராட்டங்கள் ஆரம்பமாகியிருக்கின்றன. என்ன காரணம் என்று பார்த்தால் அவர்கள் தங்களது உரிமைகளை குடியேறிகள் பறித்துக் கொள்வார்கள் என்று பதறுகிறார்கள். கல்வி, வேலை வாய்ப்புகளில் தங்களுக்கான இடங்களை அடுத்தவர்கள் பறிப்பார்களே என்று வீதிக்கு வந்துவிட்டார்கள். இலட்சக்கணக்கில் வெளிநாட்டினர் குடியேறினால் தங்களுடைய கலாச்சாரத் தனித்தன்மை பறிபோகும் என்று பயப்படுகிறார்கள். மதத்தின் பெயரால் அந்நியர்களை உள்ளே அழைத்து வந்து, அவர்களுக்கு தங்களின் உரிமைகளைத் தருவதற்கு அவர்கள் தயாராக இல்லை. தற்போதைக்கு சில மாநிலங்களுக்கு விலக்கு அளித்திருக்கிறார்கள். போராட்டங்களைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக காஷ்மீரைப் போலவே வடகிழக்கு மாநிலங்களில் இராணுவம் குவிக்கப்பட்டிருக்கிறது; இணையத் தொடர்பைத் துண்டித்திருப்பதாகச் செய்திகளில் காட்டுகிறார்கள்.

வடகிழக்கில் எழும் எதிர்ப்புக்கும் தமிழகத்தின் எதிர்ப்புக்கும் வித்தியாசமிருக்கிறது. அங்கே அடுத்தவர்களை உள்ளே அனுமதிக்காதீர்கள் என்கிறார்கள்; இங்கே தமிழர்களையும் அனுமதியுங்கள் என்கிறார்கள். அப்படித்தான் முரண்பாடுகள் இருக்கும். இந்தியா மாதிரியான பரந்த தேசத்தில் ஒவ்வொரு பகுதிக்கும் பிரச்சினை மாறுபடுகிறது; குரல்களின் தொனி மாறுகிறது. அதைத்தான் வேற்றுமையில் ஒற்றுமை என்கிறோம். ஆனால் எல்லாவற்றையும் ஒற்றைப்படையாக ‘ஒரே நாடு; ஒரே கல்வி; ஒரே மதம்’ என்று சாயம் பூசுவதை இந்த தேசத்தின் அரசியலமைப்புக்கு முற்றும் முரணானது என்கிற குரல்கள் எழுப்பப்படுகின்றன. அது சரியான குரல்கள்தான்.  Rome is not built in a day என்பது போலவே இந்திய ஜனநாயகக் குடியரசு என்பதும் ஒற்றை நாளில் கட்டியெழுப்பப்படவில்லை. சிதறிக் கிடந்த ராஜ்ஜியங்கள், சிற்றரசுகள், பேரரசுகள் என சகலமும் ஆங்கிலேயர்களின் கட்டுக்குள் வந்து, இருநூறாண்டுகாலம் அவர்களுடன் போராடி பெற்ற சுதந்திரத்துக்குப் பிறகு ஒருங்கிணைத்து கட்டி எழுப்பி ஒவ்வொரு செங்கல்லாக அடுக்கிக் கொண்டிருக்கும் போது எல்லாமே சில்லு சில்லாக சிதறுவதைப் போல நடவடிக்கைகள் இருக்கும் போது பதற்றமடைவது இயல்புதானே?

ஆனால் அப்படி பதறுகிற குரல்கள் நசுக்கப்பட்டுவிடும். இன்றைக்கு கூட ஊடகங்களை நாசூக்காக எச்சரிக்கும் வகையில் ஒரு அறிவிப்பை மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. ஆனால் தமிழகத்தில் அதெல்லாம் அவசியமே இல்லை. ஏற்கனவே அவை அடங்கிய குரலில்தான் பேசிக் கொண்டிருக்கின்றன. இன்றைக்கு குடியுரிமை மாற்றுச் சட்டத்தைப் பற்றிய விவாதங்களைவிடவும் ரஜினியின் பிறந்தநாள், ஆபாச படங்களைப் பகிர்ந்தவர்கள் கைது ஆரம்பம் என மக்களின் கவனத்தை மாற்றுவதிலேயேதான் குறியாக இருக்கின்றன.

குடியுரிமை மாற்றுச் சட்டத்தைப் போலவே இன்னொரு சட்டமான தேசிய குடிமக்கள் பதிவேடு  அஸ்ஸாம் மாநிலத்தில் மட்டும் முன்பிருந்தே அமுல்படுத்தப்பட்டிருக்கிறது. பக்கத்து நாடுகளிலிருந்து வந்து குடியேறிய மக்களை அடையாளம் கண்டறிவதற்காக (குறிப்பாக பங்களாதேஷ்) 1971 க்கு முன்பாக இருந்தே தாங்கள் இந்தியர்கள்தான் என்பதற்கான ஆவணத்தை வழங்க வேண்டும் என்பதுதான் அதன் முக்கிய அம்சம். இந்தச் சட்டத்தை இனி நாடு முழுவதும் அமுல்படுத்தப் போவதாகச் சொல்கிறார்கள். இவை இரண்டும் சேர்ந்து இந்த தேசத்தை ‘இனத்தூய்மை’ செய்வதற்கான முன்னெடுப்புகளைச் செய்கின்றன என்றுதான் பதறுகிறவர்களில் பெரும்பாலானவர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

இனத்தூய்மை என்பதன் அர்த்தமும் ஆழமும் புரியாதவர்கள் இணையத்தில் தேடிப் பார்க்கலாம். 

1971க்கு முன்பாகவே இந்தியன்தான் என்பதற்கான ஆதாரத்தைக் கேட்டால் இந்த நாட்டில் எத்தனை கோடி மக்களால் கொடுக்க முடியும் என்று தெரியவில்லை. பொதுவாகவே, மதம், இனம் போன்ற குறிப்பிட்ட, அபாயகரமான அம்சங்களைக் கொண்டு மக்களை வகைப்படுத்துவது மிகப்பெரிய ஆபத்தைக் கொண்டு வருவதற்கான வாய்ப்புகளை உருவாக்குகின்றன. கோடிக்கணக்கான மக்களை மதத்தின் அடிப்படையில் ‘நீ வேற’ என்று அடையாளப்படுத்துவது ஒருவிதமான அச்ச உணர்வையும் பதற்றத்தையும் உருவாக்கும். அது பகைமையையும் வளர்க்கும். அதுவும் மிக மெல்லிய இழையாகப் பின்னிய நூறு கோடி மக்கள் வாழும் இந்தியா போன்ற பெரிய தேசத்தில் இத்தகைய ‘சென்ஸிடிவான’ விஷயங்களை சர்வசாதாரணமாக அடுத்தடுத்து நடத்திக் கொண்டிருப்பது அச்சமூட்டுகிற செயல். அதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள். 

5 எதிர் சப்தங்கள்:

சேக்காளி said...

/ 1971 க்கு முன்பாக இருந்தே தாங்கள் இந்தியர்கள்தான் என்பதற்கான ஆவணத்தை வழங்க வேண்டும் என்பதுதான் அதன் முக்கிய அம்சம்.//
என்ன ய்யா சொல்லுறீங்க?

Krishnasivam said...

Isn`t it CAB(Citizenship Amendment Bill) ? and not the constitutional amendment bill ?

Kodees said...

நீங்கள் இந்தியர்தான் என்று நிரூபியுங்கள் (முடிந்தால்!)
https://www.riddle.com/a/iframe/203409

Dhiya said...

எத்தனை முரண்கள் உங்கள் பதிவில்.
புன்னகைத்துக் கடப்பதைத் தவிர சொல்ல ஒன்றுமில்லை.. :)

Paramasivam said...

அந்த 3 நாடுகளிலும் மைனாரிட்டிகள் மக்கள் தொகை வெகுவாக குறைந்துள்ளதை நீங்கள் குறிப்பிடவில்லையே!
அஸ்ஸாமில் மட்டும் தான் இப்போது கலவரம், ராணுவ பாதுகாப்பு எல்லாம். அரசியல் கட்சியின் தொண்டர்கள்
தான் கலவரத்தை முன்னெடுத்து நடத்திய செய்திகளும் ஆங்கில ஊடகங்களில் வந்ததையும் நினைவில் கொள்ள வேண்டும்