Dec 19, 2019

எதை நோக்கி நகர்கிறோம்?

குடியுரிமை மாற்றுச் சட்டம் குறித்தான பிரச்சினைகள் கிளம்பிய போது ஓரிரு நாளில் அவரவர் தம் வேலையைப் பார்க்கச் சென்றுவிடுவார்கள் என்று தோன்றியது. பிரச்சினைகள் அடங்கிய பிறகு இன்னொரு விவகாரம் வரும் வரைக்கும் காஜல் அகர்வாலின் மெழுகுச் சிலை தொடங்கி ‘என்னைப் பத்தி என்ன நினைக்கறீங்க?’ வரைக்கும் எதையாவது ட்ரெண்ட் செய்து கொண்டிருப்போம் என்றுதான் பலரும் நினைத்திருக்கக் கூடும். அப்படித்தானே நம்முடைய சூழல் இருக்கிறது? கடந்த முப்பதாண்டு காலத்தில் இந்திய அளவில் ஒரு பிரச்சினையை எடுத்துக் கொண்டு வெவ்வேறு பகுதிகளில் மக்கள் தொடர்ச்சியாக பல நாட்களுக்கு போராடினார்கள் என்று ஏதாவது நினைவில் இருக்கிறதா?

முப்பதாண்டு என்பது ஒரு தலைமுறைக்கான காலம். 

எண்பதுகளுக்குப் பிறகு பிறந்தவர்கள் தேசிய அளவிலான போராட்டங்கள் எதையும் பார்த்திராத தலைமுறை. அங்குமிங்குமாக ஏதேனும் பிரச்சினைகள், பந்த் என்று நடக்கும். அதிகபட்சம் பஸ் எரிப்பு இருக்கும். அதனால் தேசிய அளவிலான போராட்டம் எப்படி உருப்பெற்று, வடிவம் கொண்டு பல்வேறு பகுதிகளுக்கும் பரவும், அதை அரசு எவ்வாறு தடுப்பதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்ளும், பிரச்சினை எந்தத் திசை நோக்கி நகரும், எப்படி முடிவுக்கு வரும் என்கிற புரிதல் எதுவும் இந்தத் தலைமுறைக்கு இருக்க வாய்ப்பில்லை. இந்தத் தலைமுறைக்கான மனநிலையில் இருந்தவர்கள் யாருமே இன்று குடியுரிமை மாற்றுச் சட்டத்துக்கு எதிராக இவ்வளவு ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் முளை விடும் என எதிர்பார்க்கவேயில்லை.

ஜனத்திரள் போராட்டங்கள் இப்படித்தான் தொடங்குமோ என யோசிக்கத் தோன்றுகிறது.

வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட, தேசிய அளவிலான போராட்டங்கள் எதிலேயும் ஒரு தேசத்தில் இருக்கும் அத்தனை மனிதர்களும் களமிறங்கியிருக்க வாய்ப்பில்லை. சுதந்திரப் போராட்ட காலத்தில் முப்பது கோடி மக்களுமா தெருவில் இறங்கினார்கள்? அப்படி இறங்கியிருந்தால் ஆங்கிலேயர்கள் சிதைந்து போயிருப்பார்கள் அல்லவா? அங்குமிங்குமாக நாடு முழுவதும் சேர்த்து ஒரு லட்சம் பேர்கள் போராட்டங்களில் கலந்திருக்கலாம் அல்லது ஐந்து லட்சம் பேராகக் கூட இருக்கலாம். இந்த எண்ணிக்கையில் மாறுபாடு இருக்கலாமே தவிர முப்பது கோடி பேரும் கலந்து கொள்ளவில்லை என்பதை உறுதியாகச் சொல்ல முடியும். களத்தில் இறங்குகிறவர்களுக்கான மக்கள் ஆதரவு அதிகரிக்க அதிகரிக்க போராட்டக் களத்துக்கு வருகிறவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்திருக்கும். இந்த ‘கணிசமான’ எண்ணிக்கையே அரசை திக்குமுக்காடச் செய்திருக்கும். அப்படித்தான் போராட்டங்களில் அரசுகள்  தோல்வியடைகின்றன. 

முப்பதுகளில் வாழ்ந்த அமத்தாவையோ, அப்பத்தாவையோ அணுகி ‘சுதந்திரப் போராட்டம் நடந்ததா?’ என்றால் ‘அப்படிச் சொல்வார்கள்’ என்பதுதான் பதிலாக இருக்கும். 

அதற்கடுத்து ஐம்பது, அறுபதுகளில் பிறந்தவர்கள் எமெர்ஜென்ஸி நிலை காலத்தின் பிரச்சினைகளைச் சொல்லக் கூடும். அதுவும் கூட சாமானியர்கள் எந்த அளவு பாதிக்கப்பட்டார்கள் என்று தெரியவில்லை. அம்மாவிடம் கேட்டால்- அப்பொழுது அவர் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார்- ‘செய்திகளில் படித்ததோடு சரி’ என்கிறார். ஆனால் அப்படியொரு அரசியல் போராட்டம் நடைபெற்றிருக்கிறது. அதன் விளைவாக தேசத்தில் அரசியல், பொருளாதார மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. எமெர்ஜென்ஸியின் போதும் நேரடியாகக் களமிறங்கியவர்கள் அதே லட்சக்கணக்கில்தான் இருந்திருக்க முடியும். 

எமெர்ஜென்ஸிக்குப் பிறகு நாட்டில் எவ்வளவோ பெரிய மாற்றங்கள் நடந்துவிட்டன. தாராளமயமாக்கல், உலகமயமாக்கல், சந்தைப் பொருளாதாரம் என வரிசைப்படுத்திக் கொண்டே போகலாம். பன்னாட்டு நிறுவனங்களின் படையெடுப்பு, நகரமயமாக்கல், அதன் விளைவுகள் என வரிசையாகப் பட்டியலிட முடியும். மிகச் சமீபத்திய பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரைக்கும் மக்கள் நேரடியாக பாதிக்கப்பட்ட பல மிகப்பெரிய மாற்றங்களை இந்த நாடு சந்தித்திருந்தாலும் பெருந்திரளான மக்கள் வீதிக்கு வரவில்லை. தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுக்கவில்லை. போராட்டங்களின் மீது ஈர்ப்பு கொண்ட தொழிற்சங்கவாதிகளிடம் பேசினால் ‘எல்லாம் மழுங்கிப் போன சமூகம் இது, இனி போராட்டம் என்பது சாத்தியமேயில்லை’ என்பார்கள். அப்படித்தான் நினைத்துக் கொண்டும் இருந்தோம். ஆனால் இப்பொழுது என்னவோ நடக்கிறது என்பதை மட்டும் அடிவயிற்றில் பட்டாம்பூச்சி பறப்பதைப் போல உணர முடிகிறது.

பொருளாதாரம் பிரச்சினைகளைச் சந்தித்துக் கொண்டிருக்கும் போது அரசு எப்படி அதன் வீரியத்தை உணரவில்லையோ அதைப் போலவே இந்தப் பிரச்சினையின் எதிர்விளைவுகளையும் உணரவில்லையோ என நினைக்கும் போது பதற்றமாக இருக்கிறது. எல்லாவற்றையும் முரட்டுக்கரம் கொண்டு அடக்கிவிட முடியும் என்பது சாத்தியமேயில்லாதது. ஆனால் அரசின் அடக்குமுறைகள் அடிவயிற்றில் கைவைப்பதாகத்தான் இருக்கின்றன. டெல்லியில் இணையத்தைத் துண்டிக்கிறார்கள் என்றால் அது வெறுமனே தகவல் தொடர்பினை மட்டும் துண்டிப்பதில்லை. பல்லாயிரக்கணக்கான கோடிகளில் நடைபெறும் ஆன்லைன் வணிகம், பணப்பரிமாற்றங்கள் என எல்லாவற்றையும் துண்டிப்பது. இதன் விளைவு இந்த நாட்டு மக்களின் தலையில் அல்லவா இறங்கும்? இணையத்தைத் துண்டிப்பது, தகவல் தொடர்பு பரவாமல் தடுப்பது, தடியடி, 144 என்பதெல்லாம் எவ்வளவு தூரம் அமைதியை நிலைநாட்டும் என்று புரியவில்லை. நூற்றியிருபத்தைந்து கோடி மக்களையும் பயமூட்டிவிட முடியுமா?

சுதந்திரப் போராட்டத்திலும் நிச்சயமாக ஆங்கிலேயர்களுக்கு ஆதரவானவர்கள் இந்த நாட்டில் இருந்திருப்பார்கள். எமர்ஜென்ஸியின் போது அரசின் நடவடிக்கைகளை ஆதரித்தவர்கள் இருந்திருப்பார்கள். ஒரு கட்டத்தில் எதிர்ப்பவர்களின் எண்ணிக்கை ஆதரிப்பவர்களின் எண்ணிக்கையைவிட கணிசமாக உயரும் போது அரசாங்கம் தோல்வியை ஒத்துக் கொள்ள நேரிடும். இப்பொழுதும் அரசின் நடவடிக்கைக்கு ஆதரவான தரப்பு, எதிர்தரப்பு என்று இரண்டுமே உண்டு. ஆதரவு தரப்பின் எண்ணிக்கையை அரசு அதிகரிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளும். எதிர்தரப்பை தம் போக்குக்கு கொண்டு வந்து அதன் எண்ணிக்கையை கட்டுக்குள் வைத்துக் கொள்ள முயற்சிக்கும். அப்படித்தான் பிரச்சினைகளைக் கட்டுக்குள் கொண்டு வர இயலும். ஆனால் இந்த இரண்டையுமே மிதவாதத்தில்தான் செய்ய முடியும். முரட்டுத்தனமாக மிரட்டுகிறார்கள் என்பதுதான் இங்கே பிரச்சினையின் அடிநாதம். அதைத்தான் ஃபாசிஸம் என போராட்டத்திற்கு ஆதரவானவர்கள் அடையாளப்படுத்துகிறார்கள்.

அரசாங்கம் இறங்கி வருவதில் என்ன தவறு நேர்ந்துவிடும்? நாட்டில் ஆங்காங்கே போராட்டங்கள் ஆரம்பமாகின்றன என்னும் போது அரசாங்கம் ‘நீ என்ன முடியுமோ செஞ்சுக்க..நாங்க அமல்படுத்துவோம்’ என்று வீராப்பாகச் சொல்வது கோடிக்கணக்கானவர்களின் ஈகோவைத் தொட்டுப் பார்ப்பதாகத்தானே இருக்கும்? அதைத்தான் செய்கிறார்கள். தேன்கூட்டில் கை வைத்தாகிவிட்டது. தம்மிடம் இருக்கும் தீப்பந்தத்தை எரித்தே அனைத்து தேனீக்களையும் வழிக்குக் கொண்டு வருவது சாத்தியமா?

அதே சமயம், இத்தனை கோடி மக்கள் உள்ள நாட்டில்  ‘எதிர்கட்சிதான் தூண்டிவிடுகிறது’ என்று யாரும் நம்பவே முடியாததையெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஒருவேளை ராகுல்காந்தியே வீடு வீடாக வந்து அழைத்தாலும் இவ்வளவு போராட்டங்களை நடத்துகிற அளவுக்கு மக்கள் இறங்கி வர மாட்டார்கள். தம் அன்றாட வேலைகளையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு ராகுலுக்கு பின்னால் வர மக்கள் ஒன்றும் மடையர்கள் இல்லை.  அப்படி வருவதாக இருப்பின் இதற்கு முன்பே பல போராட்டங்கள் நாட்டில் நடந்திருக்க வேண்டும்.  ஒருவேளை ராகுலை நம்புவதாக இருந்தால் இந்நேரம் அவர்தான் பிரதமராகவும் இருந்திருக்க வேண்டும். காங்கிரஸுக்கு எந்தச் செல்வாக்குமில்லை என்பதுதான் நிதர்சனம்.

ராகுலுமில்லை; பிரியங்காவுமில்லை- வேறு ஏதோவொன்று மக்களை வீதிக்கு இழுக்கிறது. தமது அன்றாட பிழைப்பை விட்டுவிட்டு, கணிசமானோர் தம் கோபத்தைக் கொட்டிவிட முடியும் என்று தெருவுக்கு வருவதாக புரிந்து கொள்ள வேண்டும். பிற ஜனத்திரள் போராட்டங்களைப் போலவே ‘நாம் கலந்து கொள்ளவில்லை; பக்கத்து வீட்டுக்காரன் கலந்து கொள்ளவில்லை’ என்று நம்மில் பலரும் நினைத்துக் கொண்டிருந்தாலும் யாரோ, எங்கேயோ இழுக்கப்படுகிறார்கள். அடிபடுகிறார்கள். இப்படித்தான் போராட்டம் வடிவம் பெறுமோ என்பதை பொறுமையாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இன்னமும் நாட்கள் நகரும் போது அரசாங்கம் தம் இரும்புக்கரத்தை மட்டுமே நம்பிக் கொண்டிருக்க இன்னமும் இன்னமும் பல பேர் வீதியில் இறங்கும் போது நம் தலைமுறை பார்த்திராத இருண்டகாலத்தை நோக்கி நகரக் கூடும்.

Dec 17, 2019

தீ

வெள்ளியங்கிரியும் அவரது மனைவியும் கூலித் தொழிலாளர்கள். இரண்டு குழந்தைகள். இருவரும் அரசு ஆரம்பப்பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறார்கள். மூத்த மகன் ஐந்தாவது படிக்கிறான். சில மாதங்களுக்கு முன்பாக ஒரு சாலை விபத்தில் தப்பி- அடித்துவிட்டுச் சென்றவனை உள்ளூர் பெண் காவல் அதிகாரி அடையாளம் கண்டறிந்து உரிய நஷ்ட ஈடு பெற்றுக் கொடுத்திருக்கிறார். வெள்ளியங்கிரியும் அவரது மனைவியும் அப்பாவிகள். விவரம் எதுவுமில்லை. கூரை வேய்ந்த வீடு. அதன் மீது இரும்புத் தகரத்தை அடுக்கியிருந்தார்களாம்.

கடந்த வாரத்தில் ஒரு நாள் வீட்டை பூட்டிவிட்டுச் கணவனும் மனைவியும் வேலைக்குச் சென்றுவிட்டார்கள். பிள்ளைகள் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென தீப்பிடித்துவிட்டது. அந்தக் குடும்பத்தில் எனக்கு யாரையும் தெரியாது. ஆனால் மாலையில் அழைத்த பாலு, சில நிழற்படங்களை அனுப்பி வைத்து ‘முற்றாக எரிந்து போய்விட்டது; அவர்களிடம் மாற்றுத்துணி கூட இல்லை. நிசப்தம் வழியாக உதவ முடியுமா?’ என்றார். பாலு நிசப்தம் வாசகர். பரோபகாரி. எரிந்து போன வீட்டுக்கு அடுத்த தெருவில் வசிக்கிறார்.அடுத்தநாள் காலை வரைக்கும் அவகாசம் கேட்டுக் கொண்டேன். அதற்குள் நண்பர்கள் சிலர் வழியாக அந்தக் குடும்பம் குறித்து விசாரித்துவிடலாம் என்ற எண்ணம் இருந்தது. விசாரித்தவர்கள் அத்தனை பேருமே ‘அப்பாவி குடும்பம்’ என்றார்கள். வீட்டில் குழந்தைகளுக்கு ரேஷன் அரிசி சாதம் தவிர எதுவுமில்லை என்றார்கள். பாலுவைத் திரும்ப அழைத்து ‘அந்தக் குடும்பத்துக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொடுத்துவிடலாம்’ என்று சொல்லியிருந்தேன்.

அடுத்த நாளே பாலுவும் அவரது மனைவியும் கடைக்குச் சென்று குக்கர் உட்பட பாத்திரங்கள், பாய், தலையணை உள்ளிட்ட வீட்டிற்கு தேவையான பொருட்களை பதினெட்டாயிரம் ரூபாய்க்கு எடுத்து வைத்துவிட்டு அழைத்தார்கள். கடையில் காசோலையைக் கொடுத்துவிட்டு இன்னுமொரு ஆயிரத்து ஐநூறு ரூபாய்க்கு அடுத்த ஒன்றிரண்டு நாட்களுக்குத் தேவையான மளிகை, குழந்தைகளுக்கான நோட்டு புத்தகங்கள்- அவர்களின் பள்ளிப் புத்தகங்கள், பை என முற்றாக தீக்கிரையாகிவிட்டது.

பொருட்களை வண்டியில் ஏற்றிய வண்டியுடன் கிளம்பினோம். குடிசை முற்றும் எரிந்து பிறகு ஒரு பிடி சாம்பல் மட்டுமே மிஞ்சியிருந்தது. அப்பொழுதுதான் அந்தக் குடும்பத்தையும் முதன்முதலாகச் சந்தித்தோம்.

‘எப்படி எரிஞ்சுது’ என்ற போது அவர்களுக்கும் சரியான பதில் தெரியவில்லை. பூட்டிவிட்டு வழக்கம் போல வேலைக்குச் சென்றவர்கள் தகவல் கேட்டு வந்து பார்க்கும் போது எல்லாம் கருகி பூப்பூத்துவிட்டது. சூடு தகிக்கும் அந்தப் பரப்பில் எதுவும் மிஞ்சியிருக்கவில்லை. தீயணைக்கும் வண்டி வருவதற்கு சரியான பாதை இல்லாததால் அவர்களாலும் வந்து சேர முடியவில்லை. வண்டியில் இருந்த பாத்திரங்களைப் பிரித்து அவர்களிடம் கொடுத்துவிட்டு, குழந்தைகளிடம் தைரியமாக இருக்கச் சொல்லிவிட்டு வெள்ளியங்கிரியின் மனைவியிடம் ‘இப்போதைக்கு இந்த உதவியைச் செய்கிறோம்; சிறுகச் சிறுக சேர்த்ததெல்லாம் தீயில் போய்விட்டது என்று அரசினை அணுகி வீடு கட்டித் தரச் சொல்லி கேளுங்கள். அவர்கள் செய்யாவிட்டால் அதற்கான ஏற்பாட்டையும் செய்து தருகிறோம்’ என்று சொல்லிவிட்டு வந்திருக்கிறோம். பாத்திரங்களை வீட்டிற்கு அருகாமையில் இருக்கும் வீட்டில் வைத்திருக்கிறார்கள். 

மளிகைப் பொருட்களை அருண் கொண்டு போய் கொடுத்துவிட்டார். குடும்பமே பேயறைந்தது போல இருந்தது. அந்தப் பெண்மணி நான்கு பவுன் நகை வைத்திருந்தாராம். அந்தப் பெண்ணுக்கு அதுதான் பெரும் சொத்து. இருந்த இடம் தெரியவில்லை. அதிர்ச்சி இல்லாமலா இருக்கும்? அவர்களிடம் பேசுவதற்கும் கூட சொற்கள் இல்லை.  உடுக்கை இழந்தவன் கை போலத்தானே உதவியும் இருக்க வேண்டும்? பெற்றவர்களுக்காக இல்லையென்றாலும் அந்தக் குழந்தைகளுக்காக உதவ வேண்டியதில்லையா? இந்த மார்கழிக் குளிரில் போர்த்திக் கொள்ளக் கூட போர்வை இல்லை. அதை வாங்கித் தர வேண்டியது கடமை. அப்படித்தான் அந்தக் கணத்தில் தோன்றியது.

பொதுவாக, ஒரு குடும்பத்துக்கு வெள்ளம், மழை போன்ற பேரிடரின் போது அரங்கேறும் இழப்புக்கும், இத்தகைய தனிப்பட்ட சம்பவங்களில் நிகழும் இழப்புக்கும் பெரும் வித்தியாசம் இருக்கிறது. பேரிடர் சமயங்களில் யாரோ தனிப்பட்ட சிலர் மட்டும் பாதிக்கப்படுவதில்லை. நம்மைப் பார்த்து அடுத்தவரும் அடுத்தவரைப் பார்த்து நாமும் ஆறுதல் அடையும் வாய்ப்பிருக்கிறது. ஆனால் இத்தகைய தனிப்பட்ட இழப்புகள் நிராதரவான நிலையை உருவாக்கிவிடும். ‘நமக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்குது?’ என்று கதற வைத்துவிடும். அப்படியான சூழல்தான் அந்தக் குடும்பத்துக்கு.

அந்தக் குடும்பத்தினர் மொத்தமாக இரண்டு மூன்று வார்த்தைகள் கூடப் பேசவில்லை. சுற்றியிருந்தவர்கள்தான் கேட்கிற கேள்விக்கெல்லாம் பதில்களைச் சொன்னார்கள். அரசு தாமஸ் அண்டை வீட்டாரிடம் ‘நல்லா பார்த்துக்குங்க’ என்றார். கார்த்திகேயன் ஒவ்வொருவராகச் சென்று பேசிவிட்டு வந்தார். மிகப்பெரிய துக்கம் அவர்களுக்கு. மீண்டு வர பல வருடங்கள் ஆகக் கூடும். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அவ்வப்போது சில முறை சென்று பார்த்துவிட்டு வர வேண்டும் என நினைத்துக் கொண்டேன்.

அண்டைவீட்டார் உதவக் கூடும். அரசு கூட ஏதேனும் இழப்பீடு தரக் கூடும். அப்படி ஒருவேளை உதவவில்லையென்றால் சிற்சில உதவிகளைச் செய்து கை தூக்கி விட்டுவிடலாம்.

நாங்கள் கொஞ்ச நேரம் அங்கே இருந்தோம். நன்றியெல்லாம் அவர்களுக்குச் சொல்லத் தெரியவில்லை. அவர்களுக்கு அது தெரியவும் தெரியாது. ஆனால் நிச்சயமாக மனதுக்குள் நினைத்திருப்பார்கள். அந்த நன்றி நம் எல்லோருக்குமானது!

Dec 12, 2019

மதமே பிரதானமா?

குடியுரிமை மாற்றுச் சட்டம் மக்களவையில் நிறைவேறினாலும் கூட மாநிலங்களவையில் தோற்கடிப்பட்டுவிடும் என்று நிறையப் பேர் நம்பிக்கையாகச் சொல்லியிருந்ததை அடுத்து நேற்று ராஜ்யசபா விவாதங்களையும் வாக்கெடுப்பையும் கவனித்துக் கொண்டிருந்த போது கடைசியில் பாஜக வெற்றிகரமாக நிறைவேற்றிவிட்டது. 

குடியுரிமை மாற்றுச் சட்டம் (Constitutional Amendment Bill) தேசிய குடிமக்கள் பதிவேடு (National Register of Citizens) ஆகிய இரண்டையும் இணைத்துப் புரிந்து கொள்ள வேண்டும். இரண்டுமே நெருங்கிய தொடர்பு கொண்டவை. இப்பொழுது நிறைவேற்றப்பட்டிருக்கும் குடியுரிமை மாற்றுச் சட்டத்தில் - ‘பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசத்திலிருந்து குடியேறக் கூடிய- இசுலாமியர்கள் தவிர்த்த பிற மதத்தினர் இந்துக்கள், கிறித்துவர்கள், பாரசீகர்கள், புத்தம் உள்ளிட்ட மதத்தினர் இந்தியாவுக்குள் வந்து ஐந்து வருடங்கள் ஆகியிருந்தால் அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட்டுவிடும்’. முன்பு இவர்கள் சட்டத்துக்கு புறம்பானவர்களாக கருதப்பட்டவர்கள். அப்படியே குடியுரிமை வழங்குவதாக இருந்தாலும் பதினோரு வருடங்கள் காத்திருக்க வேண்டும்.  இனி அவர்களுக்கு ஐந்து வருடங்களில் இந்தியக் குடியுரிமை வழங்கப்பட்டுவிடும். இது உள்ளே வருகிறவர்களை இந்தியக் குடிமகன்/மகள்களாக மாற்றுவதற்கான சட்டம்.

மதங்களின் பட்டியலில் இசுலாமியர்களை விட்டுவிட்டார்கள். ‘ஏன் இசுலாமியர்களை மட்டும் விட்டு வைத்திருக்கிறீர்கள்?’ என்று கேள்வி கேட்டால்  ‘பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்றுமே இசுலாமிய நாடுகள் அதனால் இசுலாமியர்களுக்கு குடியுரிமை கொடுக்க வேண்டியதில்லை’ என்று பதில் சொல்கிறார்கள். சரி இசுலாமியர்களை விட்டுவிடலாம்- ஈழத்தமிழர்கள் இலங்கையில் மைனாரிட்டிகள், அங்கு புத்தமதத்தினர்தான் பெரும்பான்மை; இந்துக்கள் சிறுபான்மையினர்தான். அடித்து துவம்சம் செய்கிறார்கள். இசுலாமிய நாட்டு இந்துக்களுக்கு வழங்கும் இதே சலுகையை ஈழத்தமிழர்களுக்கு ஏன் தரவில்லை என்று எழுப்பப்படும் கேள்விக்கான பதில் எங்கும் தென்படவில்லை. மலையகத் தமிழர்களில் கணிசமானவர்கள் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு குடியேறிய பூர்வகுடிகள் என்பதுதான் வரலாறு. வடக்கில் அண்டை நாட்டினர் அனுமதிக்கப்படுவது போலவே தெற்கிலும் அனுமதிக்க வேண்டியதில்லையா? ஆனால் அனுமதிக்கவில்லை. இதில் மனிதாபிமானம் என்பதெல்லாம் மேம்போக்காகச் சொல்லுகிற வாதம். மதம்தான் பிரதானம்.

இந்தச் சட்டத்துக்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் கடுமையான போராட்டங்கள் ஆரம்பமாகியிருக்கின்றன. என்ன காரணம் என்று பார்த்தால் அவர்கள் தங்களது உரிமைகளை குடியேறிகள் பறித்துக் கொள்வார்கள் என்று பதறுகிறார்கள். கல்வி, வேலை வாய்ப்புகளில் தங்களுக்கான இடங்களை அடுத்தவர்கள் பறிப்பார்களே என்று வீதிக்கு வந்துவிட்டார்கள். இலட்சக்கணக்கில் வெளிநாட்டினர் குடியேறினால் தங்களுடைய கலாச்சாரத் தனித்தன்மை பறிபோகும் என்று பயப்படுகிறார்கள். மதத்தின் பெயரால் அந்நியர்களை உள்ளே அழைத்து வந்து, அவர்களுக்கு தங்களின் உரிமைகளைத் தருவதற்கு அவர்கள் தயாராக இல்லை. தற்போதைக்கு சில மாநிலங்களுக்கு விலக்கு அளித்திருக்கிறார்கள். போராட்டங்களைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக காஷ்மீரைப் போலவே வடகிழக்கு மாநிலங்களில் இராணுவம் குவிக்கப்பட்டிருக்கிறது; இணையத் தொடர்பைத் துண்டித்திருப்பதாகச் செய்திகளில் காட்டுகிறார்கள்.

வடகிழக்கில் எழும் எதிர்ப்புக்கும் தமிழகத்தின் எதிர்ப்புக்கும் வித்தியாசமிருக்கிறது. அங்கே அடுத்தவர்களை உள்ளே அனுமதிக்காதீர்கள் என்கிறார்கள்; இங்கே தமிழர்களையும் அனுமதியுங்கள் என்கிறார்கள். அப்படித்தான் முரண்பாடுகள் இருக்கும். இந்தியா மாதிரியான பரந்த தேசத்தில் ஒவ்வொரு பகுதிக்கும் பிரச்சினை மாறுபடுகிறது; குரல்களின் தொனி மாறுகிறது. அதைத்தான் வேற்றுமையில் ஒற்றுமை என்கிறோம். ஆனால் எல்லாவற்றையும் ஒற்றைப்படையாக ‘ஒரே நாடு; ஒரே கல்வி; ஒரே மதம்’ என்று சாயம் பூசுவதை இந்த தேசத்தின் அரசியலமைப்புக்கு முற்றும் முரணானது என்கிற குரல்கள் எழுப்பப்படுகின்றன. அது சரியான குரல்கள்தான்.  Rome is not built in a day என்பது போலவே இந்திய ஜனநாயகக் குடியரசு என்பதும் ஒற்றை நாளில் கட்டியெழுப்பப்படவில்லை. சிதறிக் கிடந்த ராஜ்ஜியங்கள், சிற்றரசுகள், பேரரசுகள் என சகலமும் ஆங்கிலேயர்களின் கட்டுக்குள் வந்து, இருநூறாண்டுகாலம் அவர்களுடன் போராடி பெற்ற சுதந்திரத்துக்குப் பிறகு ஒருங்கிணைத்து கட்டி எழுப்பி ஒவ்வொரு செங்கல்லாக அடுக்கிக் கொண்டிருக்கும் போது எல்லாமே சில்லு சில்லாக சிதறுவதைப் போல நடவடிக்கைகள் இருக்கும் போது பதற்றமடைவது இயல்புதானே?

ஆனால் அப்படி பதறுகிற குரல்கள் நசுக்கப்பட்டுவிடும். இன்றைக்கு கூட ஊடகங்களை நாசூக்காக எச்சரிக்கும் வகையில் ஒரு அறிவிப்பை மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. ஆனால் தமிழகத்தில் அதெல்லாம் அவசியமே இல்லை. ஏற்கனவே அவை அடங்கிய குரலில்தான் பேசிக் கொண்டிருக்கின்றன. இன்றைக்கு குடியுரிமை மாற்றுச் சட்டத்தைப் பற்றிய விவாதங்களைவிடவும் ரஜினியின் பிறந்தநாள், ஆபாச படங்களைப் பகிர்ந்தவர்கள் கைது ஆரம்பம் என மக்களின் கவனத்தை மாற்றுவதிலேயேதான் குறியாக இருக்கின்றன.

குடியுரிமை மாற்றுச் சட்டத்தைப் போலவே இன்னொரு சட்டமான தேசிய குடிமக்கள் பதிவேடு  அஸ்ஸாம் மாநிலத்தில் மட்டும் முன்பிருந்தே அமுல்படுத்தப்பட்டிருக்கிறது. பக்கத்து நாடுகளிலிருந்து வந்து குடியேறிய மக்களை அடையாளம் கண்டறிவதற்காக (குறிப்பாக பங்களாதேஷ்) 1971 க்கு முன்பாக இருந்தே தாங்கள் இந்தியர்கள்தான் என்பதற்கான ஆவணத்தை வழங்க வேண்டும் என்பதுதான் அதன் முக்கிய அம்சம். இந்தச் சட்டத்தை இனி நாடு முழுவதும் அமுல்படுத்தப் போவதாகச் சொல்கிறார்கள். இவை இரண்டும் சேர்ந்து இந்த தேசத்தை ‘இனத்தூய்மை’ செய்வதற்கான முன்னெடுப்புகளைச் செய்கின்றன என்றுதான் பதறுகிறவர்களில் பெரும்பாலானவர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

இனத்தூய்மை என்பதன் அர்த்தமும் ஆழமும் புரியாதவர்கள் இணையத்தில் தேடிப் பார்க்கலாம். 

1971க்கு முன்பாகவே இந்தியன்தான் என்பதற்கான ஆதாரத்தைக் கேட்டால் இந்த நாட்டில் எத்தனை கோடி மக்களால் கொடுக்க முடியும் என்று தெரியவில்லை. பொதுவாகவே, மதம், இனம் போன்ற குறிப்பிட்ட, அபாயகரமான அம்சங்களைக் கொண்டு மக்களை வகைப்படுத்துவது மிகப்பெரிய ஆபத்தைக் கொண்டு வருவதற்கான வாய்ப்புகளை உருவாக்குகின்றன. கோடிக்கணக்கான மக்களை மதத்தின் அடிப்படையில் ‘நீ வேற’ என்று அடையாளப்படுத்துவது ஒருவிதமான அச்ச உணர்வையும் பதற்றத்தையும் உருவாக்கும். அது பகைமையையும் வளர்க்கும். அதுவும் மிக மெல்லிய இழையாகப் பின்னிய நூறு கோடி மக்கள் வாழும் இந்தியா போன்ற பெரிய தேசத்தில் இத்தகைய ‘சென்ஸிடிவான’ விஷயங்களை சர்வசாதாரணமாக அடுத்தடுத்து நடத்திக் கொண்டிருப்பது அச்சமூட்டுகிற செயல். அதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள். 

Dec 10, 2019

உதவி இயக்குநர்

ஒருவரை நேரில் பார்த்து அவர் என்ன தொழில் செய்கிறார் என்று சொல்ல முடியுமா என்றால் அது அவ்வளவு எளிதான காரியமில்லை. ஆனால் வடபழனி, அசோக் நகர், வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் சிலரைப் பார்த்தால் ‘இவர் சினிமாவில் இருக்கிறார்’ என்று கணித்துவிட முடிகிறது. இப்பொழுது ‘ஓலா’வில் பைக் பதிவு செய்து கொள்ளலாம். பேருந்தை விட சற்றே அதிகம்- ஆட்டோவை விட மிகக் குறைவு. முப்பது ரூபாய்க்கெல்லாம் பயணம் செய்துவிட முடிகிறது. கடந்த வாரம் சென்னை சென்றிருந்த போது அப்படித்தான் பதிவு செய்தேன். 

தலை நரைத்த ஒரு நபர் வந்தார். ஏறி அமர்ந்து சில நிமிடங்களுக்குப் பிறகு ‘நாள் பூராவும் வண்டி ஓட்டுவீங்களா?’ என்றேன். 

‘இல்லைங்க..பத்து மணிக்கு ஆபிஸ்...அதுவரைக்கும் ஓட்டுவேன்’ என்றார்.  அவருக்கு சந்து பொந்துகள் எல்லாம் தெரிந்திருந்தது. சொந்த ஊர் என்ன என்றெல்லாம் பொதுவான கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தேன். பதிலைச் சொல்லிவிட்டு திருப்பி என்னைக் கேள்விகளைக் கேட்டார். இது வழக்கத்திற்கு மாறானது. என்னதான் பழகினாலும் ஆட்டோ, டாக்ஸி ஓட்டுநர்கள் முதல் பயணத்தின் போது நம்மிடம் கேள்விகளைக் கேட்கமாட்டார்கள். 

பைக்கை ஓட்டிக் கொண்டிருந்தவருக்கு நாற்பதுகளைத் தாண்டிய வயது. தலை நரைத்திருந்தது. குளித்து நெற்றியில் திருநீறு பூசியிருந்தார். ஏதோவொரு குக்கிராமத்துக்காரர். சென்னை வந்து கிட்டத்தட்ட முப்பது வருடங்கள் கடந்துவிட்டதாகச் சொன்னார். நான் குறுக்குக் கேள்விகளைக் கேட்டுக் கொண்டேயிருந்தேன். 

ஒரு கட்டத்தில் ‘நீங்க என்ன நிருபரா?’என்றார். அவர் இயக்குநர் ஒருவரிடம் உதவியாளராக இருக்கிறார். மூன்று படங்களை இயக்கியவர் அந்த இயக்குநர். ஒரேயொரு படம் மட்டும் வணிக ரீதியில் வெற்றி என்றார். ஆனால் அந்தப் படத்தின் பெயரைக் கூட நான் கேள்விப்பட்டிருக்கவில்லை. அவருடைய அப்பா இயக்குநராக இருந்தாராம். அதனால் இவரும் நூல் பிடித்து சினிமாவுக்கு வந்துவிட்டார். இரண்டு மூன்று பேர்களை உதவியாளராக வைத்திருக்கிறார். அதில் பைக்காரரும் ஒருவர். சொற்ப சம்பளம். திருமணமாகி பிள்ளைகள் இருக்கிறார்கள். பள்ளிக்கூடம் செல்கிற வயது. வீட்டு வாடகை, கல்விச் செலவு என்று எல்லாமும் ஒரு வழி செய்து கொண்டிருக்கிறது. வருமானத்தைப் பெருக்க காலை ஆறு மணிக்கு பைக் எடுக்கிறார். மாலை அலுவலகம் முடிந்த பிறகு மூன்று மனி நேரம் ஓட்டுகிறாராம்.

பைக்காரரின் இயக்குநர் பற்றி துருவித் துருவிக் கேட்கவும்- என்ன துருவித் துருவி- அடுத்த படம் என்ன செய்யப் போகிறார், நடிகர் யார் என்றுதான் கேட்டேன். அதுவே அவருக்கு பயத்தை உருவாக்கிவிட்டது. ‘சார் எங்கேயாச்சும் வெளியில் தெரிஞ்சா எனக்கு பிரச்சினை ஆகிடும்’ என்றார். ‘அட அதெல்லாம் ஒண்ணுமில்லைங்க...சினிமாவில் எனக்கு சில நண்பர்கள் இருக்காங்க..’ என்றேன். அதன் பிறகு அவர் துருவித் துருவிக் கேட்க ஆரம்பித்துவிட்டார். தன் கஷ்ட ஜீவனத்தை வெளிப்படையாகச் சொல்லாமல், உள்ளேயும் மறைத்துவிட முடியாமல் அவர் திணறுவதாகத் தோன்றியது. 

உதவி இயக்குநர்கள் பற்றி எத்தனையோ கட்டுரைகளும் கதைகளும் எழுதப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. ஆனாலும் அதன் பரிமாணங்கள் மட்டும் பிடிபடுவதேயில்லை. சென்னையின் சில பகுதிகளில் எதிர்ப்படுகிறவர்களைப் பார்த்தால் ‘இவர் சினிமாவில் இருக்கிறார்’ என கணித்துவிட முடிகிறது என்று சொன்னேன் அல்லவா? அது எப்படி என்றால் சொல்லி வைத்தாற் போல அவர்களது கண்களின் வழியே ஒரு கனவைக் கண்டடைந்துவிட முடியும். உலகின் உச்சாணியை தமது சினிமாவின் வழியாக அடைந்துவிட முடியும் என்கிற நம்பிக்கையோடு ஓடிக் கொண்டிருப்பார்கள். பேச்சுக் கொடுத்தால் அது இன்னமும் உறுதிப்பட்டுவிடும். 

விஸூவல் கம்யூனிகேசன் படித்துவிட்டு பணக்கார வீட்டிலிருந்து வந்து கையில் காசும், ஓட்ட பைக்கும், லேப்டாப்புமாகச் சுற்றுகிற இளைஞர் கூட்டம் ஒரு பக்கம் என்றால், ஏதோவொரு கிராமத்திலிருந்து வந்து நான்கைந்து நண்பர்களுடன் சேர்ந்து புத்தகங்களை வாசித்துவிட்டு, கிடைத்த காசில் பசியாறிவிட்டு ‘எப்பவாச்சும் ஒரு படம் செஞ்சுடுவேன்’ என்று திரியும் இன்னொரு கூட்டம் என தமிழ் சினிமா இரு தரப்பையும் கலந்து அலைய விட்டுக் கொண்டிருக்கிறது. 

‘சினிமாவில் எல்லாமே ஒரு படத்தோட வெற்றியில்தான் இருக்கு. ஒரேயொரு படம் ஹிட் ஆகிட்டா போதும்...ஒரே நைட்டுல லைஃப் மாறிடும். கார்ல போவோம்; ஸ்டார் ஓட்டல்ல தங்குவோம்’ என்று சொல்வார்கள். பைக்காரரும் இம்மிபிசகாமல் அதையே சொன்னார். அப்படியொரு வெற்றிக் கனவுதான் சினிமாவுக்குள் வருகிறவர்களை இழுத்துக் கொண்டேயிருக்கிறது. 

சினிமா ஒரு கனவுலகம் என்று சொன்னால் அது பலரும் சொல்லிவிட்ட ஒரு க்ளிஷேதான். ஆனால் அதுதான் நிஜம். அந்த வண்ணக் கனவுலகம் எத்தனையோ பேர்களை உள்ளே இழுத்துக் கொண்டேயிருக்கிறது. ஒரு முறை சினிமாத்துறைக்குள் வந்துவிட்டவர்கள் மாயக்கட்டத்தில் சிக்கியவர்களைப் போலத்தான் எனத் தோன்றும். ‘இதை விட்டுட்டு போறேன்’ என்று சொல்லிவிட்டு போக முடியாமல் அதற்குள்ளேயே உழன்று கொண்டிருப்பவர்கள், ‘ஊர்ல ஆறு மாசம் வேலை செய்வேன்; இங்க வந்து ஆறு மாசம் சான்ஸ் தேடுவேன்’ என்கிறவர்கள், ‘இன்னும் ஒரேயொரு ப்ரொட்யூசர்கிட்ட சொல்லிட்டு வொர்க் ஆகலைன்னா போய்டுவேன்’ என்கிறவர்கள் என சகலரும் இங்கே இருக்கிறார்கள். 

‘யுடியூப் சானல்காரங்க பேசியிருக்காங்க..அது மட்டும் க்ளிக் ஆகிட்டா எனக்கான விசிட்டிங் கார்ட் ஆகிடும்’என்பவர்கள், ‘அந்த நடிகர் கதை கேட்கிறேன்னு சொல்லியிருக்காரு’ என்பவர்கள், ‘நீங்க எழுதுவீங்களா? நாம சேர்ந்து வொர்க் செய்வோமா’ என்பவர்கள், ‘ப்ரொட்யூசர் ஓகே சொல்லிட்டாரு..அடுத்த வாரம் ஆபிஸ் போட்டுடலாம்’ என்பவர்கள் என எல்லோருக்கும் இங்கே ஏதாவதொரு கொக்கி இருந்து கொண்டேயிருக்கிறது. அந்தக் கொக்கியிலிருந்து விலகி வேறொரு துறைக்குச் செல்வதெல்லாம் அவ்வளவு எளிதில்லை என்றுதான் தோன்றுகிறது.

பைக்காரரிடம் ‘நீங்க கதை வெச்சிருக்கீங்களா?’ என்றேன்.

‘மூணு கதை இருக்கு சார்...எல்லாமே பவுண்டட். ஒரு எழுத்து கூட மாத்த வேண்டியதில்லை...ஆனா இப்போ எல்லாம் யூத்கிட்டத்தான் ப்ரொட்யூசர்ஸ் கதை கேட்கிறாங்க’ என்று சலித்துக் கொண்டார். ‘யூடியூப்ல படம் பண்ணுறாங்க...ப்ரொட்யூசரைப் புடிச்சு ஓகே செஞ்சுடுறாங்க’ என்றார். ‘ம்’ கொட்டிக் கொண்டிருந்தேன்.  ‘ஆனா ஒண்ணு சார். நானும் கோபி நயினார் மாதிரி நானும் ஜெயிச்சுடுவேன்’ என்றார். இந்த நம்பிக்கைதான் அத்தனை உதவி இயக்குநர்களுக்குமான ஆக்ஸிஜன். 

தி.நகருக்கு முப்பத்தியேழு ரூபாய் ஆகியிருந்தது. என்னிடம் ஐம்பது ரூபாய் தாளாக இருந்தது. டீக்கடையில் சில்லரை வாங்கித் தருவதாகச் சொன்னார். ‘வாங்க டீ குடிப்போம்’ என்று சொல்லி குடித்தபடியே பேச்சைத் தொடர்ந்தோம். டீக்காசை நானே கொடுத்தேன். கிளம்பும் போது ‘உங்க வாட்ஸாப் நம்பர் கொடுங்க....என்னோட படம் அனுப்புறேன். பாருங்க’ என்றார். அறைக்கதவைத் திறப்பதற்கு முன்பாக இணைப்பை அனுப்பியிருந்தார். அதுவொரு யூடியூப் சானலுக்கான படம்.

Dec 6, 2019

என்கவுண்ட்டர்

என்கவுண்ட்டரில் நான்கு பேர்களும் கொல்லப்பட்டது குறித்து பலருக்கும் சந்தோஷம். காலையிலிருந்தே சமூக ஊடகங்களில் இதுதான் இன்றைய கொண்டாட்டமாகியிருக்கிறது. பிரியங்கா ரெட்டி கொல்லப்பட்டது பற்றி விலாவாரியாக செய்தி வந்த தினத்தில் ஏதோவொரு இனம்புரியாத பயம் பற்றிக் கொண்டது. இரவு நேரத்தில், ஆளரவமற்ற பகுதியில்- ஆணோ பெண்ணோ அந்நியர்களின் பிடியில் சிக்கிக் கொள்ளும் கணங்கள் எவ்வளவு கொடுமையானவை? ‘இவர்களின் பார்வையே சரியில்லை’ என்று தனது தங்கையிடம் சொன்ன போதே அந்தப் பெண்ணுக்கு சிக்கிக் கொண்டோம் என்கிற நடுக்கம் வந்திருக்கும். இவர்களிடமிருந்து எப்படித் தப்பிப்பது, எங்கே ஓடுவது என்று பதறியிருப்பார். ஒரு கட்டத்தில் தப்பிக்கவும் முயற்சித்திருப்பார். நான்கு முரட்டு ஆண்களிடம் இரவு நேரத்தில் ஓர் இளம்பெண் எப்படித் தப்பித்திருக்க முடியும்? அடித்து இழுத்துச் சென்றிருப்பார்கள். எல்லாவிதமான வன்முறையையும் பிரயோகித்திருப்பார்கள். அந்தச் சூழலை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.

குற்றத்தைச் செய்தவர்களைச் சுட்டுக் கொல்ல வேண்டும்; எரித்துக் கொன்றுவிட வேண்டும் என்கிற வேகமும் கோபமும் மிக இயல்பானது. எனக்கும் அப்படித்தான் இருந்தது. இன்று காலையில் அந்தச் செய்தியைப் பார்த்த போது கொஞ்சம் ஆசுவாசமாகவும் இருந்தது. அருமை என்றே நினைத்தேன். ஆனால் ஒரு சந்தேகம் மட்டும் அரிக்க ஆரம்பித்துவிட்டது. அவர்கள் நான்கு பேர்கள்தான் உண்மையான குற்றவாளிகளா? இனிமேல் ஒவ்வொரு குற்றத்திலும் காவல்துறையே தொடர்ச்சியாக முடிவெடுத்து தீர்ப்புகளை எழுதினால் என்ன ஆகும்? அந்த யோசனைதான்.

அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள் செய்யும் குற்றச்செயல்கள் பற்றி- அது எவ்வளவு பெரிய குற்றச் செயல்கள் என்றாலும் கூட- ஊடகங்கள் அதைப் பற்றி விரிவாக அலசுவதில்லை. விவாதங்கள் உருவாக்கப்படுவதில்லை. ‘நமக்கெதுக்கு வம்பு?’ என்கிற மனநிலையில் மக்களும் அலட்டிக் கொள்வதில்லை. கடந்த ஒன்றிரண்டு ஆண்டுகளில் மட்டும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்கொடுமை, அந்தச் செயல்களில் ஈடுபட்டவர்கள் மீதான நடவடிக்கைகள், அளிக்கப்பட்ட தண்டனைகள் குறித்தெல்லாம் யோசித்துப் பார்த்தால் எந்த தண்டனையுமே நினைவுக்கு வருவதில்லை. அதனால்தான் ஹைதரபாத்தில் நிகழ்ந்தது போன்ற ஊடக கவனம் பெற்ற சம்பவங்களில் எந்த வெளிப்படையான விசாரணையுமில்லாமல் நான்கு பேரைச் சுட்டுக் கொன்றுவிட்டு விசாரணை முடிக்கப்படுவது சரியான அணுகுமுறையா என்றுதான் மனம் யோசிக்கிறது.

இந்த நால்வரும்தான் குற்றவாளிகள் என்பது 100% உண்மையாக இருந்தால் சுட்டுக் கொன்றதில் தவறேயில்லை. சம்பவம் நடந்த இடத்தில் உயிரோடு எரித்துக் கொன்றிருந்தாலும் தகும். ஆனால் அதற்காக சட்டத்தை மாற்றி, அவசர வழக்காகக் கருதி, எவ்வளவு சீக்கிரம் விசாரிக்க முடியுமோ விசாரித்து தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். அதற்கான வழிமுறைகளை, சட்ட சீர்திருத்தங்களை அரசு மேற்கொள்ள வேண்டும். அதற்கான வலியுறுத்தல்களைச் செய்யலாம்.

என்ன சந்தேகமெனில், ஒருவேளை இத்தகைய குற்றச் செயலை அரசியல் அல்லது ஆளும் வர்க்கத்தில் செல்வாக்குப் பெற்றவர்கள் செய்திருந்து, தடுக்கமுடியாத விதத்தில் அதன் மீது ஊடக வெளிச்சமும் விழுந்த பிறகு ஏதேனும் நான்கு பேர்களைக் கணக்குக் காட்டுவதற்காக சுட்டிருந்தால் அதை எப்படி சரி என்று ஏற்றுக் கொள்வது? அப்படியெல்லாம் செய்யமாட்டார்கள் என்று அரசியல்வாதிகளையும், காவல்துறையையும் முழுமையாக நம்புகிறீர்களா? கேட்கவே நாதியில்லாத லட்சக்கணக்கான மக்கள் உலவும் நாடு இது. யாரை வேண்டுமானாலும் இழுத்துச் சென்று ‘சம்பவம்’ செய்துவிட்டு பொதுமக்களின் அழுத்தத்தை போக்கிவிட்டு கைதட்டலும் வாங்கிக் கொள்வதற்கான எல்லாவிதமான சாத்தியக்கூறுகளும் இருக்கின்றன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இன்று காலையில் சுட்டுக் கொல்லப்பட்ட நான்கு பேர்களும் தமது நிலைப்பாட்டை வெளிப்படையாக முன்வைக்க எந்தவிதமான சூழலும் உருவாக்கித் தரப்படவில்லை. ‘அவனுகளுக்கு என்ன நிலைப்பாடு? போட்டுத் தள்ளுறது சரிதான்’ என்றுதான் நம்மில் பலரும் நினைப்போம். அது சரிதான். ஆனால் அந்த நால்வரில் ஒருவன் ஏதோ காரணத்துக்காக சிக்க வைக்கப்பட்டிருந்தாலும் கூட பரிதாபமில்லையா? அப்படி சிக்க வைக்க வாய்ப்பேயில்லை என்று முழுமையாக நம்ப முடியுமா?

குற்றச் செயல் நிகழ்ந்த இடத்திலேயே நான்கு பேரையும் சுட்டுக் கொன்றது நிச்சயமாக பொதுவெளியில் ஒரு பயத்தை உருவாக்கும். ஆனால் இந்தியா மாதிரியான ஜனநெரிசல் மிகுந்த தேசத்தில் இத்தகைய பயங்கள் நிலையானவை அல்ல. அவை தற்காலிகமானவை மட்டுமே. நிர்பயா சம்பவம் நாடு முழுவதும் விவாதிக்கப்பட்டது. ஆனால் எத்தனை பேருக்கு நினைவில் இருக்கிறது? ‘செஞ்சுட்டு தப்பிச்சுக்கலாம்’ என்கிற தைரியத்தில்தான் பலரும் குற்றத்தைச் செய்கிறார்கள். ஹைதரபாத் சம்பவமும் கூட அப்படித்தான் கரைந்து போகும். இத்தகைய குற்றச் செயல்கள் ஒவ்வொன்றுக்கும் தண்டனை உறுதி செய்யப்பட வேண்டும். யார் செய்தாலும் சட்டங்களும் தண்டனைகளும் கடுமையாக இருக்கும் என்கிற பயம்தான் அவசியமே தவிர, நூறு சம்பவங்களில் ஒன்றில் மட்டும் நான்கு பேரைச் சுட்டுக் கொல்வது என்பது கடலில் கரைத்த பெருங்காயம் மாதிரியான விளைவையே உண்டாக்கும்.

அரசியல் செல்வாக்கு மிக்கவர்களுக்கு ஒரு மாதிரியான தண்டனை, விதவிதமான தப்பித்தல்கள், ஊடகங்களின் மெளனம், பேரமைதி கொண்ட மக்கள் என்றிருந்துவிட்டு ஹைதராபாத் சம்பவத்துக்கு மிக அதிகப்படியான சந்தோஷத்தையும் கொண்டாட்டத்தையும் காட்டுவது கூட தவறான முன்னுதாரணமாகத்தான் அமையும். திடீரென ஊடகக் கவனம் பெற்ற சம்பவங்களில் மக்களிடமிருந்து அழுத்தம் வரும் போது அதிலிருந்து தப்பிக்க அரசும் காவல்துறையும் யாரை வேண்டுமானாலும் பொதுவெளியின் கண்களில் காட்டிவிட்டு போட்டுத் தள்ளுவதற்கான சாத்தியங்களை சமூகம் உருவாக்கித் தருகிறது என்று கூட புரிந்து கொள்ளலாம். 

ஹைதராபாத் என்கவுண்ட்டரை எதிர்க்கிறேனா என்றால் இல்லை என்றே சொல்வேன். ஆனால் இது வெறும் கண்கட்டி வித்தையாக இருந்துவிடக் கூடாது; பொது சமூகத்தை ஏமாற்றும், அதன் கோபத்தை வடிகட்டுவதற்காக இத்தகைய சம்பவத்தைச் செய்துவிட்டு மறந்துவிடக் கூடாது என்றே விரும்புகிறேன். பரவலாக பயத்தை உண்டாக்கி, மனநிலை மாற்றத்தை நோக்கி நகர்த்தி, குற்றச் செயல்களைக் குறைப்பதற்கான வாய்ப்புகளையும், சட்டத்திருத்தங்களையும், நடைமுறை மாற்றங்களையும் உருவாக்க வேண்டும். புகார் அளிக்க வருபவரை அலட்சியப்படுத்தியதும் இதே சம்பவத்தில்தான் நடந்தது. ‘ஹைலைட்’ செய்யப்பட வேண்டியது அதுவும்தான். அதில் தொடங்கி குற்ற விசாரணைகளில், தண்டனை முறைகளில் மாற்றங்களைச் செய்யாவிட்டால் இத்தகைய சம்பவங்களில் ஒரு கணம் விசிலடித்து குதூகலிப்பது தவிர மற்ற அனைத்தும் வழமை போலவே அனைத்தும் தொடரவே வாய்ப்புகள் அதிகம். 

Dec 4, 2019

கொங்கும் அருந்ததியரும்

தமிழகத்தின் வடக்கு மாவட்டங்களில் வன்னியர்-பறையர் என்பதைப் போல தெற்கில் தேவர்-தேவேந்திர குல வேளாளர் என்று சாதியக் கட்டமைப்பு இருப்பது போல, மேற்கை எடுத்துக் கொண்டால் கொங்குவேளாளர்- அருந்ததியர் என்கிற கட்டமைப்பு. கொங்கு வேளாளர்கள் நிலங்களில் காலங்காலமாக ஊழியம் செய்து வரும் அருந்ததியர்கள் ஒப்பீட்டளவில் பறையர்களைவிடவும், பள்ளர்களைவிடவும் பல படிகள் கீழே இருக்கிறார்கள். எதில் ஒப்பீடு செய்வது என்றால் எல்லாவற்றிலும்தான் - கல்வி, வேலை வாய்ப்பு, வசதி என எதையும் ஒப்பிடலாம். வடக்கிலும் தெற்கிலும் தலித் மக்களிடையே இருக்கும் அரசியல் விழிப்புணர்வு மேற்கில் இருக்கும் அருந்ததிய மக்களிடையே இல்லை என்பதுதான் உண்மை நிலை. 

அருந்ததிய மக்களின் உரிமைகளை உரத்துச் சொல்லும் அரசியல் இயக்கங்கள் கூட எதுவுமில்லை. ஒன்றிரண்டு இயக்கங்கள், சிறு தலைவர்கள் இருந்தாலும் அவர்கள் வலுவற்றவர்கள். தேர்தல் அரங்கிலோ அல்லது அரசாங்கத்திடமோ உறுதியான உரிமை பேரங்களை நிகழ்த்துமளவுக்கு திறனற்றவர்கள். அப்படியான தலைவர்களும் இயக்கங்களும் வளரவேயில்லை என்பதைவிடவும் வளரவிடவில்லை என்பதுதான் வரலாற்று உண்மையாக இருக்கக் கூடும். 

கொங்குப்பகுதியில், ‘அவங்களுக்கு என்ன மேலே வந்துட்டாங்க’ என்று அருந்ததியர்களைச் சுட்டிக்காட்டி பேசுவதை மிக இயல்பாகக் கேட்க முடியும். அருந்ததிய இளைஞர்கள் பலரும் வெளியூர்களுக்கு வேலைக்குச் செல்கிறார்கள். பெரும்பாலும் சுற்றுவட்டாரத்தில் இருக்கக் கூடிய மில்களுக்குத்தான் வேலைக்குச் செல்கிறார்கள். வெளிப்படையாக சாதி தெரிந்தால் உணவு விடுதிகள், கடைகளில் ‘புழங்காத சாதியினரை’ வேலைக்கு வைத்துக் கொள்ளமாட்டார்கள். அந்தவிதத்தில் மில்களும், தொழிற்சாலைகளும் சற்று பொருத்தமானவை. இப்பொழுது பல அருந்ததிய இளைஞர்கள் பைக் வைத்திருக்கிறார்கள். செல்போன் வைத்திருக்கிறார்கள். அதை வைத்துக் கொண்டு ‘அவங்களுக்கு என்ன’ என்கிறவர்கள் அதிகம்.

வெறுமனே பைக் வைத்திருப்பதும், வீட்டில் தொலைக்காட்சி வைத்திருப்பதும்தான் சமூக முன்னேற்றமா? அருந்ததிய மக்களில் அடிப்படையான அரசியல், சமூகக் கட்டமைப்பு புரிந்த, தம் இன மக்களை சமூகநீதி அடிப்படையில் மேலே கொண்டு வர வேண்டும் என்கிற எண்ணம் மிகுந்த இளைஞர்கள் மிகக் குறைவு. அப்படியொரு விழிப்புணர்வு மேற்குப்பகுதியில் ஏற்படவே இல்லை என்பதுதான் பரிதாபமான உண்மையும் கூட.

கொங்கு மண்டலத்தில் ‘அருந்ததியரை நாங்கள் நன்றாகப் பார்த்துக் கொள்கிறோம்; எங்களுக்குள் எந்தப் பிரச்சினையுமில்லை’ என்று நிறையப் பேர் பேசுவதைக் கேட்க முடியும். இதை எழுதிய பிறகு குறைந்தபட்சம் நான்கைந்து கவுண்டர்களாவது ‘நாங்கதான் எங்கள் தோட்டத்தில் பணியாற்றிய பழனியின் பேத்தி திருமணத்தை நடத்தி வைத்தோம்’ ‘சுக்காவின் மகனைப் படிக்க வைத்தோம்’ என்றெல்லாம் எதிர்வினையாற்றுவார்கள். ஒவ்வொரு முறையும் எதிர்கொள்ளக் கூடிய எதிர்வினைதான் இது. தலைமுறை தலைமுறையாக தோட்டத்தில் பணியாற்றியவன் இன்னமும் தம் பேத்தியின் திருமணத்துக்கும், மகனின் படிப்புக்கும் அடுத்தவர்களின் கையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறான் என்கிற உண்மையை வசதியாக மறந்துவிட்டு அல்லது மறைத்துவிட்டு ‘இதையெல்லாம் செஞ்சு கொடுக்கிறோம் தெரியுமா’ என்பதுதான் வாதமாக முன்வைக்கப்படுகிறது. ஒருவகையில் இது உறிஞ்சுதல் இல்லையா?

‘நீங்க எல்லாம் வேலைக்கு போய்ட்டா நாங்க எப்படி விவசாயம் பண்ணுறது? பொழைக்கிறது?’ என்கிற கேள்வியின் நாசூக்கான வடிவங்களை பல வகைகளில் எதிர்கொண்டபடியே இருக்கிறோம். அருந்ததியர்கள் தேர்தல் ஒதுக்கீட்டின் வழியாக உள்ளாட்சிகளில் இடம் பெறுவது, திருமண மண்டபத்தில் அனுமதி கேட்பது என எல்லாமே பலருக்கும் ஒவ்வாமைதான். இதுவரை வரையப்பட்ட கோடுகளை விட்டு வெளியே கால் வைக்கிறார்கள் என்கிற பதற்றம் இருந்து கொண்டேயிருக்கிறது.  மறுக்க முடியுமா? ‘எங்க தாத்தன் காலத்துல செருப்பு கூட போடாம இருந்தவன் இன்னைக்கு பைக்கில் லிப்ட் கேட்கிற அளவுக்கு வளர்ந்துட்டான்’ என்றெல்லாம் ஏகப்பட்ட விடலைகள் எரிச்சல் அடைகிறார்கள். 

சமூக வளர்ச்சி, சமத்துவம் என்கிற சொற்கள் வெறுமனே பைக், செல்போன் என்பதில் இல்லை. அது பணத்தால் மட்டும் எடை போடப்படுவதில்லை. அவர்களுக்கான மரியாதை, சமூக அந்தஸ்து, சமூகத்தில் நிலவும் உரிமைகள் என பல காரணிகளைச் சார்ந்தது. ஒரு ஆதிக்க சாதி இளைஞனுக்கு கிடைக்கக் கூடிய எல்லாமும் ஒரு தலித்துக்கு கிடைக்கிறதா? இன்னமும் குறிப்பாகக் கேட்டால் ஒரு கவுண்டர் இன இளைஞனுக்கு கிடைக்கும் உரிமையும், சமூக அந்தஸ்தும் அருந்ததிய இளைஞனுக்கு கிடைக்கிறதா? இந்தக் கேள்விக்கு ஆம் என்ற பதில் கிடைக்கும் வரை இங்கு சமூக ஏற்றத்தாழ்வுகள் இருக்கின்றன என்றுதான் அர்த்தம். அதுவரைக்கும் என்னதான் ‘கவுண்டர்கள் நல்லவர்கள்’ என்று சொன்னாலும் ‘அவர்களை கமுக்கமாக அமுக்கியே வைத்திருக்கும் சாதிதான் இது’ என்பதுதான் கசப்பான உண்மையாக இருக்கும். 

இத்தகைய விமர்சனத்தை முன்வைத்தால் ‘அதான் நாங்க பிரச்சினையில்லாமல் இருக்கிறோமே? அப்புறம் ஏன் வம்பு பேசறீங்க?’ என்ற கேள்வி எழுப்பப்படக் கூடும். அவர்களிடம் ‘வீட்டுக்குள்ள விடுவீங்களா? அவர்களுக்கு நீங்கள் குடிக்கும் அதே டம்ளர்ல தண்ணி தருவீங்களா?’ என்று கேட்டால் அதிர்ந்து போவார்கள்.  பிரச்சினையில்லாமல் இருக்கிறோம் என்பதன் ஆழமான அர்த்தம்- அவர்கள் இன்னமும் தங்களுக்கு அடங்கியே இருக்கிறார்கள் என்பதுதான். 

‘வீட்டுக்குள் விட்டுவிட்டால் உரிமை கிடைத்துவிடுமா?’ என்கிற குறுக்குக் கேள்வி எழாது என நினைக்கிறேன். இது அடிப்படையான எளிய கேள்வி. அதே சமயம் பதில் சொல்ல விரும்பாத கேள்வி. துணிந்து அதற்கான பதிலை நம்மால் சொல்ல முடியுமென்றால் மட்டுமே சமூக சமத்துவம் என்பதன் நுனியையாவது பிடித்திருக்கிறோம் என்று அர்த்தம். அது வரைக்கும் ‘நாங்க நல்லவங்க’ என்று சொல்லிக் கொள்வது கூட சமூகத்தை ஏமாற்றுகிற சால்ஜாப்புதான். அருந்ததியர்கள் அமைதியாக இருப்பதால்தான் இவர்கள் அமைதியாக இருக்கிறார்கள் என்பதுதான் நிதர்சனம்.

இன்னமும் அப்பட்டமாகப் பேசினால் வடக்கிலும் தெற்கிலும் உரிமைகளை உரக்கக் கேட்கும் குரல்கள் மேற்கில் இல்லை என்பதுதான் கொங்குப்பகுதியில் பெரும்பாலானவர்களுக்கு நிம்மதியாக இருக்கிறது. வன்முறை அவசியமேயில்லை; ஆனால் மனமாற்றம் தேவையாகிறது. ஆனால் மனமாற்றம் இல்லாததால்தானோ என்னவோ யாராவது ‘இதெல்லாம்தான் வளர்ச்சியா?’ என்னும் போது பலரும் பதறிவிடுகிறார்கள். தேவையில்லாமல் குளறுபடிகளைச் செய்கிறார்கள் என்று கோபமாகிறார்கள். எங்கேயாவது யாராவது ஒன்றிரண்டு இடங்களில் துள்ளும் போது அவர்களை அடக்க, ஏவல் புரிய அரசும், ஆளும் வர்க்கமும், அதிகாரிகளும் இருக்கிறார்கள். இதுதான் கள நிலவரம். இதுதான் கள எதார்த்தம். 

Dec 2, 2019

இதனை இதனால்...

இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்

1330 குறட்பாக்களிலும் இது மனதுக்கு நெருக்கமானது. சிலரைப் பார்க்கும் போது இந்தக் குறள் ஏனோ மனதுக்குள் திரும்பத் திரும்ப ஒலிக்கும். எல்லோராலும் எல்லாக் காரியத்திலும் வென்றுவிட முடிவதில்லை. ‘இவனுக்கு இதுதான்’ என்று எங்கோ விதிக்கப்பட்டிருக்கிறது.

வேலூர் தொழில்நுட்பக் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கோவையில் நடைபெற்றது. எனக்கு நிறைய வேலைகள் இருந்தன. ஆனால் ஜி.விஸ்வநாதன் வருகிறார் என்பதால் எல்லாவற்றையும் விட்டுவிட்டு வந்திருந்தேன். அவருக்கு எண்பது வயதாகிறது. விக்கிப்பீடியாவைப் பார்க்காமல் அவரைப் பார்த்தால் எந்தவிதத்திலும் கணிக்க முடியாது. அறுபது வயது என்று கணக்கிட்டாலே அதிசயம்தான். அவரது பேச்சும் அப்படித்தான். எதையாவது பற்ற வைத்துவிடுவார்.

1984 ஆம் ஆண்டில் எம்.ஜி.ஆரின் ஆட்சிக்காலம். அப்பொழுது ஜி.விஸ்வநாதன் அமைச்சர். ‘எங்கள் ஊரில் ஒரு அரசு பொறியியல் கல்லூரி வேண்டும்’ எனக் கோரிக்கை வைக்கிறார். அரசிடம் பணமில்லை என்று சொன்ன எம்.ஜி.ஆர் ‘வேணும்ன்னா நீங்க காலேஜ் கட்டுங்க..நான் பர்மிஷனுக்கு வழி செய்கிறேன்’ என்கிறார். அன்றைக்கு வேலூரில் ஒரு வாடகைக் கட்டிடத்தில் கொட்டகையுடன் கூடிய கல்லூரியாகத் தொடங்கப்பட்டதுதான் இன்றைய வி.ஐ.டி. நேற்றைய சந்திப்பில் இதைச் சொன்ன ஜி.வி, ‘அப்போ மாசம் மொத்தமாவே இருபதாயிரம் ரூபாய் சம்பளம் கொடுத்தோம்’ என்றார். கல்லூரி முதல்வருக்கு மூன்றாயிரம் என்பது அதிகபட்ச சம்பளம். மொத்தப் பணியாளர்களுக்கும் சேர்த்து மாதம் இருபதாயிரம் ரூபாய் சம்பளத்தில் தொடங்கப்பட்ட கல்லூரி. இன்றைக்கு வேலூரில் மட்டும் மாதம் இருபது கோடி ரூபாய் சம்பளம் தருகிறார்கள். சென்னையில் ஒரு வளாகம் இருக்கிறது. அங்கே ஆறு கோடி ரூபாய். போபால், ஆந்திராவில் இருக்கும் வளாகங்களில் எவ்வளவு என்று தெரியவில்லை. மொத்தம் நாற்பத்தாறாயிரம் மாணவர்கள் படிக்கிறார்கள். 

வேலூர் தொழில் நுட்ப பல்கலைக்கழகம் இன்றைக்கு மிகப்பெரிய சாம்ராஜ்யம். சாம்ராஜ்யம் என்றால் பெரிய நிறுவனம் என்ற அர்த்தத்தில் இல்லை. இந்தியாவில் முதல் பத்து தனியார் கல்வி நிறுவனங்களைப் பட்டியலிட்டால் இதுவும் ஒன்று. சமீபத்தில்தான் Institution of Eminence பட்டியலில் இணைக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் எந்தவொரு தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்துடனும் எந்த வகையிலும் போட்டியிடத் தகுதியான கல்வி நிறுவனம் என்று உறுதியாகச் சொல்ல முடியும். இந்தியாவிலேயே மிக அதிகமான ஆராய்ச்சிக் கட்டுரைகளைப் பிரசுரம் செய்யும் கல்லூரி இதுதான். இதெல்லாம் முப்பத்தைந்து வருடங்களில் சாத்தியமாகியிருக்கிறது. ஒற்றைத் தலைமுறையில் அடைந்திருக்கும் வளர்ச்சி இது.

கூட்டத்தில் ஜி.வி. பேசியதைக் கேட்ட பிறகு கஸ்தூரி ஸ்ரீனிவாசன் ஆடிட்டோரியத்தின் - கோவை கஸ்தூரி மில்ஸ் ஸ்ரீனிவாசனின் வரலாறும் சுவராசியமானதுதான்; அதைத் தனியாகப் பேச வேண்டும்-  வளாகத்தில் தனியாக அமர்ந்து கடந்த முப்பதாண்டுகளில் ஜி.வி அடைந்திருக்கும் உயரத்தைத்தான் எண்ணிக் கொண்டிருந்தேன்.  ஒரு கவுன்சிலராக இருந்து பார்த்தால் கூட அதிகார போதை நம்மை விலக அனுமதிக்காது. ‘எத்தனை கோடி செலவானாலும் பரவால்ல...ஜெயிச்சுடணும்’ என்று வெறியெடுக்க வைத்துவிடும். ஆனால் அமைச்சராக இருந்தவர் அவர். நினைத்திருந்தால் இன்றைய காலகட்டம் வரைக்கும் கூட இருந்திருக்க முடியும். அரசியல், அதிகாரம், கரை வேட்டி என எல்லாவற்றையும் விட்டுவிட்டு கல்லூரி மட்டும்தான் என்று அதற்குள்ளேயே உழன்று கொண்டிருப்பதால் மட்டுமே இவ்வளவு பெரிய கல்வி சாம்ராஜ்யத்தை நிர்மாணித்திருக்கிறார் என்று தோன்றியது. 

மதிய உணவுக்குப் பிறகு குழுவாக நிழற்படம் எடுக்க வேண்டும் என்று அழைத்துக் கொண்டிருந்தார்கள். நிழற்படத்தைவிடவும் அவர் பேசியதை அசைபோடுவதிலேயே மனம் நிலைத்திருந்தது. எழுந்து செல்லவே இல்லை.

எத்தனையோ பேர் தொழில் ஆரம்பிக்கிறார்கள். ஆனால் புதிதாகத் தொழிலைத் தொடங்குகிறவர்கள் அத்தனை பேரும் வென்றுவிடுகிறார்களா என்ன? வெல்வதற்கு என ஏதோ ஒரு சூட்சமம் அல்லது சூத்திரம் இருக்கிறது. இல்லையா? தமது தொழிலை வெறுமனே பணம் சம்பாதிக்குமிடமாகப் பார்க்கிறவர்களால் அத்தகைய வெற்றியை ஒரு போதும் அடைய முடிவதில்லை. பணம் தன்னைத் துரத்த வைக்கும். எந்தவிதமான ஒட்டும் உறவுமின்றி அதன் பின்னால் ஓடிக் கொண்டிருக்கிறவர்கள் அர்த்தமில்லாத ஒரு வேட்டையை நிகழ்த்தியதைப் போல ஓய்ந்து போவார்கள் அல்லது தாம் துரத்திச் சென்றதை அடைந்த பிறகு இன்னொன்றை துரத்தத் தொடங்கிவிடுவார்கள். வெறுமனே materialistic ஆன துரத்தல்தான் அது.

சந்தர்ப்பவசத்தால் அல்லது தாம் விரும்பிய ஒன்றைத் தொடங்கிய பிறகு அதனுடன் தமக்கு உருவாகும் காதலே காலகாலத்துக்கும் நிலைத்த புகழுடன் கூடிய வெற்றியைத் தருகிறது. அத்தொழிலின் மீதான தமது காதலைக் கண்டறிவதுதான் சூட்சமம். ஜி.விஸ்வநாதன் அந்த மாதிரியான ரோல்மாடல். கல்வி நிறுவனம் தொடங்கினோம், சம்பாதித்தோம் என்றில்லை; இன்றைக்கும் எந்த ஊருக்குச் சென்றாலும் அங்கே முதலில் கல்லூரியின் முன்னாள் மாணவர்களைத்தான் சந்திக்கிறார். ஒரு கூட்டம் சேர்ந்துவிடுகிறது. பல ஊர்களில் முன்னாள் மாணவர்களின் வீடுகளில்தான் உண்கிறார். எத்தனை கல்வித்தந்தைகளுக்கு இது சாத்தியம்? கல்வி நிறுவனங்களைத் தொடங்குவது, வருமானம் பார்ப்பது தாண்டி காரை விட்டு கீழே இறங்காதவர்கள்தான் இங்கே அதிகம். 

ஜி.வி முன்னாள் மாணவர்கள் பெரும்பாலானவர்களை பெயர் சொல்லி அழைக்கிறார். அதுதான் பெரிய ஆச்சரியம்.

முன்பொருமுறை வி.ஐ.டி பற்றி பேசும் போது ‘காசு கொடுக்கிறதில்லையா? சும்மாவா படிக்க வெச்சாங்க’ என்று ஒருவர் விமர்சித்தார். காசு கொடுத்துதான் படித்தேன்; ஆனால் கொடுத்த காசுக்கு வஞ்சகமில்லாமல் உருமாற்றி வெளியில் அனுப்பினார்கள் என்று பதில் சொன்னேன். ஆயினும், அவர் கேட்ட கேள்வி அவ்வப்போது உறுத்திக் கொண்டேதான் இருக்கும். ஒரு பொருளுக்கான விலையைக் கொடுத்த பிறகும் ஏன் உணர்வுப்பூர்வமாக ஒன்றிணைய வேண்டும்? நேற்றைய நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்பாகக் கூட- ‘இவர் வர்றாருன்னா எதுக்கு ஒவ்வொரு ஊர்லேயும் இவ்வளவு பேர் கூடுறாங்க’ என்று யோசித்துக் கொண்டிருந்தேன். 

கூட்டத்தில் சிலர் ‘என் அத்தனை வளர்ச்சிக்கும் நீங்கதான் சார் காரணம்’ என்று மனதார பேசினார்கள். படிப்பைத் தாண்டி எதையோ ஊன்றியிருக்காவிட்டால் சுட்டாலும் அப்படிப் பேசத் தோன்றாது. 

அய்யாவுதான் நினைவுக்கு வந்தான். வேமாண்டம்பாளையம் பள்ளிக்கூடத்தில் முதல் மாணவன் அவன். அவனுடைய அப்பா மரமேறிக் கொண்டிருக்கிறார். இவனது மதிப்பெண்ணைத் தெரிந்து ஏதோவொரு தனியார் கல்வி நிறுவனத்தினர் வீடு தேடி வந்துவிட்டார்கள். ‘எல்லாமே ஃப்ரீ’ என்று கொக்கி போட்டார்கள். வீட்டில் இருப்பவர்களுக்கு விவரமில்லை. அய்யாவின் அண்ணனுக்கு அந்தக் கல்வி நிறுவனத்தில் சேர்க்க பெருவிருப்பம். சேர்த்துவிடும் முடிவுக்கு வந்துவிட்டார்கள். யதேட்சையாக அவர்களைச் சந்திக்க நேர்ந்து வி.ஐ.டியின் ‘ஸ்டார்ஸ்’திட்டம் பற்றிச் சொன்னேன். அத்திட்டத்தின்படி தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமப்புற அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஒரு பைசா செலவில்லை. அய்யாவு முயற்சித்தான். கிடைத்துவிட்டது. இப்பொழுது வி.ஐ.டியில் படித்துக் கொண்டிருக்கிறான். ஊருக்கு சென்று வரும் செலவு தவிர எதற்குமே காசு வாங்குவதில்லை. சில மாதங்களுக்கு முன்பாக அய்யாவுவைப் பார்த்தேன். ஆளே மாறியிருந்தான். இனி அவன் மேலேறிவிடுவான் என்று முழுமையாக நம்பத் தொடங்கினேன்.

இங்கே நம்மைச் சுற்றிச் சுற்றி ஏமாற்றுகிறவர்கள்தான் அதிகம். தமது உழைப்புக்கும் அதிகமான விலையை நிர்ணயித்துவிட்டு சிக்கியவுடன் ‘இனி எப்படி போனா எனக்கென்ன?’ என்கிற மனநிலை கொண்ட வியாபாரிகளை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் கல்வி என்பது வியாபாரமில்லை என்று நம்புகிறவர்கள் அரிது. ஒருவன் தம்மைத் தேடி வந்துவிட்ட பிறகு ‘நம்மிடம் வந்துவிட்டான். இனி எல்லாக்காலத்திலும் இவனைக் கைவிடக் கூடாது’ என்று நினைக்கிற எண்ணம் ஜி.வி மாதிரியான ஒரு சிலருக்கு மட்டுமே உண்டு. அதனால்தான் உணர்வுப்பூர்வமான பிணைப்பை உருவாக்கிக் கொள்கிறார்கள். கல்லூரி என்பது நான்கு வருடப் படிப்பு மட்டுமில்லை; அதன் பிறகும் கூட நீயும் நானும் ஒரே குடும்பம் என்று ஒவ்வொரு ஊராகச் சென்று புரிய வைத்துக் கொண்டிருக்கிறார். அதனால்தான் குடும்பம் குடும்பமாக முன்னாள் மாணவர்கள் வருகிறார்கள் என்று தோன்றியது. எண்பது வயதைக் கடந்த பிறகு எத்தனை பேர் இதைச் செய்து கொண்டிருக்கிறார்கள்? அப்படித்தான் ஜி.விஸ்வநாதனை நினைக்கும் போதெல்லாம் அந்தக் குறளும் நினைவுக்கு வந்துவிடுகிறது.