அறுபதுகளில் சீனாவும் கிட்டத்தட்ட இந்தியா போலத்தான். அடுத்த ஐம்பதாண்டுகளில் பொருளாதாரத்திலும், நாகரிகத்திலும், வளர்ச்சியிலும் நம்மைவிட வெகுதூரம் போய்விட்டார்கள். அப்படியான காலகட்டத்தில்- ஆணும் பெண்ணும் சகஜமாக பழகாத காலம்- கதை நிகழ்கிறது. ஹாங்காங்கில் ஒரு பழைய குடியிருப்பில் வாடகைக்கு வீடு தேடி ஓர் இளம் பெண்மணி வருகிறாள். அவள் நிறுவனமொன்றில் ஸ்டெனோவாக இருக்கிறாள். கணவனும் மனைவியும் மட்டும்தான். அந்த வீட்டுக்காரப் பெண்மணி வீடு கொடுக்க சம்மதித்துவிடுகிறாள். வீடு தேடி வந்த பெண்மணி கிளம்பும் போது அதே வீட்டுக்காக இன்னொரு ஆள் வீடு தேடி வருகிறான். அவன் பத்திரிக்கையாளனோ அல்லது எழுத்தாளனாகவோ இருக்கிறான்.
‘அடடா இப்போத்தான் வீட்டை அந்தப் பெண்ணுக்கு கொடுப்பதாக சம்மதித்தேன்...வேணும்ன்னா பக்கத்து வீட்டுல விசாரிங்க’ என்று சொல்கிறாள். அங்கே அவனுக்கு வீடு கிடைக்கிறது. அவர்களும் கணவனும் மனைவியும் மட்டும்தான்.
ஒரே நாளில் இரு குடும்பங்களும் குடி வருகின்றன. இயல்பாக நாட்கள் நகர்ந்து கொண்டிருக்க சிறு சிறு உரையாடல்கள், புன்னகைகளின் வழியே ஸ்டெனோவுக்கும், எழுத்தாளனுக்கும் ஒருவிதமான ஈர்ப்பு உருவாகிறது. மெல்ல நெருங்கி வருகிறார்கள். ஆனால் இவர்களுக்கு முன்பாகவே இருவருக்கும் தெரியாமல் அவர்களது இணையருக்கிடையில் முறையற்ற உறவு உருவாகிவிடுகிறது. அதனை இருவரும் தெரிந்து கொள்கிறார்கள். பத்திரிக்கையாளனின் மனைவி இவனைச் சீந்துவதே இல்லை. ஸ்டெனோவின் கணவன் வீட்டிலேயே இருப்பதில்லை. அவர்களின் முகம் கூட பார்வையாளன் மனதில் பதியும்படியாகக் காட்டப்படுவதில்லை. அவர்கள் இருவரும் உறவில் இருக்க, இவர்கள் இருவரும் நெருங்கிப் பழகுகிறார்கள். ஆனால் உடல் ரீதியிலான உறவு எதுவும் உருவாவதில்லை. இவன் அவளை நெருங்குவதற்கான முயற்சிகளைச் செய்கிறான். ஆனால் அவளோ ‘நாம அவங்க மாதிரி இல்ல’ என்று சற்றே விலகுகிறாள். இப்படியே தொடர்கிறார்கள். தட்டையான காதல்.
இருவருக்குமிடையில் காதல் இருக்கிறது. வெளிப்படுத்தப்படாத காமம் இருக்கிறது. ஆனால் அவர்களால் ஒரு போதும் எல்லை மீற முடிவதில்லை. அக்கம்பக்கமும் சூழலும் கூட முக்கியமான காரணம். அதையும் தாண்டி அவர்களுக்குள்ளாக தன்னியல்பாக இருக்கும் தயக்கமும் காரணம். காதல் என்றாலே கட்டிப்பிடிப்பது, கட்டிலை அடைவது என்கிற அந்நிய சினிமாவிலிருந்து விலகி முற்றிலும் வேறொரு தளத்தில் கைகளைப் பற்றிக் கொள்வதைக் கூட ஒரு மலரைத் தீண்டுவது போல காட்டியிருப்பதுதான் In the Mood for Love திரைப்படத்தின் தனித்துவம் என நினைக்கிறேன்.
பாதிப் படத்தைத் தாண்டிய போது சற்று சலிப்பு ஏற்படுத்துவதைப் போல சில கணங்கள் தோன்றியது உண்மை. ஆனால் ஏதோ இழுத்துப் பிடித்துக் கொண்டேயிருப்பது போன்ற பிரமையும் இருந்து கொண்டேயிருந்தது. அது படத்தின் காட்சிப்படுத்துதலாக இருக்கலாம்; ஒரேயிடத்தில் நிற்கும் கேமிராவின் பார்வைக்குள் வந்து போகும் பாத்திரங்களாக இருக்கலாம்; சில இடங்களிலேயே மொத்தப் படத்தையும் எடுத்திருந்தாலும் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு வெளிச்சம், பின்ணனி இசைக் கோர்ப்பு போன்றவையாக இருக்கலாம்; இப்படி இன்னமும் வேறு வேறு ‘இருக்கலாம்’களை திரைமொழியின் நுணுக்கம் தெரிந்தவர்கள், அதன் நுட்பம் தெரிந்தவர்கள் இன்னமும் விரிவாகச் சொல்லக் கூடும்.
சாதாரண பார்வையாளனாக கதையை கவனிக்கும் போது- முறையற்ற உறவுதான் என்றாலும் கூட அவர்கள் எதிர்கொள்ளும் கசப்புகள், வெளியில் துருத்தாத வலிகள், அவர்கள் இருவருக்கும் அவர்கள் மட்டுமே ஆறுதலாக இருக்கக் கூடும் என நமக்கு உருவாகும் நம்பிக்கை, இவையெல்லாம் இணைந்து அவர்கள் இருவரும் இணைந்துவிட மாட்டார்களா எனக் கடைசி கணம் வரைக்கும் இழுத்துச் சென்றுவிடுகிறது.
திரைப்படங்களை ஒவ்வொருவரும் ஒருவகையில் அணுகக் கூடும். என்னைப் பொறுத்தவரையில் கதையின் ஒற்றை வரியில்தான் என் மொத்த கவனமும் இருக்கும். அந்த ஒற்றை வரியைப் பிடித்துக் கொண்டு பாத்திரங்கள், துணைப் பாத்திரங்களின் உருவாக்கம், அந்தப் பாத்திரங்கள் எப்படி கோர்க்கப்பட்டிருக்கிறார்கள், ஒவ்வொரு பாத்திரமும் கதைக்கு எப்படி வலு சேர்க்கிறார்கள், அதற்காக இயக்குநர் கைக்கொண்டிருக்கும் உணர்வுப்பூர்வமான சம்பவங்கள் என்பதையெல்லாம் கவனிப்பதைத் தாண்டி நகர முடிவதில்லை. படம் முடிந்த பிறகும் இதில் எந்தக் காட்சியை நீக்கினால் படம் வலு குறையாமல் இருக்கும் என்றும் யோசிப்பதுண்டு. பெரும்பாலான திரைப்படங்களில் அப்படியான காட்சிகளை நாம் கண்டறிந்துவிடலாம்.
உதாரணமாக கைதி திரைப்படத்தின் விமர்சனங்களைப் பார்த்த போது சிலர், சில காட்சிகளைக் குறிப்பிட்டு ‘இந்தக் காட்சிகள் அவசியமற்று இருந்தன’ என்று எழுதியிருந்தார்கள். கைதி சுவாரசியமான படம். சற்றே யோசித்துப் பார்த்தால் மேற்சொன்ன விமர்சனம் சரி என்றுதான் தோன்றியது. ஆனால் வணிகரீதியில் அப்படியான சமரசங்கள் அவசியமாகின்றன. அதே சமயம் க்ளாசிக் என்று கொண்டாடப்படுகின்ற படங்களில் அப்படியொரு காட்சியை வெட்டி எடுப்பது மிகச் சிரமமான காரியமாக இருக்கும். அவ்வளவு நெருக்கமாக காட்சிகள் பின்னப்பட்டிருப்பதால்தான் அந்தப் படம் ஒரு செவ்வியல் தன்மையை அடைந்துவிடுகிறதோ என்று கூட எண்ணத் தோன்றுகிறது.
சுவாரசியம் என்பதையெல்லாம் தாண்டி, ஒரு தரமான திரைப்படத்திலிருந்து எதைக் கற்றுக் கொள்ளலாம் என்றால் இத்தகைய எழுத்து, கதை சார்ந்த நுணுக்கங்கள்தான். தரமான சிறுகதைகள், நாவலிலும் கூட இதே உத்தியைப் பயன்படுத்தித்தான் எடிட் செய்வார்கள். நல்ல வாசகர்கள் எழுத்தில் தேவையற்ற கச்சடாவைத் துல்லியமாகக் கண்டுபிடித்துவிடுவார்கள். அதே போல நல்ல பார்வையாளன் திரைப்படங்களில் ‘இவை அவசியமில்லை’ என்று கண்டறிந்துவிடுவான். அப்படியொரு நல்ல வாசகனாக, நல்ல பார்வையாளனாக உருமாறத்தான் நிறைய வாசித்துக் கொண்டேயிருக்க வேண்டியிருக்கிறது; நிறைய பார்த்துக் கொண்டேயிருக்க வேண்டியிருக்கிறது.
உணர்வுகளின் கொந்தளிப்புகளற்று, தட்டையான அதே சமயம் அழுத்தமான காதல் திரைப்படம் In the mood for love இது. இதுவும் பிபிசியின் இருபத்தொன்றாம் நூற்றாண்டின் சிறந்த நூறு படங்களின் பட்டியலில் உள்ள படம்.
1 எதிர் சப்தங்கள்:
// அதே சமயம் க்ளாசிக் என்று கொண்டாடப்படுகின்ற படங்களில் அப்படியொரு காட்சியை வெட்டி எடுப்பது மிகச் சிரமமான காரியமாக இருக்கும்.//
√
Post a Comment