Nov 14, 2019

ஃபாத்திமாக்கள்

சுதர்சன பத்மனாபன் என்னும் பேராசிரியர்தான் தன்னுடைய தற்கொலைக்குக் காரணம் என செல்போனில் குறித்து வைத்துவிட்டு  அந்த மாணவி இறந்திருக்கிறார். ஃபாத்திமா லத்தீப்.

வழக்கமான தற்கொலைகளைவிடவும், வழக்கமான கொலைகளைவிடவும் ஒரு இளம் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்வது மனதைச் சலனமடையச் செய்துவிடுகிறது. ஐஐடிதான் இந்தியாவின் மிகச் சிறந்த கல்வி நிறுவனம். அங்கே சேருவதற்கே கடும் போட்டி நிலவும் சூழலில் அந்த இளந்தளிர் எத்தனை கனவுகளுடன் காலடி எடுத்து வைத்திருக்கும்? எத்தனை வருடங்களாகத் தயாரிப்புகளைச் செய்திருப்பாள்?

ஃபாத்திமா குறித்தான செய்திகளை நேற்றிலிருந்து தேடி வாசித்துக் கொண்டிருக்கிறேன். படிக்கச் சேர்ந்த ஆறேழு மாதங்களில் கனவுகளை எரித்து, நம்பிக்கையைத் தகர்த்து, தூக்கில் ஏற்றிச் சாவடிக்கிறது என்றால் அது என்ன பெரிய கல்வி நிறுவனம்? 

ஒவ்வொரு ஐஐடியிலும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் படிக்கிறார்கள். அதில் இப்படி ஒன்றிரண்டு சம்பவங்கள் நிகழ்வது தவிர்க்க இயலாததுதான். ஆனால் ஒரு புள்ளிவிவரத்தைக் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். கடந்த பத்தாண்டுகளில் ஐஐடிகளில் மட்டும் 52 தற்கொலைகள் நடந்திருக்கின்றன. அதில் சென்னை ஐஐடியில்தான் உச்சபட்சம். 14 தற்கொலைகள் சென்னை ஐஐடியில் மட்டும் நிகழ்ந்திருக்கின்றன. அதுவும் இந்த ஆண்டில் மட்டும் நான்கு தற்கொலைகள். ஏதோ உறுத்துகிறது அல்லவா? மத்திய அரசின் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய்களைக் கொட்டி நடத்தப்படும் நிறுவனத்தில் ஏன் இத்தகைய சம்பவங்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. 

ஒரு மாணவியின் சாவின் பின்னணியில் இருப்பது வெறுமனே மன அழுத்தம்தானா? வீட்டை விட்டு பிரிந்திருப்பது, கடும் போட்டி போன்ற அழுத்தங்கள் மட்டுமே அவர்களைத் தூக்குக் கயிறைத் தேட வைத்துவிடுகிறதா?  ஃபாத்திமாவின் சாவையும் கூட அப்படித்தான் முடித்து வைப்பார்கள். வீட்டை விட்டு பிரிந்ததனால் வருத்தத்தில் இருந்தாள்; அதனால் இறந்துவிட்டாள் என்று ஏற்கனவே செய்திகள் கசியத் தொடங்கியிருக்கின்றன. எந்தவொரு மனிதனும் சாகும் போது இன்னொருவனை நோக்கி கைநீட்டினால் அதனை உறுதியாக நம்பலாம். அதனால்தான் மரண வாக்குமூலங்கள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவையாகின்றன. அப்படியான முக்கியத்துவம் வாய்ந்ததுதான் ஃபாத்திமா குறிப்பிட்டிருக்கும் பெயரும் என்றே நம்புகிறேன்.

ஐஐடி போன்ற பெரு நிறுவனங்களில் நடைபெறும் துர்சம்பவங்கள் இரும்புக் கோட்டைக்குள் நடைபெறும் சம்பவங்களாகவே இருக்கின்றன. எப்படியாவது அமுக்கிவிடுகிறார்கள். சில நாட்களில் எதுவுமே நடக்காதது போல இயல்பு நிலைக்கும் திரும்பி விடுகிறார்கள். 

இத்தகைய சம்பவங்கள் நிகழும் போது தொடர்ச்சியான விவாதங்கள் நடைபெற வேண்டும்.எதிர்காலத்தில் நிகழாமல் இருக்க தீர்வுகளை நோக்கி நகர வேண்டும். அதற்கென அரசும், கல்வி நிறுவனங்களும் வெளிப்படையான விசாரணைக்கும்,  தீவிரமான நடவடிக்கைகளை எடுக்கவும் மனதளவில் தயாராக இருக்க வேண்டும்.

கல்வி நிறுவனங்களுக்குள் கட்சி அரசியல் நுழையாமல், மதச்சாயம் பூசப்படாமல், பிற சாதி வெறுப்புணர்வு தலை தூக்காமல் இருக்க தொடர்ச்சியான முன்னெடுப்புகள் அவசியம். அதற்கு எதிராக யாரேனும் நடப்பதாகத் தெரிந்தால் தயவு தாட்சண்யமில்லாமல் நடவடிக்கை எடுக்கும் துணிச்சலும், தைரியமும் நிர்வாகத்திற்கு இருக்க வேண்டும். ஆனால் நிர்வாகமே இதற்கெல்லாம் வளைந்து போகிறது என்பதைத்தான் நாம் பேச வேண்டியிருக்கிறது. வெறுமனே தொழில்நுட்பத்தில் நம்மை முன்னோக்கி இழுத்துக் கொண்டு ஓடும் இத்தகை நிறுவனங்கள்தான் சமூகநீதியைப் பொறுத்தளவில் நம்மை பல ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துக் கொண்டிருக்கின்றன. 

பெரு நிறுவனங்களில் தவறுகள் நடைபெறுவது இயல்பு. அதை வெளிப்படையாக ஒத்துக் கொண்டு, இனிமேலும் தவறு நடக்காமல் தடுக்க வேண்டும் என்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதுதான் அவசியம். அதுதான் வெளிப்படைத்தன்மை. ஆனால் ‘பெயர் கெட்டுவிடும்’ என்று அமுக்குவதிலேயே குறியாக இருப்பதுதான் கார்போரேட் கலாச்சாரம். இன்றைய அரசுகளும், கல்வி நிறுவனங்களும் கூட அத்தகைய கலாச்சாரத்தை பின் தொடர்வதுதான் பெரும் வருத்தத்தைத் தருகிறது. 

ஃபாத்திமாவின் மரணத்தை மதம் சார்ந்த பிரச்சினையாக மாற்ற வேண்டியதில்லை என்று நடுநிலை பேசுவதாக நடிக்கலாம். ஆனால் ஒருவேளை பேராசிரியர் இசுலாமியராக இருந்து இறந்த பெண் இந்துவாக இருப்பின் இன்றைய ஊடகச் சூழல் அதனை எவ்வாறு விவாதித்திருக்கும் என யோசிக்க வேண்டியிருக்கிறது. அப்படியொரு சம்பவம் நடந்திருப்பின் இந்தச் சமூகம் எப்படி அதனை விவாதப் பொருளாக்கியிருக்குமோ அதற்கு எள்ளளவும் குறைவில்லாமல் இந்தச் சம்பவத்தையும் விவாதிக்க வேண்டும். இதனை இந்து x இசுலாமியர் பிரச்சினையாக மட்டுமே முன்னிறுத்தும் போது அது பொதுமைப்படுத்துவது ஆகிவிடுகிறது.  வெறுமனே இந்து இசுலாமியர் என்ற பிரச்சினை மட்டுமில்லை. அப்படி மேம்போக்காக எடுத்துக் கொள்ளாமல் அதைத்தாண்டி நுணுக்கமாக அணுக வேண்டும். இதில் இருக்கும் பார்ப்பனியம், சாதிய உணர்வு, பேராசிரியர்கள் மட்டத்திலும் படர்ந்திருக்கும் பிற சாதி வெறுப்பு, வல்லாதிக்கம் போன்றவற்றை அலச வேண்டும். இந்தச் சமூகத்தில் நிலவும் சமத்துவமின்மை பற்றிய புரிதலை எளிய மனிதர்களுக்கும் இத்தகைய சம்பவங்களின் வழியாக உணர்த்த வேண்டும். நமக்கான எல்லைகளை யாரோ வரையறுத்துக் கொண்டேயிருக்கிறார்கள் என்பதும், சமூக நீதியை நாம் எந்தக் காலத்திலும் துரத்திக் கொண்டேயிருக்க வேண்டியிருக்கிறது என்கிற உண்மையும் முகத்தில் அறைய வேண்டும்.

ஆனால் அதற்கான வாய்ப்புகள் இல்லை.

இரண்டு நாட்களில் #JusticeforFathima என்பதை மறந்துவிடுவோம். சுதர்சன பத்மனாபனும் இன்ன பிறரும் வழக்கம் போல சோற்றுப் போசியை எடுத்துக் கொண்டு வேலைக்குச் செல்வார்கள். ஃபாத்திமாதான் திரும்பவே மாட்டாள்.

Nov 13, 2019

பெயரற்றவள்

‘ஒரு கதை சொல்லுங்க சார்’

முனியப்பனிடம் அப்படி யாருமே சார் போட்டு பேசியதில்லை. வாய்க்கால் ஓரத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தவனைப் பார்க்க வந்திருந்த கவினுக்கு அப்படித்தான் பேச வந்தது. முனியப்பனை அவன் இவன் என்று எழுதக் கூடாது. அவருடைய வயது அவருக்கே தெரியாது. ஆனால் ஊரில் பொடிசுகள் கூட அப்படித்தான்- போடா வாடா என்று அழைப்பார்கள். முனியப்பன் எதையும் கண்டுகொள்வதில்லை. பள்ளத்து தோட்டத்து பண்ணாடி வீட்டில் பரம்பரை பரம்பரையாக பண்ணையத்தில் இருக்கிறார். 

முனியப்பனுக்கு கல்யாணம் இல்லை. வீட்டில் இருந்தவர்களுக்கு வரிசையாகச் செய்து வைத்துவிட்டு முனியப்பனை விட்டுவிட்டார்கள். 

‘என்ன கதை சாமி?’ என்றார்.

கவினுக்கு முனியப்பன் பற்றி ஒரு கல்லூரி பேராசிரியர் சொல்லி அனுப்பியிருந்தார். நெடு நெடுவென இருப்பார் எனவும், தலையில் உருமால் கட்டிக் கொண்டு புண்ணாக்கு கார ஆயா குடிசைக்குப் பக்கத்தில் எருமை மேய்த்துக் கொண்டிருப்பார் என்பதும்தான் அடையாளம். கவின் வந்திருந்த சமயத்தில் அங்கே முனியப்பனைத் தவிர யாருமில்லை. கண்டுபிடிப்பதிலும் பெரிய சிரமமில்லை.

‘என்ன கதை வேணும்ன்னாலும் சொல்லுங்க’

கவினுக்கு சில கதைகள் தேவையானதாக இருந்தது. வித்தியாசமான கதைகள். அவன் சினிமாவுக்கு முயற்சித்துக் கொண்டிருந்தான். ஒற்றை வரியைப் பிடித்துவிட்டால் வளர்த்து விடலாம் என்ற நம்பிக்கையில் இருந்தான். அப்படித்தான் கல்லூரி பேராசிரியரிடம் சொல்லிக் கொண்டிருந்தான். 

‘கதை சொல்லுறதுல்ல முனியப்பனை அடிச்சுக்க முடியாது’ என்றார் பேராசிரியர்.

முனியப்பன் சொல்லுகிற கதைகள் உண்மையா, பொய்யா என்றெல்லாம் தெரியாது. அந்தி சாயும் நேரம் தொடங்கி விடிய விடிய அவர் சொல்லுகிற கதைகள் பிரசித்தம். அண்ணமார் கதை, நளமகராஜா கதை, அரிச்சந்திர புராணம் என்றெல்லாம் தொடங்கினால் மாதக் கணக்கில் கதை நகரும். ஆடு மாடுகளைப் பட்டியில் அடைத்துவிட்டு உணவை முடித்துக் கொண்டு ஊர் களத்தில் ஒன்று கூடுவார்கள். வெற்றிலையை மென்று குதப்பி கொஞ்சத்தை விழுங்கிக் கொண்டு, மீதியை உமிழ்ந்துவிட்டு கதையை ஆரம்பிப்பார் முனியப்பன். அதிகாலை வரை நீளும். மறுபடியும் அடுத்த நாள் விட்டதிலிருந்து நீளும்.

‘இப்போவெல்லாம் யாரு கதை கேட்குறா சொல்லு சாமி’ என்று கவினிடம் கேட்டார் முனியப்பன்.

தொலைக்காட்சி அதன் பிறகு செல்போன் என ஒவ்வொன்றாக வந்த பிறகு கதை கேட்கிற ஆர்வம் வற்றிவிட்டதாக முனியப்பன் நம்பினார். அது பெரும்பாலானவர்களின் நம்பிக்கை மட்டும்தான் என்பது கவினின் நம்பிக்கை. ஆனால் இன்னமும் நல்ல கதைகளைக் கேட்க எங்கேயாவது யாராவது இருந்து கொண்டேதான் இருக்கிறார்கள் என்று கவின் நினைத்துக் கொண்டான். பவா செல்லதுரை கதை சொல்வதை யூடியூப் வீடியோக்கள் வழியாகக் கேட்கிறவர்கள் இருந்து கொண்டேதானே இருக்கிறார்கள் என்றும் அவனுக்குள் அந்தக் கணத்தில் தோன்றியது. தி.ஜாவின் பரதேசி வந்தான் கதையை பவா சொல்வதை முந்தாநாள்தான் கேட்டிருந்தான். இருபத்தைந்தாயிரம் பேருக்கும் மேல் அந்த வீடியோவைப் பார்த்திருந்தார்கள்.  

‘உங்க கதையைச் சொல்லுங்க’

கவின் இப்படிக் கேட்டதும் முனியப்பனுக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை. அங்கேயிருந்த பிள்ளையார் திண்டுக்கு முன்பாக கீழாக அமர்ந்து கொண்டார். தம் கதையைச் சொல்லச் சொல்லி யாராவது இதுவரை கேட்டிருக்கிறார்களா என்று யோசித்துப் பார்த்தார். யாருமே கேட்டதாக நினைவில் இல்லை. ஆனால் அப்படியொருத்தன் கேட்கும் போது சொல்வதற்கு தம்மிடம் என்ன கதை இருக்கிறது என்று தமக்குள்ளாகவே கேட்டுக் கொண்டார்.

‘அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல சாமி’

முனியப்பன் உடலில் தெம்பு இருக்கும் வரை தோட்டங்காட்டு வேலைகளைச் செய்தார். இப்பொழுது ஆய்ந்து போய்விட்டார். நான்கைந்து எருமைகளையும் இரண்டு மூன்று மாடுகளையும் மேய்ப்பதே கூட பெரிய சிரமமாக இருக்கிறது. கடந்த நான்கைந்து ஆண்டுகளாகவே மாதமானால் அநாதைப் பணம் வந்துவிடுகிறது. ஒத்தை ஆளுக்கு அதுவே போதும்தான். ஆனால் குடிசையில் படுத்துக் கிடக்கவும் மனம் ஒப்பவில்லை. விடிந்தும் விடியாமலும் எழுந்து வந்துவிடுகிறார்.

‘நீ போய் எங்கேயாச்சும் உழுந்துடாத’ 

பண்ணாடிச்சி வாரம் இரண்டு மூன்று முறையாவது இதைச் சொல்லிவிடுகிறார். முனியப்பன் கேட்பதாக இல்லை. ஒருவேளை தடுமாறி விழுந்தால் சாயந்திரம் வரைக்கும் யாரும் வந்து பார்க்கப் போவதில்லை. ஆளைக் காணவில்லை என்று பண்ணாடி அனுப்பி வைக்கும் ஆள் தேடி வரும் போது ரத்தம் சுண்டியிருக்கும் என்பது முனியப்பனுக்கும் தெரியும். எப்படியும் போகப் போற உயிர்தான். குடிசைக்குள் கிடந்தால் நாற்றம் வரும் வரைக்கும் கேட்க நாதியில்லை. இதுவாவது ஒரு நாளில் கண்டுபிடித்துவிடுவார்கள்.

‘ஊர்ல ஒரு அம்மிணி இருந்துச்சு...அந்தக் கதையைச் சொல்லுறேன்’

கவினுக்கு அது ஆர்வத்தைத் தூண்டுவதாக இருந்தது. ஆனால் குறுக்கே எதையும் கேட்டுவிடக் கூடாது என்று முடிவு செய்து வைத்திருந்தான். அது கதை சொல்லுகிறவரின் போக்கை மாற்றிவிடக் கூடும் என்பதால் வெறும் உம் கொட்டினான்.

‘அவங்கப்பனுக்கு ஆறாவதா பொறந்துச்சு. ஆறும் பொட்டையா போயிடுச்சுன்னு வெசனம்ன்னா வெசனம்....’

காதல் கதையாகத்தான் இருக்க வேண்டும் என்று கவின் நினைத்துக் கொண்டான். ஏனோ அந்தக் கணத்தில் அவனுக்கு அப்படித்தான் தோன்றியது. ஒருவேளை இந்தக் கிழவனே கூட அந்தப் பெண்ணைக் காதலித்திருக்கக் கூடும். ஆனால் அதை ஒத்துக் கொள்வாரா என்று தெரியவில்லை.

பெயரற்றவள் வயதுக்கு வந்த போது வீட்டில் மூன்று பெண்களுக்குத் திருமணம் ஆகாமல் இருந்தது. சொத்து எதுவுமற்ற அப்பன் திணறத் தொடங்கியிருந்தான். முதல் மூன்று பெண்களுக்கு ஆளுக்கு ஏழெட்டு பவுன் நகை போட்டு அனுப்பி வைத்திருந்தான். முப்பது அல்லது நாற்பது வருடங்களுக்கு முன்பு நடந்த கதை போலத்தான் தெரிந்தது. எட்டாம் வகுப்போடு பள்ளியை விட்டு நின்று வயல் வேலைக்குச் செல்லத் தொடங்கியிருந்தாள் பெயரற்றவள்.

‘அவ ஒவ்வொரு நாளும் ஜொலிச்சுட்டு இருந்தா..’ 

அவர் அப்படிச் சொன்னது  கவினை சிலிர்க்கச் செய்யவில்லை. ஒருவேளை யாராவது அவளை வன்புணர்ந்து கொன்றிருப்பார்களோ என சந்தேகப்பட்டான். ஆனால் கதை கேட்கும் போது இப்படியெல்லாம் மனம் அலைவுறாமல் ஒரு கிடையில் நிற்க வேண்டும். ஆனால் கவினுக்கு சாத்தியமாகவில்லை. கிழவனால் தன் மனதை ஒருமுகப்படுத்திவிட முடியும் என்கிற நம்பிக்கை அவனுக்கு இல்லை.

‘நீ நினைக்கிற மாதிரி காதல் கதையும் இல்லை...அவளை ஒருத்தனும் கெடுக்கவும் இல்ல...எந்திரிச்சு போ’ 

ஓங்கி அறைந்தது போல இருந்தது கவினுக்கு. அவரது கண்ணைப் பார்த்தான். முனியப்பன் முகத்தை எங்கேயோ திருப்பிக் கொண்டார். அதற்கு மேல் அவர் பேசுவாரா என்று தெரியவில்லை. அமைதியாக அமர்ந்திருந்தான். முனியப்பன் சொல்ல வந்த கதை கவினுக்கு இனிமேல் தெரியாமலே போய்விடக் கூடும். ஆனால் ஆர்வமாக இருக்கும் உங்களை அப்படி விட்டுவிட முடியாது. கதை இதுதான். 

பெயரற்றவளின் பெயர் சித்ரா. ஜொலிக்கிற சிலைதான். பாவாடை தாவணியிலிருந்து பெரும்பாலானவர்கள் கூச்சத்தோடு சுடிதாருக்கு மெல்ல மாறிக் கொண்டிருந்த காலத்தில் அவள் பாவாடை தாவணியிலேயே சுற்றிக் கொண்டிருந்தாள். வயல் வேலையை முடித்துவிட்டு பாவாடை ஜாக்கட்டோடு வாய்க்காலில் குளித்து தாவணியை நீரில் கசக்கிப் பிழிந்துவிட்டு மேலே சுற்றும் போது அது அங்கங்களுடன் ஒட்டிக் கிடக்கும். அப்பொழுது அவளை முனியப்பன் பார்த்திருக்கிறார். எந்த ஆணையும் திணறச் செய்துவிடுகிற தருணங்கள் அவை. துணி ஓரளவுக்கு காயும் வரை கரையிலேயே நின்று கொள்வாள். முனியப்பனின் இளமையை சித்ராதான் கரைத்துக் கொண்டிருந்தாள்.

இன்னமும் மூன்று பெண்களுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற பாரத்திலேயே சித்ராவின் அப்பன் போய்ச் சேர்ந்த பிறகு அத்தனை சுமையும் சித்ராவின் அம்மா தலையில் விடிந்தது.

நான்கு பெண்களும் வேலைக்குச் சென்றார்கள். அதில் ஒருத்தி திருப்பூரில் மில் வேலைக்குச் சென்று கொண்டிருந்த சக்திவேலுடன் ஓடிப் போய்விட்டாள். அதுவொரு தீபாவளி நாள். அவன் போனஸ் வாங்கி வந்திருந்தான். இதை வைத்துக் கொண்டு எங்கேயாவது போய் பிழைத்துக் கொள்ளலாம் என்று அவளிடம் சொன்னதை அவள் நம்பினாள். விடிகாலையில் பண்ணாடி வீட்டில் முதல் பட்டாசுச் சத்தம் கேட்ட போது சித்ராவின் வீட்டில் ஒரு ஆள் குறைந்திருந்தது. தொலையட்டும் சனியன் என்று கரித்துக் கொட்டினாலும் அம்மாவுக்கு அது ஆசுவாசமாக இருந்தது. இன்னமும் இரண்டு பெண்கள்தான். எப்படியும் கட்டிக் கொடுத்துவிடலாம் என்ற நம்பிக்கை இருந்தது. நான்கைந்து நாட்களுக்குப் பிறகு மூவரும் வழக்கம் போல வயல் வேலைக்குச் செல்லத் தொடங்கினார்கள்.

அடுத்த இருவரையும் எவனாவது நோட்டம் விடக் கூடும் என அம்மா கருதினாள். ஆனால் அடுத்த மூன்றாவது மாதத்தில் திடீரென சித்ராவால் படுக்கையை விட்டு எழ முடியவில்லை. முந்தின நாள் வேலைக்குச் சென்றுவிட்டு வந்து படுத்தவள் எழ முயற்சித்த போது சாத்தியமாகவில்லை. ஆரம்பத்தில் அதன் வீரியம் புரியவில்லை. ஆனால் அவளது இடுப்புக் கீழாக துளியும் அசைவில்லை. ஒவ்வொரு நாளும் சித்ரா தலையை அசைக்காமல் அழுது கொண்டிருந்தாள். கோவில் சிலை கிடப்பது போலக் கிடந்தவளை நாட்டு வைத்தியர்களை அழைத்து வந்து பார்த்தார்கள். எண்ணெயைத் தடவி, பச்சிலையைப் பூசி எனப் பார்க்காத வைத்தியமில்லை. இனி வாய்ப்பில்லை என்றார்கள்.

செலவு ஏறிக் கொண்டேயிருந்தது. அம்மாவும் அக்காவும் தங்களது சக்தியை இழந்துவிட்டார்கள். அப்பன் இறந்த போதும், தனக்கு கால்கள் இயங்காத போது எப்படியெல்லாம் பயம் இருண்டு வந்தததோ அதைவிட அதிகமாக அவள் அம்மாவையும் அக்காவையும் அழைத்த அந்த காலை நேரத்தில் உணர்ந்தாள். அவர்கள் இவளை விட்டுவிட்டு வெகுதூரம் சென்றிருந்தார்கள். மயக்கம் அவளது கண்களில் இருட்டிக் கொண்டு வந்தது. தமக்கு அம்மாவும் அக்காவும் இருப்பதாக நம்பிக் கொண்டிருந்தவளின் மொத்தப் பிடிமானமும் நொறுங்கிப் போனது.

‘பெற்ற மகளை விட்டுவிட்டு ஓடிப்போவார்களா?’

சூழல் நெருக்கும் போது மனிதர்கள் எந்த முகத்தையும் அணிந்து கொள்ளத் தயாராகவே இருக்கிறார்கள். யாரும் எந்தவொரு முடிவையும் எடுத்துவிடுகிறார்கள். அதில் பெரும்பாலான முடிவுகள் அடுத்தவர்களால் யூகிக்க முடியாதவையாகவே இருக்கின்றன. 

முனியப்பன் சித்ராவுக்கு கஞ்சி ஊற்றினார். ஆனால் அதற்கு மேல் அவரால் எதையும் செய்ய முடியவில்லை. சித்ரா அவரை அனுமதிக்கவுமில்லை. ‘இப்படியே செத்துடுறேன்’ என்று அழுதாள். அவளைச் சமாதானப்படுத்த இயலாதவராக அவளைத் தொடாமல் அவளைச் சுற்றிலும் சுத்தம் செய்தார். சம்பந்தமில்லாத ஒரு ஆண் தமக்காக இதையெல்லாம் செய்வதைப் பார்த்து சித்ரா ஓலமிட்டு அழுதாள். அவளது அழுகை ஊரையே திகிலடையச் செய்வதாக இருந்தது. ஆனால் யாரும் வரவில்லை. முனியப்பன் தலையைக் குனிந்தபடி அவளது கழிவுகளை பெருக்கிக் கொண்டிருந்தார். அவர் அவளுக்கு பணிவிடை செய்வதை ஊரே ஆச்சரியமாகப் பார்த்தது. என்னதான் சுத்தம் செய்தாலும் அவள் மலம் கழிப்பதும், சிறுநீர் கழிப்பதும் குடிசையை நாறச் செய்தது. அவளது ஆடைகளை மொய்த்த ஈக்களும் பூச்சிகளும் புழுக்களும் மற்றவர்களை நெருங்க விடவில்லை. அழகுச் சிலையாக இருந்தவள் மெலிந்து, தோல் சுருங்கி, முடி உதிர்ந்து, உதடுகள் வறண்டு மெல்ல மெல்ல உதிர்ந்த பிறகு முனியப்பன் ஊருக்குள் செய்தி சொன்னார். நான்கைந்து பேர்கள் வந்தார்கள். எல்லாம் முடிந்த பிறகுதான் பண்ணையத்துக்குச் சென்றார்.

‘உனக்கு என்ன அவ மேல அத்தனை அக்கறை?’ பண்ணாடிச்சி கேட்ட போது அவருக்கு எதுவும் சொல்லத் தோன்றவில்லை. 

‘மத மசுரு பாரு இவனுக்கு...மூஞ்சிய குத்திட்டு போறான்’ என்று பண்ணாடிச்சி மனதுக்குள் கருவிக் கொண்டார். 

பிறகு மெல்ல சித்ராவை எல்லோரும் மறந்து போனார்கள்- முனியப்பனைத் தவிர. முனியப்பன் இந்தக் கதையை யாரிடமும் பேசியதில்லை. ஏனோ கவினிடம் சொல்லிவிட வேண்டும் என விரும்பினார். ஆனால் என்ன நினைத்தாரோ அவரே தவிர்த்துவிட்டார்.  ‘இது காதல் கதை இல்லையா?’ ‘இந்தக் கதை உனக்கு எப்படித் தெரியும்?’  என்றெல்லாம் நீங்கள் கேட்டுவிடாதீர்கள். எந்த பதிலைச் சொன்னாலும் உங்களுக்கு நம்பிக்கை வராது.

Nov 12, 2019

தொழில் பரவாயில்லையா?

சமீபமாக தொழிற்துறை சார்ந்த நண்பர்களிடம் ‘பிஸினஸ் பரவாயில்லையா’ என்று கேட்பதையே விட்டுவிட்டேன். முன்பெல்லாம் நண்பர்களைச் சந்திக்கும் போது இந்தக் கேள்விதான் முதலில் எழும். அந்தக் கேள்வியில் ஒரு சுயநலம் உண்டு. ஐடி துறையில் எப்பொழுதுமே ஒரு நிலையாமை உண்டு. ஒருவேளை ஐடி துறை காலை வாரினால் என்ன செய்யலாம் என்று மண்டைக்குள் கணக்குப் ஓடிக்  கொண்டேயிருக்கும். அதனால்தான் அந்தக் கேள்வி. அவர்களின் துறை சார்ந்த சில நுணுக்கங்களைக் கேட்பேன். அவர்களின் பதில்கள் வழியாக ‘இது நமக்கும் கூட ஒத்து வரும்’ என்கிற மாதிரியான எண்ணம் வரும் போது மனதுக்கு கொஞ்சம் இதமாக இருக்கும். அவர்களது துறையில் கூட எதையாவது செய்து கொள்ளலாம் என்கிற நம்பிக்கை அது.

கோவையில் ஆவாரம்பாளையம் என்றொரு பகுதி பட்டறை தொழிலுக்குப் பிரசித்தம். நிறைய உபரிப் பொருட்களை உற்பத்தி செய்யும் சிறு கூடங்கள் அதிகம். அங்கே தம் நிறுவனத்தை நடத்தி வந்த ஒரு நண்பரைச் சந்தித்தேன். தெரியாத்தனமாக வழக்கம் போல கேள்வியை எழுப்பினேன். ‘மூடிவிட்டேன்’ என்றார். திக்கென்றிருந்தது. ‘வருமானத்துக்கு என்ன செய்யறீங்க?’ என்ற கேள்வி எழாமல் இல்லை. ஆனால் கேட்கத் தயக்கமாக இருந்தது. இதை விட அசிங்கமான கேள்வி ஒன்று இருக்க முடியுமா? ஒரு கணம் என்ன பேசுவது என்று தெரியாமல் அமர்ந்திருந்தேன். ‘கடன் மேல கடன் ஆகுதுங்க...சுமையைச் சேர்த்துட்டே போறதைவிட இதுதான் நல்லது’ என்றார். நெஞ்சுக்குள் ஏதோ அடைத்துக் கொண்டது. அவருக்கு ஒரு பெண் குழந்தை. அடுத்த வருடம் பள்ளிக்கூடம் மாற்றப் போவதாகச் சொன்னார். அதிகம் பேசிக் கொள்ளாமல் எழுந்து வந்துவிட்டேன். இதற்கு முன்பாகச் சந்தித்த போது சிரமமாக இருப்பதாகச் சொல்லியிருந்தார். ஆனால் மூடிவிடுவார் என்று நினைக்கவில்லை.

மிகைப்படுத்திச் சொல்லவில்லை- கடந்த ஏழெட்டு மாதங்களாகவே இப்படியான மனிதர்களைச் சந்திக்க நேர்கிறது. சிறு குறு தொழில் நிறுவனங்கள் பல மூடப்பட்டுவிட்டன. நெசவு, அத்துறை சார்ந்த பொருட்களை உற்பத்தி செய்தவர்கள், பெரு நிறுவனங்களுக்கு சிறு சிறு பணிகளைச் செய்து தரும் பட்டறைகள் என பல்வேறு தொழிற்துறையினர் இப்பொழுது தொழிலை முழுவதுமாகக் கைவிட்டுவிட்டார்கள். கட்டுமானத் தொழில் முடங்கியிருக்கிறது. அதைச் செய்து கொண்டிருந்தவர்களும் திணறுகிறார்கள். இப்படி பெரும்பாலானவர்களுக்கு வாழ்வாதாரமாக இருந்த பல தொழில்களை வரிசையாகச் சொல்லிக் கொண்டே போகலாம். எல்லாமே அடி வாங்கிக் கொண்டிருக்கின்றன. ஆனால் இதை விலாவாரியாகப் பேசினால் அது ஒருவிதமான எதிர்மறையான மனநிலையை வாசிக்கிறவர்களுக்கும் சேர்த்து உருவாக்கிவிடக் கூடும்.

உண்மையிலேயே எங்கே போய்க் கொண்டிருக்கிறோம் என்று புரியவில்லை. பெரும்பாலான காலங்களில் சிறப்பாக இருக்கும் உணவுத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் நண்பர்கள் கூட ‘முன்ன மாதிரி இல்லைங்க’ என்கிறார்கள். முன்பு வாரம் ஒரு முறை வெளியில் உணவு உண்டவர்கள் கூட முடிந்தவரை வீட்டிலேயே சாப்பிடலாம் என்று நினைக்கத் தொடங்கியிருக்கக் கூடும். சுற்றுலாத்துறை எப்படியிருக்கிறது அத்துறை சார்ந்த நண்பர்களிடம் கேட்டுப்பாருங்கள். எல்லோரிடமும் தம் சுய பொருளாதாரம் குறித்தான பய உணர்வு பீடித்துக் கொண்டிருக்கிறது. நாளை என்பது பற்றிய நம்பிக்கை மெல்ல மெல்ல உதிர்ந்து கொண்டிருக்கிறது. செலவு செய்யத் தயங்குகிறார்கள். அது அடுக்கி வைத்த சீட்டுக்கட்டு போல ஒவ்வொன்றையும் வீழ்த்திக் கொண்டிருக்கிறது.

ஒருவேளை தமிழகத்தில் நிலவும் மத்திய அரசின் மீதான எதிர்மனநிலையின் காரணமாக இப்படியொரு சூழல் இருக்கிறதோ என்ற சிறு நம்பிக்கை இருந்து கொண்டிருந்தது. ஆனால் தொழில் செய்கிறவர்களில் பாஸிட்டிவாக பேசுகிற எந்த மனிதரையும் சந்திக்க முடியவில்லை என்பதுதான் திகிலூட்டுகிறது. என்ன பிரச்சினை என்று யாரிடம் கேட்டாலும் ‘பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி என ஒவ்வொரு அடியாக வீழ்த்திவிட்டது’ என்கிறார்கள். இன்னொரு நண்பர் சில மாதங்களுக்கு முன்பாக ‘நேர்மையாகச் செய்தால் ஜிஎஸ்டி நல்ல பலனையே தரும்’ என்று சொல்லியிருந்தார். அப்பொழுது அதை நம்பவும் செய்தேன். இப்பொழுது அப்படிச் சொல்லுகிற ஆட்களைக் கூடத் தேடிப் பிடிக்க முடிவதில்லை. தொழில்களைப் பொறுத்த வரைக்கும் ஒரு கயிற்றில் ஏற்கனவே உள்ள சிண்டுக்கு மேல் புதுப் புது சிண்டுகளாக விழுவதைப் போல நிறையச் சிக்கல்கள் விழுந்துவிட்டன என்றுதான் தெரிகிறது. துரதிர்ஷ்டம் என்னவென்றால் அனைத்து சிக்கல்களும் சிறு, குறு தொழில்களின் கழுத்தைத்தான் முதலில் நெரிக்கின்றன.

இன்றைக்கு பெரும்பாலான செய்தித்தாள்களில் முதல் பக்கச் செய்தியே கடந்த எட்டாண்டுகளில் இல்லாத அளவுக்கு தொழிற்துறை வீழ்ந்துவிட்டது என்பதுதான். முழுமையான இருளுக்குள் ஏதோவொரு தருணத்தில் வெளிச்சம் தென்பட்டுவிடும் என எவ்வளவு தூரம்தான் ஓடிக் கொண்டேயிருக்க முடியும்? யார் மீதும் குறை சொல்ல வேண்டும் என்பது நோக்கமில்லை. நீங்கள் சுய தொழில் செய்கிறவர்களாக இருப்பின் அல்லது சுயதொழில் செய்யும் நண்பர்களைக் கொண்டவர்களாக இருப்பின் ‘நீங்கள் நினைக்கிற மாதிரி எதுவுமில்லை’ என்று தர்க்கப்பூர்வமான வாதங்களுடன் சில வரிகளை எழுதுங்கள். அப்படியான சொற்களுக்காக மனம் காத்துக் கிடக்கிறது. உண்மையிலேயே அப்படியான சொற்களை எதிர்பார்க்கிறேன்.

ஏன் இவ்வளவு சிறு தொழில்கள் மூடப்படுகின்றன? ஏன் சுய தொழில் செய்கிறவர்கள் இப்படித் திணறிக் கொண்டிருக்கிறார்கள்? வேலையிழப்பு பற்றிய சரியான தரவுகள் நம்மிடம் இருக்கின்றனவா என்றெல்லாம் கேள்விகள் இருக்கின்றன. ஆனால் ஏதேதோ அர்த்தமற்ற பிரச்சினைகளில் கவனத்தை பெருங்கூட்டமாகச் செலுத்தி தற்காலிக ஆசுவாசத்தை அடைந்து கொண்டிருக்கிறோம். நம்முடைய பயத்தையும் கவலையையும் மறக்கடிக்கவே இத்தகைய சில்லரை பிரச்சினைகள் அவசியமானவை என்றும் கூடத் தோன்றுகிறது.

எப்படியிருப்பினும் எதிர்மறை சிந்தனையிலிருந்து மக்கள் வெளியில் வருவது மிக அவசியம். ஆனால் அதற்கான வாய்ப்புகளை அரசாங்கம்தான் உருவாக்கித் தர வேண்டும். இவையெல்லாம் எப்பொழுது தெளிவாகும் என்ற பிடிமானமே இல்லாமல்தான் இருக்கிறது. வேலை, பணி, வருமானம் ஆகியவற்றில் எதிர்மறையான சிந்தனைகளைக் கொண்டிருப்பது ஒருவிதமான மன அழுத்தத்தையே தரும். நம்பிக்கை முற்றாக அறுபட்டுக் கொண்டிருக்கிறது. இதிலிருந்து எப்படி விடுபடுவது என்று குழம்புகிற போதெல்லாம் போகிற வரைக்கும் போய்க் கொண்டிருக்கட்டும், தடை வரும் போது பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொள்கிறேன். அதைத் தவிர வேறு என்ன செய்துவிட முடியும்?

முல்ஹாலண்ட் ட்ரைவ்

இலக்கியம் படிக்க ஆரம்பித்த புதிதில் ‘என்ன இது நேரடியா சொல்லுற மாதிரி இருக்கு?’ என்று நிறைய இலக்கிய உரையாடல்களில் கேட்க நேர்ந்தது. எதையுமே புரியாமல் எழுதினால்தான் நல்ல இலக்கியம் என்று மண்டைக்குள் பதியத் தொடங்கியிருந்த பருவம் அது. உண்மையில் புரியாமல் எழுதுவது தரமான இலக்கியம் ஆகிவிடாது. இலக்கியத்தை கலாய்க்கும் பல பேர் அப்படித்தான் நினைத்துக் கொண்டிருப்பார்கள். ஒரே எழுத்துதான் - நான் வாசிக்கும் போது என்னுடைய அனுபவத்துக்கு ஏற்ப எனக்கொரு புரிதலை அளிக்க வேண்டும். நீங்கள் வாசிக்கும் போது உங்களுடைய அனுபவத்துக்கு ஏற்ப உங்களுக்கான புரிதலை அளிக்க வேண்டும். இந்த அடிப்படை புரியாமல் வாசிக்கும் போது கடியாகத்தான் இருக்கும். ‘என்னய்யா எழுதி வெச்சிருக்கானுக?’எரிச்சல் வரும். ஒருவகையில் பிடிபட்ட பிறகு நம் அறிவு குறித்தும், நம் புரிதல் குறித்தும் நமக்கு ஒரு திருப்தி கிடைக்கும். அந்த திருப்திதான் வாசிப்பின்பத்தின்(Reading Pleasure) அடிப்படையாகவும் இருக்கும்.

இப்படி குண்டக்க மண்டக்க காலம் ஓடிக் கொண்டிருந்த போது என்னை இலக்கியவாதி என்று நம்பத் தொடங்கியிருந்தேன். அந்தச் சமயத்தில்தான் திரைத்துறையிலும் நட்புகள்  உருவாகின. அங்கே சில விவாதங்களுக்குப் போகும் போது இலக்கியவாதி என்கிற கித்தாப்புடன் எதைச் சொன்னாலும் ‘புரியற மாதிரி சொல்லுங்க’ என்றுதான் பெரும்பாலானவர்கள் சொன்னார்கள். நேரடியாகச் சொன்னால்தான் பி மற்றும் சி சென்டர்களில் எடுபடும் என்பது சினிமாக்காரர்களின் வாதம். இலக்கியத்தைப் போல திரையில் மூடுமந்திரம் அவசியமில்லை; வெட்டு ஒன்று துண்டு இரண்டாக இருக்க வேண்டும். திரையும் இலக்கியமும் வெவ்வேறு படகுகள் என்று புரிந்த கொள்ள வெகு காலம் பிடிக்கவில்லை. இலக்கியம் தனி; திரைமொழி தனி அதுதான் நம் ஊரின் நம்பிக்கை.

திரைப்படங்களின் ரசிகனாகவும் அப்படித்தான் உணர்கிறேன். தமிழின் மிகச் சிறந்த படம் என்றாலும் கூட பெரும்பாலான மனிதர்களுக்கு ஒரே புரிதலைத்தான் உருவாக்குகின்றன. அந்நிய மண்ணில் தயாரிக்கப்பட்ட தரமான திரைப்படங்களைத் தேடிப் பார்க்கத் தொடங்கிய பிறகும் கூட எழுத்தில் ‘ஆளுக்கொரு புரிதல்’ என்பது மாதிரி திரைப்படங்களில் அது சாத்தியமில்லை என்பதுதான் ஆணித்தரமான நம்பிக்கையாகவும் இருந்தது. இரண்டு மணி நேர காட்சி ஊடகத்தில் அதை எப்படிச் செய்ய முடியும்? ஆளுக்கொரு புரிதலை உருவாக்குகிறேன் என்று சுவாரசியம் கெட்டுவிடக் கூடாது; பார்வையாளன் குழம்பி விடக் கூடாது. இப்படி நிறையச் சிக்கல்கள் இருக்கின்றன. ஆனாலும் அது சாத்தியமில்லாத சமாச்சாரம் இல்லை என்றுத சமீபத்தில் பார்த்த ஒரு படம் புரிய வைத்திருக்கிறது. 

Mulholland drive என்றொரு படம். 2001 ஆம் ஆண்டில் வெளியாகியிருக்கிறது. படத்தைப் பற்றி பேசுவதற்கு முன்பாக இந்தப் படம் பற்றி எப்படித் தெரியும் என்று குறிப்பிட வேண்டும். நிறையப் படங்களைப் பார்க்கிறவர்களுக்கு அடுத்து என்ன படம் என்னும் போது சிலரின் பரிந்துரையை நம்புவது வாடிக்கையாக இருக்கும். ஃபேஸ்புக்கில் பாரி என்னும் நண்பர் பிபிசியின் இருபத்தோறாம் நூற்றாண்டின் சிறந்த நூறு படங்களின் பட்டியல் வெளியிட்டிருந்தார். அப்பொழுதே ‘அடுத்தடுத்து பார்க்க வேண்டிய படங்கள்’ எனக் குறித்து வைத்துக் கொண்டேன். இனி வரிசையாகப் பார்த்துவிட வேண்டும். வாரம் மூன்று படங்கள் என்றாலும் கூட சீக்கிரம் பார்த்து முடித்துவிடலாம். அந்தப் பட்டியலில்தான் முல்ஹாலண்ட் ட்ரைவ் இருந்தது.  


டேவிட் லின்ச் எழுதிய இயக்கியிருக்கும் திகில் படம். 

இரவு நேரத்தில் முல்ஹாலண்ட் ட்ரைவ் சாலையில் ஒரு கார் சென்று கொண்டிருக்கும். அதில் இரண்டு ஆண்களும் பின்புற இருக்கையில் பெண்மணியும் அமர்ந்திருப்பார். இடையில் நிறுத்தப்படும் காரிலிருந்து துப்பாக்கியுடன் இறங்கும் ஓர் ஆண் அந்தப் பெண்ணைக் கீழே இறங்கச் சொல்வான். அந்தச் சமயத்தில் எதிரில் வேகமாக வரும் கார் ஒன்று நின்று கொண்டிருக்கும் இவர்களது வண்டியின் மீது மோதும். அந்த விபத்திலிருந்து தப்பிக்கும் பெண்மணி தடுமாறியபடியே ஒரு வீட்டை அடைவாள். அந்த வீட்டில் குடியிருந்த பெண்ணின் உறவுக்காரப் பெண்மணி ஒருத்தி- அவளுக்கு ஹாலிவுட் நாயகியாக வேண்டும் என்பது கனவு- வந்து சேர்வாள். அடிபட்டவளுக்கு தமது பெயர் உட்பட அனைத்து மறைந்திருக்கும். ஆனால் நடிகையின் கனவுடன் இருப்பவள் இவளை அரவணைத்துக் கொள்வாள். விபத்து, அடிபட்ட பெண்ணின் பின்னணி ஆகியவற்றைத் தேடுவார்கள். 

அவ்வளவுதான் கதையாகச் சொல்ல முடியும்.  ‘இதுதான் கதை’ என்று யாருமே தெளிவாகச் சொல்லிவிட முடியுமா என்று தெரியவில்லை. படத்தைப் பார்த்த பிறகு, படம் குறித்தான கருத்துகளை இணையத்தில் துழாவினால் ஒவ்வொருவரும் ஒரு மாதிரி புரிந்து வைத்திருக்கிறார்கள். எதையாவது விட்டுவிட்டோமோ என்று மீண்டுமொரு முறை பார்க்கத் தொடங்கினேன். முதல் முறை என்ன புரிந்ததோ கிட்டத்தட்ட அதேதான் இரண்டாவது முறை பார்க்கும் போதும் தோன்றியது. அப்படியென்றால் நம் புரிதல் சரிதான்.

திரைப்பட ஆர்வலர்களுக்கு மிகச் சிறந்த தீனி இது. இலக்கிய ஆர்வலர்களுக்கும்தான். yts.lt தளத்தில் கிடைக்கிறது. டோரண்ட் வழியாகவே தரவிறக்கம் செய்து கொள்ளலாம். படத்தைத் தரவிறக்கம் செய்துவிட்டு சற்று தயக்கத்துடனேயேதான் பார்க்கத் தொடங்கினேன். ஆனால் இரண்டு முறை பார்க்க வைத்துவிட்டார்கள். சமீபத்தில் பார்த்த திரைப்படங்களில் மிகச் சிறந்த படம். தொழில்நுட்ப ரீதியாகவும் துளி கூட கவனம் சிதறவில்லை.

என்னதான் திரைப்படத்தை சிலாகித்துப் பேசினாலும் நம்மைவிட சிலாகிக்கும், திரைமொழியை ஆராயும் திரை ஆர்வலர்கள் கணக்கு வழக்கில்லாமல் இருக்கிறார்கள். மிகச் சிறந்த திரை ரசிகர்களை எதிர்கொள்ள நேர்கிறது. தம்முடைய அறிவுஜீவித்தனத்தை எந்தவிதத்திலும் வெளிக்காட்டாமல் திரைப்படங்களை அக்கு வேறு ஆணி வேறாக அலசிவிடுகிறார்கள். கலாய்க்கவும் தயங்குவதேயில்லை. அசுரன் படத்தில் பிரகாஷ்ராஜின் மகிழ்வுந்து நுழையும் போது பின்னால் ஒரு ஸ்கூட்டி வருவதைக் கூட மீம் ஆகத் தயாரித்திருந்தார்கள். எவ்வளவு நுணுக்கமாகப் பார்த்திருக்க வேண்டும்? திரைப்படங்களை இப்படியெல்லாம் அடித்து அலசுகிறவர்களைப் பார்த்தால் வெகு ஆச்சரியமாகவும் இருக்கும். படம் முழுவதும் மிகுந்த கவனத்துடன் பார்த்திருக்காவிட்டால் அப்படியெல்லாம் விவாதிப்பதற்கு வாய்ப்பேயில்லை. சமூக ஊடகங்கள் இத்தகைய ஆச்சரியங்களுக்கு நிறைய இடத்தை உருவாக்கிக் கொடுத்திருக்கிறது.

திரைப்படங்களில் சற்றே சற்றான ஆர்வமிருப்பினும் படத்தை ஒரு முறை பார்த்துவிடுங்கள். படம் பற்றி உரையாடுவோம்.

Nov 6, 2019

மாயக் கட்டம்

திருமணம் என்பது மாயக்கட்டம். வெளியில் இருப்பவர்கள் உள்ளே நுழையவும் உள்ளே இருப்பவர்கள் வெளியே சென்றுவிடவும் முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றொரு வாசகம் உண்டு. யார் இதைச் சொல்லியிருப்பார்கள் என்று தெரியவில்லை. ஆனால் இது என்ன கம்பசூத்திரமா? திருமணம் செய்து கொண்ட பெரும்பாலானவர்கள் சொல்லிவிடுவார்கள். 

அதுதான் மாயக்கட்டம் அல்லவா? பிறகு ஏன் எல்லோரும் திருமணத்தை வற்புறுத்துகிறார்கள் என்று கேட்கலாம்தான். ஆனால் தனிமனிதர்களை இழுத்துப் பிடிக்கும் மூக்கணாங்கயிறாக இந்த பிணைப்பு இல்லாமல் இருந்தால்  மனிதர்களின் பக்குவம், சமூக ஒழுங்கமைவு என்பதெல்லாம் தாறுமாக சிதறிவிடக் கூடும். இல்லையா? தறிகெட்டு ஓடும் மனதை இழுத்துப் பிடிக்க ஒரு ஆள் அவசியம் என்பது சர்வ நிச்சயம். 

கவனித்துப் பார்த்தால் பத்து வயது வரைக்கும் குழந்தைகள் பெற்றோர் சொல்பேச்சு கேட்பார்கள். ஒன்றும் பிரச்சினை இருக்காது. அதற்கு மேல் கொஞ்சம் கொஞ்சமாக வயதோடு சேர்ந்து கோபம், காமம் மற்றும் இன்னபிற உணர்ச்சிகளும் பெருகும். பதினாறு பதினேழு வயதுகளில் பெற்றோர் என்ன சொன்னாலும் அவர்களுக்குக் கசப்புதான். அப்பொழுது காமத்தை பெரும்பாலும் தன்னளவிலும், கோபத்தை வெளியிலும் காட்டத் தொடங்கிவிடுவார்கள். ஆனால் அத்தனை சமயங்களிலும் எல்லோரிடமும் கோபத்தைக் காட்டிவிட முடியாதல்லவா? எதிரில் இருப்பவன் வலுவானவனாக இருந்தால் பல்லை பொறுக்கிக் கொண்டுதான் வர வேண்டும். உள்ளுக்குள் இருக்கும் கோபத்தை வெளியிலும் படபடவெனக் காட்டிவிட முடிவதில்லை. இதையெல்லாம் ஒழுங்கு செய்ய தமக்கென ஒரு இணை இருந்தால் செளகரியமாக இருக்குமல்லவா?

திருமணம் செய்து வைக்கிறார்கள். ஆரம்பகட்டத்தில் காமம் பெருக்கெடுக்கிறது. அது மெல்லப் பழகும் போது தூங்கிக் கொண்டிருந்த கோப மிருகம் மீண்டும் எட்டிப்பார்க்கிறது. அதுவரையிலும் காமத்தைக் காட்டிய இணையிடம் கோபத்தையும் அது காட்டும். இதுதான் மிக முக்கியமான தருணமும் கூட. குடும்பம் இறுகுவதும் உடைந்து சிதறுவதும் இந்தக் காலகட்டத்தில்தான். ‘இவன்/ள் யாரு கோபத்தைக் காட்ட?’ என்று முரட்டுத்தனமாக எதிர்த்தால் பீங்கான் பாத்திரத்தில் விழும் உரசலைப் போலத்தான். அதுவே, இணையிடம் எதிர்ப்படும் மாற்றத்துக்கு ஏற்ப தம்மை வளைத்தோ அல்லது இணையின் சரியான பலவீனத்தைக் கண்டறிந்து அதை வைத்தே தம் வழிக்குக் கொண்டு வரும் சூத்திரதாரிகள் திருமண பந்தத்தைக் காத்துவிடுகிறார்கள். பெரும்பாலான குடும்பங்கள் அப்படித்தான் தப்பிக்கின்றன. அதாவது, உருவாகி வெளிவரும் கோபம் இரண்டு வழிமுறைகளில் அடங்குகிறது- ஒன்று இணை அடங்கிப் போய்விடுவார்கள் அல்லது தட்டி, நெகிழ்த்தி, எதிர்த்து அடக்கிவிடுவார்கள். இப்படித்தான் ஏதாவதொரு வகையில் கோபத்துக்கான வடிகாலாகவோ அல்லது கோபமே இல்லாமல் மொக்கையாக்கிவிடும் சம்பவமோ கால ஓட்டத்தில் நடந்துவிடுகிறது.

குடும்பம் என்கிற அமைப்பு அவசியமா இல்லையா என்பதெல்லாம் தனியாகப் பேசப்பட வேண்டிய சமாச்சாரங்கள். அப்படிப் பேசுகிறவர்கள் இருக்கிறார்கள். ஆனால் ஆயிரம் பிரச்சினைகள் உள்ளுக்குள்ளாகப் புதைந்து கிடந்தாலும் நம் பிள்ளைகளுக்காக, அவர்களின் எதிர்காலத்துக்காக குடும்பம் என்கிற அமைப்பினை உடைக்காமல் இருப்பதுதான் நல்லது என்கிற சிந்தனைதானே இங்கு பெரும்பாலானவர்களுக்கும் இருக்கிறது? அப்படியென்றால் மேற்சொன்ன இரண்டு வழிகள்தான் கண் முன்னால் இருப்பவை.

வெளியில் என்னதான் கெத்தாகத் திரிந்தாலும் வீட்டுக்குள் அடங்கி நடக்கும் பெரிய மனிதர்கள் பல பேர்கள் இருக்கிறார்கள். அது தவறே இல்லை. ஆரம்பத்தில் ஈகோ இருக்கத்தான் செய்யும்; ‘நீ சொல்லி நான் என்ன கேட்கிறது?’என்று எரிச்சல் வரும். ஆனால் இணையிடம் ஒரு பயம் வந்தால் தப்பிவிட்டோம் என்று பொருள். அதுவே நம்மை எல்லைகளைத் தாண்டுவதிலிருந்து கொஞ்சம் தயங்கச் செய்துவிடுகிறது. 

மேலோட்டமாகப் பார்த்தால் திருமணம், குடும்ப அமைப்பு என்பதெல்லாம் காமமும், தனிமனிதக் கோபமும் அடங்கவும், மனிதன் தனிமனிதப் பக்குவத்தை அடைவதற்கான வாய்ப்புகளையும் உருவாக்கித் தந்துவிடுகிறதுதான். ஆனால் இவை மட்டுமே மனித வாழ்வின் சிக்கல்கள் இல்லை அல்லவா? மனிதர்களுக்கு நடிக்கத் தெரியும். தெரிகிறது. உணர்ச்சிகளைப் போலியாக அடக்கிக் கொள்ளத் தெரிகிறது. அப்படி அடக்கி வைத்துக் கொள்ளும் உணர்ச்சிகள் மனிதனை சும்மா விட்டு வைப்பதில்லை. உள்ளுக்குள் அலைகழிக்கப்படும் அவனுக்கு இன்றைய தொழில்நுட்பம் பல்வேறு வழிவகைகளை உருவாக்கித் தந்திருக்கிறது. ஏதேதோ குளறுபடிகள்; எதையாவது விசித்திரமாகச் செய்துவிட முடியும் என்கிற ஆர்வத்தையும், குறுகுறுப்பையும் உருவாக்கித் தருகிறது. அதுதான் பல்வேறு வகைகளில் சிக்கல்களைக் கொண்டு வந்து சேர்க்கின்றன. ரகசியமாக மூன்றாம் மனிதர்கள் உள்ளே வருவதில் தொடங்கி என்னனென்னவோ நடந்துவிடுகிறது.

சீர்வரிசை வழங்கும் விழாவில் இதையொட்டித்தான் பேசினேன். 

நேற்று ஒரு செய்தி கண்ணில்பட்டது. ‘ஆபரேஷன் ஓபன் டோர்’ என்று அமெரிக்காவில் நியுஜெர்சி மாகாணத்தில் ஒரு தில்லாலங்கடி வேலையை காவல்துறையினர் நடத்தியிருக்கிறார்கள். சாட்டிங், டேட்டிங் என இருக்கும் பிரபல் ஆப்கள் வழியாக உள்ளே நுழைந்து வேட்டையாடிக் கொண்டிருப்பவர்களுக்கு கொக்கி வீசியிருக்கிறார்கள். தொடங்கும் போது ‘நான் பதினைஞ்சு வயசு, பதினான்கு வயசு’ என்று சொல்லியிருக்கிறார்கள். குழந்தைகள் என்பதால் விட்டு விலகியிருந்தால் பிரச்சினை இருந்திருக்காது. இருந்தாலும் பரவாயில்லை என்று சாட்டிங்கை தொடர்ந்தவர்களிடம் பசப்பி, தம் இடத்துக்கு வரச் சொல்லி தகவல் அனுப்பி, வந்தவுடன் கையும் களவுமாக பிடித்துவிட்டார்கள். ஐஎஸ் தீவிரவாதிகளைப் பிடித்ததைவிடவும் பெரிய பெரிய கதையாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

‘பெற்றோர்களே, கவனமாக இருங்கள்..உங்கள் குழந்தைகளையும் இவர்களைப் போன்றவர்கள் வேட்டையாடக் கூடும்’ என விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். சிக்கியவர்களின் பட்டியலில் இந்தியர்களும்- குறிப்பாக தமிழர்களும் உண்டு. அமெரிக்க நண்பர்கள் அவர்கள் அகப்பட்டதைக் கதை கதையாகச் சொல்கிறார்கள். பரிதாபமாகவும் இருக்கிறது. தடம் மாறுவது மனித இயல்புதான். எல்லோருமே இரும்பு மனநிலையோடு இருக்க முடியும் என்று சொல்லிவிட முடியாது. வாய்ப்புகள் வசப்படும் வரைக்கும்தான் மனிதர்கள் புனிதர்கள். சஞ்சலம் அலைகழித்துக் கொண்டிருக்கும் போது வகைதெரியாமல் சிக்கிக் கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது என்பதை சிற்றின்ப மனம் மறந்துவிடுகிறது. அப்படித்தான் சிக்கியிருக்கிறார்கள். திருமணம் ஆனவர்கள், குழந்தைகளைக் கொண்டவர்களாம். விசா அனுமதி துண்டிக்கப்பட்டுவிட்டது. 

குடும்பம், திருமண பந்தத்தைத் தாண்டி என்னவோ மனிதர்களை இழுத்துக் கொண்டேயிருக்கிறது. இல்லையா? மீனுக்கு வீசப்படும் தூண்டில் போலத்தான். சிக்காமல் கவ்வி இழுத்துவிட முடியும் என்றுதான் மீன்கள் நம்புகின்றன. பல மீன்களுக்கு இழுக்கும் வித்தை தெரிந்திருக்கிறது. சில மீன்கள் சிக்கிக் கொள்கின்றன. சிக்கிக் கொள்ளும் மீன்களின் வலியை விடவும் அந்த மீன்களின் குடும்பம் எதிர்கொள்ளும் வலி மிகக் கொடுமையானது.

Nov 5, 2019

ஆனந்தம்

ஞாயிற்றுக்கிழமை மூன்று பெண்களுக்கும் சீர்வரிசை வழங்கும் விழாவை மிகச் சிறப்பாக நண்பர்கள் நடத்தி முடித்துவிட்டார்கள். முடித்துவிட்டோம். சுபரஞ்சனி, சந்தியா, ஆனந்தி என மூன்று பெண்கள்- பெற்றோரின் ஆதரவின்றி வளர்ந்த பெண்கள். மணமேடை அமைத்து, அருப்புக்கோட்டையிலிருந்து வந்திருந்த மணிவிழா தம்பதியினரை நடுவில் அமரச் செய்து அவர்களுக்கு இருபுறம் மணமக்களை அமர வைத்திருந்தோம். 


(மெடோனா டீச்சர்)

மெடோனா டீச்சர் எனக்கு ஆறாம் வகுப்பு ஆசிரியை. அவர்தான் முழுமையான தயாரிப்புகளோடு வந்து நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். பள்ளிக்காலத்தில் எனது தலைமையாசிரியர் இனியன். அ.கோவிந்தராஜூ; அவர் மணமக்களை வாழ்த்தி பேசினார். ஓய்வுபெற்ற ஆசிரியர் அவர். தகவல் சொன்னதோடு சரி. கரூரிலிருந்து பேருந்து பிடித்து வந்துவிட்டார். 

(முனைவர் இனியன். அ.கோவிந்தராஜூ)

ஞாயிறு காலையிலிருந்தே அரசு தாமஸ் மண்டப வேலைகளைத் தொடங்கியிருந்தார். மதியவாக்கில் அவரோடு இணைந்து கொண்டேன். பிறகு ஒவ்வொருவராக வந்து சேர்ந்தார்கள். வேலை நடந்து கொண்டேயிருந்தது. மதியம் இரண்டு மணிவாக்கில் முழுமையாகத் தயாராகிவிட்டோம். பொதுவாகவே எனக்கு ஒரு ராசி உண்டு. ஒரு காரியத்தைத் தொடங்கினால் போதும். உடனடியாக அதைச் செய்து முடிக்க ஒரு கூட்டம் கை கோர்த்துவிடும். முழுமையான அர்ப்பணிப்புடன் பணியாற்றும் அந்தக் கூட்டம் இறுதியில் அத்தனை பெருமைகளையும் எனக்கு வழங்கி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும். இந்நிகழ்விலும் அதுதான் இம்மிபிசகாமல் நடந்தது.

ஊரின் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டார்கள். அவர்களில் பெரும்பாலானவர்களை தனிப்பட்ட முறையில் நேரில் கூடச் சந்தித்து அழைக்கவில்லை. ‘நல்ல காரியத்தைச் செய்கிறார்கள்’ என்றே வந்திருந்தார்கள். அருப்புக்கோட்டையிலிருந்து சங்கரமூர்த்தி அவர்கள் குடும்பத்தோடு வந்து சேர்ந்தவுடன் நிகழ்வு தொடங்கியது. அக்குடும்பத்தினரே தொடக்கத்தில் வரவேற்று இறுதியில் நன்றியும் சொன்னார்கள்.

நிகழ்வில் சில உள்ளூர் பெரியவர்கள் மணமக்களை வாழ்த்திப் பேசினார்கள். அதன் பிறகு மணமக்களுக்கு சங்கரமூர்த்தி தம்பதியினர் தலா ஒரு சவரனில் தங்கச் சங்கிலியை அணிவித்து, சீர் வரிசைப் பொருட்களை வழங்கினார்கள். 


மிக்ஸி, கிரைண்டர், சமையல் பொருட்கள், மளிகை என அவர்கள் குடும்ப வாழ்வினைத் தொடங்குவதற்கான அத்தனை பொருட்களையும் தேடித் தேடி வாங்கியிருக்கிறோம். நிகழ்வு முடிந்த பிறகு பெண்களின் வீடுகளுக்குச் செல்வதற்கென தயாராக இருந்த மூன்று வண்டிகளும் மேடைக்கு அருகிலேயே நிறுத்தப்பட்டிருந்தன.

(திரு.சங்கரமூர்த்தி குடும்பம்)

மணப்பெண்களில் ஒருவர் நன்றி கூறிப் பேசினார். அதன் பிறகு நானும், முத்தாய்ப்பாக தலைமையாசிரியரும் பேசினோம். மதியம் மூன்றரை மணிக்குத் தொடங்கி ஐந்தரை மணிக்கு உரைகள் நிறைவடைந்தன. சிற்றுண்டியுடன் கூட்டம் நிறைவடைந்தது.

வந்திருந்த கூட்டத்தைப் பார்க்கும் போது நல்ல காரியத்தைச் செய்யும் போது பலரும் நம்மோடு நிற்பார்கள் என்பதைத் திரும்பத் திரும்ப உணர்த்துவதாக இருந்தது. ஆனால் அதே சமயம் இன்னொன்றையும் கவனிக்க வேண்டியிருக்கிறது. கல்வி, மருத்துவம் என்கிற காரியங்களைச் செய்து கொண்டிருந்தால் அரசியல்வாதிகளுக்கு எதுவும் உறுத்துவதில்லை. ஆனால் திருமணம் என்றால் பதறிவிடுவார்கள் போலிருக்கிறது. ‘யாரு அந்தப்பையன்?’ என்று ஒரு முக்கியமான மனிதர் கேட்டதாகச் சொன்னார்கள்.  அவர் இன்னமும் என் தலையைப் பார்க்கவில்லை போலிருக்கிறது. இனிமேல் ‘யாரு அந்த ஆளு?’ என்று கேட்கச் சொல்ல வேண்டும். நல்லவிதத்தில் கேட்டாரோ, கெட்டவிதத்தில் கேட்டாரோ தெரியாது- அதை அம்மா கேள்விப்பட்டு ‘உன்னை எதுக்கு விசாரிக்கிறாங்க?’ என்று குழம்பிவிட்டார். இதையெல்லாம் செய்தால் ஒருவன் அரசியலுக்கு வந்துவிடுவான் என்று நினைப்பதைப் போன்ற ஒரு முட்டாள்தனம் இருக்கிறதா? தலைவலி!

இன்றைய சூழலில் தேர்தலில் போட்டியிட வேண்டுமானால் ஐந்து கோடி ரூபாயாவது தேவைப்படும். இருக்கிற சொத்தையெல்லாம் விற்றாலும் கூட பத்தாத தொகைக்கு தலையை அடகு வைத்து கடன் வாங்க வேண்டும். அப்படியே செலவு செய்தாலும் வைப்புத் தொகையாவது மிஞ்சுமா?. இந்த நிதர்சனம் எனக்கு நன்றாகவே தெரியும். எல்லாவற்றையும் தேர்தல் அரசியலுடன் பிணைத்துப் பார்ப்பது அபத்தம்.   ஒன்றிரண்டு பேர் வெளியில் வந்தாலும் ‘நமக்கு எதுக்கு வம்பு?’அடங்கச் செய்துவிடுகிற பிணைப்பு அது. அதனால் எல்லாவற்றையும் அரசியலோடு முடிச்சுப் போட வேண்டியதில்லை. இதையெல்லாம் செய்தால் இப்படியெல்லாம் விளக்கம் கொடுக்க வைத்துவிடுகிறார்கள். தெரிந்த ஊரில் இத்தகைய காரியங்களைச் செய்யும் போதே மண்டை காய்ந்துவிடுகிறது. தெரியாத ஊரில் ஆட்களைத் திரட்டி ஏற்பாடுகளைச் செய்து நடத்தியிருந்தால் கண்ணாமுழி திருகியிருக்கும். 

ஊடக நண்பர்களும் நிகழ்வுக்குத் திரளாக வந்திருந்தார்கள். செய்திக்குறிப்புக்காக அவர்களின் ஒலிவாங்கியில் பேசச்  சொன்னார்கள். மேடையில் இருப்பவர்களிடம் பேசுங்கள் என நாசூக்காகத் தவிர்த்தேன். இத்தகைய காரியங்கள் நடக்கின்றன என வெளியில் தெரிவது தவறில்லை. இத்தகைய காரியங்களை எவனோ ஒருவன் செய்து கொண்டிருக்கிறான் என்பதும் கூட பலருக்கும் தெரியலாம். அதுவே போதும். ஆனால் முகத்தை வெளியில் பிரபலப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியமே இல்லை. இதைத்தான் மேடையிலும் சொன்னேன். கடைசி வரைக்கும் இப்படியே சிறு வட்டத்திற்குள் இருந்தால் போதும் என்றுதான் உளப்பூர்வமாக விரும்புகிறேன்.

(ராசிக்காரன் பந்தாவுக்காக இந்தப் படத்தை பதிவிடுகிறான்)

ராசிப்படி பெருமை தேடித்தருவதற்காகவே கூடிய ஆசிரியர்கள், உள்ளூர்வாசிகள், கொச்சினிலிருந்து வந்து மணமக்களுக்கு தனிப்பட்ட முறையில் அன்பளிப்பை வழங்கிய ராதாகிருஷ்ணன், அது போலவே கோவையிலிருந்து வந்திருந்து அன்பளிப்பை வழங்கிய ஓய்வு பெற்ற பேராசிரியர் கோபாலகிருஷ்ணன் மற்றும் சென்னை, கோவை, ஈரோடு என வெளியூர்களிலிருந்து வந்திருந்த நிசப்தம் வாசக நண்பர்கள் என நல்ல கூட்டம். அரசு தாமஸ், கலைசெல்வி, ரமாராணி, கார்த்திகேயன், இளங்கோ, வரதராஜன், ஸ்ரீனிவாஸ், பாலு, நிவாஸ், ஒழலக்கோவில் நண்பர்கள், தெற்குப்பதி இளைஞர்கள், அடர்வனம் குழு, நிசப்தம் மாணவர்கள் என ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக நன்றி சொல்ல வேண்டும். ஜீவா, விக்னேஸ்வரன் போன்றவர்கள் நம்மாட்கள்.

மண்டபத்தை இலவசமாகக் கொடுத்த வெங்கடேஸ்வரன் அவர்களில் தொடங்கி மைக் செட் அமைத்துக் கொடுத்த வெங்கிடு வரைக்கும் அத்தனை பேருக்கும் மனமார்ந்த நன்றி.

ஆத்மார்த்தமான ஒரு செயலைச் செய்திருக்கிறோம். மூன்று பெண்களின் முகத்திலும் இருந்த மகிழ்வினை கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் உணர்ந்திருக்க முடியும். நிகழ்வு முடிந்த பிறகு பெரும்பாலானவர்கள் நெருங்கி வந்து பேசினார்கள். எதிராளி நம் கைகளைப் பற்றுகிற தொனியிலேயே நாம் புரிந்து கொள்ள முடியும் என்பதை உணர்த்தும் விதமாக இறுகப்பற்றி நெகிழ்ச்சியாகப் பேசினார்கள். ஒருவகையில் அது நம்மை நெகிழ்த்துவிடுகிற பற்றுதல். நண்பர் சரவணக்குமாரும் அவரது அண்ணன் சசிக்குமாருக்கும் எனது அன்பு. பெற்றோரின் மணிவிழாவை இப்படியானதொரு அன்பு சார்ந்த செயலாக மாற்ற முடியும் என்ற வாய்ப்பினை அவர்கள்தான் உருவாக்கிக் கொடுத்திருக்கிறார்கள். 

ஒரேவிதமான காரியங்களைத் தொடர்ந்து செய்வதற்கான வாய்ப்புகள் அமைவதில்லை. ஆனால் இப்படியொரு வாய்ப்பு மீண்டும் மீண்டும் அமைய வேண்டும் என விரும்புகிற நிகழ்வாக அமைந்துவிட்டது. எல்லோரையும் அனுப்பி வைத்துவிட்டு நானும் தாமஸ் சாரும் பைக்கை கிளப்பிக் கொண்டு கிளம்பினோம். குளிர்காலம் தொடங்கிவிட்டதை உணர்ந்து கொள்ளும் விதமான காற்று முகத்தை வருடியது. அது காற்றின் குளிர்ச்சியா அல்லது ஆழ்மனதின் குளிர்ச்சியா எனத் தெரியவில்லை.

நிழற்படங்கள் - அன்பு நண்பர் ஈரோடு மூர்த்தி.

Nov 2, 2019

மருத்துவர்களின் சம்பளம்

பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் போது டாக்டர் ஆகிவிட வேண்டும் என்று அம்மாவும் அப்பாவும் கனவு கண்டார்கள். பெரும்பாலான பெற்றோரின் கனவு அதுதான். ஆனால் அது என்ன அவ்வளவு எளிதான காரியமா? கவனம் சிதறாமல் வெறித்தனமாக படிக்க வேண்டும். அந்த வயதில் அப்படியானதொரு மனநிலை வாய்ப்பது வரம். மிகச் சிறப்பாக படிக்கக் கூடிய மாணவர்களுக்கு மட்டுமே அந்தக் கனவு சாத்தியமானது. இருநூறு மாணவர்கள் படித்த பனிரெண்டாம் வகுப்பில் இரண்டு அல்லது மூன்று பேர்கள் மட்டுமே அந்தக் கனவைத் துரத்துவதற்கான தகுதிகளுடன் இருந்தார்கள். அவர்கள் எம்.பி.பி.எஸ் சேர்ந்த போது கொஞ்சம் பொறாமையாகவும் இருந்தது. அவர்கள் ஹவுஸ் சர்ஜன் ஆவதற்குள்ளாகவே பனிரெண்டாம் வகுப்பில் தொள்ளாயிரம் மதிப்பெண்களைக் கூட தாண்ட முடியாதவர்கள் போனாம்போக்கி கல்லூரியில் பொறியியல் சேர்ந்து ஏழெட்டு அரியர் வைத்து படித்து முடித்து ஏதாவதொரு சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியில் சேர்ந்திருந்தார்கள். 

மருத்துவப் படிப்பில் சேர்ந்தவர்கள் ஹவுஸ் சர்ஜன் முடித்து, அதன் பிறகு முதுகலைப் படிப்பை  முடித்துவிட்டு அரசுப்பணியில் சேரும் போது பொறியாளர்களின் சம்பளம் லட்சத்தைத் தாண்டியிருந்தது. அப்படித் தாண்டியவர்கள் ஆளே மாறியிருந்தார்கள். ஒன்றிரண்டு முறை அமெரிக்காவோ ஐரோப்பாவோ சென்று வந்தவர்களாகவோ அல்லது அங்கேயே டேரா போட்டவர்களாகவோ மாறிப் போனார்கள். உள்ளூரில் நறுக்கென்று சொத்தும் சேர்த்துவிட்டார்கள். ஆனால் மருத்துவம் படித்த பல நண்பர்களுக்கு இன்னமும் சொந்த வீடு இல்லை. முப்பத்தைந்தைக் கடந்துவிட்ட பிறகும் ‘பார்த்துக்கலாம்’ என்கிற நம்பிக்கையிலேயே இருக்கிறார்கள். அரசு மருத்துவராகப் பணியாற்றும் நண்பர்களைச் சந்திக்கும் போது சம்பளத்தைத் தவிர எல்லாவற்றையும் பேசிக் கொள்கிறோம். 

மருத்துவர்களில் கிட்டத்தட்ட பத்து வருட அனுபவம் நிறைந்தவர்கள் கூட எழுபதாயிரத்தை தாண்டி வாங்குவதில்லை. அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. ‘நன்கு படித்தவர்கள்’ என்பதைத் தவிர அவர்கள் செய்த பாவம் என்னவென்றுதான் புரியவில்லை. பத்தாம் வகுப்பில் ஐநூறுக்கு நானூற்றைம்பது மதிப்பெண்களைத் தாண்டிய காலத்திலிருந்து ‘மருத்துவர்’ என்னும் பெருங்கனவைத் தூக்கிக் கொண்டு ஓடியதைத் தவிர அவர்கள் செய்த தவறு என்ன? 

பொறியியல் படித்தவர்களை மருத்துவர்களோடு மட்டும் ஒப்பிடவில்லை. தம் காலத்தில் தம்மோடு பள்ளியில் படித்த பெரும்பாலானவர்களோடு ஒப்பிடும் போது அரசு மருத்துவர்களின் பொருளாதார நிலை சற்று தாழ்வுதான் என்று புரிந்து கொள்ள வேண்டும். ஹார்டுவேர் கடை நடத்துகிறவன் கூட அதிகமாகச் சம்பாதிக்கிறான்.

இப்பொழுதெல்லாம் ஊதிய உயர்வு என்று யார் கேட்டாலும் வயிறு எரியும் கூட்டம் பெருகிவிட்டது. அவர்களுக்கு எதைப் பற்றியும் எந்த எழவும் தெரியாது. மத்திய தர மனநிலை என்று சொல்வார்கள்-அவர்களுக்கு தாம் நன்றாக இருந்தால் போதும்.  நாட்டைக் காப்போம் என்பார்கள். சுதந்திர தினத்துக்கு சட்டையில் தேசியக் கொடியைக் குத்தி தேசிய கீதம் பாடும் போது எழுந்து நிற்பதைத் தவிர துரும்பைக் கிள்ளிப் போட மாட்டார்கள். இந்த நாடு நாசமாகப் போக அடுத்தவர்கள் காரணம் என்பார்கள். ஆனால் தம்மிடமிருந்து எந்தப் பங்களிப்பும் இல்லை என்பதைப் பற்றிய எந்த லஜ்ஜையும் இருக்காது. எல்லோரையும் குற்றம் சொல்வார்கள். 

சுகாதாரத் துறையில் தமிழகத்தின் இடம் என்ன? 2018 ன் ஹெல்த் இண்டெக்ஸ் படி கேரளா, பஞ்சாப் மாநிலங்களுடன் சேர்த்து தமிழகமும் பட்டியலில் முதன்மையான இடத்தில் இருக்கிறது. யார் காரணம்?  பத்தாம் வகுப்பிலிருந்து மருத்துவக் கனவுகளைத் துரத்தியபடியே படித்து மருத்துவர்கள் ஆனார்கள் அல்லவா? அவர்கள்தான். அந்த மருத்துவர்கள் காட்டுவதுதான் தேசபக்தி. மேம்போக்காக ‘ஊழியர்களுக்கான சம்பளத்திலேயே பெரும்பகுதி போய்விடுகிறது’ என்று பேசுகிற அரைவேக்காட்டு அரசியல்வாதிகளின் வார்த்தைகளைப் பிடித்துக் கொண்டு தொங்குகிறார்கள். சம்பளம் யாருக்குப் போகிறது? மருத்துவர்கள், ஆசிரியர்கள், போக்குவரத்து ஊழியர்கள் என அரசு செய்ய வேண்டிய வேலையைச் செய்து கொடுக்கிறவர்களுக்குத்தானே போகிறது? அவர்கள் வேலையைச் செய்து கொடுப்பதற்கான ஊதியத்தை அரசுதானே கொடுக்க வேண்டும்? ஊழியர்கள் அடிமாடுகளைப் போல எதைப் பற்றியும் யோசிக்காமல் வேலையை மட்டும் செய்ய வேண்டும் என்று கேட்பது எந்தவிதத்தில் நியாயம்? 

ஒருவன் தம்முடைய கோரிக்கையை முன்வைக்கும் போது உடனடியாக லஞ்சம் பெருகிவிட்டது, ஊழலில் கொழிக்கிறார்கள் என்று உத்தம காந்தியைப் போலவே பேசத் தொடங்கிவிடுகிறார்கள். அப்படி பேசிக் கொண்டிருப்பவர்களில் எத்தனை பேர் வருமான வரியில் ஐந்து ரூபாயை மிச்சம் பிடிக்கலாம் என்று கணக்குப் போடுகிற கழிசடைகளாக இருப்பார்கள் என்று அவர்கள் மனசாட்சிக்கு மட்டுமே தெரியும். 

மருத்துவர்கள் தனியார் மருத்துவமனையில் பெரும் சம்பளம் வாங்குகிறார்கள்; கிளினிக் நடத்தி கொள்ளையடிக்கிறார்கள் என்றெல்லாம் பேசுகிறவர்கள் ஒட்டுமொத்த மருத்துவர்களைப் பற்றியும் தெரியாத மடையர்கள். சென்னையிலும், கோவையிலும் இருக்கும் பெருநகர மருத்துவர்களைப் பார்த்துவிட்டுப் பேசுகிற வயிற்றெரிச்சல் பேர்வழிகள். மூன்றாம், நான்காம் தர நகராட்சிகள், சிற்றூர்களில் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு கார்போரேட் மருத்துவமனைகளில் பணியாற்றுவதற்கும், கிளினிக்கில் ஒரு நோயாளியைப் பார்த்துவிட்டு இருநூறும், முந்நூறும் வாங்குவதற்கும் வாய்ப்பேயில்லை. அத்தகைய மருத்துவர்களைப் பற்றி எல்லாம் ஏன் நினைப்பதேயில்லை? முன்பின் ஏதேனும் ஒரு பி.ஹெச்.சிக்காவது சென்றிருந்தால் நினைக்கலாம். 

சிறு பிரச்சினை என்றாலும் பெரு மருத்துவமனைகளுக்கு ஓடிப் போய் ‘எப்படியாச்சும் காப்பாத்திடுங்க’ என்று கதறுவார்கள். ஆஞ்சியோ செய்தாலே தப்பித்துவிடலாம் என்றாலும் பைபாஸ் சர்ஜரி செய்யச் சொன்னாலும் செய்து கொள்வார்கள். எவ்வளவு லட்சம் செலவு ஆனாலும் சொத்தை விற்று, கடனை வாங்கிக் கட்டிவிட்டு வருவார்கள். ஆனால் கிராமத்தில் பணியாற்றும் அரசு மருத்துவர்கள் ‘எங்களின் ஊதியக் குறைபாட்டை நீக்குங்கள்’ என்று கோரினால் அவர்களுக்குக் கொடுக்கும் பணத்தில்தான் இந்த நாடே நாசமாகப் போவது போல துள்ளிக் குதிக்கிறார்கள். 

இந்தியா சுகாதாரப் பட்டியலில் சில இடங்கள் சரிந்தாலும் பதறுவோம். ஆனால் கிராமப்புறங்களில் பணியாற்றும் மருத்துவர்கள் எவ்வளவு சம்பளம் வாங்கினாலும் நமக்கு அது பற்றியக்  கவலை கிஞ்சித்தும் இல்லை. இரண்டும் எவ்வளவு நெருங்கிய தொடர்பு உடையது என்பதை யோசிக்க வேண்டாமா?  மருத்துவர்கள் போராடுகிறார்கள்; அரசு எதிர்க்கிறது; அரசியல்வாதிகள் ஆதரிக்கிறார்கள்; போராட்டத்தைத் திரும்பப் பெறுகிறார்கள். என்ன வேண்டுமானாலும் நடந்து கொண்டிருக்கட்டும். அது அரசு ரீதியிலான பிரச்சினைகள். ஆனால் இங்கு சாமானிய மனிதர்களின் மனநிலை மாற வேண்டும். ஒருவன் தமக்கான ஊதியத்தைக் கேட்கிறான் என்றால் அவன் நிச்சயமாக ஏதோவொருவகையில் பாதிக்கப்பட்டிருக்கிறான் என்றுதான் பொருள். ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு நாளும் தெருவுக்கு வந்து ஊதிய உயர்வைக் கேட்பதில்லை. ஒருவரது கோரிக்கையில் இருக்கும் அடிநாதமான வலியையும், சிக்கல்களையும் தெளிவுபடுத்திக் கொள்ளாமல் தம்முடைய அரைவேக்காட்டுப் புத்தியைக் காட்ட வேண்டியதில்லை என்பதை மட்டும் திருமண மண்டபத்திலும், எழவு வீடுகளிலும், வாட்சாப்பிலும், பேஸ்புக்கிலும் பொங்குகிறவர்கள் புரிந்து கொண்டாலே போதும். வர வர அப்படிப் பொங்குகிறவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டிருப்பதாகவே தோன்றுகிறது. 

மருத்துவர்கள் போராட்டத்தைக் கைவிட்டுவிட்டார்கள். ஆனாலும் அவர்களது கோரிக்கைகளின் நியாயம் அப்படியேதான் இருக்கிறது. அவர்களோடு நிற்க வேண்டியது சாமானியர்களின் கடமை.

நினைவூட்டல்

நாளை நடைபெறும் நிகழ்வுக்கு அழைத்து சில நண்பர்களுக்கு தனிப்பட்ட முறையில் மின்னஞ்சல் எழுதியிருக்கிறேன். நிசப்தம் நண்பர்களுக்கு நினைவூட்டலுக்காக அதன் பிரதி...

                                                                ************

வணக்கம்.

நிசப்தம் அறக்கட்டளை கடந்த பல ஆண்டுகளாக கல்வி, மருத்துவ உதவி, கிராமப்புற மேம்பாடு உள்ளிட்ட செயல்களில் - பெரும்பாலும் விளம்பரமின்றிச் செயல்பட்டு வருகிறது என்பதை நீங்கள் அறிந்திருக்கக் கூடும். பெரும்பாலான நிகழ்ச்சிகளில் பயனாளிகளை மட்டும் அழைத்து அவர்களுக்கான உதவிகளைச் செய்துவிடுவோம். ஆனால், நாளை நடைபெறும் ஒரு நிகழ்வுக்காக நிறைய நண்பர்களை அழைக்க விரும்புகிறோம். 

அருப்புக்கோட்டையைச் சார்ந்த நிசப்தம் வாசகர்,  தம்முடைய பெற்றோரின் மணிவிழா கொண்டாட்டத்தை தவிர்த்துவிட்டு அந்தத் தொகையை ஆதரவற்ற பெண்களின் திருமணத்துக்கு செலவு செய்ய விரும்புவதாகச் சொல்லி முன் வந்தார். அவர் கேட்டுக் கொண்டதற்கிணங்க, மூன்று பெண்களைக் கண்டறிந்தோம். மூவருமே பெற்றோர் இல்லாத பெண்கள். அவர்களின் திருமணத்துக்குத் தேவையான சீர்வரிசைப் பொருட்கள் (ஒவ்வொருவருக்கும் தலா ரூ.75000/ மதிப்புள்ள கட்டில், பீரோ, கிரைண்டர், மிக்ஸி, சமையல் பாத்திரங்கள், ஒரு பவுன் நகை) உட்பட எல்லாவற்றையும் சேர்த்து 03.11.2019 அன்று கோபி ராமாயம்மாள் திருமண மண்டபத்தில் மதியம் மூன்று மணிக்கு வழங்குகிறோம்.


இந்நிகழ்ச்சியைக் கவனப்படுத்தும் போது ஆடம்பரத் திருமணங்களைத் தவிர்த்துவிட்டு அந்தத் தொகையை வேறொரு பெண்ணின் வாழ்க்கையில் ஒளியேற்ற பயன்படுத்தலாம் என்று யாரேனும் சிலருக்காவது எண்ணத் தோன்றும். இரண்டாவதாக, அந்தப் பெண்கள் தமக்காக இத்துணை உறவுகள் இருக்கின்றன என்று மகிழ்வார்கள். இந்த இரண்டு நோக்கங்களையும் மனதில் வைத்து நிகழ்வினை ஏற்பாடு செய்திருக்கிறோம். ஞாயிற்றுக்கிழமையின் இரண்டு மணி நேரங்களை மூன்று பெண்களுக்காக ஒதுக்கித் தந்து நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பு செய்யுங்கள்.

நன்றி.

மிக்க அன்புடன்,
வா.மணிகண்டன்