Oct 23, 2019

அழைப்பு

கிட்டத்தட்ட அனைத்து ஏற்பாடுகளும் முடிந்துவிட்டன. சீர்வரிசை பொருட்கள் வாங்கப்பட்டுவிட்டது. புதுப்புடவை, வேஷ்டி சட்டை வாங்கி மணப்பெண்களிடம் கொடுத்தாகிவிட்டது. உணவுக்குச் சொல்லியாகிவிட்டது. அழைப்பிதழ் விநியோகம் மட்டும் பாக்கியிருக்கிறது. இருநூறு அழைப்பிதழ்களை அச்சிட்டிருக்கிறோம். அறுபது அழைப்பிதழ்கள் மணப்பெண்கள் குடும்பங்களுக்கு. மீதமிருக்கும் நூற்றி நாற்பது அழைப்பிதழ்களை நிசப்தம் பற்றி ஓரளவுக்கேனும் தெரிந்தவர்களுக்கு மட்டும் கொடுக்க வேண்டும். இந்த வாரத்தில் அந்தப் பணியை முடித்துவிடுவோம். 


ஏற்கனவே குறிப்பிட்டது போல இரண்டு நோக்கங்கள் இருக்கின்றன- சங்கரமூர்த்தி-தனலட்சுமி குடும்பம் போலவே நம்மால் யாராவது ஒரு பெண்ணுக்கு உதவ முடியும் என்ற எண்ணம் வேறு சிலருக்கும் உருவாகலாம். அது எங்கேயேனும் சில பெண்களுக்கான உதவியாக அமையலாம். இரண்டாவதாக, உதவுகிற குடும்பத்துக்கு கிடைக்கும் மனமகிழ்வும், உதவி  பெறும் பெண்களுக்கும் உருவாகக் கூடிய நம்பிக்கை சார்ந்த  மனநிலையும் மிக முக்கியம். இரண்டையும் நிச்சயமாக நிறைவேற்றிவிடலாம். நம்பிக்கை இருக்கிறது.

நாம் செய்கிற செயல்கள் யாவுமே சங்கிலித் தொடராக இருக்க வேண்டும் அல்லது இன்னொருவருக்கான முன்னெடுப்பாக இருக்க வேண்டும். அப்படி சங்கிலித்தொடராக இருக்காது என்ற சிறு எண்ணம் தோன்றிவிட்டாலும் கூட அதை மேற்கொள்வதில் அர்த்தமிருக்காது. ஒரு சிறு வட்டத்துக்கான சந்தோஷத்தையும் ஆத்ம திருப்தியையும் உருவாக்கியபடி விளம்பரமில்லாமல் அமைதியாகப் பயணித்துக் கொண்டிருந்தாலே போதும். மற்றபடி, இச்சமூகத்தையே புரட்டிப் போடுவதெல்லாம் சாத்தியமே இல்லை. அப்படி நம்பிக் கொண்டிருந்தால் அதுவொரு மூடநம்பிக்கைதான். மிகப்பெரிய வனத்தில் சிறு மரத்தின் மெல்லிய அசைவைப் போன்றதுதான் இத்தகைய செயல்கள். அதற்கு மேல் எதுவுமில்லை!

மூன்று பெண்களுக்கும் பெற்றோர் இல்லை. பெரிய வசதியில்லை. அவர்களுக்கான ஒரு வலுவை, பலத்தை முகம் அறியா ஒரு குடும்பம் உருவாக்கித் தருகிறது. அதற்கான பாலமாக இருக்கிறோம். அவ்வளவுதான். நிசப்தம் செயல்பாடுகளைப் பொறுத்தவரையில் எதுவுமே அனுபவம்தான். சில நாட்கள் முன்பு வரைக்கும் இதைச் செய்யலாம் என்று நினைத்திருக்கவே மாட்டோம். திடீரென அதற்கான வாய்ப்பு உருவாகும் போது செயல்படுத்துவதற்கான சூழலை உருவாக்கிக் கொள்கிறோம். ஒவ்வொரு செயலிலும் கிடைக்கும் அனுபவங்கள் அடுத்தடுத்த செயல்களில் திட்டமிடுவதற்கான பாடங்களைக் கற்றுத் தருகின்றன. இந்தச் செயலும் அத்தகையதொரு புதிய காரியம்தான்.

நவம்பர் 3 ஆம் தேதி ஞாயிறு மதியம் மூன்று மணிக்கு நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருக்கிறோம். பெரும்பாலான ஊர்களிலிருந்து காலையில் கிளம்பினால் கூட வந்துவிட முடியும். அதிகபட்சம் மூன்று மணி நேரம்தான். ஐந்தரை மணிக்கு நிகழ்வை முடித்துவிட்டால் திரும்ப கிளம்புவதற்கும் ஏதுவாக இருக்கும். நிசப்தம் வாசகர்களுக்கு இதுதான் அழைப்பிதழ். இன்னமும் பத்து நாட்கள் இருக்கின்றன. குறித்து வைத்துக் கொள்ளுங்கள். கட்டாயம் கலந்து கொள்ளவும். மூன்று பெண்களின் சார்பாகவும், சங்கரமூர்த்தியின் குடும்பம் சார்பாகவும், நிசப்தம் நண்பர்கள் சார்பாகவும் அன்பான அழைப்பு இது!

6 எதிர் சப்தங்கள்:

Sherwin said...

மணமக்களுக்கு வாழ்த்துகள்!வாழ்க வளமுடன்!!

Thirumalai Kandasami said...

வாழ்த்துகள்

சேக்காளி said...

👏

Krishnasivam said...

Excellent, Thanks to the contributor and Nisaptham team! Best wishes

Saravanan Sekar said...

Great, Congratulations to Nisaptham Team and Mani Anna..

Jaypon , Canada said...

மணமக்கள் அனைவரும் வாழ்க வளமுடன். அனைவருக்கும் இனிய பாதுகாப்பான தீபாவளி வாழ்த்துக்கள்.