Oct 21, 2019

குழந்தைகள்

வட்டார வள மையம் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? தமிழகத்தில் ஒவ்வொரு ஒன்றியத்திலும் இப்படியொரு மையம் செயல்படுகிறது. சிறப்புக் குழந்தைகளுக்கான பள்ளி. சராசரியாக ஒவ்வொரு மையத்திலும் இருபது குழந்தைகளாவது இருக்கக் கூடும். அந்தக் குழந்தைகளுக்கென சிறப்பாசிரியர் பயிற்சி பெற்றவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தற்காலிகப் பணியாளர்கள்தான் ஆனால் எனக்குத் தெரிந்த வரையிலும் ஆத்மார்த்தமாகப் பணி செய்கிறவர்களே அதிகம்.

பலருக்கும் இப்படியொரு மையம் இருப்பது தெரிவதில்லை. கடந்த வருடம் மூன்று ஒன்றியங்களிலும் உள்ள குழந்தைகளை ஒரு திருமண மண்டபத்திற்கு வரவழைத்து விருந்தளித்து, குழந்தைகளுக்கான செயல்பாட்டாளர் சதீஷை வைத்து சில நிகழ்ச்சிகளைச் செய்திருந்தோம். அது அந்தக் குழந்தைகளுக்கு மிகப்பிடித்தமான நிகழ்வாக அமைந்திருந்ததாக அந்த மையங்களின் பொறுப்பாளர்கள் சொன்னார்கள். இந்த வருடமும் அப்படியொரு நிகழ்வினை ஏற்பாடு செய்யச் சொல்லிக் கேட்டிருந்தார்கள். அதற்கு நிறைய மெனக்கெட வேண்டும். ஜனவரிக்கு மேல் பார்த்துக் கொள்ளலாம் என நினைத்திருந்தேன்.

வள்ளியப்பன் தம்மைப் பற்றி பொதுவில் எழுதுவதை விரும்பமாட்டார். அமெரிக்காவில் இருக்கிறார். அவ்வப்பொழுது நிசப்தம் அறக்கட்டளைக்கு பெருந்தொகையை அனுப்பி வைக்கக் கூடியவர். கடந்த வாரம் அழைத்து ‘மகள், அவளது வட்டாரத்தில் பணம் வசூலிக்கிறாள்; அந்தத் தொகையை ஏதாவதொரு நல்ல காரியத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளலாமா?’ என்றார். அவரது மகள் பள்ளி மாணவி. அவராக முன்வந்து நண்பர்கள், உறவினர்களிடம் வசூல் செய்கிறார். மகள் வசூலிப்பதற்கு மேலும் தேவைப்பட்டால் தாம் பணம் கொடுப்பதாகவும், ஏதேனும் குழந்தைகளுக்கு உதவலாம் என்றார் வள்ளியப்பன். இப்படி சில காரியங்களை மனதில் வைத்து அணுகுகிறவர்கள் நிறையப் பேர் உண்டு. 

பள்ளி மாணவி ஒருத்தி தமது சுற்றத்தில் வசூலித்து எங்கேயோ இருக்கும் முகமறியாதவர்களுக்கு நல்ல காரியத்தைச் செய்வோம் என விரும்பும் போது எப்படி மறுக்க முடியும்? மூன்று மையங்களின் குழந்தைகள் நினைவுக்கு வந்தார்கள். ஆனால் அவகாசம் மிகக் குறைவாக இருந்தது. தீபாவளிக்கு முன்பாக ஆடைகளை வழங்கினால்தான் அதில் அர்த்தம் இருக்கும். ஆசிரியை ரமாராணி நிசப்தம் செயல்பாடுகளில் முன்னால் நிற்பவர். ‘டீச்சர், நீங்கள் ஒருங்கிணைத்துவிடுகிறீர்களா?’என்று கேட்டதோடு சரி. மூன்று மையங்களின் ஆசிரியர்களையும் அடுத்தநாளே துணிக்கடைக்கு வரவழைத்து, ஒவ்வொரு குழந்தைக்குமான துணிகளையும் அவர்களைத் தேர்ந்தெடுக்கச் செய்து, அவர்கள் மீண்டும் பள்ளிக்குச் சென்று குழந்தைகளுக்கு அணிவித்துப் பார்த்து, ஒன்றிரண்டு மாற்றங்கள் இருந்தால் அதையும் செய்து என எல்லாவற்றையும் மூன்றே நாட்களில் முடித்துவிட்டார்.

மொத்தம் அறுபத்தைந்து குழந்தைகள். நாற்பத்தியிரண்டாயிரம் ரூபாய் ஆனது. பணம் கூடக் குறைய ஆனாலும் கவலைப்பட வேண்டாம்; தரம் முக்கியம் என்பதை நினைவில் நிறுத்தியிருந்தோம்.

புத்தாடைகளை குழந்தைகளுக்கு வழங்குவதற்காக மூன்று மையத்தின் குழந்தைகளையும் ஒரே இடத்துக்கு வரவழைப்பது சிரமம். அவர்களில் பலரால் நடக்க முடிவதில்லை. புது இடங்களில் அவர்களால் இருக்க முடிவதில்லை. அதனால் நாமாகவே சென்று கொடுத்துவிடலாம் என்று திட்டமிட்டோம். ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு இனிப்புப் பெட்டியை வாங்கிக் கொண்டு நண்பர்களோடு கிளம்பினோம். காலையில் அழைத்து சில முக்கியப் பிரமுகர்களிடம் ‘நீங்க வந்து கொடுத்தா நல்லா இருக்கும்’ என்றேன். ஒற்றைத் தொலைபேசிதான். யாருமே மறுக்கவில்லை. மிக எளிய நிகழ்ச்சி, ஒரு பதாகை கூட இருக்காது, எந்தச் செய்தித்தாளிலும் பெட்டிச் செய்தி கூட வராது என்பது வந்திருந்தவர்கள் ஒவ்வொருவருக்கும் தெரியும். அப்படி எதையும் எதிர்பார்க்காதவர்களை மட்டும்தான் அழைக்கவும் வேண்டும். ஞாயிற்றுக்கிழமை, விடுமுறை தினம் என்ற எந்தச் சங்கடத்தையும் காட்டவில்லை. அதுதான் இத்தகைய செயல்களைச் செய்ய மிகப்பெரிய பலமும் கூட.

கல்வித்துறையில் பணியாற்றும் கோபாலகிருஷ்ணன் பேருந்து பிடித்து வந்து சேர்ந்துவிட்டார். அரசு தாமஸ், பசுமை கார்த்திகேயன், ஆசிரியர்கள் இளங்கோ, வரதராஜன் எல்லாம் எப்போதும் உடன் பயணிப்பவர்கள். ஒவ்வொரு மையமாகப் பயணித்தோம்.

மருத்துவர் கார்த்திகேயன் முதல் மையத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டார். சில குழந்தைகளை அடையாளம் கண்டறிந்து ‘டவுன் சிண்ட்ரோம் இருக்கிற குழந்தைகள். நீங்க மருத்துவமனைக்கு வாங்க, இருதய பரிசோதனை உள்ளிட்டவற்றை இலவசமாகச் செய்துவிடலாம்’ என்று சொன்னார். அவருடைய மருத்துவமனை கோபியில் பெரிய மருத்துவமனை. நாம் செய்யும் உதவியைவிடவும் பேருதவி அதுதான் எனத் தோன்றியது. சித்த மருத்துவர் சரவணன், ஆசிரியர் ஸ்ரீனிவாசன் உள்ளிட்டவர்கள் அங்கே வந்திருந்தார்கள்.

அடுத்த மையத்தில் ஆசிரியர் கில்பர்ட், தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற மன்சூர் அலி உள்ளிட்டவர்கள். அதற்கடுத்த மையத்தில் கல்வி நிலையங்களின் உரிமையாளர் ஜனகரத்தினம், எஸ்.வி.சரவணன், ஆசிரியர் வெங்கிடுசாமி உள்ளிட்டவர்கள். இப்படி ஒவ்வொரு மையத்திலும் ஒரு கூட்டம்.  ஒவ்வொரு மையத்திலும் ஒரே மணி நேரம்தான். காலையில் ஒன்பதரை மணிக்கு ஆரம்பித்து மதியம் ஒரு மணிக்குள் முடித்துவிட்டோம். 

இனிப்பையும், ஆடைகளையும் வாங்கிக் கொண்ட அந்தக் குழந்தைகளுக்கும், அந்தப் பெற்றோருக்கும் அவ்வளவு சந்தோஷம். முதல் மையத்தில் பேசிய போது ‘அவர்கள் கடவுளின் குழந்தைகள் என்றால் நீங்கள்தான் கடவுள்கள்’ என்று பேசப் பேச உடைந்துவிட்டேன். அங்கேயிருந்த சில பெற்றோர்களும் அழுதார்கள். அவர்களை மகிழச் செய்ய வேண்டும் என்று சென்றுவிட்டு அழ வைக்கிறேன் என்று வருத்தமாக இருந்தது. ஆனால் ஒருவேளை அவர்களிடம் உடையாமல் பேசுகிற நிலையை அடைந்தால் மனிதம் என்னிடமிருந்து போய்விட்டது என்றுதான் அர்த்தம். 












சில தினங்கள் ஆசிர்வதிக்கப்பட்டவை. அப்படித்தான் அமைந்துவிடும். நேற்றும் அப்படித்தான். ஒரு ஞாயிற்றுக்கிழமையின் பொழுது ஆத்மார்த்தமானதாக அமைந்தது. குழந்தைகளின் கண்களில் சந்தோஷத்தின் மின்னல் கீற்றினைக் காட்டிய வள்ளியப்பனும் அவர்தம் குடும்பமும் நன்றாக இருக்க வேண்டும் என கடவுளர்களும், கடவுளர்தம் குழந்தைகளும் ஆசிர்வதிக்கட்டும்.

உடன் பயணிக்கும் ஒவ்வொருவருக்கும் மனப்பூர்வமான நன்றி.

12 எதிர் சப்தங்கள்:

kannan jagannathan said...

உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்💐💐💐

Unknown said...

Awesome Mani anna... Keep rocking :) - Murugesh Kandasamy

சேக்காளி said...

//ஒருவேளை அவர்களிடம் உடையாமல் பேசுகிற நிலையை அடைந்தால் மனிதம் என்னிடமிருந்து போய்விட்டது என்றுதான் அர்த்தம்.//
ஒற்றை தொலைபேசியில் பெரிய விசயங்கள் சாதிக்க முடிகிறதென்றால் அதற்கு மேற்காட்டியுள்ள அந்த புள்ளி தான் காரணமாய் இருக்கும்.
வாழ்த்துக்கள் மணி

சேக்காளி said...

//எல்லாவற்றையும் மூன்றே நாட்களில் முடித்துவிட்டார்//

"வா ம்மா மின்னல்" குடும்பத்த சேந்த
ரமாராணி க்கும் பாராட்டுகள்

Thirumalai Kandasami said...

மகிழ்ச்சி. அனைவருக்கும் நன்றி.

பேராசிரியர். கோபாலகிருஷ்ணன் said...

வள்ளியப்பனும் அவர்தம் குடும்ப அன்பர்களும் மற்றும் இந்த நிகழ்வை சாத்தியமாக்கிய அனைத்து நல்உள்ளங்களும் அருட்பேராற்றலின் கருணையினால்,உடல் நலம், நீளாயுள், நிறை செல்வம், உயர் புகழ், மெய்ஞ்ஞானம் ஓங்கி வாழ்க வளமுடன் என இறை நிலை நின்று வாழ்த்தி மகிழ்கிறேன். வாழ்க வளமுடன்-பேராசிரியர். ப.கோபாலகிருட்டிணன் 9994240629 9344053440

பேராசிரியர். கோபாலகிருஷ்ணன் said...

ஒவ்வொரு திங்கட்கிழமை அன்றும் முந்தைய சனி, ஞாயிறு-களில் மணி என்ன செய்து உள்ளார் என ஆவலுடன் எதிர்பார்த்து இருப்பது ஒரு திடீர் திருப்பக்காட்சி திரைப்படம் காண்பது போல உணர்கிறேன். வாழ்க வளமுடன்

viswa said...

உங்களுக்கு மறு பிறப்பே கிடையாது

விஸ்வநாதன்

அன்புடன் அருண் said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் மணி அவர்களே!

என்னவோ தெரியல...உங்கள பாத்தா கொஞ்சம் பொறாமையும்...நெறைய குற்ற உணர்ச்சியும் வருது!!

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

வட்டார வள மையம் பற்றி எழுதியமைக்கு நன்றி. கல்வித் துறையின் வட்டார அள்விலானமுக்கிய அங்கம் வட்டார வளமையம். மத்திய அரசின் நிதிய்டன் இயங்கு்ம் திட்டமான அனவருக்கும் கல்வி இயக்கத்தின் (தற்போது ஒருங்கிணைந்த கல்வித் திட்டம்) வட்டார நிலை அலுவலகம் BRC என்றழைக்கப் படும் Block Resource Centre. இதன் முக்கியப் பணிகள் பள்ளி வதுக் குழந்தைகள் அனைவரியும் பள்ளியில் சேர்க்க ஆசிரியர்கள் தூனையுடன் செயல்ப்டுவது. இடைநின்ற மாணவர்களை பள்ளிகளில் சேர்க்க உதவுவ்து ஆசிரியர்களுக்கு மாதந்தோறும் ஒரு சனிகிழமையில் பயிற்சி அளிப்பது. பிற நாட்கலீலும் க்ற்பித்தல் சார்ந்து மட்டுமல்லாது சுகாதாரம் மேளாண்மை, மாற்றுத் திறனாளிகளுக்கான கற்பித்தல் பயிற்சி ப்ண்ற பலவைதமான பயிற்சிகளை 15 ஆஆண்டுகளாக தொடர்ந்து அளித்து வருகிறது. தற்போது எந்தப் பள்ளியை எடுத்துக் கொண்டாலும் ஏதாவது ஒரு ஆஸ்ரீயர் ஏதாவது ஒரு பயிற்சியில் இருப்பார்(இது ஒரு குறைபாடாகவும் கருதப் பட்டது) மற்றும் பல்வேறு புள்ளி விவரங்களை சேகரிப்பது, பல நலத்திட்டங்களை செயல்படுத்துவது. மாற்றுத் திறனாளிகளுக்கான கல்வியை கண்கானிப்பது அவர்களை அர்சு பள்ளிகளில் சேர்த்து பயிற்சிஅளிப்பது, மருத்துவம் உதவுவது போன்ற பல பணிகளை செயது வருகிறது. வட்டார வள மையம் மாற்றுத் திறனாளிகளுக்கு மட்டுமான அமைப்பல்ல . மாற்றுத் திறனாளி மையங்கள் வட்டாரக் வளமையத்தின் ஒரு அமைப்பாகும். இம்மையங்கள் 2002இல் இருந்து இயங்குகின்றன. மாநில அரசின் பெரும்பாலான நலத் திட்டங்களுக்கான நிதி SSA ஆசிரியர்களின் ஊதியம் போன்றவை இவ்வியக்கம்தான் பெற்று வழங்குகிறது. இங்கு பணியாற்றுபவர்கள் பட்டதாரி ஆசிரியர் தகுதி உடையவர். இவர்கள் ஆசிரியப் பயிற்றுநர்(Block Resource Teacher Educator) என்று அழைக்கப் படுகிறார்கள். தனி அமைப்பாக இருப்பினும் கல்வித் துறை வ்ழியாகவே செயல்ப்டுகிறது. கல்வித் துறை அலுவலர்களே மாநில மாவட்ட வட்டார அளவில் இதற்கும் அலுவலர்களாக செயல்படுகின்றனர்.

Jaypon , Canada said...

அருமை. நன்று. அனைவரும் வாழ்க வளமுடன்.

GANESAN said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் திரு.மணி.

"என்னவோ தெரியல...உங்கள பாத்தா கொஞ்சம் பொறாமையும்...நெறைய குற்ற உணர்ச்சியும் வருது!!" மிகவும் உண்மை.