Oct 18, 2019

அசுரன்

சமீபத்தில் ஒரு திருமண விழாவில் இளைஞனொருவன் அருகில் அமர்ந்திருந்தான். ‘எப்படிங்கண்ணா புக் ரிலீஸ் பண்ணுறது?’ என்று ஆரம்பித்தான். கவிதை எழுதுவானோ என்று நினைத்து சற்று தள்ளி அமர்ந்தேன். சாதியப் பெருமைகளை புத்தகமாக எழுதப் போகிறானாம். இப்படி நிறையப் பேர் சுற்றுகிறார்கள். கிடா வெட்டுவது கூட அவர்களுக்கு சாதியப் பெருமைதான். ‘என்ன மாதிரியான பெருமைகள்’ என்றால் ஐம்பது வருடங்களுக்கு முன்பாக எப்படி கெளரவமாக இருந்தோம் என்று எழுதுவதாகச் சொன்னான். அவனிடம் என்ன பேசுவது என்று கொஞ்ச நேரம் குழப்பமாக இருந்தது.  உண்மையில் அவன் பெருமைகள் என்று நினைத்துக் கொண்டிருப்பது அன்றைக்கு அப்பட்டமாக வெளிப்பட்ட சாதிய வெறி. அக்கம்பக்கத்தில் கேள்விப்படும் நான்கைந்து சாதிகளைத் தவிர அவனுக்கு பெயர் கூடத் தெரியவில்லை. அவன் பேசுவது அத்தனையும் செவிவழிச் செய்தி- செவிவழி என்பதைவிட வாட்சாப் வழிச் செய்தி.

தமிழகத்தின் சாதியச் சிக்கல்களைப் புரிந்து கொள்ளாத இளந்தலைமுறையினர் மிகப்பெரிய கூட்டமாக இருக்கிறார்கள். அவர்களுக்கு மேம்போக்காகத் தெரிந்ததெல்லாம் எங்கள் தாத்தா காலத்தில் அடங்கியிருந்தவர்கள் தங்களது அப்பன் காலத்தில் திமிர் பிடித்தவர்களாகிவிட்டார்கள் என்பதுதான். அவர்களை பழையபடி மீண்டும் அடக்கி வைப்பதுதான் தங்களின் வாழ்நாள் லட்சியமாகச் சொல்லிக் கொண்டு வாட்ஸாப்பில் வாசித்துக் கொண்டிருப்பவர்கள். சிலர் கைகளில் சாதியப் பெருமைகளைப் பச்சை குத்திக் கொள்கிறார்கள். மற்றவர்கள் நெஞ்சுக்குள் குத்திக் கொள்கிறார்கள். 

இங்கே நிலம்-அரசியல்-சமூகம்- பொருளாதாரம் ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்தவை. நிலத்துக்கான அரசியல், அரசியலுக்கான பொருளாதாரம், பொருளாதாரத்துக்கான நிலம் என எந்தவொன்றையும் இன்னொன்றோடு தனித்தனியாகவும் பொருத்திப் புரிந்து கொள்ள முடியும். ஆனால் எல்லாவற்றையும் இணைத்துப் புரிந்து கொள்ளத் தொடங்கும் போதுதான் தமிழகத்தின் வரலாற்றின் ஒரு நுனியை எட்டிப்பிடிக்க முடியும். இத்தகைய விரிவான புரிதலானது பரவலாக, வெகுஜன மட்டத்தில் உண்டாகாமல் ‘சமத்துவ சமூகம்’ அவ்வளவு சுலபமாக அமைந்துவிடாது. ஆனால் அத்தகைய புரிதல்களுக்கான வாய்ப்புகளே உருவாக்கப்படுவதில்லை. இங்கே இது வரை நடந்த போராட்டங்கள், விழிப்புணர்வு இயக்கங்கள், சட்டங்கள் யாவும் பிற சாதியினர் ஆதிக்கம் செலுத்துவதை தடுக்கவும், ஆதிக்கம் செலுத்தினால் எதிர்த்து நில் என்பதையும் சாதித்திருக்கும் அளவுக்கு பரவலான மனநிலை மாற்றங்களை உருவாக்கியிருக்கவில்லை என்பதுதான் நிதர்சனம். 

ஆனாலும், ஆயிரக்கணக்கான ஆண்டுகாலமாக புரையோடிக் கிடக்கும் சாதியக் கட்டமைப்புகள் கொண்ட இந்தியா போன்ற தேசத்தில் தமிழகம் இந்த அளவுக்கு முன்னேறி வந்திருப்பதே பெரிய சாதனைதான் என்றாலும் நாம் முன்னே பயணிக்க வேண்டியது வெகுதூரம் பாக்கியிருக்கிறது. 

சாதிய அடுக்குகள், அவற்றோடு பிணைந்திருக்கும் அரசியல், சமூக, பொருளாதார மற்றும் நிலம் சார்ந்த கண்ணிகளை மேம்போக்காகவாவது புரிந்து கொள்ளாமல் சாதி வெறியேற்றுகிறவர்களுக்கு ஒரு கூட்டம் இரையாகிக் கொண்டிருக்கும் போதுதான் அசுரன் மாதிரியான படங்களின் தேவை உருவாகிறது. இன்றைக்கும் கூட சாதி வெறி அடங்கிவிட்டது என்று சொல்லிவிட முடியுமா என்ன? நீறு பூத்த நெருப்புதான் அது. உள்ளே கனன்று கொண்டேயிருக்கிறது. ஆனால் துணிந்து எரிந்துவிடாது. எதிர்தரப்பினர் விழித்துக் கொண்டார்கள். படித்து விவரம் தெரிந்தவர்கள் ஆகிவிட்டார்கள். மிரட்ட எத்தனித்தால் எதிர்ப்பார்கள். அவர்களின் இந்த எதிர்ப்புதான் சாதிய உணர்வு கொண்டவர்களை நிலை கொள்ளாமல் தவிக்க வைக்கிறது.

காலங்காலமாக அடங்கியே கிடந்தவர்களுக்கு அப்படி என்ன திமிரு என்று கேள்வி எழுப்புகிறவர்களுக்கும்,  ‘அவர்கள் ஆடுகிற ஆட்டத்தையெல்லாம் நாங்க வேடிக்கை பார்த்துட்டு இருக்கணுமா?’ என்று கண்மூடித் தனமாக கேள்வி கேட்கிறவர்களுக்கும் என்ன சொல்வது?  

கட்டப்பஞ்சாயத்து, நாடகக் காதல், ரவுடியிசம் என்றுதானே இருக்கிறார்கள் என்பதை பெரிய குற்றச்சாட்டாக வைக்கிறார்கள். சாதிக்காரர்கள் நான்கு பேர் சந்தித்தால் இதைத்தான் பிரதானமாகப் பேசுகிறார்கள். பிற சாதிகளில் இதெல்லாம் நடப்பதில்லையா என்று கேட்டால் நடக்கும். ஆனால் அது அடுத்தவர்களை உறுத்தாது. அதுவே தாத்தா காலத்தில் செருப்பு கூட போட அனுமதியற்றவர்கள் இன்றைக்கு மிரட்டுகிறார்கள், எதிர்க்கிறார்கள் என்றால் அது உறுத்தும். அதுதான் ஒரு தரப்பின் இரத்தத்தைக் கொதிக்கச் செய்துவிடுகிறது. பி.சி.ஆர் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்று ஒவ்வொரு சாதிக் கூட்டத்திலும் பேசுகிறார்கள். ஆனால் பி.சி.ஆரின் தேவை எப்பொழுதும் இருந்து கொண்டேதான் இருக்கிறது என்றுதான் தோன்றுகிறது. 

இங்கே என்னதான் சட்டம் இருந்தாலும் கூட ரயில் தண்டவாளத்தில் கிடத்தப்படுகிறார்கள். டி.எஸ்.பிக்கள் கூட மர்மமாகச் சாகிறார்கள். இத்தகைய செய்திகளை எவ்வளவு நாட்களுக்கு நினைத்துக் கொண்டிருக்கிறோம்? அதிகபட்சம் ஒரு வாரம். அந்த வாரத்து ஜுவி, ரிப்போர்ட்டர், நக்கீரனில் கட்டுரை வெளியானவுடன்  ‘இப்படியெல்லாம் செஞ்சாத்தான் பயமிருக்கும்’ என்பதோடு அந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.


அசுரன் படம் பார்க்கும் போது படத்தோடு சேர்ந்து இப்படித்தான் ஏதோ மண்டைக்குள் ஓடிக் கொண்டிருந்தது. 

பூமணியின் வெக்கை, வெற்றிமாறன், தனுஷ், சுகா, ஜி.வி.பிரகாஷ் என எல்லோரும் கச்சிதமாகக் கலந்திருக்கிறார்கள். பொதுவாக, திரையரங்குக்குள் சென்று பார்க்க வேண்டுமெனில் வண்ணமயமான படமாக இருக்க வேண்டும் என்றுதான் விரும்புவேன். ஆடல், பாடல், கொண்டாட்டமாக இரண்டரை மணி நேரங்களைக் கழித்துவிட்டு வர வேண்டும் என்று நினைப்பேன். தமிழ் சினிமா நாயகர்கள் எதிரியை அடிக்க இடைவேளை வரை காத்திருக்க மாட்டார்கள். நான்காம் காட்சியில் விசிலடிக்க வேண்டும் என எதிர்பார்ப்பார்கள். ஆனால் தனுஷ் காத்திருப்பார். கதாபாத்திரத்துக்கு ஏற்ப தன்னை ஏற்றியும் இறக்கியும் கூட்டியும் குறைத்தும் உருமாறும் தனுஷ் தமிழ் சினிமாவின் பொக்கிஷம். 

முதல் பத்தியில் குறிப்பிட்ட, புத்தகம் எழுத விரும்பும் பையனைப் போலவே பாரம்பரியத்தைக் காட்டுகிறேன், சமூகக் கட்டமைப்பை யதார்த்தமாகக் காட்டுகிறேன் என்று குறிப்பிட்ட சாதியப் பெருமைகளை வண்ண வண்ணக் காட்சிகளுடன் முன் வைத்து ஹீரோயிசத்தை அளவுக்கதிமாகத் தூக்கிப் பிடித்து சாதிய உணர்வுகளைத் தூண்டுகிற படங்களின் காலத்தில் அசுரன் தேவையானதாக இருக்கிறது. அசுரன் படத்திலும் கூட சில நம்ப முடியாத காட்சிகள் உண்டு. ஒற்றை ரூபாய் பெரிய பணமாக இருந்த காலத்தில், செருப்பு அணியவே அனுமதிக்கப்படாத காலத்தில் - முதலாளிக்காக சாராயம் காய்ச்சுகிறவன்- அவனது திறமை என்னதான் மதிக்கப்பட்டாலும் ஊருக்குள் அவ்வளவு கெத்தாக அனுமதித்த ஊரா நம் ஊர் என்று கேள்வி எழாமல் இல்லை. இருந்துவிட்டுப் போகட்டும்.

யதார்த்தத்தைப் பேசுவதாகக் கருதி வன்மத்தை ஊட்டாமல், வெறுப்பை ஏற்றாமல் ‘நமக்கு முன்னால் இருக்கும் பெரிய சிக்கலின் ஒரு பிடி இது’ என்று காட்டுகிற அசுரன் போன்ற படங்கள் வணிகரீதியிலும் வெற்றி பெறுவது மிக அவசியம். அப்படி வெற்றியடைந்திருப்பது மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. 

Oct 16, 2019

புதிய தேடல்

‘புதிதாக ஒன்றைக் கற்றுக் கொள்ள வேண்டும்’ என்கிற ஆசை எல்லோருக்குமே உண்டு. ஆனால் ஆசையோடு நின்றுவிடும். களமிறங்கி துருவிப் பார்க்கிறவர்கள் வெகு அரிது. காரணம் இல்லாமல் இல்லை- வேலையிலேயே மண்டை காய்ந்துவிடுகிறது. கிடைக்கும் இடைவெளியில் மனதை கொஞ்சம் இலகுவாக்கலாம் என்றுதான் பலரும் நினைக்கிறார்கள். இதற்குத் தீர்வு என்னவென்றால் ‘கமிட்மெண்ட்’தான். ‘இப்பொழுது சத்தியம் செய்கிறேன்’ என்கிற கமிட்மெண்ட் எந்தக் காலத்திலும் வேலைக்கு ஆகாது. ஒவ்வொரு பிறந்தநாளுக்கும், புத்தாண்டு தொடக்கத்திலும் எத்தனை சத்தியங்களைச் செய்திருப்போம்? ஒன்றையாவது பின் தொடர்கிறோமா? 

பொருளாதார ரீதியிலான கமிட்மெண்ட் முக்கியம். எனக்குத் தெரிந்த பெண் மிகப்பெரிய நிறுவனத்தில் பணியில் இருந்தார். நல்ல சம்பளம். ஆனால் அலுவலகத்தில் உள்ளடி வேலைகள் எக்கச்சக்கம். அப்பொழுது என்னிடம் சொல்லியிருந்தார். ‘எந்த ஆபிஸ்லதாங்க பிரச்சினை இல்லை...கண்டுக்காம விடுங்க’ எனச் சொல்லியிருந்தேன். அடுத்தவர்களுக்குத் துன்பம் வரும் போது அறிவுரையை எளிதாகச் செய்துவிடுவோம். ஆனால் அந்தப் பெண் கொஞ்சம் விவரம். ஹைதராபாத்தில் உள்ள ஐஐஐடி நிறுவனத்தில் ‘மெஷின் லேர்னிங்’ படிப்பில் சேர்ந்துவிட்டார். மூன்று லட்ச ரூபாய் என நினைக்கிறேன். அவ்வளவு பெரும் தொகையைக் கட்டிவிட்டால் எப்படியும் படித்துத்தானே தீர வேண்டும். ஆனால் ஒன்று- இப்படிக் கைவசம் ஒரு படிப்பு இருந்தால் நம்மையுமறியாமல் சற்று தைரியம் வந்துவிடும். 

மெஷின் லேர்னிங் இன்றைக்கு சூடான துறை. அது என்ன மெஷின் லேர்னிங்? எந்திரம் அதுவாகவே கற்றுக் கொள்வது. உதாரணமாக ரசம் வைப்பது என்று வைத்துக் கொள்வோம். ரசம் வைப்பது இப்படித்தான் என ஒரு வழிமுறை இருக்குமல்லவா? அந்த வழிமுறையை உள்ளீடு செய்துவிடுவார்கள். அதன் பிறகு புளி ரசம், தக்காளி ரசம் என்ற வகைகளில் சிலவற்றையும் எந்திரத்துக்குச் சொல்லிவிட வேண்டும். இந்த ‘பேட்டர்ன்’ தெரிந்து வைத்துக் கொண்டு எந்திரம் எலுமிச்சை ரசம் வைப்பதைச் செய்துவிடும். எந்திரமானது தானாகக் கற்றுக் கொண்டே போவதுதான் மெஷின் லேர்னிங். இன்றைய தேதிக்கு இத்துறையில் ஆட்கள் குறைவு. ஆனால் நிறையத் தெரிந்து கொள்ள வேண்டும். புள்ளியியல் கூட அவசியம். 

பொதுவாகவே ஆட்கள் பற்றாக்குறையாக இருக்கும் இத்தகைய துறைகளில்தான் புதிதாக வேலைக்கு எடுக்கிறார்கள். இப்படியொரு துறையில் நுழைந்துவிட்டால் அடுத்த பதினைந்து வருடங்களுக்கு தப்பிவிடலாம். பத்து அல்லது பதினைந்து வருடங்களுக்கு முன்பாக நிறுவனங்களில் ‘நீண்டகால லட்சியம் என்ன என்று கேட்பார்கள்’. இரண்டு வாய்ப்புகள் இருக்கும். படிப்படியாக உயர்ந்து ஆட்களை மேய்க்கும் மேலாளர் ஆவது ஒன்று. அவர்கள் மெல்ல மெல்ல தொழில்நுட்பத்தை விட்டு விலகிவிடுவார்கள். இரண்டாவது வாய்ப்பு- மேலும் மேலும் தொழில்நுட்பத்திலேயே பணிபுரிந்து தீர்வுகளை உருவாக்கும் ஆர்க்கிடெக்ட் ஆவது. இன்றைக்கு வெறும் மேலாளர் என்றால் சிக்கல்தான். தொழில்நுட்பத்திலிருந்து விலகினால் அது பேராபத்து. எதையாவது கற்றுக் கொண்டேயிருக்க வேண்டும். 

மேற்சொன்ன நண்பர் எதிர்பார்த்தபடியே அலுவலகத்தின் உள்விவகாரம் பெரிய அளவில் நடந்து நண்பரின் வேலையைக் காவு வாங்கிவிட்டது. ஆனால் படிப்பும் முடிந்திருக்கவில்லை. அதன் பிறகு இன்னமும் தீவிரமாகப் படித்து வேலை தேடத் தொடங்கினார். அந்தப் படிப்பைப் படிக்கும் நண்பர்கள் குழுவொன்றை அமைத்து அதில் நிறைய விவாதித்துக் கொண்டிருந்தார். விவாதங்கள் அவருக்கு அந்தத் துறையில் புதிய பரிமாணங்களைக் காட்டின. என்னதான் இருந்தாலும் அவருக்கு பதினைந்து வருடங்களுக்கும் அதிகமான அனுபவம் இருந்தது. முழுவதுமாகத் துறை மாறுகிறார். கையில் வேலை இல்லை. இத்தகைய காரணங்களால் இனி வேலை கிடைக்குமா என்கிற சந்தேகம் இருந்தது எனக்கு. அது நாளுக்கு நாள் வலுத்துக் கொண்டேதான் போனது. அடுத்த சில மாதங்கள் மேலும் பல நேர்காணல்களைச் சந்தித்துவிட்டார். ஒரு கட்டத்தில் அவரிடம் ‘ஏதாச்சும் இண்டர்வியூ வந்துச்சா?’ என்று கேட்பதையும் தவிர்த்துவிட்டேன். மேலும் மேலும் மன உளைச்சலுக்கு ஆளாக்குவதற்கு நம்முடைய கேள்விகளும் காரணமாக இருந்துவிடக் கூடாதல்லவா?

கடினமான உழைப்புக்கு பலன் இருக்கும். சமீபத்தில் வேலை வாங்கிவிட்டார். அதுவும் இரண்டு நிறுவனங்களில் வேலை. மிகச் சந்தோஷமாக இருக்கிறார்.

நேற்று வேறொரு நண்பர் அழைத்திருந்தார். முன்பு எப்பொழுதோ பேசியிருக்கிறோம். மிகுந்த மன அழுத்தத்தில் இருப்பதாகவும், இரண்டு நிமிடங்கள் பேச வேண்டும் என்றும் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். கிட்டத்தட்ட இதே பிரச்சினைதான். அலுவலகத்தில் அரசியல். வேலையை விட்டு அனுப்பிவிடுவார்கள் என்று பயந்தார். ஆனால் எப்பொழுது அனுப்புவார்கள் என்று தெரியவில்லை என்றார். தாம் இருக்கும் துறையிலேயே வேலை தேடியிருக்கிறார். ‘பதினைஞ்சு வருஷ எக்ஸ்ப்ரீயன்ஸ்ன்னா வேண்டாம்’ என்கிறார்கள் என்று வருந்தினார். அது தெரிந்ததுதானே. பி.ஈ முடித்துவிட்டு வரும் ஒருவனிடம் மாதம் முப்பதாயிரம் கொடுத்து அந்த வேலையைச் செய்துவிட முடியுமெனில் பதினைந்து வருடங்கள் அனுபவம் கொண்டவரிடம் மாதம் ஒன்றரை லட்சம் கொடுத்து அதே வேலையை ஒப்படைக்க நிறுவனங்கள் முட்டாள்களா?

நமக்கான சந்தை மதிப்பை நாம்தான் கூட்டிக் கொள்ள வேண்டும். ‘இதை இவனால்தான் செய்ய முடியும்’ என்று நிறுவனங்கள் நம்ப வேண்டும். அப்பொழுதுதான் நமக்கான மரியாதை இருந்து கொண்டேயிருக்கும். உழைப்பில்லாமல் மதிப்பில்லை. வேலையை விட்டு வெளியேற்றிய பிறகு புதிதாக ஒன்றைத் தேடுவது இன்னமும் கடுமையான மன அழுத்தத்தை உருவாக்கிவிடும். ‘புதுசா ஒன்னை இப்பவே தேடுங்க..படிக்க ஆரம்பிச்சுடுங்க’ என்றேன். மேற்சொன்ன பெண்ணின் கதையைச் சொன்னேன்.  

பெரும்பாலான நிறுவனங்களின் சிக்கல்களில் முக்கியமானது ‘கொடுக்க வேலை இல்லை என்பதைவிடவும் தாம் செய்ய விரும்பும் வேலைக்கு ஏற்ற ஆட்கள் இல்லை’ என்பதுதான். அனுபவம் கூடக் கூட நமக்கான மதிப்பைக் கூட்டிக் கொண்டேயிருக்க வேண்டும். மென்பொருள் துறை மட்டுமில்லை கிட்டத்தட்ட பெரும்பாலான துறைகளில் அப்படித்தான். பொருளாதார மந்தநிலையில் ஆட்களை கூட்டமாக வெளியேற்றும் போது கூட ‘இந்த வேலையை யார் வேண்டுமானாலும் செய்துவிடலாம்’ என்கிற பணிகளைச் செய்கிறவர்களைத்தான் அனுப்புவார்கள். ‘இவன் செய்யற வேலையைச் செய்ய ஆள் சிக்காது’ என்றால் அடுத்த ஆறு மாதங்களுக்கு வேலையே இல்லாமல் கூட சம்பளம் கொடுக்க நிறுவனங்கள் தயாராக இருக்கும். அந்த ஆறு மாத இடைவெளியில் சூதானமாக இருந்து வேறு நிறுவனத்தில் வேலையைத் தேடிக் கொள்ளலாம். 

ஆக, ஒன்றேயொன்றுதான்- கற்றுக் கொண்டேயிருக்க வேண்டும். அவ்வளவுதான். 

Oct 14, 2019

இவனுக்கு மட்டும் ஏன்?

கடந்த வாரம் ஒரு சம்பவம் நடந்தேறியது. மிக மிகச் சாதாரணமாகத் தொடங்கியது. ஆரம்பத்தில் ‘இதெல்லாம் ஒரு பிரச்சினையா’ என்று நினைக்க நினைக்க நண்பர்கள் பயமூட்டினார்கள். செல்போன் நமக்கு மிகப்பெரிய சாபக்கேடு. உடனடியாக ஒன்றைப் பற்றி பலரிடமும் விலாவாரியாகப் பேசிவிட முடிகிறது. பேசியவர்களில் பெரும்பாலானோர் இதனை அவ்வளவு சுலபமாக விட்டுவிட முடியாது என்றார்கள். அதன் பிறகு தெரிந்த நண்பர்களிடமெல்லாம் பேசினேன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் உதவினாலும் பெரும்பாலானவர்கள் சொன்னது - சிக்கலானது போலத்தான் தெரிகிறது என்பதுதான். மூன்று நாட்கள் கடுமையான மன உளைச்சல். ஒரு கட்டத்தில் வீட்டிலிருந்தவர்களிடம் சொல்லிவிட அவர்களும் பதறிவிட்டார்கள்.

எதற்கு இவ்வளவு பீடிகை?

கடந்த தலைமுறையில் இப்படியெல்லாம் சிக்கல் வரும் என்று கற்பனையில் கூட நினைத்திருக்க முடியாது. இது என் வாழ்க்கையில் நடைபெற்றது என்று சொன்னால் ‘இப்படியெல்லாம் நடக்குமா?’ என்றுதான் உங்களுக்கும் தோன்றும். நண்பர் ஒருவரும் ‘உனக்கு மட்டும் என்ன இப்படி பெக்கூலியர் அனுபவம்?’ என்றார். எனக்கும் அதுதான் புரியவில்லை. நானா தேடிச் செல்கிறேன்? அதுவாக வருகிறது. விசித்திரமான அனுபவங்கள் துரத்திக் கொண்டேயிருக்கின்றன. நமக்கு நடக்கிற ஒவ்வொரு செயலுக்கும் பின்னணி ஒன்றிருக்கும் என உறுதியாக நம்பலாம். நமக்கு நேர்வதற்கான பின்புலமும் இருக்கும். நாம் பெரும்பாலும் பிரச்சினைகளையும் சம்பவங்களையும் மட்டுமே பிரதானப்படுத்தி அதை மட்டுமே எதிர்கொள்வோம். பிரச்சினையைத் தீர்ப்பதிலேயே கவனத்தைச் செலுத்திவிட்டு பின்னணியையும் பின்புலத்தையும் விட்டுவிடுவோம்.

புரட்டாசி மாதம் என்பதால் ஏதாவதொரு பெருமாள் கோவிலுக்குச் சென்று வரச் சொன்னார்கள். எங்கள் ஊருக்குப் பக்கத்திலேயே நிறைய பெருமாள் கோவில்கள் இருக்கின்றன. ஆனால் பெருமாள் என்றால் நம்பிராயர்தான். எட்டு மணி நேரம் பயணிக்க வேண்டும் என்பது மட்டும்தான் ஒரே தொந்தரவு. தெளிந்து ஓடும் நம்பியாறு. அடர்ந்த பச்சை,  புலிகள் நிறைந்த வனம். முக்கால் மணி நேரம் நடந்து நம்பியாற்றில் குளித்துவிட்டுச் சென்றால் நம்பிராயரைப் பார்த்துவிட்டு வரலாம். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருக்குறுங்குடியைத்தான் சொல்கிறேன். அங்கே செல்லலாம் என்று கிளம்பியிருந்தேன். கிளம்பும் போதுதான் மேற்சொன்ன சம்பவம் குறித்துத் தெரிய வந்தது. ஆரம்பத்தில் சிரித்தபடியே நண்பர்களிடம் சொல்லி, பிறகு மெல்ல பயம் கூடி-  அதற்கடுத்த சில நாட்களில் அந்த பிரச்சினையை அணுகிய விதத்தை ஒரு நாவலாகவே எழுதிவிடலாம். 

கடந்த சில மாதங்களாகவே ஜீவகரிகாலன் ஒரு நாவல் எழுதித்தரச் சொன்னார். ஏற்கனவே ஒரு நாவல் எழுதத் தொடங்கியிருந்தேன். பெங்களூருவில் இருக்கும் போது சந்தித்த ஒரு நபர் சொன்ன கதை அது. அது ஒரு கசமுசா கதை. ஆள் ஒரு மார்க்கமான பணியில் இருக்கிறார். அவர் சொன்னதை எழுதிவிடலாம் என்று நம்பி பாதி எழுதிய பிறகு அதன் போக்கு பிடித்தமானதாக இல்லை. விட்டுவிட்டேன். அந்த நண்பரின் கதையை ஒரு கட்டுரையாக வேண்டுமானால் எழுதலாம். அதன் பிறகு நாவல் எழுதுவதென்றால் ஏதாவதொரு அனுபவம் அமைய  வேண்டுமல்லவா? கருவே உருவாகாமல் எழுதத் தொடங்கினால் தட்டையாகிவிடும். நாவல் என்பது ஒரு வாழ்க்கையைச் சொல்வதாக இருக்க வேண்டும் அல்லது வாழ்க்கை முழுவதும் மறக்க முடியாத ஒரு அனுபவத்தை உருவாக்கியதாக இருக்க வேண்டும். அப்படியொன்றும் அமையவில்லை. 

பொதுவாக மண்டையில் ஏதோவொரு ராட்சச பாறாங்கல் ஒரு பறவையைப் போல வந்து அமர்ந்து கொள்ளும். எழுதுவதற்கான மனநிலையே இல்லாதது போல சில நாட்கள் அமைந்துவிடும். அதை சோம்பேறித்தனம் என்று சொல்ல முடியுமா எனத் தெரியவில்லை. திடீரென சுத்தியல் ஒன்று அந்தப் பாறாங்கல்லை ஓங்கி அறையும். பாறை நொறுங்கிச் சில்லு சில்லுவாகச் சிதறும் போது எழுத என்னென்னவோ தோன்றும். பார்ப்பதையெல்லாம் எழுதலாம் என்கிற மனநிலை உருவாகும். அப்படியொரு மனநிலையை உருவாக்குவதற்கான சம்பவம் என்றுதான் நினைக்கிறேன்.

ஆனால் ஒன்று- நல்ல நண்பர்கள் வட்டாரம் அமைந்திருக்கிறது. எந்தவொரு பிரச்சினையையும் சாதாரணமாக எதிர்கொண்டுவிட முடியும் என்கிற தைரியமும் மனதின் ஓரத்தில் இருக்கிறது.  ‘இவன் சமாளிச்சுக்குவான்’ என்றுதான் எனக்கு சம்பந்தமேயில்லாத ஒன்றில் என்னைக் கோர்த்துவிட்டு சூழல் வேடிக்கை பார்த்திருக்கிறது என நினைக்கிறேன். இந்த நண்பர்கள் வட்டாரம் மட்டுமில்லையென்றால் திணறி போயிருக்கக் கூடும். மனதின் ஓரத்தில் இருக்கும் அந்த சிறு தைரியத்தினாலோ என்னவோ பிரச்சினையை எதிர்கொள்ளும் போதே ‘இது ஒன்றுமே இல்லாமல் போய்விடும்’ என்ற நம்பிக்கை இருந்தாலும், நமக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது என்று தோன்றாமல் இல்லை. பயமில்லை என்றெல்லாம் சொல்லிவிட முடியாது. பயம் இருந்தது. இது எப்படி சாத்தியம் என்று குழப்பம் இருந்தது. பிரச்சினையைவிடவும் அது எனக்கு நேர்ந்ததற்கான பின்னணி ‘நாவல் எழுதுவது’ என்று மணியடித்துக் கொண்டேயிருந்தது.  அந்த வேலையைத் தொடங்கியிருக்கிறேன். முரளி சொன்னார் ‘உயிர் மட்டும் போகாம இருந்துட்டா எந்தவொரு பிரச்சினையையும் எதிர்கொண்டுவிடலாம்’ என்றார். அதுதான் பேருண்மையும் கூட. பிரச்சினைகள் தற்காலிகமானவை. அந்தப் பிரச்சினைகள் நமக்குத் தந்துவிட்டுப் போகும் அனுபவமும், அவை நமக்கு நேர்ந்த பின்னணியும் பின்புலமும்தான் நிரந்தரமானவை. பிரம்மாண்டமானவை. 

இந்த வருட சென்னை புத்தகக் கண்காட்சிக்கு நாவலை கொண்டு வந்துவிடலாம்.

Oct 8, 2019

ஊர் நாட்டாமைக்கு நிற்க நேரமில்லை

நேற்று கோபியில் இருந்தேன். மூன்று பெண்களுக்குத் திருமண ஏற்பாடுகளைச் செய்கிறோம் அல்லவா? கோபி ராமாயம்மாள் திருமண மண்டபத்தில் நவம்பர் 3 ஆம் தேதி மதியம் மூன்று மணிக்கு நிகழ்வு தொடங்குகிறது. மண்டபத்துக்கு வாடகை வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். மணமக்களுக்கு புத்தாடைகள் வாங்கியாகிவிட்டது. சீர்வரிசை பொருட்களையும் வாங்கி விட்டோம். ‘படிப்புக்கு, மருத்துவத்துக்குன்னு செலவு செஞ்சுட்டு இருக்கிற நீங்க கல்யாணம் எல்லாம் செஞ்சு வைக்கணுமா?’ என்று ஒருவர் விவகாரமாக கேட்டிருந்தார்- அதுவும் வக்கிரமான சொற்களுடன். ஃபேஸ்புக் அப்படித்தான். பொருட்படுத்த வேண்டியதில்லைதான். ஆனாலும் ஒருவருக்கேனும் கேள்வி வருமானால் விளக்கிவிட வேண்டும்.

சரவணன் ஜெர்மனியில் வசிக்கிறார். ஒரு நாள் அழைத்து ‘அம்மா அப்பாவுக்கு மணிவிழா..அதற்கு ஆகும் செலவில் எதாவது ஒரு பொண்ணுக்கு கல்யாணம் செஞ்சு வெச்சுடலாம்ன்னு இருக்கோம்’ என்றார். உண்மையில் இந்தக் காலத்தில் பிரச்சினையே தகுதியான பயனாளிகளைத் தேடுவதுதான். இவனைக் கேட்டால் வாய்ப்பிருக்கிறது என்ற நம்பிக்கையில் அவர் அழைத்திருக்கக் கூடும். ‘எந்த ஊர்ல தேடுறீங்க?’என்றேன். எந்த ஊர் என்றாலும் பரவாயில்லை என்றார். நமக்குத்தான் நல்ல அணி ஒன்றிருக்கிறதே. வலை போட்டுத் தேடி மூன்று பெண்களைக் கண்டறிந்தோம். மொத்தச் செலவும் சரவணன் குடும்பத்தினருடையதுதான்.

இந்தத் திருமணத்தில் இரண்டு விஷயங்களைச் செய்ய வேண்டும் என முடிவு செய்திருந்தோம். முதலாவது, அந்த மூன்று பெண்களுக்கு வெறுமனே சீர் வரிசை கொடுப்பதாக இருக்கக் கூடாது. பெற்றோர் இல்லாமல் வளர்ந்த நம்மையும் ஆதரிக்க ஒரு வட்டம் இருக்கிறது என்பது அழுந்தப் பதிய வேண்டும். காலத்துக்கும் அவர்களுக்கான மனவலிமையைத் தர வேண்டும்.

தமது பெற்றோரின் மணிவிழாச் செலவை வேறொரு பெண்ணுக்குக் கொடுக்கும் நல்ல மனம் கொண்ட அந்தக் குடும்பத்திற்கு நம்மால் முடிந்தளவு மனதிருப்தியைத் தர வேண்டும் என்பது இரண்டாவது விஷயம். வேலைகளைப் பிரித்துச் செய்து கொடுக்க நல்ல குழு இருக்கிறது. சிரமப்படவும் தயாராக இருக்கும் குழு அது. அதனால்தான் ‘சரிங்க..செய்துவிடலாம்’என்று சரவணனிடம் சொன்னேன். ஜெர்மனியில் அமர்ந்து கொண்டு இதைச் செய்து முடிப்பது சரவணனுக்கு சாத்தியமில்லை. ‘இல்லைங்க வாய்ப்பில்லை’ என்று நானும் சொல்லிவிட்டால் அவர் இந்தத் திட்டத்தையே கூட கைவிட்டிருக்கக் கூடும். ஆனால் மூன்று பெண்களுக்கு நம்மால் இயன்ற சிறு உதவியைச் செய்ய முடியுமானால் சிரமப்படத்தான் வேண்டும். இப்படி யாராவது குறுக்குக் கேள்வி கேட்டால் பதில் சொல்லத்தான் வேண்டும். 

நேற்று மதியம் பாத்திரம் வாங்க கடையில் இருந்த போது ‘சான்ஸ்லர் ஃப்ரீயா இருக்காரு வாங்க’ என்று அழைப்பு வந்தது. வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் வேந்தர் திரு.ஜி.விஸ்வநாதன் கோபிக்கு வந்திருந்தார்.  கோபி கலைக்கல்லூரியில் நடைபெற்ற கண்காட்சியின் நிறைவு விழாவுக்காக வரப் போகிறார் என்று தெரியும். கல்லூரி நிர்வாகத்தினரிடம் முன்பே பேசி வைத்திருந்தேன். நிகழ்ச்சி நிறைவடைந்த பிறகு முதல்வரின் அறையில் இருந்தார். பாத்திரக்கடையிலிருந்து கல்லூரிக்குச் சென்று சேர்வதற்குள் மூன்று முறை அழைத்துவிட்டார்கள். பைக்கை தாறுமாறாக நிறுத்திவிட்டு, வியர்வையைத் துடைத்துக் கொண்டே ஓடி அறிமுகப்படுத்திக் கொண்டேன். அமரச் சொன்னார். அமர்ந்துவிட்டேன். நேருக்கு நேராக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தேன். அவர் கிளம்பிய பிறகுதான் அவருக்கு முன்பாக அப்படி அமர்ந்திருக்கக் கூடாது எனத் தோன்றியது.  

‘வி.ஐ.டியில் படிச்சேன்’ என்பதைத் தாண்டி பெரிதாக எதுவும் சொல்லிக் கொள்ள வேண்டிய தேவை இருக்கவில்லை. என்னுடைய நோக்கமெல்லாம் வேலூர் கல்லூரியின் கல்வி சார்ந்த ஆதரவு கோபி கலைக்கல்லூரிக்கு கிடைக்க வேண்டும் என்பதாகத்தான் இருந்தது. வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள், அங்கே வரக்கூடிய பெரும் கல்வி ஆளுமைகள், வளாகத் தேர்வுக்கான தயாரிப்பு முஸ்தீபுகள் போன்றவற்றில் சிற்சில உதவிகளை கோபி கலைக்கல்லூரிக்கும் செய்து கொடுங்கள் என்று கோரிக்கையை முன் வைத்த போது ‘இந்த காலேஜ்ல இருந்து கொஞ்சம் பேர் வந்து பார்க்கட்டும்....என்ன தேவைன்னு பேசலாம்...என்ன செய்ய முடியுமோ அதைச் செய்யறேன்..நீயும் கூட வா’ என்றார். அவ்வளவுதான். அதைப் பேசுவது மட்டும்தான் நோக்கமாக இருந்தது. 

கனவு மாதிரிதான் இருந்தது.  பதினைந்து வருடங்களுக்கு முன்பாக ‘வேலூர் விஸ்வநாதன் காலேஜ்’ என்றுதான் எனக்கு வி.ஐ.டி அடையாளப்படுத்தப்பட்டிருந்தது. பொறியியல் முடித்துவிட்டு எம்.டெக் சேரப்போவதாகச் சொன்ன போது பெரும்பாலானவர்கள் அப்படித்தான் சொன்னார்கள். கல்லூரியின் வேந்தர் ஜி.விஸ்வநாதன் அந்தக் காலத்து வழக்குரைஞர். அந்தக் காலம் என்றால் அந்தக் காலம்தான். அவருக்கு இப்பொழுது எண்பது வயது. ஒரே தலைமுறையில்- முப்பத்தைந்தாண்டுகளில் அசைக்க முடியாத கல்வி சாம்ராஜ்யத்தைக் கட்டமைத்துவிட்டார். அவரது காலகட்டத்தில் பல கல்லூரிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. ஆனால் வேலூர் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் அளவுக்கு தமது எல்லைகளை விஸ்தரித்த கல்லூரி என்று வேறு எதையாவது சுட்டிக்காட்ட இயலுமா என்று தெரியவில்லை. ஒவ்வொரு வருடமும் தன்னைப் புதுப்பித்துக் கொண்டேயிருக்கிறது. கல்லூரி வளாகத்தை நேரில் பார்க்காதவரைக்கும்- எவ்வளவுதான் குறைத்து எழுதினாலும் அதீதமாகப் புகழ் பாடுவதாகவே தெரியும். நிறுத்திக் கொள்கிறேன்.

அவர் எனக்கெல்லாம் அவ்வளவு இயல்பாக செவிமடுக்கவேண்டிய அவசியமேயில்லை. காது கொடுத்துக் கேட்டார். அது மட்டுமில்லை. இரவில் சிங்கப்பூரிலிருந்து கல்லூரியின் முன்னாள் மாணவர் மஹாவீர் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். வி.ஐ.டியின் முன்னாள் மாணவர் சங்கத்தின் வலையமைவு ஆச்சரியமூட்டக் கூடியது. சிறு துரும்பு அசைந்தாலும் கண்டறிந்துவிடுவார்கள். ‘G.V ஐயா அவர்கள் இன்று உங்களை சந்தித்ததாக குறிப்பிட்டார்... கோபிசெட்டிபாளையம் சென்றதாக கூறினார்.. அப்படியென்றால் மணிகண்டன் அவர்களை சந்தித்து இருக்கலாம் என்றேன்... பார்த்தேன் என சொல்லும்போதே மகிழ்ச்சி .. மயக்கம் ..’ என்று அவரது செய்தியைப் பார்த்துவிட்டு அலைபேசியில் அழைத்தேன். ‘பையன் நல்லா பேசறான்’ என்று சொன்னார்.  ‘அப்படி என்ன அவரிடம் பேசின’ என்று மஹாவீர் கேட்டார். எனக்கே தெரியவில்லை என்றுதான் சொன்னேன்.

சிற்சில சமயங்களில் தாறுமாறான வேலைப்பளு சேர்ந்துவிடுகிறது. ‘உலகத்திலேயே நான் தான் உழைப்பாளி’ என்கிற அர்த்தத்தில் இதைச் சொல்லவில்லை.  கிடைக்கிற நேரத்தில் எல்லாம் ஏதாவது ஒரு காரியத்தைச் செய்ய வேண்டியிருக்கிறது. பிரச்சினை என்னவென்றால் கோபியில் எங்கள் வீட்டில் சாயம் பூசிக் கொண்டிருக்கிறார்கள். பாத்திரங்கள் முழுவதும் வெளியில் கிடக்கின்றன. அம்மாவும் தம்பியும் ஊரில்தான் இருந்தார்கள். ஆனால் சாப்பாட்டு நேரம் தவிர அரை மணி நேரம் கூட ஒதுக்க முடியவில்லை. ‘நீ எதையாச்சும் கண்டுக்குறியா? உனக்கு வெளி வேலைதான் பெருசு...ஊடு எப்படிக் கெடந்தா என்ன?’ என்று குற்றச்சாட்டுகளாக அம்மா அடுக்குகிறார்.

என்னதான் ஊர் வேலைகளைச் செய்தாலும் வீட்டில் ஏதாவது சின்னச் சின்னக் காரியங்களையாவது செய்யவில்லையென்றால் ‘உன்னால வீட்டுக்கு என்ன பிரயோஜனம்’ என்ற கேள்வி வந்துவிடும். ஊர் நாட்டாமைக் கதை தெரியும்தானே? அதேதான். நாய்க்கு வேலையுமில்லை; நிற்க நேரமுமில்லை என்று சொல்லிவிடுவார்கள். அதன் பிறகு உறவுகள் நம்மைப் பற்றி கிசுகிசுத்துக் கொள்வார்கள். அப்படி ’இவன் ஊர் நாட்டாமை’ என்கிற பிம்பம் உருவாகிவிட்டால் அவ்வளவுதான். எந்தக் காலத்திலும் அதைச் சிதைக்கவே முடியாது என்றுதான் நினைக்கிறேன்.

சரி. எப்படியும் திட்டத்தானே செய்வார்கள்? மீண்டும் இரவு உணவை முடித்துவிட்டு பையை எடுத்துக் கொண்டு பேருந்து ஏறிவிட்டேன். 

Oct 1, 2019

ஊரும் உணவும்

ஈரானியர்கள் படையெடுத்து வரும் போது பாசுமதி அரிசியை மூட்டையாக ஆடுகளின் மீது ஏற்றி ஓட்டிக் கொண்டுதான் போருக்குச் செல்வார்களாம். போகிற வழியில் ஆட்டை அடித்து கறியை அரிசியுடன் போட்டுக் கொதிக்க வைத்து தம் போட்டு பிரியாணியாக விழுங்கிவிட்டு அடுத்த இடம் நோக்கி நகர்வார்களாம். அப்படி அவர்கள் அவசரத்துக்கு செய்த உணவுப்பண்டம்தான் இன்றைக்கு ஹைதராபாத் பிரியாணியாக கொடி கட்டிக் கொண்டிருக்கிறது. 

ஒவ்வொரு உணவுக்கும் ஒரு வரலாறு இருக்குமல்லவா? மறந்து போன வரலாறுகள் அவை.

மன்னா மெஸ் ஜெயராஜூடன் பேசிக் கொண்டிருந்த போது அச்சரப்பாக்கத்தின் சுற்று வட்டாரத்தில் கிடைக்கும் சில பொருட்களை வைத்தே தாம் செய்த ரெசிப்பிகளை ஒரு பாட்டி சொல்லித் தந்ததாகச் சொன்னார். அச்சரபாக்கத்தின் அந்த உணவுப்பொருட்கள்தான் தங்கள் கடையின் ‘ஹாட் விற்பனை’என்றார். கவனித்துப் பார்த்தால் நிலத்தோடு சம்பந்தப்பட்ட பெரும்பாலான உணவுப்பண்டங்கள் சக்கைப் போடு போடுகின்றன. அதாவது ஊருடன் சம்பந்தப்பட்டவை. அந்த ஊருக்குச் சென்றால் அந்த உணவுதான் சிறப்பு என்று பெயர் வாங்கிய உணவுகளின் பட்டியல் அநேகமாக முடிவிலியாக இருக்கக் கூடும். 

பொதுவாகவே, தனித்துவமில்லாத அல்லது பிற உணவகங்களிலும் சாதாரணமாகக் கிடைக்கும் உணவை நம் தட்டுகளில் பரிமாறும் ரெஸ்டாரண்ட்கள், உணவகங்களின் ஆயுட்காலம் வெகு குறைவு. ஒரு கட்டம் வரைக்கும் சம்பாதித்துவிட்டு ஓய்ந்துவிடுவார்கள். அதுவே தமது ஊரோடு சம்பந்தப்பட்ட பண்டத்தை வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்கும் உணவகங்கள் காலங்காலமாக நிலைத்திருக்கின்றன. 

யாருக்குமே கடைப் பெயரை விடவும் ஊர்ப்பெயர்தான் மனதில் நிற்கும். ‘அந்த ஊர்லயா இருக்கீங்க? அப்படின்னா அதை சாப்பிட்டு பார்த்துடுங்க’ என்று சொல்லிவிட்டு அதன் பிறகுதான் கடையைச் சொல்வார்கள். திருநெல்வேலிக்கு அல்வா என்பார்கள். அடுத்ததாகத்தான் கடையின் பெயரைக் கேட்போம். ‘இருட்டுக்கடை இல்லைன்னா சாந்தி ஸ்வீட்ஸ்’ என்று பதில் வரும். நெல்லை பேருந்து நிலையத்தில் இருக்கும் அத்தனை கடைகளுக்கும் சாந்தி ஸ்வீட்ஸ் என்றுதான் பெயர்.  அத்தனையும் டூப்ளிக்கேட்டாம். ரயில் நிலையத்துக்கு அருகில், நூறு சாந்தி ஸ்வீட்ஸ் கடைகளில் ஒரிஜினலைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். 

எல்லோரும்தான் அல்வா தயாரிக்கிறார்கள். ஆனால் யாரோ ஒன்றிரண்டு பேர் மட்டும்தான் ஜொலிக்கிறார்கள். வீதிக்கு வீதி பரோட்டா கடைகள் இருக்கின்றன. ஆனால் பார்டர் கடை என்றால்தான் ஈர்ப்பு. ஏதோவொரு காரணமிருக்கும். பின்னணியில் ஒரு வரலாறு இருக்கும். பலருடைய உழைப்பு இருக்கும். தமிழகத்தில் தனித்துவமான, குறிப்பிட்ட ஊருக்கு மட்டுமே உரித்தான உணவுப் பொருட்கள் என பட்டியல் தயாரித்தால் எவ்வளவு தேறும்?

ஆம்பூர் என்றால் பிரியாணி - அது ஸ்டார் பிரியாணி கடையில் கிடைக்கும், செஞ்சி என்றால் முட்டை மிட்டாய் அது சையது மிட்டாய் கடையில் கிடைக்கும்.  இப்படி வரிசையாகச் சொல்லிக் கொண்டே போகலாம்.

நான் அப்படியொன்றும் உணவுப்பிரியன் இல்லை. சில நண்பர்கள் மிக நுணுக்கமாக உணவின் வேறுபாடுகளைச் சொல்கிறார்கள். கிராம்பு அதிகம்; பட்டை சேர்க்கவில்லை என்பது வரைக்கும் எப்படி துல்லியமாகக் கணிக்கிறார்கள் என்று ஆச்சரியமாக இருக்கும். பெண்கள் சமர்த்தர்கள். எனக்கு வாப்பாடு போதாது. மொத்தச் சோத்தான். பெரு மொத்தமாக கொறித்துவிட்டு ‘நல்லா இருக்கு; நல்லா இல்ல’ என்று மட்டுமே சொல்லத் தெரியும்.  நிறைய ஊர்களுக்குச் சுற்றுவதால் அந்தந்த ஊர்களில் இருந்து நண்பர்களுக்கு அழைக்கும் போதெல்லாம் உணவைச் சொல்கிறார்கள். 

காலங்காலமாக மெருகேற்றித்தானே இன்றைய சுவைக்கு வந்து சேர்ந்திருப்போம்? எத்தனை ஆயிரம் உணவுப்பண்டங்களை கைவிட்டிருப்போம்? ‘ஏதாச்சும் நோம்பின்னா அரிசி சோறாக்குவோம்’ என்று கடந்த தலைமுறைக்காரர்கள் சொல்வார்கள். இன்றைக்கு அரிசிச்சோறு இல்லாத தினம் என்று ஏதாவது உண்டா? நாம் இப்பொழுது உண்ணும் எதையாவது கீழடிக்காரர்கள் உண்டிருப்பார்களா? அவர்களுக்கு என சிறப்பு உணவு இருந்திருக்கும் அல்லவா? 

உணவுக்கும் நிலத்துக்குமான பிணைப்பு வெகு ஆச்சரியமாக இருக்கிறது. சில நாட்களுக்கு முன்பாக ஃபேஸ்புக்கில் ‘எந்த ஊரில் எந்த உணவுப்பொருள் சிறப்பு’ எனக் கேட்டிருந்தேன். நிறையப் பேர்கள் பதில் சொல்லியிருந்தார்கள். அவர்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். வந்த பதில்களையெல்லாம் தொகுத்து வைத்தால் பலருக்கும் பயன்படக் கூடும். இது மிகச் சிறிய பட்டியல். பரவலாக எல்லா ஊர்களிலும் கிடைக்கும் பொருட்களைத் தவிர்த்து, அந்தந்த ஊர்களில் மட்டுமே கிடைக்கும் பண்டங்களை மட்டுமே தொகுக்க வேண்டும் என்கிற முயற்சி இது.

வாய்ப்பு அமையுமானால் இந்தப் பட்டியலைத் தொடர்ந்து வளர்த்தெடுக்கலாம்.

1. திருநெல்வேலி- அல்வா- இருட்டுக்கடை, ரயில்வே நிலையம் சாந்தி ஸ்வீட்ஸ், சந்திரா ஸ்வீட்ஸ்
2. திருநெல்வேலி- பொறித்த நாட்டுக்கோழி- வைரமாளிகை
3. சேலம் - தட்டுவடை- பட்டைகோயில்
4. சென்னை - வடகறி - சைதை மாரி ஹோட்டல்/ கீழ்பாக்கம் கிருஷ்ணா      பவன்
5. சாத்தூர் - இனிப்பு சேவு
6. கோவில்பட்டி - கடலை மிட்டாய்
7. தூத்துக்குடி - மக்ரூன் - கணேஷ் பேக்கரி
8. கடம்பூர் - போளி
9. மதுரை - ஜிகிர்தண்டா- விளக்குத்தூண் ஹனீபா
10. ஆற்காடு-  மக்கன் பேடா- செட்டியார் மிட்டாய் கடை/கண்ணன் ஸ்வீட்ஸ் - பஜார்
11. அருப்புக் கோட்டை- கருப்பு சீரணி
12. ஸ்ரீவில்லிப்புத்தூர்- பால்கோவா- ஆண்டாள் கோவில் வாசல் வெங்கடேஸ்வரா ஸ்வீட்ஸ்
13. மணப்பாறை - முறுக்கு
14. ஆம்பூர் - பிரியாணி - ஸ்டார் பிரியாணி
15. கோபி - வெள்ளாங்கோயில் - முறுக்கு
16. முதலூர்- மஸ்கொத் அல்வா- AJJ ஸ்வீட்ஸ், SJJ ஸ்வீட்ஸ்
17. செஞ்சி- முட்டை மிட்டாய்- சையத் மிட்டாய் கடை
18.மதுரை - உருளைக்கிழங்கு காரக்கறி- மேல சித்திர வீதி நாகப்பட்டினம் நெய் மிட்டாய் கடை
19. செங்கோட்டை- பரோட்டா- ரஹமத் பார்டர் பரோட்டா கடை
20. சிதம்பரம் - கொஸ்து - உடுப்பி கிருஷ்ணவிலாஸ்
21. காவேரிபட்டணம் - நிப்புட்- பி.டி.எஸ்
22. திண்டுக்கல்- கறி பரோட்டா- கோழி நாடார் கடை
23. பரங்கிபேட்டை- நெய் பரோட்டா
24. பரங்கிபேட்டை- அல்வா- பாத்திமுத்து கடை
25. கீழக்கரை- தொதல் - ராவியத் ஸ்வீட்ஸ்
26. ஊட்டி- வர்க்கி - இம்பாலா பேக்கரி, வெஸ்ட் கோஸ்ட் பேக்கரி
27. காயல்பட்டினம் - தம்மடை, சீர்ப்பணியம், போணவம், வெங்காய பணியம். உப்பு வட்டிலாப்பம், மாசி வடை, பாச்சோறு, சோற்று வடை, புட்டு, பாகு, காயம், உழுவா கஞ்சி
28. திருச்சி- அக்காரவடிசல் - ஆதிகுடி காபி க்ளப்
29. கூத்தாநல்லூர்- தம்ரூட்- மவுலானா பேக்கரி
30. உடன்குடி- கருப்பட்டி மிட்டாய்
31. உத்திரமேரூர்- காராசேவு- அய்யர்கடை