Sep 16, 2019

அஞ்சும் எட்டும் பதினெட்டு

உலகிலேயே மிகச் சிறந்த கல்வியை எந்த நாடு தருகிறது என்று துழாவினால் பின்லாந்துதான் வரும். ரோமாபுரி ஒரே நாளில் கட்டப்பட்டதில்லை என்பார்கள் அல்லவா? அப்படித்தான் பின்லாந்தும். மெல்ல மெல்ல மாற்றங்களைச் செய்து, தமது கல்வித்துறையை புனரமைத்து இன்றைக்கு உலகின் மிகச் சிறந்த கல்வியை வழங்கும் நாடாகியிருக்கிறது. நமது கல்வியமைச்சர் செங்கோட்டையன் பின்லாந்து சென்றதும், அங்கே பியானோ வாசித்ததும் உள்ளபடியே உள்ளூர்க்காரனாக மகிழ்ச்சியானதாகத்தான் இருந்தது. அமெரிக்காவும் கூட பின்லாந்தைப் பார்த்துதான் தமது கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறது என்பார்கள். அப்பேர்ப்பட்ட பின்லாந்தில் அமைச்சருக்கு ஒன்றிரண்டு நல்ல விஷயங்களாவது தட்டுப்படாதா என்றுதானே நமக்கு யோசிக்கத் தோன்றும்? ஒன்றையாவது நம் ஊரில் செயல்படுத்தினால் போதும் என்பதுதான் எதிர்பார்ப்பும் கூட.

ஆனால், திரும்பி வந்த தடத்தின் ஈரம் காய்வதற்குள் ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்று அறிவித்திருக்கிறார். மிக அதிர்ச்சியளிக்கக் கூடிய அறிவிப்பு இது. நமது கல்வியமைச்சர் கடந்த 2011 ஆம் ஆண்டில் ஜெயலலிதா அமைச்சரவையில் வாய்ப்பளிக்கப்பட்டு பிறகு வெளியில் தெரியாத காரணங்களினால் படிப்படியாக பதவிகள் பறிக்கப்பட்டு அமைதியாக்கப்பட்டார். அதன் பிறகு 2016 தேர்தலில் வென்றாலும் கூட அமைச்சராகும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு நடத்தப்பட்ட திரைமறைவு செயல்பாடுகளில் ஒன்றாக அவரிடம் கல்வித்துறை ஒப்படைக்கப்பட்டது. அந்தச் சமயத்தில் அவர் அப்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனைச் சந்தித்துப் பேசினார். அதன் பிறகு கல்வித்துறையில் சில சீர்திருத்த முயற்சிகளை மேற்கொண்ட அத்துறையின் செயலாளர் உதயச்சந்திரன் டம்மியாக்கப்பட்டு பிறகு இடமாற்றம் செய்யப்பட்டார்.

தமிழகக் கல்வித்துறை பற்றிய பிம்பங்கள் தொடர்ச்சியாக ஊதிப்பெருக்கப்பட்டது. ‘இந்தியாவே திரும்பிப்பார்க்கும்’,‘நாடே திரும்பிப் பார்க்கும்’ என்று அமைச்சரால் அடிக்கடி சொல்லப்பட்டு கல்வித்துறைதான் தமிழகத்திலேயே சிறப்பாகச் செயல்படும் துறையாக பிரஸ்தாபிக்கப்பட்டது. பொதுமக்களும் கூட, இருப்பதிலேயே கல்வியமைச்சர் பரவாயில்லை என்று பேசினார்கள். தம்மை மீறி ஒரு துறை சிறப்பாகச் செயல்படுகிறது என்ற செய்திகள் எடப்பாடியை உறுத்தியிருக்கக் கூடும். ஆனால் அவரால் இதற்காக எந்த எதிர்வினையும் புரிய முடியவில்லை. எய்தவன் எங்கேயோ இருக்க அம்பை நொந்து என்ன பலன் என்று அவருக்கும் புரிந்திருக்கும். அவருடைய நெருக்கடிகள் அப்படிப்பட்டவை. 

இந்த வெளிச்சத்தில்தான் தமிழக கல்வித்துறை சத்தமில்லாமல் சிதையத் தொடங்கியது. நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. தமிழகம் முழுக்கவும் நீட் தேர்வு பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் என்று கோடிக்கணக்கான தொகை தனியார் நிறுவனம் ஒன்றுக்கு அளிக்கப்பட்டது. ஆனால் முடிவு என்னவென்று நமக்குத் தெரியும். மாணவர்கள் சேர்க்கை இல்லை என்று அறிவிக்கப்பட்டு அரசுப் பள்ளிகள் மூடப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.  பல்லாயிரக்கணக்கான மாணவர்களை RTE என்ற போர்வையில்  தனியார் பள்ளிகளில் சேர்ப்பதற்கான தீவிரம் காட்டப்பட்டது. அதே சமயம் அரசு ஆசிரியர்களுக்கு சம்பளம் அதிகம், ஆசிரியர்கள் மோசம் என்ற பிம்பமும் மக்களிடையே திரும்பத் திரும்ப பரப்பப்பட்டது. கல்வித்துறையின் அத்தனை சீரழிவுகளுக்கும் ஆசிரியர்கள்தான் காரணம் என்று சொல்லிவிட்டு அரசாங்கம் தப்பிக்க முயற்சிக்கிறது.  இதன் அரசியல், பின்னணி பற்றியெல்லாம் தமிழகத்தின் பொதுவெளியில் எந்தவிதமான விவாதங்களும் இல்லை. இவையெல்லாம் திட்டமிட்ட சதிகளா என்றும் புரியவில்லை. இதன் தொடர்ச்சியாகத்தான் ஐந்தாம் மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்று அறிவித்திருக்கிறார்கள்.

மேற்சொன்னவற்றை ஒவ்வொன்றாகக் கோர்த்துதான் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. 

பின்லாந்து சென்று வந்த அமைச்சருக்கு அங்குள்ள ஒரு முக்கியமான விஷயம் பிடிபட்டதா என்று தெரியவில்லை. அவருக்கு அந்தளவுக்கு கல்வித்துறை பற்றிய புரிதல் இல்லையென்றாலும் உடன் சென்றிருந்த அதிகாரிகள் சொல்லிக் கொடுத்திருக்கலாம். பின்லாந்தைப் பொறுத்தவரையிலும் தேர்வு முறைகளில் கவனம் செலுத்துவதில்லை. மாணவர்கள் புரிந்து கொண்டார்களா அடிப்படையை என்பதுதான் அதன் சித்தாந்தம். நாற்பதாண்டுகளுக்கு முன்பாகவே ‘மையப்படுத்தப்படுத்தப்பட்ட, தேர்வு எழுதி தேர்ச்சி அடையும் முறையை அடிப்படையாகக் கொண்ட கல்வித்துறை நமக்கு சரிப்பட்டு வராது’ என்று உணர்ந்து கொண்டார்கள். அதில் இருந்துதான் அவர்கள் வெளிச்சத்தை நோக்கியும் நகர்ந்தார்கள். ஆனால் இன்றைய தமிழகக் கல்வித்துறையின் போக்கு அதற்கு முற்றிலும் எதிரானதாக ‘Centralized, Evaluation based’ ஆகச் சென்று கொண்டிருக்கிறது. நாடு முழுவதும் ஒரே கல்வி, நாடு முழுவதும் ஒரே தேர்வு- எப்படி சாத்தியமாகும்?

கங்கை, யமுனை, பிரம்மபுத்திராவைவிடவும் நொய்யலையும் தாமிரபரணியையும் தமிழகத்து மாணவன் தெரிந்து கொள்வதுதான் அவசியம். இமயமலை பற்றி புரிந்து கொள்வதைவிடவும் மேற்குத் தொடர்ச்சி மலையையும், பொதிகை மலையையும் அவன் புரிந்து கொள்ள வேண்டும். அவன் புரிந்து கொள்ள வேண்டுமே தவிர, மனனம் செய்து வாந்தியெடுக்கக் கூடாது. ஆனால் நாம் பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறோம். பாடங்கள் மையப்படுத்தப்பட்டவையாக, பத்து வயது மாணவர்களுக்கு தேர்வுகள் என்ற பெயரில் அவர்களை வாட்டுவதாக கல்வித்துறையின் இருண்டகாலத்தை நோக்கி மிக வேகமாக விரைந்து கொண்டிருக்கிறோம்.

பின்லாந்து கல்வித்துறையின் சிறு பகுதியைப் புரிந்திருந்தாலும் கூட இவ்வளவு அவசரமாக அறிவித்திருக்கமாட்டார்கள். அமைச்சர் அங்கே சென்று, பேண்ட் சர்ட் அணிந்து, பியானோவெல்லாம் வாசித்து படத்தை எடுத்து தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைத்ததெல்லாம் வெற்று விளம்பரம்தான் என்று நினைக்கும் போது ஆயாசமாக இருக்காதா? எப்பொழுதுமே மக்கள் ‘அடடா சூப்பர்’ என்று சொல்லிக் கொண்டேயிருக்க மாட்டார்கள். பட்டிக்காட்டான் மிட்டாயை வேடிக்கை பார்த்த கதையாக எல்லாவற்றையும் பார்த்துவிட்டு வந்து பிஞ்சு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு என்று அறிவிக்கிறார்.

நடுத்தர, நகர்ப்புற வர்க்கத்தினர் சிலர் உடனே கிளர்த்தெழுந்து ‘அதில் என்ன தவறு? வடிகட்டுதல் அவசியமில்லையா?’ என்கிறார்கள். யாரை வடிகட்டுவது அவசியம்? ஐந்தாம் வகுப்பு மாணவியையா? ‘பெயிலா போய்ட்டா...படிச்சது போதும்...வீட்டு வேலை பழகட்டும்’ என்ற சொற்றொடர் கடந்த இருபதாண்டுகளாகத்தான் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்திருக்கிறது. அதை மீண்டும் அமலுக்குக் கொண்டு வருவதுதான் வடிகட்டுதல் முறையா?  தேர்வுகள், வடிகட்டுதல் என்று அழுத்தத் தொடங்கினால் பள்ளிகளில் இடைநிறுத்தம் செய்யும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயரும். அது அவர்களின் அறிவு சம்பந்தப்பட்ட விஷயம் என்று நம்பினால் அது நம் அறியாமை. குடும்பம், பெற்றோரின் கல்வியறிவு, ஊரின் சூழல் என பல காரணிகள் உள்ளடங்கியிருக்கும். 

உள்ளடங்கிய கிராமத்தில் இருக்கும் அருக்காணியும், பூங்கோதையும், சாமியாத்தாவும் சென்னையிலும் கோவையிலும் படிக்கும் வர்ஷினிக்கும், ரக்‌ஷிதாவுக்கும் எந்தவிதத்திலும் சமமில்லை என்று நிரூபிப்பதுதான் வடிகட்டுதல் முறையா? ஐந்தாம் வகுப்பிலும், எட்டாம் வகுப்பிலும் படித்து தேர்வு எழுவதைவிடவும் புரிந்து உணர்வதைக் கற்றுத் தருவதாகக் கல்வி இருக்க வேண்டியதில்லையா? 

இதையெல்லாம் விட்டுவிட்டு ‘எட்டாம் வகுப்புக்கு பொதுத்தேர்வு என்பது முன்னாடியே கூட இருந்துச்சு’ என்று பேசுகிறவர்கள், ‘எங்கப்பாரு காலத்துல திண்ணைப்பள்ளிக்கூடம் இருந்துச்சு’ என்று சொல்ல எத்தனை காலம் ஆகிவிடும்? திண்ணைப்பள்ளிக்கூடம், சாதி வாரியான படிப்பு, சாதி வாரியான தொழில் என்று பின்னோக்கி செல்வதுதான் வளர்ச்சி. இல்லையா? அப்படி சொல்ல வைப்பதன் தொடக்கம்தான் இவையெல்லாம் என்று ஆணித்தரமாக நம்பலாம். ‘இதெல்லாம் ஒரு பிரச்சினையுமில்லை’ என்று சொல்கிறவர்கள் மாநகரங்களைத் தாண்டி வருவதில்லை. தமிழகத்தில் பனிரெண்டாயிரத்துக்கும் அதிகமான கிராமப்பஞ்சாயத்துகள் இருக்கின்றன. பத்து கிராமங்களை இணைத்து கூட ஒரு பஞ்சாயத்து செயல்படும். அப்படியெனில் ஒவ்வொரு கிராமமும் எவ்வளவு சிறியது என்று புரிந்து கொள்ளலாம். அங்கேயிருக்கும் பிஞ்சுக்குழந்தைகளை மனதில் வைத்துப் பேசினால் கல்வித்துறையில் இவர்கள் செய்து கொண்டிருக்கும் அழிச்சாட்டியங்களும், ஆதிக்க மனப்பான்மையும் புரியும். இது வெறுமனே தேர்வு சம்பந்தப்பட்ட விவகாரம் மட்டுமில்லை. சமூக அடுக்குகளின் சிக்கல்களை எல்லாம் எந்தவிதத்திலும் பொருட்படுத்தாமல், மிகப்பெரிய குகையின் இந்தப்பக்கத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். இன்னமும் சில வருடங்களில் குகையைத் தாண்டிச் சென்றால் எதிர்முனையில் இருக்கும் நிறம் புரியும் நமக்கு.

Sep 11, 2019

சிவப்பு மஞ்சள் பச்சையில்..

தொடர்ச்சியாக, பல வார இறுதிகளில் சென்னைக்கு பயணம் செய்து கதை விவாதத்தில் கலந்து கொண்ட படம் திரைக்கு வந்துவிட்டது. சிவப்பு மஞ்சள் பச்சை.


இயக்குநர் சசியின் இல்லம் கே.கே நகரில் இருந்தது. தமது வீட்டுக்கு மேல் உள்ள தளத்தில் உள்ள ஒரு வீட்டில் அலுவலகம் அமைத்திருந்தார். வெள்ளிக்கிழமை இரவு கிளம்பி வந்து அதிகாலையில் அலுவலகத்தைத் திறந்து அங்கேயே படுத்துக் கொள்வேன். எட்டு மணிக்கு எழுந்து தயாராகி உணவை முடித்த பிறகு ஒன்பது அல்லது பத்து மணிக்கு கலந்துரையாடல் தொடங்கும். மதிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் மாலை வரை தொடரும். சில வாரங்களில் ஞாயிற்றுக்கிழமையும் உண்டு. இல்லையெனில் கிளம்பி ஊருக்குச் சென்றுவிடுவேன்.

இடையில் தயாரிப்பாளர் மாறிய பிறகு அருகிலேயே இன்னொரு அலுவலகம் அமைத்து கதை விவாதம் நடைபெற்றது. அதன் பிறகு பாஃப்டா அலுவலகத்தில் ஓர் அறையில் சில நாட்கள் நடைபெற்றது. அப்பொழுதும் குளியல், தங்கல் எல்லாம் இயக்குநரின் வீட்டின் மேலிருந்த அலுவலகத்தில்தான். இயக்குநர் பற்றி ஒன்றைக் குறிப்பிட்டாக வேண்டும். சேலத்தில் எளிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். அவருடைய அப்பா மளிகைக்கடை நடத்தி வந்தாராம். இயக்குநரிடம் பேசியதைவிடவும் அவரது பெற்றோரிடம் அதிகம் பேசியிருப்பேன் என நினைக்கிறேன். அப்படியான எளிய மனிதர்கள். சசியின் நேர்காணல்கள் இணையத்தில் கிடைக்கின்றன. எந்தவிதமான பூச்சுகளும் இல்லாமல் பேசியிருப்பார். எப்படி பேசுகிறாரோ அப்படியேதான் வாழ்கிறார். இத்தகைய மனிதர்களிடம் எந்தவிதமான பாசாங்குமில்லாமல் மிக தைரியமாக உரையாடலை முன்னெடுக்க முடியும். 

இயக்குநரை சில வாரங்களுக்கு முன்பாகவே டிஸ்கவரி புக் பேலஸில்  முதன் முறையாகச் சந்தித்துப் பேசியிருந்தேன்.   ‘மாமா-மச்சான் கதைதான் அடுத்த படம்’ என்றார். அவருக்கும் எனக்கும் அதற்கு முன்பாக எந்தத் தொடர்புமில்லை. மகுடபதி என்ற நண்பர்தான் எங்களுக்கு இணைப்பு பாலம். அதன் பிறகு இயக்குநர் என்னைப் பற்றி கொஞ்சம் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என நினைக்கிறேன். முதல் சந்திப்பிலேயே ‘அடுத்த படம் இதுதான்...யோசிச்சு வைங்க’ என்று நம்பிக்கையாகச் சொல்லிவிட்டார்.  

அதன் பிறகு மாமா-மச்சான் உறவுகள் பற்றிய கதைகளை தெரிந்தவர்களிடமெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தேன். புத்தகங்களிலும் தேடல்களை நடத்தினேன். கிழக்குச் சீமையிலே மாதிரியான சில படங்களையும் பார்த்தேன். உள்ளூரின் சுவாரசியமான சீட்டாட்ட சண்டைகள், இணைந்து தொழில் தொடங்கிய மாமன்-மச்சான், மிகச் சாதாரண சச்சரவில் ஆரம்பித்து கடுமையான எதிரிகளாகிக் கொண்டவர்கள் என்று கேள்விப்பட்டவற்றையெல்லாம் யோசித்து ஒரு சிறுகதை வடிவமாக்கி இயக்குநரை அலைபேசியில் அழைத்துச் சொல்வேன். தமக்குப் பிடித்தமானவையெனில் ‘இதை ரெக்கார்ட் செஞ்சு அனுப்புறீங்களா?’ என்று கேட்பார். அப்படி அனுப்பிய ஒரு சம்பவம்தான் படத்தின் இறுதிக்காட்சி என்று முடிவானது. அம்மாவின் கிராம நிர்வாக அலுவலர் பணி அனுபவத்திலிருந்து கேட்ட சம்பவம் அது. 

மெல்ல வளரும் கதை, அதனையொட்டிய சம்பவங்கள், அவற்றை இணைத்துக் கோர்வையாக்குவது என்று ஒவ்வொரு படியாக திரைக்கதை முன்னேறிக் கொண்டிருந்தது. விவாதம் நடக்கும் அறையில் வெள்ளைப் பலகை ஒன்றில் கதையின் தொடர்ச்சி எப்பொழுதும் எழுதப்பட்டிருக்கும். மிக நுணுக்கமான சில ஷாட்களை விவாதத்தின் போது அவர் சொல்லியிருந்தார். சிறுமியான அக்காவின் விரலைச் சூப்பியபடியே உறங்கிக் கொண்டிருக்கும் குழந்தை, யாராவது மச்சான் என்று அழைக்கும் போது ஜி.வி.பிரகாஷ் கடுப்பாவது என்பதெல்லாம் தொடக்க காலத்திலேயே முடிவு செய்து வைத்திருந்தார். திரைக்கதை உருவான போதே சில வசனங்களையும் இயக்குநர் சொல்வார். அவைதான் படத்தில் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

கதையைச் சொல்லும் போது பெரிய உணர்ச்சிகளைக் காட்டிக் கொள்ளாமல் சொல்லும் இயக்குநர், சில காட்சிகளைச் சொல்லும் போது தம்மையும் மீறி அழுதார். ‘இதென்ன உண்மையா நடந்த கதையா இருக்குமோ’ என்று குழம்பிக் கொண்டிருந்தேன். கவனிக்கும் போது இயக்குநர் சசி அடிப்படையிலேயே அப்படிப்பட்டவர்தான். உணர்ச்சிகளை வெளிக்காட்டிக் கொள்ளாத ஆனால் உள்ளூர உணர்ச்சிகளால் உருவானவர் என்று தோன்றும்.  அவரது முந்தைய படங்களின் ஆக்கங்களிலும் அது தெரியும். ஆனால் தமது முந்தைய படங்களை அவர் விவாதத்தின் போது ரெஃபரன்ஸாக பேசியதாக நினைவில் இல்லை. வேறு சில படங்கள், இயக்குநர்களைத்தான் சுட்டிக் காட்டினார்.

கதை முழுமையடையும் வரைக்கும் யார் நாயகர்கள் என்றே தெரியாது. ‘கதைக்கு ஏத்த மாதிரி நடிகர்களைத் தேர்வு செய்து கொள்ளலாம்’ என்று ஆரம்பத்திலேயே எங்களிடம் சொல்லியிருந்தார். கதையின் வடிவம், பெரும்பாலான காட்சிகள் முடிவு செய்யப்பட்ட பிறகு ஜி.வி.பிரகாஷையும், சித்தார்த்தையும் சந்தித்துக் கதை சொன்னார். நடிகர்கள் முடிவு செய்யப்பட்ட பிறகு கதையில் சில மெருகேற்றல்கள் நடைபெற்றிருக்கின்றன. அதன் பிறகு என்னுடைய பங்களிப்பு குறைந்துவிட்டது. 

இயக்குநரைச் சந்திக்கும் முன்பாக ‘வசனம் எழுதிப் பார்க்க வேண்டும்’ என்ற ஆர்வத்தில்தான் இருந்தேன். ஆனால் கதை உருவாக்கத்தில்தான் என்னுடைய உதவி இருந்தது. ‘சார், வசனம் எழுதிப் பார்க்கட்டுமா’ என்று கேட்டிருந்தால் அவர் மறுத்திருக்க வாய்ப்புகள் குறைவுதான் என்ற நம்பிக்கையிருக்கிறது. ஆனால் கேட்கத் தோன்றவில்லை. யாரிடம் எந்த வேலையைப் பெற வேண்டும் என்று அனுபவஸ்தர்களுக்குத் தெரியும்.

உண்மையில், ஒரு கதை எப்படி திரைக்கதையாகி படமாகிறது என்பதை வெகு அருகிலிருந்து பார்த்த அனுபவம் எனக்கு. கதை உருவாக்கம் வகுப்பறை போலத்தான் நடந்தது. ஒரு சில உதவி இயக்குநர்கள் மிக பயந்தவர்களாக இருப்பார்கள். ஒரு சிலர் துணிச்சலாக இயக்குநரிடம் பேசுவார்கள். நான் சமநிலை குலையாமல் இருந்ததாக நம்புகிறேன். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிரவும் பயணத்தில்தான் கழிந்தது. ஆனால் சலித்துக் கொள்ளவேயில்லை. சனிக்கிழமை புத்தம் புதியதாக இருக்கும். படமாகப் பார்க்கும் போது என்னுடைய உழைப்பு மிகச் சிறியதுதான் எனத் தோன்றுகிறது. அதற்கேற்ற கிரெடிட்டை வழங்கியிருக்கிறார்.

திரையில் பெயர் தோன்றும் போது நானே விசிலடித்துக் கவனத்தைத் திருப்பலாமா என்று நினைத்தேன். ‘டேய்...இதெல்லாம் உனக்குத் தேவையா?’ என்று பல்லி கத்தியதால் அமைதியாகிக் கொண்டேன்.


ஒருவேளை இதுவே என்னுடைய கடைசி திரைப்பட உழைப்பாகக் கூட இருக்கலாம். பணம், புகழ் என்றில்லாமல் நம்முடைய அலைவரிசைக்கு ஏற்ற, உழைப்பைச் சுரண்டாத சசி மாதிரியான இயக்குநர்கள் அமைவது அபூர்வம் என்றுதான் நினைக்கிறேன். அப்படியொரு வாய்ப்பு கிடைத்தது. நல்லதொரு அனுபவமாக்கிக் கொண்டிருக்கிறேன்.

படம் தயாரான பிறகும் படத்துக்காக பெரிய விளம்பரங்களைச் செய்யவில்லை. ‘பிச்சைக்காரன்’ இயக்குநரின் அடுத்த படம் என்பதைத் தாண்டி பெரிய ப்ராண்டிங் இல்லை. படம் எப்பொழுது வெளியாகிறது என்பது கூட முந்தைய நாள் வரைக்கும் தெரியவில்லை. தி.நகரில் ஒரு திரையரங்கில் பார்த்துவிட்டு வெளியே வந்த போது திரையரங்கப் பணியாளரிடம் விசாரித்தேன். கடந்த இரண்டு நாட்களாக ‘பிக்கப்’ ஆகிக் கொண்டிருக்கிறது என்றார். சந்தோஷம்.

கதையை தமக்குப் பிடித்த வகையில் சமரசமில்லாமல் படமாக்கக் கூடிய இயக்குநர் என்ற பிம்பத்தைச் சிதைக்காமல் எடுத்திருக்கிறார். சிற்சில விமர்சனங்கள் இருந்தது. அதையும் அலைபேசியிலேயே சொன்னேன். எந்தவித மறுப்புமில்லாமல் ஏற்றுக் கொண்டார். எனக்கு உண்மையிலேயே சந்தோஷமாக இருக்கிறது. ஒருவகையில் நிறைவாகவும் இருக்கிறது. 

படத்தின் கதையில் பணியாற்றிய ஒருவன் கதையை, விமர்சனத்தை எழுதுவது சரியாக இருக்காது. படத்தைப் பார்த்துவிட்டு நீங்கள் சொல்லுங்கள்.

Sep 10, 2019

இலக்கிய உலகம்

கோயமுத்தூர் புத்தகக் கண்காட்சியில் ஒரு மனிதரைச் சந்திக்க நேர்ந்தது. இலக்கியவாதி. அப்படித்தான் சொல்லிக் கொள்கிறார். அவரிடம் பல வருடங்கள் முன்பே அறிமுகமுண்டு.  நேரெதிரில் வந்துவிட்டார். 

‘வணக்கம் சார்...நல்லா இருக்கீங்களா?’ என்றேன். அது அவரது வயதுக்கும், முந்தைய அறிமுகத்துக்குமாக தந்த மரியாதை. 

‘வசூல் எல்லாம் எப்படிப் போகுது?’ என்றார். என்னுடன் ஜீவகரிகாலன் நின்றிருந்தார். 

‘எந்த வசூல் சார்?’ என்றேன். 

‘ட்ரஸ்ட் நடத்துறீங்க இல்ல..அந்த வசூல்’என்றார். இந்த வரியை தட்டச்சு செய்யும் போதும் கூட ‘ன்’விகுதி தன்னிச்சையாக வருகிறது. இன்னமும் அவ்வளவு கடுப்பு ஏறிக் கிடக்கிறது.  ‘உங்ககிட்ட நின்னு பேசியிருக்கக் கூடாது...’ என்று நகர்ந்துவிட்டேன். பெயரைச் சொல்லி இரண்டு மூன்று முறை அழைத்தார். திரும்பிக் கூட பார்க்கவில்லை. 

‘எப்படிங்க கட்டுபடுத்திட்டீங்க’ என்று கரிகாலன் கேட்டார். அத்தனை எரிச்சலையும் சேர்த்து காறித் துப்பிவிட்டு ‘விடுங்க’ என்றேன்.

அடுத்த நாளும் புத்தகக் கண்காட்சிக்கு சென்றிருந்தேன். அதே ஆள் நேரெதிரில் வந்துவிட்டார். கையில் பஜ்ஜியும் டீயும் வைத்திருந்தவர் வலுக்கட்டாயமாக நிறுத்தி பஜ்ஜியை எடுத்துக் கொள்ளச் சொன்னார். அவ்வளவு தரம் கெட்டுப் போய்விடவில்லை. மறுத்துவிட்டு கண்களை நேருக்கு நேராகப் பார்த்தேன். 

‘எனது நண்பர்களிடமும் இப்படித்தான் விளையாட்டாகப் பேசுவேன்’ என்றார்.

‘நீங்க யார்கிட்டவும் பேசிட்டு போங்க...ட்ரஸ்ட்டோட மொத்த கணக்கும் நிசப்தம் தளத்திலேயே போட்டிருக்கிறேன். எதை வைத்து விளையாடுவது என்று விவஸ்தை இல்லையா’ என்று கேட்டதற்கு வழிந்தார். அதன் பிறகு அவரிடம் என்ன பேச்சு வேண்டிக் கிடக்கிறது. ஜென்மத்திற்கும் முகத்திலேயே விழிக்கக் கூடாது என்று நினைத்தபடி விலகி வந்துவிட்டேன்.

அடுத்தவர்களின் பணத்தை வைத்துக் கொண்டு இயங்கும் போது இப்படியான விளைவுகளைச் சந்திக்கத்தான் நேரிடும். தவிர்க்கவே முடியாது. ஆனால் குறைத்துக் கொள்ளலாம். முன்னே நம்மைவிட்டு பின்னால் பேசுகிறவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். அதையெல்லாம் பொருட்படுத்திக் கொண்டிருக்க வேண்டியதில்லை. எந்த ஊடக வெளிச்சமும் விழுந்துவிடக் கூடாது என்று தயங்குவதும் கூட இதற்காகத்தான். கடலூர், சென்னை வெள்ளம் வந்த சமயத்தில் சில பத்திரிக்கைகளில் செய்தி வெளியானவுடன் ஏகப்பட்ட கோரிக்கைகள் வந்தன. நாம் செய்து கொண்டிருக்கும் செயல்களுக்கும் அவர்களின் கோரிக்கைகளுக்கும் சம்பந்தமே இருக்காது. பதில் சொன்னாலும் சங்கடம்; சொல்லாவிட்டாலும் சங்கடம். 

‘அதெல்லாம் கோடிக்கணக்குல ஃபாரின் பண்ட் வருது’ என்று பேச ஆரம்பித்துவிடுவார்கள். அடித்து விட வேண்டியதுதானே!

அடுத்தவர்களின் பணத்தை கையில் வைத்துக் கொண்டிருக்கும் போது நம்மோடு பயணிப்பவர்கள் நம்மைப் புரிந்தவர்களாக இருக்க வேண்டும். இந்தச் சமூக ஊடகச் சூழலில் எப்படி ஒருவர் நம்மைப் புரிந்தவராக இருக்க முடியும் என்றால் நம் சிந்தனை ஓட்டத்தையும், செயல்பாட்டையும் தொடர்ந்து பின் தொடர்கிறவர்களுக்கு அது தெரியும். அவ்வாறு நம்மைப் பற்றித் தெரிந்தவர்களுக்கு மட்டும் நாம் செய்கிற செயல்கள் தெரிந்தால் போதும் என்று தெளிவாகவும் இருக்கிறேன். அதனால்தான் நிசப்தம் தாண்டி எங்கேயும் எந்தச் செய்தியும் வராமல் முடிந்தவரை தவிர்த்துவிடுகிறேன். ஃபேஸ்புக்கிலும் கூட இணைப்பு மட்டும்தான். கட்டுரை நிசப்தத்தில்தான் இருக்கும். நமக்கான வட்டம் சுருங்கினாலும் ஒன்றும் பிரச்சினையில்லை. கொஞ்சமே கொஞ்சமாகச் செய்தாலும் இந்தச் சிறு வட்டத்துக்கு முழு திருப்தியும் நம்பிக்கையுமளிப்பதாக இருந்தால் போதும். 

இலக்கியவாதிகளிடமிருந்து வெகு தூரம் விலகி வந்துவிட்டதன் காரணமும் இதுதான். நம் ஊரில் இலக்கியவாதிகள் ஏதோவொரு முனைப்பில் எழுத வந்திருப்பார்கள். பெரும்பாலும் புகழ்தான் ஆரம்பகட்டத்தில் ஈர்த்திருக்கும். அது தவறில்லை. ஆனால் ஒன்றிரண்டு எழுத்துக்கள் வெளிவந்த பிறகு வாசிப்பை நிறுத்திவிடுகிறவர்களே இங்கு அதிகம். எழுத்திலும் வாசிப்பிலும் இருக்கும் கவனம் களையும் போதும் மனம் புகழை விரும்பிக் கொண்டேயிருக்கும். அதற்காகவே தம் இலக்கியத் தொடர்புகளை தொடர்ந்து கொண்டிருப்பார்கள். நானறிந்த வரையில் நூற்றுக்கு தொண்ணூற்றைந்து சதவீதம் பேர் இப்படித்தான். திட்டினாலும் பரவாயில்லை- இதுதான் உண்மை. இரு மனிதர்களுக்கிடையில் உரையாடல் நடக்க வேண்டுமானால் இருவரில் ஒருவரிடமாவது உள்ளடக்கம் இருக்க வேண்டும். இருவரிடமும் உள்ளடக்கம் இல்லாத போது மனம் தம்மையுமறியாமல் மூன்றாமவன் ஒருவனை உள்ளே இழுத்துப் போட்டுக் கும்மியடிக்கும். இங்கே இலக்கிய வட்டம் மிகச் சிறியது. அந்த வட்டத்துக்குள் இலக்கியத்தைவிடவும் தனிமனிதர் பற்றிய உரையாடல்களே அதிகம். அந்த வட்டத்துக்குள் இருக்கும் போது இவர் நல்லவர், அவர் கெட்டவர் என்றெல்லாம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. இதைத் தவிர்த்து வெளியில் வரும் போது கவிஞர், எழுத்தாளர், இலக்கியவாதி என்றெல்லாம் பெயரையெல்லாம் இழந்தாலும் கூட பரவாயில்லை. பற்களில் அரைபடாமல் தப்பித்துக் கொள்ளலாம் என்றுதான் இலக்கியக் கூட்டங்கள், எழுத்தாள நண்பர்கள் என சகலத்தையும் குறைத்துக் கொள்ள வேண்டியதாகிவிட்டது.

என்னை நல்லவன் என்று சொல்லிக் கொள்ளவில்லை. ஆனால் தப்பிக்க வேறு வழி தெரியவில்லை.

மேற்சொன்ன சம்பவம் சமீபத்தில்தான் நிகழ்ந்தது. அதற்கு முன்பாகவிருந்தே கசப்புகள் அதிகம். எந்தவிதத்திலும் தகுதியற்ற பரிந்துரைகளை சில எழுத்தாள நண்பர்கள் செய்தார்கள். குடித்துவிட்டு விபத்து ஏற்படுத்திய நபருக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கு பணம் தேவை என்று கூட கேட்டார்கள். இன்னும் பற்பல. தவிர்க்கும் போது என்னை அறிந்த இன்னொரு சக எழுத்தாள நண்பரிடம் குறை சொன்னார்கள். நமது செயல்பாடு பற்றி எதுவுமே தெரியாமல் பேசுகிறார்களே என்றிருக்கும். அனைத்து வரவு செலவு விவரங்களையும் பொதுவெளியில் வைப்பதைத் தாண்டி வேறு எப்படி வெளிப்படையாக இருக்க முடியும் என்று குழப்பமாகவும் இருக்கும். பிரச்சினை என்னவென்றால் எழுத்தாளர் ஆகிவிட்டால் வாசிப்பது என்பதே இருக்காதே! ‘நம்மை மிஞ்சி எவன் எழுதிடுவான்’ என்று நினைக்கிறவர்கள் ‘அவனைத் தெரியாதா? ஜல்லி பார்ட்டி’ என்று சலித்துக் கொள்கிறவர்கள் நாம் எதை எழுதினாலும் வாசிக்க மாட்டார்கள். புரிந்து கொள்ளவும் மாட்டார்கள். 

அப்படியெனில் தீர்வு என்ன?

இப்பொழுதெல்லாம் உதவி கோரி வரக் கூடிய கோரிக்கைகளில் பெரும்பாலானவை நிசப்தம் வாசிக்கிறவர்கள் வழியாக வருபவைதான். ஏதோவொரு இடத்தில் உதவி தேவைப்படும் போது ‘இப்படி ஒருத்தன் இருக்கான்ல’ என்று அவர்களுக்கு நினைவுக்கு வரும். அப்படி நினைவுக்கு வரக் காரணம் அவர்களோடு எழுத்து வழியாகத் தொடர்பில் இருப்பதுதான். இலக்கியவாதிகளிடம் தொடர்பு வேண்டுமானால்- அவர்கள் வாசிப்பதில்லை என்பதனால்- அது முகம் வழியான தொடர்பாக மட்டுமே இருக்கும். முகத்தையே காட்டாமல் வைத்துக் கொண்டால் நம் நினைப்பே அவர்களுக்கு வராது. பிரச்சினையும் இருக்காது. தப்பித்துக் கொள்ளலாம். அப்படித்தான் தப்பித்துக் கொண்டிருக்கிறேன்.  இப்படியான கசப்புகளையெல்லாம் வெளியில் எழுதிக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. 

‘அப்புறம் ஏன் எழுதற?’ என்று நீங்கள் கேட்கக் கூடும். ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்குமா? அதுதான் பிரச்சினை. எது இலக்கியம், எது புண்ணாக்கு, எது தவிடு என்றெல்லாம் யாராவது சண்டையிட்டுக் கொண்டிருந்தால் உள்ளே புகுந்து யாருடைய தலையிலாவது ஓங்கிக் கொட்டு வைத்துவிட்டு வந்து ‘நானும் ரெளடிதான்’ என்று மனம் துள்ளத் தொடங்கிவிடுகிறது. 

பையன் டிரைவரா இருக்கான்....

காலையில் ஆறேகால் மணிக்கு கோவையிலிருந்து சென்னை கிளம்பும் தொடரூர்தி ஒன்றிருக்கிறது. அதில் கிளம்பினால் மதிய உணவுக்குச் சென்னை வந்து சேர்ந்துவிடலாம். 185 ரூபாய் டிக்கெட். ஆனால் அந்த நேரத்தில் சரவணம்பட்டியிலிருந்து ரயில்நிலையம் வந்து சேர போக்குவரத்து வசதிதான் சிரமம். ஓலாவில் வந்துவிடலாம். அது கிட்டத்தட்ட ரயில் கட்டணம் அளவுக்கு ஆகிவிடுகிறது. அடிப்படையிலே கஞ்சப்பயலான எனக்கு, காரில் ஏறி அமர்ந்தவுடன் இது ஒருவிதமான கடுப்பை உருவாக்கிவிடும். பெரும்பாலான ஓட்டுநர்களிடம்ம், சென்னை போகும் அளவுக்கான செலவு, ரயில்நிலையத்துக்குச் செல்ல ஆகிவிடுகிறது என்று சொல்லிவிட்டு ஓட்டுநரின் முகத்தைப் பார்ப்பேன். பெரும்பாலானவர்கள் சிரித்துவிட்டு பதில் சொல்ல மாட்டார்கள். ‘காத்தாலேயே ஒரு சாவுகிராக்கி’ என்பது மாதிரியான சிரிப்பாக அது இருக்கும்.

இந்த முறை ஒரு கண்ணாடி போட்ட பையன் கார் எடுத்து வந்திருந்தான். அதே வாக்கியத்தை அட்சரம் பிசாகமல் சொன்னேன். ‘உங்களை  யாராச்சும் பஸ்ல போக வேண்டாம்ன்னு சொன்னாங்களா?’என்றான். எதிர்பாராத தாக்குதலில் ஒரு வினாடி திகைத்து அவனைப் பார்த்தேன். ‘சொகுசு வேணும்ன்னா அதுக்கு செலவு செய்யணும்ல சார்...நாலரை மணிக்கு பஸ் ஸ்டாப் வந்து நில்லுங்க...எப்படியும் ஒன்றரை மணி நேரத்தில் ரயில்வே ஸ்டேஷனுக்கு போய்டலாம்..இருபத்தஞ்சு ரூபாய்ல முடிஞ்சுடும்.....அஞ்சு மணி வரைக்கும் தூங்கி, அஞ்சரை மணிக்கு கிளம்பி ஆறேகாலுக்கு ஸ்டேஷனுக்கு போகணும்ன்னா இருநூறு ரூபா ஆகத்தான் செய்யும்...’ என்றான். அதற்கு மேல் பேச ஒன்றுமில்லை. பேசினால் வாய் மேலேயே குத்துவான் போலிருந்தது.

பேச்சை மாற்றிவிடுவதுதான் உத்தமம் அல்லது அமைதியாக இருந்து கொள்ள வேண்டும். சொற்களால் நம்மைத் திக்குமுக்காடச் செய்யும் ஆட்களிடம் பேச்சுக் கொடுத்தால் சுவாரசியமாக இருக்கும். பேச்சை மாற்றிவிடலாம் என்று ‘நைட் பூரா வண்டி ஓட்டிட்டு இருக்கீங்களா?’ என்றேன்.

இருபத்து நான்கு மணி நேரப் பணி. இன்று காலை எட்டு மணிக்கு வண்டியை எடுத்தால் அடுத்த நாள் காலை எட்டு மணி வரைக்கும் ஓட்டம்தான். பையன் பி.ஈ முடித்திருக்கிறான். சிவில் இஞ்சினியர். படித்து முடித்துவிட்டு ஏதோ நிறுவனத்தில் சைட் இஞ்சினியராக இருந்திருக்கிறான். பனிரெண்டாயிரம் ரூபாய் சம்பளம். ஞாயிறு மட்டும் விடுமுறை. இடையில் ஒரு ஞாயிற்றுக்கிழமை முகூர்த்த நாளன்று வர வேண்டிய ஓட்டுநர் விடுப்பு எடுத்துக் கொள்ள, ஓலா வண்டியொன்றுக்கு ஓட்டுநராக இருக்க சிவில் இஞ்சினியரான இவனை அழைத்திருக்கிறார்கள். வீட்டில் சும்மாதானே இருக்கிறோம் என்று செல்ல, ஆயிரத்து இருநூறு ரூபாய் கொடுத்தார்களாம். மாதம் முழுவதும் பணியாற்றினால் பனிரெண்டாயிரம் ரூபாய். ஒரே நாளுக்கு ஆயிரத்து இருநூறு ரூபாய். பத்து நாளில் மொத்த சம்பளத்தையும் வாங்கிவிடலாம். பையனுக்கு ஆசை துளிர்விட்டுவிட்டது. 

கடந்த இரண்டாண்டுகளாக இதுதான் தொழில். மூன்று சொந்த வண்டி இருக்கிறது. எல்லாம் இ.எம்.ஐதான். இவரையும் சேர்த்து மொத்தம் ஆறு ஓட்டுநர்கள். சுவாரசியம் என்னவென்றால் ஆறு பேருமே பொறியியல் பட்டதாரிகள். இவரது ஜூனியர்கள். ஆறு பேரும் ஒரே வீட்டில் தங்கியிருக்கிறார்கள். ஆளுக்கு ஆயிரம் ரூபாய் வீட்டு வாடகைக் கணக்கு. அது போக மாதம் இருபதாயிரம் ரூபாய் சம்பளம். வண்டி ஓட்டுகிற நாட்களில் இருநூறு ரூபாய் பேட்டா. மிச்சமாகும் தொகையெல்லாம் இவருக்கு.

‘எதிர்காலத்திலும் இதுவே போதுமா?’ என்றேன். பொதுவாக உடல் உழைப்பைக் கோரும் பணிகளில் தொடக்கத்தில் வரும் வருமானத்திலிருந்து பெரிய வளர்ச்சி இருக்காது. படிப்படியாகத்தான் உயரும். ஆனால் மூளை சார்ந்த பணிகளில் அப்படியில்லை. வருடத்திற்கு மூன்று லட்ச ரூபாய் சம்பளம் வாங்குகிறவன் இன்னொரு நிறுவனம் மாறும் போது ஐந்தரை லட்சம் வாங்குவது இயல்பானது. 

இதுவே வீட்டில் தெரியாதாம். இன்னமும் பையன் பொறியாளாராக இருப்பதாகத்தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். மாதமானால் ஒன்பதாயிரம் ரூபாயை வீட்டுக்கு கொடுத்துவிடுகிறார். ‘அதிகமாகக் கொடுக்க ஆரம்பிச்சா பொண்ணு பார்க்கிறேன்னு கிளம்பிடுவாங்க’ என்றார். அதுதான் அவருடைய மிகப்பெரிய பயம். என்னதான் சம்பாதித்தாலும் ‘பையன் டிரைவர்’ என்றுதானே சொல்வார்கள் என்று கேட்டார். அது சரிதான். ‘பி.ஈ படிச்சுட்டு டிரைவரா இருக்கான்’ என்பதை இளக்காரமாகத்தான் பார்ப்பார்கள். எல்லாவற்றையும் வெளியுலகுக்குக் காட்டிக் கொள்வதில்தானே இருக்கிறது?

என் அரை மண்டைக்குத் தெரிந்த சில ஐடியாக்களையெல்லாம் சொல்லியிருக்கிறேன். ‘என்னதான் சம்பாதிச்சீங்கன்னாலும் வண்டியைக் கொண்டு போய் வீட்டில் நிறுத்தினால் அப்படித்தான் சொல்லுவாங்க...ஆனது ஆகட்டும்ன்னு ஒரு ஆபிஸ் போடுங்க’ என்றேன்.

அலுவலகம் ஒன்றை வைத்துக் கொண்டு ‘ட்ராவல் ஏஜென்ஸி’ என்று பெயரைப் போட்டு, தனக்குக் கீழாக ஆறு பேர் பணியாற்றுவதை சற்று முறைப்படுத்தி எல்லாவற்றையும் பதிவு செய்து வைத்துக் கொண்டால் ‘பையன் ட்ரைவர்ன்னு சொல்லமாட்டாங்க..சொந்தமா ட்ராவல்ஸ் வெச்சிருக்காருன்னு சொல்லுவாங்க’ என்றேன். அந்தக் கணத்தில் தோன்றியது இது. இன்னமும் சற்று யோசித்தால் இதையே பிரமாண்டப்படுத்திக் காட்டிவிடலாம். மூன்று வண்டிகள், ஐந்தாறு பணியாளர்கள், கை நிறைய வருமானம், இன்னமும் வயது இருக்கிறது- இதுவே பெரிய சாதனைதான். ‘வீட்டில் சொல்லிடுங்க..சொந்தமா பிஸினஸ் பண்ணுறேன்னு சொல்லுங்க..மறைச்சு மறைச்சு வெச்சுட்டு இருக்கிறதே நம்முடைய தாழ்வு மனப்பான்மைதான்’ என்றேன். செய்வதை வெளிப்படையாக, தைரியமாகச் சொல்லிவிட வேண்டும். முதலில் பதறுவார்கள். பிறகு அவர்களே ஒரு முடிவுக்கு வந்துவிடுவார்கள்.  

படிப்பு ஓர் அடையாளம் என்பதைத் தவிர ஒன்றுமில்லை. கிட்டத்தட்ட அத்தனையும் கடைசியில் பணம் சம்பாதிப்பதில்தான் போய் நிற்கிறது. ஒவ்வொருவருக்கும் ஒரு யுக்தி, ஒரு வழிமுறை. நமக்கு சம்பாதிக்க இதுதான் வழி என்று தெரிந்துவிட்ட பிறகு ‘அய்யோ இதையெல்லாம் படிச்சுட்டு, இந்த வேலையைச் செய்யறதா’ என்று தயங்க வேண்டியதில்லை. அப்படியே நாம் துணிந்தாலும் நம்மைச் சுற்றியிருப்பவர்கள் விடமாட்டார்கள்.  ‘படிப்புக்குத் தகுந்த வேலையைப் பாரு’ என்பார்கள். வெற்றி பெற்றுவிடுவோம் என்று நம்பிக்கையிருந்தால் எந்தச் சொற்களையும் காதில் போட்டுக் கொள்ள வேண்டியதில்லை. அப்படி அடுத்தவர்கள் சொல்வதையெல்லாம் கேட்டு படிப்பை மட்டுமே பற்றிக் கொண்டு நின்றால் இந்த உலகத்தில் இருக்கக் கூடிய வாய்ப்புகளையெல்லாம் அது மறைத்துவிடும். சம்பாத்தியத்துக்கும் படிப்பும் சம்பந்தமே இல்லை. கவனித்துப் பார்த்தால் வாழ்க்கையில் வெற்றி பெற்ற பெரும்பாலானவர்களுக்கு அவர்களது படிப்புக்கும், அவர்களது உயரத்திற்கும் சம்பந்தமே இருக்காது. நம்மைச் சுற்றிலும் ஏகப்பட்ட பாதைகள் இருக்கின்றன. எது பொருத்தமோ அந்த பாதையில் நம் அடையாளங்களையெல்லாம் துறந்துவிட்டு இலக்கை மட்டுமே குறியாக வைத்துக் கொண்டு ஓடத் தொடங்க வேண்டும்.

வேலை, சம்பளம், வருமானம் என்று பயப்படுகிறவர்கள் அத்தனை பேருக்கும் இது பொருந்தும். வாழ்க்கையில் அடுத்தடுத்த கட்டத்தை அடைய ஆயிரம் வழிகள் இருக்கின்றன. பெரும்பாலானவர்களுக்கு இருக்கும் பிரச்சினை நம் அடையாளங்களும், நம் ஈகோவும்தான்.

வார இறுதியில் தொலைபேசியில் அழைப்பதாகச் சொன்னார். அநேகமாக சனி,ஞாயிறுகளில் ஒரு நாள் விரிவாகப் பேசுவோம் என நினைக்கிறேன். ஆறேகால் மணிக்கு ரயிலைப் பிடிக்க வேண்டிய பதற்றம் எனக்கு. ரயிலில் யாராவது மொக்கை போட கிடைக்காமலா போய்விடுவார்கள்? அங்கேயும் ஒரு கதை கிடைக்கும் என்று நினைத்தபடியே நூற்றியெழுபது ரூபாயைக் கொடுத்துவிட்டு வேகமாக ஓடி வந்து வண்டியைப் பிடித்துவிட்டேன். 

Sep 9, 2019

அமேசானிலிருந்து அளுக்குளி வரை...

கடந்த சில ஆண்டுகளில் தமிழகம் முழுக்கவும் பரவலாக குளங்கள் மேம்பாடு, பசுமை வளர்ப்பு ஆகியவற்றில் விழிப்புணர்வு உண்டாகியிருக்கிறது. நிறையப் புகார்கள் முன்வைக்கப்பட்டாலும் பணிகள் நடக்கின்றன என்பதுதான் உண்மை. சமீபத்தில், மராமத்து பணிகளுக்காக குளங்களுக்கு தலா ஒரு லட்ச ரூபாய் என்று சில குளங்களுக்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறது. குளத்து மண்ணை வெளியில் விற்பனை செய்ய அனுமதியில்லை. அது சரியான முடிவுதான் என்றாலும் மண்ணை விற்பனை செய்யாமல், ஒரு லட்ச ரூபாயை வைத்துக் கொண்டு குளத்தை மேம்படுத்துவது சாத்தியமில்லாத காரியம். குளத்தை ஆழப்படுத்தாவிட்டாலும்,  கரைகளை மட்டும் மேம்படுத்திக் கொள்ளுங்கள் என்று அரசாங்கம் அறிவுறுத்தியிருக்கிறது. 

வெகு சில ஊர்களில் பணிகள் வெகு வேகமாக நடக்கின்றன.  மண்ணை விற்பனை செய்ய அனுமதியில்லை என்றாலும் அரசல்புரசலாகச் செய்து கொண்டிருக்கிறார்கள். கடந்த ஆண்டு நாம் தூர் வாரிய கோட்டுப்புள்ளாம்பாளையம் குளத்துக்கு பத்து பைசா கூட செலவாகவில்லை. அது வேறு கணக்கு. குளத்திலிருந்து மண்ணை அள்ளிக் கொள்ள ஆட்சியர் அனுமதியளித்திருந்தார். உள்ளூர்க்காரர்கள் மண்ணை எடுத்து விற்பனை செய்தார்கள். அதுவே மண் அள்ளும் எந்திரம், ட்ராக்டர் வாடகைக்கு சரியாக இருந்தது. உள்ளூர்வாசிகளே அணி திரண்டு செய்ததால் மிகச் சுலபமாக பணி முடிந்து, குளம் ஆழமாகி, நீரும் நிரம்பியது. கோட்டுப்புள்ளாம்பாளையத்தின் குளத்தைப் பொறுத்த வரைக்கும் குளத்தின் கரைகளை மேம்படுத்தவில்லை. மண் அள்ளப்பட்டு குளத்தின் ஆழம் மட்டும் அதிகரிக்கப்பட்டது. 

பொதுவாக, ஒரு லட்ச ரூபாய் செலவு செய்து குளங்களின் கரைகளை மட்டும் வலுப்படுத்தினால் அர்த்தமேயில்லை. இதுவரையிலும் பார்த்ததில் பல குளங்களின் நீர்வரத்து பாதைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருக்கின்றன. நீர் வரத்துப் பாதைகளைச் சரி செய்யாமல், மண்ணை அள்ளி கரையில் போட்டு குளத்துக்கு மேக்-அப் மட்டும் செய்து என்ன பலன்? அதனால் நீர் வரத்துப் பாதைகளைச் சரி செய்வதாக இருந்தால் குளத்தில் கை வைக்கலாம். அப்படியான குளங்களில்தான் பணியும் செய்ய வேண்டும். கோட்டுப்புள்ளாம்பாளையம் குளத்தைத் தூர் வாரிக் கொண்டிருந்த போது அந்தக் குளத்துக்கும் கோபிபாளையம் குளத்துக்கும் இணைப்பு இருப்பதைப் பற்றிச் சொன்னார்கள். கோட்டுப்புள்ளாம்பாளையம் குளத்தில் நீர் நிரம்பினால் வழிந்தோடும் நீரானது அடுத்து கோபிபாளையம் குளத்துக்குத்தான் வந்து சேரும். 

அந்தச் சமயத்திலேயே கோபிபாளையம் குளத்தையும் தூர் வாரலாம் என்றார்கள். எனக்குத்தான் பயமாக இருந்தது. அகலக்கால் வைத்து சிக்கிக் கொண்டால் வம்பாகிவிடும். அதனால் ஒரு வருடம் ஆகட்டும் பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்திருந்தோம். சமீபத்தில் அரசு ஒதுக்கிய ஒரு லட்ச ரூபாயை வைத்துக் கொண்டு உள்ளூர்காரர்கள் வேலையைத் தொடங்கிவிட்டார்கள். இதுவரை மொத்தமாக இரண்டு லட்சத்து எண்பத்தாறாயிரம் ரூபாய் செலவு செய்திருக்கிறார்கள். ஒரு லட்ச ரூபாய் அரசாங்கம் கொடுத்துவிட்டது. மண் விற்பனையில் சற்றேறக்குறைய ஒரு லட்ச ரூபாய் வரைக்கும் திரட்டிவிட்டார்கள் போலிருக்கிறது. இன்னமும் ஒரு லட்ச ரூபாய் தேவைப்படுகிறது. ஐம்பதாயிரம் ரூபாயை உள்ளூர் மக்களிடையே திரட்டிக் கொண்டார்கள். ஐம்பதாயிரம் ரூபாயை நிசப்தம் அறக்கட்டளையிலிருந்து கொடுத்திருக்கிறோம்.
இத்தகைய சிற்றூர்களில் குளம் தூர்வாருவதோடு மட்டும் செயல்பாட்டை நிறுத்திக் கொள்வதில் அர்த்தமில்லை. அதன் தொடர்ச்சியாக சில காரியங்களைச் செய்ய வேண்டும். அதற்காக உள்ளூர் இளைஞர்களைத் திரட்டி ஞாயிற்றுக்கிழமை மாலையில் ஒரு கூட்டம் நடத்தினோம். குளத்துக்கு அருகாமையில் உள்ள புனித திரேசாள் ஆரம்பப்பள்ளியில் கூட்டம் தொடங்கியது. அமைதியான உள்ளூர் இளைஞர்கள். கேள்வி கேட்கவே தயங்கினார்கள். தொடக்கத்தில் அப்படித்தான் இருப்பார்கள். இந்தக் கூட்டத்துக்காக தயாரிப்புகளையும் செய்திருந்தேன். சில நிமிடங்கள் பொதுவான விஷயங்களைப் பேசிவிட்டு ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த ‘அமேசான் - பூமியின் நுரையீரல்’ என்ற பவர் பாய்ண்ட்டை விளக்கினேன்.

சில ஆசிரியர்கள், நிசப்தத்துடன் இணைந்து செயல்படும் நண்பர்கள், சமூக ஆர்வலர் பரமேஸ்வரன் உள்ளிட்டோர் உரையாடலில் கலந்து கொண்டார்கள்.

தயாரிப்புகளைச் செய்ய இரண்டு நாட்கள் தேவைப்பட்டது. பேச்சைக் கேட்கப் போகிறவர்கள் மாணவர்கள் இல்லை- பல்வேறு தரப்பிலான இளைஞர்கள். அங்கே இருக்கக் கூடிய எல்லோருக்கும் புரியும் படியான எளிய தகவல்களாக இருக்க வேண்டும், அதே சமயம் அதன் உள்ளர்த்தம் வலுவானதாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்து அதற்கேற்ப தயாரித்திருந்தேன். 

அமேசான் எங்கேயிருக்கிறது, அதன் பரப்பளவு, அங்கேயிருக்கும் உயிரினங்கள் போன்ற பொதுவான விவரங்களில் தொடங்கி, அங்கு எண்பதாயிரம் இடங்களில் தீப்பற்றி எரிவது குறித்து பேச்சு தொடர்ந்தது. எரிந்தால் என்ன விளைவுகள் உண்டாகும்? மரங்களின் தேவை என்பது நமக்கு ஆக்ஸிஜனைக் கொடுப்பதற்காக என்று நினைத்தால் அது தவறு. பூமியின் வளிமண்டலத்தில் இருக்கும் ஆக்ஸிஜனில் சுமார் 50-70% கடலிலிருந்துதான் பெறப்படுகிறது. இன்னொரு கணக்கும் இருக்கிறது- சராசரியாக ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்கு 550 லிட்டர் ஆக்ஸிஜன் தேவை. ஒரு சுமாரான மரம் 110 லிட்டர் ஆக்ஸிஜனைக் கொடுத்துவிடும். ஒரு மனிதனுக்கு நான்கு மரங்கள் கொடுக்கும் ஆக்ஸிஜன் போதுமானது. நான்காயிரம் கோடி மரங்கள் மொத்த மனிதர்களுக்கும் சேர்த்துப் போதுமானது. அமேசானில் மட்டுமே சுமார் 39,000 கோடி மரங்கள் இருக்கின்றனவாம். அப்படியென்றால் உலகம் முழுக்கவும் எவ்வளவு மரங்கள் இருக்கக் கூடும்? ஆக, மரம் நட்டு வளர்ப்பது மனிதர்களுக்கான ஆக்ஸிஜனுக்கு இல்லை. 


காடுகள் எரிவதும், மரங்கள் குறைவதும் நம்மை புவி வெப்பமயமாதலில் சிக்க வைக்கும். தொழிற்துறையின் அசுரத்தனமான வளர்ச்சியினால் புவி வெப்பமயமாதல்தான் நாம் எதிர்கொள்ளும் மிகப் பெரிய பிரச்சினை ஆகிக் கொண்டிருக்கிறது. கார்பன் டை ஆக்ஸைடின் அளவு அதிகரிக்க அதிகரிக்க புவியின் வெப்பம் அதிகரிக்கும். அது துருவங்களில் நிறைந்திருக்கும் பனியைக் கரையச் செய்யும். இதுதான் புவியின் இப்போதைய மிகப்பெரிய ஆபத்து. அதிகரிக்கும் கார்பன் டை ஆக்ஸைடை உறிஞ்ச இன்னமும் நிறைய நிறைய மரங்கள் தேவை. அதற்காகத்தான் நாம் மரங்களைத் தொடர்ந்து காக்க வேண்டியிருக்கிறது; நட வேண்டியிருக்கிறது.

பிரேசிலுக்கும் - ப்ரான்ஸுக்குமான பிரச்சினைகள், வலதுசாரி சிந்தனை கொண்ட பிரேசில் அதிபரின் நிலைப்பாடு போன்ற சில விவகாரங்கள் குறித்துப் பேசியதும் அந்த இளைஞர்களுக்கு புதிதாக இருந்தது. இத்தகைய உலகளவிலான பிரச்சினைகளில் நாம் எந்த மாற்றத்தையும் உண்டாக்கிவிட முடியாவிட்டாலும் குறைந்தபட்சம் நம்மால் இயன்ற அளவில் பசுமையைக் காப்போம் என்று ஈர்ப்பதுதான் பேச்சின் நோக்கம். அதை சரியாகவே செய்துவிட்டதாக நண்பர்கள் சொன்னார்கள்.

இத்தகைய உரையாடல்களைத்தான் கிராமங்கள்தோறும் முன்னெடுக்க வேண்டும் என நினைக்கிறேன். சற்றே ஆழமான விவரங்களை இளைஞர்களிடம், அவர்களுக்கு புரியும் வகையில் கொடுத்துவிட்டால் விழித்துக் கொள்வார்கள். ஒவ்வொரு ஊருக்கும் சென்று கொண்டிருக்க சாத்தியமில்லை. ஆனால் சாத்தியமிருக்கும் இடங்களில் எல்லாம் இத்தகைய செய்திகளையே இளைஞர்களிடம் விரிவாகப் பேச வேண்டும். 

பேசுவோம்.

Sep 4, 2019

குத்து விளக்கு

சமீபத்தில் ஒரு திருமணத்துக்குச் சென்றிருந்தேன். கிட்டத்தட்ட ஐம்பது லட்ச ரூபாய் செலவு பிடிக்கக் கூடிய திருமணம். மணவறை செலவு மட்டுமே பல லட்சங்கள் என்றார்கள். ஒரு பக்கம் அள்ளி வீசுகிற திருமணங்கள். இன்னொரு பக்கம் ‘ரெண்டு லட்ச ரூபாய் இருந்தால் ஒரு கல்யாணம் செஞ்சுடலாமா?’ என்று கேட்டால் ‘எங்களுக்கு அது பெரிய தொகைங்க’ என்று சொல்கிற குடும்பங்களும் இருக்கின்றன.

சரவணன், ஐரோப்பிய நாடு ஒன்றில் வசிக்கிறார். நிசப்தம் வாசகர். அவரது பெற்றோருக்கு அறுபதாம் திருமணம் செய்து வைக்க வேண்டிய தருணமிது. சில நாட்களுக்கு முன்பாக அழைத்த சரவணன் ‘அறுபதாம் கல்யாணத்துக்கு ஆகும் செலவை ஏதாவதொரு ஏழைப்பெண்ணுக்கு திருமணம் செய்வதற்காகக் கொடுத்துவிடலாம்...யாராச்சும் இருக்காங்களா?’ என்றார். இப்படியெல்லாம் யாருக்காவது தோன்றுவதே எவ்வளவு பெரிய விஷயம்?

கல்வி, மருத்துவ உதவிக்கான ஆட்களைப் பிடிப்பதே கஷ்டம். இதில் திருமணம் செய்து கொள்ள ஆட்களை எப்படித் தேடுவது? ‘சார்...கல்யாணம் ஆகாத பொண்ணு ஏதாச்சும் இருக்கா?’ என்று கேட்டால் ‘ இத்தனை நாள் ஒழுங்காத்தானே இருந்தான்; இதெல்லாம் வேணிக்குத் தெரியுமா?’ மார்க்கமாக பார்த்துவிட்டுத்தான் பேச்சையே தொடர்கிறார்கள்.

நம்மை மாதிரியான அப்பாடக்கர்கள் இதற்கெல்லாம் பயப்பட்டால் வேலைக்கு ஆகுமா? இத்தகைய உதவிகளைச் செய்யத் தயாராக இருப்பதாக யாரேனும் அணுகும் போது விட்டுவிடக் கூடாது. இங்கு உதவத் தயாராக நிறையப் பேர்கள் இருக்கிறார்கள். ஆனால் பலரும் ‘யாருக்கு உதவுவது’ என்று தெரியாமல் குழம்பியே தமது அடுத்த காரியத்தைப் பார்க்கச் சென்றுவிடுகிறார்கள். அதனால் யாரேனும் அணுகினால் சற்று மெனக்கெட்டாலும் பரவாயில்லை என்று காரியத்தை இழுத்துப் போட்டுச் செய்துவிட வேண்டும். இத்தகைய செயல்கள் நிச்சயமாக எங்கேயாவது ஓரிருவருக்காவது முன்னுதாரணமாக அமையக் கூடும். 

‘தீபாவளிக்கு குழந்தைகளுக்கு ஆடை எடுத்துக் கொடுத்துவிடலாம்’ ‘திருமண நாள் வருகிறது....நூறு பேருக்கு விருந்து படைத்துவிடலாம்’ என்றெல்லாம் யாராவது கேட்டால் ‘எனக்கு நான்கு நாட்கள் அவகாசம் கொடுங்கள். விசாரித்துவிடுகிறேன்’ என்றுதான் கேட்பேன். முடியாது என்றும் வாய்ப்பில்லை என்றும் சொன்னதில்லை. நிச்சயமாக உதவிகளைப் பெற்றுக் கொள்ளத் தகுதியான ஆட்கள் இருப்பார்கள். தேடுவதுதான் கொஞ்சம் சிரமமான காரியம். ஆனால் தேடிவிடலாம். தெரிந்த நண்பர்களிடமெல்லாம் சொல்லி வைத்திருந்தேன். பெரும்பாலானவர்கள் ஆச்சரியத்துடன் ‘இப்படியெல்லாம் செய்யறதுக்கு ஆட்கள் இருக்காங்களா’ என்ற கேள்வியைத்தான் கேட்டார்கள். 

சரவணன், மூன்று லட்சம் வரைக்கும் கொடுப்பதாகச் சொன்னார். நண்பர்களிடமெல்லாம் ‘ரெண்டு பொண்ணுங்களுக்கு செய்யற அளவுக்கு பணம் இருக்கு’ என்று சொல்லியிருந்தேன். சரவணன் கொடுக்கும் மூன்று லட்சத்துடன் சேர்த்து நிசப்தம் அறக்கட்டளையிலிருந்து ஒரு லட்சம் ரூபாயை எடுத்து ஒரு பெண்ணுக்கு தலா இரண்டு லட்ச ரூபாய் எனக் கணக்கிட்டிருந்தேன். 

தகுதியான பெண்ணைக் கண்டறிய வேண்டும். பெண்ணுக்கேற்ற மாப்பிள்ளை கிடைக்க வேண்டும். பணம் இருக்கிறது என்பதற்காக கிடைத்த பையனுடன் திருமணம் செய்து வைக்க முடியாதல்லவா? கல்லூரி பேராசிரியை கலைச்செல்வி சந்தியாவின் விவரங்களை அனுப்பி ‘நம்ம சூப்பர் 16 கார்த்தியும் அதே அலுவலகத்தில் பணியாற்றுகிறான். அவன் வழியாக இந்தப் பெண்ணைப் பற்றிய விவரங்கள் கிடைத்தது’ எனச் சொன்னார். சந்தியாவின் விவரங்களைப் பார்த்தவுடனே நினைவுக்கு வந்துவிட்டது. சந்தியாவை ஏற்கனவே சந்தித்திருக்கிறேன். ஆனால் சரவணன் கேட்ட தருணத்தில் நினைவுக்கு வரவில்லை. பி.ஈ முடித்த பெண். அம்மா உயிரோடில்லை. அப்பாவின் ஆதரவு இல்லை. பாட்டியின் வீட்டில் வளர்கிறார். பி.ஈ படித்திருந்தாலும் அலுவலகம் ஒன்றில் உதவியாளராக நான்காயிரம் ரூபாய் சம்பளத்திற்கு வேலையில் இருக்கும் பெண். அவருடைய பாட்டி சம்பாத்தியத்தில் செலவுகளைச் செய்து திருமண ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தார்கள். மாப்பிள்ளையும் பக்கத்து ஊர்தான். 

சந்தியா பற்றி பற்றி மேலதிக விவரங்களை விசாரித்தோம். அரசு தாமஸ் நேரில் சென்று பார்த்துவிட்டு ‘தகுதியான பெண்’ என்று சொன்னார். அதன் பிறகு இதனை எப்படி செயல்படுத்துவது என்றுதான் யோசிக்க வேண்டியிருந்தது. இரு குடும்பங்களும் சேர்ந்து, பெரிதாக எந்தச் செலவுமில்லாமல், விலையுயர்ந்த பொருட்கள் எதுவும் வாங்காமல் திருமணத்தை நடத்தி முடித்துவிடுகிறார்கள். நாளை காலையில் முகூர்த்தம். சரவணன் அடுத்த மாதம் இந்தியா வருகிறார். அப்பொழுது அவரது அம்மாவையும் அப்பாவையும் அழைத்து வருவார். சந்தியாவின் வாழ்க்கைக்குத் தேவையான பொருட்களை வாங்கி வைத்து, சரவணனின் பெற்றோர் கையினால் வழங்கச் சொல்லி அவர்களிடம் சந்தியாவும் அவரது கணவரும் ஆசி பெற்றுக் கொள்ளும்படி திட்டமிட்டிருக்கிறோம்.

இன்னொரு பெண்ணையும் அடையாளம் கண்டிருக்கிறோம். பெற்றோர் இல்லாத பெண். தமது இரண்டு தங்கைகளையும் அவர்தான் படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் அவருக்கு தகுதியான மணமகன் இன்னமும் அமையவில்லை. அவரது உறவினர்களிடம் சொல்லி வைத்திருக்கிறோம். அவர்கள்தான் ‘ரெண்டு லட்ச ரூபாய் எங்களுக்கு பெரிய தொகைங்க’ என்று சொன்னவர்கள். மணமகன் அமைந்துவிட்டால் இரண்டு பெண்களுக்கும் ஒரே நாளில் சீர் செய்துவிடலாம்.

தமிழகம் முழுக்கவும் பரவலாக இத்தகைய காரியங்களைச் செய்ய வேண்டும் என்றுதான் ஆசை. ஆனால் சாத்தியமாக்குவதில் பெரும் தடைக்கற்கள் இருக்கின்றன. நல்லதொரு அணி அமையாமல் இவற்றை செய்ய முயற்சித்தால் மண்டை காய்ந்துவிடும்.  பேராசிரியை கலைசெல்வி, ஆசிரியர் அரசு தாமஸ், பிரபாகர் என ஒரு அணியாக இருந்துதான் இந்த அளவுக்கு நகர்ந்திருக்கிறது. இனி பொருட்களை பட்டியலிட்டு, அவற்றை வாங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்து, அவை சந்தியாவின் வீடு போய்ச் சேரும் வரை அணி சேர்ந்துதான் பணியாற்ற முடியும். அப்படியொரு அணியை பரவலாக அமைக்க முடிவதில்லை. அது ஒருவகையில் நல்லதும் கூடத்தான். இருக்கும் இடம் தெரியாமல் அமைதியாக இருந்து கொள்ளலாம்.

ஒரு குடும்பம் உதவுகிறது, இன்னொரு குடும்பம் அந்த உதவியைப் பெற்றுக் கொள்கிறது. ஒரு பெண்ணின் வாழ்க்கையைத் தொடங்கி வைத்த திருப்தி ஒரு குடும்பத்துக்கு; பெரிய சிரமமில்லாமல் தமது வாழ்க்கையைத் தொடங்கும் நிம்மதி எளிய குடும்பம் ஒன்றின் பெண்ணுக்கு. இரண்டுக்கும் இடையில் பாலமாக இருந்து செயல்படும் சந்தோஷமே நமக்கு.

நாளை திருமணம் நடைபெறும் சந்தியா, துரைமுருகன் தம்பதியினர் பெருவாழ்வு வாழ்க! சரவணன் குடும்பமும், அவர்தம் பெற்றோரும் நிறைந்த மனநிம்மதியுடனும், ஆரோக்கியத்துடனும் நீடூழி வாழ்க!