Aug 22, 2019

பிஸ்கெட்டும், காரும்

பிஸ்கட் கம்பெனி மூடப்படுவதால், ஆட்டோமொபைல் தொழிற்சாலை மூடப்படுவதால் அந்த முதலாளிகளின் வருமானம் பாதிக்கப்படுவதைத் தவிர வேறு எந்தவிதமான பிரச்சினைகள் உண்டாகும் என மருத்துவர் ஹேமா வாட்ஸாப்பில் கேட்டிருந்தார். பரவலான தகவல்களைத் தெரிந்து வைத்திருக்கக் கூடியவர் அவர். அவரிடமிருந்து இத்தகைய கேள்வியை எதிர்பார்க்கவில்லை. ஆனால் இது மிகப் பொதுவான கேள்விதான்.

ஆட்டோமொபைல் தொழிற்சாலை என்பது ஒற்றை முதலாளி அல்லது அதன் பங்குதாரரர்களை மட்டும் சார்ந்ததில்லை. அங்கே பணியாற்றும் சில ஆயிரம் தொழிலாளர்களின் பணி மற்றும் அவர்களின் குடும்பம் என்று மட்டுமில்லை. ஒரு வாகனத்தில் இருக்கும் ஆயிரக்கணக்கான உதிரி பாகங்களை உற்பத்தி செய்வதற்கென சென்னை, கோவை போன்ற பல ஊர்களில் பல்லாயிரத்துக்கும் அதிகமான சிறு தொழில் நிறுவனங்கள் இருக்கின்றன. பெரும்பாலான வாகனத் தொழிற்சாலைகள் இத்தகைய சப்ளையர்களிடமிருந்து பாகங்களை வாங்கிப் பொருத்தி, சோதனை செய்து, விளம்பரம் செய்து விற்பனையில் இலாபம் பார்ப்பதுதான் இலக்கு. இத்தகைய உதிரி பாகங்களின் உற்பத்தி நிறுவனம் ஒவ்வொன்றும் ஓரிரு தொழிலாளர்கள் முதல் சில நூறு பேர்களை வைத்துக் கொண்டு பாகங்களை உற்பத்தி செய்து அவற்றை வாகனத் தொழிற்சாலைகளுக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றன. வெறுமனே திருகாணி உற்பத்தியை மட்டுமே செய்து கொண்டிருக்கும் தொழிற்சாலைகள் கூட உண்டு. அந்த நிறுவனம் எதைப்பற்றியும் யோசிக்காமல் தினசரி லட்சக்கணக்கான திருகு ஆணிகளை உற்பத்தி செய்து அவற்றை அனுப்பிக் கொண்டேயிருப்பார்கள். இத்தகைய சார்புத் தொழிற்சாலைகளின் நிலையெல்லாம் கேள்விக்குறிக்குள்ளாகும். அங்கே பணியாற்றும் பல லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். அவர்களின் குடும்பம் திக்கற்று நிற்கும். கோயமுத்தூரிலும், ஸ்ரீபெரும்புதூரிலும், இராணிப்பேட்டையிலும் சி.என்.சி எந்திரங்களையும், லேத்களையும் வைத்து தொழில் செய்து கொண்டிருக்கும் பல நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன என்பதுதான் நிதர்சனம். 

வெவ்வேறு விதமான தியரிகளைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

‘ஒருவேளை பி.எஸ்.என்.எல்லை மூடிவிட்டால் அங்கேயிருக்கும் தொழிலாளர்கள் ஜியோவுக்குச் செல்ல முடியாதா?’ என்று கூட கேள்விகள் உலவுகின்றன. எந்தவொரு பெரு நிறுவனத்திற்கும் அடுத்த நிறுவனத்தின் அறிவுசார்ந்த உடைமை (Intellectual Properties) மற்றும் அதன் வாடிக்கையாளர்கள்தான் குறியாக இருக்கும். இன்-ஆர்கானிக் வளர்ச்சி என்ற பெயரில் இன்னொரு நிறுவனத்தை விலைக்கு வாங்குவது, தம்மோடு இணைத்துக் கொள்வது என்பதெல்லாம் கூட அந்நிறுவனத்தின் இத்தகைய சொத்துகளை அபகரிப்பதாகத்தான் இருக்குமே தவிர மற்றொரு நிறுவனத்தின் பணியாளர்களுக்கு வேலை கொடுத்து மனிதாபிமானத்தைத் தாங்கிப்பிடிப்பதாகவெல்லாம் இருக்காது.  ‘பணியாளர்களுக்கு எந்த பாதிப்பும் வராது’ என்று சொல்லிவிட்டு படிப்படியாக வெளியேற்றிய பல நிறுவனங்கள்தான் இங்கே அதிகம்.

பி.எஸ்.என்.எல் நிறுவனம் காலியாகுமானால் அதன் வாடிக்கையாளர்களை வேண்டுமானால் அதன் போட்டி நிறுவனங்கள் அபகரிக்க  முயலும். தவிர, அங்கேயிருக்கும் வெகு சில பணியாளர்களுக்கு- அவர்கள் தம் நிறுவனத்துக்கு தேவைப்படுவார்கள் எனக் கருதுமானால் மட்டுமே- பணிக்கு எடுக்கும். ஐம்பதாயிரம் ரூபாய்க்கும் அதிகமாக சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கும் அலுவலகப் பணியாளர்கள், களப்பணியாளர்களை எல்லாம் எந்தக் காலத்திலும் ஜியோ போன்ற நிறுவனங்கள் வேலைக்கு எடுக்காது. அதற்கான அவசியமும் அவர்களுக்கு இல்லை. 

எந்த வகையிலும் ஒரு தொழிற்துறை அல்லது தொழிற்சாலை நசிவுறும் போதும், மூடும் போதும் நேரடியாகவும், மறைமுகமாகவும் பலர் பாதிப்படைவார்கள். அதில் எந்த மாற்றுக் கருத்தும் தேவையில்லை. நம் கண்களுக்குத் தெரிவதெல்லாம் நேரடியான பாதிப்புகள்தான். அதைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருப்போம். விவாதிப்போம். ஆனால் மறைமுக பாதிப்புகள்தான் மிகக் குரூரமானது. பல லட்சக்கணக்கான குடும்பங்களின் அடிவயிற்றில் கை வைக்கக் கூடியது. அரசாங்கத்துக்கும், தொழிற்துறையினருக்கும் அது தெரியும்.

அடுத்து நெசவுத் தொழில்தான் முடங்கும் என்கிறார்கள். அதற்கான அறிகுறிகளும் தெரிகின்றன. கோயமுத்தூர், திருப்பூரில் டெக்ஸ்டைல்ஸ் சம்பந்தப்பட்ட நண்பர்கள் யாரேனும் இருந்தால் கேட்டுப்பாருங்கள். ஒவ்வொரு வருடமும் தீபாவளிக்கு முந்தைய இச்சமயத்தில் துணிகளுக்கான கடுமையான தேவை இருக்கும். நிறுவனங்கள் வெகு சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும். ஆனால் இப்பொழுது ஸ்பின்னிங் மில்கள் காற்றாடிக் கொண்டிருக்கின்றன. கிட்டத்தட்ட பல ஸ்பின்னிங் மில்கள் முடிந்துவிட்டன என்கிறார்கள். இத்துறையினரிடம் ‘இந்தியச் சந்தைதான் பிரச்சினையா?’ என்றால் ‘ஆமாம்’ என்கிறார்கள். ஏற்றுமதிக்கான வெளிநாட்டுச் சந்தை நன்கு இருக்கிறது. ஆனால் அத்தனை பேரும் வெளிநாட்டுச் சந்தைக்குள் நினைத்தது நினைத்தபடி இறங்கிவிட முடியாது.

துரதிர்ஷ்டவசமாக, நிலைமை சீரடையாமல் நெசவுத் தொழில் அடி வாங்கினால் அதன் பாதிப்பும், வேலை இழப்பும் வாகனத் துறையை விட மிகக் கடுமையானதாக இருக்கும் என்று உறுதியாகச் சொல்ல முடியும்.

ஒரு தொழில் நசிவுற ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். உதாரணமாக ஜிஎஸ்டி வரிவிதிப்பைக் குறைக்க வேண்டும் என்று முதலாளிகள் விரும்பும்பட்சத்தில் அவர்கள் திரும்பத் திரும்ப இத்தகைய எதிர்மறையான கருத்துகளை கசியவிடலாம். அதற்கான கார்போரேட் லாபிகள் உண்டு. அரசாங்கத்தை படிய வைக்க நிறுவனத்தையே மூடினாலும் கூட முதலாளிகளுக்கு அவை வெறும் பொருளாதாரம் சார்ந்த பிரச்சினைதான். ஆனால் நம்பியிருக்கும் தொழிலாளிக்கும் அவனது குடும்பத்துக்கும்தான் அது ஜீவாதாரப் பிரச்சினை.

ஒருவேளை, வாகனத் துறை மட்டுமே தள்ளாடும் பட்சத்தில், பிற பொருளாதாரக் காரணிகள் வலுவாக இருக்குமெனில் பெரிதாகக் கவலைப்பட எதுவுமில்லைதான். ஆனால் வாகன உற்பத்தித் துறைக்குப் பிறகாக நெசவு என துறைகள் வரிசை கட்டும் போதுதான் பதற வேண்டியிருக்கிறது. தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டேயிருக்கிறது, ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்கிறது, பங்குச்சந்தை தினசரி பாதாளத்தில் விழுகிறது. இப்படி ஒவ்வொன்றாகச் சேர்த்துப் பார்க்கும் போது ஏதோ சரியில்லை என்றுதானே அர்த்தம்? அதைத்தான் சில மாதங்களாக பொருளாதார வல்லுநர்களும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். தேர்தலுக்கும் முன்பே நெசவுத் தொழில் மோசமடைகிறது என்றார்கள். அப்பொழுது கோவையில் சில நண்பர்களிடம் விசாரித்த போது ‘எலெக்‌ஷன் டைம் இப்படித்தான் இருக்கும்..ஜூன், ஜூலையில் சரியாகிடும்’என்றார்கள். இன்றைக்கு அவர்களிடம் பேசினால் உண்மையிலேயே பதறுகிறார்கள். மக்களின் செண்டிமெண்ட் சரியில்லை என்கிறார்கள். மக்கள் செலவு செய்யத் தயங்கினால் நிலைமை இன்னமும் விபரீதமாகும். சுற்றுலாத்துறை, தினசரி உபயோகப் பொருட்களுக்கான சந்தை உட்பட மக்களின் உபரி செலவினத்தை நம்பியிருக்கும் பெரும்பாலான துறைகள் சிக்கலில் மாட்டும். 

ஒரு நாட்டின் பொருளாதாரம் சிரமத்தில் இருக்கிறது என்பதற்கான அறிகுறிகள் தென்படும் போதே அரசாங்கம் முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும். இத்தகைய சூழல்களில் அரசாங்கம் செய்ய வேண்டியதெல்லாம் மக்களின் மனநிலை சோர்ந்துவிடாமல் பார்த்துக் கொள்வதுதான் மிகப்பெரிய காரியம். தாங்கள் மேற்கொண்டிருக்கும் தடுப்பு நடவடிக்கைகள், அதனால் என்ன நல்ல விளைவுகள் ஏற்படப் போகின்றன என்பதையெல்லாம் மக்களிடம் பேச வேண்டும். தொழிற்துறையினருக்கு நம்பிக்கையை ஊட்ட வேண்டும். முதலீட்டாளர்களின் மனநிலையில் உற்சாகத்தைக் கொண்டு வர வேண்டும். அதுதான் இங்கே பிரச்சினையாக இருக்கிறது.

ஒருவேளை இவையெல்லாம் வதந்தியாக, அரசியல்மயப்படுத்த பிரச்சாரங்கள் என்றே வைத்துக் கொண்டாலும் கூட பொருளாதாரம் குறித்தும், அதன் தற்போதைய நிலைமை குறித்தும் தரவுகளோடும் நம்பிக்கையளிக்கும் விதத்திலும் அரசாங்கமட்டத்தில் முக்கியமான ஸ்தானத்தில் இருப்பவர்கள் யாருமே பேசியதாகக் கண்ணில்படவில்லை. ரிசர்வ் வங்கியின் கவர்னர் ‘எல்லாம் சரியாகிவிடும்’ என்கிறார். பிரதம பொருளாதார ஆலோசகர் ‘நிறுவனங்கள் தங்கள் இழப்புகளை வெளியில் காட்டக் கூடாது’ என்கிறார். இவையெல்லாம் ஆக்கப்பூர்வமான கருத்துகளாகவே இல்லையே! வலுவான அரசாங்கம் நினைத்தால் ஒரு கட்டத்தில் இத்தகைய செய்திகள் வெளியில் வராமல் வேண்டுமானால் தடுக்கலாம் ஆனால் அப்படித் தடுப்பதனால் நல்ல விளைவுகளை உண்டாக்க முடியாது. இந்தியப் பொருளாதாரத்தின் இத்தகைய போக்குதான் கவலையுற வைக்கிறது. பொருளாதாரம் பற்றி பேசக் கூடிய அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் பலரும் அமைதியாகிவிட்டார்கள். இந்த மெளனம் அச்சுறுத்தக் கூடியதாக இருக்கிறது. ஒருவேளை இந்தியப் பொருளாதாரம் சீட்டுக்கட்டு போல சரிய ஆரம்பித்தால் தாங்கிப் பிடிப்பார்களா என்று நடுங்க வைக்கிறது. இவ்வளவு பெரிய நாடு என்ன செய்ய முடியும்?

பெரிய யானை ஒன்று நடமாட முடியாமல் வீழ்வதைப் போலத்தான் அது.

அரசாங்கம் மக்களின் மனநிலையை மாற்றுவதற்கான, தொழிற்துறையினரை உற்சாகம் கொள்ள வைப்பதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்ள முயற்சிக்க வேண்டும் என்றுதான் மனப்பூர்வமாக வேண்டிக் கொள்ள வேண்டியிருக்கிறது- இஷ்ட தெய்வங்களையெல்லாம்!

Aug 20, 2019

எங்கே செல்லும் இந்தப் பாதை...

நேற்று ஒரு ஐடி நிறுவனத்தில்- வாகன உற்பத்தியாளர்களுக்கான மென்பொருள் தயாரிக்கும் ஐடி நிறுவனம் அது-  மேலாளர்களை அழைத்து ‘பிரச்சினைகளை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்; எங்கெல்லாம் செலவினங்களைக் குறைக்க முடியுமோ அங்கெல்லாம் குறையுங்கள்’ என்று அறிவுறுத்தினார்களாம். பத்தாண்டுகளுக்கு முன்பாக அமெரிக்காவில் வீடுகளின் மதிப்பு குறைந்து, பொருளாதாரம் சரிவை நோக்கிச் சென்ற போது அப்பொழுது நான் பணியாற்றிய அமெரிக்க நிறுவனத்தில் இத்தகைய முன்னெடுப்புகளை மேற்கொண்டார்கள். புதிதாக யாரையும் வேலைக்கு எடுக்கவில்லை. பயணங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. கேண்டீனில் டிஷ்யூ தாள்கள் வைப்பதைக் கூட குறைத்தார்கள். அடுத்த பதினைந்து நாட்களில் சில ஆட்களை வீட்டுக்கு அனுப்பத் தொடங்கினார்கள். தலைக்கு மேல் கத்தி தொங்குவது போலவே இருக்கும். ‘எப்பொழுது வேண்டுமானாலும் ஹெச்.ஆர் அழைக்கக் கூடும்’ என்று பயந்து கொண்டிருப்போம். காலை பதினோரு மணிக்கு யாரையாவது அனுப்பிவிட்டதாகக் கேள்விப்பட்டால் மதியம் பசியே இருக்காது. வெறுமனே எதையாவது நான்கு வாய் போட்டுவிட்டு வந்து மாலை வரை காத்திருந்தால் ‘இன்னைக்கு இல்ல..நாளைக்கு ஏதாச்சும் பிரச்சினை ஆகுமோ?’ என்று பதற்றமாகவே இருக்கும்.

இவ்வளவு பயந்ததற்கு தனிப்பட்ட முறையிலும் நிறையக் காரணங்கள் இருந்தன. அப்பொழுதுதான் திருமணம் ஆகியிருந்தது. அம்மாவுக்கும் அப்பாவுக்கும் சம்பளம் தவிர வேறு வருமானத்துக்கு வழிவகை இல்லை. ‘வெளியே அனுப்பிட்டாங்கன்னா எப்படி பிழைப்பது?’ என்ற பயம்தான்.

சமீபமாக, ஒன்றிரண்டு மாதங்களுக்கு முன்பு வரையிலும் கூட பொருளாதார மந்தநிலை குறித்தான செய்திகள் வந்த போது பெரிதாகக் குழப்பமில்லை. 2008-09 ஆம் ஆண்டுகளில் அமெரிக்கா அந்தச் சரிவை மிகச் சாதுரியமாகக் கையாண்டது.  இந்தியாவிலும் கூட ‘அமெரிக்காதான் வீழ்கிறது; ஐரோப்பா, ஜப்பான் மாதிரியான நாடுகளிலிருந்து ப்ராஜக்ட்களை பிடித்துவிடலாம்’ என்று பேசினார்கள். இந்திய அரசாங்கமும் அதற்கான உதவிகளைச் செய்து கொண்டிருப்பதாக விவாதங்கள் நடைபெறும். 

அமெரிக்கா, தமது பொருளாதாரத்தை ஊக்குவிக்கப்பதற்கென பல நூறு பில்லியன் டாலர்களை எடுத்துக் கொட்டியது. பணத்தை எடுத்துக் கொட்டினால் எப்படி சரியும் பொருளாதாரத்தைத் தாங்கிப் பிடிக்க முடியும் என்ற கேள்வி இருந்து கொண்டிருந்தது. அரசாங்கம் கொட்டிக் கொடுக்கும் பணமானது நாட்டின் உட்கட்டமைப்பு, சுகாதாரம், கல்வி, வரி விலக்குகள் என்றெல்லாம் பல்வேறு திட்டங்களில் பயன்படுத்திக் கொள்ளப்படும். உதாரணமாக உட்கட்டமைப்புக்கு ஒதுக்கப்படும் நிதியில் பெரிய திட்டங்களுக்காக பெருமளவில் கட்டுமானப் பொருட்களை வாங்குவார்கள். தேவைகள் அதிகரிக்கும். நிறுவனங்கள் உற்பத்தியை அதிகரிக்கத் தொடங்கும். அந்நிறுவனங்கள் புதிதாக வேலைக்கு ஆட்களை எடுப்பார்கள். உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை கொண்டு சேர்க்க பெருமளவில் வாகனங்கள் தேவைப்படும். வாகன உற்பத்தி பெருகும். இப்படி சங்கிலித் தொடராக, பல்லாயிரக்கணக்கான சிறு குறு தொழில்கள் எழுச்சியுறும். சிக்கலான ஆனால் மேம்போக்கில் புரிந்து கொள்ள எளிமையானதுதான்.

இப்படித்தான் பொருளாதாரம் என்னும் பெரும் சக்கரம் சுழலத் தொடங்கியது. தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது மாதிரி தப்பித்துவிட்டோம். பொருளாதாரம் என்பதே சுழற்சிதான் என்பார்கள். ஒரு பிரபலமான உதாரணம் உண்டு-  ஒருவனுக்கு ஆயிரம் ரூபாய் கிடைக்கிறது. அதை எடுத்துக் கொண்டு போய் உணவகத்தில் ஆயிரம் ரூபாய்க்கு உண்கிறான். உணவகத்தின் உரிமையாளர் அந்த ஆயிரம் ரூபாயை எடுத்துக் கொண்டு போய் தனது மகனுக்கு ஒரு ஆடை வாங்குகிறார். துணிக்கடைக்காரர் அதே ஆயிரம் ரூபாயை எடுத்துச் சென்று தியேட்டரில் செலவு செய்கிறார் என்றால் நாட்டின் GDPயில் 1000+1000+1000- என மூன்றாயிரம் ரூபாய் பங்களிக்கிறோம். உள்நாட்டு மொத்த உற்பத்தி (GDP) என்பது அந்த நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் அல்லது சேவைகளின் மொத்த மதிப்பு.

பொதுவாக பொருளாதார மந்தநிலை வரும் போது மக்களின் செலவு செய்யும் மனநிலை மாறிவிடும். சேகரிப்பு முக்கியம் என்று பயந்து செலவு செய்யத் தயங்குவார்கள். வீடு கட்டுவது, கார் வாங்குவது போன்ற செலவுகளைத் தவிர்ப்பார்கள். இது மென்மேலும் பொருளாதாரச் சுழற்சியை மந்தப்படுத்தும். இத்தகைய சூழலில் அரசாங்கத்தின் செயல்பாடு மிக முக்கியம். ‘நாங்க இருக்கிறோம்’ என்ற மனநிலையை உருவாக்க வேண்டும். நேற்று ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ‘பொருளாதாரம் சரியில்லைதான்; ஆனால் நல்லாயிரும்ன்னு நினைங்க, நல்லாயிரும்’ என்று சொன்னது கூட இந்த அர்த்தத்தில்தான் எனப் புரிந்து கொள்ளலாம். பயப்படாமல் செலவு செய்யுங்கள் என சொல்ல வருகிறார். ஆனால் இப்படியெல்லாம் சொன்னால் மக்கள் செலவு செய்துவிடுவார்களா? அரசாங்கம் தம்முடைய தரப்பில் என்னவிதமான செயல்களைச் செய்கிறது என்று பார்ப்பார்கள் அல்லவா?

2008-09 ஆம் ஆண்டில் உருவான பொருளாதார மந்த நிலைக்கும் இன்றைய பொருளாதார மந்த நிலைக்கும் மிகப்பெரிய வித்தியாசத்தை உணர முடிகிறது. அப்பொழுது அமெரிக்காவில் ஜார்ஜ் புஷ்ஷின் ஆட்சிக்காலம் கிட்டத்தட்ட முடிவுக்கு வரும் தருணம். அவரது தலைமையிலான அரசுக்கு உலக அளவிலும், குறிப்பாக அமெரிக்காவிலும் பொருளாதார மந்த நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்வதில் எந்தப் பெரிய தயக்கமும் இருந்ததாகத் தெரியவில்லை. மந்த நிலையைத் தடுப்பதற்காக Economic Stimulus Act of 2008 கொண்டு வரப்பட்டது. பல பில்லியன் டாலர்கள் ஒதுக்கப்பட்டன. அதன் பிறகு அங்கு ஆட்சிக்கு வந்த ஒபாமா கிட்டத்தட்ட எந்நூறு பில்லியன் டாலர்களை மந்தநிலையைத் தடுப்பதற்காக எடுத்துக் கொட்டினார். அரசும்-தனியாரும் இணைந்து முதலீடுகளைச் செய்வதற்கான செயல்களை மேற்கொண்டது அமெரிக்க அரசாங்கம். அப்பொழுதும் வாகனத்துறைதான் படுக்கத் தொடங்கியது. ஜென்ரல் மோட்டார்ஸ், கிறிஸ்லர் போன்ற பெரு நிறுவனங்களுக்கு கடன்கள் புதுப்பிக்கப்பட்டன. இப்படியான தொடர்ச்சியான செயல்பாடுகளின் காரணமாக பொருளாதாரம் தடுமாற்றத்திலிருந்து சற்று மூச்சு விடத் தொடங்கியது. 

2008-09 காலகட்டத்தில் இந்தியா மற்றும் சீனாவின் பொருளாதாரங்கள் வலுவாக இருந்தன. இந்தியாவில் நேரடியான பாதிப்புகள் தெரியவில்லை. இப்பொழுது போல வாகன உற்பத்தி பாதிக்கப்படவில்லை. இந்தியத் தொழிற்துறைக்கான அமெரிக்க சந்தை மட்டும் மந்தமாகியது என்றாலும் இந்தியாவின் உள்நாட்டுச் சந்தையையும், மேலே குறிப்பிட்டபடி பிற நாடுகளின் சந்தைகளை நோக்கி நகர்வதற்கான வாய்ப்பாகவும் அந்தப் பொருளாதார மந்த நிலை உதவியது. இந்திய அரசாங்கம் பிற நாட்டு சந்தைகளை இந்திய நிறுவனங்கள் அடைவதற்கான உதவிகளை மேற்கொண்டன. ஆக, இந்தியாவிலும் சரி, அமெரிக்காவிலும் சரி- சரிவைச் சந்திக்கிறோம்; ஆனால் மீண்டு எழுந்துவிடுவோம் என்கிற நம்பிக்கையிருக்கிறது, எழுந்துவிடலாம் என்று சொல்லிவிட்டு அதற்கான வேலைகளைச் செய்தார்கள். அப்படிச் செய்யும் போது ‘அரசாங்கம் எதையாவது செய்து நம்மைக் காப்பாற்றிவிடும்’ என்கிற நம்பிக்கை மக்களுக்கு வரும். 

ஆனால் இன்றைக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ‘இதெல்லாம் யாரோ செய்யும் சதி’ என்கிறார். இந்திய அரசாங்கத்தின் தூண்கள் பொருளாதாரம் பற்றியெல்லாம் கண்டு கொள்வதாகவே தெரியவில்லை. பூனை கண்களை மூடிக் கொண்டு உலகம் இருண்டுவிட்டது எனச் சொல்வது போல,  ‘எல்லாம் சரியாக இருக்கிறது’ என நாங்கள் நம்புகிறோம், நீங்களும் நம்புங்கள் என்று திரும்பத் திரும்ப உச்சரிப்பதுதான் பயமாக இருக்கிறது. அமெரிக்காவும் அப்படி, இந்தியாவும் இப்படி என்றால் பயப்படாமல் என்ன செய்வது?

பொருளாதாரச் சரிவு என்பது பல காரணங்களினால் ஏற்படக் கூடும். அரசாங்கம் அதை உணர்ந்து, சரிவைத் தடுத்து நிறுத்தும் முயற்சிகளை முன்னெடுத்தால் சாமானியன் இயல்பாக இருக்கலாம். ஆனால் அதையெல்லாம் செய்வதாக எந்த நடவடிக்கையும் கண்ணில்படவில்லை என்பதுதான் பயத்திற்கான அடிநாதமாக இருக்கிறது. இந்தியாவில் வாகன உற்பத்தி கடும் சரிவைச் சந்திக்கிறது. அதனைச் சார்ந்திருக்கும் சிறு குறு தொழில்கள் மூடப்படுகின்றன. வாகன உற்பத்தித் துறையை நம்பியிருக்கும் மென்பொருள் நிறுவனங்களும் சூட்டை உணரத் தொடங்கிவிட்டன. ‘பல நாடுகள் டீசல் வாகன உற்பத்தியை தடை செய்திருக்கின்றன. நிறுவனங்கள் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை உற்பத்தி செய்ய வேண்டும். இந்த மாற்றத்திற்காக உண்டாகியிருக்கும் சிறு கால இடைவெளிதான் இந்த வாகனத்துறை மந்தம்’ என்று சிலர் சொன்னதை நம்பிக் கொண்டிருந்தேன். ஆனால் இந்திய பங்குச் சந்தைகளிலிருந்து அந்நிய முதலீட்டார்கள் பணத்தை திரும்ப எடுக்கிறார்கள், ரூபாய் மதிப்பு கடுமையாக வீழ்ச்சியடைகிறது, உள்நாட்டு மொத்த உற்பத்தி வீழ்ச்சி போன்ற பல எதிர்மறைச் செய்திகள் வரிசையாக வரத் தொடங்கியிருக்கின்றன.

2008-09 ஆம் ஆண்டில் அமெரிக்கா மற்றும் அதைச் சார்ந்த உலகப் பொருளாதாரம் சரிந்த போதும் இந்தியா மற்றும் சீனாவின் பொருளாதாரம் சற்று ஸ்திரமாக இருந்தது. பெரிய பாதிப்புகளை நாம் சந்திக்கவில்லை. ஆனால் இன்றைக்கு அமெரிக்காவின் பொருளாதாரம் வீழ்ச்சியடைவதைவிடவும் இந்தியப் பொருளாதாரம் வேகமாக சரிவதாகச் சொல்கிறார்கள். அதுதான் நடுங்கச் செய்கிறது. சிறு குறு தொழில்களைச் செய்யும் உறவினர்கள், நண்பர்கள் யாரிடமாவது விசாரியுங்கள். தொழில் சிறப்பாக இருப்பதாக ஓரிருவர் சொன்னாலும் கூட ஆறுதல்பட்டுக் கொள்ளலாம்.

எங்கேயோ பெரிய சிக்கல் விழுந்திருக்கிறது என்று மட்டும் தெரிகிறது. ஒரு பெரிய சுனாமிக்குத் தயாராகிக் கொள்ள வேண்டும் என்றுதான் தோன்றுகிறது.

vaamanikandan@gmail.com

(மாற்றுக் கருத்து இருப்பின் தெரியப்படுத்தவும்)

Aug 16, 2019

ஒழுங்கு

மனிதனுக்கு குறைந்தபட்ச ஒழுங்கு அவசியம் என்று முன்பொரு கட்டுரையில் எழுதியிருந்தீர்கள். ஒழுங்கின் வரையறை என்ன? குறைந்தபட்ச ஒழுங்கு என்று எதனைக் குறிப்பிடுகிறீர்கள்? என்று நண்பர் ரவீந்திரன் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்.  

எந்தக் கட்டுரையில், என்ன அர்த்தத்தில் எழுதினேன் என்று நினைவில் இல்லை. ஆனால் அந்த எண்ணத்தில் எந்த மாற்றமும் இல்லை. எனக்கு இதைச் சொன்னது எஸ்.வி.ராமகிருஷ்ணன். அவரை ஹைதராபாத்தில் சந்தித்த தொடக்க காலங்களில்- அவருக்கும் எனக்கும் அறுபது வருடங்கள் வயது வித்தியாசம்- ஏதோவொரு பூங்காவில் நடைப்பயிற்சிக்கு அழைத்துச் சென்றிருந்தார். அப்பொழுதுதான் பீடி சிகரெட் பழக்க இருக்கா? மது அருந்தும் பழக்கமுண்டா? என்றெல்லாம் வரிசையாகக் கேட்டார். பதில்களைச் சொன்ன பிறகு வேறெதுவும் கேட்டுக் கொள்ளாமல் நடந்தார். அது நமக்கு உறுத்தலாக இருக்குமல்லவா?

ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து ‘எதுக்கு கேட்டீங்க சார்?’ என்றேன். அவர் சொன்ன பதில் நன்றாக நினைவில் இருக்கிறது- ‘திறமை அல்லது அதிர்ஷ்டம் உள்ள ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் ஒரு வெற்றியாவது கிடைத்துவிடும். திறமை, அதிர்ஷ்டம் இரண்டுமே இல்லாதவன் என்று யாருமே இருக்க முடியாது. அப்படி ஒரு முறை கிடைத்த வெற்றியை நிலைப்படுத்திக் கொள்ள குறைந்தபட்ச ஒழுக்கம் அவசியம்’ என்று மட்டும் சொல்லிவிட்டு நிறுத்திவிட்டார். நான் யோசிப்பதற்கென அவர் கொடுத்த இடம் அது. 

தொடர்ந்து வாசிப்பதை ஒரு கணம் நிறுத்திவிட்டு எஸ்.வி.ஆரின் இந்த வரையறையை அசை போட்டுப் பார்க்கவும். இந்த இரண்டு வரியில் நாம் எவ்வளவு வேண்டுமானாலும் யோசித்துக் கொள்ள முடியும்.

பிறந்ததிலிருந்தே எல்லாவற்றிலும் தோல்விதான் என்று யாருமே சொல்ல முடியாது. எதாவதொரு கட்டத்தில் ஒற்றை வெற்றியாவது கிடைத்திருக்கும். ஆனால் ஒற்றை வெற்றியை அடைந்தவனை யாரும் பெரிதாக சட்டை செய்ய மாட்டார்கள். ஒரு கணத்துக்கான வெளிச்சத்தை நம் மீது வீசிவிட்டு மறந்துவிடுவார்கள். தொடர்ச்சியாக வென்று கொண்டிருப்பவனை, கீழே விழுந்தாலும் எழுந்து நிற்பவனை, ஒவ்வொரு கட்டத்தை அடைந்த பிறகும் அடுத்தவர்கள் திரும்பிப் பார்க்கும்படி சாதிக்கிறவனை, அவனது மறைவுக்குப் பின்னாலும் அவன் பெயரை நினைவில் வைத்திருக்கும் ஒரு கூட்டத்தை உருவாக்குகிறவனைத்தான் சமூகமும், உலகமும் நினைவில் வைத்திருக்கும்.

பெரிய வரலாற்று நாயகனாக இல்லாவிட்டாலும் குறைந்தபட்ச வெற்றியாளனாக இருப்பதற்கு முதலில் கிடைத்த வெற்றியின் உத்வேகத்தில் அடுத்தடுத்த வெற்றியை நோக்கி ஓட வேண்டும். அதற்கு கவனச் சிதறல் இல்லாமல் இருக்க வேண்டும். ‘Will to Win’ என்றொரு வரி மிகப் பிரபலம். முதலில் வெற்றியை அடைய வேண்டும் என்கிற ஆசை வேண்டும். அந்த ஆசையைச் சிதைக்கிற எதுவுமே ஒழுங்கின்மைதான். ‘அப்புறம் பார்த்துக்கலாம்’ என்று நினைக்க வைக்கிற எதுவுமே ஒழுங்கின்மைதான். அது குடியாகத்தான் இருக்க வேண்டும் என்றில்லை. மிதமிஞ்சிய சோம்பேறித்தனமாகக் கூட இருக்கலாம். 

அறிவுரையாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை- ஆனால் குடி, போதை என யாராவது பேசினால், நம்முடைய சொல்லுக்கு அவரிடம் மரியாதை இருக்குமெனத் தெரிந்தால் இதைச் சொல்ல நான் தயங்குவதேயில்லை.  

நூறு சதவீதம் பர்ஃபெக்ட் என்றெல்லாம் எந்த மனிதனும் இருக்க முடியாது. பலங்களும் பலவீனங்களும், ஒழுங்குகளும் ஒழுங்கின்மைகளும் நிறைந்தவர்களாகத்தான் ஒவ்வொருவரும் இருக்க முடியும். பலவீனங்களும், ஒழுங்கின்மைகளும்தான் நம் வாழ்க்கையின் சுவாரசியத்தைக் கூட்டுகின்றன. சந்தோஷத்தையும் அளிக்கின்றன. எப்பொழுதும் இறுக்கமாகவேவா இருக்க முடியும்? ஆனால் நம்முடைய பலங்களை விட பலவீனங்கள் அதிகமாகும் போதும், ஒழுங்குகளை விடவும் ஒழுங்கீனங்கள் அதிகமாகும் போதும் நம்முடைய செயல்திறன் குறைந்து, லட்சியத்தை அடைவதற்கான வேகம் குறைகிறது. 

பலவீனங்களை விட பலம் மிகுந்தவனாகவும், ஒழுங்கீனங்களைவிட ஒழுங்கு மிக்கவனாகவும் இருக்கும் வரைக்கும் நம்முடைய ஓட்டம் இருந்து கொண்டேதான் இருக்கும். வயது முதிர முதிர இந்த எண்ணம் வலுவேறிக் கொண்டிருக்க வேண்டும். சுவரில் முதல் சுண்ணாம்பு உதிரும் வரைக்கும் எல்லாம் சரியாகவே இருக்கும். ஓரிடத்தில் உதிரத் தொடங்கிய பிறகும் விழித்துக் கொள்ளாவிட்டால் சுவர் பல்லிளித்துவிடும். அவ்வளவுதான்.

எந்தக் கணத்திலும் சிதைவதற்கான இடம் கொடுத்துவிடக் கூடாது என்கிற வைராக்கியம் மட்டுமே நமக்கான உந்து சக்தியாக இருக்கும். 

போரடிக்குதுங்க..

‘வேலையை விட்டுட்டேன்’ என்று யாராவது சொல்லும் போது அதிர்ச்சியாக இருக்கும். ஆனால் வாரம் ஒருவராவது சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொருவரிடமும் ஒரு புது ஐடியா இருக்கிறது. அதை வடிவத்துக்குக் கொண்டு வந்துவிட முடியும் என்று தீர்க்கமாக நம்புகிறார்கள். அவர்களிடம் பேசி முடித்த பிறகு அவர்களின் துணிச்சலை யோசித்துப் பார்க்க சற்று பயமாகவும் இருக்கும். ‘ஒருவேளை இப்பொழுது வரும் சம்பளம் வரவில்லையென்றால் அடுத்த மாத வருமானத்துக்கு என்ன வழி?’ என்று  என்னிடம் கேட்டால் பதில் இல்லை.

புதியதாக ஏதாவது தொழில் தொடங்க வேண்டும், தொழிலதிபர் ஆக வேண்டும் என்றெல்லாம் என்னிடம் கனவுகள் இருந்ததில்லை. ஏதாவதொரு நிறுவனத்தில் ஒரு வேலை என்பதைத் தாண்டி எதுவுமில்லை. ஆனால் கடந்த பதினைந்து வருடங்களாகவே ‘நிரந்தரமான வேலை’ என்று எந்த இடத்திலும் நம்பியதில்லை. எந்த நிறுவனம்தான் நிரந்தரமானது? வெகு தூரப் பயணங்களில், பறவைகள் கத்தும் அந்திவேளைத் தனிமைகளில் ‘இந்த வேலை இல்லைன்னா?’ என்கிற கேள்வி திடீரென்று முளைத்துவிடும். அப்படியொரு எண்ணம் ஏன் வரும் என்றே தெரியாது. ஆனால் வரும். 

நம் காலத்தில் செல்போன் மட்டும் இல்லையென்றால் பெரும்பாலானவர்கள் மன உளைச்சலிலேயே செத்துவிடக் கூடும். செல்போன்கள் மிகப்பெரிய வடிகால்கள். எவ்வளவு பெரிய சுமையையும் யாரிடமாவது இறக்கி வைத்துவிட முடிகிறது. வேலை குறித்தான எண்ணங்கள் தோன்றும் போது அதற்கென்று சில நண்பர்களிடம் பேசத் தோன்றும். சரவணன் என்றொரு நண்பர் இருக்கிறார்- இவர் கை வைக்காத வேலையே இல்லை- ஸ்டேஷனரி பொருட்கள் விற்பது முதல் குன்னூரில் ரிசார்ட் தொடங்கி, வெளிநாட்டு ஏற்றுமதி வரைக்கும் எல்லாவற்றையும் ஒரு கை பார்த்திருக்கிறார். என்னைவிட நான்கைந்து வயது முன்பின்னாக இருக்கலாம். திடீரென்று வெளிநாட்டுப் பயணம் செல்வதாகச் சொன்னார். ‘எதுக்குங்க?’ என்று கேட்டால் சில பொருட்களைச் சொல்லி அதற்கான சந்தை அங்கே எப்படி இருக்கிறது என பார்த்து வர என்கிறார். உண்மையில் இப்படியான மனிதர்கள்தான் மிகப்பெரிய ஆச்சரியங்கள். எதையாவது உருட்டிக் கொண்டிருப்பதைப் பார்க்கும் போது ‘இத்தனை வாய்ப்புகள் இருக்கின்றன; இவற்றில் நமக்கு ஒண்ணும் அமையாமலா போய்விடும்’ என்னும் நம்பிக்கையை உருவாக்கும் டானிக்குகள்.

‘மணி, வேலையைப் பத்தி இப்ப எதுக்கு நினைக்குறீங்க? புடிச்சிருக்கிற வரைக்கும் செய்யுங்க.அப்படியொரு சூழல் வரும் போது பார்த்துக்கலாம் விடுங்க’ என்பார். அடுத்த சில நிமிடங்களில் மனம் தெளிவாகிவிடும். 

இருக்கும் சொத்துகள் எல்லாவற்றையும் விற்றுவிட்டு, கடன்களையெல்லாம் அடைத்துவிட்டு ‘இனி புதுசா வருமானத்துக்கு ஏதாச்சும் செய்யணும்’ என்று சொன்ன நண்பர்களைக் கூட எதிர் கொண்டிருக்கிறேன். நாற்பதுகளைக் கடந்த பிறகு starting with fresh என்பது எவ்வளவு பெரிய த்ரில்லான சமாச்சாரம்.

இதையெல்லாம் எதற்காகச் சொல்கிறேன் என்றால் சமீபத்தில் ஒரு நண்பர் தமக்கு ஒரு வேலை வேண்டும் என்றார். ‘நல்ல சம்பளம் கொடுக்கிற அதே சமயம் வேலை நிரந்தரம்’ என்று இருக்கிற நிறுவனமாக வேண்டும் என்றார். முதல் கோரிக்கை சற்று சுலபம். இரண்டாம் கோரிக்கை லேசுப்பட்டதில்லை.  அவரே சில நிறுவனங்களைச் சொல்லி ‘இங்கெல்லாம் வேலையை விட்டுத் தூக்க மாட்டாங்க’ என்றார். அப்புறம் அங்கேயே போய்விடலாமே என்றால் ‘அங்க எல்லாம் போரடிக்குதுங்க’ என்கிறார். கூழுக்கும் ஆசை; மீசைக்கும் ஆசை.

யோசித்துப் பார்த்தால் நமது வாழ்க்கையில் அதிகபட்சம் முப்பதாண்டுகள் வேலை செய்வோமா? முப்பதாண்டுகளும் செக்கு மாடு மாதிரி ஒன்றையே சுற்றிக் கொண்டிருக்கலாமா அல்லது புதியதாக ஏதாவது முயற்சி செய்து பார்க்கலாமா என்பது நம் கைகளில்தான் இருக்கிறது. ‘ரிஸ்க் எடுக்கவெல்லாம் வேண்டாம்...இப்படியே இருந்துக்கிறேன்’ என்பது ஒரு வகை. அதுவும் தவறில்லை. குடும்பம், குழந்தைகள், அவர்களின் படிப்பு என எவ்வளவோ இருக்கிறது. எல்லாவற்றையும் கணக்குப் போட வேண்டும். ஒருவேளை மகன் மருத்துவப்படிப்பு சேர்ந்தால், அதுவும் மேனேஜ்மெண்ட் கோட்டாவில் சேர்ந்தால் வருடம் இவ்வளவு லட்சங்கள் தேவைப்படும் என்று கணக்குப் போட்டு அதற்கு ஏற்ற முதலீடுகளைச் செய்கிற நண்பர்கள் எல்லாம் இருக்கிறார்கள்.

அதுவே ‘இது போரடிக்குது...புதுசா ஏதாச்சும் செய்யறேன்...சரியா வரலைன்னா அப்புறம் பார்த்துக்கலாம்’ என்பது இரண்டாம் வகை. பெரிய ரிஸ்க்தான். ஆனால் இதில்தான் சுவாரசியமிருக்கிறது. வாழ்தலுக்கான அர்த்தமும் இருக்கிறது. என்னைக் கேட்டால் மனதில் தைரியமும் தெளிவும் இருந்தால் இரண்டாம் வகையாகத்தான் இருக்க வேண்டும் என்பேன். செய்த வேலையையே திரும்பச் செய்து, ஒரே மாதிரியான வாழ்க்கையை வாழ்ந்து குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டி எல்லாவற்றையும் நிறைவு செய்வதைவிடவும், இந்த உலகில் கொட்டிக் கிடக்கும் வாய்ப்புகளிலிருந்து நமக்குப் பொருத்தமான ஒன்றைப் பிடித்து அந்தக் குதிரையை அடக்குவதில்தான் பொதிந்து கிடக்கும் நம் வாழ்க்கைக்கான மொத்த அர்த்தத்தையும் கண்டறிவோம்.

மகன் படிக்க வேண்டும், மகள் படிக்க வேண்டும், அவர்களுக்குத் திருமணம் செய்ய வேண்டும், ஓய்வுக்குப் பிறகு ஒரு வருமானம் வேண்டும்- எல்லாம் சரிதான். ஆனால் நம் வாழ்க்கையை நாம்தானே வாழ வேண்டும்? 

சலிப்புத் தட்டினால் ஏதாவது புதிதாகத் தொழில்தான் செய்ய வேண்டும் என்றில்லை. பிடித்த துறையில், பிடித்தமான வேலையைக் கண்டறிவதும் கூட இதில்தான் வரும். புதிது புதிதாக தொழில்நுட்பங்கள் உருவாகியபடியேதான் இருக்கின்றன. உண்மையில் புத்தம் புதிய வேலையை எடுத்துச் செய்யும் போது ‘இந்த வேலையை இப்படித்தான் செய்ய வேண்டும்’ என்று கண்டறிந்து அதை மேலாண்மைக்குச் சொல்லலாம். ‘நீ இந்த வேலையைச் செய்; இப்படித்தான் செய்ய வேண்டும்’ என்று யாரும் நம்மை அடக்கி வழி நடத்த மாட்டார்கள். அவர்களுக்கே கூட அது தெரியாமல் இருக்கும். நாம் சொல்லும்படி நம்மை வேலை செய்ய அனுமதிக்கிறார்கள் என்றால் அதைவிட வேறு என்ன பெரிய வேலைச் சுதந்திரம் இருக்கிறது? புதுப்புது துறைகளில் நுழைந்த நண்பர்கள் இதைத்தான் மிகப்பெரிய சந்தோஷமாகச் சொல்கிறார்கள்.

சுருக்கமாகச் சொன்னால் பொருளாதார நிர்பந்தங்கள் மட்டுமே நம் பாதையை நிர்மாணிக்குமானால் ஒரு குடும்பஸ்தனாக நிறைவான வாழ்க்கையை வாழ்ந்திருக்கக் கூடும். ஆனால் அதில் என்ன சுவாரசியம் இருந்துவிடும் என்று தெரியவில்லை. பொருளாதார நிர்பந்தங்கள் வாழ்க்கையின் ஓர் அங்கம்தான்; ஆனால் அது மட்டுமே எனது பாதையை, எனது வாழ்க்கை முறையை முடிவு செய்துவிட முடியாது என்று உறுதியாக நினைத்தோமானால் கொட்டிக் கிடக்கின்றன வாய்ப்புகள். சலிப்புகளை விட்டு வெளியே வந்து பிடித்ததை எடுத்துக் கொள்ளலாம். வாழ்ந்து முடித்துத் திரும்பிப் பார்க்கும் போது நாம் ஏறி வந்த மேடு பள்ளங்கள்தானே சுவாரசியத்தின் திறவுகோல்கள்!

Aug 9, 2019

மன்னா மெஸ்

‘தொழில் தொடங்கலாம்’ என்று சொல்வது சுலபம். ஆனால் அது எவ்வளவு எளிய காரியமா என்ன? நினைத்தவர்கள் எல்லாம் தொழில் தொடங்குவதாக இருந்தால் திரும்பிய பக்கமெல்லாம் தொழிலதிபர்கள்தான் இருப்பார்கள். அதற்கென்று தனியான மனநிலை தேவை. கணக்கிடும் திறமை வேண்டும். கணக்கு என்றால் வெறும் பொருளாதாரக் கணக்கு மட்டும் இல்லை.

பொதுவாக நம் ஊர்களில் தொழில் தொடங்குவது என்றால், நிறைய முன்னோடிகள் இருக்கும் தொழிலாகப் பார்த்து தேர்வு செய்வது ஒரு வகை. ஹார்டுவேர் கடை, உணவகம், துணிக்கடை என்று திரும்பிய பக்கமெல்லாம் கண்களில் படும் ஏதாவதொரு தொழிலை ஆரம்பிப்பார்கள். போட்டி இருக்கும். வருமானமும் மெல்லத்தான் உயரும். ஆனால் ரிஸ்க் சற்று குறைவு. விழுவது போலத் தெரிந்தால் யாரிடமாவது கேட்டுக் கொள்ளலாம். 

இரண்டாவது வகை யாருமே யோசிக்காத ஒன்றைத் தொழிலாக எடுத்துச் செய்வது. ‘இதெல்லாம் சம்பாதிக்க உதவுமா?’ என்று அடுத்தவர்கள் தயங்குமிடத்தில் அதிரடியாகக் களமிறங்குவார்கள். உலக அளவிலும் சரி, நாடளவிலும் சரி-  மிகப்பெரிய தொழிலதிபர்களாக நம் கண்களில் தெரிகிறவர்கள் அப்படியான ஒன்றில் வெற்றி பெற்றவர்களாக இருப்பார்கள். போட்டி குறைவாக இருந்தாலும் ரிஸ்க் அதிகம். சரியாக அமைந்துவிட்டால் பணம் கொழித்துவிடும். ஆனால் சறுக்கினால் கை கொடுக்கக் கூட ஆள் இருக்காது. ‘அதைப் பத்தி எனக்கு ஒண்ணும் தெரியாதே’ என்று ஒதுங்கிக் கொள்வார்கள்.

முதல் வகை சற்றே எளிதானது எனத் தெரிந்தாலும் கூட அலேக்காகத் தூக்கிவிடலாம் என்றெல்லாம் கற்பனை செய்யக் கூடாது. எவ்வளவு நுட்பங்கள் இருக்கின்றன? இரண்டு நாட்கள் ஜெயராஜூடன் சுற்றிக் கொண்டிருக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஜெயராஜை நான்கைந்து வருடங்களாகத் தெரியும். பத்து வருடங்களுக்கு முன்பாக அச்சரப்பாக்கத்தில் லாரி ஓட்டுநர்களுக்கு என அசைவ உணவகம் ஒன்றைத் தொடங்கியவர். ஆனால் தோல்வி. அசைவ உணவில் வெல்வது அவ்வளவு சுலபமான காரியமில்லை. ஆரம்பித்த தொழில் சுணங்கிவிட, விட்டுவிட்டு ரியல் எஸ்டேட், ஃபைனான்ஸ் என்று ஏதேதோ தொட்டுவிட்டு கடந்த வருடம் ‘மன்னா மெஸ்’ ஆரம்பித்திருக்கிறார். ஆரம்பத்தில் அச்சரபாக்கத்தில் ஊருக்குள் சிறிய கடைதான். அதன் பிறகு வளர்ச்சி கண்ணில் தெரிய தேசிய நெடுஞ்சாலைக்கு ஜாகையை மாற்றிவிட்டார். 

சென்னை செல்லும் வழியில் மேல்மருவத்தூருக்கு நான்கைந்து கிலோமீட்டருக்கு முன்பாக தேசிய நெடுஞ்சாலையில் மன்னா மெஸ் இருக்கிறது. அசைவத்தில் ஆரோக்கியம் என்பதுதான் Tag line. உணர்ச்சிவசப்பட்டு ‘அப்படியே எதிர்த்த மாதிரியும் ஒரு கடையை ஆரம்பிச்சா அந்தப் பக்கமா போற கூட்டத்தையும் இழுத்துடலாம்ல’ என்றேன். அறிவுரைதானே? காசா பணமா? அள்ளிவிட்டால்  'கிடக்கிறது கழுதை' என்று இத்தகைய மனிதர்களிடம் பேசக் கூடாது. பல்பு கொடுத்துவிடுகிறார்கள்.

இப்பொழுது மெஸ் இருப்பது சென்னையிலிருந்து வெளியூர்களுக்குச் செல்லும் வழியில். ‘சென்னையிலிருந்து ஊருக்குப் போகும் போது இருக்கும் மனநிலை வேற; ஊரிலிருந்து திரும்பவும் சென்னைக்கு வரும் போது இருக்கும் மனநிலை வேற’ என்றார் ஜெயராஜ். சைக்காலஜி புரிகிறதா? எப்பொழுதுமே ஊருக்குச் செல்லும் போது ஒரு கொண்டாட்ட மனநிலை இருக்கும். நல்ல இடமாக நிறுத்தி, உணவுண்டு, குழந்தைகள் விளையாடுவதை வேடிக்கை பார்த்துவிட்டு, திருப்தியாகச் செல்கிறவர்கள் அதிகம். அதுவே ஊரிலிரிந்து திரும்பி மாநகரை நோக்கிச் செல்லும் போது ‘எப்போடா போய் சேருவோம்’ என்கிற மனநிலைதான் இருக்கும். வண்டியில் இருக்கும் குழந்தைகளின் அட்டகாசம், எதிர்ப்படும் போக்குவரத்து நெரிசல் என எல்லாமும் சேர்த்து வண்டியை ஓட்டுகிறவனை கடுப்பிலேயே வைத்துக் கொண்டிருக்கும். சாப்பிட வேண்டிய நேரத்தில் கிடைத்ததை அள்ளி வாயில் போட்டுக் கொண்டு ஓடுவார்கள். அவர்களும் வாடிக்கையாளர்கள்தான். அவர்களும் உண்பார்கள்தான். ஆனால் நாம் என்ன மாதிரியான உணவகத்தை ஆரம்பிக்கிறோம் என்பதைப் பொறுத்து சாலையின் இந்தப்பக்கமா அந்தப்பக்கமா என முடிவு செய்ய வேண்டும்.

ஆக, கடை ஆரம்பிக்கும் இடத்தைத் தேர்ந்தெடுப்பதிலேயே கூட இவ்வளவு சூட்சமங்கள் அடங்கியிருக்கின்றன.

‘இந்த ஆளு எப்படியெல்லாம் யோசிக்கிறாரு’ என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அப்படியெல்லாம் யோசிக்கவில்லையெனில் நான்கு மாதத்தில் Break-even ஐ அடைவது சாத்தியமில்லை.

ஏ.சி கூட இல்லை; வெறும் மெஸ்தான். ஆனால் பல பிரபலங்கள் உண்டுவிட்டுப் போகிறார்கள். நான் சென்றிருந்த போது புஷ்பவனம் குப்புசாமி வந்திருந்தார். முகம் தெரிந்த பிரபலங்கள் ஒரு கணக்கு என்றால் தம்மை வெளியில் காட்டிக் கொள்ளாத பெரும் ஆட்கள் வேறு கணக்கு. ஐந்தாயிரம் ரூபாயை பணியாளர்களுக்கு டிப்ஸ்ஸாக மட்டுமே ஒருவர் கொடுக்கிறார். துபாயில் தொழிலதிபராம். நம் ஊர்க்காரர்தான். அவர் பெயரைக் குறிப்பிட வேண்டியதில்லை. சென்னையில் ஒரு மிகப்பெரிய சொத்து- சுமார் ஆயிரம் கோடியாவது இருக்கும்- விலை பேசிக் கொண்டிருப்பதாக ஜெயராஜிடம் சொல்லிக் கொண்டிருந்தார். அவர் உடான்ஸ் விடுகிறாரோ என்று கூட நினைத்தேன். இணையத்தில் தேடினால் அப்படித்தான் இருக்கிறது. வாயடைத்துப் போனேன். அந்தச் சொத்தின் விலை முடிந்தால் அவர் யாரென்று வெளிப்படையாகச் சொல்லலாம். 

‘இவ்வளவு பெரிய கை ஏன் இங்க வந்து சாப்பிடுது’ என யோசிக்கத் தோன்றுமல்லவா? 

அதற்கும் ஒரு காரணத்தை வைத்திருக்கிறார்கள். தினசரி மதியம் பனிரெண்டு மணிக்கு பணியாளர்களை நிறுத்தி இறைவணக்கம் செய்கிறார்கள். ஜெயராஜ் இரண்டு நிமிடங்கள் அவர்களிடம் பேசுகிறார். அதன் பிறகுதான் உணவு பரிமாறத் தொடங்குகிறார்கள். வீட்டில் சாப்பிவிட்டுச் செல்லும் உணர்வு வர வேண்டும், எதையும் கொண்டு போய் கிண்ணங்களில் கொடுக்காமல் வீடுகளில் பரிமாறுவதைப் போலவே கேட்டுக் கேட்டு பரிமாற வேண்டும் என்பது தொடங்கிச் சின்னச் சின்ன விஷயங்கள். ஒரு பாடமே படிக்கலாம்.

‘உணவு எப்பொழுதும் திகட்டவே கூடாது’ என்பது மாதிரியாக நிறைய உணவு சார்ந்த மனோவியலும் பேசுகிறார். ‘ஜிகிர்தண்டா வாங்கி வைக்கலாம்..ஆனா சாப்பிட்டு முடிச்ச பின்னாடி ஹெவி ஆகிடும்..அப்படி ஒரு எண்ணம் வரவே கூடாது அடுத்து எப்போ சாப்பிடலாம்ன்னு தோணுற மனநிலைதான் நல்ல உணவுக்கான அடையாளம்’ என்று கிளறக் கிளற புதியதாக ஒன்றைச் சொல்கிறார். அர்ப்பணிப்பும், தொழிலை அக்குவேறு ஆணிவேறாக புரிந்து கொள்ளாமலும் இதெல்லாம் சாத்தியமில்லை எனத் தோன்றியது. 

இரண்டு நாட்களாக அவர் சொன்னவற்றையெல்லாம் எழுதிவிடலாம்தான். ஆனால் அவற்றில் சில அவருடைய தொழில் ரகசியங்களாகக் இருக்கக் கூடும். 

பெரிய விளம்பரம் எதுவுமில்லாமல் அடுத்தவர்கள் சொல்லிச் சொல்லியே துபாய் தொழிலதிபர் வரைக்கும் வந்து போகிறார்கள். ஜெயராஜ் குறித்தும் மன்னா மெஸ் குறித்தும் எழுதுவதற்கு அவரது வெற்றி பெற்ற உணவகம், உணவின் சுவை என்பதையெல்லாம் கடந்து அவர் பேசுகிற உணவு சார்ந்து மக்களின் மனோவியலும், அதற்காக அவர் எடுத்தாளும் நுண்மையான செயல்களும்தான் உண்மையிலேயே அசத்துகிறது.

எந்தத் தொழிலை எடுத்தாலும் வாடிக்கையாளர்களின் இத்தகைய மனநிலை அறிதல்தான் மிக முக்கியம். நாற்பது வயதில் தொடங்கினாலும் சரி; இருபதிலேயே தொடங்கினாலும் சரி- தொழிலில் கண்ணும் கருத்துமாக இருந்தால் வெற்றி பெற்றுவிடலாம் என்பதற்கு ஜெயராஜ் மாதிரியான ஆட்கள்தான் உதாரணமும் கூட. 

சமீபத்தில் ஒரு நண்பர் தொழில் தொடங்குவது பற்றிப் பேசினார். ஒருநாள் ஜெயராஜை பார்த்து பேசிட்டு வாங்க என்றேன். ஏனென்றால் ஜெயராஜ் ஒரு ஜகஜாலக் கில்லாடி.

மன்னா மெஸ் பற்றிய சலனப்படம் ஒன்று-

Aug 7, 2019

கண்ணியின் சந்தோஷம்

இன்றைய தினம் இப்படி விடிந்திருக்கிறது. அங்குராஜிடமிருந்து வந்திருக்கும் மின்னஞ்சல் இது.

வணக்கம் சார்,

நான் அ.அங்குராஜ். தற்போது 4ம் ஆண்டு B.E(ECE), கோவை CIT கல்லூரியில் படித்து வருகிறேன். 2016-ம் ஆண்டு அரசு தாமஸ் சார் மூலமாக தங்களிடம் உதவிதொகை கேட்டு வந்திருந்தேன். கடந்த 4 வருடங்களாக எனக்கு நிதி உதவி மட்டுமின்றி SUPER SIXTEEN மூலமாக ஆளுமைத் திறன் வளர்ப்பு மற்றும் ஆங்கிலப் பயிற்சி வாயிலாக மெருகேற்றியுள்ளீர்கள். நான் தற்பொழுது ***** TECHNOLOGIES என்ற நிறுவனத்தில் Campus Recruitment இல் தேர்வு செய்யப்பட்டுள்ளேன். 

இந்நிலையை அடைய எனக்கு உதவி செய்த தங்களுக்கும் தங்கள் வாசகர்களுக்கும் என்  மனமார்ந்த நன்றி.

இப்படிக்கு
அ.அங்குராஜ்

நான்காண்டுகளுக்கு முன்பாக அங்குராஜை அவரது பள்ளி ஆசிரியை திருமதி.ரமாராணி மூலமாக அறிந்தோம். மாணவனுக்கு அம்மா இல்லை என்றும், சித்தி வீட்டில் வளர்வதாகவும் சொன்னார். சித்தி கூலித் தொழிலாளி. அங்குராஜ் கிராமத்துப் பள்ளிக்கூடத்தில், தமிழ் வழியில் படித்த மாணவன். கல்லூரியின் விடுதிக் கட்டணம் உட்பட நிசப்தம் வழியாகவே முழுக் கல்வி உதவியையும் பெற்று வந்தவர் ஆரம்பத்தில் ‘ஐ.எஸ்.ஆர்.ஓவில் சேர்வதுதான் இலட்சியம்’ என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

‘முதல்ல ஏதாவது ஒரு வேலையை வாங்கிடு....அதன் பிறகு இலக்கு என்னவோ அதை நோக்கி போய்க்கலாம்...ஒருவேளை ஐ.எஸ்.ஆர்.ஓவில் சேர முடியலைன்னா சிக்கல் ஆகிடும்’ என்று சொல்லியிருந்தேன். கடந்த ஒரு வருடமாகவே வளாக நேர்காணல்களுக்குத் தயார் செய்து வந்தான். அவ்வப்பொழுது அழைத்துப் பேசுவதுண்டு. முதலில் சில நிறுவனங்களில் வேலை கிடைக்கவில்லை. அது இயல்பானதுதானே. அவன் சற்று வருத்தமுற்றது போல பேசினாலும் தளர்வடைந்திருந்ததாகத் தெரியவில்லை. அங்குராஜ் தளர்வடையக் கூடியவனில்லை.

நேற்றிரவு அவன் அழைத்திருந்த போது அழைப்பை எடுக்க இயலவில்லை. இனிப்புச் செய்தியை சொல்வதற்குத்தான் அழைத்திருக்க வேண்டும். இன்று காலையில் இம்மின்னஞ்சலைத் திறந்தேன். மின்னஞ்சலைப் பார்த்துவிட்டு அழைத்துப் பேசினேன். வருடத்திற்கு ஆறரை லட்ச ரூபாய் சம்பளம். நேற்றே வேலைக்கான கடிதத்தையும் கொடுத்துவிட்டார்கள். எளிய கிராமத்து மாணவனுக்கு இதைவிட வேறென்ன சந்தோஷம் கிடைத்துவிடும்?

சூப்பர் 16- ன் முதல் அணி மாணவன் அங்குராஜ். துடிப்பானவன். இத்தகைய மாணவர்கள் பெரும்பாலும் சுயம்புகள். லேசாகக் கோடு காட்டினால் போதும். அவர்களே பிடித்துக் கொள்வார்கள். ‘மெருகேற்றியுள்ளீர்கள்’ என்பது கூட பொருத்தமானதில்லை. அவனது உழைப்பையும், திறமையும் தனிப்பட்ட முறையில் அறிந்திருக்கிறேன். கல்லூரியின் விடுமுறை நாட்களில் திருமண நிகழ்ச்சிகளில் உணவு பரிமாறச் செல்வான். சொற்ப சம்பளம்தான். உணவு பரிமாறிவிட்டு அங்கேயே கூட்டத்தோடு கூட்டமாக இரவில் படுத்துக் கொள்வான். ‘நான் என்ன படிக்கிறேன் தெரியுமா? என் கல்லூரி என்ன தெரியுமா?’ என்று அத்தனை ஈகோவையும் அடித்து நொறுக்கிவிடக் கூடிய வேலை அது. அங்குராஜ் இந்த வேலைக்குச் செல்வது தெரிந்தாலும் கூட ‘படிப்பு கெடாமல் பார்த்துக்க’ என்று மட்டும் சொல்வேன். 

உழைக்கும் மாணவர்களைத் தடுக்க வேண்டியதில்லை. எவ்வளவு கடினமான வேலைகளை வேண்டுமானாலும் அவர்கள் செய்யலாம். அவர்களது உழைப்பு எதிர்காலத்தில் பெரும் மகிழ்வை அவர்களுக்கே கொடுக்கும். வெற்றி பெற்ற எந்த மனிதனுமே கடந்த காலத்தில் மிகப்பெரிய சிரமங்களைத் தாங்கியவர்களாகவே இருப்பார்கள். There is nothing like easy win. வாழ்வின் உயரங்களைத் தொட்டுவிட்டுத் திரும்பிப் பார்க்கும் போது தாம் கடந்து வந்த பாதை குறித்து ஒவ்வொரு மனிதனுக்கும் பெருமிதம் இருக்க வேண்டும். ‘அதையெல்லாம் தாண்டித்தான் இதை அடைந்திருக்கிறேன்’ என்று நினைத்து அசைபோடும் போதுதான் அவனது ஒவ்வொரு வெற்றிக்கும் அர்த்தம் உண்டாகும். அவர்கள் கடந்து வந்த சிரமங்களும், உழைப்புமே அடுத்த தலைமுறைக்கான உந்துசக்தி கொண்ட கதைகளாக மிஞ்சும்.

சி.ஐ.டி கல்லூரிக்கும், மின்னணுவியல் துறைக்கும், ஒவ்வொரு பேராசிரியர்களுக்கும், ரமாராணி உட்பட அங்குராஜின் ஆசிரியர்கள் அனைவருக்குமே இந்த வெற்றியில் மிகப்பெரிய பங்கிருக்கிறது. 

நிசப்தம் ஒரு தூண்டுகோல். ஒவ்வொரு விதத்திலும் நிசப்தம் வழியான செயல்பாடுகளுக்கு ஆதரவாக நிற்கும் அனைத்து வாசக நண்பர்களுக்கும் அங்குராஜின் வெற்றி சந்தோஷத்தைக் கொடுக்கக் கூடும்.

எத்தனையோ மாணவர்கள் காசோலையை வாங்கிய பிறகு திரும்ப அழைத்தது கூட இல்லை. உள்ளபடியே எனக்கு அதில் நிறைய வருத்தமுண்டு. ஆனால் என்ன செய்ய முடியும்? தொடர்பில் இருக்கும் ஒவ்வொரு மாணவரும் தமது வெற்றியின் ஒவ்வொருபடியாக ஏறும் போது அதற்கு ஏதாவதொரு வகையில் உதவியாக இருக்க முடிகிறது என்பதுதான் நமக்கான திருப்தி. அங்குராஜிடம் ‘நீ வந்துடு’ என்று சொன்னால் எதற்கு என்று கூட கேட்காமல் பையை எடுத்துத் தோளில் போட்டுக் கொண்டு பேருந்து பிடித்து வந்துவிடுவான். பல நிகழ்ச்சிகளுக்கு அவனை அப்படித்தான் அழைத்திருக்கிறேன். நம் மீது முழுமையாக நம்பிக்கை கொண்ட ஒரு மாணவன் புன்னகைக்கும் போது நம்மையுமறியாமல் மனம் நெகிழ்ந்துவிடுகிறது.

‘சூப்பர் 16’ அடுத்த அணிக்கு, முதல் அணி மாணவர்கள் ராஜேந்திரன் (ஐஐடியில் முனைவர் பட்ட ஆராய்ச்சியாளர்) மற்றும் அங்குராஜ் இணைந்து வகுப்பை நடத்தப் போகிறார்கள். எவ்வளவு பெரிய சந்தோஷம் இது? கண்களைப் பனிக்கச் செய்யும் நிறைவை உணர்கிறேன். ராஜேந்திரனிடமும் அங்குராஜிடமும் 'எதைப் பத்தியும் பயப்படாதீங்க..நாங்கதான் உதாரணம்’ என்று மாணவர்களுக்கு உணர்த்தும்படியாகத் தயாரிப்புகளைச் செய்யச் சொல்லியிருக்கிறேன். அங்குராஜூம் ராஜேந்திரனும் ஒரு படி மேலே ஏறிவிட்டார்கள். தமக்கு கீழாக இருக்கும் இன்னும் எத்தனையோ மாணவர்களைக் கை தூக்கிவிடும் சங்கிலித் தொடரில் ஒரு கண்ணியின் சந்தோஷத்தை நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கிறீர்கள்.

Aug 5, 2019

வேலைக்கு பாதிப்பா?

தன்னை வேலையிலிருந்து வீட்டுக்கு அனுப்பிவிட்டதாக ஒருவர் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். இத்தகைய மின்னஞ்சல்களை எதிர்கொள்ளும் போது திக்கென்றிருக்கும். பதினேழு வருட அனுபவம் கொண்டவர் அவர். குழந்தைகள் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறார்கள். வீட்டில் ஒற்றைச் சம்பளம். வீட்டுக்கடன் இருக்கிறது. பெரிய அளவில் வேறு சேமிப்புகள் இல்லை. ‘ஏதாவது உதவ முடியுமா’ என்று கேட்டிருந்தார். யாராவது நண்பர்களிடம் விசாரித்துப் பார்க்கலாம் என்று விடுமுறை தினத்தில் சிலரை அழைத்து முயற்சித்துக் கொண்டிருந்தேன். 

பேசிய நண்பர்களிடமெல்லாம் மின்னஞ்சல் அனுப்பியவருக்கான வேலை குறித்துக் கேட்டுவிட்டு அடுத்த கேள்வியாக ‘இப்போதைக்கு வேலைச் சந்தையில் ஏதேனும் பிரச்சினை வருமா?’ என்றுதான் கேட்டேன். விசாரித்த நண்பர்களில் ஒருவர் அதே நிறுவனத்தில் வைஸ் பிரஸிடெண்ட் ஆகிவிட்டார். அவர் உட்பட பலருக்கும் வேலைச் சந்தை குறித்தான குழப்பம் இருக்கிறது. 

சமீபமாக இந்தியப் பொருளாதாரம் குறித்து நல்ல செய்தி எதுவுமில்லை. என் பொருளாதார சிற்றறிவுக்கு எட்டிய வரையில் சமீபத்தில் பயமூட்டக் கூடிய செய்திகள்- 

1. 2016 ஆம் ஆண்டில் உலக அளவில் ஆறாவது பெரிய பொருளாதாரமாக (based on GDP ranking) இருந்த இந்தியப் பொருளாதாரம் இப்பொழுது ஏழாவது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது.

2. எட்டு முக்கியத்துறைகளில் (Core Industry)ஜூன் மாத வளர்ச்சி 0.2 சதவீதம் குறைந்திருக்கிறது. (கடந்த ஐம்பதாண்டுகளில் முதன் முறை இது). 

2. சேவைத் துறை கடந்த பதின்மூன்று மாதங்களில் முதன்முறையாக சுருங்கியிருக்கிறது. சந்தையில் தேவை (Demand)என்பது வெகுவாகக் குறைகிறது.

3. ஆட்டோமொபைல் துறை மிகக் கடுமையான பாதிப்பைச் சந்தித்திருக்கிறது. மாருதி உட்பட பல நிறுவனங்கள் அடி வாங்கியிருக்கின்றன. 

4. 2019 ஜூன் மாதத்தில் கடந்த ஆண்டை ஒப்பிடும் போது ஏற்றுமதி 10% அளவுக்கு குறைந்திருக்கிறது.

5. பங்குச் சந்தைகளில் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்களை முதலீட்டாளர்கள் திரும்ப எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

6. எல்&டி தலைவர் ஏ.எம்.நாயக் ‘சூழல் மிகச் சவாலாக இருக்கிறது’ எனச் சொல்லியிருக்கிறார். ஹெச்.டி.எஃப்.சி தலைவர் தீபக்  ‘பொருளாதார மந்தநிலை தெளிவாகத் தெரிகிறது’ என்கிறார். ஆனால் அவர் இதனை தற்காலிகமான மந்தம் என்றுதான் நம்புகிறார். இவையெல்லாம் உதாரணங்கள் மட்டுமே. இன்னமும் பல கார்போரேட் பெருமுதலாளிகளும் இந்தப் பல்லவியை சமீப காலமாக பாடத் தொடங்கியிருக்கிறார்கள். 

7. முதல் காலாண்டில் வரி வசூல் 1.4% மட்டுமே உயர்ந்திருக்கிறது. நிதியமைச்சர் தனது பட்ஜெட்டில் 18% அளவிற்கு இந்த ஆண்டு வரி வசூல் இருக்கும் என்று கணக்குப் போட்டிருக்கிறார். 

8. சுயமாகத் தொழில் செய்யும் எந்த நண்பரும் ‘பரவாயில்லை’ என்று சொல்வதில்லை. யாரைக் கேட்டாலும் ‘ரொம்ப சிரமம்’ என்றுதான் புலம்புகிறார்கள்.

மொத்தத்தில் தேசத்தின் பொருளாதாரச் சூழல் குறித்தான நல்ல செய்திகளைவிடவும் கெட்ட செய்திகளே அதிகமாகக் கண்ணில்படுகின்றன. எல்லாமே ஏதோவொரு வகையில் நம்மை பீதியூட்டக் கூடியவையாகவும் இருக்கின்றன. ஒரு நாட்டின் பொருளாதாரம் சுணங்கினால் கடைசியில் அகப்பட்டுக் கொள்வது சாமானியனாகத்தான் இருப்பான். பொதுவாக, பொருளாதாரம் ஒரு சுழற்சியாகத்தான் இருக்கும்.  குறிப்பிட்ட அளவுக்கு வளர்ந்து பின்னர் ஒரு தாழ்ச்சி வரும்- மீண்டும் உயரும். (Cycle) இந்தியப் பொருளாதாரமும் அப்படியான சுழற்சியினால்தான் சற்று மந்தநிலையை அடைந்திருக்கிறது என்றால் தப்பிவிடலாம். ஆனால் பலரும் இது அமைப்பு ரீதியிலான மந்த நிலை என்கிறார்கள். (Structural). சில அடிப்படையான சிக்கல்களினால், முதலீட்டாளர்கள் தயங்குவதனால் போன்ற பல காரணிகளால்தான் மந்தநிலை உருவாகியிருக்கிறதே தவிர சுழற்சியினால் இல்லை என்கிறார்கள். இத்தகைய எதிர்மறையான அனுமானங்கள்தான் அன்றாடங்காய்ச்சிகளை பயமூட்டுகின்றன.

யாரையும் பயமூட்டுவதற்காகவோ, இந்தியப் பொருளாதாரத்தைப் பற்றி தவறான எண்ணத்தை விதைக்கவோ இதை எழுதவில்லை. பொதுவாக இத்தகைய விவகாரங்களைத் தொடும் போது அனானிமஸாக சில பின்னூட்டங்கள் வரும். ‘இந்த நாட்டின் பொருளாதாரம் எப்படி வலுவாக இருக்கிறது தெரியுமா?’ என்று நாம் நினைப்பதற்கு முற்றும் மாறாக பத்திரம் வாசிப்பார்கள். அப்படியிருந்தால் மிக மிகச் சந்தோஷம். அதைத்தானே ஒவ்வொருவரும் எதிர்பார்ப்பதும் கூட. ஆனால் பொருளாதாரம் சார்ந்த எதிர் மறையான எண்ணம் ஏன் பரவலாகியிருக்கிறது என்பதை கவனித்துத்தானே ஆக வேண்டும்? ஒருவேளை செய்திகளில் வருவது உண்மையாக இருந்தால் தலைக்கு மேல் வெள்ளம் வரும் போது மாதச் சம்பளத்துக்காரர்களுக்கு எட்டிப் பிடிக்கக் கூட எதுவும் சிக்காது.

இந்திய அளவிலான இந்தப் பிரச்சினைகள் தகவல் தொழில்நுட்பத் துறையை நேரடியாக அல்லது பெரிய அளவில் உடனடியாக பாதிக்க வாய்ப்புகள் குறைவு ஏனெனில் பெரும்பாலான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் வெளிநாட்டு நிறுவனங்களை நம்பித்தான் இருக்கின்றன. வெளிநாட்டு நிறுவனங்கள் வழங்கும் வேலையில் வருமானத்தில்தான் இந்திய பணியாளர்களுக்கு ரொட்டித் துண்டை வழங்கிவருகின்றன. அதனால் இப்போதைக்கு பெரிய பாதிப்பு இருக்காது என்றுதான் சொல்கிறார்கள். ஆனால் இந்தியத் தொழில்துறையில் பணியாற்றுகிறவர்கள், இந்திய நிறுவனங்களை, இந்தியச் சந்தைகளை மட்டுமே நம்பியிருக்கும் நிறுவன ஊழியர்கள்- ஆட்டோமொபைல் துறை, உற்பத்தித் துறை உள்ளிட்டவற்றில் பணியாற்றுகிறவர்கள் போன்றவர்கள் சற்று தயார் நிலையிலேயே இருப்பதுதான் நல்லது என்கிறார்கள். வயிற்றில் புளியைக் கரைப்பது மாதிரிதான் என்றாலும் கூட கண்ணுக்கு முன்பாக ஒரு சுனாமி எழுந்து கொண்டிருக்கிறது என்றுதான் அந்த வைஸ் ப்ரெசிடெண்ட் சொன்னார்.

வழக்கமாக பொருளாதாரம் தளரும் போது அரசாங்கம் பெரும் தொகையைக் கொட்டி (Stimulus Package) மீண்டும் வேகமெடுக்கச் செய்வார்கள் என்பதுதான் வரலாறு. கட்டமைப்புகளை மேம்படுத்த ஆயிரக்கணக்கான கோடிகளைக் கொட்டி வேலை வாய்ப்புகளைப் பெருக்கி, பொருளாதாரச் சக்கரத்தைச் சுழற்றிவிடுவார்கள். ஆனால் இந்தியாவில் போர்தான் வரும் போலிருக்கிறது. அப்படி ஏதாவது அக்கப்போர் நிகழ்ந்து பணத்தையெல்லாம் போரில் முடக்கினால் சோலி சுத்தம் என்றுதான் சொல்கிறார்கள். அப்படி எதுவும் வராமல் தலைப்பாகையோடு போக மோடியும், நிர்மலா சீதாராமனும், அமித்ஷாவும், ராஜ்நாத் சிங்கும்தான் அருள் பாலிக்க வேண்டும். 

ஜெய் ஸ்ரீராம்! ஜெய் ஆஞ்சநேயா!