Jul 31, 2019

ஆச்சரியம் காத்திருக்கிறது

எல்லாவற்றையும் சந்தேகப்படுகிறோம். தவறில்லை. எந்தப் பிரச்சினையிலும் ஒன்றரை நாட்களுக்கு ‘வெர்ச்சுவல் போராளி’ மோடில் இருக்க விரும்புகிறோம். அதுவும் தவறில்லை. பிரச்சினை என்னவென்றால் நல்லது என்று தாம் நினைக்கும் எதையுமே யாருமே வெளிப்படையாகச் சொல்ல முடிவதில்லை.  அப்படி எதைச் சொன்னாலும் கத்தி அரிவாள் வேல் கம்போடு நான்கு பேராவது சண்டைக்கு வந்துவிடுகிறார்கள்.

சமீபத்தில் சத்தியமங்கலம் வனப்பகுதி கிராமங்களில் டிப்தீரியா என்றொரு நோய் வெகு தீவிரமாக பரவிக் கொண்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகின. பவானிசாகர் முன்னாள் எம்.எல்.ஏ சுந்தரம் ஃபேஸ்புக்கில் இது குறித்து எழுதினார். கடம்பூரில் ஒரு மாணவன் இறந்து போய்விட கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டமும் அறிவிக்கப்பட்டது. டிப்தீரியா என்ற நோயை இப்பொழுதுதான் கேள்விப்படுகிறேன். நீங்கள் இதற்கு முன் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? தொண்டை அடைப்பான் என்று தமிழில் பெயர். எப்பொழுதோ ஒழிக்கப்பட்டுவிட்டதாக நம்பப்பட்ட இந்த நோய் மீண்டும் பரவத் தொடங்கியிருக்கிறது.


அரசு மருத்துவர்களை எப்பொழுதுமே திட்டித்தான் வழக்கம். சவீதா என்ற மருத்துவரின் தலைமையிலான குழு ஆற்றில் இறங்கி வனத்துக்குள் புகுந்து அங்கேயிருக்கும் கிராமங்களுக்குத் தடுப்பூசி போட்டுவரச் சென்ற நிழற்படங்களை சில நண்பர்கள் பகிர, ‘நமக்குத் தெரிஞ்ச டாக்டராச்சே’ என்று பாராட்டி ஃபேஸ்புக்கில் எழுத அது ஆயிரக்கணக்கில் பரவத் தொடங்கியது. அப்பொழுது திடீரென சிலர் குதித்து ‘அடேய்...அரை மண்டையா...இதுவே தடுப்பூசியை விற்க கிளப்பிவிட்ட நோய்தான்’ என்று பேச ஆரம்பித்துவிட்டார்கள். அதற்கு பக்கம் பக்கமாகக் கதை வேறு எழுதுகிறார்கள். இப்படித்தான் ஊரில் பலரையும் நம்ப வைத்து தடுப்பூசி என்பதே மனித குலத்துக்கு எதிரானது என்று ஒரு பேச ஒரு கூட்டம் உருவாகியிருக்கிறது. இப்படியெல்லாம் பிரச்சாரங்கள் நடைபெற்று அதை நம்பவும் சிலர் இருக்கும் போது முற்றாக மறைந்து போனதாக நம்பப்பட்ட ஒரு நோய் மீண்டும் வராமல் என்ன செய்யும்? சரி தடுப்பூசி வேண்டாம் என்றால் செத்துப் போகிறவர்களுக்கு என்ன பதில்?

தம் கடமையை சிறப்பாகச் செய்தவரைப் பாராட்டுகிற இடத்தில் தடுப்பூசியே அபாயம் என்று சண்டைக்கு வந்தால் என்ன செய்ய முடியும்? இவர்களிடம் சண்டை போட்டுக் கொண்டிருக்க வேண்டியதில்லை. என்ன சொன்னாலும் திரும்ப அடிக்க வருவார்கள். இந்த உலகில் ஒவ்வொரு விவகாரத்துக்கும் எங்கேயாவது யாரேனும் சிலராவது நெட்டுக்குத்தலாகத்தான் நிற்பார்கள். யாரிடமும் யாரும் எந்தக் கருத்தையும் சொல்லிவிடலாம் என்கிற காலகட்டத்தில் இருக்கிறோம். அப்படித்தான் சொல்வார்கள். விறைப்புக்கு விறைப்பு என்று எதிர்த்து நின்றால் நமக்குத்தான் எல்லாமும் சலித்துப் போய்விடும். நம்மால் பொறுத்துக் கொள்ளவே முடியாத பிரச்சினைகளில் மட்டும் எதிர்க்குரல் எழுப்பினால் போதும்; மன உளைச்சலை உண்டாக்கும் செய்திகளுக்காக மட்டும் போராட எத்தனித்தால் போதும். மற்ற பஞ்சாயத்துகளில் நழுவி, விலகிவிடுவதுதான் புத்திசாலித்தனம் எனத் தோன்றுகிறது.

கோவை புத்தகக் கண்காட்சியில் ஜீவ கரிகாலனிடம், ‘நம்மை எந்தவிதத்திலும் போராளி மோடுக்கு மாற்றிவிடாத புத்தகங்களாக எடுத்துக் கொடுங்கள்’ என்று கேட்டேன். ஆசுவாசமாக, அனுபவித்து படிப்பதற்கான எழுத்துகள் வெகுவாக அருகி வருவதாகவே உணர்கிறேன். ஒன்று நரம்பு புடைக்க வெறி எடுக்க வைக்கும் எழுத்துகள் அல்லது அறிவுரையாகக் கொட்டுகிறார்கள் அல்லது படிக்கிறவனுக்கு அறிவை வளர்த்துவிடுகிறோம் என்று டவுன்லோட் செய்யப்பட்ட எழுத்துகள் அப்படியும் இல்லையென்றால் நெஞ்சு நக்கி வகையறா. அப்புறம் ஊர் ஊருக்கு புத்தகக் கண்காட்சி நடத்தி ‘புத்தகமே விற்பதில்லை’ என்று மூக்கால் அழுதால் எப்படி விற்கும்? 

வெகு சில எழுத்தாளர்கள் எப்பொழுதுமே தனித்துவமான எழுத்தைக் கொடுப்பார்கள். என்னுடைய தனிப்பட்ட ரசனையில் க.சீ.சிவக்குமாரின் எழுத்துகள் அப்படிப்பட்டவை. இலக்கியம், புண்ணாக்கு, பருத்திக்கொட்டை, தவிடு என்ற சட்டகத்துக்குள் எல்லாம் அடக்காமல் எப்பொழுது சலிப்புதட்டினாலும் ஏதாவதொரு பக்கத்தை எடுத்துப் புரட்டலாம். மனுஷன் அநியாயமாக வாழ்வை தொலைத்துவிட்டார். எந்திரத்தனமான ஓட்டத்தில் அப்படியான எழுத்துகள்தான் அவசியமானவையாக இருக்கின்றன. எல்லோருக்குமே இப்படித்தான் எழுத்து இருக்க வேண்டும் என்று நாட்டாமைத்தனமாகச் சொல்லவில்லை. எனக்கு அப்படியான எழுத்துகள் அவசியம். எழுத்து, சுவாசிப்பதற்கான இடைவெளியை உருவாக்கிக் கொடுத்தால் போதும் என நினைக்கிறேன்.


வா.மு.கோமுவின் ‘ஆச்சரியம் காத்திருக்கிறது’ (Link) என்ற தொகுப்பு சிக்கியது. இருபது கதைகள். அனைத்துமே காதல் கதைகள். பல சஞ்சிகைகளில் வெளியான கதைகளைத் தொகுத்து நூலாக்கியிருக்கிறார்கள். கோமுவின் எழுத்துகளில் இருக்கும் துள்ளல் இந்தத் தொகுப்பிலும் உண்டு. ரயில் பயணத்தின் போது செல்போனை சட்டைப்பைக்குள் பத்திரமாக வைத்துக் கொண்டு வாசித்தேன். ஒரு கதை வாசிக்க இருபது நிமிடங்கள். பத்து நிமிடங்களில் வாசித்துவிட்டு அடுத்த பத்து நிமிடங்கள் அசை போடுவதற்கு.  பெரும்பாலும் ஈரோடு, திருப்பூர் மாவட்ட ஊர்கள்தான் கதைக்களம். 

காதலைப் புனிதப்படுத்தாமல், ‘அப்படியெல்லாம் ஒன்றுமில்லை; இதுதான் எதார்த்தம்’ என்று நினைக்க வைத்துவிடுகிற எழுத்துகள் கோமுவினுடையது. 

ஒரே மூச்சில் அனைத்து கதைகளையும் வாசிக்கும் போது சில கதைகள் ‘டெம்ப்ளேட்டாக’ இருக்கின்றனவோ என்று பிசிறு தட்டுகிறது. பல கதைகளிலும் ‘திருப்புக் காட்சி’ என்று சொல்லியே ப்ளாஷ்பேக்கைச் சொல்கிறார். இதுவொரு உதாரணம். அதைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் ஜாலியான கதைகள். ஏமாற்றிவிட்டுப் போகிற காதலர்கள், காதலைச் சொல்லாமல் பரிதவித்துக் கொண்டிருக்கும் போது எதிராளியாகவே முன்வந்து காதலைச் சொல்லும் தருணங்கள், காதலைவிடவும் வாழ்க்கை முக்கியம் என உதறப்படுகிற காதல்கள், ஒருத்தன் காதலில் தோற்றிருந்தால் அவன் ஒன்றும் மோசமானவனில்லை என்று காதலிக்கத் தொடங்கும் காதலர்கள் என எல்லாமே புதுப்புதுக் கலவைகள். 

பனியன் கம்பெனி ஊழியர்கள், பஞ்சர் கடை நடத்துகிறவன் மாதிரியான எளிய மனிதர்களின் காதல்களை இவ்வளவு இயல்பாகச் சொல்வதற்கு கோமுவினால்தான் முடியும். எதைப் பற்றியும் அலட்டிக் கொள்ளாமல் நீரோட்டம் மாதிரி ஓடுகிற எழுத்தில்தான் சாத்தியமும் கூட.

தம்மைத் தவிர யாருமே யோக்கியமில்லை, தம்மைத் தவிர யாருமே அறம் சார்ந்தவர்கள் இல்லை, இந்த உலகத்தில் தாம் ஒருவனைத் தவிர மற்ற எல்லோரும் இவ்வுலகத்தை அழிக்கவே செயல்படுகிறார்கள், ஒவ்வொருவரும் விளம்பரப்பிரியர்கள்...எப்படியெல்லாம் நினைத்துக் கொள்கிறோம். மூச்சுத் திணறுகிறது. இந்தத் திணறலிலிருந்து வெளிவர வா.மு.கோமு மாதிரியானவர்களின் எழுத்துகளைத்தான் தேட வேண்டியிருக்கிறது. 

உண்மையில் புத்தக விமர்சனமாக எழுத வேண்டும் என ஆரம்பிக்கவில்லை. தடுப்பூசி பஞ்சாயத்தில் ஆரம்பித்து புத்தகத்துக்கு வந்துவிட்டது. 

அது சரி; எதைப் பற்றி பேசினால் என்ன! எதையாவது பேசினால் சரி. 

6 எதிர் சப்தங்கள்:

Karur King said...

"தனிப்பட்ட ரசனையில் க.சீ.சிவக்குமாரின் எழுத்துகள் அப்படிப்பட்டவை. இலக்கியம், புண்ணாக்கு, பருத்திக்கொட்டை, தவிடு என்ற சட்டகத்துக்குள் எல்லாம் அடக்காமல் எப்பொழுது சலிப்புதட்டினாலும் ஏதாவதொரு பக்கத்தை எடுத்துப் புரட்டலாம். மனுஷன் அநியாயமாக வாழ்வை தொலைத்துவிட்டார். "
Yes I have all his books and it refresh you any time as like him.

Anonymous said...

Will order Aachariyam Kathirukkirathu. Thanks for the URL.

பேராசிரியர். கோபாலகிருஷ்ணன் said...

"டிப்தீரியா என்ற நோயை இப்பொழுதுதான் கேள்விப்படுகிறேன்"
இது வரை கேள்விப்படவில்லை என்பது ஆச்சரியமாக உள்ளது.,அதுவும் மணி..வாழ்க வளமுடன்

சேக்காளி said...

//இந்த உலகில் ஒவ்வொரு விவகாரத்துக்கும் எங்கேயாவது யாரேனும் சிலராவது நெட்டுக்குத்தலாகத்தான் நிற்பார்கள்//
குலைக்கிற நாய்க் களுக்கெல்லாம் பதில் சொல்லிட்டு இருந்தா குறிக்கோளை அடைய முடியாதாம்.
இன்னைக்கு பேஸ்புக் ல கண்ணுல பட்டது இது.

Samkev said...

Print edition இல்லாமல் ebook formatஅல்ல எங்கே வாங்குவது?

Anonymous said...

Communist only for agitation not for any solution.