Jul 19, 2019

நாக்கு அன்னி தெலுசு

ஹைதராபாத் விஜய் எலெக்ட்ரிக்கல்ஸ் நிறுவனத்தில் அத்தனை பேரும் கழுமுண்டராயன்ஸ். அதுவும் கொல்ட்டி கழூஸ். திரும்பிய பக்கமெல்லாம் கராமுரவென்றிருப்பார்கள். நான்காண்டுகளுக்கு வேறு நிறுவனத்திற்குச் செல்லக் கூடாது ஒப்பந்தம் வேறு போட்டிருந்தார்கள். வெறும் ஆண்கள் மட்டுமே நிறைந்த ஒரு பாலைவனத்தில் எப்படி நான்காண்டுகள் வேலை செய்ய முடியும்? பத்து, பனிரெண்டாம் வகுப்பு சான்றிதழ்கள் எல்லாம்  போனாலும் பரவாயில்லை என்று சொல்லாமல் கொள்ளாமல் ஒரு நாள் ஓடிப்போனேன். ஓடுகிற நாய்க்கு ஒன்பதாமிடத்தில் சனி என்பார்கள். அதற்கு என்ன அர்த்தம் என்று பாலாஜிஹாசனைத்தான் கேட்க வேண்டும். எனக்கு ஒன்பதாமிடத்தில் சுக்கிரன். சியர்ரா அட்லாண்டிக்கில் வேலை கிடைத்தது. பட்டாஞ்சேருவில் இரும்புப் பட்டறைக்குள் காய்ந்து கிடந்தவனுக்கு ஏசி அலுவலகத்தில் வேலை. சுற்றிலும் பெண்கள். அப்பொழுது நான் தகுதி வாய்ந்த பேச்சிலராக வேறு இருந்தேன்.

சுந்தர தேசத்தின் ஒரு நல்ல பொழுதில் இரண்டு பெண்கள் எங்கள் அணியில் சேர்ந்தார்கள். இரண்டு பேருமே தெலுங்குப் பெண்கள். கல்லூரி முடித்த பச்சை மண். அந்த இருவரில் ஒருத்தி கன அழகு. அவளுக்கு நான்தான் பயிற்சியாளர். ‘சொக்கா சொக்கா’ கணக்குதான். இரவில் தூக்கமே வராது. கண்டபடி கற்பனை செய்ய வேண்டாம். எப்பொழுதுதான் விடியுமோ என்றிருக்கும். அதனால் தூக்கம் வராது. விடிந்தும் விடியாமலும் பக்கத்து வீட்டில் போய் நின்றுவிடுவேன். அங்கேதான் மேலாளர் இருந்தார். அவர் தனது ஸ்கூட்டரில் என்னை அலுவலகத்துக்கு அழைத்துச் செல்வார். அவரே சுறுசுறுப்பின் சிகரம். நான் சிகரத்துக்கு மேலொரு சிறு குன்றாக இருந்தேன். ஏழரை மணிக்கு கதவைத் தட்டி ‘போலாமா சார்?’ என்பேன். வெகு சீக்கிரத்தில் நல்ல பெயர் கிடைத்துவிட்டது.

‘மணி சாலா சின்சியருகா உண்ணாடு’ என்று காதுபடவே அவர் பேசுவார். நான் ஏன் அப்படி இருக்கிறேன் என்று எனக்கு மட்டும்தானே தெரியும். தேவதை ஒன்பதரை மணிக்கு மேல்தான் வருவாள். அவள் வந்தவுடன் ஏதாவதொரு வேலையை ஒதுக்கி  அந்தியில் அவள் செய்து முடிக்கும்வரைக்கும் கவனித்துக் கொள்ள வேண்டும். இன்னொரு பெண் சேர்ந்திருந்தாள் அல்லவா? அவளுக்கு பயிற்சியாளனாக ஒரு கொடூரன் இருந்தான். அவன் கொடுக்கிற வேலையும் பயங்கரமாக இருக்கும் அவள் முடிப்பதற்கு முன்பாகவே தாளித்து எடுத்து, மேலாளரிடமும் போட்டுக் கொடுத்துவிடுவான்.

மேலாளரும் அவளைத் தாளிப்பார். முதல் சில மாதங்கள் நொந்து நூலாகிக் கொண்டிருந்தாள் அவள். ஆனால் நான் இவளை அப்படியெல்லாம் வாதித்ததேயில்லை. கொடுக்கும் வேலையே மிக எளிதாக இருக்கும். அதற்கே பல முறை சந்தேகம் கேட்பாள். தலைக்கு மேல் வேலை கிடந்தாலும் அவளுக்குச் சொல்லிவிட்டுத்தான் என் வேலையைப் பார்ப்பேன். 

பல முறை ‘நீங்க ரொம்ப ஹெல்ப்ஃபுல்’ என்பாள். 

அதுமட்டுமா? ‘யூ ஆர் சச் எ நைஸ் சோல்’ எச்செட்ரா..எச்செட்ரா. 

‘அய்யோ அது என் நேச்சுர்ங்க’என்று நாக்கு குழையும்.  

ஒரு கட்டத்தில் அவள் என்னை ஏய்க்கத் தொடங்கிவிட்டாள். அது எனக்கு புரியவில்லை அல்லது புரிந்து கொள்ள மனம் விரும்பவில்லை. மாலை நான்கு மணிக்கு வந்து ஏதாவதொரு காரணம் சொல்வாள். மேலாளரிடம் சொன்னால் அனுமதிக்கமாட்டார். என்னிடம்தான் சொல்வாள். ‘சரி நான் பார்த்துக்கிறேன் கிளம்பு’ என்று அனுப்பி வைத்துவிடுவேன். மேலாளரும் எதையும் கண்டுகொள்ளவில்லை. அவருக்கு வேலை முடிந்தால் போதும். நான்கு மணி என்பது சுருங்கி சுருங்கி மதிய உணவு இடைவேளையின் போதே கூட பல நாட்களில் கிளம்பத் தொடங்கினாள். அப்புறம்தான் மேலாளர் பிடித்துக் கொண்டார். 

எங்கள் இருவரையும் தனியறைக்கு அழைத்து ‘நாக்கு அன்னி தெலுசு’ என்று அவர் சொன்ன போது ஏதோ எசகுபிசகாக இணைத்துவிட்டாரோ என்று பயந்தேன். பயம் என்ன பயம்- இணைத்திருந்தால் எனக்கு வேலை எளிதாகியிருக்கும். அப்படி பீடிகையெல்லாம் போட்டவர் ‘மணி எவ்வளவு கடின உழைப்பாளி..அவன்கிட்ட கத்துக்காம என்ன செஞ்சுட்டு இருக்க’ என்று அவளைக் கடுமையாக எச்சரித்தார். அன்றைய தினம் அவளுக்கு அழுகை பொத்துக் கொண்டு வந்துவிட்டது. அவள் அழ, நான் மருக, அவள் மருக, நான் உருக என்று ஒரே செண்டிமெண்ட்தான். கடைசியில் வெளியே வந்து ‘அந்த ஆளு கிடக்கிறாரு..நீ கண்டுக்காத’ என்றேன். மறுபடி அதே எச்செட்ரா எச்செட்ரா பாராட்டுகள். மறுபடி ‘அய்யோ அது என் நேச்சர்ங்க’ குழைவுகள்.

அதன் பிறகுதான் ஒருநாள் அவளது குடும்பச் சூழலைச் சொன்னாள். அவளது அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லை என்றும் அம்மாதான் துணையாக இருப்பதாகவும் சொன்னாள். ஒரு பெண் நம்மிடம் அவளது பிரச்சினைகளைச் சொல்கிறாள் என்றால் நாம் அவளது மனதில் இடம் பிடித்துவிட்டோம் என்றுதானே அர்த்தம்?

‘அதேதானே?’

‘அதேதான்’

பைக்கில் போகும் மேலாளரிடம்,  ‘சார்....அவ பாவம் சார்’ என்றேன். இந்த இடத்தில் ‘ரம்பா சார்’ பார்த்திபனை நீங்கள் மனதில் கொண்டு வந்து கொள்ளலாம்.

‘ஏண்ட்டி ப்ராப்ளம்?’ என்றார்.

அவளது குடும்பப்பிரச்சினையைச் சொன்னேன்.

‘அவுனா?’

‘அவுனு சார்’

‘சர்ரே...நுவு சூஸ்க்கோ’ என்றார்.

அன்றிரவே அவளுக்கு ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பினேன். மேலாளரிடம் சொல்லிவிட்டதாகவும் இனிமேல் நேரத்திலேயே கிளம்பிச் செல்வதில் அவளுக்கு எந்தப் பிரச்சினையும் இருக்காது என்று அனுப்பினேன். அப்பொழுது அவள் அலுவலகத்தில் சேர்ந்த எட்டு மாதங்களுக்கு மேலாகியிருந்தது. அதுதான் முதல் எஸ்.எம்.எஸ். 80’ஸ் கிட்ஸ் பரிதாபங்களில் ஒன்று. இரவில் வெகு நேரம் கழித்து நன்றி ஒற்றைச் சொல் மட்டும் அனுப்பினாள். ஆன போதிலும் அந்த பதிலை நூறு முறையாவது திறந்து படித்துப் பார்த்திருப்பேன்.

கொடூரனிடம் சிக்கிய பெண் தப்பி மேலேறி வந்துவிட்டாள். அவன் வேலையை ஒதுக்குவான். அவள் அவன் பக்கமே செல்லமாட்டாள். முடித்து மின்னஞ்சல் அனுப்பிவிட்டுக் கிளம்பிவிடுவாள். அப்பொழுதும் அவன் அவளை ஏதாவது கறுவிக் கொண்டேதான் இருந்தான். ஆனால் நம் ஆள் அப்படியேதான் இருந்தாள். அதே போல வேலையை ஒதுக்குவேன். ஏழெட்டுத் தடவை சந்தேகம் கேட்பாள். சில நாட்கள் முடிப்பாள். பல நாட்கள் என் தலையில் கட்டிவிட்டுப் போய்விடுவாள்.

சரி எப்படியும் முட்டுச்சந்தில் சிக்கும் போது மனதைத் திறந்து காட்டிவிடலாம் என்றிருந்தேன். எல்லா வலிகளுக்கும் ஒரு ஒத்தடம் இருக்கத்தானே செய்யும்? அந்த நம்பிக்கையில் நாட்கள் ஓடிக் கொண்டிருந்தன.

ஒரு நாள் காலையில் வந்ததிலிருந்தே குட்டி போட்ட பூனையாக அலை மோதினாள். 

‘என்னாச்சு’ என்றேன்.  

‘அப்பாவுக்கு உடம்பு சரியில்லை’ என்றாள். 

‘கிளம்பு நான் சொல்லிக்கிறேன்’ என்றேன். 

மேலாளர் தேநீருக்குச் சென்றிருந்த தருணம் கிளம்பிச் சென்றுவிட்டாள். அவள் இல்லாமல் ஏதோ வெறுமை சூழ்ந்திருந்தது. அப்பொழுதெல்லாம் நிறைய உணவுக் கூப்பன் கையில் இருக்கும். ஒவ்வொரு மாதமும் இரண்டாயிரம் ரூபாய்க்காவது சேரும். நினைக்கும் போதெல்லாம் ஹைதராபாத் பிரியாணி உண்பேன். செகந்திராபாத் பாரடைஸ் பிரியாணிக்குச் செல்லலாம் என்று அன்றைய தினம் திட்டமிட்டிருந்தேன். அதன்படியே இரவு உணவுக்குத் தனியாகச் சென்று கொண்டிருந்த போது தனியார் பேருந்து நிலையத்தில் அவளைப் பார்த்துவிட்டேன். அவளும் பார்த்துவிட்டாள்.

முதலில் நழுவ முயற்சித்தவள் இனி வழியேதுமில்லை என்றவுடன் நின்றாள். முகம் அழுது வீங்கியிருந்தது. ஒருவேளை அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லையோ என்றுதான் சந்தேகப்பட்டேன். அதன் பிறகு எனக்கும் அவளுக்குமிடையிலான அந்த உரையாடலை அப்படியே வரிக்கு வரி எழுத முடியும். ஆனால் எழுதினால் அழுதுவிடுவேன் என்று சொன்னால் நீங்கள் சிரித்துவிடுவீர்கள். என் சோகம் உங்களுக்கு ஊறுகாயா? அதனால் விஷயத்தை மட்டும் சொல்லிவிடுகிறேன். 

அவளுடைய காதலன் அமெரிக்காவுக்கு எம்.எஸ் படிக்கச் செல்கிறான். இருவரும் கல்லூரியில் ஒரே வகுப்பில் படித்தவர்கள். சென்னை சென்று அங்கிருந்து விமானம் ஏறுகிறவனை வழியனுப்புவதற்காக வந்திருக்கிறாள். பிரிவுத்துயரத்தில் அழுது வீங்கிக் கிடக்கிறாள். அவள் சொல்லச் சொல்ல நெஞ்சம் சுக்கு நூறாகிவிட்டது என்று தனியாகச் சொல்ல வேண்டுமா? ‘கிளம்பறதுக்கு முன்னாடி முத்தம் கொடுத்திருப்பான்ல’ என்றெல்லாம் கணக்குப் போட்டு பார்த்துக் கொண்டேன்.

நடந்தே அறைக்குத் திரும்பினேன். பிரியாணியாவது ஒன்றாவது? பிரியாணி போனது கூட பரவாயில்லை. அவள் தினசரி அவனுடன் ஊர் சுற்றுவதற்காகத்தான் நான் ஒவ்வொரு நாளும் மண்டை காய்ந்திருக்கிறேன். 

குத்தீட்டியை வைத்து குத்தியிருக்கலாம். கிராதகி. 

இவளையெல்லாம் பழிவாங்குமளவுக்கு எனக்கு திறமை போதாது. அடுத்த நாள் மேலாளரிடம் ‘அவ சரியில்ல சார்...நீங்க கொடூரன்கிட்ட சொல்லிடுங்க..இனிமேல் அவன் பார்த்துக்கட்டும்’ என்றேன். அவர் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் அப்படியே செய்தார். அதன் பிறகு இரவு ஒன்பது மணி ஆனாலும் அவள் கிளம்பாமல் வேலை செய்தாள். அவனிடம் சென்றவுடன் இப்படி மாறிவிட்டாளே என்று எனக்குத்தான் மண்டை காய்ந்தது. வெகுநாள் கழித்துதான் ரகசியத்தைக் கண்டறிந்தேன். அலுவலகத்திலிருந்து அமெரிக்காவுக்கு இலவசமாக தொலைபேசியில் அழைக்கலாம். அதனால் எங்கள் அனைவருக்கும் முன்பாகவே அலுவலகம் வந்துவிடுவாள். எல்லோரும் போன பிறகும் அலுவலகத்திலேயே தவம் கிடப்பாள். அமெரிக்கக் காதலனுக்கு அலுவலகத்திலிருந்து தொலை பேசி அழைப்புகள். ஓஹோன்னான்! அதையும் போட்டுக் கொடுத்த பிறகுதான் நிம்மதி வந்தது. அந்தக் கதையை இன்னொரு நாள் சொல்கிறேன். 

8 எதிர் சப்தங்கள்:

Mahesh said...

ஹாஹாஹா பதிவு பாகுந்தி.

Anonymous said...

Do you mind if I quote a couple of your posts as long as I provide credit and sources back to your blog?
My website is in the very same niche as yours and my users would genuinely benefit from a lot
of the information you provide here. Please let me know if
this okay with you. Thank you!

ஓஜஸ் said...

‘கிளம்பறதுக்கு முன்னாடி முத்தம் கொடுத்திருப்பான்ல’ ஹாஹாஹா சிரிச்சு மலாலா

சேக்காளி said...

//பல முறை ‘நீங்க ரொம்ப ஹெல்ப்ஃபுல்’ என்பாள்//
இந்த "ஹெல்ப்ஃபுல்" ங்கறதே அவுக அகராதி ல "லூசு" ன்னு தான் அர்த்தமாம்.

Rajesh said...

இன்னொரு நாள் என்ன, இன்னிக்கே சொல்லுங்க அண்ணா pls. செம்ம டுவிஸ்ட் கொடுத்துட்டீங்க 😂😂

Selvaraj said...

'அதையும் போட்டுக் கொடுத்த பிறகுதான் நிம்மதி வந்தது' ஹா ஹா ஹா

Anonymous said...

//இந்த "ஹெல்ப்ஃபுல்" ங்கறதே அவுக அகராதி ல "லூசு" ன்னு தான் அர்த்தமாம்.//

புன்னகை மன்னன் (இ.வாயன்) இல்லையா?

Anonymous said...

Sema Sir!