Jul 15, 2019

ஊரோடிகள்

திருச்சிதான் என்று நினைத்தோம். ஆனால் மதிய உணவைத்தான் திருச்சியில் ஏற்பாடு செய்திருந்தார்கள். உணவை முடித்துக் கொண்டு அங்கேயிருந்து சென்றோம், சென்றோம்- சென்று கொண்டேயிருந்தோம். இயற்கை சார்ந்த செயல்பாடுக்கு என இப்படி நண்பர்களுடன் வெளியூருக்கெல்லாம் சென்றதில்லை. பெரும்பாலும் தனியாகச் செல்வேன். பேருந்தில் அல்லது தொடரூர்தியில் சென்றுவிடுவேன். இந்த முறை ஆனந்த், அரசு தாமஸ் மற்றும் நான் உட்பட மூன்று பேர் கிளம்பினோம். விக்னேஸ்வரன் கரூரில் வந்து இணைந்து கொள்வதாகச் சொன்னார். மொத்தம் நான்கு பேர்கள். அதனால் கார் எடுத்துக் கொண்டோம். நான் தான் உருட்டினேன். எப்பொழுதுமே எண்பதுக்கு மேல் வண்டியை ஓட்ட மாட்டேன். இவர்கள் எங்கே அதைப் புரிந்து கொள்கிறார்கள்? ஓட்டுவதற்கு ஒருவன் கிடைத்தால் உருட்டுவதை வைத்துக் கூட ஓட்டுகிற உலகம் இது.

திருச்சியிலிருந்து லால்குடி தாண்டி, அரியலூர் செல்லுகிற வழியில் ஒரு சிற்றூர். அந்த ஊரில்தான் அழைத்திருந்தார்கள். சமுதாயக் கூடம் ஒன்றில் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார்கள். சிறார்கள், இளைஞர்கள், பெண்கள், மூத்தவர்கள் என சற்றேறக்குறைய எழுபது பேர்கள் இருக்கக் கூடும். அவ்வளவு கூட்டம் சேர்வது என்பதே ஆச்சரியம்தான். எங்களுக்குப் பொன்னாடையெல்லாம் போர்த்தினார்கள். பேசுவதைக் கேட்டு அவ்வப்பொழுது கை கூடத் தட்டினார்கள். 


வேமாண்டம்பாளையம் குளத்தில் சீமைக்கருவேல மரங்களை அகற்றியது, கோட்டுப்புள்ளாம்பாளையத்தில் தூர் வாரியது குறித்தான அனுபவங்கள்- இத்தகைய காரியங்களைச் செய்யும் போது முக்கோண விதி முக்கியம். முதற்புள்ளி அரசாங்க ஒத்துழைப்பு, இரண்டாம்புள்ளி ஊர் பொதுமக்கள், மூன்றாம் புள்ளி காரியத்தை முன்னெடுத்துச் செய்யும் தன்னார்வக் குழு- இந்த மூன்றும் இணைந்துதான் வெற்றியைத் தர முடியும். ஒன்று சொதப்பினாலும் கூட சமாளித்துவிடலாம் என்பதெல்லாம் குருட்டுப்பூனை விட்டத்தில் பாய்ந்த கதைதான். எங்கே கால் தவறி விழுவோம் என்று தெரியாது. மூன்றிலுமே அனுபவப்பட்டிருக்கிறோம். அதைச் சொன்னேன்.

ஆனந்த் இதுவரையிலும் பதினைந்து வனங்களை உருவாக்கியிருக்கிறார். மண்ணை எப்படி வளப்படுத்துவது, செடிகளைத் தேர்ந்தெடுத்தல், அவை எங்கே கிடைக்கும், எப்படி நடுவது என தமது அனுபவங்களையெல்லாம் பவர்பாய்ண்ட்டாகத் தயாரித்து எடுத்து வந்திருந்தார். இருவரும் பேசுவதற்கு முன்பாக அறிமுகப்படுத்தி, பேசி முடித்த பிறகு தொகுத்து ஆசிரியர் அரசு தாமஸ் உதவினார். விக்னேஸ் களத்தில் பணியிருந்தால் வெறித்தனமாகச் செய்வார்- மேடையில் பேசுவதாக இருந்தால் பேசுகிறவர்களை வேடிக்கை பார்ப்பார். அதைச் செவ்வனே செய்தார். 

மருத்துவர் மட்டுமில்லாமல் அங்கேயிருக்கும் சில இளைஞர்களும் பெரியவர்களும் சேர்ந்து கிராம மேம்பாட்டை முன்னெடுக்கிறார்கள். டால்மியாபுரம் சிமெண்ட் ஆலையின் சுற்றுப்புறத்தில் இருக்கும் ஊர் அது. ஊரில் நிலத்தடி நீர் இருக்கிறது. ஆனால் வேளாண்மைக்கு ஏற்றதாக இல்லாமல் உவர்ப்பு ஏறியிருக்கிறது. எந்தப் பயிர் வைத்தாலும் விளைச்சல் இல்லாத பூமியாகிவிட்டது என்றார்கள்.வானம் பார்த்த பூமி. சிற்றூரில் ஏற்கனவே சில நூறு செடிகளை நட்டு வளர்க்கிறார்கள். இனி அடுத்தடுத்த சில காரியங்களை மேற்கொள்ளவிருக்கிறார்கள். அதற்காக அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளச் சொல்லி அழைத்திருந்தார்கள். 

சென்று வந்து இரண்டு நாள் ஆகிவிட்டது. இன்று காலையில் அம்மா ‘திருச்சிக்கு ஆபிஸ் வேலையா போகலயா?’ என்றார். அலுவல்ரீதியில் சென்று வந்தேன் என நம்பியிருக்கிறார் போலிருக்கிறது. ‘திருச்சிக்குப் பக்கத்துல ஒரு கிராமத்துல இருந்து கூப்பிட்டு இருந்தாங்க’ என்றேன். ‘அதுக்கு எதுக்கு வண்டி எடுத்து, பெட்ரோல் போட்டு, செலவு செஞ்சுட்டு போன?’என்கிறார். எதிர்பார்த்த கேள்விதான். ஆனால் என்ன பதில் சொன்னாலும் குறுக்குக் கேள்வி வரும் என்பதால் அதற்கு மேல் எதுவும் சொல்லவில்லை. 

எங்களை அழைத்திருந்த மருத்துவரின் வாகனத்துக்கு ஓர் ஓட்டுநர் இருந்தார். அவரது வேகத்துக்கு நம்மால் ஓட்ட முடியுமா? அநேகமாக அவர் முன்பக்கமாக வரும் வண்டிகளைப் பார்த்ததை விட பின்பக்கக் கண்ணாடியில் ‘இவன் வர்றானா? இல்லையா?’ என்றுதான் அதிகம் பார்த்திருக்க வேண்டும் என நினைக்கிறேன். ‘அவன் வண்டிக்கு முன்னால் என்னை வண்டி ஓட்டச் சொல்லுறதா இருந்தா என்னையை வேலையை விட்டுத் தூக்கிடுங்க டாக்டர்’ என்று சொல்லியிருக்கக் கூடும். வண்டியை விட்டு இறங்கியவுடன் மருத்துவர் நாசூக்காக ‘போகும் போது வேணும்ன்னா இங்க இருந்து ஒரு ட்ரைவரை கூட்டிக்கலாம்’ என்று சொன்னபோதே புரிந்து கொண்டேன். 

காலையிலேயே உரையாடலை நடத்துவதாகத் தான் திட்டமிட்டிருந்தோம். ஆனால் மதியம் மூன்று மணிக்கு மேல்தான் காட்டு வேலைக்குச் செல்கிறவர்கள் வருவார்கள் என்று சொல்லிவிட்டார்கள். உரையாடலைத் தொடங்கவே மாலை நான்கு மணி ஆகிவிட்டது. பேசி முடித்து, சந்தேகங்களை விவாதித்து திரும்ப திருச்சி வந்து சேர்ந்தோம். அங்கு மருத்துவரிடம் பேசிவிட்டுக் கிளம்ப கிளம்ப ஆறரை மணி ஆகிவிட்டது. கிளம்பும் போதே உடல்நிலை சரியில்லாமல் போவதற்கான தென்பட்டன. ஆனாலும் விடாக்கண்டனாய் வண்டியை உருட்டிக் கொண்டேயிருந்தேன். வீடு வந்து சேர இரவு பதினோரு மணி ஆகியிருந்தது.

எவ்வளவு அலைச்சல் இருந்தாலும் பரவாயில்லை- அங்கே ஒரு குழு பணிகளை வேகமெடுத்துச் செயலாற்றத் தயாராகிவிட்டது என்பதை நேரடியாகப் பார்ப்பதுதான் ஆகப்பெரிய சந்தோஷம் எங்களுக்கு. அதைத்தான் திரும்ப வரும் போது அரசு தாமஸ் சொன்னார். ‘இங்க ஒரு நல்ல டீம் அமைஞ்சிருக்கு’ என்றார். அவரது கணிப்பு தவறுவதில்லை. 

சொல்ல மறந்துவிட்டேன். உரையாடல் முடிந்து திருச்சி வந்த பிறகு மருத்துவர்- திருச்சியில் முக்கியப் பிரமுகர் அவர்- பெயரைக் குறிப்பிடுவதை விரும்புவாரா எனத் தெரியவில்லை. காசோலையில் ஒரு லட்ச ரூபாய் என தொகையை நிரப்பித் தந்தார். காசோலையில் பெயர் எதுவும் எழுதவில்லை. க்ராஸ் செய்யவில்லை. வெறும் தொகையை மட்டும் நிரப்பியிருந்தார்.

‘நிசப்தம் அறக்கட்டளை’ என்று எழுதி இனிமேல்தான் வங்கியில் செலுத்த வேண்டும். இந்த நம்பிக்கை மட்டுமே நம்மை தொடர்ந்து இயங்கச் செய்யும். அம்மாவின் கேள்விக்கும் கூட இதுதான் பதில் என நினைக்கிறேன்.

Jul 12, 2019

அசைவுறுதல்

அவ்வப்பொழுது யாராவது சிலர் அழைத்து ‘குளம் தூர்வாருகிறோம்’ என்றும் ‘அடர்வனம் அமைப்பது பற்றிய தகவல்கள் வேண்டும்’ என்றும் கேட்பது வழக்கம். அலைபேசியில் எவ்வளவு சொல்ல முடியும்? முடிந்தவரை சொல்லிவிடுகிறேன். இத்தகைய செயல்பாடுகளில் நேரடியாகச் சென்று பார்த்துவருவதுதான் உண்மையிலேயே பலனளிக்கும். தனியொரு மனிதனால் செய்ய முடியாத காரியங்கள் இவை. ஆகவே தமக்கு முன்பாகச் செய்தவர்கள் எப்படி ஆட்களைத் திரட்டினார்கள், என்னவெல்லாம் சிக்கல்களை எதிர்கொண்டார்கள் என்பதையும், அவர்களின் அனுபவங்களையும் நேரடியாகக் களத்திலேயே சென்று பார்த்துவிட வேண்டும். பார்ப்பதோடு அல்லாமல் சூட்டோடு சூடாக காரியத்தைத் தொடங்கியும் விட வேண்டும். இந்த இரண்டில் எது தாமதமானாலும் அதன் பிறகு நாம் எல்லாவற்றையும் முதலிலிருந்தே தொடங்க வேண்டியிருக்கும்.

பத்தியின் முதலில் சொன்ன கேள்விகளை என்னிடம் கேட்டவர்கள்- மிகைப்படுத்திச் சொல்லவில்லை- குறைந்தது நூறு பேராவது கேட்டிருப்பார்கள். ஆனால் அதன் பிறகு அவர்களில் எத்தனை பேர்கள் குளத்தைத் தூர் வாரினார்கள் என்பதும் அடர்வனம் அமைத்தார்கள் என்பதும் தெரியாது. உண்மையிலேயே வருத்தம்தான். குற்றம் சுமத்துவதாகக் கருத வேண்டாம். தமிழகத்தில் மிகு ஆர்வம் கொண்டவர்கள்தான் நிறைய இருப்பதாகத் தோன்றுகிறது. செய்து முடிப்பதைவிடவும்  செய்வது குறித்தான தகவல்களை அறிந்து கொள்வதில் ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள்; இருக்கிறார்கள். 

மென்பொருள் துறையில் இருப்பவர்கள், பெருநகரங்களில் பணியாற்றுகிறவர்களுக்கெல்லாம் தமது உள்ளூர் குறித்து ஆசை இருக்கும். அங்கு எதையாவது செய்துவிட வேண்டும் என்று ஆர்வமிருக்கும். ஆனால் அதெல்லாம் அவ்வளவு எளிய காரியமில்லை. உள்ளூரில்தான் துரும்பைக் கூட அசைக்க முடியாது. டெல்லியிலும் சென்னையிலும் கூட காரியம் சாதித்துவிடலாம் ஆனால் கரட்டடிபாளையத்தில் என்னால் பத்து மரங்களை நட்டு வளர்த்துவிட முடியும் என்கிற நம்பிக்கையில்லை. எல்லாவற்றையும் வெளிப்படையாக எழுத வேண்டியதில்லை. அதுதான் நிதர்சனம். இத்தகைய ஆர்வமிக்கவர்கள் அலைபேசியில் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசத் தயாராக இருக்கிறார்கள். ஒரு நண்பர் தமது ஊரில் காடு அமைக்க விரும்புவதாக நாற்பது நிமிடங்கள் பேசினார். மண்ணை வளப்படுத்துவது தொடங்கி, என்ன செடிகளைத் தேர்ந்தெடுப்பது, வேலி அமைப்பது, நீர் வசதி என சகலமும் பேசி முடித்த போது தொண்டைத் தண்ணீர் வற்றிவிட்டது. ஆனால் அதன் பிறகு சத்தமேயில்லை. 

ஏன் செய்ய முடியாமல் போகிறது என்பதும் ஆரம்பத்திலேயே நமக்குத் தெரிந்துவிடும். ‘இதை சரி செய்யுங்க’ என்று சொல்லியிருந்தாலும் கூட அவர்களால் முடிந்திருக்காது. இப்படி பத்துப் பேர் நம்மை ராவி விட்டால் பதினோராவது ஆள் உண்மையிலேயே களமிறங்கத் தயாரானவர் என்றால் நாம் காட்டுகிற சலிப்பு அவரைச் சோர்வடையைச் செய்துவிடும் என்கிற பயம் வராமல் இல்லை. வேறு சிலர் இருக்கிறார்கள். வாட்ஸாப், ஃபேஸ்புக் என்று தூள் கிளப்புவார்கள். இயற்கையைக் காப்போம் என்று அவர்கள் கதறுவதைப் பார்த்தால் அடுத்தவர்களுக்கு நாடி நரம்பெல்லாம் முறுக்கேறும். ஆனால் வீட்டை விட்டு வெளியில் வரமாட்டார்கள். விடுமுறை நாள், மாலை நேரமாகத்தான் இருக்கும்- ‘வாங்க ஒரு சின்ன வேலை இருக்கு’ என்று அழைத்தால் வருவதாகச் சொல்லிவிட்டு டிமிக்கி கொடுத்துவிடுவார்கள். பல பேர் இப்படியிருக்கிறார்கள்.

இயற்கை சார்ந்த காரியங்களில் முதலில் நம் இருக்கையை விட்டு எழ வேண்டும். உடல் சற்றேனும் அசைவுற வேண்டும். எதுவும் நம்மிடம் வந்து சேராது; நாம்தான் அவற்றை நோக்கி நகர வேண்டும். அதற்குத் தயாரில்லை என்றால் துரும்பைக் கூட அசைக்க முடியாது. சத்தியம் அடித்து வேண்டுமானாலும் இதைச் சொல்லலாம்.

கடந்த மாதம் சொல்லி வைத்தாற் போல இரண்டு வெவ்வேறு நண்பர்கள் அழைத்தார்கள். இப்படித்தான் எதையோ கேட்டார்கள். பொறுமையாகச் சொல்லிவிட்டு ‘திருச்சி போறோம்...நான் குளம் தூர் வாரியதைப் பற்றிப் பேசறேன்; ஆனந்த் காடு வளர்ப்பதைப் பத்தி பேசறாரு...வர முடியுமா?’ என்று கேட்டேன். இத்தனைக்கும் திருச்சியைச் சுற்றி இருக்கும் ஊர்களைச் சார்ந்தவர்கள்தான். அதன் பிறகு சத்தமே இல்லை. குறைந்தபட்சம் ‘வர முடியவில்லை’ என்றாவது சொல்வதுதானே சரி? அதைக் கூடச் செய்வதில்லை. இதுதான் ஆச்சரியமாக இருக்கிறது- வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு முப்பத்தைந்து நிமிடங்களாவது பேசியிருப்பேன். அவர்களின் நேர விரயத்துக்கு நம்மை ஊறுகாய் ஆக்கிக் கொள்கிறார்களோ என்று ஆயாசமாகிவிடுகிறது.

சரி போகட்டும்.

நாளை மதியம் திருச்சி- லால்குடி பக்கத்தில் ஒரு கிராமம். பெரிய கூட்டமெல்லாம் இல்லை. பதினைந்து அல்லது இருபது பேர்கள் இருந்தால் போதும் என்றுதான் சொல்லியிருக்கிறோம். மருத்துவர் ஒருவர் அழைத்தார். இதுவரைக்கும் மேலே குறிப்பிட்டது போல அலைபேசியில் அழைத்துக் கேட்கிறவர்கள்தான் அதிகம். முதன்முறையாக ‘எங்கள் ஊர்க்காரர்களிடம் பேசுங்க’ என்கிறார். ஒத்துக் கொண்ட பிறகு அவரது ஊரிலிருந்து இன்னொரு நண்பர் பேசினார். இருவரும்தான் ஒருங்கிணைக்கிறார்கள். சில முன் தயாரிப்புகளோடு நானும் ஆனந்தும் கிளம்புகிறோம். ஆசிரியர் அரசு தாமஸூம் உடன் வருகிறார். மதியம் 2 மணிக்கு ஆரம்பித்து 5 மணி வரைக்கும் பேசிவிட்டு ஊர் திரும்ப வேண்டும்.

ஒருவேளை கலந்து கொள்ளலாம் என நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள். 

Jul 10, 2019

சேர்க்கை - குழப்பங்கள்

வரும் கல்வியாண்டியில் பொறியியல் கல்லூரியில் சேரும் மாணவர்கள் அல்லது அவர்களது பெற்றோர்கள் யாரிடமாவது பேசிப் பார்த்தீர்களா? தாறுமாறாகக் குழம்பியிருக்கிறார்கள். சேர்க்கைக்கான வழிமுறைகளைத் தேடிப்படித்தால் மண்டை காய்கிறது. கடந்த இருபது வருடங்களாக ஒற்றைச் சாளர முறை மிகச் சிறப்பாகவே இருந்தது. நம் கண் முன்னால் இருக்கும் திரையில் கல்லூரியும் அங்கே இருக்கும் இடங்களின் எண்ணிக்கையும் தெரியும். சாமியைக் கும்பிட்டபடியே சென்றால் - நாம் விரும்பிய கல்லூரியில் - பாடத்தை நமக்கு முன்னால் சென்றவன் கொத்திச் செல்லாதிருந்தால் நாம் எடுத்துக் கொள்ளலாம் ஒருவேளை அந்த இடம் தீர்ந்துவிட்டால்  அதற்கடுத்த கல்லூரி-பாடப்பிரிவில் ஒன்றை எடுத்துக் கொள்ளலாம். இதுதான் நடைமுறை. எந்தக் குழப்பமுமில்லை. நம்மைவிட ஒரு ரேங்க் முன்னால் வாங்கியவனுக்குத்தான் முன்னுரிமை. அவன் எடுத்தது போக மீதமிருக்கும் இடம்தான் நமக்கு. அதே போல நாம் எடுத்துக் கொண்டது போக மீதமிருக்கும் இடம்தான் நமக்குப் பின்னால் வருகிறவனுக்கு.

இப்படித் தெளிவாக இருந்த பொறியியல் சேர்க்கை- ஒற்றைச் சாளர முறையை ஏன் நாய் வாயில் சிக்கிய பழைய துணி மாதிரி கிழித்து கந்தரகோலமாக்கியிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. வெகுவாகக் குழம்பி கடைசியாக நான் புரிந்து கொண்ட சேர்க்கை முறை இப்படித்தான் - ஒரு நாள் ஒதுக்கித் தருவார்கள். அன்றைய தினம் நமக்குப் பிடித்த கல்லூரி-பாடப்பிரிவை அவர்கள் குறிப்பிட்டிருக்கும் ஓர் இணையதளத்தில் உள்ளீடு செய்ய வேண்டுமாம். எவ்வளவு இடங்களை வேண்டுமானாலும் உள்ளீடு செய்யலாம். உதாரணமாக அண்ணா பல்கலை- கணினி அறிவியல், பிஎஸ்ஜி - மின்னியல், குமரகுரு- எந்திரவியல் என்று வரிசைக்கிரமமாக உள்ளீடு செய்து வைத்தால் நம்முடைய மதிப்பெண்ணுக்கு எது கிடைக்குமோ அதை ஒதுக்கித் தருவார்கள். 

எனக்குத் தெரிந்து இதில் சுத்தமாக வெளிப்படைத்தன்மை இல்லை.

ஒரு மாணவனுக்கு அவனுடைய கட்-ஆஃப் மதிப்பெண்ணுக்கு எந்தப் பாடம், எந்தப் பிரிவு கிடைக்கும் என்று எப்படித் தெரியும்? இணையத்தளங்களில் அதிகாரப்பூர்வமாக எந்த விவரத்தையும் கண்டறிய முடியவில்லை. கிராமப்புற மாணவன் குத்துமதிப்பாக பத்து அல்லது பதினைந்து கல்லூரிகளையும் பாடங்களையும் உள்ளீடு செய்து வைப்பான்.  பண்ணாரி அம்மன் கல்லூரியில் மெக்கானிக்கல் என்று உள்ளீடு செய்கிற அவன் பி.எஸ்.ஜி கல்லூரி தனக்குக் கிடைக்காது என்கிற நம்பிக்கையில் அவன் விட்டிருக்கக் கூடும்.  ஆனால் அவனுடைய மதிப்பெண்ணுக்கு அவனுக்கு பி.எஸ்.ஜி கல்லூரியில் கிடைக்கும் வாய்ப்பிருந்து அதை அவன் தவறவிட்டால் அவனுக்கு நடக்கும் அநியாயம்தானே இது? இது கூடப் பரவாயில்லை. அவனுடைய அறியாமை என்று விட்டுவிடலாம்.

அமைச்சர் அல்லது உயர் அதிகாரியின் மகன் ஒருவன் மிகக் குறைவான கட்-ஆஃப் பெற்றிருந்து அவனுக்கு நல்ல கல்லூரியில் இடம் ஒதுக்கப்படாது என்பதற்கு என்ன உத்தரவாதம்? பத்து வருடங்களுக்கு முன்பாக என்றால் அண்ணா பல்கலைக்கழகத்தை எந்தவிதத்திலும் சந்தேகப்பட்டிருக்க மாட்டேன். அதற்கான வாய்ப்புகளும் இல்லை. ஆனால் இன்றைய தேதிக்கு உயர் கல்வித்துறையில் ஊழல் மலிந்து கிடக்கும் புதர்க்காடு என்றால் அது அண்ணா பல்கலைக்கழகம்தான். யாராவது மறுக்க முடியுமா? எவ்வளவு ஊழல் குற்றச்சாட்டுக்கள். எப்படி நம்புவது? சரி பல்கலைக்கழகம் ஏமாற்றினாலும் அரசாங்கத்தை நம்பலாம் என்றுதான் விட முடியுமா? 

இப்பொழுதெல்லாம் எதற்கு பதற்றப்பட வேண்டும் எதற்கு பதற்றப்படக் கூடாது என்றே புரிவதில்லை. தமிழகத்துக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு கோரிய மசோதவை குடியரசுத் தலைவர் தள்ளுபடி செய்த விவகாரத்தை இருபத்தோரு மாதங்கள் மறைத்து வைத்துவிட்டு இப்பொழுது ‘நிறுத்தி வைப்பா? நிராகரிப்பா?’ என்று விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். இது கூடவா மாநில அரசுக்குத் தெரியாது. மசோதாக்களைப் பொறுத்தவரைக்கும் ஏற்றுக்கொள்ளுதல்/நிறுத்தி வைத்தல் என்று இரண்டே இரண்டு முடிவுகள்தானாம். நிறுத்தி வைத்து திருப்பி அனுப்புகிறோம் என்று அனுப்பினால் அரசு அதை ஆறு மாதத்துக்குள் மீண்டும் பரிசீலனைக்கு அனுப்பலாம். ஒன்பதாம் வகுப்பு குடிமையியல் பாடத்தில் படித்தது இன்னமும் நினைவில் இருக்கிறது. ஆகப்பெரிய சட்ட அமைச்சருக்கும் அவர்தம் சகாக்களுக்கும் இது தெரியாதா? எவ்வளவு பெரிய சதி இது? வெளிப்படையாக என்னவெல்லாமோ நடக்கிறது. பொறியியல் படிப்புக்கான சேர்க்கையை மட்டும் எப்படி நம்புவது? எவற்றில் என்ன அரசியலைச் செய்வார்களோ என்று பயப்படாமல் என்ன செய்வது?

சரி- யார் மீதும் சந்தேகப்படவில்லை என்றே இருக்கட்டும். ஆனால் ஏதோ மிகப்பெரிய புதிராக ஏன் பொறியியல் சேர்க்கையை மாற்றி வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. பத்தாம் வகுப்பு ஆசிரியர் ஒருவரின் மகள் பனிரெண்டாம் வகுப்பு முடித்திருக்கிறார். அவரிடம் பேசினால் அவருக்கு எந்த விவரமும் தெரியவில்லை. விசாரித்துக் கொண்டிருப்பதாகச் சொல்கிறார். அவரது வழிகாட்டலைக் கோரி அருகம்பாளையத்தில் நான்கைந்து பனிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் இருக்கிறார்கள். இப்படித்தானே பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் விழி பிதுங்கிக் கொண்டிருப்பார்கள்?

எங்கேயாவது தெளிவான வழிகாட்டுதல் இருக்கிறதா? விரிவான விளக்கங்கள் அல்லது சலனப்படங்கள் இருக்கின்றனவா? ஒருவேளை அப்படி ஏதேனுமிருப்பின் தெரியப்படுத்துங்கள். என்னுடைய அறியாமைக்கு மன்னிப்புக் கோரிக் கொள்கிறேன். ஆனால் அப்படி எதுவுமில்லையெனில் இது மிகப்பெரிய அநியாயம் என்பதை உறுதியாகச் சொல்ல முடியும். ‘நீங்க கலந்தாய்வுக்காக வர வேண்டியதில்லை; வீட்டிலிருந்தே கலந்தாய்வை முடித்துக் கொள்ளலாம்’ என்று சால்ஜாப்பு சொல்வார்கள். பொறியியல் சேர்க்கை என்பது ஒரு மாணவனின் எதிர்காலம். இந்தப் படிப்பை வைத்துதான் அவனது மீதமிருக்கும் வாழ்க்கையே அமையப் போகிறது. ஒரு நாளை ஒதுக்கி கலந்தாய்வுக்கு வர எந்த மாணவனும் சிரமப்படப் போவதில்லை. அது அவனுக்கு மிகப்பெரிய அனுபவமும் கூடத்தான். 

ஒருவேளை மேற்சொன்ன குளறுபடிகள் பொறியியல் சேர்க்கையில் இருப்பது உண்மையெனில் அது குறித்து குரலை உயர்த்த வேண்டியது காலத்தின் கட்டாயம்.

Jul 8, 2019

சமூக ஆர்வலர்

பொருளாதார ரீதியிலான இழப்புகளையோ அல்லது மிக மோசமான உடல்நல பாதிப்பையோ கூட ஒரு மனிதனால் ஏற்றுக் கொள்ள முடியும். அதனால் யாரும் அவனைக் குறை சொல்லப்போவதில்லை. ஆனால் ஒருவனது குணநலனைச் சிதைக்கும் போது தடுமாறிப் போகிறான். அவனை மோசமானவன் என்று சமூகம் சொற்களை வீசும் போது அவன் மட்டுமில்லாது அவனைச் சுற்றியிருப்பவர்கள் அத்தனை பேரும் சுணங்கிப் போய்விடுகிறார்கள். இப்பொழுதெல்லாம் Character assassination மிகச் சாதாரணமாக நடக்கிறது. அது உண்மையோ, பொய்யோ- மோசமான வசைகளும், வன்மம் தோய்ந்த வசவுகளும் மிகச் சாதாரணமாக விசிறியடிக்கப்படுகின்றன. சம்பந்தேமேயில்லாத ஆட்களையும் கூட ‘ஒருவேளை இப்படி நடந்திருக்க வாய்ப்பிருக்கிறதே’ என்று கருத வைத்துவிடுகிறார்கள்.

யாரையும் ஆதரிக்கவில்லை. யார் மீதும் நம்பிக்கையுமில்லை; அவநம்பிக்கையுமில்லை. மனப்பூர்வமாக யாரையும் நம்புகிற சூழலுமில்லை. இவ்வளவு தொழில்நுட்பங்களும், வாய்ப்புகளும் மிகுந்து கிடக்கும் இந்தச் சூழலில் யார் வேண்டுமானாலும் தடுமாறிவிடக் கூடும். ஏதாவதொரு தருணத்தில் பிசகும் போது அதுதான் எதிரிகளுக்கு வாய்ப்பாகிறது. ஒரு மிகச் சிறிய கரும்புள்ளியை பூதாகரமாக்கி ஒருவன் வாழ்நாள் முழுக்கவும் எதற்கெல்லாம் உழைத்தானோ, என்ன கேள்விகளை எழுப்பினானோ அவற்றையெல்லாம் ஒன்றுமில்லாமல் ஆக்கி வெறும் புள்ளியை மட்டுமே பிரம்மாண்டப்படுத்துகிற இச்சமூகம்தான் பயமூட்டுவதாக இருக்கிறது.

ஒரு பக்கத்தில் உயர்த்திப்பிடிக்கிறார்கள். இன்னொரு பக்கத்தில் அதைவிட வலுவோடும் வேகத்தோடும் உருக்குலைக்கிறார்கள். 

மாது, போதை, நிதி மோசடி என்று ஏதோவொரு குற்றச்சாட்டு போதும். அதை நிரூபிக்க வேண்டிய அவசியம் கூட இல்லை. ஒற்றைப் புகார் போதும். வரிந்து கட்டி வந்து காலி செய்துவிடுவார்கள். யார் மீதுதான் வன்மம் இல்லை? தோனிக்கு பிறந்தநாள் வந்தாலும் சரி; சச்சினுக்குப் பிறந்தநாள் வந்தாலும் சரி- ஒரு கூட்டம் சேற்றை வாரி வீசிக் கொண்டிருக்கிறது. யோசித்துப் பார்த்தால் சச்சினும், தோனியும் இவர்களுக்கு என்ன துரோகத்தைச் செய்திருக்க முடியும்? அரசியல் ரீதியாகவோ, சித்தாந்த ரீதியாகவோ கூட பகையாளியாக இருக்க முடியாது. பிறகு ஏன் இவ்வளவு வன்மம்? வெறும் முகத்தின் அடிப்படையிலேயே ஒருவன் மீது வன்மத்தைக் காட்ட முடியுமெனில் தம்முடைய அரசியல் அமைப்புக்கு எதிராகக் குரல் எழுப்புகிறவன், தமது சித்தாந்தங்களுக்குத் தடையாக இருப்பவன் மீது எவ்வளவு வன்மம் இருக்கும்? 

ஒருவனது சமூக அந்தஸ்தைக் காலி செய்வதற்கு பெரிய ஆயுதங்கள் எதுவும் தேவையில்லை. இந்தச் சமூகம் எதையெல்லாம் மிகப்பெரிய பிழை என்று கருதுகிறதோ அதைச் செய்கிறவனாக ஒருத்தனைக் குற்றம் சுமத்தி நிறுத்தும் போது அவன் மட்டுமில்லாமல் அவனது குடும்பமே சிதைந்து போய்விடும்.  கடந்த வாரத்தில் ஒரு நண்பரிடம் பேசிக் கொண்டிருந்த போது ‘பியூஷ் மானுஷ் ஒரு சில்லரை’ என்றார். அதிர்ச்சியாக இருந்தது. எதை வைத்துச் சொல்கிறீர்கள் என்று கேட்டால் ‘அதான் நியூஸ் வந்துச்சே’ என்கிறார். அவ்வளவுதான். எங்கேயோ, யாரோ ஒருவர் மீது ஒரு கை சாணத்தை எடுத்து வீசிவிட்டால் போதும். காலம் முழுக்கவும் அந்த மனிதர் அந்தக் கறையோடுதான் திரிய வேண்டும். அப்படித்தான் செய்கிறார்கள். நாளை ஒரு பொதுவான பிரச்சினைக்காக அந்த மனிதர் சாலைக்கு வரும் போது ‘அவனைப் பத்தித் தெரியாதா?’ என்று சொல்லிவிடுவார்கள்.

சமூகம், போராட்டம் என உதிரிகளாகத் திரிகிறவர்களுக்குத்தான் இவையெல்லாம் பெரிய பாதிப்புகளை உண்டாக்குகின்றன. அமைப்பு ரீதியாக வலுவாகிவிட்டவர்கள் அலட்டிக் கொள்ளவே வேண்டியதில்லை. குடும்மாகச் சென்று தமது தந்தை மீதே பாலியல்  குற்றச்சாட்டுக்களைச் சுமத்தினாலும் கூட குற்றம் சுமத்தப்பட்டவனுக்கு அரசியல் செல்வாக்கும் பின்புலமும் இருந்தால் அவையெல்லாம் வெறும் வதந்திகளாகவே முடிந்துவிடுகிறது. இன்னொரு பெண்ணுக்கு குழந்தையைக் கொடுத்தவனைக் கூட மீம்ஸ் போட்டு கலாய்ப்பதோடு விட்டுவிடுவார்கள் அவன் அதிகாரமிக்கவனாக இருந்தால். ஆனால் உதிரிகளுக்கு அப்படியில்லை. நாம் மரியாதை வைத்திருக்கும் செய்தித்தாளில் கூட அது முதல்பக்கச் செய்தியாக வந்துவிடுகிறது. அவன் இவன் என்று எழுதுகிறார்கள். எல்லாவற்றையும் அமைதியாகத் தாண்டிப் போய்விடுவதுதான் நமக்கு நல்லது என மனம் நம்புகிறது.

பொதுவெளியில் இயங்குகிறவன் எந்த தைரியத்தில் அதிகார வர்க்கத்தை நோக்கிக் கேள்விகளை எழுப்புவான்? அதற்கான ஊக்கம் எங்கேயிருந்து வரும்? எங்கள் வழியில் வராமல் அமைதியாக இருப்பதாக இருந்தால் நீ என்னவோ செய்துவிட்டுப் போ என்று விட்டுவிடுகிற அரசின் வலுவான கரங்கள் தம்மை ஏதாவதொருவிதத்தில் அவன் சீண்டுகிறான் எனத் தெரிந்தவுடன் நசுக்கித் தூர வீசிவிடுகின்றன. சமூகத்தில் தலை நிமிரவே முடியாத அளவுக்கு அவன் மீது பெரும் அவமானச் சுமையை இறக்கி வைத்துவிடுகிறது. 

சமூக ஆர்வலர் என்ற பெயருக்குப் பின்னாலான ஒட்டு அரசியல் பதாகைகளிலும், செய்திச் சேனல்களின் விவாதங்களிலும் இருக்கும் வரைக்கும் எந்தப் பிரச்சினையுமில்லை. அதுவே ஏரிக்கு குரல் எழுப்புகிறேன், மணலுக்குக் குரல் எழுப்புகிறேன், ஆற்று நீருக்குக் குரல் எழுப்புகிறேன் என்று சொல்லி சமூக ஆர்வலர் என்ற பின்னொட்டு வருமானால் அதை விட பேராபத்து ஒன்றுமில்லை. எந்தவிதத்திலாவது தனிமனித வாழ்வு அம்பலப்படுவதை எதிர்கொள்வதற்குத் தயாராகவே இருக்க வேண்டும். தவறு செய்தாலும் அம்பலமாகும்; தவறு செய்யாவிட்டாலும் அம்பலமாகும். 

ஒன்று மட்டும் உண்மை- தம் குடும்பத்தையும், வாழ்க்கையும் இழந்து தாங்கிப்பிடிக்கும் அளவுக்கு இந்தச் சமூகம் ஒன்றும் உன்னதமானதில்லை. மிக மோசமாக வாரிவிடக் கூடியதாகவும், எழவே முடியாமல் ஒருவனை அடித்து வீழ்த்தி சந்தோஷப்படுவதாகவும்தான் இச்சமூகம் இருக்கிறது. எதற்கென்றே புரியாத வன்மத்தையும் விஷத்தையும் தேக்கி வைத்துக் கொண்டு வாய் நிறையப் புன்னகைக்கிறவர்கள்தான் மிக அதிகம். தன்னைத் தவிர யோக்கியன் எவனுமில்லை என்று நம்பிக் கொண்டிருப்பவர்கள்தான் சுற்றிலும் மலிந்திருக்கிறார்கள். அத்தகையதொரு சமூகத்துக்காக வாழ்க்கையை ஏன் தொலைத்துக் கொள்கிறீர்கள் என்று கேட்கத் தோன்றுகிறது. ஆனால் ஒன்றிரண்டு பேராவது சமூகத்திற்கென பேசாவிட்டால் நாளை என்னவாகும் என்ற வினாவும் எழாமல் இல்லை.

Jul 5, 2019

பிரச்சார பீரங்கி

கொங்கு நாட்டுப்பக்கம் இளவட்டப் பையன்களிடம் சாதி வெறி கடுமையாக ஊட்டப்படுகிறது என்று ஓர் உறவுக்காரரிடம் பேசிக் கொண்டிருந்தேன். எப்பொழுதுமே அவரைப் பார்த்தால் கொஞ்சம் விலகிக் கொள்வதுதான் வழக்கம். ஏதேனும் நிகழ்வுகளில் தனியாகச் சிக்கினால் வடச்சட்டியில் போட்டு தாளித்து விடுவார். அவர் சாதி வெறியர். சாதிப் பற்று மதப்பற்றாக மாறி, மதப்பற்று கட்சிப் பற்றாகி இப்பொழுது எல்லாவற்றிலும் உஷ்ணமாக இருக்கிறார். ‘தமிழ்நாடு கெட்டுக் குட்டிச்சுவராகிக் கிடக்குது’ மாதிரியான புகைச்சலிலேயே வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறார். 

‘இதுக்கெல்லாம் டென்ஷன் ஆகிட்டு இருந்தீங்கன்னா உடம்பு கெட்டுடும் பார்த்துங்க’ என்று சொல்லிப் பார்த்துவிட்டேன். கேட்பதாக இல்லை. இதற்கு மேல் நாம் என்ன செய்ய முடியும்? 

சிக்கிக் கொள்ளாமல் தப்பிக்கும் வழியைப் பார்த்துக் கொள்ள வேண்டியதுதான். இந்த முறை வாகாகச் சிக்கிக் கொண்டேன். த்ரிஷாவோட அடுத்த படம் என்ன என்பது மாதிரிதான் பேச விரும்பினேன். ஆனால் கொதிக்கும் எரிமலையிடம் கோலி சோடா கேட்பது மாதிரி ஆகிவிட்டது. வளைத்து வளைத்து தனது கண்ணிக்குள் இழுத்து வந்துவிட்டார். பேச்ச்சுவாக்கில்தான் முதல் வரியின் சாராம்சத்தைச் சொன்னேன். இதற்கென்றே காத்திருந்தவர் போல ‘பின்ன? அப்படித்தாங்க இருக்கோணும்...எளக்காரம் கொடுத்துட்டே இருந்தா அவ்வளவுதான்..ஏறி முதுச்சுட்டு போய்ட்டு இருப்பானுக?’ என்றார். இதோடு நிறுத்திக் கொண்டால் பிரச்சினை இருக்காது. பிற சாதி ஆதிக்கங்களைப் புள்ளிவிவரங்களோடு சொல்வார். அவ்வளவு புள்ளிவிவரங்கள் நமக்குத் தெரியாது என்பதால் உடனடியாக பதில் சொல்லவும் முடியாது. வெகு நாட்களுக்கு இவையெல்லாம் உண்மையான புள்ளிவிவரங்களாக இருக்கும் என்றுதான் நம்பிக் கொண்டிருந்தேன். ஆனால் அப்படியெல்லாம் இல்லை- வாட்ஸாப் குழுமங்களில் சகட்டுமேனிக்கு அனுப்பி வைக்கிறார்கள். 

இப்பொழுதெல்லாம் நானும் வாய்க்கு வந்தபடி புள்ளிவிவரங்களை அளந்துவிட்டுவிடுவதுண்டு. சேர்க்கைக்குத் தகுந்த மாதிரிதானே நம் செய்கையும் இருக்கும்? அப்படி அளக்காவிட்டால் நம்மை முட்டாளாக்கிவிடுகிறார்கள். 

சமீபமான பத்து வருடங்களில்தான் இப்படி மாறிவிட்டார். 

ஒரு கணக்குப் போட்டுப் பார்த்தால் நம்மைச் சுற்றிலும் இருப்பவர்களில் எந்த விவரமும் தெரியாதவர்கள் என்று ஐந்து சதவீதம் பேர் இருப்பார்கள். நல்ல புரிதல்கள் கொண்டவர்களாக, தெளிவாக யோசிக்கக் கூடியவர்கள் என்று பத்து சதவீதம் பேர் இருப்பார்கள். மீதமிருக்கும் எண்பத்தைந்து சதவீதம் பேர் இந்தப் பக்கமுமில்லாமல் அந்தப் பக்கமுமில்லாமல் நடுவில் நிற்கும் ஆட்கள்தான். இவர்களிடம் உணர்ச்சியைத் தூண்டினால் எளிதில் மாற்றிவிடலாம். சமூக வலைத்தளங்கள் இப்படியான மனிதர்களைத்தான் தம் வசப்படுத்துகின்றன. மேம்போக்கான கருத்துகளை அள்ளி வீசி, புல்லரிக்கச் செய்து, தவறான புள்ளி விவரங்களைக் கொடுத்து, சூடேற்றி, வலை வீசி ஒரு வழியாக ‘பிரச்சார பீரங்கிகளாக’ சுற்ற விட்டுவிடுகின்றன. இந்த பீரங்கிகளோ கல்யாணம், இழவு வீடுகளில் சிக்குகிறவர்களையெல்லாம் நெட்டுக்குத்தலாகப் பிளக்கின்றன. 

கொங்கு நாடு என்றில்லை இப்பொழுதெல்லாம் பரவலாகவே சாதி வெறி மிக அழுத்தமாகத்தான் இருக்கிறது. ‘நம்ம சாதிக்காரனைக் கைதூக்கி விட வேண்டும்’ என்கிற மனநிலை அதிகாரத்தில் இருக்கும் பெரும்பாலானவர்களிடம் உண்டு. அரசு அதிகாரியாக இருந்தாலும்  சரி; அரசியல்வாதியாக இருந்தாலும் சரி- இதுதான் நிதர்சனம்.  அடுத்த தலைமுறையில் ‘சாதியைத் துறக்க வேண்டும் என்றெல்லாம் பேசிக் கொண்டிருந்தால் பைத்தியகாரனாக்கிவிடுவார்கள்’ என்கிற சூழல்தான் உருவாகிக் கொண்டிருக்கிறது. 

ஆரம்பத்தில் உரிமையைக் காக்கத் தொடங்கப்பட்டவை என அறைகூவிக் கொண்ட சாதிக்கட்சிகளும், அமைப்புகளும் சில காலத்தில் அதன் பலன்களை எப்படி அறுவடை செய்யலாம் என்பதிலேயே குறியாக இருக்கின்றன. அமைப்புகள் தளர்ந்து போய்விடாமல் இருக்க வேண்டுமானால் சாதி வெறி கொண்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டேயிருக்க வேண்டும். அதனால்தான் ‘சாதிப் பற்று முக்கியம்’ என்று பேசிக் கொண்டேயிருக்கின்றன. எந்த சாதிய மாநாட்டின் காணொளிகளை வேண்டுமானாலும் கேட்டுப் பார்க்கலாம்- நாற்பது சதவீதப் பேச்சுகள் பிற சாதிகளை எதிரியாக நிறுத்துவதையே நோக்கமாகக் கொண்டிருக்கும். முப்பது சதவீதம் பேச்சு வெறியேற்றுவதாக இருக்கும். அந்த வெறியோடு கிளம்பும் கூட்டம் சாதிப் பெயரைப் பின்னால் சேர்த்துக் கொண்டு ஃபேஸ்புக்கிலும் வாட்ஸாப்பிலும் வெறித்தனமாகக் களமாடுகிறார்கள். ஆண்கள் மட்டுமில்லை- பெண்களும் அப்படித்தான். 

முப்பதுகளைத் தாண்டிய பிரச்சார பீரங்கிகள் கூட கொஞ்சம் பரவாயில்லை. ஆனால் பதினேழு, பதினெட்டு வயதுப் பையன்கள் இருக்கிறார்களே! வெளியில் சாதுவாகத்தான் தெரிகிறார்கள். ஒருவேளை ‘இவன் கெடக்குறான் சொட்டைத் தலையன்’ என்று தவிர்த்துவிட்டு நகர்ந்துவிடுவதால் வெளிப்பார்வைக்கு அப்படித் தெரிகிறது என நினைக்கிறேன். ஆனால் அவர்கள் திருவிழாக்களில் செய்யும் சாதியக் கூத்துகள் பயமூட்டுகின்றன. மிக இயல்பாக சாதி வெறியோடு பேசுகிறார்கள். இருபதே வருடங்களில் சூழல் வெகுவாக மாறியிருக்கிறது. கிராமங்களில் மட்டும்தான் சாதிய உணர்வுகள் தலை தூக்கியிருக்கின்றன என்றெல்லாம் நினைத்தால் அது அறியாமைதான். 360 டிகியிலும் நீக்கமற நிறைந்திருக்கிறது.

இப்படியான சாதிய உசுப்பேற்றல்களின் விளைவுகளை யாரோ சிலர் அறுவடை செய்து கொள்ளப் போகிறார்கள்; அதற்காக நீங்கள் விலை கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள்; எதிர்காலத்தின் அமைதியை அடகு வைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று எப்படிப் புரிய வைப்பது? எவ்வளவுதான் மெனக்கெட்டாலும் நம்மை அமைதிப்படுத்துவதிலேயே குறியாக இருக்கிறார்கள். 

பிரச்சார பீரங்கியும் அதைத்தான் செய்தார்.

‘இவ்வளவு பேசறீங்களே! நீங்க ஏன் வேற சாதிப் புள்ளையைக் கட்டிக்காம சொந்தச் சாதியிலேயே திருமணம் செஞ்சுட்டீங்க’ இப்படிக் கேட்டால் என்ன பதிலைச் சொல்வது?

நானும்தான் எட்டாம் வகுப்பிலிருந்து காதல் முயற்சிகளைச் செய்தேன். மலையாளப் பெண் தொடங்கி, கிறித்துவப் பெண் வரைக்கும் விதவிதமான பெண்கள்தான். ஆனால் கடைசி வரைக்கும் ஒருத்தியும் திரும்பிக் கூட பார்க்கவில்லை. இதை எப்படி அப்பட்டமாக ஒத்துக் கொள்வது? வைத்துக் கொண்டா வஞ்சகம் செய்கிறேன்! அவ்வளவுதான் என்னால் முடிந்தது. 

நாம் என்னதான் பொங்கல் வைத்தாலும்  சாதிப்பற்று பிரச்சார பீரங்கிகள் கடைசியில் இப்படி நெஞ்சில் வேல் பாய்த்துவிட்டுச் சென்றுவிடுகிறார்கள். எந்த பதிலும் சொல்லாமல் சோகமாகி அமைதியாகிவிட்டேன். 

Jul 4, 2019

உணர்வுகள்

துக்க வீடுகளுக்குச் சென்று பழகும் வரைக்கும் மரணத்தின் வலிகள் அவ்வளவாகப் புரிவதில்லை. முப்பது வயது வரைக்கும் எந்த மரணத்தையும் அருகிலிருந்து பார்த்ததில்லை. மூன்றாம் வகுப்பு படிக்கும் போது தாத்தா இறந்து போனார். பள்ளி முடிந்து ஆட்டோவில் வந்து கொண்டிருந்த போது உறவுக்காரப் பெண்மணி ஒருவர் ஆட்டோவிலிருந்து தமது குழந்தையை இறக்கியபடியே ‘உங்க தாத்தா போய்டுச்சு போ’ என்றார். அந்த வயதில் ‘போய்டுச்சு’ என்ற சொல்லுக்குக் கூட பொருள் தெரியவில்லை. படுக்கையில் கிடந்த தாத்தாதான் எழுந்து ஊருக்குப் போய்விட்டார் போல என நினைத்துக் கொண்டு வந்து இறங்கி பள்ளிக்கூடப் பையை வைத்தால் ‘தாத்தனை வந்து பாரு’ என்று சொல்லி ஆயா அழுதது இன்னமும் நினைவில் இருக்கிறது. வெள்ளைத் துணி போர்த்திப் படுக்க வைத்திருந்த தாத்தாவின் உடலுக்கு அருகில் கூடச் செல்லவில்லை. அது தீபாவளிக்கான நீண்ட விடுமுறை. அடுத்த அரை மணி நேரத்தில் இரண்டு நாட்களுக்கான துணிகளை அடுக்கிப் பையில் வைத்து சித்தி ஊருக்கு அழைத்துச் சென்றுவிட்டார்கள். திரும்ப வரும் போது தாத்தாவுக்கு கடைசிக்காரியங்களைச் செய்த அப்பா மீசையை மழித்துக் கொண்டு அமர்ந்திருந்தார். 

அதன் பிறகு பல வருடங்கள் கழித்து ஆயா இறந்த போது ஹைதராபாத்தில் வேலையில் இருந்தேன். தகவல் வந்து கிளம்பி சென்னை வந்து சேர்ந்து அங்கிருந்து பேருந்தில் ஊருக்குப் போன போது விடிந்திருந்தது. முந்தின நாள் எரித்திருந்த இடத்துக்கு அழைத்துச் சென்றார்கள். ஆயா அணிந்திருந்த கண்ணாடியை மட்டும் கண்ணில்பட்டது. ‘வயசாகிடுச்சுல்ல...எலும்பு கூட எரிஞ்சு போச்சு’ என்றார்கள். அப்பிச்சி இறந்ததெல்லாம் நினைவிலேயே இல்லை. நெருங்கிய உறவுகளின் மரணத்தைக் கூட தள்ளியே நின்று பார்த்ததால் அதன் வலியும் விரீயமும் புரிந்ததேயில்லை.

இப்பொழுதெல்லாம் அப்படியில்லை. அப்பாவின் மறைவுக்குப் பிறகு நிறைய மாறிவிட்டது. 

அரை மணி நேரத்துக்கு முன்பு வரை நடமாடிக் கொண்டிருந்தவரை உடற்சூடு அணைவதற்குள் தூக்கி நடுவீட்டில் படுக்க வைப்பதற்காக தூக்கியிருக்கிறேன். ஏதோவொரு வீட்டில் இறந்து போனவருக்கு கால்கட்டு போடுவதற்காக இரண்டு கால்களையும் சேர்த்துப் பிடித்திருக்கிறேன். பிணங்களின் மீதான அசூயை இப்பொழுது சுத்தமாக இல்லை. பிணங்களை நெருங்குகிற தருணமெல்லாம் இழப்பின் வலிதான் நெஞ்சுக்குள் நிறைந்து கிடக்கும். எல்லாவற்றையும் அருகாமையில் இருந்து பார்க்கும் போதுதான் உணர்வாக மாறுகிறது.

எனக்கு மட்டுமில்லை- எனது வயதையொத்த எல்லோருக்குமே இப்படித்தான். வயது கூடக் கூட இதெல்லாம் பயத்தையும் கூடவே உருவாக்குகிறது. நம்மைச் சுற்றி நடக்கும் சம்பவங்கள்தான் இப்படியென்றால் படைப்புகளும் கூட அப்படித்தான். நண்பர் மது சமீபத்தில் ஆங்கிலப்படமொன்றை பரிந்துரைத்திருந்தார். தரவிறக்கம் செய்து ஓடவிட்டால் எடுத்தவுடனேயே புற்றுநோயாளி என்றுதான் ஆரம்பமானது.  அடுத்த ஒன்றிரண்டு நிமிடங்களில் படத்தை நிறுத்திவிட்டேன். பெரும்பாலான எழுத்துகளும், படைப்புகளும் நம்மை உணர்வு ரீதியில் பிணைப்பவைதான். ஆனால் எல்லாவற்றையும் தனிப்பட்ட முறையில் பிணைத்துக் கொள்வது விபரீதம்தான். ஆனால் தவிர்க்கவே முடிவதில்லை.

எல்லாவற்றையும் உணர்ந்து, மனதுக்குள் குதப்பி, ஜீரணித்துப் பழகுவதுதான் நம்மை முழுமையான மனிதனாக்கும். இருபது வயதுகள் வரைக்கும் விளையாட்டுப் பிள்ளை, முப்பதுகளின் மத்திய காலம் வரைக்கும் குடும்பம் பிள்ளைகள் என ஆணாக மாறி, நாற்பதுகளில் வலிகளையும் வேதனைகளையும் புரிந்து பக்குவப்பட்டு வடிவம் பெறக் கூடிய மனிதன் என... வாழ்க்கையே இப்படி படி நிலைகளில் ஆனதுதானே? 


மது சொன்ன படத்தை நிறுத்திவிட்டு இன்னொரு படம்- Changeling என்றொரு  படத்தைப் பார்க்கத் தொடங்கினேன். இதுவும் கூட ஒருவகையில் உணர்வுப்பூர்வமாக நம்மை சலனப்படுத்தக் கூடிய படம்தான். ஆஞ்சலினா ஜோலி நடித்தது. 1920களில் நடைபெறும் கதை. 2008 ஆம் ஆண்டில் வெளியான படம். 

கிறிஸ்டினுக்கு ஒரு குழந்தை. ஒன்பது வயது. அவளையும் குழந்தையையும் விட்டுவிட்டு அவளது கணவன் விலகிவிடுவான். இவள் தொலைபேசி இணைப்பகத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறாள். ஒருநாள் வேலைக்குச் சென்றுவிட்டுத் திரும்பும் போது குழந்தை காணாமல் போய்விடுகிறது. அந்த ஊரில் ஒரு மதபோதகர் உள்ளூர் காவலர்களின் தகிடுதத்தங்களை வெளிப்படையாக விமர்சனம் செய்து பிரச்சாரங்களைச் செய்து வருகிறார். அவர் இந்தப் பிரச்சினையைப் பெரிதாக்குகிறார். உள்ளூர் காவலர்கள் சில நாட்களுக்குப் பிறகு கிறிஸ்டினின் மகன் கிடைத்துவிட்டதாகச் சொல்லி அவளைச் சந்தோஷமடையச் செய்வார்கள். ஆனால் வேறொரு குழந்தையைக் கொண்டு வந்து தருவார்கள். 

படத்தின் தலைப்பின் அர்த்தமே அதுதான் - குழந்தை இடம் மாறிவிடுவது. 

அவள் மறுத்தாலும் கூட ‘இவன்தான் உங்க பையன்..இந்த சில மாசங்கள்ல்ல மாறிட்டான்’ என்று வலியுறுத்துவார்கள். தமது துறையின் பெயர் மேலும் மேலும் கெடக் கூடாது என்பது அவர்களின் நோக்கம். ஆனால் கிறிஸ்டின் அந்தச் சிறுவன் தம்முடைய மகன் இல்லை என்று உறுதியாக மறுக்க, அவளுக்கு உதவ மத போதகர் முன் வர, மிகக் கொடூரமான மனநோய் மருத்துவமனையில் ‘இவளுக்கு பைத்தியம்’ என்று காவல்துறையினர் அடைப்பார்கள். அதே சமயம் வேறொரு துப்பறிவாளர் குழந்தைகளைக் கடத்திக் கொல்லும் சைக்கோ ஒருவனின் இடத்தைக் கண்டறிந்து அவன் கடத்திச் சென்ற குழந்தைகளின் பட்டியலில் இருக்கும் குழந்தையின் பெயர்களில் கிறிஸ்டினின் குழந்தை வால்டர் இருப்பதையும் வெளியுலகுக்குக் கொண்டு வருவார். இந்தக் கொலைகள்தான் நமது முதுகெலும்பில் மின்னல் வெட்டும் பகுதி. நமக்கும் குழந்தைகள் இருக்கிறதே எனப் பதறச் செய்யுமிடம். இன்றைக்கும் கூட பெண் குழந்தைகளை வன்புணர்ந்து கொல்லும் ஆண்களைப் பற்றிய செய்திகள் வரும் போதெல்லாம் ‘எப்படி குழந்தையை வளர்க்கப் போகிறோமோ’ என்று பெண் குழந்தைகளைப் பெற்ற பெண்கள் பொதுவெளியில் பதறுவதைக் காண நேரிடுகிறதல்லவா? அப்படி நம்மைச் சலனப்படுத்துகிற இடம். 

குற்றவாளி கண்டறியப்பட்ட பிறகு பிறகு கிறிஸ்டின் என்னவாகிறாள், வால்டர் கொல்லப்பட்டானா, உயிரோடு இருக்கிறானா என்று அலைபாயும் கிறிஸ்டினும்தான் கதையின் இறுதிக்கட்டம். ஆஞ்சலினா ஜோலி அட்டகாசப்படுத்தியிருக்கிறார். நம் காலத்தின் அற்புத நடிகை அவர். படம் முழுக்கவும் நிலவும் வெறுமையும் வலியும் அவர் வழியாகவே பார்வையாளனாக உணர்ந்து கொண்டிருந்தேன். 

அதெல்லாம் சரிதான். படத்தைப் பார்த்துவிட்டு இனி எந்தப் படத்தைப் பார்த்தாலும் சரி, புத்தகத்தை வாசித்தாலும் சரி- நம்முடன் எந்தவிதத்திலும் தொடர்பு படுத்திக் கொள்ளக் கூடாது என கங்கணம் கட்டியிருக்கிறேன். ஒரு கை பார்த்துவிட வேண்டியதுதான்.

Jul 2, 2019

எட்டிக் குதி..சொர்க்கம் தெரியும்

கல்லூரியில் தொடக்க நிகழ்ச்சி ஒன்றுக்காக அழைத்தார்கள். ‘மோடிவேஷன் ஸ்பீச் கொடுக்க முடியுமா?’ என்று கேட்டார்கள். என்ன மாதிரியான பேச்சை எதிர்பார்க்கிறார்கள் எனத் தெரிந்து கொள்ள ‘யார் மாதிரிங்க?’ என்று கேட்டதற்குச் சில பெயர்களையும் சொன்னார்கள். ‘அய்யோ...மன்னிச்சுக்குங்க..அவங்களை மாதிரி பேச முடியாது’ என்று சொல்லிவிட்டேன். என்ன சிக்கல் என்றால் இப்பொழுதெல்லாம் அதீதமான பில்ட்-அப்புகளுக்குத்தான் மரியாதை அதிகம். அந்தக் கணத்தில் புல்லரிக்கச் செய்திட வேண்டும். பேச்சு என்றாலும் சரி; சலனப்படம் என்றாலும்; அச்சு வடிவில் வெளியாகும் கட்டுரை என்றாலும் சரி இதுதான் எதிர்பார்ப்பாக இருக்கிறது. எதிராளி உணர்ச்சி வசப்படும்படியான வகையிலேயே எல்லாமும் இருக்க வேண்டும் என்று பார்த்துக் கொள்கிறார்கள். 

Motivational என்பதற்கும் Practically Motivational என்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. போலித்தனமான கதைகளைச் சொல்லி அன்றைய தினத்துக்கான பூஸ்ட்டைக் கொடுத்து கைதட்டல் வாங்கி கூட்டத்தை அனுப்பி வைத்துவிட்டு, ஏற்பாட்டாளர்களிடம் பேசிய தொகையை வாங்கி சட்டைப்பைக்குள் வைத்துக் கொள்கிற பேச்சாளர்களின் எண்ணிக்கைதான் தாறுமாறாக இருக்கிறது. யதார்த்தத்தைப் பேசி ‘இவ்வளவுதான் வாழ்க்கை’ என்று பேசினால் ‘என்னய்யா பேசறான் இவன்’ என்று சொல்லிவிடுவார்கள் என நினைக்கிறேன்.

ஒரு பேச்சாள நண்பர் அவர். பெயரைச் வெளிப்படையாகச் சொல்ல வேண்டியதில்லை. நிகழ்வொன்றில் எனக்கு முன்பாகப் பேசினார். சுமாரான எண்ணிக்கையில் பார்வையாளர்கள் இருந்தார்கள்.

மேட்டுப்பாளையத்தில், கோவை நெடுஞ்சாலையில் ஒரு சலூன் கடை வைத்திருக்கும் பையன் என்று ஆரம்பித்து ஒரு கதையைச் சொன்னார். மயிர்க்கால்கள் கூச்செறியும் கதை அது. பையனின் அப்பா முடி திருத்தும் தொழிலாளி. மகனை பொறியியல் படிக்க வைத்துவிட்டார். படிப்பை முடித்துவிட்டு ஐடி நிறுவனத்தில் கிடைத்த நல்ல வேலையை விட்டு சலூன் கடை ஆரம்பித்து பல சொத்துகளைச் சம்பாதித்துவிட்ட பையனின் கதை அது. உணர்வுப்பூர்வமாக பத்து நிமிடங்கள் சொல்லக் கூடிய ஒரு பேச்சாளரின் பேச்சில் கற்பனை செய்து பார்த்தால் புரியும். மொத்தப் பேச்சிலும் அதுதான் ஹைலைட்டாக மனதில் பதிந்திருந்தது. 

கூட்டத்தை நெக்குருகச் செய்துவிட்டு வந்து அருகில் அமர்ந்தவரிடம் ‘அந்தப் பையனைப் பார்க்கலாம்ன்னு இருக்கு’ என்ற போது சிரித்துவிட்டு ‘பையன் இருக்கான்...ஆனா பாதி நானாகச் சொன்ன கதை’ என்றார். மேடையில் அமர்ந்து கொண்டு அதற்கு மேல் பேச முடியவில்லை. நிகழ்ச்சி முடிந்து கீழே இறங்கிய பிறகு பொறுக்க முடியாமல் ‘அந்தப் பையன் கடைப் பேரைச் சொல்லுங்க’ என்று கேட்டதற்குத் தயங்கினார். விடாமல் கேட்டு வாங்கியும் கொண்டேன். ‘இவன் போய் பார்க்கவா போகிறான்?’ என்று அவர் நினைத்திருக்கக் கூடும். சரவணம்பட்டியிலிருந்து முப்பது கிலோமீட்டர்தான் மேட்டுப்பாளையம். 

ஒரு வார இறுதியில் சலூன் கடையைக் கண்டுபிடித்துவிட்டேன். அவர் சொன்னது போலவே பொறியியல் முடித்த பையன்தான். ஆனால் சொகுசான கடை இல்லை. வேலை கிடைக்காமல் அப்பாவின் கடையை இவன் பார்த்துக் கொள்கிறான். கடையைக் கொஞ்சம் அழகு படுத்தியிருக்கிறான். பெரிய வருமானமில்லை. குடும்பச் செலவுக்குச் சரியாக இருக்கிறது. இதுவே நல்ல கதைதான். ஆனால் இதை மட்டும் சொன்னால் என்ன சுவாரசியமிருக்கிறது? அதனால்தான் ஐடி வேலையை விட்டு வந்தான்; பல பேருக்கு வேலை தருகிறான்; கோடிக்கணக்கில் சொத்து சேர்த்துவிட்டான் என்று கதையை அளந்து கைதட்டு வாங்கிவிட்டார். அன்றைய தினப் பேச்சிலேயே ‘இந்தக் கதையை நான் முன்பு சொன்ன கூட்டங்களில் கேட்ட ஐடியில் வேலை செய்கிறவர்கள் பலரும் வேலையை விட்டு விவசாயம் பார்க்கவும், சொந்தத் தொழில் செய்யவும் வந்துவிட்டார்கள்’ என்றார். அதுதான் அதிர்ச்சியாகவும் இருந்தது.

இன்றைய காலகட்டத்தில் பலரும் வேலையை உதறுகிறார்கள். விவசாயம் செய்கிறார்கள்; பால் வியாபாரம் பார்க்கிறார்கள்- எதுவும் தவறில்லை. ஆனால் கள நிலவரம் தெரிந்து, இத்தொழிலில் இவ்வளவுதான் வருமானம் எனப் புரிந்து வேலைக்கு வந்தால் சந்தோஷம். மேடையிலும், கட்டுரைகளிலும் தாறுமாறாக உசுப்பேற்றுகிறவர்களை நம்பி வேலையை விட்டுவிடுகிறவர்களைப் பற்றிக் கேள்விப்படும் போது சற்று பதற்றமாக இருக்கிறது. திரும்பிய பக்கமெல்லாம் போலிக் கதைகளைச் சொல்லி நெகிழச் செய்கிறவர்களும், கதறச் செய்கிறவர்களும் பெருகிவிட்டார்கள். இதைத்தான் அழுத்தம் திருத்தமாகச் சொல்ல வேண்டியிருக்கிறது. 

ஆயிரக்கணக்கான வாய்ப்புகள் இருக்கின்றனதான். எதற்காகவும் கவலைப்பட வேண்டியதில்லை. கலங்கவும் தேவையில்லை. ஆனால் நம் பேச்சைக் கேட்பவன், எழுத்தை வாசிப்பவன் ஆழம் தெரியாமல் காலை விட்டுவிடக் கூடாது என்ற எந்தக் கவலையும் சொறிந்துவிடுகிறவர்களில் பெரும்பாலானோருக்கு இருப்பதில்லை. எந்த ஒரு நேர்மையான வெற்றியும் எளிதில் கிடைத்துவிடுவதில்லை. எல்லாவற்றிலும் சிரமம் இருக்கிறது. மனசாட்சிப்படி ஆயிரம் ரூபாயைச் சம்பாதிக்க வேண்டுமானாலும் அதற்கான உழைப்பும் வியர்வையும் அவசியம். படிப்படியாகத்தான் முன்னேற்றம் இருக்கும். ஒருவேளை சரிவுகளும் கூட இருக்கலாம். இதையெல்லாம் புரிய வைப்பதுதான் Practical Motivation. எதிர்கொள்ளும் பிரச்சினைகளை எப்படிச் சமாளிக்கிறோம், தீர்வுகளை நோக்கி எப்படி நகர்கிறோம் என்று அடுத்த தலைமுறைக்கும் சக மனிதர்களுக்கும் உணர்வுப்பூர்வமாகப் புரிய வைப்பதுதான் உண்மையான தன்னம்பிக்கை. நம்மைச் சார்ந்தவர்கள் இப்படியொரு இடத்தில் இருப்பின் ‘எட்டிக் குதிடா’ என்று சொல்வோமா என்று நினைத்துப் பார்த்துப் பேசுகிறவர்களும் எழுதுகிறவர்களும் மிக அரிது.

இருக்கும் வேலையை விட்டுவிட்டு வந்துவிடு; சொர்க்கம் திறந்துவிடும் என்று நான்கு பேர் வரிசையாக ஒரு மனிதனைத் தாக்கினால் அவன் நம்பிவிட அத்தனை சாத்தியங்களும் உண்டு. உணர்ச்சிவசப்படுவதும், கொந்தளிப்பதும் நம் லெளகீக உலகத்துக்கு வெளியில் இன்பம் அளிக்கக் கூடிய வஸ்துகள். வாழ்கிற உலகம் என்று வந்துவிட்டால் பொங்கல்களை ஒதுக்கி வைத்துவிட்டு அறிவுக்கு முக்கியத்துவம் கொடுத்து நல்லது கெட்டதுகளை எடை போட்டுப் பார்த்துவிட்டு முடிவுக்கு வருவதுதான் சரி.