2019 ஆம் ஆண்டு பொறியியல் சேர்க்கைக்கான ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டதிலிருந்தே ‘கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கட்-ஆஃப் குறையுமா’ என்று கேள்வி வந்து கொண்டிருக்கிறது. மிக நிச்சயமாகக் குறைகிறது. சராசரியாக பத்து மதிப்பெண்கள் வரைக்கும் குறையக் கூடும். உதாரணமாக கடந்த ஆண்டு 193 மதிப்பெண்களுக்கு மேல் ஆறாயிரம் பேர் இருந்தார்கள் என்றால் இந்த வருடம் கட்-ஆஃப் 183 இருந்தாலே முதல் ஆறாயிரம் பேருக்குள் ரேங்க் வந்திருக்கும். அதனால் 165 மதிப்பெண்களைத் தாண்டியிருந்தாலே நல்ல கல்லூரிகளில் இடம் கிடைக்க நிறைய வாய்ப்பிருக்கிறது.
விசாரித்த வரையிலும் பெரும்பாலான மாணவர்கள் கலைக்கல்லூரிகளில் சேர்ந்துவிட்டார்கள். இவ்வருடம் கலை அறிவியல் படிப்புகளை நோக்கி கவனம் குவிந்திருக்கிறது. பல கல்லூரிகளில் கூடுதலான இடங்களை உருவாக்கியிருக்கிறார்கள். இது நல்லதுதான். கடந்த பத்து பதினைந்தாண்டுகளில் கலை, அறிவியல் படிப்புகளைப் படித்த தகுதியான மாணவர்கள் மிகக் குறைந்து போனார்கள். சுமாராகப் படிக்கிறவர்கள் கூட பொறியியல் குட்டையிலேயே விழுந்ததால் கலை, அறிவியல் படிப்புகளில் சுமாருக்கும் குறைவாகப் படிக்கிறவர்கள்தான் அதிகமாகச் சேர்ந்தார்கள். கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர்களிடையே போட்டி குறைந்தது. பேராசிரியர்களும் சுணங்கியிருந்தார்கள். எண்பது, தொண்ணூறுகளில் சிறந்த கலை அறிவியல் கல்லூரிகளாக விளங்கிய கல்வி நிறுவனங்கள் கூட தங்களது திறனை இழந்ததற்கு இதுவொரு முக்கியமான காரணம். இதன் விளைவு என்னவென்றால் கலை அறிவியல் படிப்புகளில் முனைவர் பட்டம், ஆராய்ச்சி என்பதெல்லாம் திறன் குறைய வாய்ப்புகள் உண்டாகின. தரமான பேராசிரியர்கள் உருவாவதில் சிக்கல்கள் உண்டாகும் என்றார்கள்.
அனைத்துமே சுழற்சிதானே?
இந்த வருடம் நல்ல மதிப்பெண்கள் வாங்கியிருக்கும் பல மாணவர்கள் கலை அறிவியல் கல்லூரிகளில் சேர்ந்திருக்கிறார்கள். கடந்த சில ஆண்டுகளாகவே சூழல் இப்படித்தான் மாறிக் கொண்டிருக்கிறது. இன்னமும் சில ஆண்டுகள் இப்படியே தொடர்ந்தால் கலை அறிவியல் கல்லூரிகள் தங்களது பழைய இடத்தை திரும்ப நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. தரமான ஆராய்ச்சியாளர்கள் உருவாகி வருவார்கள்.
பொதுவாகவே இந்தத் தருணத்தில் கலை அறிவியல் கல்லூரிகளில் சேர்ந்திருக்கும், பொறியியல் படிப்பில் சேரத் தகுதியுள்ள மாணவர்களுக்கும் அவர்தம் பெற்றோருக்கும் குழப்பம் வரும். ‘கலை அறிவியல் கல்லூரியை விட்டுவிட்டுச் சென்று பொறியியல் படிப்பில் சேரலாமா? அல்லது இதையே தொடரலாமா?’ என்று மண்டை காயும். தரமான கல்லூரி என்றால் தைரியமாக பொறியியல் படிப்பில் சேரலாம். போனாம்போக்கி கல்லூரி என்றால் எதைப் பற்றியும் அலட்டிக் கொள்ளாமல் சேர்ந்திருக்கும் கலை/அறிவியல் படிப்பையே தொடரலாம்.
அதற்கு முன்பாக-
பொறியியல் படிப்பைப் பொறுத்தவரைக்கும் ஆன்லைன் சேர்க்கைதானே? அதற்கான பட்டியல் ஒன்றைத் தயாரிக்க வேண்டும். கல்லூரி- அந்தக் கல்லூரியில் எந்தப் பாடத்தில் சேர்வது என்னும் பட்டியல். 1,2,3.... என நமது விருப்பத்தை வரிசைக்கிரமாகச் செய்து வைத்துக் கொள்வது சரியான அணுகுமுறை.
உதாரணமாக,
1. பி.எஸ்.ஜி, கோவை - மின்னியல் மற்றும் மின்னனுவியல்
2. குமரகுரு, கோவை- கணினி அறிவியல்
3. பண்ணாரி அம்மன், சத்தியமங்கலம்- மின்னியல் மற்றும் மின்னணுவியல்.
இப்படி இருபத்தைந்து அல்லது முப்பது வரையிலான பட்டியல் தயாரித்து வைத்துக் கொண்டால் கொஞ்சம் குழப்பம் குறையும். ஆன்லைன் தளத்தில் நம்முடைய முன்னுரிமைப்படி இதனை உள்ளீடு செய்து வைத்துவிட்டால் ரேங்குக்கு ஏற்ப ஒதுக்கீடு நடைபெறும்.
பட்டியல் தயாரிப்பதற்கு முன்பாக தரமான கல்லூரி என்று எப்படி முடிவு செய்வது? தரம் என்றால் தேவையான எண்ணிக்கையில் தகுதி கொண்ட பேராசிரியர்கள் இருக்க வேண்டும், ஓரளவுக்கேனும் வளாக நேர்முகத் தேர்வுக்கு நிறுவனங்கள் வர வேண்டும், கடந்த ஆண்டு கல்லூரியில் மாணவர்களின் எண்ணிக்கை முழுமையாக இருக்க வேண்டும், ஆய்வக வசதிகள் சரியாக இருக்க வேண்டும். இதையெல்லாம் எப்படிக் கண்டறிவது என்றால் தற்போது அந்தக் கல்லூரிகளில் படித்து வரும் மாணவர்கள் இருந்தால் விசாரிப்பது சாலச் சிறப்பு. அப்படியில்லையெனில் ஒரு நாள் கிளம்பிச் சென்று நேரடியாகப் பார்த்துவிட்டு வரலாம்.
பல கல்லூரிகள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நிறையக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கையே நடைபெறுவதில்லை. பேராசிரியர்களையே அனுப்பி ஆள் பிடித்து வரச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். பல கல்லூரிகளில் சம்பளம் தரப்படுவதில்லை. இதையெல்லாம் கவனத்தில் எடுத்துக் கொண்டுதான் நாம் சேர விரும்பும் கல்லூரியின் பட்டியலைத் தயாரிக்க வேண்டும். கிராமப்புற மாணவர்களுக்கு இந்த விவரம் போதாமல் ‘ஃபீஸ் குறைவு’ என்று சொல்லி வலை விரிக்கும் கல்லூரிகளில் தெரியாத்தனமாகச் சேர்ந்துவிடுகிறார்கள். மதிப்பெண் வந்தவுடன் பல மாணவர்கள் தமது ஆசிரியர்களிடம் திரும்பவும் வருவதேயில்லை. அவர்களாக முடிவெடுத்துவிடுவது இப்படியெல்லாம் சிக்கிக் கொள்ளக் காரணமாக இருக்கின்றன.
பாடத்தைவிடவும் கல்லூரி மிக முக்கியம்- இதுதான் முதல் விதி.
பாடத்தைவிடவும் கல்லூரி மிக முக்கியம்- இதுதான் முதல் விதி.
பாடத்தைப் பொறுத்தவரைக்கும் பொறியியல் படிப்பில் இந்த ஆண்டும் கணினி அறிவியலுக்குத்தான் அதிக டிமாண்ட் இருக்கக் கூடும் எனத் தோன்றுகிறது. தேர்தலில் வாக்காளர்கள் வாக்களிப்பது போல இதுவும் ஒரு அலைதான். ஒரு பக்கம் விழுந்தால் அப்படியே அத்தனை பேரும் பின் தொடர்வார்கள். கணினி அறிவியல் தாண்டி மின்னியல், தொடர்பியல், தகவல் தொழில்நுட்பவியல் உள்ளிட்ட பாடங்களும் சிறப்பானவைதான். தாராளமாகச் சேரலாம்.
தனிப்பட்ட விருப்பம் இருந்தால் மட்டுமே வித்தியாசமான படிப்புகளில் சேர்வது சரியாக இருக்கும். தனிப்பட்ட விருப்பம் மட்டுமில்லாது படித்து முடித்துவிட்டு அதற்கான வேலை வாய்ப்புகள் என்ன? அத்துறையில் பணியாற்றும் நிபுணர்களின் ஆலோசனை என்பவையும் முக்கியம். அப்படியில்லாமல் பெயர் கவர்ச்சியாக இருக்கிறது என வெளியுலகில் தெரியாத பாடங்களில் சேர்ந்துவிட்டால் நான்கு வருடங்களுக்குப் பிறகு வேலை தேடும் போது அல்லது மேற்படிப்புக்கான முயற்சிகளைச் செய்யும் போது கண்ணாமுழி திருகும்.
(தேவைப்பட்டால் இது குறித்து விரிவாக உரையாடுவோம்- vaamanikandan@gmail.com)
3 எதிர் சப்தங்கள்:
Detailed write up. My daughter who is studious and smart chose Nano technology by attractive name. Not sure how the employment would favor her. But there is hurdles in getting relevant study material while faculty themselves trying to gain more knowledge about the new subject.
@Jaypon , Canada: In those subjects, one should go up to PhD or even Postdoc.
TNEA link - https://tneaonline.in/ChoiceFilling/
https://engineering.careers360.com/articles/tnea-counselling
Round Aggregate Mark Range Rank Initial Payments Add and Locking of Choices (3 Days) Publication of Tentative Allotment Confirmation of Tentative Allotment (2 Days) Final Allotment Publication
From To From To
Round 1 200 178 1 9872 July 3 to 10, 2019 (5 PM) July 8 to 10, 2019 (5 PM) July 11, 2019 July 11 and 12, 2019 (5 PM) July 13, 2019
Round 2 177.75 150 9873 30926 July 8 to 12, 2019 (5 PM) July 13 to 15, 2019 (5 PM) July 16, 2019 July 16 and 17, 2019 (5 PM) July 18, 2019
Round 3 149.75 115 30927 64093 July 13 to 17, 2019 (5 PM) July 18 to 20, 2019 (5 PM) July 21, 2019 July 21 and 22, 2019 (5 PM) July 23, 2019
Round 4 114.75 77.5 64094 101692 July 18 to 22, 2019 (5 PM) July 23 to 24, 2019 (5 PM) July 26, 2019 July 26 and 27, 2019 (5 PM) July 28, 2019
Post a Comment