May 29, 2019

வேரும் மரமும்

நண்பரொருவர்  ‘கோயமுத்தூர் வாழ்க்கை பரவாயில்லையா?’ என்று கேட்டார். என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. சொன்னால் சொந்த ஊரை விட்டுவிட்டு வெளியில் வாழ்கிறவர்களுக்கு குற்றவுணர்ச்சியை ஏற்படுத்தியது போல ஆகிவிடும். 

அப்பா உயிரோடு இருக்கும் வரைக்கும் வகைதொகை தெரியாமல் திருமணப்பத்திரிக்கைகள் நிறைந்து கிடக்கும். முக்கால்வாசி அழைப்பிதழ்களில் இருக்கும் விவரங்கள் யாருடையது என்று கூட எங்களுக்குத் தெரியாது. அம்மாவுக்கும் அப்படித்தான். ‘அப்பாகிட்ட கேளு’ என்பார். அப்பாவுக்கு அவர்கள் எல்லோரையும் ஏதாவதொருவகையில் கோர்க்கத் தெரிந்திருந்தது. அவர் நூல் பிடித்துக் காட்டினால் ஏதாவதொருவகையில் உறவுக்காரரின் திருமணமாக இருக்கும். துக்ககாரியங்களும் அப்படித்தான். இறந்தவர்களை யாரென்றே எனக்குத் தெரியாது. அப்பா சென்று வருவார். அறுபத்தைந்தாண்டு காலம் ஒரே ஊரிலேயே பிறந்து வளர்ந்து வாழ்ந்தவருக்கு அப்படித்தான் தொடர்புகள் இருக்கும். 

அப்பா இருக்கும் வரையிலும் எதைப்பற்றியும் யோசித்ததில்லை. அப்பாவை பெங்களூருவுக்கு அழைத்துச் சென்ற போதே ஊரை விட்டுத் தள்ளிப் போவது போலத்தான் ஆனது. அது, பெரிய மரம் ஒன்றை வேரோடு தோண்டியெடுத்து எங்கேயோ நடுவது போல. எவ்வளவுதான் நீருற்றிப் பார்த்தாலும் தன்னைத் தேடி வரும் பறவைகளின் ஓசையைக் கேட்க விரும்பும் மரம் போல மெளனம்தான் விரவிக் கிடக்கும்.  

அப்பாவின் மறைவுக்குப் பிறகு திருமணப்பத்திரிக்கைகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து போயின. ‘அவங்க பெங்களூர்ல இருக்காங்க’ ‘கொடுத்தாலும் வரவா போறாங்க’ என்று தவிர்த்துவிடுவார்கள்.  ‘அவர் இருக்கிற வரைக்கும் கொடுத்தோம்...பசங்களைத் தெரியாது’ என்றார்கள். துக்க காரியங்கள் பற்றிய செய்திகளே வராது. வந்தாலும் ‘இதுக்கெல்லாம் போகணுமா’ என்று நாங்கள் தவிர்த்துவிடுவோம். ஒரு கட்டத்தில் சொந்த மண்ணைவிட்டு வெகு தூரம் செல்வது போலத் தோன்றியது. எந்த நிகழ்விலும் மூன்று முதல் ஐந்து சதவீதம் பேர்களைத் தாண்டி அறிமுகம் இருக்காது. அவர்களுக்குத் தெரிந்திருந்தாலும் நம்மிடம் பேச மாட்டார்கள். 

கோயமுத்தூர் வந்த பிறகு எவ்வளவோ பரவாயில்லை. அப்பாவின் நண்பர்கள் விலகினாலும் உறவுகள் எப்படியாவது ஒட்டியபடியே இருக்கின்றன. திருமணங்களுக்குச் சென்று வர முடிகிறது. துக்க காரியங்களில் பங்கெடுக்கிறோம். பத்து நிகழ்வுகளில் கலந்து கொண்டால் மூன்று நிகழ்வுகளிலாவது  புதிதாக யாரோ அடையாளம் கண்டுபிடிக்கிறார்கள். ‘வாசு அண்ணன் பையனா?’ என்று கேட்கிறார்கள். ஆமாம் என்று சொன்னால் தம்மை அறிமுகப்படுத்திக் கொள்கிறார்கள். இவையெல்லாம் ஏதோ புதிய உலகத்தை அறிவது போல இருக்கிறது.

கிடாவிருந்து, வளைகாப்புக்கெல்லாம் அழைப்புகள் வரத் தொடங்கியிருக்கின்றன. வாய்ப்பு கிடைத்தால் அட்டெண்ட்ஸ்தான். என்னைவிட பத்து வயது குறைந்தவர்கள் கூட உள்ளூரிலேயே இருக்கிறவர்களுக்கு பரவலாக அறிமுகம் இருக்கிறது. பாதி வயதைத் தாண்டிய பிறகு உள்ளூரில் பழைய உறவுகளைத் தூசி தட்ட ஆரம்பித்திருக்கிறோம். ஒரு வகையில் வருத்தமாக இருந்தாலும் late is better than never அல்லவா? 

சில நண்பர்களிடம் இதைச் சொன்னால் ‘இதெல்லாம் இல்லாட்டி என்ன’ என்கிறார்கள். எனக்கும் அப்படித்தான் இருந்தது. நெருங்கிய நண்பர்களோ அல்லது உறவினரோ- பத்து பேர் போதும். அதற்கு மேல் யாரும் தேவையில்லை என்றெல்லாம் கூடத் தோன்றியதுண்டு. ஆனால் அப்படியில்லை. அப்பா இறந்த போது வந்து அடுத்த இரண்டு மூன்று நாட்களுக்கு எந்நேரமும் ஐம்பது பேர்களாவது உடனிருந்தார்கள். அவர்களில் சிலர் சிரித்து, கும்மாளம் கூட அடித்தார்கள். அப்பொழுது கடுப்பாக இருக்கும். ஆனால் நம்மை அந்தச் சூழலிலிருந்து வெளியே இழுத்து வர விதவிதமான மனிதர்கள் தேவை. மனிதர்களின் சகவாசமில்லாமல் இந்த வாழ்க்கையில் நாம் எதையும் கற்றுக் கொள்ளப் போவதில்லை. 

படித்த இடங்களில், கல்லூரிகளில், பணியாற்றும் இடங்களில் என ஆயிரம்தான் நட்புகளைச் சேகரித்து வைத்திருந்தாலும் கூட வந்து நிற்பவர்கள் வெகு சொற்பம்தான். பெங்களூருவிலும் சென்னையிலும் எவ்வளவோ சாவு வீடுகளைப் பார்த்தாகிவிட்டது. நடுத்தரக் குடும்பங்கள் என்றால் நாற்பது பேர் வந்து போயிருந்தால் அது பெரிய விஷயம். 

ஏதாவதொருவகையில் ஆறுதலாக வந்து நிற்கவும், கொண்டாட்டத்தில் நம்மோடு சேர்ந்து சிரிக்கவும் மனிதர்கள் தேவை. பொறாமை, வன்மம், வயிற்றெரிச்சல் என சகலமும்தான் விரவிக் கிடக்கும். நம்மைக் கீழே இழுத்துவிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டும் இருப்பார்கள். எல்லாவற்றையும் தாண்டி மனிதர்களின் அருகாமை நமக்குத் தேவை.  பெருநகரங்களில் பணம் சேர்கிறது. வசதிகள் கூடுகின்றன. ஆனால் எப்படியோ மனித உறவுகள் துண்டித்துப் போகின்றன. சக மனிதர்களிடம் எப்படி நாசூக்காக பேச வேண்டும் என்பது கூட தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். 

அடுத்த தலைமுறைக்கு என்ன கொடுத்துவிட்டுப் போகப் போகிறோம்? மனிதர்களையும், உறவுகளையும்தானே!

சொந்த ஊர் என்பது ஒரு மாயவித்தைக்காரி. சூட்சமங்களை உள்ளடக்கிய சூனியக்காரக்கிழவி. அதில் வாழ்ந்து பழகிவிட்ட மனிதர்களுக்கு சொர்க்கமே என்றாலும் சொந்த ஊரைப் போலாகாது.

கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும் போது பேயோன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கீழே இருப்பதைப் பதிந்திருந்தார்...

நிச்சயதார்த்தம்
திருமணம்
ரிசப்ஷன்
வளைகாப்பு
கிரகப்பிரவேசம்
பிறந்தநாள் விழா
அரங்கேற்றம்
மீண்டும் பிறந்தநாள் விழா
கெட் டுகெதர்...
உங்களுக்கெல்லாம்
வேறு வேலையே இல்லையாடா?

May 25, 2019

மெளனம்

கடந்த சில மாதங்களாக எனக்கு மிகப்பிடித்தமான வேலையைச் செய்து கொண்டிருக்கிறேன். தமிழகத்தின் அத்துணை ஊர்களுக்கும் சென்று வந்துவிட்டேன். தேர்தல் சம்பந்தமான டேட்டா சேகரிப்பு, அதனை அலசுவது என்பதுதான் கடந்த இரண்டு மூன்று மாதங்களாகச் செய்து கொண்டிருந்த வேலை. Data Analysis. என்ன மாதிரியான தகவல்களைச் சேகரித்தேன், எப்படிச் சேகரித்தேன் என்றெல்லாம் விலாவாரியாகச் சொல்வதற்கு எனக்கு அனுமதியில்லை. தேர்தலுக்கு முன்பாக அரசியல் குறித்து எழுதினால் எங்கே நம்மையுமறியாமல் சிலவற்றை உளறிவிடுவேனோ என்ற பயமும் ஒட்டிக் கொண்டேயிருந்தது. 

Psephology என்றொரு துறை இருக்கிறது. அரசியலை அறிவியல் ரீதியாக அலசுவது. அதில் முதல் அடியை எடுத்து வைத்த சந்தோஷம் எனக்கு. நிறையக் குளறுபடிகளையும் செய்தேன். உதாரணமாக சூலூரில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு ஒன்றைச் செய்ய வேண்டியிருந்தது. சுமார் அறுநூறு வாக்காளர்களிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு அது. இருநூற்றி முப்பத்தொன்பது பேர் திமுகவுக்கு வாக்களித்ததாகச் சொன்னார்கள். நூற்று தொண்ணூற்றைந்து பேர் அதிமுகவுக்கு. தினகரனுக்கு அறுபது. மநீம, நாதக அதற்கடுத்து என்ற எண்ணிக்கையில் இருந்தது. இதனடிப்படையில் திமுகதான் வெற்றி பெறும் எனச் சொல்லியிருந்தேன். என்ன காரணம் என்று இப்பொழுது மண்டை காய்ந்து கொண்டிருக்கிறேன். மொத்தமாக எந்நூற்றைம்பது பேர்களிடம் பேசியதில் அறுநூறு பேர் கருத்துச் சொன்னார்கள். மீதமிருக்கும் இருநூற்றைம்பது பேர் பதில் எதுவும் சொல்லவில்லை. அவர்களில் பெரும்பாலானவர்கள் அதிமுகவுக்கு வாக்களித்திருக்க வேண்டும். இப்படி கருத்துச் சொல்லாதவர்களையும் கணக்கில் எடுத்து அதை புள்ளியலில் skew என்று சொல்வார்கள். அவர்களை முழுமையாகக் கணிக்க முடியாததுதான் தவறாகிப் போனது. 

மத்தியில் பாஜக ஆட்சியமைத்துவிடும் என்று கணித்தவர்கள் என்ன நுணுக்கத்தைப் பயன்படுத்தினார்கள் என்று தேடிக் கொண்டிருக்கிறேன். சரியாக அடித்திருக்கிறார்கள்.

கருத்துக்கணிப்பில் பங்கேற்பவர்களைத் தேர்ந்தெடுக்கும் Sampling method ஐக் காட்டிலும் முக்கியத்துவம் வாய்ந்தது அவற்றை எப்படி அலசுகிறோம் என்பதுதான். அதில்தான் சூட்சமமே இருக்கிறது. அலசுவதற்காக நிறைய புள்ளியியல் சூத்திரங்கள் இருக்கின்றன. அதே சமயம் உள்ளூர் சூழல், சாதி அரசியல், பணம் உள்ளிட்ட காரணிகளையும் கணக்கில் எடுத்து அவற்றுக்கேற்ற ‘வெயிட்டேஜ்’களையும் கொடுக்க வேண்டும். இதில்தான் எங்கேயோ கோட்டைவிட்டுவிட்டேன். ஆனால் மிகச் சிறந்த கற்றல் அனுபவம் இது. ஆண்டவன் புண்ணியத்தில் அடுத்தடுத்த தேர்தல்களிலும் இதே மாதிரியான வாய்ப்பு கிடைத்தால் ஒழுங்காகக் கற்றுக் கொள்ளலாம். நன்றாக ஊரும் சுற்றிக் கொள்ளலாம். 

நகர்ப்புறங்களில் மக்கள் நீதி மய்யம் கணிசமான வாக்குகளை வாங்குகிறது என்பதைத் தேர்தல் தினம் வரைக்கும் கணிக்க முடியவில்லை. தேர்தலன்று கோயமுத்தூரில் விசாரித்த போது கணிசமானோர் ‘டார்ச் லைட்’ என்றார்கள். எவ்வளவு சதவீதம் வரும் என்று குழப்பமாக இருந்தது. அதே போலத்தான் கோவை, தென்சென்னை போன்ற தொகுதிகளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை வாங்கியிருக்கிறார்கள். கிராமப்புற இளைஞர்கள் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவைச் சொன்னார்கள். பரவலாக பெரும்பாலான தொகுதிகளில் சீராக வாக்கு வாங்கியிருக்கிறார்கள்.

தினகரன் factor என்ற சொல்லைத் திரும்பத் திரும்ப பேசிக் கொண்டிருந்தார்கள். தேர்தலில் அமமுகவும் கணிசமாகச் செலவு செய்தார்கள். பல தொகுதிகளிலும் ஒரே மாதிரியான பட்டுவாடா. ஆனால் எல்லோருக்கும் பணம் இல்லை. உதாரணமாக ஒரு பூத்தில் ஆயிரம் வாக்குகள் இருந்தால் நூறு அல்லது நூற்றைம்பது வாக்காளர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு மட்டும் நல்ல கவனிப்பு. ஆனால் தொகுதி முழுக்கவும் ‘தினகரனும் பணம் கொடுக்கிறாரு’ என்றொரு பிம்பத்தை தெளிவாகக் கட்டமைத்தார்கள். ஆனால் அவை வாக்குகளாக மாறவில்லை. பெரும்பாலான ஊர்களில் ‘தினகரன் ஜெயிச்சுடுவாரு’ என்று சொன்னாலும் ‘நீங்க ஓட்டுப் போடுவீங்களா?’ என்றால் ‘மாட்டேன்’ என்று சொன்னார்கள். ‘அப்புறம் எப்படி ஜெயிப்பாரு?’ என்று கேட்டால் ‘நல்லா செலவு செய்யறாங்க’ என்பார்கள். ‘நீங்க ஏன் போட மாட்டீங்க?’ என்று கேட்டால் ‘அவரும் அவரைச் சார்ந்தவர்களும் தெனாவெட்டாகப் பேசுகிறார்கள்’ என்பதை நாசூக்காகச் சொல்லிவிடுவார்கள். சமூக ஊடகம் தினகரனை எப்படி ‘தைரியமான ஆளு’ என்று உருவகப்படுத்தியதோ அதுவே அவருக்கு எதிரானதாக மாறிக் கொண்டிருப்பதாக உணர முடிந்தது. தங்கத் தமிழ்செல்வன், வெற்றிவேல் போன்றவர்கள் அதற்கு எண்ணெய்யை ஊற்றிவிட்டார்கள். அதிமுகவினர் தினகரன் குறித்து பயமில்லாதவர்கள் போலத்தான் இருந்தார்கள். ‘போட்டி எங்களுக்கும் திமுகவுக்கும்தான்’ என்றுதான் பல இடங்களிலும் சொன்னார்கள்- ராமநாதபுரம், தஞ்சாவூர், சிவகங்கை உட்பட.

தேர்தலில் அதிக செலவு என்றால் அதிமுகவினர்தான். எந்த ஊரில் பார்த்தாலும் அவர்கள் கூட்டம்தான் அதிகமாக இருந்தது. பணம் மட்டுமே தேர்தல் முடிவுகளை முடிவு செய்வதாக இருந்திருந்தால் அதிமுகதான் வென்றிருக்கும். பணவிஷயத்தில்  திமுகவினர் அதிமுகவினர் அளவுக்குப் போட்டி போட முடியவில்லை என்றாலும் பரவலாகவே திமுகவினர் வெறித்தனமாகப் பணியாற்றினார்கள். ‘அதிமுக பணத்துல அடிக்கிறாங்க’ என்ற பயம் அவர்களைப் பதறச் செய்தது.  ‘இந்த எலெக்‌ஷன்ல தோத்துட்டா அவ்வளவுதான்’ என்று பரவலாகச் சொல்வதை உணர முடிந்தது. இவையெல்லாம் அவர்களை வேகம் எடுத்திருக்கச் செய்திருக்க வேண்டும். ஏற்கனவே அவர்கள் முழுமையாக அறிந்து கொள்ள முடியாத ஒரு அலை இருக்க அவர்களது வேகம் திமுகவுக்குப் பெரும்பலனைக் கொடுத்திருக்கிறது. தேர்தல் தினத்தன்று திமுகவினர் பேச்சுக் கொடுத்த போது ‘காசு மட்டும் பிரதானமில்லைன்னா ஜெயிச்சுடுவோம்’ என்றார். தினகரன் வாக்குகளைப் பிரிப்பதைத்தான் காரணமாகச் சொன்னார்களே தவிர மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பதை அவர்கள் சொல்லவில்லை. 

பிரச்சாரத்தைப் பொறுத்தவரைக்கும் ஸ்டாலினும் தினகரனும் சிறப்பாகச் செய்தார்கள். ஆனால் ஸ்டாலின் ஒரு படி மேலே போய் காலை நடைபயணத்தில், பேருந்தில், மார்க்கெட்டில் மக்களைச் சந்திப்பது போன்றவை நல்ல அளவில் தாக்கத்தை உருவாக்கிக் கொடுத்தது. 

திருப்பூரில் அதிமுக வென்றுவிடும் என நினைத்திருந்தேன். அங்கே பெரிய அளவில் தகவல்களைத் திரட்டவில்லை என்றாலும் கம்யூனிஸ்ட் தோற்றுவிடக் கூடும் என்றுதான் தோன்றியது. ஆனால் வேட்பாளர் சுப்பராயன் ‘அலை இருக்கு’ என்று எனது நெருங்கிய நண்பர்களிடம் சொன்னாராம். அது சரிதான். தேர்தல் நெருங்க நெருங்க மெளனமான அலையை தமிழகம் முழுக்கவும் உணர முடிந்தது. ஆனால் வாக்கு வித்தியாசம் இவ்வளவு இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.

பெரம்பலூரில் ‘பாரி வேந்தர் வென்றுவிடுவார்’ என்பது தேர்தலுக்கு வெகு நாட்கள் முன்பாகவே தெரிந்தது. அப்பொழுது ஒன்றரை லட்சம் வாக்கு வித்தியாசம் என்று கணித்திருந்தோம். எதிர்த்து நின்ற சிவபதி ‘நான் ஜெயிச்சுடுவேன்’ என்றார். அவரிடமும் பேசினேன். அவர் இன்னமும் மக்களின் பல்ஸைத் தெரிந்து கொள்ளவில்லை என்று தெரிந்தது. கடைசியில் வித்தியாசம் எவ்வளவு என்று நமக்கே தெரியுமல்லவா? ஈரோடு, பெரம்பலூர், தூத்துக்குடி, நீலகிரி மாதிரியான தொகுதிகளில் முடிவு தெளிவாகத் தெரிந்தது. சேலம், தர்மபுரி, கோவை மாதிரியான தொகுதிகள் மண்டை காய வைத்தன. 

தமிழகம் முழுக்கவும் காரில்தான் சுற்றினேன். ஓட்டுநரையும் ஏற்பாடு செய்து கொடுத்திருந்தார்கள். எளிய கிராமத்து மக்களிடம்தான் விசாரிப்பேன். வழி கேட்பது போல பேச்சுக் கொடுத்து தகவல்களைக் கேட்டுவிட்டு வந்து காரில் அமர்ந்த பிறகுதான் நோட் எடுத்துக் குறிப்பேன். பரவலாகவே ‘ஒரு மாற்றம் வரும்’ என்றார்கள். அதுதான் இந்த ரிசல்ட். தேர்தல் என்பதே பரவலான கருத்துகளின் தொகுப்புதானே? ஆனால் குழப்பம் மிகுந்த தேர்தலாகவே இருந்தது. 

பணம் முடிவைத் தீர்மானிக்குமா? தினகரன் எவ்வளவு வாக்கைப் பிரிப்பார்? போன்ற பல காரணிகள் அத்தனை கட்சிக்காரர்களையும் குழப்பியிருந்தது. ஆனால் எல்லாவற்றையும் தாண்டி, எப்பொழுதுமே நம்மை ஆச்சரியப்படுத்துவது போல மக்கள் ஒரே மாதிரிதான் சிந்திக்கிறார்கள். அம்பாசமுத்திரத்தில் நினைப்பதைத்தான் முக்காணியிலும் நினைக்கிறார்கள் வெள்ளகோவிலிலும் நினைக்கிறார்கள். அதில் இருக்கும் மாஸ் சைக்காலஜிதான் வியப்பூட்டக் கூடிய அம்சம்.

May 21, 2019

ஆதிச்சநல்லூர்

ஆதிச்ச நல்லூருக்குச் சென்றிருந்தேன். முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்ட இடம் அது. ஸ்ரீவைகுண்டத்திலிருந்து திருநெல்வேலி செல்லும் சாலையில் நான்கைந்து கிலோமீட்டர் தொலைவில் ஆதிச்ச நல்லூர் இருக்கிறது. தாமிரபரணியை ஒட்டிய ஊர். அந்த ஊரின் சுடுகாட்டு மேட்டில்தான் இன்றைக்கு தொல்லியல் துறை யார் வேண்டுமானாலும் நுழையக் கூடிய வகையில் பெயருக்கு ஒரு தடுப்பை அமைத்து வைத்திருக்கிறார்கள். அருகிலேயே ஒரு துருப்பிடித்த அறிவிப்புப் பலகை.நாலாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழரின் வரலாறு நைந்து கிடக்கிறது.பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பான தமிழக வரலாற்றின் எச்சம் இந்த ஊர். பழங்காலத்தில் ஆற்றங்கரையை ஒட்டிய ஊர்களில்தான் மக்கள் கூட்டமாக வசிக்கத் தொடங்கினார்கள்; அங்குதான் நாகரிகமும் வளர்ந்தது; வேளாண்மைத் தொழிலைச் செய்தார்கள் என்றெல்லாம் ஏழாம் வகுப்பு வரலாற்றுப் புத்தகங்களில் நாம் படித்த தகவல்களுக்கு சாட்சியம்தான் ஆதிச்ச நல்லூர். தாமிரபரணிக் கரை அதை ஒட்டிய ஊர். அங்கு கடல் சார்ந்த வணிகமும் நிகழ்ந்ததாம். அந்த நல்லூர் மக்கள் தங்களின் சுடுகாட்டு நிலத்தில் மரணித்தவர்களைப் புதைத்து, காவலுக்கு சுடலைமாடசாமியின் கோவிலைக் கட்டியிருக்கிறார்கள். அந்தக் கோவிலைச் சுற்றித்தான் தாழிகள் கிடைத்திருக்கின்றன. 

ஆதிச்சநல்லூரில் 1800களின் இறுதி ஆண்டுகளிலேயே வெளிநாட்டினர் தோண்டி தாழிகளை எடுத்துவிட்டார்கள். அப்பொழுதே இரும்பு ஆயுதங்கள் கூட கிடைத்தன எனச் செய்தியுண்டு. நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே இரும்பு ஆயுதங்கள் எப்படி தமிழர்களுக்கு கிடைத்தது என்று சிலர் ஒரு பக்கம் புளகாங்கிதம் அடைந்தாலும் உள்ளூரில் சில பெரியவர்களிடம்  விசாரித்த போது சமீபகாலம் வரைக்கும் அந்தப் பகுதி அந்த ஊர் மக்களுக்கான சுடுகாடாக இருந்திருக்கிறது. நான்காயிரம் ஆண்டுகளாக மனிதர்களை புதைத்து வரக் கூடிய இடம் அது. இரும்பு ஆயுதங்களை இடைப்பட்ட காலத்தில் கூட அங்கு புதைத்திருக்கலாம். எல்லாவற்றையும் முழுமையாக ஆராய்ந்தால் நிறைய வரலாற்றுத் தரவுகள் கிடைக்கக் கூடும்.

நூறாண்டுகளுக்குப் பிறகு இந்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் தொல்லியல்துறை போனால் போகட்டும் என்று 2004 ஆம் ஆண்டில் அகழ்வாராய்ச்சியைச் செய்து சுமார் நூற்றியெழுபது களிமண் தாழிகளைத் தோண்டியெடுத்திருக்கிறார்கள். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல அந்தப் பகுதி முழுவதும் தோண்டவில்லை. சுடலைமாடசாமி கோவிலின் அருகில் மட்டும் தோண்டியிருக்கிறார்கள். 2004 ஆண்டில் தோண்டிய இடத்தையும் மூடிவிட்டார்கள். இப்பொழுது வெறும் மேட்டு நிலம்தான்.

ஸ்ரீவைகுண்டம் - திருநெல்வேலி சாலையின் ஒரு பக்கம் இந்த மேட்டு நிலம் என்றால் சாலையைக் கடந்தால் பாண்டியராஜா கோவில் இருக்கிறது. பழைய கோவில் அது. உள்ளூரில் அதைப் பஞ்சபாண்டவர் கோவில் என்கிறார்கள். அதை வைத்துத்தான் மகாபாரதப் போர் நடந்தது என்று நம்மூர் அரசியல்வாதிகள் எதையோ கிளறிக் கொண்டிருக்கிறார்கள். அதையெல்லாம் நம்ப வேண்டியதில்லை. மதுரைக்கு முன்பாக முற்கால பாண்டியர்களின் தலைநகராக ஆதிச்சநல்லூர் விளங்கியது என்றொரு தியரி உண்டு. அதனடிப்படையில் பார்த்தால் அங்கு பாண்டிய மன்னர்களைப் புதைத்திருக்கக் கூடும். அந்தச் சமாதியே கூட இன்றைக்கு பாண்டியராஜா கோவிலாக மாறியிருக்கக் கூடும். 


நாமாகப் பேசினால் ஒவ்வொரு வரியும் ‘கூடும்’ ‘கூடும்’ என்றுதான் முடியும். தொல்லியல்துறைதான் இவற்றையெல்லாம் வெளிக் கொணர வேண்டும். அவர்கள் எங்கே செய்கிறார்கள்? 2004 ஆம் ஆண்டில் தோண்டியெடுக்கப்பட்ட தாழிகளுக்கான ஆராய்ச்சி அறிக்கை இப்பொழுதுதான் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவுக்கு அனுப்பி ‘கார்பன் டேட்டிங்’ முறையில் செய்யப்பட்ட ஆய்வுகளின் முடிவுகளைக் கடந்த மாதம்தான் மதுரை உயர்நீதிமன்றத்தில் அறிக்கையைத் தாக்கல் செய்திருக்கிறார்கள். பொ.மு.905- பொ.மு 696 ஆண்டுகளுக்கு இடைப்பட்டவை என்று அந்த அறிக்கை சொல்கிறது. 

தாழியில் இருக்கும் எழுத்துக்கள் குறித்து ஆளுக்கொரு வாதம் செய்து கொண்டிருக்கிறார்கள். கோட்டைச் சுவர் இருப்பதாகவெல்லாம் சொல்கிறார்கள். முழுமையாக அகழ்வாய்வு செய்து காட்சிப்படுத்தினால் அர்த்தமிருக்கிறது. இப்படியொரு வாய்ப்புக் கிடைத்தால் வெளிநாட்டினர் அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்து எடுத்துவிடுவார்கள். ஆனால் நம்மவர்களுக்கு இதெல்லாம் பெரிய பொருட்டே இல்லை அல்லது உள்ளரசியலும் கூட இருக்கலாம். 

ஒரு சமயம் இந்துத்துவாக்காரர் ஒருவர் ‘புதைப்பது கிறித்துவ வழமை. எரிப்பதுதான் இந்துக்களின் பண்பாடு’ என்று எழுதியிருந்தார். இறந்தவர்களைப் புதைப்பதுதான் தமிழர்களின் வழக்கமாக இருந்திருக்கிறது என்பதற்கு ஆதிச்சநல்லூர் உதாரணம். ஒருவேளை இத்தகைய பண்பாட்டுக் காரணங்கள் கூடவும் இந்திய அரசின் மெத்தனத்துக்குக் காரணமாக இருக்கலாம். பல லட்சங்கள் செலவு செய்து ‘முதுமக்கள் தாழி வரலாற்றுத் தகவல் மையம்’ என்று கட்டி வைத்திருக்கிறார்கள். பூட்டுப் போட்டு பூச்சிக்கூடு நிறைந்து கிடக்கிறது. உள்ளே எதுவுமில்லை. ஆற்றங்கரையோரம் ஆசுவாசமாக அமர்ந்து குடிக்கிறவர்களுக்கான நல்ல இடம் அது. 


‘ஆதிச்சநல்லூர் போக வேண்டும்’ என்று திருநெல்வேலியைச் சார்ந்த ஒரு கிராமநிர்வாக அலுவரைப் பேருந்தில் சந்தித்த போது சொன்னேன். ‘நான் அங்க வி.ஏ.ஓவா இருந்தேன்...பார்க்கிறதுக்கு ஒண்ணுமில்ல..வெறும் காடுதான்’ என்றார். ஆயாசமாக இருந்தது. உள்ளுக்குள் எவ்வளவோ புதைந்து கிடந்தாலும் தலையையாவது நீட்டிப் பார்த்து ‘நான் புதைந்து கிடக்கிறேன்’ என்று வரலாறு சொல்கிறது. ‘ரெண்டு கோவில் இருக்குன்னு சொன்னாங்க’ என்றேன்.  ‘அப்படியா? எனக்குத் தெரியாதே’ என்றார். அங்கேயிருக்கும் பாண்டியராஜா கோவில், சுடலைமாடசாமி கோவிலையாவது அந்த அதிகாரி தெரிந்து வைத்திருக்க வேண்டும் என எதிர்பார்த்தேன். ம்ஹூம். இப்படித்தானே மொத்த அரசாங்கமும் இருக்கிறது? வரலாறாவது; புண்ணாக்காவது.

May 17, 2019

கணினிகள்

சென்னையில் இருக்கும் Ford Motors நிறுவனம் 50 கணினிகளுக்கான சி.பி.யுக்களை வழங்குகிறது. இரண்டு அல்லது மூன்றாண்டுகள் பயன்படுத்தப்பட்ட கணினிகளை பல நிறுவனங்களும் வழங்குவதுண்டு. இதற்கு முன்பாக ஸாஸ்கன் நிறுவனத்திடமிருந்து வாங்கினோம். அவர்கள் கணினித்திரை, விசைப்பலகை உள்ளிட்ட உபகரணங்களுடன் வழங்கினார்கள்.  இந்த முறை ஃபோர்டு நிறுவனம் சி.பி.யுக்களை மட்டுமே வழங்குகிறார்கள். எந்த நிறுவனமாக இருந்தாலும் அவர்கள் வளாகத்தை விட்டு வெளியில் கொண்டு வரும் வரைக்கும் உதவுவார்கள். அதற்கே நிறைய மின்னஞ்சல் பரிமாற்றம் நடக்கும். அந்நிறுவனத்தில் பணிபுரியும் யாரேனும் ஒருவர் இந்தத் திட்டத்திற்கு முழு அர்ப்பணிப்புடன் வேலை செய்ய வேண்டும். ஃபோர்டு நிறுவனத்தில் கோகுலகிருஷ்ணன் உதவினார். அவரும் அவருடன் பணியாற்றும் நவீனனும்-  அவர்களிடம் நான் எந்த ஊர் என்று கூடக் கேட்டுக் கொள்ளவில்லை. அனுமதி பெறுவதிலிருந்து வாகனத்தில் ஏற்றுகிற வரைக்கும் எல்லாவற்றையும் முன்னின்று செய்து கொடுத்தார்கள். 

வளாகத்திலிருந்து வெளியில் வந்தவுடன் போக்குவரத்துத்து ஏற்பாடுகளை நாம்தான் பார்த்துக் கொள்ள வேண்டும். தமிழகத்தின் பல பள்ளிகளில் இருந்தும்  கணினிகள் வேண்டும் என்று வேண்டுகோள் வருவதுண்டு. போக்குவரத்துதான் பிரச்சினை. சென்னையிலிருந்து அந்தந்த ஊர்களுக்குக் கொண்டு சேர்க்க வேண்டும். இந்த முறை அனைத்துக் கணினிகளையும் கோபிக்கு எடுத்து அங்கேயே பள்ளித் தலைமையாசிரியர்களிடம் இந்தக் கணினிகளை எப்படியெல்லாம் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன என்பதை விளக்கி அவர்களிடம் கையளிப்பதற்கான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

அரசுப்பள்ளிகளைத் தேர்ந்தெடுக்கும் போது மாணவர்களின் எண்ணிக்கை மட்டுமில்லாமல் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு, அவர்களின் புரிதல் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை உள்வாங்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது. புரிதல் என்றால் தாம் முன்வைக்கும் கோரிக்கை நிறைவேற்றப்படுமானால் அதன் பலன்கள் என்ன என்பதைப் பற்றிய புரிதல் உள்ள ஆசிரியர்களாக இருக்க வேண்டும். ‘எங்க ஸ்கூலுக்கு ஏதாச்சும் செஞ்சு தாங்க’ என்று கேட்கிற ஆசிரியர்கள்தான் எனக்குத் தெரிந்து எண்ணிக்கையில் அதிகம். ‘என்ன செஞ்சு தரணுங்க டீச்சர்?’ என்று கேட்டால் அது தெரியாது. அவர்களிடம் கணினிகளை வாங்கிக் கொடுத்தால் பத்து பைசா பிரையோஜனம் இருக்காது. பள்ளிக் கல்வித்துறையிலிருந்து கேட்கும் புள்ளிவிவரங்களை டைப் செய்வதற்காகப் பயன்படுத்துவார்கள். ஆறுமாதங்கள் கழித்து ‘பிரிண்ட் அவுட் எடுக்க ப்ரிண்டர் ஒண்ணு வாங்கிக் கொடுங்க’ என்று கேட்பார்கள். மற்றபடி மாணவர்களை பக்கத்திலேயே விடமாட்டார்கள். 

பல பள்ளிகளில் நூலகங்கள் அமைத்துக் கொடுத்திருக்கிறோம். சற்றேறக் குறைய முப்பது பள்ளிகள் இருக்கும். அவற்றில் எவ்வளவு சிறப்பாகச் செயல்படுகின்றன என்று கணக்கிட்டால் ஆரம்பக்கட்டத்தில் உணர்ச்சி வசப்பட்டுத் தேர்ந்தெடுத்த பள்ளிகள் பலவற்றில் உருப்படியாக இல்லை. ஆசிரியர்கள் மாறிப் போன பிறகு புத்தகங்கள் கேட்பாரற்றுக் காணாமல் போயிருக்கின்றன. அதனால் இப்பொழுது பொறுப்பில் இருக்கும் தலைமையாசிரியர், அவரது செயல்பாடு, ஒருவேளை அவர் ஓய்வு பெற்றுவிட்டால் அல்லது மாற்றலில் சென்றுவிட்டால் அவர் விட்டுச் செல்லும் பணிகளை முன்னெடுக்கும் ஆசிரியர் குறித்தான தகவல் என பலதரப்பட்ட தகவல்களையும் நம்மைச் சார்ந்தவர்கள் விசாரிக்க வேண்டியிருக்கிறது. தீரவிசாரித்துத்தான் இருபத்தைந்து பள்ளிகளை முடிவு செய்திருக்கிறோம்.

பள்ளிகளின் பட்டியல் தயாரிப்பது, அவர்களிடமிருந்து வேண்டுகோள் கடிதங்களைப் பெற்று அவற்றைத் தொகுத்து நிறுவனத்துக்கு வழங்குதல், அவர்கள் கேட்கும் பிற கடிதங்களுக்கான பதில் தயாரிப்புகள், போக்குவரத்து ஏற்பாடு, உபகரணங்களுக்கான விற்பனையாளர் தேடல், அவரிடம் விவரங்களைச் சேகரித்தல், பள்ளிகளுடனான தொடர்பு, நிகழ்ச்சி ஏற்பாடு என சற்றே குடைச்சல் நிறைந்த பணிதான் இது. ஆசிரியர்கள் அரசு தாமஸூம், வரதராஜூம் பல கட்டங்களிலும் உதவினார்கள். ரியாஸ் அகமது என்ற திருப்பூர்க்காரர் வழியாக ஐம்பது கணினிகளுக்கும் தேவையான உபரகணங்களை வாங்குவதற்காக இரண்டேகால் லட்ச ரூபாய் வழங்கப்பட்டுவிட்டது. சனிக்கிழமை (18-05-2019) மாலை நான்கு மணிக்கு நிகழ்ச்சி தொடங்கும். வாய்ப்பிருப்பவர்கள் வருக. ஒன்றரை மணி நேரத்தில் வீட்டுக்குக் கிளம்பிவிடலாம். எழுத்தாளர், சமூகசேவர் என்ற பட்டத்தையெல்லாம் கண்டுகொள்ள வேண்டாம். ஆசிரியர்கள் செய்த வேலை இது. அடுத்த முறை இப்படியெல்லாம் சுமக்க முடியாத சுமையையெல்லாம் தூக்கி என் தலை மீது வைக்க வேண்டாம் என்று உறுதியாகச் சொல்லிவிடலாம். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் அனைத்தையும் ஆசிரியர்கள்தான் செய்கிறார்கள்.

எனக்குத் தலைமையாசிரியராக இருந்த இனியன்.அ.கோவிந்தராஜூ கரூரிலிருந்து வருகிறார். நிகழ்வில் பேசுகிற அனைவருமே ஆசிரியர்கள்தான். உள்ளூரில் ஆசிரியர்களுக்கிடையிலான கல்வி சார்ந்த ஒரு பயனுள்ள கருத்துரையாடலாக இருக்க வேண்டும் என விரும்புகிறோம். கணினியுகத்தின் எதிர்கால வளர்ச்சி, அதில் நம் மாணவர்கள் கால் பதிக்க என்ன மாதிரியான விதைகளைப் போட சாத்தியங்கள் இருக்கின்றன என்பதைப் பற்றி மட்டும் பேசலாம் என்றிருக்கிறேன்.

கடந்தமுறை ஸாஸ்கன் நிறுவனத்திலிருந்து கணினிகளைப் பெற்ற போது ‘ஈ-வேஸ்ட்டுன்னு கழிச்சுக்கட்டுறாங்க...அதை ஏன் தூக்கிட்டு வர்றீங்க?’என்றார்கள். அத்தகையவர்கள் தயவு செய்து ஒதுங்கிக் கொள்ளவும். எனக்கும் ஈவேஸ்ட் குறித்துத் தெரியும். ஆனால் அனைத்துமே செயல்படக் கூடிய வகையில் இருப்பவை. ஒவ்வொன்றையும் தரம் பார்த்துத்தான் கொடுக்கிறார்கள். இந்த உலகில் பயனற்றவை என்று எதுவுமேயில்லை. எங்கேயாவது யாராவது அது நமக்குக் கிடைத்துவிடாதா என்று ஏங்கிக் கொண்டுதான் இருப்பார்கள். மார்க்கெட்டில் இதன் ஒவ்வொன்றின் மதிப்பும் குறைந்தபட்சம் சுமார் பத்தாயிரம் வரைக்கும் போகும். ஐம்பது கணினிகள் என்றால் ஐந்து லட்ச ரூபாயாவது தேவைப்படும். அதை ஒரு நிறுவனம் இலவசமாகக் கொடுக்கிறது.  அதோடு சேர்த்து இரண்டே கால் லட்ச ரூபாய்க்கு உபகரணங்களைப் பெற்று இருபத்தைந்து பள்ளிகளுக்குக் கணினிகளை வழங்குகிறோம். அவற்றில் சில பள்ளிகள் கணினி ஆய்வகங்களை அமைக்கிறார்கள். கிராமத்துக் குழந்தைகளுக்கு இவையெல்லாம் பெரிய விஷயங்கள். இதைச் சாத்தியப்படுத்திய ஃபோர்டு நிறுவனத்துக்கும், உதவிய கோகுலகிருஷ்ணனுக்கும், அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.

நிகழ்வில் சந்திப்போம்.

May 14, 2019

யூத் மாமூ

‘உங்களுக்கு வயசாயிடுச்சுங்கப்பா’ என்று மகி சொல்லும் போது கொஞ்சம் கோபம் வரும். அவன் இதை அடிக்கடி சொல்கிறான். 

முப்பத்தேழு எல்லாம் ஒரு வயதா? இன்னமும் ‘யூத் மாமூ’ என நாமாக நினைத்துக் கொள்ள வேண்டியதுதான். ஆனால் இந்த உலகம் சிலவற்றை அழுத்தம் திருத்தமாகச் சுட்டிக்காட்டும். உதாரணம் சொல்ல வேண்டுமானால் எல்லோருக்கும் தெரிந்ததுதான் - நம்மை விட இளவயதுள்ள இன்றைய கல்லூரிப் பெண்களை நாம் மட்டும்தான் பார்த்துக் கொண்டிருப்போம். அவர்கள் திரும்பிக் கூடப் பார்க்க மாட்டார்கள். பத்து வருடங்களுக்கு முன்பாக இப்படியில்லை. போனால் போகட்டும் என்றாவது திரும்பிப் பார்த்தார்கள். இப்பொழுதெல்லாம் ம்ஹூம். சோலி சுத்தம். 

‘அது வேறொண்ணுமில்ல சொட்டை விழுந்துடுச்சுல்ல’ என்று நமக்கு நாமே சமாதானம் சொல்லிக் கொள்ள வேண்டியதுதான். நாற்பதுகளை நெருங்குகையில் தலைக்கு மேலாக நிறத்தையோ, மொத்தமாகவோ இழந்து ஒரு கட்டத்தை அடைந்த பிறகுகும் கூட முப்பத்தைந்தைக் கடந்த பெண்கள் ஓரளவுக்கு கவனிக்கிறார்கள். சக வயது தோழியர். இளவயதுக் கணவனாக இருந்தால் இப்படி சைட் அடிப்பதைக் அறவே வெறுத்து நம்மை முறைப்பார்கள். ஆனால் முப்பத்தைந்தைக் கடந்த தோழியர்களுடன் இருக்கும் நம்மைப் போன்ற அரைக்கிழ அங்கிள்கள்- அவர்களுக்கு பெரிய அக்கறையெல்லாம் இல்லை. பார்த்தால் பார்த்துவிட்டுப் போ என்று தண்ணீர் தெளித்துவிடுகிறார்கள்.  இவர்களாவது கவனிக்கிறார்களே என்று சந்தோஷப்பட்டுக் கொள்ள வேண்டும். இன்னும் பத்து வருடங்களுக்குப் பிறகு முப்பத்தைந்துகளும் பார்க்க மாட்டார்கள். ஐம்பதைத் தொடும் பெண்கள் மட்டுமே பார்க்கக் கூடும். அதுவும் வாழ்க்கை சலித்துப் போன பெண்களாக இருந்தால் ஜந்துவைப் பார்ப்பதைப் போலக் கூட பார்க்காமல் தவிர்த்துவிடக் கூடும். அப்பொழுது அங்கிள் என்ற நிலையிலிருந்து தாத்தா என்றொரு கட்டத்துக்கு நகர்ந்துவிட்டோம் என்று அர்த்தம். 

அதன்பிறகு இந்த டோரிக் கண் சைட்டையெல்லாம் கூட சுத்தமாக மூட்டை கட்டி வைத்துவிட்டு அறிவுரை மட்டுமே சொல்ல வேண்டும். எங்கள் அபார்ட்மெண்ட்டில் ஒரு தாத்தா இருக்கிறார். காலையில் ஒரு தொப்பி, அரை ட்ரவுசரைப் சகிதமாக வந்துவிடுவார். எதிர்ப்படும் ஒருவர் பாக்கியில்லாமல் அட்வைஸ்தான். அதுவும் கடுப்பேற்றும் அட்வைஸ். அபார்ட்மெண்ட்டுக்கு குடிவந்த புதிதில் சின்னவனை எடுத்துக் கொண்டு போகும் போது அவன் செடியில் இருக்கும் பூவைக் கேட்டான். ஒரேயொரு பூவைப் பறித்தேன். தாத்தா வந்து ‘வணக்கம் சார்’ என்றார். நமக்கு எதுக்கு சம்பந்தமேயில்லாமல் வணக்கம் வைக்கிறார் என்று புரியாமல் ‘வணக்கம் சார்’ என்றேன். மீண்டும் அதே ‘வணக்கம் சார்’. ஒருவேளை லூசாக இருக்குமோ என்று நினைத்து அரை நம்பிக்கையில் மீண்டும் ‘வணக்கம் சார்’ என்றேன். அதன் பிறகும் அதே ‘வணக்கம் சார்’ சத்தியமாக லூசுதான். மெல்ல நகரப் பார்த்தேன். 

‘பூ வேணும்னா வெளியில் பத்து ரூபா கொடுத்தீங்கன்னா வேண்டாங்கிற அளவுக்கு கிடைக்குது..செடியில ஏன் பறிக்கிறீங்க?’ என்றார். அதாவது சண்டைபோடாமல் என்னைத் திருத்துகிறாராம். பூவைச் செடியில் பறிக்காமல் என் மண்டையிலா பறிக்க முடியும்? வந்த புதிதில் சண்டை வேண்டாம் என்று வழிந்து விட்டு வந்து கருவிக் கொண்டிருந்தேன். அதன் பிறகு எங்கே அந்த ஆள் கண்ணில்பட்டாலும் யாருக்காவது அட்வைஸ் செய்து கொண்டிருக்கிறார். கடைசியாகப் பார்த்த போது ‘மீண்டும் மோடி; வேண்டும் மோடி’ என்று டீஷர்ட் அணிந்திருந்தார். தலை தெறிக்க ஓடி வந்தவன்தான். 

அங்கிளில் ஆரம்பித்து மோடிக்கு வந்துவிட்டேன். யாராவது சண்டைக்கு வந்துவிடுவார்கள். எதற்காகச் சொல்ல வந்தேன் என்றால் அந்தந்த வயதில் அதற்குரிய செயலை மட்டும் செய்ய வேண்டும். அங்கிள் ஆன பிறகு  டை அடிப்பதும், தொப்பையை உள் இழுப்பதும், நிறைய பவுடர் பூசி, செண்ட் அடித்தவர்களாகவும் திரிகிற அங்கிள்களும், தாத்தாக்களும் இந்த உலக உண்மையைப் புரிந்து கொள்ளாதவர்கள் என்று நினைக்கிறேன். தாம் இளமையாக இருப்பதாக நினைத்துக் கொண்டு வரிந்து கட்டிக் கொண்டு சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். சிலரால் மட்டுமே வெற்றிகரமாக வயதைக் குறைத்துக் காட்ட முடிகிறது. பெரும்பாலானவர்களுக்கு அசிங்கமாகத்தான் இருக்கிறது. 

சமீபத்தில் மதுரை சென்றிருந்தேன். கடந்த சில முறைகளாக கோவிலுக்கு வரும் போதெல்லாம் ‘உன்னை அடிக்கடி பார்க்கிற மாதிரி வாய்ப்புக் கொடு’ என்று சொக்கநாதரிடம் கேட்டுக் கொள்கிறேன். அதனால் அடிக்கடி வந்துவிடுகிறேன் போலிருக்கிறது. அரசரடி சாலையில் நகரப்பேருந்தில் சென்று கொண்டிருக்கும் போது ஒரு ஆளைப் பிடித்து செமத்தியாக மொத்தியெடுத்தார்கள். சலசலவென்று பேச்சுதான் ஆரம்பமானது. திரும்பிப் பார்ப்பதற்குள் சடசடவென்று அடி விழத் தொடங்கியது. மதுரைக்காரனுக இப்படித்தான் போலிருக்கிறது. அந்த ஆள் சற்று வயது கூடிய கிழம்தான். மேக்கப் போட்டு வந்து பேருந்தில் ஏறி அருகில் நின்ற பெண்ணிடம் உரசியிருக்கிறார். கும்மியெடுத்துவிட்டார்கள். ‘தெரியாம செஞ்சுட்டேன் மன்னிச்சுடுங்க’ என்று கெஞ்சி அழத் தொடங்கினார். அதற்குள் சிலர் கேமராவில் இந்த சம்பவத்தை பதிவு செய்யத் தொடங்கிவிட்டார்கள். இந்நேரம் வாட்ஸாப்பில் உலா வரத் தொடங்கியிருக்கும். காவல் நிலையம் அழைத்துச் செல்வதாகக் கூட்டத்தில் ஒருவர் சொன்னவுடன் அவர் காலைத் தொட்டுக் கெஞ்சினார். கடைசியில் வெறியெடுத்த மாதிரி அடித்து கீழே இறக்கிவிட்டுவிட்டார்கள். அடியைக் கூட மறைத்துவிடலாம். வாட்ஸாப் வீடியோவை மறைக்கவா முடியும்? இனிமேல் எந்தக் காலத்திலும் அவர் மேக்கப் போடமாட்டார் என நினைக்கிறேன்.

சொக்கநாதரைப் பார்க்கச் சென்றேன். தனியான சந்நிதியில் அமர்ந்திருந்தார். நினைவு முழுவதும் பேருந்தில் அடி வாங்கியவரே ஆக்கிரமித்திருந்தார். நவீன காலத்தில் சிறு தவறு கூட மிகப்பெரிய தழும்பாக மாறிவிடும். ‘ஏஞ்சாமி உனக்கும் பொண்டாட்டிக்கும் தனித்தனி சந்நிதி’ என்று கேள்வி மனதுக்குள் ஓடிக் கொண்டிருந்தது. ‘பொண்டாட்டின்னாவே கூட தள்ளி இருந்துக்கிறதுதான் நல்லது. கைல கேமிராவை வெச்சுட்டு எவன் எப்போ கிளப்பிவிடுவான்னு தெரியாது’ என்றார் சொக்கநாதர். முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை என்று வாட்ஸாப்பில் வந்திருந்த செய்திகளை ஃபார்வேர்ட் செய்யத் தொடங்கினேன்.

May 10, 2019

பற்ற வைத்த நெருப்பொன்று

ஹாக்கி பெண்களும் அவர்தம் பெற்றோரும் மேடைக்கு வர, ஐந்து லட்சத்து இருபதாயிரத்துக்கான காசோலையை கல்லூரி நிர்வாகத்தினரிடம் வழங்கிவிட்டோம்.  நேரடியாகக் கல்லூரிக்குச் சென்று காசோலையைக் கொடுத்துவிடுவதுதான் திட்டமாக இருந்தது. ஆசிரியர் அரசு தாமஸ்தான் இதனை ஒரு நிகழ்வாகச் செய்ய வேண்டும் என்றார். நிசப்தம் சார்புடையவர்களை அழைத்து இரண்டே நாட்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. தாமஸ், கார்த்திகேயன் போலவே கோபிக்கலைக்கல்லூரியில் கலைச்செல்வி என்றொரு பேராசிரியர் இருக்கிறார். சூப்பர் 16 மாணவர்களை ஒருங்கிணைப்பதெல்லாம் அவர்தான். எள் என்பதற்கு முன்பாக எண்ணெய்யாக இருக்கும் பேராசிரியர் அவர். நிகழ்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டார். 

யாரைச் சிறப்பு விருந்தினராக அழைப்பது என்றொரு குழப்பம் இருந்தது. எல்.ஐ.சி சீனு என்று ஒருவர் இருக்கிறார். ஊக்குவிக்கும் விதமாக பேசுவதில் வித்தகர். அவரிடம் பேசினோம்.  ‘அதுக்கென்ன தம்பி வந்துடுறேன்’ என்றார். அடுத்ததாக தமிழ்நாடு பனியன் உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர் சங்கத்தின் தலைவரிடம் அடர்வனம் ஆனந்த் பேசினார். அவர் சரியென்று சொன்னவுடன் ஏற்பாடுகள் மடமடவென்று ஆரம்பமாகின. நிகழ்ச்சிக்கு எம்.ஜி.ஆர் காலனியிலிருந்து வண்டி பிடித்து ஒரு கூட்டம் வந்து சேர்ந்தது. கோவையிலிருந்து ராம்கி, பிரகாஷ், ஒட்டன்சத்திரம் விக்னேஷ், ஈரோடு மூர்த்தி, ரமேஷ், பெருந்துறை ஜெயபால், கானுயிர் ஆர்வலர்கள் ராமமூர்த்தி, திவ்யா என்று நிசப்தம் வழியாக உருவான நண்பர்கள் கூட்டமே திரளாக இருந்தது. 

நிசப்தம் ஒருங்கிணைக்கும் கோட்டுப்புள்ளாம்பாளையம் அடர்வனக் குழு, தெற்குப்பதி இளைஞர்கள் குழு, இளங்கோ, வரதராஜன், ரமாராணி உள்ளிட்ட சுற்றுவட்டார ஆசிரியர்கள் என்று தனித்தனி குழுக்கள் - அனைவரது பெயரையும் குறிப்பிட்டால் அதற்கு தனியாக ஒரு பதிவு எழுத வேண்டும்.

அரங்கு நிறைந்த கூட்டம். 

கல்லூரியின் செயலாளர் தரணி, டீன் செல்லப்பன், முதல்வர் தியாகராசன் உள்ளிட்ட நிறையப் பேராசிரியர்கள் வந்திருந்தார்கள். கல்லூரியைச் சார்ந்த விளையாட்டு மாணவர்களும் நிறையப் பேர் வந்திருந்தார்கள். அந்த மாணவர்களிடம் பேசுகிற வாய்ப்புக் கிடைத்தது. பதினோரு நிமிடங்கள் பேசினேன். மொபைல் பதிவுதான். வாய்ப்பிருப்பவர்கள் கேட்டுவிட்டு எப்படி பேசியிருக்கிறேன் என்று சொல்லவும். 


மேடையைத் தவிர தனியாகவும் அந்தப் பெண்களிடம் பேசியிருக்கிறேன். அவர்களிடம் ஒரு நெருப்பு இருப்பதை உணர முடிகிறது. சில மாணவர்களிடம் இருக்கும். அத்தகைய முழுமையாக நம்பலாம். இவர்கள் அப்படியான மாணவர்கள்தான். இப்போதைக்கு நன்கொடையாளர்கள் உட்பட எல்லோருடைய நோக்கமும் அந்தப் பெண்கள் ஏதாவதொருவகையில் பிரகாசித்துவிட வேண்டும் என்பதுதான்.


பத்துப் பெண்களில் ஒருத்தியை மேடைக்கு அழைத்தார்கள். கூட்டத்தில் இருந்த எல்லோரையும் விடவும் அவள் பேசியதுதான் சிறப்பு. எல்லாவற்றையும் பேசிவிட்டு இறுதியாக ‘என்ன பேசுவதென்று தெரியவில்லை’ என்று அப்பாவியாகச் சொன்னாள். 

மாணவிகளை அவர்களது பயிற்சியாளர் அருள்ராஜூம், கல்லூரியின் உடற்கல்வி ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தியும் பார்த்துக் கொள்வார்கள். அவர்கள் இரண்டு பேருமே அர்பணிப்புமிக்கவர்கள். 

இரண்டு நாட்களாக மனதுக்குள் இந்த நிகழ்வுதான் ஓடிக் கொண்டிருந்தது. செய்தி வெளியில் தெரிந்த பிறகு ‘இவர்களை ஏன் அங்கு சேர்க்கவில்லை? ஏன் இங்கு சேர்க்கவில்லை?’ என்று நிறைய அறிவுரைகள் வருகின்றன. அவர்களிடம் என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. செய்யும் வரைக்கும் எதுவுமே பேசமாட்டார்கள். செய்து முடித்த பிறகுதான் இப்படியெல்லாம் கேட்கத் தொடங்குவார்கள். ‘நீங்க என்னதான் செஞ்சாலும் டீம் செலக்‌ஷன்ல இருக்கும் அரசியலைத் தாண்டி அவர்களால் எதுவுமே செய்ய முடியாது’ என்று கூடச் சொல்கிறார்கள். எங்களுக்கும் அந்த பயம் இருக்கிறது. ஆனால் தயங்கிக் கொண்டேயிருந்தால் எதைத்தான் செய்ய முடியும்?  ‘ஒன்றுமேயில்லாவிட்டாலும் பத்துப் பெண்களைப் பட்டம் வாங்க வைக்கிறோம் என்ற திருப்தியாவது கிடைக்குமல்லவா? அது போதும்’இப்படித்தான் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. 

ஆனால் ஒன்று - இப்பொழுதெல்லாம் எதுவும் பேசக் கூடாது. ‘புதுசுக்கு வண்ணான் கடுசுக்கு வெளுத்தான்’ என்றொரு பழமொழி உண்டு. ஆரம்பத்தில் ஜோராகத் தொடங்கும். போகப் போகச் சுணங்கிவிடும்.  எவ்வளவு பார்த்துவிட்டோம்! தொடக்க நிகழ்ச்சியை ஆஹா ஓஹோவென்றெல்லாம் பேச வேண்டியதில்லை. சிறப்பாகத் தொடங்கியிருக்கிறோம். அவ்வளவுதான். 

அசாதாரணமான வெற்றி ஒன்றை அவர்கள் அடையட்டும். அதன் பிறகு விரிவாக எழுதுகிறேன். அவர்கள் அப்படியொரு வெற்றியை அடைவார்கள் என்ற முழுமையான நம்பிக்கை இருக்கிறது. அதுவரையிலும் சத்தமில்லாமல் பின் தொடர்வோம்.

(காணொளியைக் காண ப்ரவுசரில் பதிவை வாசிக்கவும்)

May 7, 2019

புல்டோசர்

கருப்பணசாமி அப்பாவின் நண்பர். மின்வாரியத்தில் ஒன்றாகப் பணியாற்றியவர்கள். கோவில்களில் யாகம் நடத்துவது தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் அவர் கேட்டிருந்த கேள்விகள் இணையத்தில் வைரல் ஆகுவதற்கு முன்பாகவே அவரை அழைத்து வாழ்த்தைச் சொன்னேன். ‘எதுக்கும் தயாரா இருந்துக்குங்க...ஃபோன் நெம்பர் வேற தெளிவா இருக்குது’ என்றேன். அவர் அசரும் மனிதரில்லை. ‘அதுக்குத்தான் தயாராகிட்டு இருக்கேன்’ என்றார். அவரது விண்ணப்பத்தை ஃபேஸ்புக்கில் பகிர்ந்தவுடன் கடந்த ஆண்டு அக்னிக்கும்பம் எடுத்த படத்தைப் போட்டு ஒருவர் என்னைக் கலாய்த்திருந்தார். 


சில மாதங்களுக்கு முன்பாகப் பெரியார் குறித்து ஏதோ கருத்துச் சொன்ன போதும் இன்னொருவர் இதையே செய்தார். அதாவது ‘உனக்கு கடவுள் நம்பிக்கை இருப்பதனால் நீ இந்து மதத்தை விமர்சனம் செய்யக் கூடாது; பெரியாரைப் புகழக் கூடாது’ என்கிற மாதிரியான வாதங்கள் இவை. கடவுள் நம்பிக்கை என்பது தனிப்பட்ட மனிதனைச் சார்ந்ததாக இருக்கும் வரைக்கும் பிரச்சினை இல்லை. அது ஆபத்துமில்லை. பெரும்பாலான தனிமனிதர்களின் கடவுள் நம்பிக்கை மிக எளிமையானது. எல்லாவற்றையும் கொட்டுவதற்கு ஓர் உருவம். சலித்துப் போகும் போதெல்லாம் ‘நீ எந்திரிச்சுக்குவ’ என்று காதுக்குள் சொல்லக் கூடிய ஒரு வடிவம். அவ்வளவுதான். அது யாரையும் எந்தவிதத்திலும் பாதிப்பதில்லை.

அரசாங்கம் அப்படியில்லை. அது எந்தவொரு சார்பு நிலையையும் எடுக்கக் கூடாது. எல்லோருக்கும் பொதுவான அரசாங்கமானது அலுவல்ரீதியாக தன்னுடைய மத நம்பிக்கையை வலியுறுத்துவது ஆபத்தானது. தலைமைச்செயலகத்துக்குள் யாகம், மழை வேண்டி யாகம் என்று யாரோ சொல்வதைக் கேட்டு ஒரு பக்கச் சார்பாக அரசாங்கம் தம்முடைய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது அதை எதிர்க்கத்தான் வேண்டும். 

மாரியம்மனும் கருப்பராயனும் இருந்த கோவில்களுக்குள் நவக்கிரகங்களை வைத்து ‘கிடா வெட்டுவது தவறு’ ‘அய்யர்தான் பூசை செய்யணும்’ என்றெல்லாம் மாற்றிய வரலாறுகள்தான் நம்முடையது. பண்டாரங்களை வெளியேற்றிவிட்டு பார்ப்பனர்கள் கைப்பற்றிக் கொண்ட பூசை முறைதான் இன்றைக்கு நாம் பின்பற்றிக் கொண்டிருப்பது. இன்னமும் மிச்சம் மீதி இருக்கும் பண்பாட்டு எச்சங்களையெல்லாம் புல்டோசரை வைத்து ஏற்றிவிட்டு ‘எல்லாமே இந்துத்துவா’ என்று வடக்கத்திய, பிராமணர்களின் நம்பிக்கைகளை, ஆச்சாரங்களை முழு வீச்சில் பரவலாக்க மத்திய அரசானது மாநில அரசு வழியாக எத்தனிக்கும் போது எந்தவிதச் சலசலப்புமில்லாமல் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?

மதச்சம்பிரதாயங்கள், நம்பிக்கைகள் போன்றவை தனிமனிதர்களின் விருப்பம் சார்ந்தவையாக இருக்கும் போது பண்பாட்டு ரீதியிலான நசுக்குதல் எதுவும் நிகழ்வதில்லை. தனிமனிதர்களுக்குள் சச்சரவுகளுமில்லை. ஆனால் இவற்றில் அரசாங்கம் மூக்கை நுழைத்து, அதிகாரமிக்க உத்தரவுகளைப் பிறப்பிக்கும் போது வலுவற்றவர்களின் நம்பிக்கைகள் ஓரங்கட்டப்படும். இதுதான் இன்றைக்கு நிகழ்ந்து கொண்டிருக்கிறது. 

பல நூறு ஆண்டுகளாக தம்முடைய முன்னோர்களின் சிறுதெய்வ வழிபாடு, நாட்டார் தெய்வங்கள் குறித்தான எந்தவிதமான புரிதலுமில்லாத, மூத்த குடிகளின் வழிபாட்டு முறை, தமது இறைநம்பிக்கை சார்ந்த பண்பாடு ஆகியன குறித்து அறியாத, மூளைச்சலவை செய்யப்பட்ட ஒரு இளந்தாரிக் கூட்டம் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்தக் குழுதான் ‘எல்லாமே காவி’ என்று நம்புகிற கூட்டம். அவர்களுக்கு அய்யனார் பற்றியோ, கன்னிமார் சாமி பற்றியோ எதுவும் அக்கறையில்லை. காவி அணிந்தால் போதும். பாவாடை, குல்லா என்று வசைபாடினால் போதும். மற்ற எந்தக் கவலையுமில்லை. காவி நிறச் சுனாமியொன்று நம் ஒவ்வொருவரின் தனித்த அடையாளங்களையும் கபளீகரம் செய்ய எத்தனிக்கிறது என்பதைப் பற்றிப் புரிய வைக்க யாராவது பேசித்தானே ஆக வேண்டும்?

நம் அடையாளங்களை அழித்து ‘எல்லாமே ஒண்ணுதான்’ என்று சொல்லும் அந்தக் காவிச் சுனாமிக்கு கம்பளம் விரிப்பதைத்தான் மறைமுகமாகச் செய்து கொண்டிருக்கிறார்கள். அதைப் புரிந்து கொள்ள வேண்டியதில்லையா? ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு நம்பிக்கை இருக்கிறது. அலகு குத்துதல், அக்னிக்கும்பம் எடுத்தல், தீ மிதித்தல், பலி கொடுத்தல் என்று பல நூறாண்டுகளாகப் பின்பற்றி வரும் இந்த நம்பிக்கைகளில் பெரும்பாலானவை ஊர் நலம் பெற வேண்டும் என மழை வேண்டுவதாகத்தான் இருக்கிறது. இவை எல்லாவற்றையும் ஓரங்கட்டிவிட்டு ‘யாகத்தை நடத்துங்கள்; அண்டாவில் கழுத்தளவு நீரில் அமருங்கள்’ என்றெல்லாம் இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிடுவதன் உள்நோக்கம் என்னவாக இருக்க முடியும்?

ஒரு மிகப்பெரிய கலாச்சார ஆக்கிரமிப்பை கமுக்கமாக நிறைவேற்றிக் கொண்டிருக்கும் அரசாங்கத்தைப் பார்த்து சிறு சலசலப்பை உருவாக்கினால் கூட தனிமனித நம்பிக்கைகளைக் கேள்வி கேட்கிற மூளைச்சலவைக் கூட்டத்துக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டியதில்லைதான். ஆனால் பழைய படத்தையே காட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு வருடமும்தான் அக்னிக்கும்பம் எடுக்கிறேன். புதுப்படத்தை வெளியிட நமக்கும் ஒரு சாக்குப் போக்கு வேண்டுமல்லவா? இவர்களது கேள்வியை சாக்காகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டியதுதான்.

சித்திரை மாதத்தில் உச்சி வெயிலில் மதியம் ஒரு மணிக்கு காலில் செருப்பில்லாமல் தகிக்கும் தார்ச் சாலையில் அக்னிக்கும்பத்தை எடுத்துக் கொண்டு இரண்டு அல்லது மூன்று மணி நேரம் ஊரைச் சுற்றி கோவிலுக்கு வந்து பார்த்தால் புரியும். கும்பத்துக்குள் பற்ற வைத்த நெருப்பு மெல்ல மெல்ல சட்டியில் இறங்கும்.  எப்படியும் கொண்டு போய்ச் சேர்த்துவிடலாம் என்ற மன உறுதி ஏறிக் கொண்டேயிருக்கும். சற்று மனம் பதறும் போதெல்லாம்  ‘இத்தனை பேர் வர்றாங்க..நாம போக மாட்டோமா’ என்று திரும்பத் திரும்ப நினைக்கத் தோன்றும். இப்படி ஏறுகிற உறுதி அடுத்த ஒரு வருடத்திற்கான டானிக். இதற்காகவாவது ஒவ்வொரு வருடமும் எடுப்பேன்.

May 4, 2019

வருக!

புஞ்சை புளியம்பட்டி அரசுப் பள்ளி மாணவிகளைக் கொண்ட ஹாக்கி அணியை முழுமையாகத் தத்தெடுத்திருக்கிறோம். தேசிய அளவிலான ஹாக்கி போட்டிகளில் கலந்து கொண்ட இந்த பத்து கிராமத்து மாணவிகளும் கோபி கலைக்கல்லூரியில் பி.காம் படிக்கவிருக்கிறார்கள். அவர்களுக்கான கல்வி மற்றும் விடுதிக்கான முழு உதவி தொகையை நிசப்தம் நன்கொடை வழியாக நாம் வழங்கவிருக்கிறோம். அவர்களின் பயிற்சி, போட்டிகள் ஆகியவற்றைக் கண்காணிப்பதோடு உலகத் தரம் வாய்ந்த விளையாட்டு மனோவியல் நிபுணரின் ஆலோசனை என இந்தப் பெண்கள் அடுத்த கட்டத்துக்கு நகர்வதற்கான எல்லாவிதமான முன்னெடுப்புகளையும் எடுக்கும் திட்டமும் இருக்கிறது.

வரும் ஞாயிற்றுக்கிழமை (மே 05,  2019) அன்று காலை பத்து மணிக்கு மாணவிகளையும், அவர்தம் பெற்றோரையும், மாணவிகளின் பயிற்சியாளரையும் அழைத்து ஓராண்டுக்கான (2019-2020) உதவித் தொகையான ஐந்து லட்சத்து இருபதாயிரம் ரூபாயை வழங்கி, அவர்களிடம் நமது எதிர்பார்ப்பு என்ன என்பதைச் சொல்லி, அவர்களுக்கு எப்படியெல்லாம் உதவ இயலும் என்பதையும் விரிவாகப் பேசவிருக்கிறோம். 

கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்திலேயே எளிமையான நிகழ்ச்சியாக நடைபெறவிருக்கிறது. நிசப்தம் அறக்கட்டளையுடன் எந்த வகையிலாவது தொடர்புள்ளவர்களையெல்லாம் அழைத்துவிட வேண்டும் என்று விரும்புகிறேன். கலந்து கொள்வது என்பது எல்லோருக்கும் சாத்தியமில்லை என்பதும் புரிகிறது.  ஆனால் வாய்ப்பிருப்பவர்கள், வாய்ப்பினை உருவாக்கிக் கொள்ள முடிகிறவர்கள் நிச்சயமாகக் கலந்து கொள்ள வேண்டும் என அன்போடு அழைக்கிறோம்.

கிராமத்திலிருந்து மேலேறி வரும் இந்தப் பெண்களுக்கு உத்வேகமளிக்கும் நிகழ்வாக இது இருக்க வேண்டும். 

ஞாயிற்றுக்கிழமை காலையில் சந்திப்போம்!

அன்புடன்,
வா.மணிகண்டன்

தொடர்புக்கு: 9842097878

தொடர்புடைய சுட்டிகள்:

May 1, 2019

சந்தோஷம் - கோமதி 10

கல்லூரி மாணவிகளுக்கு கார்போரேட் உதவி கோரி நேற்று எழுதியிருந்த பதிவுக்குப் பிறகு ஏகப்பட்ட பேர் தொடர்பு கொண்டார்கள். மாலை நெருங்கும் போது எவ்வளவு பேர்களிடம் பேசினோம் எனக்கே குழப்பமாகிவிட்டது. பத்துப் பேர் தலா ஒரு பெண்ணுக்கான செலவினை ஏற்றுக் கொண்டார்கள். செந்தில்மோகனும் வினோத்தும் சவீதாவும் நிசப்தம் தளத்தின் வழியாக நீண்டகாலமாகத் தொடர்பில் இருப்பவர்கள். வினோத் வருடம் இருபத்தைந்தாயிரம் ரூபாயும், செந்தில் வருடம் பத்தாயிரம் ரூபாயும் சவீதா பதினைந்தாயிரம் ரூபாயும் தருவதாக தகவல் அனுப்பியிருந்தார்கள். மூவரின் தொகையையும் சேர்த்தால் இன்னுமொரு ஐம்பதாயிரம். பத்துப் பெண்களுக்கான உபகரணங்கள் உட்பட தேவையான அளவு நிதி சேர்ந்துவிட்டது. 

பனிரெண்டாவது, பதின்மூன்றாவது என பின்னர் தொடர்பு கொண்டவர்களிடம் அன்போடு மறுக்க வேண்டியதாகிவிட்டது. இன்று காலையில் அவர்களை அழைத்தும் மின்னஞ்சல் அனுப்பியும் மறுத்திருக்கிறேன். அவர்கள் யாவரும் பொறுத்தருள்க. வேறொரு நல்ல தருணம் அமையும் போது பயன்படுத்திக் கொள்வோம். 

கோபி கலைக்கல்லூரியில் உருவாக்கப்படும் புஞ்சைப் புளியம்பட்டி ஹாக்கி அணியின் நன்கொடையாளர்களாக பின்வரும் பத்துப் பேர்களும் இருப்பார்கள்.
 1. சக்திவேல் ராமசாமி
 2. சரவணன் இளங்கோ & பூங்குன்றன் இளங்கோ
 3. பால கிருஷ்ணன் மற்றும் நண்பர்கள். (அய்யப்பன், ராம், ரமேஷ், சுதா, தணிகைவேலன்)
 4. ராம் கார்த்திகேயன்
 5. ஸ்ரீராம் நாராயணன்
 6. ராமமூர்த்தி பொன்னுசாமி
 7. சேதுபதி
 8. தங்கராஜூ ராமசாமி
 9. மஞ்சுநாதசுவாமி மடிக்கே
 10. வள்ளியப்பன் சுவாமிநாதன்
 11. வினோத், செந்தில்மோகன் மற்றும் சவீதா
வருடம் ஐம்பதாயிரம் ரூபாய் அதுவும் மூன்று வருடங்களுக்குத் தொடர்ச்சியாகத் தர வேண்டும் என்பது பெரும் தொகை. ஒரே நாளில் முடிவெடுத்துத் தோள் சேர்த்த நண்பர்களுக்கு நன்றி.  வழக்கம்போலவே ‘போதும்’ என்று எழுதுகிற அளவுக்கு வேகமாக இருக்கிறார்கள். அத்தனை பேருக்கும் மனப்பூர்வமான நன்றி. 

இனி பத்துப் பெண்களிடமும், பயிற்சியாளரிடமும் பேச வேண்டும். இனிமேல் அவர்களின் கைகளில்தான் இருக்கிறது. அவர்களின் வெற்றியே அடுத்தடுத்து வருடங்களில் இத்தகைய திட்டத்தை மேற்கொள்ளலாம் என்னும் உத்வேகத்தைத் தரும். அதை அழுத்தம் திருத்தமாக அவர்களிடம் சொல்லிவிட வேண்டும். வரும் ஞாயிற்றுக்கிழமையன்று கல்லூரியிடம் இந்த வருடத்திற்கான காசோலையை வழங்கிவிடலாம். 

மனப்பூர்வமாகச் சொல்கிறேன் - நிசப்தம் பெரும்பலம். 

கல்லூரி நிர்வாகமும், பயிற்சியாளரும் இத்திட்டம் குறித்துப் பேசிய போது ‘செய்துவிட முடியும்’ என்ற நம்பிக்கையுடன் பதில் சொல்லியிருந்தேன். அந்த நம்பிக்கைக்கு காரணம் என்னவென்று நிசப்தத்தைப் பின் தொடரும் அனைவருக்குமே தெரியும். ஆனால் தேவையான நன்கொடையாளர்களைச் சேர்க்க எப்படியும் சில நாட்கள் ஆகிவிடும் என்றுதான் நினைத்திருந்தேன். இந்த வேகம் அபரிமிதமானது. ஆச்சரியமூட்டக்கூடியது. இன்னமும் பெரிய திட்டங்களுக்கு திட்டமிடலாம் என்ற நம்பிக்கையை அளிக்கக் கூடியது. ஆனாலும் அளந்து அடியெடுத்து வைக்கலாம்.

எப்பொழுதும் போலவே- உடன் பயணிக்கும் ஒவ்வொருவருக்கும் நன்றி. பயணிக்க வேண்டிய தூரம் இன்னமும் இருக்கிறது. சேர்ந்தே பயணிப்போம்!