‘போகும் போது சொல்லிட்டு போக மாட்டியா?’ என்றெல்லாம் கேட்டுவிட்டார்கள். இணையவெளியில் தொடர்ச்சி மிக அவசியம். ஒரு நாளைக்கு ஐந்து பேர் வாசிக்கத் தொடங்கும் கணக்கு ஆயிரம் பேர் என்ற எண்ணிக்கையைத் தொடவே பல வருடங்களுக்குத் தொடர்ச்சியான உழைப்பு அவசியம். இடைவெளி விழுந்தால் வாசிப்பவர்களின் எண்ணிக்கை மடமடவென்று சரியும். உண்மையில் இந்த இடைவெளியை வேண்டுமென்றே உருவாக்கிக் கொள்ளவில்லை. சில நாட்கள் இடைவெளி கிடைத்தால் நன்றாக இருக்கும் என நினைத்தேன். தேர்தல் வந்துவிட்டது. கள அரசியல் வேறு; இணைய அரசியல் வேறு- இங்கே கம்பு சுற்றுவதால் நான்கு பகையாளிகளைச் சம்பாதிப்பதைத் தவிர கண்டபலன் எதுவுமில்லை. சரி முடியட்டும் என்று காத்திருந்ததைத் தவிர வேறொன்றும் பெரிய காரணமில்லை.
ஏப்ரல் 10 ஆம் நாள் பிறந்தநாள். முப்பத்தியேழு வருடங்கள் முடிந்துவிட்டன.
வடலூர் வள்ளலார் கோவிலுக்குச் சென்று வந்தேன். வடலூரை அடைந்த போது இரவு எட்டு மணி இருக்கும். ‘நேரா சாப்பிட போய்டுங்க’ என்று சொல்லி அனுப்பினார்கள். அன்றைய இரவு எழுநூற்றைம்பது பேர் சாப்பிட்டிருந்ததாகச் சொன்னார்கள். பெரும்பாலும் அந்தக் கோவிலின் வளாகத்தில் படுத்திருக்கும் ஆதரவற்றவர்கள். கடைசிக் கரண்டி சோறு எனக்கானதாக இருந்தது. சாதம், சாம்பார் மட்டும்தான். ஆனால் அதுதான் பல நூறு பேர்களுக்கு தேவாமிர்தம். சாப்பிடுமளவுக்கு பசியில்லை. ஆனால் அங்கே ஒரு கையாவது உண்டுவிட வேண்டும் எனத் தோன்றியது.
உண்டுவிட்டு வந்த போது ஒருவர் ‘கோவில் மூடிட்டாங்க’ என்றார். ‘வெளிய நின்னு கும்பிட்டுக்கிறேன்’ என்றேன். கூடவே வந்தார். எந்தத் தொந்தரவும் செய்யவில்லை என்றாலும் ஏன் அருகிலேயே நிற்கிறார் என்று சங்கடமாக இருந்தது.
‘உங்க கூட தனியாகப் பேசணும்’ என்றார். தனியாகத்தான் இருந்தோம்.
‘சொல்லுங்க’
‘ஒரு நிலம் இருக்கு..இருவத்தஞ்சு கோடி சொல்லுறோம்...ஆனா பத்து கோடிக்குக் கேக்கறாங்க...விலை சரிப்பட்டு வரல...ரியல் எஸ்டேட் ஆளுங்க இருக்காங்களா?’ என்றார். எனக்கு அப்பொழுது வரைக்கும் புரியவில்லை.
‘எந்த ஊரில் இருக்குங்க?’.
‘கொழும்புல...ராஜராஜசோழன் காலத்துல எங்க தாத்தாவுக்குக் கொடுத்தது’ என்றார். புரிந்துவிட்டது. கையில் இருந்த சில்லரைக்களைக் கொடுத்த போது வாங்கிக் கொண்டு புன்னகைத்தார்.
‘ப்ரெண்ட்ஸ் ரியல் எஸ்டேட் செய்யறாங்க..அவங்களை கூட்டிட்டு வர்றேன்...இப்போ தூங்குங்க’ என்று சொல்லிவிட்டு சற்று தள்ளி அமர்ந்து கொண்திருந்தேன். பரந்து விரிந்த வளாகம். அவ்வளவு பெரும் பரப்பில் அமர்ந்திருந்தாலே போதும். சலனங்கள் அடங்கி ஆசுவாசமாகிவிடும். வள்ளலாரின் தத்துவமே இதுதான். முதலில் வயிற்றை நிரப்பி விட வேண்டும். பிறகு மனம் நிறையும். வெக்கை தணிந்து குளிர்காற்று வீசத் தொடங்கியிருந்தது.
பொதுவாகவே எனக்கு ஒரு பெரிய புகார் உண்டு. யாரோ கொடுக்கும் நன்கொடையை வாங்கி யாருக்கோ கொடுக்கிறோம். ஆனால் உதவியைப் பெற்ற பெரும்பாலானவர்கள் ஏன் எந்தத் தகவலும் சொல்வதில்லை என்கிற புகார்தான் அது. பணம் கொடுக்கிறவர்கள் யாருமே இதுவரை கேட்டதில்லை ஆனால் நாம் தகவலைத் தெரிந்து ‘நம் உதவியினால் அவர் அப்படி இருக்கிறார்; இவர் இப்படி இருக்கிறார்’என்று சொல்லிவிட வேண்டும் என்று நினைப்பேன். நிறையப் பேர்களிடம் ‘யாருமே சொல்லுறதில்லைங்க’ என்று சொல்லியும் காட்டியிருக்கிறேன்.
வள்ளலார் மடத்திலேயே நள்ளிரவு வரை அமர்ந்திருந்தேன். எவ்வளவு பெரிய வேலையைச் செய்துவிட்டுப் போயிருக்கிறார் இந்த மனுஷன்?
வடலூரில் வள்ளலார் பற்ற வைத்த அடுப்பு இன்னமும் எரிந்து கொண்டிருக்கிறது. நூற்றைம்பது வருடங்களாக அணையவில்லை. அங்கு அரிசியும் பருப்பும் காசு கொடுத்து வாங்கியதில்லை. தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் உண்கிறார்கள். என்னதான் பேசினாலும் எழுதினாலும் அதன் பிரமாண்டத்தைக் கொண்டு வர முடியாது. ஒரு முறையாவது நேரில் பார்க்க வேண்டும். நூற்றைம்பது வருடங்களாக எத்தனையோ கொடையாளர்கள் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். வாழ வழியில்லாதவர்கள் அதை உண்டு கொண்டிருக்கிறார்கள். யாருமே ‘நன்றி’ என்று கொடையாளர்களிடமோ அல்லது நிர்வாகிகளிடமோ சொல்வதில்லை. அவர்களும் எதிர்பார்ப்பதில்லை.
அறம் சார்ந்த விஷயங்களை இப்படித்தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
நம்மிடம் திரும்ப வருவார்கள் என்று கூட எதிர்பார்க்க வேண்டியதில்லை. உடுக்கை இழந்தவன் கை போல மாதிரி அந்தத் தருணத்தில் உதவுகிறோம். கண்ணீரைத் துடைக்கிறோம்; பசியை ஆற்றுகிறோம்; கல்விக்கு வழிகோலுகிறோம்- அவ்வளவுதான். அடுத்தடுத்த பணிகளைப் பார்க்கச் சென்றுவிட வேண்டும். ‘என்கிட்ட சொல்லலை’ என்று நினைப்பது சிறுமைத்தனம். அதையே நினைத்துக் கொண்டு அப்படியே தேங்கிவிடுவோம். அடுத்தடுத்த கட்டத்துக்கு நகர வேண்டுமெனில் எல்லாவற்றையும் கடந்துவிடத் தெரிய வேண்டும்.
14 எதிர் சப்தங்கள்:
//வடலூரில் வள்ளலார் பற்ற வைத்த அடுப்பு இன்னமும் எரிந்து கொண்டிருக்கிறது. நூற்றைம்பது வருடங்களாக அணையவில்லை.//
ஆச்சரியமாக இருக்கிறது
அண்ணா... தாங்கள் மேலும் மேலும் பக்குவம் அடைந்து எங்களையும் அதை நோக்கி அழைக்கிறீர்கள்....
அருமை அண்ணா...
பிறந்த நாள் வாழ்த்துகள். எதிர்பார்ப்பது மனித இயல்பே. தவறில்லை. நான் படித்து முன்னெறிவிட்டேன் என உதவி பெற்றவர் கூறுவது உதவி செய்தவர்க்கு உற்சாகத்தைத் தரும் என்றே நினைக்கிறேன்.
ஆம் அனையவில்லை
அதே ஊர் பஸ்டான்டில் கையேந்தும் குழந்தைகள் நிறைய...
உடம்பு நிறைய காயங்களுடன், பாலா படத்தில் வருவது போல
பிறந்தநாள் வாழ்த்துக்கள், என்னை வடலூர் நோக்கி செல்ல வைக்கிறது தங்கள் கட்டுரை...நன்றி
கடமையை செய் பலனை எதிர் பாராதே
பிறந்தநாள் நல்வாழ்த்துகள். வாழ்க வளமுடன்.
எழுதுறதுக்கு இம்புட்டு சமாச்சாரத்த வச்சுக்கிட்டுதானா இடைவெளி விடுறீக .
உதவி வரைத்தன்று உதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து.
ஒருவர் செய்யும் உதவியின் அளவு, அதன் மதிப்பைப் பொருத்ததன்று; செய்யப்பட்டவரின் பண்பினைப் பொருத்ததாகும்.
பிறந்தநாள் நல்வாழ்த்துகள். வாழ்க வளமுடன்.
புத்தனுக்கு கண்திறந்தது போதிமரத்தடியில்,உனக்கு கண்திறந்தது வள்ளலார் அடியாக இருக்கட்டும்.வலது காய் கொடுப்பது இடது கைக்கு தெரியக்கூடாது.
An insightful entry. Thanks for sharing.
தற்போது வயசு ஆனதும் பாருங்க. எத்தனை போஸ்ட் ஞானம் சார்ந்ததா வரப்போகுதென்று? நன்றியை எதிர்பார்க்காமல் இருப்பது மட்டும் அல்ல நாம் செய்த உதவியை வேறு கோணத்தில் பார்த்து அதற்கு வேறு சாயம் பூசி விட்டு போவார்கள். போயிருக்கிறார்கள் என் வாழ்வில். உதவுவது என் குணம். அது என் தர்மம். அதோடு நிறுத்தி விடுவேன். மிச்சத்தை யெல்லாம் நீயே வைச்சுக்கோ என்று போகவேண்டும். நல்ல மனம் படைத்தவர்களுக்குத்தான் மன உறுதி வேண்டும்.
I travelled to Vadalur few years ago and written my experience in my blog.
http://ganapathy-literature.blogspot.com/2015/06/blog-post.html?m=1
Post a Comment