Apr 8, 2019

சாமி

‘ஆன்மிகவாதின்னு சொல்லிக்கிறவன் பூரா ஏமாற்றுக்காரன்தான்’ என்கிற ரீதியில் ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது. யாரையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டு எழுதியிருந்தார் என்று தெரியவில்லை. நிறைய நண்பர்கள் இப்படிச் சொல்லிக் கேட்டிருக்கிறேன். ஆனால் அதில் எனக்கு உடன்பாடில்லை.  நிறையப்பேரைச் சுட்டிக்காட்ட முடியும். அடுத்தவர்களை ஏய்த்துப் பிழைக்காமல் எதையோ தேடியலையும் ஆன்மிகவாதிகள். கள்ளக்குறிச்சியில் ஒரு சாமியார் இருந்தார். அவர் பெயர் தெரியாது. கரப்பாத்திர சாமிகள் என்பார்கள். கரங்களையே பாத்திரமாகப் பயன்படுத்தி நான்கு வீடுகளில் இரந்து அதை உண்டு வாழ்ந்தவர். வசதியில்லாமல் இல்லை. பல ஏக்கர் நிலங்களுக்குச் சொந்தக் காரர். அந்த நிலத்தின் விளைச்சலில் அன்னதானத்துக்கு ஏற்பாடு செய்துவிட்டு இவர் கடைசி வரைக்கும் இப்படித்தான் வாழ்ந்து வந்தார். ஒரு நாளைக்கு நான்கு வீடுகள்தான். அன்றைய தினம் எதுவுமே கிடைக்கவில்லையென்றாலும் ஐந்தாவது வீட்டில் கை ஏந்தாத சாமியார் அவர்.

அவர் சமாதி இருக்கும் இடத்திலேயே ஒரு சிவலிங்கத்தை வைத்து பணம் வசூலித்து ஒரு கோவிலைக் கட்டியிருக்கிறார்கள். கள்ளக்குறிச்சி பைபாஸில் சாமியார் மடம் என்ற இடத்தில் இருக்கிறது அந்தக் கோவில். நந்தவனம், தென்னந்தோப்பு என்றெல்லாம் இருந்தது. இப்பொழுது சாலைப்பணிக்காக அவற்றையெல்லாம் எடுத்துக் கொண்டார்கள். கோவில் இருக்கிறது. வெகு அமைதியாக இருக்கும். வாய்ப்பிருப்பவர்கள் போய்ப் பார்க்கலாம். அந்தச் சாமியாரை எப்படி ஏமாற்றுக்காரன் என்று சொல்ல முடியும்? தம் பாட்டுக்கு தம் வாழ்க்கையை வாழ்ந்த ஆன்மிகவாதி அவர். ஒடுக்கத்தூர் சாமிகள் பற்றி முன்பே எழுதியிருக்கிறேன். இவர்களை எல்லாம் பைத்தியங்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம். சம்பளம், குடும்பம், வருமானம், சொகுசு என யதார்த்த உலகம் என்று நாம் நம்பிக் கொண்டிருக்கும் வாழ்க்கையில் இருந்து பார்த்தால் இவர்களை எல்லாம் பிழைக்கத் தெரியாதவர்கள்; பைத்தியங்கள் என்றுதான் சொல்லத் தோன்றும். ஆனால் அது அவர்களின் Personal Choice.

கார்போரேட் சாமியார்கள் இருக்கிறார்கள் அல்லவா? அவர்களை வேண்டுமானால் ஏமாற்றுக்காரர்கள் என்று தயக்கமேயில்லாமல் சொல்லலாம்.

இந்த உலகத்தில் எதுவுமே சரியில்லை என்பதைத் திரும்பத் திரும்ப போதிக்கிறவர்கள் கார்போரேட் சாமியார்கள்தான்.  கார்போரேட் சாமியார்களைப் பின் தொடர்கிறவர்கள் தம்மை உயர்ந்த பீடத்தில் வைத்துக் கொள்கிறார்கள். ‘ஆமாப்பா...இங்க எதுவுமே சரியில்லை’ என்று தாம் மட்டுமே யோக்கியம் என்று நம்பத் தொடங்குகிறார்கள். இதுதான் மிகப்பெரிய அபாயகரமான மனநிலை. அத்தகைய மனிதர்களிடம் பேசிப் பாருங்கள். தம்மையுமறியாமல் எதிராளியைக் குற்றவுணர்வு கொள்ளச் செய்யும்படி மட்டுமே பேசிக் கொண்டிருப்பார்கள்.  ‘இந்தப் பாவப்பட்ட உலகின் அத்தனை கீழ்மைத் தனங்களிலும் உனக்கும் பங்கு இருக்கிறது’ என்பதை நமக்கு உணர்த்துவதும், சாமிகள் கற்றுத் தந்திருக்கும் வித்தைகளும், தியானங்களுமே அவற்றிலிருந்தெல்லாம் விடுதலையத் தருகின்றன என்பதுதான் அந்த மனிதர்களின் ஒரே நம்பிக்கை. தம்மைப் பின் தொடர்கிற ஒவ்வொரு மனிதனையும் போலியான பீடத்தில் அமரச் செய்து கற்பிதங்களை உருவாக்கி, ருத்திராட்சக் கொட்டையிலிருந்து, தியான வகுப்பு, நிழற்படங்கள் என எல்லாவற்றையும் வணிகமாக்கி அறுவடை செய்கிற ஆன்மிகவாதிகள்தான் ஏமாற்றுக்காரர்கள்.

எல்லோரையும் ஒரே தட்டில் நிறுத்திவிடுகிறோம். அரசியல்வாதிகள், சினிமாக்காரர்கள், தொழிலதிபர்கள் என்று ஒரு வட்டத்துக்குள் அடைத்து ‘நடிகைன்னா இப்படித்தான்’ என்று நாமாக ஒரு கேரக்டரை வடிவமைத்துக் கொள்வது போலவே சாமியார்களையும் ஒரு வட்டத்துக்குள் அடைத்து ‘சாமியார்ன்னா இப்படித்தான்’ என்று ஒரு முத்திரை குத்திவிடுகிறோம். அப்படியெல்லாம் எதுவுமில்லை. ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு அனுபவம் இருப்பது போலவே காவி தரித்துப் பரதேசியாகச் சுற்றும் மனிதர்களுக்கும் அனுபவமிருக்கிறது. கடவுளைத் தேடுகிறேன் என்று சொல்லிக் கொண்டிருக்கும் அவர்களில் பெரும்பாலானவர்கள் நம்மைப் போலவேதான். நம்மில் எத்தனை பேருக்கும் நம் தேடல் குறித்து துல்லியத்தன்மை இருக்கிறது?  ‘இதுதான் என் இலக்கு’ என்று எத்தனை பேரால் சொல்லிக் கொள்ள முடியும்? அவர்களும் அப்படித்தான். ‘பெரிய ஆள் ஆகிவிட வேண்டும்’ என நாம் சொல்வது போலவே ‘சிவனைத் தேடுகிறேன்’ என்பார்கள். ‘பெரிய ஆள்ன்னா என்ன’ என்று கேட்டால் எப்படி நம்மால் வரையறுக்க முடியாதோ அப்படித்தான் சாமியார்களிடம்  ‘எது சிவன்’ என்று கேட்டால் பலருக்கும் சொல்லத் தெரியாது. சினிமாவைப் போல ஒரு நாள் திடீரென்று இடி இடித்து சிவன் தோன்றிவிடுவான் என்று நம்புகிறார்களோ என்று கூடத் தோன்றும். 

மனிதர்கள் எல்லோருக்குமே ஏதாவொரு தேடல் இருந்து கொண்டேயிருக்கிறது. ஆனால் பெரும்பாலானவர்களுக்கும் அது துல்லியத்தன்மையில்லாத தேடல். ‘அடுத்த அஞ்சு வருசத்துல ஆகணும்?’ என்று கேட்டால் பதில் சொல்லத் தெரியாது. ஆனால் கடிவாளமிட்ட குதிரையைப் போல விடிந்தால் பையைத் தூக்கிக் கொண்டு ஓடுகிறோம். மாதத் தொடக்கத்தில் நாம் எதிர்பார்த்த வருமானம் வந்துவிட்டால் போதும் என்பதைத் தவிர எந்த இலக்கும் இல்லாத அந்த ஓட்டத்தில் எல்லாவற்றையும் தூக்கிக் கொண்டு ஓடுகிறோம். சாமியார்கள் ‘அய்யோ..இதெல்லாம் சுமை’ என்று கருதி அவற்றையெல்லாம் தவிர்த்துவிட்டு நம்மைப் போலவே குருட்டாம்போக்கில் வேறு எதையோ ஓடுகிறார்கள்.

பரதேசிக் கோலம் தரித்திருக்கும் யாராக இருந்தாலும் நான்கைந்து கேள்விகளாவது பேசுகிற வழக்கம் எனக்கு. சாமியார்கள்தான் என்றில்லை. தனித்து அலையும் எந்த மனிதராக இருந்தாலும் எதையாவது பேசத் தோன்றும். விதவிதமான மனிதர்கள் தரக்கூடிய அனுபவமே நம் வாழ்வில் நாம் தேடிச் சேர்க்கக் கூடிய மிகப்பெரிய சொத்து என்பதை உறுதியாக நம்பலாம். எல்லோரையும் போலவே கூட்டமாக ஓடிக் கொண்டிருக்கிற மனிதர்களிடமில்லாத சுவாரசியம் தனித்து அலையும் மனிதர்களிடம் இருக்கிறது. கார்போரேட் சாமியார்களின் அடிமைகளைப் போல அவர்கள் என்னைக் குற்றவுணர்ச்சி கொள்ளச் செய்வதில்லை. கோவில்களில் பிச்சையெடுத்துக் கொண்டிருக்கும் அந்த மனிதர்கள் யாரும் தம்மை பீடத்தில் வைத்துக் கொண்டு ‘உன்னால்தான் உலகமே அழிந்து கொண்டிருக்கிறது’ என்னைப் பார்த்துச் சொல்வதில்லை. உய்விக்க வந்தவன் என்று தம்மைப் பிரஸ்தாபித்துக் கொள்வதில்லை. எந்தத் தருணத்திலும் உடைந்துவிடக் கூடிய சோப்புக் குமிழிகள் அவர்கள். அத்தகைய எளிய மனிதர்களுக்கும் கயவர்களுக்கும் மிகப்பெரிய வித்தியாசமிருக்கிறது. கார்போரேட் களவாணிகளுக்குக் குத்தும் ‘ஏமாற்றுக்காரன்’ என்கிற முத்திரை கோவில் முற்றத்தில் துண்டை விரித்துப் படுத்துறங்கும் சாமியாருக்குப் பொருந்தாது. 

Apr 3, 2019

குறி

‘அண்ணா உங்களுக்கு சாமி மேல நம்பிக்கை இருக்கா?’ என்று அந்த நண்பர் கேட்டு சில மாதங்கள் இருக்கும். ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது நாத்திகம் பேசிக் கொண்டிருந்தேன். அப்பொழுது திராவிடர் கழகத்தின் பெரியவர்கள் நண்பர்களாக இருந்தார்கள். நண்பர்கள் என்றால் , எங்கள் ஊரில் செந்தாமரை அச்சகம் என்றொரு கடை இருந்தது. அங்கே சிலர் கூடிப் பேசுவார்கள். அந்த உரையாடலில் பார்வையாளராக இருப்பேன். அதன் விளைவுதான். பிறகு ப்ளஸ் ஒன்னில் தோல்வி அடைந்துவிடுவேனோ என்ற பயம் தொற்றிய பிறகு மெல்லக் கடவுள் நம்பிக்கை வளர்ந்தது. நம்பிக்கை என்றால் அளவான நம்பிக்கை. வெளியில் காட்டிக் கொள்ளாத, கடவுள் இல்லை என்று குரல் உயர்த்தாத நம்பிக்கை. கேட்ட நண்பரிடம் சொன்ன போது ‘குறி சொல்லுறது மேல நம்பிக்கை இருக்கா?’ என்றார். 

‘ஒருத்தரைப் பார்க்கப் போனேண்ணா....என் வாழ்க்கையில் நடந்ததையெல்லாம் அப்படியே சொல்லிட்டாரு’ என்றார். துல்லியமாகச் சொன்னதாகச் சொன்னார். அந்த மாதிரியான ஆட்களைத் தேடிப் போவதில் ஒருவிதமான க்யூரியாசிட்டி உண்டு. விதவிதமான மனிதர்களையும் புதுப்புது இடங்களையும் தேடி அடைவதைவிடவும் வாழ்வில் வேறு என்ன அனுபவங்களை அடைந்துவிடப் போகிறோம்?

சில நாட்களுக்கு முன்பாக புதுக்கோட்டை செல்லும் வாய்ப்பு வந்தது. நண்பரை அழைத்து முகவரியை வாங்கிக் கொண்டேன். புதுக்கோட்டை பக்கத்தில் கீழ்செட்டிப்பட்டி என்றொரு குக்கிராமம். மொத்தமாகவே முப்பது வீடுகள்தான் இருக்கும். சாலை அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். வண்டி வாகனம் உள்ளே செல்லும் வழி எதுவென்று தெரியவில்லை. பிரதான சாலையிலேயே வண்டியை நிறுத்திவிட்டு நடக்க வேண்டும்.  ஆடு மாடு மேய்க்கிறவர்களிடம் ‘சாமியாடுவாருல்ல..அவர் வீடு எங்க இருக்குங்க?’ என்று கேட்டபடியே போய்ச் சேர்ந்த போது மாலை நான்கு மணி இருக்கும். அந்தக் கிராமத்திலேயே ஏ.சி பொருத்தப்பட்ட மாடி வீடு. 

அவர் வீட்டில் இல்லை. பக்கத்தில் ஒரு கோவில் கட்டுமானம் ஆகிக் கொண்டிருக்கிறது. அதனருகில் ஒரு கொட்டகையில் இருப்பார் என்று சொல்லி அனுப்பி வைத்தார்கள். எனக்கு முன்பாக சிலர் இருந்தார்கள். அவர்கள் அதிகாலையிலேயே வந்துவிட்டதாகச் சொன்னார்கள். எளிய மனிதர்கள். இந்த மனிதர்களை எளிதில் ஏமாற்றிவிடலாம். நம் முறை வரும் போது ராகுல் காந்தி எந்தத் தொகுதியில் நிற்பார்? அதிமுக எத்தனை இடங்களில் வெல்லும் என்றெல்லாம் கேட்டுவிட வேண்டும் என முடிவு செய்து வைத்திருந்தேன். பத்து ரூபாய்க்கு வெற்றிலை வாங்கிக் கொண்டு வந்து வரிசையில் வைத்துவிட்டு காத்திருக்கச் சொன்னார்கள். ஓடு வேய்ந்த கொட்டகை அது. நடுவில் ஒரு பச்சை நிறத் துணியை திரைச்சீலையாகப் போட்டு குறி சொல்கிறவர் சீலைக்கு அந்தப் பக்கமாக அமர்ந்திருந்தார். குறி சொல்வதைக் கேட்க வந்திருந்தவர்கள் கிசுகிசுவென்று பேசிக் கொண்டிருந்தார்கள்.

திரைச்சீலையிலிருந்து மெதுவாக உள்ளே எட்டிப் பார்த்தேன். நாற்பது வயதுக்குள்ளான மனிதர். இடுப்பில் வேஷ்டி மட்டும் அணிந்து அதன் மீது துண்டு கட்டியிருந்தார். மெல்ல உடலைக் குலுக்கியபடியே இருந்தார். புகையிலையைப் பிய்த்து வாய்க்குள் குதப்பி அருகில் இருந்த செம்பில் துப்பினார். ஒவ்வொரு சாமியாகப் பெயர் சொல்லி அழைக்கிறார். நமக்கு அதில் ஏதாவதொரு சாமி பொருந்தி வரும் வரைக்கும் அழைப்பு தொடர்கிறது. 

‘பட்டுக்கோட்டைக்காரா உள்ள வா’என்றார். அடங்கொண்ணிமலையா, நம்மை கரட்டடிபாளையத்துக்காரா என்று அழைப்பார் என்று நினைத்துக் கொண்டேன். யார் உள்ளே சென்றாலும் உடனடியாகப் பேச ஆரம்பிப்பதில்லை. ‘மைண்ட் ரீடிங் செய்யறாரோ?’ என்று யோசித்துக் கொண்டிருந்தேன். புகையிலையைக் குதப்பி, எச்சிலைத் துப்பிவிட்டு, சாமியை அழைத்து ‘என்ன நடமாடும் வாகனத்தைக் காணோம்ன்னு வந்தியா’ என்றார் அந்தப் பட்டுக்கோட்டைக்காரனிடம். 

‘ஆமாம் சாமி’ என்றான்.  திக்கென்றாகிவிட்டது எனக்கு. யார் திருடியிருக்கிறார்கள், எந்தத் திசையில் இருக்கிறது என்றெல்லாம் சொல்லிவிட்டு ‘மூணு நாள் இல்லீன்னா மூணு வாரத்துக்குள்ள உனக்கு வந்து சேரும் போ’ என்றவர் ஐந்தாயிரம் ரூபாயைக் கேட்டார். அந்தப் பையன் கொடுத்துவிட்டு வந்தான். நான் வேறு நல்ல சட்டை அணிந்திருந்தேன். நிறையக் காசு கேட்டுவிடுவாரோ என்று பதற்றம் வந்துவிட்டது. 

பட்டுக்கோட்டைக்காரன் வெளியே சென்ற பிறகு சாமியாடி எழுந்து கிளம்பிப் போய்விட்டார். எனக்கு முன்பாக இருந்தவர்கள் ‘அவ்வளவுதான்..இனி எப்போ வருவாருன்னே தெரியாது’ என்றார்கள். அந்தப் பட்டுக்கோட்டைக்காரன் வசமாகச் சிக்கினான். ‘வண்டி கிடைச்ச பிறகு காசைக் கொடுக்கலாம்ல..’ என்றேன்.  ‘எனக்கு ஒன்றரை வருஷமா தெரியுங்க’ என்று வெட்டிருப்பாகச் சொன்னான். ‘எனக்குத் தெரியும்..நீ வேலையைப் பாரு’ என்கிற தொனி அது. அடங்கிக் கொண்டேன். 

கோவில் கட்டுமானம் நடக்கும் இடத்தில் கொஞ்ச நேரம் அமர்ந்திருந்துவிட்டு எழுந்து வந்தவர் என்னிடம் வந்து ‘எப்படி வந்தீங்க?’ என்றார். ‘ஒரு நண்பர் பைக்கில் கொண்டு வந்துவிட்டார்’ என்றேன். உண்மையில் காரில் சென்றிருந்தேன். கார் என்று சொன்னால் பணம் அதிகமாகக் கேட்பாரோ என்ற பயம்தான். அவர் எதுவும் சொல்லவில்லை. ‘யார் உங்களுக்கு சொன்னாங்க?’ என்றார். ‘புதுக்கோட்டையில் பிரசாத்ன்னு ஒருத்தர்’ என்றேன். அதுவும் பொய்தான். அவர் திரைச்சீலைக்குப் பின்பாக அமர்ந்து கொண்டார்.

அடுத்ததாக இன்னொரு பெண். அவரிடம் கீழ்செட்டிப்பட்டியில் சாமி திருவிழா எப்படி நடக்கும் என்று விலாவாரியாகப் பேசிக் கொண்டிருந்தார். இப்படியே வெட்டி அரட்டை அடித்தால் இவர் எப்பொழுது நம்மை அழைப்பார் என்று கடியாக இருந்தது. பக்கத்தில் இருந்தவரிடம் ‘என்னங்க இது?’ என்றேன். ‘ராத்திரி பண்ணெண்டு மணி ஆனாலும் ஆவும்..’ என்றார். பகலில் நடந்துவிடலாம். இரவில் அந்தச் சாலையில் எப்படி நடப்பது என்று பயமாகிவிட்டது. ‘ஆட்டோ ஏதாச்சும் வருமா’ என்றேன். அவர் சிரித்தார். அமைதியாக அமர்ந்து கொண்டேன்.

புகையிலை, எச்சில், சாமி அழைப்பெல்லாம் முடிந்த பிறகு அந்தப் பெண்ணிடம் ‘மணவாளன் செத்தாக் கூட நிம்மதியா இருக்கும்ன்னு நினைக்குறியா தாயி...குடிச்சுட்டு அத்தனை சித்ரவதை உனக்கு’ என்றார். அந்தப் பெண் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்துவிட்டாள். ‘உனக்கு ரெண்டு பசங்க கொடுத்திருக்கேன்ல..மூணாவது பையனா இவனை மாத்தி உனக்கு அடங்க வைக்கிறேன்’ என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

இருள் கவிந்து கொண்டிருந்தது.  திரைச்சீலையை விலக்கி சாமியிடமே ‘ராத்திரியாகிடுச்சு....இங்கிருந்து எப்படி போகலாம்?’ என்றேன். அவர் அப்பொழுதும் அந்தப் பெண்ணுக்கு குறி சொல்லிக் கொண்டுதான் இருந்தார். அனுமதியில்லாமல் மேலாளர் அறைக்குள் நுழைந்த ப்ரெஷர் போல ஆகிவிட்டது. ‘கொங்கு நாட்டுக்குப் போகணுமா? கார்தான் மெயின் ரோட்டுல நிக்குதுல...உக்காருங்க..கொண்டு வந்துவிடுறேன்’ என்றார். சத்தியமாக வெலவெலத்துவிட்டது. இது எப்படி சாத்தியம்? ஏதாவது மனோவியல் சூத்திரம் என்றாலும் கூட எப்படி முடியும்? இதில் என்னவோ சூட்சமம் இருக்கிறது. நூறு சதவீதம் துல்லியமாகச் சொல்ல வாய்ப்பில்லை. ஒருவேளை அவரிடம் பேசியிருந்தால் ஏதாவது க்ளூ கிடைத்திருக்கக் கூடும். இன்னொரு நாள் வந்து கொள்ளலாம் என்று கிளம்பி வந்துவிட்டேன். அவர் கோவில் கட்டிக் கொண்டிருக்கும் பெரியநாயகி அம்மனை ‘சாமீ...பின்னாடி வந்து பொடனில சாத்திடாத’ என்று மனமுருகி வேண்டிக் கொண்டபடியே ஓட்டமும் நடையுமாக நடந்து கொண்டிருந்தேன். ’ காரில் ஏறும் வரைக்கும் திக் திக்கென்றேதான் இருந்தது. 

குறி சொல்லுதல் பற்றிய விவரம் உங்களுக்கு ஏதாவது தெரியுமா?