Feb 18, 2019

அனுபவிக்க வேண்டிய வயசு

‘தந்தை மறைந்த நாளிலிருந்து மகனின் மரணம் தொடங்குகிறது’ - இது ஓரான் பாமுக்கின் வாசகம். நிதர்சனமான உண்மை. அப்பா இருக்கும் வரைக்கும் ஊரில் நடைபெறும் திருமணம், மரணம் என்ற நிகழ்வுகள் பற்றி எந்தப் பெரிய கவனமும் இருந்ததில்லை. இப்பொழுது அப்படி இருக்க முடிவதில்லை. ஒவ்வொன்றுக்கும் செல்ல வேண்டியிருக்கிறது. திருமணங்கள் பெரிய சலனத்தை உண்டாக்குவதில்லை. உள்ளே நுழையும் போதே வரிசையாக வரவேற்பில் நிற்பார்கள். எல்லோருக்கும் நம் முகம் தெரியும்படி புன்னகைத்தபடியே கும்பிடு போட்டு வருகையை உணர்த்திவிட்டு நேராக பந்திக்குச் சென்றுவிடலாம். வசதிக்கு ஏற்ப வகைகளை அடுக்கிறார்கள். அள்ளிப் போட்டுவிட்டு ஒரு ஐஸ்கிரீமையும் விழுங்கிவிட்டு யாருடைய கண்ணிலும் படாமல் வீடு திரும்பிவிடலாம். கடமை முடிந்தது.

மரணங்கள் அப்படியில்லை. ஆட்டிப் பார்த்துவிடுகின்றன. சமீபத்தில் இரண்டு துக்க வீடுகளுக்குச் செல்ல வேண்டியிருந்தது. இறந்து போன இருவருமே ஆண்கள். இருவருக்குமே இரண்டு பிள்ளைகள். இரண்டு பிள்ளைகளுமே வெளியூர்களில் இருக்கிறார்கள். முதலாமவர் வங்கியொன்றுக்குச் சென்றுவிட்டு வீட்டுக்குத் திரும்ப வந்து கொண்டிருந்த போது அவருக்கு முன்பாக வந்து கொண்டிருந்த லாரி திடீரென்று இடதுபக்கம் திரும்பியிருக்கிறது. அடிபட்டுக் கீழே விழுந்தவருக்கு வெளியில் எந்தக் காயமுமில்லை. ஆனால் இடுப்பில் வலி. எடுத்து மருத்துவமனைக்கு அனுப்பியிருக்கிறார்கள். ஞாபகம் இருந்திருக்கிறது. வீட்டு முகவரியெல்லாம் கொடுத்திருக்கிறார். உள்காயம் ஏற்பட்டு ரத்தம் உள்ளுக்குள்ளேயே கசிந்து ரத்த அழுத்தம் குறைந்து மருத்துவமனையில் இறந்து போனார்.

வாழ்க்கையின் பூரணத்துவம் என்பார்கள் இல்லையா? அப்படியான வாழ்க்கை அவருக்கு. இரண்டு மகன்களுக்கும் திருமணம் செய்து வைத்து அவர்கள் இருவரும் சம்பாதிக்க வறுமை நீங்கி கொஞ்சம் பசுமை துளிர்த்த தருணம் அது. வாய் நிறையச் சந்தோஷமாகப் பேசுவார். ‘பெரியவன் அப்படி; சின்னவன் இப்படி’ என்று புளகாங்கிதம். வாழ்க்கையில் கையூன்றி கர்ணமடித்து மேலே வந்தவர்களுக்குத் திரும்பிப் பார்க்கும் போது வெகு உயரத்தில் நிற்கிறோம் என்கிற சந்தோஷம் இருக்குமல்லவா? அப்படியொரு சந்தோஷத்தில் இருந்தவர் திடீரென்று கண்களை மூடிக் கொண்டார்.

இன்னொருவரும் அதே மாதிரிதான். எந்நேரமும் தலையில் உருமால் கட்டிக் கொண்டிருப்பார். மகனின் திருமணத்திலும் கூட அப்படித்தான் இருந்தார். கிராமத்து மனிதர். முழுமையான விவசாயி. மகன்கள் வெளியூர்களில் சம்பாதிக்க இவர் காட்டு விவசாயம் பார்த்துக் கொண்டு காராம்பசு வைத்து பால் கறந்து ஊற்றிக் கொண்டிருந்தவர். கடந்த வாரம் ஊரில் கிடாவிருந்து நடந்திருக்கிறது. சந்தோஷமாக இருந்திருக்கிறார். விடியற் காலையில் மனைவியிடம் ‘தண்ணி கொண்டு வா’ என்று கேட்டிருக்கிறார். குடித்துவிட்டு அப்படியே சாய்ந்துவிட்டார். இருந்திருந்தபடிக்கு மரணத்தைத் தழுவிக் கொண்டார்.

‘எல்லாவற்றையும் அனுபவிக்க வேண்டிய வயசு’ என்றார்கள். சாவுக்கு என வயது இருக்கிறதா என்ன? நூறாண்டு வாழ்க என்கிறார்கள். அப்படியான சொந்தக்காரப் பெரியவர் ஒருவர் இருக்கிறார். தொண்ணூறை நெருங்கிவிட்டார்.  சில மாதங்களுக்கு முன்பாக ‘நல்லா இருக்கீங்களா?’ என்று கேட்டதற்கு ‘நல்லா இருக்கேன்’ எனச் சொல்லிவிட்டு அருகில் அமரச் சொன்னார். வாழ்க்கையின் தத்துவங்களையெல்லாம் மிக எளிதாகச் சொல்வார். பெரியவர்கள் அப்படித்தான். நாம் வாயைக் கிளறினால் பேசுவார்கள். பெரும்பாலானவர்கள் ‘நாம பேசினா இந்தக் காலத்துப் பசங்களுக்கு பிடிக்காது’ என்று அமைதியாக இருந்து கொள்கிறார்கள். 

‘மனசுக்குப் பிடிச்ச இனிப்புப் பலகாரம் ஒண்ணு...ரசகுல்லான்னு வெச்சுக்க..சின்னதா இருக்கும். ஒண்ணே ஒண்ணு கிடைக்கிற போது வாயில் போட்டு அது கரையும் போது இன்னொன்னு இருந்தா ஆகுமேன்னு நினைப்போம்...ஆனா கிடைக்காது..அப்படித்தான்...இன்னும் கொஞ்ச நாள் இருந்தா ஆகுமேன்னு நினைக்குறப்போ போய்டணும்’ என்று சொல்லிவிட்டுச் சிரித்தார். ‘சாகிறவனுக்கு அந்த நெனப்பே வராது..இன்னைக்கே சாவு வந்தாலும் சரின்னு சொல்லுவோம்..ஆனா மனசுக்குள்ள பயமிருக்கும்..சொந்தக்காரன் பந்தக்காரன் இருக்கான்பாரு..அவன் சொல்லோணும்...எல்லாக் காரியத்தையும் செஞ்சு முடிச்சுட்டாரு மனுஷன்...இனியென்ன அவருக்கு..ராஜா மாதிரின்னு நினைக்கும் போது...’ 

‘அது சரி, சாவு என்ன பக்கத்து ஊட்டு ராசாத்தியா? கையைப் புடிச்சு இழுக்க’ என்று கேட்டுவிட்டு பொக்கை வாயில் சிரித்தார். அந்தப் பெரியவர் பேசியதுதான் இரண்டு மரண வீடுகளிலும் நினைவுக்கு வந்தது. 

சாவு வீடுகள் என்பன வெறுமனே கையை நீட்டி ஆறுதல் சொல்லிவிட்டு வருவதோடு முடிந்துவிடுவதில்லை. அது கிளறிவிடும் நினைவுகள் இறந்தவர்களை நம்மைச் சார்ந்தவர்களோடு ஒப்பிடச் செய்துவிடுகிறது. பாதையைக் கடக்கும் போதெல்லாம் இறந்து போனவர்கள் ஒரு முறை நினைவுக்கு வந்து போகிறார்கள். அவர்களது வெடிச்சிரிப்போ, புன்னகையோ அல்லது ஏதோ ஒன்றோ மின்னல் வெட்டுவதைப் போல வந்து போகின்றன. சாவைப் பார்த்துவிட்டு வந்த பிறகு வாகனத்தில் பயணிக்கும் போதோ, யாருமற்ற தனிமையிலோ மனதுக்கு நெருக்கமான நம்மவர்களின் முகம் சில கணங்களாவது வந்து போகும் போது என்னவோ போலாகிவிடுகிறது. வெறுமையான இந்த நெஞ்சம் எதை உணர்த்துகிறது? வாழ்க்கையின் அடிநாதமான தத்துவமே இந்த வெறுமைதான். இல்லையா?

சாவு வீடுகளுக்குச் சென்று பழகாத வரைக்கும் சாவுகள் பெரிய பாதிப்பை உண்டாக்கியதில்லை. இப்பொழுது அப்படியில்லை. ஓரான் பாமுக் இதையெல்லாம் கணக்கில் வைத்துத்தான் சொல்லியிருக்கக் கூடும்- தந்தை மறைந்த நாளிலிருந்து மகனின் மரணம் தொடங்குகிறது.

8 எதிர் சப்தங்கள்:

சேக்காளி said...

//எல்லாக் காரியத்தையும் செஞ்சு முடிச்சுட்டாரு மனுஷன்...இனியென்ன அவருக்கு..ராஜா மாதிரின்னு நினைக்கும் போது...’//
வாய்ப்பதெல்லாம் வரம் தான்

Karthik R said...

‘தந்தை மறைந்த நாளிலிருந்து மகனின் மரணம் தொடங்குகிறது’

மிக ஆழ்ந்த அர்த்தமுள்ள வார்த்தைகள்.

சேக்காளி said...

//என்று புளகாங்கிதம்//
இதை வாசிக்கும் வரை அது என்னுள் "புளங்காகிதம்" என்றே பதிந்திருந்தது

kumar said...

கேரள வெள்ள நிவாரண நிதியில் செய்தவற்றை பற்றி எழுதவும்.

நாடோடிப் பையன் said...

Mani

My uncle just passed away two days back. He was a good soul. This article reminds me of his life. Thanks for sharing.

பழனிவேல் said...

‘தந்தை மறைந்த நாளிலிருந்து மகனின் மரணம் தொடங்குகிறது’
ஆம் அண்ணா...
இந்த மரணம் கற்றுத்தரும் பாடம் மிகஎளிது.
அதைப் புரிந்து கொள்பவர்கள் தான் மிக மிகக் குறைவு.

Siva Ram said...

பஞ்சடைத்து மரணிக்கும்வரை பொறுப்பதில்லை காலங்கள் சட்டென நெஞ்சடைத்து மரணிக்க வைக்கிறது.

Gopalakrishnan P said...

‘அது சரி, சாவு என்ன பக்கத்து ஊட்டு ராசாத்தியா? கையைப் புடிச்சு இழுக்க’ என்று கேட்டுவிட்டு பொக்கை வாயில் சிரித்தார்.
#இந்த துக்க நிகழ்வுகளைப் பகிரும் போது கூட பெரியவரின் எதேச்சையான பேச்சை ரசிக்கும் உங்களைப் பாராட்டத் தான் வேண்டும். வாழ்க வளமுடன்