இருபது வருடங்களுக்கு முன்பான வாக்குச்சீட்டுத் தேர்தல் அது. சாவடிக்கு நூறடி முன்பாக நான்கைந்து பேர் அமர்ந்திருப்பார்கள். சாவடிக்குச் செல்வதற்கு முன்பாக அவர்களிடம் சென்றால் தங்களது கட்சியின் முத்திரை குத்திய சீட்டைத் தருவார்கள். அதை வாங்கிச் சென்று பெட்டிக்குள் போட்டுவிட்டு தமக்குத் தேர்தல் அலுவலர் வழங்கும் வாக்குச்சீட்டில் அந்தக் கட்சியின் சின்னத்தை முத்திரை குத்திக் கொண்டு வந்து தர வேண்டும். வாக்குச்சீட்டை வாங்கி வைத்துக் கொண்டு நூறு ரூபாய் தருவார்கள். இதுவொரு தில்லாலங்கடி வேலை. வாக்கு எந்திரம் வந்த பிறகு அது சாத்தியமில்லாமல் போய்விட்டது. அதற்கு சில உபாயங்களைக் கண்டறிந்தார்கள். கோவிலில் வைத்து சத்தியம் வாங்குவது, துண்டைப் போட்டுத் தாண்டச் சொல்லி பணம் கொடுப்பது என்று கற்பனைக்கும் எட்டாத உறுதி மொழிகளைப் பெற்றுக் கொண்டு பணம் கொடுக்கத் தொடங்கினார்கள்.
தேர்தலில் கள்ள வாக்குகள், போலி வாக்குகள் என்பதெல்லாம் பழைய காலம். மூத்தவர்களிடம் பேசிப்பார்த்தால் ஒன்று புலப்படுகிறது. வாக்குகளைப் பெறுவதற்கு அன்பளிப்பு என்பது இன்று நேற்று தொடங்கப்பட்டதில்லை. 1960 களிலேயே அன்பளிப்புகள் இருந்திருக்கின்றன. பணக்கார வேட்பாளர்கள் இட்லி, இனிப்புடன் காலைச் சிற்றுண்டி வழங்கியதாகச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அவை வாக்காளர்களைப் பெருமளவில் புரட்டிப் போட்டதில்லை. ஓரளவுக்கு தம் பக்கம் திருப்பும். இப்படியான அன்பளிப்புகள் வேஷ்டி, சேலை, குடம், பிரியாணி, சாராயம், சில்வர் பாத்திரம், மூக்குத்தி என்கிற அன்பளிப்புகளின் வடிவங்கள் இப்பொழுது பணத்தாளாக மாறியிருக்கின்றன. அன்பளிப்பின் எந்த வடிவத்தைவிடவும் ‘பணம்’ என்கிற வடிவம்தான் மக்களின் மனதை நேரடியாக மாற்றுகிறது. பிற எந்த அலையைவிடவும் பண அலைதான் வலு மிக்கது.
அதனால்தான் குறிப்பிட்டவர்களுக்கு என்றில்லாமல் ‘ஒரு தொகுதியில் இத்தனை சதவீத வாக்காளர்களுக்குப் பணம்’ என்று கணக்குப் போட்டு மொத்தமாக அடித்துவிடுகிறார்கள். இன்றைய தினம் எந்த ஊரில், எந்தக் கட்சியினரிடம் வேண்டுமானாலும் பேசிப் பாருங்கள். ‘நாங்க ஜெயிச்சுடுவோம்..ஆனால் கடைசியில் பணம்தாங்க பேசும்’ என்கிறார்கள். அப்படித்தான் சூழல் மாறிவிட்டது. எவ்வளவு பெரிய வேட்பாளராக இருந்தாலும் சரி; எந்தக் கட்சியாக இருந்தாலும் சரி- அவர் பணம் கொடுத்தாக வேண்டும்.
ஆளுங்கட்சிக்கு ஆதரவான அலை, எதிர்கட்சிக்குச் சாதமான அலை என்பதெல்லாம் இன்னமும் உண்டுதான். ஆனால் அந்த அலை வாக்குகளாக அறுவடை செய்யப்படுகிறதா என்பதுதான் பெரிய கேள்வி. ஆளுங்கட்சி தமக்கு எதிரான அலை இருந்தாலும் ஒரு வாக்குக்கு இவ்வளவு என்று பணம் கொடுத்து, எதிர்கட்சி கொடுக்காமல் விட்டாலோ அல்லது குறைவாகக் கொடுத்தாலோ அலையைப் பணம் விழுங்கிவிடும். ‘என்ன இருந்தாலும் காசு கொடுத்தவங்க அவங்கதான்’ என்று குத்திவிடுவார்கள். இன்றைய தேர்தல் களத்தில் பணத்தைச் சரியாகக் கொண்டு போய்ச் சேர்ப்பது எப்படி என்பது தவிர பெரிய சூத்திரமெல்லாம் எதுவுமில்லை. சட்டமன்றத் தேர்தல் என்றால் தொகுதிக்கு ஐந்து கோடி ரூபாய்; பாராளுமன்றத் தொகுதியென்றால் தொகுதிக்கு இருபத்தைந்து கோடி ரூபாய். இதுதான் கணக்கு. இதைச் சரியாகப் பட்டுவாடா செய்துவிட்டால் வெற்றியை ருசி பார்த்துவிடலாம்.
பணம்தான் தேர்தலில் வெற்றியாளர்களை நிர்ணயிக்கிறது என்ற சூழலில் மக்களும் அப்படித்தான் இருக்கிறார்கள். அரசியல்வாதிகளை மட்டுமே குறை சொல்வதற்கு மக்கள் ஒன்றும் யோக்கியமில்லை. ‘அவன் வந்தாலும் ஒண்ணுதான்; இவன் வந்தாலும் ஒண்ணுதான்’ என்பார்கள். காசை வாங்கிக் கொள்வதற்காக அவர்கள் கண்டறிந்திருக்கும் சாக்குப் போக்கு அது. பணம் கொடுக்கிறவன் யாராக இருந்தாலும் வாங்கிக் கொண்டு வாக்களிப்போம் என்கிற மனநிலைதான் அறுபது சதவீத மக்களிடமிருக்கிறது. அதுதான் தேர்தலின் வெற்றி தோல்வியையும் முடிவு செய்கிறது.
‘ஒருத்தரிடம் பணத்தை வாங்கிட்டு இன்னொருத்தருக்கு மாத்திப் போடுவாங்களா?’ என்றும் கேட்கலாம். இருக்கக் கூடும். ஆனால் மிகக் குறைவான சதவீதம்தான் அத்தகையவர்கள் இருப்பார்கள். இன்றைய சூழலில் அப்படித்தான் கருதத் தோன்றுகிறது. யாரிடம் அதிகமாகப் பணம் இருக்கிறதோ அவர்களிடம் ஆட்சியை ஒப்படைப்பதற்குச் சமம்தான் இது. எதற்காக இத்தனை நாடகங்கள் நடத்துகிறார்கள் என்று தெரியவில்லை. தேர்தல் அறிவிப்பு, பிரச்சாரம், செலவு என்றெல்லாம் ஜிகினா கட்டுகிறார்கள். சுருட்டுகிறவரைக்கும் சுருட்டிக் கொண்டு தேர்தலின் போது சில கோடிகளை ஒதுக்கி வைத்திருந்தால் வென்றுவிடலாம் என்கிற நினைப்பில் எந்த ஆட்சியாளருக்கு மக்களுக்கான உதவிகளைச் செய்யத் தோன்றும் என்று புரியவில்லை.
இளைஞர்கள் யாராவது ‘தேர்தலில் நின்று மாற்றத்தைக் கொண்டு வருவேன்’ என்று இலட்சிய வெறியுடன் பேசுவதைப் பார்த்தால் சிரிக்கவும் தோன்றுகிறது. அழவும் தோன்றுகிறது. ஒருவகையில் ஜனநாயகத்தின் அடிப்படையான தேர்தல் முறை என்பதே தோற்றுப் போன ஒரு காலகட்டத்தில் நின்று கொண்டிருக்கிறோமோ என்று தோன்றுகிறது. ‘அதெல்லாம் இல்லை’ என்று மனம் நினைத்தாலும் அது போலியான சமாதானம்தான் என்று மறுக்கவும் தோன்றுகிறது. பணம் செலவழிக்காமல் தேர்தலில் வெல்வது - அதுவும் தமிழகத்தில் வெல்வது சாத்தியமில்லை என்று உறுதியாகச் சொல்லலாம். தேர்தல் முறை தோற்றுவிட்டது என்பதைவிடவும் மக்கள் தாங்களாகவே தோற்றுப் போய்விட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். மாற்றம் மக்களிடமிருந்துதான் வர வேண்டும். ஆனால் அது இப்போதைக்குச் சாத்தியமாகத் தெரியவில்லை.
3 எதிர் சப்தங்கள்:
Through the help of social media all good souls should unite regionally and also statewise, choose our own local leader and promote during the election time vigorously..
Even if they loose, the increasing votes and their social services will definitely help to improve this dirty politics..
The biggest problem is that all the good and educated people think this is not possible.. but the rich corrupted politicians unite easily to destroy clean politics.
United good people, not based on parties but on people welfare can definitely change the current situation. Politicians are successful in keeping them divided.
//ஆனால் அது இப்போதைக்குச் சாத்தியமாகத் தெரியவில்லை. //
கொஞ்சம் சீக்கிரமா வந்துரும் போல தான் தெரியுது.
இல்லன்னா தான் 20 தொகுதிக்கும் தேர்தல் வந்துருக்குமே.
60 சதவீத மக்களிடமல்ல அதைவிட அதிகமான மக்களிடம் இந்த மனநிலைதான் இருக்கிறது. வேட்பாளரை பார்த்து ஓட்டுபோடுவதில்லை. பணம் வாங்கி விட்டு இன்னொருவருக்கு மாற்றி ஓட்டு போட மாட்டார்கள் ஒருவேளை எல்லாரிடமும் பணம் வாங்கி விட்டு யார் அதிகம் தருகிறார்களோ அந்த வேட்பாளருக்கே ஓட்டு போடுவார்கள் அவ்வளவுதான். நேர்மையானவர்கள் தேர்தலில் போட்டியிட்டால் அவர்களுக்கு ஓட்டு போடாமல் நிராகரிப்பார்கள் பின் நேர்மையானவர்கள் அரசியலுக்கு வரவேண்டுமென்று கூச்சலிடுவார்கள். ஒரு தொகுதிக்கு ஐந்து கோடி செலவு செய்பவன் நிச்சயம் போட்ட காசைவிட கூடுதலாக இருமடங்காவது சம்பாதிக்க வேண்டுமென்றுதான் விரும்புவான். மக்களுக்கும் இது நன்றாக தெரியும் இருந்தும் பணம் வாங்கிக்கொண்டு ஓட்டு போடுகிறார்கள் என்றால் அரசியல்வாதிகளின் ஊழலுக்கு முதல் காரணம் மக்கள்தான்.
Post a Comment