Jan 14, 2019

என்ன படிக்க வேண்டும்?

நேற்று ஒரு கல்லூரிக்குச் சென்றிருந்தேன். கோவையில் இருக்கும் தனியார் கல்லூரி அது. ஒருவரைச் சந்தித்துப் பேச வேண்டியிருந்தது. அவர் கல்லூரியின் மனிதவளத்துறையில் இருக்கிறார். அவருடனான முதல் அறிமுகம் இது. வழமையான சில கேள்விகளுக்குப் பிறகு  ‘என்ன வேலை செய்யறீங்க?’ என்றார். 

‘இப்போத்தாங்க டேட்டா சயின்ஸ் ஆரம்பிச்சிருக்கேன்...’ என்று சொன்னவுடன் அவரது முகத்தில் பல்பு எரிந்தது.

‘எங்கள் கல்லூரியின் எம்.பி.ஏ துறைத் தலைவரைப் பார்த்துட்டு வரலாமா?’ என்றார். இது திட்டத்திலேயே இல்லை. 

‘டேட்டா சயின்ஸூக்கான ஆட்களைத் தேடிட்டு இருக்காங்க..பசங்களுக்கு ஒரு க்ளாஸ் எடுங்க’ என்று சொல்லி அழைத்துச் சென்றார். அத்துறையில் எனக்கு அவ்வளவு பாண்டித்யம் இல்லை. வகுப்பெடுக்கும் அளவுக்கு கற்றுக் கொள்ளவுமில்லை. ஆனாலும் ஒரு தைரியம்தான். துறைத்தலைவர் எடுத்தவுடனேயே ‘பைத்தான் படிக்கணுமா? ஆர் படிக்கணுமா?’ என்று கேட்டார். அவை இரண்டும் மென்பொருட்கள். கணினித்துறை ஆசிரியர்கள் இப்படிக் கேட்டால் ஆச்சரியப்பட எதுவுமில்லை. ஆனால் பிற துறையைச் சார்ந்தவர்கள் நேரடியாக மென்பொருளுக்குச் செல்லக் கூடாது. அடிப்படையான தத்துவங்களைத் தெரிந்திருக்க வேண்டும். டேட்டா சயின்ஸ் என்றில்லை- ஆட்டோமொபைல் தெரிந்தவர்கள் ‘சி படிக்கணுமா? சி++ படிக்கணுமா’ என்று கேட்பது போலத்தான். சி, சி++ தெரிந்திருந்தால் ஆட்டோமொபைல் ஆட்களுக்கு பலம்தான். ஆனால் அதற்கு முன்பாக ‘முதலில் ஆட்டோமொபைல் பற்றி தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள். அதன் பிறகு அதில் சி பிரயோஜனப்படுமா அல்லது சி++ பிரயோஜனப்படுமா? என்று ஆராயலாம்’ என்றுதான் சொல்வேன். 

நம்முடைய உயர் கல்விமுறை எல்லாவற்றையும் மென்பொருளாக கற்றுக் கொள்வதில்தான் குறியாக இருக்கிறதோ என்று சந்தேகமாக இருக்கிறது. ‘இந்த சாஃப்ட்வேரைப் படிச்சுட்டு வேலைக்கு போய்டணும்’ என்பது மட்டும்தான் இலக்காக இருக்கிறது. கல்லூரி முடித்துவிட்டு வெளியில் வரும் போது ஏதாவதொரு மென்பொருளைப் படித்துவிட்டு வேலையை வாங்கிவிடலாம். அது பெரிய சிரமமில்லை. ஆனால் பத்து வருடங்களுக்குப் பிறகு வேறு விதமான பிரச்சினை உருவெடுக்கும். 

மென்பொருளுடன் நம்மை பிணைத்துக் கொண்டால் அதிலேயேதான் கட்டுண்டு கிடக்க வேண்டும். உதாரணமாக என்னைச் சுட்டிக் காட்டுவதும் உண்டு. இதற்கு முன்பாக உற்பத்தித் துறையில் ஆலோசகராக இருந்தேன். நிறுவனங்களில் உற்பத்தி செய்யுமிடத்தில் என்ன பிரச்சினைகள் வரும், எப்படி சமாளிப்பது என்பது மாதிரியான வேலை. பல நிறுவனங்கள் தங்களது தொழிற்சாலைகளில் ஆரக்கிள் ஆப்ஸ் என்றவொரு மென்பொருளைப் பயன்படுத்துகின்றன. எத்தனை பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும், எவ்வளவு நாள் அவகாசத்தில் முடிக்க வேண்டும் உள்ளிட்ட விவரங்கள் ஆரக்கிள் ஆப்ஸில் இருக்கும். ஆரக்கிள் ஆப்ஸ் மாதிரி சந்தையில் வெவ்வேறு மென்பொருட்கள் கிடைக்கின்றன. வேலை தேட வேண்டும் என்கிற சூழல் பதினைந்து வருடங்களுக்கு முன்பாக வந்த போது ஆரக்கிள் ஆப்ஸைப் படித்துவிட்டு வேலையை வாங்கியிருந்தேன். 

பிரச்சினை என்னவென்றால் தொழிற்சாலையில் நிகழும் முக்கியமான பிரச்சினைகளைவிடவும் ஆரக்கிள் ஆப்ஸ் பற்றித்தான் எனக்கு அதிகமாகத் தெரியும். ஒரு நிறுவனத்திலிருந்து இன்னொரு நிறுவனத்துக்கு வேலையை மாற்றினாலும் ஆரக்கிள் ஆப்ஸ் பயன்படுத்தும் நிறுவனத்துக்குத்தான் மாற வேண்டும். ஆரக்கிள் ஆப்ஸ்ஸூக்குப் பதிலாக வேறொரு மென்பொருளைப் பயன்படுத்தும் நிறுவனத்திடம் சென்று ‘எனக்கு உற்பத்தித் துறையின் சூட்சமங்கள் தெரியும்’ என்கிற அளவுக்குப் புலமை இல்லை. இதுதான் மென்பொருள் துறையில் பதினைந்து வருடங்களைத் தாண்டும் பெரும்பாலானவர்களின் சிக்கலாக உருவெடுக்கிறது. மென்பொருளைக் கற்றுக் கொள்வது பெரிய காரியமே இல்லை. யார் வேண்டுமானாலும் மூன்று மாதங்களில் படித்துவிட முடியும்- அது எவ்வளவு பெரிய மென்பொருளாக இருந்தாலும் இதுதான் கணக்கு. 

ஐந்து அல்லது ஆறு வருட அனுபவம் உள்ள ஒருவராலேயே ஒரு மென்பொருளைப் பிரித்து மேய முடியும் என்னும் போது பிறகு ஏன் பதினைந்து வருடங்கள் அனுபவமுள்ள ஒருவருக்கு பல லட்ச ரூபாய்களைக் கூடுதலாகத் தர வேண்டும்? நிறுவனங்கள் அனுபவஸ்தர்களை ஓரங்கட்ட மிக முக்கியக் காரணம் இதுதான். 

பதினைந்து வருட அனுபவங்களைச் சேர்த்து வைத்திருக்கும் போது ‘எனக்கு ஆரக்கிள் ஆப்ஸ் தெரியும், ஆனால் அதைவிடவும் அதிகமாக உற்பத்தித் துறையின் சிக்கல்களைத் தெரியும், அதற்கான தீர்வுகளும் தெரியும்’ என்று சொல்லும் நிலையில் இருந்திருந்தால் எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டியதே இருக்காது. மென்பொருள் துறையில் பணியாற்றுகிற அல்லது மென்பொருட்களைப் பயன்படுத்துகிற யாருமே மென்பொருளை அக்குவேறு ஆணி வேறாகக் கற்றுக் கொள்வதில்தான் கவனமாக இருக்கிறார்கள். தம்முடைய துறை (டொமைன்) பற்றிய ஆழமான புரிதல் இருப்பதில்லை. இதைத்தான் ஒழுங்குபடுத்திக் கொள்ள வேண்டும். மென்பொருள் என்பவை மாறிக் கொண்டேயிருக்கும். இன்று சந்தையில் கோலோச்சுகின்ற ஒன்று அடுத்த வருடம் சீந்த ஆளில்லாமல் போய்விடும். ஆனால் துறைகள் அப்படியில்லை- உற்பத்தி, தொலைத் தொடர்பு, ஆட்டோமொபைல், புள்ளியியல் என்பவையெல்லாம் எல்லாக் காலத்திலும் இருந்து கொண்டேதான் இருக்கும். அதனால் நம்முடைய அறிவு அதில்தான் இருக்க வேண்டும்.

டேட்டா சயின்ஸ் என்றால் ஒரு தகவலை எப்படி ஒழுங்குபடுத்துவது, அதை எப்படி ஆராய்வது, நம் ஆய்வின் முடிவுகளை எப்படி அடுத்தவர்களுக்குக் காட்டுவது என பல கட்டங்கள் இருக்கின்றன. இவை ஒவ்வொரு கட்டத்தைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும். அப்படித் தெரிந்து கொண்டால் அந்தந்த காரியத்துக்கு ஏற்ப சந்தையில் கிடைக்கும் மென்பொருளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அதுதான் நம்மை அடுத்த கட்டத்துக்கு நோக்கி நகர்த்தும். ‘ஆர் படிக்கணுமா? பைத்தான் படிக்கணுமா?’ என்று ஆரம்பத்திலேயே யோசிக்கத் தொடங்கினால் நம் தேடல் முடங்கிப் போகும். டேட்டா சயின்ஸில் மட்டுமில்லை- இது எல்லாத் துறைகளுக்கும் பொருந்தும்.

3 எதிர் சப்தங்கள்:

பே.ஆவுடையப்பன் said...

இந்த அளவிற்கு சாப்ட்வேர் குறித்து தமிழில் எளிமையாக அனுபவரீதியாக வேறு யாரும் தெரிவித்ததில்லை. தங்களின் எழுத்து இன்றைய சாப்ட்வேர் தமிழர்களுக்கு கிடைத்த பெருமை

சேக்காளி said...

//அதிகமாக உற்பத்தித் துறையின் சிக்கல்களைத் தெரியும், அதற்கான தீர்வுகளும் தெரியும்//
தல டா

Anonymous said...

Good article, Mani. You have summarized very aptly on what people should focus on - when they start on data science. Regards. Radha Bala from Cochin