Mar 21, 2019

தமிழச்சி தங்கபாண்டியன்

2004 ஆம் ஆண்டு எம்.டெக் ப்ராஜக்ட் செய்வதற்காகச் சென்னை வந்து சேர்ந்தேன். கனவுகளின் காலம் அது. சனி, ஞாயிறுகளில் எந்த யோசனையுமில்லாமல் காலையில் கிளம்பி இரவு வரைக்கும் சென்னையின் தெருக்களில் சுற்றித் திரிந்த இலக்கற்ற பருவம். அப்படியான ஒரு நாளில் ‘எஞ்சோட்டுப் பெண்’ என்ற புத்தகத்தின் திறனாய்வு மைலாப்பூரில் நடப்பதாகவும் வைரமுத்து கலந்து கொள்வதாகவும் நிறைய போஸ்டர்கள் ஒட்டியிருந்தார்கள். வைரமுத்துவைப் பார்த்துவிட வேண்டும் என்பதற்காக அந்த அரங்குக்குச் சென்றேன். அது தமிழச்சி தங்கபாண்டியன் எழுதிய புத்தகம். வைரமுத்துவுக்கு முன்பாகவே கவிஞர் மனுஷ்ய புத்திரன் வந்திருந்தார். அங்குதான் அவருடன் எனக்கு அறிமுகம் கிடைத்தது. எனது வாழ்நாளில் எழுத்து, வாசிப்பு சார்ந்த பயணத்துக்குக்கான தொடக்கப்புள்ளி அந்தக் கூட்டம்தான்.

ஒரு மார்ச் 15 ஆம் நாளில், மனுஷ்ய புத்திரன் பிறந்த நாள் கொண்டாட்டத்துக்காக சுமதி என்கிற தமிழச்சி தங்கபாண்டியன் வந்திருந்தார். ராணி மேரிக்கல்லூரியின் பேராசிரியராகத்தான் அறிமுகம். அப்பொழுது நான் மாணவன் என்பதால் பேராசிரியர்களிடம் காட்டும் தொலைவை அவரிடமும் காட்டினேன். அவர் கிளம்பிய பிறகு அவரைப் பற்றி மனுஷ்ய புத்திரன் சொன்னார்.  அவரது புத்தகத்தை ஒரு பிரதி கொடுத்து அனுப்பினார். 


அப்பொழுது செல்போன் எல்லாம் இல்லை. நினைத்தவுடன் தொடர்பு கொள்வதும் சாத்தியமில்லை. தமிழச்சியுடன் பெரிய அறிமுகமுமில்லை. ஒன்றிரண்டு வருடங்களுக்குப்  பிறகு இன்னொரு புத்தக வெளியீட்டு நிகழ்வில் ‘மணி நல்லாருக்கீங்களா?’ என்றார். எனது பெயரை நினைவில் வைத்துக் கேட்டது வெகு சந்தோஷமாக இருந்தது. அதன் பிறகு அவ்வப்போது மின்னஞ்சல் அனுப்புவதுண்டு. ஏதாவதொரு நிகழ்ச்சிகளில் சந்தித்துக் கொள்வோம். அலைபேசி வந்த பிறகுதான் அவரிடம் நிறையப் பேசினேன். கடந்த பத்தாண்டுகளில் பல குழப்பங்களுக்கு அவரிடம்தான் தீர்வு கேட்கிற அளவுக்கு நெருங்கியிருக்கிறேன். எடுத்தேன் கவிழ்த்தேன் என்று அவர் எதையுமே சொன்னதில்லை. ‘பத்து நிமிஷம் டைம் கொடுங்க’ என்று கேட்டுவிட்டு பத்து நிமிடங்களுக்குப் பிறகு திரும்ப அழைத்துப் பேசுவார். நம்முடைய பிரச்சினைகளுக்காக பத்து நிமிடங்கள் யோசித்துவிட்டு தீர்வு சொல்கிறவர்கள் எத்தனை பேர்கள் இருப்பார்கள்? அவரை நன்கு அறிந்தவர்களுக்கு இது தெரிந்திருக்கும். 

நம் பிரச்சினைகளுக்கு எல்லோரிடமுமா தீர்வு கேட்போம்? அவரிடம் தீர்வு கேட்க ஒரு காரணமிருக்கிறது. 2009 ஆம் ஆண்டில் ஒரு சாலைப் பயணத்தில் மிகப்பெரிய விபத்து நடந்தது. அவரது எதிர்காலமே முடிந்துவிட்டது என்றார்கள். ஆனால் சில மாதங்களில் அதே மனதைரியத்துடனும், புன்னகையுடனும் எழுந்து வந்தார். அவரது மன தைரியம் அபாரமானது. விபத்து குறித்து, அந்தத் தருணத்தில் அவரது மனநிலை குறித்து அவரிடம் நிறையப் பேசியிருக்கிறேன். அளவுகடந்த மன உறுதி கொண்ட இரும்பு மனுஷி என்பதைப் புரிந்து கொள்ள வாய்த்த தருணங்கள் அவை. 

பதினைந்து வருடங்களுக்கு முன்பாக எப்படி மேடம் என்று அழைத்தேனோ இன்றைக்கும் அப்படியேதான் அழைக்கிறேன். இன்று வரைக்கும் ‘நல்லாருக்கீங்களாப்பா?’ என்று அதே வாஞ்சையுடன் பேசுகிறவராகத்தான் இருக்கிறார். என்னிடம் மட்டுமில்லை- பழகுகிறவர்கள் அத்தனை பேரிடமும் அப்படித்தான் இருக்கிறார். இரும்பு மட்டுமில்லை- எளிய மனுஷியும் கூட. எனக்குத் தெரிந்து அவர் பகையாளியை உருவாக்கியதில்லை. அவரளவுக்கு மிகப்பெரிய நட்பு வட்டம் கொண்டவர்களும் எனக்குத் தெரிந்து வேறு யாருமில்லை. அவர் வழியாகவே நிறையத் தொடர்புகள் எனக்கு உருவாகின.


ஏதோவொரு திமுக மாநாட்டில் கொடியேற்றுவதற்கான அழைப்பு வந்தவுடன் பேராசிரியர் பணியை ராஜினாமா செய்கிறார் என்று கேள்விப்பட்டவுடன் கடும் அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் இதை எப்படி நேரடியாகக் கேட்பது என்று தயங்கிக் கேட்டதில்லை. பல வருடங்களுக்குப் பிறகு அவருடன் நட்பானவுடன் ‘இப்போ நீங்க வேலையில் இருந்திருந்தீங்கன்னா பிரின்ஸிபல் ஆகியிருப்பீங்க மேடம்’ என்றேன். சிரித்துக் கொண்டார்.  இதுதான் தருணம் என்று ‘தவறான முடிவு எடுத்துட்டோம்ன்னு எப்பவாச்சும் நினைச்சிருக்கீங்களா?’ என்று கேட்டேன். ‘ச்சே..ச்சே...யோசிச்சுத்தானே முடிவு எடுத்தேன்..’ என்றார். 

ஒவ்வொரு தேர்தலிலும் அவருக்கு சீட் கிடைக்கும் என்று சொல்வார்கள். பதினைந்து வருடங்கள் கழித்து இப்பொழுது அவருக்கு வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. 

சுமதி என்கிற தமிழச்சி தங்கபாண்டியனிடம் ஆச்சரியப்படுகிற அம்சங்கள் நிறைய உண்டு. அவரைப் பாராட்டி எழுதினால் அது தேர்தல் நோக்கத்துக்காக எழுதப்பட்டதாகி விடக் கூடாது என்ற தயக்கம் இருக்கிறது. ஆனால் இதுதான் சரியான தருணம் என்றும் கூடத் தோன்றுகிறது. எந்தவொரு கூட்டத்திலும் தயாரிப்பில்லாமல் வந்து பேசி பார்த்ததில்லை. அவரது பேச்சில் நிறையத் தரவுகள் இருக்கும். மேற்கோள்கள் இருக்கும். ஆங்கிலமும் தமிழும் பேச்சில் நடனமாடும். 

மிக ஆச்சரியமாக, தமிழச்சி தங்கம் அணியமாட்டார். தெருவோரக் கடைகளில் விற்கும் பாசி மணிகள்தான். இப்படி அவரைப் பற்றி சின்னச் சின்னச் செய்தியாகச் சொல்லிக் கொண்டேயிருக்கலாம். தேர்தல் முடிந்த பிறகு நிறைய எழுதுகிறேன். அவரிடம் குறைகள் ஏதேனும் இருக்கிறதா என்று கேட்டால் எனக்குத்  தெரியவில்லை. நிறைகள்தான் முன்னால் வந்து நிற்கின்றன. 

வாழ்வின் மிகப்பெரிய உயரங்களையும் வீழ்ச்சிகளையும் பார்த்தவர் அவர். கடந்த பதினைந்து ஆண்டுகளாக அறிந்திருக்கிறேன். அவர் இன்னமும் அதே மல்லாங்கிணறைச் சார்ந்த சொமதியாகத்தான் இருக்கிறார். அதுதான் அவரது மிகப்பெரிய பலமும் கூட. ஆழ்ந்த புலமை, விரிவான வாசிப்பு, தீர்க்கமாகப் பேசுகிற திறன், கள்ளமில்லாத நட்பு எனக் கலந்து கட்டிய ஆளுமை இந்தச் சுமதி. 

தென் சென்னையின் பாராளுமன்ற உறுப்பினராக வேண்டும் என மனப்பூர்வமாக வாழ்த்துகிறேன்.

Facebook
Twitter

Mar 18, 2019

எதிர்பார்த்த வேட்பாளர்...

நாடாளுமன்றத் தேர்தலில் ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள்  கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டுவிட்டன. நான் எதிர்பார்த்த பெயர் ஒன்று விடுபட்டுப் போயிருக்கிறது. சத்யபாமா. திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியின் உறுப்பினராக இருந்தவர். கிட்டத்தட்ட 87% வருகைப்பதிவு, 137 விவாதங்கள், 457 கேள்விகள் என தமிழக எம்.பிக்களில் குறிப்பிடத்தக்க அளவுக்கு பணியாற்றியவர் அவர். பிற எம்.பிக்கள் என்ன செய்தார்கள் என்பதை பி.ஆர்.எஸ் இந்தியா என்ற தளத்தில் பார்த்துக் கொள்ளலாம். 

அவருக்கு வாய்ப்புத் தர வேண்டும் என்று எதிர்பார்த்தாலும் கூட, உள்ளூரில் அவருக்கு எதிரான அரசியல் உண்டு என்பது தெரிந்த விவகாரம்தான். 

மிகச் சாதாரணமாகவே சத்யபாமாவின் அரசியல் வாழ்வு தொடங்கியது. தொடக்கத்தில் யூனியன் கவுன்சிலர் பிறகு யூனியன் சேர்மேன் என்றிருந்தவருக்குக் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஜெயலலிதா வாய்ப்புக் கொடுத்தார். ஜெயலலிதாவுக்கு அவர் செல்லப்பிள்ளையும் கூட.  ஜெ. உயிரோடிருந்திருந்தால் சத்யபாமாவின் வளர்ச்சி தொடர்ந்திருக்கக் கூடும். ஆனால் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு சத்யபாமா தடுமாறியதைக் கண்கூடக் காண முடிந்தது. அந்தத் தருணத்தில்தான் அவரை எதிரியாகக் கருதிக் கொண்டிருந்தவர்கள் தலை தூக்கினார்கள். 

அரசியலில் நம்மை ஒருவர் நசுக்கத் தொடங்கும் போது நாமும் எதிர்க்கத் தொடங்கிவிட வேண்டும். அப்பொழுதுதான் மேலிடத்தில் வலுவற்று இருப்பவர்கள் ‘தேவையில்லாமல் இவரைப் பகைத்துக் கொள்ளக் கூடாது’ என்று நினைப்பார்கள்.  எம்.பியாக இருப்பவர் தமக்கென தனிப்பட்ட கூட்டம் ஒன்றை உருவாக்கியிருக்க வேண்டும். ஆனால் ‘நமக்கு எதுக்கு வம்பு?’ என்று அடங்கிப் போகத் தொடங்கினார். தமது எதிரிகள் கலந்து கொள்ளும் நிகழ்வுகளில் அவரும் கலந்து கொண்டார். சமாதானம் ஆகிக் கொண்டார்கள் என்றுதான் வெளியிலிருந்து பார்ப்பவர்கள் கருதினார்கள். ஆனால் அரசியலில் பழம் தின்று கொட்டை போட்டவர்கள் வெளியில் அப்படிக் காட்டினாலும் உள்ளுக்கு கத்தியைக் கூர் தீட்டிக் கொண்டேதான் இருப்பார்கள். அந்தக் கத்தியை இப்பொழுது சத்யபாமாவின் அரசியல் வாழ்க்கையில் பதம் பார்த்திருக்கிறார்கள்.

கடந்த ஒன்றிரண்டு வருடங்களாகவே சத்யபாமா ஓரங்கட்டப்பட்டார். அவருக்கான முக்கியத்துவம் பெருமளவு குறைக்கப்பட்டது. நானறிந்த வரையில் சத்யபாமா பெரிய மேடை வேண்டும், கூட்டம் வேண்டும் என்றெல்லாம் எதிர்பார்க்கிறவர் இல்லை. ‘ஒரு நிகழ்ச்சி இருக்கு வர முடியுங்களா மேடம்’ என்றால் எதைப் பற்றியும் கருதாமல் சரி என்று சொல்கிற வகைதான் அவர். அதேசமயம், ‘நான் வந்துடுவேன்..ஆனா உங்களுக்குத் தேவையில்லாத சிக்கல்’ என்றுதான் தயங்குவார். அவரை அழைத்து நிகழ்ச்சி நடத்தினால் அவரது எதிரிகளிடம் நாம் பகைமையைச் சம்பாதித்துக் கொள்ள வேண்டும் என்று சொல்வார். அது உண்மைதான். ஆனால் அப்படி அவர் தயங்கியதுதான் அவருடைய மிகப்பெரிய பலவீனம் எனத் தோன்றியது. 

தனி ஆவர்த்தனம் நடத்தியிருக்க வேண்டும்; எந்த நிகழ்ச்சியென்றாலும் தயங்காமல் கலந்திருக்க வேண்டும். ‘எனக்கு சீட் கொடுக்கலைன்னா என்ன நடக்கும் தெரியும்ல’ என்று வெளிப்படையாகப் பேசாமல் காட்டுகிற அளவுக்கு வாய்ப்புகள் இருந்தும் அவர் பயன்படுத்திக் கொள்ளத் தவறிவிட்டார் என்றுதான் தோன்றுகிறது. எம்.பியாக தமது கடமையைச் செய்தவர், டெல்லியில் தொடர்ந்து அமைச்சர்களையும், அதிகாரிகளையும் பார்த்து மனுக்கள் வழங்குவதுமாக இருந்தவர் உள்ளூர் அரசியலில் ஏமாந்துவிட்டார். அவருக்கான வாய்ப்புகள் தட்டிவிடப்பட்டுவிட்டன. சமாதானமாகச் சென்றவரை இப்பொழுது முழுமையாக ஓரங்கட்டிவிட்டார்கள். 

அரசியலில் வாய்ப்பிருக்கும் போது வலுவேற்றிக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் இப்படித்தான் ஆகும். இதற்கு மேல் இதைப் பேசிக் கொண்டிருக்க வேண்டியதில்லை.

சத்யபாமா எம்.பி மீது விமர்சனங்கள் இல்லாமல் இல்லை. தமிழகம் பாதிப்புக்குள்ளான பொதுவான விவகாரங்களில் கட்சியை மீறி தம்முடைய குரலை எந்தவிதத்திலும் பதிவு செய்யவில்லை என்று அவர் மீது குற்றச்சாட்டு உண்டு. அது மிகச் சரி. ஆனால் கடந்த முறை நாம் தேர்ந்தெடுத்து அனுப்பி வைத்த தமிழக எம்.பிக்களின் செயல்பாடுகள் என்னவென்று நம் எல்லோருக்கும் தெரிந்ததுதான். அந்தக் கூட்டத்தில் ஒன்று வெளியில் பிரகாசித்தது. தமது தொகுதிகளின் பிரச்சினைகளை அறிந்தவராக, அவற்றைக் களைவதற்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டவராக சுழன்று கொண்டிருந்தார். அப்படிப்பட்டவர் நம்மூரில் இருந்து டெல்லி சென்ற உறுப்பினர் என்ற மகிழ்ச்சி கொஞ்சம் இருந்தது. 

அதையும் முடித்துக் கட்டிவிட்டார்கள். இந்த முறை திருப்பூர் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் சுப்பராயனும் அதிமுக சார்பில் எம்.எஸ்.எம் ஆனந்தனும் போட்டியிடுகிறார்கள். இரண்டு பேருமே திருப்பூரைச் சார்ந்தவர்கள். கோபி, அந்தியூர், பவானி, பெருந்துறை என நான்கு தொகுதிகளில் இருக்கும் மக்கள்தான் வெற்றியை நிர்ணயிக்கப் போகிறவர்கள். சத்யபாமா இருந்திருந்தால் இந்தத் தொகுதிகளில் போட்டி கடுமையானதாக இருந்திருக்கக் கூடும். தொகுதிக்கு பொருத்தமானவர், வெல்ல வாய்ப்பிருப்பவர் என்பதெல்லாம் பிரச்சினையே கிடையாது; தமக்கு எதிரி உருவாகிவிடக் கூடாது என்பதுதான் அரசியலாக இருக்கிறது.

Mar 12, 2019

கொங்கு மண்டலமும் குற்றங்களும்

தமிழகத்திலேயே கோவையில்தான் கல்லூரி மாணவர்களிடையே மிக அதிகளவு கஞ்சாவும், போதை மாத்திரைகளும் கிடைப்பதாக ஒரு பேராசிரியர் சொன்னார். தனியார் பொறியியல் கல்லூரியின் பேராசிரியர் அவர். மிகைப்படுத்திச் சொல்கிறார் என நினைத்தேன். ஆனால் விசாரித்துப் பார்த்தால் அவர் சொன்னதில் உண்மையில்லாமல் இல்லை. மாணவர்களுக்கு எங்கிருந்தோ கஞ்சா கிடைக்கிறது. தனியார் மருத்துவமனைகளிலிருந்து மயக்க மருந்துகள் கடத்தப்பட்டு அவை ‘ஷாட்’களாக கல்லூரி மாணவர்களுக்கு விற்கப்படுகிறது. மிகச் சாதாரணமாக எக்ஸ்டெஸி மாத்திரைகளை வாங்குகிறார்கள். இப்படி இன்னமும் நமக்குத் தெரியாதவையெல்லாம் மாணவர்களுக்குச் சாத்தியமான சமாச்சாரங்கள்.

தமிழகத்தில் மிக அதிகளவிலான பண மோசடிகள் நடக்கும் ஊர்களில் திருப்பூரும் ஒன்று. கடன் வாங்கிவிட்டு தலைமறைவாவது தொடங்கி, செக் மோசடிகள், கந்துவட்டி என பட்டியல் மிகப்பெரியது. கொங்குப்பகுதியைச் சார்ந்தவன் என்ற முறையில் ஊர் மீதான பெருமிதம் இருந்தது. இங்கேயிருக்கும் மக்கள் மரியாதை தெரிந்தவர்கள்; பண்பானவர்கள் என்கிற எண்ணமெல்லாம் நிறைய இருந்தது. இன்னமும் இருக்கிறதுதான். வெள்ளந்தியான மனிதர்களைப் பார்க்கும் போதும், கிராமங்களில் வேளாண்மை செய்தும் பிழைத்துக் கொண்டிருக்கிறவர்கள் அப்படித்தான் இருக்கிறார்கள். ஆனால் அதே பகுதியில்தான் பணமே பிரதானம் என்று எந்தவிதமான அறமும் இல்லாமல் ஒரு பெருங்கூட்டம் மிக வேகமாக வேட்டையாடிக் கொண்டிருக்கிறது. 

அறமில்லாத இடத்தில் எல்லோருமே வெட்டுப்படுவதுதான் நியதி. அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. 

‘குற்றங்கள் எல்லா ஊர்களிலும்தான் நடக்கிறது. இன்றைக்கு ஒரு பிரச்சினை பூதாகரமானவுடன் இந்தப் பகுதியே அப்படித்தான்னு சொல்ல வேண்டுமா?’ என்று கோபம் வரத்தான் செய்யும்.  ஆனால் இதையெல்லாம் எப்பொழுது பேசுவது? ஒரு பிராந்திய மனநிலை என்றிருக்கிறதல்லவா? அங்கே நிலவும் பொது உளவியல் என்ன என்பது பற்றியதான விவாதங்கள் அவசியமில்லையா? புனிதமான பிம்பங்களை உடைத்து உண்மையிலேயே என்னதான் பிரச்சினை என்று புரிந்து கொள்ள வேண்டிய தருணம் இது.  

நான்கு பேர்கள் நல்ல மனிதர்கள் என்றால் அதில் ஒருவராவது கபட எண்ணம் கொண்டவராக இருக்கிறார். மற்ற நான்கு பேர்களைப் போலவே அவர்களும் தும்பைப்பூ வெண்மையில் உடை தரித்து, ஆன்மிகம், கடவுள் எனப் பேசி மதத்தையும், சாதியையும், பணத்தையும் முகமூடியாகத் தரித்துக் கொள்கிறார்கள். மற்ற நான்கு பேர்களும் இவரை நம்பத் தொடங்குகிறார்கள். மற்றவர்களிடம் இந்த வேடதாரியைப் பற்றிப் பெருமையாகப் பேசுகிறார்கள். அதைப் பார்க்கும் பிற சல்லிகளும் அதே வேடங்களை இம்மி பிசகாமல் ஏந்திக் கொள்கிறார்கள். இப்பொழுதெல்லாம் யாரையும் நல்ல மனிதர் என்று நம்புவதைவிடவும், பார்க்க பாந்தமானவராக இருக்கிறார் என்று கருதுவதைவிடவும் ‘தமது எல்லாவிதமான குற்றவுணர்ச்சிகளையும் மறைப்பதற்கான வேடமாகவும், நியாயப்படுத்துதலாகவும் இப்படியொரு தோற்றத்தைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு பேசித் திரிகிறார்களோ’ என்று பதற்றமாக இருக்கிறது. அதற்கேற்ற வேடங்களில் பொருத்தமானவற்றை இந்தப் பகுதியே வழங்குகிறது.

அரிவாளை எடுத்து வெட்டி வீசுகிறவர்களைவிடவும் சாந்தமானவர்களாக நடிக்கிறவர்கள் பேராபத்துக் கொண்டவர்கள். கொங்கு மண்டலம் முழுக்கவும் அப்படியானவர்கள் விரவியிருக்கிறார்கள் என்று நினைக்கும் போதே மனம் பதைபதைக்கிறது.

இன்னொரு புள்ளியையும் பார்க்க வேண்டியிருக்கிறது. அறம் சார்ந்து சம்பாதிப்பவர்களும் கூட ‘சம்பாதிப்பதெல்லாம் நம் பிள்ளைக்குத்தானே’ என்று  ஏகபோகமாக வாரி வழங்குகிறார்கள்.  அறம், வாழ்க்கை நெறிமுறைகள் என்பதையெல்லாம் தாண்டி ‘சந்தோஷமா இரு கண்ணு’ என்று தமது பிள்ளைகளுக்கு எல்லா வசதிகளையும் செய்து கொடுக்கிறார்கள். பணம் கொழிக்கும் ஓர் இளம் சமூகம் என்ன செய்வதென்று தெரியாமல் தறிகெட்டுத் திரிகிறது.  ஒரு கூட்டத்தில் தீய வழிக்கான தேடல்களோடு இருப்பவர்கள் இரண்டு பேர் இருந்தால் போதாதா? இன்னமும் நான்கு பேர்களை வளைத்துக் கொள்வார்கள். பல்கிப் பெருகிக் கொண்டிருக்கிறது. நாளை அவன் சம்பாதிக்கும் போது ‘எப்படி வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம்’ என்றே முழுமையாக நம்புகிறான்.

அரையும் குறையுமாக பிரச்சினைகள் பற்றித் தெரிய வந்தாலும் கூட ‘நம் பையன் இதைச் செய்ய மாட்டான்; நம் பொண்ணு இதைச் செய்ய மாட்டாள்’ என்று நம்புகிற பெற்றோர்களே அதிகம்.  அப்படியே நம்பினாலும் கூட ‘வயசு அப்படி..போகப் போக சரியாகிடும்’ என்று அதைவிடவும் அதிகமாக நம்புகிறார்கள். இவற்றையெல்லாம்தான் இணைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. அதிகாரம், கொழிக்கும் பணம், எதையும் மூடி மறைத்துவிட முடியும் என்கிற தைரியம், கட்டற்ற சுதந்திரம், காமம், போதை, தொழில்நுட்பம் என பல தரப்பும் ஒரு தலைமுறையையே சிதைத்துக் கொண்டிருக்கிறது. பணம் இருந்தால் பிற எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ளலாம் என இன்னொரு கூட்டம் இதே மண்ணில்தான் மேற்சொன்ன எல்லாவற்றையும் தமக்கு ஏற்றபடி வளைத்துப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது.

எல்லோரும் நினைத்துக் கொண்டிருப்பது போல வாய் நிறைய மரியாதையோடு அழைக்கும் மனிதர்கள் மட்டுமே நிறைந்த பிரதேசமாக இல்லை. மோசடிக்காரர்களும், அதிகார வெறி கொண்டவர்களும், சாதியப் பித்து ஏறியவர்களும், மதத் துவேஷம், இவற்றையெல்லாம் வர்த்தமாக்கத் தெரிந்து கொண்டவர்களும் நிறைந்து பெருகிக் கொண்டிருக்கும் களமாக மாறிக் கொண்டிருக்கிறது கொங்கு மண்டலம். இப்படியான அயோக்கியர்கள் அத்தனை பேருக்கும் நன்கு வேடம் அணியத் தெரிகிறது. அதே மரியாதை நிறைந்த வார்த்தைகளுடன் அன்பு குழையப் பேசத் தெரிகிறது. இப்படியான சூது நிறைந்த மனிதர்கள் சேர்ந்து ஒரு பகுதியின் பிராந்திய மனநிலையைக் கட்டமைக்கிறார்கள். ‘எந்த வரைமுறையில்லாமல் சம்பாதிக்கலாம். சம்பாத்தியம் மட்டுமே முக்கியம்’ என்று பிறரையும் நம்ப வைக்கிறார்கள். இங்கு நிலவும் நிலைகுலையச் செய்யும் மோசடிகளுக்கும், அத்துமீறல்களுக்கும் இப்படிக் கட்டமைக்கப்படும் பொது உளவியலே முழுமையான காரணம் என்று தீர்க்கமாக நம்பலாம். ‘புதுக்கோட்டையிலும் ராமநாதபுரத்திலும் கொலை செய்தவனெல்லாம் தப்பிச்சு வந்து இங்கே பனியன் கம்பெனியில் வேலை செய்கிறான்; அதனால்தான் குற்றச் செயல்கள் அதிகமாகிவிட்டன’ என்று அடுத்தவர்கள் மீது பழியைப் போடுவதும் கூட ஒருவிதமான தப்பித்தலே. நாம் எல்லாவிதத்திலும் சரியாக இருக்கிறோமா என்றும் யோசித்துப் பார்த்துக் கொள்ள வேண்டிய அவசியம் உண்டாகியிருக்கிறது. 

கடந்த தலைமுறை வரைக்கும் குழந்தைகளுக்கு இவ்வளவு செகளரியங்கள் வழங்கப்படவில்லை. கேள்வி கேட்காமல் பணம் கொடுக்கப்படவில்லை. இரு சக்கர வாகனங்களும், கார்களும் கேட்காமலே கிடைக்கவில்லை. நீதி போதனை பேசினார்கள். திருக்குறளும், அறநெறிகளும் கற்பிக்கப்பட்டன. குடிப்பது அவமானம் என்ற பிம்பம் இருந்தது. அம்மாவுக்கும் அப்பாவுக்கும் பயப்பட வேண்டும் என்ற சூழல் இருந்தது. ஆசிரியர்களுக்கான சுதந்திரம் இருந்தது. திசை மாறும் பிள்ளைகளை அவர்கள் தண்டிக்கும் உரிமையைப் பெற்றிருந்தார்கள். குழந்தைகள் மீதான கண்காணிப்பு சற்றே வலுவாக இருந்தது. அதுதான் சமூகத்திற்கான பொதுவான மனநிலையை உருவாக்குவதாகவும் இருந்தது.  இன்றைக்கு எல்லாவற்றையும் உடைத்து வீசியிருக்கிறோம். பக்கத்து வீட்டுப் பையன், எதிர்வீட்டுப் பெண் என பிறரை அளவுகோலாக வைத்துத்தான் நம்முடைய முடிவுகள் இருக்கின்றன. ஆசிரியர்கள், பள்ளிகள் என்பதைவிடவும் தொழிலும் வருமானமுமே உளவியல் கட்டமைப்பில் முக்கிய பங்காற்றுகின்றன. எந்தவிதமான கட்டுப்பாடுகளுமில்லாதவர்களுக்கு எதைப் பற்றிய யோசனையுமில்லாமல் போய்விடுகிறது. பின்விளைவுகள் பற்றியக் கவலையே இல்லாமல் ஆகிவிடுகிறது.

கட்டுப்பாடில்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் குதிரையின் கடிவாளத்தை இழுத்துப் பிடித்தே தீர வேண்டும். நம்மை நம் பெற்றோர்கள் எப்படி வளர்த்தார்கள் என்று குறைந்தபட்சமாகவாவது சிந்திக்க வேண்டும். பணத்தைத் தாண்டி நம் வாழ்க்கையை அர்த்தப்படுத்தும் நெறிகள் இருக்கின்றன என்பதைப் புரிந்து கொள்ளாதவரைக்கும் சூழல் மோசமாகிக் கொண்டேதான் இருக்கும். ஆனால் அதெல்லாம் இனி சாத்தியமா என்றே தெரியவில்லை. எந்தவிதமான சுய உணர்வுமில்லாமல் ஓடுகிற வேட்டை நாயாக இந்தப் பகுதி மாறிவிட்டது என்றுதான் தோன்றுகிறது.

Mar 7, 2019

கமலின் அரசியல்

ஒரு நண்பர் இருக்கிறார். அப்பாவி மனிதர். வேலூர் சென்றிருந்த போது திரும்பத் திரும்ப அழைத்து கடைசியில் தொடர்வண்டி நிலையத்தில் வந்து பிடித்துவிட்டார். கையில் இரண்டு காலண்டர்களை வைத்திருந்தார். 

‘உங்களுக்குத்தான்’ என்றார். வாங்கிப் பார்த்தால் கமலஹாசன். எங்கள் வாக்கு விற்பனைக்கு இல்லை என்று காலண்டரில் அச்சிட்டிருந்தார். நண்பருக்கு பெரிய வருமானம் எதுவுமில்லை. கமல் மீதான பிடிப்பில் சொந்தக்காசில் அச்சடித்திருந்தார்.

‘நடிகரோட படத்தை வீட்டுக்கு எடுத்துச் சென்றால் அம்மாவிடம் திட்டு வாங்க வேண்டும்..தப்பா எடுத்துக்காதீங்க’ என்றேன். 

கமலை எப்படி நடிகர் என்று சொல்லலாம் என்று அவர் மனதுக்குள் நினைத்திருக்க வேண்டும்.  ‘இதில் நீங்க ஆதார் எண்ணைக் குறித்து வைக்கலாம்; கியாஸ் எண்ணைக் குறித்து வைக்கலாம்’ என்றெல்லாம் சொன்னார். அதையெல்லாம் எனது செல்போனிலேயே குறித்து வைத்திருக்கிறேன் என்று சொன்னனேன். அவருக்கு முகம் சுருங்கிவிட்டது.

அதன் பிறகு அடிக்கடி அலைபேசியில் அழைப்பார். ‘எங்க தலைவர் அதைச் சொல்லியிருக்காரு..இப்படி செய்யறாரு’ என்று அவருக்கு கமல் மீது அலாதியான பற்று. ஒருவிதமான மயக்கநிலையில் இருக்கிறார். நேரடியாகவும் மறைமுகமாகவும் சொல்லிப் பார்த்தேன்.

கமலுக்கென்று உறுதியான கொள்கை எதுவுமில்லை. கட்சிகளுக்குத் தேவையான அடிப்படைக் கட்டமைப்பு எதையும் வலுப்படுத்தவில்லை. கல்லூரிகளில் பேசினால் வாக்களித்துவிடுவார்கள் என்று நம்புகிறார். அவரை நம்பிச் செலவு செய்து கையைச் சுட்டுக் கொள்ளாதீர்கள் என்று சொன்னாலும் நண்பர் கேட்பதாக இல்லை. கமல் பற்றி எதையாவது ஒரு செய்தியை அனுப்பிக் கொண்டேயிருக்கிறார்.

நல்லது. 

அரசியலில் கூட்டத்தைச் சேர்க்கும் முன்பாக தமக்கான சித்தாந்தம் என்னவென்று தெளிவாகச் சொல்ல வேண்டும். தமிழகத்தைப் பொறுத்தவரையிலும்,  கொள்கையில்லாமல் அரசியல் அதிகாரத்தில் சிறு சலனத்தைக் கூட உருவாக்க முடியாது என்று உறுதியாகச் சொல்லலாம். திராவிடமோ, ஆரியமோ, தமிழ் தேசியமோ- ஏதோவொன்று. ஆனால் இதுதான் எங்கள் சித்தாந்தம் என்று வெளிப்படையாகச் சொல்ல வேண்டும். அப்படியாகக் கமல் எங்கேயாவது பேசியிருக்கிறாரா என்று நண்பரிடம் கேட்டேன். அவரைச் சங்கடப்படுத்தக் கூடாது என்றுதான் நினைக்கிறேன். ஆனால் ஒவ்வொரு முறையும் அப்பாவியாகவே பேசிக் கொண்டிருக்கிறார். கமலுக்கு இப்படியான அப்பாவிகள்தான் தேவை. இந்தச் சமூகத்தை ஒரே இரவில் புரட்டிப் போட்டுவிட முடியும் என்று நம்புகிற மிடில்க்ளாஸ் அப்பாவிகள். 

கமலஹாசன் அவர்களுடைய எண் என்னுடைய வாட்ஸாப்பில் இருக்கிறது. ‘செண்டரிஸ்ட்’ என்று எழுதி வைத்திருக்கிறார். ‘ஒண்ணா இந்தப் பக்கம் ஆட்டு. இல்லைன்னா அந்தப் பக்கம் ஆட்டு’ என்று வடிவேலுவின் பாணியில் ஒரு செய்தியை அனுப்பிவிடலாமா என்று கூட பல முறை நினைத்திருக்கிறேன். ஆனால் கட்டுப்படுத்திக் கொள்வேன். யாரோ சொல்வதைக் கேட்டு சண்டைக்கு என மைதானத்துக்கு வந்துவிட்டு ‘மய்யமாக நிற்கிறேன்’ என்று நழுவினால் இரண்டு பக்கமும் அடி விழும் அல்லது ‘போய் ஓரமா விளையாடு’ என்று நம்மைச் சீந்தக் கூட மாட்டார்கள்.

மரம் வைக்கிறேன், குளம் வெட்டுகிறேன், ஊழலை ஒழிக்கிறேன் அதனால் நான் அரசியல் செய்கிறேன் என்று பேசுவதெல்லாம் என்.ஜி.ஓ அரசியல். ஊழலை ஒழிக்கிறேன் என்றால் எப்படி ஒழிக்க முடியும் சொல்ல வேண்டும். அதற்கான ஆக்கப்பூர்வமான வழிமுறைகள் என்னவென்று சொல்ல வேண்டும். இருக்கிற கட்சிகளை ஒழித்துவிட்டு என்னைக் கொண்டு வாருங்கள் ஒழித்துக் காட்டுகிறேன் என்றால் ‘மலையைத் தூக்கி என் தோள் மீது வையுங்கள்; நான் தூக்கி நடந்து காட்டுகிறேன்’ என்று சொல்வதைப் போலத்தான். சினிமாவில் முதல்வன் மாதிரியான ஷங்கர் படங்களைப் பார்த்துவிட்டு கள நிலவரம் தெரியாமல் லட்சியவாதம் பேசுகிறவர்களுக்குத்தான் சரிப்பட்டு வரும்.

திடீரென்றும் மரம் வைப்பதாலும், குளம் வெட்டுவதாலும் அரசியலுக்கு வரத் தகுதியிருக்கிறது என்று சொன்னால் கமலஹாசனைவிடவும் பியூஸ் மானுஷுக்குத்தான் முதல்வராகும் தகுதி இருக்கிறது. ‘ஏரி காப்போம்’ குழுவினருக்குத்தான் அமைச்சர்களாகும் தகுதி இருக்கிறது. இதையெல்லாம் கமல் பேசுவதை நம்பிக் கல்லூரி மாணவிகள் விசிலடிக்கலாம். மக்களையே சந்தித்திராத அல்லது தமது பகுதியைத் தாண்டி வெளியில் வராத இலக்கியவாதிகள் ‘அடுத்த முதல்வர் நம்மவர்தான்’ என்று குதூகலிக்கலாம். ஆனால் களம் அப்படியானதில்லை. 

வாக்கு அரசியலில் நீங்கள் யார் என்று காட்டுவதைவிடவும் உங்களின் எதிரி யார் என்று சுட்டிக் காட்ட வேண்டும். அப்படிச் சுட்டிக்காட்ட ஒரு தைரியம் வேண்டும். திமுகவுக்கு காங்கிரஸ் என்ற எதிரி தேவைப்பட்டது. காங்கிரஸ் மிக வலுவாக இருந்த போது அதைச் செய்தது திமுக. எம்.ஜி.ஆர் மிகப்பெரிய திரை நாயகன்தான் ஆனால் மக்களிடையே கருணாநிதியைத் தீயசக்தி என்று திரும்பத் திரும்பச் சொல்லி தன்னை மக்கள் தலைவராக வடிவமைத்தார். கருணாநிதி வலுவான தலைவராக இருந்த போதே இதைச் செய்தார். ஜெயலலிதாவும் அதே பாணியைத்தான் கையில் எடுத்தார். அப்படிச் சொல்லும் போது ஊடகங்களும் சூழலும் எதிரியை வில்லனாகக் கட்டமைக்க உதவுமானால் எதிர்க்கிறவன் ஹீரோ ஆகிவிடலாம். ஆனால் எல்லோராலும் அப்படிச் சொல்லிவிட முடியாது. தமக்கு வரும் வசவுகளைச் சமாளிக்கும் திராணி வேண்டும். எதிர்ப்புகளைப் பார்த்துக் கொள்ளலாம் என்கிற மன தைரியம் வேண்டும். இதையெல்லாம் செய்துதான் மக்கள் மன்றத்தில் தலைவர்கள் உருவாகிறார்கள்.

இன்றைக்கு கமல் யாரை எதிர்த்து அரசியல் நடத்துகிறார்? எந்தக் கொள்கையை வெளிப்படையாக விமர்சிக்கிறார்? பட்டும்படாமலும், தடியும் உடையாமல் பாம்பும் சாவாமலும் அரசியல் நடத்துகிற கமலை எப்படி நம்புவது? இப்படி யாரிடமும் வம்பு செய்யாமல் எப்பொழுது வேண்டுமானாலும் பிக்பாஸின் அடுத்த பகுதிக்கோ, விஸ்வரூபம் படம் எடுக்கவோ சென்றுவிடுவாரோ என்ற நினைப்பிலேயே நம்மை வைத்திருக்கிறார். அது பரவாயில்லை. 

கொள்கை, சித்தாந்தம் என்பதையெல்லாம் கூட விட்டுவிடலாம். விஜயகாந்த்திடம் என்ன கொள்கை இருக்கிறது? கமலை மட்டும் ஏன் கொள்கை என்னவென்று கேட்கிறீர்கள் என்று அவருக்கான சலுகையை அளிக்கலாம். ஆனால் விஜயகாந்த் ஒரு காரியத்தை மிகக் கச்சிதமாகச் செய்தார். தன்னை எளிய மக்களிடத்தில் கொண்டு சேர்த்தார். அவர்கள்தான் வாக்களிக்கக் கூடியவர்கள். அவர்கள் விஜயகாந்த்தை ‘நம்ம ஆளு’ என்று பார்த்தார்கள். அதுதான் விஜயகாந்த்தின் வேகமான வளர்ச்சிக்குக் காரணம். அப்படி கமல் ஏதாவது செய்திருக்கிறாரா? கல்லூரிகளைத் தாண்டி, ரோடு ஷோ எனப்படும் சாலைப் பயணங்களைத் தாண்டி கமல் என்ன செய்திருக்கிறார்? 

தன்னுடைய பிரபல்யத்தை மட்டுமே வைத்துக் கட்சியைக் கட்டமைத்துவிடலாம் என்று கருதினால் அதைக் களத்தில் எப்படிச் செய்கிறோம் என்பதிலும் நுணுக்கம் இருக்கிறது. ஒருவேளை கட்டமைப்பை உறுதிப்படுத்தாமல் களத்தில் ஏமாந்தாலும் கூட குறைந்தபட்சப் பொருளாதாரப் பின்புலமாவது வேண்டும்.அதுதான் யதார்த்தம். யாராவது பின்னாலிருந்து உதவ வேண்டும். யார் முன்வருவார்கள்? ‘பணமே இல்லாமல் அரசியலை நடத்திவிடலாம்’ என்று சினிமாவில் வேண்டுமானால் வசனம் பேசலாம். ஆனால் வாய்ப்பேயில்லை. நண்பரைப் போல யாராவது காலண்டர் அடித்துக் கொடுத்தால் உண்டு. எத்தனை நாளைக்குத் தொண்டர்கள் கைக்காசு போட்டுச் செலவு செய்வார்கள்? 

காலண்டர் கொடுத்த நண்பர் சமீபத்தில் பேசும் போது ‘தலைவர் சொல்லிட்டாரு.....கட்சியில் உறுப்பினராகக் கூட இருக்க வேண்டியதில்லை. தேர்தலில் நல்லவர்கள் நின்றால் அவர்களை ஆதரிப்போம்ன்னு சொல்லிட்டாரு’ என்று படு உற்சாகமாகப் பேசினார். உண்மையிலேயே சிரிப்பு வந்துவிட்டது. நாடாளுமன்றத் தொகுதியில் அப்படியொரு ஆடு சிக்குகிறது என்று வைத்துக் கொள்வோம். ஒரு நாடாளுமன்றத் தொகுதியில் சுமார் ஆயிரத்து எந்நூறு பூத்துகள் வரும்; பதினைந்து லட்சம் வாக்காளார்கள் இருப்பார்கள். கமல் வந்து சிரித்துக் கை காட்டி ‘இவருக்கு ஓட்டுப் போடுங்க’ வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்தாலும் கூட பத்தாயிரம் வாக்குகளை வாங்க முடியாது. கற்பூரம் அடித்துச் சத்தியம் செய்யலாம். 

கள அரசியல் என்பது வேறு; கமலஹாசன் மாதிரியானவர்கள் கருதிக் கொண்டிருக்கிற மேல்மட்ட புரட்சி என்பது வேறு.  ஒன்றுக்கொன்று எந்தச் சம்பந்தமுமில்லை. மாற்றத்தை உருவாக்க வேண்டுமானால் களத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். மக்களின் நாடி பிடித்துப் பார்க்கத் தெரிந்திருக்க வேண்டும். இதில் எதையுமே செய்யாமல்தான் கமல் ட்விட் அரசியல் செய்து கொண்டிருக்கிறார். கடந்த ஒரு வருட காலத்தில் நான் புரிந்து கொண்டவரையில் கமல் இன்னமும் அரசியலைத் தொடங்கவேயில்லை. அது அவருக்கு ஒத்து வரும் என்றும் தோன்றவில்லை.

அன்பே சிவம்  இன்றைய அரசியலில் ஒத்து வராது சார்!

Mar 5, 2019

சின்னச் சின்ன மழைத்துளிகள்

நிசப்தம் அறக்கட்டளை சார்பில் இதுவரைக்கும் சற்றேறக்குறைய ஐம்பது பள்ளிகளில் நூலகங்கள் அமைத்துக் கொடுத்திருக்கிறோம். சில பள்ளிகளில் குறிப்பேடு போட்டு எந்த மாணவன் எந்தப் புத்தகத்தை எடுத்துச் செல்கிறான் என்றெல்லாம் மிகச் சரியாக பின் தொடர்ந்து கவனிக்கிறார்கள். நூறு பேர் படிக்கும் பள்ளியில் அதிகபட்சமாக ஐந்து பேருக்கு வாசிப்புப் பழக்கம் உருவாகக் கூடும். இன்றைய காலகட்டத்தில் ஐந்து சதவீதம் பேர் பாடத்தைத் தாண்டி வாசிக்கிறார்கள் என்பதே மிகப்பெரிய விஷயம்தான். 

ஏன் குழந்தைகள் வாசிக்க வேண்டும்? எளிய பதில்தான். ‘இதுதான் யானை’ என்று டிவியிலும் கணினியிலும் காட்டிவிட்டால் குழந்தை அதற்கு மேல் யானை குறித்து கற்பனை செய்வதில்லை. அதையே வாசிக்கும் போது யானையின் முழு உருவத்தையும் தனது மனக்கண்ணில் கொண்டு வந்து நிறுத்துகிறது குழந்தை. அதன் காதுகளும், தந்தங்களும் குழந்தைகளின் கற்பனையில் வடிவம் பெறுகின்றன. இப்படியாக வாசிப்பில் ஒவ்வொரு வரி நீளும் போதும் குழந்தையின் கற்பனை நீளும். அறிவு வளர்ச்சியின் அடிப்படையே கற்பனையின் நீட்சிதான்.

இந்த ஆர்வமே குழந்தையின் வாசிப்பைத் தொடங்கி வைக்கும். அதன் பிறகு குழந்தையின் தேடலைப் பொறுத்து, அமைகிற சூழலைப் பொறுத்து வாசிப்பு நீளக் கூடும். 

‘இருக்கிற பாடமே குழந்தைகளுக்கு அதிகம்...அதனால் தொடக்கப்பள்ளிகளில் நூலகம் அவசியமில்லை’ என்கிற ரீதியில் அமைச்சர் பேசிய போது எப்படி நொந்து கொள்வதென்று தெரியவில்லை. ஆனால் இது பற்றியெல்லாம் பெரிய அளவில் விவாதம் நடத்தமாட்டார்கள். நடத்தினாலும் பலனில்லை என்பது நமக்கும் தெரியுமல்லவா? தொலையட்டும்.

சரியான தலைமையாசிரியர் மட்டும் இருந்துவிட்டால் பள்ளிகளில் நூலகம் அமைத்துத் தருவதுதான் நாம் குழந்தைகளுக்குச் செய்யக் கூடிய மிகப்பெரிய உதவியாக இருக்கும். கணினி, விளையாட்டுச் சாதனங்கள், ஸ்மார்ட் வகுப்பறை என்பதெல்லாம்  அடுத்தடுத்த முன்னுரிமைதான். எந்தக் கல்வியாளரும், குழந்தைகள் நலன் குறித்தான வல்லுநர்களும் மறுக்கமாட்டார்கள் என நம்புகிறேன். மிக எளிய குடும்பத்திலிருந்து, கிராமப்புற பின்னணியிலிருந்து மேலே வந்து வெற்றியாளராக இருக்கிறவர்களுக்கு நிச்சயமாக வாசிப்பு பழக்கம் இருக்கும். உங்களுக்குத் தெரிந்தவர்களையெல்லாம் மனதில் கொண்டு வந்து பார்க்கலாம்.  

நிசப்தம் சார்பில் நூலகங்கள் அமைத்துத் தரப்பட்ட பள்ளிகளில் பகுத்தம்பாளையமும் ஒன்று. அதன் பிறகு பள்ளியினருடன் தொடர்பில்லை. கடந்த வாரம் உலகத் தாய்மொழி தினம் கொண்டாடப்பட்ட போது பள்ளிகளிலும் கொண்டாடியிருக்கிறார்கள். பகுத்தம்பாளையம் என்ற ஊரில் உள்ள அரசுப் பள்ளியில் சில வீடியோக்களைப் பதிவு செய்து அவர்களது ஃபேஸ்புக்கிலும் பதிவேற்றம் செய்திருக்கிறார்கள். பெரும்பாலும் ஒரு காரியத்தைச் செய்துவிட்டு வரும் போது ‘என்ன நடக்குதோ ஏது நடக்குதோ’ என்ற சந்தேகம் இருந்து கொண்டேயிருக்கும். எல்லோரும் நம்மிடம் தொடர்ந்து தொடர்பில் இருப்பார்கள் என்றும் சொல்ல முடியாது. தொண்ணூற்றொன்பது சதவீதம் பேர் தொடர்புக்கே வர மாட்டார்கள். ஆனால் நம்மை நினைவில் வைத்திருந்து உதவிகளைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டிருப்பார்கள். அப்படியான உதாரணம் இது.

ஆசிரியர் ஒருவர் இந்த வீடியோப் பதிவுகளை வாட்ஸாப்பில் அனுப்பியிருந்தார். உள்ளபடியே மிக்க மகிழ்ச்சி. 
(சலனப்படங்களை ப்ரவுசரில் பார்க்கவும்)

பகுத்தம்பாளையம் ஆசிரியர்களுக்கு நன்றி. தம்பிகளுக்கு வாழ்த்துகள்.  நம்மில் பலரும் இப்படித்தான் இருந்திருப்போம் என நினைக்கிறேன்.  தம்பிகள் மிகப்பெரிய உயரங்களை அடைக!

Mar 4, 2019

தெற்குப்பதி

தெற்குப்பதி பற்றி எழுதியிருக்கிறேன் என நினைக்கிறேன். மிகச் சிறிய ஊர். ராஜேந்திரன் அந்த ஊர்தான். நிசப்தம் உதவியில் படித்தவன். சூப்பர் 16 மாணவர். இப்பொழுது ஐ.ஐ.டியில் முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணவர். ‘படிச்சுட்டு போனா மட்டும் பத்தாது..நம்மூருக்கு ஏதாவது செய்யணும்’ என்று சொல்லிக் கொண்டிருந்தவன். உள்ளூர் இளைஞர்களும் தீக்குச்சிகள் மாதிரி- படித்தவர்கள். பொது நல ஆர்வம் கொண்டவர்கள். 

ஒரு நாள் உள்ளூர் கோவிலில் அமர்ந்து பேசினோம். அந்தச் சமயத்திலேயே பொங்கல் விழா கொண்டாடிவிட்டு நாற்பத்தைந்து மரக்கன்றுகளை நட்டு வைத்துவிட்டு வந்திருந்தோம். உள்ளூர் இளைஞர்களும் பெண்களுமே பொறுப்பெடுத்து செடிகளை பராமரிக்கிறார்கள்.

‘தண்ணீர்தான் பிரச்சினை..இல்லைன்னா இன்னமும் கொஞ்சம் அதிகமாக செடி வைக்கலாம்’ என்றார்கள். அந்த ஊரில் நிறைய மரங்களை நட்டு வளர்க்க முடியும். அதற்கான இடமும் இளைஞர்களும் இருக்கிறார்கள். ஆனால் தண்ணீரைச் சேகரித்து வைக்கும்படியான வசதி இல்லை. ஒரு நிலத் தொட்டி கட்ட வேண்டும் என்றார்கள். பத்தாயிரம் லிட்டர் நீர் கொள்ளளவு கொண்ட நிலத்தொட்டியைக் கட்ட சுமார் அறுபதாயிரம் ரூபாய் செலவு பிடிக்கும். 

‘நீங்கள் பாதிச் செலவை பொறுப்பெடுத்துக் கொண்டால் மீதத் தொகையை நிசப்தம் அறக்கட்டளையிலிருந்து வழங்கலாம்’ என்று சொன்னேன். கடந்த காலத்தில் பொதுக்காரியங்களில் கற்றுக் கொண்ட பாடம் ஒன்று உண்டு என்றால் அது இதுதான். குறைந்தபட்ச பங்களிப்பாவது அந்தப் பகுதி மக்களிடமிருந்து இருக்க வேண்டும். உள்ளூரில் உள்ள அத்தனை பேரும் தயாராக இருக்க மாட்டார்கள். ஆனால் பத்து அல்லது இருபது பேராவது தங்களால் முடிந்த பங்களிப்பைச் செய்ய வேண்டும். நாம் எங்கேயோ இருந்து செல்கிறோம். பணத்தைக் கொடுக்கிறோம் பிறகு வந்துவிடுகிறோம். அந்த ஊர்க்காரர்களும் நிகழ்ச்சித் தொடக்கத்தில் வந்து சிரித்துவிட்டு கண்டுகொள்ளாமல் போய்விடுவார்கள். சிலரேனும் தங்கள் பங்களிப்பைச் செலுத்தியிருந்தால் ‘நமக்கும் உரிமை இருக்கு’ என்று களத்தில் நிற்பார்கள். அதுதான் அவசியமும் கூட.தெற்குப்பதிக்கார இளைஞர்கள் முப்பதாயிரம் ரூபாய் திரட்டிவிட்டார்கள். மீதம் முப்பதாயிரம் ரூபாயை நிசப்தம் அறக்கட்டளையின் காசோலையாகக் கொடுத்திருக்கிறோம். கடந்த வாரத்தில் பூமி பூஜை செய்து பணியைத் தொடங்கிவிட்டார்கள். பத்து நாட்களில் பணி முடிந்துவிடக் கூடும் என நினைக்கிறேன். பஞ்சாயத்து நீர் தினசரி வருகிறது. அந்தக் குழாயைத் தொட்டியில் இணைத்துவிட்டால் தொட்டி நிரம்பிவிடும். தொட்டியிலிருந்து நீரை மேல் தொட்டிக்கு ஏற்றுவதற்கான மேல்நிலை ப்ளாஸ்டிக் டேங்க், மின் மோட்டார் இணைப்புகளை ஏற்பாடு செய்து கொள்வதாகச் சொல்லியிருக்கிறார்கள். 

கோடை காலம் முடிந்த பிறகு அநேகமாக ஜூன் மாதத்தில் இன்னமும் ஐம்பது மரங்களை தெற்குப்பதியில் நட்டுவிடலாம் என்று திட்டமிட்டிருக்கிறோம். 

கடந்த வாரத்தில் ஒரு கல்லூரியிலிருந்து அழைத்திருந்தார்கள். ‘நாம சேர்ந்து பணியாற்றுவோம்’ என்று சொன்னார்கள். நாசூக்காக மறுத்துவிட்டேன். உதிரிகளாகச் செயல்படுகிறவர்களுடன் இணைந்து செயல்படுவதுதான் சரியாக இருக்கும் எனத் தோன்றுகிறது. பெரிய காரணமெல்லாம் எதுவுமில்லை- இத்தகைய பணிகள் யாவும் சமூகத்தைப் புரட்டிப் போட்டுவிடப் போவதில்லை. மெல்ல மெல்ல நம்மால் செய்ய முடிகிற ஒரு விழிப்புணர்வு என்பதைத் தாண்டி இதில் எதுவுமில்லை. நம்முடைய ஆத்மார்த்தமான திருப்திக்குச் செய்கிறோம். அவ்வளவுதான். பெரிய அமைப்புகளுடன் சேர்ந்து செய்து அதில் கிடைக்கும் விளம்பரம், வெளிச்சம் இவையெல்லாம் நம் நோக்கத்தைச் சிதைத்துவிடக் கூடும் என்றும் தயக்கமாக இருக்கிறது. விளம்பரமில்லாமல் பெரிய அமைப்புகளால் செயல்களைச் செய்ய முடியாது என்றும் உறுதியாகத் தெரியும்.

இதே அளவில்- சிறு வட்டத்திற்குள்ளாகவே ஆனால் மனப்பூர்வமாகப் பணியாற்றலாம். 

அம்மா இல்லாத பெண்ணொருத்தி வெகு தீவிரமாக ஐ.ஏ.எஸ் தேர்வுகளுக்குத் தயாரிப்புகளைச் செய்து கொண்டிருக்கிறாள். தினசரி வாட்ஸாப்பில் தமது குறிப்புகளை அனுப்பி வைத்துவிடுகிறாள். காலையில் அப்பாவுக்கு சாப்பாடு செய்து கொடுத்துவிட்டு கல்லூரிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பி வெறியெடுத்த மாதிரி படித்துக் கொண்டிருக்கிறாள். அவளைக் கை தூக்கிவிடுவதைவிடவுமா பெரிய அமைப்புகளுடன் சேர்ந்து நாம் சாதனைகளைச் செய்துவிடப் போகிறோம்? ராஜேந்திரனின் வாழ்வில் ஒளியேற்றுவதைவிடவுமா அமைப்பாகத் திரண்டு காரியங்களைச் செய்ய வேண்டும்? 

இப்படியே பயணிப்போம். இத்தகைய சிறு சிறு திருப்திதான் உளப்பூர்வமான திருப்தி. தெற்குப்பதி நண்பர்களுக்கு வாழ்த்துகள்.
நிசப்தம் நண்பர்களுக்கு நன்றிகள்.

Feb 28, 2019

திருமணச் சீர்கள்

பெங்களூரில் இருக்கும் வரைக்கும் நெருங்கிய உறவுகளில் திருமணங்கள் என்றாலும் கூட ஏதோவொரு தருணம் தலையைக் காட்டிவிட்டு ஓடுவதாகத்தான் இருக்கும். கோயமுத்தூர் வந்த பிறகு அப்படியில்லை. சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு திருமணத்தில் இரவு முழுக்கவும் சீர் செய்தார்கள். கொங்கு வேளாளர் (கவுண்டர்) இல்லத் திருமணம் அது. கொங்கு வேளாளர்களில் நூற்றுக்கும் அதிகமான கூட்டங்கள் உண்டு. அதில் சீர்களைச் செய்வதற்கென்றே முழுக்காதன் அல்லது சீர்க்காரர் கூட்டம் என்றொரு கூட்டமிருக்கிறது. அந்தக் கூட்டத்தைச் சார்ந்த அருமைக்காரர் (சீர் செய்கிறவர்களுக்கு அருமைக்காரர் என்று பெயர்) முந்தின நாள் மாலையில் தொடங்கி விடிய விடிய சீர்களைச் செய்தார். காதுகளை மறைத்தபடி உருமால் கட்டிக் கொண்டு கொஞ்சம் கூட சலிப்பில்லாமல் இரண்டு மூன்று உதவியாளர்களை வைத்துக் கொண்டு அவர் செய்த சீர்களை தூங்கி விழுந்து பிறகு எழுந்து பார்த்துக் கொண்டிருந்தேன்.

சங்க காலத்தில் சீர்கள் எதுவும் இருந்திருக்க வாய்ப்பில்லை. சங்க இலக்கியங்களில் திருமணச் சீர்கள் குறித்தான குறிப்புகள் எதுவும் இருப்பதாகவும் தெரியவில்லை. ஆனால் கால ஓட்டத்தில் திருமணம் மற்றும் வாழ்வியலில் சில வரைமுறைகளை உருவாக்க வேண்டியிருந்திருக்கும். திருமணங்களில் சாட்சிகளை உருவாக்கவும் மணமகன் மற்றும் மணமகளின் உறவுகளுக்குமான உரிமைகளை பகிர்ந்து கொடுக்கவும் சீர்களை நடைமுறைக்குக் கொண்டு வந்திருக்கக் கூடும். 

திருமணம் செய்யலாமா வேண்டாமா என்பது கூட ஜாதகத்தில் ‘குருபலன்’ பார்த்துத் தொடங்குவதில்லை. அப்படியே திருமணக் காரியங்களைத் தொடங்குவதில் சந்தேகமிருந்தால் கோவிலில் பூ கேட்டுத்தான் தொடங்கியிருக்கிறார்கள். சாமி சிலையின் மீது சிவப்பு வெள்ளை பூக்களை வைத்து மனமுருகி வேண்டும் போது மனதுக்குள் நினைத்த பூ விழுந்தால் சம்மதம் கிடைத்துவிட்டது என்று அர்த்தம்.

கொங்கு வேளாளர் திருமணச் சடங்குகளில் பெண் பார்க்கச் செல்வது என்பது வீட்டுக்குச் சென்று பாட்டுப்பாடச் சொல்வதெல்லாம் இல்லை. அநேகமாக தமிழகத்தின் பெரும்பாலான இனங்களில் இப்படித்தான் இருந்திருக்கக் கூடும். இன்றைக்கும் கூட கோவிலில் வைத்துத்தான் பார்க்கிறார்கள். கடந்த தலைமுறையில் ‘இந்நேரத்துக்கு சனிக்கிழமைச் சந்தைக்கு வருவா...பார்த்துக்கச் சொல்லுங்க’ என்பார்களாம். அந்த நேரத்தில் இவர்களும் சந்தைக்கோ கோவிலுக்கோ சென்று பார்த்துக் கொள்வார்கள். பெண்ணுக்கு அது சரியில்லை; இது சரியில்லை என்று நிராகரித்து அவளைப் புண்படுத்தி விடக் கூடாது என்பது கூடக் காரணமாக இருக்கலாம்.

ஒருவேளை பெண் பிடித்துவிட்டால் அதன் நிச்சயதார்த்தின் போது இருவீட்டாரும் எதிரெதிரில் அமர்ந்திருக்க மணமகள் வீட்டார் ‘என்ன சமாச்சாரமா வந்தீங்க?’ என்று கேட்கிறார்கள். மணமகன் வீட்டார் ‘பொண்ணு கேட்கலான்னு வந்தோம்’ என்று சொல்ல ‘எங்களுக்கு சம்மதம்’ என்று சொன்ன பிறகு இரு தரப்பும் வெற்றிலை மாற்றிக் கொள்கிறார்கள். ஒரு செம்பில் நீரெடுத்து ஊற்றிக் கொடுக்க அவர்கள் குடிக்கிறார்கள். அதே போல் மணமகள் தரப்பு நீர் ஊற்றிக் கொடுக்க மணமகன் வீட்டார் குடிக்கிறார்கள். இதுதான் நிச்சயதார்த்தம்.

அதன் பிறகு தாலிக்குத் தங்கம் கொடுப்பது, உப்பு சர்க்கரை மாற்றிக் கொள்ளுதல் - சந்தோஷத்திலும் துக்கத்திலும் இரு வீட்டாரும் கலந்துவிடுகிறோம் என்று அர்த்தம், கூறைப்புடவை எடுத்தல், சுற்றத்தாரைத் திருமணத்துக்கு அழைத்தல் என்று தொடர்கிறது. திருமணத்துக்கு முந்தின நாள் பட்டினிசாத விருந்து. மணமகனையும் மணமகளையும் அவரவர் இடங்களில் குளிக்க வைத்து உணவு உண்ண வைக்கிறார்கள். அதன் பிறகு இருவரும் தாலி கட்டிய பிறகுதான் சாப்பிட வேண்டும். ஆனால் இந்தக் காலத்தில் அது சாத்தியமில்லை. இந்தக் காலத்து திருமண வரவேற்பின் போது கோட் சூட், புடவை, பெரிய மாலை, மாலையின் மணம் என்று இருவரும் திணறிவிடுவார்கள் என்பதால் பட்டினியும் கிடக்கச் செய்தால் தாலி கட்டுவதற்கு முன்பாக இருவருக்கும் குளுக்கோஸ் ஏற்ற வேண்டியதாகிவிடும். 

திருமண நாளின் போது சீர் தண்ணீர் கொண்டு வருவது தொடங்கி, கணபதி வணக்கம், மணமகனுக்கும் மணமகளுக்கும் காப்புக் கட்டுதல்- ‘என்னதான் பிரச்சினை வந்தாலும் திருமணத்தை முடித்தே தீருவோம்’ என்று காப்புக் கட்டி உறுதி ஏற்றுக் கொள்கிறார்கள். ஆக்கை சுற்றிப்போடுதல்- புளிய மரத்துக்குச்சியை ஒரு தடுப்பு மாதிரி செய்து அதற்குள் மணமகனை நிறுத்துகிறார்கள்- இனிமேல் நான் இவளுக்காக வாழ்க்கையில் கட்டுக்கோப்புடன் இருந்து கொள்வேன் என்று அர்த்தம் என்று இரவு பனிரெண்டு மணி ஆகிவிடுகிறது.

அதன் பிறகு செஞ்சோறு அடை கழித்து, உருமால் கட்டி, குப்பாரி கொட்டி- இந்தச் சடங்கின் போது பறை அடித்து, கொம்பூத மணமகன் திருமண அறிவிப்பை ஊருக்குச் செய்கிறான், நிறை நாழி சீர் செய்து- நிறை நாழி என்பது படி நிறைய நெல் நிரப்பி, ஒரு ஊசியில் நூல் கோர்த்து அதை நெல்லுக்குள் நட்டு வைத்திருப்பார்கள். படியைப் போல வாழ்க்கை நிறைந்திருக்க வேண்டும், ஊசி நூலைப் போல மணமகனும் மணமகளும் பிணைந்திருக்க வேண்டும்- டபுள் மீனிங்தான் என்றும் அர்த்தம். 

நாட்டுக்கல் வழிபாடு- எங்கள் ஊரில் இந்தக் கல் என்னவென்றே தெரியாமல் இன்னமும் இருக்கிறது.  வீரக்கல் என்பதுதான் நாட்டுக்கல். வீர தீரச் செயலில் இறந்து போனவர்களின் நினைவாக ஊரில் நட்டப்பட்டிருக்கும் கல்  இது. இதை மணமகனும் மணமகளும் வணங்குகிறார்கள். 

இப்படி இரவு முழுக்கவும் சீர்கள் நடந்தது. மொத்த சீர்களிலும் பாதிதான் இவை. இதன் பிறகு இணைச் சீர், தாயுடன் உண்ணல் என்று இன்னமும் பல சீர்களை நடத்தினார் அருமைக்காரர். ஒவ்வொரு சீர் பற்றியும் தனித்தனியாக எழுதலாம் என்று நினைக்கிறேன். ஒவ்வொன்றிலும் அர்த்தமிருக்கிறது.

தாலியைக் கூட அருமைக்காரர்தான் எடுத்துக் கொடுத்தார். கிழக்கு நோக்கி நின்று சூரியனை வணங்கி அவர் எடுத்துக் கொடுக்க, மணமகன் கட்டினார். 

முகூர்த்தம் முடிந்து  முடிந்து சீர்க்காரர் ஆசுவாசமாக அமர்ந்திருந்த போது ‘அடுத்த கல்யாணத்தை நீங்க எங்க நடத்தி வெச்சீங்கன்னாலும் சொல்லுங்க..நான் வந்து பார்க்கிறேன்’ என்று சொல்லியிருக்கிறேன். அவர் பெயரும் மணிதான். செம்புளிச்சாம்பாளையம், சீர்க்காரர் மணி என்றால் தெரியும் என்றார். திருமணத்தை நடத்தி வைக்க காசு எதுவும் வாங்கிக் கொள்ளவில்லை என்றார். பெரும்பாலான அருமைக்காரர்கள் இலவசமாகத்தான் செய்து வைக்கிறார்களாம்.  மீறிக் கொடுத்தால் ஏதாவதொரு கோவில் உண்டியலில் போட்டுவிடுகிற அருமைக்காரர்கள்தான் அதிகம்.

‘இந்துக்களின் திருமணங்கள்’ என்று பொத்தாம் பொதுவாக இந்துத்துவம் பேசுகிற நண்பர்கள் தயவு செய்து அவரவர் சாதியத் திருமணங்களின் சீர்களை ஒருமுறை ஆழ்ந்து தெரிந்து கொள்ள வேண்டும். இந்துத்துவம் நமக்குச் சொல்லித் தந்திருக்கும் திருமண முறையும் அங்கு ஓதப்படுகிற மந்திரங்களும் நம் தமிழர் வாழ்வியலிலிருந்து நிறைய முரண்பாடுகளைக் கொண்டவை. இடையில் புகுந்தவை.

சீர்க்காரரிடம் ‘அய்யர்களை வைத்து மந்திரம் ஓதுற பழக்கம் எப்ப இருந்து வந்துச்சு?’ என்றேன். 

‘அது எனக்குத் தெரியலீங்க..நீங்கதான் கண்டுபுடிச்சு சொல்லோணும்’ என்றார். 

ஜாதகம், மந்திரங்கள், அய்யர்கள் எல்லாம் எப்பொழுது திருமணச் சடங்குகளுக்குள் நுழைக்கப்பட்டன என்று தேடினால் கடந்த சில நூறு வருடங்களுக்குள்தான் நிகழ்ந்திருக்க வேண்டும். அதுவே கூட சந்தேகமாகத்தான் இருக்கிறது. நூற்றுக்கணக்கான வருடங்கள் அய்யர்களை வைத்துத் திருமணங்களைச் செய்து கொண்டிருந்தால் இன்னமும் இந்தச் சீர்கள் வழக்கத்தில் இருக்க வாய்ப்பில்லை. அழிந்து போயிருக்கக் கூடும். ஆனால் இன்னமும் இவை வழக்கத்தில் இருக்கின்றன என்பதால் மேற்சொன்ன இந்துத்துவ சமாச்சாரங்கள் மிகச் சமீப உள்ளீடுகளாகவே இருக்க வேண்டும் என நினைக்கத் தோன்றுகிறது.

‘ராத்திரி பூராவும் யார் முழிச்சுட்டு இருக்கிறது?’ என்று சீர்களுக்குப் பயந்துதான் அய்யரை வைத்துத் தாலியைக் கட்டிவிடலாம் என்று மக்கள் மாறிவிட்டார்கள். நான்கு மணிக்கு முகூர்த்தம் என்றால் மூன்று மணிக்கு வந்து தாலி எடுத்துக் கொடுக்கும் அய்யர்களுக்கு பல்லாயிரம் ரூபாயை தட்சணையாகவும் கொடுக்கிறார்கள்.

ஆரியம் திராவிடம் தமிழ்தேசியம் என்கிற அரசியலை எல்லாம் விட்டுவிடலாம்.  உண்மையில், பாரம்பரியத்தைக் கடைபிடிக்க விரும்புகிறவர்கள் பழைய திருமண முறைகளைத்தான் பின்பற்ற வேண்டும். ஒவ்வொரு சீருக்கும் ஒரு அர்த்தமிருக்கிறது. மணமகன் மற்றும் மணமகளின் வாழ்வியல் நெறிகளை அந்த இரவு முழுக்கவும் சீர்களின் வழியாகச் சொல்லித் தருகிறார்கள். சீர்களையும் சடங்குகளையும் முறையாக ஆராய்ச்சி செய்த  ஆய்வுகள் ஏதுமிருப்பின் ஆழ்ந்து வாசிக்கலாம் என்று தோன்றுகிறது. தமிழர் பண்பாடு என்பது இன்றைக்கு இந்துத்துவம் சொல்லித் தந்திருக்கிற பண்பாடு இல்லை. அது தனித்த பண்பாடு. அர்த்தங்கள் நிறைந்தது.

Feb 19, 2019

என்னத்த சம்பாதிச்சு...என்னத்த பொழச்சு...

எங்கள் சொந்தக்காரர் ஒருவர் இருக்கிறார். எட்டாவது மட்டுமே ஏழெட்டு முறை படித்தார். பள்ளிக்காலங்களில் அவரது அப்பா குனிய வைத்துக் கும்மியதை பார்த்திருக்கிறேன். சுட்டுப் போட்டாலும் படிப்பு ஏறாத மண்டை அவருக்கு. திடீரென்று வீட்டை விட்டு காணாமல் போய்விடுவார். விஷமருந்தி உயிர் பிழைப்பார். இப்படியான பல வித்தைகளுக்குப் பிறகு இப்பொழுது உள்ளூரில் விவசாயம் பார்த்துக் கொண்டிருக்கிறார். கெட்ட நேரத்திலும் நல்ல நேரம்- தண்ணீர் வற்றாத பூமி அது. பெரிய மனுஷ தோரணைதான். ஆனாலும் ஐடி, பெங்களூரு, சென்னை என்றால் காதில் புகை வரும் மவராசனுக்கு. எதையாவது சொல்லிக் கடுப்பேற்றுவார்.

சுற்றி வளைத்து ‘சம்பளம் ஒரு லட்சம் வருதா?’ என்பார். இது வரைக்கும் முப்பது தடவையாவது பதில் சொல்லியிருப்பேன். அடுத்த முறை பார்த்தாலும் அதையேதான் கேட்பார்.  ‘என்னதான் சம்பாதிச்சு என்ன பண்ணுறது?’ என்று முடித்து நம் முகத்தை சோகமாக்கிப் பார்க்க வேண்டும். அதிலொரு சந்தோஷம் அவருக்கு. இருபது வருடங்களுக்கு முன்பு பரவலாக நிலவிய வன்மம் இப்பொழுது ஐடி துறையினர் மீது இல்லை.  ஐடி துறையினர் மீதான வயிற்றெரிச்சல் முழுவதும் இப்பொழுது அரசுத்துறை மீது விழுந்துவிட்டது. ஐடிக்காரர்களைப் பார்த்தால் பாவப்படுகிறவர்கள்தான் அதிகம். ஆனால் இப்படியான அரை மண்டைகளும் கணிசமாகத் தேறுவார்கள். 

சில நாட்களுக்கு முன்பாக, குடும்பத்தோடு அவரது தோட்டத்துக்கு சென்றிருந்தோம். குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கும் போது ‘கோழிக்கூட்டுக்குள்ள அடைச்சு வெச்ச மாதிரி வெச்சிருப்பீங்க...பசங்க வானத்தையாவது பார்த்திருப்பாங்களா?’ என்றார். சுள்ளென்றாகிவிட்டது. ‘வக்காரோலி..வானத்தைக் கூட பார்த்திருக்கமாட்டாங்களா?’ என்று வாய் வரைக்கும் வார்த்தைகள் வந்துவிட்டன. விழுங்கிக் கொண்டேன். நம்மைக் குற்றவுணர்ச்சிக்குத் தள்ளுவதில் அவ்வளவு சந்தோஷம். பற்களை வெறுவிக் கொண்டிருந்தேன். 

கொஞ்ச நேரத்துக்குப் பிறகு குழந்தைகளை விட்டுவிட்டு நம்மிடம் வந்து  ‘இனி ஐடி அவ்வளவுதானாமா’ என்றார். அவர் சொல்வதை ஏற்றுக் கொண்டால் உள்ளூரச் சந்தோஷம். அவனுக்கு ஏன் சந்தோஷம் கொடுக்க வேண்டும்? ‘அப்படியெல்லாம் இல்லைங்க..ஆட்களுக்கான தேவை இருந்துட்டேதான் இருக்குது’ என்று சொன்னால் ‘ஆனா என்ன வாழ்க்கைங்க அது..நாலு சுவத்துக்குள்ள? சொந்தபந்தம்ன்னு எதுவுமில்லாம’என்றார். அதற்கு மேலும் வம்பிழுக்க விரும்பினால் இழுக்கலாம். ஆனால் வாயைக் கொடுத்துவிட்டு நாம்தான் கடி வாங்க வேண்டும். ‘ஆமாங்க...விதி’என்று சொல்லிவிட்டு முகத்தைத் தொங்கப் போட்டுக் கொள்ள வேண்டியதுதான். அப்படித்தான் தப்பித்துக் கொள்வேன். ஆனால் அவருக்குள் இருக்கும் வில்லன் என்றைக்கும் ஓய்வெடுப்பதேயில்லை.

ஏழெட்டுப் பேர் வட்டமாக அமர்ந்திருந்தார்கள். ‘நாம இங்க கறக்கற பால்ல எல்லாச் சத்தும் இருக்குது..ஆனா பாருங்க..இருக்கற சத்தைப் பூரா உறிஞ்சி பாக்கெட்ல அடைச்சு கோயமுத்தூர்ல இவங்க கைக்கு வெறும் சக்கையா போவுது..அதைத்தான் இவங்க குழந்தைகளுக்குக் கொடுக்கறாங்க...’ இதோடு நிறுத்தினால் தொலையட்டும் என்றுவிட்டு விடலாம். என் முகத்தையே பார்த்தபடிக்கு ‘அதான் நம்ம பசங்க தெம்பா இருக்குதுக..இவங்களை மாதிரி இருக்கிறவங்க பசங்க நோஞ்சானுகளா இருக்குதுக’ என்றார்.  கடுப்பாகாமல் என்ன செய்யும்? மகியை அழைத்து ஓங்கி மூக்கு மீது ஒரு குத்துவிடச் சொல்ல வேண்டும் என நினைத்துக் கொண்டேன்.

வீடு திரும்பும் போது அம்மாவிடம் ‘இனி எப்பவாச்சும் இந்த ஆகாவழி மூஞ்சில முழிக்க சொன்னீங்கன்னா எனக்கு கோவம் வந்துடும் பார்த்துக்குங்க’ என்று எரிந்து விழுந்தேன். ஆனால் அம்மாவுக்கு அதெல்லாம் பிரச்சினையில்லை. ‘நீ என்னமோ பெரிய இவங்குற...அவன் வாயை அடக்கத் தெரியாதா? என்ரகிட்ட வந்து லொள்ளு பேசிட்டு இருக்கிற’ என்றார். முன்னால் போனால் கடிக்குது. பின்னால் போனால் உதைக்குது கதை.

சாலையில் போகிறவனையெல்லாம் பார்த்து யாருக்கும் பொறாமை வருவதில்லை. அம்பானி எத்தனை ஆயிரம் கோடி சம்பாதித்தாலும் நமக்கு பெரிய பிரச்சினையில்லை. ஆனால் நாம் பார்க்கும்படி வளர்ந்த மனிதர்கள் நன்றாக இருக்கும் போது அல்லது நன்றாக இருப்பதாகக் கருதிக் கொள்ளும் போதுதான் பொறாமை வருகிறது. அது உறவுக்காரனாக இருக்கலாம், எதிர்வீட்டுக்காரனாக இருக்கலாம், உடன் படித்தவனாக இருக்கலாம். தாம் பொறாமைப்படுகிறவர்களோடு தம்மையுமறியாமல் தம் நிலையை ஒப்பிட்டுக் கொள்கிறார்கள். அவர்களை ஏதாவதொரு வகையில் நேரடியாகவோ அல்லது அடுத்தவர்களிடமோ மட்டம் தட்டி மனம் குதூகலிக்கிறது. ‘உன்னைவிட ஏதாவதொருவகையில் நான் நன்றாக இருக்கிறேன்’ என்று இறுமாப்பு எய்தி ஒரு ஜஸ்டிஃபிகேஷன் கொடுத்துக் கொள்கிறார்கள். இந்த உளவியல் பிரச்சினைதான் பலரையும் அமைதியற்றவர்களாக்குகிறது. 

மேற்சொன்ன உறவுக்காரர் மீது பரிதாபம்தான் வர வேண்டும். அப்படி பரிதாபப்பட்டுவிட்டால் நாம் பக்குவமடைந்துவிட்டோம் என்று அர்த்தம். ம்க்கும். எரிச்சல்தான் மிகுகிறது. இன்னொரு உறவுக்காரர் இருக்கிறார். ஆசிரியர். தொழில்தான் ஆசிரியர். நானும் தம்பியும் சிறுவர்களாக இருந்த போது அம்மாவிடம் வந்து ‘வேலைக்குப் போற பொம்பளைங்க வளர்த்தும் குழந்தைகள் உருப்படுவதற்கான வாய்ப்பு ரொம்பக் குறைவு’ என்று பேசிவிட்டுச் சென்றுவிட்டார். வெகு காலத்திற்கு எங்களைத் திட்டும் போதெல்லாம் ‘அந்த வாத்தியார் சொன்னது மாதிரியே நடந்துடும் போலிருக்கே’ என்று அம்மா மூக்கால் அழுவார். இன்றைக்கும் அந்த மனுஷன் திருந்தவில்லை. ஏதாவது குசலம் பேசிக் கொண்டிருக்கிறார். 

எதிரிகளாக இருந்தால் பிரச்சினையே இல்லை. கண்டுகொள்ளாமல் விட்டுவிடலாம். இப்படியான உறவுக்காரர்கள்தான் பெரும் தலைவலி. முகத்தில் அடித்த மாதிரி பேசவும் முடிவதில்லை. முதல் அரைவேக்காட்டுக்குத்தான் ஒரு பாம் வைத்துவிட்டு வந்திருக்கிறேன். மகி அருகில் வரும் போது என்.டி.டி.வி செய்தி தளத்தை மொபைலில் எடுத்துக் கொடுத்தேன். இதை ஏன் அப்பன்காரன் இப்பொழுது கொடுக்கிறான் என்று அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. நாடாளுமன்றக் கூட்டணி பற்றிய செய்தி அது. அவனுக்கு நாடாளுமன்றம், சட்டமன்றம் குறித்தெல்லாம் அரைகுறையாகத் தெரியும். ஏதோ முக்கியமான செய்தி போல இருக்கிறது எனத் தலைப்புச் செய்தியை மட்டும் வாசித்துவிட்டு ‘பார்லிமெண்ட்டுக்குத்தான் மே மாசம் எலெக்‌ஷனா? பிஜேபிக்கு அதிக எம்.பி வந்தா மோடி பிரதமர்..இல்லன்னா ராகுல் காந்தி...சரிங்களாப்பா?’ என்றான். அரைவேக்காட்டுக்கு காதில் விழுந்தது உறுதியானவுடன் ‘ஆமாம்ப்பா..நீ போயி விளையாடு’ என்று அனுப்பிவிட்டேன்.

முகத்தை பாறை மாதிரி வைத்துக் கொண்டு ‘பையன் என்ன படிக்கிறான்?’ என்றார். 

‘நாலாவது’

‘எந்த ஸ்கூலு?’ என்பது அடுத்த கேள்வி. 

இது போதும். இனி குழந்தைகளை விட்டுவிடுவான். நம்மை மட்டும்தான் வம்புக்கு இழுப்பான். அதற்கும் ஒரு பாம் தயாரிக்க வேண்டும். அயோக்கிய ராஸ்கல்!

இருபத்து நான்கு லட்சம் - II

கஜா புயல் நிவாரணத்துக்கென ₹ 23,81,252.18 (இருபத்து மூன்று லட்சத்து எண்பத்தோராயிரத்து இருநூற்று ஐம்பத்து இரண்டு ரூபாய்) நன்கொடையாக நிசப்தம் அறக்கட்டளைக்கு வந்திருந்தது. சென்னை ட்ரெக்கிங் கிளப்பின் செயல்பாடுகளுக்காக இந்தத் தொகை ஒதுக்கப்பட்டது. சிடிசி குழுவினர் இப்பொழுது வரைக்கும் தொடர்ச்சியாக டெல்டாவின் மறு நிர்மாணப்பணிகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள். இன்றைய தினம் வரைக்கும் ₹ 23,51,939.00 (இருபத்து மூன்று லட்சத்து ஐம்பத்தோராயிரத்து தொள்ளாயிரத்து முப்பத்தொன்பது ரூபாய்) வழங்கப்பட்டுவிட்டது.

எப்பொழுதும் போல கணக்கு விவரங்களை வெளிப்படைத்தன்மையுடன் முழுமையாக வெளியிட வேண்டும் என்ற நோக்கத்தில் அனைவரது பார்வைக்காகவும் இந்தப் பதிவு-

வரிசை எண் 460 வரைக்குமான விவரங்களை இணைப்பில் பார்க்கலாம்.


கஜா நிவாரணத்துக்கென வந்த மொத்த நன்கொடை: ₹ 23,81,252.18 (From 11th Nov to 30th Nov) 
மஞ்சள் நிறத்தில் காட்டப்பட்டிருக்கும் தொகைகள், நிவாரணப் பணிகளுக்கு வழங்கப்பட்ட தொகைகள். தென்னங் கீற்றுகள் வாங்குவதற்கும், தார்பாலின், கயிறுகள் வாங்குவதற்கும், இன்னபிற பொருட்கள் வாங்குவதற்கும் நேரடியாக கணக்குக்கு மாற்றப்பட்டது.

இதுவரையிலும் சென்னை ட்ரெக்கிங் க்ளப் வழியாக வழங்கப்பட்ட தொகை: ₹ 23,51,939.00 

1) மூன்று காசோலைகள் தவிர பிற அனைத்துமே ஆன்லைன் மூலமாக அவரவர் கணக்குக்கு மாற்றப்பட்டது.

2) முப்பதாயிரம் ரூபாய் தவிர அனைத்துத் தொகையும் வழங்கப்பட்டுவிட்டது.

3) அனைத்து ரசீதுகளையும் பெற்றுக் கொண்ட பிறகு இன்னொரு பதிவு- ரசீது விவரங்கள் மற்றும் இருபத்தைந்து லட்ச ரூபாய்க்கு என்ன காரியங்கள் செய்யப்பட்டன என்ற முழுமையான விவரங்களுடன் ஒரு பதிவை எழுதுகிறேன்.

பெரிய தொகை இது. நேரமிருப்பவர்கள் மொத்தக் கணக்கையும் ஒரு முறை சரி பார்க்கவும்.  ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் கணக்கை சரி பார்ப்பது நல்லதுதான். 

ஏதேனும் சந்தேகமிருப்பின் தெரியப்படுத்தவும். நன்றி.

Feb 18, 2019

அனுபவிக்க வேண்டிய வயசு

‘தந்தை மறைந்த நாளிலிருந்து மகனின் மரணம் தொடங்குகிறது’ - இது ஓரான் பாமுக்கின் வாசகம். நிதர்சனமான உண்மை. அப்பா இருக்கும் வரைக்கும் ஊரில் நடைபெறும் திருமணம், மரணம் என்ற நிகழ்வுகள் பற்றி எந்தப் பெரிய கவனமும் இருந்ததில்லை. இப்பொழுது அப்படி இருக்க முடிவதில்லை. ஒவ்வொன்றுக்கும் செல்ல வேண்டியிருக்கிறது. திருமணங்கள் பெரிய சலனத்தை உண்டாக்குவதில்லை. உள்ளே நுழையும் போதே வரிசையாக வரவேற்பில் நிற்பார்கள். எல்லோருக்கும் நம் முகம் தெரியும்படி புன்னகைத்தபடியே கும்பிடு போட்டு வருகையை உணர்த்திவிட்டு நேராக பந்திக்குச் சென்றுவிடலாம். வசதிக்கு ஏற்ப வகைகளை அடுக்கிறார்கள். அள்ளிப் போட்டுவிட்டு ஒரு ஐஸ்கிரீமையும் விழுங்கிவிட்டு யாருடைய கண்ணிலும் படாமல் வீடு திரும்பிவிடலாம். கடமை முடிந்தது.

மரணங்கள் அப்படியில்லை. ஆட்டிப் பார்த்துவிடுகின்றன. சமீபத்தில் இரண்டு துக்க வீடுகளுக்குச் செல்ல வேண்டியிருந்தது. இறந்து போன இருவருமே ஆண்கள். இருவருக்குமே இரண்டு பிள்ளைகள். இரண்டு பிள்ளைகளுமே வெளியூர்களில் இருக்கிறார்கள். முதலாமவர் வங்கியொன்றுக்குச் சென்றுவிட்டு வீட்டுக்குத் திரும்ப வந்து கொண்டிருந்த போது அவருக்கு முன்பாக வந்து கொண்டிருந்த லாரி திடீரென்று இடதுபக்கம் திரும்பியிருக்கிறது. அடிபட்டுக் கீழே விழுந்தவருக்கு வெளியில் எந்தக் காயமுமில்லை. ஆனால் இடுப்பில் வலி. எடுத்து மருத்துவமனைக்கு அனுப்பியிருக்கிறார்கள். ஞாபகம் இருந்திருக்கிறது. வீட்டு முகவரியெல்லாம் கொடுத்திருக்கிறார். உள்காயம் ஏற்பட்டு ரத்தம் உள்ளுக்குள்ளேயே கசிந்து ரத்த அழுத்தம் குறைந்து மருத்துவமனையில் இறந்து போனார்.

வாழ்க்கையின் பூரணத்துவம் என்பார்கள் இல்லையா? அப்படியான வாழ்க்கை அவருக்கு. இரண்டு மகன்களுக்கும் திருமணம் செய்து வைத்து அவர்கள் இருவரும் சம்பாதிக்க வறுமை நீங்கி கொஞ்சம் பசுமை துளிர்த்த தருணம் அது. வாய் நிறையச் சந்தோஷமாகப் பேசுவார். ‘பெரியவன் அப்படி; சின்னவன் இப்படி’ என்று புளகாங்கிதம். வாழ்க்கையில் கையூன்றி கர்ணமடித்து மேலே வந்தவர்களுக்குத் திரும்பிப் பார்க்கும் போது வெகு உயரத்தில் நிற்கிறோம் என்கிற சந்தோஷம் இருக்குமல்லவா? அப்படியொரு சந்தோஷத்தில் இருந்தவர் திடீரென்று கண்களை மூடிக் கொண்டார்.

இன்னொருவரும் அதே மாதிரிதான். எந்நேரமும் தலையில் உருமால் கட்டிக் கொண்டிருப்பார். மகனின் திருமணத்திலும் கூட அப்படித்தான் இருந்தார். கிராமத்து மனிதர். முழுமையான விவசாயி. மகன்கள் வெளியூர்களில் சம்பாதிக்க இவர் காட்டு விவசாயம் பார்த்துக் கொண்டு காராம்பசு வைத்து பால் கறந்து ஊற்றிக் கொண்டிருந்தவர். கடந்த வாரம் ஊரில் கிடாவிருந்து நடந்திருக்கிறது. சந்தோஷமாக இருந்திருக்கிறார். விடியற் காலையில் மனைவியிடம் ‘தண்ணி கொண்டு வா’ என்று கேட்டிருக்கிறார். குடித்துவிட்டு அப்படியே சாய்ந்துவிட்டார். இருந்திருந்தபடிக்கு மரணத்தைத் தழுவிக் கொண்டார்.

‘எல்லாவற்றையும் அனுபவிக்க வேண்டிய வயசு’ என்றார்கள். சாவுக்கு என வயது இருக்கிறதா என்ன? நூறாண்டு வாழ்க என்கிறார்கள். அப்படியான சொந்தக்காரப் பெரியவர் ஒருவர் இருக்கிறார். தொண்ணூறை நெருங்கிவிட்டார்.  சில மாதங்களுக்கு முன்பாக ‘நல்லா இருக்கீங்களா?’ என்று கேட்டதற்கு ‘நல்லா இருக்கேன்’ எனச் சொல்லிவிட்டு அருகில் அமரச் சொன்னார். வாழ்க்கையின் தத்துவங்களையெல்லாம் மிக எளிதாகச் சொல்வார். பெரியவர்கள் அப்படித்தான். நாம் வாயைக் கிளறினால் பேசுவார்கள். பெரும்பாலானவர்கள் ‘நாம பேசினா இந்தக் காலத்துப் பசங்களுக்கு பிடிக்காது’ என்று அமைதியாக இருந்து கொள்கிறார்கள். 

‘மனசுக்குப் பிடிச்ச இனிப்புப் பலகாரம் ஒண்ணு...ரசகுல்லான்னு வெச்சுக்க..சின்னதா இருக்கும். ஒண்ணே ஒண்ணு கிடைக்கிற போது வாயில் போட்டு அது கரையும் போது இன்னொன்னு இருந்தா ஆகுமேன்னு நினைப்போம்...ஆனா கிடைக்காது..அப்படித்தான்...இன்னும் கொஞ்ச நாள் இருந்தா ஆகுமேன்னு நினைக்குறப்போ போய்டணும்’ என்று சொல்லிவிட்டுச் சிரித்தார். ‘சாகிறவனுக்கு அந்த நெனப்பே வராது..இன்னைக்கே சாவு வந்தாலும் சரின்னு சொல்லுவோம்..ஆனா மனசுக்குள்ள பயமிருக்கும்..சொந்தக்காரன் பந்தக்காரன் இருக்கான்பாரு..அவன் சொல்லோணும்...எல்லாக் காரியத்தையும் செஞ்சு முடிச்சுட்டாரு மனுஷன்...இனியென்ன அவருக்கு..ராஜா மாதிரின்னு நினைக்கும் போது...’ 

‘அது சரி, சாவு என்ன பக்கத்து ஊட்டு ராசாத்தியா? கையைப் புடிச்சு இழுக்க’ என்று கேட்டுவிட்டு பொக்கை வாயில் சிரித்தார். அந்தப் பெரியவர் பேசியதுதான் இரண்டு மரண வீடுகளிலும் நினைவுக்கு வந்தது. 

சாவு வீடுகள் என்பன வெறுமனே கையை நீட்டி ஆறுதல் சொல்லிவிட்டு வருவதோடு முடிந்துவிடுவதில்லை. அது கிளறிவிடும் நினைவுகள் இறந்தவர்களை நம்மைச் சார்ந்தவர்களோடு ஒப்பிடச் செய்துவிடுகிறது. பாதையைக் கடக்கும் போதெல்லாம் இறந்து போனவர்கள் ஒரு முறை நினைவுக்கு வந்து போகிறார்கள். அவர்களது வெடிச்சிரிப்போ, புன்னகையோ அல்லது ஏதோ ஒன்றோ மின்னல் வெட்டுவதைப் போல வந்து போகின்றன. சாவைப் பார்த்துவிட்டு வந்த பிறகு வாகனத்தில் பயணிக்கும் போதோ, யாருமற்ற தனிமையிலோ மனதுக்கு நெருக்கமான நம்மவர்களின் முகம் சில கணங்களாவது வந்து போகும் போது என்னவோ போலாகிவிடுகிறது. வெறுமையான இந்த நெஞ்சம் எதை உணர்த்துகிறது? வாழ்க்கையின் அடிநாதமான தத்துவமே இந்த வெறுமைதான். இல்லையா?

சாவு வீடுகளுக்குச் சென்று பழகாத வரைக்கும் சாவுகள் பெரிய பாதிப்பை உண்டாக்கியதில்லை. இப்பொழுது அப்படியில்லை. ஓரான் பாமுக் இதையெல்லாம் கணக்கில் வைத்துத்தான் சொல்லியிருக்கக் கூடும்- தந்தை மறைந்த நாளிலிருந்து மகனின் மரணம் தொடங்குகிறது.

Feb 13, 2019

பொம்முவிலிருந்து வீரபாண்டிய கட்டபொம்மன் வரை

பெல்லாரி நாடு - இன்றைய கர்நாடகாவுக்கும், ஆந்திராவுக்குமான எல்லையில் அந்தக் காலத்தில் ஒரு குட்டி நாடு. வானம் பார்த்த பூமி. அந்த நாட்டைச் சார்ந்தவர் பால்ராஜா. அரசராக இருந்தவராம்.  ஒரு சமயம் அந்த பிரதேசத்தில் மிகக் கடுமையான பஞ்சம் வந்துவிட்டது. குடிக்கவும் நீரில்லாத வறட்சி. பால்ராஜாவுக்கு என்ன செய்வது என்று தெரியாத கையறு நிலை.

அதே சமயத்தில் அந்தப் பகுதியில் கோலாச்சிக் கொண்டிருந்த ஓர் இசுலாமியனுக்கு பால்ராஜா நாயக்கர் குடும்பப் பெண் மீது கண் விழுகிறது. ஆள் விட்டுக் கேட்டுப் பார்க்கிறான் அந்த முகமதியன். அதுவே அந்தக் காலத்தில் பெரிய மரியாதைதான். அவன் யாரையும் கேட்காமல் கொத்திக் கொண்டு போயிருக்க முடியும். ஒருவேளை நாயக்கர் முடியாது என்று சொன்னால் அடுத்ததாக அவன் அதைத்தான் செய்திருப்பான். ஒரு பக்கம் பிழைக்கவே வாய்ப்பில்லாத பஞ்சம்; இன்னொரு பக்கம் இசுலாமியன். இனி இந்த நாட்டில் நமக்கு வேலையில்லை என்று முடிவு செய்கிறார் பால்ராஜா. ஆடு மாடுகளை ஓட்டிக் கொண்டு, குடும்பத்தோடும் சுற்றத்தோடும் இரவோடிரவாக தெற்கு நோக்கி நடக்கத் தொடங்குகிறார்கள். 

இச்சம்பவம் இன்றைய தேதிக்கு சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு நடைபெற்றது.

ஆறு மாதங்கள் நடந்த பிறகு தெற்கில் கடல் பகுதியை அடைகிறார்கள். இனி இங்கேயே தங்கிக் கொள்ளலாம் என சாலிகுளத்தில் கொட்டகை அமைத்து உறவுகளோடு வாழத் தொடங்குகிறான் பால்ராஜா. சாலிகுளம் இன்றைய தூத்துக்குடி மாவட்டத்தில் ஒட்டப்பிடாரத்திலிருந்து மூன்று கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. பால்ராஜாவின் மனைவி பெயர் லக்கம்மாள். இவர்களுக்கு நிறையக் குழந்தைகள். எட்டாவது பிறந்தவன் பெயர் பொம்மு. பதினைந்து பதினாறு வயது ஆகியிருந்தது. கெட்டிக்காரன். 

எப்படி கெட்டி என்று கேட்டால் அதற்கு ஒரு சம்பவம் இருக்கிறது. பால்ராஜா குடும்பத்தினர் சாலிக்குளம் வந்து ஐந்தாறு ஆண்டுகள் கழிந்த பிறகு நள்ளிரவில் கள்ளர் கூட்டமொன்று கால்நடைகளைத் திருடிக் கொண்டு சாலிக்குளம் வழியாக வருகிறது.  அரவம் கேட்ட பொம்மு ‘இந்த நேரத்தில் யார் போகிறார்கள்’ குடிசையை விட்டு வெளியில் வந்து பார்க்கிறான். திருடர்கள் என்பதைப் புரிந்து கொண்ட பொம்மு சப்தமிடுகிறான். அப்பொழுது கள்ளர்கள் ‘அட சின்னப்பையன்’ என்று நினைத்துத் தாக்க முற்படுகிறார்கள். இருபது வயது கட்டிளங்காளையான பொம்மு ஒரே ஆளாக பனிரெண்டு கள்ளர்களையும் அடித்து வீழ்த்தி, ஊர்க்காரர்களை அழைத்துக் கள்ளர்களைக் கட்டிப் போடுகிறான் பொம்மு. விடிந்த பிறகு இந்தச் செய்தி அக்கம்பக்கமெல்லாம் பரவுகிறது. அப்படித்தான் பொம்மு என்பவன் கெட்டிக்கார பொம்முவாகி பிறகு கெட்டிபொம்மு என்றாகிறான்.

எங்கேயிருந்தோ வந்த தெலுங்குக் குடும்பத்தைச் சார்ந்த ஒருவன் எப்படி பாஞ்சாலங்குறிச்சிக்கு பாளையத்துக்காரன் ஆனான்?

அதே தூத்துக்குடி மாவட்டத்தில் விளாத்திகுளத்துக்குப் பக்கத்தில் வீரபாண்டியபுரம் என்ற ஊர் இருக்கிறது. அந்த ஊருக்கு ஜெகவீரபாண்டியன் என்றவொரு சிற்றரசன் இருந்தான். அந்தக் காலத்தில் அக்கம்பக்கத்து ஊர்க்காரர்களுக்கு பகைமை இருந்து கொண்டேயிருக்கும் அல்லவா? அப்படி புதியம்புத்தூர், ஆரைக்குளம் ஆகிய ஊர்க்கார அரசர்களுடன் பகை முற்றுகிறது. இந்த ஊர்கள் எல்லாமே இன்றைக்கும் இருக்கின்றன. ஜெகவீரபாண்டியனின் அரசனாக இருந்த சங்கரசிங்குவுக்கு கெட்டிபொம்மு பற்றிய செய்தியை யாரோ முன்பாகவே சொல்லியிருக்கிறார்கள். அமைச்சர் மன்னரிடம் பொம்முவைப் பற்றிச் சொல்லி ‘அவனை நம்ம படையில் வைத்துக் கொண்டால் நமக்கு வலு கூடும்’ என்கிறான். ஜெகவீரபாண்டியன் ஆள் அனுப்பி பொம்முவை அழைத்து வரச் சொல்லி அவனிடம் பேசுகிறான். பொம்முவுக்கும் சம்மதம்தான்.

போருக்குத் தயாரானது வீரபாண்டியபுரம். எதிரி ஊர்க்காரர்கள் இருவரும் ஒன்று சேர்ந்து படை திரட்டி வந்தார்கள். ஆயிரக்கணக்கான படைவீரர்கள் மோதிக் கொண்டார்கள். எதிர்த்து நின்றவன் கெட்டிபொம்மு. இருபத்தோரு வயதுடையவன். ‘சின்னப்பையன்’ என்றுதான் எதிரிகள் இருவரும் களமாடினர். ஆனால் இரண்டு பேர்களின் படைகளும் தோற்றுச் சிதறின. அதிலிருந்தே ஜெகவீரபாண்டியனுக்கு அணுக்கமானவனாகிவிட்டான் கெட்டிபொம்மு. வாரிக்கொடுத்து தனது பக்கத்திலேயே வைத்துக் கொண்டான் அவன். ஜெகவீரபாண்டியனுக்கு வாரிசுகள் யாருமில்லையாம். அதனால் கெட்டிபொம்முவையே அரசனாக்குகிறான். பெல்லாரியிலிருந்து வந்தவன் திருநெல்வேலிச் சீமையில் சிற்றரசனாக முடி சூடிக் கொண்டான்.

நாடு கிடைத்த பிறகு தமக்கேற்ற ஒரு கோட்டையை அமைக்க விரும்பினான் கெட்டிபொம்மு. அதற்கான இடம் தேடிக் கொண்டிருந்தவனிடம் வேட்டைக்காரர்கள் சிலர் வந்து ஒரு கதையைச் சொன்னார்களாம். ஒரு முயலை வேட்டைக்காரர்களின் ஏழு நாய்கள் துரத்திச் சென்ற போது வெகு தூரம் ஓடிய முயல் ஓரிடத்தில் எழுந்து நின்று நாய்களை மிரட்டியதாகச் சொல்லியிருக்கிறார்கள். வீரம் மிகுந்த அந்த இடம்தான் கோட்டை கட்டி வாழத் தகுந்த இடம் என்று அந்த இடத்தைச் செப்பனிட்டு கோட்டை கட்டி தம்முடைய தாத்தா பாஞ்சாலன் பெயரில் பாஞ்சாலன் குறிச்சி என்று பெயரிட்டான் கெட்டிபொம்மு.

தம்முடைய ஆள் ஒருத்தன் மன்னராகிவிட்டது கேள்விப்பட்ட சுற்றத்தார் எல்லாருக்கும் வெகு சந்தோஷம். வடக்கே தெலுகு தேசத்திலிருந்து கூட்டம் கூட்டமாகத் தெற்கு நோக்கி வந்து பாஞ்சாலங்குறிச்சியில் குடியேறினர் கம்பள நாயக்கர் வகையறா. ஒன்பது உட்பிரிவுகளைக் கொண்ட நாயக்கமார்கள். அப்படி வந்தவர்களுக்கெல்லாம் வாழ்வதற்கான வழிவகைகளைச் செய்து கொடுத்தான் கெட்டிபொம்மு. ‘கொடுத்தால் கட்டபொம்மு கொடுக்க வேண்டும்; விளைந்தால் கரிசல் காடு விளைய வேண்டும்’ என்ற சொலவடையும் உருவானது. 

இந்தக் கெட்டிபொம்முதான் முதல் மன்னன். இவனுக்குப் பிறகு நாற்பத்தியேழாவது பட்டம்தான் கயத்தாறில் ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்ட ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’

தொடரும்.

(பண்டிதமணி ஜெகவீரபாண்டியனார் எழுபதாண்டுகளுக்கு முன்பு எழுதி, தற்போது திரு.கே.எஸ்.ராதாகிருஷ்ணன் அவர்களால் தேடிப்பிடித்து மறுபதிப்பு செய்யப்பட்டிருக்கும் பாஞ்சாலங்குறிச்சி வீரசரித்திரம் என்ற நூலைத் தழுவி எழுதப்பட்டது. (உயிர்மை பதிப்பகம் வெளியீடு))

எம்.வி.வெங்கட்ராம் எழுதிய  ‘நாட்டுக்கு உழைத்த நல்லவர்: வீரபாண்டிய கட்டபொம்மன்’ என்ற புத்தகமும் உதவியது)

Feb 11, 2019

அவசரக்குடுக்கை

கோவையிலிருந்து சென்னைக்கு வருவதானால் ரயில்தான் வசதி. அதுவும் காலையில் ஆறேகாலுக்குக் கிளம்பும் வண்டியில் ஏறி அமர்ந்தால் மதிய உணவுக்குச் சென்னை வந்துவிடலாம். நூற்றியறுபத்தைந்து ரூபாயில் பயணம் முடிந்துவிடும். கிளம்பும் போதே பழைய சோறு இரண்டு சட்டியை நிரப்பிக் கொள்வேன். ஆனால் இரவு நேர வண்டிகளில் பெரும்பாலும் டிக்கெட் கிடைப்பதில்லை. பேருந்துதான் சரிப்பட்டு வருகிறது. டிக்கெட் விலை அதிகம். இந்த முறை ஐநூற்றுச் சில்லறையில் டிக்கெட் கிடைத்தது. ஏ.சி.ஸ்லீப்பர். வேணியிடம் பந்தாவாகச் சொன்னேன். ‘அடேயப்பா! எப்படி மனசு வந்துச்சு?’ என்றாள். 

பேரு பெத்த பேரு- ஏ.சி பேருந்துகளில் ஏறியவுடன் அடிவயிறு கலங்கத் தொடங்கிவிடுகிறது. ஜன்னல் வசதியெல்லாம் பார்த்துக் கொள்கிறேன். கைவசம் லேப்டாப் இருக்கிறது அதை வைத்து ஓங்கி அடித்தால் இந்தக் கண்ணாடி உடையுமா? இந்த ஜன்னல் வழியாக எட்டிக் குதித்துவிட முடியுமா என்றெல்லாம் மனம் கணக்குப் போடத் தொடங்கிவிடுகிறது. ஜன்னலை எல்லாம் இறுக அடைத்து வைத்துவிடுகிறார்கள். எங்கேயாவது மோதித் தீப்பிடித்தால் குபுகுபுவென்று பற்றுவதற்குள் அவசர அவசரமாக இதையெல்லாம் செய்தாக வேண்டும். எவ்வளவு பயம் இந்த உயிர் மீது? 

பேருந்தில் கடைசிப் படுக்கை. ஒற்றை ஆள் படுக்கும் படியானது. நேரெதிரில் ஒரு ஜோடி படுத்திருந்தார்கள். எனக்கு முன்பே ஏறிப்படுத்திருந்தவர்கள் சற்றே விலகியிருந்த திரைச்சீலைகளில் பின்னூசி குத்தினார்கள். எனக்கும் வெட்கம் இருக்கிறது என்று காட்டிக் கொள்வதற்காக என்னுடைய திரைச்சீலையை சந்தில்லாமல் இழுத்துவிட்டு ஒரு முடிச்சும் போட்டுவிட்டு படுத்துக் கொண்டேன். எப்பொழுது உறக்கம் தழுவியதோ தெரியவில்லை. இடையில் பேருந்தை எங்கோ நிறுத்திய போதுதான் எழுந்தேன். கலங்கிக் கிடந்த அடிவயிறு ஏ.சி. குளிரில் நிரம்பியிருந்தது. இறங்கிப் பார்த்தால் அய்யங்கார் பேக்கரி. உலகில் இருக்கும் அத்தனை அய்யங்கார்களும் தமிழகத்தில் பேக்கரி கடைகளைத் தொடங்கினால் மட்டுமே இது சாத்தியம்- தமிழகத்தில் அத்தனை அய்யங்கார் பேக்கரிகள். தொப்பூர் வனத்தைத் தாண்டிய இடம் அது. அந்தக் காட்டுக்குள் Jens ஒண்ணுக்கடிக்க ஐந்து ரூபாய் என்று போர்டு வைத்திருந்தார்கள். அமெரிக்காவிலேயே சாலையோரத்தில் ஒண்ணுக்கடித்த வகையறாவைச் சார்ந்தவன் நான். தொப்பூரில், அதுவும் காட்டுக்குள் ஐந்து ரூபாய் கொடுப்பதா?

அது என்ன அமெரிக்கக் கதை என்று யாராவது மின்னஞ்சலில் கேட்பார்கள்- டென்வரில் இருந்த போது மாலை நேரங்களில் ஊர் சுற்றச் செல்வதுண்டு. மெட்ரோவில் பயணித்து ஏதாவதொரு நிறுத்தத்தில் இறங்கி இரவு வரைக்கும் அந்தப் பகுதியில் சுற்றிவிட்டு இரவு உணவை முடித்துக் கொண்டு மெட்ரோ பிடித்துக் கிளம்பி வந்துவிடுவேன். நடை மட்டுமேதான். நடந்து கொண்டேயிருப்பேன். அப்படியொருநாள் ஏதோவொரு குடியிருப்புப் பகுதியில் சுற்றிக் கொண்டிருந்த போது வெகு அவசரம். எங்கேயாவது இடம் கிடைக்குமா என்று துழாவத் துழாவ அவசரம் அதிகரிக்கிறது. கண்ட பக்கம் அடித்து அதை சிசிடிவி வழியாகக் கண்டறிந்து பிடித்துக் கொண்டுபோய் குண்டனாமோ சிறையில் தள்ளிவிடுவார்களோ என்ற பயம் வேறு. ஆனால் விட்டால் டேங்க் வெடித்துவிடும் போலிருக்கிறது. அந்தி சாய்ந்து இரவு கவிந்திருந்தது. பேருந்து நிறுத்தத்தின் பின்புறமாகச் சென்று அங்கேயிருந்த தடுப்புக்குப் பின்னால் நின்ற மேனிக்கு எங்கேயோ வேடிக்கை பார்ப்பது போல காதுக்கு அருகில் செல்போனை வைத்துக் கொண்டு சுற்றும்முற்றும் பார்த்துவிட்டு காலி செய்தேன். அமெரிக்காவிலிருந்து விமானம் ஏறும் வரைக்கும் பயம் இருந்து கொண்டேயிருந்தது. அப்பேர்ப்பட்டவன் தொப்பூரில் காசு கொடுப்பேனா?

ஆனால் பிரச்சினை என்னவென்றால் இரவு நேர மோட்டல்களில் நம்மை மாதிரியான ஆட்களைக் கட்டணக் கழிப்பறைகளை நோக்கி மிரட்டித் துரத்துவதற்காகவே ஒருவன் கையில் குண்டாந்தடியை வைத்துக் கொண்டு விசிலடிப்பான். அவன் கண்களில் படாமல் இடம் கண்டறிய வேண்டும். பட்டுவிட்டால் அசிங்க அசிங்கமாகத் திட்டுவான். ‘பெரிய மனுஷன்னு சொல்லிட்டுத் திரியறோம்...இவன்கிட்ட எல்லாம் திட்டு வாங்க வேண்டியிருக்குது’ என்று குற்றவுணர்ச்சி வந்துவிடும். அதனால் விசிலடிச்சானிடமிருந்து கொஞ்ச தூரம் நகர்ந்து ஆசுவாசமாகப் பாட்டுப்பாட ஆரம்பித்த போது திரும்பிப் பார்த்தேன். வண்டி நகரத் தொடங்கியிருந்தது. சொம்பும் போச்சுடா கோவிந்தா கதை ஆகிவிட்டது. பேருந்திலிருந்து யாருமே இறங்கவில்லை என்ற போதே சுதாரித்திருக்க வேண்டும். அவன் எதற்கோ பேருந்தை நிறுத்தியிருக்கிறான் போலிருக்கிறது; தெரியாத்தனமாக இறங்கி காத தூரமாக வந்துவிட்டேன்.  இதையெல்லாம் இப்பொழுது யோசித்து என்ன செய்வது? கையில் செல்போன் இல்லை; பர்ஸ் இல்லை-உறங்குவதற்கு முன்பாக எல்லாவற்றையும் பைக்குள் போட்டிருந்தேன். டீ குடிக்கவா போறோம்? ஒண்ணுக்கடிக்கத்தானே என்று எதையும் எடுத்து வரவில்லை. அவசர அவசரமாக எடுத்து உள்ளே போட்டுக் கொண்டு ஓடி வரும் போது முகமெல்லாம் அதிர்கிறது. தப்புரு தப்புரு என்று இப்படி ஓடி பல வருடங்கள் ஆகிவிட்டன. பிடிக்க முடியுமா என்று தெரியவில்லை- பேருந்தைச் சொல்கிறேன். நீங்கள் எதையோ நினைத்துக் கொள்ள வேண்டாம். ஓடுகிற ஓட்டத்துக்கு ஏதாவது கல் கொஞ்சம் தூக்கிக் கொண்டு நின்றால் தட்டி விழுந்து பற்கள் தெறித்துவிடும்.

கண் மண் தெரியாமல் ஓடி வந்தால் இன்னொரு ஓட்டுநர் கீழே நின்று சிரிக்கிறான். ‘என்னடா என்னைக் காமெடியன் ஆக்கிட்ட’ என்று நினைத்தபடியே அவனைப் பரிதாபமாகப் பார்த்தால் இன்னொரு ஓட்டுநர் வண்டியை ஓரமாக நிறுத்திக் கொண்டிருக்கிறானாம். தூக்கக் கலக்கத்தில் இருந்த எனக்கு அது தெரியவில்லை. ‘ஹார்ன் அடிக்காம வண்டியை எடுக்க மாட்டோம்ண்ணா...போய்ட்டு வாங்க’ என்றான். இனி போய் நின்றாலும் வராது. அடங்கிவிட்டது. முன்பின் செத்திருந்தால் சுடுகாடு தெரியும். ஹார்ன் அடித்துத்தான் வண்டியை நகர்த்துவான் என்று எனக்கு எப்படித் தெரியும்? சில வினாடிகளில் அல்லு கழண்டுவிட்டது. முகத்தில் தசைகள் துடித்துக் கொண்டிருந்தன. 

வண்டியை ஓரங்கட்டிய ஓட்டுநர் இறங்கி வந்த போது சிரித்த ஓட்டுநர் ‘அண்ணன் பயந்துட்டாரு’ என்றான். அவனும் சிரித்துவிட்டு ‘போய்ட்டு வாங்ண்ணா’ என்றான். கோயமுத்தூர்காரனுகளுக்கு மரியாதைக்கு மட்டும் குறைச்சல் இல்லை. ‘பொங்கச் சோறும் வேண்டாம்; பூசாரித்தனமும் வேண்டாம்...கோயம்பேட்டிலேயே டீல் செஞ்சுக்குறேன்’ என்று மறுபடியும் ஏறி படுத்துக் கொண்டேன். இப்பொழுது எதிரில் இருந்தவர்களின் திரைச்சீலை இறுகக் கட்டப்பட்டிருந்தது. முடிச்சுமிட்டிருந்தார்கள். காதுகளை மட்டும் அடைக்க முடியவில்லை. 

Feb 10, 2019

கல்யாண மாலை

இன்று ஜீவகரிகாலனுக்கும் அகிலாவுக்கும் திருமணம். வடபழனி முருகன் கோவிலில் நடைபெற்றது. அகிலா மதுரைக்காரப் பெண். மென்பொருள் துறையில் பணியில் இருந்தார்- இப்பொழுது 'மெஷின் லேர்னிங்' படித்துக் கொண்டிருக்கிறார். திருமணத்துக்குப் பிறகு வேலை தேடப் போகிறார். இருவருக்கும் நிசப்தம்தான் இணைப்புப் பாலம். அகிலா நிசப்தம் வாசகி. அதன் வழியாகவே கரிகாலனுக்கும் அறிமுகம். 

கரிகாலனுக்கு கிட்டத்தட்ட என் வயதுதான். அவரது சிறுகதைப் புத்தக வெளியீட்டு விழாவின் போது ‘சீக்கிரம் கல்யாணம் செஞ்சுக்குங்க’ என்று பேசினேன். அவரது குடும்பத்தாரின் எண்ணமும் அதேதான். திரும்ப நேர்பேச்சில் சொல்லும் போதெல்லாம் ‘யாருங்க தேடுறது? இப்படியே இருந்துக்கிறேன்’ என்று சொல்லிக் கொண்டிருந்தார். ஒருவேளை இப்படியே இருந்துவிடுவாரோ என்ற எண்ணத்தில் சில முதிர்ந்த பேச்சிலர்களை மனதில் வைத்திருந்தேன். சென்னையில் காளியப்பா மருத்துவமனையருகில் ஒருவர் இருக்கிறார்- ஓய்வு பெற்றுவிட்டார். எனக்கு நல்ல நண்பர். திருமணம் செய்து கொள்ளவில்லை. வீடு வெகு நேர்த்தியாக இருக்கும். துளி தூசி இருக்காது. வீட்டைப் பார்த்தாலே ‘இங்கேயே இருந்துக்கலாம்’ என்பது மாதிரியான நேர்த்தி அது. நிறைய வாசிப்பார். பெரிய நண்பர்கள் சுற்றம். ஃப்ரிட்ஜில் இருந்து இளநீரோ, நுங்குவோ எடுத்து வந்து தருவார். அருமையான ஃபில்டர் காபி தருவார். வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று தோன்றும். அவரிடம் கரிகாலனை அழைத்துச் சென்று பேச வைக்க வேண்டும் என நினைத்திருந்தேன். 

அப்படியான தருணத்தில் கார்ட்டூனிஸ்ட் பாலா ஒரு முறை அழைத்து ‘கரிகாலனுக்குத் திருமணம் செஞ்சு வெச்சுடலாம்ல?’ என்றார். ‘ஒரு பொண்ணு இருக்குங்க...பேசிப் பார்க்கிறேன்’ என்று சொல்லிவிட்டு அடுத்த சில நாட்களில் கரிகாலனிடம் ‘கல்யாணம் செஞ்சுக்கலாம்ல’ என்று கேட்டேன். இப்பொழுது அவரிடமிருந்து வழமையான பதில் இல்லை. ‘அகிலாகிட்ட கேட்டுப்பாருங்க’ என்றேன். அவருக்கும் அப்படியொரு எண்ணம் இருந்திருக்க வேண்டும் என்றுதான் நினைக்கிறேன். இந்த மாதிரி எண்ணம் இருக்கும் போது பற்ற வைத்துவிட்டால் போதுமல்லவா? 

‘எப்படிப் பேசறது?’ என்றெல்லாம் குழம்பினார். கொஞ்சம் உசுப்பேற்றிவிட்டு பிறகு அதைப் பற்றிப் பேசவில்லை. புள்ளி வைத்துக் கோலம் போட்டுவிட்டார்கள். இன்று இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள்.


இருவருக்கும் நிசப்தம் இணைப்புப் பாலம் என்பதால்தான் ‘நிசப்தம்- நம்பிக்கையின் கதை’ புத்தகத்தை வெளியிட்டார்கள். திருமணத்துக்கு வந்திருந்தவர்களுக்கு இந்தப் புத்தகத்தை அன்பளிப்பாகக் கொடுத்தார்கள். முந்தைய கட்டுரையில் புத்தகம் பற்றி எழுதிய பிறகு பிரதி வேண்டும் என சிலர் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்கள். திருமணத்தில் வழங்குவதற்காக Print on Demand முறையில் குறைந்த அளவில் மட்டும் அச்சடித்திருக்கிறார்கள். புத்தகத்தில் இருக்கும் குறைகளையெல்லாம் களைந்து மீண்டும் அச்சுக்குச் செல்லும். அப்பொழுது எல்லோருக்கும் கிடைக்கும்படி செய்துவிடலாம். 

கரிகாலன் - அகிலா திருமணத்தில் சந்தித்த நண்பர்கள் சிலர் ‘மேட்ரிமோனியல் ஆரம்பிச்சுடலாம்ல’ என்றார்கள். ஆரம்பித்துவிட வேண்டியதுதான். நிறையப் பேருக்கு முயற்சி செய்திருக்கிறேன் - ஜாதகம் சரியில்லை; பொருத்தமில்லை; வயது வித்தியாசம்; படிப்பு போதாது என்று ஏதாவதொரு காரணத்தைச் சொல்லி ஒரு தரப்பு தட்டிக் கழித்துவிடும். இந்தக் காலத்தில் திருமணம் என்பது முழுமையான ப்ரஸ்டீஜ் விஷயமாகிவிட்டது. தம்மைவிட ஒரு படியாவது மேலிருக்கும் குடும்பத்தில் சம்மதம் வைத்துக் கொள்ள வேண்டும், இருபது லட்சமாவது திருமணத்துக்கென ஒதுக்க வேண்டும் என்று ஏகப்பட்ட நிபந்தனைகளைத் தமக்குத் தாமே விதித்துக் கொள்கிறார்கள். 

இரு தரப்பைச் சேர்த்து வைப்பது என்பது சாதாரணக் காரியமில்லை. அப்படியெல்லாம் முயற்சித்திருக்கிறேன். மகனுக்கோ மகளுக்கோ  நாற்பது வயது தாண்டியிருக்கும். ‘எங்களுக்கு எந்த நிபந்தனையுமில்லை’ என்று சொல்வார்கள். நம்பிவிட மட்டும் கூடாது. முப்பத்தெட்டு வயதில் ஒரு வரனைப் பிடித்துக் கொடுத்தாலும் கூட ‘வயசு அதிகமா இருக்கே’ என்று சொல்லிவிடுவார்கள். பையன் நல்ல வேலையில் இருந்தாலும், ‘பையனுக்கு நாலு ஏக்கர் நிலமிருந்தா ஆகுமே’ என்று கேட்ட தந்தையைத் தெரியும். மகளுக்கு இன்னமும் திருமணம் செய்து வைக்க முடியவில்லை. வேலையும் இருந்து, நிலமும் இருக்கிறவர்கள் அதைவிட வசதியான இடத்தைத் தேடுகிறார்கள். 

கடைசியில் இணைப்பு வேலையைச் செய்கிற நாம்தான் மொக்கை வாங்க வேண்டும். அதுவும் கொங்குப்பகுதி இருக்கிறதே- திருமண விஷயத்தில் படுமோசம்.

எங்கள் அம்மாவின் பெரியப்பா ஒருவர் இருந்தார். பாட்டையண்ண பெரியப்பன் என்பார்கள். அக்கம்பக்கத்தில் ஒரு பையனுக்கு மீசை முளைத்து அவருக்குத் தெரிந்த ஏதாவதொரு பெண் வயதுக்கு வந்துவிட்டால் போதுமாம். நடையாக நடந்து இருவருக்கும் திருமணம் செய்துவிட்டுத்தான் ஓய்வாராம். ஜாதகம், பொருத்தம் பார்த்தல் எதுவுமில்லாத அந்தக் காலத்தில் எந்தத் தரப்பில் எதைச் சொல்லி மறுத்தாலும் ‘அதெல்லாம் பார்த்தா ஆகுமா?’ என்று முரட்டுத்தனமாக வாதிட்டு இருதரப்பையும் சரிக்கட்டி விடுவாராம். இந்தக் காலத்தில்தான் புரோக்கர் கமிஷன் எல்லாம். அந்தக் காலத்து மனிதர் அவர். புண்ணியத்துக்குச் செய்து வைத்திருக்கிறார். அவர் மாதிரி நிறையப் பேரைச் சேர்த்துவிட வேண்டும் என்று ஏகப்பட்ட பல்பு வாங்கியிருக்கிறேன். அதையெல்லாம் எழுதினால் சுவாரசியமாக இருக்கும். ஆனால் ‘நம்மைத்தான் சொல்கிறான்’ என்று கண்டுபிடித்து முகத்தை முந்நூற்று முப்பது டிகிரிக்குத் திருப்பிக் கொள்வார்கள்.

திருமணத்துக்கு இணைப்புப் பாலமாக இருந்துவிட்டால் யார் மறக்கிறார்களோ இல்லையோ- கணவனும் மனைவியும் மறக்கமாட்டார்கள். ‘என் வாழ்வில் ஒளியேற்றி வைத்தவனே நீதான்’ என்று நினைக்காவிட்டாலும் கூட ‘என் வாழ்க்கையில பாறாங்கல்லைத் தூக்கிப் போட்டவன் அவன்தான்’ என்றாவது நினைப்பார்கள். ஜீவகரிகாலன் அடி விழுந்தாலும் உதை விழுந்தாலும் இனி என்னை நினைக்கக் கடவது. இருவரும் நீடுழி வாழட்டும். பேருடனும், புகழுடனும், அழியாச் செல்வங்களுடனும்!

Feb 7, 2019

பதினைந்தாவது...

நிசப்தம் வலைப்பதிவு தொடங்கி இன்றோடு பதினான்கு வருடங்கள் முடிந்து பதினைந்தாவது வருடம் தொடங்குகிறது. திருமண நாள், பிறந்தநாளுக்கெல்லாம் வாழ்த்து வருகிறதோ இல்லையோ- ஒவ்வொரு வருடமும் இன்றைய தினத்தின் முதல் வாழ்த்து அழைப்பு திருப்பதி மகேஷூடையதாக இருக்கும். காபி கடையில் நின்றிருந்தேன். மகேஷ் அழைத்த போது ஏதாவது சுவாரசியமான காதல் கதையைச் சொல்வார் என நினைத்தேன். அவரிடம் அத்தனை கதைகள் இருக்கின்றன. வாழ்த்துச் சொன்னார். எதற்கு வாழ்த்துகிறார் என்று குழப்பமாகத்தான் இருந்தது. அவர் சொன்ன பிறகு வெகு சந்தோஷமாகிவிட்டது. மனதுக்கு நெருக்கமான நான்கைந்து பேர்களிடம் ‘இன்னைக்கு பதினஞ்சாவது வருஷம்’ என்று சொல்லிக் குதூகலித்தேன். 

பதினைந்து வருடங்களில் 2418 பதிவுகள். இது 2419 வது பதிவு. 

இந்த வருடம் ஒரு ஸ்பெஷல் இருக்கிறது. எதிர்பாராத தனிச்சிறப்பு அது. ஒரு புத்தகம் வெளியாகிறது. நிசப்தம் அறக்கட்டளை சார்ந்த செயல்பாடுகள் பதிவுகளைத் தொகுத்து ஜீவகரிகாலனும், அகிலா அலெக்ஸாண்டரும் ஆவணமாக்கியிருக்கிறார்கள். 

‘நிசப்தம்- நம்பிக்கையின் கதை’ என்பது தலைப்பு. 

இப்படியொரு புத்தக வேலை நடைபெறுகிறது என்பது எனக்கு இந்த வாரத் தொடக்கம் வரைக்கும் தெரியாது. ரகசியச் செயல்பாடு. அட்டை வடிவமைப்பை அனுப்பி வைத்த போதுதான் தெரியும். அரசு தாமஸ், ‘செய்கிற செயல்களையெல்லாம் சரியாக ஆவணப்படுத்துங்கள்’ என்று அடிக்கடி சொல்வார். ஆனால் என்னிடம் உருப்படியான நிழற்படங்கள் கூட இல்லை; அறக்கட்டளை குறித்தான சரியான பவர்பாய்ண்ட் எதுவுமில்லை. அத்தகையதொரு நிலையில் இந்தப் புத்தகம் முக்கியமான ஆவணப்படுத்துதலாக இருக்கும். 

மிகப் பொருத்தமாக, பதினைந்தாவது வருடம் தொடங்கும் இன்றைய தினத்தில் புத்தகம் அச்சுக்குச் செல்கிறது. அகிலாவும், கரிகாலனும் பதினைந்தாவது வருடம் என்பதை நினைவில் வைத்து இந்தப் பணியைச் செய்யவில்லை. பொருந்தி வந்துவிட்டது. புத்தகத்தைப் பார்த்துவிட்டு அதன் உள்ளடக்கம், வெளியிடுவதற்கான காரணம் என எல்லாவற்றையும் விரிவாக எழுதுகிறேன். அட்டை வடிவமைப்பு எப்படி இருக்கிறது?


எழுத்து வழியாக வரக் கூடிய நிதி பொதுக்காரியத்துக்கு என்பதால் இந்தப் புத்தக விற்பனையை ஒழுங்குபடுத்தி அதை ஏதேனும் ஒரு பள்ளிக்கூடத்துக்கு முழுமையாகக் கொடுத்துவிடலாம் என்று யோசனை ஓடுகிறது. திட்டமிட்டுவிட்டு விரிவாக எழுத வேண்டும்.

எழுத்து, அதன் வழியாக நம்மை நெருங்கும் மனிதர்கள், அறக்கட்டளை - இம்மாதிரியான காரியங்களில் ‘இதைத்தான் செய்ய வேண்டும்; இப்படித்தான் செய்ய வேண்டும்’ என்று உறுதியாக இருக்கக் கூடாது என்பதுதான் பதினைந்து வருடத்தில் கிடைத்த அனுபவம். நமக்கு திருப்தி கிடைக்கிறதா என்பது மட்டும்தான் ஒரே நோக்கமாக இருக்க வேண்டும். மற்றபடி அது போகிற போக்கில் போகட்டும் - எதை எழுத வருகிறதோ அதை எழுதி, எதைச் செய்ய முடிகிறதோ அதைச் செய்து, எதைப் பேச விரும்புகிறோமோ அதைப் பேசி என. 

மற்றபடி, நமக்கான இடம் என்ன? அடுத்தவனுக்கு மட்டும் அவ்வளவு புகழ் கிடைக்கிறது என்றெல்லாம் யோசிக்க ஆரம்பித்தால் அதில் மட்டுமேதான் கவனம் இருக்கும். நிறையப் பொறாமை இருந்தது. அடுத்தவர்கள் பற்றி தவறான அபிப்பிராயங்களைச் சொல்வேன். இப்பொழுது யோசித்துப் பார்த்தால் வெகு அபத்தமாக இருக்கிறது. கொஞ்சம் திருந்தியிருக்கிறேன். அவரவர் பணிகள் மட்டுமே அவரவருக்கான இடத்தை உறுதிப்படுத்துகிறது. தலைகீழாக நின்றாலும் இன்னொருவரின் இடத்தை நாம் ஆக்கிரமித்துவிட முடியாது. 

தொடர்ந்து பக்குவப்படுதலே மனித வாழ்வுக்கான முக்கியமான அர்த்தம். எந்தக் காலத்திலும் ‘நான் முழுவதும் பக்குவமடைந்துவிட்டேன்’ என்று சொல்லிவிட முடியாது. அதுவொரு முடிவிலியான பயணம். அந்தப் பயணம் வாழ்வின் கடைசிக்கணம் வரைக்கும் அமைய வேண்டும். வன்மமில்லாமல், பொறாமைப்படாமல், பிற சித்தாந்தங்கள் மீதான வெறுப்பு என்பது தனிமனிதர்கள் மீது திரும்பாமல், நாம் ஏற்றுக் கொள்ளும் அடையாளங்களுக்காக இன்னொரு மனிதனை வசைபாடாமல் - ‘எல்லோரும் நல்லா இருக்கட்டும்’ என்பதை நோக்கிய பயணம்தான் ஆத்மார்த்தமானது கூட. 

பதினைந்து வருடங்களாக உறுதுணையாக இருக்கும் அத்தனை பேருக்கும் மனப்பூர்வமான நன்றி. ஒவ்வொருவரையும் இந்தத் தருணத்தில் நினைத்துக் கொள்கிறேன்!

Feb 5, 2019

பழம் நீ யப்பா!

தைப்பூசத்துக்கு முந்தைய வார இறுதியில் பாளையங்கோட்டை சென்று கொண்டிருந்தோம். தாராபுரம் தாண்டிய பிறகு வண்டி நகரவே இல்லை. சாலையின் இருபுறமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் நடந்து கொண்டேயிருக்கிறார்கள். பழனி செல்லும் கூட்டம் அது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என்ற எந்த வேறுபாடுமில்லை. செருப்பு கூட அணியாமல் நடந்து செல்கிறார்கள். ஒரு வரியோ அல்லது ஒரு பத்தியோ எழுதுவதால் அந்தக் கூட்டம் உருவாக்கும் ஆச்சரியத்தை விவரிக்க முடியும் என்று தெரியவில்லை. திண்டுக்கல்லை நெருங்குகையில் கூட்டம் பெருகிக் கொண்டேயிருந்தது. எப்படியும் பல லட்சம் பேர்கள் சேர்ந்திருப்பார்கள். பழனியைத் தாண்டி நூறு கிலோமீட்டர் சென்றிருப்போம். மீண்டும் நடந்து செல்லும் பக்தர்கள் கண்படத் தொடங்கினார்கள். இறங்கி விசாரித்தால் அவர்கள் திருச்செந்தூர் செல்கிறவர்கள். சென்னையிலிருந்து நானூறு கிலோமீட்டர் நடந்து பழனியை அடையும் பக்தர் கூட்டத்தையும் இந்த வருடம் பார்த்தேன்.

மனதில் இருக்கும் அத்தனை பாரத்தையும் ஏதோவொரு ஆற்றலிடம் இறக்கி வைத்துவிடுவது எவ்வளவு ஆசுவாசமானது? மனிதன் ஏன் கடவுளுக்காக தன்னை இவ்வளவு வருத்திக் கொள்கிறான்? அமெரிக்க வங்கியொன்றில் பணிபுரிந்த நண்பர் காலையில் தனது ஷூ கயிற்றை இறுக்கிக் கட்டிக் கொள்வாராம். அலுவலகத்தின் வேலை அழுத்தம் ஆளைப் பிழிந்து சக்கையாக வெளியில் வீசும். வீட்டுக்கு வந்த பிறகு அந்தக் கயிற்றை இளக்கும் போது ரத்தம் ஓட்டம் பாதங்களில் பரவுகையில் தனது மொத்த பாரமும் இறங்குவதைப் போல உணர்வாராம். கடவுளை மனதில் நினைத்தபடி எளிய மனிதர்கள் தம்மை வருத்திக் கொண்டு தம் நேர்த்திக்கடனை முடித்த பிறகு வரும் சாந்தமும் கூட அப்படியானதுதான். எல்லாவற்றையும் அவனிடம் இறக்கி வைத்தாகிவிட்டது. இனி அவன் பார்த்துக் கொள்வான் என்கிற மனநிலை.


பழங்காலத்திலிருந்தே கொங்கு நாட்டின் தென் எல்லை பழநிதான். பொதினி- சங்ககாலத்தில் பொதினிதான். பிறகுதான் பழநி என்றானது. 

1944 ஆம் ஆண்டில் அப்பொழுது பழனி தேவஸ்தானத்தின் பொறுப்பாளராக இருந்த ஜெ.எம்.சோமசுந்தரம் பிள்ளை என்ற வழக்கறிஞர் எழுதியிருந்த தல வரலாறு ஒன்றை ஒட்டன்சத்திரம் விக்னேஸ்வரன் அனுப்பியிருந்தார். கடந்த முறை பழநி சென்றிருந்த போது அவர் உடன் வந்திருந்தார். பழநி பற்றி பேசியபடியே மலை ஏறினோம். எந்தவோர் இடத்தின் வரலாற்றையும் ஒரே நாளில் முற்றாகப் புரிந்து கொள்வதற்கு வாய்ப்பில்லை. அதுவும் சம்சாரிகளுக்கு அது சாத்தியமுமில்லை. தேடல் இருந்து கொண்டேயிருக்கும் போதும் கிடைக்கும் செய்திகளையெல்லாம் உள் வாங்கிக் கொண்டால் மெல்ல மெல்லத் தெளிந்து கொள்ளலாம். 

விக்னேஷ் அனுப்பியதிலிருந்து புத்தகத்தை வரிவரியாக வாசித்துக் கொண்டிருந்தேன். பழநியில் இடும்பர் சந்நிதி உண்டு. பழங்குடியினருக்கான சந்நிதியாக இருக்கும் என நினைத்திருந்தேன். இடும்பாசுரனுக்கான சந்நிதி. அது யார் இடும்பாசுரன்? அந்தக் காலத்தில் அகத்தியர் இறைவனை வேண்டிக் கொண்டிருக்கிறார். கயிலாயத்தில் சிவகிரி, சத்திகிரி என்று இரண்டு மலைகளையும் தான் பொதிகைக்கு எடுத்துச் சென்று சிவனாகவும் சக்தியாகவும் கருதி வழிபட வேண்டும் என்பது அவரது விருப்பம்.  அந்தத் தருணத்தில் இடும்பாசுரன் தன் மனைவியுடன் வந்து அகத்தியரை வணங்குகிறான். தமக்கு வாய்த்த அடிமை மிகவும் திறமைசாலி என்று கருதிய அகத்தியர், ‘இந்த இரண்டு மலைகளையும் பொதிகைக்கு எடுத்துச் செல்’ என்று உத்தரவிடுகிறார். அந்த மலைகளைத் தூக்கிக் கொண்டு சென்ற இடும்பன் களைத்துப் போய் மலைகளை கீழே வைத்து ஓய்வெடுக்கிறான். சேட்டைக்கார முருகன் மலை மீது ஏறி இது தனக்கான இடம் என்று பிடித்து வைத்துக் கொள்கிறார். இடும்பன் சண்டைக்குச் செல்ல போரில் அவன் இறுதியில் மடிந்தும் போகிறான். அப்படி சுமக்க முடியாமல் வைக்கப்பட்ட மலைதான் அதுதான் இன்றைக்கு பழநி மலையாக இருக்கிறது.

பழநியின் வரலாற்றில் இந்தப் பகுதி நிச்சயமாக புனைவுதான் என்பதை எளிதில் புரிந்து கொள்ளலாம். ஆனால் புனைவுகளைத் தவிர்த்துவிட்டு ஆன்மிக வரலாறுகளை நாம் அணுகவே முடியாது. புனைவுகளைத் தெரிந்து கொள்வதும் அவை பற்றிய விவாதங்களை மேற்கொள்வதும்தான் நாம் சரியான வரலாறு நோக்கி நகர உதவும். 

சங்ககாலத்தில் பொதினியாக இருந்தது பிறகுதான் பழநியாக மாறுகிறது. சிவன், பார்வதி கதை, நாரதர் வருவது, ஞானப்பழத்தைக் கொடுப்பது, அதில் விநாயகர் முருகன் சிக்கல், முருகன் கோபித்துக் கோவணத்தாண்டியாக பழநி மலையேறுதல் என்பதெல்லாம் நிகழ்ந்து ‘உன்னைவிடவா பழம் சுவை? பழம் நீ...இங்க வா ராஜா’ என்று உமாதேவி விளிக்க பொதினி பழநியாக மாறியது என்பது தல வரலாறு. 

திருவாவினன்குடி என்ற கோவில்தான் பழநியின் ஆதித்தலம். திருமுருகாற்றுப்படையில் குறிப்பிடப்படும் முருகன் அவர்தான். அப்படியானால் மலையில் முருகன் எந்தக் காலத்தில் இருந்து இருக்கிறார்? அந்தக் கோவில் எப்பொழுது கட்டப்பட்டது என்பதெல்லாம் தனிக் கேள்விகள். 

சேரப் பெருமான் கி.பி. 8 அல்லது 9 ஆம் நூற்றாண்டுவாக்கில் கோயில் கட்டியதாக வரலாறு. அதற்கு சாட்சியாக சேரப்பெருமான் குறித்த குறிப்புகள், சிலைகளை சாட்சியாகச் சொல்கிறார்கள். இந்தச் சேர மன்னன்தான்  சுந்தரமூர்த்தி நாயனாரின் நண்பர். (இணைப்பில்) சுந்தரமூர்த்தி வெள்ளையானை ஏறி கைலாயத்தை அடைந்த போது அவரை பின் தொடர்ந்து குதிரையில் கைலாயம் சென்றவர் இந்தச் சேர மன்னன். பழநி மலையில் சேர விநாயகர் என்றே சிறு கோவில் உண்டு. சுந்தரமூர்த்தி நாயனார் காலம் சுமார் எட்டு அல்லது ஒன்பதாம் நூற்றாண்டு என்பதால் அப்பொழுதுதான் பழநியின் கோவில் சற்றேறக்குறைவான இன்றைய வடிவத்துக்கு வந்திருக்கக் கூடும். இன்றைய காலத்திலிருந்து கணக்கிட்டால் சுமார் ஆயிரத்து இருநூறு வருடங்களுக்கு முன்பாக. 

அதற்கு முன்பாகவே கோவில் இருந்திருக்கலாம். ஆனால் மிகச் சிறியதாக இருந்திருக்கக் கூடும். கி.பி 12 ஆம் நூற்றாண்டு தொடங்கி கொங்குச் சோழர்கள், கி.பி. 15 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு பிற்காலப் பாண்டியர்களால் ஆளப்பட்டு பின்னர் மதுரை நாயக்கர்கள், மைசூர் சமஸ்தானம்,  ஆங்கில அரசு என்று கை மாறியிருக்கிறது. பழநி மலையின் படிகள் 1926 ஆம் ஆண்டில்தான் செப்பனிடப்பட்டிருக்கின்றன. அதற்கு கிட்டத்தட்ட ஒரு லட்ச ரூபாய் செலவு செய்திருக்கிறார்கள். ஆனால் வழிபாடுகள் இல்லாமல் இல்லை- இடைப்பட்ட காலத்தில் கேட்பாரற்றுக் கிடந்தன என்றெல்லாம் சில கோவில்களுக்கான வரலாறுகளில் தகவல்கள் உண்டு. ஆனால் பழநி குறித்து அப்படியான செய்தி எதுவும் கண்ணில்படவில்லை. 

கி.பி. 1650 வரைக்கும் பழநி முருகனுக்கு அர்ச்சனை செய்து வந்தவர்கள் புலிப்பாணி வகையறாவைச் சார்ந்த சைவ மரபினர்கள்தான். 1650வாக்கில் பழநியானது திருமலை நாயக்கர் கட்டுப்பாட்டில் இருந்திருக்கிறது. அப்பொழுது அவருடைய தளவாய், ராமப்ப அய்யர் என்பவர் பழநிக்கு வருகிறார். ‘பிராமணரல்லாத அர்ச்சகரிடம் தீர்த்த பிரசாதம் வாங்குவதா’ என்று மறுத்து பிராமணர்களை அர்ச்சகர்களாக நியமிக்கிறார். அதன் பிறகு இன்று வரை அவர்கள்தான் முருகனுக்கு பூசை செய்யும் உரிமையைப் பெற்றிருக்கிறார்கள். ஆண்டிப்பண்டாரங்கள் ஒதுக்கப்பட்டுவிட்டார்கள்.

பழநி தேவஸ்தானத்துக்கு நன்செய் நிலமாக 354 ஏக்கரும் புன்செய் நிலமாக 426 ஏக்கரும் இருக்கிறது என்று சோமசுந்தரம்பிள்ளை எழுதியிருக்கிறார். கோபிச்செட்டிபாளையத்தில் கூட சிறுவலூர் செட்டியார் என்றொருவர் தமது சொத்துக்களையெல்லாம் பழநி தேவஸ்தானத்துக்கு எழுதி வைத்திருந்தார். ஆனால் அதையெல்லாம் திருட்டுத்தனமாக விற்று திடீர் கோடீஸ்வரர் ஆனவர்கள் ஏகப்பட்ட பேர்கள் இருக்கிறார்கள். அந்த நிலமெல்லாம் இந்தக் கணக்கில் வருமா என்று தெரியவில்லை. எங்கள் ஊரான கரட்டடிபாளையத்திலேயே கூட பாதி ஊர் தேவஸ்தானத்துக்குச் சொந்தமாம். வழக்கு ஒன்று நடந்து கொண்டிருக்கிறது. இப்படி இன்னமும் எங்கெல்லாம் கோவணத்தாண்டிக்கு சொத்து இருக்கிறதோ! அவனுக்குத்தான் வெளிச்சம். 

Jan 31, 2019

ஜூனியர் விகடன் - கட்டுரை

ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் கோரிக்கைளுக்கு ஆதரவாக எழுதிய கட்டுரை இந்த வார ஜூனியர் விகடனில் (03 பிப்ரவரி 2019) பிரசுரமாகியிருக்கிறது.

(நிழற்படத்தை நான் அனுப்பவில்லை என்று சொன்னால் நீங்கள் நம்பமாட்டீர்கள். உண்மையிலேயே இணையத்திலிருந்து அவர்களாகவே எடுத்துக் கொண்ட படம் இது)


Jan 29, 2019

இதனை இதனால்...

சனிக்கிழமையன்று வேலூரில் இருந்தேன். எம்.டெக் படித்த கல்லூரி. பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு இப்பொழுதுதான் நுழைகிறேன்.  இப்பொழுது அந்த வளாகத்தைக் கல்லூரி என்றே சொல்ல முடியாது. மிகப்பெரிய பூங்காவுக்குள் ஆங்காங்கே பிரமாண்ட கட்டிடங்கள் இருக்கின்றன. பல்லாயிரக்கணக்கான மரங்கள். திரும்பிய பக்கமெல்லாம் புல்தரை. மிகப்பெரிய ஏரியை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அது நீர் நிறைந்து பிரமாண்டமாய் விரிந்திருக்கிறது.

கடந்த முப்பத்தைந்தாண்டுகளில் எழுபத்தைந்தாயிரம் பேர்களுக்கு மேல் வேலூர் தொழில்நுட்பக் கல்லூரியில் படித்து வெளியேறியிருக்கிறார்கள். ஒவ்வோராண்டும் ஜனவரி 26 ஆம் நாள் முன்னாள் மாணவர்களுக்கான நாள் கொண்டாட்டம் கல்லூரியில் நடைபெறும். இந்த ஆண்டுக்கான விழாவில் சமூக மேம்பாட்டுக்கு குறிப்பிடத்தக்க வகையில் பங்களிப்பைச் செய்ததாக சிறந்த முன்னாள் மாணவர் விருதை எனக்கு வழங்கினார்கள். பெற்றுக் கொள்வதற்காகச் சென்றிருந்தேன். 


ஏ.சி அறையை முன்பதிவு செய்து கொடுத்து, விருது பெறுகிறவர்களைக் கவனித்துக் கொள்வதற்கென தனித் தனியாக பேராசிரியரை நியமித்து, வீட்டிலிருந்து கிளம்பிய தருணத்திலிருந்து விழா முடித்துத் திரும்பும் வரைக்கும் ‘செளகரியமாக இருக்கிறதா? இது வசதியா இருக்கா?’ என பார்த்துப் பார்த்துச் செய்து கொடுக்கிறார் அவர். கூசச் செய்துவிடுகிற மரியாதை அது. லுங்கியைக் கட்டிக் கொண்டு கேட்பாரற்றுத் திரிந்த வளாகத்தில் இவ்வளவு மரியாதை என்பது கூசத்தானே செய்யும்? 

விழாவில் ஆறாயிரம் பேர் கலந்து கொண்டிருந்தார்கள். குடும்பம் குடும்பமாக வந்திருந்தார்கள். 

நிகழ்வுக்கு வேஷ்டி கட்டிக் கொண்டு வருகிறேன்; தமிழில் பேசுகிறேன் என்று முன்பே சொல்லியிருந்தேன். விருது பெற்றுக் கொண்டவுடன் இரண்டு நிமிடம் பேசச் சொன்னார்கள். 


‘இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து 
அதனை அவன்கண் விடல்’ - தெரிந்து வினையாடல் அதிகாரத்தில் உள்ள இந்தக் குறள் மிகப் பிடித்த குறள்.

மனிதர்களுக்கு மட்டுமில்லை- கடவுளுக்கும் இக்குறள் பொருந்தும். இந்த வேலையை இவன் செய்வான் என்று ஆண்டவனுக்கும் தெரியும். எனக்கு இந்தப்பணியை எனக்குக் கொடுத்திருக்கிறான். அதற்கு மேல் இதில் எதுவுமில்லை. குறளை மேற்கோளாகக் காட்டிப் பேசினேன்.

பல்கலைக்கழக வேந்தர் ஜி.விஸ்வநாதன் ‘ஏன் வீட்டிலிருந்து யாரையும் கூட்டி வரலை?’ என்று மேடையிலேயே கேட்டார். தனிப்பட்ட முறையில் சில எண்ணங்கள் உண்டு. விருது விழாக்களுக்கு அழைத்துச் சென்று ‘அப்பா ஏதோ பெரிய காரியத்தைச் செய்கிறார்’ என்ற நினைப்பு பிள்ளைகளுக்கு வந்துவிடக் கூடாது; அது போலவே,  இதைச் செய்தால் இப்படிப் புகழ்வார்கள் என்கிற எண்ணமும் வந்துவிடக் கூடாது. வாழ்க்கையை அதன் போக்கில் இயல்பாக எதிர்கொண்டிருக்கும் மனநிலை அவர்களுக்கு முக்கியம். மேடையில் வேந்தரின் கேள்விக்கு சிரித்து வைத்தேன். ஆனால் குடும்பத்தின் ஒத்துழைப்பில்லாமல் இவையெதுவுமே சாத்தியமில்லை என்பதும் தெரியும். 

நிகழ்ச்சி முடிந்த பிறகு சுந்தரம் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் திரு.ஸ்ரீனிவாச ராகவன்- அவர்தான் நிகழ்வின் சிறப்பு விருந்தினர்- தேடி வந்து ‘உங்க செயலும், மேடையில் தமிழில் பேசியது என்னை நெகிழச் செய்துவிட்டது’ என்றார். சந்தோஷமாக உணர்ந்தேன். அருகிலேயே நின்ற திரு.சங்கர் விஸ்வநாதன் ‘நீ செய்யற வேலை பத்தியெல்லாம் சாருக்கு அனுப்பி வை’ என்றார். சங்கர் அவர்களுக்கு என் மீது தனிப்பட்ட கவனம் உண்டு.  சிறப்பு விருந்தினர் ‘நானும் என்னால முடிஞ்ச பங்களிப்பைச் செய்யறேன்’ என்றார். மேடையில் சரியாகத்தான் பேசியிருக்கிறேன் எனத் தோன்றியது.

வேலூர் தொழில்நுட்பக் கல்லூரி இன்றைக்கு சாம்ராஜ்யம். வேலூர், சென்னை, போபால், அமராவதி என நான்கு வளாகங்கள், பல்லாயிரக்கணக்கான மாணவர்கள், வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களுடனான பரந்துபட்ட தொடர்புகள், கல்லூரியின் வருமானத்தை பிற தொழில்களில் முதலீடு செய்யாமல் கல்லூரியின் வளர்ச்சிக்கு மட்டுமே திருப்பிவிடும் நிர்வாகம் என பல தனியார் கல்வி நிறுவனங்களால் செய்ய முடியாத செயல்களைச் செய்து வருகிறது. அங்குதான் படித்தேன் என்பதற்காக பெருமைக்குச் சொல்லவில்லை. அய்யாவு என்றொரு மாணவன் பற்றி எழுதியிருக்கிறேன். நிசப்தம் சூப்பர் 16 மாணவன். அப்பா மரம் ஏறுகிறவர். வெளியுலகமே தெரியாத கிராமப்புற மாணவன். விடுதிச் செலவு உட்பட ஒரு பைசா வாங்கிக் கொள்ளாமல் வேலூரில் இரண்டாமாண்டு படித்துக் கொண்டிருக்கிறான். ‘விஐடி ஸ்டார்ஸ்’ என்று கிராமப்புற மாணவர்களுக்கான இலவசக் கல்வித்திட்டத்தில் படிக்கிறான். இப்படி பல நூறு மாணவர்கள் இருக்கிறார்கள்.

நிகழ்ச்சி முடிந்த பிறகு நிறையப் பேர் நெருங்கி வந்து பேசினார்கள். கல்லூரி சார்பில் ஒரு கிராமத்தைத் தத்தெடுத்துக் கொள்ள முடியும்; கிராமப்புற பெண் குழந்தைகளை அடையாளம் காட்டினால் அவர்களின் படிப்பை முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியும்; மாணவர்களுக்கு வழிகாட்டிகளை நியமிக்க முடியும்- என ஒவ்வொருவரும் ஒன்றைச் சொன்னார்கள். சொன்னவர்கள் அத்தனை பேரும் பெருந்தலைகள். சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நிறைய மாணவர்களுக்கு வெளிச்சம் காட்டிவிட முடியும்.

விருதுக்குப் பரிந்துரைத்த அத்தனை பேருக்கும் நன்றி. விஐடி நிர்வாகத்துக்கும் நன்றி. இந்தியக் கல்லூரிகள் அளவில் மிக வலுவாக இருக்கும் முன்னாள் மாணவர் சங்கங்களில் விஐடி முன்னாள் மாணவர் சங்கமும் ஒன்று. 

மனதுக்கு நெருக்கமான நிகழ்ச்சி- அப்பா பாராட்டுவது போல!

நிசப்தம் இல்லையென்றால் இவையெல்லாம் எதுவுமில்லை. நிசப்தம் நண்பர்களுக்கு மனப்பூர்வமான நன்றி.