உணவு எப்பொழுதுமே விவாதத்திற்குரியதாகிவிடுகிறது. ஒன்றரைக் கோடி ரூபாய் இட்லி விவகாரமில்லை. அது அரசியல். இது சைவம் - அசைவம் பற்றியது. சைவத்தையும் அசைவத்தையும் தனித்தனியாகப் பிரித்துப் பார்ப்பதில் பார்பனர்களின் ஆதிக்கம் இருக்கிறது என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். சமூக ஊடகங்களில் எந்தவொரு சமாச்சாரத்தையும் 360 டிகிரியோடு கூட நான்கைந்து டிகிரிகள் சேர்த்து அக்குவேறு ஆணி வேறாகப் பிரித்துவிடுகிறார்கள். யார் சொல்வது சரி; யார் சொல்வது தவறு என்றெல்லாம் யோசித்து முடிவுக்கு வருவதற்குள் இன்னொரு சங்கதியைக் கையில் பிடித்துக் கொள்கிறார்கள்.
உணவுப் பழக்கத்தில் நான் தொடக்கத்திலிருந்தே அசைவம்தான். எப்பொழுதெல்லாம் சாப்பிட முரண்டு பிடிக்கிறேனோ அப்பொழுதெல்லாம் பையனுக்கு ‘கறி ஏக்கம் புடிச்சுடுச்சு’ என்று வீட்டில் மிளகு அரைப்பார் அம்மா. குழந்தைகளுக்கு விதவிதமான ஏக்கங்கள் உண்டு. ஏதாவதொரு ஏக்கம் வரும் போது உணவு மீதான விருப்பம் குறைந்துவிடும். கறிக்கான ஏக்கம்- கறி ஏக்கம். சைவத்துக்கு மாற வேண்டும் என்றெல்லாம் நினைத்ததேயில்லை. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அசைவம் சேர்த்துக் கொண்டிருந்தேன். அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லாத போது சித்த மருந்துகளை உட்கொண்டார். சித்த மருத்துவர்கள் உணவில் அசைவம் வேண்டாம் என்றார்கள். அப்பா தவிர்த்த போது அவரோடு சேர்த்து நானும் தவிர்த்தேன். ‘அப்பாவுக்கு உடல்நிலை சரி ஆகும் வரைக்கும் சைவமாகவே இருக்கிறேன்’ என்று கடவுளையும் வேண்டிக் கொண்டேன். அப்பாவுக்கு சரியாகவே இல்லை.
ஆனால் அந்த வேண்டுதல் மட்டுமே சைவத்துக்கு மாறக் காரணமில்லை. அந்தக் காலகட்டத்தில் உருவான வள்ளலார் மீதான ஆர்வம், அவரைப் பின் தொடர்பவர்களுடனான நட்பு, சித்த மருத்துவம் சார்ந்த புத்தகங்கள் என நிறையச் சொல்ல முடியும். சித்த மருத்துவத்தில் அசைவம் உண்டு. கோழியின் ரத்தம், குருவியின் ரத்தம் என மருத்துவர்களே நோய்களுக்குத் தகுந்தாற்போல பரிந்துரைக்கிறார்கள். ஆனால் உணவைப் பொறுத்த வரையிலும் அசைவத்தைவிடவும் சைவம் சிறப்பு என பல சித்த மருத்துவ நூல்களும் வலியுறுத்துகின்றன. சித்த மருத்துவத்தின் சிகாமணியான ஜட்ஜ் பலராமைய்யர் புத்தகத்தைச் சுட்டிக் காட்டலாம். ஆனால் ‘அய்யர் அப்படித்தானே சொல்வார்?’ என்று நிராகரித்துவிடுவார்கள். எந்தவொரு சித்த மருத்துவப் புத்தகத்திலும் உணவு முறை பற்றியக் குறிப்புகளின் விவரம் இருந்தால் தேடிப் பார்க்கலாம். சைவம்தான் பிரதானமாக இருக்கும்.
என்னைச் சுற்றிலும் எண்பது வயதைத் தாண்டி ஆரோக்கியமாக வாழும் பல முன்னோர்கள் ஒரு கட்டத்தில் சைவத்துக்கு மாறியவர்களாக இருக்கிறார்கள். என்ன காரணம் என்றெல்லாம் தெரியவில்லை. ஆனால் என்னவோ இருக்கிறது என உறுதியாக நம்புகிறேன். ‘அசைவம் சாப்பிடலைன்னா ஒண்ணும் ஆகிடாது’ என்று மனம் மாற இவையெல்லாமும் கூடக் காரணம்.
இன்னொரு முக்கியமான ஒன்றுமிருக்கிறது- மனோவலிமை. சிறுவயதிலிருந்து அசைவம் பழகி திடீரென்று சைவத்துக்கு மாறுவது அவ்வளவு எளிதான காரியமாக இல்லை. நாவும் மனமும் அலை மோதின. தொடக்கத்தில் பெரிதாக ஒன்றும் தெரியவில்லை. ஒன்றிரண்டு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் கறி ஏக்கம் எட்டிப் பார்த்திருந்தது. மீன் மட்டும் உட்கொள்ளலாம். குஸ்கா தவறில்லை என்றெல்லாம் மனம் அலை பாய்ந்தது. வீட்டில் கறிக்குழம்பும் வேகும் போது ‘ஒரு துண்டு எடுத்து வாயில் போட்டுக்கலாமா’ என்று இருக்கும். சில முறை உண்டதும் உண்டு. இதையெல்லாம் தவறு என்று கருதவில்லை. மனதை இவ்வளவு கட்டுப்படுத்தி எதைச் சாதிக்கப் போகிறோம் என்று கூட நினைத்ததுண்டு. தேவையில்லாமல் மனதைச் சங்கிலி போட்டுப் பூட்டுவது அவசியமற்ற செயல் என்றும் தோன்றியது.
அப்பொழுதுதான் சைவம் என்பதை அறம் சார்ந்த விஷயமாகவும் பார்க்கத் தோன்றியது. மனிதர்களுக்கு உதவ வேண்டும் என்று நினைக்கிற மனதைவிடவும் எந்தவொரு உயிரையும் தேவையில்லாமல் துன்புறுத்தக் கூடாது என்று நினைப்பதுதானே சரியாக இருக்கும் என்று நினைத்தேன். அறக்கட்டளை, மனிதம் அது இது என்று பேசுவதைவிடவும் தனிமனிதனாக, உயிர் கொல்லாமை என்பதை பின்பற்ற வேண்டும் என்ற உறுதி பூண்டது அப்படித்தான். ஒரு பழக்கத்திலிருந்து நம்மால் மனதைக் கட்டுப்படுத்த முடியும் என்பது ஒருவகையில் திருப்தியானது.
இதுவொன்றும் புதிய கருத்துருவாக்கமில்லை. இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பாகவே வள்ளுவன் எழுதி வைத்ததுதானே புலால் உண்ணாமை. தமிழகத்தில் பரவியிருந்த புத்தமும், சமணமும் வலியுறுத்துவதும் கூட சைவத்தைத்தானே? அம்பேத்கரின் வழியாக புத்தத்தைப் போற்றுகிறவர்கள் கூட இந்துத்துவத்தை எதிர்க்க ‘நான் மாட்டுக்கறி உண்டேன்’ என்று சொல்வதை எப்படிப் புரிந்து கொள்வது எனத் தெரியவில்லை. இந்துத்துவ அடிப்படைவாதிகளைச் சீண்ட ஆயிரம் காரணங்கள் இருக்கின்றன. அதற்காக அசைவத்தைத் தூக்கிப் பிடிக்க வேண்டியதில்லை. சைவம் என்பது இந்துத்துவம் சார்ந்ததில்லை என்பதைப் பேசிச் சண்டை போட்டுக் கொண்டிருக்க வேண்டியதில்லை எனவும் நினைக்கிறேன். சமூக ஊடகங்கள் வலுப்பெற்றுவிட்ட இந்தக் காலத்தில் எதைச் சொன்னாலும் ஆதரிக்க நான்கு பேரும் எதிர்க்க ஆயிரம் பேரும் இருப்பார்கள்.
‘பூச்சிகளைப் பறவைகள் தின்னவில்லையென்றால் பூச்சிகளின் எண்ணிக்கை பெருகிவிடும். அது உணவுச் சங்கிலியின் சமதன்மையையே குலைக்கும்’ என்பார்கள். அதுபோலவே மனிதர்களும் அசைவம்தான் என்பது காலங்காலமான நிலை அதை ஏன் சிதைக்க வேண்டும் என்றெல்லாம் கேட்பவர்கள் உண்டு. உணவு என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம் சார்ந்த ஒன்று. ஆனால் அதில் அரசியல் கலப்பதைத் தவிர்க்கவே முடியாது.
சைவம் சந்தோஷமானது. அவ்வளவுதான்.
10 எதிர் சப்தங்கள்:
சைவ உணவு பழக்கம் நல்லது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அம்பேத்கரின் வழியாக புத்தத்தைப் போற்றுகிறவர்கள் சாதிய அடக்குமுறையை எதிர்க்கத்தானே தவிர புத்தரது எல்லா போதனைகளுக்கானதில்லை அதை புரிந்து கொண்டால்,
இந்துத்துவத்தை எதிர்க்க ‘நான் மாட்டுக்கறி உண்டேன்’ என்று சொல்வதை புரிந்து கொள்வது எளிது, மணிகண்டன். வருகிற புத்தாண்டு உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் மேலும் பல மகிழ்ச்சிகளை அளிக்க வாழ்த்துக்கள்.
உங்கள மாதிரி சிலர் ஏதோ ஒரு காரணத்துக்காக ஒரு காலகட்டத்தில் சைவமாக மாறுவார்கள்,,, இது இயல்பான விசயம் தான்,
பலருக்கும் அசைவம் சைவம் என்பது பொருளாதாரம், குடும்ப உறுப்பினர்களின் மகிழ்ச்சி குறிப்பாக குழந்தைகளுக்கான ஊட்டசத்து மற்றும் பெரியவர்களின் உடல்நலத்தை அடிப்படையாக கொண்டே பின்பற்றப்படுகிறது அல்லது தவிர்க்கப்படுகிறது,
இதற்காக ரொம்ப பெரிசா மெசேஜ்லாம் தர டிரை பண்ணாதீங்க,
இந்துத்துவம் மாட்டுகறி உணவை அரசியல் ஆக்கி அவர்களை இழிவாக தாக்குவதால் அவர்கள் தங்கள் எதிர்ப்புணர்வை வெளிப்படுத்த மாட்டுக்கறி திருவிழா னடத்த வேண்டி இருக்கிறது.கண்டிக்கப்பட வேண்டியவர்கள் இந்துக்கள்தான்.
அடுத்து
பௌத்தமும் சமணமும் பேசுவது 'சைவம்' அல்ல. அவை மரக்கறி உணவு முறையை. சைவம் என்பது ஒரு சமயம் சார்ந்தது. இதை சரியாக புரிந்து பேசுங்கள்.
நன்றி.
Judge Balaramiah,our family friend,I do not think is Brahmin.
Please read book on Paleo diet by Neanderselvan who is a vallalar devotee till he reached 40 years. He is the reverse of you.
நீங்கள் சைவம் சாப்பிடுவது உங்கள் விருப்பம்.நானும் சைவமாக மாறா விட்டால் தாக்குதல் நடத்துவது தான் அருவருபான விசயம். மிருகத்து காக மனிதன் கொலை செய்ய படும் கால கட்டம் இது
ஜட்ஜ் பலராமைய்யர் ILLAI. THE JUDGE'S NAME IS V.BALARAMIAH.
HE WAS DISTRICT JUDGE AT CUDDALORE. I HAVE GONE TO HIS HOUSE MANY TIMES DURING MY SCHOOL DAYS (8TH STD)
I HAVE SEEN HIM AT VANDAVASHI TRAVELING FROM TIUCHY.
TO MY KNOWLEDGE HE IS NOT A 'BRAHMIN. ANYWAY IT DOESN'T MATTER.
PURANIC BRAHMINS WERE MEAT EATERS.
ONLY BUDDHISM/ JAINISM CHANGED THEM.
IT IS STRANGE THAT BUDDHISTS OF OTHER COUNTRIES (LANKA,BURMA.JAPAN) ARE COMPULSIVE NON VEGETARIANS.
LANKANS/BURMESE MERCILESSLY KILL FELLOW HUMANS TAMILS/MUSLIMS.
ANBUDAN,
M.NAGESWARAN
உங்கள் கருத்து இது.தேவையுள்ளவர்கள் அனுசரிக்கலாம். பணியில் உடலுழைப்பு பெரிதும் தேவைப் படுபவர்கள் அசைவத்தை எடுத்துக் கொள்ளத்தான் வேண்டும் என்று நினைக்கிறேன்.வயதானால் , அல்லது கொலஸ்டிரால் மிகுதி நோயாக இருந்தால் அவர்களாகவே விடத்தோன்றும்.
வீம்பிற்காகச் செயல் படுவதைக்குறித்து என்ன சொல்ல?
உடல் உழைப்பு சார்ந்தவர்களுக்குத் தேவையான புரதமும் கொழுப்பும் மரக்கறி உணவின் மூலம் கிடைப்பது கடினம் என்று கேள்வி.
அசைவம் அதைவிட மகிழ்வானது..
Post a Comment