Dec 13, 2018

கருத்துக்கணிப்புகள் - அரசியல் இல்லை.

தேர்தல் முடிந்தவுடன் நடந்த கருத்துக் கணிப்புகள் எதுவுமே துல்லியமாக இல்லை. மேம்போக்காக அடித்து விட்டிருந்தார்கள். பிக் டேட்டா படித்துக் கொண்டிருப்பதால் இந்த சூட்சமங்களை எல்லாம் தெரிந்து கொள்வது சுவாரசியமாக இருக்கிறது. பெருந்தகவல் (Bigdata) என்பதில் பல துறைகள் இருக்கின்றன. ஒன்றுமில்லாத மாதிரிதான் தெரியும்- இருக்கும் தகவலை ஒரு வடிவத்துக்குக் கொண்டு வருவதற்குள் நாக்குத் தள்ளிவிடுகிறது. உதாரணத்துக்கு ஒன்று- மாவட்டம், அதில் இருக்கும் பஞ்சாயத்துகள், ஒவ்வொரு பஞ்சாயத்திலும் உள்ள மக்கள் தொகை- இதுதான் தகவல் என்று வைத்துக் கொள்வோம். இது எந்த வடிவத்திலும் இருக்கலாம். பிடிஎஃப்பாக இருக்கலாம், வேர்ட் வடிவத்தில் இருக்கலாம். இதையெல்லாம் எக்ஸெல்லில் போட்டு ஒரு வகைப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டியிருந்தது. ‘நமக்குத் தெரியாத எக்ஸெல்லா’ என்று நினைத்துக் கொண்டிருந்தேன். மூச்சுத் திணறிப் போனது. கைவசம் இருக்கும் தகவலை ஒரு வடிவத்துக்குக் கொண்டு வருவது கூட பிக்டேட்டாவின் ஆட்கள் தேவைப்படும் களம்தான். (unstructured data to structured data). இப்படி நிறைய களங்கள் இருக்கின்றன.

பிக்டேட்டா பற்றி இன்னொரு நாள் பேசுவோம். 

தேர்தல் கருத்துக் கணிப்பைப் பொறுத்த வரையிலும் இரண்டு படிகள் உண்டு. வாக்காளர்களிடம் கேட்டு பதிலை வாங்குவது முதல்படி. இதுவே சிக்கலானதுதான். ஒவ்வொரு தொகுதியிலும் கணிப்பு நடத்த முடியாதல்லவா? குறிப்பிட்ட தொகுதிகளைத் தேர்ந்தெடுத்து அதில் எந்தெந்த தொகுதிகளில் எந்த வகையான ஆட்களிடம் கணிப்பு நடத்துகிறோம் என்று துல்லியமாகச் செய்ய வேண்டும். உதாரணமாக சேலத்தில் ‘நீங்க யாருக்கு ஓட்டுப் போட்டீங்க?’ என்று கேட்டு பதிலை வாங்கிவிடலாம். முப்பத்தைந்து கிலோமீட்டர் தள்ளி கொங்கணாபுரத்தில் பதிலை வாங்க முடியாது. சிரித்துச் சமாளித்துவிடுவார்கள் அல்லது மாற்றிச் சொல்லிவிடுவார்கள். இரண்டு ஊர்களும் ஒரே தொகுதியில் வரக் கூடும். இடம் மாறும் போது மக்களின் பழக்கவழக்கங்கள் மாறுகிற வாய்ப்புகள் மிக அதிகம். நாம் வாங்கிய பதில்கள் சரியானவை என்ற கணக்கில் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்தால் தவறான முடிவுக்குத்தான் வந்து சேர்வோம். அதனால்தான் கள அனுபவமில்லாத ஆட்கள் தகவல் சேகரித்தால் சொதப்புவதற்கு வாய்ப்பு அதிகம். 

இரண்டாம்படி புள்ளியியல் வல்லுநர்களுக்கானது. 1200 பேரிடம் கணிப்பு நடத்தியிருந்தால் அதில் ஆண்கள் எவ்வளவு பேர், பெண்கள் எவ்வளவு பேர், வயதானவர்கள், இளைஞர்கள் என விகிதாச்சார அடிப்படையில் பிரித்து அதை மாநிலம் முழுக்கவும் இருக்கும் ஆறு கோடி வாக்காளர்களின் மனநிலையோடு பொருத்துவது மிக முக்கியமான கட்டம். நிறைய Quantitative methods இருக்கின்றன. புள்ளியியல் அறிவில்லாதவர்கள் எந்த மென்பொருளைப் பயன்படுத்தினாலும் தவறான முடிவுதான் வந்து சேரும். இரண்டு படிகளிலும் தொண்ணூற்றைந்து சதவீதம் சரியாகச் செய்தால் மட்டுமே கிட்டத்தட்ட சரியான முடிவுக்கு வர முடியும். 

தொழில்நுட்ப ரீதியாகப் பார்க்கும் போது எளிதான காரியமாகத் தெரியும். ஆனால் மேலே குறிப்பிட்ட சேலம்-கொங்கணாபுரம் உதாரணம் போல நிறையச் சிக்கல்கள் உண்டு. அமெரிக்காவில் பல ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு கருத்துக் கணிப்பு நடத்தி முடிவையும் வெளியிட்டார்கள். வழக்கத்தைவிடவும் கூட அதிகமானவர்களைத் தொடர்பு கொண்டு தகவல் சேகரித்தார்களாம். ஆனால் முழுமையாகத் தவறாகிவிட்டது. காரணம் என்னவென்றால் அவர்கள் தொலைபேசியில் அழைத்து ‘நீங்க யாருக்கு ஓட்டுப் போடுவீங்க’ என்று கேட்டிருக்கிறார்கள். வதொலைபேசி அரிதாக இருந்த கால கட்டம் அது. மேல்தட்டு மக்கள் மட்டுமே பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள். கணிப்பு நடத்தியவர்கள் இந்த ஒரு அம்சத்தை கவனத்தில் எடுத்துக் கொள்ளவேயில்லை. மேல்தட்டு மக்களின் வாக்குகள் மட்டுமே முடிவைக் காட்டுவதில்லை அல்லவா?

கருத்துக் கணிப்பைப் பொறுத்தவரையிலும் இந்த இரண்டு படிகள் மேம்போக்காகத் தெரிபவை. ஆனால் அதனுள் மடிப்பு மடிப்பாக ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கின்றன.

ஆன்லைனில் நடக்கும் கருத்துக்கணிப்புகள் இப்படித்தான். முரசொலியோ அல்லது நமது எம்.ஜி.ஆரோ ஆன்லைனில் கருத்துக் கணிப்பு நடத்தினால் என்னவாகும்? அதை வாசிக்கிறவர்கள் வாக்களிப்பார்கள். முரசொலியின் முடிவு திமுகவுக்கு வெற்றி என்று காட்டும். நமது எம்.ஜி.ஆரின் முடிவு டிடிவியை வெற்றி என்று காட்டும். நானும் நீங்களும் கருத்துக் கணிப்பு நடத்தினாலும் கூட அப்படித்தான் இருக்கும். என்னுடைய கருத்துக்கள் பிடிக்காதவர்கள் எட்டியே பார்க்கமாட்டார்கள். என்னைப் பின் தொடர்கிறவர்களில் பெரும்பாலானவர்கள் என்னுடைய விருப்பு வெறுப்பு சார்ந்தவர்களாக இருப்பார்கள். ஒரு தலைப்பட்சமான முடிவாகத்தான் கிடைக்கும்.

சார்பற்ற, நடுநிலையான தகவல் சேகரிப்பில்தான் கணிப்பின் முழு வெற்றியும் அடங்கியிருக்கிறது. தேர்தலுக்கு மட்டும் என்றில்லை. எந்தவிதமான கணிப்புக்கும் இதே சூட்சமம்தான். வணிக நிறுவனங்கள் நடத்துகிற கருத்துக் கணிப்பைக் கூட எடுத்துக் கொள்ளலாம். கடைக்கே வராத ஆளொருவர் அதிசயமாக வந்திருப்பார். அவரின் கருத்துக்களை எடுத்துக் கொண்டு முடிவுக்கு வந்தால் கதை கந்தலாகிவிடும்.

பெரும்பாலும் இந்தியாவில் கருத்துக்கணிப்புகள் துல்லியமாக இருப்பதேயில்லை. ஆனால் கருத்துக்கணிப்பை நடத்துகிற ஏஜென்ஸிகள் கணிசமான தொகையைப் பெற்றுக் கொள்கின்றன. பிக் டேட்டாவைக் கொஞ்சம் படித்துக் கொண்டிருப்பதால் இதையெல்லாம் கவனிக்கத் தோன்றுகிறது. புதிதாகத் தெரிந்து கொள்வது எதுவுமே- அதுவும் நம்முடைய ஆர்வத்துக்குத் தீனி போடுவதாக இருந்தால் இன்னமும் சுவாரஸியம்தான்.

எதிர்காலத்தில் பிக்டேட்டாவில் அனுபவம் வாய்ந்த வல்லுநர்கள் உருவாகும் போது கணிப்புகள் சரியாக அமையக் கூடும்.

Dec 10, 2018

மே ஐ ஹெல்ப் யூ?

வீட்டில் இருந்து வேலை செய்கிறேன் என்று சொன்னால் வர வர மரியாதையே இல்லை. பண்ணையத்து ஆளுக்குக் கூட கொஞ்சம் மரியாதை இருக்கும். ‘சாமிக்கு சாத்துற பட்டுத்துணி வாங்கிட்டு வா’, ‘பையனுக்கு தேன் வாழை வாங்கிட்டு வா’, ‘பேங்க்ல பணம் போட்டுட்டு வந்துடு’ என்று ஆளாளுக்கு ஒரு வேலை வைக்கிறார்கள். எல்லா வேலையும் ஒரே நாளில் முடிக்க வேண்டும்.  மூன்றாவது வேலை தம்பி சொன்னது. ‘உன்ர ஆபிஸூக்குப் பக்கத்துலதானே பேங்க் இருக்கு?’ என்று கேட்டால் ‘எனக்கு ஃபோன் பேசக் கூட நேரமில்லை’ என்று சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டித்துவிட்டான்.  இதையெல்லாம் அம்மாவிடம் சொல்ல முடியாது. ‘ஊட்டுக்கு ஏதாச்சும் ஒத்தாசையா இருடா’ என்பார். பற்களைக் கடித்துக் கொண்டு இருந்துவிட வேண்டியதுதான்.

எந்த வங்கிக்கு வேண்டுமானாலும் சென்றுவிடலாம். ஸ்டேட் பேங்க் இருக்கிறது பாருங்கள். வெட்டக் கொண்டு போவது போலவே இருக்கும். ஆயிரத்தெட்டு விதிமுறைகள். எல்லாவற்றுக்கும் காசு. அம்மாவின் ஓய்வூதியக் கணக்கு அந்த வங்கியில்தான் இருக்கிறது. அதில் ஒரு நாற்பத்தைந்தாயிரம் ரூபாயை செலுத்த வேண்டிய வேலை எனக்கு.

சரவணம்பட்டிக் கிளைக்குச் சென்றால் ‘உங்க ஏடிஎம் அட்டையைக் கொடுங்க’ என்றார்.  

‘என்ர கணக்கு இல்லீங்க..அம்மாவுதுங்க’ என்றால் ‘அது இங்க சாத்தியமில்லை...’என்றார். வேறொரு நபரின் கணக்கில் பணம் செலுத்த முடியாதாம். அவரே ‘அத்திபாளையம் பிரிவுக்கு போங்க’ என்றார். பெங்களூர் என்றால் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் போகலாம். உடலும் குளிர்ச்சியாக இருக்கும். கண்ணும் குளிர்ச்சியாக இருக்கும். கண் குளிர்ச்சி என்றால் மரங்களைச் சொல்கிறேன். நீங்கள் எதையாவது குண்டக்க மண்டக்க எடுத்துக் கொள்ள வேண்டாம். இங்கே கோயமுத்தூரில் வெறும் புழுதிதான் இருக்கிறது. சரவணம்பட்டியில் தொடங்கி ரயில் நிலையம் வரைக்கும் வெறும் புழுதிதான்.

அத்திபாளையம் பிரிவுக் கிளைக்குச் சென்றால் அங்கு பணம் செலுத்தும் எந்திரம் வேலை செய்யவில்லை. அங்கிருந்து கணபதிக்குச் செல்லச் சொன்னார்கள். கணபதி என்பது கோவையில் ஒரு இடத்தின் பெயர். சிவன், முருகன் என்றெல்லாம் இடங்கள் இருக்கின்றனவா என்று விசாரித்துக் கொண்டிருக்கிறேன்.

அங்கேயும் எந்திரம் வேலை செய்யவில்லை. என்னய்யா இது வம்பாகப் போய்விட்டது என்று கிளைக்குள் நுழைந்தால் ‘மே ஐ ஹெல்ப் யூ’ என்ற பலகையின் கீழாக வழக்கமாக பெண்கள்தானே இருப்பார்கள். ம்க்கும். சீருடையில் ஒரு கட்டையன். மட்ட மத்தியானம் ஒன்றரை மணி. வெயில் சொட்டையைப் பிளந்திருந்தது. கண்கள் நிறையப் புழுதி. எல்லாவற்றையும் பொறுத்துக் கொள்ளலாம். கட்டையரிடம் ‘சார்...எங்கேயுமே வேலை செய்யல...பக்கத்துல வேற எங்க சார் இருக்கு?’என்றேன். 

‘ராமநாதபுரம், அத்திபாளையம் பிரிவுப் பக்கமாகப் போங்க’ என்றார். இந்த ராமநாதபுரம் ராமேஸ்வரம் ராமநாதபுரம் இல்லை. கோயமுத்தூரில் இப்படி ஒரு இடம். கோவைவாசிகள் குழப்பவாதிகள். 

‘அத்திபாளையம் பிரிவிலிருந்துதாங்க வர்றேன்...ராமநாதபுரம் இங்க இருந்து பக்கமா?’ என்றேன். இந்தக் கேள்வியில் ஏதாவது தவறு இருக்கிறதா? ‘உங்களுக்கே தெரியலைன்னா எனக்கு எப்படித் தெரியும்’ என்கிறார்.

‘என்னங்க இப்படி எகிறுறீங்க?’ என்றால் ‘நீ என்ன மினிஸ்டரா?’ என அவர் கேட்டவுடன் கோபம் வந்துவிட்டது. வேறு ஏதாவது ஒருவரைச் சுட்டிக் காட்டியிருந்தால் கூட கண்டுகொள்ளாமல் விட்டிருக்கலாம். நம்மூர் மந்திரிகள் அவ்வளவு பெரிய அப்பாடக்கர்களா? மந்திரிகள் கேட்டால்தான் பதில் சொல்வாராம். உச்சியில் இருக்கும் நான்கேகால் முடிகளும் சிலிர்த்து நின்றன. என்னைப் பார்த்தால் பொல்லி மாதிரிதானே தெரியும்? இவன் என்ன செய்துவிடுவான் என்று எழுந்து வந்துவிட்டான். அந்த ஆள் வருவதைப் பார்த்தால் அடித்துவிடுவான் போலிருந்தது. அவன் அடித்தால் அவ்வளவுதான். தூக்கிச் செல்ல ஸ்ட்ரெச்சர்தான் வர வேண்டும். நமக்கு எதுக்கு ஸ்டெரெச்சர் எல்லாம்? சட்டையைப் பிடித்து தர தரவென இழுத்து ஓரத்தில் போட்டுவிடுவார்கள். நமக்கு பலமே நாக்குதான். அதை மட்டும் ஒழுங்காகப் பயன்படுத்திவிட வேண்டும் என்ற கணக்கில் ‘நீ யூனிபார்ம்ல இருக்க...அடிச்சா நீ காலி’ என்றேன். அது அவனை யோசிக்கச் செய்திருக்க வேண்டும். ‘சிசிடிவி கேமரா இருக்குல்ல’ என்றும் ஒரு பிட்டைச் சேர்த்துப் போட்டேன்.

ஆனால் ஒன்று. இவ்வளவு பிரச்சினை நடக்கிறது. யாருமே எதுவுமே கண்டுகொள்ளவில்லை. அவரவர் இடத்திலிருந்து பார்க்கிறார்களே தவிர ஒருவரும் குரல் எழுப்பவில்லை. ‘கோயமுத்தூர்க்காரங்க பக்குவமானவங்க கண்ணு’- இப்படித்தான் சொன்னார்கள். என்ன இருந்தாலும் பக்கத்து ஊர் என்ற நினைப்பில் நம்பிக் கொண்டிருந்தேன். அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. இரண்டு பேர் சண்டைப் போட்டுக் கொண்டால் நமக்கு என்ன வந்தது? சண்டையை எண்டர்டெய்ன்மெண்டாக எடுத்துக் கொள்கிறவர்கள்தான் எல்லாப் பக்கமும். 

கோபமாகப் பேசியபடியே வெளியில் வந்துவிட்டேன். பொடனி மீது கூட அடி விழவில்லை என்ற தைரியம் வந்தவுடன்தான் ஓரிடத்தில் கால்கள் நின்றன. படபடப்பே அடங்கவில்லை. மெல்ல எட்டி உள்ளே பார்த்த போது கட்டையன் வேறொரு ஆளிடம் பேசிக் கொண்டிருந்தான். விறுவிறுவென்று தலைமை மேலாளர் அறை வரைக்கும் சென்றுவிட்டேன். அவரிடம் பேசத் தொடங்கிய போது படபடப்புடன் நாக்குக் குழறியது. இப்படியெல்லாம் சண்டையில் நாக்குக் குழறி பல வருடங்கள் ஆகிவிட்டன. 

‘ஒரு புகார் கடிதம் எழுதிக் கொடுங்க’ என்றார்.  

‘எச்சரிச்சு அனுப்புங்க சார்’ என்றேன். எதற்கு தேவையில்லாத வம்பு என்ற தயக்கம்தான்.  ‘அந்த எடத்துல உக்காந்துட்டு இருக்கிறவங்கதான் சார் பேங்க்கோட இமேஜ்’ என்றார். அவர் சொன்னதும் சரிதான். படபடவென்று எழுதிக் கொடுத்துவிட்டு கீழே வந்தேன். கோயமுத்தூர் முகவரியை எழுதாமல் கரட்டடிபாளையத்து முகவரியை எழுதிக் கொடுத்தேன். ஆட்டோவில் ஆள் அனுப்பினால் கூட வீடு பூட்டிக் கிடக்கும். 

‘மே ஐ ஹெல்ப் யூ’ இடத்தில் அவன் அமர்ந்திருக்கவில்லையென்றால் அவனிடம் ஏன் செல்லப் போகிறேன்? கேட்டதும் எக்குத்தப்பாக எதுவுமில்லை. பக்கத்தில் இருக்கும் கிளை எது என்று கேட்டதற்கே கோபம் வந்துவிடும் என்றால் அவன் ஏன் அந்த இடத்தில் அமர வேண்டும்?

கீழே வரும் போது ‘சீஃப் மேனேஜர்கிட்ட ஒரு புகார் கொடுத்துட்டேன்..பார்த்து பேசிக்குங்க’ என்றேன். விக்கித்தது போலப் பார்த்தார். மந்திரிகள் புகார் அளிக்கவெல்லாம் மாட்டார்கள். நம்மால் அதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்? நிற்காமல் வந்துவிட்டேன்.

ஐசிஐசிஐக்கும், ஹெச்.டி.எஃப்.சிக்கும் சென்று வந்தால் ஸ்டேட் பேங்க் மாதிரியான தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் தெனாவெட்டைப் புரிந்து கொள்ள முடியும். தனியார் வங்கிகளில் வெண்ணெய் கட்டியை வெட்டுவது போலத்தான் பேசுகிறார்கள். வார்த்தைகள் வழுக்கும்.

அரசு நிறுவனங்கள் வலுவாக இருக்க வேண்டும் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. ஆனால் அடி விழுந்துவிடுமோ என்று பயப்பட வைக்கிற அலுவலங்களில் அடுத்த முறை எப்படி நுழைய முடியும்? 

வேணியிடம் சொல்லலாம்தான். ‘நாற்பது வயசுல நாய்க்குணம்’ என்று ஏற்கனவே அம்மா அவளிடம் பாடம் போட்டு வைத்திருக்கிறார். கோபத்தைக் குறைக்கிறேன் பேர்வழி என்று சோற்றில் உப்பைக் குறைத்துவிடுவார்கள். 

பவானியும் சத்தியமங்கலமும்

பவானி ஆற்றின் நீளம் 217 கிலோமீட்டர். மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடங்கி கோவை மாவட்டத்தின் மேட்டுப்பாளையத்தில் சமவெளியை அடைந்து பவானிசாகர், சத்தியமங்கலம், கோபிச்செட்டிபாளையம் வழியாகச் சென்று பவானி கூடுதுறையில் காவிரியாற்றில் கலக்கிறது. நதியின் மீது இரண்டு அணைகள் இருக்கின்றன- பவானிசாகர் அணை, கொடிவேரி அணை. பெரும்பாலும், எல்லாக் காலத்திலும் சிறு ஓடை அளவிற்கேனும்  வற்றாமல் ஓடிக் கொண்டிருக்கும் நதிகளில் ஒன்று. நீர்தான் ஓடிக் கொண்டிருக்கிறதே தவிர பாதிப்பு இல்லாமல் இல்லை. மனிதர்களால் ஏதேனுமொரு வகையில் பாதிப்பு உண்டாவது தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.

விஸ்கோஸ் என்ற நிறுவனம் சிறுமுகை என்ற இடத்தில் கழிவு நீரை எந்தவிதச் சுத்திகரிப்புமில்லாமல் அப்படியே ஆற்றில் கலக்கியது. மாசடைந்து கொண்டிருந்த நதியைக் காக்க பல்வேறு அமைப்புகள் களமிறங்கின. பவானி நதி நீர் கூட்டமைப்பும் அதன் தோழமை அமைப்புகளும் போராட்டங்களைத் தீவிரமாக முன்னெடுத்து வழக்கு நடத்தி ஆலையை மூடச் செய்தார்கள். நீண்டகாலப் போராட்டம் அது. ஆனால் விஸ்கோஸோடு அந்த நதிக்கான ஆபத்து முற்றாக நீங்கிவிடவில்லை. காகித ஆலைகள், சாயப்பட்டறைகள் என வழி நெடுகவும் அந்த நதிக்கு இன்னமும் ஆபத்துதான்.

காகித ஆலைகளில் பல நூறு அடிகளுக்கு ஆழ்துளைக் குழாய்களை அமைத்திருக்கிறார்கள். கண்காணிப்பு இல்லாத சமயங்களில் ஆற்று நீரில் கலப்பதையும், கண்காணிப்பு தீவிரமாகும் போது ஆழ்துளைக் குழாய்களில் இறக்குவதும் வாடிக்கை. இப்படி நீரும் மண்ணும் கசகசத்துக் கிடக்கின்றன. நோய்கள் வராமல் என்ன செய்யும்?


முதலாளிகள்தான் இப்படிச் செய்கிறார்கள் என்றால் இப்பொழுது இன்னொரு ஆபத்தை அரசே உருவாக்குகிறது. சத்தியமங்கலம் நகராட்சியானது நகரம் முழுக்கவும் பாதாளச் சாக்கடைத் திட்டத்தை அமல்படுத்துகிறது. சிறப்பு. ஆனால் அதைச் சுத்திகரிக்கும் நிலையத்தை பவானி ஆற்றங்கரையோரம் அமைத்திருக்கிறார்கள். கடந்த ஒரு மாதத்துக்கு முன்பாக மழை பெய்து கரை வழிய நீர் ஓடிய போது சுத்திகரிப்பு நிலையம் ஆற்றுக்குள் மூழ்கிவிட்டது. என்னவிதமான திட்டமிடல் என்றே புரியவில்லை. அடுத்த ஓரிரு மாதங்களில் பாதாளச் சாக்கடைத் திட்டம் இயங்கத் தொடங்கும் போது இப்படிச் சுத்திகரிப்பு நிலையம் நீரில் மூழ்கும் சூழல் வந்தால் மனிதக் கழிவுகள் அப்படியே ஆற்று நீரில் கலக்காதா? அல்லது நிலையத்தில் அடைப்பு ஏற்படும் போது நகரம் முழுக்கவும் நீர் எதிர்த்து வீடுகளுக்குள் புகாதா?

அரசின் திட்டங்களையும் அதை அமல்படுத்துவர்களைப் பற்றியும் நமக்குத் தெரியாதா என்ன? சுத்திகரிப்பு நிலையத்தை ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் நிறுத்தினால் கணிசமான இலாபம் கிடைக்குமெனில் அதிகாரிகள் அந்த இரண்டு மணி நேரமும் கழிவை அப்படியே ஆற்று நீரில் கலக்கிவிடுவார்கள். இரவு நேரங்களில் இதற்கான சாத்தியங்கள் அதிகம். ஆற்று வழியெங்கும் வாழும் மக்கள் அந்த நீரைத்தான் குடிக்க வேண்டும். காவிரியிலும் அதுதான் கலக்கும்.

தனக்கு நிகழும் எல்லா அநீதிகளுக்கும் அடங்கி ஒடுங்கி மெல்ல மெல்லச் செத்துப் போவதில் நதிகளுக்கு நிகராக வேறு எதுவுமில்லை. ஆதி மனிதனுக்கு தனது கரையில் வாழ்விடம் உருவாக்கிக் கொடுத்த அதே நதியைத்தான் இன்றைக்கு மனிதன் எல்லாவிதத்திலும் பலாத்காரப்படுத்துகிறான். தொழிற்சாலைக்கழிவுகள், மணல் திருட்டு, வரைமுறையற்ற நீர் உறிஞ்சல் என சகலவிதத்திலும் மனிதன் நதிகளைச் சீரழித்துக் கொண்டிருக்கிறான். எந்த நதியாவது எதிர்வினை புரிகிறதா? நதிகளின் இந்தச் சலனமற்ற தன்மைதான் அரசாங்கத்தையும் கூட அசமஞ்சமாக்கிவிடுகிறது. சின்னாபின்னப்படுத்தப்படும் நதிகளின் பட்டியலை எடுத்தால் பவானி நதியானது முதல் பத்து இடங்களில் இருக்கும்.

கொங்கு மண்டல மக்களில் பலருக்கும் இப்படியொரு திட்டம் நடந்து கொண்டிருப்பதே தெரியவில்லை. சில சிறு குழுக்கள் தவிர பெரும்பாலானவர்கள் அமைதியாக இருக்கிறார்கள். ஏற்கனவே பவானி ஆற்றங்கரையிலும் காவிரியின் கரையிலும் வாழ்கிற மக்களுக்கு (குறிப்பாக ஈரோடு மாவட்டம்) புற்று நோய் அதிகம் என்று ஒரு தகவல் ஓடிக் கொண்டிருக்கிறது. இது இன்னமும் நிரூபிக்கப்படாத தரவு. அது எப்படியோ இருக்கட்டும்- நேரடியாக மனிதக் கழிவுகளை ஆற்றில் கலப்பதற்கான எல்லா வாய்ப்புகளையும் உருவாக்கும் போது அதை எப்படி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியும்? இயற்கையை மனசாட்சியற்றுச் சீரழிக்கும் இத்தகைய திட்டங்களை எதிர்த்து பெருந்திரளாக மக்கள் கூட வேண்டும். அவர்களின் எதிர்ப்புகளினால் மட்டுமே எதிர்கால சந்ததியினருக்கும் நாம் அனுபவித்ததில் பாதியையாவது கொடுத்துவிட்டுச் செல்வோம். இல்லையென்றால் நம்மோடு சேர்த்து எல்லாமும் பாழாய் போய்விடும்.

Dec 6, 2018

அகல் விளக்கு

சூப்பர் 20 பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். தெரியாதவர்களுக்காக- சில மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குத் தொடர்ச்சியாக பயிற்சி வகுப்புகளை நடத்துகிறோம். பெரும்பாலும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் போன்ற தகுதி வாய்ந்த பயிற்றுநர்களால் இந்த வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்த வருடம் இருபது மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். இருபது பேருமே சூப்பர் என்பதால், அதுதான் சூப்பர் 20. பயிற்சி வகுப்புகள் தவிர்த்து இந்த வருடம் வழிகாட்டி (Mentor) என்பதையும் சரியாகச் செயல்படுத்த வேண்டும் என்கிற திட்டமிருக்கிறது. ஒவ்வொரு மாணவருக்கும் தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்தும் வழிகாட்டிகளை இணைத்துவிடுவதுதான் திட்டம். 

விண்ணப்பம் அனுப்பிய மாணவர்களை இரண்டு மூன்று கட்டங்களில் வடிகட்டி, நேர்காணல் நடத்தி இறுதிப்பட்டியல் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இந்த மாணவர்களில்  ஒவ்வொருவருக்கும் ஓர் இலக்கு இருக்கிறது. அவர்களது இலக்கினை நாம் மாற்றப் போவதில்லை. தாம் கொண்டிருக்கும் இலக்கினை அடைவதற்கான வாய்ப்புகள் என்ன, இலட்சியத்தை அடைவதற்கான செயல்பாடுகள் என்ன, அதை எப்படி மேற்கொள்வது, சரியான பாதையில் செல்கிறார்களா என்பது போன்ற வழிகாட்டுதலை மட்டுமே நாம் செய்ய வேண்டும். எந்தக் கணத்திலும் மாணவர்கள் துவண்டுவிடாமலும், தமது எண்ணத்திலிருந்து திசை மாறிவிடாமலும் காப்பது மட்டுமே நம் இலக்கு.

கிட்டத்தட்ட அத்தனை மாணவர்களுமே விளிம்பு நிலையில் இருப்பவர்கள்தான். பட்டியலைப் பார்த்தவர்களுக்குப் புரிந்துவிடும். அவர்களது பெற்றோரின் தொழில்/நிலையை கவனித்தால் புரிந்து கொள்ளலாம். விண்ணப்பத்தில் ‘ஏன் இந்த இலக்கை அடைய விரும்புகிறீர்கள்?’ என்று ஒரு கேள்வி இருந்தது. ‘என் குடும்பத்தைப் பசியில்லாமல் காக்க’ என்று ஒரு மாணவன் எழுதியிருந்தான். ஏன் இந்தத் திட்டம் அவசியமானது என்பதை இந்த ஒரு வரி பதில் உணர்த்திவிடும் என நம்புகிறேன். இத்தகைய மாணவர்களுக்கு வழிகாட்டுவது உன்னதமான செயலாக இருக்கும்.

சூப்பர்-20 க்கு இருபது வழிகாட்டிகள் தேவைப்படுகிறார்கள். மாணவர்கள், அவர்கள் படிக்கும் படிப்பு, அவர்களது இலக்கு ஆகியவற்றை பட்டியலில் பார்க்கலாம். இந்தப் பட்டியலில் யாருக்கேனும் வழிகாட்டியாக இருக்க முடியும் எனக் கருதினால் தொடர்பு கொள்ளவும். 


தமக்குத் தகுதிகளும் விருப்பமும் இருப்பினும் ‘இது நமக்கு சரிப்பட்டு வருமா?’ என்று பலருக்கும் தயக்கம் இருக்கும். வழிகாட்டி என்பது எந்தவிதத்திலும் உங்களது தனிப்பட்ட வாழ்க்கையை அல்லது தொழிலைப் பாதிக்காது. அதை நிச்சயமாகச் சொல்ல முடியும். வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் ஒதுக்கினால் போதும். மேற்சொன்னபடி அந்த மாணவர்களுக்கான வழிகாட்டல்களை அளிப்பதன் வழியாகவும் அவர்களது தயாரிப்புகளை சரி பார்ப்பதன் வழியாகவும் அந்த மாணவரின் வாழ்க்கையில் ஒளியேற்ற முடியும். மிகக் குறைந்தபட்ச அர்பணிப்பு இருந்தால் போதும். இதனைச் செய்துவிடலாம். வாரம் ஒரு முறை அலைபேசியில் மாணவர்களுடன் பேச வேண்டும். அவ்வப்பொழுது அந்த மாணவரின் போக்கு குறித்தான தகவல்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். அவ்வளவுதான். ஒரேயொரு விஷயம்- இடையில் மாணவர்களை கைவிட்டுவிடக் கூடாது. மாணவர்கள் தொடக்கத்தில் ஆர்வம் காட்டமாட்டார்கள். நாம்தான் மெல்லப் பேசி அவர்களை உத்வேகப்படுத்த வேண்டும். ‘அவன் பேசவே மாட்டேங்குறான்’ என்று சொல்லி கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவதுதான் வழிகாட்டியில் இருக்கும் ஒரேயொரு பிரச்சினை. 

மற்றபடி, வழிகாட்டியாக இருப்பது ஆத்ம திருப்தியளிக்கும் விஷயம். நாம் செய்யும் இந்தப் பணி மீது சமூகத்தின் ஏதோவொரு மூலையில் இருக்கும் ஒரு குழந்தையை அவையத்து முந்திவிடச் செய்யலாம். வழிகாட்டலாம், வாய்ப்பிருப்பவர்கள் இடையில் ஒரு முறை மாணவரை நேரில் சந்தித்துப் பேசலாம். பெரும்பாலும் பெண் மாணவிகளுக்கு பெண்களையே வழிகாட்டியாக நியமிக்க வேண்டியிருக்கிறது. சிக்கலான காரணம் எதுவுமில்லை- பல சமயங்களில் மாணவர்கள் தங்களது தனிப்பட்ட பிரச்சினைகளை தமது வழிகாட்டியுடன் பகிர விரும்புவதுண்டு. அதனால் அதே பாலினத்தில் வழிகாட்டி இருந்தால் சரியாக இருக்கும்.

ஒன்றை உறுதியாகச் சொல்ல முடியும்- இவர்கள் ஒவ்வொருமே ஏதோவொருவிதத்தில் சிறப்பு வாய்ந்தவர்கள். 

வாய்ப்பிருப்பவர்கள் தங்களது பெயர், படிப்பு, வேலை- எந்த மாணவருக்கு வழிகாட்டியாக இருக்க விரும்புகிறீர்கள், எப்படி அந்த மாணவருக்கு உதவ முடியும் என்ற விவரங்களை மின்னஞ்சலில் அனுப்பி வைக்கவும். ஒரு குழந்தையின் எதிர்காலத்தில் ஒரு சிறு விளக்காக இருப்போம். அது அந்த மாணவரின் தலைமுறையையே கூட நிமிரச் செய்துவிடும்.

To: myvizhiselvi@gmail.com
Cc: vaamanikandan@gmail.com

Dec 4, 2018

எது நல்லா இருக்கும்?

ஒரு காலத்தில்  ‘சி# தான் எதிர்காலம். மற்ற தொழில்நுட்பமெல்லாம் காலி’ என்றார்கள். ஏகப்பட்ட பேர்கள் பயந்து போய் இருட்டு அறையில் முரட்டுக் குத்தாக உருவேற்றிக் கொண்டிருந்தார்கள். ஜாவா படிக்க ஆரம்பித்திருந்தேன். குடி கெட்டுப் போய்விடும் போலிருக்கிறதே என்று அவ்வப்போது சி# - ஐ மேய்ந்து கொண்டிருந்தேன். ஆனால் அப்படியொன்றும் புரட்டிப் போட்டுவிடவில்லை. பத்தோடு பதினொன்று அத்தோடு அதுவும் ஒன்று. அவ்வளவுதான். 

சி# என்றில்லை. பொதுவாகவே தொழில்நுட்பம், ஐடி ஆகியவற்றில் நிறைய உதாரணங்களைச் சொல்லலாம். ‘இனிமேல் இதுதான்’ என்று அவ்வப்பொழுது ஒன்றை அவிழ்த்துவிடுவார்கள். பதினைந்தாண்டுகளுக்கு முன்பாக மெக்கட்ரானிக்ஸ்தான் அடுத்த கத்தை என்றார்கள். அதை நம்பிப் படித்தவர்களிடம் விசாரித்துப் பார்த்தால் தெரியும். இன்றைக்கு தொண்ணூற்றைந்து சதவீதம் பேர் சாஃப்ட்வேருக்குள்தான் காலம் தள்ளிக் கொண்டிருப்பார்கள். அதே போலத்தான் பயோ-டெக்னாலஜி மீது ஒரு கவர்ச்சி இருந்தது. ‘இனி எல்லாமே பயோ டெக்னாலஜிதான்’ என்றார்கள். க்ளோனிங் எல்லாம் வந்துவிட்டது என்று புளகாங்கிதம் அடைந்தார்கள். ஆனால் இன்று வரைக்கும் இந்தியாவில் அதுவும் பெரிய அளவில் சோபிக்கவில்லை. பிரச்சினை படிப்புகளின் மீது எனச் சொல்ல முடியாது. ஆராய்ச்சிக் கூடங்களில் அவற்றுக்கான மரியாதை இருந்து கொண்டுதான் இருக்கும். ஆனால் வேலைச் சந்தையில் புதிய வஸ்துகள் என்னவிதமான தாக்கத்தை உண்டாக்குகின்றன என்பதுதான் முக்கியம். 

மெக்கட்ரானிக்ஸ் ஏன் பெரிய அளவில் எடுபடவில்லை என்று மிக எளிதாகச் சொல்லிவிட முடியும். மெக்கட்ரானிக்ஸ் என்பது மெக்கானிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸைச் சேர்த்துப் படிப்பது. ரோபோடிக்ஸ், தானியங்கி (ஆட்டோமேஷன்) என்பதற்கெல்லாம் எடுபடக்கூடிய படிப்பு அது.

2005 ஆம் ஆண்டு எம்.டெக் மெக்கட்ரானிக்ஸ் முடித்துவிட்டு விஜய் எலெக்ட்ரிக்கல்ஸ் நிறுவனத்தில் சேர்ந்தோம். நிறுவனத்தைப் பற்றிப் புரிந்து கொண்டு எங்கெல்லாம் ஆட்டோமேஷன் செய்ய முடியும், அதற்கு சந்தையில் கிடைக்கக் கூடிய எந்திரங்கள் எவை என்றெல்லாம் ஒரு திட்டமதிப்பீடு செய்து கொடுக்கச் சொன்னார்கள். எங்களுக்கு மேலாக ஒரு முதுநிலை மேலாளர் இருந்தார். கணக்குப் போட்டுப் பார்த்து ‘ஒரு கோடி ரூபாய் ஆகும்’ என்று சொன்னால் ‘ஒரு ஆளுக்கு மாசம் பத்தாயிரம் ரூபாய் கூலி..பத்து ஆட்களை வைத்துச் செய்தாலும் கூட மாசம் ஒரு லட்சம் போதும்...ஒரு கோடி ரூபாய் இருந்தால் பத்து ஆட்களை வைத்துக் கொண்டு நூறு மாசத்துக்கு வேலையைச் செய்துவிடலாம்..வட்டிக் கணக்கு என்ன ஆகும்’ என்பார். இந்தியாவில் ஆட்களுக்குப் பஞ்சமேயில்லை. திருப்பூர்க்காரன் வேலை செய்யத் தயாரில்லை என்றால் மதுரை, புதுக்கோட்டையிலிருந்து வந்து இறங்குவார்கள். அவர்களும் முரண்டு பிடித்தால் இருக்கவே இருக்கிறான் பீகார், ஒரிசாக்காரன். 

நிறுவனங்களின் முதலாளிகள் ROI என்பார்கள். Return Of Investment. அதைக் கணக்குப் பார்த்துவிட்டு ‘இதெல்லாம் வேலைக்கு ஆவாது தம்பி’ என்று சொல்லுகிற நிறுவனங்கள்தான் அதிகம். அதைத் தவறு என்றெல்லாம் சொல்ல முடியாது. அவர்கள் அனுபவஸ்தர்கள். தமது நிறுவனத்தை எப்படி நடத்த வேண்டும் என்று அவர்களுக்குத் தெரியாதா? இருக்கிற போட்டிச் சூழலில் பணத்தை எப்படி பெருக்க வேண்டும் என்றுதான் யோசிப்பார்களே தவிர முடக்கத் தயாராக இருக்கமாட்டார்கள். 

ஒரு தொழில்நுட்பம் சூடு பிடிக்க வேண்டுமானால் அதை நிறுவனங்கள் மனமுவந்து ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அந்த தொழில்நுட்பத்தில் வல்லுநர்களுக்கான தேவை இருக்கும். அதனால்தான் புதிய நுட்பம் ஒன்று சந்தைக்கு வரும் போது அதை தொழில் துறை சார்ந்தவர்கள் எப்படிப் பார்க்கிறார்கள் என்று புரிந்து கொள்ள வேண்டும். கல்வியாளர்களுக்கும் (Academician) தொழிற்துறையினருக்கும் (Industrialist) இடையில் ஏணி வைத்தாலும் எட்டாத தூரம் இருக்கும். அதுவும் இந்தியாவில் இந்த வித்தியாசம் கற்பனையிலும் எட்டாதது. கல்வியாளர்கள் சொல்வதை மட்டும் நம்பினால் மெக்கட்ரானிக்ஸ், பயோ டெக்னாலஜி மாதிரிதான் இருக்கும்.

பயோ டெக்னாலஜி மோசமான படிப்பு என்று சொல்ல முடியுமா என்ன? நிச்சயம் அற்புதமான படிப்புதான். க்ளோனிங் மட்டுமே பயோ டெக்னாலஜி இல்லை.  பயோ-ஆயுதங்களுக்கு எதிர் மருந்து தயாரிப்பது மட்டுமே அதன் வீச்சு இல்லை. நம் தேவைகளுக்கு ஏற்ப உயிரி தொழில்நுட்பத்தை வைத்துக் கொண்டு ஏகப்பட்ட வேலைகளைச் செய்ய முடியும். உதாரணத்துக்கு ஒன்றைச் சுட்டிக் காட்டலாம். இந்திய ரயில்வேயின் மிகப்பெரிய சவால்களில் பிரதானமானது என்று எதைக் கருதுகிறீர்கள்? கழிவறையைத்தான் சொல்ல வேண்டும். பல ரயில்களிலும் கழிவுகள் அப்படியே தண்டவாளத்தில்தான் கொட்டுகிறது. உலகின் மிகப்பெரிய ரயில்வே நம்முடையதுதான். ஆனால் இந்த நாற்றம் பிடித்த பிரச்சினைக்கு இப்பொழுது வரைக்கும் முழுமையான தீர்வு இல்லை. கடந்த சில ஆண்டுகளாகத்தான் பயோ டாய்லெட்டை சோதனை முறையில் செயல்படுத்தி வருகிறார்கள். அண்டார்டிக்கா பாக்டீரியாவின் மூலமாக மனிதக் கழிவுகளை மீத்தேன் வாயுவாகவும், நீராகவும் பிரித்துவிடுகிற நுட்பம் அது. இதை கடந்த பல வருடங்களுக்கு முன்பாகவே இந்திய ரயில்வே துறை முயன்று பார்த்திருக்க வேண்டும். ஆனால் அவர்களுக்கு இவ்வளவு ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது. 

‘ஏன் இவ்வளவு வருடம் தேவைப்பட்டது’ என்று கேட்டால் அவர்களின் முன்னுரிமைகள் வேறு பலவாக இருந்தன. இந்த முன்னுரிமைகள்தான் கள நிலவரம். இதனைப் புரிந்து கொள்வதுதான் அவசியம். தொழிற்துறையினரின் நோக்கம், முன்னுரிமைகள் வேறாக இருக்கக் கூடும். ‘இதை அப்புறம் பார்த்துக்கலாம்’ என்று அவர்கள் ஒதுக்கி வைத்தால் அந்தத் தொழில்நுட்பத்தில் வேலை வாய்ப்பு உருவாவதற்கான சாத்தியங்கள் மிகக் குறைவாகவே இருக்கும். ஆனால் கல்வியாளர்கள் இருபது வருடங்களுக்கு முன்பாகவே ‘அடுத்தது பயோ டெக்னாலஜிதான்’ என்று குரல் எழுப்ப ஆரம்பித்திருந்தார்கள். நம்பிப் படித்தவர்களில் பலரும் வேறு துறைகளுக்குள் நுழைய வேண்டியிருந்தது.

பொதுவாகவே வேறொரு தொழில்நுட்பத்துக்கு மாறுகிறவர்கள், வித்தியாசமான படிப்பைத் தேர்ந்தெடுக்க விரும்புகிறவர்கள் எதையுமே கல்வியாளர்கள் மற்றும் ஆலோசகர்கள் சொல்வதை அப்படியே நம்புவதைவிடவும் தொழில் சார்ந்தவர்களிடம் பேசுவதன் மூலமாகவே முடிவு செய்ய வேண்டும். ஃபேன்ஸியான நுட்பங்களைத் அறிவுக்காகத் தெரிந்து கொள்வதற்கு வேண்டுமானால் படிக்கலாமே தவிர அதில் வேலை வாய்ப்பு கிடைக்குமா என்பதை தீர ஆலோசிப்பதன் மூலமாகவே முடிவுக்கு வர வேண்டும். 

மேற்சொன்ன ரோபோடிக்ஸ் உதாரணத்தையே எடுத்துக் கொள்ளலாம். ‘ஒரு கோடி ரூபாய்க்கு ரோபோட் செஞ்சு கொடுத்தா வாங்கிக்குவீங்களா’ என்று முதலாளி ஒருவரைக் கேட்டுப் பாருங்கள். அவர் கட்டாயமாக வேண்டாம் என்றுதான் சொல்வார். அதுவே பத்து லட்ச ரூபாய் என்றால் அவர் சரி என்று சொல்லக் கூடும். ஆக, இன்றைய சூழலில் ரோபோடிக்ஸின் வேலைச் சந்தை மதிப்பு அவ்வளவுதான். நிறைய ரோபோக்கள் விற்றால் நிறைய ரோபோடிக்ஸ் பொறியாளருக்கான தேவை இருக்கும். குறைந்த அளவிலான ரோபோக்கள் விற்றால் குறைந்த அளவிலான ஆட்களுக்கு மட்டுமே தேவை இருக்கும். இதுதான் நிதர்சனம். இதுதான் வேலைச் சந்தைக்கான அடிப்படை. ‘ரோபோடிக்ஸ் படிச்சவுடனே உனக்கு வேலை கிடைச்சுடும்’ என்று யாராவது சொன்னால் அவருக்கு நிலவரம் தெரியவில்லை என்று அர்த்தம்.

ரோபோடிக்ஸ் மட்டுமில்லை. எந்தவொரு நுட்பத்துக்குமான வேலைச் சந்தைக்கு இதுதான் அடிப்படை. இதை வைத்துத்தான் கணக்குப் போட வேண்டும். முடிவும் எடுக்க வேண்டும்.

Dec 1, 2018

அற்புத மனிதர்கள்

ஒன்றிரண்டு நாட்களுக்கு முன்பாக சென்னை ட்ரெக்கிங் குழுவினர் நாகம்மாள் என்ற அம்மையாரைப் பற்றி எழுதியிருந்தார்கள். கண் பார்வையற்ற, ஆதரவுக்கு யாருமில்லாத பெண்மணி. கஜா புயலில் அந்த அம்மையாரின் குடிசையும் சிதைந்து போயிருந்தது. வாட்ஸாப் குழுவில் ‘அடுத்த வேலை நாகம்மாளின் குடிசையை தயார் செய்வதுதான்’ என்று பீட்டர் எழுதியிருந்தார். இன்றைக்கு முடித்துவிட்டார்கள். உள்ளூர் ஆட்களின் உதவியுடன் சென்னை ட்ரெக்கிங் குழுவின் நண்பர்கள் இணைந்து குடிசையை அட்டகாசமாகச் செய்துவிட்டார்கள்.

இதைவிடவும் சந்தோஷப்பட கூடிய தருணம் என்று ஏதாவது இருக்கிறதா? 

புயல் வீசி ஓய்ந்து, கால் நீட்ட இருந்த ஒற்றை குடிசையையும் இழந்து, நிராதரவான பெருவெளியில் அமர்ந்திருந்த அந்த பாட்டியின் மனதில் என்னவெல்லாம் ஓடியிருக்கும்? இனி யார் நம்மைக் காக்கப் போகிறார்கள்? அடித்த புயல் நம்மையும் சேர்த்து வாரிச்சுருட்டிச் சென்றிருக்கக் கூடாதா என்ற எண்ணம் வந்திருக்காதா என்ன? எல்லாவற்றையும் இழந்து நின்ற பாட்டியின் கரங்களை வெதுவெதுப்பாக பற்றிக் கொள்ள யார் இவர்களை அனுப்பி வைத்தார்கள்? இந்த உலகம் இயங்குதலுக்கான ஆதாரப்புள்ளியே இந்த அன்பும் கனிவும்தானே?

ஒரு கணம் அமைதியாக அமர்ந்தால் எவ்வளவு வினாக்கள் தோன்றுகின்றன? தென் தமிழகத்தின் ஏதோவொரு மூலையில் கிழிந்த கந்தலெனக் கிடக்கும் ஒரு மூதாட்டிக்கு சம்பந்தமேயில்லாத மனிதர்கள் கைகொடுக்க வேண்டும் எங்கே விதிக்கப்பட்டிருக்கிறது? 

எழும்புகிற கேள்விகளில் மனம் சஞ்சலமடைந்து கிடக்கிறது. அடுத்த கனமே சலனமற்றும் அடங்கி ஒடுங்கிறது. முந்தைய படத்தையும் இன்று பீட்டர் அனுப்பியிருந்த படங்களையும் பார்த்த போது கண்ணில் நீர் கசிந்துவிட்டது. இலக்கியம் படி; அரசியல் பேசு; தொழில்நுட்பம் பழகு என்று யாராவது எங்கேயாவது நம்மை திசை மாற்றிக் கொண்டேதான் இருப்பார்கள். ஆனால் வாழ்தலின் அர்த்தம் மனிதம் மட்டும்தான். அதை மட்டும்தான் எதிர்கொள்ளும் ஒவ்வொரு மனிதனும் உணர்த்திச் செல்கிறான். மனிதம் தாண்டி பெரியது எதுவுமில்லை.  

இருபத்து நான்கு லட்சம்

நவம்பர் 19 தொடங்கி 30 ஆம் தேதி வரை சுமார் இருபத்து நான்கு லட்சம் ரூபாய் கஜா நிவாரணத்திற்கென நன்கொடையாக வந்திருக்கிறது. அவற்றில் தார்பாலின் உள்ளிட்ட பொருட்களை நான்கேகால் லட்சத்திற்கு வாங்கியிருக்கிறோம். மீதமிருக்கும் தொகையானது மறு நிர்மாணப் பணிகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளப்படும்.

மறு நிர்மாணப் பணியாக என்ன செய்து தருவது என ஆலோசிக்கப்பட்டது. பள்ளிக்கூடம், அங்கன்வாடி ஆகியவற்றை சரி செய்து தரலாம் என்றெல்லாம் ஆலோசனை செய்த பிறகு எந்தவிதமான ஆதரவுமற்ற குடிசைவாசிகள் இழந்த குடிசைகளை மீண்டும் கட்டித் தரலாம் என்ற முடிவு செய்யப்பட்டது. பீட்டரும் அவரது குழுவினரும் ஒவ்வொரு பகுதியாக கள ஆய்வு செய்து பயனாளிகளை அடையாளம் கண்டறிந்து கொண்டிருக்கிறார்கள். இதுவரையிலும் சுமார் ஐம்பது பயனாளிகள் கண்டறியப்பட்டிருக்கிறார்கள். 
இனிமேல் கஜா நிவாரணப்பணிகளுக்கென நிசப்தம் அறக்கட்டளைக்கு பணம் அனுப்ப வேண்டாம். இருக்கும் நிதியை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என்தால் முதற்கட்டமாக இந்தத் தொகையை சரியான விதத்தில் பயன்படுத்தலாம். ஒருவேளை சில மாதங்களுக்குப் பிறகும் தேவையிருப்பின் அதற்கேற்ப அந்தத் தருணத்தில் முடிவு செய்து கொள்ளலாம்.  

நன்கொடையளித்த அனைவருக்கும் நன்றி. நன்கொடைக்கான ரசீது அனுப்பச் சொல்லி சிலர் கேட்டிருந்தார்கள். அப்பொழுது சாத்தியமாகவில்லை. மின்னஞ்சலைத் தேடியெடுத்து ரசீது அனுப்பி வைத்துவிடுகிறேன். ஒருவேளை யாரேனும் விடுபட்டுப் போயிருந்தால் வருத்தப்படாமல் ஒரு நினைவூட்டல் அனுப்பி வைக்கவும்.

vaamanikandan@gmail.com

பீட்டரும் சென்னை ட்ரெக்கிங் க்ளப்பும் தமிழகத்துக்குக் கிடைத்த வரம் என்றுதான் சொல்ல வேண்டும். எந்த விளம்பரமுமில்லாமல் வெறித்தனமாக அடுத்தவர்களுக்கு உழைக்கிறார்கள். பீட்டர் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். கிட்டத்தட்ட தமிழன் ஆகிவிட்டவர். அந்த நீல நிற டீஷர்ட்டும், அரைக்கால் ட்ரவுசரும் தவிர வேறு எந்த ஆடையிலும் அவரைப் பார்த்ததாக நினைவில் இல்லை. அவருடன் நேரம் காலம் பார்க்காமல் உழைக்க பரட்டைத் தலையும், தாடியுமாக சேறிலும் மண்ணிலும் எந்தச் சங்கோஜமுமில்லாமல் வேலை செய்யும் நூற்றுக் கணக்கான இளைஞர்கள். அடுத்த வேலை எங்கே சாப்பிடுவது, எங்கே தூங்குவது என்றெல்லாம் அலட்டிக் கொள்ளாத மனிதர்கள். அவர்களைப் பற்றி எவ்வளவோ எழுதலாம். என்ன எழுதினாலும் லட்சியமே செய்யாமல் அடுத்த வேலையைப் பார்க்கப் போய்விடுவார்கள். 

வரவு செலவில் ஏதேனும் சந்தேகமிருப்பின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். பயன்படுத்தப்பட்ட தொகைக்கான ரசீதை சென்னை ட்ரெக்கிங் க்ளப் பொறுப்பாளர்கள் மூலமாகப் பெற்று மாத இறுதியில் நிசப்தம் தளத்தில் பதிவு செய்துவிடுகிறேன்.

Trust Opening Balance: Rs.15,76,639.18
Total Donations received: Rs.23,81,252.18 (From 11th Nov to 30th Nov)
Materials Purchased: Rs.4,09,683.00
(Another Rs. 25,000 yet to be debited)
Remaining Amount: Rs. 19,71,569.18 (For Gaja Relief)முந்தைய பதிவு : இணைப்பு 1
சென்னை ட்ரெக்கிங் க்ளப்:  இணைப்பு 2