Nov 9, 2018

இலவசம்தான்யா நாட்டையே கெடுத்துச்சு...

‘இலவசத்தைக் கொடுத்துக் கொடுத்து நாட்டையே சீரழிச்சு வெச்சுட்டாங்க’ இந்த வசனத்தை யார் ஆரம்பித்து வைத்தது என்று தெரியவில்லை. அரைவேக்காடுகள் இதையே பிடித்துக் கொண்டார்கள். 

வாய்க்கால் வழியோடும் நீரை அள்ளிக் குடிப்பது போல சில இலவசங்களை அனுபவித்திருக்கிறேன். சட்டென்று இலவச பஸ் பாஸ் நினைவுக்கு வருகிறது. பள்ளிப்படிப்பு கூட இலவசம்தான். சுயபுராணம் அவசியமில்லை. ஆனால் யோசித்துப் பார்த்தால், நேரடியாகவோ அல்லது மறைமுகவாகவோ தமிழகத்தில் பெரும்பாலான கிராமத்தவர்கள்/நடுத்தர ஏழை மக்கள் இலவசத்தை ஏதாவதொரு வகையில் அனுபவித்திருப்பார்கள் என்று உறுதியாகச் சொல்ல முடியும். இப்படி அனுபவித்து மேலே வந்தவர்களே ‘இலவசம்தான்யா நாட்டையே கெடுத்துச்சு’ என்கிறார்கள். அதுவொரு ஃபேஷன்.

இலவசம் என்பதில் நூறு சதவீதம் சரியான தன்மை இருக்கிறது எனச் சொல்ல முடியாது. குளறுபடிகள் இருக்கின்றன. இலவசத்தை அரசியலாக்கியிருக்கிறார்கள். ‘ஆதரவற்றோர் நிதி வாங்கணும்ன்னா கூட கட்சியின் உறுப்பினர் அட்டை அவசியம்’ என்று பேசுகிற அயோக்கிய அரசியல்வாதிகள் இருக்கிறார்கள். இலவசம் என்பதனை வாக்குக்கான உபாயமாக்கியிருக்கிறார்கள். ஆனால் இத்தகைய குறைகளையெல்லாம் மட்டும் தரவுகளாக வைத்துக் கொண்டு பொதுப்படையாகப் பேசினால் அரைவேக்காடு என்றுதான் சொல்ல வேண்டும். 

சில நாட்களுக்கு முன்பாக தர்மபுரிப் பக்கம் ஒருவரைப் பார்க்க வேண்டியிருந்தது. மலைகளுக்குள் ஒரு கிராமம் அது. வேறொரு நண்பர் பைக்கில் அழைத்துக் கொண்டு போனார். கடுமையான வறட்சி நிலவுகிற பகுதி. ஒரு கிராமத்தின் ஆலமர நிழலில் இளநீர் வைத்திருந்தார் ஒருவர். நான்கு இளநீர் மட்டும்தான். அநேகமாக ஒரு நாளைக்கு அவ்வளவுதான் வியாபாரம் ஆகும்.

அமர்ந்து பேசிக் கொண்டிருந்த போது ஒரு ஆயாவைக் காட்டினார். தொண்ணூறு வயதிருக்கும். கூனிக் குறுகி படுத்திருந்தது. மாதமானால் ஆதரவற்றோர் நிதி ஆயிரம் ரூபாய் வருகிறது. அதை வாங்கி உயிரை ஓட்டிக் கொண்டிருக்கிறது. கிழிந்த ஆடையைப் போலக் கிடந்த அந்த ஆயாவை யார் பார்த்தாலும் மனம் நெகிழ்ந்துவிடும். அதே ஆதரவற்றோர் நிதியை வாங்குகிற வேறு ஆட்களையும் தெரியும். மகன் அரசு அதிகாரியாக இருப்பான். ஆனால் அம்மாவோ அப்பாவோ அரசு நிதி வாங்கிக் கொண்டிருப்பார்கள். ‘இவங்களுக்கு என்ன கேடு?’ என்று இலவசத்தை விமர்சிக்கும் நம் கண்களுக்கு அந்த தர்மபுரி ஆயா எந்தக் காலத்திலும் புலப்படாது என்பதுதான் துரதிர்ஷ்டம். ஒருவன் அரசாங்கத்துப் பணத்தைத் திருடுகிறான் என்பதற்காக அந்த ஆயாவுக்கும் சேர்த்து ஆதரவற்றோர் நிதியைக் கொடுக்கக் கூடாது என்பது எந்தவிதத்தில் நியாயம் ஆகும்?

அதே தர்மபுரியில்தான் கிராமங்களில் ஆண்களைச் சர்வசாதாரணமாக பகல் நேரத்தில் பார்க்க முடிந்தது. வேலைக்குப் போகாத மனிதர்கள். தர்மபுரியில் மட்டுமில்லை- பல ஊர்களிலும் இதுதான் நிலைமை. ‘எங்கே சார் வேலையிருக்குது’ என்கிறார்கள். பெங்களூரிலும் சென்னையிலும் அமர்ந்து வசனம் எழுதினால் ‘இலவசம் மட்டுமில்லைன்னா வேலைக்கு போய்டுவாங்க’ என்று எழுதலாம். எத்தனை கிராமங்களில் வருடத்தின் அனைத்து நாட்களிலும் வேலை இருக்கிறது என்பது கிராமத்து ஆட்களுக்குத்தான் தெரியும். எதையும் இட்டுக்கட்டிச் சொல்லவில்லை. மிகப் பின் தங்கிய கிராமத்தின் மளிகைக்கடைக்காரர் ‘எம்பொண்ணு சென்னையில் இருக்கா’ என்று மிகச் சாதாரணமாகச் சொல்கிறார். எப்படி சாத்தியமானது? வேலையே இல்லாத கிராமத்திலிருந்து எப்படி ஒருவன் தலையெடுக்கிறான்? ‘சோத்தையும் போட்டு புள்ளையையும் பார்த்துக்கிறாங்க; வீட்ல இருக்கிறதுக்கு பதிலா பள்ளிக்கூடம் போகட்டும்’ என்று நினைக்கிற பெற்றோரின் சதவீதம் இங்கு அதிகம். அப்படித்தான் பலருக்கும் பள்ளிக்கூடம் அறிமுகமாகிறது.

‘பை வாங்கக் காசு கொடு; புஸ்தகம் வாங்கக் காசு கொடு; செருப்பு வாங்கக் காசு கொடுன்னு கேட்கிறதா இருந்தா நீ பள்ளிக்கூடமே போக வேண்டாம்’ என்று சொல்கிற பெற்றோர்கள் இல்லையென்று நினைக்கிறீர்களா? அப்படி நினைத்தால் உங்களுக்கு நிதர்சனத்தைப் பற்றிய எந்தப் புரிதலுமில்லை என்று அர்த்தம். அப்படிப்பட்ட பெற்றோரின் குழந்தை பள்ளியில் படிக்க வேண்டுமானால் எல்லாவற்றையும் இலவசமாகத்தான் கொடுத்தாக வேண்டும். 

‘பத்தாவது முடிச்சுட்டா தாலிக்குத் தங்கம் கிடைக்கும் என்று நினைப்பவர்கள் எவ்வளவு பேர் என்று யோசித்திருக்கிறீர்களா? ‘இந்த ஒரு வருஷம் படிச்சா லேப்டாப் கிடைக்கும்’ என்பார்கள். ‘சைக்கிள் கிடைக்கும்’ என்பார்கள்.  இப்படி ஏதாவதொரு இலவசத்துக்கு ஆசைப்பட்டு ஒரு வருடப் படிப்பைத் தொடர்கிற மாணவனோ மாணவியோ பள்ளிப்படிப்பை வெற்றிகரமாக முடித்துக் கல்லூரியில் சேர்வது விபத்து என்று கருதினால் அது உங்களின் புரிதலில் இருக்கும் பிழை. ‘நூத்துல ஒருத்தன்தான் அப்படி மேலே வருவான்’ என்று சாதாரணமாகச் சொல்லிவிடலாம். தொண்ணூற்றொன்பது பதராகப் போனாலும் ஒன்று மணியானதே என்று சந்தோஷப்பட வேண்டும் என்பதுதான் சரியான அணுகுமுறை. 

குவாரியில் கல் உடைக்கும் பெற்றோரின் குழந்தை கல்லூரி வரைக்கும் போய் காவல்துறையில் பணியில் சேர்ந்ததை நேரடியாகப் பார்த்திருக்கிறேன். ஒய்யல், வாழை மாதிரியான சில அமைப்புகள் கிராமங்களிலும் நரிக்குறவர் மாதிரியான விளிம்புநிலை மக்களிடத்தும் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் விசாரித்துப் பார்த்தால் தெரியும். அவன் படிக்கிறான், வேலைக்குப் போகிறான் என்பது இரண்டாம்பட்சம். முழுமையாக எழுதப்படிக்கத் தெரிந்தவன் ஆகிவிடுகிறான்.  அது பெரிய பலனில்லையா? இனிமேல் இங்கு கல்வி இலவசமில்லை. சோறு இலவசமில்லை என்று சொல்லிப் பாருங்கள். ‘படிச்சுக் கிழிச்சது போதும்; வேலைக்கு போகட்டும்’ என்று தள்ளுகிற பெற்றோர்தான் கணிசமாக இருப்பார்கள். 

இதையெல்லாம் சொன்னால் கல்வி, சோறு எல்லாம் இலவசமாகக் கொடுப்பதில் பிரச்சினையில்லை. மிக்ஸி, கிரைண்டர், டிவியெல்லாம் அவசியமா? என்று கிளம்பிவிடுவார்கள். கூலி வேலைக்குச் செல்கிற பெண்கள் காலையில் ஆறு மணிக்கு சோறாக்கி வைத்துவிட்டு தோட்டத்தில் இருப்பார்கள். அந்தப் பெண்களிடம் விசாரிக்க வேண்டும். கிரைண்டர் பிரையோஜனமாக இருக்கிறதா? மிக்ஸியைப் பயன்படுத்துகிறீர்களா? என்றெல்லாம். பத்து மணிக்கு ஐடி நிறுவனத்துக்கு வேலைக்குச் செல்வதற்காக எட்டு மணிக்கு எழுந்து சாண்ட்விச் சாப்பிட்டுவிட்டுக் கிளம்புகிறவர்களுக்கு இதன் பலன்கள் புரியுமா என்று தெரியவில்லை.

‘இந்தப் பக்கம் இலவசத்தை வாங்கி வித்துட்டு அடுத்த பக்கம் டாஸ்மாக்ல குடிக்க போய்டுறான்’ என்பதும் ஒரு பாப்புலர் டயலாக். இப்படி நம்முடைய கண்களுக்குத் தவறுகள் மட்டுமேதான் தெரியும். திமிரெடுத்தவன் கைகளுக்கு போகிற இலவசங்களை மட்டும்தான் விமர்சிப்போம். ஆனால் அதே இலவசத்தை வாங்குகிற எளிய மனிதர்கள் எல்லாப் பக்கமும் இருக்கிறார்கள். அவர்கள் தரப்பு நியாயத்தை ‘பன்ச்’சாக எழுதினால் கைதட்டு கிடைக்காது அல்லவா? விட்டுவிடுவோம்.

எல்லாவற்றிலும் குறைகள் இருக்கத்தான் செய்யும். அதுவும் இவ்வளவு நெரிசல் மிகுந்த தேசத்தில், அரசியல் என்பதே வியாபாரமாகிவிட்ட காலத்தில், அரசாங்கம் பெரும்பாலான மக்களை மனதில் வைத்துக் கொண்டு சில திட்டங்களை நிறைவேற்றும் போது குறைகள் அதிகமாகத்தான் இருக்கும். இலவசப் பொருட்களுக்கான டெண்டர் விடுவதில் தொடங்கி டெண்டரை எடுத்தவனிடம் கமிஷன் வாங்குவது வரை ஏகப்பட தில்லாலங்கடி வேலைகள் இருக்கின்றன. மறுக்கவில்லை. அதே சமயம் இந்தச் சமூகத்தின் இண்டு இடுக்குகளைப் புரிந்து கொண்டு குறைகளை நிவர்த்தி செய்வதற்கான சாத்தியங்களை முன்வைக்கலாம். அதைவிட்டுவிட்டு ‘இலவசம்தான் நாட்டைக் கெடுக்குது’ என்று வாட்ஸாப்பில் வருவதைப் பார்த்துப் பேசிக் கொண்டிருந்தால் அதைவிட முட்டாள்த்தனம் எதுவும் இருக்க முடியாது.

18 எதிர் சப்தங்கள்:

MURUGAN RD said...

எனக்கு தெரிஞ்சி முதலில் ஆரம்பிச்சி இப்ப வரைக்கும் இலவசம் கொடுத்து கொடுத்து நாட்டை குட்டிசுவராக்கிட்டாங்கன்னு தொடர்ந்து குலைத்துக்கொண்டிருப்பது உரைகல்லுதான்,,, அப்புறம் துக்கு ளக்கு ராமசாமி வகையறாதான்,,,
அவங்கள விமர்சித்தா ஆண்டி இந்தியன் ஆயா இந்தியன்னு ஏதாவது சொல்லிடுவாங்களே,,,

Anonymous said...

இதைத்தான் பொதுப்புத்தி என்பார்கள். ஒரு பொய்ய ஒருத்தன் சொன்னா அது பொய். அதுவே பத்து இருபது பேர் சொன்னா - உண்மையா இருக்குமோனு சந்தேகம் வரும்...ஒரு அம்பது பேர் சொன்னா அது உண்மைதான்.

Hari Prasad M said...

நல்ல பதிவு. உண்மையை / நிதர்சனத்தை உரக்க சொல்லும் பதிவு !!!

Gopalakrishnan P said...

ஆஹா.. இலவசமாக கொடுப்பதில் உள்ள உண்மையான, நியாயமான காரணங்களை முழுவதும் புரிந்து கொள்ள உதவும் ஒரு நல்ல பதிவு. மற்றபடி தில்லாலங்கடி கூத்துக்கள் தான் மேம்போக்காக தெரிந்து இருந்தது. வாழ்க வளமுடன்

சேக்காளி said...

//தொண்ணூற்றொன்பது பதராகப் போனாலும் ஒன்று மணியானதே என்று சந்தோஷப்பட வேண்டும் //
ம்

Anonymous said...

Thank you for this article.

muthu said...

நிதர்சனமான உண்மை. இலவசங்கள் பலருக்கு உயிர்நாடி. ஆனால் அரசியல் பித்தகர்களுக்கும், அதிகார மையத்தில் இருப்போருக்கும் ஒரு கேவலமான சம்பாத்தியம். பேனா பிடித்தவன் எல்லாம் வசனகர்த்தா ஆனால் நடக்கும் துரதிர்ஷ்டம். மக்களின் மனங்களை அரியாதவன் அரிதாரம் பூசுவது பிழைப்புக்கு மட்டுமே, சமூக நலத்துக்கு அல்ல.

நாடோடிப் பையன் said...

This is an interesting alternative view point to popular belief. Thanks for calling out how the freebie schemes are helping poor and downtrodden people.

Anonymous said...

ஆட்சியாளர்கள் வரிப்பணத்திலிருதே தருகிறார்கள். வாங்கும் மக்கள் நன்றி மறக்காமல் ஓட்டளிக்கிறார்கள். வரிசெலுத்வேரரது குறைகள் கவனிக்கப்படுவதில்லை. இலவச அரிசி பெறும் ஆட்டேர ஓட்டுனர் அரசின் கட்டணத்திற்கு பணிவதில்லை.

Anonymous said...

Good Article. Every time someone talks about reservation and other policies about people in need - we wish they have seen reality like you mention here. My feeling is - this is similar to 1000 criminals may roam free but should not punish one innocent.

Kannan Kabila said...

இருபது கிலோ இலவச அரிசி பெரும்பாலோர் கோழிக்குத் தீவனமாக போட்டாலும்...
பசியுடன் தூங்கும் நிலைமை யாருக்கும் இல்லாமல் காக்கிறது.
லட்சங்களில் அரசு ஊதியம் பெறுவோரே இலவசங்களுக்கு கையூட்டுக்கு கை நீட்டக் கூசாத போது இல்லாதவர்களைப் பரிகசிப்பது தவறே.

Hari Prada’s M said...

Similar article is published in today’s Tamil Hindu:
https://tamil.thehindu.com/opinion/columns/article25450988.ece?utm_source=HP-RT&utm_medium=hprt-most-read

Selvaraj said...

உணர்ச்சிவசப்பட்டு ஒருபக்கத்தை மட்டும் எழுதியிருக்கிறீரகள்

இலவச பஸ்பாஸ், இலவச கல்வி, இலவச மதிய உணவு, இலவச சீருடைகள், இலவச மடிக்கணினி, மிதிவண்டி, இலவச ரேஷன் அரிசி, முதியோர் உதவித்தொகை, தாலிக்கு தங்கம், காப்பீடு இவை அனைத்தும் தேவை அத்தியாவசியம். இதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை. இங்கு நாம் புரிந்துகொள்ள வேண்டியது நம்மை ஆள்பவர்கள் இலவசங்களை எதற்காக பயன்படுத்துகிறார்கள் என்றுதான்.
நமது வறுமையை, நமது இயலாமையை பயன்படுத்தி தேர்தலில் ஓட்டுக்களை பெறுவதற்கான ஒரு பொருளியல் ஆயுதமாகவே ‘இலவசங்களை’ அரசியல்வாதிகள் பயன்படுத்துவதுதான் நிதர்சனமான உண்மை. ஐந்துவருடங்களாக கோடிகளை கொள்ளையடித்து குவித்துவிட்டு தாங்கள் செய்யும் எல்லா ஊழல்களையும் மறைப்பதற்காக இதை ஒரு தேர்தல் தந்திரமாக பயன்படுத்துகிறார்கள்.
1. சமீபத்தில் நீங்களே ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்தீர்கள் 'இவ்வளவு மழை பெய்தபிறகும் அணைகள் நிரம்பிவழிந்தபிறகும் பெரும்பாலான விவசாய நிலத்திற்கு தண்ணீர் வரவில்லை' ஏனென்று பொதுப்பணித்துறையில் விசாரித்தால் 'மதகுகளை தூர்வாரி பராமரிக்கவில்லை மீறி தண்ணீரை திறந்துவிட்டால் மதகுகள் உடைந்துவிடும் என்று அச்சப்பட்டு தண்ணீர் திறந்துவிடவில்லையென்று. தூர்வாரியதாக கணக்கு காட்டி பணத்தை ஏற்கனவே கொள்ளையடித்துவிட்டார்கள். இங்கு பாசனத்திற்கு தண்ணீர் தராத இதே அரசு விவசாயிகளின் நஷ்டத்திற்கு ஒரு சிறு தொகையை நிவாரணம் என்ற பெயரில் கொடுத்து விவசாயிகளின் வாயை மூடுகிறது. அநேகமாக எல்லா ஆண்டுகளிலும் இதுதான் நிலைமை. இங்கு நிவாரணம் தேவை ஆனால் அதைவிட முக்கியம் விவசாயத்திற்கு தண்ணீர் திறந்துவிட மதகுகளை முறையாக பராமரித்திருக்க வேண்டும். தங்கள் ஊழலை மறைக்க நிவாரணத்தை கையில் எடுக்கிறார்கள். இதைத்தான் நாம் புரிந்துகொள்ளவேண்டும்.
2. தங்கள் வாழ்க்கைக்காக போராடிய தூத்துக்குடி மக்களை சுட்டுக் கொலை செய்துவிட்டு நிவாரண நிதியாக 10 இலட்சம் ரூபாயையும் அரசு வேலையையும் கொடுத்து வாயை அடைத்துவிட்டார்கள். சுட்டுக்கொன்றவனிடமே அதற்கு ஈடாக பணத்தையும், கொன்ற அரசிடமே வேலை செய்யவேண்டிய துர்பாக்கிய நிலைமைக்கும் நம்மை தள்ளுவது நமது வறுமையும் நமது இயலாமையும்தான். அவர்களின் சூழலில் நாம் இருந்திருந்தாலும் இதைத்தான் செய்திருப்போம்.
எழுத்தாளர்களின் எழுத்தினால் மக்களிடையே சிறு பொறி எழுவதும், விவாதங்கள் கிளம்புவதும் வரவேற்புக்குரியது.

Raja said...

மணிகண்டன்,

நீங்கள் 2015 ல் எழுதிய பதிவை இங்கு மேற்கோள் காட்ட விரும்புகிறேன். நீங்கள் இப்போது கூறுவதற்கும், அப்போது நீங்கள் சொன்னதற்கும் உள்ள வேறுபாட்டை நீங்களே உணருங்கள்.

http://www.nisaptham.com/2015/03/blog-post_52.html

"
அவர்களுக்குத் தேவையானதெல்லாம் வாக்கு அரசியல்தான்.

இலவச மடிக்கணினி திட்டத்துக்கு ஆயிரத்து நூறு கோடி ரூபாய். இலவச மிக்ஸி, கிரைண்டர் திட்டத்துக்கு இரண்டாயிரம் கோடி ரூபாய். யார் வீட்டுப் பணம்? அள்ளிக் கொடுக்க வேண்டியதுதான். கொடுத்துவிட்டு போகட்டும். உருப்படியான ஆட்களுக்குக் கொடுக்கலாம் அல்லவா? கண்களில் படுபவர்களுக்கு இலவசங்களைக் கொடுக்கிறார்கள். வாங்கிக் கொள்வதற்கு யாருக்குமே தயக்கம் இல்லை. எங்கள் அம்மா வாங்கி வைத்துக் கொள்ளப்போவதாகச் சொன்னார். எதிர்த்தால் ஒரே வரியில் அடக்குகிறார். ‘ஊரே வாங்குது...நாம மட்டும் ஏன் விடணும்?’. எவ்வளவு கேவலமான மனநிலையை உருவாக்கி வைத்திருக்கிறார்கள் பாருங்கள்.

இப்பொழுதெல்லாம் அரசு ஊழியர், பணக்காரர், பெரும்புள்ளி என்கிற எந்தப் பாகுபாடும் இல்லை. இருபது வருடங்களுக்கு முன்பாகக் கூட இலவசப் பொருட்களை வாங்குவது தங்களது பெருமைக்கு இழுக்கு என்று பேசிக் கொண்டிருந்தவர்களைச் சாதாரணமாகப் பார்க்க முடியும். இப்பொழுது லட்சணம் பல்லிளிக்கிறது. அத்தனை பேரும் வாங்கி வைத்துக் கொள்கிறார்கள். இந்த வருடம் இரண்டாயிரம் கோடி ரூபாயை ஒதுக்கினால் அடுத்த வருடம் இன்னுமொரு ஐந்நூறு கோடி சேர்த்து ஒதுக்க வேண்டும்"

பழனிவேல் said...

அருமை அண்ணா...
இலவசத்தின் மறுபக்கம் இப்போது தான் புரிகின்றது..

Aravind Rengasamy said...

பத்து மணிக்கு ஐடி நிறுவனத்துக்கு வேலைக்குச் செல்வதற்காக எட்டு மணிக்கு எழுந்து சாண்ட்விச் சாப்பிட்டுவிட்டுக் கிளம்புகிறவர்களுக்கு இதன் பலன்கள் புரியுமா என்று தெரியவில்லை.!!!! :)

Umashankar M said...

உண்மையை அழகாக எடுத்து வைத்து உள்ளீர்கள். எனது மனத்தில் உள்ள கருத்தும் இதுவே. இதை கண்டிப்பாக நாம் மற்றவர்களுக்கு தெரியபடுத்தியே ஆகவேண்டும். சிறிய வட்டத்தை மட்டுமே பார்த்து முடிவு செய்யும் பலரின் எண்ணம் இதன் மூலம் மாறும்.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

இங்கே இலவசங்களை முறையாக தேவைப்படுவோர்க்கு மட்டும் அளிக்க முயற்சி மேற்கொள்வதில்லை இலவசம் வேண்டாம் என்று கூறுவோர் இலவசப் பொருட்களை வேண்டாம் என மறுப்பதில்லை.