வெகு நாட்களுக்குப் பிறகாக அவனைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தேன். எம்.டெக் படித்தவன். கடந்த முறை- சில வருடங்களுக்கு முன்பாக இருக்கும்- குர்கானில் ஒரு நிறுவனத்தில் பணியில் இருந்தான். ‘இப்ப அரக்கோணத்துலேயே இருக்கேன்’ என்றவனிடம் ‘கழுதை கெட்டா குட்டிச்சுவரு’ என்ற நினைப்பில் ‘ப்ரேக்ஸ் இந்தியாவா’ என்றேன். அரக்கோணம் பக்கத்தில் சோளிங்கரில் அப்படியொரு இருக்கிறது.
‘சொந்தமா ஒரு சின்ன பிஸினஸ்’ என்றான்.
பூ வியாபாரம். மூன்று நான்கு வருடங்களுக்கு முன்பாக ஆரம்பித்திருக்கிறான். வெளியிலிருந்து பார்த்தால் ‘பூவில் என்ன இருக்கு’ என்றுதான் தோன்றும். ஆனால் இந்தியாவில் மூன்று வருடங்களுக்கு முன்பே எட்டாயிரம் கோடி ரூபாய்களைத் தாண்டிய வணிகமாம் அது. அவனேதான் சொன்னான்.
நண்பனின் மாமனார் பூக்கடை நடத்துகிறார். மார்க்கெட்டில் பூ கட்டி விற்கிறவர். அதைப் பார்த்துதான் இவனது மண்டைக்குள் பல்பு எரிந்திருக்கிறாது. அதே தொழிலை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியிருக்கிறான். அரக்கோணம் பக்கத்தில் ஜாதி மல்லி விவசாயிகளைப் பிடித்திருக்கிறான். பெரிய விவசாயிகள் இல்லை- ஐம்பது செண்ட் அல்லது நூறு செண்ட் இடத்தில் பூ விளைவிக்கிறவர்கள் அவர்கள். ஐம்பது செண்ட் நிலத்தில் பூ விளைவிப்பவர்கள் இருக்கிறார்கள் என்பதை முதன் முதலாகக் கேள்விப்படுகிறேன். விவசாயிகள் பூவைத் தூக்கிக் கொண்டு எங்கேயும் போக வேண்டியதில்லை. செடியிலிருந்து பறித்து வைத்தால் இவர்களே வீட்டுக்குச் சென்று வாங்கிக் கொள்கிறார்கள். பூவை விவசாயிகளிடமிருந்து வாங்கும் வேலையானது காலை எட்டரை மணிக்குள் முடிந்துவிடும்.
எடை போட்டு வாங்கி வந்த பூவை உள்ளூர் பெண்களிடம் கொடுத்து கட்டித் தரச் சொல்லித் தருகிறான். கால் கிலோ கட்டித்தர அந்தப் பெண்களுக்கு பனிரெண்டு ரூபாய் கூலி. கட்டுவதற்கான நூலையும் இவனே கொடுத்துவிட்டு வந்துவிடுகிறான். ஒவ்வொரு கால் கிலோ பூவையும் ஒரே நூலில் கட்டித் தர வேண்டும். அவர்கள் வீட்டு வேலையெல்லாம் முடித்துவிட்டு கூட்டமாக அமர்ந்து ஒன்று அல்லது ஒன்றரை மணி நேரத்தில் கட்டித் தந்துவிடுகிறார்கள். வீட்டில் சும்மா இருப்பதற்குப் பதிலாக அவர்களுக்கு சிறு வருமானம் அது. கூட்டமாக அமர்ந்து பேசியபடியே கட்டுவதால் பேச்சுக்கு பேச்சும் ஆச்சு அதே சமயத்தில் ஒன்றரை மணி நேரத்தில் சுமார் நூறு ரூபாய் சம்பாத்தியமும் ஆச்சு அந்தப் பெண்களுக்கு.
கட்டி முடித்த பூவையெல்லாம் ஓரிடத்துக்குக் கொண்டு வந்து உருட்டி (Roll)செய்கிறார்கள். இது வேறொரு டீம். ஏனென்றால் இப்படி உருட்டப்பட்ட ஒவ்வொரு செண்டும் ஒரே அளவில் இருக்க வேண்டும். அதுதான் உருட்டுகிறவர்கள் வேலை. மதியம் ஒரு மணிக்குள் இந்த வேலையை முடித்து நெகிழி பைகளில் போட்டுச் சென்னை வரும் தொடர்வண்டியில் ஏற்றிக் கொண்டு இங்கேயிருக்கும் வியாபாரிகளிடம் விற்றுவிடுகிறான். ஒரே பூ - அதை அரக்கோணத்தில் விற்றால் ஒரு ரேட் அதுவே சென்னையில் விற்றால் இன்னொரு ரேட். ஒரு செண்டு பூவில் எட்டு அல்லது ஒன்பது முழம் வரும் போலிருக்கிறது. முகூர்த்த நாளில் முழம் நூறு ரூபாய்க்கு கூட விற்குமாம். அத்தகைய ஜாக்பாட் நாட்களில் கிட்டத்தட்ட ஆயிரம் ரூபாய். செமத்தியான இலாபம். மற்ற நாட்களிலும் ஒன்றும் மோசமில்லை.
ஒரு நாளைக்கு சுமார் ஐநூறு செண்டு பூவை இப்படி அனுப்பிக் கொண்டிருக்கிறான். வருமானம் எவ்வளவு என்று கேட்கிறவர்கள் கணக்குப் போட்டுப் பார்த்துக் கொள்ளலாம். எல்லாவற்றையும் முடித்துவிட்டு மாலை ஆறு அலல்து ஏழு மணிக்கு வீடு திரும்பிவிடுகிறான். அடுத்த நாள் காலையில் மீண்டும் வேலைத் தொடக்கம்.
எம்.டெக் வடிவமைப்பு படித்தவன் அவன். முப்பத்தைந்து வயதாகிறது. கடினமான உழைப்பு. அலுங்காமல் குலுங்காமல் இருந்திருக்கலாம்.
‘சந்தோஷமா இருக்கேன்..ஒரு பொண்ணு...உள்ளூர்லயே படிக்கிறா’ என்றான். ஆயிரத்தெட்டு நெளிவு சுளிவு கொண்ட தொழில் இது. பனி பெய்தால் பூ விளைச்சல் குறையும். முகூர்த்த நாளில் வெளியூரிலிருந்து பூ நிறைய வந்து குவிந்துவிடும். அப்பொழுது வியாபாரிகள் விலையைக் குறைக்க முயற்சிப்பார்கள். ஒரு வீட்டில் கால் கிலோ கொடுத்து வந்தால் ஐம்பது கிராம் பூவை எடுத்து வைத்துக் கொள்வார்கள். செண்டு கட்டும் போதும் அளவு குறையும். எல்லோருமே தெரிந்த/உள்ளூர் பெண்கள் என்பதால் அவர்களைக் கடிந்து கொள்ளவும் முடியாது. இப்படி எவ்வளவோ சொல்கிறான்.
‘வீட்டில் எப்படி ஆதரவு’ என்றேன். சுயதொழில் என்று இறங்குகிறவர்களின் முட்டுக்கட்டையே அங்கேதானே? அம்மாவும் அப்பாவும் கொஞ்சம் தடை போட்டிருக்கிறார்கள். ‘இவ்வளவு படிச்சுட்டு பூ வியாபாரமா’ என்பதுதான் அவர்கள் பிரச்சினை. ஆனால் உள்ளூரில் மகன் இருக்கப் போகிறான் என்பது ஒருவகையில் அவர்களைச் சமாதானம் ஆக்கியிருக்கிறது.
‘பூ மேல உனக்கு லவ்வா?’ என்றதற்கு பயங்கரமாகச் சிரித்து விட்டான்.
‘எல்லாத்தையும் ரொமாண்டிசைஸ் செஞ்சுக்குவியா?’ என்றவன் ‘மச்சி..இது ப்யூர் பிஸினஸ்...இதுதான் என் passion..அதில்தான் தொழிலைச் செய்யணும்ன்னு ஏதாச்சும் விதி இருக்கா?’ என்று வசனம் பேச ஆரம்பித்துவிட்டான்.
‘நம்மூருக்கு இது செட் ஆகும்ன்னு நினைச்சேன்..அமைஞ்சுடுச்சு...இதுவே ஜோலார் பேட்டைன்னா கூட இது வொர்க் அவுட் ஆகியிருக்குமான்னு தெரியல...இந்தத் தொழில் டைமிங் ரொம்ப முக்கியம்..அதுக்கு அரக்கோணம்தான் செட் ஆகுது’ என்றான். ஒரு தொழிலுக்குள் எவ்வளவு நுணுக்கங்கள் இருக்கின்றன?
பேச்சுவாக்கில் ‘பிஸினஸ் ஆரம்பிக்கலாம்’ என்று சொல்கிறவர்கள் அதிகம். ஆனால் பெரும்பாலானவர்கள் இப்படியெல்லாம் வழிகள் இருக்கின்றன என்று யோசிக்கவேமாட்டோம். எந்த ஊரில் தொழில் தொடங்கப் போகிறோம், அங்கே எதைக் கையில் எடுக்கலாம், அதில் என்ன சூட்சமங்கள் என்பதையெல்லாம் கண்டுபிடிப்பதில்தான் வெற்றியின் முதல்படி இருக்கிறது. பூ, அதை விளைவிக்கும் விவசாயிகள், அவர்களை ஒரு நெட்வொர்க் ஆக்குவது, உள்ளூர் பெண்களைப் பயன்படுத்துவது, சென்னை கொண்டு போவது, அங்கே வியாபாரிகளின் தொடர்பு என்பதையெல்லாம் கருவாக்கி, வடிவத்துக் கொண்டு வந்து, செயல்படுத்துவது என நண்பன் செய்திருப்பது பெரிய வேலை. எதிர்காலத் திட்டங்கள் என்று பூ ஏற்றுமதி உட்பட சிலவற்றைச் சொன்னான். ஆனால் அதையெல்லாம் பொதுவெளியில் விலாவாரியாக்குவது சரியாக இருக்காது.
எண்ணித் துணிக கருமம்- கண்டபடி யோசித்தால் ஒரு பற்றுக் கோல் சிக்கிவிடாமலா போய்விடும்?
இந்தக் கட்டுரைக்கு என்ன தலைப்பு வைக்கலாம் என்று யோசித்த போது 2.0 என்பதுதான் ட்ரெண்டாக இருக்கும் எனத் தோன்றியது. கட்டுரைக்கும் தலைப்புக்கும் ஏதாவது சம்பந்தமிருக்க வேண்டுமல்லவா? இருக்கிறதே. குர்கானில் பன்னாட்டு நிறுவனத்தில் பணி என்பது 1.0. அரக்கோணத்தில் பூக்காரன் என்பது 2.0.
9 எதிர் சப்தங்கள்:
I haven't seen that yet. So, there is no relation between 1.0 and 2.0 !!??
Its one of the high prospering business in Foreign countries.. But investing time & energy with dedication will bring him top..
Grr.. nalla vela neengalum cinema vimarsanam ezhutha start pannitteengalonu nenachen title a paarthuttu 😊😊
Super!
சூப்பர் மணி, மிகவும் உபயோகமான தகவல், வாழ்த்துக்கள்
"ப்பூ" அப்டின்னு அவ்வளவு லேசா நெனச்சா அப்டில்லாம் இல்ல ன்னு நெத்தியடியா பதில் சொல்லியிருக்கு இந்த 2.0.
ஒரு தடவை வாசிக்கலாம்.
ஐடி, இலக்கியம், அரசியல், அசோகமித்திரன் என்று பலதரப்பட்ட கட்டுரைகள் வரும். சுருக்கமாக ஆனால் அழகாக இருக்கும். இப்போதெல்லாம் நிசப்தத்தில் கேக் கடை, பூக்கடை, சாப்பாடு கடை வைத்து பொழைப்பது எப்படி என்று தொடர்ச்சியாக கட்டுரைகள்!
தவறென்று சொல்ல வில்லை. ஆட்டுக்கால் சூப் வைத்து விற்பவன் கூட நன்றாக சம்பாதிக்கிறான். தெருவில் இருக்கும் முக்கால்வாசி கடைகளும் ஏதோ விதத்தில் லாபத்தில் இயங்குபவைதான். அதற்காக அவர்கள் செய்வது எல்லாம் சரியாகி விடாது. யாரையும் மட்டம் தட்ட வில்லை. யாரிடம் வாழ்க்கை பாடத்தை பெறுகிறோம் என்பது முக்கியம். வேலை, தொழில் தவிர வேறு ஒன்றும் தெரியாதவர்களிடம் கருத்து கேப்பது மிக தவறு. அதிலும் அதுதான் சரி என்று அவர்கள் பேசுவார்கள், கேட்டு கொண்டு சரி என்று தலையாட்டுவது மிக மிக கொடுமை. இந்த கட்டுரையில் கூட உங்கள் நண்பர் சொல்லுகிறார்:-
" பூ மேல உனக்கு லவ்வா?’ என்றதற்கு பயங்கரமாகச் சிரித்து விட்டான்.
‘எல்லாத்தையும் ரொமாண்டிசைஸ் செஞ்சுக்குவியா?’ என்றவன் ‘மச்சி..இது ப்யூர் பிஸினஸ்...இதுதான் என் passion..அதில்தான் தொழிலைச் செய்யணும்ன்னு ஏதாச்சும் விதி இருக்கா?’ என்று வசனம் பேச ஆரம்பித்துவிட்டான்.
‘நம்மூருக்கு இது செட் ஆகும்ன்னு நினைச்சேன்..அமைஞ்சுடுச்சு...இதுவே ஜோலார் பேட்டைன்னா கூட இது வொர்க் அவுட் ஆகியிருக்குமான்னு தெரியல...இந்தத் தொழில் டைமிங் ரொம்ப முக்கியம்..அதுக்கு அரக்கோணம்தான் செட் ஆகுது’ என்றான். ஒரு தொழிலுக்குள் எவ்வளவு நுணுக்கங்கள் இருக்கின்றன? "
நீங்களும் அதை கேட்டு பிரமித்து! என்னமோ ஜான் பென்னிகுவிக் ரேஞ்சுக்கு பில்டப்!
சார், பொழைப்பது பெரிய காரியம் இல்லை. எல்லோருக்கும் ஒன்றே ஒன்றுதான் உறுதியாக இருக்கிறது. அது சாவு. அதோடு அனைத்து தொடர்பும் முடிந்தது. எரித்து விட்டால் டப்பாவில் ஹார்லிக்ஸ் பவுடர் போல் நம் எலும்பு துண்டு பொடிதான் இருக்கும். ஒரு பேச்சுக்கு ஆவியாக அலைகிறேன் பேர்வழி என்று கிளம்பி விட்டால் கூட, வீட்டு பக்கம் போக முடியாது. துரத்தி விடுவார்கள். பின்னே மகனே, கணவனே, மனைவியே என்று கொஞ்சுவார்களா?
எனவே பேஷன் என்று பிடித்ததை பண்ணி தெருவில் உயிர் விட்டால் கூட, போகிற உயிர் பிடித்ததை பண்ணி உயிர் போகட்டுமே!! திரும்ப வர போவதில்லை என்று நன்கு தெரிந்தும், மனிதர்கள் இப்படி செக்கு மாடாக இருப்பது கண்டிக்க தக்கது.
அதை விட கொடுமை, தலைப்பு 2.0 என்று இந்த கட்டுரைக்கு பெயர் வைத்தது.
ரஜினி இந்த படத்தில் நடிக்கும் போது ஜவகர்லால் நேரு ஸ்டேடியத்தில் 5 நாள் படப்பிடிப்பு. உடல் நிலை சரியில்லை, ரஜினிக்கு. இப்போது விட்டால் ஒரு வருடத்திற்கு அங்கு இடம் கிடைக்காது. டாக்டர் கடுமையாக எதிர்க்கிறார். ரஜினி படப்பிடிப்பில் கலந்து கொண்டால் ரஜினி உயிருக்கு, தான் உத்தரவாதம் தர முடியாது என்று கடுமையாக எச்சரிக்கிறார். படமும் சாதாரண படம் இல்லை. எப்பேர்ப்பட்ட படம். எவ்வளவு உழைப்பு தேவைப்படும்!! ரஜினி உயிரை பணயம் வைத்து மிக சிரமப்பட்டு நடித்து கொடுத்தார், டாக்டரின் எச்சரிக்கையையும் மீறி!
இதுதான் சார், பேஷன். ரஜினி என்ன பணத்துக்காகவா இப்படி சிரமப்பட்டார்? சங்கரும் ரஹ்மானும் நீரவ் ஷாவும், ரசூல் பூக்குட்டியும் வெறும் பணத்துக்காகவா 4, 5 வருடங்கள் உழைத்தார்கள். இதுதான் சார், பேஷன். இவர்கள் எல்லோருக்கும் வருடத்திற்கு ஏழு, எட்டு படங்கள் பண்ணி சம்பாதிக்க தெரியாதா!! நாளை உயிர் விடுவதாக இருந்தாலும் இவர்கள் அனைவரும் நிம்மதியாக கண்ணை மூடுவார்கள். ஏனென்றால் இவர்கள் அனைவர்க்கும், இதுதான் சார், பேஷன்!!
Please post a buyers guide book list for 2019 Chennai book fair
IT capital Bangalore to Manufacturing Capital Coimbatore ku இடம் பெயர்ந்து விட்டீர்கள். சில கட்டுரைகள் உங்களையும் உத்வேகம் படுத்தும் போல் உள்ளது. புதிய பாதை யில் பயணிக்க இருப்பின் வாழ்த்துக்கள்
Post a Comment