Nov 30, 2018

2.0

வெகு நாட்களுக்குப் பிறகாக அவனைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தேன். எம்.டெக் படித்தவன். கடந்த முறை- சில வருடங்களுக்கு முன்பாக இருக்கும்- குர்கானில் ஒரு நிறுவனத்தில் பணியில் இருந்தான். ‘இப்ப அரக்கோணத்துலேயே இருக்கேன்’ என்றவனிடம் ‘கழுதை கெட்டா குட்டிச்சுவரு’ என்ற நினைப்பில் ‘ப்ரேக்ஸ் இந்தியாவா’ என்றேன். அரக்கோணம் பக்கத்தில் சோளிங்கரில் அப்படியொரு இருக்கிறது.

‘சொந்தமா ஒரு சின்ன பிஸினஸ்’ என்றான். 

பூ வியாபாரம். மூன்று நான்கு வருடங்களுக்கு முன்பாக ஆரம்பித்திருக்கிறான். வெளியிலிருந்து பார்த்தால் ‘பூவில் என்ன இருக்கு’ என்றுதான் தோன்றும். ஆனால் இந்தியாவில் மூன்று வருடங்களுக்கு முன்பே எட்டாயிரம் கோடி ரூபாய்களைத் தாண்டிய வணிகமாம் அது. அவனேதான் சொன்னான். 

நண்பனின் மாமனார் பூக்கடை நடத்துகிறார். மார்க்கெட்டில் பூ கட்டி விற்கிறவர். அதைப் பார்த்துதான் இவனது மண்டைக்குள் பல்பு எரிந்திருக்கிறாது. அதே தொழிலை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியிருக்கிறான். அரக்கோணம் பக்கத்தில் ஜாதி மல்லி விவசாயிகளைப் பிடித்திருக்கிறான். பெரிய விவசாயிகள் இல்லை- ஐம்பது செண்ட் அல்லது நூறு செண்ட் இடத்தில் பூ விளைவிக்கிறவர்கள் அவர்கள். ஐம்பது செண்ட் நிலத்தில் பூ விளைவிப்பவர்கள் இருக்கிறார்கள் என்பதை முதன் முதலாகக் கேள்விப்படுகிறேன். விவசாயிகள் பூவைத் தூக்கிக் கொண்டு எங்கேயும் போக வேண்டியதில்லை. செடியிலிருந்து பறித்து வைத்தால் இவர்களே வீட்டுக்குச் சென்று வாங்கிக் கொள்கிறார்கள். பூவை விவசாயிகளிடமிருந்து வாங்கும் வேலையானது காலை எட்டரை மணிக்குள் முடிந்துவிடும். 

எடை போட்டு வாங்கி வந்த பூவை உள்ளூர் பெண்களிடம் கொடுத்து கட்டித் தரச் சொல்லித் தருகிறான். கால் கிலோ கட்டித்தர அந்தப் பெண்களுக்கு பனிரெண்டு ரூபாய் கூலி. கட்டுவதற்கான நூலையும் இவனே கொடுத்துவிட்டு வந்துவிடுகிறான். ஒவ்வொரு கால் கிலோ பூவையும் ஒரே நூலில் கட்டித் தர வேண்டும். அவர்கள் வீட்டு வேலையெல்லாம் முடித்துவிட்டு கூட்டமாக அமர்ந்து ஒன்று அல்லது ஒன்றரை மணி நேரத்தில் கட்டித் தந்துவிடுகிறார்கள். வீட்டில் சும்மா இருப்பதற்குப் பதிலாக அவர்களுக்கு சிறு வருமானம் அது. கூட்டமாக அமர்ந்து பேசியபடியே கட்டுவதால் பேச்சுக்கு பேச்சும் ஆச்சு அதே சமயத்தில் ஒன்றரை மணி நேரத்தில் சுமார் நூறு ரூபாய் சம்பாத்தியமும் ஆச்சு அந்தப் பெண்களுக்கு. 

கட்டி முடித்த பூவையெல்லாம் ஓரிடத்துக்குக் கொண்டு வந்து உருட்டி (Roll)செய்கிறார்கள்.  இது வேறொரு டீம். ஏனென்றால் இப்படி உருட்டப்பட்ட ஒவ்வொரு செண்டும் ஒரே அளவில் இருக்க வேண்டும். அதுதான் உருட்டுகிறவர்கள் வேலை. மதியம் ஒரு மணிக்குள் இந்த வேலையை முடித்து நெகிழி பைகளில் போட்டுச் சென்னை வரும் தொடர்வண்டியில் ஏற்றிக் கொண்டு இங்கேயிருக்கும் வியாபாரிகளிடம் விற்றுவிடுகிறான். ஒரே பூ - அதை அரக்கோணத்தில் விற்றால் ஒரு ரேட் அதுவே சென்னையில் விற்றால் இன்னொரு ரேட். ஒரு செண்டு பூவில் எட்டு அல்லது ஒன்பது முழம் வரும் போலிருக்கிறது. முகூர்த்த நாளில் முழம் நூறு ரூபாய்க்கு கூட விற்குமாம். அத்தகைய ஜாக்பாட் நாட்களில் கிட்டத்தட்ட ஆயிரம் ரூபாய். செமத்தியான இலாபம். மற்ற நாட்களிலும் ஒன்றும் மோசமில்லை. 

ஒரு நாளைக்கு சுமார் ஐநூறு செண்டு பூவை இப்படி அனுப்பிக் கொண்டிருக்கிறான். வருமானம் எவ்வளவு என்று கேட்கிறவர்கள் கணக்குப் போட்டுப் பார்த்துக் கொள்ளலாம். எல்லாவற்றையும் முடித்துவிட்டு மாலை ஆறு அலல்து ஏழு மணிக்கு வீடு திரும்பிவிடுகிறான். அடுத்த நாள் காலையில் மீண்டும் வேலைத் தொடக்கம்.

எம்.டெக் வடிவமைப்பு படித்தவன் அவன். முப்பத்தைந்து வயதாகிறது. கடினமான உழைப்பு. அலுங்காமல் குலுங்காமல் இருந்திருக்கலாம். 

‘சந்தோஷமா இருக்கேன்..ஒரு பொண்ணு...உள்ளூர்லயே படிக்கிறா’ என்றான். ஆயிரத்தெட்டு நெளிவு சுளிவு கொண்ட தொழில் இது. பனி பெய்தால் பூ விளைச்சல் குறையும். முகூர்த்த நாளில் வெளியூரிலிருந்து பூ நிறைய வந்து குவிந்துவிடும். அப்பொழுது வியாபாரிகள் விலையைக் குறைக்க முயற்சிப்பார்கள். ஒரு வீட்டில் கால் கிலோ  கொடுத்து வந்தால் ஐம்பது கிராம் பூவை எடுத்து வைத்துக் கொள்வார்கள். செண்டு கட்டும் போதும் அளவு குறையும். எல்லோருமே தெரிந்த/உள்ளூர் பெண்கள் என்பதால் அவர்களைக் கடிந்து கொள்ளவும் முடியாது.  இப்படி எவ்வளவோ சொல்கிறான். 

‘வீட்டில் எப்படி ஆதரவு’ என்றேன். சுயதொழில் என்று இறங்குகிறவர்களின் முட்டுக்கட்டையே அங்கேதானே? அம்மாவும் அப்பாவும் கொஞ்சம் தடை போட்டிருக்கிறார்கள். ‘இவ்வளவு படிச்சுட்டு பூ வியாபாரமா’ என்பதுதான் அவர்கள் பிரச்சினை. ஆனால் உள்ளூரில் மகன் இருக்கப் போகிறான் என்பது ஒருவகையில் அவர்களைச் சமாதானம் ஆக்கியிருக்கிறது.  

‘பூ மேல உனக்கு லவ்வா?’ என்றதற்கு பயங்கரமாகச் சிரித்து விட்டான்.

‘எல்லாத்தையும் ரொமாண்டிசைஸ் செஞ்சுக்குவியா?’ என்றவன் ‘மச்சி..இது ப்யூர் பிஸினஸ்...இதுதான் என் passion..அதில்தான் தொழிலைச் செய்யணும்ன்னு ஏதாச்சும் விதி இருக்கா?’ என்று வசனம் பேச ஆரம்பித்துவிட்டான். 

‘நம்மூருக்கு இது செட் ஆகும்ன்னு நினைச்சேன்..அமைஞ்சுடுச்சு...இதுவே ஜோலார் பேட்டைன்னா கூட இது வொர்க் அவுட் ஆகியிருக்குமான்னு தெரியல...இந்தத் தொழில் டைமிங் ரொம்ப முக்கியம்..அதுக்கு அரக்கோணம்தான் செட் ஆகுது’ என்றான். ஒரு தொழிலுக்குள் எவ்வளவு நுணுக்கங்கள் இருக்கின்றன? 

பேச்சுவாக்கில் ‘பிஸினஸ் ஆரம்பிக்கலாம்’ என்று சொல்கிறவர்கள் அதிகம். ஆனால் பெரும்பாலானவர்கள் இப்படியெல்லாம் வழிகள் இருக்கின்றன என்று யோசிக்கவேமாட்டோம். எந்த ஊரில் தொழில் தொடங்கப் போகிறோம், அங்கே எதைக் கையில் எடுக்கலாம், அதில் என்ன சூட்சமங்கள் என்பதையெல்லாம் கண்டுபிடிப்பதில்தான் வெற்றியின் முதல்படி இருக்கிறது. பூ, அதை விளைவிக்கும் விவசாயிகள், அவர்களை ஒரு நெட்வொர்க் ஆக்குவது, உள்ளூர் பெண்களைப் பயன்படுத்துவது, சென்னை கொண்டு போவது, அங்கே வியாபாரிகளின் தொடர்பு என்பதையெல்லாம் கருவாக்கி, வடிவத்துக் கொண்டு வந்து, செயல்படுத்துவது என நண்பன் செய்திருப்பது பெரிய வேலை. எதிர்காலத் திட்டங்கள் என்று பூ ஏற்றுமதி உட்பட சிலவற்றைச் சொன்னான். ஆனால் அதையெல்லாம் பொதுவெளியில் விலாவாரியாக்குவது சரியாக இருக்காது. 

எண்ணித் துணிக கருமம்- கண்டபடி யோசித்தால் ஒரு பற்றுக் கோல் சிக்கிவிடாமலா போய்விடும்?

இந்தக் கட்டுரைக்கு என்ன தலைப்பு வைக்கலாம் என்று யோசித்த போது 2.0 என்பதுதான் ட்ரெண்டாக இருக்கும் எனத் தோன்றியது. கட்டுரைக்கும் தலைப்புக்கும் ஏதாவது சம்பந்தமிருக்க வேண்டுமல்லவா? இருக்கிறதே. குர்கானில் பன்னாட்டு நிறுவனத்தில் பணி என்பது 1.0. அரக்கோணத்தில் பூக்காரன் என்பது 2.0.

Nov 28, 2018

சந்ததிக்கான விளைபொருட்கள்- தினமலரில்

ஞாயிற்றுக்கிழமையிலிருந்து ஏகப்பட்ட பேர் ஃபேஸ்புக் வழியாகத் தொடர்பு கொள்ள முயன்றார்கள்.  யாராவது என்னைப் பற்றி திட்டியிருக்கிறார்களோ என்னவோ என்றுதான் சந்தேகமாக இருந்தது. அப்படியெல்லாம் எதுவுமில்லை. தினமலரில் பாராட்டி எழுதியிருக்கிறார்கள். நிசப்தம் தளத்தில் உள்ள கட்டுரைகளைத் தொகுத்து ஒரு கட்டுரை தயார் செய்திருக்கிறார்கள். படம்தான் அட்டகாசம். ‘எப்படியும் இவனுக்கு அம்பது வயசு இருக்கும்’ என நினைக்க வைத்துவிடும். யூத் என்று காட்டிக் கொள்ள நானே படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறேன். இந்த ஓவியர் பெட்ரோலை ஊற்றியிருக்கிறார். உச்சியில் வெறும் நான்கே நான்கரை முடி. அது சரி. சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும். அநேகமாக என்னை நன்கு அறிந்த ஓவியராகத்தான் இருக்க வேண்டும்.
                                                                   ***பிளாக்' - வலைப்பூவில் எழுதி, பெரிய அளவு நிதி திரட்டி உதவி வரும், 'நிசப்தம் அறக்கட்டளை' நிறுவனரும், கவிஞருமான, வா.மணிகண்டன்: 

ஈரோடு மாவட்டம், கரட்டடிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவன் நான். கணினியில், முதுகலைப் பட்டதாரி. பெங்களூரில், பன்னாட்டு நிறுவனத்தில் பணியாற்றி வந்த நான், தற்போது, கோவையில் பணி செய்து வருகிறேன்.'நிசப்தம்' என்ற வலைப்பூவில், மனித உணர்வுகள், வாழ்வின் யதார்த்தங்கள், சமூக அவலங்கள், அரசியல் போன்ற பல விஷயங்களில், என் கருத்தை பகிர்வேன். ஒருமுறை, வாசகர் ஒருவர் கேட்டதற்கிணங்க, கல்வி செலவுக்கான வேண்டுகோளை, என் வலைப்பூவில் வெளியிட, அதற்கு வந்த ஆதரவை கண்டு ஆச்சரியம் அடைந்தேன்.தொடர்ந்து அதுபோல உதவிகள் செய்யத் துவங்கியதும், உள்நாடு, வெளிநாடு என்று, பல இடங்களிலிருந்து, முகமறியாத மனிதர்களிடமிருந்து பணம் வரத் துவங்கியது. ஆரம்ப காலங்களில், என் பெயரிலேயே நன்கொடைகளைப் பெற்று உதவினேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன் தான், 'நிசப்தம்' என்ற அறக்கட்டளையை துவங்கினேன். அதற்குள், எங்கள் அறக்கட்டளை செய்திருக்கும் உதவிகள், ஒரு கோடிக்கும் மேலிருக்கும். அறக்கட்டளையின் வரவு - செலவுகளை, வங்கியின் அறிக்கையோடு, மாதந்தோறும், வலைப்பூவில் வெளியிட்டு வருகிறேன்.

கடந்த, 2015ல், பெருவெள்ளத்தில், அரசு நிவாரணப் பணிகள் சென்றடையாத கிராமங்களைச் தேடிச் சென்று உதவினோம். கடந்த ஆண்டு முதல், ஏரி, குளங்களைத் துார் வாரி மீட்டெடுத்தல், சமுதாயக் காடுகள் உருவாக்கம் போன்றவற்றை, செய்யத் துவங்கினோம். ஈரோட்டில், வேமாண்டம்பாளையம், ஒரு சிறிய கிராமம். ஓராண்டுக்கு முன், அந்த ஊர் குளம் மட்டுமல்ல, பஞ்சாயத்து முழுவதிலும் இருந்த சீமைக் கருவேலங்கள், அறக்கட்டளை மூலம் அழிக்கப்பட்டன. கிட்டத்தட்ட, 60 ஏக்கர் குளம்; மழையைத் தவிர வேறு எந்த வழியுமில்லை; வானம் பார்த்த பூமி.காய்ந்து கருவாடாக கிடந்த குளம், மழையால் இப்போது நிரம்பி இருக்கிறது. ஓராண்டு காத்திருப்புக்குப் பின், பெருமகிழ்ச்சி. இதுபோல மேலும் இரண்டு கிராமங்களுக்கு செய்துள்ளோம். முதலில், கிராமங்களில் இளைஞர்களை அழைத்து பேசுவோம். வேமாண்டம்பாளையத்தில் அத்தனை பணிகளையும் செய்தது, உள்ளூர் இளைஞர்களும், சமூக ஆர்வலர்களும் தான். அதிகாரிகளை சந்தித்துப் பேசினால், 95 சதவீதம் பேர் உதவுகின்றனர். நல்லவர்கள் நான்கு பேர் கொடுக்கும் பணத்தை வாங்கி, தனிப்பட்ட நபர்களுக்கு உதவுவது, ஒரு சங்கிலித் தொடராக இருக்க வேண்டும். உதவி செய்கிறவர்களை விடவும், உதவி பெறுகிறவர்களிடம் இந்த எண்ணம் வலுக்க வேண்டும். அதுதான், நாம் படும் அத்தனை சிரமங்களுக்குமான அர்த்தமாக இருக்கும்.நாம் விதைக்கிற ஒவ்வொரு ரூபாயும், அடுத்தடுத்த சந்ததிக்கான விளைபொருட்களை உருவாக்குவதாக இருக்க வேண்டும்.

                                                                ***

கட்டுரையில் இரண்டு திருத்தங்கள் :

1) எப்பொழுதுமே என்னுடைய தனிப்பட்ட கணக்குக்கு பணம் பெற்று உதவியதில்லை. ஆரம்பத்தில் பயனாளியின் கணக்கு எண்ணை நேரடியாகக் கொடுத்துவிடுவேன். நன்கொடையாளர்கள் அவர்களுக்கு பணம் அனுப்பிவிடுவார்கள். 

2) வேமாண்டம்பாளையத்தில் ஓரளவுதான் ஆதரவு இருந்தது. கோட்டுப்புள்ளாம்பாளையத்தில்தான் நல்ல ஆதரவு கிடைத்தது. ஆனால் மழையின் காரணமாக குளம் நிரம்பியது உண்மை. (கடந்த கல்கி இதழில் இந்தவொரு தொனியில் கட்டுரை வெளியாகியிருந்தது. அதனடிப்படையில் எழுதியிருக்கிறார்கள் என நினைக்கிறேன். அந்தக் கட்டுரையையும் நிசப்தத்தில் பதிவு செய்துவிடுகிறேன்).

தினமலர் குழுவுக்கு மனப்பூர்வமான நன்றி.

Nov 27, 2018

டெல்டா- III

சென்னை ட்ரெக்கிங் க்ளப் குழுவினர் நிவாரணப் பொருட்களை வழங்கும் பணிகளை முடித்துவிட்டார்கள். கிட்டத்தட்ட இருபதுக்கும் மேலான இடங்களிலிருந்து பொருட்களைச் சேகரித்தார்கள். டெல்டா பகுதியிலில் மூன்று விநியோக மையங்களை அமைத்து நிவாரணப் பொருட்களை மையங்களுக்கு அனுப்பி அங்கிருந்து தேவையான பகுதிகளுக்கு பிரித்து அனுப்பினார்கள். அந்தந்த இடங்களில் குழுக்கள் அமைத்து அவர்கள் கசகசப்பில்லாமல் பொருட்களை உரியவர்களைச் சென்றடையும்படி செய்தார்கள்.

ஆச்சரியத்தக்க செயல்பாடு. எப்படி இணைகிறார்கள், இவ்வளவு அர்ப்பணிப்பு உணர்வு ஏன் என்பதெல்லாம் விடை காண முடியாத அல்லது விடை தேட அவசியமற்ற வினாக்கள். வெறித்தனமாகப் பணியாற்றுகிறார்கள். அவ்வளவுதான். ஒவ்வொருவரும் நல்ல வருமானத்துடன் நல்ல நிலைமையில் இருப்பவர்கள்தான். அரைக்கால் ட்ரவுசரை மாட்டிக் கொண்டு இறங்கிக் களமாடிக் கொண்டிருந்தார்கள். களத்தில் அப்படியான குழு என்றால் பொருட்களை வாங்க, வாகனங்களை ஒருங்கிணைக்க, உதவி தேவைப்படும் இடங்களைக் கண்டறிய, தொடர்புகளை உருவாக்க என பல்வேறு வேலைகளைப் பிரித்து பக்காவாகச் செய்து முடித்திருக்கிறார்கள். (இணைப்பில்)

இனி அடுத்தகட்டம். மறு நிர்மாணம் சார்ந்த பணிகளைச் செய்ய வேண்டும். கிராமத்தைத் தேர்ந்தெடுப்பதா, பள்ளிகளையா அல்லது வீடுகளைக் கட்டித் தருவதா என ஒரு விவாதம் ஓடிக் கொண்டிருக்கிறது. முழுமையான திட்ட உருவாக்கத்திற்குப் பிறகு இன்னும் ஓரிரு நாளில் அது குறித்து எழுதுகிறேன். 

வெள்ளிக்கிழமை வரைக்கும் வரும் நிதியை கஜா புயல் மறு நிர்மாணம் சார்ந்த பணிகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாமா என்று கேட்டார்கள். அதுவும் சரியாகப்பட்டது. எனவே வரும் வெள்ளிக்கிழமை (நவம்பர் 30) மாலை வரைக்கும் வரக் கூடிய நிதியானது இந்தச் செயல்பாட்டுக்காகப் பயன்படுத்திக் கொள்ளப்படும். 

இதுவரையிலுமான வரவு செலவு விவரம்....

Opening Balance : Rs. 15,76,639.18
Donations: Rs. 17,38,782.10
Material Purchase: Rs. 2,76,763.00
Remaining Amount: Rs. 14,62,019.10

Next statement will be updated by Friday evening/Saturday Morning.

Nov 23, 2018

டெல்டா - II

கடந்த மூன்று நாட்களில் கஜா புயல் நிவாரணத்துக்கென 272 பேர் நிசப்தம்/சென்னை ட்ரெக்கிங் க்ளப் அணியிடம் பணம் அளித்துள்ளார்கள். பத்து லட்ச ரூபாயைத் தாண்டியிருக்கிறது. (பத்து லட்சத்து முப்பத்து மூன்றாயிரத்து நூற்று முப்பத்தாறு ரூபாய்). சனிக்கிழமை (24.11.2018) மாலை வரையிலும் வரக் கூடிய நிதியானது கஜா வெள்ள நிவாரணத்துக்கென பயன்படுத்தப்படும். அதன் பிறகு நிசப்தம் வங்கிக் கணக்குக்கு வரக்கூடிய தொகை வழக்கம் போல நிசப்தம் அறக்கட்டளையின் கல்வி/மருத்துவ உதவிகளுக்காகப் பயன்படுத்திக் கொள்ளப்படும். 

சென்னை ட்ரெக்கிங் குழுவினர் களத்தில் இருக்கிறார்கள். தமிழகம் முழுவதும் பரவலாக நிவாரணப் பொருட்கள் சேகரிக்கப்படுகின்றன. ஓர் அணி சென்னையில் இருந்து ஒருங்கிணைக்கிறது. பொருட்களுக்கான தேவை எங்கேயிருக்கிறது, தன்னார்வலர்களுக்கான தேவை எங்கேயிருக்கிறது, பொருட்கள் எங்கே செல்ல வேண்டும், தயாராக இருக்கும் தன்னார்வலர்கள் என சகலத்தையும் இந்த அணி ஒருங்கிணைக்க, களத்தில் ஏகப்பட்ட ஓடியாடிக் கொண்டிருக்கிறார்கள். பொருட்கள் விநியோகம், மரங்களை அப்புறப்படுத்துதல், மின்வாரிய ஊழியர்களுக்கு உதவி, வீடு அமைத்தல் என ஆங்காங்கே பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

அடுத்த வாரத்திலிருந்து மறு நிர்மாணப் பணிகளைத் தொடங்கவிருக்கிறார்கள். நன்கொடையில் பெரும்பாலான தொகை அந்தப் பணிக்குப் பயன்படுத்தப்படும். 

குழுவினர் பணியாற்றும் கிராமங்கள், எந்தத் தேதியில் எந்தப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டன போன்ற விவரங்கள், நிழற்படங்கள், பொருட்களைச் சேகரிக்கும் மையங்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் இணைப்பில் உள்ள தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

முந்தைய பதிவு: டெல்டா- நன்கொடை விவரம்

தற்போதைய நிதி விவரம்:

Opening Balance : Rs. 15,76,639.18
Donations : Rs.10,33,136.00
Material Purchase: Rs. 69180.00
Remaining Amount: Rs. 9,63,956.00 (As on 23.11.2019 4:30 PM)

vaamanikandan@gmail.com
அக்கினிக் குஞ்சுகள் - II

சூப்பர் 16 பயிற்சியில் கலந்து கொள்வதற்கான விண்ணப்பங்களை மாணவர்களுக்கு அனுப்பி வைத்திருக்கிறோம். நிரப்பிய படிவங்களை பலர்  அனுப்பி வைத்திருக்கிறார்கள். அதே சமயம் பல மாணவர்களுக்கு விண்ணப்பம் அனுப்புவது கூட எப்படி என்று தெரியவில்லை. 'Eppadi fill up pantathu' என்று கேட்டுக் கூட மின்னஞ்சல் வந்தது. இந்த ஒரு வரிதான் மின்னஞ்சலே. அதனால் இவர்கள் அனுப்புகிற விண்ணப்பத்தின் அடிப்படையில் மட்டுமே மாணவர்களைத் தேர்வு செய்வது சரியாக இருக்காது. மின்னஞ்சல் கூட அனுப்பத் தெரியாத நெருப்புப் பொறிகளை அடையாளம் காண்பதுதான் நோக்கமாக இருக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறோம். 

எனவே விருப்பம் தெரிவிக்கும் மாணவர்கள் அனைவரையும் ஓரிடத்துக்கு அழைத்து நேர்காணல் நடத்துவது எனத் திட்டமிட்டிருக்கிறோம். விண்ணப்பங்களை அனுப்பியவர்களில் சிலர் ‘கல்விக்கட்டணத்துக்காக சேர்கிறேன்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். இதையெல்லாம் தெளிவுபடுத்த வேண்டும். இது நிதியுதவி அளிப்பதற்கான தேர்வல்ல என்று அவர்களுக்குப் புரிய வைத்து அதன் பிறகு மாணவர்களை முடிவு செய்து கொள்ளலாம். 

ஞாயிற்றுக்கிழமை (25-11-2018) மதியம் மூன்று மணிக்கு கோபிச்செட்டிபாளையம் வைரவிழா முதல்நிலைப்பள்ளி (எம்.ஜி.ஆர் சிலை அருகில்) நேர்காணல் நடைபெறும். நிரப்பிய விண்ணப்பங்களை அனுப்பாதவர்களும் கூட நேரடியாக வந்து விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம். சில நண்பர்கள் தமக்குத் தெரிந்த மாணவர்களுக்கு சூப்பர் 16 குறித்த தகவலை அனுப்பி வைத்திருந்தார்கள். அந்த நண்பர்கள் இந்தச் செய்தியையும் சிரமம் பார்க்காமல் அனுப்பி வைத்துவிடவும். 

நேர்காணலுக்குப் பிறகு பதினைந்து முதல் இருபது மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விவரங்கள் தேவைப்பட்டால் 9842097878 (திரு.அரசு தாமசு) என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

சூப்பர் 16 பற்றிய மேலதிக விவரங்கள் இணைப்பில் இருக்கிறது. 

Nov 21, 2018

டெல்டா - நன்கொடை விவரம்

டெல்டா பகுதிகளில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. சிங்.ஜெயக்குமார் என்றொரு நண்பர் புஷ்பவனத்திலிருந்து நேற்று அழைத்தார். ‘நாங்க நாலாயிரம் பேர் இருக்கோம்...அரிசி கூட கிடைச்சுடுது..ஆனா பருப்பு, காய்கறியெல்லாம் ஒண்ணுமே இல்லைங்க..ஏதாச்சும் செய்யுங்க’ என்றார்.  ஒரு முகாமில் தங்கி சமைத்து உண்கிறார்கள். அவரிடம் செல்ஃபோன் இல்லை. பிஎஸ்என்எல் மட்டுமே வேலை செய்கிறது. நண்பர் ஒருவரிடமிருந்து அழைத்துப் பேசினார். திரும்ப அழைத்தால் இணைப்பு கிடைப்பதில்லை. இன்று மாலையில் ஓரளவு பொருட்கள் சென்றிருக்கின்றன. ஆனால் அவையெல்லாம் போதாது என்றுதான் நினைக்கிறேன். 

தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் நிறைய நிவாரணப் பொருட்கள் செல்கின்றன. ஆனால் யானைப்பசிக்கு சோளப்பொரி என்கிற கதையாகத்தான் இருக்கும். ஏகப்பட்ட கிராமங்கள் சிக்கிச் சின்னாபின்னமாகிக் கிடக்கின்றன. மின்சாரமில்லை. உணவுப்பொருட்கள் இல்லை. செல்போன் வசதியில்லை என்று திண்டாடுகிறார்கள். பல கடைகள் புயலில் சேதமடைந்துவிட்டதால் எந்தப் பொருட்களும் உள்ளூரில் கிடைப்பதில்லை. அதனால்தான் நமக்கு பாதிப்பின் முழுமையான பரிமாணம் இன்னமும் தெளிவாகத் தெரியவில்லை.  இன்னமும் ஏகப்பட்ட கிராமங்கள் பற்றி மெல்ல மெல்லச் செய்திகள் வரக்கூடும். இப்பொழுதுதான் சில சாலைகள் சரி செய்யப்பட்டிருக்கின்றன. இன்னமும் இயல்பு நிலைமை திரும்ப பல நாட்கள் ஆகக் கூடும் என்றார் ஜெயக்குமார். 

வாய்ப்பிருக்கும் நண்பர்கள் தன்னார்வலர் குழுக்களில் இணையுங்கள். களப்பணிக்கும், பொருட்களை எடுத்துச் செல்வதற்குமான நிறையத் தேவையிருக்கிறது. எந்த ஊர்களுக்குத் தேவை என்பதைக் கண்டறிந்து அங்கே எடுத்துச் செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்யுங்கள். 

நிசப்தம் அறக்கட்டளைக்கு கடந்த இரண்டு நாட்களில் டெல்டா நிவாரண உதவிகளுக்கு என ரூ 6,17,027.00 (ஆறு லட்சத்து பதினேழாயிரத்து இருபத்தேழு ரூபாய் வந்திருக்கிறது). அதில் முப்பதொன்பதாயிரம் ரூபாய் தார்பாலின் வாங்குவதற்காகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. (வரிசை எண் : 95). முழுமையான வங்கி அறிக்கை (Bank Statement) கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது. 

Opening Balance: Rs. 15,76,639.18
Donations:Rs. 6,17,027.00
Material Purchase: Rs.39,000
Remaining Amount: Rs. 5,78,027.00

ஏதேனும் சந்தேகமிருப்பின் vaamanikandan@gmail.com

மெல்லத் தமிழ்...

சிறு புள்ளிவிவரம் எடுத்துப் பார்க்கலாம். பெரிய கணக்கீடு எதுவும் தேவையில்லை. இரண்டே கேள்விகள்- ‘நீங்கள் தமிழ் மீது ஆர்வம் கொண்டு வாசிக்கிறீர்கள். தமிழ் வழிக்கல்வியில் படித்தவரா’ பெரும்பாலானவர்களின் பதில் ‘ஆமாம்’ என்றிருக்கும். பதில் ‘இல்லை’ எனில் என்ன காரணத்தினால் தமிழ் வாசிப்பில் ஆர்வம் வந்தது? 

இன்னொரு கேள்வி -‘உங்களுக்குத் தெரிந்தவர்களில் தமிழ் மீது ஆர்வம் கொண்டு வாசித்தும் எழுதியும் கொண்டிருப்பவர்கள் தமிழ் வழிக்கல்வியில் படித்தவர்களா?’. 

இந்த இரண்டு கேள்விகளும் எதற்கு என்று புரிந்திருக்கும். 

தமிழைப் பள்ளிக்கூடங்களில் படித்தவர்கள்- படிக்கும் காலத்தில் ‘வந்துட்டான்டா தமிழய்யன்’என்று தமிழாசிரியரைக் கலாய்த்தவர்களாகக் கூட இருக்கலாம்-ஏதோவிதத்தில் தாம் படித்த மொழியோடு ஒன்றிப் போய்விடுகிறார்கள். தமிழ் படித்தவர்கள் அத்தனை பேருக்கும் தமிழ் மீது ஆர்வம் வந்துவிடுகிறதா என்றால் இல்லை என்றுதான் பதில் வரும். ஆனால் ஆங்கிலம் படித்து தமிழ் மீது ஆர்வம் கொண்டவர்களைக் காட்டிலும் தமிழ் படித்து தமிழ் மீது ஆர்வம் கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகத்தானே இருக்கும்? 

இன்றைக்கு எழுதுகிற, நிறைய வாசிக்கிறவர்களில் தொண்ணூறு சதவீதம் பேர் தமிழ் வழிக்கல்வியில் படித்தவர்கள்தான். இந்த சதவீதக் கணக்கு சற்று முன்பின் இருக்கலாம். ஆனால் முழுமையாகத் தவறு என்று சொல்ல முடியாது. ஆனால் கடந்த முப்பதாண்டுகளில் ஆங்கில வழிக் கல்வியில் படித்துவிட்டு இன்றைக்கு தமிழ் புத்தகங்களை வாசித்துக் கொண்டிருப்பவர்கள் எவ்வளவு பேர்?  வெளிப்படையாகக் கணக்கு எடுத்துப் பார்த்தால் சொற்பமாக இருக்கும். எண்ணிக்கை குறைந்து கொண்டேயிருக்கும். 

புத்தகக் கண்காட்சிகளுக்குச் சென்று கேட்டால் ‘இப்பொழுது வாசிக்கிறவர்கள் அதிகம்’ என்பார்கள். ஒருவேளை சரியாக இருக்கலாம். முன்பு இருநூறு பிரதிகள் அச்சிட்டவர்கள் இன்றைக்கு ஐநூறு புத்தகங்கள் அச்சிடுகிறார்கள். ஆனால் ஆறரைக் கோடிப் பேர்களில் தமிழில் வாசிக்கிறவர்கள் என்று கணக்கெடுத்தால் அது எவ்வளவு இருந்துவிடக் கூடும்? 

இன்றைக்கு புத்தகம் அதிகம் விற்கிறது என்பதற்காகச் சந்தோஷப்படுவதைக் காட்டிலும் அடுத்த முப்பதாண்டுகளில் எண்ணிக்கை அப்படியே தொடருமா என்று யோசித்துப் பார்த்தால் சற்று சங்கடமான பதில் வரலாம். கடந்த தலைமுறைகளில் பள்ளிகளில் தமிழ் படித்துவிட்டு அதே சமயம் நம் வீட்டில் அம்மாவோ அல்லது அப்பாவோ ஆனந்த விகடனோ அல்லது குமுதமோ வாசிப்பதை நாமும் வாசித்து தமிழ் வாசித்துப் பழகியவர்கள்தானே நம்மில் பெரும்பான்மையினர்? ஐநூறு பிரதிகள் அச்சடிப்பதன் காரணம் இதுதான். முப்பதாண்டுகளுக்கு முன்பை விடவும் இன்றைக்கு கற்றவர்களின் எண்ணிக்கை எண்ணிக்கை அதிகம். ஆனால் இன்றைக்கு கற்றவர்களாக இருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழ் வழிக்கல்வியில் அல்லது தமிழைப் படித்தவர்கள்.

இன்னமும் முப்பதாண்டுகள் கழித்துப் பார்த்தால் கற்றவர்களின் சதவீதம் இன்றைக்கு இருப்பதைக் காட்டிலும் அதிகமாகத்தான் இருக்கும். ஆனால் தமிழ் கற்றவர்கள் மிகக் குறைவாக இருப்பார்கள். அதைத்தான் நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இன்றைக்கு எத்தனை வீடுகளில் தமிழ் வாசிக்கிறார்கள். எவ்வளவு குழந்தைகள் தமிழ் கதைப் புத்தகங்களை வாசிக்கிறார்கள். தொண்ணூறுகள் மற்றும் இரண்டாயிரங்களில் ஆங்கில வழியில் படித்தவர்கள் இளையராஜா, ரஹ்மான் பாடல்களைக் கேட்பார்கள். ஆனால் பாடல்வரிகள் தங்கிலீஷில் இருக்க வேண்டும். 

அடுத்தடுத்த தலைமுறைகளில் மொழி செழிக்க வேண்டுமானால் அதனை உண்மையான ஆர்வத்தோடு வாசிக்கிறவர்கள் பரவலாகிக் கொண்டேயிருக்க வேண்டும்.

சமூக ஊடகங்கள் பலம் பெற்றும் வரும் இந்தத் தருணத்தில் இது குறித்தான உரையாடல் அவசியமாகப்படுகிறது. அரசு தரப்பிலும் கல்வித்துறை தரப்பிலும் அடுத்தடுத்த நடவடிக்கைகள் அவசியம். இப்பொழுதெல்லாம் தமிழை மூன்றாம் பாடமாகப் படிக்கிறவர்கள்தான் அதிகம். சமீபத்தில் கூட ஒரு பனிரெண்டாம் வகுப்பு மாணவியிடம் பேசும் போது அவளுடைய இரண்டாம் மொழி பிரெஞ்ச் என்று சொன்னாள். மூன்றாம் மொழிதான் தமிழ். நிறைய வாசிக்கிறாள். ஆனால் அத்தனையும் ஆங்கிலத்தில். ‘தமிழ் படிக்க மாட்டியா?’ என்று கேட்டால் ‘எனக்கு ஃப்ளூயன்ஸி பத்தாது’ என்கிறாள்.

படிப்பதில்லை சரி. ஏன் தமிழைத் தவிர்க்கிறார்கள்?

பெரும்பாலானவர்கள் தமிழைத் தவிர்க்கக் காரணம் சமஸ்கிருதத்திலும் ப்ரெஞ்ச்சிலும் மதிப்பெண்கள் கூடுதலாகக் கிடைக்கும் என்பதுதான். இன்னமும் தமிழாசிரியர்கள் மாறவேயில்லை போலிருக்கிறது. கணக்கில் நூறு, அறிவியல் நூறு என்பதெல்லாம் எப்பொழுதிருந்தோ சகஜமாகிவிட்டது. சமஸ்கிருதத்தில் தொண்ணூற்றொன்பது, நூறு கிடைக்கும். தமிழில் மட்டும் நூறு சாத்தியமில்லை என்கிறார்கள். 

கடந்த முப்பதாண்டுகளில் நிலைமை மாறியிருக்கிறதுதான். எழுபதுகளில் தமிழில் அறுபது சதவீத மதிப்பெண்கள் வாங்கினால் பெரிய கதை. எண்பதுகளின் வாக்கில் தமிழில் எழுபது சதவீதம் வரைக்கும் எளிதாக வாங்கிவிடலாம். பிறகு அந்த நிலை மெல்ல மாறி இன்றைக்கு தொண்ணூறு கூட எளிதாக வாங்கிவிடுகிறார்கள். ஆனால் நூறு கிடைக்காது. 

தம் குழந்தை எல்லாவற்றிலும் நூறு வாங்க வேண்டும் என்கிற எண்ணமுடைய பெற்றோர்கள்தான் இங்கு அதிகம். அவர்கள் விடுவார்களா? மூன்றாம் வகுப்பிலேயே குழந்தையிடம் ‘தமிழில் மார்க் வாங்க முடியாது’ என்று உருவேற்றிவிடுகிறார்கள். அந்தக் குழந்தை தமிழை வேப்பங்காயாகவே எடுத்துக் கொள்கிறது. அப்படியென்றால் பிரச்சினையின் அடிநாதம் எங்கேயிருக்கிறது? தமிழாசிரியர்களுக்கு என்ன பிரச்சினை? அவர்கள் வீட்டுச் சொத்தையா எடுத்துக் கொடுக்கிறார்கள்? எவ்வளவுதான் ஒருவன் நன்றாக எழுதியிருந்தாலும் எழுத்துப்பிழையைத் தேடிப்பிடித்து அரை மதிப்பெண்ணையும் ஒரு மதிப்பெண்ணையும் குறைக்காவிட்டால் என்ன ஆகிவிடும்?

‘தமிழில் மார்க் வாங்க முடியாது’ என்கிற பரவலான மனநிலையை மாற்ற வேண்டும். அது எப்படிச் சாத்தியமாகும் என்று யோசித்து, இது குறித்துப் பரவலான உரையாடல் நிகழ்த்தப்பட்டு அதன் வழியாக கல்வித்துறையில் அழுத்தம் உண்டாக வேண்டும். துறையின் மூலமாக தமிழாசிரியர்களின் மனநிலை மாற வேண்டும். சமஸ்கிருதத்துக்கு இணையாக அல்லது ப்ரெஞ்ச் மொழிக்கு இணையாக தமிழிலும் மதிப்பெண்கள் வாங்கலாம் என்று மக்கள் புரிந்து கொள்ளத் தொடங்கினால் மட்டுமே அடுத்தடுத்த தலைமுறைகளில் தமிழ் பாடம் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாகும்.

சமஸ்கிருதம், ப்ரெஞ்ச்சை ஒப்பிடும் போது தமிழ் படிப்பது எளிது என்கிற மனநிலை உருவாக வேண்டும். அப்படியே தமிழ் படித்தாலும் அதில் மதிப்பெண்கள் வாங்குவதும் சுலபம் என்று மக்கள் நம்பத் தொடங்க வேண்டும். அப்படித்தான் நிறைய மாணவர்களைத் தமிழுக்குள் ஈர்க்க முடியும். அரசாங்கமும், தமிழ் வளர்ச்சித்துறையும், கல்வித்துறையும், தமிழாசிரியர் கூட்டமைப்பும் செய்ய வேண்டிய வேலை நிறைய இருக்கிறது. 

‘தமிழ் வழிக்கல்வியில் படிக்க வைக்க வேண்டும்’ என்று கூடச் சொல்லவில்லை. தமிழை இரண்டாம் பாடமாகப் படிக்க வைத்தால் கூடப் போதும் என்று கேட்கிற சூழல்தான் இருக்கிறது.

அடுத்தடுத்த தலைமுறையில் தமிழ் மீதான ஆர்வத்தை உண்டாக்காமல் மொழியைக் காப்பாற்றிவிடலாம் என்பது குதிரைக் கொம்பாகத்தான் இருக்கும்.

Nov 19, 2018

டெல்டா மக்களுக்காக

சென்னை ட்ரெக்கிங் க்ளப் குழுவினர் ஏற்கனவே டெல்டா பகுதிகளுக்குச் சென்றுவிட்டார்கள். குழுவின் பிற உறுப்பினர்கள் சென்னை முழுவதும் பரவலாக பொருட்களை சேகரிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். சேகரிக்கப்பட்ட பொருட்களுடன் முதல் வாகனம் இன்று சென்னையிலிருந்து கிளம்புகிறது. தொடர்ச்சியாக பொருட்களைச் சேகரித்து அனுப்பி வைப்பதாகத் திட்டமிட்டிருக்கிறார்கள். ‘நிறையப் பேர் பணம் அனுப்புவதாகச் சொல்கிறார்கள். நிசப்தம் வழியாகப் பெற்றுத் தர முடியுமா?’ என்று குழுமத்தினர் வினவினார்கள். அதுவொன்றும் பிரச்சினையில்லை. தனிப்பட்ட நபர்களுக்கு அறக்கட்டளையிலிருந்து பணம் வழங்குவது சரியாக இருக்காது; நிறுவனங்களின் பெயர்களுக்கு நேரடியாகக் கொடுத்துவிடலாம் என்று சொல்லியிருக்கிறேன். பணம் சேர்ந்த பிறகு, எந்தப் பொருட்கள், எந்தக் கடை என்று முடிவு செய்தால் கடைகளின் பெயர்களுக்கு அறக்கட்டளையிலிருந்து நேரடியாகப் பணத்தைக் கொடுத்துவிடலாம். கடைக்காரர்களிடமிருந்து ரசீதைப் பெற்றுக் கொள்ளலாம்.

பேரிடர் நிவாரணப்பணிகளில் ‘இப்படித்தான்’ என்று எல்லாவற்றையும் முழுமையாகத் திட்டமிட்டு களத்தில் இறங்குவது சாத்தியமில்லை. போகிற போக்கில் சில முடிவுகளை எடுக்க வேண்டும். சென்னை ட்ரெக்கிங் குழுமம் மிக வெளிப்படைத்தன்மையானவர்கள். அர்ப்பணிப்புணர்வு கொண்டவர்கள். அவர்களுடன் எந்தவித தயக்கமுமில்லாமல் துணிந்து வேலை செய்யலாம். 

சென்னை ட்ரெக்கிங் குழுமத்தினர் நிசப்தம் கணக்கு விவரங்களை தமது குழுவில் அவர்கள் பகிரத் தொடங்கியவுடன் பணம் வரத் தொடங்கியிருக்கிறது.  

நேற்றைய தினம் நிசப்தம் அறக்கட்டளையின் வரவு செலவு கணக்கு விவரங்கள் வெளியிடப்பட்டது. பதினைந்து லட்சத்து எழுபத்தாறாயிரத்து அறுநூற்று முப்பத்தொன்பது ரூபாய் இருந்தது. (ரூ. 15,76,639.18) இன்றைய தினம் (19 நவம்பர் 2018) முதல் அறக்கட்டளையின் கணக்குக்கு வரக் கூடிய தொகையானது முழுமையாக டெல்டா பகுதிகளின் வெள்ள நிவாரணப்பணிகளுக்கு வழங்கப்பட்டுவிடும். சேரும் தொகைக்கு ஏற்ப அவ்வப்பொழுது வங்கியின் கணக்கு விவரங்களை நிசப்தம் தளத்தில் வெளியிட்டுவிடலாம். பணம் கொடுத்தவர்கள் சரி பார்த்துக் கொள்ளலாம்.

இன்றைக்கு டெல்டா நிவாரணப்பணிகளுக்காக அறக்கட்டளைக்கு வந்திருக்கும் ஒரு லட்சத்து பதின்மூன்றாயிரத்து இருநூறு ரூபாய் (ரூ.1,13,200.00) வங்கி ஸ்டேட்மெண்ட் இது-


குழுவினர் சேகரிக்கும் பொருட்கள்:

1. போர்வை
2. டார்ச் (அல்லது) சோலார் விளக்கு
3. வேஷ்டி,சேலை (புதியன மட்டும்)
4. லுங்க், துண்டு, நைட்டி(புதியன மட்டும்)
5. ஓடோமாஸ்
6. தார்பாலின்
7. அடிப்படையான சமையல் பொருட்கள்
8. மெழுகுவர்த்தி, தீப்பெட்டி.

பொருட்களைச் சேகரிக்கும் இடங்கள்:

சோழிங்க நல்லூர்: வேலம்மாள் பள்ளி, வேலம்மாள் வித்யாலயா, ராஜீவ்காந்தி சாலை, சோழிங்கநல்லூர் (எண்: 9442744640/9597119618)
திருவான்மியூர்: நேச்சுரல்ஸ், 25/3, கிழக்கு மாதா தெரு, திருவான்மியூர் (எண்: 9840130464/48590310)
தாம்பரம்: G5, ரூபி வொயிட் ஹவுஸ், காந்தி பூங்கா அருகில், பரத்வாஜர் தெரு, கிழக்கு தாம்பரம் (9003259872/7845780996)
வேளச்சேரி: F3, ப்ளாட் எண்: 333, சபையர் நெஸ்ட், வள்ளல்கரி தெரு, மடிப்பாக்கம், சென்னை 91 (98438011043)
தி.நகர்: காபி சாஸ்த்ரா, 45, கே.சி.என்களேவ், பஸுல்லா சாலை, தி.நகர் (பார்பி க்யூ நேஷன் அருகில்)
வளசரவாக்கம்: #73, காமராஜர் தெரு, இந்திரா நகர், சிவன் கோவில் குளம் பின்புறம், வளசரவாக்கம் (எண்: 9841166554)
திருநெல்வேலி : வேதிக் வித்யாஸ்ரமம் பள்ளி, மதுரை சாலை, தச்சநல்லூர், திருநெல்வேலி (95850 12345, 0462-2325101,102)
மதுரை: வேலம்மாள் நினைவு மெட்ரி மேல்நிலைப்பள்ளி, பேச்சிகுளம் திருப்பாலை, மதுரை (04522683101 / 103)
காரைக்குடி: தி லீடர்ஸ் ஜூனியர் பள்ளி, சேக்களை இரண்டாம் தெரு, பி.கே.என் மருத்துவமனை அருகில், காரைக்குடி(9944164374)
பொள்ளாச்சி: தமிழம் மீன் வலையகம், பவர் எலெக்ட்ரிக்கல் அருகில், ஏடிஎஸ்சி திரையரங்கம் அருகில், பொள்ளாச்சி (9715405653)
தென்காசி: வேல்ஸ் வித்யாலயா, முத்துராமலிங்கம் கார்டன், தென்காசி-திருமலைக்கோயில் பிரதான சாலை, எலத்தூர், செங்கோட்டை (9486457665)
அம்பாசமுத்திரம் : வேல்ஸ் வித்யாலயா, ராஜேஸ்வரி கார்டன், தென்காசி பிரதான சாலை, மன்னர் கோயில், அம்பாசமுத்திரம் (9994031302)
நாகர்கோவில் : அண்ணாச்சி ஆர்கானிக் கடை, வெள்ளடிச்சிவிளை, கோட்டார், நாகர்கோவில் (9789433783)

நன்கொடையை பணமாக அனுப்ப விரும்புகிறவர்கள் நிசப்தம் அறக்கட்டளையின் கணக்குக்கு அனுப்பி வைக்கலாம்.

Account Number: 05520200007042
Account Holder Name: Nisaptham Trust
Account Type: Current
Bank : Bank Of Baroda
State : Tamil Nadu
District : Erode
Branch : Nambiyur
IFSC Code : BARB0NAMBIY (5th character is zero)
SWIFT Code: BARBINBBCOI
Branch Code : NAMBIY (Last 6 Characters of the IFSC Code)
City : Nambiyur

தொடர்ச்சியான விவரங்களுக்கு:
www.nisaptham.com

Nov 18, 2018

அறக்கட்டளையில்..

செம்ப்டம்பர் 06 ஆம் தேதிக்குப் பிறகான நிசப்தம் அறக்கட்டளையின் வரவு செலவு விவரம் இது. செப்டெம்பர் 05 ஆம் தேதி வரைக்குமான வரவு செலவு விவரங்களை இணைப்பில் பார்க்கலாம். 

1. ஏழு பள்ளிகளில் நூலகம் அமைப்பதற்காக முப்பத்தைந்தாயிரம் ரூபாய் (ஒவ்வொரு பள்ளிக்கும் தலா ஐந்தாயிரம் ரூபாய்) பாரதி புத்தகாலயம் மூலம் வழங்கப்பட்டிருக்கிறது. (வரிசை எண்: 25)

2. தற்கொலை செய்து கொண்ட கால்நடைக் கல்லூரி மாணவன் அசாரூதினின் கல்லூரிக்கட்டணம் (வரிசை எண்: 28)

3. பனையம்பள்ளி அரசு ஆரம்பப் பள்ளிக்கு கணினி வாங்கிக் கொடுப்பதற்காக பத்தாயிரம் ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது. (வரிசை எண்: 29)

4. தக்கர் பாபா பள்ளிக் குழந்தைகளுக்கு தீபாவளி ஆடை வாங்குவதற்காக வழங்கப்பட்ட தொகை ரூபாய் இருபத்தைந்தாயிரம். (வரிசை எண்: 34)

5. ஐ.ஆர்.டி.டி கல்லூரியில் பொறியியல் படிக்கும் மாணவி சுஜியின் கல்லூரிக் கட்டணம் (வரிசை எண்: 46)
அறக்கட்டளையின் நிதி முப்பது லட்ச ரூபாய் நிரந்தர வைப்பு நிதியில் வைக்கப்பட்டிருக்கிறது. மூன்றாவது மாதம், நான்காவது மாதம் மற்றும் ஐந்தாவது மாதங்களில் இவை முதிர்வுத் தொகையாக அறக்கட்டளையின் கணக்குக்கு வரும். அதற்கான ரசீதுகள் கீழே இணைக்கப்பட்டிருக்கின்றன. 


ஏதேனும் சந்தேகங்கள், கேள்விகள் இருப்பின் தொடர்பு கொள்ளவும். இப்பொழுதெல்லாம் வரவு செலவு விவரம் பற்றியெல்லாம் யாருமே கண்டுகொள்வதில்லை. பணம் அனுப்புகிறவர்கள் அவர்கள் பாட்டுக்கு அனுப்பிக் கொண்டேயிருக்கிறார்கள்.

vaamanikandan@gmail.com

Nov 17, 2018

புயல்

சில விவகாரங்களில் அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வந்துவிட வேண்டியதில்லை. புயல் கரையைக் கடந்த அடுத்த அரை மணி நேரத்தில் இதுதான் நிலவரம் என்ற முடிவுக்கு வருவதெல்லாம் சரியானதில்லை. ஓய்ந்து, மழை நின்ற பிறகு வீட்டை விட்டு வெளியே வந்து பார்க்கும் போதுதான் கோரதாண்டவம் கண்ணுக்குத் தெரியும். கஜ புயலுக்கு முன்பான அரசு எந்திரத்தின் செயல்பாடு பாராட்டக் கூடியதுதான். அதிகாரிகள் குழு ஓரளவுக்கு முன்னேற்பாடுகளைச் செய்திருந்தார்கள். ஆனால் அது யானைப்பசிக்கு சோளப் பொரிதான் என இன்றைய செய்தித்தாள்களையும் தொலைக்காட்சிகளையும் பார்த்தவர்கள் புரிந்து கொண்டிருப்பார்கள். பல பகுதிகளையும் சுருட்டி வீசியிருக்கிறது. மாநிலத்தில் கிட்டத்தட்ட  மத்தியப் பகுதியில் இருக்கும் திண்டுக்கல் கூட கிழிந்த காகிதமாகியிருக்கிறது. புதுக்கோட்டை, பேராவூரணி மாதிரியான ஊர்களில் இருக்கும் நண்பர்கள் கதறுகிறார்கள். படுமோசமான விளைவுகளைப் புயல் உருவாக்கியிருக்கிறது.

உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமென்றால் முத்துக்குமாரின் பதிவு இது-


இருபத்தைந்து வருட உழைப்பை நண்பர் இழந்திருக்கிறார். 260 தென்னை மரம், பத்து வருடம் வளர்த்த 500 தேக்குமரங்கள், 20 ஏக்கர் நெல் என அவர் இழந்தது மிகப்பெரியது.  இருபது நாட்களுக்கு முன்பாக அவருடைய வயலின் படம் கீழே இருக்கிறது.


பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம். 

அரை ஏக்கரிலும் ஒரு ஏக்கரிலும் கடன் வாங்கி விவசாயம் செய்தவர்கள், வாங்கிய கடனுக்கு வட்டி கட்டுவதற்காக வளர்த்து வந்த கால்நடைகள், கோழிகள் என எல்லாவற்றையும் இழந்து நிற்கும் விவசாயிகள் பல்லாயிரம் பேர் இருக்கக் கூடும்.  முப்பதுக்கும் மேற்பட்ட மனிதர்களின் மரணம் என்பது சாதாரணமானதில்லை. ஏகப்பட்ட கால்நடைகள் இறந்திருக்கின்றன. மரங்கள் சாய்வதையும், விவசாயம் அழிவதையும் தடுத்திருக்க முடியாது என்றாலும் உயிர்ச்சேதத்தை அரசு நிச்சயம் தடுத்திருக்க முடியும். 

முன்னேற்பாடுகள் ஒரு பக்கம் என்றால் நிவாரணப்பணிகள்தான் மிக முக்கியம். தம் உழைப்பை, சொத்துக்களை இழந்து நிற்கும் அவர்களுக்கான சிறு ஆறுதல் என்பது நிவாரணப்பணிகள்தான். ஆனால் நிவாரணப்பணிகள் மிக மோசமாக இருப்பதாகத்தான் அந்தப் பகுதி நண்பர்கள் சொல்கிறார்கள். யாரையும் குறை சொல்ல வேண்டும் என்று நினைக்கவில்லை. இவ்வளவு அவசரமாக ‘கூஜாவானது கஜா’ என்று ஆளும் வர்க்கத்தினர் மார்தட்டிக் கொள்ள வேண்டியதில்லை. விளம்பர வெளிச்சத்துக்காக எளிய மக்களின் வலியில் விளையாட வேண்டியதில்லை. இதையெல்லாம் பார்க்கும் போது வேதனையாக இருக்கிறது. ஏதோவொரு கிராமத்தில் குடும்பத்தோடு அழுது கொண்டிருக்கும் ஏழை விவசாயின் கண்ணீரைத் துடைக்க வேண்டியது அவசியம். 

மின் இணைப்புகளை சரி செய்தல், குடிநீர் விநியோகம், சாலைகளை சரி செய்தல் ஆகியவற்றில்தான் அரசின் கவனம் இருக்க வேண்டும். இந்தச் சமயத்தில் உடனடி நிவாரண உதவிகளை வழங்க தன்னார்வ அமைப்புகள் முன் வர வேண்டும். ஏற்கனவே சில அமைப்புகள் களத்தில் இறங்கியிருக்கின்றன. அவர்களுக்கு வாழ்த்துக்கள். இது போதாது என்றுதான் தோன்றுகிறது. அதே சமயம் எல்லாவற்றிலும் ‘எமோஷனலாக’ மாறி, கொண்டு போய் குவிக்கவும் வேண்டியதில்லை. உடனடியாகச் செயலாற்ற வேண்டியது அக்கம்பக்கத்து மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்தான். உணவு, உறைவிடப் பணிகளை அவர்கள் மேற்கொள்வது சரியாக இருக்கும். அவர்கள் ‘இன்னமும் தேவையிருக்கிறது’ என்று குரல் எழுப்ப எழுப்ப பிற மாவட்டங்களைச் சார்ந்தவர்கள் கை கோர்த்துக் கொள்ளலாம்.

இப்போதைக்கு தூரப் பகுதிகளைச் சார்ந்தவர்கள் மறு-நிர்மாணம் சார்ந்த திட்டமிடலைச் செய்ய வேண்டும். கேரளாவில் வயநாட்டில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ‘Donate a Cow' என்ற முன்னெடுப்பை ஹர்ஷா என்றொரு அதிகாரி செய்து வருகிறார். அந்த மாவட்டத்துக்கான பால்வள அபிவிருத்தி அதிகாரி அவர். தன்னார்வ அமைப்புகளில் பேசி அவர்களிடமிருந்து கறவை மாடுகளை வாங்கி பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு வழங்குகிறார். இன்னமும் பல மாத காலங்களுக்கு இந்தப் பணியைச் செய்யப் போவதாகச் சொன்னார். இத்தகைய பணிகள்தான் அவசியமானவை. பல நூறு குடும்பங்கள் மேலே வரும். 


இதையும் கூட கஜ புயலில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் யோசிக்கலாம். போலவே, தென்னை மரங்களை இழந்த குறுவிவசாயிகளுக்கு கன்றுகள் வாங்கி நட்டுத் தருவது, தொழில்களை இழந்த ஏழைகளுக்கு அவர்களுக்கான தொழில்களை மீண்டும் நிர்மாணிக்க உதவுவது போன்ற பணிகளைச் செய்வதற்கான திட்டமிடல்களைச் செய்யலாம். பொதுவாக இத்தகைய தருணங்களில் பேரிடரின் பாதிப்புகள் மறைவதற்கு முன்பாக கொட்டி குவித்து விடுவார்கள். நாம் அத்தனை பேருமே உணர்வுப்பூர்மானவர்கள்தான் இல்லையா? ஆனால் அடுத்த மாதத்திலிருந்து கண்டுகொள்ள ஆட்கள் இருக்க மாட்டார்கள். 

கஜ புயலிலிருந்து அத்தகைய மனநிலை சற்று மாறுபட வேண்டும். உள்ளூர்களில் சரியான நபர்கள் நீண்டகால நோக்கிலான செயல்பாட்டுடன் இறங்கிப் பணியாற்றுவது நல்ல பலன்களைத் தரும். அதுதான் அந்த மக்களுக்கான பெரிய ஆறுதலும் கூட. ஒவ்வோர் ஊரிலும் ஹர்ஷா மாதிரியான அதிகாரிகள் அமைவார்களா என்று சொல்ல முடியாது. மக்களே முன்னெடுக்க வேண்டியதுதான். 

Nov 13, 2018

அக்கினிக் குஞ்சுகள்

சூப்பர் 15 என்றொரு தொடர் நிகழ்வினை நடத்திக் கொண்டிருக்கிறோம். கடந்த ஆண்டு தொடங்ப்பட்டது. இந்த முறை அடுத்த மாணவர் குழுவைத் தேர்ந்தெடுக்கும் பணியை ஆரம்பித்திருக்கிறோம். பதினைந்து முதல் இருபது மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு தொடர்ச்சியான பயிற்சி வகுப்புகளை நடத்துகிறோம். சூப்பர் 15, சூப்பர் 16 அல்லது சூப்பர் 17 என்று எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இந்தப் பெயர் மாறுபடும். இந்த வருடத்திற்கான மாணவர்கள் சேர்க்கையினை நவம்பர் மாத இறுதிக்குள் முடிவு செய்து டிசம்பரில் முதல் வகுப்பைத் தொடங்கிவிட வேண்டும் என்பதுதான் திட்டம்.

கடந்த முறை வருடத்தின் தொடக்கத்திலேயே இந்த வகுப்புகளை ஆரம்பித்தோம். அத்தனை மாணவர்களும் தமிழ் வழிக் கல்வி என்பதாலும் கிராமத்தின் பின்னணி என்பதாலும் அவர்களால் கல்லூரிப் பாடத்திலேயே கவனம் செலுத்துவதில் சிரமங்கள் இருந்தன. அதனால் இந்த முறை வகுப்புகளை ஆரம்பிக்கும் தருணத்தில் மாணவர்கள் ஓரளவுக்கு ‘செட்டில்’ ஆகட்டும் என்பதும் ஒரு காரணமாக இருந்தது. 

கடந்த முறை நிசப்தம் வழியாக உதவி பெறும் மாணவர்களுக்கும் மட்டும் இந்தப் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த முறை அப்படியன்று. ‘பற்ற வைத்தால் போதும்’ என்கிற திறனுள்ள மாணவர்கள் அதே சமயத்தில் பற்ற வைக்க ஆள் இல்லாத மாணவர்களைத் தேர்ந்தெடுக்கவிருக்கிறோம். முறையாக விண்ணப்பங்களைப் பெற்று, நேர்காணல் நடத்தி மாணவர்களைத் தேர்ந்தெடுக்கவிருக்கிறோம்.  எளிய குடும்பப் பின்னணி கொண்ட மாணவர்களுக்கு மட்டும் இந்த வாய்ப்பு வழங்கப்படும். 

வகுப்புகள் ஈரோடு மாவட்டத்தில் நடத்தப்படும் என்பதால் வெகு தூர மாணவர்களை இந்த முறை சேர்த்துக் கொள்ள இயலாது. மாணவர்களுக்கும் அது சாத்தியமாகாது. அடுத்தடுத்த ஆண்டுகளில் வகுப்புகளைப் பரவலாக ஏற்பாடு செய்யும் போது பிற மாவட்ட மாணவர்களைச் சேர்த்துக் கொள்ளலாம்.  இந்த வருடம் ஈரோடு, திருப்பூர், கோவை, நாமக்கல், சேலம் மாணவர்கள் வகுப்புகளில் சேர்ந்து கொள்ளலாம்.  மாதத்தில் ஒரு நாள் (வார இறுதியில்) வகுப்பு நடைபெறும். ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.ஆர்.எஸ் தகுதியில் இருக்கும் அதிகாரிகள் பயிற்றுநர்களாக இருப்பார்கள். அவர்கள் தவிர ஆங்கிலம், மனோவியல் உள்ளிட்ட வல்லுநர்களும் வகுப்புகளை நடத்துவார்கள். அடுத்தடுத்து எதைப் படிக்கலாம், திறன் தேர்வுகளுக்கான தயாரிப்புகள் என்பதோடு சேர்த்து மொத்தமான ஆளுமை உருவாக்கப் பயிற்சியாக இருக்கும். 

கடந்த முறை பயிற்சி பெற்றவர்களில் ராஜேந்திரன் (ஐஐடியில் ஆராய்ச்சி முனைவராகச் சேர்ந்திருக்கிறார்), அரவிந்த் (மீன்வளக் கல்வியில் முதலாண்டு முடிக்கிறார்), தமிழரசன், சார்லி, விக்னேஷ் உள்ளிட்ட ஜிம்னாஸ்டிக் மாணவர்களைக் குறிப்பாகச் சொல்ல முடியும். இந்த வருடம் அதைவிடச் சிறப்பான முடிவுகளை அடைய வேண்டும் என்பதுதான் இலக்கு. 

மாணவர்கள் தங்கள் விவரங்களை மின்னஞ்சல் அல்லது தபால் வழியாக அனுப்பி வைக்க வேண்டும். (பெயர், கல்லூரி, எந்த ஆண்டு படிக்கிறார், ஊர்) ஆகிய விவரங்களை அனுப்பி வைத்தால் முதற்கட்டத் தேர்வுக்குப் பிறகு நேர்காணலுக்கு அழைக்கிறோம். நவம்பர் 22க்குள் இந்த விவரங்களை அனுப்பி வைக்கவும். அந்த வார இறுதியிலேயே நேர்காணல் நடத்தப்படும். டிசம்பர் முதல் வாரத்தில் வகுப்புகளைத் தொடங்கிவிடலாம். 

மேலதிக விவரங்களுக்கு +91 98420 97878 (திரு. அரசு தாமஸ்) என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும். 

இந்தத் தொடர் பயிற்சிக்குக் கட்டணம் எதுவுமில்லை. முழுமையான இலவசப் பயிற்சி. தவிர்க்க முடியாத காரணங்களைத் தவிர வேறு எந்தக் காரணத்தைச் சொல்லி ஒரு வகுப்புக்கு வராமல் இருந்தாலும் அடுத்த வகுப்புக்கு அனுமதி மறுக்கப்படும். மாணவர்களுக்கு வழிகாட்டிகள்(Mentor) நியமிக்கப்படுவார்கள். அவர்கள் மாணவர்களைப் பின்தொடர்வார்கள். 

“அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்-அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்;
வெந்து தணிந்தது காடு;-தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?
தத்தரிகிட தத்ரிகிட தித்தோம்.”

அக்கினிக் குஞ்சுகளை அடையாளம் காண உதவுங்கள். முதலாமாண்டு அல்லது இரண்டாமாண்டு படிக்கும் மாணவர்கள் யாரேனும் இந்தப் பயிற்சி வகுப்புக்குப் பொருத்தமானவர்களாக இருப்பார்கள் எனக் கருதும் பட்சத்தில் அவர்களிடம் இந்தத் தகவலைப் பகிரவும்.  

நன்றி.

Nov 9, 2018

இலவசம்தான்யா நாட்டையே கெடுத்துச்சு...

‘இலவசத்தைக் கொடுத்துக் கொடுத்து நாட்டையே சீரழிச்சு வெச்சுட்டாங்க’ இந்த வசனத்தை யார் ஆரம்பித்து வைத்தது என்று தெரியவில்லை. அரைவேக்காடுகள் இதையே பிடித்துக் கொண்டார்கள். 

வாய்க்கால் வழியோடும் நீரை அள்ளிக் குடிப்பது போல சில இலவசங்களை அனுபவித்திருக்கிறேன். சட்டென்று இலவச பஸ் பாஸ் நினைவுக்கு வருகிறது. பள்ளிப்படிப்பு கூட இலவசம்தான். சுயபுராணம் அவசியமில்லை. ஆனால் யோசித்துப் பார்த்தால், நேரடியாகவோ அல்லது மறைமுகவாகவோ தமிழகத்தில் பெரும்பாலான கிராமத்தவர்கள்/நடுத்தர ஏழை மக்கள் இலவசத்தை ஏதாவதொரு வகையில் அனுபவித்திருப்பார்கள் என்று உறுதியாகச் சொல்ல முடியும். இப்படி அனுபவித்து மேலே வந்தவர்களே ‘இலவசம்தான்யா நாட்டையே கெடுத்துச்சு’ என்கிறார்கள். அதுவொரு ஃபேஷன்.

இலவசம் என்பதில் நூறு சதவீதம் சரியான தன்மை இருக்கிறது எனச் சொல்ல முடியாது. குளறுபடிகள் இருக்கின்றன. இலவசத்தை அரசியலாக்கியிருக்கிறார்கள். ‘ஆதரவற்றோர் நிதி வாங்கணும்ன்னா கூட கட்சியின் உறுப்பினர் அட்டை அவசியம்’ என்று பேசுகிற அயோக்கிய அரசியல்வாதிகள் இருக்கிறார்கள். இலவசம் என்பதனை வாக்குக்கான உபாயமாக்கியிருக்கிறார்கள். ஆனால் இத்தகைய குறைகளையெல்லாம் மட்டும் தரவுகளாக வைத்துக் கொண்டு பொதுப்படையாகப் பேசினால் அரைவேக்காடு என்றுதான் சொல்ல வேண்டும். 

சில நாட்களுக்கு முன்பாக தர்மபுரிப் பக்கம் ஒருவரைப் பார்க்க வேண்டியிருந்தது. மலைகளுக்குள் ஒரு கிராமம் அது. வேறொரு நண்பர் பைக்கில் அழைத்துக் கொண்டு போனார். கடுமையான வறட்சி நிலவுகிற பகுதி. ஒரு கிராமத்தின் ஆலமர நிழலில் இளநீர் வைத்திருந்தார் ஒருவர். நான்கு இளநீர் மட்டும்தான். அநேகமாக ஒரு நாளைக்கு அவ்வளவுதான் வியாபாரம் ஆகும்.

அமர்ந்து பேசிக் கொண்டிருந்த போது ஒரு ஆயாவைக் காட்டினார். தொண்ணூறு வயதிருக்கும். கூனிக் குறுகி படுத்திருந்தது. மாதமானால் ஆதரவற்றோர் நிதி ஆயிரம் ரூபாய் வருகிறது. அதை வாங்கி உயிரை ஓட்டிக் கொண்டிருக்கிறது. கிழிந்த ஆடையைப் போலக் கிடந்த அந்த ஆயாவை யார் பார்த்தாலும் மனம் நெகிழ்ந்துவிடும். அதே ஆதரவற்றோர் நிதியை வாங்குகிற வேறு ஆட்களையும் தெரியும். மகன் அரசு அதிகாரியாக இருப்பான். ஆனால் அம்மாவோ அப்பாவோ அரசு நிதி வாங்கிக் கொண்டிருப்பார்கள். ‘இவங்களுக்கு என்ன கேடு?’ என்று இலவசத்தை விமர்சிக்கும் நம் கண்களுக்கு அந்த தர்மபுரி ஆயா எந்தக் காலத்திலும் புலப்படாது என்பதுதான் துரதிர்ஷ்டம். ஒருவன் அரசாங்கத்துப் பணத்தைத் திருடுகிறான் என்பதற்காக அந்த ஆயாவுக்கும் சேர்த்து ஆதரவற்றோர் நிதியைக் கொடுக்கக் கூடாது என்பது எந்தவிதத்தில் நியாயம் ஆகும்?

அதே தர்மபுரியில்தான் கிராமங்களில் ஆண்களைச் சர்வசாதாரணமாக பகல் நேரத்தில் பார்க்க முடிந்தது. வேலைக்குப் போகாத மனிதர்கள். தர்மபுரியில் மட்டுமில்லை- பல ஊர்களிலும் இதுதான் நிலைமை. ‘எங்கே சார் வேலையிருக்குது’ என்கிறார்கள். பெங்களூரிலும் சென்னையிலும் அமர்ந்து வசனம் எழுதினால் ‘இலவசம் மட்டுமில்லைன்னா வேலைக்கு போய்டுவாங்க’ என்று எழுதலாம். எத்தனை கிராமங்களில் வருடத்தின் அனைத்து நாட்களிலும் வேலை இருக்கிறது என்பது கிராமத்து ஆட்களுக்குத்தான் தெரியும். எதையும் இட்டுக்கட்டிச் சொல்லவில்லை. மிகப் பின் தங்கிய கிராமத்தின் மளிகைக்கடைக்காரர் ‘எம்பொண்ணு சென்னையில் இருக்கா’ என்று மிகச் சாதாரணமாகச் சொல்கிறார். எப்படி சாத்தியமானது? வேலையே இல்லாத கிராமத்திலிருந்து எப்படி ஒருவன் தலையெடுக்கிறான்? ‘சோத்தையும் போட்டு புள்ளையையும் பார்த்துக்கிறாங்க; வீட்ல இருக்கிறதுக்கு பதிலா பள்ளிக்கூடம் போகட்டும்’ என்று நினைக்கிற பெற்றோரின் சதவீதம் இங்கு அதிகம். அப்படித்தான் பலருக்கும் பள்ளிக்கூடம் அறிமுகமாகிறது.

‘பை வாங்கக் காசு கொடு; புஸ்தகம் வாங்கக் காசு கொடு; செருப்பு வாங்கக் காசு கொடுன்னு கேட்கிறதா இருந்தா நீ பள்ளிக்கூடமே போக வேண்டாம்’ என்று சொல்கிற பெற்றோர்கள் இல்லையென்று நினைக்கிறீர்களா? அப்படி நினைத்தால் உங்களுக்கு நிதர்சனத்தைப் பற்றிய எந்தப் புரிதலுமில்லை என்று அர்த்தம். அப்படிப்பட்ட பெற்றோரின் குழந்தை பள்ளியில் படிக்க வேண்டுமானால் எல்லாவற்றையும் இலவசமாகத்தான் கொடுத்தாக வேண்டும். 

‘பத்தாவது முடிச்சுட்டா தாலிக்குத் தங்கம் கிடைக்கும் என்று நினைப்பவர்கள் எவ்வளவு பேர் என்று யோசித்திருக்கிறீர்களா? ‘இந்த ஒரு வருஷம் படிச்சா லேப்டாப் கிடைக்கும்’ என்பார்கள். ‘சைக்கிள் கிடைக்கும்’ என்பார்கள்.  இப்படி ஏதாவதொரு இலவசத்துக்கு ஆசைப்பட்டு ஒரு வருடப் படிப்பைத் தொடர்கிற மாணவனோ மாணவியோ பள்ளிப்படிப்பை வெற்றிகரமாக முடித்துக் கல்லூரியில் சேர்வது விபத்து என்று கருதினால் அது உங்களின் புரிதலில் இருக்கும் பிழை. ‘நூத்துல ஒருத்தன்தான் அப்படி மேலே வருவான்’ என்று சாதாரணமாகச் சொல்லிவிடலாம். தொண்ணூற்றொன்பது பதராகப் போனாலும் ஒன்று மணியானதே என்று சந்தோஷப்பட வேண்டும் என்பதுதான் சரியான அணுகுமுறை. 

குவாரியில் கல் உடைக்கும் பெற்றோரின் குழந்தை கல்லூரி வரைக்கும் போய் காவல்துறையில் பணியில் சேர்ந்ததை நேரடியாகப் பார்த்திருக்கிறேன். ஒய்யல், வாழை மாதிரியான சில அமைப்புகள் கிராமங்களிலும் நரிக்குறவர் மாதிரியான விளிம்புநிலை மக்களிடத்தும் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் விசாரித்துப் பார்த்தால் தெரியும். அவன் படிக்கிறான், வேலைக்குப் போகிறான் என்பது இரண்டாம்பட்சம். முழுமையாக எழுதப்படிக்கத் தெரிந்தவன் ஆகிவிடுகிறான்.  அது பெரிய பலனில்லையா? இனிமேல் இங்கு கல்வி இலவசமில்லை. சோறு இலவசமில்லை என்று சொல்லிப் பாருங்கள். ‘படிச்சுக் கிழிச்சது போதும்; வேலைக்கு போகட்டும்’ என்று தள்ளுகிற பெற்றோர்தான் கணிசமாக இருப்பார்கள். 

இதையெல்லாம் சொன்னால் கல்வி, சோறு எல்லாம் இலவசமாகக் கொடுப்பதில் பிரச்சினையில்லை. மிக்ஸி, கிரைண்டர், டிவியெல்லாம் அவசியமா? என்று கிளம்பிவிடுவார்கள். கூலி வேலைக்குச் செல்கிற பெண்கள் காலையில் ஆறு மணிக்கு சோறாக்கி வைத்துவிட்டு தோட்டத்தில் இருப்பார்கள். அந்தப் பெண்களிடம் விசாரிக்க வேண்டும். கிரைண்டர் பிரையோஜனமாக இருக்கிறதா? மிக்ஸியைப் பயன்படுத்துகிறீர்களா? என்றெல்லாம். பத்து மணிக்கு ஐடி நிறுவனத்துக்கு வேலைக்குச் செல்வதற்காக எட்டு மணிக்கு எழுந்து சாண்ட்விச் சாப்பிட்டுவிட்டுக் கிளம்புகிறவர்களுக்கு இதன் பலன்கள் புரியுமா என்று தெரியவில்லை.

‘இந்தப் பக்கம் இலவசத்தை வாங்கி வித்துட்டு அடுத்த பக்கம் டாஸ்மாக்ல குடிக்க போய்டுறான்’ என்பதும் ஒரு பாப்புலர் டயலாக். இப்படி நம்முடைய கண்களுக்குத் தவறுகள் மட்டுமேதான் தெரியும். திமிரெடுத்தவன் கைகளுக்கு போகிற இலவசங்களை மட்டும்தான் விமர்சிப்போம். ஆனால் அதே இலவசத்தை வாங்குகிற எளிய மனிதர்கள் எல்லாப் பக்கமும் இருக்கிறார்கள். அவர்கள் தரப்பு நியாயத்தை ‘பன்ச்’சாக எழுதினால் கைதட்டு கிடைக்காது அல்லவா? விட்டுவிடுவோம்.

எல்லாவற்றிலும் குறைகள் இருக்கத்தான் செய்யும். அதுவும் இவ்வளவு நெரிசல் மிகுந்த தேசத்தில், அரசியல் என்பதே வியாபாரமாகிவிட்ட காலத்தில், அரசாங்கம் பெரும்பாலான மக்களை மனதில் வைத்துக் கொண்டு சில திட்டங்களை நிறைவேற்றும் போது குறைகள் அதிகமாகத்தான் இருக்கும். இலவசப் பொருட்களுக்கான டெண்டர் விடுவதில் தொடங்கி டெண்டரை எடுத்தவனிடம் கமிஷன் வாங்குவது வரை ஏகப்பட தில்லாலங்கடி வேலைகள் இருக்கின்றன. மறுக்கவில்லை. அதே சமயம் இந்தச் சமூகத்தின் இண்டு இடுக்குகளைப் புரிந்து கொண்டு குறைகளை நிவர்த்தி செய்வதற்கான சாத்தியங்களை முன்வைக்கலாம். அதைவிட்டுவிட்டு ‘இலவசம்தான் நாட்டைக் கெடுக்குது’ என்று வாட்ஸாப்பில் வருவதைப் பார்த்துப் பேசிக் கொண்டிருந்தால் அதைவிட முட்டாள்த்தனம் எதுவும் இருக்க முடியாது.

Nov 6, 2018

ஞானம்

நரகாசுரனைத் தமது ஆளாக ஏற்றுக் கொண்டு ‘திராவிட விருந்து’ ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருப்பதாக சுவரொட்டி கண்ணில்பட்டது. அநேகமாக ஆரியத்துக்கு எதிரான விருந்தாக இருக்கும். இன்னொரு குழு ‘முப்பாட்டன் நரகாசுரன்’ என்று போஸ்டர் அடித்திருந்தார்கள். அவர்களுக்கு எல்லோருமே முப்பாட்டன்தான். அடித்து விட வேண்டியதுதானே? இன்னொரு போஸ்டரில் நரகாசுரனைப் பறையர் இனத்தில் சேர்த்திருந்தார்கள். அடுத்தடுத்த வருடங்களில் இன்னும் சில சாதியினர் தமது சாதியில் சேர்த்துச் சாதிச்சான்றிதழ் வாங்கிவிடுவார்கள். இப்படி வகை தொகையில்லாமல் அலசிவிடுவதில் நம்மவர்களுக்கு நிகர் நம்மவர்தான். பார்க்கிறவனுக்குப் பைத்தியம் பிடித்துவிட வேண்டும். அவ்வளவுதான் நோக்கம். 

சீனி.வேங்கடசாமியின் ஆய்வுக் களஞ்சியத்தில் ஒரு குறிப்பு வருகிறது. அந்தக் குறிப்பின்படி சமண சமயத்தின் மகாவீரர் அந்தக் காலத்தில் ஒரு நாட்டின் அரண்மனையில் அமர்ந்து பிரசங்கம் செய்கிறார். விடிய விடியப் பேசிக் கொண்டிருக்கிறார். அதனை அந்த ஊர்க்காரர்கள் சிரத்தையாகக் கேட்டுவிட்டு ‘இனி இங்கேயே தூங்கிக்கலாம்...விடிந்து வீட்டுக்குச் செல்லலாம்’ என்று உறங்கிவிடுகிறார்கள். விடிந்து பார்த்தால் மகாவீரர் அந்த இடத்திலேயே வீடு பேற்றை அடைந்துவிடுகிறார்.  அதனைத் தெரிந்து கொண்ட அரசன் மகாவீரர் வீடுப் பேற்றை அடைந்ததன் நினைவாக இன்றைய தினத்தை ‘தீப வரிசை’ வைத்து நினைவில் நிறுத்தியிருப்போம் என்கிறார். அதுதான் தீபாவலி. (ஆவலி என்றால் வரிசை). 

நரகாசுரன் முப்பாட்டன், நரகாசுரன் பறையன் என்பதையெல்லாம் விட சீனி.வேங்கடசாமி சொன்னதுதான் ஓரளவு பொருத்தமானதாகவும் இருக்கிறது. அவர் வரலாற்று ஆய்வாளர். பொருத்தமாகத்தான் சொல்வார். 

தீபாவலி என்பது ஆரியப்பண்டிகை, தமிழ் மண்ணுக்குச் சம்பந்தமில்லாதது என்பதையெல்லாம் ஏற்றுக் கொள்ள வேண்டியதில்லை. அந்தப் பண்டிகை இங்கேயும் கொண்டாடப்பட்டதுதான். சமணம் செழித்திருந்த பகுதிகளில் நம் பகுதியும் ஒன்று. கொங்கு நாட்டில் இன்னமும் சமணக் கோவில்கள் நிறைய இருக்கின்றன. சமணர்களின் அடையாளங்கள், சமணச் சின்னங்களை பல இடங்களில் காண முடியும். விஜயமங்கலம், திங்களூர் ஆகிய கோவில்கள் சமணர்களின் கோவில்கள். மங்கலம், பள்ளி என்று முடிகிற ஊர்கள் பெரும்பாலும் சமணத் தொடர்பு கொண்ட ஊராக இருக்கும். கொஞ்சம் துருவிப் பார்த்தால் நமக்கே தெரியும்.  அப்படி சமணர்கள் செழித்திருந்த காலத்தில் இங்கும் தீபாவளி கொண்டாடப்பட்டிருக்கும். பிறகு நாயன்மார்கள், ஆழ்வார்கள் வலுவடைந்து சமணமும், சைவமும் இன்னபிற பிரிவுகளும் செழித்து நம் மண்ணில் சமணம் வீழ்ச்சியடைந்த போது தீபாவலிக்கும் ஒரு புராணக் கதையை இணைத்துவிட்டிருக்கக் கூடும். 

இப்பொழுது ‘பட்டாசு அதிகமா வெடிக்காதீங்கய்யா’ என்று நல்லெண்ணத்தில் ஒருவர் சொன்னால் கூட ‘நீ செத்துடு’ என்று மனசாட்சியே இல்லாமல் சொல்கிறார்கள். இவர்கள்தான் மதத்தைக் காக்க வந்தவர்கள் என்று கொடி பிடிக்கிறார்கள். அப்படியெல்லாம் எதுவுமில்லை. எல்லாவற்றையும் அரசியலாகவும், வாக்குகளாகவும், மதமாகவும் பார்க்கத் தொடங்கியதன் விளைவுகளைப் நேரடியாகப் பார்க்கத் தொடங்கியிருக்கிறோம். தீரன் சின்னமலையில் தொடங்கி வ.உ.சி வரைக்கும் எல்லோரையும் சாதியில் அடைத்துவிட்டோம். தீபாவலிக்கு இந்துக் கடைகளில் மட்டுமே துணி எடுங்கள் என்பது வரை கீழ்த்தரமான பிரச்சாரத்தை ஆரம்பித்திருக்கிறார்கள். எங்கே போய் முடியும் என்று தெரியவில்லை.

ஒரு விழாவைக் கொண்டாடும் போது அதன் ஆதி அந்தத்தைத் தெரிந்து கொள்வதில் தவறில்லை.  அது அவசியமும் கூட. ஒரு பண்டிகையை நேரடியாக நிராகரிக்காமலும், அப்படியே ஏற்றுக் கொள்ளாமலும் அதனைப் புரிந்து கொள்வதுதான் நமது சகிப்புத்தன்மை உயிர்ப்புடன் வைத்திருக்கும். இதுவரை நாம் கைக்கொண்டிருக்கும் சமத்துவத்தையும் நிலை நிறுத்தும். எல்லாவற்றையும் கண்களை மூடிக் கொண்டு ‘இது இல்லைன்னா அது’ என்று பேசினால் Polarizationல் தான் போய் முடியும். கொண்டாடுகிறவன் என் ஆள்; மறுக்கிறவன் எதிரி என்கிற வாதம் இப்படித்தான் வலுப்பெறுகிறது. 

ஒரு பண்டிகை குறித்து எப்படித் தெரிந்து கொள்வது? சில ஆய்வுகளைப் படிக்கலாம். விவாதங்களை நடத்தலாம். இது தொடர்ச்சியாக நடக்கும் போது சில ஆய்வுகள் நிராகரிக்கப்பட்டு புதிய கருத்துருவாக்கம் உண்டாகலாம். சீனி.வேங்கடசாமி சொன்னது முற்றிலும் தவறானதாகக் கூட இருக்கலாம். அதனை மறுத்துப் பேசலாம். தவறொன்றுமில்லை. இப்பொழுதெல்லாம் வரலாற்றை எழுதினால் கூட  ‘இவன் நம் எதிரி’ என்று முத்திரை குத்தி கும்மி எடுத்துவிடுவார்கள். காவியோ பச்சையோ- ஒருவன் வண்ண ஆடை உடுத்தி எதைச் சொன்னாலும் அதை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும். கேள்வியும் ஆகாது. விசாரணையும் ஆகாது. அதை மீறிப் பேசுகிறவர்கள், விவாதங்களை மேற்கொள்கிறவர்கள், ஆராய்ச்சிகளை முன் வைப்பவர்கள் எதிரிகளாக நிலை நிறுத்தப்படுகிறார்கள்.

ஒரு விழாவோ அல்லது பண்டிகையோ வேறொரு மதத்திலிருந்து இரவல் வாங்கப்பட்டிருக்கலாம். அதை இன்னொரு மதம் தன்னுடையதாக முழுமையாக சுவீகரித்துக் கொண்டு தனது அடையாளமாக மாற்றுவதிலும் தவறு எதுவுமில்லை. வரலாறு அப்படித்தான் நகரும். வல்லவன் கபளீகரம் செய்வான். ஆனால் அதை தம்முடைய உரிமையாக நிலை நிறுத்தி, மக்களைப் பகுப்பதற்கான ஆயுதமாக பயன்படுத்தும் போது அது பற்றிய சலனம் உண்டாக வேண்டியது அவசியம்.

தீபாவலி இந்த மண்ணில் கொண்டாடப்பட்ட பண்டிகைதான். தயக்கமில்லாமல் அதனைக் கொண்டாடலாம். சகமனிதனை பாதிக்காமல், அடுத்தவனை வீழ்த்தாமல், மனிதர்களைப் பகுக்காமல் கொண்டாடும் பண்டிகையாக அது இருக்கட்டும். இசுலாமியன் இந்துக் கடைகளிலும், கிறித்துவர்கள் இசுலாமியர்களின் கடைகளிலும் பொருட்களை வாங்கட்டும். யாரும் குறைந்து போய்விடுவதில்லை. நரகாசுரனை சாதியில் அடைத்தும் அதைக் கொண்டாட வேண்டியதில்லை. 

நிறைய விவாதிக்க இருக்கிறது. பண்டிகைகள் என்பவை சந்தோஷத்திற்குரியவை. சந்தோஷமானதாக மட்டுமே இருக்கட்டும்.

அனைவருக்கும் இனிய தீப ஒளித் திருநாள் வாழ்த்துக்கள். ஞானம் பரவட்டும்.

Nov 4, 2018

கனவின் முதற்புள்ளி

இரண்டு நாட்களுக்கு முன்பாக வேணிக்குப் பிறந்தநாள். நான் ஊரில் இல்லை. வழக்கமாக நடப்பதுதான். நேற்றுதான் கேக் கடைக்கு அழைத்துச் சென்றேன். அதுவும் கூட திட்டமிட்டதெல்லாம் இல்லை. ஊருக்குச் செல்லும் வழியில் வேணியின் நண்பர்களின் கேக் கடை இருக்கிறது. ‘அங்க போலாமா?’ என்று கேட்டாள். அதையும் மறுப்பது மனசாட்சிக்கே விரோதம். 

கேக் கடைக்காரர் சுதாகருடன் எனக்கு அறிமுகமுண்டு. பெங்களூரில் இருந்த போது கொஞ்சம் பேசியிருக்கிறேன். அவரது மனைவி பூர்ணிமாவும் வேணியும் நல்ல நண்பர்கள். வகுப்புத் தோழிகள். சுதாகரும் அதே வகுப்புதான். காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். பெங்களூரில் இருந்த போது சுதாகர் ‘மைண்ட் ட்ரீ’ மென்பொருள் நிறுவனத்தில் பணியில் இருந்தார். அதன் பிறகு கணவனும் மனைவியும் குழந்தையை எடுத்துக் கொண்டு சிங்கப்பூர் சென்றார்கள். அங்கே ஒன்றிரண்டு வருடங்கள் இருந்திருப்பார்கள் என நினைக்கிறேன். திடீரென்று மென்பொருள் வேலையை விட்டுவிட்டு வந்து கேக் கடை ஆரம்பித்துவிட்டார்.

வேணி சொன்ன போது ஆச்சரியமாக இருந்தது. எல்லோராலும் இப்படி முடிவெடுத்துவிட முடியாது. ஒன்றாம் தேதியானால் சம்பளம் வந்து கொண்டிருக்கிறது. வாழ்க்கை அமைதியாகப் போய்க் கொண்டிருக்கும் போது விட்டுவிட்டு வந்து வீதிக்கு வீதி கடையைத் திறந்து வைத்திருக்கும் மலையாளிகளுடன் சண்டை போடுவது லேசுப்பட்ட காரியமா என்று நினைத்தேன்.

நிலா’ஸ் கேக். 

டீக்கடை மாதிரியான அமைப்பு இல்லை. கே.எம்.சி.எச்சுக்குப் பின்னால் காளப்பட்டி செல்லும் சாலையில் வீடு ஒன்றை வாடகைக்குப் பிடித்து அலங்காரம் செய்து அட்டகாசமான கேக் கடையாக மாற்றியிருக்கிறார்கள். அதற்கே சில லட்சங்கள் செலவு பிடித்திருக்கும். 

‘உங்களுக்கு முன்னாடியே கேக் செய்யத் தெரியுமா?’ என்று நேற்று சுதாகரைக் கேட்டேன். 

‘இன்னைக்கு வரைக்கும் தெரியாது’ என்றார். முரட்டுத்தனமான தைரியம். அவர் கோயமுத்தூர் கூட இல்லை. வேறு ஏதோவொரு மாவட்டம். எப்படி கோவையை முடிவு செய்தார்கள் என்று தெரியவில்லை. ஊர் பற்றித் தெரியாது; தொழில் பற்றித் தெரியாது; கேக் பற்றித் தெரியாது. எல்லாமே துணிச்சல்தான். சுதாகரின் உறவுக்காரர் ஒருவர் கேக் கடையில் பணியாற்றியிருக்கிறார். அவருக்கு கேக் தயாரிக்கத் தெரியுமாம். இருவரும் இணைந்து தொழிலை ஆரம்பித்திருக்கிறார்கள். கேக் தயாரிப்பது உறவுக்காரரின் வேலை. கடை நிர்வாகம் தொடங்கி டெலிவரி பாய் வேலை வரைக்கும் சுதாகர் பார்த்துக் கொள்கிறார். 

பணம், காசு, உழைப்பு, இத்யாதி இத்யாதி கூட இரண்டாம்பட்சம். ஒரு தொழிலைத் தொடங்கினால் ‘நல்ல வேலையை விட்டுட்டு இப்படித் திரியறான் பாரு’என்று சொல்கிறவர்கள்தான் அதிகமாக இருப்பார்கள். பிற எல்லாவற்றையும் விட இந்த எள்ளலுக்கு பதில் சொல்வது அல்லது அவர்கள் சொல்வதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் தூர எறிவதுதான் பெரிய காரியம்.

கடந்த வருடம் நவம்பரில் கடையை ஆரம்பித்திருக்கிறார்கள். எப்படியும் கிறிஸ்துமஸ் வியாபாரம் காப்பாற்றிவிடும் என்று நம்பிக்கைதான். பத்து-பதினைந்து கிலோ கேக் செய்து வைத்துக் கொண்டு வழி மீது விழி வைத்துக் காத்திருந்தால் ஒரேயொரு ஆள் கூட வரவில்லையாம். நொந்து போனவர்கள் அடுத்த ஒரு வார காலத்தில் விளம்பரங்களைச் செய்து புத்தாண்டுக் கொண்டாட்டத்துக்குள் ஓரளவு வாடிக்கையாளர்களை ஈர்த்திருக்கிறார்கள். எல்லாமே அனுபவம்தான்.

இந்த வருட தீபாவளிக்கு ‘கான்செப்ட் கேக்’ தயாரித்து வைத்திருக்கிறார்கள். பட்டாசு வடிவங்களில் சாக்லெட்கள் இருந்தன. சில நிறுவனங்கள் ஆர்டர் கொடுத்திருக்கின்றன. ஆன்லைன் வழியாக நிறையப் பேர் கேட்டிருக்கிறார்கள். கணிசமான விற்பனை போலிருக்கிறது. ‘நட்டமுமில்லாமல், இலாபமுமில்லாத ஒரு நிலைக்கு வந்துவிட்டோம்’ என்றார். அதற்கு ஒரு வருடம் தேவைப்பட்டிருக்கிறது. இந்த இடத்துக்கு வருவதுதான் தொழிலில் மிகப்பெரிய சூட்சமம். வட்டிக் கணக்கு, வாடகை, ஆட்களின் சம்பளம், மூலப்பொருட்கள் என எல்லாவற்றையும் சமாளித்து இனிமேல் கைக்காசு போட வேண்டியதில்லை என்கிற இடத்துக்கு வந்துவிட்டால் போதும். அடுத்தடுத்த கட்டத்துக்கு நகர்ந்துவிடலாம். 

‘ஃப்ரான்ச்சைஸ் கேட்கிறார்கள்’ என்றார். இனி முன்னேறுவதில் பெரிய தடை இருக்காது எனச் சொல்லிவிட்டு வந்தேன். 

‘ஏதாவது தொழில் தொடங்க வேண்டும்’ என்று சிலர் சொல்வார்கள். ‘ஆனா எனக்கு ஒண்ணுமே தெரியாது’ என்றும் ஒரு வரியைச் சேர்த்துக் கொள்வார்கள். கொஞ்சம் விசாரித்துப் பார்த்தால் இங்கே தொழில் தொடங்குகிறவர்களில் தொண்ணூற்றைந்து சதவீதம் பேர் அப்படித்தான். அடியும் தெரியாது; முடியும் தெரியாது. அதையும் இதையும் செய்து கடைசியில் ஒரு ரூட் கண்டுபிடித்து மேலேறி வருகிறவர்கள்தான் பெரும்பான்மையானவர்கள். சுதாகர் கதையைச் சொல்ல வேண்டும் எனத் தோன்றியது.

www.nilascake.com
+91 9952720554

Nov 2, 2018

ஜெகஜாலக் கில்லாடிகள்

எங்கள் ஊரில் ஒரு வணிகர் இருந்தார். வீட்டில் மனைவி முறுக்கு சுட்டுக் கொடுத்தால் கொண்டு போய் விற்று வருவதுதான் அவரது வேலை. ருசி நன்றாக இல்லை என்றோ அல்லது நன்றாக இருக்கிறது என்றோ யாராவது சொன்னால் அப்படியே வந்து மனைவியிடம் சொல்லிவிடுவார். அவர் சரி செய்து கொள்ள வேண்டும். முறுக்கு பற்றிய டெக்னிக்கல் அறிவு எதுவும் வணிகருக்கு இல்லை. ஆனால் புதிய கடைகளைக் கண்டறிவது, விலை நிர்ணயம் செய்வது என சகலத்திலும் வணிகர் கில்லாடி. மனைவிக்கு வீட்டை விட்டு வெளியில் போகத் தெரியாது. ஆனால் இப்படியே கணவனும் மனைவியுமாக கோடிகளைச் சம்பாதித்து விட்டார்கள்.

இந்தக் கதை இருக்கட்டும். 

எட்டு வருடங்களுக்கு முன்பாக கூகிள் நிறுவனமானது சுற்றுலா மற்றும் பயணம் சார்ந்த மென்பொருட்களைத் தயாரித்து சந்தைப்படுத்திக் கொண்டிருந்த ITA Matrix என்ற நிறுவனத்தை வாங்கியது. எதற்கு கூகிள் சம்பந்தமில்லாமல் இதை வாங்குகிறது என்று பலரும் கேள்வியெழுப்பினார்கள். ஆனால் அதன் பிறகு கூகிள் பல புதிய சேவைகளை வழங்கத் தொடங்கியது. உதாரணமாக விமானத் தாமதங்களை முன் கூட்டியே கணிப்பது, பயணத் திட்டமிடல்களுக்கு உதவுவது- இப்படி வரிசையாக அடுக்கலாம். எல்லாமே பயணம் சம்பந்தப்பட்டது. 

இன்றைக்கு சில்லறை வணிகத்தில் அமேசானை அடித்துக் கொள்ள ஆள் இல்லையோ- இந்திய அண்ணாச்சி கடைகள் வரைக்கும் அது விட்டு வைக்கவில்லை. அதே போல கூகிள் சில வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறது. பயணத்துறையில் கூகிள் முழு ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்திருக்கிறது. இன்னமும் சில ஆண்டுகளில் இதன் வீச்சை புரிந்து கொள்ள முடியும். 

அமேசான், கூகிள் போன்ற நிறுவனங்களின் வல்லாதிக்கம் என்பது அரசியல்/வணிகம் சம்பந்தப்பட்டது. அப்படி வல்லாதிக்கத்தைச் செலுத்த தொழில்நுட்பம் அவசியமல்லவா? முறுக்குக்கடைக்காரரின் மனைவி பலமாக இருந்து, முறுக்கும் சுவையாக இருந்தால்தான் வணிகர் சந்தையில் ஆதிக்கம் செலுத்த முடியும். அதே போலத்தான் அமேசானாக இருந்தாலும் சரி; கூகிளாக இருந்தாலும் சரி தமது தொழில்நுட்பம் வலுவாக இருந்தால் மட்டுமே அடுத்த கட்டத்துக்கு நகர முடியும். 

அமேசான் சில்லறை வணிகத்தில் எவ்வாறு வெற்றி பெற்றது? 

முதலில் மக்களுக்கு எளிதாக ஷாப்பிங் செய்வதற்கு தேவையானவற்றை தமது வலைத்தளம் மூலம் செய்தது. பின்னர் அதன் வாடிக்கையாளர்களை மீண்டும் மீண்டும் வரக் கூடிய  விசுவாசமான வாடிக்கையாளர்களாக மாற்றி அதன் மூலம் மேலும் வளர்ச்சி அடைந்தது. மூன்றாவதாகத் தகவல், தகவல், மேலும் தகவல். ஒவ்வொரு வாடிக்கையாளரின் அத்தனை தகவலையும் சேகரித்தது. அடுத்த கட்டம்தான் முக்கியமானது. சேகரித்த தவலை எப்படி தொழில் விருத்திக்குப் பயன்படுத்துவது? வாடிக்கையாளர் எந்தப் பொருளைத் தேடுகிறார். எப்படி இருந்தால் வாங்குகிறார். எந்த வகையான பொருட்களை தவிர்க்கிறார் என அத்தனை தகவல்களையும் பகுத்துத் தொகுத்தது. அதுதான் டேட்டா அனலிடிக்ஸ். ஒரே தடவையில் இந்த வேலை முடிந்துவிடுவதில்லை. தொடர்ந்து உருவேற்றிக் கொண்டேயிருக்க வேண்டும். (continuous measurement, innovate/improvize). அதைத்தான் இந்த ஜெகஜாலக் கில்லாடி நிறுவனங்கள் செய்கின்றன. 

இந்த நுட்பத்தைத்தான் கூகிளும் செய்கிறது. அமேசானும் செய்கிறது.

கூகிள் நிறுவனத்திடம் ஏற்கனவே மிகுதியான தகவல் இருக்கிறது - மக்கள் கூகிள் மூளும் தேடும் தகவல்கள், ஜிமெயில் மூலம் பயணம் குறித்த விவரங்கள் என என்னைப் பற்றியும் உங்களைப்பற்றியும் நமக்கே தெரியாத பல விஷயங்கள் கூகிளுக்குத் தெரியும் . இந்தத் தகவல்களையெல்லாம் தன்னுடைய தொழில் விருத்திக்குப் பயன்படுத்துகிறது. ஒரு உதாரணம் சொல்ல வேண்டுமானால் எப்பொழுதாவது கோவா போகலாம் என்று ஒரு முறை கூகிளில் தேடி பிறகு விட்டுவிடுங்கள். அதன் பிறகு அது நம்மை வலை வீசிக் கொண்டேயிருக்கும். கோவா செல்வதற்கான சலுகையுடன் கூடிய விமான டிக்கெட், தங்கும் விடுதி வரைக்கும் எல்லாவற்றையும் கவர்ச்சியாகக் காட்டும். ஒருவனைக் கவிழ்க்க வேண்டுமானால் முதலில் அவனது ஆசையைத் தூண்ட வேண்டும். அதில் இந்த நிறுவனங்கள் கில்லாடிகள்.

இதையெல்லாம் பார்த்துத்தான் பல ஹோட்டல் மற்றும் விமான நிறுவனங்கள் ஏற்கனவே பெருந்தகவல் (பிக் டேட்டா) மற்றும் செயற்கை அறிவுத்திறம் (Artificial Intelligence) சார்ந்த முதலீடுகளை செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். காலங்காலமாக இந்தத் துறையில் இருப்பவர்கள் பயணியர் குறித்து பெருமளவிலான தகவல் இருக்கும். அதை தொழில்நுட்பத்தின் உதவி கொண்டு எப்படிப் பயன்படுத்திக் கொள்வது என்று தெரியாமல் ஒரு பலனுமிருக்காது. இன்னும் பத்தாண்டுகளில் ‘இங்கு ஆன்லைன் டிக்கெட் புக்கிங் செய்து தரப்படும்’ என அமர்ந்திருப்பவர்களின் எண்ணிக்கை எவ்வளவு குறைகிறது என்று மட்டும் கவனியுங்கள். காலி செய்துவிடுவார்கள்.

எல்லாமே தகவல்தான். அதை எப்படிச் செய்கிறோம் என்பதில்தான் இருக்கிறது. 

அமேசான்,  ஹோல் புட்ஸ் (Whole foods), மோர் சூப்பர் மார்கெட் முதலிய நிறுவனங்களை வாங்கியது போல கூகிளும் பயணத் துறையில் உள்ள மற்ற நிறுவனங்களைக் கபளீகரம் செய்ய வாய்ப்பிருக்கிறது. ஒரு ஸ்டார்ட்-அப் ஆரம்பிக்கலாம் என்று நினைப்பவர்கள் இதை மனதில் வைத்துக் கொண்டு கொஞ்சம் வளர்ந்தால் போதும். விற்றுவிட்டு பெருந்தொகையைக் கண்ணில் பார்த்துவிடலாம். 

தகவல்களைச் சேகரிப்பது மற்றும் தகவல் செயலாக்கம் இரண்டும் செய்த பின்னர் தான் தகவல் பகுப்பாய்வு செய்து அதில் இருந்து பயனுள்ள தகவல்களை எடுக்க முடியும். பெருந் தகவல்களை சேகரிப்பது மற்றும் தகவல் செயலாக்கம் குறித்து ஏற்கனவே நிசப்தம் தளத்தில் உள்ள சில கட்டுரைகளை வாசிக்கலாம்.

கட்டுரை ஆக்கம்: கீதா சுரேஷ்.

தகவல்களைச் சேகரிப்பது மற்றும் தகவல் செயலாக்கம் குறித்த கேள்விகளை  கீதாவுக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்: geethashdp@gmail.com