எல்லாமும் சரியாக நடப்பதில்லை. இந்த வருடத்திற்கான சூப்பர் 16 அணியைத் தொடங்கியிருக்க வேண்டும். கடந்த வருடத்து மாணவர்களில் கணிசமானவர்கள் சரியான திசையில் நகர்ந்துவிட்டார்கள். நூறு சதவீதம் வெற்றி என்று சொல்ல முடியாது. ஆனால் கிடைமட்டத்தில் கிடந்த மாணவர்களுக்கு அது சரியான வழிகாட்டல்தான். உத்வேகமும் தேவையானதாக இருந்தது. அதைச் சரியாகவே செய்தோம்.
சில குளறுபடிகள் இல்லாமல் இல்லை. பதினாறு மாணவர்களுக்கும் ஒரு வாட்ஸாப் குழுமம் தொடங்கியிருந்தோம். அதில் ஒருவன் சரியில்லை. ஒரு பெண்ணிடம் ‘உன்னைக் காதலிக்கிறேன்’ என்றெல்லாம் டார்ச்சர் செய்ய அந்தப் மாணவி என்னிடம் சொல்லாமல் அவரது பக்கத்து வீட்டில் ஒருவரிடம் சொல்லி எனக்குத் தகவல் வந்தது. அவனுக்கு வழிகாட்டியாக ஒரு பேராசிரியர் இருக்கிறார். அவரிடம் சொல்லிப் பேசி பிறகும் நானும் அழைத்து எச்சரித்து அனுப்ப வேண்டியிருந்தது. அந்த மாணவி ஐ.ஏ.எஸ் படிக்க விரும்புகிறவள். அம்மா கிடையாது. அறிவுரை சொல்லவும் ஆளில்லை. இவன் எப்படியோ தொலையட்டும் என்று விட்டுவிடலாம். அவளது வாழ்க்கை திசை மாறிவிடக் கூடாது என்கிற பயம்தான்.
இந்த வருடத்திற்கான பயிற்சி வகுப்புகளை ஜூலை அல்லது ஆகஸ்ட்டிலேயே தொடங்குகிற திட்டத்தில்தான் இருந்தோம். இந்த விவகாரம்தான் தடை போட்டுவிட்டது. இந்தக் காலத்திலும் மாணவர்களையும் மாணவிகளையும் தனித்தனியாக பிரிக்க வேண்டுமா என்ற யோசனை பலமானதாக மாறிவிட்டது. ‘படிக்க வைக்கிறேன் பேர்வழி’ என்று நாம் கிளம்ப அது வேறு எப்படியோ குழம்பி கடைசியில் ‘எம்புள்ள வாழ்க்கை இப்படி ஆகிடுச்சு’ என்று எந்தப் பெற்றோரும் பஞ்சாயத்துக்கு வந்து நின்றுவிடக் கூடாது அல்லவா?
வெள்ளிக்கிழமையன்று இன்னொரு சம்பவம். பி.வி.எஸ்.சி படித்துக் கொண்டிருக்கிறான். கால்நடை மருத்துவப்படிப்பைப் பொறுத்தவரையிலும் முதலாமாண்டில் அரியர் வைத்தால் மீண்டும் முதலாமாண்டைத் தொடர வேண்டுமாம். இவன் தோல்வியைடந்துவிட்டான். அன்றைய தினமே திருச்சி ரயில்வே ஸ்டேஷனிலிருந்து அழைத்தான். எனக்கு பயமில்லாமல் இல்லை. ரயில் ஓடுகிற சப்தம் கேட்கிறது. எப்படி பயமில்லாமல் இருக்கும்? கல்லூரிக்குச் செல்லவே பிடிக்கவில்லை என்றான். நிறையப் பேசி ‘அட ஒரு வருஷம்தானே? ஒண்ணும் பிரச்சினை இல்ல...படி...பார்த்துக்கலாம்’ என்றேன். அவன் கேட்பதாக இல்லை. வெகு நேர உரையாடலுக்குப் பிறகே சமாதானமானான் அல்லது சமாதானம் ஆனது போலப் பேசினான்.
வகுப்புச் சென்றவன் இரண்டொரு நாள் கழித்து ‘சார்..பீஸ் கட்டச் சொல்லுறாங்க’ என்றான்.
ஒன்பதாம் வகுப்பில் படிப்பை நிறுத்திவிட்டு ஊர் சுற்றிக் கொண்டிருந்தவன் அவன். யாரோ ஒரு அரசு ஊழியர் அவனை மீண்டும் பள்ளியில் சேர்த்துவிட பனிரெண்டாம் வகுப்பில் பள்ளியில் அவன்தான் முதலிடம். கால்நடை மருத்துவப்படிப்பில் சேர்த்துவிட்டிருந்தோம். நல்ல மாணவன்தான். ஆனால் ஸ்திரத் தன்மையற்றவன். அவனை நேரில் அழைத்து ஒரு மணி நேரம் பேசி இந்த வருடத்திற்கான காசோலையை எழுதிக் கொடுத்து அனுப்பி வைத்த பிறகு வெள்ளிக்கிழமையன்று ‘எலி மருந்தைக் குடித்துவிட்டான்’ என்று அலைபேசியில் அழைத்துச் சொன்னார் பேராசிரியர் தங்கப்பாண்டியன். அவர்தான் அவனுக்கு வழிகாட்டி (Mentor).
இரண்டு நாட்களாக மருத்துவமனையில் இருக்கிறான். ‘சார் பசங்க பார்த்துக்க முடியாது..வீட்டில் யார்கிட்டவாச்சும் தகவல் சொல்லிடுங்க’ என்று சொன்னார்கள். அவனுக்கு வீட்டில் யாருமில்லை. அம்மாவும் அப்பாவும் மருத்துவமனையில் கூடவே இருந்து பார்த்துக் கொள்கிற நிலைமையில் இல்லை. அதை விரிவாக எழுத வேண்டியதில்லை என நினைக்கிறேன். மாமா இருக்கிறார். ஆனால் அவரது அம்மா படுத்த படுக்கை. தனது அம்மாவைப் பார்த்துக் கொள்ள ஆள் இல்லை என்பது போலச் சொல்லிவிட்டார். என்ன செய்வது என்று குழப்பமாக இருந்தது.
மாணவனிடம் கடந்த வாரம் கூட இதுதான் பேசினேன். ‘உனக்குன்னு யாருமில்லை...கவனத்தை படிப்பிலும் வாழ்க்கையிலும் வை..ஒரு நிலைமக்கு வருவதற்கான முயற்சிகளை எடு’ என்றெல்லாம் பேசியதற்குத் தலையாட்டினான். ஆனால் பைத்தியகாரத்தனத்தைச் செய்திருக்கிறான். ஒரு வருடம் பயற்சியளித்து என்ன பலன்? வெறுமனே ‘நல்லா படி...ஐ.ஏ.எஸ் ஆகு’ என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை எனத் தோன்றுகிறது. அதை யார் வேண்டுமானாலும் செய்துவிட முடியும். வாழ்க்கையை நேரடியாக எதிர்கொள்கிற தைரியம்தான் அவசியம். முரட்டுத்தனமாக அடித்து வீசும் இந்தச் சூழலில் நீச்சலடிக்கிற மனவுறுதி தேவையாக இருக்கிறது. ஏதோவொரு கணத்தில் மனம் சஞ்சலப்பட்டுவிடுகிறது. எந்தவொரு தருணத்திலும் சலனமுறாத மனம் கொண்டவர்களாய் குழந்தைகளை மாற்ற வேண்டியிருக்கிறது. அதைத்தான் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்கவும் வேண்டும்.
இதையெல்லாம் சரியாகத் திட்டமிட்டுக் கொண்டு நவம்பரிலிருந்து அடுத்த சூப்பர் 16 அணியை உருவாக்க வேண்டும்.
இன்னமும் மருத்துவமனையில்தான் இருக்கிறான். ஒன்றும் பிரச்சினையிருக்காது எனவும் எலி மருந்து மெல்ல ஈரலை பாதிக்கும் தன்மை கொண்டது என்றார்கள். அவன் முழுமையாகக் குணமடைந்து வர இறைவனை பிரார்த்தித்துக் கொள்வதைத் தவிர வேறொன்றும் உபாயமில்லை. முதல் வரியில் சொன்னது போல எல்லாமும் சரியாகவே நடப்பதில்லை. சக்ஸஸ் ஸ்டோரிஸ் மட்டுமே அனுபவமாகவும் இருப்பதில்லை.
5 எதிர் சப்தங்கள்:
சில நேரம் அதிர்ச்சி வைத்தியமும் தேவை.
எலி மருந்து குடித்தவன் உடம்நலம் தேறிய பின் படிப்பை நிறுத்தி விட்டு அவன் போக்குக்கு விட்டு விடுங்கள்.
இல்லையென்றால் உங்கள் முன்னெடுப்புகளுக்கு தடையாய் இருப்பான்.
எலி மருந்து மெல்ல ஆளை கொள்ளும். வளர்ந்த களை ஒதுங்கி விடவும்.
Well said Sekkali.
உங்கள் ஒவ்வொரு அனுபவமும், (பக்க விளைவாக) உங்கள் மீது மரியாதையை கூட்டிகொண்டே செல்கிறது!
If you find anybody who cant control their mind. Please send them to http://www.dhamma.org --> Vipasana Meditation, This 10 days program @ Zero Cost a must for all of us. And a good for Super 16 Team as well. Nanri.
Post a Comment