காலையில் இந்த வீடியோவை ‘அடர்வனம் வாட்ஸாப் குழுமத்தில்’ பகிர்ந்திருந்தார்கள். கோட்டுப்புள்ளாம்பாளையம் கிராமத்து இளைஞர்கள் அடங்கிய குழு இது. அங்கு நேற்றிரவு நல்ல மழை. குளம் நிரம்பிவிட்டது. இந்த நாளுக்காகத்தான் வெகு நாட்களாகக் காத்துக் கொண்டிருந்தோம். பகடியாகப் பேசியிருந்தாலும் அவர்களின் குரலில் இருக்கும் சந்தோஷத்தைக் கேட்கலாம்.
மேட்டு நிலமாகக் கிடந்த குளம் இது. சுமார் முப்பதடி அளவுக்கு தூர் வாரி ஆழப்படுத்தியிருந்தோம். அதில்தான் நீர் நிரம்பியிருக்கிறது. வெகு சந்தோஷம் - ஒற்றை வரியில் சொல்லிவிட முடிகிறதுதான்.
அருகாமையில் அமைத்திருக்கும் அடர்வனமும் நன்கு செழித்திருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு நீரின்றி வறண்டு கிடந்தது. தூர் வாரி அதில் நீர் நிரம்பி பக்கத்திலேயே இரண்டாயிரம் செடிகளுடன் ஒரு வனத்தை உருவாக்கி அது செழித்து என அந்தப் பகுதியை இப்பொழுது நிறையப் பேர் வந்து பார்த்துவிட்டுச் செல்வதாகச் சொல்கிறார்கள். இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமையன்று உள்ளூர் இளைஞர்கள் சந்திப்பை ஏற்பாடு செய்திருக்கிறோம். அதற்குத் தகுந்தாற் போல குளமும் நிரம்பிவிட்டது.
‘குளத்தைப் பார்க்க வருகிறோம்’ என்று ஏற்கனவே சொல்லியிருந்த நண்பர்கள் ஞாயிறன்று வர இயலுமெனில் காலை பதினோரு மணிக்கு வரும்படி திட்டமிட்டுக் கொள்ளுங்கள். ஈரோட்டிலிருந்து நாற்பது நிமிட பயணம்தான். கோபிச்செட்டிபாளையத்திலிருந்து சத்தியமங்கலம் செல்லும் வழியில் ஐந்தாவது கிலோமீட்டரில் கிராமம் இருக்கிறது. குளத்து கரையிலேயே ஒரு கோவில் இருக்கிறது. அமர்ந்து பேசிவிட்டு வரலாம். அடர்வனம், குளத்தைத் அடுத்து அந்த ஊரில் வேறு என்ன காரியங்களைச் செயல்படுத்த முடியும் என்று திட்டமிட விரும்புகிறோம். ஏற்கனவே இது பற்றிய ஆலோசனைகளைச் செய்தோம். ஆனால் நடைமுறைப்படுத்தவில்லை. இந்தக் கூட்டத்தில் முடிவு செய்து ஆட்களைத் தேர்ந்தெடுத்து பொறுப்புகளை அவரவரிடம் விட்டுவிடலாம் என்று திட்டம். கிட்டத்தட்ட ஒரு மினி கிராமசபைக் கூட்டமாக இருக்கும்படி திட்டமிட வேண்டும்- செயலில் இறங்கும் கிராமசபைக் கூட்டம்.
அடர்வனம் நிகழ்ச்சிக்கு வந்திருந்த அரசியல்வாதிகளிடமும் அதிகாரிகளிடமும் இந்தக் குளத்தைச் சுற்றிலும் கம்பிவேலி அமைத்துக் கொடுங்கள் என்ற கோரிக்கையை முன் வைத்தோம். சரி என்றார்கள். ஆனால் செய்வார்களா என்று தெரியாது. வாய்ப்பு மிகக் குறைவு. இதையெல்லாம் இப்பொழுது பேசிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. இளைஞர்கள் உடன் நிற்கிறார்கள். இயற்கை துணை நிற்கிறது. நம்மால் இயன்ற காரியத்தைச் செய்து கொண்டிருக்கலாம். மற்றவர்களை விமர்சிப்பது, குறை சொல்வதைவிட ஆக்கப்பூர்வமான காரியங்களைச் செய்தால் போதும்.
இதே போன்று வேறொரு ஊரில் குளத்தைத் தயார் செய்து அடர்வனம் அமைக்கலாம் என்று முன்பே எழுதியிருந்தேன். ஒன்றிரண்டு பேர்கள் தொடர்பு கொண்டார்கள். ஆனால் அவை பொருத்தமானதாகத் தெரியவில்லை. மீண்டும் ஒரு நினைவூட்டல். உள்ளூரில் ஆட்களைத் திரட்டி இதற்காக பணி செய்ய இயலும் என்று நம்புகிறவர்களுடன் கரம் கோர்த்துச் செயல்பட நிசப்தம் சார்பில் விரும்புகிறோம். இன்னொரு குளத்தை மீட்டெடுப்போம். இன்னொரு கிராமத்தை மேம்படுத்துவோம். தோதானவர்கள் தொடர்பு கொண்டால் இது குறித்து விவாதிக்கலாம்.
உழைப்பும் அர்ப்பணிப்புமிருந்தால் எந்தவொரு மாற்றத்தையும் நேரடியாகக் காண முடியும். இந்தக் குளமே நேரடி சாட்சியம். எதுவும் சாத்தியமே.
உழைப்பும் அர்ப்பணிப்புமிருந்தால் எந்தவொரு மாற்றத்தையும் நேரடியாகக் காண முடியும். இந்தக் குளமே நேரடி சாட்சியம். எதுவும் சாத்தியமே.
நன்றி.