Aug 24, 2018

கேரளாவுக்காக

கேரளாவுக்கான நிவாரணப் பொருட்கள்-  போர்வை, லுங்கி, அரிசி உட்பட சுமார் ஒன்றரை டன் எடையுள்ள பொருட்களை நிசப்தம் நண்பர்கள் சென்னையில் சேகரித்து  வைத்திருக்கிறார்கள்.  இவற்றை அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கிறோம். 

இது தவிர, நிதியாக கிட்டத்தட்ட எட்டு லட்ச ரூபாய் (Rs. 7,90,189.00)  வந்திருக்கிறது.ஆரம்பத்தில் கருதியது போல இந்தத் தொகைக்கு நிவாரணப் பொருட்களை வாங்குவதைவிடவும் வேறு ஏதேனும் வகையில் பயன்படுத்தலாம் என்று ஆலோசனைகளைச் செய்து கொண்டிருக்கிறோம். 

ஒரு கிராமம் அல்லது ஒரு சிறு பள்ளிக்கூடத்தை தேர்ந்தெடுத்து அதை முழுமையாக புனரமைத்துக் கொடுக்கலாமா என்று விவாதம் நடைபெற்றுக்  கொண்டிருக்கிறது. ஒரு கிராமம் என்று எடுத்துக் கொண்டால் இந்தத் தொகை போதுமானதாக இருக்கும் என்று  தோன்றவில்லை. பள்ளிக்கூடம்  என்பது சரியானதாக இருக்கும்.

'வயநாடு நண்பர்கள்' என்று வாட்ஸாப் குழுமம் ஒன்றை உருவாக்கி இணைத்துவிட்டிருக்கிறார்கள். அவர்கள் ஆலோசனைங்களைச்  சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.இன்னும் ஒன்றிரண்டு நாட்களில் உறுதி செய்துவிட்டால் பணிகளை எவ்வாறு மேற்கொள்வது என்று திட்டமிட வேண்டும்.  அடுத்ததடுத்த கட்டத்தில் எழுதுகிறேன்.

நன்கொடையாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் நண்பர்களுக்கு நன்றி.

இணைந்திருங்கள்.
Aug 20, 2018

இதுவரையிலும்...

கேரள நிவாரண பணிகளுக்காக இதுவரையிலும் பணமாக ரூபாய் 4,51,387.00 வந்திருக்கிறது. இவை தவிர ஈரோடு, கோவை மற்றும் சென்னை ஆகிய இடங்களில் பொருட்களாகக் கொடுத்திருக்கிறார்கள். கிரி சூடன், காங்ககேயம் திருப்பூர் ஆகிய இடங்களில் அவரது நண்பர்கள் சேகரித்த தொகையான சுமார் ஐம்பதாயிரம் ரூபாய்க்கு போர்வை உள்ளிட்டவற்றை வாங்குவதற்காக சென்னிமலை சென்றிருக்கிறார்.  கோபிசெட்டிபாளையம் வைரவிழா ஆரம்பப் பள்ளியில் மாணவர்கள் நிதி சேர்க்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

சென்னை, கடலூர்  வெள்ளத்தின் போது  மக்கள் காட்டிய அக்கறை கேரளாவுக்கு இல்லையென்றாலும் கடந்த வாரத்தில் இருந்ததைக் காட்டிலும் இன்றைக்கு நிலைமை பரவாயில்லை.பல தரப்பிலும் வெள்ளம் பற்றிய உரையாடல்  இருக்கிறது. நிறையப்  பேர் களமிறங்கியிருக்கிறார்கள். ஆனால் என்னெவென்று தெரியவில்லை- கடுமையான எதிர்மறை பிரச்சாரமும் நடைபெறுகிறது. மதம் சார்ந்து, மொழி சார்ந்து, இனம் சார்ந்து நிகழும் இத்தகைய பிரச்சாரம் கடுமையான எரிச்சலை  உண்டாக்குகிறது. எந்தவொரு மனிதனாக இருந்தாலும் அவனுக்கு துன்பத்தில் உதவுதுதான்  மனிதாபிமானம். மனிதாபிமானத்தை மீறி இங்கே செய்யப்படும் அரசியல் நாம் தவறான பாதையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம் என்பதை உணர்த்தாமல் இல்லை.

குழந்தைகள் எல்லா இடங்களிலும் குழந்தைகள்தான். மின்சாரமில்லாமல் மழை பெய்யப் பெய்ய அழும் குழந்தையை நினைத்தால் 'அவனுக்கு உதவாதீங்க' என்று சொல்ல எப்படி மனம் வரும்? மூத்தவர்கள் குளிரில் நடுங்குவதையும், நசநசவென நனைந்து வாடுவதையும், வறியவன் தம் தொழிலை இழந்துவிட்டு பதறுவதையும் நினைத்துப் பார்த்தால் எதிர்மறையாக பேச நா கூசாது?

கடந்த சில நாட்களாக கேரளாவில் இருக்கும் நண்பர்களுடன் தொடர்பில் இருக்கிறேன். மழை  குறைந்திருக்கிறது. இருந்தாலும் உதவி தேவைப்படுகிறது  என்கிறார்கள். கேரள மக்கள் மீது மிகுந்த நம்பிக்கை இருக்கிறது. மேலே  வந்துவிடுவார்கள்.

கடலூர் சென்னை வெள்ளத்தின் போது உடனடித் தேவையான உணவுப் பொருட்கள் உள்ளிட்டவற்றை முதல் கட்டமாக  செய்தோம். அடுத்த கட்டமாக சுமார் முன்னூறு குடும்பங்களுக்கு மீண்டும் தொழில் தொடங்கும் விதமாக மாடுகள், ஆடுகள், தையல் எந்திரம், பெட்டிக்கடை, இஸ்திரி பெட்டி  என்று  உதவினோம். இந்த முறை என்ன செய்வது என்று தெளிவான முடிவில்லை. இத்தகைய பேரிடர்களின் போது  முன்பே திட்டமிடுவது சரியாக  அமையாது. அவ்வப்போது சூழலுக்கு ஏற்ப முடிவு செய்ய வேண்டியிருக்கும்.

செய்துவிடலாம்.

புதன்கிழமை வரைக்கும் பொருட்களைச் சேகரிக்கும் பணியைச் செய்துவிட்டு வியாழன் மற்றும் வெள்ளியன்று இந்தப் பணிக்கு என வந்திருக்கும் தொகைக்கு பொருட்களை வாங்கி அவற்றை அனுப்பி வைக்கும் வேலையைத்  தொடங்க வேண்டும். என்ன மாதிரியான பொருட்கள் தேவை என்பதை  உமேஷ் மாதிரியானவர்களிடம் புதன்கிழமை மாலையில் பேசிவிட்டு முடிவு செய்து  கொள்ளலாம்.ஆரம்பத்தில்   இரண்டு லட்ச ரூபாய் என்பதுதான் மனதிலிருந்த தொகை. இப்பொழுது மொத்தமாக பார்த்தால் ஏழு அல்லது எட்டு லட்சம் மதிப்புக்கான பொருட்களை  அனுப்பி வைப்போம்  எனத் தோன்றுகிறது.

நிசப்தம் மீதான தொடர்ந்த நம்பிக்கைக்கு  நன்றி. இணைந்து செயல்படுவோம். மனிதாபிமானம் மட்டும்  நிலைக்கும். இதனை மட்டும் மனதில் நிறுத்திக் கொள்வோம். 

தொடர்புடைய பதிவுகள்:


Aug 18, 2018

நன்கொடை விவரம்

கடந்த இரண்டு நாட்களில் நிசப்தம் அறக்கட்டளைக்கு 1,37,000 ரூபாய் வந்திருக்கிறது. ஏற்கனவே அறிவித்திருந்தபடி அடுத்த புதன்கிழமை (அல்லது) வியாழக்கிழமை வரை வரும் தொகையானது முழுமையாக கேரளா வெள்ள நிவாரண உதவிக்கு என பயன்படுத்திக் கொள்ளப்படும். 

அடுத்த வியாழன் வரைக்கும் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை Bank Statement ஐ பிரசுரம் செய்துவிடுவது சரியாக இருக்கும். நன்கொடை அனுப்பியவர்களில்  சிலர் ரசீது கேட்டிருந்தார்கள். 27 ஆம் தேதிக்குப் பிறகு நினைவூட்டினால் அனுப்பி வைத்துவிடுகிறேன். 

நன்றி.தொடர்புடைய பதிவு 

Aug 17, 2018

தோள் கொடுப்போம்.

கேரளாவுக்கான நிவாரணப் பொருட்களை வழங்குகிறவர்களுக்கு ஒரு தகவல்.

பணம் கொடுத்தால் வாங்கிவிடலாம்தான். ஆனால் ஒவ்வொரு ஊரிலும் ஒரு பொருள் சல்லிசாகக் கிடைக்கும். உதாரணமாக ஈரோட்டில் லுங்கி, கரூரில் போர்வை என்பது போல. அதனால் அந்தந்த ஊர்க்காரர்கள் ஆங்காங்கே பேரம் பேசி வாங்கி கொடுத்தால் அவற்றை சேகரித்துக் கொண்டு போய் கேரளாவில்  கொடுத்துவிடலாம்.

பணமாகக் கொடுப்பதை விடவும் நாங்களே பொருள் வாங்கிக்  கொடுத்தால் திருப்தியாக இருக்கும் என்று சிலர் சொன்னார்கள். அடுத்தவர்களுக்கு உதவுகிற  காரியத்தில் ஒவ்வொருவரின் மனத்திருப்தியும் முக்கியம். 

அவரவருக்கு எது இயலுமோ அதைச் செய்வோம். கடந்த சில நாட்களாக கேரளாவின் பாதிப்புகள் குறித்து பலரும் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். இதுதான் அவசியம். இத்தகைய உரையாடலும் ஆதரவான தோள் சேர்ப்பும்தான் முக்கியம். அந்த விதத்தில்  சந்தோசம். இன்னமும் வெகு தூரம் செல்ல வேண்டியிருக்கிறது. எல்லோரும் சேர்ந்து ஆளுக்கு ஒரு கை நீட்டினால் கேரள சகோதர சகோதரிகளுக்கு நாம் செய்யும் பேருதவியாக இருக்கும்.

நம்முடைய பக்கத்துக்கு வீடு அவர்கள்தான்.தமிழர்களின் குணத்தை அவர்களுக்கு காட்டுகிற தருணம் இது. தோள் கொடுப்போம்.

பொருட்களாக வாங்கி கொடுப்பது சாத்தியமில்லை என்கிறவர்கள் 'பணம் கொடுப்பதுதான் சாத்தியம்' என்று நினைத்தால் அதையும் நாங்கள் மறுக்கவில்லை. எங்கெங்கே  எந்தப் பொருளை வாங்குவது என யோசித்துக்  கொண்டிருக்கிறோம். அடுத்த வாரத்தில் அந்தப் பணியைத் தொடங்க வேண்டும். சில நண்பர்கள் பணம்  அனுப்பத் தொடங்கியிருக்கிறார்கள். பட்டியலில் இருக்கும் பொருட்களில் எதையாவது 'எனக்குத் தெரிந்த இடத்தில் வாங்கி விடலாம். அதனால் வாங்கித் தருகிறோம்' என்று முன்வந்தால் மிக்க  மகிழ்ச்சி. பணம் அறக்கட்டளையிலிருந்து கொடுத்துவிடலாம். அத்தகையவர்கள் திரு.ஜெயராஜ்  அவர்களைத் தொடர்பு கொள்ளவும்.

நன்றி.

ரத்தக் கண்ணீர்

நம்மிடம் சரியான நீர் மேலாண்மை இல்லையென்று சொன்னால் 'எப்படிச் சொல்கிறீர்கள்?' என்று கேட்கிறார்கள்.

பவானி என்ற ஒரேயொரு நதியை மட்டும்  எடுத்துக்  கொள்வோம்.215 கிலோமீட்டர் நீளம் கொண்ட ஆறு இது. கேரளா, நீலகிரி ஆகிய இடங்களில் பெய்யும் மழை நீரானது பவானி ஆற்றில் கட்டப்பட்டிருக்கும் பவானிசாகர் அணையில் சேகரமாகிறது. இந்த அணையின் உயரம் 120 அடிகள். இப்பொழுது இந்த அணை நிரம்பிவிட்டது என்பதால் பல ஆயிரம் கன அடி நீரை (இனறைய கணக்குக்கு எழுபதாயிரம் கன-அடி) பவானி ஆற்றில் திறந்துவிடுகிறார்கள். இந்த எழுபதாயிரம் அடி  கன நீர்  சத்தியமங்கலம், பவானி ஆகிய நகரங்கள் வழியாக ஓடி பவானி கூடுதுறையில் காவிரி ஆற்றோடு கலக்கிறது. இன்றைக்கு பவானியும் சரி; காவிரியும் சரி கரை கடந்து ஓடுகிறது. தனது கரையோரம் இருக்கும் பல ஊருக்குள்ளும் புகுந்துவிட்டன. 

பவானி ஆற்றிலிருந்து  தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, காளிங்கராயன், கீழ்பவானி ஆகிய கால்வாய்கள்  பிரிகின்றன. இந்தக் கால்வாய்களுக்குத் துணைக் கால்வாய்கள் உண்டு. கால்வாய்கள், துணைக் கால்வாய்கள் வழியாக ஓடும் நீரானது அக்கம்பக்கத்தில் உள்ள குளம் குட்டைகளை நிரப்பும். விவசாய நிலத்துக்கு பாயும். ஆனால் இன்னமும் பெரும்பாலான குளம் குட்டைகளை நிரப்பவில்லை. அதுதான் வருத்தமாக இருக்கிறது. காவிலிபாளையம் என்ற ஊரில் ஒரு பெரிய குளம் இருக்கிறது. நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பு கொண்ட குளம் அது. ஒரேயொரு முறை நிரம்பினால் கூட பல ஆண்டுகளுக்கு பலனளிக்கும். ஓடத்துறை குளம் நிரம்பவில்லை. புளியம்பட்டி சாலையில் இருக்கும் குளம் நிரம்பவில்லை. நீர் இருக்கிறது. ஆனால் அவை  இன்னமும்  நிரம்பவில்லை. இப்படி சுமார் ஐம்பது குளங்களைக் காட்ட முடியும். 

என் கேள்வி எல்லாம் எளிமையானது. ஏன் இவ்வளவு நாட்கள் இந்தக் குளங்களை நிரப்பவில்லை என்பதுதான்.

கால்வாய்களில் நீர் திறந்துவிட மேலிடத்திலிருந்து அனுமதி இல்லை என்று அதிகாரிகள் சொல்கிறார்களாம். சில விவசாயிகளிடம் பேசினால் 'பராமரிப்பு சரியில்லாததால் கரை, மதகுகள் வலுவாக இல்லை...உடைந்துவிடக் கூடும் என்று பயப்படுகிறார்கள்..அதனால்தான் கால்வாய்களில் நீர் விடவில்லை' என்கிறார்கள். பல நீர் வரத்துப் பாதைகளில் புதர் மண்டிக் கிடக்கின்றன. நீரைத் திறந்துவிட்டால் அது எதிர்த்து கரையைத் தாண்டிவிடும் என்று அதிகாரிகள் பயப்பதாக அதே விவசாயிகள் சொல்கிறார்கள். எது உண்மையான காரணம என்று சம்பந்தப்பட்டவர்கள் விளக்க வேண்டும். ஒழுங்கான மராமத்து பணி  நடைபெறாததால் எழும் பயம்தான் காரணம் என்றால்  வருடாவருடம் மராமத்து பணிகளுக்கு என்று கோடிக்  கணக்கில் பணம்  ஒதுக்கப்படுகிறது. அந்தப் பணம் எங்கே போனது? பதில் சொல்லும் பொறுப்பு யாருக்கு இருக்கிறது?

நீர் இருக்கும் போதே குளம் குட்டைகளை நிரப்பினால் அடுத்த இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு தேவையான நிலத்தடி நீர் மட்டம் உயரும். அதை ஏன் செய்யாமல் விட்டு வைத்தார்கள்? இன்றைக்கு நிரம்பி வழியும் ஆற்றை பற்றித்தான்  ஊடகங்கள் பேசுகின்றன.  ஆறிலிருந்து வெறும் பதினைந்து கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஊர்களில் நிலவும் குடிநீர் பஞ்சம் பற்றி பேசுவதில்லை. அந்த கிராமங்களைப் பற்றி எப்பொழுதும் பேச  மாட்டார்கள். ஆனால் இதுதான் உண்மையான கள நிலவரம். குடிக்க நீர் இல்லை; பாசனத்துக்கு வழியுமில்லை என்று ஏகப்பட்ட கிராமங்கள் இருக்கின்றன.

கடந்த நான்கு நாட்களில் மட்டும் பவானி ஆற்றில் வெளியேற்றப்பட்ட நீரின் அளவு முப்பது டி.எம்.சி இருக்கும் என்கிறார்கள். அணையின் மொத்த கொள்ளளவு இது. கடந்த இருபத்து நான்கு மணி நேரத்தில் மட்டும் 11 டி.எம்.சி வெளியேறியிருக்கிறது. கிட்டத்தட்ட மூன்று லட்சம் ஏக்கர் நிலத்துக்கான ஒரு போக பாசன அளவின் நீர் இது. யாருக்கும் பைசா பலனளிக்காமல் வெளியேறியிருக்கிறது. ஐந்தாண்டுகளுக்குப் பிறகு அணை   நிரம்பியிருக்கிறது. அது இப்படி அர்த்தமேயில்லாமல் வெளியேறிக் கொண்டிருக்கிறது. 

இது பற்றியெல்லாம் யார் பேசுவது? யாரிடம் கேள்வி கேட்பது?அமைச்சரிடம் கேட்பதா? எம்.எல்.ஏக்கள் பதில் சொல்வார்களா? அல்லது அதிகாரிகள் வாய் திறப்பார்களா? எங்கே போனது நம் நீர் மேலாண்மை? 

இன்னமும் ஐந்து நாட்களுக்கு கேரளாவிலும் கர்நாடகாவிலும் மழை இருக்கும் என்று சொல்கிறார்கள். இன்றைக்கு காவிரியில் வரும் 1.90 லட்சம் கன-அடி  நீரின் அளவு அதிகரிக்கும் போதும், பவானிசாகரில் திறந்துவிடப்படும் 70 ஆயிரம் அடி  கன-அடி  என்ற அளவும் அதிகரிக்கும் போதும் நிலைமை என்னவாகும் என்று பதற்றமாக  இருக்கிறது. ஆனால் பத்து இருபது நாட்கள் கழிந்த பிறகு ஆற்றில் நிலைமை சீராகிவிடும். ஆனால் சற்று தள்ளி இருக்கும் பல ஊர்களிலும் அதன் பிறகும் இதே வறட்சிதான் நிலவும். 

ஒரு சாமானியனாக இந்தக் கேள்வியைத்தான் எழுப்பத்  தோன்றுகிறது- மழை பெய்தாலே நம் ஊர் பெண்கள் வீட்டில் இருக்கும் வாளியெல்லாம்  நிரப்பி வைத்துக் கொள்கிறார்கள். ஆற்றில் கரை கடந்து ஓடும் நீரைக் கொண்டு குளம் குட்டைகளையெல்லாம் நிரப்பாமல் ஏன் இன்னமும் வேடிக்கை பார்க்க வேண்டும் என்றுதான் கேட்கத் தோன்றுகிறது. ஆட்சியாளர்கள் ஒவ்வொருவரும் தன்னை விவசாயி என்று சொல்லிக்  கொள்கிறார்கள். அவர்களுக்கு ஏன் இது குறித்த எந்த சிந்தனையும் இல்லை? அமைச்சர்களும், எம்.எல்.ஏக்களும், எம்.பிக்களும், அதிகாரிகளும் ஒரு கணம்  கூடவா யோசித்திருக்க மாட்டார்கள். இவர்களின் மெளனத்தைப் பார்த்தால்  அந்த விவசாயிகள் சொன்னதுதான் சரி என்று தோன்றுகிறது. பராமரிப்பு செய்ய வேண்டிய காலத்தில் ஏய்த்து விட்டாகிவிட்டது. ஒதுக்கிய பணத்தையெல்லாம் வாயில் போட்டாகிவிட்டது. இந்த லட்சணத்தில் இன்றைக்கு வேடிக்கை பார்ப்பதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்?  பலனில்லாமல் ஆற்றில் பாயும் நீரானது செல்பி எடுத்துக் கொண்டாட வெறும் வேடிக்கைப் பொருளில்லை. சிவந்து பெருக்கெடுக்கும் அது அழிந்து கொண்டிருக்கும் விவசாயத்தின் ரத்தக் கண்ணீர்.

Aug 16, 2018

கேரளாவுக்கு நிவாரண உதவிகள்

கேரளாவுக்கான வெள்ள உதவிப் பொருட்களை பல்வேறு ஊர்களிலிருந்தும் பெற்று அவற்றை கேரளாவில் கடுமையாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒன்றான வயநாட்டுக்கு அனுப்பி வைக்கத் திட்டமிட்டிருக்கிறோம்.

நண்பர் ஜெயராஜின் அணி, கடலூர் மற்றும் சென்னை வெள்ளத்தின் போது மிகச் சிறப்பாக பணியாற்றிக்  கொடுத்தார்கள். அவர்கள் இந்த முறையும் ஆர்வமாக இருக்கிறார்கள். 

விக்னேஸ்வரன், Makes Easy  Logistics லாரி சர்வீஸில் பணியாற்றுகிறார். அவர் தமது நிறுவனத்தில்  பேசியிருக்கிறார். அந்த நிறுவனம் தமிழ்நாட்டுக்குள் பொருட்களை இடம் மாற்றித் தருவதாகச்  சொல்லியிருக்கிறார்கள். 

இந்த இரண்டு அணியின் உதவியுடன் வேலைகளை வேகப்படுத்திவிடலாம் என்ற நம்பிக்கை  பிறந்திருக்கிறது.

திட்டம் இதுதான்-

அடுத்த புதன்கிழமை(22-08-2018) வரையிலும் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். வெள்ளிக்கிழமையன்று மேலும் தேவைப்படும் பொருட்களை நிசப்தம் அறக்கட்டளையின் பணத்திலிருந்து  வாங்கி ஒன்றாகச் சேர்த்து சனிக்கிழமையன்று (25-08-2018) வயநாடு அனுப்பி வைத்துவிட வேண்டும்.

ஒரு வாரம் கடுமையான வேலை இருக்கும். பொருட்கள் சரியாக இடம் சேர்கின்றனவா என்று கண்காணிக்க  வேண்டியிருக்கும். சந்தேங்களைத் தீர்க்க வேண்டிய பணியும் இருக்கும்.

தேவைப்படும் பொருட்கள்:
1. புதிய ஆடைகள்
2. அரிசி, பிஸ்கட், ரொட்டி
3. நோட்டு புத்தகங்கள், பென்சில், பேனா, பள்ளி புத்தகங்கள்
4. சானிட்டரி நாப்கின்
5. சுத்தம் செய்வதற்கான சானிட்டரி பொருட்கள்
6. செருப்பு
7.  படுக்கை, போர்வை
8. ஸ்வெட்டர்
9. வாளி, சோப், பிரஷ், பற்பசை
10. பாத்திரங்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் 

பொருட்களாக வழங்க விரும்புகிறவர்கள் பின்வரும் இரண்டு முறைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

1) கூரியரில் அனுப்ப இயலுமெனில் பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைத்துவிடவும்.

A. ஜெயராஜ்,
Lifeshine Leadership Foundation,
37, ஓம் சக்தி நகர்,
அச்சிறுபாக்கம்,
மதுராந்தகம் வட்டம் 
காஞ்சிபுரம் மாவட்டம் - 603301

                                              (அல்லது)

2) பின்வரும் ஊர்களில் இருப்பவர்கள் பொருட்களை பேக் செய்து அதன் மீதாக கீழ்கண்ட முகவரியை எழுதி லாரி பார்சல் சர்வீஸில் அலுவலகத்தில் வழங்கிவிடவும்.

1) கோயமுத்தூர்  - திரு.செந்தில்குமார் - 9894534357
2) திருப்பூர் - திரு.கிரி சூடன் - 94860 84218
3) ஈரோடு - திரு.ஜியாவுதீன் - 7373061807
4) சேலம் - திரு.ஜெகநாதன் - 7373061840
5) கரூர் - திரு.தங்கராஜ் - 7373061825
6) திருச்சி - திரு. தீபக் - 7373061831
7) மதுரை - திரு.மணிகண்டன் - 7373061833
8) திண்டுக்கல் - திரு. சந்தோஷ் - 9003784778
9) சென்னை - திரு. நந்தகுமார் - 7373061801

(பெங்களூரில் எங்கே சேகரித்து வைப்பது என்று இன்னமும் முடிவாகவில்லை. ஓர்  இடம் இருந்தால்  தெரியப்படுத்தவும்.அங்கே சேகரித்து அனுப்பி வைத்துவிடலாம்.)

இந்த முறையில் ஏதேனும் சந்தேகம்/குழப்பம் இருப்பின் நிசப்தம் தன்னார்வலர் திரு. விக்னேஷ்வரனைத் தொடர்பு கொள்ளவும். (விக்னேஸ்வரன் - 9994644558)

பேக் மீது எழுத வேண்டிய முகவரி:

Nisaptham Kerala Flood Relief,
Makes Easy Logistics,
111, பூவிருந்தவல்லி நெடுஞ்சாலை,
வேலப்பன்சாவடி,
சென்னை. 600077

ஒரு வாரத்தில் சேரும் பொருட்களை மேலே குறிப்பிட்டது போல பொதுவான இடத்தில் வைத்து வயநாடு அனுப்பி வைத்துவிடலாம். 

                                              (அல்லது)

நிதியாக வழங்க விரும்புகிறவர்கள்:

3) ஏற்கனவே சிலர் நிசப்தம் அறக்கட்டளைக்கு பணம் அனுப்பி வைக்கத் தொடங்கிவிட்டார்கள். இன்று தொடங்கி அடுத்த வியாழன்/வெள்ளி வரைக்கும் வரும் பணத்தை முழுமையாக கேரளாவுக்கான நிவாரணப் பொருட்கள் வாங்கவும் அனுப்பி வைக்கவும் பயன்படுத்திக் கொள்ளலாம். 

Account Number: 05520200007042
Account Holder Name: Nisaptham Trust
Account Type: Current
Bank : Bank Of Baroda
State : Tamil Nadu
District : Erode
Branch : Nambiyur
IFSC Code : BARB0NAMBIY (5th character is zero)
SWIFT Code: BARBINBBCOI
Branch Code : NAMBIY (Last 6 Characters of the IFSC Code)
City : Nambiyur

இந்தப் பணி  குறித்து அல்லது பொருட்களை வழங்கும் இடம் குறித்து அல்லது வேறு சந்தேகமிருப்பின் பின்வரும் எண்களைத் தொடர்பு கொள்ளவும்.

ஜெயராஜ் - 09788135011
வா.மணிகண்டன் - 9663303156
பெங்களூரு - முத்தமிழ் - 7795019223

இது மிகப்பெரிய வேலையாகத் தெரிகிறது. எல்லாம் சரியாக அமைய உடல் மற்றும் மனபலம் கிடைக்க வேண்டும் எனக் கடவுளை பிரார்தித்துக் கொள்வோம். இயற்கையின் சீற்றமும்  தணியட்டும்.

எவ்வளவு தண்ணீர்

பவானி கரை கடந்து பாய்கிறது. காவிரி அகண்டு பெருக்கெடுத்திருக்கிறது. அமராவதியும் அப்படியே. இந்த ஆர்பரிப்பும் அழகும் கரையோரம் ஒட்டிய பகுதிகளில்தான். பவானி ஆற்றிலிருந்து  வெறும் பதினைந்து கிலோமீட்டர் தெற்கே சென்று விசாரித்துப் பார்த்தால் வறண்டு கிடக்கிறது பூமி. ஆயிரம் அடி தோண்டினாலும் நீர் இல்லை. ஒரு பக்கம் அடித்துப் பெருக்கும் ஆறு; வெகு அருகாமையில் காய்ந்து கிடைக்கும் நிலப்பரப்பு. இப்படித்தான் இருக்கிறது நிலைமை.

மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து அதனால் நீர் பெருகி  இந்த ஆறுகள் கரை புரளவில்லை என்பதை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். எங்கேயோ பெய்த மழை. அணைகள் நிரம்புகின்றன. தேக்கி வைக்க வழியில்லாமல் திறந்து விடுகிறார்கள். அதுவும் 'முதலமைச்சரின் ஆணைப்படி'. அது அப்படியே ஆற்றின் வழியோடி கடலில் கலக்கிறது. 

ஒரு கூட்டம் வந்து 'கடலில் கலப்பது தப்பில்லையே' என்று நமக்கு வகுப்பு எடுக்கும். தப்பில்லை. எப்பொழுது தப்பில்லை என்றால் நம்முடைய தேவைகளுக்கு ஏற்ப நீரைப் பிடித்து வைத்துக் கொண்ட பிறகு எவ்வளவுதான் கலந்தால் யார் என்ன கேட்கப் போகிறார்கள்?

நான்கைந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை இயற்கை மனம் வைத்து இரவலாக வரும் நீரை எந்த சிரத்தையுமில்லாமல் ஆற்றில் திறந்துவிடுகிறார்கள் என்பதுதான் பிரச்சினையே. பொதுவாக கர்நாடகத்திலும் கேரளாவிலும் தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கி செப்டெம்பர் வரைக்கும் நீடிக்கும். இந்த வருடம் நமக்கு ஜூலையிலேயே நீர் வரத் தொடங்கிவிட்டது. மூன்று மாதம் நீர் வரத்து இருக்கும்பட்சத்தில் அதற்குத் தக்கவாறு முன்னேற்பாடுகளைச் செய்திருக்க வேண்டியதில்லையா?

நேரடியாக ஆற்றில் விடாமல் கால்வாய்களைத் திறந்துவிட்டு அதன் வழியாக குளம் குட்டைகளை நிரப்பி வைத்திருக்க வேண்டும். பவானி ஆற்றின் கால்வாய்களில் சிறுவன் சிறுநீர் கழிக்கும் அளவுக்கு விட்டு வைத்திருந்தார்கள். விசாரித்தால் 'உத்தரவு வரவில்லை' என்று அதிகாரிகள் சொன்னார்களாம். தண்ணீர்தான் இருக்கிறதே பிறகு  ஏன் தயங்குகிறார்கள் என்றால் உருப்படியாக மராமத்துப் பணிகள் செய்யவில்லை என்பதுதான் உண்மையான காரணம். புதரண்டிக்  கிடக்கின்றன. ஆற்றிலேயே  கூட ஆகாயத் தாமரை அடைத்துக் கிடக்கிறது. கால்வாய்களில் கரைகள் வலுப்படுத்தப்படவில்லை. மதகுகள் சரி செய்யப்படவில்லை. ஏமாந்தால் கரைகள்  உடைந்துவிடும். அதனால்தான் தயங்குகிறார்கள். 

இந்த லட்சணத்தில்தான் ஆட்சியாளர்களுக்கு ஆங்காங்கே சில நாட்களுக்கு முன்பாக 'குடி மராமத்து  நாயகன்' என்று பதாகைகள் வைத்தார்கள். நம் ஊருக்கு எங்கே நீர் வரப்போகிறது என்ற தைரியத்தில் வைக்கப்பட்ட பதாகைகள் அவை. இப்பொழுது நீர் பெருக்கெடுத்து ஓடும் போது பட்டப்பெயர் பல்லிளிக்கிறது. 

நம்மிடம் நீர் மேலாண்மை என்பது கிஞ்சித்தும் இல்லை.

வருடத்திற்கு வெறும் இரண்டு டி.எம்.சி தண்ணீர் கேட்டு அவிநாசி அத்திக்கடவு போராளிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4 முதல் 8 ஆம் தேதி வரையில் நான்கு நாட்களில் மட்டும் கடலில் கலந்த நீரின் அளவு 17 டி.எம்.சி. ஆனால் 2015 மற்றும் 2016- களில்  குடிக்க தண்ணீர் இல்லை. ஆண்டு முழுவதும் ஆற்றில் நீர் ஓடிக் கொண்டேயிருக்க வேண்டும் என்று நினைத்தால் அது சாத்தியமா?

இப்படித்தான் வெள்ளம் வரும் போதும் சரி; வறட்சி வரும் போதும் சரி- பேசிவிட்டு நகர்ந்துவிடுகிறோம். நமக்கு ஞாபக மறதி  இருப்பதால் பிரச்சினையில்லை. எல்லாவற்றையும் மறந்துவிட்டு வேறு வேலைகளை பார்க்க போய்விடுகிறோம். ஆட்சியாளர்களும் இஷ்டத்துக்கு கப்ஸா அடித்து விடுகிறார்கள்.

அவிநாசி அத்திக்கடவு திட்டம் செயல்படுத்தப்பட்டிருந்தால் 2 டி.எம்.சியை அங்கே கொடுத்திருக்கலாம். பல தசாப்தங்களாக ஆட்சியாளர்கள் போக்கு காட்டிக் கொண்டேயிருக்கிறார்கள். மூன்று மாவட்டங்களில் இருக்கும் லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு இந்தத் திட்டத்தால் உதவ முடியும். இப்படி தமிழகம் முழுக்கவும் நீர் இல்லாத காலத்தில் சில திட்டங்களைச் செயல்படுத்தி வைத்திருந்தால் நீர் அபரிமிதமாக இருக்கும் போது பிரச்சினை இருக்காது. குறைந்தபட்சம் நிலத்தடி நீர் மட்டத்தையாவது உயர்த்தி வைக்கலாம். அடுத்த இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு பஞ்சமிருக்காது. எங்கே செய்கிறார்கள்?

வளைத்து வளைத்து சாலைகளைப்  போட்டால் நாற்பது சதவீதம் கமிஷன் அடிக்கலாம். ஆனால் நீர் மேலாண்மைத்  திட்டங்களில் அவ்வளவு கமிஷன் சாத்தியமில்லை என்பதால் எதையுமே செய்யாமல் கணக்கு வேண்டுமானால் எழுதுகிறார்கள்.

ஒரேயொரு புள்ளி விவரம் போதும். 1960 களில் தமிழகத்தில் ஏரிப்பாசன நிலப்பரப்பு கிட்டத்தட்ட ஒன்பதரை லடசம் ஹெக்டேர். இன்றைக்கு அந்த அளவு நான்கரை லட்சம் ஹெக்டேர். என்னவானது? ஏரிகளை நிரப்பி பேருந்து நிலையங்களை அமைத்தார்கள். அரசு நிலமாக அரசே மாற்றியது. தனியார்கள் விடுவார்களா? மண்ணைப் போட்டு மூடி ஏரிகளைத் திருடிவிட்டார்கள். பிறகு பாசனப்பரப்பு குறையாமல் என்ன செய்யும்? திருடியது தொலையட்டும். மிச்சமிருப்பதில் எவ்வளவு ஏரிகளை சரியாக தூர்வாரி வைத்திருக்கிறார்கள்? மேட்டூர் அணைக்கும் பெரிய அணைக்கட்டுக்கும் இடையில் இருக்கும் ஏரிகள், குளம் குட்டைகளையாவது தயார் செய்து வைத்திருக்கலாம். 

இதையெல்லாம் எப்படி பேசாமல் இருக்க முடியும்? நிறைய பேச வேண்டியிருக்கிறது. வெள்ளம் பெருக்கெடுக்கும் காலத்தில் வெள்ளத்தைப் பற்றி பேசுகிறோம். வறட்சியின் போது பருவமழையைத் திட்டுகிறோம். இதனால் எந்த பலனுமில்லை. நம்முடைய சிந்தனையிலேயே மாற்றம் அவசியம். உருப்படியான திட்டங்கள், நீர் பாசன வசதி மேம்பாடுகள், இருக்கும் வசதிகளை சரியாகப் பயன்படுத்துதல் ஆகியவற்றைப் பற்றி நிறையப்  பேச வேண்டும். 

பருவத்தின் சுழற்சியில் மாறுதல் இருக்கிறது என்பது உண்மைதான். ஆனால் எல்லா பழியையும் பருவகாலத்தில் மீதே போட வேண்டியதில்லை. பருவத்தின் மாறுதலுக்கு ஏற்ப நம்மை எப்படி தகவமைத்துக் கொள்கிறோம் என்பதில்தான் நம்முடைய எதிர்காலம் அமைந்திருக்கிறது. நீர் இருக்கும் போது எப்படிச் சேகரிக்கிறோம் என்பது முக்கியம் இல்லையா? ஒரு பக்கம் ஆர்ப்பரித்து ஓடும் நீர். இன்னொரு பக்கம் வறட்சி. இந்த மாநிலத்தின் நிலப்பரப்பு பற்றி பரவலாகத் தெரிந்தவர்களுக்கு நிச்சயமாக வயிறு பற்றியெரியும் .

கிராமசபை கூட்டங்களில் இது குறித்தெல்லாம் விவாதிக்கலாம். அந்தந்த ஊர்களில் நீர் சேகரிப்புக்கான வாய்ப்புகளை பற்றி பேசலாம். மராமத்து பணிகள் குறித்தான தெளிவு நமக்கு வேண்டும். இளைஞர்கள்தான் ஆங்காங்கே முன்னெடுக்க வேண்டும். இதையெல்லாம் கேட்காவிட்டால் நாளை நிலைமை இன்னமும் மோசமாகும். இனியாவது ஆட்சியாளர்களைக் கேள்வி கேட்போம்-குறைந்தபட்சம் நீர் மேலாண்மைத் திட்டங்கள் குறித்தாவது. 

Aug 13, 2018

கேரளா

கேரளாவில் வரலாறு காணாத வெள்ளம். 'ஏதாவது செய்யலாமா' என்று சிலர் கேட்டார்கள். என்ன மாதிரியான உதவியைச் செய்ய முடியும் என்று குழப்பம் இருந்தது. உமேஷிடம் தொடர்பு  கொள்ள முடிந்தது. அவரைப் பற்றி நிசப்தத்தில் முன்பு எழுதியிருக்கிறேன். வயநாட்டில் சார் ஆட்சியராக இருக்கிறார். இரண்டு முறை வயநாடு பகுதியின் வெள்ளம் பற்றி குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். நேற்றிரவு பேசிய போது வெள்ளத்தின் பாதிப்பு மிகக் கடுமையாக இருக்கிறது என்றார். தமிழகத்தின் ஊடகங்கள்  பெரிய அளவில் இந்தச் செய்தியைப் பற்றி  இன்னமும் பேசாததால் நமக்கு கேரளாவின் வெள்ள பாதிப்பு புரியவில்லை எனத் தோன்றுகிறது. சமூக ஊடகங்களிலும் பெரிய அளவில் உரையாடல் இல்லை. தமிழக அரசு ஐந்து கோடி கொடுத்திருப்பதாகவும், திமுக சார்பில் ஒரு கோடி ரூபாய் கொடுக்கவிருப்பதாக ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். மக்கள் நீதி மய்யம் சார்பில் இருபத்தைந்து லட்ச ரூபாய் கமல்ஹாசன் கொடுப்பதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இந்தத் தொகை பற்றிய விவாதம் எதுவும் அவசியமில்லை. அரசியல் அமைப்புகளும் திரைத் துறையினரும் பேச ஆரம்பிக்கும் போதுதான் வெகுஜன மட்டத்தில் பாதிப்புகள் குறித்தான புரிதல் உண்டாகும். ஊடகங்களும் இவற்றை பெருமளவில் கவனப்படுத்தும் என நம்பலாம்.

கடலூரிலும் சென்னையிலும் வெள்ளத்தின் போது கேரளாவிலிருந்து வந்து குவிந்திருந்த பொருட்களை நேரில் பார்த்தவன் என்ற முறையில் சொல்கிறேன். இப்பொழுது நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது சரியில்லை.  இதுவரையில் 37 பேர்கள் இறந்திருக்கிறார்கள். பலர் வீடுகளை இழந்துவிட்டார்கள். இன்னமும் மழை நின்றபாடில்லை. உமேஷிடம் 'என்ன மாதிரியான உதவிகள் தேவைப்படும்?' என்று கேட்ட போது 'எப்படிக் கொடுத்தாலும் சரி; பொருட்களாக இருந்தால் நிச்சயம் பேருதவியாக இருக்கும்' என்று  சொன்னார்.  

நாம் இந்தத் தருணத்தில் திட்டடமிடுவது சரியாக இருக்கும் என நினைக்கிறேன். மனிதாபிமான அடிப்படையில் பணியாற்ற களத்துக்கு ஆட்கள் தேவை.

1) தமிழகம் முழுவதும் ஆங்காங்கே  பொருட்களை வசூலித்து (பயன்படுத்திய பொருட்கள் வேண்டாம்- உதவுவதாக இருந்தால் புதிய பொருட்களாக வாங்கி கொடுக்கவும்) கேரளாவுக்கு அனுப்பி வைக்கலாம். 

2) பெங்களூரில் பொருட்களை பெற்று அதை அனுப்பி வைக்க ஏற்பாடு செய்ய தன்னார்வலர்கள் தேவை.
  • அலுவலகங்கள்/அடுக்கங்களில் பேசி பொருட்களை வாங்க வேண்டும்.
  • நன்கொடையாக  வரும் பொருட்களை பெற்றுக்  கொண்டு வந்து ஓரிடத்தில் தர வேண்டும்.
  • பொருட்களை ஒழுங்குபடுத்தி வைக்கவும், வாகனம் ஏற்பாடு செய்யவும், உடன் செல்லவும் ஓர்  அணி தேவை.
ஆர்வமும் செய்வதற்கு தயாரான மனநிலையும் கொண்ட ஒரு குழு அமைந்தால் அடுத்தடுத்த பணிகளைச் செய்யலாம். ஆர்வமிருப்பவர்கள் தொடர்பு கொள்ளவும். எந்த இடத்தில் பொருட்களை சேகரிப்பது என்று முடிவு செய்ய வேண்டும். தமிழ் சங்கத்தில் இன்று பேசுவோம். அவர்கள் மறுக்க மாட்டார்கள். விருப்பமிருப்பவர்கள் சொல்லுங்கள். மதியம் ஒரு மணிவாக்கில் தமிழ் சங்கத்துக்குச் செல்லலாம்.

முதல்வேலையாக ஒரு சரியான அணியை உருவாக்கி பொறுப்புகளை பிரித்துக் கொள்ள வேண்டும். அது பல வேலைகளை எளிதாக்கும்.

தேவைப்படும் பொருட்கள்:

1. புதிய ஆடைகள்
2. அரிசி, பிஸ்கட், ரொட்டி
3. நோட்டு புத்தகங்கள், பென்சில், பேனா, பள்ளி புத்தகங்கள்
4. சானிட்டரி நாப்கின்
5. சுத்தம் செய்வதற்கான சானிட்டரி பொருட்கள்
6. செருப்பு
7.  படுக்கை, போர்வை
8. ஸ்வெட்டர்
9. வாளி, சோப், பிரஷ், பற்பசை
10. பாத்திரங்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் 

இப்படியொரு செயல்பாடு நடக்கிறது என்பதனை  பரவலாகக் கொண்டு செல்வதும் கூட ஒரு வகையிலான பங்களிப்புதான். தமிழகம் முழுக்கவும் ஆங்காங்கே  முன்னெடுப்புகளைச்  செய்வார்கள்.

அடுத்தடுத்த நகர்வுகளை பதிவு செய்கிறேன். 

vaamanikandan@gmail.com

Aug 9, 2018

டேட்டா (Data)

பெங்களூரில் ஒரு பேராசிரியர் இருக்கிறார். அரசுக் கல்லூரியில் பணியாற்றிவிட்டு இப்பொழுது தனியார் கல்லூரியில் டீனாக இருக்கிறார். மாணவர்களுக்கு வகுப்பும் எடுக்கிறாராம். ஒரு நண்பர் தமது ஆராய்ச்சி பணிகளுக்காக பேராசிரியருடன் தொடர்பில் இருக்கிறார். சுவாரசியமான பேராசிரியர் என்றும் ஒரு நாள் அவரைச் சந்திப்போம் என்று நண்பர் சொல்லியிருந்தார். 

எழுபதை நெருங்குகிற வயது பேராசிரியருக்கு. தாம் பணியாற்றுகிற கல்லூரிக்கு வரச் சொல்லியிருந்தார். நாங்கள் சென்றிருந்த போது நிறைய மாணவர்கள் இருந்தார்கள். 

'முடிச்சு கொடுத்துட்டு வரேன்' என்றார். அதுவரையிலும் அவரது அறைக்கு வெளியில் அமர்ந்து நண்பரும் நானும் பேசிக் கொண்டிருந்தோம். 

முக்கால் மணி நேரம் ஆனது. வழக்கமான அறிமுகத்துக்குப் பிறகு 'இன்னமும் ஏன் சார் க்ளாஸ் எடுக்குறீங்க?' என்று கேட்க வேண்டும் எனத் தோன்றியது.கேட்ட போது  'நிர்வாக வேலை எனக்கு எப்பவுமே .பிடிக்காது. ஆசிரியராகவே இருந்து கொள்கிறேன்'  என்றார். பிறகு வேறு சில விஷயங்களைப் பேசினோம். 

வெளியில் வந்த பிறகு நண்பர், 'அவர்கிட்ட ஏன்  அதைக் கேட்ட?' என்றார். என்ன பதில் சொல்வது என்று  தெரியவில்லை. 'அதெல்லாம் உடான்ஸ்...பாடத்துல  தொடர்பு விட்டுப் போய்விடக் கூடாது' என்ற காரணத்திற்காகவே அவர் வகுப்பு எடுக்கிறார் என்று நண்பர் சொன்னார். 

புள்ளியியல் பேராசியர் அவர். ஆராய்ச்சி மாணவர்கள் விதவிதமான தகவல்களைச் சேகரிப்பார்கள். என்ன ஆராய்ச்சியாக இருந்தாலும் தகவல்தானே  அடிப்படை? அப்படி மாணவர்கள் சேகரிக்கும் தகவல்களை எப்படி பகுத்து, தொகுத்து, அந்தத் தகவல்களைப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பது மாதிரியான ஆலோசகர் வேலையைச் செய்கிறார் அந்தப் பேராசிரியர். அவர் இதற்காக அவர் பெறும் தொகையுடன் ஒப்பிட்டால் சம்பளம் என்பது  சொற்பம். நண்பர் சொன்ன கணக்கைப் பார்த்தால் வருடம் இருபது முதல் முப்பது லட்சமாவது தேறும். பேராசிரியர் பெயரைச் சொன்னால் வம்பு வந்து சேரும்.

'என்ன செய்யறீங்க?' என்று என்னைக் கேட்டார். சொன்னேன்.

'போர் அடிக்குமா?' - இது அவர். எடுத்த உடனேயே இப்படியா கேட்பார்கள்? ஆனால் அவர் வயதுக்கு என்னை மாதிரி எவ்வளவு சில்லுண்டிகளைப் பார்த்திருப்பார்?

'ஆமாங்க சார்'.

சலிப்பூட்டக் கூடிய வேலைதான். அவரிடம் ஒத்துக்கொள்வதில் தயக்கம் எதுவுமில்லை.

'எங்க லைனுக்கு வந்துடுங்க' என்றார். கற்பனைக்கு சுலபமாகத்தான் இருக்கும். ஆனால் படிக்க வேண்டுமே. ஐ.டி வேலையில்  இருக்கும் முக்கால்வாசிப் பேர் 'சம்பளம் வருது..ஏன்  ரிஸ்க் எடுக்க வேணடும்' என பயப்படுகிறவர்கள்தான்.

மென்பொருள் துறையில் டேட்டா சயின்ஸ், டேட்டா  அனலிடிக்ஸ், டேட்டா வேர்ஹவுஸிங் - இப்படி நிறைய இருக்கின்றன. செம சூடான ஏரியா.

உதாரணமாக, சூழலியல் குறித்தான ஆராய்ச்சி செய்கிற மாணவர் தமது ஆராய்ச்சி ஆவணத்தில் குறைந்தபட்சம் முப்பது முதல் நாற்பது அட்டவணைகளை  இணைப்பார். அவரிடம் இருக்கும் தகவல்களை regression analysis செய்ய வேண்டுமா? ஆமாம் என்றால் எப்படிச் செய்வது? அதனை எப்படி அட்டவனைப்  படுத்துவது என்றெல்லாம் தெரியாமல் குழம்பிக் கிடப்பார். அங்குதான் பேராசியர் மாதிரியானவர்கள் ஆபத்பாந்தவர்கள். ஆனால் அவர் பெரிய அளவில் மண்டை காய்வதெல்லாம் இல்லை. அவரும் ஒரு மென்பொருளைத்தான் பயன்படுத்துகிறார். ஆனால் என்ன மென்பொருள் என்றெல்லாம் வெளியில்   சொல்வதில்லை

.'நீ டேட்டாவை கொடு; நான் அட்டவணை கொடுக்கிறேன்' என்பதுதான் டீல். 

'இந்த அட்டவணையைத் தயார் செய்ய ஆயிரம் சாப்ட்வேர் இருக்கு. அதை எப்படி பயன்படுத்தணும்ன்னு தெரியணும். எந்த முறை சரியானதாக இருக்கும்ன்னு தெரியனும்ல...அதான் சூட்சுமம்' என்றார். 

'உட்கார்ந்து படிங்க..வேலை நல்லா இருக்கும்' என்று மீண்டும் சொன்னார். 

உண்மையில் டேட்டா என்பது அட்டகாசமான எதிர்காலம் கொண்டது. ட்ரில்லியன் பைட் டேட்டாவெல்லாம்  சர்வசாதாரணமாகிவிட்டது. இந்தக் குப்பையிலிருந்து எந்த மணியை  எப்படி பொறுக்கி எடுப்பது என்பது கடலில் முத்தெடுப்பது  போல. இருக்கும் தகவல்களை சரியாகப் பயன்படுத்த தெரிந்தால் கெத்து  காட்டலாம். எங்கள் நிறுவனத்தில் கூட ஏகப்பட்ட ரிப்போர்ட் தயாரிக்கிறார்கள் . அனால் எதை எப்படி பயன்படுத்தினால்  என்கிற அனலிடிக்ஸ் எல்லாம் இல்லை.

பேராசிரியரிடம் இதைச் சொன்ன போது 'அதைச் செய்யணும் சார்..அப்போதான் அந்த டேட்டாவுக்கு மரியாதை' என்றார். சிரித்தேன். செய்கிற வேலை சலிப்பு தட்டிய யாருமே இத்தகைய புதுப் புதுக்  குட்டைகளில் மீன் பிடிக்க இறங்கிப் பார்க்கலாம். தப்பில்லை.  

'பெரிய சக்கர வியுகமெல்லாம் இல்லை. ஈஸிதான். சும்மா தேடிப் பாருங்க' என்று சொல்லி அனுப்பி வைத்திருக்கிறார். தேடிக்  கொண்டிருக்கிறேன். நீங்களும் தேடிப்  பார்க்கலாம்- ஆர்வமிருந்தால்.

திமுகவின் ஸ்லீப்பர் செல்

நினைவு தெரிந்த காலத்திலிருந்தே நான் திமுகவை விரும்புகிறவன். இரண்டாம் வகுப்பு நோட்டுப் புத்தகத்தில் பிளேடு வைத்து உதயசூரியனை வரைய அது அடுத்தடுத்த பல பக்கங்களைக் கிழித்து 'உங்க பையனுக்கு இப்பவே அரசியல்' என்று ஆசிரியை அப்பாவிடம் சொல்லி உதை வாங்கியதிலிருந்தே அந்த உணர்வு இருக்கிறது. ஏழாம் வகுப்போ அல்லது எடடாம் வகுப்போ படிக்கும் போது  பள்ளிக்கூடப் பையில் ஒரு சட்டையை ஒளித்து வைத்து மாலையில் அதை அணிந்து உதய சூரியனுக்கு வாக்கு கோரி தேர்தல் பரப்புரையில் பேசியிருக்கிறேன். அப்பொழுது ஒன்றியச்  செயலாளராக இருந்த செல்வராஜ் 'பையனுக்கு மாணவர் அணியில் ஒரு போஸ்டிங் போட்டுடுவோம்' என்று பேசப் போக அந்த விவகாரம் அப்பாவுக்குத் தெரிந்து முற்றுப் புள்ளி வைத்தார். 

சுய வரலாறு பேச வேண்டியதில்லை. ஆனால் ஒன்றைத் தெளிவுபடுத்திவிட வேண்டும். ஒருவனின்  ஆரம்ப கட்டத்தில் உருவாகும் அரசியல் சார்ந்த ஆர்வம், பள்ளிக்காலத்தில் விதைக்கப்படும் உணர்வுகள் என்பவைதான் அவனை எதிர்காலத்திலும் வடிவமைக்கின்றன. எனக்கு கிடைத்த நட்புகளும், அவர்கள் வாசிக்கக் கொடுத்த புத்தகங்களும், அவர்களுடன் நடத்திய உரையாடல்களும், எங்கள் ஊர்ச் சூழலும் என்னைத் திராவிட சித்தாந்தத்தின் மீது அதிக ஈர்ப்பு கொண்டவனாக வளர்த்திருக்கிறது.

இதில் மறைக்க என்ன இருக்கிறது? என்னளவில் மனசாட்சிக்கு விரோதமில்லாமல் செயல்படுகிறேன்.அவ்வளவுதான்.

எந்த அரசியல் சார்புமில்லாமல் நம் சூழலில் ஒருவன் செயல்பட முடியுமா என்று தெரியவில்லை. ஏதாவது ஒரு சித்தாந்தம் ஒருவனை தனக்குள் ஈர்க்கும். தேசியம், திராவிடம், இந்துத்துவம், கம்யூனிசம்,  தமிழ் தேசியம், சாதியம் என்று ஏதாவதொரு ஈர்ப்பு ஒவ்வொரு மனிதருக்கும் இருக்கும் என்றுதான் நம்புகிறேன். 'இதை வெளிப்படையாக பேச வேண்டியதில்லை' என்று வேண்டுமானால் அமைதியாக இருந்து கொள்ளலாம் அல்லது சூழலுக்கு ஏற்ப சரி தவறு குறித்துப் பேசலாம். அப்படி எதுவுமே இல்லாமல் 'புதிய இயக்கத்தை உருவாங்குவேன்' என்று கிளம்பலாம். நம்முடைய உயரம் நமக்குத் தெரிய வேண்டும். குடும்ப, பொருளாதாரச் சூழல் போன்றவைதான் நம்மை முடிவு செய்ய வைக்கின்றன. 

திராவிடக்  கொள்கைகளைச் சாரும் போது எனக்கு ஈடுபாடுள்ள  தேசியம், இறை நம்பிக்கை, காந்தியம், சுயச் சார்பு என்பனவற்றோடு  முரண்பாடுகள் உண்டாகின்றன. ஆனால் அவற்றையும் தாண்டி நான் திமுக அனுதாபிதான். அரசியல் ரீதியாக திமுக வலுவான இயக்கமாக இருக்க வேண்டும் என விரும்புகிறவன்தான்.

இன்று வரையிலும் திமுகவின் தேர்தல் அரசியலுக்கு எந்த வகையிலும் ஆதரவு தெரிவித்து எழுதியதில்லை. ஆனால் அதற்காக எப்பொழுதும் அப்படியே இருக்கப் போவதுமில்லை. வேறொரு சித்தாந்தம் சாம, பேத, தான, தண்ட வழிமுறைகளில் ஆக்டொபஸ் போல நாம் வாழும் சூழலை ஆக்கிரமிக்கத் தயாராகும் போது பால்யத்திலிருந்து நாம் நம்பிய சித்தாந்தத்தை யாராவது காப்பாற்றிவிட மாட்டார்களா என்று ஆதங்கம் கொள்வது மனிதனின் சாதாரண மனநிலை. அப்படியொரு மனநிலை உருவாகிக் கொண்டிருக்கிறது.  அந்தத் தருணத்தில் கலைஞர் மறைவு என்பது உணர்வு ரீதியாக அசைத்துப் பார்க்கிறது. 

நாம் வாழ்ந்த காலத்தில் மிகப் பெரிய தலைவர் கலைஞர் என்று நான் முழுமையாக நம்புகிறேன். இங்கு எல்லோர்  மீதும் விமர்சனங்கள் இருக்கும்.  தனிமனித தாக்குதல் இருக்கும். விமர்சனத்தை எதிர்கொள்ளாமல் பொது வாழ்க்கை என்பது சாத்தியமே இல்லை. காந்தியாக இருந்தாலும் சரி; மண்டேலாவாக இருந்தாலும் சரி. அவர்கள் வாழும் காலத்தில் எதிரிகள் இருப்பார்கள். மட்டம் தட்டுவார்கள். ஆனால் வாழ்ந்து முடிந்த பிறகு தலைவர்கள் அடையாளம் ஆக்கப்படுவார்கள். கலைஞரும் விதிவிலக்கில்லை.

அதே சமயம், லெனின் குறிப்பிட்டது போல ஒருவரின் உடல்தான் மரணிக்கிறது. அவரது அரசியல் இல்லை. கலைஞரின் அரசியல் விமர்சனத்திற்கும் விவாதத்திற்கும் உட்பட்டதுதான். அப்படியான உரையாடல்கள் வழியாகவும் செயல்பாடுகளின் வழியாகவும் சித்தாந்தங்கள் உயிர்ப்பு பெறுகின்றன அல்லது மடிந்து போகின்றன. பெரியாரும், அண்ணாவும், கருணாநிதியும் உருவாக்கிய திராவிட சித்தாந்தமும் அப்படியானதொரு செயல்பாடுகள் வழியாகவே அடுத்தடுத்த கட்டத்துக்கு நகரும்.

இது வெறும் ஒரு மனிதரின் மரணம் சம்பந்தப்பட்டது மட்டுமில்லை. இயக்கம், சித்தாந்தம் சம்பந்தப்பட்டது. 

கலைஞருக்குப் பிறகு திமுக என்ன ஆகும் என்றெல்லாம் யோசித்திருக்கிறேன். அரசியல் இயக்கத்தை சார்ந்து வளர்ந்த ஒரு சித்தாந்தம் அதன் தலைமை அசைவுறும் போது  வலுவிழந்து போக வாய்ப்புகள் அதிகம். ஆனால் ஸ்டாலின் முழுமையாகத் தன்னை தயார் படுத்திக் கொண்டுவிட்டார் என்றுதான் அவருடைய சமீபத்திய செயல்பாடுகளும் பக்குவமும் காட்டுகின்றன. 'உங்க அப்பாவுக்கு மெரினாவில் இடமில்லை' என்று சொல்லும் போது  'அதையும் பார்த்துவிடுவோமே' என்று  ஒரு கண்ணசைப்பைக் காட்டியிருந்தால் தொண்டர்கள் உணர்ச்சிவசப்பட்டு நிலைமை விபரீதம் ஆகியிருக்கக் கூடும். 

ஒரு மனிதருக்கு இதைவிடவும் ஒரு அழுத்தம் வேறு என்ன இருந்துவிட முடியும்? அப்பாவின் ஆசையான அண்ணாவின் அருகில் இடம் என்பதை நிறைவேற்ற முடியாது போலிருக்கும் சூழல். தன்னிடம் மிகப்பெரிய இயக்கம் இருக்கிறது. அடித்து நொறுக்கும் தொண்டர் படை இருக்கிறது. ஆளும் வர்க்கத்திடம் தோற்றுப்  போனால் தன் இருப்பு கேள்விக்குள்ளாக்கப்படும். அவகாசம் இல்லை. என்ன செய்ய வேண்டும்? எவ்வளவு பெரிய அழுத்தம் இது? இருந்த குறுகிய காலத்தில் பிரச்சினையை வழக்கு வழியாக எதிர்கொண்டதும், தீர்ப்பு வரும் வரை அவர் காட்டிய பொறுமையும், தீர்ப்பைக் கேட்டு மகனாக உடைந்து அழுத தருணமும் அவர் மீதான நம்பிக்கையை பன்மடங்கு உயர்த்தியிருக்கிறது. 

நான் திமுகவின் ஸ்லீப்பர்  செல் எல்லாம் இல்லை. நேரடியாகவே திமுகவை ஆதரிக்கிறேன். மாற்று சித்தாந்த, அரசியல் இயக்க நண்பர்களுக்கு இது உறுத்தலாக இருந்தால் என்னால்  என்ன செய்ய முடியும்? வெளிப்படையாக எதையும் பேசிவிடாமல் உள்ளுக்குள் வைத்துக் கொள்ளலாம். அதுதான் அவசியமா என்ன?

அவரவருக்கு எப்படி ஒரு சித்தாந்தம், அரசியல் பார்வையோ அப்படித்தான் எனக்கும்.

Aug 6, 2018

பாலம்

பெரும்பாலான நண்பர்களைப் போலத்தான் பிரபுவும் பழக்கம். மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். வாழ்வும் அதன் அர்த்தமும் குறித்தான மின்னஞ்சல். அதன் பிறகு பதில் எழுதி அலைபேசி வழியாகத் தொடர்பு கொண்டு இரண்டொருமுறை சந்தித்துப் பேசியிருக்கிறோம். மிக எளிய மனிதர். ஒரு பள்ளியில் ஆசிரியராக இருக்கிறார். அவருக்குத் திருமணம் ஆகியிருக்கவில்லை. அம்மாவும் அப்பாவும் உடனிருக்கிறார்கள்.

'கல்யாணம் செஞ்சுக்கச் சொல்லுறாங்க' என்று அவ்வப்போது சொல்லுவார். 

'ஏன் செஞ்சுக்கல' என்று கேட்ட போது 'அமையும் போது பார்த்துக்கலாம்' என்று சொல்லிவிட்டார். திருமணம் என்பது தனிமனித விருப்பு வெறுப்பு சார்ந்தது. அதிகமாக தலையிடாமல் விட்டுவிட வேண்டும். அவரைச் சந்தித்த வெகு நாட்களுக்குப் பிறகு பிரபுவின் அப்பா பேசினார். 'உங்களைப் பத்தி பேசுவான்..நீங்க சொன்னா கேட்டுக்குவான்..கல்யாணம் செஞ்சுக்க சொல்லுங்க' என்றார். இது ஒரு சிக்கலான விஷயம். ஒருவர் திருமணத்தை நிராகரிக்க ஆயிரம் காரணங்கள் இருக்கக் கூடும். நண்பர் ஜீவகரிகாலனிடம் 'திருமணம் செய்து கொள்ளுங்கள்' என்று சொல்லி சலித்துப் போனவன் நான். இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் விட்டுவிடுவார். பிரபுவிடமும் அதையே சொல்ல வேண்டுமா என்று தோன்றியது. சொல்லிப் பார்க்கலாம் என்று பேசினேன். இத்தகைய விஷயங்களை நேரில் அமர்ந்து பேச வேண்டும். 

திருவாலங்காடு சிவன் கோவிலில் அவரைச் சந்தித்த போது பேசினோம். வடாரண்யேஸ்வரர் கோவில். நடராஜரின் ஐந்து சபைகளில் இரத்தின சபை. பிரபு அரக்கோணத்தில்தான் பணியில் இருக்கிறார் என்பதால் சென்னை செல்லும் போது அரக்கோணத்தில் இறங்கி அவரோடு கோவிலுக்குச் சென்றிருந்தேன். 

திருமணம் பற்றிய பேச்சு வந்த போது 'ஏதாச்சும் அர்த்தம் இருக்கணும்' என்றார். எனக்குப் புரியவில்லை. 'முடியாத ஒரு பொண்ணுக்கு கடைசி வரைக்கும் உறுதுணையா இருக்கனும்ன்னு நினைக்கறேன்' என்றார். அவர் சொல்ல வந்த விஷயம் புரிந்தது. 

'உண்மையாகவே அப்படிதான் நினைக்கறீங்களா? இல்ல..லட்சிய வேகத்துல பேசுறீங்களா' என்றேன். அவர் அப்படி லட்சிய வெறியில் பேசக் கூடிய ஆள் இல்லை. இருந்தாலும் கேட்க வேண்டும் எனத் தோன்றியது. உறுதியாகத்தான் சொன்னார். பொதுவாக ஆட்களை இணைத்துவிடுவதில் எனக்கு மச்ச நாக்கு. பலித்துவிடும். ஒருவருக்கு ஒரு தேவை இருக்கும். அது வேலையாக இருக்கும் அல்லது வேறு உதவியாக இருக்கும் . என்னிடம் பேசியிருப்பார். திடீரென்று அதைத் தன்னிடம் கொண்டுள்ள இன்னொருவர் பேசுவார். இருவரையும் கோர்த்துவிடுவதுண்டு. சில சமயங்களில் சரியாக அமையும். சில சமயங்களில் அமையாது. 

பிரபு எதிர்பார்க்கும்படியான ஒரு பெண்ணை எனக்குத் தெரியும். விஜயலட்சுமி. தனியார் பள்ளியில் ஆசிரியை. போலியோவால் கால்கள் பாதிக்கப்பட்டவர். அவரும் மின்னஞ்சல் வழியாகவே அறிமுகம். அவர் திருமணம் ஆகாதவர் என்று தெரியும். ஆனால் திருமணம் செய்து கொள்ளுகிற விருப்பம் பற்றியெல்லாம் தெரியாது. 

பிரபுவிடம்  'நீங்க பார்த்து பேசுங்க...ரெண்டு பேருக்கும் பிடிக்கும்ன்னு நினைக்கறேன்' என்றேன்.

'நீங்களும் வாங்க' என்று சொன்னார். விஜயலட்சுமி வேலூர் பக்கம்.  'நான் வருவதை விட நீங்களே பாருங்க' என்று நாசூக்காகச் சொல்லியிருந்தேன். விஜயலட்சுமியிடமும் பிரபு பற்றிச் சொல்லியிருந்தேன். அதன் பிறகு சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். பிடித்துப் போனது. பிடித்துப் போகும் என்று முன்பே உள்மனம் சொன்னது. திருமணம் செய்து கொள்ளும் முடிவுக்கு வந்துவிட்டார்கள்.

சனிக்கிழமை திருமணம். 'என்ன பிரபு ஆடி மாசம்?' என்றேன். சிரித்தார். 

'நாள் நட்சத்திரமெல்லாம் பார்க்க வேண்டாம்ன்னு தோணுச்சு சார்..வந்துடுங்க..நேர்ல வர மாட்டேன்' என்றார். பொதுவாக திருமணங்களுக்குச் செல்வத்தைத் தவிர்த்துவிடுவதுண்டு. சொந்தக்காரர்கள் திருமணத்தை தவிர்க்க முடியாது. பிறிதொரு முறை சந்திக்கும் போது பாராமுகத்தைக் காட்டுவார்கள். நண்பர்கள் திருமணம், அதுவும் பிரமாண்டமாக நடக்கும் என்றால் செல்வதில்லை. ஒன்றரை வினாடி முகத்தையும் முகத்தையும் பார்த்துக் கொள்வதற்காக அவ்வளவு தூரம் செல்ல வேண்டும். அதற்கு மேல் திருமணங்களில் எதைச் சாதிக்கிறோம்?

'யாரையுமே கூப்பிடலை..' என்று விஜயலட்சுமி சொன்னார். 

சனிக்கிழமை காலை அதே திருவாலங்காடு கோவிலில் திருமணம். திருமணம் என்றால் பிரபுவும் விஜயலட்சுமியும் மாலை மாற்றிக் கொண்டார்கள். என்னையும் சேர்த்துப் பத்து பேர் இருந்தோம். விஜயலட்சுமி தனது சக்கர வண்டியில் அமர்ந்திருந்தார். பிரபு மாலை அணிவித்தார். பிரபுவின் அப்பா கைகளைப் பற்றிக் கொண்டார். 'அவனோட அம்மாவுக்குத்தான் விருப்பமில்லை...ஆனாலும் பரவாலீங்க' என்றார். பிரபுவின் அம்மா அழுதபடியே நின்றிருந்தார்.

விஜயலட்சுமியின் பெற்றோர் பதற்றமாக இருந்தார்கள். பிரபுவின் அம்மாவிடம் சென்றும் 'ரெண்டு பெரும் நல்லா இருப்பாங்க' என்று மட்டும் சொன்னேன். அந்த இடத்தில எல்லோருக்குமே சந்தோசம் என்று சொல்ல முடியாது. வருத்தம் என்றும் சொல்ல முடியாது. ஒரு வகையான மனநிலைதான் எல்லோருக்கும் இருப்பது போலத் தோன்றியது.

எனக்குதான்  வெகு சந்தோசம்.

கிளம்ப எத்தனித்த போது 'சாப்பிட்டு போலாம்' என்று எல்லோருமே சொன்னார்கள். எனக்கு வேறு சில வேலைகள் இருந்தன. அன்பளிப்பு கூட எதுவும் கொண்டு போயிருக்கவில்லை. 

'ரெண்டு மூணு நாள் கழிச்சு போன் பண்ணுங்க' என்று சொல்லிவிட்டு வந்தேன். அவர்களைத் தாண்டி வந்தவுடன் முதல் வேலையாக 'Connecting the people is the best service to mankind' என்று வாட்ஸாப்பில் மாற்றியிருக்கிறேன். 

'வாழ்க்கையின் அர்த்தம்' பற்றி பிரபு எழுதியது நினைவுக்கு வந்தது. எதை எதற்காகச் செய்கிறோம் என்றெல்லாம் குழம்ப வேண்டியதில்லை. எல்லாவற்றுக்குமே ஒரு அர்த்தம் இருக்கிறது. இந்த கட்டுரையை எழுதுவது உட்பட ஒவ்வொரு சிறு காரியமும் அதற்கான அர்த்தத்தை உருவாக்கிக் கொள்ளும் என்றுதான் நம்புகிறேன். வாழ்க்கையை அதன் போக்கில் விட்டுவிட்டால் அது நம்மை சரியான திசை நோக்கித்தான் அழைத்துச் செல்லும். நாம்தான் அலட்டிக் கொள்கிறோம்.

Aug 2, 2018

காமம் - கல்வி

கல்லூரியில் முன்னாள் மாணவர் தினத்தை ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார்கள். அது முக்கியமில்லை. ஒருவேளை மேடையில் பேச வேண்டிய அவசியம் ஏற்பட்டால் எதைப் பேச வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருந்த போது 'ரெகார்ட் டான்ஸ்' எல்லாம் நினைவுக்கு வந்தது. விடுதியிலிருந்து இரவு நேரங்களில் தப்பிச் சென்று ஆத்தூர், தாரமங்கலம் என்றெல்லாம் பயணித்து ரெகார்ட் டான்ஸ், கரகாட்டம், குறவன் குறத்தி ஆட்டம் என்று ஒன்று விட்டு வைத்ததில்லை. இதையெல்லாம் பார்த்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். ஒவ்வொன்றிலும் காமம்தான் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருக்கும். காமத்தை பகடியாக்கி இரட்டை அர்த்த வசனங்களால் சிரிக்க வைத்துக் கொண்டேயிருப்பார்கள்.  

குறத்தி வேடமிட்ட பெண்கள் பார்வையாளர்களாக இருக்கும் விடலைகளையும் சிறுவர்களையும் களத்துக்குள் இழுத்து கசமுசாவாகப் பேசுவார்கள். 'நம்மை இழுத்துவிடுவார்களோ' என்று பயமாகவும் இருக்கும்; 'நம்மை அழைக்கவில்லையே' என்று தவிப்பதாகவும் இருக்கும். குறவன்களிடம் சிக்கினால் சோலி சுத்தம். கலாய்த்துத் தள்ளிவிடுவார்கள். இத்தகைய கொண்டாட்டங்களை பற்றிச் சொல்வதற்காக இந்தப் பத்தியை ஆரம்பிக்கவில்லை. இவை எல்லாவற்றையும் பெண்களும் அமர்ந்து ரசிப்பார்கள். தீக்குச்சி நடனம் நடக்கும் இடங்களைத் தவிர பிற அனைத்து இடங்களுக்கும் பெண்கள் வந்திருப்பார்கள். தீக்குச்சி நடனம் என்னவென்று தெரியாதவர்களுக்கு தனியாக ஒரு நாள் வகுப்பு எடுக்கிறேன். இங்கு வேண்டாம். 

காமம் என்பதை மிக இயல்பான அம்சமாக எடுத்துக் கொண்டு சிரித்து வேடிக்கை பார்க்கும் இயல்புத்தன்மை மனிதர்களிடம் பரவலாகவே இருந்திருக்கிறது. அதைப் பகடியாக்கி, கலாய்த்து தாண்டிச் செல்கிறவர்களாக மனிதர்கள் இருந்திருக்கிறார்கள். கடந்த தலைமுறை வரைக்கும் பொதுவெளியிலேயே ஆண்களும் பெண்களும் பொடி வைத்துப் பேசுவதை கவனித்திருக்கக் கூடும். இப்படி இயல்பான ஒரு சங்கதி எப்பொழுது மூடு பொருளாக மாறிப் போனது என்று தெரியவில்லை.  இன்றைக்கும் கூட வயல்களில் வேலை செய்யும் போது பாடுகிற பாடல்களில் காமம் இருக்கும். ஆனால் அலுவலகத்தில் நடக்கும் ஆண்டுவிழாவில் இரட்டை அர்த்த நகைச்சுவை ஒன்றை உதிர்த்தால் அடுத்த நாள் மனிதவளத் துறையிலிருந்து அழைப்பு வந்துவிடும். காமத்தை பேசாமல் இருப்பதுதான் நாகரிகம் என்று கற்றுத் தந்திருக்கிறது இந்தச் சமூகம்.

ஒருவேளை  தொன்றுதொட்டே  காமத்தை இயல்பாக எடுத்துக் கொள்ளும் மனநிலை நம்மவர்களிடம் இல்லாமல் இருந்திருந்தால் கோவில் சிற்பங்களில் தொடங்கி, இலக்கியங்கள் வரை எல்லாவற்றிலும் காமம் மூடு பொருளாகவே இருந்திருக்கும். ஆனால் அப்பட்டமாக பேசியிருக்கிறார்கள். வெளிப்படையாக இருந்திருக்கிறது. இடைப்பட்ட காலத்தில்தான் இது மூடு பொருளாகியிருக்கிறது. 

கல்வியும், கற்பிக்கும் முறையும்தான் நம்மை இப்படிப் பகுத்துவிட்டதோ என்று சந்தேகமில்லாமல் இல்லை. வகுப்பறைகளில் ஆண்களையும் பெண்களையும் பிரித்து அமர வைப்பதில் தொடங்கி ஆண்களுக்கான தனி கல்வி நிறுவனங்கள் அதே போல பெண்களுக்குத் தனி என ஆண்களையும் பெண்களையும் இருவேறு உலகங்களாக மாற்றிய பிறகுதான் ஆண்களுக்கு பெண்களும், பெண்களுக்கு ஆண்களும் எட்டாத புதிர்களாகிவிட்டார்கள். எல்லாவற்றையும் பேசுவது போல காமத்தையும் இரு பாலினரும் இயல்பாகப் பேசுகிற சூழல் நிலவியிருந்தால் இவ்வளவு சிக்கல் உருவாகியிருக்காதோ என்றுதான் தோன்றுகிறது. 

நாம் ஸ்டீரியோடைப்பில் புலம்புகிறோமே 'கள்ளக்காதல் பெருகிவிட்டது' என்று அதற்கான ஆதிப்புள்ளியைத் தேடிப் போனால் இங்கேதான் போய் நிற்போம்.  'Corrupted to the core' என்று ஒரு நண்பர் சொன்ன போது படிப்புதான் அப்படி ஆக்கிவிவிட்டது என்றேன். இருக்கலாம் என்றார்.

எந்தவொரு மனிதனும் தனது ஆழ்மன இச்சைகளை வெளிப்படையாக பேசக் கூடாது என்று மிகப்பெரிய பெரிய சுவர் இங்கு எழுப்பப்பட்டிருக்கிறது. அதே சமயம் செல்போன் தொடங்கி, இணையம், சாலையோர பிரமாண்ட பதாகைகள் என சகல இடங்களிலும் மனிதர்களின் காம இச்சைகளைத் தூண்டி விடுகிற அம்சங்கள்தான் இருக்கின்றன. மார்பகப் பிளவுகளைக் காட்டுகிற பெண்ணுக்கு எந்தவிதமான தாழ்ச்சியுமில்லாமல் வெறும் உள்ளாடையோடு தொடைகளை விரித்துப் படுத்திருக்கும் ஆண்களின் படங்கள் இருக்கின்றன. ஆண்களும் பெண்களுமாகப்  பத்து பேர் பார்த்தால் ஏழு பேருக்காவது மனம் எதையெல்லாமோ யோசிக்கத்தானே செய்யும்?  ஒரு நாளைக்கு மனித மனதில் ஐம்பதாயிரம் எண்ணங்கள் தோன்றுவதாக கண்டுபிடித்திருக்கிறார்கள். இதில் பத்தாயிரம் எண்ணங்களாவது காமத்தைப் பற்றி மட்டுமே இருக்கும்படி நம் புறச்சூழல் அமைந்திருக்கிறது. ஆனால் பேசக் கூடாது. எல்லாவற்றையும் தூண்டிவிட்டு வடிகால் இல்லாத சூழலில் அத்தனை விவகாரங்களும் அரங்கேறுகின்றன. 

நம்முடைய எந்தவொரு உணர்ச்சியும் பேசுவதால் வடிந்துவிடக் கூடியவை. கோபத்தில் இருக்கிறவனை அமரச் செய்து பேசினால் அவன் கொஞ்சம் சாந்தமடைவான். வெறுப்பின் உச்சத்தில் இருப்பவனிடம் கூட பேசுவதால் அன்பை உருவாக்கிவிட முடியும். ஆனால் காமத்தின் உச்சத்துக்குச் செல்கிற மனிதன் இங்கே பேச என்ன வாய்ப்புகள் இருக்கின்றன? அதைப் பேசுவதுதான் தவறானதாகிவிட்டதே.

வெறும் பாடங்களில் மட்டுமில்லாமல் நம்முடைய கற்பிப்பு முறையிலும், கல்வி நிலைய அமைப்புகளிலும் பல மாறுதல்கள் அவசியம். ஆணுக்கும் பெண்ணுக்குமான பெரும் சுவர் தேவையில்லை. அவனும்/அவளும் நம்மைப் போன்ற சதைதான் என்கிற எண்ணம் உருவாக்கும்படி கல்வி நிலையச் சூழலை வடிவமைக்க வேண்டியது அவசியம். ஆணுக்கும் பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் புரிந்து கொள்ளவே முடியாத புதிராகவே இருக்கும் வரைக்கும் சமூக ஊடகங்கள் உருவாக்கிக் கொடுத்திருக்கும் ரகசிய வாய்ப்புகளின் வழியாக எதிர்பாலினத்தின் அந்தரங்கங்களுக்குள் மனம் நுழைந்து கொண்டேதான் இருக்கும். எதிர்காலத்தில் இதன் வேகமும் வீச்சும் இன்னமும் அதிகமாக இருக்கும். எந்தவொரு சிக்கலைத் தீர்க்கவும் அதன் ஆணி வேரைக் கண்டறிய வேண்டியது அவசியம். நம் சமூகத்தில் நிலவும் பாலியல் சார்ந்த பிரச்சினைகளுக்கும் அந்தக் கண்டறிதல்தான் தீர்வைத் தரும்.

Aug 1, 2018

பஞ்சு மிட்டாய் உலகம்

பஞ்சுமிட்டாய் இதழ் பற்றித் தெரிந்திருக்கும். குழந்தைகளுக்கான இதழ். பெங்களூரில் ஒரு அபார்ட்மென்ட்டில் இருந்துதான் சில ஆண்டுகளுக்கு முன்பாகத் தொடங்கியது. தமது அடுக்ககத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு மாதம் ஒரு முறை கதை சொல்லுதல் விளையாட்டு உள்ளிட்ட நிகழ்வுகளை பிரபு தனது நண்பர்களுடன் சேர்ந்து தொடங்கினார். பிரபுவை ஆரம்பத்தில் இருந்து கவனித்து வருகிறவன் என்கிற முறையில் அவரது தேடலும் கற்றலும் ஆச்சரியமூட்டுகின்றன.

'பத்து குழந்தை பெத்தவளுக்கு ஒரு புள்ள பெத்தவ மருத்துவச்சியா?' என்ற சொலவடை ஒன்று உண்டு. குழந்தை வளர்ப்பு என்பதெல்லாம் அனுபவத்தில் வருவது என்றுதான் பலரும் நினைத்திருக்கிறார்கள். ஆனால் அதுவொரு நுணுக்கம். பத்தாண்டுகளுக்கு முன்பிருந்த குழந்தைகளுக்கும் இன்றைய குழந்தைகளுக்குமான வித்தியாசம் மிகப் பெரியது. கேள்வி கேட்டால் அலற வைத்துவிடுவார்கள். அவர்களின் அறிவும் செயல்பாடும் ஒவ்வொரு பத்தாண்டுக்கும் இது மாறிக் கொண்டேதான் இருக்கும். குழந்தைகளின் உலகத்தோடு நெருங்கி உறவாடுகிறவர்களால் மட்டுமே குழந்தைகளுக்கு தேவையான உள்ளீடுகளை வழங்க முடியும். அப்படி உறவாடினால் மட்டும் போதாது; தம்மை புதுப்பித்துக் கொண்டேயிருக்க வேண்டும். இல்லையென்றால் அந்த உலகம் நம்மை விட்டு வெகு வேகமாக விலகி விடும்.

இன்றைய குழந்தைகள் உலகில் தீவிரமாக இயங்கக் கூடியவர்களாக 'கதை சொல்லி' சதீஷ், விழியன், இனியன் மாதிரியான சிலரைச்  சுட்டிக் காட்ட முடியும். பிரபுவும் அதைப் பட்டியலில் வரக் கூடியவர்தான். உண்மையில் இத்தகைய அற்புத மனிதர்களுக்கான தேவை முன் எப்பொழுதும் இருந்ததை விட இப்பொழுது அதிகம். நவீன உலகம் குழந்தைகளை நம்மிடமிருந்து வேகமாக அந்நியப்படுத்திக் கொண்டிருக்கின்றன. இவர்களைப் போன்றவர்களால் மட்டுமே அதன் வேகத்துக்குத் தடை போட முடியும்.

கடந்த சில ஆண்டுகளில் ஆர்வத்தின் காரணமாக பிரபு, தமது தொடர்புகளை விரிவாக்கிக் கொண்டார். குழந்தைகள் சம்பந்தமான நிகழ்வுகள் பலவற்றில் பார்வையாளராகக் கலந்து கொண்டார். பிறகு குழந்தை வளர்ப்பு சம்பந்தமான புத்தகங்களை வாசித்து அவை பற்றிய குறிப்புகளையும் விமர்சனங்களையும் தொடர்ந்து பதிவு செய்து கொண்டிருந்தார். அதே சமயம் குழந்தைகளுக்கான கதை சொல்லல், விளையாட்டு, குழந்தை வளர்ப்பு பற்றிய விவாதங்கள் என்பன வழியாக அவரது அனுபவமும் பெருகியது. பிரபுவுடன் நல்ல குழுவும் இணைந்திருக்கிறது. 

அச்சாக வெளி வந்த பஞ்சுமிட்டாய் இதழில் குழந்தைகளின் ஓவியங்கள், கதைகள் இடம் பெற்றன. சில இதழ்கள் வெளியான பிறகு இப்பொழுது ஆன்லைனிலும் பஞ்சுமிட்டாய் வெளியாகிறது. கட்டுரைகளை வாசித்தேன்.  அச்சு  இதழ் என்பது குழந்தைகளுக்கு மட்டுமானது. ஆன்லைனில் பெற்றோர், ஆசிரியர் என சகலருக்குமான விஷயங்களைச் சேர்த்திருக்கிறார்கள். மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. தொடர்ந்து இயங்க வாழ்த்துக்கள். 

சில அறிவுரைகளைச் சொல்ல வேண்டும்:

ஆன்லைன் இதழ்களில் தொடர்ந்து அப்டேட் இருக்க வேண்டும். வாரம் ஒரு முறை/மாதம் ஒரு முறை என்றால் வந்து வாசிக்கிறவர்களின் எண்ணிக்கை முதல் நாள் மட்டும் அதிகமாக இருக்கும் பிறகு படிப்படியாகக் குறைந்து விடும்.

வாசகர்களின் எண்ணிக்கை குறைவது என்பது நம்மை சற்று மனத்தளர்ச்சி கொள்ளச் செய்துவிடும். ஆன்லைனைப் பொறுத்த வரைக்கும் ஆரம்பத்தில் இருக்கும் ஆர்வம் படிப்படியாக வடிந்து போகவும் இதுதான் காரணம். 

தினசரி ஒரு கட்டுரை என்று தொடர்ந்து பதிவேற்றலாம். எது கடைசியாகப் பதிவேற்றம் செய்யப்பட்ட கட்டுரை என்பது தெளிவாக கண்ணில்படும்படி இருக்க வேண்டும்.

இத்தகைய செயல்பாடுகளில் வாசகர்களை நிகழ்த்த வழி வகை செய்தால் இன்னமும் நன்றாக இருக்கும். சந்தேகங்களுக்கு வல்லுநர் ஒருவர் பதில் சொல்வதும் சிறப்பாக இருக்கும். 

ஒரு வேண்டுகோள்- ஒரு ஆப் (app) வடிவமைக்க முடிந்தால் வடிவமைத்து வெளியிடவும். ஸ்மார்ட் ஃபோன்களில் பதிவிறக்கம் செய்து வாசிக்க ஏதுவாக இருக்கும். 

பாராட்டப்பட  வேண்டிய விஷயம்: 

சமீபத்தில் ஓசூரில் நடந்த புத்தக கண்காட்சியில் தொடர்ந்து அத்தனை நாட்களும் குழந்தைகளுக்கான அரங்கம் ஒன்றை ஏற்பாடு செய்து நிகழ்ச்சிகளை நடத்தினார்கள். இதற்கெல்லாம் அசாத்திய பொறுமையும் மனம் தளராத ஆர்வமும் வேண்டும். அவை இரண்டுமே இந்தக் குழுவினரிடம் இருக்கிறது என்பதால் பஞ்சுமிட்டாய் வழமையான இணைய இதழ்களைப் போலில்லாமல் வெகு காலம் வெற்றிகரமாக இயங்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.