நகமலைக்குச் சென்றிருந்தோம். 'சும்மா வாங்க..இடம் இருக்குது...செடி வைக்க எது தோதா இருக்கும்னு பார்க்கலாம்' என்றுதான் அழைத்தார்கள். வீட்டிலிருந்து கிளம்பும் போது மத்தியானம் ஆகுமோ அல்லது சாயந்திரம் ஆகிவிடுமோ என்று நினைத்து வழக்கத்தை விட அதிகமாக வயிற்றை நிரப்பிக் கொண்டு சென்றிருந்தேன். விதி விளையாடிவிட்டது.
ஒரு கதையைச் சொல்லிவிட வேண்டும். இரண்டொரு மாதங்களுக்கு முன்பாக ரத்த பரிசோதனை செய்து கொண்டேன். நாற்பதை நெருங்குகிறோம் அல்லவா? முன்னெச்செரிக்கை. கொழுப்பு கொஞ்சம் கூடுதலாக இருந்தது. அது தெரிந்த விஷயம்தானே. எந்த இடத்தில கொழுப்பு அதிகம் என்று லோலாயமாகக் கேட்காமல் மேலே படிக்கவும். மருத்துவரை கேட்டால் வாயைக் கட்டி கொஞ்சம் உடம்பை அசையுங்கள் என்று சொன்னார். தினமும் காலையில் வெறும் வயிற்றில் கொள்ளு வேக வைத்த தண்ணீரைக் குடித்துவிட்டு ஓடிக் கொண்டிருந்தேன். வாய்க்கும் பூட்டு போட்டிருந்ததால் கொழுப்பு குறைந்திருந்தது. அதனால் ஓடுவதை நிறுத்திவிட்டேன். ரெஸ்ட். வேணிக்கு இது பிடிக்கவில்லை. தினசரி 'வாக்கிங் போங்க' என்பாள். எதையாவது சாக்கு போக்கு சொன்னால் 'உங்களை நம்பி மூணு பேரு இருக்கோம்' என்பாள். 'என்னை நம்பி அமெரிக்காவே இருக்குது..நான் பார்த்துக்கிறேன் விடு' என்று சொல்லிவிடுவேன்.
இப்படி கதை போய்க் கொண்டிருக்கும் தருணத்தில்தான் இந்த நகமலை பயணம். 'கொஞ்சம் இந்த பக்கம் வாங்க..கொஞ்சம் இந்தபக்கம் வாங்க' என்று அழைத்தபடியே மலை ஏற விட்டுவிட்டார்கள்.பாதி ஏறிய பிறகு பேசாமல் திரும்பி கீழே ஓடி விடலாமா என்று கூட யோசித்தேன். 'என்ன சார் இப்படி மூச்சு வாங்குது' என்று அருகில் வந்த ஒரு இளைஞன் கேட்ட போது 'இறங்கறதுக்குள்ள நின்னுடுமாட்ட தெரியுது..கடைசியா வாங்கிக்கட்டும் விடு' என்றேன். சிரித்தான்.
(வீடியோக்களை ப்ரவுஸர் வழியாக பார்க்கலாம்)
நகமலை, நம்பியூர் பக்கத்தில் இருக்கிறது. ஒரு காலத்தில் பசுமையாக இருந்ததாம். வறண்ட பூமி. விறகுக்காக மனிதர்கள் மரங்களை வெட்டி மொட்டையாக்கிவிட்டார்கள். அந்த மலையைச் சுற்றிலும் மரங்களை நட வேண்டும் என்று உள்ளூரில் இளைஞர்கள் முடிவு செய்திருந்தார்கள். அவர்கள் கொஞ்சம் நாற்றுக்களை நட்டு பராமரித்தும் வருகிறார்கள். 'நீங்க ஊருக்கு வாங்க' என்று அழைத்திருந்தார்கள். அவர்களைச் சந்திக்கத்தான் சென்றிருந்தோம். ஆனந்தும், தொரவலூர் சம்பத்தும், கார்த்திகேயனும் வந்திருந்தார்கள். ஆனந்த் மலை மீது என்ன வகையான மரங்கள் இருக்கின்றன என்று பார்க்க விரும்பினார். காட்டு எலுமிச்சை உட்பட எளிதில் கண்ணில் படாத பல மரங்களை பார்த்துவிட்டு கீழே இறங்கினோம்.
இந்த மலையை பசுமையாக்குவதுதான் யோசனை. அடுத்தடுத்த திட்டங்களை செயல்படுத்த வேண்டும். இது நீண்ட காலத் திட்டமாகத்தான் இருக்க முடியும். ஒரு மலையை பசுமையாக்குவது என்பது எளிதான காரியமில்லை என்று தெரியும்.
சில திட்டங்களை வகுத்திருக்கிறோம். விதைப்பந்துகளைச் செய்து அதை மலை மீது வீசுவது முதல் திட்டம். அதற்கான விதைகளை சேகரிக்க வேண்டும். நாட்டு மர விதைகள் இருந்தால் தகவல் தரவும். இரண்டாவது திட்டம் அக்கம்பக்கம் இருக்கும் சத்தியமங்கலம், தாளவாடி உள்ளிட்ட மலைப்பகுதிகளுக்கு ஐம்பது பேரும் பயணிக்க முடிவு செய்திருக்கிறோம். கோட்டுப்புள்ளாம்பாளையம் இளைஞர்களும் வருவார்கள். அங்கேயிருந்து விதைகளைச் சேகரித்து வந்து நாற்றுக்களாக்கி மலை மீது நடுவது. இது கொஞ்சம் செலவு பிடிக்கும். மரங்களுக்கு நீர் ஊற்றுவது அவசியம். அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். உள்ளூர் இளைஞர்களின் ஒத்துழைப்பு, செடிகள் வளரும் விதம் ஆகியவற்றையெல்லாம் பார்த்துவிட்டு அடுத்தடுத்து திட்டங்களை செயல்படுத்தலாம்.
கூட்டத்தில் பேசும் போது மலைக்கு அருகிலேயே 'அடர்வனம்' அமைக்கலாம் என்று சொன்னார்கள். எப்பொழுதுமே இப்படியான காரியங்களில் கவர்ச்சிகரமான செயல்களில்தான் மனம் செல்லும். அடர்வனம் அப்படியானதொரு கவர்ச்சித் திட்டம். ஷங்கர் படம் மாதிரி வறட்சி முழுவதும் காணாமல் போய் அடுத்த காட்சியில் பச்சை கொழிக்க வேண்டும் என்று சிலர் நினைப்பதுண்டு. உண்மையில் அது சாத்தியமில்லை. படிப்படியாகத்தான் நகர வேண்டும். ஒரு திட்டத்தைச் செய்து முடிக்க ஒரு வருடம் வரைக்கும் கூட ஆகலாம். பொறுமைதான் வெற்றியைத் தரும். இதைச் சொன்னதும் அவர்களில் சிலர் வாடிப் போனார்கள். அது தவறில்லை. புரிந்து கொள்வார்கள்.
ஒரு மலை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருக்கிறது. அதை மொட்டையடிக்க நூற்றுக்கணக்கான வருடங்கள் ஆகியிருக்கும். அதே மலையை மூன்று மாதத்தில் பூத்துக் குலுங்கச் செய்ய இயலுமா? சில சிக்கல்கள் வந்தே தீரும். ஒவ்வொன்றாகத்தான் களைய வேண்டும். களைந்துவிடலாம்.
மலையைவிட்டு இறங்கும் போது மதியம் ஆகியிருந்தது. அடுத்த நாள் வரைக்கும் மூட்டு வலி பின்னியெடுத்துவிட்டது. அவ்வளவு வியர்வை. வேணியிடம் சொன்னேன். 'வேணும்னா வாரம் ஒருதடவை அங்க போய்ட்டு வாங்க' என்றாள். நான் அவ்வளவு பெரிய இளிச்சவாயனா? 'வாட்சப் குரூப் ஆரம்பிங்க' என்று ஊர்க்காரர்களிடம் சொல்லியிருக்கிறேன். இனிமேல் அதில்தான் தகவல் தொடர்பே. சிக்கினால் மலையேறவிட்டு பிழிந்துவிடுவார்கள் போலிருக்கிறது. மலையே ஏறாமல் மலையை மாற்றிவிட வேண்டும். பார்த்துவிடலாம் ஒரு கை.
7 எதிர் சப்தங்கள்:
ஹா ஹா ஹா ஹா 'என்ன சார் இப்படி மூச்சு வாங்குது' என்று அருகில் வந்த ஒரு இளைஞன் கேட்ட போது 'இறங்கறதுக்குள்ள நின்னுடுமாட்ட தெரியுது..கடைசியா வாங்கிக்கட்டும் விடு' என்றேன். சிரித்தான்.
ஒரு மலை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருக்கிறது. அதை மொட்டையடிக்க நூற்றுக்கணக்கான வருடங்கள் ஆகியிருக்கும். அதே மலையை மூன்று மாதத்தில் பூத்துக் குலுங்கச் செய்ய இயலுமா? நம்மில் எத்தனைபேர் இந்த உண்மையை புரிந்துகொண்டிருக்கிறோம்?
மணி, வேணி சொல்வது போல் மூன்று பேர் மட்டும் அல்ல; இந்த சமூகமே பல நிலைகளில் உங்களை நம்பி உள்ளது. சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய இயலும். பார்த்து கொள்ளுங்கள். வாழ்க வளமுடன்
பொறுமைதான் வெற்றியைத் தரும். இதைச் சொன்னதும் அவர்களில் சிலர் வாடிப் போனார்கள். அது தவறில்லை. புரிந்து கொள்வார்கள்.
//மலையே ஏறாமல் மலையை மாற்றிவிட வேண்டும்//
அடுத்த தேர்தல் ல மொதலமைச்சராயி இங்கிட்டுருந்து அங்குட்டுக்கு 16 வழிச்சாலை அமைச்சா தான் சாத்தியம்.
/என்னை நம்பி அமெரிக்காவே இருக்குது..நான் பார்த்துக்கிறேன் விடு' என்று சொல்லிவிடுவேன்.//
என்னையும் அவைத்தலைவரையும் மறந்துறாதீங்க
We will support for Nagamalai project sir...
Post a Comment