Jul 31, 2018

சுகவன முருகன்

'புது எழுத்து' மனோன்மணி என்றுதான் அவர் எனக்கு அறிமுகம். புது எழுத்து என்றொரு சிற்றிதழை நடத்தி வருகிறார். அவருக்குச் சுகவன முருகன் என்று வேறொரு பெயர் உண்டு. அதுதான் உண்மையான பெயரும் கூட. கிருஷ்ணகிரி பக்கம் இருக்கும் காடு மேடு மலையெல்லாம் சுற்றி- குகை ஓவியங்களைத் தேடுவது, கல்வெட்டுக்களைப்  படிப்பது, ஆதி மனிதனின் வாழ்விடங்களை நோக்கிப் பயணிப்பது என்று வெகு சுவாரசியமான மனிதர்.  சவளூர் அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக இருக்கிறார்.

எப்பொழுதும் சுகவன முருகனின் தோளில் ஒரு ஜோல்னா பை இருக்கும். 'எங்கயாச்சும் காடு மலைன்னு சுத்தும் போது கிடைக்கறதெல்லாம் எடுத்து போட்டுக்கிறதுங்க' என்பார். அவர் பொறுக்கியெடுப்பது பொன்னும் பொருளும் இல்லை. கற்கால ஆயுதங்கள், கருவிகள் என்பனவெல்லாம் அவர் கண்களில் படும். எடுத்துக் கொண்டு வந்துவிடுவார். தமது பள்ளி மாணவர்களிடமும் அவர் இப்படி எடுத்து வரச் சொல்வதுண்டு. இப்படியான ஆசிரியர்கள் வாய்ப்பது வரம். அந்த மாணவர்களில் நான்கைந்து பேருக்கு இதில் ஆர்வம் வந்தாலும் கூட போதும். அடுத்த தலைமுறைக்கு கடத்தியாயிற்று. 

யோசித்துப் பார்த்தால் ஆயிரமாண்டுகளாக நிலைத்து நின்றிருந்தவையெல்லாம் ஐம்பதாண்டுகளில் அழிந்து போகும் அவலத்தை நம் தலைமுறைதான் பார்த்துக் கொண்டிருக்கிறது. கடந்த தலைமுறை வரைக்கும் வீட்டு முற்றங்களில் சுவடிகள் தொங்கியதுண்டு. கான்கிரீட் வீடுகளுக்காக அத்தனை முற்றங்களும் அழிக்கப்பட்டுவிட்டன. அத்தனை சுவடிகளும் காணாமல் போய்விட்டன. ஆயிரமாண்டுகளாக சாலையோரம் கிடந்த நடுகற்களும் சுமைதாங்கிகளும் கடந்த நாற்பதாண்டு கால வளர்ச்சிக்கு இரையாக்கப்பட்டுவிட்டன. இப்படித்தான் இந்த மண்ணின் பெரும்பாலான அடையாளச் சின்னங்கள் காவு கொடுக்கப்பட்டிருக்கின்றன. மலைகளும் ஆறுகளும் குளங்களும் குட்டைகளும் சிதைந்து கொண்டேயிருக்கின்றன. அதே போலத்தான் கிருஷ்ணகிரி மலைகளும். கிரானைட்டுகளுக்காக அசுர வேகத்தில் பெயர்த்து எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதில் ஓவியங்கள் இருந்தால் என்ன, கற்படுகைகள் இருந்தால் என்ன? 

இந்தச் சூழலிதான் சுகவன முருகன் மாதிரியானவர்களின் செயல்பாடுகள் மிக முக்கியமானவை. வெறுமனே புத்தகங்களில் ஆய்வுகளை நடத்தாமல் களத்தில் இறங்கி தேடுகிறவர்களின் தேவையை எந்த விதத்திலும் மறுக்க முடியாது. கல் திட்டைகள், கல் வட்டங்கள், பாறைகள் என்று எதையாவது புதிது புதிதாக வெளிக் கொணர்ந்தபடியே இருக்கிறார்கள். இவை பதிவுகளாகி வரலாறுகளாகின்றன. விட்டு வைத்தால் இன்னமும் சில ஆண்டுகளில் இருந்த இடம் தெரியாமல் சிதைந்து போகக் கூடும். 

                    (கல்வெட்டை வாசிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்கிறார்)

சுகவன முருகன், தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் மட்டுமில்லாமல் அவை குறித்தான கருத்தரங்குகள், நிகழ்வுகளை ஏற்பாடு செய்வது போன்ற பணிகளையும் சலிப்பில்லாமல் செய்கிறவர். அவர் மட்டுமே எல்லாவற்றையும் செய்கிறார் என்று சொல்லவில்லை. அவருக்குப் பின்னால் பக்கபலமாக இருக்கிற நிறைய மனிதர்கள் இருக்கிறார்கள். ஆனாலும் ஒருங்கிணைப்பது, இழுத்துப் போட்டுக் கொண்டு பணிகளைச் செய்வது என முருகனின் உழைப்பு அசாத்தியமானது.  

அழிந்து கொண்டிருக்கும் இத்தகைய அடையாளங்களைத் தேடி எடுக்கும் சுகவன முருகன் மாதிரியான மனிதர்களின் செயல்பாடுகள் கவனிக்கப்படல் வேண்டும். கவனப்படுத்தப்படல் வேண்டும். தமிழ் இந்துவில் மாதராசன்பட்டணம் குறித்தான கல்வெட்டு பற்றிய செய்தி பிரதானப்படுத்தப்பட்டிருந்தது. வெகு சந்தோஷமாக இருந்தது. இதற்கும் சற்று முன்பாக அவர் தமது நண்பர்களுடன் சேர்ந்து கண்டறிந்த இசையெழுப்பும் பாறை குறித்தான செய்தி வெளியாகியிருந்தது.

வருகிற மாதங்களில் ஒரு சனி அல்லது ஞாயிற்றுக் கிழமை அவருடன் சேர்ந்து ஒரு களப் பயணம் செல்ல வேண்டும் என விரும்புகிறேன். அவரிடம் ஒரு விரிவான நேர்காணலைச் செய்யவும் விருப்பமிருக்கிறது. அவரிடம் இது பற்றி இன்னமும் பேசவில்லை. ஒத்துக் கொள்வார் என நினைக்கிறேன். வர விரும்புகிறவர்கள் ஒரு மின்னஞ்சல் (vaamanikandan@gmail.com) அனுப்புங்கள். திரு.முருகனிடம் பேசிவிட்டு விரிவாக எழுதுகிறேன்.

மாதரசன்பட்டணம் குறித்தான செய்தியை வாசித்தவுடன் அவரை அழைத்து வாழ்த்த வேண்டும் எனத் தோன்றியது. கட்டுரையாகவே எழுதி பதிவு செய்துவிடலாம் என்று எழுதிவிட்டேன்.

வாழ்த்துக்கள் சார்! தொடர்ந்து இயங்குங்கள். அதற்கான உடல்பலமும் மனோபலமும் வாய்க்கட்டும்.

சுகவன முருகன் : 98426 47101

Jul 30, 2018

பஞ்சுமிட்டாய்

மிதுனுக்கு இருபத்தைத் தாண்டிய வயது. இருபத்தைந்தை தாண்டியிருக்க வாய்ப்பில்லை. நேற்று முத்தூரில் சந்தித்தேன். உத்தர பிரதேசத்தைச் சார்ந்தவன். இங்கே ஒரு வேளையில் இருக்கிறான். பஞ்சுமிட்டாய் வியாபாரி. சிவகிரி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஈரோடு மாவட்டத்தில் சற்றே பெரிய சிற்றூர் ஊர் அது. அங்கேயிருந்து மிதிவண்டியில் பஞ்சுமிட்டாய் கொண்டு வந்திருந்தான். லொடக்கு சைக்கிள் அது. மிதுனின் முதலாளி பஞ்சுமிட்டாய் உற்பத்தி செய்கிறார். காலையில் தன்னுடைய பணியாளர்களிடம்  ஆளுக்கொரு மிதிவண்டியைக் கொடுத்து அனுப்பி வைத்துவிடுகிறார்.

ஒவ்வொருவரிடமும் இருநூறு பொட்டலம் பஞ்சுமிட்டாய்கள் இருக்கும். ஒரு பொட்டலம் பத்து ரூபாய். கையில் ஒரு மணியை ஒலித்துக் கொண்டே அவன் மிதிவண்டியை ஓட்டி வந்து நிறுத்திய மரத்துக்கடியில் நானும் அவனும் அமர்ந்து கொண்டோம். ஒரு நாளைக்கு நூற்றைம்பது பொட்டலங்களை விற்கிறானாம். ஆயிரத்து ஐநூறு ரூபாய்.  எப்படியும் முதலாளிக்கு ஒரு பொட்டலத்துக்கு ஆறேழு ரூபாயாவது இலாபம் நிற்கும். 

'உனக்கு எவ்வளவு சம்பளம்?'

'ஆறாயிரம்'. மாதத்துக்கு. 

'போதுமா?' - சிரித்தான்.

'கானா கால்யே?' எனக்குத் தெரிந்த இந்தி வாக்கியங்களில் இதுவும் ஒன்று. கடையில் சாப்பிட்டிருந்தான்.

'எப்போ ஊருக்கு போவ?'

'எப்பவாச்சும்' - என்ன நினைத்தானோ தெரியவில்லை. அவனே கை விரல்களை எண்ணி இன்னமும் மூன்று மாதங்களில் போவதாகச் சொன்னான்.

'திரும்ப வருவியா?'

வருவதாகத் தலையாட்டினான். ஆறாயிரம் ரூபாய்க்காக குடும்பத்தை விட்டு வெகு தூரம் வந்து வேகாத வெயிலில் அலைவதை நினைத்துப் பார்க்க சங்கடமாக இருந்தது. கொஞ்சம் ஏமாந்தாலும் வாழ்க்கை நம்மை புரட்டிப் போட்டுவிடக் கூடும். 'ஒரு பூவை ஏறி மிதிச்சுட்டோம்' என்று அம்மா சொல்வதுண்டு. நமக்கு கூடுதலாக அதிர்ஷ்டம் கிடைத்திருக்கிறது என்று அர்த்தம். எப்படி மறுக்க முடியும்?

இத்தகைய மனிதர்களை பார்த்துவிட்டுக்  கோவிலுக்குள் செல்லும் போது 'எந்தக் காலத்திலும் இருக்கிற நிலைமையை விட்டு கீழ போகாம பார்த்துக்க ஆண்டவா' என்றுதான் வேண்டத் தோன்றுகிறது. பொருளாதாரத்தில் மட்டுமில்லை. எல்லாவற்றிலும் அப்படிதான். இப்படியே 'கீழே விழாம புடிச்சுக்க' என்று மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தால் எப்பொழுது உயர வேண்டும் என்று அவனிடம் கேட்டு, அவன் எப்பொழுது அருளி, பிறகு எப்பொழுது உயர்வது என்று தெரியவில்லை. 

'நீயே ஒரு சைக்கிள் வாங்கிக்கலாம்ல?' என்று கேட்டதற்கு ஐடியா இருப்பதாகச் சொன்னான். தலையைப்  படிய வாரியிருந்தான் மிதுன். ஜீன்ஸ் பேண்ட்டுக்குள் சட்டையை நுழைத்து இன் செய்து பெல்ட் அணிந்திருந்தான். அடிக்கடி மணி அடித்தான். ஒன்றிரண்டு பொட்டலங்கள் விற்றன.

'சைக்கிள் மட்டும் வாங்கிக்க...ஒவ்வொரு நாளைக்கும் பஞ்சுமிட்டாய் பொட்டலங்களை நானே காசு கொடுத்து வாங்கிக்குறேன் என்று முதலாளிகிட்ட சொல்லு. விற்று ஒரு பொட்டலத்துக்கு இரண்டு ரூபாய் என்றாலும் கூட ஒரு நாளைக்கு முன்னூறு கிடைக்குமுல்ல' என்றேன். இத்தகைய பையன்களைக் கண்டால் அறிவுரை சொல்கிறேன் பேர்வழி என்று சில கட்டைகள் கிளம்புவது வாஸ்தவம்தானே?

மிதுனுக்கு அப்பா இல்லை. அம்மாவும் உடன் பிறந்தவர்களும் இருக்கிறார்கள். சம்பாதிக்கும் பணத்தை ஊருக்கு அனுப்ப வேண்டும் என்கிற அழுத்தம் அவனுக்கு. இதையெல்லாம் அவன் கணக்கு போடமாலா இருந்திருப்பான்? ஆனால் ஒருவேளை விட்டு வைத்திருந்தால் இனியாவது கணக்கு போடட்டும் என்கிற நப்பாசைதான். 

'ஈஸி இல்ல சார்' என்றான்.அவரவர் பிரச்சினை அவரவருக்குத்தான் தெரியும். 

'உங்க ஊர்ல இந்த பணத்தைச் சம்பாதிக்க முடியாதா?' - கேட்க எளிதான கேள்வி. அமெரிக்காவில் ஒரு லட்சம் சம்பளம் வாங்குகிறவரிடம் 'உங்க ஊர்ல சம்பாதிக்க முடியாதா' என்று கேட்டால் என்ன சொல்வார்? 

மிதுன் சிரித்தான்.

சில வருடங்களுக்கு முன்பாக அப்பாவுக்கும் அம்மாவுக்கும் சண்டை வந்த போது அதில் அப்பா அம்மாவை கிணற்றுக்குள் தள்ளிவிட்டார். அப்பொழுது அப்பாவுக்கு போதை. அம்மாவுக்கு கால் உடைந்துவிட, அம்மாவின் உறவினர்களில் யாரோ ஒருவர் அப்பாவை வெட்டிக் கொன்று விட்டார்கள். அது வெறும் ஈகோ கொலை. இப்பொழுது குடும்பத்துக்கு அவர்கள் யாரும் உதவுவதில்லை. அம்மாவுக்கு இப்பொழுது நடக்கக் கூட முடிவதில்லை. அதனால் அவர் வேலைக்கும் செல்வதில்லை. மிதுன் ஊரைச் சார்ந்தவன் அழைத்துவந்துவிட்டான். இங்கே வந்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டன. அம்மாவுக்கு எப்படி இருக்கிறது என்று கூடத் தெரியாது. செல்போனில் கேட்கும் போதெல்லாம் பரவாயில்லை என்கிறார்கள். அம்மாவின் கால் பற்றி பிரச்சினையில்லை. அங்கே அவர்கள் சாப்பிட ஏதாவது கிடைக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். மற்றது பற்றியெல்லாம் தனக்கு பெரிய காணவில்லை என்றான்.

இதைக் கேட்ட பிறகு அவனிடம் பேசுவதற்கு என்ன இருக்கிறது? எளிய மனிதனாகத் தெரிந்தான். பெரும் சுமை அவன் முதுகு மீது. மனிதர்கள் பார்வைக்கு எல்லோரும் ஒரே மாதிரிதான். யாருக்கு எந்த பாரம் என்று அடுத்தவர்களுக்கு எப்படித் தெரியும்? 

'நேரமாச்சு... நான் கிளம்பறேன்' என்று அரை குறைத் தமிழில் சொல்லிவிட்டு கிளம்பினான். மூன்று வருடங்களாக இந்த ஊரில் அவன் கற்றுக் கொண்ட தமிழ். 

அவன் கிளம்பிய பிறகும் அந்த மரத்தடியில் கொஞ்ச நேரம் நின்றிருந்தேன். நிழல்தான். ஆனாலும் வெக்கையில் உடல் கசகசத்துப் போனது. 

Jul 25, 2018

கதைகள்

ஊட்டியில் நடந்த புத்தகக் கண்காட்சியில் பேசிய இயக்குனர் மிஷ்கின் ஒன்றைக் குறிப்பிட்டார். 'ஒவ்வொரு நாளும் புதிய சிறுகதைகளை வாசிக்க வேண்டும். அப்படி வாசிக்காதவன் _________ ' என்றார். குறிப்பாக உதவி இயக்குநர்களுக்கானது அந்த அறிவுரை. அந்த ______ என்னவாகவோ இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் அவர் சொன்னது முக்கியமான விஷயமாகப் பட்டது. தினசரி ஒரு கதையை வாசித்துவிட வேண்டும் என்பதை வெகு நாள் பழக்கமாக வைத்திருக்கிறேன். தினசரி பிரச்சினைகள், நெருக்கடிகளிலிருந்து விடுபடுவதற்கான வழிமுறையாக சிறுகதைகளும் புனைவுகளும் அமைவதை உணரக் கூடும்.

ஒரு  சிறுகதையை  வாசிக்க எவ்வளவு நேரம் பிடிக்கும்? அதிகபட்சம் ஏழு முதல் பத்து நிமிடங்கள். வீட்டிலிருந்து கிளம்புவதற்கு முன்பாக வாசித்துவிட்டால் அலுவலகம் வந்து சேரும் வரைக்கும் அதுதான் மண்டைக்குள் குட்டிக்கரணம் அடித்துக் கொண்டிருக்கும். சற்று யோசித்துப் பார்த்தால் இப்பொழுதெல்லாம் நமக்கான திறப்புகள் என்று எதுவுமே இல்லை. யாரிடமாவது மனம் விட்டு பேசுகிறோமா? சுற்றிலும் நடப்பதை கவனிக்கிறோமா? எந்நேரமும் செல்போன் அல்லது கணினிதான் நம்முடைய உலகமாக இருக்கிறது. திண்ணைகள் இல்லை. அரட்டைகள் இல்லை. சக மனிதனைப் பற்றிய கவனிப்பு சுத்தமாக இல்லை. நாமாகவே நம்மைச் சுற்றி ஒரு பெரிய சுவரை எழுப்பி வைத்திருக்கிறோம். தேங்குவதையெல்லாம் எங்கேதான் கொட்டுவது? பொதுவாகவே கதைகள் நல்ல திறப்பு. 'எதற்காக ஒருவர் வாசிக்க வேண்டும்' என்று கேட்டால் நமக்குள் நாமாகவே ஓர் உரையாடலை நிகழ்த்திக் கொள்ள கதைகள் அற்புதமான வாய்ப்பை உருவாக்கித் தருகின்றன என்று சொல்லலாம். எவ்வளவு பாத்திரங்கள், எவ்வளவு விசித்திரமான மனிதர்கள், அவர்களின் மனநிலை, இந்த உலகம் குறித்தான நுட்பமான சித்திரங்கள் என எல்லாவற்றையும் நமக்குச் சொல்லித் தருபவை கதைகள்.

நேற்று அசோகமித்திரனின் புலிக் கலைஞனை வாசித்தேன். அவர் ஜெமினி ஸ்டுடியோவில் வேலைக்கு இருந்த அனுபவத்திலிருந்து பிறந்த கதை. மதிய உணவு இடைவேளையின் போது சினிமாவில் வாய்ப்பு கேட்டு வரும் காதர், அவரது புலி வேஷம், அதன் வழியாக அவரது வாழ்வின்  வலி, வாய்ப்பு கேட்டு இரந்து நிற்கும் அவரது உடல், முக பாவனைகள் என கதை நம்மை வேறொரு உலகத்துக்கு அழைத்துச் செல்லும். சினிமாவில் ஏதாவது வாய்ப்பு கிடைத்துவிடாதா என்று இயக்குனர்களின் அலுவகத்துக்கு வந்து போகும் பல நூறு எளிய கலைஞர்கள் இன்னமும் இருக்கிறார்கள். எப்பொழுதும் இருப்பார்கள். கலைஞனின் உலகம் வேறுதான். ஆனால் அங்கு பஞ்சமும் பட்டினியும் பசியும் அவனை எவ்வளவு கூனிக் குறுக வைக்கின்றன? 

கதையை இதுவரை வாசித்திராதவர்கள் ஒரு முறை வாசித்துவிடவும். 

எங்கள் அலுவகத்தில் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை கதை சொல்லச் சொல்வார்கள். ஒவ்வொரு முறையும் ஒருவர் சொல்ல வேண்டும். ஆளாளுக்கு அவரது வாழ்க்கையில் நடந்த கதைகளைச் சொல்வது வழக்கம். கதை என்பது சம்பவமில்லை என்று உறுதியாக நம்புகிறவன் நான். எங்கே தொடங்க வேண்டும், எந்த இடத்தில் நகைச்சுவை வர வேண்டும், எந்த இடத்தில வாசிக்கிறவனைக் கரைக்க வேண்டும், எப்படி முடிய வேண்டும் என யோசித்து யோசித்துச் செதுக்குவதற்கும் போகிற போக்கில் சொல்லிச் செல்வதற்கும் ஆயிரம் வித்தியாசங்கள் உண்டு. 

ல.ச.ராவின் ஒரு கதையை வாசித்து அதன் சாறு வடிந்துவிடாமல் இன்னொருவருக்குச் சொல்லிவிட முடியுமா என்று தெரியவில்லை. சு.ராவின் கதைகளில் வரிகளுக்கிடையில் ஒளிந்து கிடக்கும் வாசிப்பின்பத்தை இன்னொருவருக்கு கதை சொல்லலில் கடத்திவிட முடியும் என்று தோன்றவில்லை. ஆனால் வாசித்ததை உள்வாங்கி கதை குறித்தான அபிப்பிராயத்தைச் சொல்லாமல் கேட்கிறவர்களுக்குக் கதையாகச் சொல்வதில் ஒரு மிகப்பெரிய திருப்தியும் பலமும் கிடைக்கும். முயற்சித்துப் பார்க்கலாம். அலுவலகத்தில் என்னுடைய முறையின் போது ஒரு நல்ல கதையைச் சொல்ல வேண்டும் என்று அ.மியின் புலிக்கலைஞனைச் சொன்னேன். இருபது நிமிடங்கள் தேவைப்பட்டது. ஆனால் யாருடைய கவனமும் சிதறவில்லை. நான் நன்றாகச் சொன்னேன் என்று அர்த்தமில்லை. கதை அப்படி. நல்ல கதைகள் அப்படித்தான். நம்மை ஒரு கொக்கியில் மாட்டி எங்கேயெல்லாமோ இழுத்துச் சென்றுவிடுகிறது.

இதைவிடவும் வேறு என்ன வடிகால்களை நாம் கண்டுபிடித்துவிடப் போகிறோம்? 

அசோகமித்திரனின் எழுத்துக்கள் அவரது வாழ்வியல் அனுபவங்களின் திரட்சியாகத்தான் இருக்கின்றன. செவ்வாய் கிரகத்திலிருந்து எதையும் எடுத்து வந்து அவர் எழுதவில்லை. அலுவலகத்தில் நடக்கும் பிரச்சினைகளை எழுதினால் 'இதையெல்லாம் எழுதினால் அலுவலகத்தில் எதுவும் பிரச்சினை ஆகாதா?' என்று யாரோ கேட்ட கேள்வியும் நினைவில் வந்து போனது. ஜெமினி ஸ்டுடியோஸ் அனுபவங்களை அசோகமித்திரனின் எழுத்துக்களில் பல இடங்களில் பார்க்க முடியும். கரைந்த நிழல்களில் தொடங்கி எங்கேயாவது அவரது சினிமா கம்பெனி அனுபவங்கள் எட்டிப் பார்த்த படியே இருக்கின்றன. அசோகமித்திரன் என்றில்லை- பெரும்பாலும்,  எழுதுகிறவன் தமக்கான கச்சாவை தன்னைச் சுற்றி இயங்கும் உலகத்திலிருந்துதான் எடுக்க முடியும். எவையெல்லாம் இந்த உலகத்திலிருந்து ரத்தம் சதையுமாக எடுக்கப்பட்டு எழுத்தாக மார்றப்படுகிறதோ அவையெல்லாம் உயிர்த்தன்மை கொண்டவையாக இருக்கின்றன. கற்பனை பற்றியும் படைப்பறிவு பற்றியும் அதீத நம்பிக்கை கொண்டு உடான்ஸ் விட்டால் தட்டையாகிப் போவதற்கான சாத்தியங்கள் வெகு அதிகம்.

Jul 24, 2018

புல்லட்

எங்கள் மேலாளராக இருந்தவர் ராஜினாமா செய்து விட்டுக் கிளம்பிவிட்டார். கன்னடர். ராஜினாமாக் கடிதம் கொடுத்த பிறகு கடைசி இரண்டு மாதங்களில் நீங்களும் நானும் என்ன செய்வோம்? இருக்கிற நேரத்தையெல்லாம் யூடியூபில் படம் பார்த்து அல்லது ஃபேஸ்புக்கில் வேடிக்கை பார்த்துக் கழிக்கலாம். பையை வைத்துவிட்டு வெளியில் சுற்றலாம். சைட் அடிக்கலாம். கடலை போடலாம். இன்னும் எவ்வளவோ செய்யலாம். ஆனால் அந்த மனுஷன் அரசியல் செய்தார். கப்பித்தனமான, அதே சமயம் எதிராளி எந்திரிக்கவே முடியாமல் அடிக்கும் அரசியல். 

அவரும் இன்னொருவரும் ஒரே கால கட்டத்தில் வேலைக்குச் சேர்ந்தவர்கள். சேர்ந்த போது இவர் ஒரு அணிக்கு தலைவர்(லீடர்). அவர் இன்னொரு அணிக்குத் தலைவர். இருவருக்குமிடையில் முறைப்பும் விறைப்புமாகக் கிடந்த சமயத்தில் வந்து சேர்ந்தேன். அப்பொழுது இருவருக்குமே வேறொரு கன்னடர் மேலாளராக இருந்தார். ஆனால் இந்த ஆள் சோப் போட்டு  விடும் அளவுக்கு அவரது எதிராளியால் சோப் போட்டுவிட முடியவில்லை. கார்பொரேட் நிறுவனங்களில் சோப்புக்குத் தனி மரியாதை உண்டு. மேலாளராக இருந்த கன்னடர் வேறொரு அணிக்குச் செல்லும் போது தனக்கு சோப் பூசிய  கன்னடரை மேலாளராக்கிவிட்டுச் சென்றார்.

கன்னடன் சரியான 'கன்னிங்கன்' (cunning-gun). சிரித்துக் கொண்டே சூடு வைத்துவிடுவதில் படு கில்லாடி. எதிராளிக்கு அதெல்லாம் தெரியாது. முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்துக் காட்டிவிடுவார். அதுதான் எதிராளியின் மிகப்பெரிய பலவீனமாக இருந்தது. கன்னடன் மேலாளர் ஆன பிறகும் இருவரும் முறைத்துக் கொண்டுதான் திரிந்தார்கள். அவர் மீட்டிங் வைக்கும் போதெல்லாம் இவர் வர மாட்டார். வந்தாலும் செல்போனை பார்த்துக் கொண்டு இருப்பார். இப்படி ஒரே கசகசாவாக இருந்த போதுதான் இரண்டு மாதங்களுக்கு முன்பாக கன்னடர் ராஜினாமா செய்துவிட்டார்.

அதன் பிறகுதான் ஒரே அக்கப்போர். 'போறதே போறோம்..எதிரியை முடித்துவிட்டு போகலாம்' என்று திட்டமிட்டுவிட்டான். எதிராளியை தொலைக்க வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்? 'இவன் சரியில்லை சார்' என்று நேரடியாகப்  போட்டுக் கொடுக்கலாம். ஆனால் அதை மேலே இருப்பவர்கள் நம்புவதற்கான வாய்ப்பு வெகு குறைவு. 'இவனுக ரெண்டு பெரும் ஒரே செட்...ஏற்கனவே இவனுகளுக்குள்ள பிரச்சினை இருக்கு' என்று மேலிடம் கருத வாய்ப்பு இருக்கிறது. கன்னிங்கன் இன்னொரு வேலையைச் செய்தான். தன்னுடைய எதிரியிடம் இரண்டு அணித்தலைவர்கள் இருந்தார்கள். அவர்களுக்கு ஆளுக்கு ஒரு புல்லட் தயார் செய்தான். 

முதல் புல்லட் ஒரு அணியின் தலைவனுக்கு. 'சார் இவன் ஒழுங்காவே ஆபிஸ் வருவதில்லை' என்று சொல்லியபடியே சுட்டான். எங்கள் அலுவலத்தில் ஒரு விதிமுறை உண்டு. ஒரு நாளைக்கு ஏழரை மணி நேரமாவது உள்ளே இருக்க வேண்டும். இல்லையென்றாலும் யாரும் கேட்க மாட்டார்கள். ஆனால் தேவைப்படும் போது பயன்படுத்திக் கொள்வார்கள். முதல் புல்லட்டுக்கு பலியான அணித்தலைவர் நல்ல உழைப்பாளி. கடுமையாக வேலை செய்வார். ஆனால் அவருக்குப் பிரச்சினை அவரது வீடு. ஓசூரிலிருந்து தினசரி வந்து போகிறார். சில மாதங்களுக்கு முன்பாக அவரிடம் பேசிய கன்னிங்கன் 'நீ வேலையை மட்டும் பார்த்துக்க..நேரம் பத்தியெல்லாம் கவலைப்படாத' என்று சொன்னதை நம்பிவிட்டார். கடைசியில் ஓசூர்க்காரரின் வருகைப் பதிவை அப்படியே அச்சு எடுத்துக் கொடுத்துவிட்டான். 'இதைக் கூட எதிராளி சரியான கண்காணிக்கவில்லை..' என்று கோர்த்துவிடுவதுதான் அவன் நோக்கம். அது மிகச் சரியாக நடைபெற்றது. 'இதெல்லாம் நீங்க பார்த்துக்கிறதில்லையா?' என்று எதிராளியை தாளித்து எடுத்துவிட்டார்கள். முதல் புல்லட் ஓசூர்காரர் நெஞ்சு வழியாக புகுந்து கன்னிங்கனின் எதிராளியின் நெஞ்சில் பாய்ந்தது. ஒரே புல்லட்டோடு விட்டால் உயிர் போகவில்லை என்றால் என்ன செய்வது?

அடுத்த புல்லட் தயாரானது.

இந்த புல்லட் தெலுங்குவாலாவுக்கு. அவரும் தனது எதிராளியின் நேரடி கட்டுப்பாட்டில் வருபவர்தான். அவருக்கும் ஒரு வடக்கத்தியானுக்கும் ஒரு பிரச்சினை. வடக்கத்தியானை அழைத்து 'உனக்கு என்ன பிரச்சினை' என்று கன்னிங்கன் தானாகவே கிளறிவிட அவன் புலம்பியிருக்கிறான். அவன் ஒரு கப்ஸா மன்னன் போலிருக்கிறது. 'என்னை அடித்துவிட்டான்' என்று சொல்லியிருக்கிறான். அது கன்னிங்கனுக்கு அல்வா சாப்பிட்டது போல ஆகிவிட்டது. 'எப்போ அடிச்சான்? எப்படி அடிச்சான்?' என்று கேட்டால் எட்டு மாதங்களுக்கு முன்பு வடக்கதியானின் பக்கத்தில் நின்று காதைப் பிடித்தாராம் தெலுங்குவாலா. 'இது போதும்..எனக்கு மெயில் அனுப்பு' என்று இதை மின்னஞ்சலில் எழுதி வாங்கி அதை மேலிடத்துக்கு அனுப்பிவிட்டான். இரண்டாவது புல்லட் முதல் புல்லட்டை விட வேகமாகப் பாய்ந்தது. 'போலீஸ் வந்தா என்ன பண்ணுறது' என்கிற அளவில் லோலாயமாக பேசிக் கொண்டிருந்தார்கள்.

'டேய்..காதை புடிச்சதுக்கெல்லாம் போலீஸ் வருமா?' என்று கேட்கலாம்தான். ஆனால் அடுத்த புல்லட்டை நம் மீது செலுத்திவிடுவார்கள். நெஞ்சில் சுடுவார்களோ அல்லது...வேண்டாம் விடுங்கள்.

நேரடியாக எதிராளியை தங்கியிருந்தால் அவர் தப்பியிருக்க வாய்ப்பிருக்கிறது. இப்பொழுது கஷ்டம். 'இந்த ஆளை எல்லாம் மேனேஜர் ஆக்கினீங்கன்னா அவ்வளவுதான்' என்கிற மாதிரி காட்டிவிட்டுச் சென்றுவிட்டான். எடியூரப்பாவிடம் சேரப் போகிறானோ அல்லது குமாரசாமியிடமோ தெரியவில்லை. 

அலுவலகமே கிசுகிசுத்துக் கிடக்கிறது. ஆளாளுக்கு வாய் மீது கையை வைத்து பொத்திக் கொண்டு 'இப்படியெல்லாமா அரசியல் செய்வாங்க' என்று பேசிக் கொள்கிறார்கள். கன்னிங்கன் இப்படியெல்லாம் செய்வான் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனால் கார்பொரேட் அரசியல் என்பது இதுதான். நேரடியாக புல்லட் பாயாது. ஆனால் பாய வேண்டியவனின் இருதயத்தில் சரியாக பாயும். இதையெல்லாம் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். நாம் அடுத்தவனைச் சுட வேண்டியதில்லை. ஆனால் எவனாவது நம்மை நோக்கிச் சுட்டால் விஜயகாந்த் மாதிரி பாய்ந்து வரும் தோட்டாவை வாயில் பிடித்துச் சுட்டவன் மீதே திருப்பி துப்பிவிடலாம். 

மேலிடம் மண்டை காய்ந்தது. 'என்னதான் செய்வது?..நீ போயிட்டா இந்த டீம் காலியாகிடும் போலிருக்கே' என்று அவர்கள் பேச, 'இவனை மேனேஜர் ஆக்குங்க' என்று தனக்குப் பிடித்த இன்னொருவனைக் கை காட்டியிருக்கிறான். இப்பொழுது அவன் தான் மேலாளர் ஆவான் போலிருக்கிறது. 

எவனோ மேலாளர் ஆகிவிட்டு போகட்டும். நமக்கு என்ன வந்தது? நமக்கு நெஞ்சு முக்கியம். 

Jul 23, 2018

சமூக மருத்துவ முறைகள் - சத்திவேல்

கொழுப்பு தொடர்பான உங்கள் கலக்கத்தையும் அது குறித்த கடிதங்களையும் கண்டேன். சமகாலத் தலைமுறையின் ‘நுண்ணறிவு’த் தள்ளாட்டங்களாகவே அவை எனக்குப் பட்டன. நுண்ணறிவை மட்டம் தட்ட வேண்டும் என்பது எண்ணமில்லை; அதன் போதாமையைச் சுட்டியாக வேண்டிய தேவை இருக்கிறது.

நான் மருத்துவன் அல்ல. வழிபாடு குறித்த ஐந்தாண்டு கால ஆய்வில் அதிகம் எனக்குக் கிடைத்தவை நோய் மற்றும் நல்வாழ்வு குறித்த தகவல்களே. வழிபாட்டுக்கு அடிப்படையான சமூகக் காரணங்களில் உடல், மன நோய் நீக்கமே முதன்மையாய் இருந்திருக்கிறது. சமூக வரலாற்றைக் கொஞ்சம் பின்னோக்கிப் பார்க்கும் ஒருவரால், இதை நன்கு விளங்கிக் கொள்ள முடியும். கடந்த மூன்று ஆண்டுகளாக, சமூக மருத்துவ முறைகளின்(சமூகப் பயன்பாட்டில் இருக்கும் மருத்துவ முறைகளைக் குறிக்கும் பொதுச்சொல்) பின்புலத்தை விளங்கிக் கொள்ள முயற்சிகள் மேற்கொண்டு வருகிறேன். அவ்வகையில் சில கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதே இங்கு நோக்கம்.

நோயும், மருத்துவமும் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நம் வாழ்வில் இணைந்திருக்கின்றன. சங்க இலக்கியம் முதற்கொண்டு சமீபகாலம் வரை ”கடவுள் வழிபாட்டால் எங்கள் நோய் குணமாயிற்று” என்று சொல்பவர்கள் இருந்து கொண்டுதான் இருக்கின்றனர். சமண சமயத்தில் இருந்த திருநாவுக்கரசரின் வெப்பு நோய் குணமானதால் சைவ சமயத்துக்கு அவர் மாறியதாக சான்று இருக்கிறது. அருணகிர்நாதரின் தொழுநோயை முருகனே குணப்படுத்தியதாக அவரின் திருப்புகழ்ப் பாடல்கள் தெரிவிக்கின்றன. பகழிக்கூத்தரின் தீராத வயிற்று வலியை திருச்செந்தூர் முருகனே சரி செய்தார் என்று அவரின் பாடல்கள் தெரிவிக்கின்றன. இப்பட்டியல் குமரகுருபரர், தேவராய சாமிகள், பாம்பன் சாமிகள், கிருபானந்த வாரியார் வரை நீள்கிறது. சமயச்சான்றோர்கள் என்றில்லை.. அம்மை நோய்க்கு அம்மனின் கோபமே காரணம் என நம்பும் சாமானியர்களையும் கவனத்தில் கொள்ளுங்கள். இத்தகவலை இங்கு குறிப்பிடக் காரணம்.. நோய்கள் ஏதாவது ஒருவகையில் நம்மைத் தொடர்ந்தபடியே இருக்கின்றன என்பதைப் புரிந்து கொள்ள மட்டுமே. மற்றபடி, வழிபாட்டைப் பெருமைப்படுத்த அன்று(வழிபாட்டின் வழியாக நோய் நீங்குமா, நீங்காதா என்பது மற்றுமொரு விவாதம்).

மருத்துவத்துக்கு வருகிறேன். சமூக மருத்துவத்தை இரு பெரும் பிரிவுகளாய்ப் பகுத்துக் கொள்கிறேன். ஒன்று, நவீன மருத்துவம்; மற்றது மாற்று மருத்துவம். ஒவ்வொன்றைப் பற்றிய அடிப்படைகளையும் நாம் புரிந்து கொண்டால்தான், அவற்றைப் பயன்படுத்திக் கொள்வது குறித்த விழிப்புணர்வுக்கு நகர முடியும்.

முதலில், நவீன மருத்துவத்தைப் பார்ப்போம். நவீன மருத்துவம் மனிதனின் உடலை உடற்கூற்றியல் வழியாக முதலில் பாகங்களாகப் பிரிக்கிறது. பிறகு அதன் செயல்பாடுகளை உடற்செயல்பாட்டியல் வழியாகப் புரிந்து கொள்ளப் பார்க்கிறது. மேலும், இவ்விரண்டின் அடிப்படைகளைக் கொண்டே நோய்களையும் மருந்துகளையும் பரிந்துரைக்கிறது. நவீன மருத்துவம் தர்க்க அடிப்படையில் ஒரு மனிதனை உடலாக மட்டுமே பார்க்கிறது அல்லது உடலை மட்டுமே கருத்தில் கொண்டு நோய்களையும், மருந்துகளையும் தீர்மானிக்கிறது. உதாரணத்துக்கு ஒரு சான்று. காய்ச்சல் என்று எடுத்துக் கொண்டால் மணியின் காய்ச்சலுக்கும், சத்திவேலின் காய்ச்சலுக்கும் ஒரே மருந்துதான். காய்ச்சலின் அளவைக் கொண்டு மருந்துகளில் வீரியம் கூடக் குறைய இருக்கும்; அவ்வளவுதான்.

நவீன மருத்துவத்தில் மற்றுமொரு சிக்கலாக எனக்குப் படுவது அதன் சிகிச்சை முறைதான். கண் மருத்துவர் என்பவர் கண்ணுக்கு மட்டுமே சிகிச்சை அளிப்பவர். காது, மூக்கு மற்றும் தொண்டை நிபுணர் என்பவர் அப்பாகங்களுக்கான மருத்துவர். இதயம், சிறுநீரகம், நுரையீரல் மற்றும் கல்லீரல் போன்ற உறுப்புகளுக்கும் தனித்தனி மருதுவர்கள். தர்க்கப்படி ஒப்புக்கொள்ளக் கூடியதுதான்; நியாயமாகத் தோன்றுவதுதான். உண்மையில், கண்ணில் தோன்றும் பிரச்சினை என்பது கண்ணின் பிரச்சினை மட்டும்தானா? உடல் என்பது உறுப்புகளின் ஒன்றியம்தானே.. அவ்வகையில் உள் உறுப்பு ஏதாவது ஒன்றில் நிகழும் குறைபாடுகள் கண்ணில் வெளிப்படலாம்தானே.. கண் மருத்துவர் அப்படியா கவனித்துப் பார்க்கிறார். கண்ணைக் குறித்து மட்டும்தானே அவர் கவலை கொள்கிறார். கண்ணை முதன்மைப்படுத்தித்தானே அவர் சிகிச்சை அளிக்கிறார். இது அறிவியல்பூர்வமாக சரியானதுதானா?

நவீன மருத்துவத்தில் தரப்படும் மருந்துகளும் வேதியியல் கூடங்களில் செயற்கையாகத் தயாரிக்கப்படுபவை. சொல்லப்போனால், அவை வேதித்தூண்டிகளாகச் செயல்படும். எப்படி என்றால், ஒருவர் உடல்வலி என்று சொன்னால் அவ்வலியை மறக்கச் செய்யும்படியான் வேதிப்பொருளே மருந்தாகத் தரப்படும். அப்பொருளை உட்கொண்டால் வலி குறைந்த உணர்வு ஏற்படும்; உண்மையில் வலி குறையாது என்பதை நினைவில் வையுங்கள். மேலும், அவ்வேதிப்பொருட்கள் உடலின் இயற்கைத் தன்மையைச் சீண்டிப் பார்க்கவும் செய்யும். இயல்பான உடல் எதிர்ப்பாற்றலை நவீன மருந்துகள் கொஞ்சம் கொஞ்சமாய் மழுங்கடித்துக் கொண்டே வரும். நவீன மருந்துகளைத் தொடர்ச்சியாய் பல ஆண்டுகள் எடுத்துக் கொண்டவன் நான். ஆறு ஆண்டுகளுக்கு மேலாக நவீன மருந்துக் கடைகளில் பகுதி நேரமாகப் பணியாற்றியும் இருக்கிறேன்.

இயற்கையான ஆக்சிஜனுக்கும், மனிதன் ஆய்வுக்கூடங்களில் தயாரிக்கும் ஆக்சிஜனுக்கும் உள்ள வேறுபாட்டைப் புரிந்து கொள்வது வழியாக நவீன மருந்துகளின் அடிப்படைப் பொருட்களை விளங்கிக் கொள்வது எளிதாக இருக்கும். இரண்டிலும் கிடைப்பது ஆக்சிஜன்தான் என்றாலும், செயற்கை ஆக்சிஜன் ஓரளவே நமக்கு உதவும். அதிகப்படியாகும்போது அதுவே நமக்குக் கேடாகும். நமக்கு இரும்புச்சத்து வேண்டும் என்றால் பெர்ரஸ் சல்பேட் எனும் வேதிப்பொருளின் வழியே அதை நமக்கு நவீன மருத்துவம் வழங்கப் பார்க்கிறது. தர்க்க அடிப்படையில் சரிதான் என்றாலும்.. அது செயற்கையான இரும்புச் சத்து என்பதும் உடலால் அதை ஓரளவே ஏற்றுக்கொள்ள முடியும் என்பதும் நம்மில் எத்தனை பேருக்குப் புரியும்? இயற்கையான் இரும்புச் சத்தை முருங்கை இலை, அத்திப்பழம்(ஊற வைத்தது) போன்ற பழங்களின் வழியாக உடல் இயல்பாக எடுத்துக் கொள்கிறது. திரும்பவும் விளங்கிக் கொள்வோம். முருங்கை இலையில் இருந்து கிடைக்கும் இரும்புச்சத்து இயற்கையானது; உடலால் இயல்பாக ஏற்றுக் கொள்ளக் கூடியது. நவீன மருந்துகளின் இரும்புச் சத்து செயற்கையானது; உடலால் ஓரளவே ஏற்றுக் கொள்ள முடிவது.

நவீன மருத்துவத்தைக் குறித்து மணிக்கணக்கில் பேசுவதற்குண்டான தகவல்கள் என்னிடம் உள்ளன. அவற்றைக் கொண்டு அம்மருத்துவத்தை நிர்மூலமாக்குவதோ. ஒதுக்கித்தள்ளுவதோ என் வேலையன்று. அம்மருத்துவத்தை எக்காலத்தில் பயன்படுத்த வேண்டுமோ, அப்போது மட்டுமே பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே என் புரிதல். மற்றபடி, எடுத்த்துக்கெல்லாம் நவீன மருத்துவத்தை நாடுவது என்பது நமக்கு நாமே பறித்துக் கொள்ளும் குழியாகவே எனக்குப் படுகிறது. அம்மருத்துவம் தொடர்பான தகவல்களையும் பொதுப்புத்தி கொண்டு ஆய்ந்து பிறகே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதும் என் விருப்பம்.

நவீன மருத்துவத்தைக் குறித்து பலரும் சொல்லியாகி விட்டது என்றாலும், நினைவூட்டலுக்காக சொல்லியாக வேண்டி இருக்கிறது. நவீன மருத்துவம் நோய்கள் மற்றும் நோயாளிகளின் எண்ணிக்கையைக் குறைப்பதில்லை; மாறாக, பெருக்கிக் கொண்டே செல்கிறது. இங்குதான், அம்மருத்துவத்திற்குப் பின்னிருக்கும் பெருவணிகச் சந்தை குறித்த கேள்விகள் எழுகின்றன. இங்கு, சிலரைக் குறிப்பிட்டு இல்லுமினாட்டிகள், அவர்கள்தான் எல்லாவற்றையும் இயக்குகிறார்கள் என்றெல்லாம் ஜல்லியடித்துவிட மாட்டேன். நியாயமான சந்தேகத்தை உங்கள் முன் வைக்கிறேன்; அவ்வளவே.  

மாற்று மருத்துவ முறைகளுக்கு வருவோம். முதலில், ஹோமியோபதி. ஜெர்மன் நாட்டில் தோன்றியது. புகழ்பெற்ற நவீன மருத்துவரான சாமுவேல் ஹானிமென் முன்வைத்த மருத்துவ முறை. நவீன மருத்துவம் மனிதனை உடலாக மட்டுமே கருத.. ஹோமியோபதி உடலின் நோய்களை மனதின் குறிகள் வழியாகப் பார்த்தது. சான்றாக், காய்ச்சலுக்கே மீண்டும் வருவோம். மணியின் காய்ச்சலும், சத்திவேலின் காய்ச்சலும் ஒன்றல்ல. அதாவது, வெறுமனே உடலை மட்டுமே கணக்கில் கொள்வதில்லை. காய்ச்சலின் போதான இருவரின் மனக்குறிகளைக் கொண்டே நோய் மதிப்பிடப்படுகிறது. மணியின் காய்ச்சல் குறித்து மணி சொல்பவனவற்றைக் கணக்கில் கொள்ளாமல், ஹோமியோபதியில் மருந்து தர மாட்டார்கள். மேலும், காய்ச்சலுக்கு என்று பொதுவான மருந்தை ஹோமியோபதி பரிந்துரைப்பதே இல்லை. காய்ச்சலின் போது ஒரு மனிதனின் மனதில் தோன்றும் நோய்க்குறிகளுக்கே மருந்து. ஹோமியோபதியைக் குறித்துப் பேசவும் தகவல்கள் நிறைய இருக்கின்றன என்றாலும், அவை இங்கு அவசியமில்லை என்று கருதுகிறேன்.

நவீன மருத்துவமும், ஹோமியோபதியும் மேற்கு நமக்களித்த கொடைகள். அக்குபஞ்சர் மருத்துவ முறை சீனா நமக்கு அளித்ததாக்ச் சொல்லப்படுகிறது. யுனானி கிரேக்க-அரேபிய மருத்துவ முறை. ரெய்கி ஜப்பானிய மருத்துவ முறை. ஆயூர்வேதம் வட இந்திய(சமஸ்கிருத) மருத்துவ முறை. மாற்று மருத்துவ முறைகளைப் பற்றிய விளக்கங்கள் கடிதத்தை நீளச் செய்து விடும் என்பதால், சுருக்கமாக ஒரு வரியில் சொல்கிறேன். நவீன மருத்துவமும், மாற்று மருத்துவ முறைகளில் சித்த மருத்துவம் தவிர்த்து மற்றவை எல்லாம் நமக்கு வெளியில் இருந்து வந்தவை. சித்த மருத்துவம் மட்டுமே நமக்கு மிக அணுக்கமான மாற்று மருத்துவ முறை.

சித்த மருத்துவம் தவிர பிற மருத்துவ முறைகள் முறைப்படியான அறிவியல் தர்க்கங்களைக் கொண்டு அறிவியலாக நிறுவப்பட்டுள்ளன. சித்த மருத்துவம் மட்டுமே இன்றளவும் தடுமாறிக் கொண்டிருக்கிறது. சித்த மருத்துவத்தை ’அறிவியல் தர்க்க மருத்துவமாக’ நிறுவிவிட இன்றைக்குப் பலர் முயற்சித்துக் கொண்டிருக்கின்றனர். உண்மையில், அதை அப்படி அறிவியல் மருத்துவமாக நிறுவிவிட முடியுமா எனத்தெரியவில்லை. ஆனால், வாழ்வியல் மருத்துவமாகவே நம்மோடு அது உறவு கொண்டிருக்கிறது என்பதை நாம் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும்.

சித்த மருத்துவம் குறித்த எனது புரிதல்களை மட்டுமே நான் இங்கு பகிர்ந்து கொள்கிறேன். பிற மருத்துவ முறைகள் எல்லாம் மனிதனை உடல் மற்றும் மனமாக மட்டுமே பார்க்க.. சித்த மருத்துவம் அவனை உடல், மனம் மற்றும் உயிர் என்பதாகப் பார்க்கிறது. மணி, மந்திரம் மற்றும் மருந்து என்பதான சித்த மருத்துவக் குறிசொற்களே அதற்குத் தகுந்த சான்று(சைவ சமயத்தை முன்வைத்து, இவற்றை விரிவாக விளக்க முடியும்).

சித்த மருத்துவத்தின் வரலாறை நிச்சயம் நம்மால் உறுதியாகச் சொல்லிவிட முடியாது. அம்மருத்துவம் குறித்த தகவல்களை ஓரளவு தொகுத்துப் புரிந்து கொள்ளப்பார்க்கலாம். ”அண்டத்தில் உள்ளது பிண்டத்தில்; பிண்டத்தில் உள்ளது அண்டத்தில்” என்பது சித்த மருத்துவ மூல தத்துவம். எளிமையாகச் சொல்வதாயின், அண்டம் என்பது இயற்கை. பிண்டம் என்பது செயற்கை. இது ஓரளவுக்கே பொருந்தும் என்றாலும் புரிந்து கொள்வதற்காக இப்படித்தான் கொள்ள வேண்டி இருக்கிறது. அண்டமும், பிண்டமும் இணக்கமாக இருக்கும் வரை பிண்டத்துக்குக் கேடு வராது. அண்டத்தோடு பிண்டம் முரண்பட்டவுடன் அதற்குக் கேடு துவங்கி விடுகிறது. கேடு என்பது நோய் என்று சொல்லாமலேயே தெரிந்து கொண்டிருப்பீர்கள். இன்னும் எளிமையாகச் சொல்வதாயின், உடல் இயற்கைக்கு இணக்கமாக இருக்கும் வரை நம்மை நோய்கள் நெருங்கா. அவ்வியற்கைக்குக் கொஞ்சம் முரண்பட்டாலும் நோய்கள் தலைகாட்டத் துவங்கிவிடும். இங்கு நோய்கள் துன்பங்களே அன்று; உடல் இயற்கைக்கு நாம் முரண்பட்டிருக்கிறோம் என்பதைச் சுட்டும் அறிவிப்பான்கள்.

சித்த மருத்துவம் மனிதனின் நோய்களுக்கு வாதம், பித்தம், கபம் எனும் மூன்று காரணிகளை முன்வைக்கிறது. அவற்றை ஐம்பூதங்களின் கலவையாகவும் சொல்கிறது. ஆகாயம், காற்று, நெருப்பு, நீர் மற்றும் மண் எனும் ஐம்பூதங்களை நாம் அறிவோம். அவற்றில் மண்ணும், நீரும் கபத்துக்குக் காரணமாகின்றன. நெருப்பு பித்தத்துக்குக் காரணமாகிறது. காற்றும், ஆகாயமும் வாதத்துக்குக் காரணமாகின்றன. உடல் மண்ணும், நீருமால் ஆனது; மனம் ஆகாயம், காற்றால் ஆனது; உயிர் நெருப்பால் ஆனது. உயிர்ச்சூடு எனும் வார்த்தையை நீங்கள் கேள்விப்பட்டிருக்கக் கூடும்.

சித்தமருத்துவம் கணக்கிலடங்கா நோய்களைப் பட்டியலிட்டாலும் அவற்றை வாத, பித்த மற்றும் கப வகைகளுக்குள்ளாகவே அடக்கி விடுகின்றன. கபம் அதிகம் – கபம் குறைவு, பித்தம் அதிகம் – பித்தம் குறைவு, வாதம் அதிகம் – வாதம் குறைவு என்கிற பிரிவுகளுக்குள்ளாகவே நோய்களை அடக்கி விடுகிறது. நோய்களின் பெயர்களையோ அவற்றைக் கண்டு அஞ்சுவதையோ சித்த மருத்துவம் ஒப்புவதில்லை.

சித்த மருத்துவ மூன்று வகையான மருந்து வர்க்கங்களைப் பரிந்துரைக்கிறது. அவை – தாவர வர்க்கம், மாமிச வர்க்கம் மற்றும் தாது வர்க்கம். தாவர வர்க்க மருந்துகள் என்பவையே இன்றைய மூலிகை மருந்துகள் எனச் சொல்லப்படும் தாவர மூலிகை மருத்துவம்(கை வைத்தியம் மற்றும் பாட்டி வைத்தியமும் அடங்கும்). ஆரம்பகட்ட நோய்த்தன்மை அல்லது எளிய நோய்களுக்கு மூலிகை மருந்துகளே போதுமானது. இங்கு ஒன்றைச் சொல்லியே ஆக வேண்டும். மூலிகை மருந்துகள்தான் என்றில்லை. உணவுக்கு நாம் பயன்படுத்தும் தாவரவகைப் பொருட்களைக் கொண்டும் நம் நோய்களைக் குணப்படுத்திக் கொள்ளலாம். அதையே இன்று உணவு மருத்துவம், சுவை மருத்துவம் என்றெல்லாம் சொல்கிறார்கள்.

மாமிச வர்க்க மருந்துகள் என்பவை விலங்குகளைக் கொண்டு சமைக்கப்படும் அல்லது தயாரிக்கப்படும் மருந்துகளைக் குறிக்கும். நோய்த்தன்மை நடுத்தர நிலையில் இருப்பவர்களுக்கு மாமிச வர்க்க மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன. ஆட்டுக் கறி, நாட்டுக்கோழிக் கறி, ஆட்டுக்கால் சூப், நண்டு சூப் உள்ளிட்டவை உணவு வகையிலான மாமிச வர்க்க மருந்துகள். நோய்த்தன்மை கொஞ்சம் அதிகரித்து விட்டவர்களுக்கு இவை நல்ல பலன்களைக் கொடுக்கும்.

தாது வர்க்க மருந்துகள் எளிய மக்களால் உணவாகவே தயாரிக்க முடியாதவை. தேர்ந்த பாரம்படிய வைத்தியர்களால் தயாரித்து அளிக்கப்படும் செந்தூரம், பஸ்பம் போன்றவையே தாது வர்க்க மருந்துகள். நோய்த்தன்மை வெகுதீவிரமாக இருக்கும் நபர்களுக்கு, இவ்வித மருந்துகளே பயன்தரக்கூடியவை. உயிர் மற்றும் உடலின் உறுதிக்கு அடிப்படையாய் இருக்கும் ஏழு தாதுக்களில் குறைபாடுள்ளவற்றைச் சீர்படுத்தும் மருந்துகள் என்பதால் தாதுவர்க்க மருந்துகள் என்கிறோம்.

சித்த மருத்துவரை நாடும்போது பத்தியம் என்பதைப் பரிந்துரைப்பார்கள். வாத அதிகமானதால் நோய் எனும்போது, வாதத்தை மேலும் அதிகப்படுத்தும் உணவு வகைகளைத் தவிர்ப்பது சிறந்ததுதானே? பொதுவாகவே உப்பு, புளி மற்றும் கார(வரமிளகாய் மற்றும் மசாலா) வகைகளை விலக்கிக் கொள்வது பொதுப்பத்தியம். வாத, பித்த மற்றும் கப அளவுகளைக் கொண்டு ஒவ்வொருவருக்குமான தனித்தனிப் பத்தியங்கள் உண்டு. பத்தியத்தின் மனதுக்குத் தெம்பளிப்பதற்காய் ஜோதிடத்தைச் சித்த மருத்துவர்கள் பயன்படுத்தினர். “இந்தக் கோவிலுக்குச் சென்று வாருங்கள்!” என்பது போன்ற பரிகாரங்கள் நோய்கொண்டவரின் மனதை உளவியல்பூர்வமாக உறுதிப்படுத்தியது(ஜோதிடத்திலும், சித்த மருத்துவத்திலும்ம் ஊடுருவிவிட்ட போலிகளால் அவை மூடநம்பிக்கைகளாகச் சிறுத்துப் போயின).  

 சித்த மருத்துவ முறையைக் குறித்த நூற்றுக்கணக்கான தகவல்கள் என்னிடம் இருக்கின்றன. அவற்றைத் தொகுத்து இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக பேசவும் இயலும். இங்கு ஒன்றைச் சொல்லிக் கொள்கிறேன். சித்த மருத்துவ தத்துவம் நம் மண்ணுக்கு மிக அணுக்கமானது என்பதால், அதன்மீது எனக்குக் கொஞ்சம் பாசம் அதிகம். மற்றபடி, நவீன யுகத்தில் நோயாளியின் உடல் மற்றும் மன நலனைக் கருத்தில் கொண்டு அவருக்கு விருப்பமான மருத்துவ முறைகளைத் தெரிவு செய்வதே சிறப்பாக இருக்க முடியும்.

என்னளவில், வாழும் சூழலின் தன்மைகளைக் கருத்தில் கொண்ட மருத்துவ முறைதான் சிறந்தது. அவ்வகையில் சித்த மருத்துவம் மிகச்சிறப்பானது. மேலும், சித்த மருத்துவத்தை வெறுமனே சூரணம், லேகியம் என்ற அளவில் புரிந்து கொள்ளாமல் “உடல் இயற்கைக்கு இணக்கமாக வாழ்வதற்கு நம்மைத் தூண்டும் அணுக்கமான வாழ்வியல் முறை”யாகக் கருதிப் பயன்படுத்திக் கொண்டால் சிறப்பு. போலி சித்த மருத்துவர்கள் பெருகிவிட்ட இக்காலத்தில், உங்கள் ஊரிலேயே நீங்கள் அறியாமல் இருக்கும் ஒரு நல்ல சித்த வைத்தியரை அடையாளம் கண்டு கொள்ளுங்கள். அதுவே, உங்களின் முயற்சியாக இருந்தால் போதுமானது.

எம்மருத்துவ முறைகளையும் புனிதப்படுத்துவது அவசியமற்றது. அதேநேரம், ஒவ்வொரு தனிமனிதனுக்கும் சமூகத்தில் நிலவும் மருத்துவ முறைகள் குறித்த தெளிவான புரிதலை ஏற்படுத்த முயல்வதென்பதும் முக்கியம். அவ்வகையில் இக்கடிதம் மிகமிகமிகச் சுருக்கமான ஒரு திறப்பு மட்டுமே.

சத்திவேல்

ரிஸ்க்

பெங்களூருவில் ஜெயின் கல்லூரியில் பேச அழைத்திருந்தார்கள். முதுகலை முதலாமாண்டு மாணவர்களுக்கு இன்று வகுப்பு தொடங்குகிறது. 

பத்தொன்பது வருடங்களுக்கு முன்பாக கல்லூரியில் சேர்ந்த போது முதல் நாள் வகுப்புக்குத்  தலை நிறைய எண்ணெய் அப்பி, அழுந்த வாரி ரப்பர் செருப்பு அணிந்து சென்றிருந்தேன். அது வரைக்கும் வார் செருப்பு அணிந்தது இல்லை. படிய வாரி, திருநீறு பூசுவது என்பது நல்ல மாணவனுக்கான அடையாளம் என்ற பிம்பம் உருவாகியிருந்தது. என்னை மாதிரியே இன்னமும் நான்கைந்து பேர்கள் இருந்தார்கள். வகுப்புக்கு வந்த ஆசிரியை தனியாக அழைத்து அறிவுரை சொன்னார். அதன் பிறகும் அப்படியேதான் இருந்தேன். மெல்ல மெல்லத்தான் மாற முடிந்தது. முட்டையில் படைத்தது கட்டைக்கு போகும் வரைக்கும். 

இந்த பிளாஷ்பேக்தான் ஓடிக் கொண்டிருந்தது. 


துறைத் தலைவர் முதலில் பேசினார். நிலையின்மை குறித்துச் சொன்னார். முதல் நாள் கல்லூரியில் அமர்ந்திருக்கும் போது எவ்வளவோ அலையடிக்கும்.  'என்ன வேலைக்கு போவோம் என்பது மாதிரியான குழப்பங்கள் உங்கள் மனம் முழுக்கவும் ஆக்கிரமித்திருக்கும்.. இல்லையா?' என்று கேட்டார். அது கல்லூரி மாணவர்களுக்கு மட்டுமில்லை. அப்படியொரு எண்ணங்களின் அலைகள் இருக்கும் வரைக்கும்தான் வாழ்க்கையில் அடுத்தடுத்த கட்டத்துக்கு நகர்கிறோம். 'அடுத்து என்ன?'  என்ற கேள்வி மட்டும் சுழன்று கொண்டேயிருக்க வேண்டும். சுழன்று கொண்டிருப்பவர்கள் புதிய புதிய உயரங்களைப் பார்க்கிறார்கள். 

படித்து முடித்து, வேலை கிடைத்து, கல்யாணம் ஆகி குழந்தை பெற்றவுடன் 'இருக்கிற இடம் தெரியாம அமைதியா இருந்துட்டு போயிடுவோம்' என்று நினைக்க ஆரம்பிக்கும் போது நம்மைச் சுற்றி ஒரு வட்டம் விழுந்துவிடுகிறது. பெரும்பாலும் அந்த வட்டத்தை தாண்ட மாட்டோம். கிணற்றுத் தவளைகள் உருவாவது இப்படித்தான். கடைசி வரைக்கும் அப்படியே வாழ்க்கை ஓடி 'பரவால்ல..நானும் வாழ்ந்து முடிச்சுட்டேன்' என்று நிம்மதியடைகிறோம். 

அதுவொன்றும் தவறானதில்லை.

ஆனால் வாழ்க்கையில் வென்றவர்களைப் பார்த்தால், நாம் தொடாத உயரங்களைத் தொட்டவர்களை கவனித்தால் - ஒன்றைப் புரிந்து கொள்ள முடியும். தமக்கு முன்பாக இருக்கும் சமநிலையைக் குலைத்துக் கொண்டேயிருப்பவர்கள் மட்டுமே உச்சத்தை தொடுகிறார்கள். 'இதுவே போதும்' என்று மனம் ஓயும் போதெல்லாம் புதியதொன்றை முயற்சித்து பார்த்திருப்பார்கள். நிலத்தில் ஓடுகிற கரையற்ற நீர் மாதிரிதான். தன்பாட்டுக்கு ஓடி நிலத்தால் உறிஞ்சப்பட்டு அமைதியாவதும் உண்டு. இறங்கி பார்த்துவிடலாம் என்று உயரத்திலிருந்து இறங்கி மேடு பள்ளம் பார்த்துவிடுவதும் உண்டு. இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறதல்லவா?

'சொல்லிட்டு போயிடலாம்...எவ்ளோ ரிஸ்க் தெரியுமா?' என்று கேட்பார்கள். ஆமாம். ரிஸ்க்தான். ஆனால் அதை முயற்சித்து பார்ப்பவர்கள்தான் புதிய உயரங்களை அடைகிறார்கள். பணம், புகழ் என எல்லாமுமே ஏதாவதொரு ரிஸ்க் எடுப்பதனால் மட்டும்தான் சாத்தியம். நம்முடைய பயத்தை, குழப்பத்தை மீறி வராமல் எதுவுமே சாத்தியமில்லை. 'நான் பாட்டுக்கு இருக்கேன்..வர்றது வரட்டும்' என்று இருப்பவர்களுக்கு பெரிய வெற்றிகள் கிடைப்பதற்கான சாத்தியங்கள் வெகு குறைவு. 

சில மாதங்களுக்கு முன்பாக ஒரு நண்பரைச்  சந்திக்க வேண்டியிருந்தது. இன்டெல் நிறுவனத்தில் இருந்தந்தவர். நல்ல சம்பளம்தான். விட்டுவிட்டு தனியாக ஒரு நிறுவனம் தொடங்குவதாகச் சொன்ன போது வீட்டில் கடும் எதிர்ப்பு. அடுத்த ஒரு வருடத்துக்காவது வருமானம் எதுவுமில்லை என்கிற நிலைமை. வருமானமில்லாவிட்டாலும் தொலைகிறது. இருக்கும் கைக்காசை எல்லாம் நிறுவனம் நடத்துவதற்கு செலவழிக்க வேண்டும். நிறையப் பேர் அறிவுரை சொல்லியிருக்கிறார்கள். நம் ஊரில் இலவசமாக கிடைப்பது அது மட்டும்தானே? 

நான்கு பேர்களைச் சேர்த்துக் கொண்டு வேலையை ஆரம்பித்திருக்கிறார்கள். மற்றவர்கள் முதலீட்டாளர்கள் மட்டும்தான். இவர் மட்டும்தான் முதலீடுதான் சேர்த்து உழைப்பையும் கொடுத்திருக்கிறார். அதனால் இவர்க்கு நிறுவனத்தில் பங்கும் அதிகம். ஒன்றரை வருடங்களில் நிறுவனம் ஒரு வடிவத்துக்கு வந்துவிட்டது. இப்பொழுது மூன்று வருடங்கள் ஆகிவிட்டது. 'வருமானம்ன்னு பார்த்தா சம்பளத்துக்கு இருந்ததை விட குறைவதுதான். ஆனால் இதில் ஒரு சந்தோசம் இருக்கு மணி' என்றார். ஒரு நிறுவனத்தை தொடங்கி வடிவத்துக்கு கொண்டு வந்து முப்பது பேருக்கு சம்பளம் கொடுத்து என்று. 'இப்பொழுதே சில பெரிய நிறுவனங்கள் விலை பேசுகின்றன. இன்னமும் கொஞ்சம் கஷ்டப்பட்டால் இன்னமும் நல்ல விலைக்கு விற்க முடியும்' என்று சொன்னார். அவர் அப்படிச் சொன்னதுதான் வெளிச்சம் பாய்ச்சியது. 

இன்றைக்கு ஓரளவுக்கு சமநிலை அடைந்திருக்கிறார். யாரோ விலைக்கு கேட்கிறார்கள். கொடுத்துவிட்டு அமைதியாக இருந்துவிடலாம். இன்னமும் இரண்டு மூன்று வருடங்கள் முயற்சிக்கலாம் என்று மீண்டும் சமநிலையை குலைக்கிறார். சாதாரணமாக 'இவ்ளோ நாள் கஷ்டப்பட்டாச்சு..கொடுத்துட்டு நிம்மதியா இருக்கலாம்' என்றுதான் நினைப்பார்கள். இவர் நினைப்பது போல நிறுவனத்தின் விலை கூடும் என்று நம்பவுது பெரிய ரிஸ்க். ஆனால் அந்த ரிஸ்க்தான் அவரை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும். இத்தகைய மனிதர்களிடம் பேசுவது நம்மை புதுப்பித்துக் கொள்ள உதவும். நமக்கான பாசிட்டிவ் எனெர்ஜியை நம்மைச் சுற்றி இருப்பவர்களிடமிருந்தே பெற்றுக் கொள்ள முடியும். இவரைப் போன்றவர்கள்தான் அத்தகைய ஊக்குவிப்பாளர்கள். பூஸ்டர்கள். 

வீட்டிலிருந்து கிளம்பும் போது என்ன பேசப் போகிறேன் என்று ஒரு முடிவுக்கு வந்திருந்தேன். ஒரே விஷயம்தான்-  ரிஸ்க் எடுக்க மட்டும் பயப்படவே கூடாது. பயமில்லாமல் இருக்குமா? இருக்கத்தான் செய்யும். ஆனால் துணிச்சல்தான் துணை. ஒன்றிரண்டு முறை நமக்குள் இருக்கும் பயத்தை உடைத்துவிட்டால் வாழ்க்கை தன்னுடைய வெவ்வேறு வண்ணங்களைக் நமக்கு காட்டியபடி புன்னகைக்கும். 

Jul 20, 2018

கொழுப்பும் நலமும் - 2

'கொழுப்பும் நலமும்' கட்டுரைக்கு நிறையப் பேர் பதில் சொல்லியிருந்தார்கள். இத்தகைய உரையாடல் நிகழுமெனில் அது மகிழ்வானது. தொடர்ந்து பேசலாம். இருதயத்தின் கோளாறுகளுக்கு கொழுப்பு காரணமில்லை. இரத்த நாளங்களில் உண்டாகும் புண்கள்தான் அடைப்பை உருவாக்குவதற்கான முக்கியக் காரணி என்கிறார்கள். புண் ஏற்படாமல் பார்த்துக் கொண்டால் இருதய பிரச்சினைகளை குறைத்துவிடலாம் என்பது பேலியோ உணவுமுறைக்காரர்களின் வாதம். 

மருத்துவர் நளினி: 

இரத்தநாளங்களின் உட்புறம் வரும் புண்ணாகும் தன்மை கொழுப்பு அதில் படர காரணம் என்று சொல்கிறார்கள். கொழுப்பு அதிகம் இருப்பதால் மட்டுமே இதய நோய்கள் வருவதில்லை என்பதே தற்போதைய அறிவியல் அறிவித்துள்ளது. பேலியோவில் கொழுப்பு எடுத்துக் கொள்ளலாம் என்றாலும் உங்கள் உடல் எடைக்கேற்ற கலோரியில் மட்டுமே. கொழுப்பு நல்லது என்பதை விட மாவுப்பொருள்(கார்போஹைட்ரேட்) கெட்டது என்பது சரியான வாசகமாக இருக்கும்.

பேலியோவை தமிழகத்தில் காலூன்றச் செய்ததில் முக்கியமானவரான நியாண்டர் செல்வன்: 

கொழுப்பு முதலில் நம் சிறுகுடல், பெருகுடலுக்கு சென்று அதன்பின் கால் பிளேடாரில் ஜீரணம் ஆகிறது. உணவில் இருக்கும் கொழுப்பு நேரடியாக இதயத்தில் சென்று அடைப்பதில்லை...அது நிகழ்ந்தால் மெடிக்கல் மிராகிள். உணவில் இருக்கும் மாவுசத்து, கொழுப்பு எல்லாவற்றையும் எல்.டி.எல் ஆக ஈரல் மாற்றி ரத்தநாளங்களில் அனுப்புகிறது அதுதான் இதயத்தில் சென்று அடைக்கிறது...அதாவது ரத்தகுழாய்களில் இருக்கும் உள்காயங்களை சரிசெய்யும் மருந்தாக. ஆக, நீங்கள் முழுக்க கொழுப்பே இல்லாத உணவாக உன்டாலும், இதய நாளங்களில் இன்ஃப்ளமேசன் இருந்தால் அதன்மேல் கொழுப்பை உண்டாக்கி இதயம் அடைக்கவே செய்யும். அதனால் உணவில் இருக்கும் கொழுப்பின் மேல் எந்த பிழையும் இல்லை. உள்காயம் மேல் தான் பிரச்சனை. உள்காயம் உண்டாக்கும் உணவுகள் - மாவுச்சத்து, சர்க்கரை, ஆக்சிடைஸ் ஆன கொழுப்புகள் (ரிபைன்டு ஆயில்கள்) ஆகியவையே.

எது புண்ணை உருவாக்குகிறது என்று கேட்டால் கார்போஹைட்ரேட்டை நோக்கி கை நீட்டுகிறார்கள். 

விதைகள், பருப்பு வகைகளில் கார்போஹைட்ரேட் அதிகமாக இருக்கிறது. உணவில் இருக்கும் சர்க்கரை, கார்போ ஹைட்ரேட்டில் இருக்கும் குளுக்கோஸ், ஒமேகா 6 என்னும் கொழுப்புத்தன்மையுடைய அமிலம் ஆகியன ரத்த நாளங்களில் இருக்கும் செல்களை சிதைக்கின்றன. இதுதான் நியாண்டர் செல்வன் குறிப்பிடும் 'இன்பிளமேஷன்'. 

கார்போஹைட்ரேட்டை அதிகமாக உட்கொள்ளும் போது நம்முடைய இன்சுலின் அளவு அதிகமாக சுரக்கிறது. இந்த இன்சுலின் பசியைத் தூண்டுகிறது.அது நம்மை மேலும் அதிகமாக உண்ண வைக்கிறது. நாம் மீண்டும் கார்போஹைட்ரேட்டையே எடுத்துக் கொள்கிறோம். இது உடல் எடையைக் கூட்டுகிறது. கூடுதல் எடையும் 'இன்பிளமேஷன்' உருவாக முக்கியக் காரணம்.

ரத்தநாளங்களை பாதிப்பதில் சர்க்கரை நோய் இன்னொரு முக்கியமான காரணமாகிறது. 

ரத்த நாளங்களில் உண்டாகும் புண்ணை சரி செய்ய கொழுப்பு தேவைப்படுகிறது. அதனால் உடல் அதிகமாக கொழுப்பைச் சுரக்கிறது. இப்படித்தான் கார்போஹைட்ரேட் உணவை உண்ணுவதன் வழியாக உடலில் கொழுப்பின் அளவை அதிகரிக்கிறோம் என்று கார்போஹைட்ரேட்டை மண்டை அடியாக அடிக்கிறார்கள்.

சுருக்கமாகச் சொன்னால், கார்போஹைட்ரேட்டையும் சர்க்கரை குளுகோசையும் குறைத்தால் இருதய அடைப்பிலிருந்து தப்பிவிடலாம். பேலியோவில் கார்போஹைட்ரேட் இல்லாத உணவாக பரிந்துரை செய்கிறார்கள். 

ஏற்கனவே பேலியோ பற்றித் தெரிந்திருந்தவர்களுக்கு இவை குறித்து புரிதல் இருக்கக் கூடும். என்னைப் போன்றவர்கள் இன்னமும் சற்று விரிவாகத் தேட வேண்டியிருக்கும். தேடுகிறேன். 

Jul 19, 2018

கொழுப்பும் நலமும்

மணி,

நிசப்தம் தளத்தின் நீண்ட நாளைய வாசகன் நான். உங்களின் "எவ்வளவு பெரிய மலையெல்லாம் பாத்தாச்சு" பதிவு படித்தேன்.

//..இரண்டொரு மாதங்களுக்கு முன்பாக ரத்த பரிசோதனை செய்து கொண்டேன். நாற்பதை நெருங்குகிறோம் அல்லவா? முன்னெச்செரிக்கை. கொழுப்பு கொஞ்சம் கூடுதலாக இருந்தது...//

பலரும் படிக்கின்ற தளத்தில் கொழுப்பை பற்றி பயமுறுத்தும் விதமாக போஸ்ட் செய்திருப்பது கொஞ்சம் நெருடுகிறது. கொழுப்பைப் பார்த்து பயந்தது/பயமுறுத்தியது போதும். Paleo பற்றி படியுங்கள். நீங்கள் பின்பற்ற வேண்டாம். உங்கள் சிந்தனைகளை தெளிவு படுத்திக் கொள்ளுங்கள்.

முகநூலில் "ஆரோக்கியம் & நல்வாழ்வு" குழு மூலம் ஆயிரக்கணக்கானோர் கொழுப்பைப் பற்றி படித்து, தெளிந்து பயன் பெற்றும் இருக்கிறோம். தயவு செய்து நீங்களும் படித்து பயன் பெறுங்கள். 

இலக்கியம், சமூகம், தொழில் நுட்பம் என பல விஷயங்களில் உங்களுக்கு நல்ல கற்றல் இருப்பதை உணர்கிறேன். அதே போல் ஒரு கற்றலாக "ஆரோக்கியத்தையும்" அணுகுங்கள்.

மிக மிக முக்கியமாக "ஆரோக்கியம் & நல்வாழ்வு" குழு, முழுக்க முழுக்க இலவசம். எனவே இதை விளம்பரம் என்று மட்டும் எண்ண வேண்டாம். இது சித்த வைத்தியம்/ஆயுர்வேதம் போன்ற வைத்திய முறை அல்ல. வாழ்விற்கு தேவையான உணவு முறை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இக் குழுவில் பல மருத்துவர்கள் பங்கு பெற்றுள்ளார்கள். 

ஒருவேளை நீங்கள் அதைப் படித்து, பிடித்து பகிர்ந்தால் மேலும் பல்லாயிரம் பேர் பயன் அடைவார்கள். நீங்களே சொல்லி இருப்பது போல், 40 ஐ நெருங்கும் அல்லது தாண்டிய அனைவருக்கும் இது பயன் உள்ளதாக அமையும். 

முதலில் comment ஆக போட நினைத்தேன். ஆனால், முதலில் நீங்கள் தெளிவு பெற்று பின்னர் இதைப் பற்றி எழுதுவது உசிதம் என்றே மெயில் அனுப்புகிறேன்.

அன்புடன்,
திரு.

திரு அனுப்பியிருக்கும் இந்த மின்னஞ்சல் மகிழ்ச்சியளிக்கிறது.

'கொழுப்புடன் வாழ்க' என்றுதான் பேலியோக்காரர்கள் சொல்கிறார்கள். 'கொழுப்புக்கும் இருதய அடைப்புக்கும் சம்பந்தமேயில்லை' என்று ஒரு வீடியோ கூட வந்திருந்தது. அம்மாவிடமும் தம்பியிடமும் காட்டினேன். 'லூசு மாதிரி வாட்ஸாப்பையெல்லாம் நம்பி உடம்பை பார்த்துக்காம விட்டுடாத' என்கிறார்கள். எனக்கும் இது குழப்பம்தான். 

பேலியோ என்பது நீரிழிவை கட்டுப்படுத்துகிறது, உடல் எடையைக் குறைக்கிறது என்று தெரியும். ஆரோக்கியம் & நலவாழ்வு குழுவில் கூட எடையைக் குறைப்பது பற்றித்தான் நிறைய பேசுகிறார்கள். எனக்கும் எடைதான் பிரச்சினை. ஆனால் என்னதான் தலைகீழாக நின்றாலும் அறுபதைத் தொட முடியவில்லை என்பதுதான் பிரச்சினை. பேலியோ அது இதுவென எடை குறைந்தால் ஆடி காற்றில் பறந்துவிடக் கூடும். 

கூடுதல் எடை, டயாபட்டீஸ் என்றால் பேலியோவை நாடலாம். ஆனால் கொழுப்பு நல்லது என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. மருத்துவ நண்பர்களிடம் பேசினால் கொழுப்புதான் இருதயத்தின் ரத்தக் குழாய்களை அடைக்கிறது என்று சொல்கிறார்கள். 'வேணும்னா குறைஞ்ச டோஸ் மாத்திரை எடுத்துக்கலாம்' என்று சொல்கிறார்களே தவிர, இதுவொன்றும் பிரச்சினையில்லை என்று எந்த மருத்துவரும் சொல்லவில்லை. கொழுப்பு நல்லதுதான் என்றால் எப்படி நல்லது என்று புரியவில்லை. கொழுப்பு நல்லது என்றால் இருதய அடைப்புக்கு என்ன காரணம்? 'மன அழுத்தம்' காரணம் என்றாலும் எது அடைப்பை உருவாக்குகிறது? குழாய்களில் திரண்டு நிற்கும் கொழுப்பு இல்லையா? முப்பது மூன்று வயது நண்பர் ஒருவர் மாரடைப்பில் இறந்துவிட்டார். பயமில்லாமல் எப்படி இருக்கும்?

நம்முடைய உடல், அதன் செயல்பாடு, உணவு, எளிய மருத்துவமுறைகள் பற்றிய முழுமையான புரிதல் நம் தலைமுறைக்கு உருவாக வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் ஒரு செயல்பாட்டை மதத்தைப் போல புனிதப்படுத்துவதுதான் சற்று விலகி நிற்கச் செய்கிறது. இயற்கை உணவு, மாற்று மருத்துவம் என்பதெல்லாம் அவசியம்தான். ஆனால் முழுமையான நம்பிக்கை ஏற்படாமல் பரிந்துரை செய்ய முடிவதில்லை.

கொழுப்பு குறித்து முழுமையான புரிதல் எனக்கு இல்லை என்பது உண்மைதான். விரிவாகத் தேடுகிறேன். திருப்தியடைந்தால் இது குறித்து நானும் விரிவாக எழுதுகிறேன். உரையாடுவோம்.

ஐயோ கலக்குதே

கர்நாடகாவில் மழை கொட்டித் தள்ளுகிறது. லிங்கணமாக்கி, ஹாரங்கி, ஹேமாவதி, கே.ஆர்.எஸ், துங்கபத்ரா உட்பட அத்தனை அணைகளும் நிரம்பி வழிகின்றன. மழை நீரை அவர்கள் திறந்துவிடுவதில் ஆச்சரியமே இல்லை. இதை பெரிய கொண்டாட்டமாக காட்டிக் கொண்டிருக்கிறார்கள். தமிழக அரசும் ஏதோ விழா போலக் கொண்டாடுகிறது. ஜூலை மாதம் தமிழகத்துக்குத் தேவையான நீர் 31 டி.எம்.சி மட்டும்தான். ஆனால் இப்பொழுது வந்து கொண்டிருக்கும் அளவைப் பார்த்தல் அந்த அளவைத் தாண்டிவிடும். குறுவை சாகுபடி முடிந்து சம்பா சாகுபடி சமயத்தில்தான் தமிழகத்துக்கு அதிகமாகத் தண்ணீர் தேவைப்படும். அந்தச் சமயத்தில்  'எங்களுக்கு நீர் கொடுங்கள்' என்று கேட்டால் 'அதான் ஜூலையிலேயே கொடுத்துட்டோமே' என்பார்கள். இதற்குத்தான் இவ்வளவு கொண்டாட்டம்.

தவறில்லை. தண்ணீர் எப்பொழுது வந்தால் என்ன? ஆனால் வரும் போது அதை எப்படி உருப்படியாக்கிக் கொள்கிறோம் என்பதில்தான் எல்லாமும் இருக்கிறது அல்லவா? மேட்டூர் அணை நான்கு வருடங்களுக்கு முன்பு அதன் முழு கொள்ளளவை எட்டியது. ஒரு முறை அணை நிரம்பினால் குறைந்தபட்சம் நான்காண்டுகளுக்கு அதன் பலன் இருக்கும்படி பார்த்துக் கொள்வதுதானே நல்ல நீர் மேலாண்மை? அப்படியா இருந்தது? இரண்டாம் வருடத்திலேயே கடும் தண்ணீர் பற்றாக்குறை நிலவியது. சத்தியம் கூடச் செய்யலாம்- அடுத்த வருடமும் இதேதான் நிகழும். மழை பெய்தால் திறந்து கடலில் விடுவோம். மழை இல்லாத காலத்தில் எலிக்கறி தின்னுங்கள் என்கிற லட்சணம்தான் இங்கே நிலவுகிறது.

அவிநாசி அத்திக்கடவு என்றொரு திட்டம் பல ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கிறது. பவானி ஆற்றிலிருந்து நீரைக் கொண்டு வந்து வறண்ட பகுதிகளில் இருக்கும் குளம் குட்டைகளை நிரப்பும் திட்டம் அது. இந்த திட்டத்துக்கு வெறும் இரண்டு டி.எம்.சி தண்ணீர்தான் தேவை. எழுபது குளங்கள், 630 குட்டைகள் என்று நிரப்பி வைத்தால் அடுத்த பல ஆண்டுகளுக்குத் தேவையான நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தி வைக்கலாம். மூன்று மாவட்ட மக்களுக்கு பயன்படும். இன்றைய சூழலில்  இரண்டாயிரம் கோடி ரூபாய் இருந்தால் நிறைவேற்றிவிடலாம். ஆனால் பத்தாயிரம் கோடி ரூபாய் செலவு செய்து தேவையில்லாத எட்டுவழிச் சாலையை போடுவார்கள் தவிர இதைக் கண்டு கொள்ள மாட்டார்கள். அல்லது இதே ஆச்சு; அதே ஆச்சு என்று பாவனை செய்வார்கள்.  

சாலை மேம்பாட்டுத் திட்டங்களை விடவும் நீர் மேலாண்மைத் திட்டங்களே மக்களுக்கு மிக அவசியம். ஆனால் துரதிர்ஷ்டம் என்னவென்றால் சாலை மேம்பாட்டுத் திட்டங்களில் நாற்பது சதவீதம் வரைக்கும் கமிஷன் அடிக்க முடியும். ஆனால் நீர் மேலாண்மைத் திட்டங்களில் அது சாத்தியமில்லை. அதனால் அரசியல்வாதிகள் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. 

வருடம் ஒரு குறிப்பிட்ட தொகையை நீர் மேலாண்மைத் திட்டங்களுக்கு என ஒதுக்கி சிறு சிறு திட்டங்கள் வழியாக அந்தந்த பகுதிகளில் பாயும்  நதியின் நீரை மழைக் காலத்தில் சரியாகப் பயன்படுத்தி அல்லது சேகரித்து வைத்தால் துணை ஆறுகளின் நீரை காவிரியில் கொண்டு வந்து கலக்க விட வேண்டியதில்லை. காவிரிக்கு மட்டுமே அமராவதி, நொய்யல் என பல துணையாறுகள் இருக்கின்றன. மழைக் காலத்தில் இந்த ஆறுகளில் ஓடும் உபரி நீரை இப்படி சிறு சிறு திட்டங்களுக்கு பயன்படுத்தினாலே தமிழகத்தின் பல பகுதிகளை வளமாக்கிவிட முடியும். இதையெல்லாம்தான் யாருமே யோசிப்பதில்லை. 

தூர்வாருவதில் சுணக்கம், அப்படியே தூர் வாரினாலும் மண்ணை எவ்வளவு காசுக்கு விற்கலாம், எவ்வளவு கமிஷன் அடிக்கலாம் என்று கணக்கீடுகள் - இப்படியெல்லாம்தான் பலமாக சிந்திக்கிறார்கள். எந்தக் காலத்திலும் நீர் வராத ஓடையை ஒன்றரை கோடி ரூபாய் கணக்கு காட்டி மண்ணள்ளி விற்றிருக்கிறார்கள். பெரிய பதாகை ஒன்றையும் வெட்கமேயில்லாமல் வைத்துவிட்டுப் போயிருக்கிறார்கள். அதே சமயம் நீர் வரக் கூடிய வாய்ப்புள்ள நீர் வரத்துப் பாதைகள் புதரண்டிக் கிடக்கின்றன.

யாரையும் குற்றம் சொல்ல வேண்டும் என்பதற்காக எழுதவில்லை. ஆனால் இதுதான் நிதர்சனம். 

'ஐயோ கடலில் கலக்குதே' என்று இன்றைக்கு கதறுவோம். அவ்வளவுதான். இனி அடுத்த முறை மேட்டூர் அணை நிரம்பும் போதுதான் இதை பற்றி பேச ஆரம்பிப்போம். ஒரு நாள் ஆயுள். அதன் பிறகு வேறொரு பிரச்சினைக்குத் தாவிவிடுவோம். இப்படித்தானே நம் ஒவ்வொரு பிரச்சினையும் கிடப்பில் போடப் படுகின்றன.இதெல்லாம் நாம் என்ன செய்ய முடியும்? அரசு பார்த்துச் செய்ய வேண்டிய வேலை என்று நம்மை நாமே சமாதானம் சொல்லிக் கொள்வோம். தவறில்லை. ஆனால் அரசுக்கு அழுத்தம் தர வேண்டும். அதில்தான் நாம் ஏமாந்து போகிறோம். நீண்டகால நோக்கம் கொண்ட ஒரு பொதுப்பணித்துறை அமைச்சர் வாய்த்து அவர் தகுதி வாய்ந்த துறைச் செயலாளர் ஒருவரை தமக்கு உதவிக்கு அமர்த்தி திட்டங்களை வகுத்தால் மட்டுமே தமிழகத்தை எப்பொழுதும் வளம் கொண்டதாக மாற்ற முடியும். இல்லையென்றால் 'மழை பெஞ்சா சோறு' என்றுதான் காலம் நகரும். 

கவனித்துப் பார்த்தால் கர்நாடகாவில் பெரும்பாலான அணைகள் நிரம்பிய பிறகுதான் நமக்கு தண்ணீர் வருகிறது. அவர்கள் பல குளம் குட்டைகளை நிரப்பிவிடுகிறார்கள். அவர்களிடம் கையேந்தும் நிலையில் நாம் இருக்கிறோம். அவர்கள் உபரி நீரை வெளியேற்றும் போது நம்முடைய நோக்கமெல்லாம் 'அப்பாடா மேட்டூர் நிரம்பிவிட்டது' என்பதில்தான் இருக்கிறதே தவிர பிற அணைகள் குறித்தான செய்திகள் கூட வருவதில்லை. மேட்டூரில் இருந்து ஈரோடு வரைக்கும் கூட சிறு அணைகள் பத்து இருக்கின்றன. இவை தவிர மாயனூர் தடுப்பணை (3 டி.எம்.சி), கல்லணை (3 டி.எம்.சி) கீழணை (இரண்டரை டி.எம்.சி) , சேத்தியாத்தோப்பு (ஒன்றரை டி.எம்.சி) என்று நாம் நீரைச் சேகரித்து வைக்க நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. இதையே கூட சரியாகச் செய்யமாட்டார்கள் என்பதுதான் வேதனை. சேகரித்து வைப்பதாக இருந்தால் பெரிய கும்பிடு உங்களுக்கு.

Jul 18, 2018

எவ்வளவு பெரிய மலையெல்லாம் பார்த்தாச்சு..

நகமலைக்குச் சென்றிருந்தோம். 'சும்மா வாங்க..இடம் இருக்குது...செடி வைக்க எது தோதா இருக்கும்னு பார்க்கலாம்' என்றுதான் அழைத்தார்கள். வீட்டிலிருந்து கிளம்பும் போது மத்தியானம் ஆகுமோ அல்லது சாயந்திரம் ஆகிவிடுமோ என்று நினைத்து வழக்கத்தை விட அதிகமாக வயிற்றை நிரப்பிக் கொண்டு சென்றிருந்தேன். விதி விளையாடிவிட்டது.  

ஒரு கதையைச் சொல்லிவிட வேண்டும். இரண்டொரு மாதங்களுக்கு முன்பாக ரத்த பரிசோதனை செய்து கொண்டேன். நாற்பதை நெருங்குகிறோம் அல்லவா? முன்னெச்செரிக்கை. கொழுப்பு கொஞ்சம் கூடுதலாக இருந்தது. அது தெரிந்த விஷயம்தானே. எந்த இடத்தில கொழுப்பு அதிகம் என்று லோலாயமாகக் கேட்காமல் மேலே படிக்கவும்.  மருத்துவரை கேட்டால் வாயைக் கட்டி கொஞ்சம் உடம்பை அசையுங்கள் என்று சொன்னார். தினமும் காலையில் வெறும் வயிற்றில் கொள்ளு வேக வைத்த தண்ணீரைக் குடித்துவிட்டு ஓடிக் கொண்டிருந்தேன். வாய்க்கும் பூட்டு போட்டிருந்ததால் கொழுப்பு குறைந்திருந்தது. அதனால் ஓடுவதை நிறுத்திவிட்டேன். ரெஸ்ட். வேணிக்கு இது பிடிக்கவில்லை. தினசரி 'வாக்கிங் போங்க' என்பாள். எதையாவது சாக்கு போக்கு சொன்னால் 'உங்களை நம்பி மூணு பேரு இருக்கோம்' என்பாள். 'என்னை நம்பி அமெரிக்காவே இருக்குது..நான் பார்த்துக்கிறேன் விடு' என்று சொல்லிவிடுவேன்.

இப்படி கதை போய்க் கொண்டிருக்கும் தருணத்தில்தான் இந்த நகமலை பயணம். 'கொஞ்சம் இந்த பக்கம் வாங்க..கொஞ்சம் இந்தபக்கம் வாங்க' என்று அழைத்தபடியே மலை ஏற விட்டுவிட்டார்கள்.பாதி ஏறிய பிறகு பேசாமல் திரும்பி கீழே ஓடி விடலாமா என்று கூட யோசித்தேன். 'என்ன சார் இப்படி மூச்சு வாங்குது' என்று அருகில் வந்த ஒரு இளைஞன் கேட்ட போது 'இறங்கறதுக்குள்ள நின்னுடுமாட்ட தெரியுது..கடைசியா வாங்கிக்கட்டும் விடு' என்றேன். சிரித்தான்.(வீடியோக்களை ப்ரவுஸர் வழியாக பார்க்கலாம்)

நகமலை, நம்பியூர் பக்கத்தில் இருக்கிறது. ஒரு காலத்தில் பசுமையாக இருந்ததாம். வறண்ட பூமி. விறகுக்காக மனிதர்கள் மரங்களை வெட்டி மொட்டையாக்கிவிட்டார்கள். அந்த மலையைச் சுற்றிலும் மரங்களை நட வேண்டும் என்று உள்ளூரில் இளைஞர்கள் முடிவு செய்திருந்தார்கள். அவர்கள் கொஞ்சம் நாற்றுக்களை நட்டு பராமரித்தும் வருகிறார்கள். 'நீங்க ஊருக்கு வாங்க' என்று அழைத்திருந்தார்கள். அவர்களைச் சந்திக்கத்தான் சென்றிருந்தோம். ஆனந்தும், தொரவலூர் சம்பத்தும், கார்த்திகேயனும் வந்திருந்தார்கள். ஆனந்த் மலை மீது என்ன வகையான மரங்கள் இருக்கின்றன என்று பார்க்க விரும்பினார். காட்டு எலுமிச்சை உட்பட எளிதில் கண்ணில் படாத பல மரங்களை பார்த்துவிட்டு கீழே இறங்கினோம்.

இந்த மலையை பசுமையாக்குவதுதான் யோசனை. அடுத்தடுத்த திட்டங்களை செயல்படுத்த வேண்டும். இது நீண்ட காலத் திட்டமாகத்தான் இருக்க முடியும். ஒரு மலையை பசுமையாக்குவது என்பது எளிதான காரியமில்லை என்று தெரியும். 

சில திட்டங்களை வகுத்திருக்கிறோம். விதைப்பந்துகளைச் செய்து அதை மலை மீது வீசுவது முதல் திட்டம். அதற்கான விதைகளை சேகரிக்க வேண்டும். நாட்டு மர  விதைகள் இருந்தால் தகவல் தரவும். இரண்டாவது திட்டம் அக்கம்பக்கம் இருக்கும் சத்தியமங்கலம், தாளவாடி உள்ளிட்ட மலைப்பகுதிகளுக்கு ஐம்பது பேரும் பயணிக்க முடிவு செய்திருக்கிறோம். கோட்டுப்புள்ளாம்பாளையம் இளைஞர்களும் வருவார்கள். அங்கேயிருந்து விதைகளைச் சேகரித்து வந்து நாற்றுக்களாக்கி மலை மீது நடுவது. இது கொஞ்சம் செலவு பிடிக்கும். மரங்களுக்கு நீர் ஊற்றுவது அவசியம். அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். உள்ளூர் இளைஞர்களின் ஒத்துழைப்பு, செடிகள் வளரும் விதம் ஆகியவற்றையெல்லாம் பார்த்துவிட்டு அடுத்தடுத்து திட்டங்களை செயல்படுத்தலாம். 

கூட்டத்தில் பேசும் போது மலைக்கு அருகிலேயே 'அடர்வனம்' அமைக்கலாம் என்று சொன்னார்கள். எப்பொழுதுமே இப்படியான காரியங்களில் கவர்ச்சிகரமான செயல்களில்தான் மனம் செல்லும். அடர்வனம் அப்படியானதொரு கவர்ச்சித் திட்டம். ஷங்கர் படம் மாதிரி வறட்சி முழுவதும் காணாமல் போய் அடுத்த காட்சியில் பச்சை கொழிக்க வேண்டும் என்று சிலர் நினைப்பதுண்டு. உண்மையில் அது சாத்தியமில்லை. படிப்படியாகத்தான் நகர வேண்டும். ஒரு திட்டத்தைச் செய்து முடிக்க ஒரு வருடம் வரைக்கும் கூட ஆகலாம். பொறுமைதான் வெற்றியைத் தரும். இதைச் சொன்னதும் அவர்களில் சிலர் வாடிப் போனார்கள். அது தவறில்லை. புரிந்து கொள்வார்கள்.

ஒரு மலை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருக்கிறது. அதை மொட்டையடிக்க நூற்றுக்கணக்கான வருடங்கள் ஆகியிருக்கும். அதே மலையை மூன்று மாதத்தில் பூத்துக் குலுங்கச் செய்ய இயலுமா? சில சிக்கல்கள் வந்தே தீரும். ஒவ்வொன்றாகத்தான் களைய வேண்டும். களைந்துவிடலாம்.

மலையைவிட்டு இறங்கும் போது மதியம் ஆகியிருந்தது. அடுத்த நாள் வரைக்கும் மூட்டு வலி பின்னியெடுத்துவிட்டது. அவ்வளவு வியர்வை. வேணியிடம் சொன்னேன். 'வேணும்னா வாரம் ஒருதடவை அங்க போய்ட்டு வாங்க' என்றாள். நான் அவ்வளவு பெரிய இளிச்சவாயனா? 'வாட்சப் குரூப் ஆரம்பிங்க' என்று ஊர்க்காரர்களிடம் சொல்லியிருக்கிறேன். இனிமேல் அதில்தான் தகவல் தொடர்பே. சிக்கினால் மலையேறவிட்டு பிழிந்துவிடுவார்கள் போலிருக்கிறது.  மலையே ஏறாமல் மலையை மாற்றிவிட வேண்டும். பார்த்துவிடலாம் ஒரு கை.

Jul 13, 2018

கூர்

புதிய நுட்பங்கள் குறித்து நிறையப் பேர் பேசினார்கள். இது குறித்தான விரிவான உரையாடலுக்கு நிறைய சாத்தியங்கள் இருக்கின்றன. படிக்கும் போதும், வேலை தேடும் போதும் நாம் நிறைய விஷயங்களைப் பற்றி தெரிந்து வைத்திருப்போம். அந்தந்த காலகட்டத்திற்கான புதிய நுட்பங்கள் பற்றி நமக்கு ஓரளவுக்காவது தெரியும். வேலை கிடைத்தவுடன் நம்முடைய தேடல் வெகுவாக குறைந்துவிடுகிறது அல்லது கவனம் சிதறுகிறது. கற்றல் சம்மந்தமாக ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் ஒதுக்குகிறோம்? 

நேரம் இல்லை என்பதெல்லாம் ஏற்றுக் கொள்ள இயலாத காரணங்கள். ஒரு நாளைக்கு ஃபேஸ்புக்கில் எவ்வளவு நேரம் இருக்கிறோம்? யூட்யூப்? டிவிட்டர்? வாட்ஸாப்? அதற்கெல்லாம் எப்படி நேரம் கிடைக்கிறது? மேற்சொன்ன எதுவுமே தவறில்லை. எந்நேரமும் படிப்பும் வேலையாகவே சுற்ற முடியுமா? ஆனால் இந்த உலகம் நம்மிடம் புதிது புதிதாக எதையாவது எதிர்பார்த்துக் கொண்டேயிருக்கிறது. வருடம் இருபது லட்ச ரூபாய் சம்பளம் கொடுத்து பதினைந்து வருட அனுபவமுள்ள ஆள் செய்யக் கூடிய வேலையை வெறும் ஐந்து வருட அனுபவம் கொண்ட ஒருவருக்கு வருடம் எட்டு லட்ச ரூபாய் சம்பளம் கொடுத்து முடித்து விட முடியும். பத்து வருடம் கூடுதல் அனுபவம் இருக்கிறது என்பதற்காக மட்டுமே நம்மை எதற்கு அவர்கள் வேலையில் வைத்திருக்க வேண்டும்? நம்முடைய பங்களிப்பு என்னவாக இருக்கிறது என்பது முக்கியம். செலவுக் குறைப்பு என்று வந்தால் ஏழு கழுதை வயதானவர்களைத்தான் முதலில் வெட்டுவார்கள். 

நவீன யுகத்தில் அனுபவத்தை விடவும் அறிவுதான் நம்மைப் பற்றி அடுத்தவர்களிடம் பேசும். அதை கூர் தீட்டிக் கொண்டேயிருக்க வேண்டியது அவசியமாகியிருக்கிறது. அதிகமில்லை- அடுத்த ஆறு மாதங்களுக்கு தினசரி வெறும் அரை மணி நேரத்தை ஒதுக்கினால் போதும். புதிய ஒன்றைக் கற்றுவிட முடியும். அதைத்தான் நாம் மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது.  

முப்பது 'ஹாட் நுட்பங்கள்' என்று குறிப்பிட்டிருந்தேன். அந்தப் பட்டியலை தர முடியுமா? என்று கேட்டிருந்தார்கள். வாழைப்பழத்தை உரிக்க சிரமப்படுகிறார்கள். உண்மையில் ஒன்றைத் தேடும் போது குதிரைக்கு கடிவாளமிட்ட மாதிரி அதை மட்டுமே நோக்கி ஓட வேண்டியதில்லை. உதாரணமாக இரண்டாம் உலகப் போர் குறித்தான ஒரு படத்தை பார்க்கிறோம் என்றால், படத்தில் இடம் பெறும் வரலாற்றுச் சம்பவங்கள் குறித்து விரிவாகத் தெரிந்து கொள்ள படம் குறித்து மேலும் தேடுகிறோம். வெறுமனே அந்தப் படம் குறித்து மட்டும் தேடினால் என்ன சுவாரசியம் இருக்கிறது. வால் பிடித்த மாதிரி ஒவ்வொன்றாக பிடித்து போய் ஒரு வரலாற்றுச் சித்திரத்தை மனதுக்குள் உருவாக்கிக் கொள்ளும் போதுதான் நம்முடைய தேடல் முடிவடையும். இந்த வால் பிடித்தல் என்பது எல்லாவற்றுக்கும் பொருந்தும். உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குச் செல்லும் க்ரோஷியா உலக வரைபடத்தில் எங்கே இருக்கிறது எனத் துழாவி அதன் அழகான அதிபர் தொடங்கி அவரது கணவர் பொறியியல் படிப்பை முடித்தவர் என்பது வரைக்கும் தேடுவதில்தான் நம்முடைய தேடலுக்கான சுவாரஸ்யமே இருக்கிறது. 

படிப்பிலும் கூட அதுதான் நம்மை மேலும் மேலும் தேட வைக்கும். ஒன்றுமில்லை- தினசரி நாம் பயன்படுத்துகிற விஷயங்களையே எடுத்துக் கொள்வோம். ஜி.பி.எஸ் எப்படிச் செயல்படுகிறது? அவற்றுக்கான நுட்பம் என்ன? இப்படியே போனால் Geo - Spatial நுட்பம் பற்றி ஓரளவுக்குத் தெரிந்து கொள்வோம். அதில்தான் ஜி.ஐ.எஸ் வருகிறது. செயற்கைக் கோள் வருகிறது. அதெல்லாம் எனக்கு என்ன சம்பந்தம் என்றெல்லாம் எதையும் கேட்க வேண்டியதில்லை. ஷங்கர் படத்தில் செந்தில் சொல்வது போல இன்பர்மேஷன் இஸ் வெல்த்'. நமக்கு அவசியமே இல்லையென்றாலும் நம் பிள்ளைகளுக்கு சொல்லித்தரவாவது உதவும்.

'இந்த கார் இவ்ளோ பெருசு..ஆனா எடை ரொம்ப குறைவு' என்று சாதாரணமாக பேசுவார்கள். ஆனால் அட்வான்ஸ்ட் மெடீரியல் துறை எவ்வளவு தூரம் முன்னேறியிருக்கிறது என்பது பற்றி நமக்கு பெரிய அளவுக்குத் தெரியாது. காம்போசிட், நேனோ, பாலிமர், அல்லாய்ஸ் என்று அது கன வேகத்தில் பயணிக்கிறது. எந்திரவியல் சார்ந்து இருப்பவர்கள் இத்தகைய துறைகளைப் பற்றி அக்கு வேறு ஆணி வேறாக அலசி வைத்திருந்தால் எப்படியும் அத்தகைய ஆட்களுக்கான தேவை இருக்கும். 

மருத்துவம் சார்ந்த நுட்பங்களில் இருப்பவர்களுக்கு ஜெனோமிக்ஸ், பயோனிக்ஸ் என்றெல்லாம் இருக்கிறது. வரிசையாக அடுக்கலாம். 3 - டி பிரிண்டிங், ஆற்றல் (எனர்ஜி) துறையில் வந்திருக்கும் நவீன விஷயங்கள் என்று ஒவ்வொரு துறையும் அசுர வேகத்தில் முன்னேறிக் கொண்டிருக்கிறது. 

'நீ இதெல்லாம் படிச்சு வெச்சு இருக்கியா?' என்று கேட்டால் எல்லாவற்றையும் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் என்ன புதிய அம்சங்கள் வந்திருக்கின்றன என்று ஓரளவுக்கு கவனித்து வைத்திருக்கிறேன். எலெக்ட்ரானிக்ஸ் ஃபார் யூ மாதிரியான தளங்களை மாதம் இரண்டு முறையாவது மேய்ந்துவிடுவேன். இதே மென்பொருள் துறையில் நான் இருக்கப் போவதில்லை. ஆனால் நான்கு பேரிடம் பேசும் போது மேல்மட்ட அளவிலாவது எனக்குத் தெரியும் என்று காட்டிக் கொள்ளவாவது தெரிந்து கொள்கிறேன். 

கார்பொரேட் நிறுவங்களின் பணியில் இருப்பவர்கள் தம்மை கூர் தீட்டிக் கொண்டேயிருக்க வேண்டும். கார்பொரேட் யுகத்தில் இருப்பவர்கள் மட்டுமில்லை- பேராசிரியர்கள், ஆசிரியர்களும் இதைப்பற்றியெல்லாம் புரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம். ஒரு வருடம் இடைவெளி விட்டாலும் இந்த உலகம் பத்து வருடத்துக்கான வளர்ச்சியுடன் முன்னேறி போய்விடும். ஏற்கனவே சொன்னது போல் நம்முடைய அறிவு மட்டுமே நமக்காக அடுத்தவர்களிடம் பேசும். அதை ஆயுதமாக பயன்படுத்தும் வரைக்கும்தான் இந்த நவீன யுகத்தில் நம்மால் ஓட முடியும் இல்லையென்றால் உலகம் அதன் போக்கில் வேகமாக ஓடிக் கொண்டிருக்கும். நாம் ஓரமாக நின்று வேடிக்கை பார்ப்பதைத் தவிர ஒன்றும் செய்ய முடியாது. 

Jul 11, 2018

இனி ஐ.டி. அவ்வளவுதானா?

எங்கள் அலுவலகத்தில் கடந்த வருடம் ஒருவரை மேலாளர் ஆக்கினார்கள். மேலிடத்தில் நல்ல செல்வாக்கு அவருக்கு. எப்படியும் பல வருடங்கள் இருப்பார் என்று அவரைப் பார்த்தாலே பம்முகிறவர்கள் அதிகம். கடந்த வாரம் எல்லோரையும் அழைத்து ராஜினாமா செய்துவிட்டதாகச் சொன்னார். பலருக்கும் அதிர்ச்சி. 'உன்னை இங்க நல்லாத்தானய்யா வெச்சு இருந்தாங்க' என்பதுதான் பலருக்குள்ளும் ஓடுகிற கேள்வியாக இருந்தது. 'எனக்கு இங்க எந்தக் குறையுமில்லை' என்று சொல்லிவிட்டு கடந்த சில வருடங்களாக 'டேட்டா அனலிடிக்ஸ், பிக் டேட்டா' ஆகியவற்றை படித்துக் கொண்டிருந்தாராம். புதிய நிறுவனமொன்றில் வாய்ப்பு வந்திருக்கிறது. எட்டிக் குதித்துவிட்டார். 'இப்போ நல்லா இருக்கிறேன் என்பதைவிடவும் எதிர்காலத்தில் என்ன செய்யப் போகிறேன்' என்று கணக்குப் போட்டிருக்கிறார் மனுஷன். இனி பத்து அல்லது பதினைந்து வருடங்களுக்கு இந்த புதிய நுட்பத்தில் குப்பை கொட்டிவிடுவார். 

மென்பொருள் துறை என்றில்லை பொதுவாகவே இன்றைக்கு பணியில் இருப்பவர்கள் பலருக்கும் 'அடுத்தது என்ன?' என்றோ அல்லது 'எதில் அப்டேட் செய்து கொள்வது' என்றோ குழப்பம் இருக்கும். நேற்று ஒரு கருத்தரங்கம் நடைபெற்றது. மேற்சொன்ன விஷயம்தான் ஒரு அமர்வில் விவாதப் பொருள்.  படித்துவிட்டு உடனடியாக வேலை மாறுகிறேன் என்றெல்லாம் மண்டை காய வேண்டியதில்லை. அடுத்த மூன்று முதல் ஐந்து வருடங்களில் கவனிக்கப்படும் தொழில் நுட்பம் ஒன்றைத் தேர்ந்தெடுத்து அதை குறித்தான ஆராய்ச்சியைத் தொடங்கி அதில் கற்றுக் கொள்ளத் தொடங்குங்கள் என்று பேசினார்கள். புதிய நுட்பத்தைக் கற்றுக் கொள்ளும் கால கட்டத்தில் தினசரி அரை மணி நேரம் ஒதுக்கி வார இறுதிகளில் சற்று அதிகப்படியான நேரத்தை ஒதுக்கினால் ஆறு மாதம் முதல் ஓராண்டு காலத்தில் தெளிவாகப் படித்துவிட முடியும். அதன் பிறகான ஓராண்டு காலம் நாம் கற்றுக் கொண்டவற்றில் நிபுணர் ஆவதற்கான வேலைகளைச் செய்யலாம். பிறகு அந்த நுட்பம் கோலோச்சும் காலம் வரைக்கும் நமக்கான தேவை இருந்து கொண்டேயிருக்கும். அதிகபட்சம் முப்பதாண்டுகள் இந்தத் துறையில் இருப்போமா? இப்படி இரண்டு அல்லது மூன்று முறை பாம்பு சட்டையை உரிப்பது போல உரிக்க வேண்டியிருக்கும். 

துறை மாற வேண்டும் என்று கூட அவசியமில்லை. குறைந்தபட்சம் நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ளவாவது இந்த சட்டையுரித்தால் மிக அவசியம்.

படிப்பது சரி; எதைப் படிப்பது என்பதுதானே குழப்பமாக இருக்கிறது என்று கேட்கிறவர்களுக்கு சொல்ல ஒன்றே ஒன்றுதான் இருக்கிறது. கூகிளே கண்கண்ட தெய்வம்.

கிட்டத்தட்ட முப்பது துறைகள் செம ஹாட் அல்லது என் துக்கினியூண்டு மூளைக்கு அவைதான் தெரிகின்றன. துறைகள் என்றால் முதல் வரிசையில் இருப்பவை- ஆட்டோமேஷன், ரோபோடிக்ஸ், க்ளவுட் மாதிரியான பெருமொத்தமானவை. இப்படி வேறு என்ன துறைகள் இருக்கின்றன என்பதையெல்லாம் தெரிந்து கொள்ளவே ஒன்றிரண்டு மாதங்கள் பிடிக்கும். தெரிந்து கொள்வது என்றால் ஒவ்வொன்றைப் பற்றியும் ஐந்து நிமிடங்கள் பேசுகிற அளவுக்காவது நமக்கு தெரிய வேண்டும். அந்தப் புரிதல் உருவாகிவிட்டால் இவற்றில் நமக்கு எது பொருத்தமானது என்ற முடிவுக்கு வந்துவிடலாம். 

வெறும் துறை சார்ந்த அறிவு மட்டும் போதாது. உதாரணமாக வாய்ஸ் அசிஸ்டெண்ட்ஸ் என்பது எதிர்காலத்தில் மிகப்பெரிய இடத்தை பிடிக்கப் போகின்றன. கூகிள் அசிஸ்டென்ட் மாதிரி. இனி வரும் காலத்தில் பெரும்பாலான நிறுவனங்களின் வாடிக்கையாளர் சேவையை அவைதான் பார்த்துக் கொள்ளும். நாம் ஏர்டெல்லுக்கோ அல்லது வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்துக்கோ அழைத்து கேள்வி கேட்டால் அவைதான் பதில் சொல்லும். மேம்போக்காக பார்த்தால் எளிமையாகத் தெரியும். இதில் எவ்வளவு நுட்பங்கள் இருக்கின்றன? ஒவ்வொரு வாடிக்கையாளருக்கு ஒரு குரல் இருக்கும். அதை புரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் ஒரே கேள்வியை வெவ்வேறு விதமாகக் கேட்கக் கூடும். இதை உள்வாங்கி, வகைப்படுத்தி, பதில் தேடி எடுத்து, அவர்களுக்கு பதில் கொடுக்க- Interfaces  chat bots, Natural Language Processing இப்படி நிறைய இருக்கின்றன. இதில் ஒவ்வொன்றிலும் தனித்தனியாக வல்லுநர் ஆக முடியும். அவற்றுக்கான டூல்கள் இருக்கின்றன. 

இப்படித்தான் கிணறு தோண்ட வேண்டும். இதே போல இன்டர்நெட் ஆஃப் திங்ஸ், மொபைல் நுட்பங்கள், சைபர் பாதுகாப்பு என்று ஏகப்பட்ட வாய்ப்புகள் இருக்கின்றன. சி, சி++ மட்டும்தான் மென்பொருள் என்று நினைக்கிறவர்கள்தான் 'இனி ஐ.டி அவ்வளவுதான்' என்று நம்புகிறார்கள். உண்மையில் இனிமேல்தான் ஐ.டியின் அசுரத்தனமான வளர்ச்சி இருக்கப் போகிறது. 

எனக்குத் தெரிந்த ஒரு வங்கி மேலாளருக்கு ஐ.டி ஆட்கள் மீது என்ன வெறுப்போ தெரியாது- எப்பொழுது பேசினாலும் 'இன்னொரு பத்து வருஷம்..ஐ.டி அவ்வளவுதான் இல்லையா' என்பார். இத்தகைய அரைவேக்காட்டு ஆட்களைப் பார்த்தால் செம எரிச்சலாக இருக்கும். இப்படி நிறைய ஆட்கள் இருக்கிறார்கள். வங்கியில் தொடங்கி பள்ளிக்கூடம் வரைக்கும் பணியாளர்களே தேவையில்லாமல் அனைத்துமே தானியங்கி(ஆட்டோமேஷன்) ஆகும் காலம் வரலாம். ஆனால் இவற்றையெல்லாம் வடிவமைக்க, நிரல் எழுத என மென்பொருள் துறையில் ஆட்களுக்கான தேவை இருந்து கொண்டே இருக்கும். எழுதி வைத்துக் கொள்ளலாம்- மென்பொருள் துறை எந்தக் காலத்திலும் அழியாது. அது தன்னைத் தொடர்ந்து புதுப்பித்துக் கொண்டேயிருக்கும். இதில் வேலை வாங்க வேண்டுமென்றால், தொடர வேண்டுமென்றால் நாம் நம்மை புதுப்பித்துக் கொண்டேயிருக்க வேண்டும். அவ்வளவுதான். 

Jul 9, 2018

வெகு தூரம்

ஒரு வாரமாக வேலை சம்பந்தமாக மனக்குழப்பம். நலம் விரும்பி ஒருவர்- கிட்டத்தட்ட அண்ணன் மாதிரி-  மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குச் சென்று வரச் சொன்னார். 'சிவன் சந்நிதியிலேயே ஒரு நாள் இருந்துடுங்க. குழப்பம் போயிடும்' என்றார். அவரே கோவில் நண்பர் ஒருவரையும் அறிமுகப்படுத்தி வைத்திருந்தார். நான்கு மணிக்கு மதுரையில் இறங்கி நடந்து குளித்து ஐந்து மணிக்கெல்லாம் கோவிலுக்குள் சென்றாகிவிட்டது. திருப்பள்ளியெழுச்சி பாடி மீனாட்சியை எழுப்பி, சிவனையும் எழுப்பி அங்கேயே மதியம் வரைக்கும் அமர்ந்திருந்து - 'முன்னாடியே சொல்லி இருக்கலாம்ல' என்று கேட்க விரும்பும் மதுரை நண்பர்கள் மன்னிக்க. வெகு குழப்பம். தெளிவானவுடன் சொல்லிவிட்டு வருகிறேன்.

இந்த மாதிரியான குழப்பமான சமயங்களில் மனதை வேறு வழிகளுக்குத் திருப்பிவிட வேண்டும். கோட்டுபுள்ளாம்பாளையம் அடர்வனத்துக்குச் சென்றிருந்தேன்.  அற்புதமாக செழித்திருக்கிறது. ஊர்க்காரர்கள் இருக்க பயமேன்? இளைஞர்கள் திரண்டிருந்தார்கள். அடர் வனம் அமைத்துக் கொடுத்த ஆனந்தும், தொரவலூர் சம்பத்தும் வந்திருந்தார்கள். ஆனந்த் பற்றி முன்பு நிறையக் குறிப்பிட்டிருக்கிறேன். சம்பத் தனது கிராமத்தில் நிறையச் செலவு செய்து ஒரு அடர்வனம் அமைத்திருக்கிறார். இப்படியான ஆட்களை பார்ப்பது அரிது. அவிநாசி அத்திக்கடவு திட்டப் போராளி. கிராமிய மக்கள் இயக்கம் என்று அமைப்பை ஆரம்பித்து மரம் நடுவது, குளம் தூர் வாருவது, பனை நடுவது என்று அலைகிறவர்.

காலை வெயில் ஏறிக் கொண்டிருந்தது. களைச் செடிகளை பிடுங்கியெறிய கொஞ்ச நேரம் தேவைப்பட்டது. பிறகு அடர்வனத்துக்கு முன்பாகவே நிலத்தில் அமர்ந்து கொண்டோம். இப்படி மாதம் ஒரு முறையாவது சந்தித்து பேசுவது என ஏற்கனவே முடிவு செய்திருக்கிறோம். ஊருக்குள் இளைஞர்கள் ஒரு குழுவாக இணைந்து அடுத்தடுத்து வேலைகளைச் செய்ய வேண்டும் என்பதுதான் திட்டம். அப்படி ஒரு குழு உருவாகிவிட்டால் நாம் அடுத்த வேலைக்கு நகர்ந்துவிடலாம். அவர்கள் தன்னியல்பாக இயங்கும் தற்சார்பு குழுவாக மாறிவிடுவார்கள். இதைத்தான் பேசினோம். இளைஞர்களிடமே நிறைய திட்டமிருக்கிறது. அவர்கள் செயல்படுத்த ஆரம்பிப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். அவர்களின் பணிக்கு ஆதரவாக நின்றால் மட்டும் போதும்.நேற்றைய கூட்டத்துக்கு வேறு ஊரிலிருந்தும் சில இளைஞர்கள் வந்திருந்தார்கள். இருபது கிலோமீட்டர் தள்ளி நாகமலை என்ற ஒரு பகுதி இருக்கிறது. கடுமையான வறட்சி நிலவும் சிறு குன்று அது. அங்கிருந்து சில இளைஞர்கள் வந்திருந்தார்கள். அவர்கள் சில மரங்களை நட்டு வளர்த்திருக்கிறார்கள். கைக்காசு செலவழித்து தண்ணீர் வாங்கி ஊற்றிக் கொண்டிருக்கிறார்கள். யாரோ நிசப்தம் குறித்துச் சொல்ல தேடி பிடித்து வந்துவிட்டார்கள். 'அடுத்து உங்க ஊருக்கு வர்றோம்' என்று சொன்ன போது கூட்டத்தில் இருந்தவர்கள் 'நாங்களும் வர்றோம்' என்றார்கள். சந்தோஷமாகிவிட்டது. அடுத்த வாரம் நாகமலை சுற்றுவட்டார பகுதிகளில் இருக்கும் ஆர்வமுள்ள இளைஞர்களை எல்லாம் திரட்டி வைக்கச் சொல்லியிருக்கிறோம். நாங்கள் ஒரு குழுவாகச் சென்று அவர்களுடன் பேசி, இணைந்து அந்த மலையில் வேலைகளைத் தொடங்க வேண்டும்.

ஒரு வேலையைச் செய்யும் போது 'எல்லாத்தையும் நாமளே செஞ்சுடலாம்' என்றுதான் தொடக்கத்தில் தோன்றும். ஆனால் அது சரியான அணுகுமுறை இல்லை. வாய்ப்பிருக்குமிடங்களில் எல்லாம் அடுத்தவர்களின் உதவியைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நம்மால் இயலாதவற்றையும் கூட அவர்களில் சிலர் செய்ய சாத்தியமிருக்கிறது. அவர்களில் சிலரை அடுத்தடுத்த  வேலைகளுக்குத் தயார் செய்துவிட்டு நாம் நம்முடைய பாதையில் நகர்ந்து கொண்டேயிருப்பதில்தான் உண்மையான வெற்றி இருக்கிறது. சொல்வதற்கு இது இலகு. ஆனால் அனுபவங்களே இதையெல்லாம் சரியாகக் கற்றுத் தரும். எந்தப் பணிக்கும் இது பொருந்தும். பொதுக்காரியங்களில் நூறு சதவீதம் பொருந்தும். 

இப்படி  ஆங்காங்கே விதைகள் விழுந்து கொண்டேயிருக்கும்படி பார்த்துக் கொண்டால் சரி. மிகச் சரியான வித்துக்கள் முளைத்து விருட்சமாகி அந்தந்தப் பகுதிகளுக்கு பலனும் நிழலும் தர ஆரம்பித்துவிடும் என்ற நம்பிக்கையிருக்கிறது. அதைச் செய்து கொண்டேயிருக்க வேண்டியதுதான். இன்னும் செல்ல வேண்டியது வெகு தூரம். 

Jul 2, 2018

அருணாச்சலம்

அருணாச்சலம் பள்ளித் தோழர். எங்களுடைய பள்ளி மிகப்பெரிய மைதானத்தைக் கொண்டது. விளையாட்டு மைதானம் மட்டுமில்லை. நாங்கள் படித்த காலத்தில் வேளாண்மையும் நடக்கும். மேனிலைக் கல்வியில் 'அக்ரி' என்று தனியாக ஒரு பாடப்பிரிவு உண்டு. அவர்கள்தான் உழவுத் தொழிலை பார்த்துக் கொள்வார்கள். அருணாச்சலம் அந்தப் பிரிவில்தான் படித்தார். பல சமயங்களில் மாட்டு வண்டியில்தான் பள்ளிக்கு வருவார். மாடுகளை அவிழ்த்துவிட்டு பாடப் புத்தகத்தை எடுத்துக் கொண்டு வகுப்புக்கு வருவார். இடைவேளைகளில் மாடுகளை நிழலில் இடம் மாற்றிக் கட்டுவார். அதெல்லாம் ஆச்சரியமாகத்தான் இருக்கும். வேடிக்கையாகவும் இருக்கும். 

எதிர்காலத்தில் அவர் உழவன் ஆவார் என்று எதிர்பார்க்கவில்லை. ஒன்றரை ஏக்கர் நிலம் கொண்ட சிறு விவசாயக் குடும்பம் அவருடையது. ஆனால் அவருக்கு நம்மாழ்வாரோடு தொடர்பு கிடைத்தது. அது அவரை முழுமையாக வேளாண்மைத் தொழிலின் பக்கம் திரும்பிவிட்டது.  இன்றைக்கு முழு நேர விவசாயி. விவசாயம் என்றால் நட்டத்தில் செய்கிற விவசாயி இல்லை. கிட்டத்தட்ட பத்து ஏக்கர் விவசாயம் செய்கிற அளவுக்கு வளர்த்திருக்கிறார். எங்கள் ஊர்ப்பக்கத்தில் ஒரு ஏக்கர் என்ன விலை என்று கேட்டால் பத்து ஏக்கர் என்பதன் மதிப்பை புரிந்து கொள்ளலாம். வீட்டில் இருப்பவர்கள் அத்தனை பேரும் தோட்டத்தில்தான் இருப்பார்கள். பார்க்கும் போது இதை அவர்கள் அனுபவித்து செய்கிறார்கள் என்று தோன்றும்.  

அருணாசலத்தின் பள்ளித் தோழன் தேவசேனாதிபதி, சட்டீஸ்கர் மாநிலத்தில் ஆட்சியர். அவரும் எங்கள் பள்ளி மானவர்தான். அவர் அருணாச்சலத்தை விடுவதில்லை. சட்டீஸ்கர், ஒடிசா போன்ற மாநிலங்களில் அருணாச்சலத்தை வேளாண்மை சார்ந்த  ஆலோசகராக வைத்திருக்கிறார்கள். அங்கிருக்கும் எளிய விவசாயிகள் உழவு மூலம் மேம்படுவதற்கான வழிமுறைகளைச் சொல்லித் தருகிறார்.

எங்கள் ஊர்ப்பக்கத்தில் அருணாச்சலமும் அவரது மண் சார்ந்த ஆர்வமும் வெகு பிரசித்தம். தைரியமான ஆளும் கூட. நிலம் நீருக்கு எதிராக யாராவது சேட்டை செய்யும் போது துணிந்து எதிர்க்கும் மனநிலை கொண்டவர். அருணாச்சலம் பற்றி புதிய தலைமுறையில் ஒளிச்சித்திரம் ஒன்றை உருவாக்கியிருக்கிறார்கள். அருணாசலத்தின் வெற்றி பற்றி மிகை இல்லாத ஒளிச்சித்திரம் இது. 


நம்முடன் இருப்பவர்கள் ஒவ்வொரு அடி முன்னெடுத்து வைக்கும் போதும் நமக்கு உள்ளூர சந்தோசம் வருமல்லவா? அப்படியான சந்தோசம் எனக்கு. இவரைப் பற்றி தனியாக ஒரு பதிவு எழுத வேண்டும் என நினைத்திருந்தேன். புதிய தலைமுறை அந்த வேலையை மிகச் சிறப்பாக செய்துவிட்டது. 

ஈரோடு, கோயமுத்தூர், சேலம் பக்கம் வருகிறவர்கள் அருணாசலத்தின் பண்ணையை ஒரு முறை பார்த்துவிட வேண்டும் என்று மனதில் குறித்து வைத்துக் கொள்ளலாம். worth seeing it . 

'விவசாயமெல்லாம் நஷ்டத்தில்தான் முடியும்' என்று சொல்கிறவர்கள் ஒரு முறையேனும் அருணாச்சலத்தை சந்திக்க வேண்டும். அருணாச்சலத்தை அவ்வளவு சீக்கிரம் பிடிக்க முடியாது. ஆனால் விவசாயத்தில் ஆர்வம் இருப்பவர்கள், 'இந்தத் தொழிலை விட்டுட்டு உழவு செய்யப் போகிறேன்' என்று சொல்கிறவர்கள், எங்கள் மண்ணில் தண்ணீர் வசதியே இல்லை என்று வருந்துகிறவர்கள் தாராளமாக அவரைத் தொடர்பு கொள்ளலாம். 'நீங்க வந்துட்டு போங்க' என்று கேட்டால் தயக்கமில்லாமல் வந்து செல்கிறவர் அவர். அவரது வழிகாட்டல்கள் நிச்சயமாக மிகப்பெரிய உதவியாக இருக்கும்.  (94433 46323)