Jun 25, 2018

Lust Stories

'லஸ்ட் ஸ்டோரிஸ்ன்னு ஒரு படம் வந்திருக்கு' - படம் பார்க்க வைக்க எப்படியெல்லாம் பெயர் வைக்கிறார்கள். பெயரைக் கேட்டதுமே படத்தை பார்த்துவிட வேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன். ராதிகா ஆப்தே நடித்தால் நடித்துவிட்டுப் போகட்டும். 'பரத் அனே நேனு' நாயகி நடித்திருக்கிறார். பார்க்காமல் விட முடியுமா? அது என்ன பெயரோ- கியாரா அத்வானி.

நான்கு இயக்குனர்கள். நான்கு கதைகள். நான்கு பிட்டுகளாக - இது அந்த பிட்டு இல்லை- இணைத்துக் கொடுத்திருக்கிறார்கள். நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் படம் இருக்கிறது. ஆனால் ஐநூறு ரூபாய் கட்ட வேண்டும். ஒரு உபாயம் இருக்கிறது. முதல் ஒரு மாதம் காசு கட்ட வேண்டியதில்லை. ஒரு கணக்கைத் தொடங்கி முப்பது நாட்களுக்குப் படங்களைப் பார்த்துக் கொள்ளலாம். ஐநூறு ரூபாயை மிச்சம் பிடிக்க விரும்பினால் இருபத்தொன்பதாவது நாள் கணக்கை முடித்துக் கொள்ளலாம். முந்தாநாள் கணக்குத் தொடங்கி இரண்டு படங்கள் பார்த்தாகிவிட்டது. இன்னொரு படம் 'ஃபுல் மெட்டல் ஜாக்கெட்' . அந்தப் படத்தைப் பற்றியெல்லாம் யாருக்காவது விமர்சனம் தேவையா என்ன?  லஸ்ட் ஸ்டோரிஸ்தான் முக்கியம்.


நான்கு கதைகளிலும் பெண்களின் காமம்தான் பிரதானம்.

முதல் கதையில் ராதிகா ஆப்தே. கல்லூரி பேராசிரியை. திருமணம் ஆனவர். தனது மாணவனுடன் உறவைத் தொடங்குகிறார். அவனுக்கு இன்னொரு தோழி இருக்கிறாள். அவளைப் பார்த்து ராதிகா பொறாமைப் படுகிறார். 

இரண்டாவது கதையில் தான் வீட்டு வேலை செய்து கொடுக்கும் பேச்சிலர் பையனோடு வேலைக்கார பெண்மணிக்கு தொடர்பு இருக்கிறது. அவனுக்கு திருமணத்துக்காக பெண் பார்க்கும் படம் அதே வீட்டில் நடக்கிறது. அதை அந்த வேலைக்கார பெண் வருத்தத்தோடு கவனிக்கிறாள்.

மூன்றாவது கதையில் மனீஷா கொய்ராலா. இரண்டு பெண்களின் தாய். அவருக்கும் அவரது கணவனுக்கும் ஒத்துப் போவதில்லை. கணவனின் நண்பனோடு உறவு ஏற்படுகிறது. 

நான்காவது கதையில், கியாரா அத்வானிக்கு திருமணம் ஆகிறது. பள்ளி ஆசிரியை அவள். கணவனோடு அவளுக்குத் திருப்தி இல்லை. காமத்தை தீர்த்துக் கொள்ள சாதனமொன்றின் உதவியை நாடுகிறாள். 

என்னதான் சொல்ல வருகிறீர்கள் என்று கேட்டால், எந்தப் பெண்ணும் கணவனிடம் திருப்தியடைவதில்லை என்று சொல்ல விரும்புகிறார்கள் போலிருக்கிறது. நான்கு கதைகளிலும் திருமணத்துக்கு வெளியிலானவர்களுடன்தான் உறவு.  திருமணமான கணவனுக்கும் மனைவிக்குமிடையில் லஸ்ட் இருக்காதா என்ன? அல்லது வெளியாளிடம் உருவாவதுதான் காமமா? முறையில்லாத உறவுகளில்தான் த்ரில் இருக்கிறது என்று சொல்லக் கூடும். 

காதலைவிடவும் காமம் அழகானது. ஆனால் நம்மவர்கள் அதன் அழகியலை விட்டுவிட்டு வெறுமனே உடல் வேட்கை என்று சொல்லிக்  கந்தரகோலம் ஆக்கிவிட்டார்கள். இப்பொழுதெல்லாம் காமம் என்பதே திருட்டு மாங்காய்தான் என்றாகிவிட்டது. இசை, ஒளிப்பதிவு, நடிப்பு என்பதெல்லாம் பிறகுதான். இத்தகைய படங்கள் எதைச் சொல்ல வருகின்றன என்றுதான் நேரடியாகப் பார்க்க வேண்டியிருக்கிறது.

நாம் காமத்தை வெளிப்படையாக விவாதிப்பதேயில்லை. அதுவும் பெண்களின் காமம் பற்றி? ம்ஹூம். மூச். அதனால்தான் இத்தகைய படங்களை காணாத நாய் கருவாட்டைக் கண்டது போல கொண்டாடுகிறார்கள். இதைத்தான் கரண் ஜோஹார் மாதிரியான ஆட்கள் சொல்ல வேண்டுமா என்ன? 

பொதுவாக இத்தகைய படங்களைப் பார்த்த பிறகு படத்துக்கான விமர்சனங்களையும் படிப்பதுண்டு. 'நமக்கு பிடிபடாத ஒன்றை அடுத்தவர்கள் பிடித்திருப்பார்கள்' என்ற நம்பிக்கைதான். ஒரு விமர்சனத்தில் 'ஒரு பெண் ஒரே சமயத்தில் எப்படி இரு வேறு ஆண்களுடன் உறவில் இருக்க முடியும்' என்பதற்கான தர்க்கத்தை முன் வைத்திருக்கிறார்கள் என்றெல்லாம் எழுதியிருந்தார்கள். அடேங்கப்பா. தினத்தந்தியில் தினமும் இதைத்தான் எழுதுகிறார்கள். 'என்னுடன் பேசியதைவிட அவள் செல்போனில் பேசியதுதான் அதிகம்'- திருமணமான இருபத்து நான்கு நாட்களில் மனைவியை தலையை துண்டித்து கொன்ற பாளையங்கோட்டை காவலர். இன்றைய தினத் தந்தியை எடுத்துப் பாருங்கள். 'தனது காதலுனுடன் சேர்ந்து கணவனுக்கு சயனைடு விஷம் கொடுத்த பெண்ணுக்கு ஆஸ்திரேலியாவில் ஆயுள் தண்டனை'. நேற்று படித்தேன். 

படத்தை பார்த்த போது 'இந்த கருமத்தைத்தான் விடிய விடிய ஓட்டிட்டு இருந்தியா' என்கிற கணக்காக இதற்குத்தான் இவ்வளவு பில்ட்-அப் கொடுத்தார்களா என்று தோன்றியது. ஒரு கமர்ஷியல் ஐட்டம். அவ்வளவுதான். இப்படியெல்லாம் தலைப்பு வைத்து 'கியாரா அத்வானி ஹாட்' என்று விளம்பரம் போட்டால் படம் வசூல் காட்டிவிடும் என்று நம்புகிறார்கள். அதற்கு மெனக்கெட்டு அரை வயது ஆண்ட்டிகளும் அங்கிள்களும்- என்னை மாதிரியான என்று சொல்லிவிடலாம்; இல்லையென்றால் கூகிள் பிளஸ்சில் கலாய்ப்பார்கள்-  விமர்சனம் எழுதிக் கொண்டிருப்பார்கள். 

இவையெல்லாம் பார்வையாளனை மேம்போக்காக சொறிந்துவிடுகிற படங்கள். அதற்கு ஒரு அறிவுஜீவி பிம்பம் பொருத்திக் காட்டுகிறார்கள். அதற்கு மேல் ஒன்றுமில்லை. காமத்தைப் பற்றி அழகியலுடன் விவாதிக்க எவ்வளவோ தூரம் செல்ல வேண்டியிருக்கும் போலிருக்கிறது.

சும்மா ஏற்றி விட வேண்டும் என்பதற்காகவே ஏற்றிவிடாதீர்கள் அய்யா.

இதற்கெல்லாம் போராட்டம் நடத்த மாட்டார்களா?  'கமுக்கமா பார்த்துட்டு வந்து போராட்டம் நடத்தச் சொல்லுறான் பாரு' என்று நம்மை யாராவது திட்டுவார்கள். நமக்கு எதுக்கு வம்பு? இந்த மாதிரி வேற படம் இருந்தா சொல்லுங்க பாஸ்..பார்த்துட்டு நாம விமர்சனம் எழுதிட்டு இருப்போம். 

4 எதிர் சப்தங்கள்:

சேக்காளி said...

//காமத்தைப் பற்றி அழகியலுடன் விவாதிக்க எவ்வளவோ தூரம் செல்ல வேண்டியிருக்கும் போலிருக்கிறது.//
மலரினும் மெல்லியது காமம் சிலரதன்
செவ்வி தலைப்படு வார்

சன்னி லியோன் said...

படம் பார்த்தல் பிடிக்காது. அது போல யாரிடமாவது பழகி பாருங்கள், அப்புறம் படம் பிடிக்கும்.

அருள்நிதி .கிருஷ்ணமூர்த்தி said...

நம்ம ஆட்கள் jockey women undergarments விளம்பரம் பார்த்தே போராட்டம் நடத்தவில்லை .காசு கொடுத்து பார்க்கும் இந்த சேனலுக்கா போராட்டம் பண்ணுவார்கள் கமுக்கமா பார்த்துட்டு இது தவறு என்று வறுப்பார்கள் முகநூலில் வந்து !

Unknown Friend said...

Search for B.A Pass (Hindi) in the same Netflix. You won't get disappointed. :))
By the way, B.A. Pass 2 has come, not worth as like its first part.