ஒரு குழு ஒரு வேலையை தீவிரமாகி செய்யத் தொடங்கியிருக்கிறது. நீட் தேர்வுக்கான பாடங்களையும் கேள்வித்தாள்களையும் தமிழில் மொழிமாற்றம் செய்வதற்கான ஒரு குழுவை ஏற்படுத்தியிருந்தோம். தொடக்கத்தில் சற்று சந்தேகமாக இருந்தது. இந்தக் குழுவில் யாருமே யாருக்கும் அறிமுகமில்லை. யார் இதையெல்லாம் ஒழுங்கு செய்வார்கள், எப்படி பணி நடக்கும் என்று புரியவில்லை. தனக்கென ஒரு வடிவத்தை பெறும் வரைக்கும் காத்திருப்பதுதான் சரி எனப்பட்டது.
வாட்ஸாப் குழு ஏற்படுத்தப்பட்டது. ஒவ்வொருவருக்கும் ஒரு வேலை என்று பிரிக்கப்பட்டது. சில நாட்கள் 'இதில் என்னென்ன வேலைகள் இருக்கின்றன' என்று விவாதங்கள் நடந்தது. ஓரளவுக்கு தெளிவு உண்டானவுடன் இப்பொழுது மொழிமாற்றம் செய்யும் வேலையைத் தொடங்கிவிட்டார்கள். ஆங்கிலத்தில் இருக்கும் பாடங்களை கூகிள் டிரைவில் பதிவேற்றம் செய்து அவற்றை தங்களுக்குள் பிரித்து மொழியாக்கப் பணியைத் தொடங்கியிருக்கிறார்கள். எவ்வளவு நாட்கள் பிடிக்கும் என்று கணிக்க முடியவில்லை. ஆகஸ்ட்/செப்டெம்பருக்குள் மொழிமாற்றம் செய்யும் வேலையை முடித்துவிட்டால் இவை தமிழ் வழி மாணவர்களுக்கு கிடைக்கும் வேலையைத் தொடங்கலாம்.
தமிழ் வழிக்கல்வி மாணவர்களுக்கு இப்போதைக்கு நீட் தேர்வில் இருக்கும் மிகப்பெரிய தடைக்கல் தமிழ் வழியில் படிப்பதற்கான புத்தகங்கள் இல்லாமைதான். நம்முடைய இந்தச் செயல் அவர்களுக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும். இதனை முடித்துவிட்டால் நீட் சார்ந்து அடுத்தடுத்த கட்ட பணிகளையும் திட்டமிடலாம். இந்த வருடம் தமிழகத்தில் சுமார் ஒரு லட்சத்து இருபதாயிரம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதியிருக்கிறார்கள். அவர்களில் இருபத்து நான்காயிரம் பேர் மட்டுமே தமிழ் வழி மாணவர்கள். தேசிய அளவில் எடுத்துக் கொண்டால் வெறும் 1.86%. இதில் தகுதி மதிப்பெண் பெற்றவர்கள் எவ்வளவு சதவீதம் என்று தெரியவில்லை. மிகச் சொற்பமாக இருக்கும்.
ஆரம்பத்தில் வாட்ஸாப் குழுவில் விவாதம் நடைபெற்ற போது 'சம்பளம் கொடுத்து ஆட்களை நியமிக்கலாமா' என்று கூட கேட்டார்கள். அது சரியாக இருக்காது. இது தன்னார்வ செயல்பாடு. அர்ப்பணிப்புடன் அவரவராகவே செய்வதுதான் இதில் அர்த்தம் இருக்கும். 'என் பங்களிப்பு இருந்தது' என்ற ஆத்ம திருப்தி கிடைக்கும்.
இதில் ஒரேயொரு பிரச்சினை நிறைய ஆட்கள் தேவைப்படும் போலிருக்கிறது. பாடங்கள், கேள்வித்தாள்கள் என நிறைய வேலை இருக்கிறது. சற்று தீவிரமாக செயலாற்ற வேண்டும். நாளைக்கு ஒரு மணி நேரமாவது ஒதுக்க வேண்டியிருக்கும். இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகியவற்றில் மொழிமாற்றம் செய்யும் ஆர்வமும் திறனும் உள்ளவர்கள் பின்வரும் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
boobathi@gmail.com
anandhakonar@gmail.com
'எனக்கு கலைச்சொற்கள் மறந்துவிட்டதே' என்றெல்லாம் யோசிக்க வேண்டியதில்லை. ஆரம்பத்தில் தயக்கம் இருக்கும். புத்தகங்களை வாங்கி வைத்துக் கொண்டு வேலையைத் தொடங்கினாள் மடமடவென்று ஞாபகத்துக்கு வந்துவிடும். ஒரேயொரு தேவை 'ஆத்மார்த்தமான ஆர்வம்' மட்டும்தான்.
இத்தகைய செயல்பாடுகளில் ஆர்வமுள்ளவர்கள் என்று வேறு யாரையாவது நீங்கள் கருதினால் அவர்களுக்கு இந்தச் செய்தி அடையும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.
இணைந்து செயல்படுவோம். சற்று சிரமமான காரியம்தான். இல்லையென்று மறுக்கவில்லை. ஆனால் சாத்தியமில்லாத காரியமில்லை. வெறுமனே பேசிக் கொண்டிருக்காமல் காலத்தில் இறங்கும் இது மிக முக்கியமான செயல்பாடு. ஆறு மாதங்களுக்கு முன்பாகவே பாடங்கள் கையில் கிடைக்குமானால் விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையே கூட கணிசமாக அதிகரிக்கும் என்று நம்பலாம். எப்படிப் பார்த்தாலும் உருப்படியான உதவியை கிராமப்புற, தமிழ் வழிக்கல்வி மாணவர்களுக்கு செய்யும் காரியம். ஊர் கூடி இழுக்க வேண்டும். அவ்வளவுதான்.
வருக.
4 எதிர் சப்தங்கள்:
அடியெடுத்து வைத்துவிட்டீர்கள். இனி முடிக்க வேண்டியதுதான், வாழ்த்துக்கள் மணி
தலைமைத்துவம் என்றால் இது தான்
தொடரட்டும்! வாழ்த்துக்கள்!!
Kalabharati academy has created more than 1000 videos to provide free coaching for NEET in Tamil. Please check out their YouTube channel.
https://m.youtube.com/channel/UCGbAN9gmfXb530Y1RA8njyw/about?disable_polymer=1
நீட்' தேர்வுக்கான மாதிரி வினாத்தாளை வீட்டுக்கே இலவசமாக அனுப்புகிறது ‘லிம்ரா’ ‘நீட்' நுழைவுத் தேர்வை எழுத காத்திருக்கும் மாணவர்களுக்கு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டுள்ள மாதிரி வினாத்தாளை வீட்டுக்கே அனுப்புகிறது லிம்ரா ஓவர்சீஸ் எஜுகேஷன் நிறுவனம். இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் பட்டப் படிப்பில் சேர, அகில இந்திய அளவில் 'நீட்' நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வை எதிர்கொள்ள காத்திருக்கும் மாணவர்களுக்கு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டுள்ள மாதிரி வினாத்தாளை, சென்னையில் வெளிநாட்டு மருத்துவக் கல்வி வாய்ப்புகளை பெற்றுத்தருவதில் முன்னணியில் உள்ள லிம்ரா ஓவர்சீஸ் எஜுகேஷன் நிறுவனம் கட்டணம் ஏதுமின்றி வீட்டுக்கே கூரியர் மூலம் அனுப்புகிறது. அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களால் உருவாக்கப்பட்ட இந்த வினாத்தாள் உயிரியல், இயற்பியல், வேதியியல் பாடங்களிலும், பொது அறிவு மற்றும் ஆளுமைத் திறன் ஆகிய பிரிவுகளிலும் 180 கேள்விகள் கொண்டதாக இருக்கும். இது நீட் தேர்வை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள உதவியாக இருக்கும். வினாத்தாளை பெற மாணவர்கள் தங்களின் பெயர் மற்றும் முகவரியை 9952922333 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்ப லாம். இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment