கர்நாடக தேர்தலுக்கான பரப்புரை இன்றுடன் நிறைவடைகிறது. இன்று மாலைக்கு மேல் பிரச்சார வாகனங்கள் இல்லாமல், ஒலி பெருக்கிகள் பயன்படுத்தாமல் வீடு வீடாகச் சென்று வாக்கு கேட்க எந்தத் தடையுமில்லையாம். அடித்து நொறுக்கிறார்கள். கடந்த சட்டமன்றத் தேர்தலின் போதும் இதே ஊரில்தான் இருந்தேன். அப்பொழுது பார்த்ததைவிடவும் பன்மடங்கு வேகத்தை பார்க்க முடிகிறது. வீட்டு வேலைக்கு வரும் பெண்மணிகள் பெரும்பாலானவர்கள் வேலைக்கு வருவதில்லை. அரசியல் கட்சிகள் கொடிபிடிக்க அழைத்துச் சென்றுவிடுகிறார்கள். தினசரி வருமானம். எந்தவொரு பெரிய கட்சியின் வேட்பாளரும் குறைந்தபட்சம் ஐநூறு பேரை அழைத்துக் கொண்டுதான் சுற்றுகிறார்கள்.
தானா சேர்ந்த கூட்டமெல்லாம் இல்லை. காசு கொடுத்து கூட்டும் கூட்டம்தான். கூட்டாமல் என்ன? 2654 வேட்பாளர்களில் 883 பேர்கள் கோடீஸ்வரர்கள். பாஜக சார்பில் 208 கோடீஸ்வரர்கள் நிற்கிறார்கள். காங்கிரஸ் மட்டும் சளைத்ததா? 207 பேர் க்ரோர்பதிகள். ஜனதா தளமும் 150 கோடீஸ்வரர்களை நிறுத்தியிருக்கிறது. இவர்களைத் தவிர ஏகப்பட்ட கோடீஸ்வர சுயேட்சைகள் நிற்கிறார்கள். பணம் ஓடாமல் இருக்குமா? பொங்கி வழிகிறது.
ஆன்லைன் ட்ரான்ஸ்பர் பட்டையைக் கிளப்புகிறது என்கிறார்கள். எங்கிருந்து வருகிறது என்றே தெரியாது. கணக்கில் பணம் வந்துவிடும். தேசியக் கட்சிகள் தங்களது நெட்வொர்க்கை அழகாக பயன்படுவதாகச் சொல்கிறார்கள். தெரிந்த பத்திரிக்கையாளர் நண்பர் ஒருவரிடம் இது பற்றிக் கேட்ட போது ஒரு காமெடி நடந்து கொண்டிருப்பதாகச் சொன்னார். எந்தக் கட்சிக்காரர்கள் பணம் போட்டிருக்கிறார்கள் என்பது வாக்காளர்களுக்கு தெரியாதல்லவா? வாக்கு கேட்கும் போது 'க்ரெடிட் ஆயித்தா' என்கிறார்களாம். 'ஆயித்து' என்று சொன்னால் 'நம்ம காசுதான் நமக்கு ஓட்டு போடுங்க' என்று சொல்லிவிட்டு வந்துவிடுகிறார்களாம். உண்மையாகவே பணம் போட்டவர்கள் பதறிப் போகிறார்கள் என்று சொல்லிச் சிரித்தார். எவன் எப்படி டெக்னாலஜி கண்டுபிடித்தாலும் அதில் வெடிகுண்டு வைக்கவும் ஆட்கள் இருக்கிறார்கள்.
பாஜகவினர் இரண்டு பேருந்துகளில் ஆட்களை ஏற்றிக் கொண்டு தர்மஸ்தலா கோவிலுக்குச் செல்லும் போது தகவல் கிடைத்து வாகனங்களை பறிமுதல் செய்து மக்களை மீட்டிருக்கிறார்கள்.மீட்கிற அளவுக்கு என்னய்யா செய்துவிடுவார்கள் என்று யோசிக்கத் தோன்றுகிறதல்லவா? ஒவ்வொரு வீட்டுக்கும் பணம் கொடுத்துவிட்டு வீட்டுக்கு ஒருவரை வண்டியில் ஏற்றிச் சென்று கோவிலில் சத்தியம் வாங்குவதுதான் திட்டம். தர்மஸ்தலா கோவில் மீது மக்களுக்கு வெகு பயமுண்டு. அங்கே சத்தியம் வாங்கினால் மீறுவார்களா? இப்படியொரு சம்பவம் நடக்கிறது என யாரோ துப்புக் கொடுக்க வண்டியை மடக்கியிருக்கிறார்கள். இன்னும் என்னவெல்லாம் கூத்து நடந்து கொண்டிருக்கிறதோ தெரியவில்லை.
ஒவ்வொரு கட்சியும் தில்லாங்கடிதான். ஒவ்வொரு அரசியல்வாதியும் கேடிப்பயல்தான்.
கர்நாடக அரசியலைப் பார்த்தால் ஒன்றை உறுதியாக நம்பலாம் போலிருக்கிறது. இனியெல்லாம் கோடீஸ்வரர்களைத் தவிர மற்றவர்கள் தேர்தலில் வெல்ல வாய்ப்பே இல்லை. பணம்தான் வெற்றியாளர்களை முடிவு செய்கிறது. அவர்களுத்தான் கட்சிகள் வாய்ப்பையும் அளிக்கின்றன. தமிழகத்திலும் இதுதானே நிலைமை? ஒரு தொகுதிக்கு ஐந்து கோடியாவது செலவு செய்கிற திறன் வேண்டும். அதுவும் பணமாக. ஜனநாயகம் அப்படியொரு மூத்திரச் சந்தில் சிக்கியிருக்கிறது. கும்மு கும்மென்று கும்மி மேலே சிறுநீர் கழித்துக் கொண்டிருக்கிறார்கள்.
தொடக்கத்தில் காங்கிரசின் கை ஓங்கியிருந்த மாதிரி தெரிந்தது. இப்பொழுது பாஜக படு வேகம் எடுத்துவிட்டது. எங்கு திரும்பினாலும் 'தாமரை மலர்ந்தே தீரும்' என்று தமிழிசை அக்கா சொல்வதையே கன்னடத்தில் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். பண்பலை வானொலி, செய்தித்தாள்கள் எதுவும் பாக்கியில்லை. யூடியூபில் தமிழ் படம் பார்த்தால் கூட மோடி இடையிடையே சிரிக்கிறார். இவையெல்லாம் என்ன தாக்கத்தை ஏற்படுத்திவிடக் கூடும் என்று யோசிக்கும் போதே மோடி, உத்தரபிரதேச சாமியார் யோகி, அமித்ஷா என்று ரவுண்டு கட்டி விளையாடுகிறார்கள். மக்கள் மூச்சுவிட வாய்ப்பில்லாமல் திணறடிக்கிறார்கள்.
காங்கிரசில் அந்தளவுக்கு பெரிய பட்டாளமில்லை. ராகுலும் சித்தராமையாவும்தான். கடந்த தேர்தலைப் போன்ற முரட்டுத்தனமான பிரச்சாரம் சித்தராமையாவிடம் தென்படவில்லை. சோனியா காந்தி ஒரு நாள் மட்டும் பிரச்சாரம் செய்தார். காங்கிரஸ் எங்கயோ வலுவிழப்பது போன்ற ஒரு பிம்பம் உருவாகிக் கொண்டிருக்கிறது. பாஜகவின் பிரச்சார யுக்தியும் அப்படியான பிம்பத்தை உருவாக்குவதில்தான் இருக்கிறது. இதை முறியடிக்கும் விதமாக காங்கிரஸ் பெருமுதலைகளை இறக்கியிருக்க வேண்டும். அதில்தான் கோட்டைவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். பெண்களின் ஆதரவு பாஜகவுக்கு காட்டிலும் காங்கிரசுக்கு அதிகம் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதை கவர் செய்யும் விதமாக காங்கிரசின் பிரச்சார செயல்பாடு எதுவும் பெரிய அளவில் தென்படவில்லை. சோனியாவோ, பிரியங்கவோ தம் கட்டியிருக்கலாம். 'காங்கிரஸ் வலுவிழந்துவிட்டது' என்ற பிம்பம் மதில் மேல் பூனையாக நிற்பவர்களை தாமரை மேல் குதிக்க வைக்க வாய்ப்பிருக்கிறது.
காங்கிரஸ்காரர்களிடம் 'என்னய்யா அசமஞ்சம் ஆகிட்டீங்களா?' என்று பேசினால் 'ஒவ்வொரு வேட்பாளரும் வலுவான ஆளுங்கதான் குரு..அவங்கவங்க தொகுதியில் அவங்கவங்க ஜெயிச்சு வருவாங்க பாருங்க...பிரச்சாரம் எல்லாம் சும்மா ஜிகினா வேலை' என்கிறார்கள். இந்த அரசியல்வாதிகள் இருக்கிறார்களே-நம்மையே குழப்பிவிடுவார்கள். இன்னும் ஆறு நாள்தான். பொறுத்திருந்து பார்க்கலாம்.
4 எதிர் சப்தங்கள்:
மூத்திரச் சந்து .....கும்மி கும்மி...இதெ ல்லாம் எங்கே பிடிக்கிறீங்களே ....
ellam sujatha koduthatu
This piece of writing is actually a fastidious one it helps new web visitors, who are
wishing in favor of blogging.
Respect to author, some excellent selective information.
Post a Comment