ஸ்டெர்லைட் ஆலையின் நிர்வாகமான வேதாந்தாவின் அலுவலகம் பெங்களூரு எம்.ஜி சாலையில் உள்ள ப்ரெஸிடீஜ் மெரிடியன் என்ற வணிக வளாகத்தில் செயல்படுகிறது. வேதாந்தாவுக்கு எதிராகவும், தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இன்று (மே 24 ) மதியம் மூன்று மணியளவில் போராட்டத்தை ஆரம்பித்தார்கள். சுமார் ஐம்பது முதல் நூறு பேர் வரைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். தமிழக அரசு, காவல்துறை, மத்திய அரசு, அரசியல் காட்சிகள் என சகலரையும் விளாசினார்கள்.
சம்பந்தமேயில்லாமல் இந்த கட்டிடத்தில் எதற்காக போராட்டம் நடத்துகிறார்கள் என்று முதலில் குழப்பமாக இருந்தது. வேதாந்தாவின் அலுவகம் இன்னமும் அங்கே இருப்பதாகத்தான் கூகிள் காட்டுகிறது. ஆனால் இரண்டரை மாதத்துக்கு முன்பாகவே காலி செய்துவிட்டுப் போய்விட்டதாக வணிக வளாக ஆட்கள் வந்து சொன்னார்கள். போராட்டக்காரர்கள் ஒரு அதட்டு அதட்டியதும் அவர்கள் ஓரமாக ஒதுங்கி கொண்டார்கள்.
போராட்டக்காரர் ஒருவர் கட்டிடத்தின் மேல் தளங்களில் நின்று வேடிக்கை பார்த்தவர்களிடம் ஆவேசமாக பேசினார்.
'நீங்கள் இங்கேதான் இருக்கிறீர்கள் என்று தெரியும்..நாங்கள் வன்முறையாளர்கள் இல்லை...உங்களிடம் ஒன்று சொல்வதற்காக வந்திருக்கிறோம்.உங்கள் பாதங்களுக்கு கீழாக அங்கே சுடப்பட்டவர்களின் இரத்தம் ஓடிக் கொண்டிருக்கிறது' என்று அவர் பேசிய போது கூட்டம் ஆர்ப்பரித்தது.
கூட்டத்தினரிடையே தமிழ், கன்னட, இந்தி, ஆங்கிலம் என வெவேறு மொழிகளில் பேசினார்கள். ஓபிஎஸ்ஸூம், ஈபிஎஸ்ஸும் கர்நாடகத்தில் இவ்வளவு எதிர்ப்பைச் சம்பாதிப்போம் என்று கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்கள். இந்தப் போராட்டம் முறையான அனுமதி பெறாத போராட்டம் என்பதால் போலீஸ் நிறைய வந்திருக்கிறார்கள்.
'கைது செய்வீர்களா' என்று கேட்டேன்.
'வாய்ப்பில்லை' என்றார்கள்.
கர்நாடக காவல்துறை ஒப்பீட்டளவில் மிகுந்த நாகரிகம் மிக்கவர்கள். போராட்டம் நடக்கும் போது எந்த எதிர்ப்பையும் காட்டாமல் அமைதியாக நின்று கொண்டிருக்கிறார்கள்.
இந்தியா டுடே, சன், தினத்தந்தி, ஒன் இந்தியா, தமிழ் இந்து உள்ளிட்ட பத்திரிக்கையாளர்கள் செய்தி சேகரித்துக் கொண்டிருந்தார்கள்.
தமிழர்களுக்கு ஒன்று என்றால் பிற மாநிலங்களில் கண்டுகொள்ளமாட்டார்கள் என்பதெல்லாம் நாமாக நினைத்துக் கொள்ள வேண்டியதுதான். தமிழகத்தின் பிற ஊர்களைவிடவும் கன்னடத்துக்காரர்கள் கூர்மையாக தமது எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறார்கள். அங்கேயிருந்த சிலரிடம் ' வாழ்த்துக்கள்' என்று கை குலுக்கினேன். சிரித்தார்கள்.
வளைத்து வளைத்து வீடியோ எடுத்து ஃபேஸ்புக்கில் 'லைவ்' செய்து கொண்டிருந்தேன். கூட்டத்தில் இருந்த ஒருவர் அருகில் வந்து 'நீங்க தமிழா?' என்றார்.
'ஆம்' என்றேன்.
'அங்க என்ன நடக்குது' என்றார்.
'உங்களுக்கு எவ்வளவு தெரியுமோ அவ்வளவுதான் சார் எனக்கும் தெரியும்' என்றேன்.
'என்ன நடந்திருந்தாலும் சரி...தூத்துக்குடி மக்களுடன் நாங்கள் இருக்கிறோம் என்று சொல்லுங்க' என்றார்.
நன்றி சொல்லிவிட்டு கிளம்பி வந்தேன். இந்தப் பதிவு வழியாக தூத்துக்குடிக்கு மட்டுமில்லை- தமிழர்கள் அனைவருக்கும் சொல்லிவிட்டேன். நன்றி பெங்களூரு!
5 எதிர் சப்தங்கள்:
//'என்ன நடந்திருந்தாலும் சரி...தூத்துக்குடி மக்களுடன் நாங்கள் இருக்கிறோம் என்று சொல்லுங்க' என்றார். //
அந்த தோழர்களுக்கு நன்றி
போகிற போக்கை பார்த்தால் ஆட்சி முடிவுக்கு அப்புறம் எங்கே சென்று வசிப்பது என்பது கூட இந்த பன்னீர் மற்றும் எடப்பாடிகளுக்கு பிரச்சனையாக இருக்கும் போல தோன்றுகிறதே... குஜ்ராத் மண்ணுலதான் அவங்க கடைசிகாலம் இருக்கும்
https://thewire.in/business/finance-bill-seeks-amend-fcra-condone-illegal-donations-bjp-congress-received-foreign-companies
"Corporate Lobby by Vedanta"
My humanity is bound upon yours, for we can only be human together.
- Desmond Tutu
நல்ல மனிதர்களுக்கு இரத்தத்தை பார்த்தால்
இரக்கமும் நெகிழ்வும் வரும் - மத, மொழி, இன, இட எல்லையைத்தாண்டி.
வெறியர்களுக்கு, இன்னும் கொடூரம் கேட்கமட்டுமே தோன்றும்.
இப்படிப்பட்ட நிகழ்வுகள் மனிதர்களின் உண்மை அடையாளத்தை வெளிக்கொண்டுவருகின்றன.
In iOS pictures are not properly placed,
Post a Comment