பனிரெண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் மாணவர்களைவிடவும் பெற்றோர்களை வெகுவாக பதறச் செய்திருக்கின்றன. யாரிடமும் நாமாக அழைத்து மதிப்பெண்களைக் கேட்டுவிடக் கூடாது. இப்பொழுதெல்லாம் மதிப்பெண்கள் கெளரவப் பிரச்சினை. அவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்கள் வரவில்லையென்றால் சொல்லவே தயங்குகிறார்கள். நல்ல மதிப்பெண்கள் என்று நினைத்தால் அவர்களாகவே நம்மிடம் சொல்லிவிடுவார்கள். அப்படியிருந்தும் சில மாணவர்களை அழைத்துப் பேசினேன். 800, 900 என்கிற அளவில்தான் நிறையப் பேர் இருக்கிறார்கள். ஒருவேளை இந்த வருடம் பரவலாகவே மதிப்பெண்கள் குறைவா என்று தெரியவில்லை.
எப்படி இருந்தாலும் சரி- ப்ளஸ் டூ மதிப்பெண்கள் மட்டுமே வாழ்க்கை இல்லை. இதுவொரு சலித்துப் போன வாக்கியம்தான். எத்தனையோ பேர் சொல்லிவிட்டார்கள். ஆனாலும் சொல்ல வேண்டியிருக்கிறது. பெற்றவர்கள் ஏன் இவ்வளவு பதற்றமடைகிறார்கள் என்று புரியவில்லை. 'படிப்புதான் எல்லாமும்' என மாணவர்களைவிடவும் பெற்றவர்கள் நம்புகிறார்கள். நம்மையுமறியாமல் நம் மீது அழுத்தத்தை உருவாக்கி வைத்திருக்கிறோம். அந்த அழுத்தம் இந்தச் சமூகம் நம் மீது உருவாக்கி வைத்திருக்கும் மாய நம்பிக்கை. அப்படியில்லை. படிப்பு மட்டும்தான் எல்லாமும் என்றில்லை.
'படிப்பை நம்பித்தான் இருக்கோம்' என்று குழந்தைகளை வைத்துக் கொண்டு பேசுவதை பெற்றோர் நிறுத்த வேண்டும். நல்ல மதிப்பெண்கள் பெற்று இருந்து நல்ல படிப்பில் சேர்ந்தால் நல்லதுதான். ஆனால் அது மட்டும்தான் வழி என்றில்லை. ஒரு நண்பரிடம் பேசிக் கொண்டிருந்த போது அவர் சொன்னார். 'நல்லா மார்க் வாங்கி இன்ஜினீயரிங் படிச்சு வேலைக்கு போன பின்னாடி வாழ்க்கைல ஒரு செளகரியம் வந்துடுச்சு. இந்த குண்டு சட்டியை நான் எந்தக் காலத்திலும் தாண்ட மாட்டேன்' என்றார். அவர் சொன்னது புரிகிறதுதானே? படிப்பு; வேலை; சம்பளம் என்று பெரும்பாலானவர்களுக்கு வாழ்க்கை மத்தியதரமாகவேதான் அமைகிறது. அதைத் தாண்டி நமக்கான உயரத்தை அடைய மனம் தயாராவதேயில்லை. பயம். 'எதுக்கு வம்பு..இப்படியே இருந்து கொள்ளலாம்' என்று படிப்பு ஒரு வகையில் நமக்கு பூட்டப்படும் விலங்குதான். நம்மால் அவ்வளவு சீக்கிரம் உடைக்க முடியாத விலங்கு அது.
படித்த தொண்ணூற்றைந்து சதவீதம் பேருக்கு அடுத்தவர்களிடம் சம்பளத்துக்குச் சேர்வதுதான் விதிக்கப்பட்டிருக்கிறது. அதை விலங்கு என்றுதானே எடுத்துக் கொள்ள வேண்டும்? ஆனால் படிக்காதவர்களுக்கு அப்படியில்லை. இதைச் செய்யலாமா, அதைச் செய்யலாமா என்று எதையாவது மனம் குதப்பிக் கொண்டிருக்கும். எல்லாவற்றையும் முயற்சித்துப் பார்க்க மனம் விரும்பும். ஒவ்வொரு வாய்ப்புகளையும் தட்டிப் பார்ப்பார்கள். அவர்களுக்கு கட்டுப்பாடுகள் இல்லை. 'சரி எதையாவது செய்து பிழைக்கட்டும்' என்று பெற்றோர்களும் விட்டுவிடுகிறார்கள். 'அவன் படிக்கவே மாட்டான்...ஆனா இன்னைக்கு பாரு' என்று நாம் கை நீட்டுகிற பெரும்பாலான வெற்றியாளர்களின் வெற்றிக்கான பின்னணி இதுதான். அவர்களுக்கான சுதந்திரத்தை அவர்கள் சரியாக பயன்படுத்தியிருப்பார்கள். அதுவே படித்தவர்கள் 'எதையாவது செய்கிறேன்' என்று சொன்னால் வீட்டில் இருப்பவர்களே விடமாட்டார்கள். 'வேலைக்கு போய் நாலு காசு சம்பாதிக்கப் பாரு' என்பார்கள்.
படித்தவனுக்கு ஒரு வழி. படிக்காதவனுக்கு ஆயிரம் வழி. கட்டுரைக்காக இதைச் சொல்லவில்லை. மனப்பூர்வமாக உணர்ந்துதான் சொல்கிறேன்.
பனிரெண்டாம் வகுப்பில் சிறப்பான மதிப்பெண்கள் இல்லையென்றால் தொலையட்டும். கவலைப் பட வேண்டியதில்லை. நிறைய படிப்புகள் இருக்கின்றன. பட்டப்படிப்புகள், பட்டயப்படிப்புகள் என்று ஏகப்பட்ட படிப்புகள். நாம் செய்ய வேண்டியதெல்லாம் 'படிச்சு முடிச்சு என்ன செய்யப் போற' என்று யோசிக்கச் சொல்வதுதான். உடனடியாக அவர்களால் எந்த முடிவுக்கும் வர முடியாது. ஆனால் அப்படியொரு தீக்குச்சியை உரசி அவர்களின் மனதுக்குள் வீசிவிட வேண்டும். அது புகைந்து கொண்டேயிருக்கும்படி பார்த்துக் கொண்டால் போதும். கோபத்தைக் காட்டாமல், வெறுப்பைக் காட்டாமல் 'வாழ்க்கையில் ஆயிரம் மைல்கற்கள் வரும். பனிரெண்டாம் வகுப்பு ஒரு மைல்கல்- அதில் ஏமாந்துவிட்டோம் ஆனால் அது நம்முடைய வாழ்க்கையை முடித்துவிடாது' என்ற உற்சாகத்தைத்தான் பிள்ளைகளுக்குத் தர வேண்டும்.
'நீ கொஞ்சம் ஏமாந்துட்ட' என்பதை அவர்கள் உணரும்படியும் அதே சமயம் இருக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி நீ தம் கட்ட வேண்டும் என்பதையும் அவர்களுக்குச் சொல்லிவிட்டு 'உன்னால முடியாததா' என்ற விதையையும் விதைத்துவிட வேண்டும். அது முளைத்து வருகிறதா இல்லையா என்று மட்டும் பாருங்கள். நம் பிள்ளைகள் மீது நாமே நம்பிக்கை வைக்கவில்லையென்றால் வேறு யார் நம்பிக்கை வைப்பார்கள்? 'நான் இருக்கேன் உனக்கு' என்ற ஆறுதலும் ஆதரவும் அவசியம்.
'எல்லாம் போச்சே' என இடிந்து கிடைப்பதால் ஒரு மண்ணும் நடக்காது. எதுவும் போகவில்லை. இமயம் சரியவில்லை. அதை மனதில் நிறுத்தினால் போதும். பாஸிட்டிவிட்டி மிக முக்கியம். எல்லாவற்றையும் சரி செய்துவிட முடியும் என்கிற நம்பிக்கை அவசியம். அப்படியான நம்பிக்கை கொண்ட பெற்றவர்கள்தான் குழந்தைகளுக்கான பெரு வரம். நாம் ஏற்றுகிற உற்சாகம்தான் குழந்தைகளுக்கான பெரு வெளிச்சம்.
அறுநூறு மதிப்பெண்கள் வாங்கியிருந்தாலும் சரி; தோல்வியே அடைந்திருந்தாலும் சரி;வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. தலையா போய்விடப் போகிறது? நம் முன்னால் இருக்கிற வாய்ப்புகள் குறித்து யோசிக்கலாம். அதன் கதவுகளை பிள்ளைகளுக்கு காட்டலாம். இந்தக் காலத்துப் பிள்ளைகள் அறிவாளிகள். கற்பூரங்கள். கொஞ்சம் அசால்ட்டாக இருப்பார்கள். ஆனால் பற்றிக் கொள்வார்கள்.
மனம் இறுகிக் கிடந்தால் எழுந்து முகத்தைக் கழுவி விட்டு வந்து வானத்தைப் பாருங்கள்- உலகம் மிகப் பெரியது. வாழ்த்துக்கள்.
11 எதிர் சப்தங்கள்:
அருமையான பதிவு
//நம் பிள்ளைகள் மீது நாமே நம்பிக்கை வைக்கவில்லையென்றால் வேறு யார் நம்பிக்கை வைப்பார்கள்? 'நான் இருக்கேன் உனக்கு' என்ற ஆறுதலும் ஆதரவும் அவசியம்.//
//படித்தவனுக்கு ஒரு வழி. படிக்காதவனுக்கு ஆயிரம் வழி. கட்டுரைக்காக இதைச் சொல்லவில்லை. மனப்பூர்வமாக உணர்ந்துதான் சொல்கிறேன்.//
Very true words
தங்கை 160 cut off வாங்கி இருக்கிறார். 964 மதிப்பெண்கள். பொறியியல் தவிர வேறு பாடம் எடுக்க விரும்புகிறார். இணையத்தில் மேய்ந்த வரை சில படிப்புகளை பற்றி தெரிந்துகொள்ள முடிந்தது. மருத்துவ, விவசாயம் என தாங்கள் அறிந்த அனைத்து துறைகளின் உட்பிரிவுகளையும் உள்ளடக்கி ஒரு பதிவிட முடியுமா? என்னை போன்ற பலருக்கு பலனுள்ளதாக இருக்கும்.
வேறு விதமாக சொன்னால் படித்தவன் வேலை பார்க்கிறான் படிக்காதவன் வேலை கொடுக்கிறான்
Dear Manikandan,
Nice Blogpost.
Now a days, i see a new trend about Vocational Education with many State Governments and Central Government emphasizing a lot. Esp. B.Voc courses seems to be good initiative (Pl. see about B.Voc courses in Coimbatore Colleges esp. Avinashilingham University).
Just search on Goodle with the keyworks Skills or Skill India.
Ref. URLs : http://www.skilldevelopment.gov.in
http://www.thehindu.com/news/cities/Coimbatore/vocational-courses-see-good-response-in-coimbatore/article6244622.ece
I request you to write some articles on your blog so that our tamil people will become more about these opportunities.
if you needs any reference material about B.Voc or Skill Development reference. Please let me know.
Thank You
With Regards
Santhanam
//தங்கை 160 cut off வாங்கி இருக்கிறார். 964 மதிப்பெண்கள். பொறியியல் தவிர வேறு பாடம் எடுக்க விரும்புகிறார்//
சரவண குமார் உங்கள் தங்கையை ஐஏஎஸ் பக்கம் திருப்பி விடலாமே.
Hi, yeah this piece of writing is really pleasant and
I have learned lot of things from it concerning blogging.
thanks.
I couldn?t refrain from commenting. Well written!
Its fantastic as your other posts :D, thanks for posting.
பத்திரிகை செய்தி - ஆயிரம் மதிப்பெண்ணுக்குக் கூடுதலாக மதிப்பெண் பெற்றவர்கள் 10 சதவிகிதம் மாணவர்கள் மட்டுமே. ஆனால், 800 மதிப்பெண்ணுக்குக் குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் 75 சதவிகிதம் பேர் உள்ளனர்.
Post a Comment