May 14, 2018

என்ன பேசினேன்?

தமிழுக்கு முதல் வணக்கம், அனைவருக்கும் தமிழ் வணக்கம். 

கடந்த வாரத்தில் தா.பாண்டியன் எழுதிய 'மதமா? அரசியலா?' என்ற புத்தகத்தை கொடுத்து வாசிக்கச் சொன்னார்கள். ஐம்பது பக்கம்தான். தாமதிக்காமல் வாசித்து முடித்துவிட்டேன். வெளியீட்டு விழாவில் பேச வேண்டும் என்று சொன்னார்கள். பிரச்சினை எதுவுமில்லை. நேரடியாகவே பேசலாம். அரசியலில் மதம் கலப்பது குறித்துத்தான் நூல் பேசுகிறது. இன்னமும் வெளிப்படையாகச் சொன்னால் பாஜக செய்கிற மதவாத அரசியல்தான் புத்தகத்தின் பிரதானமான பேசுபொருள். 

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக ஆட்சிக்கு வந்தால், மோடியின் தலைமை அமைந்தால் இந்த தேசம் செழுமையுறும் என்று நம்பிய பல பேர்களில் நானும் ஒருவன். இணையத்தில் இவர்களை ஆதரித்து தொடர்ச்சியாக கட்டுரைகளை எழுதினேன். நிறைய எதிர்ப்புகள் இருந்தன. ஆனால் நம்பினேன். அந்த நம்பிக்கை பொய்த்து போக மூன்றாண்டுகள் கூட தேவைப்படவில்லை. ஓர் அரசாங்கம்  பொருளாதார ரீதியில் தோல்வியுறுவது சகஜமான ஒன்று. வெளியுறவுக் கொள்கைகளில் தோற்பதும் கூட தவறில்லை. இராணுவக் கொள்கை வகுத்தலிலும் தோற்கலாம். மக்களுக்கான நலத் திட்டங்களை செயல்படுத்தவியலாமல் கூடத் தோற்றுப் போகலாம். எல்லாமே ஏற்றுக் கொள்ளக் கூடியவைதான். ஆனால் மக்களின் பண்பாட்டை நுண்ணரசியல் வழியாக அழிப்பதையும், அடையாளங்களை சிதைப்பதையும், எல்லோரும் ஒரே குடை -அது காவிக் குடையோ அல்லது பச்சை குடையோ- ஒற்றைக் குடைக்குள் தமது வலுவான கரங்கள் கொண்டு இழுத்து வருவதைத்தான் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை.  

மதம் என்று பேசும் போது வரலாற்றில் சில நூற்றாண்டுகளுக்கு முன்பாகச் செல்ல விரும்புகிறேன். தமிழகத்தில் குறிப்பாக கொங்குப் பகுதியில் சமணம் விரவியிருந்தது. விஜயமங்கலம், சீனாபுரம் - சமணர் புரம் என்பதுதான் மருவி சீனாபுரம் என்றானது, பரஞ்சேர்ப்பள்ளி, திங்களூர் என பல ஊர்களில் சமணர்களுக்கான அடையாளங்கள் இருக்கின்றன. ஊர்பெயர்களே சமணம் சார்ந்தவை என்பதைச் சொல்லிவிடும். இன்றைக்கு சமணத்தை தழுவியவர்கள் இந்தப் பகுதியில் யாருமில்லை. எங்கே போனார்கள்? ஏன் ஒரு மதம் அழிந்தது அல்லது அழிக்கப்பட்டது?

சமணம் மட்டுமில்லை- பல இனக்குழுக்கள், ஆதிவாசிகள், தொல்குடிகள் என அவரவர் அவரவருக்கான கடவுளர்கள், வழிபாட்டு முறைகளுடன் வாழ்ந்தார்கள்.  அவரவருக்கான சம்பிரதாய அடையாளங்கள் இருந்தன. 

ஏழு, எட்டாம் நூற்றாண்டுகளில் ஆதிசங்கரர் மாதிரியானவர்கள் வந்தார்கள். ஏற்கனவே இருந்த பிரிவுகளை ஒருவாறாக பகுத்தார்கள். வைதீகம், அவைதீகம் என்று இரு பெரும் பிரிவுகள் உண்டாக்கப்பட்டன. வைதீகம் என்பது வேதத்தை ஏற்றுக் கொள்கிற பிரிவுகள். அவைதீகம் என்பது வேதத்தை மறுக்கிறவர்கள். சமணம், பெளத்தம், சார்வாகம், ஆசீவகம் ஆகிய நான்கு பிரிவுகள் அவைதீகத்தில் அடக்கம். வைதீகத்தை ஆறு உட்பிரிவுகளாக ஆதிசங்கரர் பகுத்தார். சைவம், வைணவம், சாக்தம்(சக்தி வழிபாடு), கெளமாரம் (முருகன் வழிபாடு), கணபாத்யம்(விநாயகர் வழிபாடு), சூரிய வழிபாடு என்ற ஆறு பிரிவுகள் அவை. இப்படி ஆறு பிரிவுகளாக பிரித்ததால் ஆதி சங்கரருக்கு 'ஷண்மத ஸ்தாபகர்' என்ற பெயரும் உண்டு. (ஷண் என்றால் ஆறு). இப்படியான பகுப்புகள் நாட்டார் தெய்வங்கள், சிறு தெய்வங்களுக்கு மிகப்பெரிய தீமையை உருவாக்கின. 'நீ சுடுகாட்டு கருப்பராயனை வணங்கினால் அதுவும் சிவன் தான்' என்றார்கள். 'நீ வணங்கும் அம்மாளம்மனும் சக்திதான்' என்றார்கள். இப்படியாக சிறு தெய்வங்கள் அனைத்தும் பெருதெய்வங்களிடம் சரணடைய வைக்கப்பட்டன. 

'நீ வேதத்தை ஏற்றுக் கொள்கிற பிரிவு' என்று எனக்குச் சொல்லித் தந்திருக்கிறார்கள். ஆனால் வேதத்தில் என்ன இருக்கிறது என்பது எனக்கு எதுவும் தெரியாது. என்னைப் போலவேதான் நீங்களும். நமது முன்னோர்கள் நமக்குச் சொல்லித்தந்தபடி நாமெல்லாம் வேதத்தை ஏற்றுக் கொள்ளும் பிரிவினர். ஆனால் வேதம் என்றால் என்னவென்றே தெரியாதவர்கள். இப்படித்தான் போர்வை போர்த்தப்பட்டுவிடுகிறது. 

வைதீகம் x அவைதீகம் என்ற சண்டை வலுவடைந்து பக்தி இலக்கிய காலத்தில் பெளத்தம், சமணம் என்பதெல்லாம் கிட்டத்தட்ட முடித்துக் கட்டப்பட்டன.  அதன் காரணிகள் நிறைய உண்டு. அவற்றையெல்லாம் விரிவாக பேச முடியும். இதே தருணத்தில்தான் முருகனும், சிவனும், கணபதியும், சக்தியும் என பிற பிரிவுகளும் சைவத்தின் ஒரு பகுதிதான் என்று மாற்றப்பட்டன. ஆழ்வார்களும் நாயன்மார்களும் வலு சேர்த்தார்கள். நிறைய புனிதக் கதைகள் உலவவிடப்பட்டன. இப்படியாக சைவமும் வைணவமும் இந்த மண்ணின் இரு பெரும் சமயப்பிரிவுங்களாக வளர்ந்து நின்றன. 

வரலாற்றில் சரி தவறு என்றெல்லாம் எதுவுமில்லை. வல்லவர்கள் வரலாற்றை மாற்றியமைப்பார்கள். ஆனால் எதையும் நாம் பிம்பமாக்க வேண்டியதில்லை.  

சைவமும், வைணவமும் அசைக்க முடியாத இரு பிரிவுகளாக மாறிய பிறகு பெரும்பாலான கோவில்களில் ஆகமங்கள் நுழைந்தன. எங்கள் ஊர் மாரியம்மன் கோவிலில் காலங்காலமாக கிடாவெட்டும் பொங்கலும் உண்டு. கோவில் காட்டப்படும் போது விநாயகரையும் முருகனையும் கோவிலுக்குள் கொண்டு வந்து 'இனி கிடாவெட்டு கூடாது' என்றார்கள். ஓர் அடையாளம் அழிந்தது. முருகனே கூட சைவமாக மாற்றப்பட்ட கடவுள்தான். பால் காவடி, பன்னீர் காவடி மாதிரி மச்சக்காவடி என்ற காவடியும் உண்டு. மீன் காவடி. இப்பொழுது வழக்கொழிந்து போனது. முருகன் என்ற பெயர் சு- பிராமணியன் என்று மாற்றப்பட்டதையும், முருகன் சைவக் கடவுளாக மாற்றப்பட்டதையும் சேர்த்தே புரிந்து கொள்ளலாம்.

சைவம், வைணவம் என்பதையும் கூட கடந்த ஒன்றிரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பாக 'இந்து' என்று ஒரு கட்டத்துக்குள் கொண்டு வந்தார்கள். அதுவரைக்கும் இந்து என்றெல்லாம் எதுவுமில்லை. இப்படியாக நம்மில் பெரும்பாலானவர்கள் 'இந்து' என்றாகியிருக்கிறோம். 

நான் கடவுள் மறுப்பாளன் இல்லை. நாத்திகம் பேசுகிறவனுமில்லை. 'இந்து' என்றுதான் இன்றுவரையிலும் அறிவித்துக் கொள்கிறேன். ஆனால் எனது முன்னோரின் பாதையை புரிந்து கொள்ள விரும்புகிறேன். குலதெய்வமாக இருந்த காளியம்மனை ஏன் சக்தியின் வடிவம் என்று அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். அந்த புரிதல்தான் இன்றைய மதவாத அரசியல் எந்த அடையாள மாற்றங்களை உண்டாக்கும் என்று பேசுவதற்கு ஏதுவாக இருக்கும்.

மதவாத அரசியல் என்பது நேரடியாக மத மாற்றம் செய்வதில்லை. 'எல்லோருக்கும் ஒரே மொழி' 'எல்லோருக்கும் ஒரே வரி' 'எல்லோருக்கும் ஒரே பாடத்திட்டம்' என்று எல்லாரையும் வலுக்கட்டாயமாக பின்னிப் பிணைப்பதுதான் அபயாகரமான அரசியல். நூற்றியிருப்பத்தைந்து கோடி மக்கள் வாழும் ஒரு நாட்டில் எல்லோரையும் ஒற்றைக் கயிற்றினால் கட்டிப்போடுவது சாத்தியமில்லை. அதை ஏன் இந்த தலைவர்கள் புரிந்து கொள்ளவில்லை என்று தெரியவில்லை. ஒவ்வொருவருக்கும் ஓர் அடையாளமிருக்கிறது. அவரவரின் வாழ்க்கை முறை வேறானது. அவர்களுக்கான கனவுகள் வேறுபட்டவை. அவர்களை எப்படி நீங்கள் கட்டிப் போடவியலும்? 

'என் மக்கள், என் தேசம்' என்கிற குறைந்தபட்சமான பிணைப்பு வேறு; வெறியெடுத்தது போல கட்டிப் போடுவது வேறு. 'என் தேசம்' என்ற மக்களின் புரிதல் அவர்களின் மனதளவில் உணர்வுப்பூர்வமானதாக உருவாக்குவதாக இருக்க வேண்டும். இதில்தான் மத்திய அரசு தோற்றுக் கொண்டிருக்கிறது. எல்லோரையும் இரும்புக்கரம் கொண்டு கட்டிப் போட்டுவிட முடியும் என நம்புகிறது. 

இதை எதிர்த்துப் பேசினால் அல்லது விமர்சித்தால் 'நீ ஆண்டி நேஷனல்' என்று முத்திரை குத்துகிறார்கள். எங்களின் அடையாளத்தை அழிக்கிறீர்கள் என்று சொன்னால் 'நீ தேச விரோதி' என்கிறீர்கள். உண்மையில் யார் தேச விரோதி என்பதை புரிந்து கொள்ள வேண்டும். காலங்காலமாக இந்த தேசத்தைக் கட்டமைப்பதில் தமிழர்களின் பங்களிப்பை நீங்கள் குறைத்து மதிப்பிட்டுக் கொண்டிருக்கிறீர்கள். இந்த தேசத்தின் பொருளாதார ரீதியிலான கட்டமைப்பாக இருந்தாலும் சரி; இராணுவ ரீதியிலான கட்டமைப்பு என்றாலும் சரி அல்லது உணர்வு ரீதியிலான கட்டமைப்பு என்றாலும் சரி- அதை தமிழர்கள் செய்திருக்கிறார்கள். வரலாற்றில் இந்த மக்களின் பங்களிப்பை புரிந்து கொள்ளாமல் இந்துத்துவவாதிகள் தமிழர்களை தேசிய அரசியலுக்கு எதிரானவர்கள் என்பது போல சித்தரிக்கிறார்கள். ஏன் தமிழர்களை இப்படி ஓரங்கட்டுகிறார்கள் என்பதில்தான் அரசியல் இருக்கிறது.

ஆடிப் பெருக்கு என்பதைவிடவும் விநாயகர் சதுர்த்தி முக்கியத்துவம் பெறுகிறது. தைப்பூசத்தைக் காட்டிலும் தீபாவளிக்கு முக்கியத்துவமிருக்கிறது. இவையெல்லாம் அடையாள சிதைப்பு இல்லையா? நான் முழுமையான தேசியவாதி. ஆனால் எனது மக்களின் அடையாளம் எந்தச் சக்தியாலும் அழிக்கப்படக் கூடாது என விரும்புகிறேன். 

வேல்முருகனின் தமிழர் வாழ்வுரிமைக் கட்சியினர் சுங்கச் சாவடியை உடைத்த போது உள்ளூர மனம் விரும்பியது. 'வன்முறை இல்லையா?' என்று கேட்டால் அது வன்முறைதான். ஆனால் இன்றைக்கு மத்திய அரசு செய்து கொண்டிருக்கிற உளவியல் ரீதியிலான வன்முறையுடன் ஒப்பிடும் போது அதுவொன்றும் பெரிய வன்முறையில்லைஎனத் தோன்றியது. நான்காண்டுகளுக்கு முன்பாக உங்களை ஆதரித்துக் கொண்டிருந்த,  எந்தவொரு மனச்சாய்வுமில்லாத ஒருவனைக் கூட உங்களுக்கு எதிரான மனநிலையைக் காட்ட வேண்டும் என்பதற்காக இத்தகைய செயலை ஆதரிக்கும் மனநிலைக்கு தள்ளியதுதான் நீங்கள் செய்த சாதனை. 'யாராவது குரல் எழுப்பமாட்டார்களா?' என்று எதிர்பார்க்க வைத்திருக்கிறீர்கள். 

மத்திய அரசு விளையாடுவதை தமிழக அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டு தமிழக அரசு இருக்கிறது. 'நீங்க என்ன வேணும்ன்னாலும் செஞ்சுக்குங்க..எங்க ஆட்சியை எதுவும் செஞ்சுடாதீங்க' என்று அவர்கள் பயந்து நடுங்குகிறார்கள். பணி நியமனத்துக்கு ஒரு தொகை, பணி மாறுதலுக்கு ஒரு தொகை, சாலை அமைக்க ஒரு கமிஷன், கால்வாய் வெட்ட ஒரு கமிஷன் என்று ஓர் அரசாங்கம். 'எல்லோரையும் ஒரு கூட்டமா மாத்துங்க..எதிர்த்து நிக்கிறவனையெல்லாம் இன்னொரு கூட்டமா காட்டுங்க' என்று மறறொரு அரசாங்கம். தமிழகத்தின் வரலாற்றில் இவ்வளவு மோசமான மத்திய-மாநில அரசு கூட்டணி எந்தக் காலத்திலும் அமைந்திருக்க வாய்ப்பில்லை. இப்பொழுது அமைந்திருக்கிறது. என்னைப் போன்றவர்கள் இதற்கு என்ன செய்ய முடியும் என்று தெரியவில்லை. ஆனால் கட்சியின் தலைவர்கள் நினைத்தால் இந்த கூட்டணி மீண்டும் தமிழகத்தை ஆக்கிரமிக்காமல் தடுக்க முடியும். எதிர்காலத் தமிழகத்துக்கு நீங்கள் செய்யக் கூடிய நல்ல காரியம் என்றால் எந்த சமரசமுமில்லாமல் ஆட்சி மாற்றத்தை உண்டாக்குவதுதான். அதற்கான முன்னெடுப்புகளை நீங்கள் எடுங்கள். இந்த மண்ணிலிருந்து என்னால் செய்ய இயலும் எல்லா உதவியையும் எம்மைப் போன்றவர்கள் செய்கிறோம்.

நன்றி.


(கோபிச்செட்டிபாளையத்தில் சனிக்கிழமை (மே 12, 2018 ) நடைபெற்ற தா.பாண்டியன் அவர்களின் புத்தக வெளியீட்டு நிகழ்வில் பேசியதன் சுருக்கப்பட்ட வடிவம்) 

14 எதிர் சப்தங்கள்:

Bakkyaraj said...

தமிழன் அரசியல் விழிப்புணர்வு பெற வேண்டிய தருணமிது. உங்கள் எழுத்து அதற்கான தொடக்கப்புள்ளியாக அமையட்டும்.
அன்புடன்
பாக்கியராஜ்
பெருந்துறை

பேராசிரியர். கோபாலகிருஷ்ணன் said...

சரியான கருத்துப் பதிவு.Unity in diversity என்கிற நமது பலமே ஆட்டம் கண்டு கொண்டு உள்ளதோ என்ற பயம் தோன்றுகிறது. வாழ்க வளமுடன்

Anonymous said...

'என் மக்கள், என் தேசம்' என்கிற குறைந்தபட்சமான பிணைப்பு வேறு; வெறியெடுத்தது போல கட்டிப் போடுவது வேறு. 'என் தேசம்' என்ற மக்களின் புரிதல் அவர்களின் மனதளவில் உணர்வுப்பூர்வமானதாக உருவாக்குவதாக இருக்க வேண்டும். இதில்தான் மத்திய அரசு தோற்றுக் கொண்டிருக்கிறது. எல்லோரையும் இரும்புக்கரம் கொண்டு கட்டிப் போட்டுவிட முடியும் என நம்புகிறது.
// TRUE

Anonymous said...

https://ta.m.wiktionary.org/wiki/மச்சம்

மச்சம் என்றால் இறைச்சி (மீன் மட்டுமல்ல) என்றும் பொருள்.

Anonymous said...

It is also a one side opinion.Yours s not a new one.But this is achieved by inimum violence.Not like China,USA, Australia.But their follower's has the right to teach non violence.Supremecourt also stated that Hindu is not a religion.

Selvaraj said...

இரண்டாவது பாராவை படித்து முடித்ததும் சற்று நிறுத்தி இரண்டு நிமிடம் அமைதியாக இருந்துகொண்டு மறுமுறையும் வாசித்தேன்... அடித்து நொறுக்கிவிட்டீர்கள்.
வைதீகம் x அவைதீகம் சமணம், பெளத்தம் சைவம் வைணவம் பற்றி அடிப்படையான சிறு புரிதல் கிடைத்தது.
பின்குறிப்பிட்டுள்ள அபாயகரமான அரசியலை பற்றிய புரிதல் நம்மில் பெரும்பாலான மக்களுக்கு இல்லை அல்லது எளிதாக கடந்துசெல்ல முனைகிறோம்.‘மதவாத அரசியல் என்பது நேரடியாக மத மாற்றம் செய்வதில்லை. 'எல்லோருக்கும் ஒரே மொழி' 'எல்லோருக்கும் ஒரே வரி' 'எல்லோருக்கும் ஒரே பாடத்திட்டம்' என்று எல்லாரையும் வலுக்கட்டாயமாக பின்னிப் பிணைப்பதுதான் அபயாகரமான அரசியல்’

பின்வரும் இந்த வரியை படிக்கும்போது திரு.எடப்பாடி பழனிச்சாமி மீதும் திரு.பன்னீர்செல்வம் மீதும் ஏனோ கோபம் பொத்துக்கொண்டு வருகிறது… 'நீங்க என்ன வேணும்ன்னாலும் செஞ்சுக்குங்க..எங்க ஆட்சியை எதுவும் செஞ்சுடாதீங்க'
இவ்வளவு நேரடியாக மத்திய மாநில அரசுகளின் கூட்டு களவாணித்தனத்தை நெஞ்சுறுதியுடன் பேசுவீர்கள் என்று எதிர்பாக்கவில்லை. மிகமுக்கியமான மிகச்சிறப்பான ஒரு பேச்சு. வாழ்த்துக்கள் (காணொளிக்கிடைத்ததும் நிசப்தத்தில் பகிருங்கள்)

Anonymous said...

உங்கள் கேள்விக்கு பதில் கிடைக்க நீங்கள் இடது வலது சாரிகளிடமிருந்து தொலைவில் சென்று நடுநிலையாக யோசிக்க வேண்டியிருக்கும். பெரும்பாலான எழுத்தாளர்களின் எண்ணங்களை சுயமாக கட்டிப்போடும் இந்த சிந்தனா ஆகிறமிப்பாளர்களை உணர உண்மையான சரித்திரங்களை தோண்டிப்பார்க்க வேண்டும்.

Anonymous said...


The diversity is not only waning in this arena. it is also waning across the states, in eating habits, types of food & dresses,Living habits, celebration styles etc due to Corporate companies,the media and the hyped consumerism.

செ. அன்புச்செல்வன் said...

//மச்சம் என்றால் இறைச்சி (மீன் மட்டுமல்ல) என்றும் பொருள்//

ஆம்...பழனிக்கு கேரளநாட்டிலிருந்து மக்கள் மீன்குழம்பு மட்டுமல்ல, கறிக்குழம்பும் குறிப்பாக சேவல்கறிக்குழம்பு செய்து மண் கலயங்களில் நிரப்பி காவடிகளில் கட்டி எடுத்துவந்து முருகனுக்குச் செலுத்தும் வழக்கமிருந்திருக்கிறது. இது கொங்குநாட்டுத் தாலாட்டுப்பாடலொன்றில் இருந்ததைக் கேட்டிருக்கிறேன். பின்னாளில் சேவற்கறிக்குழம்பு செலுத்துவது நிறுத்தப்பட்டு (பழனியில் வைதீக வழிபாடுகள் தொடங்கியபிறகாக இருக்கலாம்) இன்றுவரைக்கும் சேவலை நேர்ந்துவிட்டு உயிருடன் கொணர்ந்து மலைக்கோவில் வாசலில் விட்டுவிட்டுச் செல்வது வழக்கமாகியிருக்கிறது. சில ஆண்டுகள் முன்புவரை கோவில்வாசலில் சேவல்கள் திரிவதைப் பார்த்திருக்கிறேன். என் சிறுவத்தில் எங்கள் வீட்டிலும் பழனிமுருகனுக்கு சேவல் நேர்ந்துவிட்டுக் கொண்டு சேர்த்திருக்கிறார்கள். நம் கண் முன்னமே சிறிதுசிறிதாக பண்பாட்டு வழக்கங்கள் அழிந்தொழிவதைப் பார்க்கிறோம். முன்னாளில் எப்படி நடந்திருக்கும் என்பதைச் சொல்லவா வேண்டும்? நன்னூல் இலக்கணம் எழுதியவர் கொங்குநாட்டைச் பவணந்தி முனிவர் சமணர். அதெல்லாம் சமயச் சச்சரவுகளிலும், வைதீக மரபுகளாலும் கண்டுகொள்ளப்படவே இல்லை.

Unknown said...

ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனி அடையாளம் உண்டு. தமிழனுக்கு என்று தனி அடையாளம் உண்டு. அது கடவுளாக இருந்தாலும். தமிழ் கடவுள் முருகன். பல ஊர்களில் கிருத்திகை(கார்த்திகை), தைப்பூசம் உற்சாகமாக கொண்டாடப்படும். இன்றும் கொண்டாடப்படுகிறது. ஆனால் மற்ற இந்து திருவிழாவை விட இது வெளியில் தெரியாத அளவு சமஸ்கிருத சடங்குகளில் இந்து மதம் ஊறி போய்விட்டது. தேவாரம், திருவாசகம் என தமிழ் மறைகள் மறைந்தே வருகின்றன. தமிழ் கலாச்சாரம் கோயிலில்களில் சமஸ்கிருத கலாச்சாரமாக மாறி வருகிறது. பாஜகவை எதிர்க்கிறேன் என தமிழகத்திலும் இந்து கடவுள் மறுப்பு மட்டுமே பிரதான படுத்தப்படுகிறது. தமிழனின் அடையாளம் மொழி மட்டும் இ்ல்லை. பழக்க வழக்கங்களும், அதை சார்ந்த திருவிழாக்களும் முக்கியம்.
பே.ஆவுடையப்பன்

Anonymous said...

Neengal Kurippidathupol ella kaalathilum Madhamanalum Arasiyalanalum avargaludaiya adhigaram mattume sellupadiyagiradhu ena ennudaiya ennam.

Pankajaputhran said...

arumayana padivu sir

Anonymous said...

I couldn't resist commenting. Perfectly written!

சோம. சிவ சங்கரன் said...

//சமண மதம் அழிந்தது அல்லது அழிக்கப்பட்டது. //
//சிறு தெய்வங்கள் அனைத்தும் பெருதெய்வங்களிடம் சரணடைய வைக்கப்பட்டன. //
//'இனி கிடாவெட்டு கூடாது' என்றார்கள். ஓர் அடையாளம் அழிந்தது. //

பண்பாடுகள் வரலாறு நெடுகிலும் உலகெங்கிலும் தரபடுத்தப் பட்டிருக்கின்றன. அன்று அதற்கான தேவை என்ன ?

மொத்த உலகமும் அதன் பல்வேறு தனிதன்மைகளை இழந்து மொன்னையாகிக் கொண்டிருக்கும் இந்த நூற்றாண்டில் பண்பாடுகளை பாதுகாத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும் ?

இக்கேள்விகளுக்கு தீரா தேடல் கொண்டவர்கள்

//எனது முன்னோரின் பாதையை புரிந்து கொள்ள விரும்புகிறேன். //
இத்தகைய விருப்பம் உள்ளவர்கள், வரலாறு anthropology போன்ற சமூகவியல் அறிவுத்துறைகளை நோக்கி செல்ல வேண்டும்.

ஆனால் இந்த கேள்விகள் உங்களை சூழ்ந்திருப்பவரின் அல்லது உங்கள் நண்பர்களின் மனம் குளிர்வதற்கான அர்ச்சனைகள் போல தெரிகிறது . மன்னிக்கவும் . கடந்த பாராளுமன்ற தேர்தலில் மோடியை ஆதரித்ததால் பிராயச்சித்தம் தேடிக்கொள்கிறீர்களா ?

தொல்குடிகளின் வழிபாடுகள் -> சிறு தெய்வ வழிபாடுகள் -> சைவ வைணவ சமயங்கள் -> இந்து மதம் என்ற தரப்படுத்தலுக்கும் இந்துத்துவாவின் பண்பாட்டு அரசியலுக்கும் தொடர்பு உள்ளது. இரண்டும் ஓப்பிடக்கூடியது, பல தளங்கள் பொதுவானது.

இரண்டும் ஒன்றாகவே இருந்தாலும் சென்ற காலங்களில் அதற்கு சமூகத் தேவை இருந்திருக்கலாம். இன்று இந்துத்துவா செயல்களை எதிர்ப்பதற்கு சென்ற கால தரப்படுத்தலை எதிர்மறையாக எடுத்துக்கொள்ள வேண்டியது இல்லை.