May 31, 2018

ஹன்ஷிகா மோத்வானி மாதிரி..

திரைப்படங்களில் பணியாற்றுவது ஒரு வித்தியாசமான அனுபவம்தான். நமக்கும் இயக்குனருக்கும் அலைவரிசை ஒத்துப் போக வேண்டும். சதுரங்க வேட்டையின் இரண்டாம் பாகம் படத்துக்கான கதை, திரைக்கதை, வசனத்தை முதல் பாகத்தின் இயக்குனர் வினோத்திடமிருந்து தயாரிப்பாளர் வாங்கி வைத்திருந்தார். மனோபாலாதான் தயாரிப்பாளர். சலீம் படத்தின் இயக்குனர் நிர்மல்குமாரிடம் இயக்கும் பொறுப்பைக் கொடுத்திருந்தார்கள். நிர்மல்குமாரிடம் சில வருடங்களாகத் தொடர்பு உண்டு. அவரது சில ஸ்க்ரிப்ட்களில் வேலை செய்திருக்கிறேன். திரைக்கதையின் வடிவம் குறித்தான அனுபவம் அவர் வழியாகத்தான் கிடைத்தது. 

சதுரங்க வேட்டை-2  'வசனத்தில் வேலை செய்ய முடியுமா?' என்று கேட்டார். ஏன் வேண்டாம் என்று சொல்லப் போகிறேன்? கற்றுக் கொள்ள வேண்டியதுதானே. இயக்குனரும் நானுமாக நிறைய மாறுதல்களைச் செய்தோம் . படத்தின் வேலைகள் முடிந்துவிட்டன. எப்பொழுது வெளியிடுகிறார்கள் என்று தயாரிப்பாளருக்குத்தான் தெரியும். நிர்மல் அடுத்தடுத்த படங்களின் வேலைகளைத் தொடங்கிவிட்டார். 

இயக்குனர் சசியுடன் அவரது அடுத்த படத்துக்கான கதை விவாதங்களில் கலந்து கொண்டேன். பிச்சைக்காரனுக்கு பிறகு அவர் இயக்கும் அடுத்த படம். அதில் எழுதுகிற வேலை இல்லை. விவாதங்கள் மட்டும்தான். சில மாதங்களுக்கு முன்பாக டிஸ்கவரி புக் பேலஸில் அமர்ந்து ஒற்றை வரியை மட்டும் சொன்னார். 'இதை எப்படி டெவலப் செய்யலாம்ன்னு யோசிங்க' என்றார். அந்த ஒற்றை வரி முழுநீள திரைக்கதையாக மாறுவதை பார்ப்பது இன்னோர் அனுபவம். ஜூலையில் படப்பிடிப்பை தொடங்குகிறார்கள். 

இப்படி கதை சார்ந்து, எழுத்து சார்ந்து சினிமாவில் பணியாற்றுவது சந்தோஷமாகத்தான் இருக்கிறது. வருமானம் பார்க்க வேண்டும் என்றெல்லாம் நினைப்பதில்லை. பெயர் வாங்க வேண்டும் என்று எதிர்பார்ப்பில்லை. சினிமாவில் வேலை செய்கிறேன் என்று சொன்னால்தான் வாயைத் திறக்கிறார்கள்.

மனத்துக்கு நெருக்கமான வேலையாக இருந்தால் சரி.  சில உதவி இயக்குனர்கள் பேசியிருக்கிறார்கள். கதையே கையில் இருக்காது. கிறுக்கி வைத்திருப்பார்கள். 'இதை எழுதுங்க' என்று சொன்னால் 'எப்படிடா தப்பிக்கிறது' என்று ஆகிவிடும். அப்படியான ஆட்களுடன் வேலை செய்வது கடுமையான அழுத்தத்தை உருவாக்கிவிடும். டெட் லைன் வைத்துக் கொண்டு கேட்பார்கள். அலுவலகத்தில்தான் அப்படி கொள்கிறார்கள் என்றால் நீங்களுமா என்று நினைத்துக் கொண்டு தப்பித்துவிடுவேன். அப்படித் தப்பியிருக்கிறேன்.

கதை சொல்வதற்காக இந்தப் பதிவை ஆரம்பிக்கவில்லை. 

இப்பொழுது அடுத்த படத்துக்கான வேலைகளைத் தொடங்கியிருக்கிறேன். இதில் வசனம் எழுதுகிற வேலை. இயக்குநரைச் சந்தித்து பேசிவிட்டு பிற விவரங்களை எழுதுகிறேன். கடந்த வாரம் தயாரிப்பாளருடன் ஒப்பந்தம் கையெழுத்தானவுடன் அழைத்துச் சொன்னார். அவருடைய உதவி இயக்குனர் எனக்கு நல்ல நண்பர். நமக்கு முக்கியமான கேள்வி ஒன்று இருக்கிறது.  

'ஹீரோயின் யாருங்க?' என்றேன்.

'தேடிட்டு இருக்கோம்..உங்களுக்கு தெரிஞ்சவங்க யாராவது இருந்தா சொல்லுங்க' என்றார். என்னைக் கையிலேயே பிடிக்க முடியவில்லை. கடலை போட ஆள் தேடுகிறான் என்று தப்புக் கணக்கு போடுவீர்கள் என்று தெரியும். அப்படியில்லை. நாம் உதவி செய்து ஒரு பெண் ஹீரோயின் ஆகி அவள் எதிர்காலத்தில் நயன்தாரா மாதிரி ஆகிவிட்டால் 'அவளுக்கே நான் தான் சான்ஸ் வாங்கி கொடுத்தேன் தெரியுமா?' என்று பந்தாவாக நிசப்தத்தில் ஒரு கட்டுரை எழுதலாம் அல்லவா? அப்பொழுதும் கட்டுரைதான் எழுதுவியா என்றெல்லாம் கேட்கக் கூடாது. அதுதான் நமக்கு மதி. 

தெரிந்த சில பெண்களை அழைத்து 'இந்த மாதிரி ஒரு ஹீரோயின் தேடுறாங்க..யாராச்சும் இருக்காங்களா?' என்று கேட்டால் 'ஏன் நாங்க நடிக்க மாட்டோமா?' என்று மனசாட்சியே இல்லாமல் கேட்கிறார்கள். அதே பெண்களிடம்  நான்தான் ஹீரோவாக நடிக்கிறேன் என்று சொன்னால் எப்படி இருக்கும்? ஆண்கள் மட்டும் இனாவானாக்களா? நீங்கள் என்ன சொன்னாலும் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும். இவர்களை எல்லாம் கேட்பது வேலை கெட்ட வேலை. சுய முயற்சிதான் வெற்றியைக் கொடுக்கும். 

எப்படியோ கடைசியில் ஒரு பெண்ணைப் பிடித்துவிட்டேன். மாடலிங் செய்து கொண்டிருக்கிறாள். இதெல்லாம் வேணிக்குத் தெரிந்தால் 'உங்களுக்கு எதுக்கு இந்த வேலை' என்று கடிக்கக் கூடும். அழகான ஆண்களை கணவனாகக் கொண்ட பெண்களுக்கு இருக்கும் இயல்பான பயம்தான். அந்த மாடலிங் பெண்ணிடம் நிழற்படங்களை- நல்ல மாதிரியான படங்கள்தான்- வாங்கி அதை உதவி இயக்குனருக்கு அனுப்பி வைத்தேன்.

உள்ளுக்குள் ஒரே குறுகுறுப்பு. 'பொண்ணு நல்லா இருக்காளா' என்றேன். 

'ஹன்சிகா மோத்வானி மாதிரி தேடிட்டு இருக்கோம்' என்றார். 

'என்னது ஹன்சிகாவா? அதுக்கு நான் எங்கே போவது?'

சில நண்பர்களிடம் சொன்னேன். 'பெங்களூரில் இல்லாத பெண்களா? தேடிப்பாருங்கள்' என்று சொன்னார்கள்.

'பொண்ணுங்க இருப்பாங்க...ஆனா எப்படி கேட்பது' என்றேன். 

'நடிக்க இண்டெரெஸ்ட் இருக்கா..யோசிச்சுட்டு எனக்கு மெயில் அனுப்புங்கன்னு சொல்லி ஈமெயில் ஐடியை கொடுத்துடு' என்று ஐடியாவும் கொடுத்தார்கள்.

'ஏம்ப்பா இதெல்லாம் பெரிய மனுஷன் செய்யுற வேலையா' என்றேன்.

'நீயா உன்னை பெரிய மனுஷன்னு நினைச்சுக்குவியா' என்று கவுண்ட்டர் கொடுத்தார்கள். அதுவும் சரிதான். 

ஹன்ஷிகாவை மனதில் வைத்துக் கொண்டு தேடினால் பெங்களூர் மொக்கையாகத் தெரிகிறது. 'பெண்களூர்' என்று இதற்கு இன்னொரு பெயரும் உண்டாம்.பெருமையாகச் சொல்லிக் கொண்டால் மட்டும் போதுமா? பேரு பெத்த பேரு தாக நீலு லேது. 

சில மாதங்களுக்கு முன்பாக திருமணம் ஆகாத ஒரு பையன் 'இந்த ஊர்ல எல்லா பொண்ணுங்களும் அழகாக இருக்கங்கண்ணா' என்றான். 

'சீக்கிரம் கல்யாண செஞ்சுக்க தம்பி..' என்றேன். 

'அப்புறம் அசிங்கமா தெரிவாங்களா?' - இதற்கு என்ன பதிலைச் சொன்னாலும் வம்பாகிவிடும் என்பதால் பொதுவில் எழுத முடியாது.

சாலையில் அழகாகத் தெரிந்த ஒன்றிரண்டு பேரிடமும் பேசுகிற தைரியமில்லை. வார்த்தைகள் வாய் வரைக்கும் வந்துவிடும். எசகுபிசகாகிப் போனால் கன்னட காரர்களிடம் குத்து வாங்க முடியாது என்று அடங்கிக் கொள்கிறேன். ஆனால் ஒன்று - முன்னெல்லாம் பெண்களை பார்த்தால் 'அழகா இருக்கா' என்று மட்டும்தான் தோன்றும். இப்பொழுது 'ஹீரோயின் ஆக தகுதி இருக்கா' என்று மனம் யோசிக்கிறது. எவ்வளவு பெரிய முன்னேற்றம்?. 

இப்படி கண்டதையும் செய்து கொண்டிருந்தால்தான் வாழ்க்கை சுவாரசியமாக ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனால் எங்கே விடுகிறார்கள்? இதை எழுதினால் பாருங்கள்.  'உங்க கிட்ட இப்படி எதிர்பார்க்கலை...' 'நீங்களா இப்படி' என்று தட்டி தட்டியே சந்நியாசி ஆக்கி விடுவார்கள் போலிருக்கிறது. சைட் அடிப்பதை பற்றி பேசினாலும் கூட பாய்கிறார்கள். சுற்றிலும் இவர்களை வைத்துக் கொண்டு என்ன செய்வது? நாம்தான் தம் கட்டி நம்மை காத்துக் கொள்ள வேண்டும் என்று பகீரத பிரயத்தனம் செய்து கொண்டிருக்கிறேன்.   

நேற்றிரவு உதவி இயக்குனர் அழைத்தார். 'எழுதி அனுப்பிடீங்களா?' என்றார். 

'ஹீரோயின் தேடிட்டு இருக்கேன்' என்றேன். 

'சொன்ன வேலையை மட்டும் பாருங்க சார்...' என்றார். ஒருவன் சந்தோஷமாக இருந்தால் இந்த உலகத்துக்கு பிடிக்காதல்லவா? அதுதான்.

May 30, 2018

ரஜினிகாந்த்

'எம்.ஜி.ஆருக்கு ஏன் அருந்ததியர் மக்களிடம் இவ்வளவு ஆதரவு?' என்று பழைய ஆட்களிடம் கேட்டால் 'மதுரை வீரன் படம்தான் அவரை கடவுளாக மாற்றியது' என்பார்கள். அது மிகைப்படுத்தப்பட்டதில்லை. அந்தப் படம் எம்.ஜி.ஆருக்கு அரசியல் ரீதியில் மிகப்பெரிய பலம். இன்றைக்கு வரைக்கும் காலணிகளுக்குள் பிற கட்சிகள் பெரிய அளவிலான செல்வாக்கை பெற முடியவில்லை. அதே யுக்தியைத்தான் ரஜினி தனது சினிமாவின் அந்திம காலத்தில் பயன்படுத்துகிறார் என்று தோன்றுகிறது. கபாலியும் காலாவும் அப்படியான களம் அவருக்கு. 

ரஜினியை பெரும்பாலானவர்கள் கோமாளி என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவரது காய் நகர்த்தல்கள் மிகச் சரியாக இருக்கின்றன. ஜெயலலிதாவும் கருணாநிதியும் ஓயும் வரைக்கும் காத்திருந்து பிறகு துள்ளுவதில் ஆரம்பித்து, திமுகவுக்கும் நோகாமல், அதிமுகவுக்கும் நோகாமல், பாஜகவின் கொள்கைகளை தமிழ் முலாம் பூசி மக்களிடையே பேசுகிற ஆளாக தன்னை வெளிப்படுத்திக் கொள்ளத் தொடங்கியிருக்கிறார். 'குடும்பத்தை கவனிங்க' என்று இளைஞர் நலன் பற்றிக் கவலைப்படுகிறவராக தன்னை காட்டிக் கொள்கிறார். இவ்வளவு பேசுகிற நீங்கள் இதுவரைக்கும் இளைஞர் நலனுக்காக என்ன செய்திருக்கிறீர்கள் சார்?

சினிமாவில் ரஜினியின் தீவிர ரசிகன் நான். ஆனால் அரசியல் ரீதியில் பார்த்தல் அவர் கடுமையான விஷச் செடி. எந்தவிதத்திலும் அவர் அரசியல் களத்தில் செல்வாக்கு பெற்றுவிடக் கூடாது என்று விரும்புவதில்லை தவறு எதுவுமில்லை. அவரது அரைவேக்காட்டுத்தனமான கொள்கைகள், அரசியல் நிலைப்பாடுகள், தமிழர் நலன் என்று பேசுகிற போலித்தனம் என்பதெல்லாம் மிகுந்த தீமை விளைவிக்கக் கூடியவை. ஆனால் ஆக்டொபஸ் போல மெல்ல தனது ஆக்கிரமிப்பைத் தொடங்கியிருக்கிறார். 

கமல் கட்சி ஆரம்பித்து ஊர் ஊராகச் சென்று கூட்டம் சேர்த்து- மக்களிடையே அப்படியொன்றும் பெரிய வரவேற்பில்லாத அரசியல்வாதி என்று தன்னை வெளிப்படுத்திவிட்டார். ஆனால் ரஜினி அப்படியில்லை. 'இந்த ஆளுக்கு செல்வாக்கு இருக்கா? இல்லையா?' என்று மக்கள் கணிப்பதற்கே அவகாசம் கொடுக்காமல் தேர்தல் சமயத்தில் உள்ளே இறங்கி ஒரு அலசு அலசுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகத் தெரிகின்றன. 

ரஜினியின் இன்றைய தூத்துக்குடி பயணம் பக்காவான அரசியல் திட்டம்.  தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு நடந்த போதெல்லாம் வாய் பொத்திக் கிடந்த ஊடகங்கள் எல்லாம் இன்று கேமிராவைத் தூக்கிக் கொண்டு ரஜினி பின்னால் அலைகின்றன.அத்தனை பேர் செத்துக் கொண்டிருந்த போது கண்டுகொள்ளாத சேனல்கள் கூட தூத்துக்குடி சம்பவத்தைவிடவும் தூத்துக்குடிக்கு ரஜினி செல்வது மிக முக்கியமான செய்தியாக பிம்பப்படுத்துகின்றன. ரஜினியும்  மக்களைக் காக்க வந்த ஆபத்பாந்தவனாக கருத்து சொல்லிக் கொண்டிருக்கிறார். இவையெல்லாம் யதேச்சையாக நடக்கக் கூடிய செயல்கள் இல்லை. ஜெயலலிதாவின் ஆடியோ செய்ய முடியாததை ரஜினியால் செய்ய முடியும் என்று நம்புகிறார்கள். 'தமிழகத்தில் சமூக விரோதிகள் ஊடுருவிவிட்டார்கள்' என்று தமது தேசபக்தியைக் காட்டும் இன்னொரு பக்தாளாக ரஜினி பேருருவம் காட்டிக் கொண்டிருக்கிறார். 

எலும்புத் துண்டுக்கு வாலாட்டும் ஊடகங்கள் மிகுந்த சலிப்பை உண்டாக்குகின்றன. அவர்கள் அப்படிதான் இருப்பார்கள். ஆனால் நமக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை சமூக ஊடகங்கள்தான். அரசியல் களத்தில் ரஜினி யார், அவரது பின்னால் இருப்பவர்கள் யார், ரஜினி இன்று செய்து கொண்டிருக்கும் அரசியல் என்ன என எல்லாவற்றையும் உரித்துத் தொங்கவிடுவார்கள் என்று நம்பலாம். அப்படியொரு ஆழமான விவாதம் உருவாக்கப்பட வேண்டும். எளிய மக்கள் சினிமா லைட் வெளிச்சத்தில் ஏமாந்துவிடக் கூடாது. ஒருவேளை அவர் நேர்மையானவராக இருந்தால் இங்கு உருவாக்கப்படும் விவாதங்களுக்கு வெளிப்படையான, நேர்மையான பதில்களைச் சொல்லிவிட்டு வரட்டும். மனப்பூர்வமாக ஆதரிக்கலாம். 

தொண்ணூறுகளில் இருந்த செல்வாக்கு இன்றைக்கு ரஜினிக்கு இல்லை. மக்கள் தெளிவாகத்தான் இருக்கிறார்கள். ஆனால் 'இவர்தான் மாற்று' என்று தவறுதலாகக் கூட ரஜினியைத் தேர்ந்தெடுத்துவிடக் கூடாது என்று பதற வேண்டியிருக்கிறது.  இருக்கின்ற பேய்கள் மோசம் என்று கருதுகிறவர்கள்  புதியதாக ஒரு பிசாசு வருவதை அனுமதிக்க வேண்டியதில்லை. ரஜினியைப் பற்றி பேசும் போது 'ரஜினியை பொருட்படுத்த வேண்டியதில்லை' என்று சொல்கிறவர்கள் இருக்கிறார்கள். அப்படி விட்டுவிட வேண்டியதில்லை. போலியான ஒரு ஆளை, தமது கொள்கைகளை வெளிப்படையாக பேச விரும்பாத ஒருவரை, தமது வணிக நலன்களை விட்டுக் கொடுக்காத ஒருவரை புனிதப்படுத்தி தலைவராக்க வேண்டியதில்லை. 

'ரஜினி இவ்வளவு நாட்கள் நடிகராக மட்டுமே இருந்தார்..இப்பொழுதுதான் அரசியல்வாதியாக வந்திருக்கிறார்' என்று யாரவது வந்தால் கச்சநத்தம் கிராமத்தில் நடந்த கொலைகளைப் பற்றியும் ஒரு வார்த்தை பேசச் சொல்லுங்கள் என்று கேட்க வேண்டும். ஹைட்ரொ கார்பன் திட்டம் பற்றி எதையாவது சொல்லட்டும். இப்படி தமிழகத்தில் கடந்த சில வருடங்களாக எவ்வளவோ பிரச்சினைகள் நடந்திருக்கின்றன. எந்தக் கருத்தையும் வெளிப்படுத்தாத ரஜினிகாந்த் இன்று தூத்துக்குடியில் 'ஆவேச பேச்சு' என்று கபடி ஆடுவதை எப்படி புரிந்து கொள்வது என்று தெரியவில்லை. 

ரஜினி வணங்கும் பாபாவிடம் எனக்கு ஒரேயொரு கோரிக்கைதான்- இந்த ஸ்டண்ட் அனைத்தும் காலா படத்துக்கான வியாபார யுக்தியாக மட்டுமே இருக்க வேண்டும். அப்படியிருந்தால் நாம் தப்பித்தோம். ஒருவேளை அரசியலுக்கு வருவதாக இருந்தால் தமிழக மக்கள் வாலில் வற ஓலையைக் கட்டி விரட்டியடிக்க வேண்டும். 

May 29, 2018

என்ன பேசினேன்- தொடர்ச்சியான கடிதம்

அன்பு மணி,

மீண்டும் உங்களுக்கு ஒரு கடிதம். (தொடர்புடைய பதிவு. இணைப்பில்)

எல்லோருக்கும் எல்லாம் குறித்த ஒரு புரிதல் இருக்கிறது. உண்மைதான்; அக்கருத்தில் நானும் முழுமையாக உடன்படுகிறேன். எனினும், ‘புரிதல்’ என்பது எத்தனை ஆழம், அகலமாக கொண்டதாக இருக்கிறது என்பது இன்னும் முக்கியம் அல்லவா?

நம் சமயக் கருத்தியலையே எடுத்துக் கொள்வோம். அதுகுறித்த திட்டவட்டமான புரிதல் நம்மிடம் இருக்கிறதா எனப்பார்த்தால்.. இருக்கிறது; ‘பகுதியாய்’ இருக்கிறது. அதுதான் பிரச்சினையே. பகுத்தறிவாளர்கள் பார்வையில் சமயம் என்றால் 'பிராமணிய மேலாதிக்கம்’, சமய அறிஞர்கள் பார்வையில் ‘புனிதத்துவம்’, சமூகவியல் அறிஞர்கள் பார்வையில் 'ஆதிக்க சாதிகளின் சமூக வரலாறு’; தமிழ்த்தேசியர்கள் பார்வையில் ‘வைதீக வல்லாதிக்கம்’; பிற மதபோதகர்கள் பார்வையில் ‘சாதியத்தை நிலை நிறுத்தும் அமைப்பு’. ஆக, சமயத்தை ஒவ்வொருவரும் அவர்கள் வரிந்து கட்டிக் கொண்டிருக்கும் சித்தாந்தப் புரிதலின் அடிப்படையிலேயே அணுகுகின்றனர்; அதையே முன்முடிவு என நான் குறிப்பிடுகிறேன்.

பகுத்தறிவாளர்களை அல்லது நாத்திகர்களை எடுத்துக் கொள்வோம். எங்கு சுற்றினாலும் "பிராமணத்தால்தான் நாம் வீழ்ந்தோம்” எனும் கருத்தையே ஆணிவேராகக் கொண்டு பிரச்சாரங்களைத் தொடர்ந்தபடி இருப்பர்(நாத்திகரான பெரியார் அக்கருத்தை வந்தடைந்ததற்கு அவரின் சொந்த அனுபவங்கள் காரணம். பெரியாரின் அனுபவத்தையே பொது அனுபவமாக்குவதா பகுத்தறிவின் நேர்மை?) சமய அறிஞர்கள் “கடவுளைத் தவிர உயர்ந்த பொருளில்லை; அவனைச் சரணடைந்தால் நம் துன்பங்கள் நீங்கிவிடும்” என்பதான கருத்தையே தொடர்ந்து வலியுறுத்துவர். சமூகவியல் அறிஞர்கள் “சமூகத்தில் நிகழும் ஏற்றத் தாழ்வுகளை நியாயப்படுத்துவதற்காக ஆதிக்க சாதிகள் ஒருங்கிணைந்து முன் வைத்திருக்கும் ஏற்பாடு சமயம்” என்பதான சிந்தனையையே முன்மொழிவர். தமிழ்த்தேசியர்களோ “வடமொழியால்தான் தமிழ்ச் சமூகம் தேய்ந்து போனது” எனும் கருத்தையே நிலைநாட்ட முயற்சிப்பர். பிற மதபோதகர்கள் “மனிதர்களுக்குள் ஏற்றத்தாழ்வு கற்பிப்பதையே நோக்காகக் கொண்டிருக்கும் மதத்தில் நீங்கள் நீடிக்கத்தான் வேண்டுமா?” எனக் கேள்வி எழுப்பி தங்கள் மதங்களுக்கு ’ஆள்சேர்க்கும்’ பணியைச் செய்வதையே கருமமாகக் கொண்டிருப்பார். இங்கு ஒன்றைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு குறிப்பிட்ட புரிதலை அல்லது தெளிவை முன்வைப்பதாகச் சொல்லிக் கொள்ளும் சித்தாந்திகள் எல்லோரும்  'சமூகத்தின் வீழ்ச்சிக்கு’ எதிரிகளாகச் சிலரைக் கைகாட்டும் வேலையையே செய்து கொண்டிருக்கின்றனர். ஒருபோதும், அக்குறிப்பிட்ட சமூகம் இயங்கி வந்த வரலாற்றை ஓரளவேனும் உள்வாங்கிக் கொள்ள அவர்கள் தயாராகவே இல்லை.

இன்னும் எளிமையாய்ச் சொல்ல முனைகிறேன். “நம் வீழ்ச்சிக்கு பார்ப்பனர்கள்தான் காரணம். ஆக, பார்ப்பனர்கள் ஒழிந்தால் நம் சமூகம் மேம்பட்டுவிடும்” என்பதான தோற்றத்தைத் தொடர்து பகுத்தறிவாளர்கள் அல்லது நாத்திகர்கள் உருவாக்கி வருகின்றனர். இது அறிவுப்பூர்வமான தருக்கமாக இருக்குமா எனக் கொஞ்சம் உட்கார்ந்து யோசித்தாலே விளங்கி விடும். “நம் வீழ்ச்சிக்கு பார்ப்பனர்களும் ஒரு காரணம்” எனச் சொல்லி இருந்தால் கூட நாத்திகர்கள் சொல்வதை நியாயமாகக் கொள்ள முடியும். ஆனால், நமக்கு எதிரியாக ஒருவனைச் சுட்டிக் காட்டி அவனை ஒழித்துக் கட்டினால் நாம் நன்றாக இருப்போம் எனச் சொல்வது பகுத்தறிவுதானா என எனக்குச் சந்தேகமாக இருக்கிறது. ஆக, எந்தவொரு கருத்தியலை முன்வைப்பவரும் நாம் வீழ்ந்து போனதற்குக் காரணமாய் யாரோ ஒரு எதிரியை முன்நிறுத்துகின்றனர். அந்த எதிரி வீழ்ந்தி விட்டால் நாம் சுபிட்சமாக இருப்போம் என சப்பைக் கட்டு கட்டுகிறார்கள். ஒருபோதும், "நாம் வீழ்ந்து போனதற்கு நாமே முதற்காரணம்; மற்றவை எல்லாம் துணைக்காரணங்கள்” எனும் ஓரளவு தெளிவான புரிதலுக்கு நாம் நகர அவர்கள் துணை நிற்கவே மாட்டார்கள். ஏனென்றால், மக்களை உணர்ச்சிவயத்திலேயே வைத்துக் கொண்டிருக்க் வேண்டும். அப்போதுதான் அவர்கள் 'அரசியல்’ எடுபட்டபடியே இருக்கும்.

ஒரு கோணத்தில் நாம் வீழ்ந்து போனதாய்த் தோற்றம் இருக்கலாம். உண்மையிலேயே வீழ்ந்திருக்கிறோமா எனப் பார்த்தால்.. எனக்கு அப்படி தோன்றவில்லை. சமூகம் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கிறது; அப்படி இயங்கிக் கொண்டிருக்கும் சமூகத்தில் பல்வேறு குழுக்களிலும் பண்பாட்டுக் கலப்புகள் என்பது நடந்தே தீரும். பண்பாட்டுக் கலப்புகள் சமூக நடவடிக்கைகளிலும் வெளிப்பட்டே தீரும். தமிழ்ச்சமூகம் எனும் உதாரணத்தைக் கொண்டு இதை எளிமையாய் விளக்கப் பார்க்கிறேன். ‘தமிழ்-தமிழர்கள்-தமிழ்நாடு’ என்பதான நிலையில் ஒருபோதும் தமிழச்சமூகம் இருந்தது இல்லை. நமக்குக் கிடைக்கும் வரலாற்றுத் தரவுகளில் தமிழ்ச்சமூகத்தில் பல்வேறு பண்பாடுகள் கலந்ததை இயல்பாகப் புரிந்து கொள்ள முடிகிறது. அக்கலப்புகள் நிகழ்வதை நம்மால் தடுத்து நிறுத்தவே முடியாது. அது சரியா, தவறா என விவாதிக்க முயற்சிக்கலாம்; தவறு என்று சொல்லி தமிழ்ச்சமூகத்தைப் புனிதப்படுத்துவதற்கான புதுக்கருத்தியலை தீவிரமாயும் முன்வைக்கலாம். ஆனால், யதார்த்தம் கண்முன்னே நிஜமாய் நிற்கிறது. அதைக் கொஞ்சமும் கவனியாமல் செயல்படுவது எவ்விதத்தில் நடைமுறைக்குப் பொருந்தி வரும்?

சமயத்தளத்துக்கு வருகிறேன். தமிழ்ச்சமயம் என்று தனித்து ஒன்று இருப்பதாகவும் அதை பிராமணர்கள் வலிந்து வேத சமயமாக மாற்றி விட்டதாகவும் 'ஆய்வாளர்கள்’ தீர்மானமாகச் சில கருத்துக்களை முன்வைக்கின்றனர். யதார்த்தம் அப்படித்தான் இருக்கிறதா எனப் பார்ப்போம். உதாரணத்துக்கு என் அம்மாவையே சுட்டுகிறேன். சமய அடிப்படையில் அவர் ஒரு இந்து. அப்படியானால், அவருக்கு வேதம் தெரியுமா என்றால் தெரியாது. இந்துக் கோவில்களுக்கு மட்டும்தான் செல்வாரா என்றால் அப்படியும் இல்லை. அக்கா மகளுக்கு உடம்பு சரியில்லை என்று சொன்னால் அருகில் உள்ள பள்ளிவாசலுக்குச் சென்று பாடம் போடுகிறார்; கொஞ்சம் தள்ளி உள்ள தேவாலயத்துக்குச் சென்று தனது நோய் நீங்க ஆசீர்வாதம் பெறுகிறார். ஷீரடி சாய்பாபா கோவிலுக்கும் செல்கிறார். கிடா வெட்டி பொங்கல் வைக்கும் விழாவையும் கொண்டாடுகிறார். தீட்டு என்பதாக வீட்டை சாணி போட்டு மெழுகிவிட்டு ஆகம அடிப்படையிலான(என்று சொல்லக்கூடிய) கோவில்களுக்கும் செல்கிறார். என் அம்மாவைப் போன்ற 80 சதவீதத்துக்கும் மேற்பட்ட எளிய மக்கள் நம் நாட்டில் வசிக்கின்றனர். அவர்களுக்கு எவ்விதச் சித்தாந்தமும் தெரியாது. ஆனால், அவர்கள் செய்வதுதான் சரியோ என எனக்குப் படுகிறது. அவர்களுக்கு சமூக இயங்கியல் என்பது பற்றிக் குறைந்தபட்சம் புரிதல் கூட இருக்காது. ஆனால், இயங்கிக் கொண்டிருக்கும் சமூகத்தில் அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவ்வியங்கியலில் நிகழும் மாற்றங்களை யதார்த்தமாக ஏற்றுக் கொள்கின்றனர். மீண்டும் அழுந்தச் சொல்கிறேன்.. சமூகத்தில் நிகழும் மாற்றங்கள் ஏற்புடையதா இல்லையா என்பது விவாதிக்க வேண்டிய விடயம். என்றாலும், பெரும்பாலான எளிய மனிதர்களின் வாழ்வை விவாதங்களோ, சித்தாந்தங்களோ பெரிதும் பாதிப்பதில்லை என்பதே நிதர்சனம். குறிப்பிட்ட அளவிலான மனிதர்களையே சித்தாந்தங்களும், கொள்கைகளும் உணர்ச்சிவய மனநிலையில் கொந்தளிக்க வைக்கின்றன. சோதனைக் காலமாய், அவர்களின் கருத்துக்களே ‘சமூகத்தின் குரலாக’ ஊடகங்கள் வழியாக திரும்பத் திரும்ப முன்வைக்கப்படுகின்றன.

வழிபாட்டு மொழி குறித்த விளக்கமும் இங்கு அவசியம் எனக் கருதுகிறேன். வடமொழியினர்தான் கோவில்களில் தமிழ் அர்ச்சனையை அறவே ஒழித்துவிட்டதாய் கூக்குரலிடுகிறோம். ஒரே ஒரு கேள்விதான் நான் கேட்கிறேன். நம் மண்ணில் புதுக் கோவில்களை உருவாக்குவதற்குத்தான் தடை ஒன்றும் இல்லையே?(புதிது புதிதாய் கோவில்கள் வேண்டுமா என்பது தனி விவாதம்) தமிழ்வழிக்கோவில்களை உருவாக்குவதற்கும், வீடுகளில் தமிழ்வழிபாட்டை மேற்கொள்வதற்கும் யார் நமக்குத் தடைவிதித்து விட முடியும்? தமிழ்வழிபாட்டுக்காகப் போராடுகிறேன் எனக் குதிக்கும் அன்பர்களை நேரடியாகக் கேட்கிறேன் : “ஆகமக் கோவில்களில் தமிழ்வழிபாடு நடைபெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டபடியே, உங்கள் வீடுகளில் தமிழ்வழிபாட்டை ஏன் நீங்கள் மேற்கொள்ளக் கூடாது. மேலும், தமிழ்மண்ணில் தமிழ்க்கடவுளர்க்கான கோவில்களை எழுப்பி ஏன் நீங்கள் நிர்வகிக்கக் கூடாது?”.

தமிழுக்கும், சமற்கிருதத்துக்குமான ஊடாட்டம் கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நம் மண்ணில் தொடர்ந்தபடி இருக்கிறது. முருக வழிபாடு குறித்த சில வருட ஆய்வுகளில் நான் சேகரித்து வைத்திருக்கும் தகவல்கள் ஏராளம், ஏராளம். அவை தீர்மானமான ’ஒரு ஒற்றைப் புரிதலை’ நோக்கி என்னைச் செலுத்தவில்லை. மாறாக, சமூகத்தில் ஊடாடிக் கொண்டிருக்கும் ’பன்முகக் கலப்புகளின்’ ஒருங்கிணைவாகவே வழிபாட்டைச் சுட்டியது. முருகன் சுப்பிரமணியனாக்கப்பட்டு விட்டானா அல்லது சுப்பிரமணியன் ஆனானா என்பதைத் தீர்மானமாகச் சொல்லிவிட முடியாது. என்றாலும், முருகனைத் திரும்பவும் சங்ககால முருகனாக்கிவிடுவதே தமிழ்ச்சமூகத்தை எழுச்சி பெற வைக்கும் என்பதைப் போன்ற சித்திரம் சரியானதுதானா? பகுத்தறிவு கொண்டே யோசிப்போம். மேலும், மொழி என்பது சமூகத்தில் வாழும் மனிதர்களுக்காகத்தானே தவிர.. மொழிக்காக மனிதர்கள் கிடையாது. மொழியை அழித்தால் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை ஒழித்து விடலாம் எனும் தட்டையான கருத்தில் எனக்கு ஒருபோதும் உடன்பாடு கிடையாது. எளிய மனிதர்களின் வாழ்வையும், யதார்த்த்த்தையும், சமூகத்தின் பன்முகத்தன்மைகளையும் கவனத்தில் கொள்ளாத எந்தச் சித்தாந்தமும் பயனற்றது என்பது என் தீர்மானம்.

தமிழர் சமயம் எது எனும் கேள்வியை எழுப்பிக் கொஞ்சம் யோசிப்போம். ஒரு தமிழர் என்பவர் இந்து, கிறித்து அல்லது இசுலாமியராக இருக்கலாம். அப்படியானால், தமிழர் சமயம் என்பதை எப்படி வரையறுப்பது? முருகனும் கொற்றவையும் தமிழ்க்கடவுளர்கள் என்பதை தமிழ் கிறித்துவர்களும், தமிழ் இசுலாமியர்களும் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், அதை இசுலாமும், கிறித்துவமும் ஒப்புக்கொள்ளுமா? மேலும், முருகனை வணங்குவதற்கு தமிழ்கிறித்துவர்களும், தமிழ் இசுலாமியர்களும் கோவில்களுக்கு வந்துவிட முடியுமா? இங்கிருந்துதான் தமிழ்த்தேசியம் குறித்த நாம் பேசத் துவங்க வேண்டும். தமிழ்-இந்தியத்தேசியங்கள் குறித்து மற்றுமொரு கடிதத்தில் சில விளக்கங்களை முன்வைக்கிறேன்.

கடிதத்தை நிறைவு செய்யும் முன்பு, ஒரே ஒரு செய்தியைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன். அமைப்போ, சித்தாந்தமோ, கொள்கைகளோ முக்கியம் அன்று; அவற்றை முக்கியம் எனக் கருதினால் அமைப்பில் சேர்வதோடு அல்லது சித்தாந்த்த்தை நாம் நிறைவடைந்து விடுவோம். எந்நிலையிலும் நேர்ந்து கொண்ட சித்தாந்தத்துக்கு முரண்பட்டு விடக்கூடாது என்று இறுக்கமாகவே இருப்போம். எவ்வகையிலும் சமூகத்தில் பெரும்பான்மையாய் இருக்கும் எளிய மக்களுக்குப் பயனளித்து விடாது. ஒரு தனிமனிதன் தன்னளவில் இச்சமூகத்துக்காக என்ன செய்து கொண்டிருக்கிறான் என்பதே முக்கியம். அவ்வகையில், நிசப்தம் மணிகண்டனின் தனிப்பட்ட செயல்களுக்காகவே அவனை நேசிக்கிறேன். ஊடக வெளிச்சத்தால் அடையாளம் கண்டுகொள்ளப்பட்ட அவனை வைத்துச் சந்தர்ப்பவாதிகள் தங்களின் ‘அரசியலை’ நியாயப்படுத்தப் பயன்படுத்திக் கொள்ள முனைவர். அதற்கு மணிகண்டன் பலியாகிவிடக் கூடாது; அதன்பொருட்டே என் கடிதங்கள்.

நேர்ப்பேச்சில், நாம் இன்னும் விரிவாகப் பேசலாம்.

உயிர் நலத்தை விரும்பும்,
சத்திவேல் ஆறுமுகம், கோபிசெட்டிபாளையம்

அரசியலுக்கு வருவீங்களா?

கடந்த நான்கு நாட்களாக ஆளாளுக்கு கேள்வி கேட்கிறார்கள். 'அரசியலுக்கு போறானா' என்று அம்மாவிடம் வேறு விசாரித்திருக்கிறார்கள். 'இவன் வீட்டிலேயே தங்குவதில்லை' என்று சும்மாவே சாமி ஆடுவார். இதில் திருநீறு அடித்திருக்கிறார்கள். எல்லாம் சவுக்கு சங்கர் செய்த வேலை. கடந்த வாரம் பொழுது போகாமல் மீம்ஸ் தயாரித்து என்னை தாளித்துவிட்டார். யாரோ அதை எடுத்து உள்ளூர் வாட்ஸாப் குழுமங்களில் போட்டுவிட்டார்கள். ஃபேஸ்புக்கில் இருக்கும் வரைக்கும் பிரச்சினையில்லை. வாட்ஸாப்ப்புக்கு வந்தால் எதுவுமே வேறொரு அவதாரம் எடுத்துவிடுகிறது. பின்னணி தெரியாமல் புரட்டி போட்டுவிடுகிறார்கள். அது பரவி சொந்தக்காரர்கள், தெரிந்தவர்கள் என்று ஒரு சுற்று வந்துவிட்டது. 'ஐ திங்க் ஹி இஸ் என்டரிங் இன்டு பாலிடிக்ஸ்' என்று ஒருவர் சொல்கிறார்.

'யா..ஐ ஆல்சோ திங்கிங் சேம்' என்று இன்னொருவர் சொல்கிறார். 

இவன் பெரிய ரஜினிகாந்த். அரசியலுக்கு வருவானா இல்லையா என்று இவர்கள் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். 'முழுசா முன்னூறு ஓட்டு வாங்குவியா?' என்று கண்ணாடியைப் பார்த்து என்னை நானே கேட்டுக் கொள்ள வைத்துவிடுவார்கள் போலிருக்கிறது. 'அது காமெடிக்கு போட்டு இருக்காருங்க' என்று சொன்னாலும் நம்பாதவர்கள்தான் அதிகம். இரண்டு நாட்களாக 'ஐயோ சாமீ..என்னை ஏன்யா மூலையில் நிறுத்தி கும்முறீங்க' என்று கேட்டுக் கொண்டிருக்கிறேன். 

அரசியல் தொடர்புகள் இல்லையென்றெல்லாம் சொல்ல மாட்டேன். 'இவங்க கூட எல்லாம் இவனுக்கு தொடர்பு இருக்குமா?' என்று பெரும்பாலானவர்கள் எதிர்பார்க்காத பெருந்தலைகளிடம் கூட தொடர்பில் இருக்கிறேன். ஆனால் எந்தக் கட்சியிலும் அடிப்படை உறுப்பினர் இல்லை. எனக்கான தனிப்பட்ட காரியங்கள் என்று எதற்கும் போய் நின்றதில்லை. அப்படி இருக்கும் வரைக்கும்தான் நமக்கு மரியாதை இருக்கும். அதே சமயம் பொதுக்கரியங்கள் என்றால் தயங்காமல் தொடர்பு கொள்வதுண்டு. இவ்வளவுதான் என்னுடைய நேரடியான அரசியல்.

என்னைப் போய் ஜமுக்காளத்தில் சுருட்டி உருட்டி விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். 

'அரசியலில் ஈடுபடுவீர்களா' என்று எப்பொழுதாவது கேட்பார்கள். மக்களுடன் இறங்கி வேலை செய்தால், பொது நிகழ்ச்சிகளில் வேட்டி கட்டினால் அடுத்தவர்களுக்கு இப்படியெல்லாம் தோன்றும் போலிருக்கிறது. யாராவது அப்படி கேட்கும் போது சில கேள்விகள் மனதுக்குள் எழும். இன்றைய அரசியல் சூழலில் தேர்தலில் நின்றால் சில கோடிகளாவது செலவு செய்ய வேண்டும். அப்படிச் செய்யாமல் தேர்தலை சந்தித்தால் படு தோல்வியைச் சந்திக்க நேரும். பணத்தை எப்படியோ புரட்டிவிடுகிறோம் என்று வைத்துக் கொள்வோம். சில கோடிகளை செலவு செய்துதான் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றால் நாம் வாய் கிழிய பேசும் அறம், நேர்மை என்பதெல்லாம் பல்லிளித்துவிடாதா? எழுதும் போது மட்டும் நேர்மை நாணயம் வெங்காயம், பருத்திக்கொட்டை எல்லாம். களத்தில் என்ன தகிடுதத்தம் வேண்டுமானாலும் செய்யலாமா?

களத்தில் மாறுதலை உருவாக்க வேண்டும். 'மக்கள், நல்லவனா கெட்டவனா என்று பார்த்துத்தான் வாக்களிப்பார்கள்' என்ற நம்பிக்கை வர வேண்டும். அதெல்லாம் நம் காலத்தில் நடக்கிற காரியமா என்று சந்தேகமாக இருக்கிறது. மிகத் திறமையாக பணத்தால் ஆட்களை வாங்கக் கூடியவர்களே தொடர்ந்து வென்று கொண்டிருக்கிறார்கள். ஒதுங்கி நிற்பதுதான் நல்லது. ஆனால் அரசியல் பேசாமல், எழுதாமல், தொடர்புகள் இல்லாமல் இருக்க வாய்ப்பில்லை. ஒவ்வொருவருக்கும் அரசியல் இருக்கிறது. அதை நேர்மையாக வெளிப்படுத்த வேண்டும். 

தூத்துக்குடி எரிந்து கொண்டிருக்கும் போது 'மழை அழகாக பெய்கிறது' என்று ஜல்லியடித்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை. அப்பொழுது நம் நிலைப்பாடு என்ன என்பதை நேரடியாக பேச வேண்டும். அப்படி அரசியல் நிலைப்பாடுகளை வெளிப்படுத்தும் போது நமக்கு முத்திரை விழும். அதைப் பற்றியெல்லாம் கவலைப்பட வேண்டியதில்லை. எது சரி என்று நம் மனதுக்கு படுமல்லவா? அதைப் பேசலாம். எதிர்ப்பு குரல்கள் வரத்தான் செய்யும். விவாதிக்கலாம். விவாதங்களின் முடிவில் நம்முடைய நிலைப்பாட்டினை புரிதலுக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளவும் தயங்க வேண்டியதில்லை. 

வாட்ஸாப்பில் பட்டையைக் கிளப்பும் உறவினர்கள், நண்பர்களுக்காகவாவது இந்த விளக்கத்தை எழுதியாக வேண்டியிருக்கிறது. கலாய்க்க எழுதியிருக்கிறார்கள் என்று கூட புரிந்து கொள்ளாமல் அர்னாப் கோஸ்வாமி கணக்கில் என்னை வைத்து கொத்து புரோட்டா போடுகிறவர்களிடமிருந்து தப்பிக்க வேறு உபாயம் எதுவும் தென்படவில்லை. அப்படியே இருந்தாலும் என்னிடம் விளக்கம் கேட்டால் பரவாயில்லை. அம்மா, தம்பியிடமெல்லாம் கேட்டால் நான் உண்மையிலேயே பாவம். அவர்கள் அப்படியே நம்பிவிடுகிறார்கள். 'இவன் என்னவோ பிளான் பண்ணிட்டு இருக்கான்' என்று எதிரியைக் கேள்வி கேட்பது போலவே கேட்கிறார்கள். 'எலெக்ஷனுக்கு காசு கொடுங்க' என்று நம்மைக் கேட்டுவிடுவானோ என்று உள்ளுக்குள் பதறுகிறார்கள் போலிருக்கிறது. 

'சிவனேன்னுதானய்யா இருக்கேன் ஏன் இப்படி?' என்று மீம்ஸ் வந்த மாலையில் சங்கரை அழைத்துக் கேட்டேன். அவர் எங்கேயோ செல்லும் போது வழி நெடுகிலும்  உதயநிதியை வரவேற்று மிகப்பெரிய கட்-அவுட்டுகளை வைத்திருந்தார்களாம். 'அதுல நான் டென்ஷன் ஆகிட்டேன்..மீம்ஸ் போட்டேன்' என்றார். சொல்லிவிட்டு 'இப்போதான் கூல் ஆனேன்' என்றார். 'ஆவீங்க..ஆவீங்க' என்று நினைத்துக் கொண்டேன். அவர் கூல் ஆகிவிட்டார். நான் தான் சிக்கிக் கொண்டேன். ஏதோவொரு பயணத்தில் யாருமில்லாத மலையின் மொட்டைப்பாறையில் இன்னொருவரின் ஓசி கண்ணாடியை வாங்கி போட்டு பந்தாவுக்கு எடுத்துக் கொண்ட படம் அது. பிஞ்சு முகமய்யா அது. அதைப் போய்...

May 28, 2018

முன்னே வரும் கூட்டம்

எந்த ஆரவாரமும் இல்லாமல் மரம் நடும் நிகழ்வை நடத்துவது என முடிவு செய்திருந்தோம். 'இதெல்லாம் வெளியில் தெரிவது இன்னமும் பலரை உத்வேகப்படுத்தும்' என்று சொன்னார்கள். துண்டறிக்கை மட்டும் அச்சடித்து விநியோகம் செய்யலாம் என யோசித்திருந்தோம். இப்பொழுது நான் எதுவும் செய்யப் போவதில்லை. ஊர்மக்கள் சேர்ந்து அடர்வனம் அமைக்கும் நிகழ்வை பிரமாதப்படுத்துவதாக முடிவு செய்திருக்கிறார்கள். நேற்று உள்ளூர் இளைஞர்கள் குளக்கரையில் கூடி பேசியிருக்கிறார்கள்.

'நம்ம ஊர்ல நடக்குற நிகழ்ச்சி...நாம பார்த்துக்குவோம்' என்று பேசினார்களாம். பந்தல் அமைத்து, மைக் செட் கட்டி, வெள்ளி, சனி என இரண்டு நாட்களுக்கு நூறு பேருக்கு சமையல் செய்து என என்னவோ பெரிய திட்டமிட்டு வைத்திருக்கிறார்கள். கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் இரண்டு பேர் ஆளுக்கொரு மூட்டை அரிசியை வாங்கி கொண்டு வந்து கொடுத்துவிட்டார்களாம். 

ஆச்சரியமாக இருக்கிறது. இவ்வளவு உற்சாகமாக ஒன்றிணைவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. 

நேற்று வேறொரு ஊருக்குச் சென்றுவிட்டு திரும்ப வந்து கொண்டிருந்தேன். இருபது கிலோமீட்டர் தொலைவுக்குள் இரண்டு மூன்று இடங்களில் காவல்துறையினர் பரிசோதனைகளைச் செய்து கொண்டிருந்தார்கள். முதலில் குழப்பமாக இருந்தது. ஒரு காவலர் 'நீங்க பார்த்து போய்க்குங்க' என்றார். அவர் சொன்னதன் அர்த்தம்- குடித்துவிட்டு வண்டி ஓட்டுகிறார்கள்; கவனமாக இருந்து கொள்ளுங்கள் என்று. மிகைப்படுத்திச் சொல்லவில்லை. தமிழகம் முழுக்கவும் இதுதான் நிலைமை. 'இந்த சமூகத்தை என்ன செய்ய முடியும்' என்றால் 'சத்தியமாக எதுவும் செய்ய முடியாது' என்றுதான் சொல்வேன். பெருமொத்தமாக கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். விடுமுறை தினங்கள் என்றாலே குடித்துவிட்டு வண்டி ஓட்டுவதுதான் என்று பெருவாரியான இளைஞர்களை நினைக்க வைத்துவிட்டார்கள். இதில் நாம் என்ன பெரிய மாறுதலை உருவாக்கிவிட முடியும்? சிறுகச் சிறுக முயற்சிக்கலாம். 

ஞாயிற்றுக் கிழமைகளில் கூட்டம் என்றெல்லாம் நடத்தினால் காக்கா குருவி வராது. கோட்டுப்புள்ளாம்பாளையத்தில் வேலை செய்யத் தொடங்கிய போதும் இதைத்தான் சொன்னார்கள். 'பசங்க சரக்கு அடிப்பாங்க..இதுக்கெல்லாம் வரமாட்டாங்க' என்று. அடர்வனத்துக்கு என்று உருவாக்கிய வாட்ஸாப் குழுமத்தில் கூட 'என்னத்தைடா நட்டுறீங்க..மழை பேயுது..போய் சோத்தை தின்னு போட்டு படுங்கடா' என்று குரல் பதிவு செய்து அனுப்பினார்கள். அதைத் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருந்தேன்.  அடுத்தநாள் 'ஏதோ போதையில் செஞ்சுட்டான் போலிருக்கு' என்று சொன்னார்கள். இதையெல்லாம் தாண்டித்தான் இவ்வளவும் நடந்திருக்கிறது. கூட்டமாகச் சேர்ந்திருக்கிறார்கள். 

சந்தோஷப்படாமல் என்ன செய்வது? 

அடுத்த சனிக்கிழமையன்று அத்தனை பேரும் மொத்தமாக ஒவ்வொரு வீடாகச் சென்று அழைப்பு விடப் போவதாக இன்று காலையில் அழைத்துச் சொன்னார்கள். 'நீங்க என்ன வேணும்னாலும் செஞ்சுக்குங்க' என்று சொல்லியிருக்கிறேன். இவ்வளவு பேர் ஆர்வம் காட்டும் போது தடை எதுவும் போட வேண்டியதில்லை. அவர்களின் விழா; எப்படி வேண்டுமானலும் கொண்டாடட்டும். 


அழைப்பிதழை வாட்ஸாப் குழுமங்களில் பகிர ஆரம்பித்துவிட்டார்கள். நேற்றே கோபி கலை அறிவியல் கல்லூரியிலிருந்து 'நாங்களும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள விரும்புகிறோம்' என்று மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்கள். அழைப்பது பிரச்சினையில்லை;  'வருகிறவர்களுக்கு சாப்பாடு எதாவது வழி செய்ய வேண்டுமே' என கொஞ்சம் தயக்கமாக இருந்தது. இப்பொழுது அது குறித்தெல்லாம் எந்தக் கவலையும் பட வேண்டியதில்லை. இந்த இளைஞர்கள் பார்த்துக் கொள்வார்கள்.

'ஐம்பது மாணவர்களை அனுப்பி வையுங்கள்' என்று கோரியிருக்கிறோம். சனிக்கிழமைதான் மரம் நடும் நிகழ்வு. ஆனால் இரண்டு நாட்கள் வேலை இருக்கும். வெள்ளிக்கிழமையன்றே செடிகளை எடுத்துச் சென்று, குழி தோண்டி, எந்தச் செடி எங்கே வைக்க வேண்டும் என முடிவு செய்துவிடுவார்கள். சனிக்கிழமையன்று எல்லோரும் கூடி இருக்கும் போது செடிகள் நடப்படும். இந்த இளைஞர்களில் பெரும்பாலானவர்கள் மில் வேலைகளுக்கும், கம்பெனிகளுக்கும் வேலைகளுக்குச் செல்கிறவர்கள். தினசரி கூலிகள். 'வெள்ளி, சனி என ரெண்டு நாளுமே விடுப்பு எடுத்துக் கொள்வதாக முடிவு செய்திருக்கிறோம்' என்று சொன்ன போது உண்மையிலேயே நெகிழ்ச்சியாக இருந்தது. மனப்பூர்வமாகச் சொல்கிறேன்- 'இது நம்ம ஊர்' என்று இறங்குகிற இந்த சக்தியைத்தான் நான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். திரண்டு வந்திருக்கிறார்கள். தனித் தனியாகவெல்லாம் ஒன்றும் செய்ய முடியாது. கூட்டமாக கைகளைக் கோர்க்க வேண்டும். ஒவ்வோர் ஊரிலும் இத்தகைய குழுக்கள் அமைந்தால் அதுதான் அடிப்படையிலான மாற்றமாக இருக்கும். இப்படி இணைந்து நிற்கும் இளைஞர்களை அரசியல் எதுவும் குழப்பிவிடமால் பார்த்துக் கொள்ள வேண்டும். 'எங்க ஊருக்காக சேர்ந்து நிற்கிறோம்' என்ற உணர்வு அப்படியே நிற்க வேண்டும். இருக்கும். நம்பிக்கை இருக்கிறது.

எந்த ஊரிலும் இளைஞர்கள் மோசமில்லை. இறங்கி வேலை செய்தால் அவர்கள் திரண்டு வருவார்கள். அவர்களின் ஒரே தயக்கம் முன்னாடி வருவதுதான். அதற்கு ஓர் ஆள் தேவையாக இருக்கிறது. 

அடுத்த வாரம்தான் அழைப்பிதழை வெளியிட வேண்டும் என நினைத்திருந்தேன். இரண்டு வாரங்கள் முன்பாகவே சொல்லியாகிவிட்டது. 'முன்னாடியே சொல்லியிருந்தா வந்திருப்பேன்' என்று சொல்லித் தப்பிக்க முடியாது. வருக! வருக!!

May 24, 2018

தூத்துக்குடியுடன் பெங்களூரு

ஸ்டெர்லைட் ஆலையின் நிர்வாகமான வேதாந்தாவின் அலுவலகம் பெங்களூரு எம்.ஜி சாலையில் உள்ள ப்ரெஸிடீஜ் மெரிடியன் என்ற வணிக வளாகத்தில் செயல்படுகிறது. வேதாந்தாவுக்கு எதிராகவும், தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இன்று (மே 24 ) மதியம் மூன்று மணியளவில் போராட்டத்தை ஆரம்பித்தார்கள். சுமார் ஐம்பது முதல் நூறு பேர் வரைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். தமிழக அரசு, காவல்துறை, மத்திய அரசு, அரசியல் காட்சிகள் என சகலரையும் விளாசினார்கள்.


சம்பந்தமேயில்லாமல் இந்த கட்டிடத்தில் எதற்காக போராட்டம் நடத்துகிறார்கள் என்று முதலில் குழப்பமாக இருந்தது. வேதாந்தாவின் அலுவகம் இன்னமும் அங்கே இருப்பதாகத்தான் கூகிள் காட்டுகிறது. ஆனால் இரண்டரை மாதத்துக்கு முன்பாகவே காலி செய்துவிட்டுப் போய்விட்டதாக வணிக வளாக ஆட்கள் வந்து சொன்னார்கள். போராட்டக்காரர்கள் ஒரு அதட்டு அதட்டியதும் அவர்கள் ஓரமாக ஒதுங்கி கொண்டார்கள். 


போராட்டக்காரர் ஒருவர் கட்டிடத்தின் மேல் தளங்களில் நின்று வேடிக்கை பார்த்தவர்களிடம் ஆவேசமாக பேசினார்.

'நீங்கள் இங்கேதான் இருக்கிறீர்கள் என்று தெரியும்..நாங்கள் வன்முறையாளர்கள் இல்லை...உங்களிடம் ஒன்று சொல்வதற்காக வந்திருக்கிறோம்.உங்கள் பாதங்களுக்கு கீழாக அங்கே சுடப்பட்டவர்களின் இரத்தம் ஓடிக் கொண்டிருக்கிறது' என்று அவர் பேசிய போது கூட்டம் ஆர்ப்பரித்தது.

கூட்டத்தினரிடையே தமிழ், கன்னட, இந்தி, ஆங்கிலம் என வெவேறு மொழிகளில் பேசினார்கள். ஓபிஎஸ்ஸூம், ஈபிஎஸ்ஸும் கர்நாடகத்தில் இவ்வளவு எதிர்ப்பைச் சம்பாதிப்போம் என்று கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்கள். இந்தப் போராட்டம் முறையான அனுமதி பெறாத போராட்டம் என்பதால் போலீஸ் நிறைய வந்திருக்கிறார்கள். 


'கைது செய்வீர்களா' என்று கேட்டேன்.

'வாய்ப்பில்லை' என்றார்கள்.  

கர்நாடக காவல்துறை ஒப்பீட்டளவில் மிகுந்த நாகரிகம் மிக்கவர்கள். போராட்டம் நடக்கும் போது எந்த எதிர்ப்பையும் காட்டாமல் அமைதியாக நின்று கொண்டிருக்கிறார்கள்.

இந்தியா டுடே, சன், தினத்தந்தி, ஒன் இந்தியா, தமிழ் இந்து உள்ளிட்ட பத்திரிக்கையாளர்கள் செய்தி சேகரித்துக் கொண்டிருந்தார்கள். 

தமிழர்களுக்கு ஒன்று என்றால் பிற மாநிலங்களில் கண்டுகொள்ளமாட்டார்கள் என்பதெல்லாம் நாமாக நினைத்துக் கொள்ள வேண்டியதுதான். தமிழகத்தின் பிற ஊர்களைவிடவும் கன்னடத்துக்காரர்கள் கூர்மையாக தமது எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறார்கள். அங்கேயிருந்த சிலரிடம் ' வாழ்த்துக்கள்' என்று கை குலுக்கினேன். சிரித்தார்கள். 

வளைத்து வளைத்து வீடியோ எடுத்து ஃபேஸ்புக்கில் 'லைவ்' செய்து கொண்டிருந்தேன். கூட்டத்தில் இருந்த ஒருவர் அருகில் வந்து 'நீங்க தமிழா?' என்றார்.

'ஆம்' என்றேன். 

'அங்க என்ன நடக்குது' என்றார். 

'உங்களுக்கு எவ்வளவு தெரியுமோ அவ்வளவுதான் சார் எனக்கும் தெரியும்' என்றேன்.

'என்ன நடந்திருந்தாலும் சரி...தூத்துக்குடி மக்களுடன் நாங்கள் இருக்கிறோம் என்று சொல்லுங்க' என்றார். 

நன்றி சொல்லிவிட்டு கிளம்பி வந்தேன். இந்தப் பதிவு வழியாக தூத்துக்குடிக்கு மட்டுமில்லை- தமிழர்கள் அனைவருக்கும் சொல்லிவிட்டேன். நன்றி பெங்களூரு!

நான் இந்துதான்..ஆனால்

தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தை எதிர்க்கிறவர்களில் பல சித்தாந்தங்களை பின்பற்றுகிறவர்கள் இருக்கிறார்கள். கம்யூனிஸ்ட், திராவிடர்கள், தமிழ் தேசியவாதிகள் என்று சகலரும் இருக்கிறார்கள். கண்டிப்பவர்களில் இந்துத்துவ ஆதவர்களும் கூட உண்டு. ஆனால் துப்பாக்கிச்சூட்டை ஆதரித்து எழுதுகிறவர்கள் பின்னணியை அலசிப் பார்த்தால் 'இந்துத்துவ ஆதரவாளர்' என்ற ஒற்றைப் புள்ளிதான் மையமாக இருக்கிறது. ஒரேயொரு விதிவிலக்கை கூட பார்க்க முடியவில்லை என்பது அலறச் செய்கிறது. 

காவல்துறை நிகழ்த்திய துப்பாக்கிச் சூட்டை ஆதரிப்பவர்கள் 'வன்முறைக்கு பதில் வன்முறைதான்',  'அரசாங்கம் வன்முறையை கையில் எடுப்பது தவறே இல்லை' என்றெல்லாம் பேசுகிறார்கள்.மனிதாபிமானதையெல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு அடித்து நொறுக்குங்கள் என்று பேசுவதை எப்படிப் புரிந்து கொள்வது? இதில் வெறுமனே சமூக ஒழுங்கு மட்டும்தான் பின்னணியில் இருக்கிறதா? இதன் உளவியல் என்னவாக இருக்கும் என்று யோசித்து பார்க்க வேண்டியிருக்கிறது. 

'காஷ்மீரில் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்' என்று சொல்லும் போது குதூகலிக்கிற மனநிலை, 'ஒடிசாவில் மாவோயிஸ்ட்கள் இறந்தார்கள்' என்னும் போது உற்சாகமடைகிற தேசியவாத சிந்தனையை, தமது தேச பக்தி உணர்வை எந்தவொரு அடிப்படையான புரிதலுமில்லாமல் 'தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு' என்னும் போதும் கொண்டு வந்து நிறுத்திக் கொண்டாடித் தீர்க்கிறார்கள் என்றுதான் ஆரம்பத்தில் தோன்றியது. குருட்டுத்தனமாக இருக்கிறார்கள் என்றுதான் நினைக்க வைத்தது. ஆனால் இது மேம்போக்கான புரிதல். இதில் தேச பக்தி என்பதெல்லாம் எதுவுமில்லை. 'சமூக ஒழுங்கு நிலை' என்பதும் காரணமில்லை. அதையெல்லாம் தாண்டி ஒரு எளிமையான காரணம் இருக்கிறது. அபாயகரமான காரணம்.

'எனது இந்துத்துவ கொள்கைக்கு ஆதரவாக நிற்கும் அரசாங்கம் எதைச் செய்தாலும் சரி' என்பதுதான் அடிநாதமாக இயக்குகிறது. இவ்வளவு முரட்டுத்தனமாக இருக்கிறார்கள். இதை நியாயப்படுத்த ஒரு காரணத்தை தேடுகிறவர்கள் 'வன்முறையாளர்கள் ஒடுக்கப்பட்ட வேண்டும்' என்று பேசுகிறார்கள். 

உண்மையிலேயே இவர்கள் வன்முறைக்கு எதிராகத்தான் பேசுகிறார்கள் என்றால் இரண்டு கேள்விகளை முன்வைக்கலாம். நாமும் கேட்டுப் பார்த்துக் கொள்ளலாம். 

இன்றைக்கு நிகழ்ந்திருக்கும் இதே  போன்றதொரு பிரச்சினை திமுக ஆட்சியில் இருக்கும் போது நிகழ்ந்திருந்தாலோ அல்லது மேற்குவங்கத்தில் நிகழ்ந்தாலோ இன்று துப்பாக்கிச்சூடு சம்பவத்தை ஆதரிப்பவர்கள் 'நாட்டின் வளர்ச்சிதான் முக்கியம்..' என்றும் 'வன்முறையாளர்களை ஒடுக்க வேண்டும்'  தான் பேசியிருப்பார்களா என்றும் கேட்க வேண்டியிருக்கிறது. திமுகவோ, சமாஜ்வாதி கட்சியோ, திரினமூலோ சிக்கியிருந்தால் பிரித்து மேய்ந்திருக்கமாட்டார்களா? தோரணம் காட்டித் தொங்கவிட்டிருப்பார்கள். 

இன்னொரு கேள்வி- இதே தாமிர ஆலையை ஒரு கிறித்துவ அல்லது இசுலாமியரின் நிறுவனம் நடத்தியிருந்தால் 'ஆமாம், தாமிர உற்பத்திதான் முக்கியம்' என்று நிறுவனத்துக்கு ஆதரவாக பேசியிருப்பார்களா என்றும் கேட்கலாம். மனசாட்சிப்படி அவர்கள் பதில் சொன்னால் இரண்டுக்குமே 'இல்லை' என்றுதான் பதில் கிடைக்கும். 

இப்பொழுது மட்டும் ஏன் அரசாங்கத்துக்கு ஆதரவாக நிற்கிறார்கள் என்று யோசிக்க வேண்டியிருக்கிறது. மிகத் தெளிவாக மதம், கட்சி சார்ந்த அரசியல் உள்ளேயிருக்கிறது. 

மேலே பாஜக, மாநிலத்தில் அந்த பாஜக என்ன செய்தாலும் விட்டுவிட்டு வேடிக்கை பார்க்கிற ஆட்சி  இருக்கிறது என்பதால் துப்பாக்கிச் சூட்டை ஆதரிக்கிறார்கள். தூதுக்குடிவாசிகளின் இந்தப் போராட்டத்தை எதிர்க்கிறார்கள், கொச்சைப்படுத்துகிறார்கள். துப்பாக்கிச் சூட்டை ஆதரிப்பவர்கள் அத்தனை பேரும் நுணுக்கமாக புரிந்துதான் ஆதரிக்கிறார்கள் என்று சொல்லவில்லை. ஆனால் இதுதான் துப்பாக்கிச் சூட்டை ஆதரிப்பவர்கள் உள்ளிருக்கும் மனநிலை. இதுவே அவர்களை இயக்குகிறது. 

இறந்தவர்கள் நம் மக்கள் என்ற பிம்பம் கூட உருவாகிவிடக் கூடாது என்று 'மிஷனரிகள் பின்னால் இருக்கிறார்கள்' 'இறந்தவர்கள் கிறித்துவர்கள்' என்று மனசாட்சியே இல்லாமல் செய்திகள் பரப்பப்படுகின்றன.

அரசியலும் மதமும் சேர்ந்து நம் மனிதாபிமானத்தைக் கொல்வதைத்தான்  நம்மைச் சூழ்ந்திருக்கும் அபாய மேகம் என்று கருத வேண்டியிருக்கிறது. 'அடுத்தவன் செத்தாலும் பரவாயில்லை..நம் சித்தாந்தம் நிலை பெற வேண்டும்' என்பதுதான் மிகக் குரூரமானது. அதற்காக எப்படியான கலவரம் நடந்தாலும் சரி, எத்தனை பேர் செத்தாலும் பிரச்சினையில்லை என்பதுதான் பயமூட்டக் கூடியது. காட்டுமிராண்டித்தனமானது. இதைச் சொன்னால் 'திமுக செய்யாத அராஜகமா, திரிணமூல் செய்யாத ரவுடித்தனமா' என்று பேச ஆரம்பித்துவிடுவார்கள். நம் வாயை அடைப்பார்கள். எந்தவொரு அரசியல்கட்சியும் ஏதாவதொரு வகையில் மக்களை வதைத்திருக்கும். இல்லையென்று மறுக்கவில்லை. ஆனால் இவ்வளவு மூர்க்கத்தனமாக, மாநிலமே திரண்டு எதிர்க்கும் போதும் துப்பாக்கியைத் தூக்குகிற தைரியம், அதை ஆதரிக்கும் மனநிலை மதவாதத்தை தவிர வேறு எந்தக் சித்தாந்தத்துக்கும் இருக்கும் எனச் சொல்ல முடியவில்லை.

ஒருவன் தம் மதத்தை பின்பற்றுவதில் எந்தப் பிரச்சினையுமில்லை. அவன் தம் மதத்தை உயர்வாக கருதுவதையும் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் அதை உணர்ச்சியூட்டும் ஒரு வஸ்துவாக, உங்களையும் என்னையும் பிரித்துவைக்கும் ஆயுதமாக மாற்றும் போது அதன் அபாயத்தை பற்றி பேச வேண்டியிருக்கிறது. எதிர்காலத்தில் அது உருவாக்கவிருக்கும் வினைகளை யோசிக்க வேண்டியிருக்கிறது. 'எல்லாமே மாற்று மதத்தின் சதி' என்று திரும்பத் திரும்பச் சொல்லும் போது எளிய மக்கள் நம்பத் தொடங்குகிறார்கள். polarization என்று இதைத்தான் சொல்வார்கள். 'இந்துத்துவம் பேசுகிறவர்கள் எல்லோரும் ஒரு பக்கம்' 'மற்றவர்கள் எல்லோரும் இன்னொரு பக்கம்' என்று நடுவில் தெளிவான ஒரு கோடு போடப் படுகிறது. மேம்போக்கான புரிதல் கொண்ட எளிய மக்களை 'நீ இந்து..இந்தப் பக்கம் வா' என்று இழுப்பதற்கான சூழல் இது. 

'போராட்டத்தை கிறித்துவம் முன்னெடுக்கிறது' 'இசுலாமியன் தீவிரவாதி' என்று திரும்பத் திரும்ப பேசும் போது 'ஒருவேளை அப்படித்தானா' என்று மிக எளிதில் நம்பத் தொடங்குவார்கள் சாமானிய மனிதர்கள். கோட்டுக்கு அந்தப் பக்கம் மக்களின் எண்ணிக்கை சிறுகச் சிறுக அதிகமாகும். 

இந்து மதத்துக்கு எதிராக பேசுகிறவனில்லை நான். இந்து மதத்தைச் சார்ந்தவன். நீ வணங்கும் அம்மனையும், முருகனையும்தான் நானும் வணங்குகிறேன். ஆனால் 'சக மனிதன் சாகும் போது அதைக் கொண்டாடு' என்று என் மதம் எனக்குச் சொல்லித் தந்தாக நினைவில் இல்லை. 'இன்னும் பத்துப் பேரை போடு' என்று எப்படி உனக்கு தோன்றுகிறது? உன் அம்மாவிடமிருந்து நீ உறிஞ்சியதில்லை இவ்வளவு வன்மத்தை. இடையில் உனக்குள் உருவாகி வளர்ந்து நிற்கும் இந்த வன்ம அரக்கனைப் பற்றி ஒரு கனமேணும் யோசிப்பதுண்டா? செத்துப் போனவனின் குழந்தைகளும் நம் குழந்தைகளைப் போலத்தானே? காய்ந்த இரத்தத்துடன் அவன் உடல் வீடு அடையும் போது தவித்துதானே போவார்கள்? குண்டுகள் துளைக்கும் போது அவனுக்கும் நம்மைப் போலத்தானே வலிக்கும்?  அவன் என்ன சித்தாந்தத்தை வேண்டுமானாலும் பின்பறட்டட்டும். அவனது குடும்பமும் நமது குடும்பங்களைப் போன்றதுதானே? எந்த தத்துவம் அடுத்தவனின் மரணத்தை கொண்டாட உனக்குச் சொல்லித் தந்திருக்கிறது? ஆயிரம் ஆண்டுகாலமாக வளர்ந்து வருவதாகச் சொல்லும் ஒரு மதம் இன்னொருவனைக் கொன்றுதான் வளர விரும்புகிறதா? கொல்லாமையை போதிக்கும் மதத்தை பின்பற்றுகிறவனா நீ?

பேச எவ்வளவோ இருக்கின்றன. மதக் கொடி கண்ணை மறைக்கும் போது எதையும் பேச வேண்டியதில்லை. இறந்து கிடப்பவனின் இரத்தம் காயட்டும். விடுங்கள். அவனது குழந்தைகளின் கண்ணீர் உலரட்டும்.

May 23, 2018

நேர்காணல்

கடந்த வாரம் ஈரோட்டிலிருந்து சில நண்பர்கள் வந்திருந்தார்கள். ஜெயமோகனின் தீவிர வாசகர்கள். கிருஷ்ணன்- இவரை பத்து வருடங்களுக்கு முன்பாக இருந்து ஜெயமோகனுடன் பார்த்திருக்கிறேன். அவர் ஒரு நாள் அழைத்து ஈரோட்டில்  'Meet the Author ' என்று எழுத்தாளர்களை அழைத்து அவர்களுடன் ஒரு நாள் முழுவதுமிருந்து உரையாடுவதாகவும் அதற்கு ஒரு நாள் வர இயலுமா என்று கேட்டார். எனக்கு சற்று குழப்பமாக இருந்தது. ஒரு நாள் பேசுகிற அளவுக்கு என்ன செய்திருக்கிறோம் என்கிற குழப்பம் அது. யோசித்துச் சொல்வதாகச் சொல்லிவிட்டு அடுத்தநாள் அவரிடம் பேசும் போது ஜூன் மாதம் வருகிறேன் என்று சொன்னேன். சனிக்கிழமையன்று ஈரோட்டிலிருந்து வந்துவிட்டார்கள். ஜூன் மாத நிகழ்ச்சிக்கு முன்னோட்டம் என நினைக்கிறேன். அப்பொழுது சூப்பர் 16 மாணவர்களுடனான உரையாடல் நிகழ்ந்து கொண்டிருந்தது. அவர்களும்  மாணவர்களுடன் பேசினார்கள். பிறகு கிளம்பி கோட்டுபுள்ளாம்பாளையம் குளத்துக்குச் சென்றோம். கருக்கல் ஏறிக் கொண்டிருந்தது. 


'உங்ககிட்ட சில கேள்விகள் கேட்கணும்' என்றார்கள். வைரவிழா தொடக்கப்பள்ளிக்கு திரும்பி வரும்போது கனத்த மழை. மழை சத்தத்திலேயே ஒரு வகுப்பறையில் அமர்ந்து பேசினோம். பேசும்போது விளம்பரப்படுத்திக் கொள்வதாக இருந்துவிடக் கூடாது என்றும், அளவு தாண்டி பேசிவிடக் கூடாது என்றும் ஓர் எச்சரிக்கையுணர்வு இருந்து கொண்டேயிருக்கும். இந்த நேர்காணலிலும் இருந்தது. இப்பொழுது வாசிக்கும் போது ஒரு திருப்தியான நேர்காணல் என்றுதான் உணர்கிறேன். 

எனது செயல்களைத் தொடர்ந்து பாராட்டும் எழுத்தாளர் ஜெயமோகன் தனது தளத்தில் வெளியிட்டிருக்கிறார். அவருக்கு என் மீது தனித்த அன்பு உண்டு. அவருக்கும், நேர்காணலை நடத்திய நண்பர்களுக்கும் நன்றி. ஒரு வகையில் உற்சாகமாகவும் உணர வைக்கிறது. 

                                                                ***

நிசப்தம் அறக்கட்டளை வா மணிகண்டன் இணையத்தில் அறிமுகமான பெயர் தான் என்றாலும் இவரை அணுகி அறிய ஒரு முறைபப் படுத்தப்பட்ட சந்திப்பும் கள நேர் காணலும் தேவையாகிறது. கடந்த 19-5-2018 சனி அன்று கோபி வைரவிழா துவக்கப் பள்ளியில் சில கல்லூரி மாணவர்களுடன் உரையாடிக்கொண்டிருந்த  அவரை சந்தித்தோம்.  ஈரோடு மாவட்டம்  கோபி அருகே கோட்டுபுள்ளாம்பாளையம்  என்கிற கிராமத்தில்  அடர் வனம் அமைந்து கொண்டிருக்கும் குளத்திற்கு நேரில் சென்று அவருடன் நாங்கள் நான்கு நண்பர்கள் உரையாடினோம்.

வருகிற 9-6-2018 அன்று அவர் ஈரோடு வருகிறார் அப்போது அவரின் படைப்புகள் மற்றும் அறக்கட்டளை செயல்பாடடுகள் குறித்து பிற நண்பர்களுக்கும் அறிமுகப் படுத்த இருக்கிறோம்.   அவரின் பொதுப்பணிகள் என்பது மருத்துவ உதவி , கல்வி உதவி மற்றும் சூழலியல் செயல்பாடுகள் என்கிற தளத்தில் இயங்குகிறது.  இப்போது அவரின் படைப்புகள் குறித்து உரையாடவில்லை, பொதுப்பணி குறித்து மட்டும் உரையாடினோம்.  

கிருஷ்ணன், பாரி, சிவா, ஈஸ்வரமூர்த்தி மற்றும் ஈரோடு நண்பர்கள்.
                                                     
                                                                   ***

நீங்கள் எவ்வளவு ஆண்டுகளாக இந்த பொதுப் பணியில் இருக்கிறீர்கள் ?

நான் பெங்களூருவில் நிலையமைந்து சுமார் 10 ஆண்டுகள் ஆகிறது, அப்போதிலிருந்து பெரும்பாலான சனி ஞாயிறும் தமிழகத்தின் பல்வேறு ஊர்களுக்கும் சுற்றியிருக்கிறேன். மிகுதியாக கோபியிலும் இருப்பேன். எனக்கு நினைவு உள்ளவரை அலுவலக பணி இல்லாத சமயம் தவிர்த்து எந்த ஒரு வார இறுதியிலும் பெங்களூரில் இருந்தது கிடையாது.

அறக்கட்டளை செயல்பாடுகள் எப்படி துவங்கின ?

சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பாக ஒரு குழந்தைக்கு சிறுநீரக அறுவை சிகிச்சைக்காக ஒன்பதாயிரம் ரூபாய் வசூல் செய்து கொடுத்தேன். அதன்பிறகு 2007 வாக்கில் ஒரு கல்லூரி மாணவன் ஜப்பானில் நடைபெறும் ஒரு ரோபோ செயலரங்கில் கலந்துகொள்ள வாய்ப்பு அமைந்துள்ளதாகவும் அதற்கு நிதி உதவி தேவை எனவும் அணுகினான். நானும் எனது வலைப்பூவில் ஒரு பதிவை இட்டேன் , எதிர்பாராவிதமாக நிதி வந்து சேர்ந்தது, உதவ விரும்புபவர்களை அம்மாணவனையே நேரடியாக தொடர்பு கொள்ளுமாறு தொடர்பை ஏற்படுத்திவிட்டேன், அம்மாணவனும் ஜப்பான் சென்று திரும்பினான், அதன் பிறகு இதுபோன்ற மருத்துவ/பொறியியல்  கல்வி உதவி தொடர்ந்தன. அப்போதெல்லாம் ஒரு முறைப்படுத்தப்பட்ட செயல்பாடு இருந்ததில்லை.

எப்போது முறைப்படுத்தப்பட்ட செயல்பாடு என்பதை கொண்டு வந்தீர்கள் ?

ஓரிரு ஆண்டுகள் இவாறு உதவி தேவைப்படும் நபர்களை உதவும் நபர்களிடம் நேரடியாக இணைத்துவிடுதலில் சில பின்னடைவுகள் இருந்தன. உதவி தேவைப்படுவோர் உதவுகிறவர்களிடம்  மேலும் நிதி கேட்டு தொந்தரவு செய்யத் துவங்கினர், கிடைக்கிற நிதியை சொகுசாக செலவழிக்கத்   துவங்கினர், இது அதிகரித்ததனால், 2010 வாக்கில் இருந்து இந்த நேரடி பயனாளி -நிதியாளர் இனிப்பை தவிர்த்து நானும் நண்பர்களும் கண்காணிக்க ஆரம்பித்தோம், பிறகு உரிய நபர்களுக்கு தேவையான தொகை மட்டும் அளிக்கத்  தூங்கினோம் , அப்போதில் இருந்து பணிச்சுமை கூடியது.

இந்த பொது செயல்பாடு என்பது உங்கள் எழுத்து வாழ்க்கையை பாதிக்கவில்லையா, இரண்டில் ஒன்றுதான் இயலும் என்கிற ஒரு இக்கட்டை சந்திக்க வேண்டியிருந்ததா , இரண்டில் எதோ ஒன்று என  முடிவெடுக்கவேண்டிய நிலையை நீங்கள் அடையவில்லையா ?

ஆம், ஏழு எட்டு ஆண்டுகளுக்கு முன் அவ்வாறு ஒரு முடிவை எடுக்க வேண்டி இருந்தது, கண் முன் காணும் கல்வி, மருத்துவ பயனாளிகளின் இக்கட்டும், உதவுவதால் ஏற்படும் நிறைவும் இலக்கியத்திற்கு மேல் என எண்ணுகிறேன், போக நானொன்றும் விஷ்ணுபுரம், நெடுங்குருதி போன்ற நாவல்களை படைக்கும் ஆற்றல் மிக்கவனல்ல என்பதும் எனக்குத் தெரியும், என் உயரம் எனக்கு தெரிந்ததால் நான்  பொதுசேவையை தேர்வு செய்தேன். ஆனால் எழுத்துதான் அடிநாதம். தொடர்ந்து எழுதிக் கொண்டுதான் இருக்கிறேன். அதை எப்பொழுதும் விடமாட்டேன். கவிதைகளை எழுதுவதில்லை என்கிற வருத்தம் எனக்குண்டு.

பெரும்பாலான அறிவு ஜீவிகளும், பொதுசேவையாளர்களும் இந்த இணைய உலகை எதிர்மறையாகவே பார்க்கின்றனர், நீங்கள் எப்படி ?

எனக்கு இதன் மீது பெரிய புகார்கள் கிடையாது, எனது வலைப்பூவின் வழியேதான் எனது அனைத்து செயல்பாடுகளும் நடைபெறுகிறது, அனைத்து தொடர்புகளும் கிடைக்கிறது.  பெங்களூரில் ஒரு சூழியல் அமைப்பு உள்ளது , சில இளம் கல்லூரி மாணவிகள் இதில் உள்ளனர், அதன் நிர்வாகி அவர்கள் பத்துபேரை முகநூல் மூலம் அழைப்பு விடுத்து களத்திற்கு வரச் செய்வார், அவர்களை பின் தொடர்ந்து சுமார் 40 பேர் களத்திற்கு வருகிறார்கள்.  அவர்களுக்கு மனித நேரம் பற்றாக்குறையாக இருந்ததே இல்லை. இதுவும் சமூக வலைத்தளம் மூலம்  தான் சாத்தியமாகிறது.

நீங்கள் இந்த மருத்துவம், கல்வி, சூழல்  என மூன்று துறைகளை  தேர்வு செய்தது எப்படி ?

மருத்துவ உதவி என்பது முழுக்க முழுக்க மனிதாபிமானத்தின் அடிப்படையில் தான், ஒப்பு நோக்க இதை குறைவாகவே செய்கிறோம். கல்வி உதவி என்பது நான் அத்தகைய மாணவர்களை  நேரில் தொடர்ந்து பார்க்கிறேன், உதாரணமாக இப்போது நீங்கள் சந்தித்த ஒரு கல்லூரி மாணவனின் தாய் தந்தை இருவருமே மனநோயாளிகள்,  அவர்களை கட்டித்தான் வைத்திருக்கிறார்கள், இவர்களை பராமரித்து படிப்பையும் தொடர்கிறான். இன்னொரு மாணவனின் வீட்டில்  ஒழுங்கான கதவு கிடையாது, பாதி வீட்டுக்குத்தான் கூரை உள்ளது, தனது பாடப் புத்தகங்களை பாலிதீன் பையில் இட்டு கட்டி வைத்திருக்கிறான், மழை அவனை அச்சுறுத்துகிறது. இவர்களுக்கு உதவுதல் அவர்களின் வாழ்வில் ஒளியேற்றக்கூடியது. ஒரு சுய திருப்திக்காக இதை செய்துகொண்டிருக்கிறேன். இதையே நான் மிகுதியாக செய்கிறேன். சூழல் பணிகள் , இந்த குளங்களை தூர் வாருவது போன்றவை  தானாக மக்களால் எழுப்பப்பட்ட கோரிக்கை. நான் களத்திற்கு சென்று உள்ள சொற்ப ஆட்களை வைத்து வேலையை துவங்கிய பின்னர் ஓரிரு வாரங்களில் கிராம மக்களின் உதவி கிடைக்கத் தொடங்குகிறது. அறக்கட்டளையில் இருந்து சிறிது நிதி ஒதுக்குகிறோம், அதிகாரிகளை சந்தித்து அனுமதி பெறுகிறோம், பணி நிகழ்கிறது.

ஏதாவது எதிர்பாரா உதவிகள் உங்களுக்கு கிடைத்துள்ளதா ?

கிட்டத்தட்ட அனைத்துமே அப்படிதான், இப்போதும் உதவி தேவைப்படுகிறவர்களை விட உதவுபவர்களின்  எண்ணிக்கையே எனக்கு அதிகம். எனது வலைப்பூவை படித்துவிட்டு அரசு அதிகாரிகள் , ஆசிரியர்கள் தொடர்புகொண்டு அரசு அனுமதிபெறுவது போன்ற பணிகளை செய்து தருகிறார்கள் , கணக்கர் ஒருவர் தானாக தொடர்புகொண்டு அறக்கட்டளைக் கணக்குகளை இலவசமாக பார்த்துத் தருகிறார். இப்போது நீங்கள் சந்தித்த கணேசமூர்த்தி, மகேஷ் ஆகியோர் குளத்தை தூர்வார தாமாக முன்வந்து இப்போது அவர்கள்தான் முன்னெடுக்கிறார்கள், விரைவில் இங்கு அடர்வனம் அமையும்.

ஏதாவது எதிர்பாரா எதிர்ப்புகள், முட்டுக்கட்டைகள் உங்களுக்கு ஏற்பட்டுள்ளதா ?

பெரிதாக எதுவும் இல்லை, ஆனால்  சாதிப் பிரிவினை கிராமங்களில் பெரிய இடையூறு என நினைக்கிறன், அனைத்துச்  சாதியினரும் இணைந்து செயல்படமாட்டார்கள், நம்மிடம் சரி எனச் சொல்வார்கள், பின்னர் வரமாட்டார்கள், இது எனக்கு தாமதமாகத்தான் தெரிந்தது. அரசியல் கட்சிகள் அவர்களை அழைக்கவில்லை என்றால் சாத்தியமானவரைக்கும்  இடையூறு செய்வார்கள், அவர்களுக்குத் தேவை இதை அவர்கள் தலைமையில் அல்லது உதவியில் செய்கிறோம் என கிராமம் அறியச் செய்ய வேண்டும் என்பது. இப்போது பணிகளை நாங்கள் செய்து பெயரை அவர்களுக்கு கொடுப்பதில் எந்த தயக்கமும் இல்லை. அவர்களை எதிர்த்தோ தவிர்த்தோ நாம் இயங்க முடியாது. மேலும் ஒரு கள அனுபவம் இன்னொன்றுக்கு உதவாது, ஒவ்வொரு இடத்திலும் புதிதாக ஒரு இடையூறு வரும், ஆனாலும் பொதுவான அனுபவம் கைகொடுக்கிறது.

நீங்கள் தொடர்ந்து இயங்கினால் இடையூறுகளைவிட உதவிகள் மிகுதியாக வரும். நம்ப முடியாத தீவிரத்த்துடன் உதவுபவர்கள் இருக்கிறார்கள். உயர்  அதிகாரிகள் எனது வலைப்பூ வழி தொடர்பு கொண்டு சொந்த செலவில் பஸ்ஸிலும் மூன்றாம் வகுப்பு ரயிலிலும்  வந்து, ஈரோட்டில் சொந்தச்செலவில் தங்கி களைப்புடன்  இங்கு வந்து மாணவர்களுக்கு வழிகாட்டுகின்றனர்.

நீங்கள் பொதுவாழ்வில் முன் மாதிரி என யாரை கொள்கிறீர்கள் ?

பொது வாழ்வில் எங்கள்  பகுதியைச் சார்ந்த  லக்ஷ்மண அய்யர்

நீங்கள் பிற என்ஜிஓ- களுடன் நிலையான தொடர்பில் இருக்கிறீர்களா ?

அவ்வாறு இல்லை, நன் கூடுமானவரை பொதுத் தொடர்புகளை தவிர்க்கிறேன், உதவிகேட்டு ஏராளமானவர்கள் தொடர்புகொள்கிறார்கள், சில இலக்கியவாதிகளுக்கும் தனி நபர்களுக்கும் உதவி செய்து அதை அவர்கள் தவறாகப் பயன்படுத்திய அனுபவமும் எனக்குண்டு. கூடுமானவரை நான் தனித்தே இயங்குகிறேன். நிசப்தம் என்பது என்.ஜி.ஓ இல்லை என்பதிலும் தெளிவாக இருக்கிறேன். 

உங்களுக்குள்ள அரசியல் எதிர்ப்புகள் ?

கடந்த சட்டமன்ற  தேர்தலில் காங்கிரஸ் சார்பில் இங்கு போட்டியிட்ட திரு. சரவணனுக்காக நண்பர்களுடன் பிரச்சாரம் செய்தேன், அவர் வாக்குக்குப் பணம் கொடுக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்து தோற்றார். எனது தந்தைக்கு சில உறுதியான அதிமுக தொடர்புகள் உண்டு. ஆகவே அவருக்கு  இதில் மட்டும் என் மீது லேசான அதிருப்தி  உண்டு. மற்றபடி பெரிய எதிர்ப்புகள் இதுவரை இல்லை, ஆனால் நான் எதிர்பார்க்கிறேன்.

உங்கள் செயல்பாடுகளில் ஒரு சித்தாந்த நம்பிக்கையோ அல்லது சீர்திருத்தத் திட்டமோ இருப்பது  போலத் தெரியவில்லை, வேண்டுமென்றே கருத்தியலை தவிர்க்கிறீர்களா ?  

எனது தந்ததையார் இறந்த போது துக்கம் விசாரிக்க எம் ஜி ஆர் காலனியை சேர்ந்த லம்பாடி இனத்தவர் வந்திருந்தனர். அவர்கள் திண்ணையில் சமமாக அமர்ந்தனர், எனது உறவினர்களில் சிலர் தாமாக கலைந்து சென்றுவிட்டனர். எனது வீட்டில் கூட , சாதியில் முன்மாதிரியாக ஒரு மாற்றத்தை கொண்டுவருவதே என்னால் இயலவில்லை, இதில் சமூக மாற்றம் குறித்த சிந்தனை எல்லாம் எனது சாத்திய விளிம்புக்கு அப்பாற்பட்டது. எதுவானாலும் முன்மாதிரியாக நான் என்னிலும் எனது சுற்றத்திலும் மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிவிட்டே வெளியில் முயல வேண்டும். இன்னமும் காலம் இருக்கிறது. தீவிர அரசியல், கருத்தியல் என்பதெல்லாம் நம்மில் எதிர்மறைப் பாதிப்பை செலுத்தி தேக்கமடையச் செய்துவிடும், அது போக மனச் சோர்வையும் ஏற்படுத்தும் என நான் அஞ்சுகிறேன். இப்போது குன்றா ஊக்கத்துடன் செயல்பாட்டுக் கொண்டிருக்கிறேன். 

நீங்கள் எதிர்காலத்தில் உள்ளாட்சி தேர்தல் போன்ற ஏதேனும் அரசியலில் செயல் படும் திட்டம் உள்ளதா ?

தேர்தல் பிரச்சாரமே அரசியல்தானே? அதை எப்பொழுதோ தொடங்கிவிட்டேன். சாசுவதமான முன்மாதிரியான செயல்பாடுகளை சில ஆண்டுகளில் செய்துவிட்டு தேவைப்பட்டால் அதில் ஈடுபடலாம்.

நீங்கள் உங்கள்  பயனாளிகள் குறித்து சில எதிர்மறை விமர்சனங்களை உங்கள் வலை பூவில் பதிவிட்டதை நான் படித்திருக்கிறேன் ? (பயனாளிகளை புனிதப்படுத்தும் எண்ணம் இல்லாதது குறித்து இக்கேள்வி) 

ஆம், பயனாளிகளில் சுமார் 5 சதத்திற்கும் குறைவாகவே பயனடைந்த பின்னர் நிசப்தத்தைத் தொடர்புகொள்கின்றனர். நல்ல பணியில் அமைந்த மாணவர்களை, தற்போதைய மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருக்குமாறு நாங்கள் கோருவோம், மிகச் சிலரே ஏற்றுக்கொண்டு இதை செய்கிறார்கள், இதனால் உதவி பெறும் தற்போதைய மாணவர்கள் சலிப்படைகிறார்கள். வேறு நபர்களுக்கு அவர்கள் உதவுதல் குறைவே, பயன் பெற்றுவிட்டு சுவடற்று மறைத்தல் என்பதே மிகுதி. நிசப்தம் எதிர்பார்ப்பதெல்லாம், பயனாளிகள் தங்களது நிலை சீரமைந்துவிட்ட பின்னர் குறைந்த பட்சம் இருவருக்கு தாமாக அதேபோல உதவ வேண்டும் என்பதே.

அனுபவம் கற்றுக்கொடுத்ததால் இப்போது மாணவர்களிடம் நிலையான ஒரு தொடர்பையும், வட்டத்தையும் ஏற்படுத்திக்கொண்டிருக்கிறோம், எதிர்காலத்தில் என்ன நடக்கிறது எனப் பார்ப்போம்.

இப்பபோது என் ஜி ஓ மற்றும் அறக்கட்டளை என்றாலே, ஊழல், வரி ஏய்ப்பு என்கிற அர்த்தம் வருகிற படி அவர்கள் செயல்பாடுகள் உள்ளது, இதுபற்றி நீங்கள் என்ன எண்ணுகிறீர்கள் ?

இதில் நான் உடன்படுகிறேன், எனக்குத் தெரிய சென்னை வெள்ளத்தில் ஒரு அமைப்பு 3 கோடி நிதி சேர்த்து, ஆனால் என்ன ஆனது என்கிற தகவல் இதுவரை இல்லை, கணக்கும் இல்லை.

உங்கள் குழு உறுப்பினர்களின் உற்சாகத்தையும் கட்டுக் கோப்பையும் எப்படி தக்கவைக்கிறீர்கள் ?

உண்மையில் எங்கள் குழு உறுப்பினர்கள் இதுவரை ஒரு கூட்டம் போட்டு ஒரே சமயத்தில் அனைவரும் நேரில் சந்தித்துக் கொண்டதில்லை. எல்லாமே இணையம், செல் பேசி மூலம் தான். அனால் அப்பகுதி பணிகளை அவர்கள் செய்து விடுகிறார்கள், பெரிதும் இது பயனாளிகளை விசாரிப்பது தொடர்பானது, எனவே எனக்கு பணிச்சுமை பெரிதும் குறைகிறது.

எதிர்காலத்தில் நிசப்தத்தை மாற்றி அமைதிக்கவோ விரிவாக்கம் செய்யவோ ஏதேனும் திட்டம் உள்ளதா ?

அவ்வாறு எதுவும் இப்போதைக்கு இல்லை, ஆலோசனைகள் வரவேற்கப்படுகிறது.

தற்போதைய சமூக போக்கு மற்றும் மக்களின் நடத்தை குறித்து உங்களுக்கு திருப்தி உள்ளதா ?

50% ஆம் 50 % இல்லை. ஆனாலும் இந்த நான்கைந்து ஆண்டுகளாகத்தான் சமூகத்தை நேரடி அனுபவம் சார்ந்து கவனிக்கிறேன். வரவேற்கத்தக்க பல மாற்றம் வந்துள்ளது. பொதுவாக எனக்கு திருப்தியே.

நீங்கள் சந்தித்ததிலேயே மிகப் பெரிய இக்கட்டு என்பது என்ன அதை எப்படி கடந்து வந்தீர்கள் ?

3 ஆண்டுகளுக்கு முன் எனது தந்தைக்கு ஈரல் புற்று நோய் இருப்பது அறிந்தோம், அப்போதே அது அபாய எல்லையை கடந்து விட்டது. கோவை,பெங்களூர் கோபி என அலைந்து கொண்டிருந்தேன், கோவை மருத்துவர்கள் கை விரித்துவிட்டனர். கோபி மருத்துவ நண்பர் ஒருவர் நீ அழைத்து வா நான் பார்த்துக்கொள்கிறேன் என்றார். அது பலனளிக்கத்  துவங்கியது, நிசப்தததுடன் தொடர்புடைய பெரியவர் ஒருவர் உனது தந்தை ஒருவாரத்தில் எழுந்து நடந்து விடுவார் பார் என்றார், இணையம் வழி  தொடர்பில் உள்ள நண்பர்கள் உடன் இருந்தார்கள், எனது தந்தை ஒரு வாரத்தில் தானாக நடக்கும் அளவுக்கு தேறி விட்டார். அந்த ஒரு வருட காலத்தில் இதை நிறுத்தி விடலாமா என எண்ணினேன். ஆனால் நண்பர்கள் தான் உறுதியாக உடன் இருந்தனர், இந்த செயல்பாடுகள் பெரிதும் எனக்கொரு ஊக்கமாக இருந்தது, அந்த ஒரு வருட காலத்தில் கூட நிசப்தம் பணிகளை நான் நிறுத்தவில்லை. கடந்த இரண்டாண்டுகளுக்கு முன் எனது தந்தையர் இறந்துவிட்டார்.

உங்கள் கனவுத் திட்டம் ?

ஒரு கிராமத்தை தத்தெடுத்து சூழலை வளப்படுத்தி அதை ஒரு சுய சார்புள்ள கிராமாக மாற்றுவது.

மருத்துவ உதவி கோரும் பயனாளிகளின் சோர்வூட்டும் கதைகளை   கேட்க நேர்வதால் அந்த மனச்சோர்வு உங்களுக்கும் தொற்றும் வாய்ப்புண்டா ?

ஆம், பெரிதும் இப்போது இதை குறைத்துக்கொண்டுள்ளோம், கல்வி உதவியில் அதிக கவனம் செலுத்துகிறோம். உதவி தேவைப்படும்  நபர் அல்லது குழந்தையின் படத்தை அனுப்புகிறார்கள். இது நம்மை உணர்ச்சிகரமாக பாதிக்கக்கூடியது. இதில்  இருந்து தப்புவது கடினம். மேலும் பலருக்கு நாம் இயலாது என்கிற பதிலை சொல்ல வேண்டி இருக்கிறது, அப்போது நானே ஈரமற்றவனாக மாறிக்கொண்டிருக்கிறேனா என்கிற ஐயம் எனக்கு வரும். அது உண்மையும் கூட, ஆனால் அதை தவிர்க்க இயலாது. இப்போதெல்லாம் நான் கவிதைகள் எழுதாததற்கு இதுவும் ஒரு காரணம்.

அறக்கட்டளைக்கு வரப்பெறும் நிதியின் மூலத்தை கண்காணிக்கும் வழக்கம் இருக்கிறதா? குறிப்பாக அந்நிய தேசத்து நபர்கள் / அமைப்புகளிடமிருந்து நிதி பெறப்படுமாயின் அதை கண்காணிப்பது அவசியம் என கருதுகிறேன்.

அறக்கட்டளைக்கு பல்வேறு தளங்களிலிருந்து நிதி வருகிறது. 500 ரூபாயிலிருந்து 4 லட்சம் வரை ஒரு நபரிடமிருந்தே நிதி வரப்பெற்ற அனுபவம் உண்டு. தான் மாதந்தோறும் தொழிலில் அடையும் லாபத்தில் பத்து சதத்தை நிசப்தத்திற்கு அனுப்பி வைக்கும் நபர்களை அறிவேன். திரும்பி வராது என நினைத்த கடன்தொகை கிடைக்கப்பெற்றால் அறக்கட்டளைக்கு அனுப்பி வைக்கும் நண்பர்களை அறிவேன். ஒருவகையில் திருப்பதி உண்டியல் போல நிசப்தம் ஆகிவிட்டதாக நண்பர்களிடம் கிண்டலாக சொல்லிக் கொண்டிருப்பேன்.

நிதியின் மூலத்தை பொறுத்தவரை அதை குறிப்பிட்டு கண்காணிக்கும் வழக்கம் இதுவரை இல்லை. ஆனால் பெறப்படும் நிதி அனைத்தும் மின்னணு பரிவர்த்தனை(online transaction) மூலமாக மட்டுமே பெறப்படுவதால் இதில் தவறு நேர வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன். வெளிப்படையாக இருப்பதால் அனுப்புகிறவர்களும் தயங்கக் கூடும்.  இதுவரை ஒரு ரூபாய்கூட பணமாக (cash) பெற்றுக் கொண்டதில்லை. மேலும் இதுவரை அந்நிய அமைப்புகள் எதுவும் நிசப்தத்திற்கு நிதி அனுப்பியதில்லை என்று சொல்ல முடியும்.

பனிரெண்டாம் வகுப்பு தேர்வுகளுக்கு பயிற்சி, நீட் தேர்வுக்கான பயிற்சி, ஐஏஎஸ் தேர்வுகளுக்கு பயிற்சி போன்றவை அறக்கட்டளையின் சார்பில் முன்னெடுக்கப்படுகின்றன. இவை மறைமுகமாகவேனும் மாணவர்களிடம் மதிப்பெண் பெறும் பந்தயத்தில் ஓடுவதையோ அல்லது உயர்லட்சிய வேலைகளை நோக்கி ஓடுவதையோ மட்டும் ஊக்குவிப்பதாக ஆகாதா? என் உதவிபெறும் ஒரு மாணவர் சராசரி மதிப்பெண்கள் பெற்று சராசரி லடசியங்கள் கொண்டிருக்கக் கூடாது?

பயிற்சி வகுப்புகள் மதிப்பெண்களுக்காக மட்டும் நடப்பதாக சொல்ல முடியாது. அது ஒரு முகாந்திரம் மட்டுமே. இந்த வருடம் ‘சூப்பர் 16′ பயிற்சி பெறும் மாணவர்களையே எடுத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொருவருக்கும் பிரத்யேகமான பின்னணியும் லட்சியங்களும் உண்டு. விளையாட்டில் சாதிக்க விரும்பும் ஒருவர், ஐஐடியில் இடம்பெறும் லட்சியத்துடன் ஒருவர், விவசாய படிப்பு, மீன்வளத் துறை படிப்பு என கலவையான மாணவர்களே உள்ளனர். பத்தில் நான்கு மாணவர்கள் சிவில் சர்விஸ் தேர்வுகளுக்கு தயாராவதால் அதுசார்ந்த பயிற்சி அளிக்கப்படுகிறது.

உதவிபெறும் பெரும்பாலான மாணவர்கள் கிராமபுரத்தை சேர்ந்தவர்கள். நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு புறவுலக அறிமுகமற்றவர்கள் இவர்கள். முக்கியமாக இப்பயிற்சி வகுப்புகள் மாணவர்களுக்கு உலகை துணிவுடன் எதிர்கொள்ளும் தன்னம்பிக்கை அளிப்பதையே பிரதானமாகக் கொள்கிறேன். மற்றபடி உயர்ல்டசிய வேலைகள் மட்டும் என்றில்லை, நிசப்தம்வழி உதவிபெற்று படித்த மாணவனொருவன் உள்ளூர் நிறுவனமொன்றில் கணக்காளராக பணிபுரிவதை உதாரணமாக சொல்ல முடியும். அந்த வேலையே தனக்கு நிறைவளிப்பதாக அந்த மாணவன் சொல்லிவிட்டான். அதில் எனக்கும் உடன்பாடே.

பெரும்பான்மை மக்கள் பச்சாதாபம் காட்ட முடிகிற விஷயங்களுக்கு மட்டுமே நிசப்தம் உதவுகிறதா? கல்வி, மருத்துவம், சூழியல் என அனைத்தும் popular activism வகைமையில் வருவதாக தெரிகிறதே.

கல்வி, மருத்துவம் சார்ந்த உதவிகளை செய்வது மிகவும் இயல்பாய் அமைந்ததே. இதை நான் திட்டமிடவில்லை. தொடர்ந்து அதுசார்ந்த மறுக்கமுடியாத கோரிக்கைகளையும் மனிதர்களையும் சந்தித்து வருவதால் இதை செய்து வருகிறேன். பொது சமூகம் விரும்பும் விஷயங்களுக்கு மட்டும் அறக்கட்டளை உதவுவதாக சொல்லமுடியாது. உதாரணமாக எம்.ஜி.ஆர் காலனியைச் சேர்ந்த கழைக்கூத்தாடி மாணவர்களுக்கு தொடர்ந்து கல்வி, விளையாட்டு சார்ந்த உதவிகளை செய்து வருவதை சொல்லலாம். இது popular activism வகைமையில் வராது என்றே நினைக்கிறேன். அப்படி கட்டாயம் உதவி தேவைப்படும் பிரபலமல்லாத கோரிக்கை ஏதேனும் இருந்தால் சொல்லுங்கள். பரிசீலித்து செயல்பட நான் தயாராகவே இருக்கிறேன்.

                                                                       ****

குன்றா ஊக்கத்துடன் 10 ஆண்டுகள் செயல்படுவது என்பது அசாதாரணமானது, மேலும் முதலில் மாற்றம் என்னில்  இருந்து துவங்க வேண்டும் அதை முன்வைத்தே பிறரை அணுகவேண்டும் என்கிற கொள்கைக்கு மணிகண்டன் உதாரணம். பெரிய இலக்குகள் இல்லை கண்முன் உள்ள சிறிய இலக்குகளை நோக்கி சிறிது சிறிதாக முன்னேறுதல் என்பது அவருக்கு இது வரை பலனளித்துள்ள  கொள்கை.  இதெல்லாம் காந்தியிடம் இருந்து இவர் பெற்றுக் கொண்டிருக்க வேண்டும்.   

கிருஷ்ணன்    

May 22, 2018

ரத்த சரித்திரம்

எவ்வளவு மோசமான நிலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்? எவ்வளவு பெரிய முரடர்கள் நம்மை ஆண்டு கொண்டிருக்கிறார்கள்.

நாம் ஒன்றை எதிர்த்துக் குரல் கொடுக்கும் போது அரசாங்கம் துப்பாக்கியை எடுத்து வந்து சுட்டுக் கொல்கிறது. கொன்றுவிட்டு 'வன்முறையை தடுக்கதான் சுட்டோம்' என்கிறார்கள். கலவரங்களை ஒடுக்கும் போது ஒன்றிரண்டு பேர்கள் இறந்து போனதாகச் சொல்வார்கள். ஆனால் தூத்துக்குடியில் இதுவரைக்கும் எட்டு அல்லது ஒன்பது பேர்கள் செத்திருக்கக் கூடும் என்கிறார்கள். முழுமையான கணக்கு தெரியவில்லை. ஒன்பது குடும்பங்களைத் தெருவில் நிறுத்தியிருக்கிறார்கள். அவர்களது குழந்தைகளை அனாதைகளாக்கியிருக்கிறார்கள். பச்சையான அநீதி இது. மாலை வரைக்கும் போலீஸ் வேட்டையாடிக் கொண்டிருப்பதாக நண்பர்கள் சொல்கிறார்கள். மேலிடத்துக்குத் தெரியாமல் இருக்க வாய்ப்பே இல்லை. இவ்வளவு குரூரமான அரச வன்முறை சமீப காலத்தில் இன்றுதான் நிகழ்ந்தேறியிருக்கிறது. அவரவர் சொந்த ஊரிலேயே உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடுவதை போன்ற அவலம் வேறு எதுவும் இருக்க முடியாது. தமிழக அரசு அதைச் செய்து காட்டியிருக்கிறது. 

முழுமையான விவரங்கள் நாளை தெரியக் கூடும் அல்லது கடைசி வரைக்கும் விவரங்கள் வெளியில் தெரியாமலேயே பார்த்துக் கொள்வார்கள். இனி கதைகள் கட்டவிழ்த்துவிடப்படும். இறந்து போனவர்கள் மீதுதான் தவறு என்று வரிசையாக செய்திகள் வரும். 'அவர்கள் ஒன்றும் தியாகிகள் இல்லை' என்று எழுதுவார்கள். இப்பொழுதே கூட 'மக்கள்தான் வன்முறையில் ஈடுபட்டார்கள்' என்று ஒரு தரப்பினர் பேசாத தொடங்கியிருக்கிறார்கள். 

இப்படியான polarizationதான் மிக அபயாகரமானது. நமக்குள்ளேயே பிரிந்து கிடக்கிறோம். தம் சொந்த மக்களையே குருவி சுடுவதைப் போல சுட்டுத் தள்ளியவர்களை எதிர்த்துதான் இந்தத் தருணத்தில் பேச வேண்டுமே தவிர மக்களை குற்றவாளிகளையாக்கி கூண்டில் ஏற்றிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. இதை 'தூத்துக்குடி சம்பவமாக' மட்டும் பார்க்க முடியவில்லை. சகல மக்களுக்கும் இதுவொரு எச்சரிக்கை மணி. எதிர்த்து பேச எத்தனித்தால்  'இதுதான் கதி' என்று நேரடியாக மிரட்டியிருக்கிறது அரசாங்கம்.

ஒன்றைப் புரிந்து கொள்ளாமல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். சாமானிய மனிதனின் மனதில் பயத்தை விளைவித்து அவனை ஒடுக்கிவிடலாம் என்று நம்புவதை போன்ற முட்டாள்தனம் எதுவும் இருக்க முடியாது. தனிமனிதர்களை அப்படி மிரட்டலாம். சமூகத்தையே வன்முறையைக் கட்டி மிரட்ட முயற்சித்தால் ஒரு கட்டத்தில் திமிறிவிடுவார்கள்.  எல்லாவற்றுக்கும் எல்லையுண்டு. நீறு பூத நெருப்பாக விரவிக் கிடந்த வெறுப்பை ஊதி விட்டிருக்கிறார்கள். இந்த வடு என்றைக்கும் அழியாது. தமிழக வரலாற்றில் ஒரு கருப்பு தினம் இன்று. தமிழக அரசு தனது முடிவுரையை தூத்துக்குடி மக்களின் ரத்தத்தில் எழுதியிருக்கிறது. 

துப்பாக்கிச் சூட்டில் இறந்து போனவர்களுக்கு அஞ்சலிகள். அவர்களது குடும்பங்கள் மனவுறுதி பெறட்டும். 

போராட்டக்காரர்கள் மீது  'பிரிவினைவாதிகள்' 'தேசத்துரோகிகள்' என்று தயவு செய்து முத்திரை குத்த வேண்டாம். ஸ்டெர்லைட் மீது போராட்டக்காரர்கள் மட்டுமே எதிர்ப்பைக் காட்டவில்லை. அது சூழலைக் கெடுத்திருப்பதாக உச்ச நீதிமன்றம் நூறு கோடி ரூபாய் தண்டம் விதித்திருக்கிறது. ஆலை இனி இயங்க அனுமதிக்க முடியாது என்று மாசுக் கட்டுப்பட்டு வாரியம் சொல்லியிருக்கிறது. அப்பேர்ப்பட்ட ஆலை இனி இயங்கக் கூடாது என்றுதான் அந்த ஊர் மக்கள் கேட்கிறார்கள். அதுவும் திடீரென்று கிளம்பி வரவில்லை. ஆண்டுக்கணக்கில் ஆலையை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களைத்தான் மனசாட்சியே இல்லாமல் சுட்டுத் தள்ளியிருக்கிறார்கள்.

ஒரு வினாடி யோசித்துப் பார்க்கலாம்-   வீட்டு முன்பாக குப்பை கிடந்தால், வீதியில் சாக்கடை தேங்கினால் புகார் அளிக்க விரும்புகிறவர்கள்தான் நாம். அந்த ஊரில் காற்றும் நீரும் கெட்டு, மக்களுக்கு அதன் பாதிப்புகள் தெரிகின்றன என்கிறார்கள். தம் குழந்தைகள் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்று பயப்படுகிறார்கள். அவர்கள் அந்த ஆலையை மூடச் சொல்லிக் கேட்பதில் என்ன தவறு இருக்கிறது? நாமாக இருந்தாலும் அதைத்தானே கேட்டிருப்போம்?

இன்றைய அரசு எந்தவிதத்திலும் வலுவில்லாதது. மக்களின் போராட்டங்களை, எதிர்ப்புணர்வை கையாளத் தெரியாத அரசு இது. வலுவில்லாதவன் தன்னை எதிர்த்து பேசுகிறவனை கையில் கிடைத்ததை எடுத்து அடிப்பதைப் போல இந்த அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. துரதிர்ஷ்டவசமாக அவர்களிடமும் துப்பாக்கியும் சுட்டுத் தள்ள காவலர்களும் இருக்கிறார்கள்.

தூத்துக்குடி சம்பவங்களின் சில காட்சிகளை பார்க்க நேர்ந்தது. விரல்களுக்குள் பயம் பரவுகிறது. குரூரமான காட்சிகள் அவை. காவல்துறையின் வேகம் அச்சமூட்டுகிறது. மக்களைக் காக்க வேண்டியவர்கள் சர்வசாதாரணமாக துப்பாக்கியின் ரவைகளை அவர்கள் நெஞ்சில் செலுத்துகிறார்கள். இவையெல்லாம் ஆட்சியாளர்களுக்குத் தெரியாமலா நடந்திருக்கிறது?. இன்றைக்கு தூத்துக்குடியில் நிகழ்ந்தது நாளை எந்த ஊரில் வேண்டுமானாலும் நடக்கலாம். அங்கு பாய்ந்த தோட்டாக்கள் நம் நெஞ்சங்களை குறி பார்க்க எத்தனை நாட்கள் பிடிக்கும்?

எழுதியும் பேசியும் வருவதனால் எந்த மாறுதலும் நிகழப் போவதில்லை. ஒவ்வொரு தரப்பு மக்களும் இந்த அநியாயங்களை புரிந்து கொள்ள வேண்டும். சகல திசைகளிலும் அக்கிரமங்களைப் பற்றி பேச வேண்டும். அதுதான் ஒரே வழி. படுகொலை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. உண்மையிலேயே பயமூட்டுகிற சம்பவம் இது. எதிரிக்கும் கூட இப்படியொரு சூழல் அமைந்துவிடக் கூடாது என்று பதறுகிறேன்.  

தமிழக அரசுக்கு கடுமையான கண்டனங்கள். இப்படியொரு சம்பவத்துக்கு முழுமையான பொறுப்பையும் அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆட்சியில் தொடர தமிழக அரசுக்கு எந்தத் தார்மீக உரிமையுமில்லை. எதிர்காலத்திலாவது தார்மீகம் என்ற சொல்லுக்கெல்லாம் அர்த்தம் தெரிந்தவர்கள் நம்மை ஆள வேண்டும் என்று கடவுளை பிரார்தித்துக் கொள்கிறேன்.

கண்களைத் தோண்டுகிறீர்களா?

தமிழகத்தில் 890 பள்ளிகள் மூடப்படும் என செய்தி உலவிக் கொண்டிருக்கிறது. அரசு தொடக்கப்பள்ளிகளில்  சேர்க்கை குறைவதனால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று சொல்கிறார்கள். குறைந்த எண்ணிக்கையில் மாணாக்கரைக் கொண்ட பள்ளிகள் அரசுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்துக்கிறதாம். கல்விக்கு செலவிடப்படும் தொகை உங்களுக்கு சுமையா? எவ்வளவு கேவலமான சாக்கு இது?

ஓர் அரசாங்கம் அப்படிக் கருத்துமானால் அது மிகப்பெரிய சாபக் கேடு. கிராமப்புற கல்விக்கான செலவு என்பது இந்தச் சமூகத்துக்கான முதலீடு இல்லையா? இல்லாதவர்களுக்கும், எளியவர்களுக்கும் படிப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பது கூடுதல் சுமையா? 

தமிழகத்தில் இன்னமும் சிறு கிராமங்கள் பல்லாயிரக்கணக்கில் இருக்கின்றன. ஐம்பது அல்லது நூறு மக்கள் வாழ்கிற ஊர்களில் கூட அரசுப்பள்ளிகள் உண்டு. இந்தப் பள்ளிகள் இருப்பதனால்தான் அடிப்படைக் கல்வியை பெரும்பாலானவர்கள் பெற்றிருக்கிறார்கள். இப்பொழுது அந்தப் பள்ளிகளில் பத்து அல்லது பதினைந்து பேர்கள் படிக்கிறார்கள் எனில் மூடப் போகிறார்கள். அந்த மாணவர்களை பக்கத்து ஊர்களில் இருக்கும் பள்ளிகளுக்கு மாற்றுவார்கள். இது அனைவருக்கும் கல்வி என்கிற கொள்கைக்கு எதிரான மிகப்பெரிய செயல்பாடு. பெண் குழந்தைகளாக இருந்தால் நம்மவர்கள் என்ன சொல்வார்கள் என்று தெரியாதா?  'பொம்பள புள்ளைய வெளியூருக்கு அனுப்பி படிக்க வைக்க வேண்டியதில்லை' என்று படிப்பை நிறுத்தும் சாத்தியங்கள் மிக அதிகம். இதையெல்லாம் யோசிக்காமல் பள்ளிகளை மூடுவதற்கான பூர்வாங்க செயல்பாடுகள் தொடங்கப்படுமானால் அது குறித்து தீவிரமான விவாதங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். எதிர்ப்புகள் காட்டப்பட வேண்டும். 

ஊருக்கு ஊர் சாராயக் கடையைத் திறக்க பிரயத்தனப்படும் இதே அரசாங்கம்தான் பல ஊர்களில் இருக்கும் பள்ளிகளை மூட முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது என்று தெரிய வரும் போது எரிச்சல் வராமல் என்ன செய்யும்?

தமிழகம் அத்தனை செலவுகளையும் உருப்படியாகத்தான் செய்து கொண்டிருக்கிறதா? 

ஆர்.டீ.ஈ (Right to Education) என்றொரு திட்டம்.  ஒவ்வொரு தனியார் பள்ளியும் இருபத்தைந்து சதவீத இடங்களை அரசாங்கத்துக்கு கொடுத்துவிட வேண்டும். அதில் படிக்க வசதியில்லாதவர்கள் தமது பிள்ளைகளைச் சேர்த்துக் கொள்ளலாம். அந்த இடங்களுக்கான பணத்தை மத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள் பள்ளிகளுக்கு கொடுத்துவிடும். தனியார் பள்ளிகள் பள்ளிக்கூடம் நடத்த அரசாங்கம் ஏன் பணம் கொடுக்க வேண்டும்? இது புரியவே இல்லை. 2016-17 ஆம் ஆண்டு தனியார் பள்ளிகளுக்கு கொடுக்கப்பட்ட தொகை மட்டும் நூற்றியென்பது கோடி ரூபாய். அதற்கு முந்தைய ஆண்டு கொடுக்கப்பட்ட தொகை நூற்றியிருபத்தைந்து கோடி ரூபாய். இப்படி ஒவ்வொரு வருடமும் பல கோடி ரூபாய்களை தனியார் கல்வி முதலாளிகளுக்கு அரசாங்கம் தாரை வார்க்கிறது. தனியார் பள்ளிகளுக்கு ஒதுக்கப்படாமல் இருந்த தொகையை ஒதுக்கிக் கொடுத்ததற்காக தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனுக்கு தனியார் பள்ளிகள் இணைந்து மிகப்பெரிய பாராட்டு விழாவை நடத்தின. இதையெல்லாம் எப்படிப் புரிந்து கொள்வது? பின்னணியில் என்ன நடந்து கொண்டிருக்கிறது?

கல்வி முதலாளிகளுக்கு எடுத்து நீட்டும் பணத்தை அரசுப் பள்ளிகளுக்கு ஒதுக்க வேண்டியதுதானே? தனியார் பள்ளிகளுக்கு கொடுக்கும் இருநூறு கோடியை அரசு பள்ளிகளுக்கு ஒதுக்கி, கணிப்பொறி, நூலகம், விளையாட்டு என வசதிகளை மேம்படுத்தி, ஆசிரியர் திறனை ஊக்குவித்து 'தனியார் பள்ளிகளை விட நாங்கள் சிறப்பு' என்ற சூழலை உருவாக்குவதற்காக அரசாங்கம் செயல்படுமெனில் அது நல்ல அரசாங்கம். புள்ளிவிவரங்கள் எழுதுகிற வேலைகளை ஆசிரியர்களுக்கு கொடுப்பதை நிறுத்தி 'கற்பிக்கின்ற வேலையை மட்டும் நீங்கள் பாருங்கள்' என்று சொல்லி, அலுவல் ரீதியிலான வேலைகளையும், புள்ளி விவரங்கள் எடுக்கிற வேலைகளையும் அலுவலகப் பணியாளர்களுக்கு ஒதுக்கிக் கண்காணித்தால் அது உருப்படியான அரசாங்கம். ஆனால் இதையெல்லாம் செய்து அரசுக் கல்வியை மேம்படுத்தினால் ஆட்சியாளர்களுக்கு என்ன வருமானம் கிடைத்துவிடப் போகிறது? 

பள்ளிகளின் எண்ணிக்கையைக் குறைத்து தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரித்தால் அது வருமானம் கிடைக்கக் கூடிய செயல். அரசாங்கமே தனியார் பள்ளிகளுக்கு பணத்தையும் கொடுத்து மாணவர்களை தனியார் பள்ளிகளுக்கு அனுப்ப ஊக்குவித்தால் முதலாளிகள் கரன்சிகளால் குளிப்பாட்டுவார்கள். பள்ளிகளின் எண்ணிக்கையைக் குறைத்து ஆசிரியர்களை பந்தாடினால் 'இடமாற்றத்துக்கு இவ்வளவு லட்சம்' என்று கொழிக்கலாம்.  இதையெல்லாம் விட்டுவிட்டு அரசுப்பள்ளிகளில் தரங்களை மேம்படுத்தினால் என்ன இலாபம்?

கல்வித்துறையில் ஏன் இப்படியெல்லாம் அவலம் நடக்கிறது? தவறுகளையெல்லாம் நாம் செய்துவிட்டு அரசாங்கப்  பள்ளிகளில் சேர்க்கை குறைகிறது என்று புலம்பினால் என்ன மாற்றம் நிகழ்ந்துவிடும்? ஒவ்வொரு பெற்றோரும் தனியார் பள்ளிகளில் தம் பிள்ளைகளைச் சேர்த்துவிட முடியுமா என்று யோசிக்கத் தொடங்குகிறார்கள். அரசுப்பள்ளிகள் மோசம் என்று இன்னமும் அழுத்தமாக நம்பத் தொடங்குகிறார்கள். இவையெல்லாம் தமிழகத்தின் அடிப்படைக் கல்வியின் பொடனியிலேயே அடிக்கும் நிகழ்வுகள். அரசாங்கம் தனியார் பள்ளிகளை ஊக்குவிப்பதும், கிராமப்புறங்களில் இருக்கும் அரசுப்பள்ளிகளை மூடுவதும் என அரசு கல்வியின் இருள்காலத்துக்கு தமிழகம் வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறது.

புதிதாக பள்ளிக்கூடங்களை தொடங்கவிட்டாலும் பரவாயில்லை. இருக்கிற பள்ளிகளை மூட அனுமதிக்கக் கூடாது. ஒவ்வொரு குக்கிராமத்திலும் ஒரு பள்ளிக்கூடம் அவசியம். அந்தக் கிராமத்தில் எவ்வளவு குழந்தைகள் இருக்கிறார்கள், எவ்வளவு பேர் தனியார் பள்ளிகளில் படிக்கிறார்கள் என்ற விவரங்களை அரசாங்கம் எடுத்து வைத்திருக்க வேண்டும். ஐம்பது மாணவர்கள் இருக்கும் ஊரில் பதினைந்து மாணவர்கள் மட்டும் அரசுப் பள்ளியில் படித்தால் பள்ளியின் ஆசிரியரை விசாரிக்கலாம். என்ன பிரச்சினை என்று கேட்கலாம். பிரச்சினைகளை நிவர்த்தி செய்து தராத உள்ளூர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளை விசாரிக்கலாம். மாற்றம் நிகழ்கிறதா இல்லையா என்று பாருங்கள். ஆங்கில வழிக்  கல்வி என்பது அரசுப்பள்ளிலேயே வந்துவிட்டது. இவை ஏன் மக்களிடம் வரவேற்பு பெறவில்லை என்று யோசிக்க வேண்டும். இவையெல்லாம்தான் ஆக்கப்பூர்வமான கல்வி வளர்ச்சியாக இருக்குமே தவிர குருட்டுவாக்கில் பள்ளிகளை மூடுவதில்லை.

May 21, 2018

ஆள் பிடிக்கும் கூட்டம்

சில மாணவர்களைச் சந்திக்க நேர்ந்தது. கிராமப்புற, அரசுப் பள்ளிகளில் பனிரெண்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள். ஆயிரத்து நூறைத் தாண்டியவர்கள் கூட இருக்கிறார்கள். ஆனால் கட்- ஆஃப் குறைந்திருக்கிறது. அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பெரும்பாலும் அத்தனை பாடங்களுக்கும் ஒரே முக்கியத்துவம்தான் தருவார்கள். தமிழுக்கு எவ்வளவு உழைப்போ அதே உழைப்புதான் கணக்குக்கும், இயற்பியலுக்கும். இதில்தான் தனியார் பள்ளிகள் தில்லாங்கடி வேலையைக் காட்டிவிடுகின்றன. தமிழ், ஆங்கிலத்தை ஓரங்கட்டி வைத்துவிடச் சொல்கிறார்கள். கட்-ஆஃப் வாங்குவதற்கு தேவையான பாடத்தில் மட்டும் கவனத்தைச் செலுத்தச் சொல்கிறார்கள். தனியார் பள்ளிகளில் தொள்ளாயிரத்து ஐம்பது மதிப்பெண்கள் வாங்கிய மாணவர்கள் கூட கட்-ஆஃப் 195 ஐத் தாண்டியிருப்பதைப் பார்க்க முடியும்.

தமிழக கல்வித்துறையை குறை சொல்ல முடியாது. நிறைய நல்ல காரியங்களைச் செய்கிறார்கள். இதற்கும் ஏதாவது ஒரு வழி செய்ய வேண்டும். கட்- ஆஃப் கணக்கிடுதலில் மொத்த மதிப்பெண்ணும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்பது போன்ற 'செக்' ஒன்றை வைத்தால் அது அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பேருதவியாக இருக்கும்.  

இந்த விவகாரத்தை தனியாகப் பேசலாம்.

இந்த வருடமும் பிள்ளை பிடிக்கும் கூட்டம் பெருகியிருக்கிறது. விசாரித்த வரையில் ஒவ்வொரு மாணவரையும் ஏதாவது ஒரு அமைப்பினர் வந்து சந்திருக்கிறார்கள். விழுது, விதை, சிறகு என்று ஏதாவது ஒரு பெயரைச் சூட்டிக் கொண்டு வருகிறார்கள். பள்ளிகள் வழியாக மாணவர்களின் முகவரியைப் பிடித்து தேடி வந்து பெற்றோரிடம் பேசுகிறார்கள். 'உங்க பையனுக்கு/பொண்ணுக்கு அரசு கல்லூரிகளில் இடம் கிடைப்பது கஷ்டம்...கலந்தாய்வு வழியாக தனியார் கல்லூரிகளில் சேர்ந்தால் லட்சக்கணக்கில் கட்ட வேண்டும்' என்று இழுத்து 'கலை அறிவியல் படிப்பெல்லாம் படித்தால் வேலை கிடைக்காது' என்று குழப்பிவிடுகிறார்கள்.

எளிய மனிதர்கள் மண்டை காயும் போது 'இவ்வளவு மார்க் வாங்கிட்டு படிக்காம இருக்கிறதும் நல்லா இருக்காது' என்று சொல்லி பிறகு பிறகு வேறொரு கொக்கியை வீசுகிறார்கள்.

'ஒரு இன்ஜினியரிங் காலேஜ் இருக்கு..இந்த மார்க்குக்கு அங்க சீட் கிடைக்கிறது கொஞ்சம் கஷ்டம்தான்..ஆனா நாங்க சொன்னா சேர்த்துக்குவாங்க...பத்து பைசா நீங்க ஃபீஸ் கட்ட வேண்டியதில்லை' என்கிறார்கள். இது பெற்றோர்களுக்கு மிகப் பிடித்துப் போகிறது. அடுத்து மாணவரை அழைத்துப் பேசி சான்றிதழையும் வாங்கி வைத்துக் கொள்கிறார்கள். அவ்வளவுதான். ஆள் சிக்கியாகிவிட்டது. சான்றிதழல்களைக் கொடுத்த பிறகு இனி ஏதும் செய்வதற்கில்லை என்று அடுத்த வாய்ப்புகள் குறித்துக் கூட இந்த மாணவர்கள் யோசிப்பதில்லை. இப்படி ஆள் பிடிக்கிறவர்கள் தனியார் கல்லூரிகளின் கமிஷன் ஏஜெண்ட்கள். ஒரு மாணவனை/மாணவியை பிடித்துக் கொடுத்தால் இவ்வளவு பணம் என்று கல்லூரிகள் விலை பேசுகின்றன. என்.ஜி.ஓக்கள் என்ற பெயரில் இத்தகைய ஆள் பிடிக்கும் வேலையை நிறையப் பேர் செய்கிறார்கள்.  நல்ல மதிப்பெண் வாங்கிய மாணவர்களைத் தேடித் தேடிப் பிடித்து ஆகாவழி கல்லூரியில் சேர்க்கும் சில்லறைத்தனம் இது-  காசுக்காக மாணவர்களின் வாழ்க்கையை சீரழிக்கும் விபச்சாரம்.

மாணவனைத் தேடிப் பிடித்து கல்லூரியில் சேர்த்துப்  படிக்க வைப்பது தவறில்லை. ஆனால் அவை மிக மோசமான, தரமற்ற கல்லூரிகளாக இருக்கின்றன. அத்தகைய கல்லூரிகளில் இடங்கள் நிரம்புவதேயில்லை. இவர்களுக்கு எப்படியாவது இடங்களை நிரப்ப வேண்டிய கட்டாயம் உருவாகிறது. அதற்காகத்தான் இத்தகைய ஆட்களை நியமிக்கிறார்கள். அரசாங்கத்தில் சில திட்டங்கள் இருக்கின்றன. மாணவர்களை இலவசமாகப் படிக்க வைப்பதாகச் சொல்லி அரசாங்கத்திடமிருந்து பணம் பெற்றுக் கொள்கிறார்கள். நன்றாகப் படிக்கக் கூடிய மாணவர்களும், மாணவிகளும் இத்தகைய பாழுங் குழிகளில் விழுவதை நேரடியாகப் பார்க்க வேண்டியிருக்கிறது.

பல கல்லூரிகளில் பேராசியர்களே இந்த வேலையைச் செய்கிறார்கள். 'இந்த வருஷம் ஆளுக்கு நாலு பேரைச் சேர்க்கணும்' என்று கல்லூரி அவர்களுக்கு இலக்கு நிர்ணயித்தால் என்ன செய்வார்கள். 'தம்பி எங்க காலேஜ்ல சேர்த்துக்க ஐயாயிரம் ரூபாய் நான் தர்றேன்' என்று கெஞ்சி ஆள் பிடிக்கிற ஆசிரியரைக் கூடத் தெரியும். 

விவரங்களை எடுத்துச் சொன்னால் பெரும்பாலான பெற்றோர்கள் புரிந்து கொள்வதில்லை. 'எங்க படிச்சா என்னங்க? அங்கதான் காசில்லாம படிக்க வைக்கிறாங்களே..எங்கயாச்சும் படிக்கட்டும்' என்று சொல்லி வாயை அடைத்துவிடுகிறார்கள். அவர்களது சூழல் அப்படி. அப்படித்தான் பேசுவார்கள். நம்மிடம் பதில் இல்லை.  குடும்பத்தில் முதல் பட்டதாரி என்றால் அரசாங்கம் உதவித் தொகையளிக்கிறது. அதுமட்டுமில்லாமல் வங்கியில் கூட கடன் தருவார்கள் என்று சொன்னால் 'தருவாங்க..ஆனா நாங்கதான் திருப்பிக் கட்டணும்' என்று கேட்கிறார்கள். 

இலவசம் என்றால் தரம் என்பதெல்லாம் பின்னால் போய்விடுகிறது. நம் மக்களின் மனநிலை அப்படித்தான். கல்வியில் தொடங்கி அரசியல் வரைக்கும் எல்லாவற்றிலும் இதுதான் நிலைமை. 

இந்த ஆள்பிடி பட்டாளம் குறித்து மாணவர்களுக்கு ஓரளவுக்காவது எடுத்துச் சொல்ல வேண்டியிருக்கிறது. போனாம்போக்கி கல்லூரியில் ஆகாவழி படிப்பை படித்து வெட்டியாக இருப்பதற்கு பதிலாக கலை அறிவியல் கல்லூரிகளில் சேர்ந்து படிக்கலாம். படிப்பை விடவும் கல்லூரி முக்கியம் என்றுதான் சொல்ல வேண்டும். மாணவர்களுக்கு வெளியுலகத்தைக் கற்றுத் தருகிற கல்லூரிகளாக இருக்க வேண்டும். வசதிகள் நிறைந்த கல்லூரிகளாக இருக்க வேண்டும். அனுபவம் கொண்ட பேராசியர்களிடம் பயில வேண்டும்.

எதைப் பற்றியும் கண்டுகொள்ளாமல் ஓசியில் சேர்த்துக் கொள்கிறார்கள் என்று தானாவாதிக் கல்லூரியில் சேர்வது என்பது ஓசியில் கிடைக்கிறதே என்று ஃபினாயிலைக் குடிப்பது போலத்தான். மாணவர்களிடம் இதை விளக்க வேண்டியிருக்கிறது. எப்படிப் பரவலாகச் செய்வது என்று தெரியவில்லை. நமக்குத் தெரிந்து ஒரு மாணவன்- அதுவும் கிராமப்புற மாணவன்- வாழ்க்கையைத் தொலைப்பதை பார்த்துக் கொண்டு அசால்ட்டாக இருப்பதைப் போன்ற பாவம் எதுவுமில்லை. 

May 18, 2018

கல்வி உதவித் தொகை பெற

வரும் கல்வியாண்டில் நிசப்தம் அறக்கட்டளையின் சார்பில் அதிகபட்சமாக இருபத்தைந்து மாணவர்களுக்கு உதவ முடியும். உதவி தேவைப்படுகிற மாணவர்கள் நேரடியாகத் தொடர்பு கொள்ளலாம். 

மாணவர்களை பின்வரும் விதிமுறைகளின்படி தேர்வு செய்யவிருக்கிறோம்
    1. பொருளாதாரத்தில் பின் தங்கிய குடும்பத்தினருக்கு மட்டுமே உதவப்படும்.
    2. அரசு மற்றும் அரசு உதவி பெரும் கல்லூரிகளில் சேரும் மாணவ/மாணவிகளுக்கு மட்டுமே உதவுகிறோம்.
    3. பெற்றோர் இல்லாத அல்லது ஒற்றை பெற்றோர் உடைய மாணவ/மாணவிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 
கல்வி உதவியைப் பொறுத்தவரையிலும் மாணவர்களுக்கு இரண்டு வகைகளில் உதவுகிறோம்.
   1. கல்லூரி/விடுதி கட்டண உதவித் தொகை.
   2. வாழ்வியல்/திறன் வழிகாட்டு உதவி.
கடந்த சில ஆண்டுகளில் பெற்றிருக்கும் அனுபவத்தின் அடிப்படையில் உதவிகளில் சிற்சில மாற்றங்களைச்  செய்ய விரும்புகிறோம்.  

கல்லூரி/விடுதி கட்டண உதவி- மேற்சொன்ன விதிமுறைகளுக்குட்பட்டு கல்லூரி/விடுதி கட்டணத் தொகை வழங்கி உதவப்படும். உதவி பெறும் மாணவர்களுக்கு வருடத்தில் இரண்டு முறை  கூட்டம் நடத்தப்படும். அதில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும். மாணவர்களின் தேர்ச்சி விழுக்காடு, அவர்களது செயல்பாடுகள் உள்ளிட்டவற்றை பொறுத்தே அடுத்தடுத்த ஆண்டுகளில் உதவ இயலும்.

வாழ்வியல்/திறன் வழிகாட்டு உதவி- கடந்த ஆண்டு பதினாறு மாணவர்களைத் தேர்ந்தெடுத்து இந்தப் பயிற்சியை மேற்கொண்டோம். தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு ஐ.ஏ.எஸ், ஐ.ஆர்.எஸ் அதிகாரிகள் நேரடியாக பயிற்சியளிப்பார்கள். இத்தகைய பயிற்சியில் சேர விரும்புகிற மாணவர்களிடம் நேர்காணல் நடத்தி அதன் பிறகு தேர்வு செய்யப்படுவார்கள். இதில் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு மாதம் ஒரு வகுப்பு தொடர்ச்சியாக நடைபெறும். அனைத்து கல்லூரிகளிலும் சேர்க்கை முடிந்த பிறகு ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதம்  முதல் வகுப்புகள் தொடங்கப்படும். 

நிசப்தம் அறக்கட்டளையின் வழியாக செய்யப்படும் கல்வி உதவியின் அடிப்படையான நோக்கத்தை உதவி பெறுகிற மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்- 
   1. வெறுமனே உதவி செய்வதோடு நில்லாமல் மாணவர்களின் வளர்ச்சி குறித்து தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்  என்பதில் உறுதியாக இருக்கிறோம். அதற்கு மாணவர்கள், பெற்றோரின் ஒத்துழைப்பு அவசியமாகிறது. 
   2. கல்வி/வாழ்வியல்/திறன் மேம்பாட்டுக்காக அனைத்துவிதமான உதவிகளையும் அவர்களுக்கு வழங்குதல். 
   3. ஒவ்வொரு மாணவருக்கும் அவரது ஆர்வத்துக்கு ஏற்ப தகுதியான வழிகாட்டியை(Mentor) நியமித்து அவர்களின் நேரடி கண்காணிப்பில் மாணவர்களை செதுக்குதல்.
எல்லாவற்றுக்கும் மேலாக, இன்றைக்கு நாம் உதவி செய்யும் மாணவர்கள் எதிர்காலத்தில் இந்தச் சமூகத்துக்கு உதவுகிறவர்களாக இருக்க வேண்டும். உதாரணமாக இந்த ஆண்டு நிசப்தம் அறக்கட்டளையின் உதவியோடு எம்.எஸ்.சி(வேதியியல்) முடிக்கும் ராஜேந்திரன் ஐஐடி உள்ளிட்ட கல்லூரிகளில் முனைவர் ஆராய்ச்சி படிப்புக்கான சேர்க்கைக்கு தயாராகிக் கொண்டிருக்கிறார். அடுத்த ஆண்டு அவர் ஒன்று அல்லது இரண்டு மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருப்பார். இத்தகைய சங்கிலித் தொடரை வருடம்தோறும் உருவாக்கிக் கொண்டிருக்க வேண்டும்.

இத்தகைய நோக்கங்களை அடையும் பொருட்டு  நிசப்தம் அறக்கட்டளை செயல்படும் விதமானது ஒவ்வொரு வருடமும் சற்று உருமாறுகிறது. முக்கியமான ஒரு விஷயம்- நிசப்தம் அறக்கட்டளை என்.ஜி.ஓ இல்லை. பலரும் வழங்கும் நன்கொடையை இல்லாதவர்களுக்கு வழங்குகிற ஒரு உதிரி அமைப்பு. இப்படிச் செயல்படுவதுதான் சரியாக இருக்கும். 

உதவி பெற விரும்புகிற மாணவர்கள் பெயர், முகவரி, ப்ளஸ் டூவில் பெற்ற மதிப்பெண்கள் உள்ளிட்ட விவரங்களை nisapthamtrust@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் அல்லது 9741474202 (இந்த எண் குரல் வழி உரையாடலுக்கான உபயோகத்தில் இல்லை) என்ற வாட்ஸாப் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். மின்னஞ்சல் வழியாக தொடர்பு கொள்வது சிறப்பு.