வருடத்தில் அத்தனை நாட்களும் நாம் எதையாவது செய்து கொண்டேதான் இருக்கிறோம். ஆனால் ஒரு சில காரியங்கள்தான் நம் வாழ் முழுமைக்குமான பொக்கிஷமாக மாறிவிடுகின்றன. அப்படியொரு காரியம்தான் சனிக்கிழமை செய்தது. கடவுளின் குழந்தைகளுடன் ஒரு பொழுது. மாற்றுத் திறனாளிக் குழந்தைகளை அழைத்து வந்து அவர்களை உற்சாகமூட்டும்படியாக கதை சொல்லி, விளையாடி, ஐஸ்க்ரீம சாக்லேட், அன்பளிப்பு கொடுத்து, மத்திய உணவை உண்ண வைத்து அனுப்பி வைத்தோம். அத்தனை பேரும் கிராமப்புற ஏழை பெற்றோரின் குழந்தைகள்.
நம்பியூர் பள்ளியின் தலைமையாசிரியர் இளங்கோ கடந்த ஒரு வாரமாகவே நிகழ்வுக்கான வேலைகளைச் செய்து கொண்டிருந்தார். சென்னையிலிருந்து வந்திருந்த அகிலாவையும், ஜீவகரிகாலனையும் அழைத்துக் கொண்டு ஒன்பது மணிக்கு மண்டபத்துக்குச் சென்ற போது கிட்டத்தட்ட அத்தனை ஏற்பாடுகளும் தயாராக இருந்தன. ஆசிரியர் இளங்கோ காலை ஆறு மணியிலிருந்து மண்டபத்தில் இருந்தார்.
'நீங்க குளிச்சுட்டு வாங்க சார்' என்றேன். மேடையில் வைக்க 'ஒரு பேனர் அச்சடிக்க கொடுத்திருக்கேன்' என்றார். 'எப்பவும் பேனர் வைக்கறதே இல்ல சார்...இதுக்கு காசு செலவு செஞ்சா நல்லா இருக்காது' என்று தடை சொல்ல முயற்சித்தால் 'அதுக்கு நான் கொடுத்துடுறேன்' சார் என்று கிளம்பிப் போனார். நிகழ்வு முடியும் வரைக்கும் பம்பரமாகச் சுழன்றார். தேடிப்பார்த்தால் ஒரு நிழற்படத்திலும் அவரைக் காணவில்லை.
ஒட்டன்சத்திரத்துக்கும் நம்பியூருக்கும் இடையில் நூற்றைம்பது கிலோமீட்டர் தூரம் இருக்கும். விக்னேஸ்வரன் அங்கிருந்து பைக்கிலேயே வந்திருந்தார். சுந்தரகிருஷ்ணன் ஓய்வு பெற்ற அதிகாரி. மதுரையில் வசிக்கிறார். முந்தின நாள் இரவே வந்து ஈரோட்டில் தங்கியிருந்தார். தமது கேமிராவை எடுத்து வந்திருந்தவர் நிகழ்வு முழுமையையும் நிழற்படம் எடுத்திருக்கிறார். செந்தில் பவுண்டரியில் வேலை செய்கிறார். நேற்று அவருக்குத் திருமண நாளாம். எங்களுக்கு முன்பாகவே மண்டபத்துக்கு வந்திருந்தார். கார்த்திகேயன் பெங்களூரிலிருந்து. நிகழ்வுக்கான சாப்பாடு செலவு மொத்தமும் அவருடையது.
(கார்த்திகேயன், சுந்தரகிருஷ்ணன்)
(ரமேஷ், வெற்றிவேல், விக்னேஸ்வரன்)
புளியம்பட்டி, நம்பியூர் மற்றும் கோபியிலிருந்து குழந்தைகள் வந்து சேர்ந்தார்கள். வைரவிழா பள்ளியின் ஆசிரியர்கள் தங்கம். 'இப்படியெல்லாம் இந்தக் காலத்தில் ஆசிரியர்கள் இருப்பார்களா' என்று ஆச்சரியப்படுத்துகிறார்கள். தமது பள்ளியின் குழந்தைகள் முப்பது பேருக்கு அலங்காரம் செய்து அழைத்து வந்திருந்தார்கள். இந்தக் குழந்தைகளை எங்கள் குழந்தைகள் மகிழ்விப்பார்கள் என்று சொல்லி நடனத்தை நடத்தினார்கள். அது மட்டுமில்லை. ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு அன்பளிப்பையும் கைக்காசு செலவு செய்து வாங்கி வந்திருந்தார்கள்.
(வைரவிழா பள்ளி மாணவிகளும், ஆசிரியர்களும்)
கதை சொல்லி சதீஷும், அகிலாவும் கலக்கிவிட்டார்கள். சதீஷ் தமது மொத பலத்தையும் பிரயோகித்து அந்தக் குழந்தைகளை மகிழ்வித்தார். குழந்தைகளை உற்சாகப்படுத்த வேண்டும் என்பதுதான் நோக்கம். அதை நூறு சதவீதம் சாத்தியப்படுத்தியவர்கள் இவர்கள் இருவரும். அகிலாவும் ஒவ்வொரு குழந்தைக்கும் அன்பளிப்பை வாங்கிச் சுமந்து வந்திருந்தார்.
எவ்வளவு பேருக்கு நன்றி சொல்வது? பணம் குறித்தெல்லாம் யோசிக்காமல் தொலைக்காட்சிப் பெட்டிகளை அனுப்பி வாய்த்த ஃபெலிக்ஸ் - இரண்டு மையங்களுக்கு தொலைக்காட்சிப் பெட்டிகளையும், ஒரு மையத்துக்கு குழந்தைகள் ஓட்டிப் பழகி மிதிவண்டி வேண்டும் எனக் கேட்டிருந்தார்கள்- 'பணத்தை அப்புறம் வாங்கிக்கிறோம்' என்று மிதிவண்டியை கொடுத்த என்.எஸ்.கே மிதிவண்டி நிலையம், திருமண மண்டபத்தை வாடகையே இல்லாமல் கொடுத்த சிவசக்தி திருமண மண்டபத்துக்காரர்கள், நிகழ்ச்சியை தொகுத்துக் கொடுத்த அரசு தாமஸ்- ஒவ்வொருவரையும் சுட்டிக்காட்ட வேண்டும்.
கல்வித்துறையைச் சார்ந்த கோபாலகிருஷ்ணன், பாபு, தேவேந்திரன், ஆசிரியர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், பெற்றோர்கள் என சகலருக்கும் நன்றி. செல்வகணேசன், செந்தில், ராஜேந்திரன், வெற்றிவேல், ரமேஷ் என்று பெரும் கூட்டம் பம்பரமாக வேலை செய்தார்கள்.அத்தனை பேரின் பெயரையும் குறிப்பிடுவது சாத்தியமில்லை. பெயரை குறிப்பிடாமல் விட்டிருந்தால் மன்னித்துவிடுங்கள். இது ஊர்கூடி இழுத்த தேர்.
அடுத்த நாள் மாலையில் ஒரு குழந்தையின் அப்பா அழைத்திருந்தார். 'சொல்லுங்க' என்றேன். ஒரு நிமிடம் தேம்பிக் கொண்டேயிருந்தார். எதிர்முனையில் யார் அழுகிறார்கள், எதற்காக அழுகிறார்கள் என்றே தெரியவில்லை. 'இப்படியெல்லாம் ஒரு நிகழ்ச்சிக்கு இவனை எப்பவுமே கூட்டிட்டு போனதில்லை சார்...அவனுக்கு அவ்வளவு சந்தோசம்..சனிக்கிழமை ராத்திரியெல்லாம் எனக்கு தூக்கமே வரல....' என்று சொல்லிவிட்டு மீண்டும் அழத் தொடங்கினார். மனம் கனத்துவிட்டது. அந்தக் கண்ணீரின் ஈரம் ஒவ்வொருவருக்கும் உரித்தாகுக.
இக்குழந்தைகளுக்கென சிறப்புப் பள்ளிகளை நடத்தும் அரசாங்கத்துக்கு வாழ்த்துக்கள். அந்த மையத்தின் ஆசிரியைகளை பாதம் தொட்டும் வணங்கலாம். தவறேதுமில்லை. பதினைந்து வயது குழந்தையால் சாப்பிட முடிவதில்லை. ஊட்டிவிடுகிறார்கள். ஒரு வாய் தான் உண்டுவிட்டு இன்னொரு வாய் உணவை தம் குழந்தைக்கு ஊட்டுகிற பெற்றோரை பார்த்த போது கண்ணீர் கசிந்துவிட்டது. தமது குழந்தைகளின் அத்தனை சேட்டைகளையும் பொறுத்துக் கொள்கிறார்கள். அதனை சுமைகளோடு அந்த முகங்கள் இருக்கின்றன. அந்தக் குழந்தைகளின் உண்மையான கடவுளர்கள் பெற்றோர்தான்.
அந்தக் குழந்தைகள் நன்றாக இருக்கட்டும். பெற்றோரின் மனம் அமைதியுறட்டும். வேறு என்ன சொல்வது என்று தெரியவில்லை. மேடையில் அந்தக் குழந்தைகள் முகம் பார்த்து என்னால் பேச முடியவில்லை. சொற்கள் தடைப்பட்டன. எழுதும் போதும் அப்படிதான்.
11 எதிர் சப்தங்கள்:
//சொற்கள் தடைப்பட்டன. எழுதும் போதும் அப்படிதான்.//
வாசிக்கும் போதும் அப்படித்தான் இருக்கிறது.
பம்பரங்கள் அனைவருக்கும் நன்றி.
ஆனாலும் "நம்ம தல வா"(மணி கண்டன்) க்கு கூடுதலா நன்றி.
தனி மனிதனால் அல்லது ஒரு குழுவால் இதை செய்ய முடிகிறதென்றால் இந்த "எம்பி", "எம்எல்ஏ" க்களால் என்னவெல்லாம் செய்யமுடியும். ஏன் செய்ய மாட்டேன் கிறார்கள் என திட்ட நினைத்தேன்.ஆனால் து போன்ற பள்ளிகள் நடப்பதை ஆதாயம் கருதி தடுக்காமல் இருக்கிறார்களே அதே பெரிய சேவை தானே என்பதால் திட்டவில்லை.
There are no words to appreciate such a fantastic work. Rare people think and do. Kudos to all
Appreciate!, no more words to say!
Plz share the video link.
பொக்கிஷமேதான்.வேறென்ன சொல்ல.
இப்படி ஒரு பள்ளி இருப்பதே நமக்கு தெரியாது, இதை சாத்தியபடுத்திய உங்களுக்கும், சக நண்பர்களுக்கும் ரொம்ப நன்றி. நடக்கட்டும், நடக்கட்டும் இதுபோல நிறைய!!!
வாழ்த்துகள் இன்றைய பகிர்வுக்கும்,நாளைய பிறந்த நாளுக்கும்.
மனம் நெகிழ்ந்தது.
/அந்த மையத்தின் ஆசிரியைகளை பாதம் தொட்டும் வணங்கலாம்./ உண்மை .மறுபடியும் சொல்கிறேன் திரு .மணிகண்டன் ,கடவுள் அல்லது அறம்,ஏதோ ஒன்று உங்கள் குடும்பத்தை நல்லபடியாக வைத்திருக்கும். வாழ்த்துக்கள் மணிகண்டன் , (எங்களை போல் இல்லாத ) உங்கள் அர்த்தமுள்ள வாழ்க்கைக்கு .
அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.
Way cool! Some very valid points! I appreciate
you writing this write-up and also the rest of the website is also very good.
Post a Comment